Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு குறித்து புதிய தந்திரோபாயங்களை வகுக்க வேண்டியது அவசியம்!

Featured Replies

அரசியல் தீர்வு குறித்து புதிய தந்திரோபாயங்களை வகுக்க வேண்டியது அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

அறிவுபூர்வமானதும், காத்திரமானதுமான அரசியல் நகர்வுகளே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக சந்திக்கவும், சந்தர்ப்பங்களை அதிகப் பயன்பெறும் வகையில் பயன்படுத்தவும் உதவும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இந்தியா உந்துசக்தியாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்விற்கு கொழும்பை இந்தியா எந்தளவிற்கு வற்புறுத்தும் என்ற கேள்வி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக புதிய யுக்திகளையும், புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய தேவை தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்று (26.04.11) நடைபெற்ற சமூகப் பற்றாளாரும், போராளியுமான மனோ ராஜசிங்கத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய சிறப்புரையிவேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக அரசியல் சூழலும், இலங்கைத் தமிழ் மக்களின் நம்பிக்கையான எதிர்காலம் தொடர்பான சவால்களும், சந்தர்ப்பங்களும் எனும் தலைப்பில் அமைந்த நீண்ட இந்த உரையின் முழு வடிவத்தையும் இந்கே தருகின்றோம்.

'இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் என்றுமில்லாதவகையில் நாம் ஓர் அபாயகரமான கட்டத்திற்குள் பிரவேசித்திருக்கின்றோம். ஒருபுறம் இலங்கையின் மூத்த குடியான தமிழினமே அமெரிக்காவின் செவ்விந்தியர்கள்போல் அழிக்கப்பட்டுவிடுமா? என்கின்ற எதிர்காலம் பற்றிய சூனியத்தன்மையான பயம். மறுபுறம் மத்திய கிழக்கு முழுவதுமே இன்று ஜனநாயகத்துக்கான மக்கள் புரட்சி ஆரம்பித்துள்ளது. சர்வாதிகாரிகளையும், அரசர்களையும், இராணுவ ஆட்சியாளர்களையும் நடுநடுங்க வைக்கும் அளவிற்கு மக்கள் வீதிகளில் ஆர்ப்பரித்து நிற்கின்றார்கள். ஜனநாயகத்தை மனித உரிமைகளை மதிக்கும் எவரும் இதனை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற அளவிற்கு சர்வதேச நிலமைகள் மாறி வருகின்றன.

ஒரு கட்சி ஆட்சியைக் கொண்ட சீனா கூட இவற்றை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சீனப் பிரதமர் சீனாவிலும் கூட மாற்றங்கள் வேண்டும் என்று சொல்கின்ற சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம் இன்றைய ஜனநாயக சகாப்தத்தில் சர்வதேச சட்டங்களும் பொஸ்னியா, சேர்பியா, கொசோவோ முதல் கிழக்கு திமோர், தென்சூடான்வரையான தேசங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றிருப்பதும், எகிப்து, டுனிஸியா, லிபியா, சிரியாவின் சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டங்களைச் சர்வதேசம் ஆதரித்து நிற்பதும் தமிழ் மக்களாகிய எமக்கும் ஒரு நம்பிக்கைக் கீற்றைக் கொடுத்துள்ளது.

தமிழரின் பாரம்பரிய தாயகத்தில் இராணுவ ஆட்சியை நிலைநிறுத்தி பாதுகாப்பு நடவடிக்கை என்ற போலியான கவசத்திற்குள் ஒளிந்துகொண்டு சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை ஆட்சியதிகாரம், அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மாற்றங்கள் என்பவற்றின் ஊடாக திணிப்பதன் மூலம் சிங்கள மேலாதிக்கத்தை உறுதியாக நிலைநாட்டும் அரசின் செயற்றிட்டங்களைக் கண்டு நம்பிக்கையிழந்து வாழ்வதா? அல்லது தமிழ் மக்களின் சர்வதேசச்சட்டங்கள் நியமங்களுக்குட்பட்ட போராட்டத்தின் நீதியை உலக அரங்கில் உயர்த்துவதன் மூலம் எம்மைப் பலப்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி எழுவதா?சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் இப்போக்கினைத் தடுத்து எமது தனித்துவத்தை நிலைநாட்ட உள்நாட்டளவிலான பொறிமுறைகளோ அல்லது பிராந்திய அரசியல் சாதகத்தன்மையோ அல்லது சர்வதேச சட்டங்கள் நியமங்கள் அடிப்படையிலான சர்வதேச ஆதரவோ உண்டா? அவை எவை? முள்ளிவாய்க்கால் முடிவுடனான உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் எத்தகைய சவால்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்கியுள்ளன? இவற்றை எதிர்கொள்ளவும், பயன்படுத்தவும் நாம் தயாராக இருக்கின்றோமா? இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் பற்றிய இத்தகைய கேள்விகளுக்கு விடைகாணப்படவேண்டியதே இன்றைய கட்டாயத் தேவையாகும்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ் தேசிய இன மோதலானது இப்பொழுது தனது பயணத்திற்கான பாதையைத் தீர்க்கமாகத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளது. தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டமானது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற வார்த்தைஜாலத்தின் உதவியுடன் அழித்தொழிக்கப்பட்டது. தமிழ் மக்களை விடுதலைப் புலிகளின் பிடிகளிலிருந்து விடுவிக்கிறோம் என்ற பசப்புவார்த்தையினூடாக லட்சக்கணக்கான தமிழ் மக்கள் ஒரேடியாகப் படுகொலை செய்யப்பட்டதுடன் எஞ்சியிருந்தவர்களுக்கான அடிப்படை உரிமைகளும் வாழ்வாதாரமும் மறுக்கப்பட்டன. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளான உணவு, உறைவிடம் மற்றும் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றிற்கு கையேந்தும் நிலையில் விடப்பட்டனர். அரசு அவர்கள் இழந்துபோன ஒரு வீட்டைக்கூடக் கட்டிக்கொடுக்க முன்வராதது மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன் இவற்றை நிறைவேற்றுவதில் ஆர்வம்காட்டிய சர்வதேச தொண்டு நிறுவனங்களைக்கூட அவசர மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்திசெய்யவிடாமல் தடுத்து நிறுத்தியது.எனவே யுத்தமானது வெறுமனே புலிகளைத் தோல்வியடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டிராமல் தமிழர்களின் குரலை அது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை நிரந்தரமாக மௌனிக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது என்பது தெளிவாகத் தெரிகின்றது.யுத்தமானது வடக்கு-கிழக்கை இராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பதினூடாக தமிழர்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்கும், அவர்களைத் தமது கிடிக்கிப் பிடியில் வைத்திருப்பதற்கும் அவர்களது அடையாளங்களையும், இருப்பையும் இல்லாமல் செய்து புதிய முகத்தைக் கொடுப்பதற்கும் புலிகளின் இடத்தை இராணுவத்தினால் பதிலீடு செய்தது.

தமிழ் மக்களது உரிமைப்போரின் நியாயங்கள்

தமிழ் மக்கள் தாங்கள் இழந்துபோன உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே 1930களிலிருந்து தேர்தல்களில் பங்குபற்றியும் பகிஷ்கரித்தும் வந்துள்ளார்கள். காலனி ஆதிக்க ஆட்சியில் காலனி ஆதிக்கத்தை ஏற்க மறுத்து தேர்தலை பகிஷ்கரித்து இத்தீவு முழுமைக்கும் பூரண விடுதலையைக் கோரினர். ஆனால் விடுதலை என்ற பெயரால் பிரித்தானிய காலனி ஆதிக்கமானது சிங்கள மேலாதிக்கத்தினால் பதலீடு செய்யப்பட்டது. இவ்வாறாக காலினத்துவ ஆட்சியின் பின்னர் தமிழ் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக வாக்களிப்பில் பங்குபற்றியும் பகிஷ்கரித்தும் வந்துள்ளனர்.இலங்கையில் ஜனநாயகமுறை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்றுவரை தமிழ் மக்கள் தங்களது இறையாண்மையை எந்தவொரு ஆட்சியாளருக்கும் வழங்கியதில்லை. மாறாக தமது இறையாண்மையை நிலைநாட்டிக்கொள்வதற்காகவே வாக்களித்து வந்துள்ளனர். 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் சாசன தயாரிப்பை தமிழர் பிரதிநிதிகள் பகிஸ்கரித்து நிராகரித்தனர். அதுமட்டுமல்லாமல் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியரசு தினத்தை கரிநாளாகவும் கொண்டாடி வந்தனர். இதேபோல் 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியல் சாசன தயாரிப்பிலும் தமிழர் பிரதிநிதிகள் பங்குபற்றவில்;லை. எனவே, ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் தமது உரிமைகள் நலன்கள் தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு எந்தவித ஆணையையும் வழங்கவில்லை. இதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் ஆட்சி என்பது ஜனநாயக விரோதமானது. எனவே தமிழர்களின் போராட்டமானது சர்வதேச சட்டங்களுக்கும் நியாயங்களுக்கும் உட்பட்டது. இதனை அனைத்துத் தேர்தல்களிலும் பல்வேறு வகையில் தமது தேர்தல் விஞ்ஞாபனங்கள், வாக்களிப்புகள் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளனர்.

