Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்பெக்ட்ரம் ராசா கைது - நவீன திருதராஷ்டிரனின் விடாத பாசம்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெக்ட்ரம் ராசா கைது - நவீன திருதராஷ்டிரனின் விடாத பாசம்..!

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஒரு பக்கம் உச்சநீதிமன்றத்தின் சூடு நிறைந்த வார்த்தைகள்.. மறுபக்கம் எதிர்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரை கலாட்டா காலனியாக்கத் துடிக்கும் எதிர்க்கட்சிகள்.. இவைகள் இரண்டில் தப்பித்து கடலில் குதித்தாலும் எதிரில் அலைபாய்ந்து வரும் தேர்தல் என்னும் சுறா.. இந்தப் பக்கம் எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டி பாராளுமன்றத்தைக் கூட்டினாலும் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியாத நிலைமை..

என்னதான் செய்வார் அடிமை மன்னமோகனசிங்..? அவருடைய ஆளுமையின் கீழ் வரும் சி.பி.ஐ.யை உச்சநீதிமன்றம் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தகுந்தபடி வாதாட வழக்கறிஞர்களுக்கு வேண்டிய உண்மைத் தகவல்கள் கிடைக்கவில்லை. பாவம் அவர்களென்ன செய்வார்கள்..? வழக்குத் தொடுத்திருப்பவர்களே முன் காலங்களில் அரசு வழக்கறிஞர்களாக இருந்தவர்கள்தான்.. அவர்களும் எத்தனை நாட்கள்தான் மெளனமாக இருப்பார்கள்? வருங்கால சட்டவுலகம் இந்த மாமேதைகளின் வாழ்க்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை எழுதுவதற்குள் தாங்கள் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இந்தப் பக்கம் தாத்தா தனது சொக்கத் தங்கம் ராசாவின் இன்னொரு முகத்தைக் கண்ட அதிர்ச்சியைவிட தனது வீட்டுக்குள்ளேயே ஒரு கொள்ளைக் கும்பல் இருப்பதைப் பார்த்து நிஜமாகவே அதிர்ந்து போயிருக்கிறார். 1980 தேர்தலில் கிடைத்த தோல்வியைவிடவும் தற்போது தனது துணைவியான சி.ஐ.டி. காலனியம்மாவுக்கும், கவி வாரிசுக்கும் ஸ்பெக்ட்ரமில் இருக்கும் பங்குதான் அவரை ரொம்பவே நோகடித்திருக்கும்..

இவரிடம் சொல்லிவிட்டுத்தான் இந்த ஊழலை இந்தக் கூட்டணி தொடங்கியிருக்கும் என்பதை நான் நம்பவில்லை. தாத்தாவுக்கு நிச்சயமாக இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் துணைவியாரின் ஏற்பாட்டில் இது நடந்திருக்க நிச்சயமாக வாய்ப்புண்டு. அந்த வகையில் தாத்தா இப்போது நடந்த தவறுகளை மூடி மறைக்கும் கவுரவ குடும்பத் தலைவராகவும், தனது வாரிசுகளைக் காப்பாற்ற தனது தள்ளாமையையும், தனது இத்தனை வருட கால உழைப்பையும் தராசுத் தட்டில் வைக்கும் குருட்டு திருதராஷ்டிரனாகவும் தென்படுகிறார்.

ஏற்கெனவே இந்த வழக்கை நேரடியாகத் தாங்களே நடத்தி வருகின்ற உச்சநீதிமன்றம் வரும் 10-ம் தேதியன்று என்னென்ன கேள்விகளைக் கேட்டு குடைச்சலைக் கொடுக்கப் போகிறதோ என்றெண்ணி கலக்கத்தில் இருக்கும் மத்திய அரசு, எப்பாடுபட்டாவது இதிலிருந்து சிறிதளாவாவது தப்பித்துக் கொள்ள எண்ணியுள்ளது. இதன் விளைவே ஸ்பெக்ட்ரம் நாயகன் ராசாவின் கைது..

