Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தின் அரசியல் சாணக்கியம் புலிகளைக் கூட தம்பக்கம் அரவனைப்பது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் அரசியல் சாணக்கியம் புலிகளைக் கூட தம்பக்கம் அரவனைப்பது -

தமிழ் அரசியலின் சாணக்கியம் அனைவருக்கும் துரோகிப்பட்டம் சூட்டுவது – சிந்திப்பீர்களா? நாகேஸ் நடராஜா:-

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினதும் அவரது அரசாங்கத்தினதும் பல்வேறு தில்லுமுல்லுகளின் பின் கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

யுத்த வெறியின் மூலம் ஒரு இனத்தின் வாழ் உரிமைகளை, அபிலாசைகளை துவம்சம் செய்து அந்த மக்களை தோற்கடித்துப் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியின் ஊடாக வரவழைத்துக் கொண்ட தொடர் தேர்தல் வெற்றிகளின் பின் இரண்டாவது முறையாகவும் ஆட்சிப்பீடமேறினார் மகிந்த ராஜபக்ஸ.

ஆயினும் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள உட்பூசல்கள் கட்சிக்குள் வெடித்துக் கிளம்பியுள்ள முரண்பாடுகள் ஐக்கிய முன்னணிக்குள் எழுந்துள்ள மனக் கசப்புகள் தலைவிரித்தாடும் ஊழல் தாண்டவம் விலைவாசி உயர்வினால் மக்களுக்கேற்பட்டுள்ள வாழக்கைச் சுமை, தொழிற்சங்கப் போராட்டங்கள், சர்வதேச நெருக்குதல்கள் , யுத்தக் குற்றச்சாட்டுக்கள் என இன்னோரன்ன விடயங்கள் அசைக்க முடியாது என நினைத்த அவரை ஆட்டங் காண வைக்கத் தொடங்கியுள்ளன. அதனால் நகரங்களில் ஆரம்பித்துள்ள மகிந்த ராஜபக்ஸவின் வீழ்ச்சி 18 மாநகர சபைகளின் தேர்தல்களை உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியைக் காரணம் காட்டி பிற்போட வைத்துள்ளது. அவசர அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தினையும் மூலையில் தூக்கி எறிந்த ராஜபக்ஸ தொகுதிவாரிப் பிரதிநிருத்துவ முறைமையில் தேர்தலை நடத்தாது வீதசார முறைமையிலேயே தேர்தலை நடத்த முனைந்திருக்கின்றார்.

இலங்கையின் 2ம் குடியரசு அரசியல் யாப்பின்படி தொடருகின்ற உள்ளுராட்சி சபைகளின் பிரதிநிதித்துவ ஆட்சிமுறைமையானது இலங்கையின் பாராளுமன்ற அரசியலுக்கான தொடக்கப் புள்ளியாக வாயில் கதவாக விளங்குகின்றது. கிராம மட்டங்களில் இருந்து பிரதேச சபைகளின் ஊடாக தெரிவு செய்யப்படுகின்ற பிரதிநிதிகள் நகர மட்டம், மாநகர மட்டம், மாகாண மட்டம், அடுத்த நிலையாக பாராளுமன்றம் என்ற ஏறுவரிசையில் அரசியல் வளர்ச்சியைப் பெற்றுக் கொள்கின்றனர். இலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு வலுச் சேர்க்கின்ற ஆரம்ப நிலையாக இந்த உள்ளுராட்சி அமைப்புக்கள் விளங்குகின்றன.

