Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லதோர் வீணை செய்தே…

Featured Replies

நல்லதோர் வீணை செய்தே…

[ வியாழக்கிழமை, 10 மார்ச் 2011, 00:39 GMT ] [ புதினப் பணிமனை ]

'புதினப்பலகை'க்காக தி.வழுதி.

எம் எல்லோரது இலட்சியமும் ஒன்று தான்; எம் எல்லோரது தேவையும் ஒன்று தான். அது இலங்கையில் தமிழ் மக்களுக்கு உருப்படியான அரசியல் அதிகாரத்தைப் பெறுவது.

எம்மிடையே கருத்து மாறுபாடு எழுவது எங்கு எனில் - அந்த இலட்சியத்தையும் தேவையையும் அடைவதற்காக நாம் கைக்கொள்ளும் வழிமுறைகளிலும், அவற்றுள் எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதில் உள்ள வேறுபாடுகளிலும் தான்.

நாடு கடந்த அரசாங்கமே சிறந்த வழி என்கின்றனர் சிலர்; அதில் உறுப்பு வகிக்கும் சிலரே அதில் தவறுகள் உள்ளன என்றும் கூறுகின்றனர்.

உலகத் தமிழர் அமைப்பும் அது சார்ந்த நாடு வாரி அமைப்புக்களுமே சிறந்த வழி என்கின்றனர் வேறு சிலர்; அவற்றில் உறுப்பு வகிக்கும் சிலரே அவற்றின் செயற்பாடுகளில் ஆழமான அதிருப்தியும் கொண்டுள்ளனர்.

போர்க்குற்ற விவகாரமே தமிழரிடம் இன்று உள்ள ஒரே ஆயுதம் என்கின்றனர் இன்னும் சிலர்; அதனை முன்னெடுக்கும் சிலரே அது பயனளிக்காமலும் போகலாம் என்கின்றனர்.

இங்கே விவகாரம் என்னவென்றால் – 2009 மே மாதத்திற்குப் பிறகு – எந்த வழி உகந்தது, எந்த வழி உதவாது என்பது பற்றிய ஒரு கூட்டுத் தெளிவும், அவ்வாறான ஒரு கூட்டுத் தெளிவை அடைவதற்கு முயற்சி செய்ய வேண்டிய ஒற்றுமை மனப்பாங்கும் தமிழர் தரப்பிடம் இல்லை என்பதாகும்.

இதில் எனது நிலைப்பாடு என்னவெனில் – இது எல்லாமே, அங்கே, அந்த மண்ணில், அந்தச் சூழ்நிலையில் வாழும் மக்களைப் பொறுத்தது. அவர்களது நிலைப்பாடு, அவர்களது மனநிலை, அவர்களது வல்லமை, அவர்களது உடனடி மற்றும் நீண்ட காலத் தேவை என்பவற்றைப் பொறுத்தது.

எமக்கான உரிமைகளையும் அதிகாரங்களையும் நாம் பெற்றே ஆக வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்க - இத்தனை ஆண்டுகளாக நாங்கள் இழந்த எல்லாவற்றுக்குமாகவேனும் - அரசியல் அர்த்தத்தில் எமக்கு உரித்துடைய ஏதோ ஒன்றை எடுத்தே ஆக வேண்டும் என்பதே எனது கருத்துமாகும்.

ஆனால் – நெஞ்சுக்குள் சுமக்கும் நெருப்பின் புகையைக் கூட மறைத்து வைத்துவிட்டு, தட்டுத் தடுமாறியேனும் மெதுவாக எழுந்து நிற்க வேண்டும் என்பதே அந்த மக்களின் உடனடித் தேவை என்பது எனது அவதானிப்பு. அவ்வாறு தாம் எழுந்து நிற்பதற்கு வெளிநாட்டுத் தமிழர்கள் கை கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு.

அதை வெளிநாட்டுத் தமிழர்கள் செய்யாதுவிடின், அவர்களுக்கும் தாயகத்தில் வாழும் மக்களுக்கும் இடையில் ஏற்கெனவே விழுந்திருக்கும் விரிசல் மேலும் விரிவடையும்; அது மேலும் விரிவடையும் என்பதே எனது கணிப்பு.

அது மட்டும் அல்லாமல் - தாயகத்தில் இன்றும் வாழும் அதன் பூர்வீகக் குடிமக்களது சீரழிவுக்கு இடமளித்ததன் மூலம், தமிழீழத்தை அதன் புதைகுழிக்கு இட்டுச்சென்ற பெருமையை - சிறி லங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து புலம் பெயர்ந்து வந்துவிட்ட தமிழர்களும் பகிர்ந்துகொள்வதாகவே வரலாறு நாளை பதிவு செய்யும். அது எனது எதிர்வுகூறல்.

*** *** ***

“ஒரு சம்பவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது,”

சொல்ல ஆரம்பித்தார் வினோதினி. ஒரு முன்னாள் போராளி. கடைசி நேரச் சண்டையில் ஒரு கையைத் தோளுக்குக் கீழ் இழந்துவிட்டார். 24 வயது.

“கிளிநொச்சியில் எங்களது தளத்துக்கு அருகிலே, பிரமாண்டமாய் நின்ற பெரிய ஒரு பட்டுப்போன ஆல மரத்தின் கிளைகளை மொய்த்தபடி வௌவால்கள் எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்.

