Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லசந்தவின் மரணத்தின் பாதை : அரசு கிளப்பும் புதிய சர்ச்சை

Featured Replies

இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குத் தொடர்பு இருக்கின்றதா? அல்லது இலங்கை அரசாங்கம் இந்தப் படுகொலையில் அவரை மாட்டிவிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதா?

பிரித்தானிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாகக் கூறப்படும் தகவல் ஒன்றை இலங்கை அரசாங்கம் வெளியிட்டதையடுத்தே இந்தக் கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டிருக்கின்றது.

2009 ஜனவரி 8 ஆம் திகதி கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளைப் பகுதியில் வைத்து பட்டப்பகலில் பலர் பார்த்துக்கொண்டிருக்கத்தக்கதாக இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்டார். லசந்த பணயம் செய்த காரைப் பின்தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளகளில் வந்த இனந்தெரியாத ஆயுதக்குழுவே காரை வழிமறித்து நடு வீதியில் வைத்து லசந்தவைப் படுகொலை செய்தது.

ஊடகத்துறை மூலமாக அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துவந்த லசந்தவின் படுகொலை ஊடகத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. கொழும்பில் நடைபெற்ற அவரது இறுதிக் கிரியைகளில் பெருந்தொகையானவர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். சுதந்திரமான ஊடகத்துறைக்கு இலங்கையில் இடமில்லை என்பதை இச்சம்பவம் தெளிவாக உணர்த்தியது. உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புக்கள் இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின.

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள், ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முறைகேடுகளையும் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் ஒருவராக லசந்த இருந்தமையால் கொலைப்பட்டியலில் அவரது பெயர் முதலிடத்தில் இருந்துகொண்டே இருந்தது. அதனைத் தெரிந்துகொள்ளாத ஒருவராகவும் அவர் இருக்கவில்லை. இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிவைத்திருந்து இறந்த பின்னர் வெளியிடப்பட்ட அவரது இறுதி ஆசிரியர் தலையங்கம், அரசாங்கம் தன்னைக் குறிவைத்திருக்கின்றது என்பதை அவர் தெளிவாகத் தெரிந்திருந்தார் என்பதற்கு நல்ல உதாரணம்!

'..இறுதியாக நான் கொல்லப்பட்டுவிட்டேன். இந்தக் கொலைக்கு அரசாங்கமே" என அவர் கைப்பட எழுதிய ஆசிரியர் தலையங்கம் அவரது கொலைக்குப் பின்னர் சன்டே லீடர் பத்திரிகையில் வெளிவந்த போது உலகமே அதிர்ந்தது. இது அரசாங்கத்துக்கம் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருந்தது.

ஜனவரி 11-ம் தேதி வெளியாக வேண்டிய 'சண்டே லீடர்' பத்திரிகைக்கு, "மரணத்தின் பாதையை நான் அறிவேன்" என்ற தலைப்பில் இந்தத் தலையங்கத்தை ஜனவரி 7-ம் தேதியே லசந்த எழுதுவிட்டார். அதாவது தான் கொல்லப்படுவதற்கு முதல்நாள் இதனை அவர் எழுதியிருந்தார். இந்த தலையங்கம் அவர் இறந்த பின் பிரசுரமானது. லசந்த விக்கிரமதுங்க எழுதிய தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்:

'..என் மரணத்தின் பாதையை நான் அறிவேன். நீ போலியான சத்தத்தை எழுப்பிக்கொண்டு, போலீஸை அழைத்து வேகமாக விசாரணை மேற்கொள்வாய். கடந்த காலங்களில் நீ உத்தரவிட்ட விசாரணைகளைப் போலவே, இப்போதும் நடக்கும். ஆனால், ஒன்றும் வெளியில் வராது. நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது!

என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும். தேசப்பற்று என்ற பெயரால் பலர் தங்களது உயிரைத் துறக்கும் உண்மையை ஜனாதிபதி தெரிந்துகொள்ள இது உதவும். மனிதநேயம் வளம் பெறும். எத்தனை ராஜபக்க்ஷக்கள் இணைந்தாலும் அதை அழிக்க முடியாது."