உள்ளுராட்சி அமைப்புக்களுக்கான தேர்தலில் பெரும்பான்மைப் பலத்தினைப் பெறுகின்ற தனிக்கட்சியோ அல்லது பல கட்சிகள் சேர்ந்த கூட்டமைப்போதான் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையப் பெற முடியும் என எதிர்வு கூறப்படுவது வழக்கம். அதேவேளை கிராமங்களில் இருந்து மாநகரங்கள் வரை குறிப்பாக நாட்டின் அடிநிலையிலிருந்து உயர்நிலை நோக்கி மக்கள் வழங்குகின்ற தீர்ப்பு அல்லது ஆணை என்பதும் பிரதானமான ஒன்றாக கருதப்படுகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மே 18இன் பின்னரான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது எனக் கூறப்படுகின்ற புதிய சூழலில் நடாத்தப்பட்ட முதலாவது பாராளுமன்றத் தேர்தலிலும் பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் மகிந்த ராஜபக்ஸவும் அவரது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருமே பாரிய வெற்றியை பெற்றுக் கொண்டனர். எனினும் வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் பல்வேறு சவால்களையும் பிளவுகளையும் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.

முன்னர் இருந்த 22 ஆசனங்கள் கிடைக்கப் பெறாவிடினும் அதிகபட்ச ஆசனங்களாக 14 ஐப் பெற்றுக் கொண்டது. இந்த வெற்றியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்பதற்கு அப்பால் ஜனாதிபதியின் மீதும் ஆளும் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பின் மீதும் அவர்களின் தாளத்திற்கு ஆடிய தமிழ்க்கட்சிகளின் மீதும் மக்கள் காட்டிய வெறுப்பு என்றே கூற முடியும். அதற்கப்பாலும் ஒட்டு மொத்த தமிழ் அரசியலில் மக்கள் கொண்ட வெறுப்புக் காரணமாக லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாக்களிப்பை தவிர்த்துக் கொண்டனர்.

3 தசாப்த காலத்திற்கு மேற்பட்ட யுத்தம் காவு கொண்ட உயிர்கள், சிதைந்து போன உறவுகள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள், மண்ணிலிருந்து ஏற்பட்ட இடப்பெயர்வுகள், அழிக்கப்பட்ட சொத்துகள், அநாதைகளாக்கப்பட்ட குழந்தைகள,; வாழ்க்கைத்துணையை இழந்த பெண்கள், ஆண்கள் சிதைக்கப்பபட்ட அரசியல் சமூக கலாசார விழுமியங்கள் என அளவிட முடியாத இழப்புகளை சந்தித்திருக்கும் வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் ஒரு தேர்தலை எதிர் கொள்கிறார்கள்.

தான் தோன்றித்தனங்களும், காட்டிக் கொடுப்புகளும் ஒற்றுமையின்மையும் ஐக்கியமின்மையும் ஓரினத்தின் வரலாற்றுச் சுவடுகளை அதன் விழுமியங்களை சீரழித்து விட்டன. இத்தனை கொடுமைகளின் பின்பும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது அரசியல் தலைமைகள் ஓரணியில் நின்று தமது குறைந்தபட்ச அபிலாசைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஜனநாயக ரீதியான அழுத்தங்களையாவது கொடுக்க மாட்டார்களா என ஏங்கித் தவிக்கின்றார்கள்.

ஆனால் சிங்களப் பெருந்தேசிய வாதமோ சிறுபான்மையினங்களை ஒடுக்குவதற்கு ஓரணியில் திரண்டு எக்காளமிடுகின்றது. தங்களுக்கிடையே காணப்படுகின்ற வேற்றுமைகளை மறந்து ஓரணியில் ஒன்று திரண்டு வருகின்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகவும் அதற்கெதிராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜேவிபி ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டுக்களும் மூன்று அணிகளாக தென்பகுதியில் இயங்குகின்ற போதிலும் இந்த 3 அணிகளும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், வாழ்வுரிமைகள் பற்றிய விடயத்தில் ஒன்றுக்கொன்று குறைந்தவை அல்ல என்பதனை வரலாறுபூராகவும் நிரூபித்து வருகின்றன.

மகிந்தவும் அவரது பரிவாரங்களுடனான அரசாங்கதரப்பினரும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்த அனைத்து தரப்பினரையும் ஒரு சேர குவித்து வைத்திருக்கின்றார்கள். ஹெலஉறுமயவில் இருந்து, விமல் வீரவன்சவின் மக்கள் சுதந்திர முன்னணி, தினேஸ் குணவர்த்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணி ஈறாக அனைத்து தரப்பினரும் மகிந்தவின் கரத்தை பலப்படுத்தி உள்ளனர். இவற்றுடன் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் உள்ளிட்ட பௌத்த அமைப்புகளும் ஜனாதிபதியின் கரங்களைப் பற்றி உள்ளன.

