Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் தின்று முடித்த நிலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் தின்று முடித்த நிலம்

GTNற்காக சிவச்செல்வன் ரமணிதரன்

போரில் பாதிப்புக்குள்ளான பெண்கள் - முன்னாள் பெண் போராளிகள் -இன்று மார்ச் 8 பெண்கள் தினம்

போரில் பாதிப்புக்குள்ளான பெண்கள் மற்றும் முன்னாள் பெண் போராளிகள் பற்றிய உரையாடலுக்கான பூரணப்படுத்தப்படாத சில குறிப்புக்கள்:

இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாகின்றன. போர் முடிவடைந்த கையோடு போருக்குப் பிந்தைய சமூகம் குறித்து எழுந்த உரையாடல்கள் பத்திரிகைகள் வானொலி தொலைக்காட்சி இணையங்கள் முகப்புப் பக்கங்கள் என்று விரிந்தும் பரந்தும் நடப்பது போலத் தோன்றினாலும், போரில் பாதிப்புக்களுக்குள்ளான மனிதர்களது வாழ்க்கையில் எத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றமும் வந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதுமின்றி போர் முடிவடைந்து இரண்டு வருடங்களாகும் இன்றைய நிலைமையிலும் ஏன் இந்த நிலைமை தொடர்கிறது என்பது மிக முக்கியமான ஒரு கேள்வி.

இந்தக் கேள்வியை எழுப்புகிற போது கூடவே எழும் இன்னுமொரு அடிப்படையான கேள்வி போர் எவ்வாறு முடிவடைந்தது என்பதாகும்?

ஏன் இந்தக் கேள்வி அடிப்படையானது என்றால் போர் எவ்வாறு முடிவடைந்தது என்பதனைப் பொறுத்து போருக்குப் பிந்தைய சமூகம் எதிர் கொள்ளும் நெருக்கடிகளும் எதிர்கொள்ளும் அதன் சவால்களும் வேறுபட்டவையாகி விடும்.

இணக்கப் பேச்சுவார்த்தை மூலமாக போர் முடித்து வைக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அந்தச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும், ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடிய தரப்பு போரில் வெற்றி கொண்டதனூடாக போர் முடித்து வைக்கப்பட்டதன் பின்னர் அச்சமூகம் எதிர் கொள்ளும் நெருக்கடிகளுக்கும், ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடிய தரப்பு தோல்வியடைந்து ஒடுக்குமுறையாளர்கள் வெற்றி கொண்டதனூடாக முடித்து வைக்கப்பட்ட போரின் பின்னர் அச்சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருப்பினும் அடிப்படையில் பாரிய வேறுபாடுகள் உண்டு.

ஆனால் நான் முன்னர் குறிப்பிட்ட இந்த உரையாடல்களில் இந்த அடிப்படைப் புரிதல் இருப்பதாகக் காண முடியவில்லை.

பதிலாக போரில் பாதிப்புக்குள்ளானவர்களை மையமாக வைத்து அவரவர் தரப்பு அரசியல் நியாயங்களை முன்வைக்கும் விவாதப் போக்கே அவ்வுரையாடல்களில் பிரதிபலிக்கிறது.

இந்த நிலைமை மிகவும் துயரமானது. ஒரு வகையில் போரால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் வஞ்சிப்பது.

எந்தப் போரையும் போல இந்தப் போரிலும் பெண்களும் குழந்தைகளும் தான் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இது குறித்த விரிவான ஆய்வுகள் எதுவும் இதுவரை வந்தாக இல்லை. ஆங்காங்கே வெளிவந்தவை சில பூரணப்படுத்தப்படாத புள்ளிவிபரங்களும் தகவல்களும் தான்.

அவ்வாறு வெளிவந்த புள்ளிவிபரங்களில் ஒன்று வடக்கு கிழக்கில் கணவனை இழந்த எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள் என்பது.

இரண்டாவது இவர்களில் பெரும்பாலானோர் 16க்கும் 35க்குமான இடைப்பட்ட வயதைக் கொண்டவர்கள் என்பது.

மூன்றாவது இவர்களில் பெரும்பாலானோருக்கு இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது.

போரில் கணவனை இழந்து இன்று தனித் தலைமையாக குடும்பத்தைச் சுமக்கும் இந்தப் பெண்களுடைய பிரச்சினைகள் அவர்களுக்கான நட்டஈடு, தொழில், நலனோம்பு நடவடிக்கைகள். அவர்களுடைய குழந்தைகளுடைய எதிர்காலம், கல்வி, போஷாக்குணவு என்று இந்த விடயங்கள் பற்றிய உரையாடல்களையும் தீர்வு நோக்கிய நடைமுறைகளையும் காணவே முடியவில்லை.