பல நூற்றுக்கணக்கான வௌவால்கள் - இலைகளைப் போல - அந்த மரத்தின் கிளைகளை எப்போதும் நிறைத்திருக்கும்.

போர் தொடங்கிய காலத்தில் ஒரு காலை, சிறிலங்கா வான் படை எங்கள் தளத்தின் மீது குண்டுகளை வீசிய போது, “கிபிர்” வீசிய எதிர்பாராத முதலாவது குண்டு நேராக அந்த ஆலமரத்திற்கு மேலே வானில் வெடித்தது.

அடுத்த குண்டு விழுவதற்கு முன்னதாகப் பாதுகாப்பு தேடி எல்லோரும் சிதறி ஓடிய போது, அடுத்த பக்கத்தில் இருந்த ஆற்றுப் பள்ளத்தை நோக்கி - குண்டுச் சிதறல்கள் சிதிலமாக்கிவிட்டிருந்த - அந்த ஆல மரத்திற்குக் கீழாக நான் ஓட நேர்ந்தது.

அப்போது - பிய்ந்த உடல்களும், சிதறிய இறகுகளும், சிதைந்த கால்களுமாக - இரத்தச் சகதியாக நிலத்தில் குவிந்து கிடந்த அந்த வௌவால்களின் மேலாகவே நான் ஓடினேன். தப்பிப் பறப்பதற்கு அவகாசம் இல்லாமல் - முதற் குண்டிலேயே சிக்கி - அரை குறை உயிரோடு துடித்துக்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான வெளவால்களுக்கு மேலாக, எனது உயிரைக் காப்பாற்ற நான் தலை தெறிக்க ஓடினேன். என் கண்ணை விட்டு அகலாமல் இப்போதும் அப்படியே இருக்கின்றது அந்தக் காட்சி”

தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார் வினோதினி.

“போரின் கடைசி மாதங்களிலும், அதே போல, எங்கள் உயிர்களைக் காக்க - பீரங்கிக் குண்டு மழைக்குள் நாங்கள் நாளாந்தம் ஓடினோம். அப்போது நான் மனித உடல்களுக்கு மேலாக ஓடினேன். கை வேறாய், கால் வேறாய், தலை வேறாய், உடல் வேறாய் - பிய்ந்து சிதறிய எமது மக்களின் உடல்களுக்கு மேலால் ஓடினேன். காயங்களோடு விழுந்து துடித்தபடி காப்பாற்றுமாறு கதறிய எனது மக்களைக் கைவிட்டு, எனது உயிரைக் காப்பாற்ற நான் ஓடினேன். அப்போது அந்த வெளவால்களின் காட்சி தான் எனக்கு ஞாபகத்தில் வந்தது.

என்னைப் போலவே வாழ்வதற்காகத் தப்பி ஓடிய நுற்றுக்கணக்கானோர் எனது கண்களுக்கு முன்னாலே செத்து விழ விழ, நான் வாழ்வதற்காக நான் நாளாந்தம் ஓடினேன். எனது உயிரை நான் காப்பாற்றிவிட்டேன்; ஆனால், எனது துன்பங்கள் முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிடவில்லை."

தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு வினோதினி இப்போது வீட்டில் இருக்கிறார். மூத்த பிள்ளை. பொறுப்பு அவரிடம். ஒரு தங்கையும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். “வீடா நாடா என்றால், இப்போதும் எனக்கு தேசம் தான் முக்கியமானது. ஆனால், குடும்ப நிலை அதைவிடவும் மோசமாக உள்ள நிலையில் வேறு எதைப் பற்றியும் என்னால் இப்போது சிந்திக்க முடியாது. தம்பிக்கும் தங்கைக்கும் ஒரு நல்வாழ்வை உருவாக்கா விட்டாலும் பரவாயில்லை, அவர்களது எதிர்காலத்தை நான் பாழாக்கிவிடக் கூடாது.”

வினோதினியை விசாரிக்கிறோம் என்ற போர்வையில் படை ஆட்கள் அடிக்கடி வீட்டுக்கு வருகின்றார்கள். வேறு வேறு விசாரணைப் பிரிவுகளிலிருந்து வருகிறார்கள். இருண்ட பின்பும் வருகின்றார்கள். வினோதினியைத் தனிமைப்படுத்தியும் விசாரிக்கின்றார்கள். தம்பியையும் தங்கையையும் கூட விசாரிக்கிறார்கள். அப்பாவையும் அம்மாவையும் விசாரிக்கிறார்கள். அயலவர்களுக்கு இதுவெல்லாம் விடுப்பு. எதுவுமே நடக்காத போதும் எல்லாவற்றையும் கண்டதைப் போல கற்பனையில் கதைக்கிறார்கள். அவளால் அவளது தங்கையின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக அம்மா எரிச்சலடைகின்றார். குடும்பத்தின் கௌரவத்தில் கறை படிவதாக அப்பா ஆத்திரப்படுகின்றார். குடும்பத்திற்குள் வினோதினியைச் சுற்றி வெறுப்புத் தான் வளர்கின்றது. அழகான, பண்பான வினோதினிக்குத் திருமணத்தையாவது செய்து அனுப்பி வைக்கப் பெற்றோர் எடுத்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. கை ஒன்றை இழந்துவிட்ட எமது பெண் ஒருவரின் மறு கரத்தைப் பற்றுவதற்கு எம் ஆடவர்கள் கேட்ட அளவுக்குச் சீதனம் கொடுக்க அந்தக் குடும்பத்திடம் எதுவுமே இல்லை.