சர்வதேச நிகழ்ச்சிநிரலில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது அண்மைய ஆண்டுகளில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தபோதிலும் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை உலகம் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தை விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு சர்வதேசச் சமூகம் பரிந்துரைத்தது. எனினும், அரசாங்கம் தன்னிச்சையாக போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகியது முதல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம்வரை ஐ.நா. உட்பட சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு என்பது பகுப்பாய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஒருபுறம் சிறீலங்கா அரசின் யுத்தத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளிக்கின்ற நிலையும் மறுபுறம் மனித உரிமை மீறல்கள் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தலும் ஆகிய விடயங்களில் உள்ள முரண்பாடுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.இன்றைய சூழலில் இலங்கைத் தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது பெருமளவில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டில் தங்கியுள்ளது. இவ்வகையில் இலங்கைத் தமிழ் மக்ககளின் எதிர்காலம் என்பது பெரும் சவால்களை எதிர்நோக்குகின்ற அதேவேளை, அவர்களின் விடிவிற்கான சில வாய்ப்புக்களும் தென்படுகின்றன.

சிங்கள மற்றும் தமிழ் தேசிய இனங்களுக்கிடையிலான மோதலின் தற்போதைய நிலை

இலங்கையின் இனமோதலுக்கான ஆணிவேர் என்பது இலங்கைத் தீவு முழுமையையும் ஒரு சிங்கள பௌத்த நாடாக மாற்றுகின்ற சிங்கள அரசியல் சமூகத்தின் மறைமுக நிகழ்ச்சிநிரலிலிருந்து ஆரம்பமாகின்றது. காலனித்துவத்திற்குப் பிந்திய இலங்கையில் 1948ஆம் ஆண்டின் பிராஜா உரிமைச்சட்டம் முதல் 2010இல் 18ஆவது திருத்தச் சட்டம்வரை தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற சட்டங்களே பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் இயற்றப்பட்டு வருகின்றன. இதற்கு மறுபுறத்தில் சிங்களம், பௌத்தம் ஆகியன சட்ட வலுவேற்றப்பட்ட அதிகாரத்துவமிக்கது ஆக்கப்பட்டுள்ளது. பௌத்தம் அரசமதம் என்கிற அந்தஸ்து - அதிகாரத்தினூடாக ஏனைய மத, கலாசார நில உரிமைகளுக்கு வேட்டு வைக்கப்படுகிறது. சிங்களம் அரச கரும மொழி 'தமிழும்' அரச கருமமொழி என்கின்ற நாசுக்கான சொல்லாட்சியினூடாக தமிழ் இரண்டாந்தரமாக நடாத்தப்படுவதற்கான அத்திவாரங்கள் இடப்பட்டன. இவை அனைத்தும் பல்வேறு முகமூடிகளுடன் மறைமுகமான மோதல் வெளிப்பாடுகளே. ஆனால் இன்று சிங்கள கடும்போக்காளர்கள் வெளிப்படையாகவே இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும் தமிழர்கள் இங்கு சிங்கள மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்றும் பகிரங்கமாகவும் ஆக்ரோசமாகவும் பேசிவரும் அதேவேளை, அவர்களது கருத்துக்களை இராணுவ பலத்துடனும் ஆட்சியாளர் என்கின்ற அதிகாரத்துடனும் அரசாங்கம் வேகமாகச் செயற்படுத்தி வருகின்றது. எனவே இரகசிய நிகழ்ச்சிநிரல் இன்று பகிரங்கமாகி இருக்கின்றது. முன்னர் பல்வேறு நியாயப்படுத்தல்களுடன் செய்யப்பட்ட சிங்கள பௌத்த மயமாக்கல் இன்று வெளிப்படையாகவே அப்பட்டமாகச் செயற்படுத்தப்படுகின்றது. எனவே 1948இலிருந்து உருவாக்கப்பட்ட சட்டங்களும் நடைமுறைகளும் மோதலின் வெள்வேறு வகையான வெளிப்பாடுகளே தவிர மோதலின் அடிப்படைக் காரணி அல்ல. எனினும் மோதலின் வெளிப்பாடுகளான சட்டங்களும் நடைமுறைகளும் மோதலை மேலும் வலுப்படுத்தும் மற்றும் சிங்களமயமாக்கும் காரணிகளாகத் தொழிற்படுகின்றன.போர் வெற்றியைத் தொடர்ந்து பாதுகாப்பின் பெயராலும், அபிவிருத்தியின் பெயராலும் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகம் வேகமாகக் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. வடக்கில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் மக்களுக்கு வாழ்நிலங்களோ வாழ்வாதாரங்களுக்கான நிலங்களோ வழங்கப்படாத அதேவேளை கடந்த 25 ஆண்டுகளாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டு வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு விரட்டப்பட்டனர்.

இவ்வகையில் யாழ் மாவட்டத்திலேயே வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் வழங்கப்பட வேண்டிய மக்கள் பலநூறாயிரம்பேர் இருக்கும்போது ஏராளமான நிலங்களைக் கொண்ட அனுராதபுர மாவட்டத்திலிருந்து சிங்களர்கள் அரசினால் அழைத்துவரப்பட்டு யாழ் நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் வாழ்ந்து வளப்படுத்திய அரச நிலங்களில் அவர்களை வெளியேற்றிவிட்டு வேற்றுமாவட்ட சிங்களர்கள் குடியேற்றப்பட்டமை சிங்கள பௌத்த தீவகத்தில் வடக்கு கிழக்கில் சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டும் செயற்பாட்டின் அண்மைய அப்பட்டமான வடிவமாகும். கிழக்கின் கடற்கரை முழுவதும் சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் அமைச்சர்கள், அரச குடும்பத்தினர் அவர்களின் நண்பர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் என்கிற கடைநிலை ஊழியர் பதவிக்குக்கூட தென்னிலங்கைச் சிங்களர்கள் நியமிக்கப்படுகின்றனர். பௌத்தத்தின் பெயரால் பௌத்தர்களே இல்லாத அரச நிலங்களைப் பெரியளவில் கைப்பற்றி இராணுவம் பௌத்த கோவில்களைக் கட்டி வருகின்றது. இப்படி வடக்கு கிழக்கை சிங்கள பௌத்தமயப்படுத்தல் வேலைத்திட்டம் வேகம்பெற்று வருகின்றது.இவற்றுக்கெதிராக தமிழ் மக்கள் குரல்கொடுக்க முடியாத அளவிற்கு யுத்தத்தின் மூலம் அவர்களை ஏதிலிகளாக்கி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையே பெரும்சுமையாக்கி அரசு அந்நிலையைப் பேணிவருகின்றது. இத்தகைய அவலங்களை மீறி தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்த முனையும் அமைப்புக்கள், நபர்கள் பல்வேறு வடிவங்களில் இராணுவ அச்சுறுத்தலுக்குள்ளாகின்றனர்.