காணாமல் போன இவர்களுடைய கணவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விசாரணைகள் ஏதும் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை, அவர்கள் உயிருடன் இல்லை என்பதற்கான மரணச்சான்றுப் பத்திரங்களாவது இதுவரை இவர்களுக்கு வழங்கப்படவில்லை. இவ்வாறு தொடரும் நிலைமை அவர்களுடைய எதிர்காலத்தையும் மறுமண வாய்ப்பையும் தொலைத்து விடுகிறது.

இதைவிட தமிழ் சமூகத்தின் பண்பாட்டசைவியக்கத்தில் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், புறக்கணிப்புக்கள், பாலியல் ஒடுக்குமுறைகள் கவனத்திலெடுக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சங்களாகின்றன.

தந்தையை இழந்த இந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளும் பண்பாட்டு நெருக்கடிகளும் உளவியல் நெருக்கடிகளும் தனித் தன்மையானவை.

இவர்களைப் போன்று அண்மைக்காலமாக ஊடகங்களால் போலிக் கவனம் குவிக்கப்பட்டுள்ள இன்னொரு பிரிவினர் முன்னாள் போராளிகள்.

இந்த முன்னாள் போராளிகளில் ஆண் போராளிகள் பெண் போராளிகள், சிறுவர் போராளிகள், அங்கவீனமுற்ற போராளிகள் என்று வகைப்படுத்தப்படக் கூடிய நான்கு தரப்பினர் உள்ளனர்

ஊடகங்களில் நடைபெறும் முன்னாள் போராளிகள் பற்றிய உரையாடலைக் கூர்ந்து அவதானிப்போர் அவற்றிலிருந்து சில சுவாரசியமான அவதானங்களைப் பெற முடியும்.

இப்போதைய முன்னாள் போரளிகள் முன்னர் போராளிகளாக இருந்த போது அவர்களுடைய வீர சாகசப் புகழ் பாடியவர்கள், இப்போது அவர்களைக் கண்டு கொள்வதாகவே இல்லை. அவர்களுக்கு இப்போது அவர்கள் வேண்டப்படாதவர்களாகப் போய் விட்டார்கள்.

குறிப்பாக புலம் பெயர் தமிழ் சமூகத்தின் பெரும்பகுதி அவர்களுடைய யதார்த்த நிலைமை குறித்து கிஞ்சித்தும் கவனம் கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் களமாடிப் பெற்ற இராணுவ வெற்றிகளை முதலாக்கித் திரட்டிய நிதி இன்று அந்தப் போராளிகளுடைய எதி;ர்காலத்திற்குப் பயன்படாமல், ஆங்காங்கே தனிப்பட்டவர்களின் முதலீடுகளாக மாறிய கதை தான் துண்டு துண்டுத் தகவல்களாக வெளிவருகின்றன. அதிலும் ஒரு பகுதி யாருடைய ஆட்சியை எதிர்ப்பது என்பதன் பேரால் நிதி திரட்டப்பட்டதோ அவர்களுடைய ஆதரவில் அங்கு முதலீடாகி இருக்கிறது என்கிறார்கள் அறிந்தவர்கள்.

மறுபுறத்தில் இவ்வாறான தகவல்களையே அடிப்படையாக வைத்துக் கொண்டு புலம் பெயர்ந்த தளத்தில் இலங்கை அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் எல்லாப் போராட்டங்களையும் நிராகரித்துவிடுகிற செயலை இன்னொரு சாரார் மேற்கொண்டு வருகிறார்கள்.

உதாரணமாக, இலங்கை ஜனாதிபதி லண்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிப் போராளிகளின் விடுதலை தாமதமாகலாம் என்று ஒரு இணையத்தளம் எழுதியது.

