Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத் திருமணச் சடங்கை விமர்சிக்கும் கனடா அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத் திருமணச் சடங்கை விமர்சிக்கும் கனடா அரசு

கட்டுரைகள் — BY சத்தியன். ON MARCH 18, 2011 AT 4:08 PM

அடுத்தவரைக் குறை கூறுவது எளிது. குறை கூறுபவரை மீட்டெடுப்பது கடினம். பிறரைக் குறைத்து மதிப்பிடுவது, தேவையற்ற விமர்சனக் கருத்துக்களை வெளியிடுவது என்பன மனரீதியான விடயங்கள். தனி மனிதர்களுக்கும் நாட்டு மனிதர்களுக்கும் இந்தக் கருத்து பொருந்தும்.

உள்நாட்டு அரசியலிலும் சரி சர்வதேச அரசியலிலும் சரி எதிரியை மட்டந் தட்டுவதற்காக அவன் மீது அபாண்டமான பழி சுமத்துவது மிகவும் எளிதான காரியம். இதை ஆங்கில மொழி வழக்கில் “லேபலிங்” (LABELLING) என்பார்கள். இப்படிப் பழிசுமத்துவதற்கு ஆதாரங்கள் தேவையில்லை.

பொய்யானாலும் பரவாயில்லை. திருப்பித் திருப்பிச் சொன்னால் போதும். நம்புவதற்குப் பலர் தயாராகி விடுவார்கள். பழி சுமத்தப் படுபவரிலும் பார்க்கத் தான் தூய்மையானவர், திறமையானவர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தவர் கூடாதவர் என்று முந்திக்கொண்டு சொல்ல வேண்டும், அது போதும்.

சதாம் உசேயினிடம் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் (WEAPONS OF MASS DESTRUCTION) இருக்கின்றன என்று ஈராக் மீதான படையெடுப்பிற்கு முற்காரணம் கூறிய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் இப்ப என்ன சொல்கிறார் தெரியுமா?

அண்மையில் அவர் வெளியிட்ட வாழ்க்கை நூலில். (DECISION POINTS BY GEORGE W. BUSH) ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் காணப்படாதது தனக்கு கடுந் துயரம் தந்ததாகத் தெரிவிக்கிறார். ஆனால் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும் சதாம் உசேயின் அகற்றப்பட்டது உலகிற்கு நல்லது என்றும் எழுதியிருக்கிறார்.

உலகிற்கு நல்லதாக இருக்கலாம் ஆனால் அநாதைகளாகத் தள்ளப்பட்ட ஈராக்கின் குழந்தைகள், கணவனை இழந்த விதவைகள், நாளும் செத்துக் கொண்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறார் புஷ்.

கனடா அரசு ஈழத் தமிழர்களுக்குக் காட்டி வரும் காழ்ப்புணர்வும் துவேசமும் பரந்து பட்டதொரு திட்டத்தின் அங்கமாகத்தான் பார்க்க முடியும். எது விதத்திலும் அவர்கள் மீது பழி சுமத்துவதற்கும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை விடுப்பதிலும் கனடா அரசு முனைப்புக் காட்டுவதை உணர முடிகிறது.

மிகவும் அற்பத்தனமான விமர்சனங்களை முன்வைக்கும் கீழ்த்தர நடவடிக்கைகளைக் கனடா அரசு முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாகத் திருமணச் சடங்கில் விடுதலைப்புலிகள் தமது மனைவியருக்கு அணியும் மாங்கல்யம் பற்றிய விமர்சனம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதளவுக்குக் கொடூரமானது.

விடுதலைப் புலிகளின் திருமணச் சடங்குகள் பழந்தமிழர் மரபுக்கு அமைவாகப் புலிகளின் திருமண ஏற்பாட்டுக் குழுவால் நடத்தப்படுகிறது. ஆணும் பெண்ணும் திருமண பந்தத்திற்குப் பொருத்தமானவர்களா என்பதை இரு பக்கத்தினருடன் பேசிய பின் ஏற்பாட்டுக் குழு அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்கிறது.

திருமண ஏற்பாட்டுக் குழுவில் வயது முதிர்ந்த கல்வி அறிவு பெற்ற அனுபவசாலிகள் இடம்பெறுகின்றனர். இவர்கள் குடும்பஸ்தர்கள. ஏற்பாட்டுக் குழுவில் ஆண்களும் பெண்களும் உறுப்புரிமை பெறுகின்றனர்.