பயங்கரவாதத்திற்கெதிரானது என முரசறையப்பட்ட யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் பல கிராமங்கள் முழுமையாக நிலத்தின்கீழ் புதைக்கப்பட்டு அக்கிராமங்களை இலங்கை வரைபடத்திலிருந்தே அகற்றுகின்ற வேலைத்திட்டங்கள்தான் கிழக்கின் உதயத்திலும் வடக்கின் வசந்தத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாழ்விடங்களுக்குரிய சொந்த மக்கள் தகரக்கூரைகளின் கீழும் மரநிழல்களிலும் நாடோடிகள்போல் வாழ அம்மக்களின் நிலங்களில் இராணுவமுகாம்கள் மட்டும் பாரிய அளவில் நவீன வசதிகளுடனும் பாதுகாப்புடனும் வளர்ந்து வருகின்றது. தமிழ் மக்கள் ஜனநாயக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு இராணுவத்தினரும் உளவுப் பிரிவினரும் பயன்படுத்தப்படுகின்றனர்.அரசியல் யாப்பை விமர்சனம் செய்யும் தமிழர்களை தேசவிரோதிகளாகச் சித்திரிக்க முனையும் அரசு தாம் எந்த அரசியல் யாப்புக்குக் கட்டுப்பட்டு செயற்படுவோம் என சத்தியப்பிரமாணம் எடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ அந்த யாப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைக் கூட இதுவரை வழங்காதது மட்டுமின்றி அவற்றை வழங்க முடியாது என பகிரங்கமாகவே யாப்புக்கெதிராக அறிக்கைவிடுத்து வருகின்றனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உதவுவதாகக்கூறி போருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய நாடுகள் போரின்பின் தொடரும் கலாசார ஒழிப்பு, இன ஒழிப்பை ஒத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் தமிழ் மக்களுக்கெதிரான எதேச்சாதிகார ஆட்சி தொடர்பாகவும் பிரச்சினைக்கு ஏற்ற தீர்வினைப் பெற்றுத்தருவதில் காத்திரமாகச் செயற்படுவதில் தயக்கம் காட்டுவதையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.எனினும் இன்றைய அரசின் மேற்கூறப்பட்ட அணுகுமுறைகளை மனித உரிமைகள் மற்றும் போர்க்குற்றங்கள் என்ற கருத்துருவத்திற்குள் அடக்கி, சிங்கள அரசின் பதிலளிக்கும் கடப்பாட்டுக்குள் கொண்டுவர முனைதல் என்பது சர்வதேச சமூகம் ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை அலட்சியப்படுத்திவிடவில்லை என்ற ஒரு நம்பிக்கைக் கீற்றை காட்டியிருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகளின் சபையின் செயலாளர் நாயகத்தால் உருவாக்கப்பட்ட ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது இந்த நம்பிக்கைக்கு உரமூட்டுவதாக அமைகின்றது.

  • தொடங்கியவர்

இந்தியத் தலையீடு அமைதிப்படை விலகலுக்கு முன்னும் பின்னும்

தெற்காசிய பிராந்தியத்தைப் பொறுத்தவரை இதன் உறுப்பு நாடுகளனைத்தும் இந்திய மையத்துவத்தைக் கொண்டவையாகும். இவை அனைத்தும் மொழிரீதியாகவோ, மதரீதியாகவோ, கலாசாரம் மற்றும் பண்பாட்டுரீதியாகவோ இந்தியாவுடன் பின்னிப்பிணைந்தவை. ஆனால் சிறியவை. எனவே இந்தியாவுடனான இனத்துவ அல்லது, மொழியியல் அல்லது மத ஒருமைப்பாடு என்பது இந்தியாவுக்கும் இந்நாடுகளுக்குமிடையே ஆரோக்கியமான ஒற்றுமையை வளர்ப்பதற்குப் பதில் இந்தியாவை தமது தனித்துவத்திற்கு சவால்விடும் சக்தியாக நோக்கும் தன்மையே காணப்படுகின்றது. அவ்வகையில் ஆரோக்கியமான உறவு இல்லை.

அதேவேளை இந்தியாவின் பலநாடுகளுடனான எல்லைத்தொடர்பும் ஆரோக்கியமற்ற உறவும் இந்தியாவின் மிகப்பெரும் பன்மைத்தன்மை மற்றும் உள்ளார்ந்த மோதலுக்கான சூழ்நிலைகளும் சேர்ந்து இந்தியா தன் பாதுகாப்பு விடயத்தில் அல்லது மற்றும் உள்ளார்ந்த ஸ்திரத்தன்மை விடயத்தில் மிக நுணுக்கமான அவதானத்துடன் இருப்பதும் புரிந்துகொள்ளக்கூடியதே. பனிப்போர் காலம்வரை இந்தியாவின் பாதுகாப்பு என்கின்ற பிரச்சினை குறிப்பிடத்தக்களவிற்கு அதன் அயல்நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் பங்கு வகித்தது. அந்தவகையில் அயல்நாடுகளின் உள்ளுர் அரசியல் நிலமைகளைத் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் பயன்படுத்தியது.

சிலநாடுகளுடன் நட்புரீதியான ஒப்பந்தங்களினூடாகவும் சிலநாடுகளுடன் பலத்தைப் பிரயோகிப்பதினூடாகவும் அதன் ராஜதந்திரம் செயற்பட்டது.1983 முதல் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் தலையீடானது தமிழ்ப்போராளிகளைப் பலப்படுத்துவதினூடாக இலங்கை அரசுக்கு மறைமுகமாக பலத்தைப் பிரயோகிப்பது என்ற ராஜதந்திர அடிப்படையிலானதாகும். எனினும், தமிழ் நாட்டின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு எழுச்சியை மத்திய அரசு நிராகரிக்க முடியாதென்பதாலும் தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள ஆட்சியாளரின் ஒடுக்குமுறைக்கெதிராக அவர்களின் உரிமைக்கு உதவுதல் என்பது சர்வதேச சமூகத்தால் மறுக்கவோ, நிராகரிக்கவோ, விமர்சனம் செய்யவோ முடியாத விடயம் என்பதால் இனப்பிரச்சினை தீர்வு-இந்திய பாதுகாப்பு என்கின்ற இரண்டு தடங்களைக் கொண்டதாக இந்திய வெளியுறவுக்கொள்கை நோக்கப்பட்டது.

இவ்விரு தடக்கொள்கையின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினை தீர்வுக்கான இந்திய இலங்கை உடன்பாடும் இந்தியப் பாதுகாப்புக்கான கடிதப்பரிமாற்றமும் நடைபெற்றது.எனினும் தீர்வு உடன்பாடு இந்திய இராணுவம் இருக்கும்போதே செயலற்றதாக்கப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டபடி 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்படவில்லை. மாறாக செயற்படுத்த முடியாத வகையில் யாப்பிடப்பட்டதுடன், பகிரப்பட்ட விடயங்கள் தெளிவற்ற முறையில் மத்திய அரசோ நீதிமன்றமோ விரும்பிய வகையில் வியாக்கியானப் படுத்தக்கூடிய வகையில் பலவீனமான சொல்லாட்சியுடன் யாப்பிடப்படப்பட்டது.

மேலும் மத்திய அரசின் தேசியக் கொள்கை என்ற பெயரால் கல்வி, சுகாதாரம், திட்டமிடல் உட்பட பல முக்கிய துறைகளில் பெரும்பகுதியை மத்திய அரசின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரும் ஏமாற்று முறையும் கையாளப்பட்டது. அனைத்துக்கும் மேலாக 13ஆவது திருத்தச்சட்டத்தில் ஓரளவுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் ஆகியன நடைமுறைப் படுத்தப்படவேயில்லை அல்லது நடைமுறைப்படுத்த மாகாண அரசுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆக இந்தியாவின் இலங்கைப் பிரச்சினை மீதான தலையீட்டின் நோக்கமே தமிழ் மக்களின் பாதுகாப்புடன் கூடிய கௌரவமான தீர்வு என்று இருந்தபோதிலும் மாகாணசபைமுறை செயற்படுத்த முடியாத நடைமுறைப்படுத்த முடியாத பெயரளவிலான ஓர் தீர்வாகவே முடிவுற்றது.

இதற்கு சிலர் புலிகளைக் காரணமாகச் சொல்லலாம், இந்தியாவின் அன்றைய தி.மு.க. அரசைச் சொல்லலாம், இலங்கையின் பிரேமதாச அரசின் நேர்மையின்மையைச் சொல்லலாம், இந்தியாவின் வி.பி.சிங் அரசைச் சொல்லலாம். சிலர் இவற்றின் மறைமுக கூட்டுச் செயற்பாட்டைச் சொல்லலாம். தோல்விக்குப் பலரை நோக்கி விரலை நீட்டினாலும், இந்திய அரசு தனது வாக்குறுதிகளையும் கடப்பாட்டையும் இவ்விடயத்தில் காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பதும் மறுக்க முடியாது.

இத்தோல்விக்கு இந்திய அரசு மட்டுமே காரணமல்ல எனினும் இந்திய அரசின் அலட்சிய மனோபாவமும் ஒரு முக்கிய காரணமே.