இவ்வாறு லசந்த தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

லசந்தவைக் கொலை செய்வதற்கு இதற்கு முன்னரும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 1995 பெப்ரவரியில் லசந்த அவரது வாகனத்திற்குள் வைத்துத் தாக்கப்பட்டார். 1998 ஜூனில் அவரது வீட்டின் மீது கிரனேட் வீசப்பட்டது. 2005 அக்டோபரிலும் 2007 நவம்பரிலும் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீவைத்து நிர்மூலஞ் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்த சம்பவங்களில் எந்தவொன்று தொடர்பிலும் பொலிஸார் உகந்த விசாரணைகளை நடத்தி சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியிலேயே 2009 ஜனவரி 8 ஆம் திகதி அவர் கொழும்பில் நடு வீதியில் வைத்துக்கொல்லப்பட்டார்.

தன்னியக்கத்துப்பாக்கிகளுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் பட்டப்பகலில் நடுவீதியில் வைத்து இவ்வாறான படுகொலையைச் செய்துவிட்டு சுதந்திரமாகத் தப்பிச் செல்கின்றார்கள் என்றால் அதன் பின்னணியில் அரச தரப்பு அல்லது படைத்தரப்பு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் அப்போதே வெளியிடப்பட்டிருந்தது. எனெனில் போர் அப்போது தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த அதேவேளையில் கொழும்பு நகரின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்ட ஒரு நிலையில் இருந்தது. தாக்குதலை நடத்தியவர்கள் கொமாண்டோத் தாக்குதல் ஒன்றின் பாணியிலேயே வசந்தவைத் தொடர்ந்துவந்து அதனை நிறுத்தி, படுகொலையையும் செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இவ்வாறான தாக்குதல் ஒன்றிற்கு இவர்கள் நன்கு பயிற்றப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் தாக்குதல் நடத்திய பாணியிருந்து தெளிவாகத் தெரிந்தது.

இந்த நிலையில் ஆளும் கட்சி எம்.பி.யான பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க பி.பி.சி.யின் சிங்களச் சேவைக்கத் தெரிவித்திருக்கும் தகவல் ஒன்றே இப்போது புதிய சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்குச் சம்மந்தம் உள்ளது எனக் குறிப்பிடும் குறிப்பு ஒன்றை கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரக பாதுகாப்புத்துறை அதிகாரி தன்னிடம் கையளித்ததாக பேராசிரியர் விஜேசிங்க தெரிவித்திருக்கின்றார்.

இத்தகவல் தொடர்பாக பிரித்தானிய அதிகாரிகள் மறுப்புத் தெரிவிக்கவோ, இதனை ஏற்றுக்கொள்ளவோ இல்லை. இவ்விடயத்தில் பிரித்தானியாவின் மௌனம் சந்தேகங்களை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்திருக்கின்றது.

இது தொடர்பாக பிரித்தானிய தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'சன்டே லீடர் ஆசிரியரின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகம் விரும்புகின்றது" எனத் தெரிவித்தார். இதன்மூலம் கேள்விக்கு நேரடியாகப் பதிலளிப்பதை பிரித்தானிய தூதரகத்தின் அதிகாரி தவிர்த்துக்கொண்டிருக்கின்றார்.

லசந்த கொல்லப்பட்ட போது சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக அதிகாரமும், செல்வாக்கும் மிக்க ஒருவராகவே இருந்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும் அவர் அப்போது இருந்துள்ளார். அதேவேளையில் லசந்த வெளியிட்டிருந்த சில செய்திகள் பொன்சேகாவுக்கு நெருக்கடியைக் கொடுப்பனவாகவும் அமைந்திருந்தன. இதனால் பொன்சோகாவின் மீது லசந்த கடும் சீற்றமடைந்திருந்தார் என்பதும் உண்மை!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் கீழ் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, இராணுவத் தலைமையில் ஜனாதிபதி மேற்கொண்ட மாற்றங்களினால் அதிருப்தியடைந்திருந்தார். 2010 ஜனவரி ஜனாதிபதித் தேர்தில், மகிந்தவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சிகளால் களம் இறக்கப்பட்ட பொன்சேகா, மகிந்தவுக்கு சவால்விடக் கூடிய ஒருவராகவே கருதப்பட்டார். அப்போது பொன்சேகாவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட பிரித்தானிய தூதரகம், அரசாங்கத்துக்குத் தகவல்களை வழங்கவில்லை என பேராசிரியர் விஜேசிங்க குற்றஞ்சாட்டுகின்றார்.