திருமண ஏற்பாட்டுக் குழுவினரின் நடவடிக்கைகள் திருமணங்களைப் பொறுத்தளவில் இருவிதமாக அமைகின்றன. திருமண வயதை எட்டிய போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலம் செலவிட்ட ஆண் பெண் போராளிகளுக்கு ஏற்பாட்டுக் குழு சோடிப் பொருத்தம் பார்த்து திருமண ஒழுங்கைச் செய்கிறது.

இப்படியான திருமணங்கள் திடீர் ஏற்பாடுகளல்ல. பல மாதங்களாக இரு பாலரும் கூர்மையாக அவதானிக்கப் படுகின்றனர். இருவரையும் பல தடவை தனித் தனியே அழைத்து ஏற்பாட்டுக் குழுவினர் பேச்சுக்களை நடத்துகின்றனர். மிகவும் பொறுப்புணர்வுடன் நடத்தப்படும் இந்தச் சந்திப்புக்களில் இவர்கள் இணைப்பு நீடிக்குமா என்றும் கூடி வாழ்வதற்கு இவர்கள் பொருத்தமானவர்களா என்றும் பார்க்கப்படுகிறது.

திடீர் விவாகங்களுக்குப் புலிகள் அமைப்பு அனுமதியோ அங்கீகாரமோ அளிப்பதில்லை. பெற்றோரிலும் கூடிய கரிசனையோடு திருமணத்திற்கு முந்திய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

காதல் திருமணங்களுக்கு விடுதலைப் புலிகள் அனுமதிப்பது அரிது என்ற குற்றச்சாட்டு சில விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறது. இது ஆதாரமற்ற செய்தி. காதல் திருமணங்கள் ஏற்பாட்டுக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

போராட்ட வாழ்வில் குறிப்பிட்ட காலஞ் செலவிட்ட போராளிகளுக்கு மாத்திரம் காதல் திருமண அனுமதி கொடுக்கப்படுகிறது. இங்கும் திடீர் காதல் கலியாணங்களுக்கு இடமில்லை. போராட்ட வாழ்வில் குறைந்த பட்சம் எட்டு வருடம் செலவிட்டுத் தமது தகுதியை நிரூபிக்கும் போராளிகளுக்கு மாத்திரம் ஏற்பாட்டுக் குழு அனுமதி வழங்குகிறது.

எட்டு வருடக் கால எல்லை என்பது ஏற்பாட்டுக் குழுவினர் தாமாகத் தெரிவு செய்து ஒன்றிணைக்கும் சோடிகளுக்கும், காதலித்துத் திருமணம் செய்பவர்களுக்கும் பொருந்தும். சில காதல் சோடியினர். ஆறு வருடம் வரை அனுமதி கிடைப்பதற்காகக் காத்திருந்த வரலாறு உண்டு.

இவ்விடத்தில் ஸ்கொட்லாந்தின் கிரெட்னா கிறீன் (GRETNA GREEN) திடீர் திருமணங்கள் பற்றிக் குறிப்பிட முடியும். தெற்குச் ஸ்கொட்லாந்துக் கிராமமான கிரெட்னா கிறீன் திடீர்த் திருமணங்களுக்காக உலகப் பிரசித்தம் பெற்றது.

ஐக்கிய இராச்சியத்தின் காதல் சோடிகள் இந்தக் கிராமத்திற்கு “ஓட்டமும் நடையுமாக” வந்து உடனடித் திருமணஞ் செய்கின்றனர். பெற்றோர் அனுமதி கிடைக்காதவர்கள் இந்த உத்தியைக் கையாள்கின்றனர். இவ்வகையில் கிடைத்த புகழ் இந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்கும் சுற்றுலா மைய எழுச்சிக்கும் காரணமாகியுள்ளது.

தமிழீழத்திலோ தமிழர் வாழும் பிற பகுதிகளிலோ கிரெட்னா கிறீன் பாணியில் திருமணங்கள் நடப்பதில்லை. தமிழ் நாட்டில் சில கோயில்களில் மாலை மாற்றித் திருமணஞ் செய்யும் சம்பிரதாயம் காணப்படுகிறது. பெரும்பாலும் பெற்றோர் சம்மதம் பெறாமல் இந்த வகைத் திருமணங்கள் நடக்கின்றன.