அலட்சியம் ஏன் ஏற்பட்டது?

1990இல் சோவியத்தின் வீழ்ச்சியுடன் பனிப்போர் முடிவிற்கு வந்தது. இந்தியாவின் பொருளாதாரம் நரசிம்மராவ் தலைமையில் தாராண்மை மயப்படுத்தப்பட்டு திறந்து விடப்பட்டது. எனவே இந்தியாவின் நிகழ்ச்சிநிரலில் பாதுகாப்பு பின்சென்று பொருளாதார உறவுகள் முன்னிலைப்படுத்தப்பட்டன. எனவே வெளியுறவுக் கொள்கையின் முன்னுரிமைகள் மாற்றம் பெற்றன. மேலும் குஜரால் கொள்கை என்கின்ற வெளியுறவுக் கொள்கை அடிப்படைகள் குறிப்பாக தெற்காசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான நட்புறவே இந்திய பாதுகாப்புக்கு பலமானதும், மலிவானதுமான அணுகுமுறை என்ற மூலக்கொள்கை நடைமுறைக்கு வந்தது. எனவே அரசுக்கும் அரசுக்குமிடையேயான உறவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அயல்நாடுகளின் உள்ளார்ந்த பிரச்சினைகள் மீதான தலையீடு பின்தள்ளப்பட்டது.

இலங்கையைப் பொறுத்தவரை ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்பதுபோன்ற அரசியல் சூழ்நிலை நிலவுவதால் இனப்பிரச்சினைமீது இந்தியா அக்கறை செலுத்தினால் அரசுக்குக் கோபம் அரசுடன் நட்புறவாடினால் தமிழருக்குக் கோபம் என்கின்ற நிலையில் இந்தியாவின் கொள்கையானது தனது நாட்டு நலனுக்கு அரசுக்கும் அரசுக்கும் இடையிலான நட்புறவே சிறந்தது என்ற கொள்கை மாற்றமும் இதன் மூலம் பொருளாதார உறவினை வலுப்படுத்தல் குறிப்பாக இலங்கையில் இந்திய முதலீடுகளை அதிகரித்தல் என்ற வகையில் மாற்றம் பெற்றது.வடக்கு - கிழக்கு பிரிப்பும் இந்தியாவின் மௌனமும் இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்டு 20 வருடங்களின் பின் இவ்வுடன்பாட்டின் முக்கிய சாதனையான இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களான தமிழ்த் தாயகத்திற்கு அபாயம் ஏற்பட்டது.

அதனைப் பிரிப்பதற்கான வழக்கு சிங்கள கடும்போக்கினைக் கொண்ட அரச ஆதரவு சக்திகளால் கொண்டுவரப்பட்டது. இது நிகழ்ந்தால் இனப்பிரச்சினை தீர்வில் மிகப்பெரும் பின்னடைவாக அமையும் என்பதனால் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே நிர்வாகத்தின் கீழ் ஆளப்பட்டுவந்த தமிழர் தாயகத்தை பிரித்து சிங்கள மேலாதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கத்தினைத் தடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டெல்லியின் உதவியை நாடியது.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இணைக்கப்பட்டு நான்கு ஜனாதிபதிகளினால் அங்கீகரிக்கப்பட்ட இணைப்பை, இந்திய இலங்கை உடன்பாட்டின் உருப்படியான சாதனையாக இன்று சுட்டிக்காட்டப்படக்கூடிய இவ்விணைப்பை இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான இந்நேரடிப் பேச்சுவார்த்தையின் போது என்ன விலை கொடுத்தும் இணைப்பைப் பாதுகாப்போம் என இந்தியப் பிரதமரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கட்கு வாக்குறுதி வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் அணிசேரா நாடுகளின் கியூபா மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இணைந்துள்ள வடக்கு-கிழக்கு மாகாணத்தைப் பிரிக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்தார்.இலங்கை ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இணைப்பு சட்டவலுவற்றது என்ற நீதிமன்றத் தீர்ப்பு வந்ததுமே அவசர அவசரமாக இலங்கை அரசு இணைப்பைப் பிரித்து இரு மாகாண நிர்வாகங்களை உருவாக்கும் செயற்றிட்டத்தை வேகப்படுத்தியது. இந்திய அரசு தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக அமைதி காத்தது.

இலங்கை ஜனாதிபதி தனக்குக் கொடுத்த வாக்கை எவ்வித மனமாச்சரியங்களுமின்றி அப்பட்டமாக மீறுவதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக அங்கீகரித்தது. இந்தியா அதனைத் தடுப்பதற்கு எத்தகைய எத்தனிப்பையும் மேற்கொள்ளாதது மட்டுமின்றி, யுத்தத்தால் கிழக்கில் லட்சக்கணக்கான மக்கள் பேரழிவைச் சந்தித்து அதிலிருந்து சற்றும் மீளாத நிலையில், இலங்கை அரசு கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தத் தீர்மானித்தது. இணைந்த வட - கிழக்கு என்பதே 1950இல் இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடக்கம் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரை எந்தத்தீர்வுத்திட்டதினதும் அடிப்படை அலகு என்ற தமிழ் மகக்ளின் நிலைப்பாடாக இருக்கும்போது கிழக்கைக் கபளீகரம் செய்யும் சிங்கள ஆட்சியாளரின் திட்டங்களும் இனப்பிரச்சினையின் முக்கிய அம்சமாக இருக்கும் நிலையில், இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எதிர்பார்த்தது.கிழக்கு மாகாண சபைத் தேர்தலும் இந்தியாவின் எதிர்பார்ப்பும்தேர்தலில் போட்டியிடுவது வடக்கு-கிழக்கு பிரிப்பை கூட்டமைப்பு அங்கீகரித்ததாக ஆகிவிடும். இது தமிழ் மக்களின் 60ஆண்டுகால போராட்டத்தின் அடிப்படைகளைத் தகர்ப்பதாகும் என்பதால் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியிடவில்லை.

கூட்டமைப்பின் இந்நிலைப்பாட்டிலுள்ள சரி தவறுகள் ஒருபுறமிருக்க, இவ்விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடானது இலங்கை அரசு மனங்கோணக்கூடிய எந்த நிலைப்பாட்டையும் எடுப்பதில்லை என்ற ஒரு சூழ்நிலையில் இருந்தது என்பதை நாம் இலகுவாக ஊகிக்க முடியும். இருதரப்பு ஒப்பந்தம் மீறப்படுவதால் தனக்கேற்படக் கூடிய அபகீர்த்தி அல்லது சிறுமைப்படுத்தல் என்பதையும் மீறி அமைதியாக இருந்தமை இந்தியாவிற்கு அதைவிடப் பயனுள்ள முக்கியமான விடயத்தினை சாதிப்பதற்கே என்பதையும் நாம் ஊகிக்க முடியும். இன்னோர்வகையில் கூறின், வடகிழக்கு பிரிப்பை அமைதியாக அங்கீகரிப்பதன் மூலம் இரு அரசுகளுக்கிடையேயான நம்பிக்கைத் தன்மையை வளர்த்தல், அதன் மூலம் இலங்கையில் இந்திய பொருளாதார நலன்களை வளர்த்தல் ஒருபுறம், இலங்கை சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவிகளைப் பெறமுனையக் கூடாது என்ற நிலைமையை ஏற்படுத்துதல் ஆயுதங்கள் தேவையென்றால்கூட இந்தியாவிடம் கேட்க வேண்டும் இந்திய நலன்களுக்கு விரோதமான சக்திகளிடம் உதவிபெறுவதை இந்தியா விரும்பாது என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியமை இந்தியாவின் இம்மாற்றத்திற்கு சான்றாகிறது.வடக்கு - கிழக்கு பிரிக்கப்படுவதைத் தடுக்கவோ இனப்பிரச்சினையைத் தீர்க்கவோ எந்தவித உத்தரவாதமும் வெளிப்படையாக பெறாத நிலையில் விடுதலைகள் புலிகள் மீதான போருக்கு உதவ முன்வந்தமை இந்திய நலன்களுக்கு இனப்பிரச்சினையைப் பயன்படுத்தும் அணுகுமுறையையே வெளிப்படுத்துகின்றது.