மீனவர் பிரச்சினைக்காக பிரதமரிடம் பேசச் சென்றிருப்பதாக தமிழக மீனவர்களிடம் எதிர்பார்ப்பு.. மக்கள் பிரச்சினைகளைப் பேச சென்றிருப்பதாக அப்பாவி தி.மு.க. தொண்டர்களின் நம்பிக்கை.. ஆனால் நடந்ததோ வேறு..

காங்கிரஸுடனான தொகுதி உடன்பாடு இன்னமும் முடியாதபட்சத்தில் தனது தேர்தல் பிரச்சாரக் களத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்கிற மகா குழப்பத்தில் இருக்கிறது தி.மு.க. எதிர்க்கட்சிகளோ ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காகவே ஸ்பெஷல் மேடைகள் போடத் தயாராகிவிட்டன. போதாக்குறைக்கு தமிழர் அமைப்புகள் ஈழப் பிரச்சினையில் மாநில, மத்திய அரசுகள் செய்த துரோகத்தை மேலும் பட்டியலிடத் தயாராகவுள்ளன. இதற்குக் காரணமாகவே ஆளும்கட்சியை எதிர்க்க அனைத்துத் தரப்பினரும் தயார் நிலையில் உள்ளனர்.

போதாக்குறைக்கு தற்போது கழுத்தைச் சுற்றியிருக்கும் பாம்பாக தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரச்சினை. எத்தனை பிரச்சினைகளைத்தான் தாத்தா தாங்குவார். அவருக்கோ வயது 85. ஆனாலும் மாநிலத்தில் ஒரு பிரச்சினைவிடாமல் அனைத்தையும் செய்து முடிக்கிறாராம்.. ஆனாலும் நீரா ராடியா பிரச்சினையில் தனது குடும்ப உறவுகள் சீரழிந்த கதைக்கு மட்டும் இன்னமும் பதில் சொல்லாமல் டபாய்க்கிறார்.

டெல்லியில் “மீனவர் பிரச்சினைக்காக பதவியை ராஜினாமா செய்வீர்களா?” என்ற நிருபரின் கேள்விக்கு காது கேட்காமல் மறுபடியும் “என்ன..” என்று கேட்டுவிட்டு பதில் சொல்ல நிற்கிறார். அதற்குள்ளாக உடன் இருக்கும் அல்லக்கைகள் அவரைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள். இப்போது இவர் முதல்வரா அல்லது வீல்சேரைத் தள்ளிக் கொண்டு செல்பவர்கள் முதல்வர்களா..? யாரிடம் போய் கேட்பது..? எப்படியோ தாத்தாவைத் தள்ளிக் கொண்டு வந்துதான் கூட்டணி பேச வேண்டிய கட்டாயம் தி.மு.க.வுக்கு.

இரு தரப்பிலும் குள்ளநரித்தனம். எதை வைத்து சீட்டுக்களை அதிகமாகக் கேட்கலாம் என்பது காங்கிரஸின் எண்ணம். எதை வைத்து சீட்டுக்களைக் குறைவாகக் கொடுக்கலாம் என்பது தி.மு.க.வின் எண்ணம். இது காலை வாரி விடும் விளையாட்டுதான். இந்த விளையாட்டில் ஒரு பகுதியாகத்தான் தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழகத்தின் தலை சிறந்த தலித் இளைஞரும், தாத்தாவின் மனம் கவர்ந்த தம்பியுமான ஸ்பெக்ட்ரம் ராசாவின் கைது..

ஏற்கெனவே 3 முறை சி.பி.ஐ. அழைத்தபோதெல்லாம் மரியாதையாக நேரில் சென்று ஆஜராகி தனது விளக்கங்களைக் கொடுத்து வந்திருக்கும் ராசாவை நான்காவது முறையாக, அதுவும் அவரது தானைத் தலைவர் டெல்லிக்கு வந்திருக்கும் அன்றைக்கே விசாரணைக்கு அழைத்த தைரியத்தைப் பார்த்து நிச்சயம் கொஞ்சம் பயம் வந்திருக்கும்.