“வாழுவதற்காக நாம் எல்லாரும் தானே சேர்ந்து ஓடினோம், அண்ணை...? அவர்கள் எல்லோரும் செத்துப் போக நான் மட்டும் ஏன் தப்பினேன்...? எனது வாழ்வுக்கு இன்று அர்த்தம் என்ன...? அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீரே இல்லை, அண்ணை” என்ற பின்பும் அழுது அழுது தன் கதை சொல்லி மூச்சடைத்துச் சரிகின்றார் வினோதினி.

“தடுப்பு முகாமில் இருக்கும் போது கடுமையாகப் படித்து அங்கிருந்தே A/L எழுதினேன், அண்ணை. நான் பல்கலைக்கழகம் போக வேண்டும். கல்யாணக் கனவு காணும் வசதி எதுவும் என்னிடம் இல்லை. நல்ல ஒரு வேலையில் சேர்ந்து உழைத்து தங்கைக்கும் தம்பிக்கும் நல்வாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும். அப்படித்தான் அப்பாவும் அம்மாவும் இப்போது என்னில் வைத்திருக்கும் கோபத்தைப் போக்க முடியும். என் மீதுள்ள அவர்களது கோபத்தைப் போக்க வேண்டியது தான் எனது உடனடித் தேவை. ஏனென்றால் நான் அன்புக்காக ஏங்குகிறேன், அண்ணை” ...மீண்டும் அழுகிறார் வினோதினி.

இனத்தின் பெரிய அரசியல் பிரச்சனை, ஒரு சாதாரண தமிழ் மகளின் உளப் பிரச்சனை அளவுக்குச் சுருங்கிவிட்டது இப்போது.

*** *** *** ***

கடைசி யுத்தம் வரை அகப்பட்டு, முள்ளிவாய்க்கால் வரை சென்று உயிரோடு மீண்டுள்ள – 18 முதல் 66 வரையான வயதுடைய ஏறக்குறைய 80-90 பேருடன் நான் கதைத்திருப்பேன்.

கண்ணீர் விட்டுக் கலங்காமல் கதை சொன்னவர்கள் அவர்களில் எவருமே இல்லை.

கதை சொல்லும் போதே அழுது அழுது உள்ளமும் உடலும் பலவீனமாகி, மயங்கி விழுந்தவர்கள் அதில் முக்கால்வாசிப் பேர்.

அவ்வாறு மயங்கி விழுந்தவர்களுக்குள் 18 – 28 வயதுடைய இளையவர்கள் மட்டும் முக்கால்வாசிப் பேர்.

அந்த மக்களின், உடனடி, மிகப் பெரிய பிரச்சனை - அவர்களது ஆழ் மனங்களைச் சிதைத்திருக்கும் உளவியல் காயம்.

ஆகக் கேவலம் என்னவெனில் - சாய்ந்து அழுது தமது வேதனைகளை ஆற்றுவதற்கு, ஆதரவான தோள்கள் கூட அவர்களுக்குக் கிடையாது. அவ்வாறு ஆதரவுத் தோள்கள் கிடைக்கும் போது, தமது துயரத்தைத் தீர்த்து அவர்கள் அடையும் ஆறுதல் – என்னால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானது.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள் --

நேரே போய் வன்னியிலோ வாகரையிலோ இறங்குங்கள். அந்த மக்களோடு கதையுங்கள். அவர்கள் கண்ணீர் விடும் போது, அணைத்து உங்கள் தோள்களில் சாய்த்து, “நான் இருக்கிறேன்” என்று சும்மாவேனும் கூறுங்கள். அதுவே போதும். அதுவே போதும்.

உங்களின் அந்த ஒரு வார்த்தை அவர்களுக்கு எவ்வளவு பெறுமதியானது என்பது உங்களுக்கே தெரியாது. அவ்வாறு அவர்களுக்கு நான் சொல்லுகிற வரைக்கும் எனக்கும் அது தெரிந்திருக்கவில்லை.

சிறீரங்கநாதனை எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். வெள்ளைத் தாடியும் தளர்ந்த உடலுமாகத் துவண்டு போய்விட்டார் இப்போது. இரண்டு மாவீரர்களின் தந்தை. மூன்றாவது மகன் போராளியாக இருந்து, ஒரு காலையும் இழந்து, இப்போதும் தடுப்பு முகாமில் இருக்கிறான். வீட்டில் இரண்டு மகள்களும் மனைவியும். கண்டவுடன் கட்டிப்பிடித்து அழுத பின்னர் சொன்னார் -

“புலிகள் இருந்த காலத்தில் இந்த வெளிநாட்டுத் தமிழர்கள் எல்லாம் கோடிக்கணக்கில அள்ளிக் கொடுத்தவர்கள் தானே. இப்ப ஏன் ராசா அந்த அளவுக்கு எந்த உதவியும் எங்களுக்கு வாறதில்லை…?