இருந்தபோதிலும் பிரித்தானிய தூதரகம் பொன்சேகாவுக்கு சார்பாகச் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டை பிரித்தானிய அதிகாரிகள் மறுத்துள்ளார்கள். 'ஏனைய நாடுகளில் நடைபெறும் தேர்தல்களின் போது பிரித்தானிய தூதரகம் பக்கச்சர்பற்ற முறையிலேயே செயற்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் எந்தவொரு வேட்பாளருக்கும் சார்பான முறையில் செயற்படவில்லை" என தூதரக அதிகாரிகள் திட்டவட்டமாக மறுக்கின்றார்கள்.

அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் கூட லசந்தவின் கொலை தொடர்பாக உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படாமையை வன்மையாகக் கண்டித்திருக்கின்றது. 'லசந்தவின் கொலை மற்றும் லங்கா நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் ஏனில்கொடை காணாமல் போனமை தொடர்பான விசாரணைகளில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்பட்டுவிடவில்லை" என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிந்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சன்டேலீடர் ஆசிரியரின் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் பேராசிரியர் விஜேசிங்க, இதில் பொன்சேகா சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறுவது அவரை அரசியல் ரீதியாக அரசாங்கம் பழிவாங்குகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகலாம் எனவும் குறிப்பிட்டார்.

இராணுவ உபகரணங்களைக் கொள்வனவு செய்ததில் ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு ஒன்றில் சர்ச்சைக்குரிய இராணுவ நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொன்சேகா தற்போது வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

லசந்தவின் படுகொலையுடன் பொன்சேகாவுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு இப்போது திடீரென முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல. பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாதான இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை முதன் முதலாக பகிரங்கமாக முன்வைத்தார். கடந்த வருடம் இது தொடர்பாகக் கருத்துவெளியிட்ட அவர், இதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் பொலிஸ்மா அதிபரிடம் இதனைத் தெரிவிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

லசந்தவின் கொலை தொடர்பாக பிரிகேடியர் கெப்பிட்டிவலன்ன என்பவர் முதலில் கைது செய்யப்படட்டார். அவரைத் தொடர்ந்து இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் ஏழு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட லசந்தவின் இல்லத்தில் சமையற்காரராகப் பணிபுரிந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லசந்தவின் நடமாட்டங்கள் தொடர்பான தகவல்களை இவரே கொலையாளிகளுக்குக் கொடுத்திருக்க வேண்டும் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இதேவேளையில், சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் ஸ்ரேட் ரைம்ஸ் பத்திரிகைக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்க்ஷ வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்த தகவல்கள் முக்கியமானவை. 'இந்தக் கொலை தொடர்பாக பொன்சேகா தெரிந்திருந்தாரா?" எனக் கேட்கப்பட்டபோது, 'நிச்சயமாக அவர் தெரிந்திருந்தார். ஊடகவியலாளர்கள் காணமல்போன 5 அல்லது 6 சம்பவங்களில் பொன்சேகா நிச்சயமாகச் சம்பந்தப்பட்டுள்ளார். உண்மைகள் விரைவில் வெளிவரும். மக்கள் அப்போது அனைத்தையும் அறிந்துகொள்வார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

லசந்தவின் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் இராணுவம், அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. கொலையாளிகள் நடந்துகொண்ட பாணி அதனை உறுதிப்படுத்துகின்றது. அதேவேளையில், கொலை நடைபெற்ற காலப்பகுதியில் சரத் பொன்சேகாதான் இராணுவத் தளபதியாகவும் இருந்துள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவரது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்துள்ளது. இதனால் அவருக்குத் தெரியாமல் இந்தக் கொலை நடைபெற்றிருக்காது என தர்க்கரீதியாகக் கூறலாம்.

இருந்தபோதிலும், அரசாங்கம் இப்பிரச்சினையை இப்போது கிளறுவதற்கு வேறு சில அரசியல் காரணங்கள் உள்ளன. குறிப்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பாக முக்கியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு நாடுகள் மனித உரிமைகள் நிலை மற்றும் ஊடக சுதந்திரம் தொடர்பாக தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துவருகின்றன. இந்த நிலையில், இதற்கு நாம் மட்டும் பொறுப்பல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கு நாடுகளின் ஆதரவைப் பெற்ற பொன்சேகாவும் பொறுப்பு எனக் காட்டிக்கொள்வதற்கான ஒரு முயற்சியாகத்தான் இவ்வாறான கருத்து அரச தரப்பிலிருந்து வெளியாகியிருக்கின்றது.

- கொழும்பிலிருந்து பூராயத்துக்காக சத்தியன்.

http://www.pooraayam.com/mukiaya/1608-2011-04-14-04-46-53.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.