ஆனாலும் எத்தனையோ களங்களையும், துரோகங்களையும், எதிர்ப்புகளையும் சமாளித்துவிட்ட தாத்தா இந்த முறை, இந்த வயதான காலத்தில் இந்த மாதிரி கர்மத்தையெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறதே என்பதுதான் என்னுடைய வருத்தம்.. இப்போது அவரது வயதும் சேர்ந்து அவருக்கொரு பக்குவத்தைக் கொடுத்திருக்கிறது.

முன்பு நாம் தவறு செய்யவில்லை. துணிந்து நின்றோம். ஆனால் இப்போதோ அம்பலப்பட்டு அம்மணமாக நிற்கிறோம். எதிர்த்து நின்றால் அப்படியே நின்று அசிங்கப்பட வேண்டியதுதான். ஆகவே ஒத்துப் போய் கிடைக்கின்ற கோவணத்தையாவது வாங்கிக் கட்டிக் கொண்டு மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார் தாத்தா. இதைத்தான் அவர் டெல்லியில் காட்டியிருக்கும் அசாத்திய பொறுமை வெளிக்காட்டுகிறது.

ஜன்பத் அம்மாவுக்கு காய்ச்சல் என்றாலும், 86 வயதான இந்த அரசியல் சாணக்கியரை 8 மணி நேரம் காக்க வைத்துவிட்டு சந்தித்த தைரியம் இந்தியாவிலேயே சோனியாஜிக்கு மட்டுமே உண்டு. வாழ்க அந்தத் தாய்..

தேர்தலில் கூட்டு. 80 சீட்டுக்குக் குறைவில்லாமல். ஆட்சியில் பங்கு, அமைச்சர்கள் குறிப்பாக துணை முதல்வர் பதவி - இப்படியெல்லாம் அடுத்து பட்டத்துக்கு வரவிருக்கும் இளவரசர், அரசியார் சார்பாக கேட்டிருப்பதாக டெல்லி வட்டாரத் தகவல்கள்.. கேட்டிருந்தாலும் தப்பே இல்லை..

மத்திய அமைச்சரவையில் இடத்தைக் கொடுத்து ஆயிரம் கோடிகளுக்கு மேல் குடும்பத்தினருக்காக சம்பாதிக்க வாய்ப்பைக் கொடுத்திருக்கும் காங்கிரஸ் அரசு இதைக் கேட்டிருப்பதால் தவறேயில்லை..

ஆனால் இதோடு கூடவே ராசா மேட்டரும் பேசப்பட்டிருக்கலாம் என்றே நான் நம்புகிறேன். எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வேண்டியும், உச்சநீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கடமைக்காகவும் ராசா கைது அவசியம் என்பது தாத்தாவுக்கு குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்க வேண்டும். இதையே மன்னமோகனசிங்கும் குறிப்பிட்டிருப்பார் என்று நினைக்கிறேன். தாத்தாவிடம் முன் கூட்டியே சொல்லாமல் இந்தக் கைது நடந்திருக்க வாய்ப்பே இல்லை..

இப்போதைக்கு அரெஸ்ட்டுதான்.. 5 நாட்கள் சிபிஐ காவலில் விசாரிக்கிறோம். பின்பு கோர்ட்டில் ஒப்படைக்கும்போது ஜாமீன் போட்டு நீங்கள் மீட்டுக் கொள்ளுங்கள். ஆட்சேபணை தெரிவிக்க மாட்டோம். நிச்சயமாக திஹார் ஜெயிலுக்குள் தள்ள மாட்டோம் என்று சமாதானம் சொல்லப்பட்டிருக்கலாம்..