புலிகளுக்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்களும் இருந்ததாம். புலிகளுக்குச் சனங்கள் கொடுத்த உதவியும் வெளிநாடுகளில கோடிக்கணக்கில இப்பவும் இருக்கிறதாம். அதில ஒரு கால்வாசியாவது இங்க வந்தால் நாங்கள் நிமிர்ந்திடுவமே ராசா.”

மூன்று ஆண் பிள்ளைகளில் எவருமே இல்லாத நிலையில், இரண்டு பெண் பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கிவிடுவதற்காக - அறுபது வயதில், உடலை வருத்தி, விசுவமடுவில் தனியாகத் தோட்டம் செய்கின்றார் சிறீரங்கநாதன்.

இனத்தின் பெரிய அரசியல் பிரச்சனை, ஒரு சாதாரண தமிழ் தந்தையின் பொருளாதாரப் பிரச்சனை என்ற அளவிற்குச் சுருங்கிவிட்டது இப்போது.

*** *** *** ***

தமக்கான அரசியல் உரிமை பற்றியும் தம்மையே ஆளுவதற்கான அதிகாரம் பற்றியும் தமிழர்கள் எல்லோரும் பேசுகின்றார்கள்.

யாழ்ப்பாணக் கல்விமான் முதல், வன்னிப் பேரூந்தில் அருகிலிருந்த அறிமுகமற்ற பெண்மணியில் இருந்து, திருமலையில் தெருவோரத் தேனீர்க்கடை ஆள் வரை – எல்லோரும் அரசியல் பேசுகின்றார்கள்.

வினோதினி முதல், சிறீரங்கநாதனில் இருந்து, வசந்தகுமார் வரை - எல்லோரும் பேசுகின்றார்கள்.

ஆனால் - அவர்களது பிரச்சனை இப்போது அதுவல்ல.

ஒரு தேர்தல் வந்தால் ஏதோ ஒரு “தமிழ் தேசிய” கட்சிக்கு அவர்கள் வாக்களிக்கக் கூடும். அவர்களது அரசியல் செயற்பாடு அந்த அளவோடு சரி. அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்யப்போவதில்லை; செய்யவும் இயலாது.

பொருளாதாரத் தராசில் - யாழ்ப்பாணத்தை விட வன்னி 10 வருடங்கள் பின்னாலே இருக்கின்றது. கொழும்பை விட யாழ்ப்பாணம் 15 வருடங்கள் பின்னாலே இருக்கின்றது. திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இதுவரை காலமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்கள் வன்னியின் நிலவரத்திலேயே இருக்கின்றன.

எங்கள் மக்களை இரண்டாயிரத்துப் பதின்ம ஆண்டுகளின் சராசரி உலகத் தரத்திற்குக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு கொண்டுவருவதற்கு சிறி லங்கா அரசாங்கம் எதையுமே செய்யப் போவதில்லை. வெளிநாட்டுத் தமிழர்களாகிய எங்களுக்கு அக்கறை இருந்தால், நாம் அதைச் செய்யலாம்; அல்லது, விட்டுவிட்டுச் சும்மா இருக்கலாம்.

நடந்து முடிந்தவைகள் எதுவாக இருப்பினும் - இந்த மக்களின் இன்றைய இந்த அவல வாழ்வுக்கு வெளிநாடுகளில் வாழ்ந்த நாங்களும் ஏதோ ஒரு வகையில் காரணமானவர்கள் ஆகின்றோம். ஆயுதப் போராட்டத்திற்கு நிதி உதவியும், பொருளுதவியும், கருத்து ஆதரவும் வழங்கியவர்கள் என்ற வகையில் – நாங்களும், ஏதோ ஒரு வகையில் அவர்களது இந்த அவல வாழ்வின் காரணகர்த்தாக்கள் ஆகி விட்டோம். அப்போதைய சூழலில், அன்று, ஒரு கடமை உணர்வோடு நாம் அவற்றைச் செய்தோம். அதே போல, இப்போதும், அந்த மக்களைத் தூக்கி நிமிர்த்திவிட வேண்டிய தார்மீகக் கடமை எமக்கு உண்டு என்பதை நாம் உணர வேண்டும். அப்படி ஒரு கடமை இருப்பதாகக் கருதினால், நாம் அதைச் செய்யலாம்; அல்லது, விட்டுவிட்டுச் சும்மா இருக்கலாம்.

வசந்தகுமாருக்குச் சிரித்த முகம். எப்போதும் சிரித்த முகம். பெற்றோர் இல்லை. ஒரே தம்பி. முத்தையன்கட்டில் விடுதலைப் புலிகள் நடாத்திய "அன்பு இல்லம்" தான் இருவரையும் வளர்த்தது. உணவு முதல் கல்வி வரை, உறைவிடம் முதல் நிம்மதி வரை - "அன்பு இல்லம்" தான் எல்லாவற்றையும் கொடுத்தது. கடுமையாகப் படித்து முன்னேறிய வசந்தகுமார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்றார். தம்பி பள்ளிக்கூடத்தில் இருந்தான்.