மறுபுறம் முஸ்லீம் தரப்பிலும் மலையகத் தரப்பிலும் எதிர்க்கட்சி வரிசை என்று இல்லாமல் அனைவரையும் தனது அணியில் இணைத்து அல்லது வலுக்கட்டாயமாக இணைத்து தனது இனவாத செயற்பாடுகளுக்கு சிறுபான்மையினரையும் கட்டியம் கூற வைத்துள்ளார்.

அதேவேளை வடக்கையும் கிழக்கையும் பிரித்த மகிந்த அவற்றை நியாயப்படுத்த விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த கருணா மற்றும் பிள்ளையானை தனது சிகப்புத் துண்டில் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறார்.

வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவை தனது முகவராக வைத்திருந்த மகிந்த இப்போ வன்னியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளரான கே.பியை களமிறக்கி உள்ளார்.

இவர்களைத் தவிரவும் இன்னும் பல அதிசயிக்கத் தக்க வகையில் தனக்குத் தேவையான நேரத்தில் அப்பப்போ புதிய தலைகளை களமிறக்க மகிந்த தயாராக இருக்கிறார்.

ஆக தமிழ் மக்களின் வாழ்வுரிமை, அடிப்படை அரசியல் உரிமைகள் பற்றியோ, அல்லது மொழிவாரியாக, இனவாரியாக, கலாசார பண்பாட்டு ரீதியான உரிமைகள் பற்றியோ எவரும் பேச முடியாத சூழலையை மகிந்தராஜபக்ஸ ராட்சியத்தினர் ஏற்படுத்த முனைகின்றனர்.

இத்தனை அழிவுகளின் பின்பும் 30 வருடத்திற்கு மேற்பட்ட கற்றறிந்த பாடங்களின் பின்பும் இதனைப் புரிந்து கொள்ள முடியாமல் தமது வியாபாரத்திற்காக எதற்கு எடுத்தாலும் தேசியம் என கூப்பாடு போடும் தேசிய வீரர்களின் பித்தலாட்டங்களை எப்படி வர்ணிக்க முடியும்.

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போதே அதனுள் உள்ளடங்கக் கூடிய அனைத்துக் கட்சிகளையும் இணைத்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் பக்கம் இருந்து எத்தனை கட்சிகளை அதிக பட்சம் தமிழ்த் தரப்பின் பக்கம் கொண்டு வந்திருக்க முடியுமோ அதனை செய்திருக்க வேண்டும்.

இறுதியில் கடந்த பொதுத் தேர்தலின் போது கூட தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் போன்ற கட்சிகளை கூட்டமைப்பில் கொண்டு வந்திருந்தால் குறைந்தது வடக்கு கிழக்கில் 20 ஆசனங்களை பெற்றிருக்க முடியும். அதனையும் தவறவிட்டாயிற்று. வடக்கு கிழக்கு அனைத்து பகுதிகளிலும் பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் தம்மை வளர்க்க இத்தகைய ஐக்கியம் இன்மைகளே காரணமாயின. மகிந்த தலைமையிலான ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலேயே ஈபீடீபி கட்சி இணைந்து கேட்க வேண்டும் தனியாகவோ தமிழ் அரங்கத்துடனோ கேட்க முடியாது என மகிந்த கடும் தொனியில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இம்முறையும் உத்தரவிட்டிருந்தார். டக்ளசும் ஒவ்வொரு தேர்தலிலும் தனியாகப் போகப் போறன் எனக் கூறுவதன் மூலம் தனது தனிப்பட்ட பேரம் பேசலில் வெற்றி பெற்று வருகிறார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி கூட இம்முறைத் தேர்தலில் யானைச் சின்னத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெறுபவர்களே தேர்தலில் போட்டியிடலாம் என்ற தீர்மானத்தை எடுத்தது.