எனக்கென்னவோ வரும் திங்கட்கிழமையே ராசா ஜாமீனில் வெளியே வரலாம் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் ராசாவைக் கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்துவிட்டு பின்பு இரண்டு மாதங்கள் கழித்து ஜாமீனில் வரும்வேளையில் பெரம்பலூர், நீலகிரி மாவட்டங்களில் தேர்தல் பணியினைச் சமாளிக்கவும், பதுக்கி வைத்திருப்பதை எடுத்துக் கொடுத்து ஓட்டுக்குக் காசாக்கும் வேலையைச் செய்யவும் வேறு ஆள் தி.மு.க.வுக்கு நிச்சயமாக இருக்காது. காங்கிரஸுக்கும் இது சம்மதமாகத்தான் இருக்கும்..

இரு தரப்புமே பரஸ்பர ஒப்பந்தத்தின்பேரில் இரண்டு கட்சிகளின் உறவுகளுமே இதனால் சீர் குலையாது என்று சொல்லியிருப்பதன் மூலமும் இதனை உணர முடிகிறது.

சென்ற மாதம்தான் தொலைத்தொடர்புத் துறையின் புதிய மந்திரியாகப் பொறுப்பேற்ற கபில்சிபில் ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். இவர் சொன்னதையே தாத்தாவும், அவர்தம் கட்சியினரும் மாறி மாறி சொல்லி ஒரு வாரத்திற்கு சித்ரஹார் கொண்டாடினார்கள்.

ஆனால் இப்போது சி.பி.ஐ. ராசாவால் இந்திய அரசுக்கு 22000 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளது. இப்போது கபில்சிபல் என்ன சொல்வார்..? செய்வார்..?

சி.பி.ஐ. அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரவையில் கபிலும் ஒரு அமைச்சர்தான். சி.பி.ஐ.க்கு பொறுப்பு வகிக்கும் பிரதமரிடம் இது பற்றி கபில்சிபல் பேசுவாரா..? அல்லது வினா எழுப்புவாரா..? சி.பி.ஐ. தவறு இழைத்திருக்கிறது என்று வாதாடுவாரா..?

இவராவது பரவாயில்லை. தாத்தாவும் இன்றைய பொதுக்குழுக் கூட்டத்தில் இதையேதான் திருப்பிச் சொல்கிறார். ராசா கைது தவறு. அவர் மீது வழக்குத் தொடர்ந்து அது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று அவர் குற்றவாளி என்று தீர்ப்பில் நிரூபணமானால் அப்போது ராசா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்று திருவாய் மலர்ந்துள்ளார். இன்றைய நிலைமையில் இதைத் தவிர இந்த நவீன திருதராஷ்டிரனால் வேறென்ன சொல்ல முடியும்..?

ராசா கைது சட்டவிரோதம் என்றால் தனது உடன்பிறப்புக்காக இந்நேரம் கூட்டணியைவிட்டு விலகியிருக்க வேண்டாமா..? ஏன் இப்போது மட்டும் தொங்கிக் கொண்டே இருக்கிறீர்கள்..? ராசாவை சட்டவிரோதமாக பிரதமரின் கீழ் இயங்கும் சி.பி.ஐ. கைது செய்திருப்பதைக் கண்டித்து பிரதமரின் கொடும்பாவியை எரிக்கலாமே..? அண்ணா சிலை முன்னால் பிரதமரின் உருவப்படத்தை செருப்பால் அடித்து உங்களது கோபத்தைக் காட்டலாமே..? உடன்பிறப்புக்களால் இது முடியுமா..? முடியாது..

இப்போதைக்கு இவர்களால் இவ்வளவுக்குத்தான் வாயைத் திறக்க முடியும். இந்த ஒன்றை வைத்து காங்கிரஸ் தனது சீட் பேரத்தில் உறுதியாய் இருக்கிறது. கூட்டணி முறியக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் தாத்தா, காங்கிரஸுக்கு நிச்சயம் சலாம் போட்டுத்தான் ஆக வேண்டும். தாத்தா முறித்துக் கொண்டால், துணைவியும், அருமைப் புதல்வியும் மாட்டிக் கொள்வார்கள்.. அவர்கள் இல்லையெனில் தாத்தாவுக்கு வாழ்க்கையே இல்லை..