இந்தத் திருமணங்களில் பூ மாலை மாற்றப்பட்ட பிறகு தாலி கட்டும் சடங்கு அதே இடத்தில் நடத்தப்படுகிறது. சட்டப்படி இது வலுவான திருமணமாக ஏற்றக் கொள்ளப் படுகிறது.

திருமணம் செய்வோரின் வசதிக்கேற்ப திருமாங்கல்யத்தின் தன்மை அமைகிறது. ஒரு சவரன் அல்லது அரை சவரன் தங்கத்தில் செய்த தாலியை மஞ்சள் கயிற்றில் பொருத்தி பெண்ணின் கழுத்தில் ஆண் அணிவிப்பார். வசதியுள்ளவர்கள் மஞ்சள் நிறக் கயிற்றுக் பதிலாகத் தங்கத்தில் செய்த தாலிக் கயிற்றை அணிவிக்கின்றனர்.

திருமண பந்தத்தின் அத்தாட்சியாகத் திருமணமான இந்தியப் பெண்கள் கழுத்தில் தாலி அணிகின்றனர். தமிழர்களும் இந்தப் பழம்பெரும் பண்பாட்டைக் கடைப்பிடிப்பவர்கள். திருமணமான தமிழ்ப் பெண் கழுத்தில் தாலியைப் பெருமையோடு அணிகிறாள். அவளுக்குத் தாலி ஒரு விசேட அந்தஸ்த்தை சமூகத்தில் பெற்றுக் கொடுக்கிறது.

கணவனை இழக்கும் போது அல்லது விவாகரத்துப் பெறும் போது ஒரு பெண் தாலியைக் கழுத்தில் இருந்து அகற்றி விடுகிறாள. அவள் தாலி இழந்தவள் என்ற அவப் பெயரைத் தனது எஞ்சிய வாழ் நாளில் பெறுகிறாள். பெரும் பாலான சுப நிகழ்ச்சிகளில் பங்கு பற்றும் உரிமை இந்த அபலையிடம் இருந்து பறிக்கப் படுகிறது.

ஒரு குண்டுமணி எடையுள்ள தங்கத்திற்கும் பெறுமதியில்லாத ஆண்கள் தமது மனைவிக்குத் தாலி அணிவதில்லையா என்ற கேள்வி எழுகிறது. அவர்கள் ஒரு துண்டு மஞ்சள் கிழங்கை(TUMERIC TUBER) தாலிக் கயிற்றில் முடிந்து பெண்ணின் கழுத்தில் கட்டுகிறார்கள்.

விடுதலைப் புலிகள் நடத்தி வைக்கும் திருமணங்களில் தாலி அணிதல் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கத் தாலியும் மஞ்சள் கயிறுமாகப் புலிகள் அணிவிக்கும் தாலி இடம் பெறுகிறது. புலிகளின் திருமணச் சடங்குகளில் சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறது. விருந்து உபசரிப்புச் செலவுகள் மட்டுப்படுத்தப் படுகின்றன.

புலிகள் நடத்தும் திருமணங்களில் எந்தவொரு மதச் சடங்கிற்கும் இடமளிக்கப் படுவதில்லை. தாலி அணிவது மதங்களுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டு விழுமியம். புலிகள் அணிவிக்கும் தாலியில் புலியின் அடையாளம் பொறிக்கப்பட்டுள்ளது. இது சங்ககாலப் புறநானூற்றுத் தமிழர்களின் வீர வரலாற்றுக் குறியீடாகும்.

புலிகளுடைய திருமணங்களுக்குத் தமிழீழத் திருமணப் பதிவுச் சட்டத்தில் இடமளிக்கப்பட்டு திருமணப் பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தப் பெண்னை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று ஆணும் இவரை எனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்கிறேன் என்று பெண்னும். சபையில் கூறுகின்றனர்.பின்பு இருவரும் பதிவேட்டில் ஒப்பமிடுகின்றனர். அவர்களுடைய பெற்றோரும் பதிவேட்டில் ஒப்பமிடுகின்றனர். தமிழீழத் திருமணப் பதிவாளர் பதிவுகளை சபையோர் முன்னிலையில் நடத்தி வைக்கிறார். பெற்றோர் இல்லாதவர்களுக்காகப் பாதுகாவலர்கள் ஒப்பமிடுகின்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கிய பின் இலங்கையில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுச் சட்டம் அமலாக்கம் பெற்றது. (REGISTRATION OF BIRTHS, DEATHS, MARRIAGES ORDINANCE.) இதையொத்த சட்டத்தை விடுதலைப்புலிகள் இயற்றி அமலாக்கம் செய்தனர்.தமிழ்ச் சமூகத்தின் சாபாக்கேடுகளில் ஒன்றான சீதனக் கொடுக்கல் வாங்கலைப் புலிகள் மணக் கொடைத் தடைச் சட்டத்தின் மூலம் நிறுத்தியுள்ளனர். இந்தச் சட்டம் 1995 செப்ரம்பர் முதலாம் நாள் தொடக்கம் செயற்பட்டது.