ஆனால் இவற்றையெல்லாம் புரியாத அரசியல் கற்றுக்குட்டிகள் முன்னர் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று இயங்கி வந்த போதிலும் தற்போது ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து தமிழ் மக்களின் இக்கட்டான நிலையைப் புரிந்து ஐக்கியப்பட முன்வருகின்ற பொழுது அவர்களுக்கு மீண்டும் துரோகிப்பட்டம் சூட்டி தமது சுய லாபங்களை அடைய முற்படுகிறார்கள்.

உண்மையில் முன்னர் அரச ஆதரவுடன் அல்லது அதன் ஆசியுடன் செய்பட்ட தமிழ் அரசியட் கட்சிகள் மீது பாரிய விமர்சனங்கள் உண்டு. அவை குறித்து இனிவரும் காலங்களில் ஆவது அவர்கள் அது குறித்து சிந்திக்க வேண்டும். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பீஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ ஆகிய கட்சிகள் இணைத்துக் கொள்ளப்பட்ட போதும் இவற்றை விட பன்மடங்கு விமர்சனங்கள் இருந்தன. அதற்கு அப்பாலும் அவ் அமைப்புகள் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட பின் இன்று அனைவராலும் தமிழ்த் தேசியக் கட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட இல்லையா? தமது செயற்பாட்டின் மூலம் அதனை அக்கட்சிகள் நிரூபிக்கவில்லையா?

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழுவில் அங்கத்துவம் வகித்தவர்களும், கடந்த காலங்களில் யாழ்ப்பாண மக்களின் பணத்தை ஏப்பம் விட்டு வர்த்தக ஜாம்பவான்களாக வந்தவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இப்பொழுது தேசிய வாதிகளாக மாறவில்லையா?

வன்னியில் பண மோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தல்களைப் பெற்று வன்னியை விட்டு வெளியேறியவர்கள் இன்று தமிழ்த் தேசியத்தின் காவலர்களாக உலா வரவில்லையா?

கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியேறிய போது கிழக்கின் தனித்துவத்தை வலியுறுத்தி அவரை உசுப்பேத்தி விட்டவர்களும், அவர் சார்பாக பத்திரிகை அறிக்கைகள், கொள்கை விளக்கங்கள் என்பவற்றை கூட்டுச் சேர்ந்து எழுதி வெளியிட்டசர்கள், பின்னர் புலிகளின் கை ஓங்க மறுபடியும் புலிகளின் பக்கம் குத்துக்கரணம் அடித்து வந்த அரசியலாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூகப் பிரக்ஞை உடையவர்களாக தம்மை அடையாளம் காட்டியவர்கள் இன்று தேசியத்தின் தூண்கள் என தம்மைக் கூறவில்லையா?

ஐக்கியத்தை எதிர்ப்பவர்கள் இவற்றிற்கு பதில் கூறுவார்களா?

மறுபுறம் இறுதி யுத்தத்தை முன்னின்று நடத்தி பாரிய அழிவுகளைச் செய்து வன்னிமக்கள் அனைவரையும் முட்கம்பி வேலிக்குள் அடைக்க வேண்டும், அவர்களை சுதந்திரமாக விடுவது இலங்கையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எனக் கூறிய முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக ஆதரித்தது. இதன்போது பொன்சோகாவுக்கு ஆதரவாக தேர்தல் முழக்கங்களை இட்டு வந்த பலர், இன்று தம்மைத் தவிர்ந்த ஏனையவர்களை துரோகிகள் எனக் கூறுவது வேடிக்கையானது.