எனினும் யதார்த்தத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடு. வளர்ச்சியடைந்த நாடுகள் இந்தியாவைத் தமது மட்டத்தில் அங்கீகரித்துச் செயற்படுகின்றன. இப்பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மையை அங்கீகரித்திருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் போன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பு நாடுகள் இந்தியாவும் நிரந்தர உறுப்புரிமை பெறுவதை வரவேற்று ஆதரிக்கின்றன. எனவே இந்தியா சர்வதேச அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாகி வருகிறது என்பதும் இலங்கை அதன் அயல்நாடு எனவே இலங்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகள் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய நலன்களைப் புறந்தள்ளி எந்த நாடும் செயற்படாது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நோர்வேயின் அனுசரணையாளர் செயற்பாட்டுக் காலக்கட்டத்தில் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கைக்கு வந்து சென்ற நோர்வே தலைவர்கள் உட்பட அனேகமாக எல்லோருமே இலங்கை வரும்போதோ அல்லது இலங்கையிலிருந்து செல்லும்போதோ அல்லது இருதடவைகளுமோ டெல்லி சென்று இந்திய அரசுத்தலைவர்கள் அதிகாரிகளைச் சந்தித்து தனது செயற்பாடுகள் பற்றி அறிவித்துச் சென்றமை என்பது இலங்கை இனப்பிரச்சினை தீர்வில் இந்தியாவின் வகிபாகத்தின் முக்கியத்துவத்தினைத் தெளிவாக வெளிப்படுத்தும் ஆதாரமாகும்.

Edited by akootha

  • தொடங்கியவர்

இந்தியா தொடர்பாக இலங்கையர்களின் நிலைப்பாடு

இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கையில் எமக்குச் சாதகமாகவோ பாதகமாகவோ இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற காரணி கண்டிப்பாக இடம்பெறுகின்றது. சிலவேளைகளில் இதனை இந்திய வெளியுறவுத்துறை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளாமல் 'இது உள்நட்டுப் பிரச்சினை' என்று கூறினாலும்கூட அது ராஜதந்திர வார்த்தையே அன்றி உண்மை அல்ல.

ஏனெனில் இலங்கையில் இந்திய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், இலங்கை மக்களின் அதாவது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு அவசியம். இந்தியாவுடன் எத்தகைய கோபதாபங்கள் இருப்பினும் இலங்கையில் இந்தியாவின் வரலாற்றுரீதியான, கலாசாரரீதியான, இனரீதியான நெருக்கத்தைப் பேணும் உண்மையான நண்பர்கள் தமிழர்களே.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை மகாவம்சம் முதல் இன்றைய தலைவர்கள் வரை இந்தியாவை ஒன்றில் எதிரியாக அல்லது நண்பனாக பார்க்கப்படும் வரலாறே காணப்படுகின்றது. இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கெதிராக இருக்கும்வரை இந்தியாவை சிங்கள மக்கள் ஓர் ஏகாதிபத்தியமாகப் பார்க்கமாட்டார்கள் ஆனால் இந்தியா இலங்கைத் தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டு செயற்பட்டால் இந்திய நாடானது ஓர் ஆக்கிரமிப்பு நாடாகவும் ஏகாதிபத்திய நடாகவுமே பார்க்கப்படும் என்பதுதான் உண்மையான நிலைமை. பலபத்து நூற்றாண்டுகளாக இந்திய எதிர்ப்பு கருத்தோட்டங்களால் வளர்க்கப்பட்ட சிங்கள தேசியவாதம் உள்ளடக்கத்தில் தமிழின எதிர்ப்பையும் இந்திய எதிர்ப்பையும் கொண்டுள்ளது.பெரும்பாலான முஸ்லிம்களைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தின் நிரந்தர பிரச்சினையாகவும் பிராந்திய வளர்ச்சியில் முக்கிய தாக்கம் செலுத்தும் பிரச்சினையாகவும் உள்ள இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையின் அடிப்படையில் அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்களே தவிர இந்தியாவுடன் இல்லை.எனவே இலங்கையில் இந்திய நலன்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய நம்பிக்கையான நட்புசக்தி தமிழ் மகக்ளாகவே இருக்க முடியும். இருக்கின்றனர்.

இவ்வகையில் தமிழ் மக்களின் நலன்களை முற்று முழுதாகப் புறந்தள்ளி இந்தியா இலங்கைக் கொள்கையை வகுத்துச் செயற்பட முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் மனங்கொள்ள வேண்டும். எனவே எமக்கு இந்தியாவின் ஆதரவும் இந்தியாவிற்கு எமது ஆதரவும் தேவை என்பது எமக்குள்ள ஒரு சாதகமான நிலையாகும்.

  • தொடங்கியவர்

சீனாவின் வெளியுறவுக் கொள்கையும் கூட்டமைப்பின் நிலைப்பாடும்

இலங்கை அரசுக்கு உதவும் நாடுகளில் சீனா குறிப்பிடத்தக்கப் பங்கினை வகிக்கின்றது. தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுடன் நம்புறவைப் பேணுதல் என்ற கொள்கையை அடிப்படைக் கொள்கையாக வகுத்துச் செயற்பட்டு வருகின்றது. இவ்வகையில் ஆட்சியாளர் எத்தகையோராக இருந்தபோதும், அதாவது இராணுவ ஆட்சியாக இருந்தாலும் சரி, இனவெறி ஆட்சியாக இருந்தாலும் சரி, மத அடிப்படைவாத ஆட்சியாக இருந்தாலும் சரி, இன ஒடுக்குமுறை ஆட்சியாக இருந்தாலும்சரி அவ்வாட்சியாளர்களுடன் சீனா நல்லுறவைப் பேணும். இத்தகைய ஆட்சியினால் ஒடுக்கப்படும் மக்களின் நலன்கள் குறித்து தான் அக்கறை கொண்டால் அது ஆட்சியாளர்களுடனான நட்பைப் பாதிக்கும், அதன் விளைவாக தனது பொருளாதார, பாதுகாப்பு நலன்கள் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில் வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ளது. ஐ.நா வின் பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுள் ஒன்று என்ற வகையில் சீனாவின் இக்கொள்கையானது அதன் சர்வதேச பொறுப்புக்களை நிறைவேற்றல் தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றது.

இக்கொள்கையின் அடிப்படையிலேயே இலங்கை அரசின் வடக்கு-கிழக்கு மீதான கொடிய தாக்குதலுக்கு கொடியதும், பேரழிவினை ஏற்படுத்தக்கூடியதுமான குண்டுகளை பாரிய அளவில் வழங்கியது. யுத்தத்தில் தமிழ் மக்களின் உயிர் உடைமை அழிவுகள், அவர்களது அரசியலுரிமைகளுக்கான அவசியம் எவைபற்றியும் சீன அரசு ஒருவார்த்தையேனும் பேசவில்லை. தமிழ் தரப்பு தலைவர்கள் எவரையேனும் சந்திக்கவுமில்லை.இலங்கையில் யுத்தத்திற்குப் பிந்திய காலக்கட்டத்தில் சீனாவின் பொருளாதார, பாதுகாப்பு உறவுகள் என்பது மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. அம்பாந்தோட்டைத் துறைமுகம், சிலாபத்தின் அனல்மின் நிலையம், கொழும்பின் கலாசார மண்டபம், வடக்கு-கிழக்கில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளத்திற்குப் புதிய சாலைகளை அமைத்தல், எதிர்காலத்தில் வரஇருக்கின்ற ஐந்து நட்சத்திர விடுதிகள் போன்றவை சீனா எவ்வளவு தூரம் இலங்கையில் கால் பதிக்கின்றது என்பதற்கான சாட்சியங்கள் ஆகும்.