ஸோ.. இதுவும் ஒரு வகையில் நாட்டு மக்களை ஏமாற்ற நடக்கும் நாடகமே.. ராசா திஹார் ஜெயிலுக்குள்ளேயே கொண்டு போய் அடைக்கப்பட்டாலும், மத்தியில் காங்கிரஸ் அரசு இருக்கின்றவரையில் இந்த வழக்கு சுடுகாட்டிற்குத்தான் கொண்டு போகப்படும்.

தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு வழக்கில், சாட்சிகளெல்லாம் பல்டியடித்தபோது ஒரு சாட்சியைக்கூட பிறழ் சாட்சியாக அறிவிக்க சி.பி.ஐ. வக்கீலுக்குத் தோணவில்லையே என்பதையெல்லாம் யோசித்துப் பார்க்கின்றபோது இந்த நாட்டில் நீதி, நேர்மை, நாணயம், அரசியல் சட்டம் இதுவெல்லாம் வெறும் எழுத்துக்களில் மட்டும்தான் கூடு கட்டி வாழ்கிறது என்பது தெரிகிறது.

கூட்டணி தர்மத்துக்காக தினகரன் வழக்கையே ஊதி முடித்து கருமாதியை கச்சிதமாகச் செய்த சி.பி.ஐ. இந்த வழக்கையும் இதே போன்றுதான் செய்யப் போகிறது. “இன்னும் 2 மாதங்களுக்கள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப் போகிறோம்” என்று சிபிஐ சொன்னாலும், அது தாக்கல் செய்யவிருக்கும் குற்றப்பத்திரிகையை எதிர்த்து வாதாட, தினத்தந்தியில் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழலைப் படித்த சாதாரணமானவனே போதுமாகத்தான் இருப்பான்.

ராசா ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக எத்தனை தயார் நிலையில் நிற்கிறார் என்பதையும், அவரை அப்பதவிக்குக் கொண்டு வருவதற்கு யார், யாரெல்லாம் என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் உலகத்தின் நம்பர் ஒன் பி.ஆர்.ஓ. நீரா ராடியாவின் டேப்புகள் நமக்குச் சொல்கின்றன.

ஆனால் டேப்புகள் சம்பந்தமாக நீரா ராடியாவை மட்டுமே இதுவரையில் சி.பி.ஐ. விசாரித்திருக்கிறது. வேறு எவரையும் அது நெருங்கவில்லை.. கனிமொழி, ராஜாத்தியம்மாள், ரத்தன் டாட்டா, முகமூடி பத்திரிகையாளர்கள், அரசியல்வியாதிகள் என்று வேறு யார் மீதும் சி.பி.ஐ. கை வைக்கவில்லை. பின்பு ராசாவின் உள் நோக்கமான திட்டமிட்ட இந்தச் சதியை எப்படி கோர்ட்டில் இவர்கள் நிரூபிக்கப் போகிறார்கள்..?

கனிமொழி-நீரா ராடியா டேப்பில் இருக்கின்ற பேச்சுக்களே ராசாவின் ஸ்பெக்ட்ரம் மீதான ஆர்வத்தையும், தொலைத்தொடர்புத் துறையில் அவரை அமர்த்த வேண்டி இந்திய வர்த்தக உலகம் முனைப்புடன் செயல்படுவதும் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டுமே..? நீரா ராடியாவின் பேச்சுக்கள் அனைத்தையும் கடைசியில் பி.ஆர்.ஓ. தனது பிராண்ட்டடை முன்னிலைப்படுத்த நடத்திய பிஸினஸ் பேச்சுக்களாக்கி சி.பி.ஐ. வாதாடப் போகிறது. இதனால் பயனடையப் போவது ராசாவைத் தவிர வேறு யாராக இருக்கும்..?