குறிப்பாக யாழ் மாவட்டத்தில் 2000 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் காணாமல் போவதற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் காலத்தில் சமாதான பேச்சுவார்த்தையின் போது அதற்கு எதிராக செயற்பட்டவருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தமை அரசியல் சாணக்கியம், ராஜதந்திரம் என ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கின் அரசியல் மோதாவிகளும் வடக்கின் சில அரசியல் மேதாவிகளும் இன்று தமிழ்க்கட்சிகளின் ஐக்கியம் என்பதனை தமிழ் அரசியலுக்கான ராஜ தந்திரமாக சாணக்கியமாக ஏற்க மறுப்பது ஏன்? இல்லையாயின் கடந்த ஜனாதிபதி;த் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்த போது இன்று தம்pழ்கட்சிகளின் ஐக்கியத்தை நிராகரிக்கின்ற வடக்கு மற்றும் கிழக்கின் அரசியல் மாமேதைகள் அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறாதது ஏன்?

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐக்கியத்திற்கு முன்வருகின்ற கட்சிகளை இன்னும் தேசத் துரோகிகளாக இவர்கள் காட்ட முற்படுவார்களாயின் பசில் ராஜபக்ஸவுடன் இரகசியத் தொடர்புகளைப் பேணி வரும் தேசிய வீரர்களையும் அரசாங்க நிகழ்ச்சிகள் அனைத்திலும் மேடையில் வீற்றிருக்கும் தேசிய வீரர்களையும் தமக்கேற்பட்ட அரசியல் அச்சுறுத்தல்களின் போது பின் கதவால் சென்று சரணாகதி அடைந்து தமது இருப்பைப் பேணிக் கொண்ட தேசிய வீரர்களையும் எந்தத் துரோகப் பட்டியிலில் இணைத்துக் கொள்வது?

இன்று சிறுபான்மையின மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டங்களை ஒடுக்குவதற்கு அனைத்து வழிமுறையையும் கையாளுகின்ற சிங்கள பெருந்தேசிய வாதம் தமக்கெதிராக துப்பாக்கி ஏந்தி போராடியவர்களையும் தமக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களையும் மூன்று தசாப்தத்திற்கு மேலாக தமது தூக்கத்தை கலைத்தவர்களையும் தம்முடன் அரவணைக்கின்றது.

600 காவற்துறையினரை ஒரே தடவையில் கொன்றதாகவும் தலதா மாளிகைக் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகளாகவும் தெற்கில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்புகள் தாக்குதல் என்பனவற்றின் சூத்திரதாரிகளாகவும் குற்றஞ் சாட்டப்பட்டு, இலங்கை அரசின் தேசத் துரோகிகளாக இனங் காணப்பட்ட கருணாவையும் பிள்ளையானையும் சிங்களப் பெருந்தேசிய வாதம் செல்லப்பிள்ளைகளாக தத்தெடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆரம்ப கட்ட வளர்ச்சியிலிருந்து அதன் முதுகெலும்பாக இருந்த சர்வதேச ஆயுத முகவர் கேபி என்ற குமரன் பத்மநாதனை சிங்களப் பெருந்தேசிய வாதம் இன்று தன் முதலீடாக மாற்றியுள்ளது. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஈடாக இலங்கையாலும் சர்வதேசத்தாலும் கணிக்கப்பட்ட, தேடப்பட்ட கேபி இன்று அரச தரப்பில் பலமுள்ளவராக மாற்றப்பட்டுள்ளார். இவையெல்லாம் சிங்களத்தின் அரசியல் சாணக்கியம். ஆனால் தமிழ் அரசியலின் சாணக்கியம் என்பது கண்ணில் தென்படுகின்றவர்கள் எல்லோருக்கும் துரோகிப்பட்டம் கொடுத்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது என்பதாகி விட்டது.