இதற்கும் மேலாக, இலங்கையின் உதவி வழங்கும் நாடுகளில் இன்று ஜப்பானைவிடவும் முதன்மை ஸ்தானத்தில் சீனா விளங்குகின்றது. அத்துடன் வடக்கு-கிழக்கில் இராணுவ முகாம் தொகுதிகளைக் கட்டியெழுப்ப பெருந்தொகையான பணமும் கட்டிட நிர்மாணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே சீனா தலையிடாக் கொள்கை அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளின் உரிமைப் போராட்டங்களின் மீது தனது நலனைப் பேணும் நிலையில் உள்ளது. இவையாவும் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கும் பொருளாதார நலன்களுக்கும் எதிரான விடயங்களாகவே டெல்லியால் பார்க்கப்படுகின்றது என்பதையும் நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய நிலையில் உலகின் சக்திமிக்க நாடுகள் வரிசையில் அமெரிக்காவிற்கு அடுத்து சீனா விளங்குகின்றது. சீனாவிற்கடுத்து யப்பான், ரஷ்யா, இந்தியா என சக்திமிக்க நாடுகளின் படிநிலை மாறிவிட்டது. இத்தகைய பலம்மிக்க சக்தியான சீனாவுடன் தமிழ்த்தலைவர்கள் ராஜதந்திரரீதியான உறவுகளைப் பேணாததானது தமிழர் தரப்பு நியாயங்களை அவர்களுக்குச் சொல்வதற்கான வழிமுறைகளைத் தடுத்துவிட்டது என்று சொல்லலாம்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது சீனாவுடனான அல்லது சீனக்கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தில் கூட்டமைப்பின் கருத்துக்களை முன்வைத்து சீனாவின் இலங்கைக் கொள்கையில் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் மாற்றங்களையும் வலியுறுத்தி வந்துள்ளனர். கூட்டமைப்பின் கருத்துக்களைக் கவனத்தில் கொள்வதாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளனர். சீனா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தெற்காசிய நாடுகளின் கட்சிகளை அழைத்தமைகூட ஆட்சியாளருடன் மட்டுமே உறவைப் பேணுவது என்பதிலிருந்து உள்ளக நிலைமைகளை அறிந்து கொள்ளல் அதனூடாகக் கொள்கையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்ளல் என்பதன் காரணமாக இருக்கலாம்.

இவ்விடயத்தில் தொடர்ச்சியான காத்திரமான செயற்பாடு அவசியம்.

சீனக்கம்யூனிஸ்ட் கட்சியே வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கிறது என்பது ஒருபுறம் சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் நோக்கப்படலாம். ஒரே கட்சி என்பதால் கட்சித்தலைமை கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் வேறு தடைகள் இல்லை. மாற்றங்கள் வேகமாக நடைபெறலாம். அதேபோன்று கட்சி தமிழ் மக்களின் கருத்துக்களின்பால் திருப்திப் படவில்லையானால் கருத்துக்களை உள்செலுத்த வேறெந்தக் கட்சியும் கிடையாது என்பது பாதகமான நிலைமையாகும்.

மேலும் இப்பிராந்தியத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியும் தமிழ் மக்களின் தீர்விற்கு இப்போட்டி எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதும் கணக்கிலெடுக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும். சீனாவின் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளுடனான பொருளாதார மற்றும் மறைமுகமாக தமது பாதுகாப்புச் செயற்றிட்டம் 'முத்துமாலை' இந்தியாவிற்குச் சவாலாக இருப்பதும் இவற்றுக்குத் தடைகள்போட இந்திய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படத்தப்படுவதும் கண்கூடு. இந்திய நலன்களைப் பாதுகாப்பதில் இலங்கையில் சிங்கள மக்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க முடியாது என்ற யதார்த்தமானது மறுபுறம் இந்தியாவா? சீனாவா? என்கின்றபோது இலங்கையில் சீன நலன்களைப் பாதுகாப்பதில் சிங்கள இனவாத சக்திகள் சீனாவின் நலன்களையே முன்நிறுத்தும் என்பது யதார்த்தமாகும்.

இலங்கையில் இந்திய முதலீடுகள் வரும்போது பாராளுமன்றத்தில் எழுகின்ற எச்சரிக்கைக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் சீனாவின் முதலீடுகள் தொடர்பில் அடங்கியிருப்பது இதற்குச் சான்றாகும். எனவே தமிழ் மக்களின் நலன்களின்பால் சீனாவின் கொள்கைகளில் தாக்க மேற்படுத்துவதற்கு சாதுரியமான ராஜதந்திர நகர்வுகள் அவசியமாகின்றன.

  • தொடங்கியவர்

இலங்கை - அமெரிக்க உறவு

அமெரிக்காவின் இலங்கை தொடர்பான கொள்கையானது மனித உரிமை மீறல், போர்க்குற்றப் பிரச்சினைகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இப்பொழுது பார்க்கப்படுகின்றது.

இக்கொள்கையானது இலங்கையைத் தனது நலன்களுக்குப் பணியவைக்கும் துருப்புச் சீட்டா அல்லது தமிழ் மக்களுக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தலா? என்பதே இன்று ஏறத்தாழ அனைத்துத் தமிழ் மக்களின் மனங்களிலும் எழுகின்ற கேள்வியாகும்.

1983இல் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியத் தலையீடும் அதனைத் தொடர்ந்து ஆயுதப்போராட்டத்தின் வளர்ச்சியும் அமெரிக்காவினால் பனிப்போர் கண்ணாடியூடாகப் பார்க்கப்பட்டது. எனவே தமிழ்ப் போராளிகளுக்கான இந்திய உதவிக்கு எதிராக அமெரிக்காவினாலும் அதன் அணியைச் சேர்ந்த பாகிஸ்தான், இஸ்ரேல், பிரிட்டன் ஆகிய நாடுகளாலும் இலங்கை அரசின் முப்படைகளும் உளவுப்பிரிவுகளும் அளவிலும், தரத்திலும் பெருமளவுக்கு உயர்த்தப்பட்டு வலுப்படுத்தப்பட்டது.

1990வரை அமெரிக்கா நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கெதிராக அரசபடைகளை வலுப்படுத்தும் கொள்ககைகளை நடைமுறைப்படுத்தியது. அன்று அமெரிக்காவின் கொள்கையானது இந்தியாவை பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அன்று இப்பிராந்தியத்தில் இந்தியாவின் மேலாண்மையை அமெரிக்காவோ அதன் அணிசேர்ந்த நாடுகளோ அங்கீகரிக்கவில்லை. மேலும் தமிழ் ஆயுதப்போராட்ட அமைப்புகள் இந்தியாவுடன் இருக்கும்வரை தமது உதவிகள் மூலம் இலங்கை அரசு ஈழப்போராட்டத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதையும் தெளிவாகத் தெரிந்திருந்தது.

அவ்வகையில் இந்தியாவின் பிடியிலிருந்து இயக்கங்களைத் தனிமைப்படுத்தும் ராஜதந்திரத்தைச் செயற்படுத்தியது. புலிகளைத் தனிமைப்படுத்தி இந்தியாவையும் ஏனைய போராளிகளையும் பலவீனப்படுத்தும் திட்டங்களையும் நாசுக்காகச் செய்தது. 1990வரை இந்திய இலங்கை உடன்பாட்டைச் செயலிழக்கச் செய்தல், இந்தியப்படைகளை வெளியேற்றல் என தொடர்ச்சியான வேலைத்திட்டங்களை புலிகளினூடாகவும், இந்தியாவின் காங்கிரஸ் எதிர்ப்பு சக்திகளினூடாகவும் செய்தது. புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் ஒரே நேரத்தில் இஸ்ரேல் பயிற்சி கொடுத்தமையும் இந்தியாவின் உளவுப்பிரிவான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின் அன்றைய தென்மண்டல இயக்குநரான உன்னிகிருஷ்ணன் இலங்கைத் தமிழ் இயக்கங்களுக்கும் இந்திய அரசுக்கும் பாலமாகச் செயற்பட்ட அதே நேரத்தில் அமெரிக்க உளவு ஸ்தாபனத்தின் முகவராகச் செயற்பட்டு கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டமை எல்லாம் ஈழப்போராட்டத்தை அழிக்க அன்று அமெரிக்க உளவு ஸ்தாபனத்தின் செயற்றிட்டங்களுக்கான ஆதாரங்களாகும்.

இந்தியாவின் முயற்சிகளைத் தோல்வியடையச் செய்ய திரைமறைவில் புலிகளை வளர்ப்பதில் செயற்பட்ட அமெரிக்கா ராஜீவ்காந்தி கொலையைத் தொடர்ந்து புலிகளைத் தடைசெய்தது. எனினும் இலங்கை அரசு விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதமாக சித்திரித்தமையை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை 9.11. இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவது என்ற அமெரிக்காவின் செயற்றிட்டத்திற்குள் ஆரம்பத்தில் புலிகள் உள்ளடக்கப்படவில்லை என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவுவது என்ற தீர்மானம் உடனே வரவில்லை. மாறாக இலங்கை அரசு புலிகளுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்க முன்வர வேண்டும் என்ற நிலைப்பாட்டையே அமெரிக்கா கொண்டிருந்தது. இந்நிலைப்பாடு தமிழ் மக்களின் போராட்டத்தின் மீதான நியாயங்களை அந்நாடு ஏற்றுக்கொண்டிருந்தமையையே காட்டுகின்றது.