இப்படி எத்தனை ஓட்டைகளுடன் அது நீதிமன்றப் படியேறப் போகிறதோ தெரியவில்லை. என்னதான் உச்சநீதிமன்றம் வழக்கை நடத்தினாலும் எங்களால் இவ்வளவுதான் ஆதாரங்களைத் திரட்ட முடிந்தது என்று சொல்லி சி.பி.ஐ. அழுது புலம்பினால் அவர்களென்ன செய்வார்கள்..? இருக்கின்ற ஆதாரங்களை வைத்துத்தானே தண்டனையளிக்க முடியும்..?

திருப்தியில்லையெனில் நீதிபதிகளாக களத்தில் இறங்கி விசாரிக்கப் போகிறார்கள். ஆனானப்பட்ட போபர்ஸ் வழக்கையே ஊதி மூடலையா இந்த மூதேவிகள்..? இதுவெல்லாம் ச்சும்மா ஒரு கொசுதான்.. பார்த்துக் கொண்டேயிருங்கள்..

ஏற்கெனவே 1 லட்சத்து 70 கோடி ஊழலை, 22000 கோடிக்கு இறக்கிக் காட்டிவிட்டார்கள். போதாக்குறைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் என்கிற வார்த்தையைக் காட்டாமல் ஸ்பெக்ட்ரம் முறைகேடு என்று சொல்லி ஆளும் கட்சியின் பெரிய ஜால்ரா டிவி தனது செல்வாக்கை வைத்து மக்களிடம் திணித்து வருகிறது. ஆனால் ஆளும் கட்சியின் டிவியோ, இது பற்றியே மூச்சுவிடாமல் தனது ஜனநாயக தனித்தன்மையை வெளிக்காட்டி வருகிறது.

ராசா கைது என்று டிவிக்களில் செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தாத்தா இலவச டிவிக்களின் அடுத்தக் கட்ட விற்பனைப் புள்ளி ஒப்பந்தத்தைப் பிரிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இது பற்றிய செய்தியே ஆளும் கட்சி டிவியில் அமோகமாக ஓடிக் கொண்டிருந்தது.

ஆக மொத்தம், நமது மக்களின் பிச்சைக்காரத்தனத்தை அப்படியே தங்களுக்கான பலமாக எடுத்துக் கொள்ளும் இந்த திருட்டு அரசியல்வியாதிகளுக்கு ஊழலை மறைப்பதென்பதெல்லாம் மிகவும் சாதாரண விஷயம்..

இந்த மாதம் சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளையும், தமிழக அரசின் சினிமா விருதுகளையும், கலைமாமணி விருதுகளையும் வழங்கி நான்கு நாட்கள் தங்களது தொலைக்காட்சியில் வெளியிட்டு நமது மக்களுக்கு ஷோ காட்டப் போகிறார்கள். மறந்துவிடுவார்கள் மக்கள். அடுத்த மாதம் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பரிசு காத்திருக்கிறது. கலைஞர் நகரில் கலைஞர் ஸ்டூடியோ திறக்கும் விழா காத்திருக்கிறது.. எப்படியும் இன்னும் இரண்டு நாட்களில் மக்களை மதிமயங்கச் செய்துவிடலாம்..

இதற்கு நடுவில் நம்ம தலித் ராசா, திஹாருக்குள் போய் வந்தால் என்ன? திஹாருக்குள் போகாமல் திரும்பினால்தான் என்ன..? அவர்கள் வாயில் போட்ட காசு மட்டும் திரும்ப வர வாய்ப்பே இல்லை..

வாழ்க ஜனநாயகம்..

வாழ்க பாரதம்..

வாழிய தலித் என்னும் கேடயம்..!

http://truetamilans.blogspot.com/2011/02/blog-post_04.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.