இந்த வகையில் 80களில் யாழ்ப்பாண ராணுவத் தளபதியாக இருந்த கொத்தலாவையுடன் கைகுலுக்கியது அரசியல் ராஜதந்திரம் எனக் கணிப்பிட்டால், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுடன் முழு அளவில் உறவை ஏற்படுத்தி ஆயுதங்களை பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட செய்ற்பாடுகளை அரசியல் சாணக்கியம் என ஏற்றுக் கொண்டால், 1978 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 17 வருடங்களுக்கு மேல் பல்வேறு வகைகளிலும் தமிழ் அரசியலுக்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆரம்பத்தில் இருந்து சமாதானப் பேச்சு வரை பல தடவைகள் கைகுலுக்கியமையை அரசியல் ராஜதந்திரமாக ஏற்றுக் கொண்டால், 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பழி வாங்குவதற்காக பசில் ராஜபக்ஸவூடாக மகிந்த ராஜபக்ஸவுடன் மேற்கொள்ளப்பட்ட இரகசிய உடன்பாடுகளை அரசியல் சாணக்கியம் என ஏற்றுக் கொண்டால், இறுதியாக முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதித் தேர்தலில் முழுமையாக ஆதரிப்பது என எடுக்கப்பட்ட முடிவை அரசியல் ராஜதந்திரம் என ஏற்றுக் கொண்டால் - தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டுமென தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவை மட்டும் ஏன் தமிழ் மக்களுக்கான அரசியல் சாணக்கியம் என்றோ அல்லது ராஜ தந்திரம் என்றோ அவற்றிற்கும் மேலாக இன்றைய காலத்தின் அதி முக்கிய தேவை என்றோ ஏற்றுக் கொள்ள முடியாது. கூறுவீர்களா ஐக்கியத்தை நிராகரிக்கும் தேசியவீரர்களே.

ஆக இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து அவற்றை வெற்றி கொள்ள வேண்டுமாயின் உள்நாட்டிலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி தமிழ் மக்களிடையே ஐக்கியம் என்பது மிக முக்கிய விடயமாகிவிட்டது.

இந்த இடத்தில் யார் குற்றவாளிகள் யார் சுற்றவாளிகள் என ஆராய முற்பட்டால் நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்றோ, குற்றம் செய்யாத அல்லது கையில் கறைபடியாத அரசியலாளர்கள் கல்லெறியுங்கள் என்றோ கேட்க வேண்டியிருக்கும். இப்போ இங்கே யார் அதிக குற்றம் செய்தவர்கள், யார் குறைய குற்றம் செய்தவர்கள் என்றோ அளவீடு செய்வதல்ல. கடந்தகால அனுபவங்களில் இருந்து உண்மையான, செயலூக்கமுள்ள, பலமான கூட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இதில் தொடர்தும் அரசை ஆதரிக்கும் கட்சிகளைத் தவிர அரசாங்கத்திற்கு வழங்கி வந்ந ஆதரவை விலக்கிக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தும், அவர்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட வாழ்வுரிமைக் கோரிக்கை தொடர்பான நிலைப்பாட்டிலும் பொது உடன்பாட்டிற்கு வரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு சில கட்சிகளுடன் முரண்பாடு ஏற்படுமிடத்து ஆகக் குறநை;தது எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான அணியினருக்கு எதிராக தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியிருக்க ஆயினும் வழிஏற்படுத்தப்பட வெண்டும்.

விசேடமாக வடக்கு கிழக்கு கிழக்கு உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு அணியே கூட்டமைப்பாக போட்டியிட வேண்டும். இந்த அணியுடன் உடன்பட முடியாத தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிடாது இந்த அணியை வெற்றி பெறச் செய்ய வெண்டும். அதுவே இன்று அரசியல் ஊழித் தாண்டவமாடும் சிங்கள பெரும் தேசியத்திற்கு தமிழ் மக்களால் வழங்கக் கூடிய காத்திரமான செய்தியாக இருக்க முடியும்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/56739/language/ta-IN/article.aspx

இதில் தொடர்தும் அரசை ஆதரிக்கும் கட்சிகளைத் தவிர அரசாங்கத்திற்கு வழங்கி வந்ந ஆதரவை விலக்கிக் கொண்டு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்தும், அவர்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட வாழ்வுரிமைக் கோரிக்கை தொடர்பான நிலைப்பாட்டிலும் பொது உடன்பாட்டிற்கு வரும் அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இது நடக்க வேண்டும் என்று எண்ணுவோம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.