மேலும், புலிகளுடனான இறுதியுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டி நடைபெற்றபோது எல்லாப் பயங்கர வாதங்களையும் ஒன்றேபோல் நோக்கமுடியாது. உதாரணமாக புலிகளையும் அல்கைடாவையும் ஒப்பிடமுடியாது என அமெரிக்க தலைவர்கள் பிரித்துக்கூறியதன் மூலம் போராட்டத்தின் நியாயங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டமையை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை காலகட்டத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க செயலாளர்கள் இனப்பிரச்சினைக்கு கணிசமான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அதிகார பகிர்வு முறையே நல்லதீர்வாகும் என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் அமெரிக்கா தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயத்தினை உணர்ந்திருப்பதன் வெளிப்பாடுகளாகவே கொள்ள முடியும்.

எனினும் மறுபுறம் அரசாங்கத்திற்கும் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெறும்போதே இலங்கைக்கான உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டை அமெரிக்காவில் கூட்டியதென்பதும் அதில் புலிகள் பங்குகொள்ள அழைக்கப்படவில்லை என்பதும் தீர்வு முயற்சியினைப் பாரிய அளவில் பலவீனப்படுத்தும் என்பதை உணரவில்லை என்று கொள்ள முடியாது.

எனவே தமிழ்த் தரப்பை பலவீனப்படுத்தி பலவீனமான தீர்வை இலங்கை அரசு திணிப்பதற்கு வழிசமைத்துக் கொடுத்த செயற்பாடாகவோ அல்லது தமிழ்த்தரப்பை தீர்வு விடயத்தில் விரக்தியடையச் செய்து பேச்சுவார்த்தையிலிருந்து புலிகளைப் பின்வாங்கச் செய்வதன் மூலம் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாதவர்கள் என்று முத்திரை குத்தி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள ஏதுவான சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதற்கான முயற்சியாகவோதான் நோக்க முடியும்.

இலங்கை மக்கள் (தமிழ் மக்கள் உட்பட) என்ற பெயரால் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவித்தொகைகளும், கடன்களும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களிலும் சரி, நலத்திட்டங்களிலும் சரி தொடர்ந்து வரும் அரசாங்கங்களினால் இனரீதியாக மிகவும் பாரபட்சமாகவே ஒதுக்கப்பட்டு வருவது நடைமுறை என்பதும் தமிழர் போராட்டத்தின் ஒரு முக்கிய காரணியாக இருக்கும்போது தீர்வுக்கான பேச்சுவார்த்தையை பலப்படுத்தவும் இதற்காக வட-கிழக்கு அபிவிருத்திக்கு கணிசமான நிதியையும் ஒதுக்குவது என்பதற்காக கூட்டப்பட்ட மாநாட்டில் பேச்சு வார்த்தை அரங்கில் இருந்த பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ்த்தரப்பை ஒதுக்கிவிட்டு உதவி வழங்கும் மாநாட்டை நடாத்தியமை, அமெரிக்கா ஒருதரப்பை மட்டுமே அங்கீகரிப்பதாகவும் மறுதரப்பை நிராகரிப்பதாகவும் உலகுக்கு அறிவித்த ஓர் மிகத்தவறான, சுமூகமாக முன்னேறிய பேச்சுவார்த்தையில் ஓர் பெரும் தடையை ஏற்படுத்திய செயலாகவே தமிழ் மக்கள் நோக்குகின்றனர்.

அமெரிக்கா ஏற்படுத்திய இத்தடை, இச்சிறுமைப்படுத்தும் செயலின் பின் பேச்சுவார்த்தை சாதகமான திசையில் செல்லவில்லை. இத்தவறு அமெரிக்க அதிகாரிகள் தெரியாமற் செய்ததாகக் கொள்ள எந்த முகாந்தரமும் இல்லை. எனவே தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய இவ்வணுகுமுறை பேச்சுவார்த்தையின் திசைவழியைத் தீர்மானிப்பதில் தனது பிடியை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட செயற்பாடாகவே நோக்க முடியும்.

இதனைத் தொடர்ந்து புலிகளின்மீது அழுத்தங்களும் பிரயோகிப்பதில் அமெரிக்கா பின்னணியில் செயற்பட்டமை புரிந்துகொள்ளக்கூடியதே. ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடைசெய்வதில் அமெரிக்காவின் வகிபாகமும் புலிகளின் கடற்பலத்தை அழிப்பதற்கு நவீன கருவிகள் அடங்கிய போர்க்கப்பலை வழங்கியமை என்பதும் இராணுவத்தீர்வையே எப்போதும் விரும்புகின்ற சிங்கள அரசியலாளர்களை உரிமைவழங்கும் விருப்பத்தினாலன்றி அழுத்தம் காரணமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிங்கள அரசியலாளர்களை இராணுவத்தீர்விற்கு மீண்டும் உந்துகின்ற இச்செயற்பாடானது அமெரிக்காவின் மேற்சொன்ன அணுகுமுறையை நிரூபிக்கும் செயற்பாடுகளாகும்.

இறுதி யுத்தத்தின்போது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றபோதிலும் வாய்வார்த்தையும் புலித்தலைவர்கள் சரணடைய வழிவகுக்க வேண்டும் என்ற பெயரளவிலான நிலைப்பாடும் மனிதாபிமான அக்கறையைப் பதிவு செய்வதற்கான கருத்துக்களேயன்றி ஈடுபாட்டுடன் கூடியவை என்பதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை. இன்று போர்க்குற்ற விசாரணை, மனித உரிமைபாதுகாப்பிற்கான உத்தரவாதம் ஆகியவற்றை அமெரிக்கா இலங்கையுடனான தனது ஒத்துழைப்பிற்கு நிபந்தனைகளாக முன்வைத்திருப்பது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காலம் தாழ்த்தியேனும் நீதிகிடைப்பதற்கு வழிசெய்யும் நோக்குடையதா அல்லது சீனா,ஈரான், பர்மா, லிபியா, சிரியா உட்பட தனது நலன்களுக்கு முரணான நாடுகளுடனான இலங்கை அரசின் உறவைத் துண்டித்து தனது நலன்களின் பால் ஈர்ப்பதற்கான காய் நகர்த்தலா என்கிற கேள்வி எழுகின்றது.

ஏனெனில் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைக் காண இலங்கை அரசின் மீது காத்திரமான அழுத்தங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக இலங்கையில் பிரிவினையை அமெரிக்கா ஆதரிக்காது என்கின்ற காலத்திற்கவசியமற்றதும் பாரபட்சமானதுமான அறிக்கையை வெளியிட்டமை என்பது தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை தொடர்வதற்கு புலிகள் அழிக்கப்பட்ட பின்னும் பிரிவினைவாதத் தடுப்பு என்ற போலியான முகமூடியுடன் இராணுவ ஆட்சியை வடக்கு கிழக்கில் நிலைநிறுத்த முயலும் இலங்கை அரசின் கபடத்தனமான நிலைப்பாட்டின் பின்னால் இழுபட்டுச் செல்கிறதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

எனவே தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை அமெரிக்கா ஏற்றுக்கொண்டபோதும் தமிழ் மக்களின் வாழ்வா சாவா என்கிற பிரச்சினையை தனது நலன்களுக்குப் பயன்படுத்த முயலும் போக்கை வெளிப்படுத்துவதாக தமிழ் மக்கள் ஐயுறுவது தவிர்க்க முடியாதது. இனப்பிரச்சினை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டில் தெளிவும் உறுதியும் அவசியமாகின்றது.

  • தொடங்கியவர்

புலம்பெயர் தமிழர்களும் இலங்கை அரசியலும்

ஏறத்தாழ 10 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல்வேறுபட்ட நாடுகளில் வாழ்கின்றனர். கனடாவிலும், பிரித்தானியாவிலும் மிக அதிகமாகவும் ஜேர்மனி, பிரான்ஸ், சுவிஸ் மற்றும் நோர்வே, டென்மார்க் போன்ற நாடுகளிலும் அவுஸ்ரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளில் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

ஈழ விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டதற்கு இவர்களின் பங்கு அளப் பெரியது. இவர்கள் தாம் இருக்கும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களுடனும், அரசியல் கட்சிகளுடனும் மற்றும் பொது ஸ்தாபனங்களுடனும் நல்லுறவை பேணி வருகின்றனர் அது மாத்திரமல்லாமல் மேற்கண்ட நாடுகளில் உள்ள பல உள்ளூராட்சி அமைப்புகளில் கூட பிரதிநிதிகளாக அங்கத்துவம் வகிக்கின்றனர்.