படித்து முடித்து நல்ல அறிவைப் பெற்ற பின்னர், "அன்பு இல்லம்" தம்மை வளர்த்து ஆளாக்கியது போல - அநாதரவான சிறுவர்கள் எல்லோரையும் அங்கு கொண்டுவந்து வளர்த்து எடுக்க தான் உழைக்க வேண்டும் என்பது வசந்தகுமாரின் கனவு.

2009 இல், வன்னிக்குள் சிக்கி, எல்லாவற்றையும் இழந்து முள்ளிவாய்க்கால் வரை ஓடிய வசந்தகுமார் - குண்டுகளுக்கும், பட்டினிக்கும், ஆள் பிடிக்க வந்த புலிகளுக்கும், தடுப்பு முகாம் இராணுவத்திற்கும் தப்பி, இப்போது மீண்டும் முத்தையன்கட்டிற்கு வந்திருக்கிறார்.

“அரசியல் உரிமைகள் வேணும், அண்ணன்; ஆனால் இந்த நிலைமையில் அதை எங்களுக்கு யாரும் தர மாட்டாங்கள். உதாரணத்திற்கு ஒரு சமூகத்தை எடுத்துக்கொள்ளுங்கோ. படிக்காத ஒரு பிச்சைக்காரன் தெருவோரத்தில நின்று சொல்லுறதை எவன் காது குடுத்துக் கேட்பான்..? ஒரு படித்த பணக்காரன் மாடி வீட்டில இருந்து சொல்லுறதை தான் எல்லாரும் மதிப்போட கேட்பான்கள்.

ஒர் இனமாக நாங்கள் கல்வியிலும் பொருளாதார நிலையிலும் உயர்ச்சி காண வேண்டும். அது தான் எங்களுக்குப் பலத்தைத் தரும். அது தான் எங்களது உடனடித் தேவை. நாங்கள் இப்ப இருக்கிற நிலைமை பிச்சை எடுக்கிறதை விடவும் கேவலம்.”

“வெளிநாட்டுத் தமிழர்களிடம் என்னத்தை எதிர்பார்க்கின்றீர்கள்?” என்று கேட்டேன்.

“ஒரு தடி மட்டும் தான், அண்ணை,” என்றார் வசந்தகுமார்.

“ஒரு தடி மட்டும் ஊன்றிவிடச் சொல்லுங்கோ. அதில நாங்கள் வெற்றிலைக்கொடி மாதிரிப் படருவம்.”

வசந்தகுமாருக்கும் தம்பிக்கும் இப்போது யாருமில்லை. அவர்களது கல்விக்குக் கைகொடுக்க ஆட்களில்லை. எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையால் நிம்மதியில்லை. தான் எப்படிப் படித்து முடிப்பது என்ற கேள்விக்குப் பதிலில்லை. தம்பியை எப்படிப் படிப்பித்து ஆளாக்குவது என்ற கவலைக்கு முடிவில்லை.

இனத்தின் பெரிய அரசியல் பிரச்சனை, ஒரு சாதாரண தமிழ் இளைஞனின் அடிப்படைக் கல்விப் பிரச்சனை அளவிற்குச் சுருங்கிவிட்டது இப்போது.

*** *** *** ***

வாழ்வு முழுவதும் இவ்வாறு "இல்லை"களால் மட்டுமே நிறைந்திருக்கும் போதும் - சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வோடு - பல்கலைக்கழக விடுமுறை காலத்தில் முத்தையன்கட்டு கிராமத்திற்கு வந்து, "அன்பு இல்லம்" மீளப் புனரமைக்கப்படும் பணிகளில் தனது உழைப்பைக் கொடுக்கிறார் வசந்தகுமார்.

சிரித்த முகத்தோடு தனது உழைப்பைக் கொடுக்கும் வசந்தகுமார், வெளிநாடுகள் வாழ் தமிழுர்களுக்கு ஒரு முன்னுதாரணம்; ஓர் ஊக்கம்; ஒரு வழி காட்டி.

நிதி இருப்போர் அதனைக் கொடுங்கள்.

அறிவு இருப்போர் அதனைக் கொடுங்கள்.

கையில் கொஞ்சம் நேரமும், உடலில் கொஞ்சம் வலுவும், ஊருக்குச் செல்லக் கூடிய வசதியும் இருப்போர் அங்கே போய் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.

இந்த மூன்றில் ஏதாவது இரண்டோ, அல்லது மூன்றுமே இருப்போர் அவற்றைக் கொடுங்கள்.

தேசம் முழுவதும் தேவைகள் பரவிப்போய் கிடக்கின்றன; செய்வதற்கு ஆட்கள் தான் இல்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்ற மனம் இருந்தால், செய்வதற்கு ஏராளமான விடயங்கள் காத்திருக்கின்றன.

தனிப்பட்ட ஆட்களுக்கும் தனித்தனிக் குடும்பங்களுக்கும் நாளாந்தச் செலவுகளுக்காக மாதாந்தம் பணம் அனுப்பும் பழக்கத்தைக் கைவிடுங்கள். அதீத பணப் புழக்கம் அவர்களைச் சோம்பேறிகளாக்குவது மட்டுமன்றி, யாழ்ப்பாணத்து இளைய சமுதாயத்தை ஒழுக்கம் தவறிய வாழ்வுக்கும் இட்டுச் செல்லுகின்றது.

