Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது!

Featured Replies

தமிழ் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிறது! -நாஞ்சில்நாடன்-

ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன். எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!''

சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. 'தலைகீழ்விகிதங்கள்’, 'எட்டுத்திக்கும் மத யானை’, 'என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். 'சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், ''என்னைப் பார்த்து எழுத வந்தவர்கள், எனக்கு முன்பு சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். இது தாமதமாக எனக்குக் கிடைத்த விருதுதான்!'' - சிநேகமாகச் சிரிக்கிறார். இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல தளங்களிலும் தன் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார் நாஞ்சில்நாடன்.

"சாகித்ய அகாடமி விருது... மகிழ்ச்சியா?''

''இது ஓர் அங்கீகாரம்... அடையாளம். அவ்வளவுதான். அது இருக்கட்டும். அதனால் என்ன நிகழும்?

கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயருக்கு ஞான பீட விருது கிடைத்தது. அவர் வீட்டுக்குப் பாராட்ட வந்து நின்ற கார்களில் கேரள முதல்வர் ஏ.கே.அந்தோணியின் காரும் ஒன்று. ஆனால், யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் ஓர் எழுத்தாளருக்கு ஞானபீட விருதே கிடைத்தாலும் முதலமைச்சர் வீடு தேடி வந்து பாராட்டுவாரா?

எழுத்தாளரே தன் சொந்த செலவில் சால்வையும் பூச்செண்டும் வாங்கிக்கொண்டு, புகைப்படக் கலைஞரையும் கூட்டிக்கொண்டு முதல்வர் இல்லத்துக்குச் செல்ல வேண்டும். மறு நாள் செய்தித்தாள்களில் அது செய்தியாக வரும், 'ஞானபீட விருது வென்ற எழுத்தாளர், முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!’ என்று. ஆக, முதல்வர் அப்போதும் எழுத்தாளரை வாழ்த்து வது இல்லை, முதல்வரிடம் எழுத்தாளன்தான் வாழ்த்துப் பெற வேண்டும்.

தமிழ்ச் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிற சமூகம். இரண்டு காட்சிகளில் தலை முடியைக் கலைக்கும் நடிகனுக்குக் கொடுக்கும் மரியாதையை எழுத்தாளனுக்குத் தருவது இல்லை. நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தருகின்றனவே... ஏதாவது ஓர் எழுத்தாளருக்கு எப்போதாவது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறதா?''

''இப்போது இலக்கியத்தை சினிமாவுக்குள் நுழைவதற் கான விசிட்டிங் கார்டுபோல சிலர் பயன்படுத்துகிறார்களே... பிறகு, அவர்களே, 'என் கதையைச் சிதைத்துவிட்டார்கள்’ என வருத்தம் தெரிவிப்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?''

''முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத் தாளன்... சினிமா வேறு, எழுத்து வேறு என் பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும். நான் வட்டார வழக்கில் எழுதிய 'தலைகீழ் விகிதங்கள்’ நாவல் 'சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல்கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!

ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் என் கதையைச் சினிமாவாக மாற்று வதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன் பிறகு, 'நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!''

''சினிமா இருக்கட்டும், அரசியலுக்குப் போகிற எழுத்தாளர்களை ஆதரிக்கிறீர்களா?''

''இல்லை. அரசியல் என்பது இப்போது ஒரு தொழில். சொல்லப்போனால், மிக மோசமான தொழில்! ஊழல் பண்ணத் தெரிந்தவன், சாதிரீதியாக அரசியல் பண்ணத் தெரிந்தவன், தன்மானத் தைத் துறக்கத் தெரிந்தவன் இவர்கள்தான் இன்றைய அரசியலுக்குத் தகுதியானவர்கள். ஒருவேளை இலக்கியவாதிகள் அரசியலுக்குப் போனால், அரசியல் மேம்படுமே என்று கேட்கலாம். சினிமா எவ்வளவு தரம் கெட்டுப் போனாலும், படைப்பாளிகள் பங்கெடுக்கும் போது அதை மீட்டெடுக்க முடியும். ஆனால், அரசியல் மீள முடியாத ஒரு சாக்கடை. இப்போது அரசியலுக்குப் போன இலக்கிய வாதிகளையே எடுத்துக்கொள்வோம். அவர் கள் எழுதித் தள்ளும் ஆதர்சங்களுக்கும் அவர் களின் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதில் விதிவிலக்குகளே இல்லை. மேலும், அரசியலுக்குப் போகிற இலக்கியவாதிகள் மீது இலக்கியவாதிகளுக்கே மரியாதை கிடையாது. சுருக்கமாகச் சொல்லப் போனால், குற்றம் செய்யக் கூசாத மனோபாவம்தான் அரசியலுக்குத் தேவை!''

''விஜயகாந்த், குஷ்பு, விஜய் போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதையாவது ரசிக்கிறீர்களா?''