அத்துடன் கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் சில பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில் தீர்மானகரமான சக்திகளாகவும் இவர்கள் செயற்படுகின்றார்கள். இதனால் இலங்கை அரசாங்கத்தினுடைய மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றங்கள் மற்றும் பல்வேறுபட்ட தமிழினத்துக்கு எதிரான அடக்கு முறைகள் தொடர்பாக உலகத்தின் பல நாடுகளுக்கும் எடுத்துச் சொல்லக் கூடிய வாய்ப்பினையும், இவற்றுக்கு எதிரான சர்வதேச நடவடிக்கைகளை உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பினையும் இவர்கள் கொண்டுள்ளார்கள்.

திரு எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய காலக்கட்டத்தில் சர்வதேச சமூகத்திற்கு தெரியாத ஒரு உள் நாட்டு பிரச்சினையாகவே இலங்கைத் தமிழர் பிரச்சினை இருந்து வந்தது. ஆனால் இன்று சர்வதேச சமூகம் கலை கொள்ளக் கூடிய பிரச்சினையாக இலங்கைத் தமிழர் பிரச்சனை மாறியுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்விற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பானது மிகவும் அவசியமானது.

இலங்கையில் நீண்டதும் நிரந்தரமான இனப்பிரச்சினை தீர்விற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பும், அதனை உருவாக்கக்கூடிய புலம்பெயர் தமிழ் மக்களின் ஒத்துழைப்பும் இன்றியமையாததது.

முடிவுரை

இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு உருவாக்கிய மாகாண சபைக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா அக்கறை காட்டவும் இல்லை, அதன் மூலம் தமிழ் மக்களுக்கு கிடைத்த சிறு அதிகாரங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றபோது தடுக்க முனையவும் இல்லை.

மாகாணத்தை உடைத்து தீர்வுக்கான அடித்தளங்களையே அரசு நிர்மூலம் செய்வதையும் இந்திய அரசு தட்டிக்கேட்கவில்லை. மாறாக தும்பைவிட்டு வாலைப்பிடித்த கதையாக 25 ஆண்டுகளாக இருந்த மாகாண சபை முறையை அழிக்கவிட்டு உதட்டளவில் மாகாணசபை என தீர்வு அமையவேண்டுமென கொள்கை நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.

ஆக இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட்டு அதனூடாக தனது நலன்களை எய்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதே தமிழ் மக்களின் அனுபவமாகின்றது. எனினும் இந்திய நலன்களை இலங்கையில் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மக்களின் நலன்களைக் காக்கக்கூடிய வகையிலான தந்திரோபாயங்களை இந்திய அரசு கண்டறிதல் வேண்டும். சீனாவைப் பொறுத்தவரை தலையிடாக்கொள்கை மூலம் தமிழ் மக்களின் உரிமைகளுக்கெதிரான யுத்தத்தை வலுப்படுத்தியதன் மூலம் தனது பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்களை காப்பாற்றிக்கொள்ளும் அணுகுமுறையைக் கடைப்பித்தது. எனினும் வெளியுறவுக்கொள்கை மாற்றத்திற்கான அறிகுறிகள் கடினமானாலும் சீனாவின் நிலைப்பாட்டில் பாதகமான தாக்கத்தைத் தவிர்ப்பதற்கான உபாயங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாள வேண்டும். அமெரிக்காவின் நிலைப்பாடென்பது பெருமளவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் அணிசேரா நாடுகள் யப்பான், அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதால் அமெரிக்காவின் நிலைப்பாடு மட்டும் நோக்கப்பட்டது. அமெரக்கா நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகளை மேற்கொண்டதன் மூலம் தீர்வுக்கான சந்தர்ப்பங்களைக் குழப்பி தோல்வியுறச் செய்யும் அணுகுமுறையைப் பின்பற்றி வருகிறது. எனினும் கொள்கைரீதியான கூட்டாட்சித் தீர்வுக்கான ஆதரவு, போருக்கு முன்னரும், போரின்போதும் தமிழ் மக்களிற்கு ஏற்படுத்தப்பட்ட மிகப்பெரும் அநீதிக்குப் பதில் சொல்ல வற்புறுத்தும் நியாயமான அணுமுறையும் தமிழ் மக்களின் நிலையான தீர்விற்கு அமெரிக்காவின் ஆதரவை வளர்த்தெடுக்க வாய்ப்பான இடைவெளியென்பதை மறுக்க முடியாது. இவ்விடைவெளியைப் பயன்படுத்த கூட்டமைப்பு தன்னைத் தயார் செய்தாக வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கடந்த 30 ஆண்டுகாலமாக இந்தியா உதவி செய்யுமா? அமெரிக்கா உதவி செய்யுமா? எவரேனும் வந்து எம்மைக் காப்பாற்றுவார்களா? என்ற மனோபாவத்துடன் கேள்விகளை முன்னிறுத்துவது வழக்கமாகும். எந்த ஒரு நாடும் தனது நலனை முன்னிலைப்படுத்தியே தலையீட்டினை மேற்கொள்ளும் என்பது மேற்கண்ட நாடுகளின் அணுகுமுறைகளின் பகுப்பாய்வு மூலம் நிரூபணமாகின்றது.

அழுதபிள்ளைக்குத்தான் பாலூட்டுவார்கள். எனவே எந்த நாடும் நாம் வாளாவிருக்க தானாக வந்து எம்மை இரட்சிக்கப் போவதில்லை. எமது தொடர்ச்சியானதும், அறிவுபூர்வமானதும், காத்திரமானதுமான அரசியல் நகர்வுகளே மேற்கண்ட சவால்களை வெற்றிகரமாக சந்திக்கவும் சந்தர்ப்பங்களை அதிகப் பயன்பெறும் வகையில் பயன்படுத்தவும் உதவும்.

இதனடிப்படையில் சமீபத்திய இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்தும் சில விடயங்களை நான் குறிப்பிடலாம். கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்பு இலங்கை அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ளது. வடக்கு-கிழக்கில் அபிவிருத்திதான் இன்றுள்ள முதன்மையான பிரச்சினை, அங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற நிலைப்பாட்டையும் இலங்கை அரசாங்கம் கொண்டிருந்தது. அத்துடன் சிங்கள பௌத்த அதிதீவிரவாத சக்திகளை உள்ளடக்கியதாகவும் இன்றைய அரசாங்கம் இருந்து வருகின்றது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமையும் யுத்தத்தின் வெற்றியும் அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலான சிங்கள பௌத்தத்தை நிலைநாட்டுவதற்கே முன்னுரிமை அளித்தும் வருகின்றது.

இதனைவிட சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுவரும் பொருளாதார, பாதுகாப்பு உறவுகளும் இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை இந்தியாவிற்கு உணர்த்தியிருக்கும். இதன் பிரகாரம் இந்தியாவின் பாரிய அழுத்தங்களின் காரணமாக இலங்கை அரசானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை அண்மைக்காலத்தில் ஆரம்பித்திருக்கின்றது. மூன்று சுற்றுக்களாக இப்பேச்சுவார்த்தை நடந்தபொழுதிலும் பேச்சுவார்த்தையில் எத்தகைய முன்னேற்றமுமில்லாமலே அது நகர்ந்து கொண்டிருப்பதும் அதனால் பேச்சுவார்த்தையின்மீதான நம்பிக்கையீனங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதைப் பார்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இந்தியா உந்துசக்தியாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்விற்கு இலங்கையை இந்தியா எந்தளவிற்கு வற்புறுத்தும் என்ற கேள்வியும் எழுகின்றது.இலங்கைமீது அதிகப்படியான அழுத்தங்களை இந்தியா கொடுக்குமாக இருந்தால் இலங்கை சீனாவை நோக்கிப்போவதை மேலும் ஊக்குவிப்பதாக அமையும் என்று இந்தியா யோசிக்கலாம்.

இந்த நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக புதிய யுக்திகளையும் புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய தேவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஏற்பட்டிருக்கின்றது' என சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது உரையில் தெரிவித்துள்ளார்

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={5D93E451-7B9F-4B0D-A3AF-86056C83AF82}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.