மாறாக - உங்கள் வளத்தையும் அறிவையும் அவர்களது எதிர்காலத்தை நோக்கி முதலீடு செய்யுங்கள். இளம் சமுதாயத்தினரைத் தேர்ந்தெடுத்து அவர்களது கல்வியில் முதலீடு செய்யுங்கள். அவர்களுக்கான தொழிற்பயிற்சியில் முதலீடு செய்யுங்கள். சிறிய, பெரிய தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து ஆற்றல் மிகுந்த பெரியவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்குங்கள்.

காத்திரமான கல்வி வாய்ப்பு இன்மையும், உருப்படியான வேலை வாய்ப்பு இன்மையும் சமூகத்தின் ஒட்டுமொத்தமான பொருளாதார வாழ்வில் நலிவை ஏற்படுத்துகின்றது. அறியாமையும் அந்தப் பொருளாதார நலிவும் கூட, சமுதாயச் சீர்கேடுகளை நோக்கி இளம் சமூகத்தைத் தள்ளுகின்றது.

ஊருக்குச் செல்லாமல் விடுவதற்கும், அங்கே போய் முதலீடுகளைச் செய்யாமல் விடுவதற்கும் காரணங்களை அடுக்கிக்கொண்டு, வெளிநாட்டுத் தமிழர்களாகிய நாம் காலத்தைக் கடத்துகிற இடைவெளியில் சிங்களவர்கள் பணத்தோடு எமது தாயகத்தை மொய்க்கின்றார்கள். மூலைக்கு மூலை தொழில் தொடங்குகின்றார்கள். வேலைக்கும் தமது ஆட்களையே கொண்டுவருகின்றார்கள். அந்த ஆட்கள் பிறகு தமது குடும்பங்களை நகர்த்துகின்றார்கள். இந்தத் தனித்தனிக் குடும்பங்கள் நாளை ஒரு சமூகமாக ஆகும்.

அதன் பிறகு – வெளிநாடுகளில் இருந்தபடி, சிங்களக் குடியேற்றங்கள் பற்றி நாங்கள் கூப்பாடு போடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமெனில் – சிங்களவர்களில் சார்ந்திருக்கும் தங்குநிலைப் பொருளாதார வாழ்விலிருந்து தாயகத்துத் தனி மனிதர்களை மீட்க வேண்டும். அவர்கள் தமது குடும்பங்களை மீட்க, எமது சமூகம் தன்னாலே மீளும்.

தமிழர் தாயகத்தையும் அபிவிருத்தி செய்து, எமது போராளிகளுக்கான மறுவாழ்வையும் சிறி லங்கா அரசாங்கமே செய்ய வேண்டும் என்று வாதிடுவது அபத்தமானது. அவ்வாறான வாதங்களை முன்வைக்கின்ற பலர், எதையும் செய்யாமல் விடுவதற்குச் சாட்டுச் சொல்லுகின்றார்கள் என்று தான் நான் கருதுகின்றேன். ஏனென்றால், சிறி லங்கா அரசாங்கம் எமக்கு எதையுமே செய்யாது என்பது எம் எல்லோருக்குமே தெரியும்.

இத்தனை வருடங்களாக எங்களைக் கொன்று குவித்த ஒரு தரப்பு, எமது தேசியத் தன்மையை அழிப்பதையே தமது வாழ் நாள் இலட்சியமாக் கொண்டிருந்த ஒரு தரப்பு, அப்படித்தான் அது செய்கின்றது என வீதி வீதியாக நாங்கள் கொடி பிடித்துக் கோசம் எழுப்பிய ஒரு தரப்பு - திடீரென எமக்கு நன்மையைச் செய்யும் என்ற நம்பிக்கையும், அவ்வாறு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எப்படி எமக்குத் திடீரென வந்தது..?

கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்தில் மூலைக்கு மூலை பெரிய கண்ணாடி உண்டியல்களை வைத்துப் பணம் சேர்க்கின்றது சிறி லங்கா அரசு. தென்னிலங்கை வீதிகளில் போர் வண்டிகளில் வந்து, வரிசையாக நிற்கும் சிங்களவர்களுக்கு மரக்கறியும் மீனும் விற்கின்றது சிங்களப் படை. இதுவெல்லாம் – தமது படையினருக்கு வீடுகள் கட்டவாம். இந்த இலட்சணத்தில் இவர்கள் எமது போராளிகளையும் எமது மக்களையும் கவனிப்பார்கள் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

ஒரு வாதத்திற்காகப் பேசுவதானால் – சிறி லங்காவை எமது நாடாகவோ, சிறி லங்கா அரசாங்கத்தை எமது அரசாங்கமாகவோ ஏற்றுக்கொள்ளாத நாங்கள், எமது மக்களை வாழ வைக்க அந்த அரசாங்கமே ஏதாவது செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதும் பொருத்தமற்றது தானே.