இது மிக மலினத்துவமான ஒரு பிரச்சாரம். இது போராட்டத்தின் விளைவாகத் தான் ஒடுக்குமுறை வந்தது என்று நிறுவ முனையும் அடிப்படையைக் கொண்டது. ஒடுக்குமுறையின் விளைவாகத் தான் போராட்டம் வெடிக்கிறது என்ற சாதாரண உண்மையையே மறுதலிப்பது. அது மட்டுமல்ல, போர் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் இந்தப் போராளிகள் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று எழுப்ப வேண்டிய கேள்வியை மறைத்து வைக்க முயற்சி செய்வது. போர் முடிந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னரும் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் அவசரகாலச்சட்டம் போன்ற ஒடுக்குமுறைச் சட்டங்கள் தொடர்ந்து இருப்பதனைக் கேள்வியெழுப்பும் ஜனநாயகவாதிகளையும் ஜனநாயகக் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவது. இவ்வாறு ஜனநாயகக் கோரிக்கையைப் பலவீனப்படுத்துவதனூடாக ஆட்சியாளர்களுக்கு சேவகம் செய்வது. இது ததான் அதன் அடிப்படை.

இன்னொரு விடயம் இந்த முன்னாள் போராளிகளுடைய இயல்பு வாழ்வு பற்றியது. அவர்களுடைய இயல்பு வாழ்வைப் பற்றிப் பேசாதோர் இல்லை என்றளவில் இருக்கிறது நிலைமை.

ஆனால்? இந்த இயல்பு வாழ்வுக்குத் திரும்புவது என்பது குறித்து நிற்கும் அர்த்தப்பாடு தான் என்ன? முன்னர் இருந்ததாகச் சொல்லப்படும் நிலைமைக்குத் திரும்புதல் என்ற குறுகிய அர்த்தத்தைக் கொள்ளலாமா? அவ்வாறானால் தமிழ் சமூகம் முன்னர் இருந்ததாகச் சொல்லப்படும் நிலைமை தான் என்ன? சாதி, வர்க்கம், இனம், ஆணாதிக்கம் என்று அது ஒரு அசமத்துவ சமூகமாக அல்லவா அது இருந்தது, இருக்கிறது? ஆக, அந்த அசமத்துவ சமூகத்துடன் அவர்களை இணைத்து விடுதல் என்று பொருள் கொள்ளலாமா?

அவ்வாறானால் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு ஆளானவர்களைவிட, (இவர்களைப் பற்றி மட்டும் தான் பெருமளவில் பேசப்பட்ட வருகிறது) மேற்குறிப்பிட்ட சமூகத்தின் அசமத்துவ நிலைமைகளை ஏற்றுக் கொள்ளாமல், சமூகத்தில் சில மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும் என விரும்பி இணைந்தவர்களுடைய - விடுதலைப் புலிகளுடைய தலைமை அதற்குப் பொருத்தமில்லை என்பது வேறு விடயம் - நிலைமை என்ன? அவர்கள் இயல்பாகக் கருதாத சமூகத்துள் தான் அவர்களுடைய இயல்பு வாழ்க்கை இருக்க முடியுமா?

அதுவும் பெண் போராளிகளைப் பொறுத்த வரையில் இது மிகுந்த இடர்ப்பாடான விடயம். அவர்கள் அறுத்தெறிய விரும்பிய சமூகத்தின் தளைகள் ஏராளம். விடுதலைப் புலிகளுடைய வெற்றி அவர்களுடைய எல்லாத் தளைகளையும் அறுத்தெறிந்து விட முடியும் என அவர்கள் நம்பியிருந்திருக்கப் போவதில்லை. ஆனால், விடுதலைப் புலிகளுடைய தோல்வி தம் மீதான தளைகளை அதிகப்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள் அல்லவா?

அவர்கள் மீது சுமத்தப்படும் இந்த சமூக பண்பாட்டு தளைகளிளினூடே, புறக்கணிப்புக்களுக்கும் அவமதிப்புக்களுக்கும் ஊடே பாலியல் ஒடுக்குதல்களுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஊடே அவர்கள் குடும்பத்திலும் சமூகத்திலும் உளநல நெருக்கடிகளுக்கூடே அவர்களை 'இயல்பு வாழ்விற்கு' எவ்வாறு கொணர்வது?

போர் தின்று முடித்த ஒரு தேசத்தில் மனித வாழ்வு எப்படியிருக்கும் என்பதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறிகாட்டிகளாக அமைவன. அவர்களுடைய நெருக்கடிகள் குறித்த நமது பதிற்குறிகள் என்ன?

பெண்கள் தினம் கொண்டாடப்படத் தொடங்கி இந்த வருடம் நூறாவது வருடம். இந்த வருடத்திலாவது வெற்றுக் கோஷங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் விட்டு இவர்களுடைய நிலைமை குறித்து நிதானமாகச் சிந்திப்போமா? உரையாடுவோமா? செயற்படுவோமா?

GTNற்காக சிவச்செல்வன் ரமணிதரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.