Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. நிபுணர் குழுவும் இலங்கை அரசாங்கமும்

Featured Replies

இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த மூவரடங்கிய நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கும் முன்னாள் சட்டமா அதிபர் சீ.ஆர்.டி. சில்வா தலைமையிலான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவைச் சந்தித்துப் பேசுவதற்காக இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்சூக்கி தருஸ்மான் தலைமையிலான அந்த ஐ.நா. நிபுணர்குழு விரைவில் இலங்கைக்கு வரவிருப்பதாகக் கடந்தவாரம் நியூயோர்க்கில் செயலாளர் நாயகம் அறிவிக்கும் வரை அரசாங்கத்திடமிருந்து அது தொடர்பிலான எந்தவிதமான தகவலுமே தெரிவிக்கப்படவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கும் தனக்கும் இடையே இடம்பெற்ற சம்பாஷனைகளையடுத்து நிபுணர் குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு இணக்கம் காணப்பட்டதாக பான் கீ மூன் தெரிவித்ததையடுத்து அரசாங்கத்துக்குள்ளேயே சலசலப்பு ஏற்படத் தொடங்கியது.

கடந்த ஜூனில் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவை அரசாங்கம் ஆரம்பம் முதலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. அக்குழு சட்டவிரோதமானது என்று வர்ணித்த வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அதன் உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு விசாவை வழங்கப் போவதில்லை என்று அறிவிக்கவும் தவறவில்லை. மொத்தத்தில் அரசாங்கமும் சிங்கள, ஆங்கில ஊடகங்களும் பான் கீ மூன் மேற்குலக வல்லாதிக்க நாடுகளின் தூண்டுதலின் பேரில் அரசாங்கத் தலைவர்களுக்கும் ஆயுதப் படைகளுக்கும் எதிராகப் போர்க் குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடாகவே நிபுணர் குழுவை நியமித்ததாகக் குற்றஞ்சாட்டி அவருக்கு எதிரான பிரசாரங்களைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருந்தன.

ஜூலை மாத ஆரம்பத்தில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தைத் தனது ஆதரவாளர்கள் சகிதம் முற்றுகையிட்ட வீடமைப்பு அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிபுணர் குழுவைச் செயலாளர் நாயகம் கலைக்கும் வரை ஐ.நா. அதிகாரிகளையும் ஊழியர்களையும் பணயம் வைக்கப்போவதாக அச்சுறுத்தியதையும் பின்னர் ஐ.நா. அலுவலகத்துக்கு முன்பாக முகாமிட்ட அவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்து இருநாட்கள் கழித்து ஜனாதிபதி ராஜபக்ஷ வழங்கிய நீராகாரத்தை அருந்தி தனது போராட்டத்தை இடைநடுவில் நிறுத்திக்கொண்டு உயிரைக் காப்பாற்றியதையும் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கால கட்டத்தில் சர்வதேச சமூகத்துடனான குறிப்பாக, அச் சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க மேற்குலக நாடுகளுடனான இலங்கை அரசாங்கத்தின் ஊடாட்டங்கள் பதற்றமும் சர்ச்சையும் நிறைந்த நிகழ்வுப் போக்குகளைக் கொண்டவையாகவே அமைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாக அமைந்தது இம்மாத ஆரம்பத்தில் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டு இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி ராஜபக்ஷ உரையை நிகழ்த்துவதற்கான வாய்ப்புக் கிட்டாமல் போனதையடுத்து கொழும்புக்கும் லண்டனுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்ட விரிசலாகும் என்பதில் சந்தேகமில்லை. முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரையை நிகழ்த்துவதற்காக இவ்வாரம் வருகை தரவிருந்த பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தனது அரசாங்கத்தின் நெருக்குதல் காரணமாக தனது விஜயத்தை ஒத்திவைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அளவுக்கு பிரிட்டனுக்கும் அதன் முன்னாள் காலனி நாட்டுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளில் முறுகல் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இத்தகையதொரு பின்புலத்திலேயே ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கை விஜயம் தொடர்பான செய்தி வெளியாகிறது. இச் செய்தி கடுமையான சிங்களத் தேசியவாதப் போக்குடைய சக்திகளைப் பெரும் தடுமாற்றத்துக்குள்ளாக்கியிருக்கிறது. ஜனாதிபதியின் நெருக்கமான நேச சக்திகளான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்தியாளர் மகாநாடுகளைத் தலைநகரில் கூட்டி நிபுணர் குழுவின் உத்தேச இலங்கை வருகையை அனுமதிக்கப்போவதில்லை என்று சூளுரைத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே நிபுணர் குழுவுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்த அரசாங்கமும் தடுமாற்றத்துடன் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. பான் கீமூனின் அறிவிப்பையடுத்து பெரும் சஞ்சலத்துக்குள்ளாகியிருக்கும் அரசாங்கத்துக்கு மேலும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய அணுகுமுறையையே எதிரணிக் கட்சிகளும் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. நிபுணர் குழு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைச் சுட்டிக்காட்டும் எதிரணிக்கட்சிகள் சர்வதேச சமூகத்துடனான விவகாரங்களைக் கையாளுவதில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க முடியாததாக அரசாங்கம் விளங்குகின்றது என்று குற்றஞ்சாட்டுகின்றன.

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை பற்றி சர்வதேச அரங்கில் கிளப்பப்பட்டிருக்கக்கூடிய சந்தேகங்களை மறுதலிப்பதற்கான ஒரு தந்திரோபாயமாக அந்த ஆணைக்குழுவுடன் ஐ.நா.நிபுணர் குழுவைச் சந்திக்க வைப்பதற்கு அரசாங்க உயர்மட்டம் இணங்கியிருக்கக்கூடும். ஆனால் நிபுணர் குழு அந்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்கான சாத்தியம் இல்லை என்று ஐ.நா.பேச்சாளர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்து அரசாங்கத்துக்கு அசௌகரியத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இத்தகைய சூழ்நிலையில் நிபுணர் குழுவை இலங்கைக்கு வெளியே ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படக்கூடிய சாத்தியம் குறித்து செய்திகள் வெளியாகின்றன என்பது கவனிக்கத் தக்கது. போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் குறிப்பாக மேற்குலகுடனும் ஐ.நா.போன்ற சர்வதேச இராஜதந்திர நிறுவனங்களுடனும் விவகாரங்களைக் கையாளுவதில் கடைப் பிடித்துவருகின்ற அணுகுமுறைகளில் மாற்றங்கள் தேவை என்பதை அரசாங்க உயர்மட்டம் தெளிவாக உணர்ந்திருப்பதன் வெளிப்பாடாகவே தற்போதைய நிலைவரத்தை நோக்க வேண்டியிருக்கிறது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=3910:2010-12-23-00-54-01&catid=71:editorial&Itemid=101

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.