உண்டியல் வைத்தும் மரக்கறி வியாபாரம் செய்தும் ஒர் அரசாங்கமே தமது படையினருக்காக நிதி சேர்க்கும் போது, எமது போராளிகளுக்காகவும் எமது மக்களுக்காகவும் நாம் ஏதாவது செய்ய வேண்டாமா…? அது எமது கடமையும் அல்லவா…? அப்படி ஒரு கடமை இருப்பதாக நாம் கருதினால், நாம் அதைச் செய்யலாம்; அக்கறை இல்லாதுவிட்டால், விட்டுவிட்டுச் சும்மா இருக்கலாம்.

இத்தனை வருடங்களாகப் புலிகளுக்கு எதிராகப் புறணி பாடிக்கொண்டு காலத்தை ஓட்டியவர்களுக்கும் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும் –

உங்களுக்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. உங்களுக்கான வாய்ப்பு இப்போது வந்திருக்கின்றது. உங்களது முன்னொரு காலத்துச் சாதனைகள் பற்றிப் புராதனக்கதைகள் பேசிக் கொண்டும், புலிகள் இல்லாதவிடத்து எல்லாவற்றையும் வெட்டிப் புடுங்கியிருப்பீர்கள் என ஆண்டுகளைக் கடத்திக்கொண்டும் இருந்த உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. புலிகள் இயக்கம் இப்போது இல்லை. நீங்கள் “சந்தர்ப்பவாதிகள்” அல்ல என்பதையும், நீங்கள் இனபக்தி உள்ளவர்களே தான் என்பதையும், நீங்கள் மக்கள் நேயம் மிக்கவர்களே தான் என்பதையும் நிரூபிக்க இதுவே சந்தர்ப்பம். இது உங்களுக்கான நேரம். தயவு செய்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.

ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் முதன்மையில் இருந்து, விடுதலைப் புலிகளால் பின்னர் கொல்லப்பட்டும்விட்ட, உலகப் பிரபல்யமான ஒரு தமிழரின் மகன் என்னிடம் சொன்னார் –

“நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் எனது தந்தையின் சாவு தொடர்பாகச் சாட்சியம் அளிக்க என்னை அழைத்தார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன். எனது வேதனை என்னோடு போகட்டும்; ஆனால், சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே இனிப் பேசுவது என்றும், அதன் முன்னர்வுக்காக மட்டுமே இனி உழைப்பது என்றும் முடிவெடுத்துவிட்டேன்; பழையவற்றைக் கதைப்பது அவற்றுக்கு உதவாது.”

இனத்தின் பெரிய அரசியல் பிரச்சனைக்கான தீர்வு என்பது, ஒவ்வொரு தனி மனிதரினதும் உள்ளத் தெளிவிலிருந்து தான் தொடங்குகின்றது.

*** *** *** ***

இலங்கைத் தீவுக்கு வெளியே தமிழர்கள் எடுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் சார்ந்த முயற்சிகள் தேவையானவை; இன்றியமையாதவை. அதே வேளை, இதில் நாம் கவனிக்கத் தவறக் கூடாத விடயமும் என்னவெனில் - வெளிநாடுகளில் நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான எமது “தமிழ்த் தேசியம்.” அது வாழ வேண்டியது - “தேசியம்” என்பதன் நான்கு அடிப்படைகளில் ஒன்றான - எமது தாயக நிலத்தில். அந்த “தேசிய”த் தன்மையைக் காக்க வேண்டியவர்களாக இருப்பது அங்கு வாழும் எமது மக்கள். ஆனால், இப்போது - அதற்கான சூழலும் அங்கு இல்லை; அதற்கான வல்லமையும் அவர்களிடம் இல்லை. இந்த நிலை நீடிக்குமானால் - வெளிநாடுகளில் நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளினதும் அடிப்படையே ஆடிப் போய்விடும்.

எமது நிலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறி போகின்றது. நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றத்தை சிறிலங்கா அரசு செய்வதாக நான் சொல்லமாட்டேன். ஆனால், சிங்களவர்கள் தமிழர் தாயகத்தில் வேரூன்றுவதற்கு ஏற்ற புறநிலையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்துகின்றது. பொருளாதார ரீதியான தமது நலிவு நிலை, இத்தகைய புற நிலையோடு ஒத்துப் போகத் தமிழர்களை அழுத்துகின்றது. சிங்கள முதலாளிகளிடம் வேலை செய்ய வேண்டிய சூழலும் சிங்கள இடங்களிலேயே வேலை தேட வேண்டிய சூழலும், சிங்கள மொழி கற்கும் நிர்ப்பந்தத்தை உருவாக்க – சந்திக்குச் சந்தி இப்போது சிங்களக் கல்விக் கூடங்கள். தனது கொல்லைப் புறத்திலேயே தனது முக்கியத்துவத்தை இழக்கின்றது தமிழ். எமது பொருளாதாரமும், அதன் விளைவாக எமது நிலமும், அதன் விளைவாக எமது மொழியும் இவ்வாறு சிதிலமடையும் போது, எமது பண்பாட்டுத் தனித்துவமும் தானாகவே தள்ளாடுகின்றது.