''தமிழக அரசியல் என்பது சினிமா கவர்ச்சியின் உச்சம். நான்கு படங்களில் தலை காட்டுகிற நடிகர்கள், ஒருகட்டத்தில் தான் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைப்பதும் நம்புவதும் எனக்கு இன்னமும் ஒரு கலாசாரப் புதிராகவே இருக்கிறது. ஒரு குடிமகன் என்ற வகையில் ஒரு நடிகன் அரசியலுக்கு வருவது தப்பு இல்லைதான். ஆனால், ஓர் இசைக் கலைஞன், ஓவியன் இவர்களுக்கு எல்லாம் வராத மனத் துணிவு ஒரு சினிமா நடிகனுக்கு மட்டும் எப்படி வருகிறது என்பதுதான் கேள்வி. ஒரு கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை சொல்பவனாக நடிகன் மாறிவிடுகிறான். மக்களுக்குச் சொன்னால்கூடப் பரவாயில்லை... அறிஞர்களுக்கே அறிவுரை சொல்பவனாகவே நடிகன் மாறிவிடுகிறான். படிப்பறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்கள்கூட சினிமா பைத்தியத்தால் சீரழியவில்லை. தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் நாட்டு நடப்புகள் குறித்து இவ்வளவு அசிரத்தைகள் இல்லை!''

''சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?''

''கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக்கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அதுபோக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்துகொண்டு இருக்கின்றன. கறிக்கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக் கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்லில் இருந்து ஒருதொலை பேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், 'ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்? எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்த பட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!''

''இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?''

''உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித் துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?

இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன். எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!''

''ஈழப் பிரச்னை ஒரு படைப்பாளியாக உங்களை எப்படிப் பாதித்தது?''

''வெகுவாக! அடுத்து வெளிவர இருக்கிற என்னுடைய 'பச்சை நாய்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பில் ஈழம் சார்ந்த அரசியல் கவிதைகள் நிறைய இருக்கும். நான் ஒரு படைப்பாளி. என்னுடைய மறுப்பைப் படைப்பாகத்தான் பதிவு செய்ய முடியும். ஆனால், பல படைப்பாளிகள் தங்கள் எதிர்ப்புகளையும் உணர்வுகளையும் படைப்பாகக்கூட பதிவு செய்யவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், இந்தத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்னை ஒரு மலையாள எழுத்தாளர் கேட்டார், 'இவ்வளவு பெரிய இன அழிப்பு நடந்திருக்கிறதே... ஏன், உங்கள் ஊரில் ஒரு முனிசிபல் கவுன்சிலர்கூட ராஜினாமா செய்யவில்லை?’ என்று. மௌனத்தைத் தவிர, வேறு எந்தப் பதிலும் என் வசம் இல்லை. ஈழப் பிரச்னையைப் பொறுத்தவரை அலட்டிக்கொள்கிறோமே தவிர, எல்லாமே பாசாங்கோ என்று தோன்றுகிறது. நிறைய இளைஞர்களுக்குப் பிரச்னையே என்னவென்று புரியவில்லை!''

''இணையத்தில் எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதே?''

''மகிழ்ச்சிதான். ஆனால், இவர்கள் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார்கள் என்கிற சந்தேகம் உண்டு. முன்பு எழுத்தாளர்கள், சமகாலம் மற்றும் முற்காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வாசித்துவிட்டுத்தான் எழுதினார்கள். ஆனால், இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களிடம், வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைவு. இணையத்தில் வம்பு வழக்குகளும் கிசுகிசுக்களும் அதிகமாகிவிட்டன!''

''மற்றவர்களைக் குற்றம்சாட்டுவது சரி. எழுத்தாளர்கள் என்றாலே குடிகாரர்கள், குழு மோதலில் ஈடுபடுபவர்கள் என்றுதானே மற்றவர்கள் நினைக்கிறார்கள்?''

''குடி என்பதே நண்பர் வட்டம்தானே! யார் இங்கே குடிக்காமல் இருக்கிறார்கள்? எல்.ஐ.சி-யில் வேலை பார்ப்பவர்கள், வங்கியில் பணிபுரிபவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி துறை ஊழியர்கள் என நண்பர்கள் சேர்ந்தால் குடிக்கத்தானே செய்கிறார்கள். அதேபோல இலக்கியவாதிகளும் நண்பர்களாகச் சேர்ந்தால் குடிக்கிறார்கள். காசு இருக்கிறவன் அடுத்தவனுக்கு வாங்கித் தருகிறான். இல்லாதவன் அடுத்தவனோடு சேர்ந்து குடிக்கிறான். நாலு லார்ஜுக்கு மேல் போனால் சண்டை வருவது எல்லாப் பக்கமும் இருக்கும் இயல்புதான். எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் குடித்தால் சண்டை வருகிறதா என்ன? எல்லா எழுத்தாளனும் ஏதோ ஒருவகையில் மொழிக்கும் சமூகத்துக்கும் பங்காற்றவே செய்கிறான். எனவே சச்சரவுகள், சர்ச்சைகளைவைத்து மட்டுமே எழுத்துலகத்தை மதிப்பிட முடியாது... கூடாது!''

''இன்று புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் சினிமா பூஜைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே, பளபளப்பான ஆளுமைகள்தானே புத்தக விழாக்களில் கலந்துகொள்கிறார்கள்?''

''அப்படி பொத்தாம்பொதுவாகச் சொல்லாதீர்கள். நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன், திருச்செந்தாழை இவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு எல்லாம் எந்த சினிமாக்காரர், எந்த வி.ஐ.பி. வருகிறார்?

சென்னையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு இருக்கிற வசதி அது. புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களின் வியாபார உத்திகளையும் சார்ந்தது இது. ஆனால், இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று ஒரு நாளாவது, ஒரு சினிமா பிரபலம் ஓர் எழுத்தாளனைப் பாராட்டி நாலு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போகட்டும

-நாஞ்சில்நாடன்-

விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.