மண முறிவு பெற விரும்புவோர் தமிழீழச் சிவில் சட்டத்தின் கீழ் மனுச் செய்து நீதி மன்றத்தின் மூலம் நிவாரணம் பெற வேண்டும். நீதி மன்றத்தின் இது தொடர்பான இடைக்காலத் தீர்ப்பு, நிரந்தரத் தீர்ப்பு என்பன பத்திரிகை வாயிலாக பகிரங்கப் படுத்தப்படுகிறது.

இவ்வளவு விரிவாக இந்த விடயத்தை எழுத வேண்டிய தேவைஎழுந்துள்ளது. பல்பண்பாட்டு விழுமியம்(MULTICULTURALISM) தனது அடிப்படைத் தேசியக் கொள்கை என்று சொல்லும் கனடாவில் நேரடி மற்றும் மறைமுக ஈழத் தமிழர்கள் எதிர்ப்பு வாதம் காணப்படுகிறது.

ஒரு விடுதலைப் புலிப் போராளியின் மனைவி அணிந்திருந்த புலித் தாலியை விசமத்தனமாகக் கனடா அரச அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். இன்று வரை ஈழத் தழிழர்களுக்கு எதிரான சுடு போரையும் கருத்தியல் போரையும் நடத்தும் இலங்கை அரசு கூட இந்த வகை விமர்சனம் செய்ததில்லை.

உள் நாட்டு சட்டம் சர்வதேசச் சட்டங்களில் புலித் தாலிக்குத் தடை விதிக்கப்படவில்லை. தமிழீழப் பெண்கள் கனடாவில் வாழுங் காலத்தில் எந்த வகைத் தாலியையும் அணியவேண்டாம் என்று கனடா கூறுமாயின் அது பாரிய மனித உரிமை மீறலாக முடியும்.

மேற்கு ஐரோப்பாவில் பிரான்சு நாட்டில் 5மில்லியன், ஜேர்மனியில் 4மில்லியன் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு கனடா அரசு கொடுக்கும் இம்சை போன்ற நிர்ப்பந்தம் கொடுக்கப் படுவதில்லை. கனடா வாழ் ஈழத்தமிழர்கள் எண்ணிக்கை ஆகக் கூடினால் 5இலட்சம் இருக்கும். இவர்களுக்கு இத்தனை அச்சுறுத்தல்களா?

இலங்கையின் வட கிழக்குத் தமிழர்கள் தம்மைப் பற்றி “நாங்கள் உயிர் வாழக் கற்றுக் கொண்டவர்கள். செல்வச் செழிப்படையும் வரை முயற்சி செய்வோம். முடியாவிட்டால் இன்னொரு நாட்டிற்குப் குடிபோவோம்” என்று கூறுகிறார்கள். குடியேற்றவாசிகள் நாடான கனடா இதைப் புரிந்து கொண்டால் நல்லது.

குற்றச் செயல்கள் புரிவோரைத் தண்டிக்கக் கனடாவில் போதுமான சட்டங்கள் இருக்கின்றன. மீறுவோரைத் தண்டிக்காமல் வசை பாடுவதில் அர்த்தமில்லை. கைதிக் கூண்டில் நிற்க நேரிட்டால் அது ஈழத் தமிழராக மாத்திரமல்ல கனடா அரசாகவும் இருக்கக் கூடும்.

பண்பாடுகள் பற்றிய வரலாற்றாய்வாளர் மாகரேற் மீட் (MARGARET MEAD, CULTURAL ANTHROPOLOGIST, 1901-1978) சொல்கிறார், “சிறிய குழுவினரான நற்சிந்தனையுள்ள அர்ப்பணிப்பு மிகுந்த குடிமக்களால் உலகத்தை மாற்ற முடியும். உண்மையில் அது தான் எப்பவும் நடந்திருக்கிறது.” அப்படியான குழுவினர் கனடாவில் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.