வெளிநாடுகளில் இருந்தபடி நாங்கள் “ தமிழ்த் தேசியம்” பேசிக்கொண்டிருக்க, தன் பூர்வீக நிலத்திலேயே “தமிழ்த் தேசியம்” சிறுகச் சிறுகச் செத்துக்கொண்டிருக்கின்றது. சாவிலிருந்து "தமிழ்த் தேசியம்" காக்கப்பட வேண்டுமெனில் – அதைக் காக்கக் கூடிய வல்லமையை, அது காக்கப்பட வேண்டிய தமிழ் தாய் நிலத்தில் இன்னும் புலம் பெயராமல் வாழும் பூர்வீகத் தமிழ் மக்களுக்கு ஊட்ட வேண்டும். அந்த வல்லமை என்பது - சிங்களவர்களில் சார்ந்திருக்காத - “தேசியம்” என்பதன் நான்கு அடிப்படைகளில் ஒன்றான - “தன்னிறைவான பொருளாதார” வாழ்வு ஆகும். அவ்வாறு - பூர்வீகத் தமிழர்கள் தமது சொந்தக் காலில் நிற்க, புலம் பெயர்ந்து சற்று வசதி வாய்ப்புக்களுடன் வாழும் தமிழர்கள் தான் துணை நிற்க வேண்டும் -- வேறு வழி எதுவும் இல்லை; அதைச் செய்ய வேறு யாரும் வரப்போவதுமில்லை.

ஒர் “எதிர்ப்பு இயக்க”த்தின் [resistance movement] உயிர்வாழ்வு என்பது, அதன் ஆயுத பலத்தின் அளவைப் பொறுத்தது அல்ல; அது, அது சார்ந்த மக்களின் ஆன்ம உறுதியின் அளவைப் பொறுத்ததே. தமிழ் உணர்வு என்பது அவ்வளவு இலகுவாக இன்னும் தோற்கடிக்கப்பட்டுவிடவில்லை. ஆனால், இன்றைய நிலையில் – எமது மக்கள், உள ரீதியாக உடைந்து, பொருளாதாரத்தில் நலிந்து, நீண்ட போரினால் களைத்துப் போய் உள்ளார்கள். முட்டுக் கொடுத்து நிமிர்த்திவிட்டால், தென்பும் புத்துணர்வும் பெற்று அவர்கள் எழுவார்கள். அப்படி அவர்கள் எழுந்து நிற்பதே ஓர் “எதிர்ப்பு” தான். அப்படி அவர்களை எழுந்து நிற்க வைப்பதே, ஒர் “எதிர்ப்பு இயக்க”த்திற்கான ஆதரவு தான். முப்பது ஆண்டுகளாக ஒர் “எதிர்ப்பு இயக்க”த்தை வாழ வைக்க நாம் வளம் கொடுத்தோம்; இன்னொரு முப்பது ஆண்டுகளுக்கும் அதனை விடாது செய்ய நாம் முடிவு எடுப்போம்.

கடைசியாக -- வெளிநாட்டுச் சொகுசு ஆசனங்களில் அமர்ந்தபடி - அரசியல் ஆய்வுகள் எழுதி, கற்பனைப் புனை கதைகள் எழுதி, கட்டுரைகளுக்கு மறுகருத்து எழுதி, தாயக மக்களின் திடீர்த் தலைவிதித் தீர்மானிப்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள் –

இனத்திற்காக உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றினால் – விமானம் ஏறி ஊருக்குப் போய் அந்த மக்களோடு இரண்டு மாதங்களாவது வாழுங்கள். எவ்வளவு தான் நான் சொன்னாலும் புரியாத ஏதோ ஒன்று, அங்கே போகும் போது உங்களுக்குப் புரியும்.

அந்த மக்களுக்காக ஒரு தடியை மட்டுமாவது ஊன்றிவிட்டு வரலாமா என்று பாருங்கள்.

அவர்கள் படர்ந்துவிடுவார்கள், வெற்றிலைக் கொடி போல.

தி. வழுதி

கட்டுரையாளருக்கு உங்கள் கருத்துக்களை எழுத -- T.R.Vazhuthi@gmail.com

http://www.puthinappalakai.com/view.php?20110310103361

இனத்திற்காக உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றினால் – விமானம் ஏறி ஊருக்குப் போய் அந்த மக்களோடு இரண்டு மாதங்களாவது வாழுங்கள். எவ்வளவு தான் நான் சொன்னாலும் புரியாத ஏதோ ஒன்று, அங்கே போகும் போது உங்களுக்குப் புரியும்.

அந்த மக்களுக்காக ஒரு தடியை மட்டுமாவது ஊன்றிவிட்டு வரலாமா என்று பாருங்கள்.

அவர்கள் படர்ந்துவிடுவார்கள், வெற்றிலைக் கொடி போல.

தி. வழுதி

கட்டுரையாளருக்கு உங்கள் கருத்துக்களை எழுத -- T.R.Vazhuthi@gmail.com

http://www.puthinappalakai.com/view.php?20110310103361

... விடிய விடிய ராமர் கதை ... விடிச்சாப்பிறகு ...???? .... நாங்கள் என்ன நீங்களும் விமானம் ஏறிப்போய் அம்மக்களுக்கு செய்து கிளிக்க சிங்களவன் விட்டுடுவான்!!!!!!!??????????? ... தடியை ஊண்டுகிறதென்ன, உங்களது பொல்லையும் எடுத்துப் போட்டுத்தான் விடுவான் ... கவனம்!!!!

4_11_12.gif

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.