Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகலில் பசுமாட்டுடன் வருகிறார் உங்கள் வீட்டில் பரோட்டா சாப்பிடுவதற்கு!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகலில் பசுமாட்டுடன் வருகிறார் உங்கள் வீட்டில் பரோட்டா சாப்பிடுவதற்கு!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Viruvirupu, Thursday 05 May 2011, 13:29 GMT

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அனல் பறக்கக் கொதித்துக் கொண்டிருக்கும் மதிய நேரத்தில் வானத்தில் வட்டமிட்ட ராகுல் காந்தியின் ஹெலிகொப்டர் மெல்ல மைதானத்தில் இறங்குகிறது. அவரது தரிசனம் கிடைக்காதா என்று எதிர்பார்த்து சுமார் பத்தாயிரம் பேர் ஒரு மைதானத்தில் காத்திருக்கின்றனர். தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் முன்னேற முயல்கிறது. இளைஞர்கள் வெள்ளை பெட்ஷீட்களைக் கையில் வைத்துக் கொடிபோல் ஆட்டுகின்றனர். “இந்தியாவின் இளவரசரைச் சந்திக்க நாங்கள் விரும்புகிறோம்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

இந்தக்காட்சி இடம்பெற்றது இந்தியாவிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலமான உத்தரப்பிரதேசத்தில்.

ஹெலிகொப்டரிலிருந்து இறங்கி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி, கூடியிருந்தவர்களை நோக்கி ராகுல் காந்தி கையசைக்கிறார். இப்போது 41 வயதாகும் (1970ல் பிறந்தவர்) ராகுல் காந்தி, இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கொள்ளுப்பேரன், நான்காவது பிரதமர் இந்திரா காந்தியின் பேரன், ஏழாவது பிரதமர் ராஜிவ் காந்தியின் புதல்வர்.

நான் உங்க வீட்டுப் பிள்ளை!

அவரது பேச்சைக் கூர்ந்து கேட்டவர்களில் இந்திய மக்களில் அதிக சதவீதத்தில் இருக்கும் ஏழைகளும் இருந்தனர். “நான் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன்” என்று அவர் பலத்த கரகோஷங்களுக்கு இடையே கூறினார். இந்தியாவைப் பொறுத்தவரை இப்படியான ஏழை பங்காளன் இமேஜ் ஏற்படுபவர்கள்தான் அரசியலில் பிரகாசிக்க முடியும்.

சுமார் 15 நிமிடங்கள்தான் அந்தக் கூட்டத்தில் அவர் பேசினார். அந்தப் பதினைந்து நிமிடப் பேச்சைக் கேட்பதற்காக அங்கிருந்த மக்களில் பலர் கிட்டத்தட்ட 2 மணிநேரமாகக் காத்திருந்தது இந்தியாவில் வழமையான காட்சிதான். இந்தியாவில் தென்முனையில் தமிழ்நாட்டிலிருந்து, வடக்கே காஷ்மீர்வரை மணிக்கணக்கில் மைதானங்களில் அரசியல் தலைவர்களுக்காகக் காத்திருக்கும் மக்களை எங்கும் காணலாம்.

என்ன ஒரு வித்தியாசமென்றால், சில இடங்களில் காத்திருக்கும் கூட்டம் குவாட்டர் விஸ்கிக்கும், பிரியாணிக்குமாகக் காத்திருக்கும் கூட்டமாகவும் இருக்கலாம். ராகுல் காந்திக்காகக் கூடும் கூட்டம் இயல்பாகக் கூடும் கூட்டம் என்று அனேக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

கூட்டம் முடிந்து கிளம்பும் முன்னர், ஹெலிகொப்டரின் ஜன்னல் வழியாக கூட்டத்தினரை நோக்கி அவர் கையசைத்தார். “உங்களுடன் இணைந்து போராட எங்கும், எப்போதும் நான் வருவேன்” என்று அவர் அங்கிருந்து கிளம்புமுன் கூறினார்.

“இப்போது இங்கு அடிக்கடி வருகிறார். சரி. ஆனால் பிரதமர் பதவி கிடைத்தபின் இப்படி வரமுடியுமா?” இந்தக் கேள்வி அங்கிருந்த சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது.

“ஐயாவுங்களா? இப்ப வந்துருவாருங்களே!”

இந்தியாவின் ஆட்சி, குடும்ப மரபு வழியாக ராகுல் காந்திக்கு கிடைக்கப் போகிறது. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதை எப்போது அவர் பெறப்போகிறார் என்பதுதான் நிச்சயமில்லாமல் இருக்கிறது.

இன்றைய இந்திய அரசில் அவர் எந்தப் பெரிய பதவியிலும் இல்லை; ஆனால், நாட்டை ஆட்சி செய்துவரும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவியும், ராகுல் காந்தியின் தாயுமான சோனியா காந்தி, தற்போதைய அரசின் பதவிக்காலம் 2014ல் முடிவடைவதற்கு முன்னர் ராகுல் காந்தியைப் பிரதமர் பதவியில் அமர்த்திவிடுவார் என்று யூகங்கள் பரவியுள்ளன. நாளைய மன்னராக முடிசூடிக்கொள்ள இன்று இளவரசராக வளர்க்கப்படுபவர் என்று எதிர்க்கட்சிகள் கேலியாகக் குறிப்பிடுகின்றன.

ஆச்சரியகரமாக இதைக் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறது. தற்போது பிரதமராக உள்ள மன்மோகன் சிங், தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

“ஏங்க… முகத்திலே ராச களை இன்னும் தெரியலீங்களா?”

இதற்கு முக்கிய காரணம் அவரது இமேஜ் பில்ட்அப் இன்னமும் முழுமை பெறவில்லை என்பதாகவும் இருக்கலாம். ராகுல் காந்தி பதவிக்கு வருவதற்கான அறிகுறிகள் சூழ்ந்து நின்றாலும், நாட்டின் தலைவருக்கான இமேஜ் இன்னமும் முழுமைபெறாமல் அவர் தொடர்ந்து விளக்கமுடியாத புதிராகவே இருந்து வருவதே இங்குள்ள முரண்பாடு என்கிறார்கள்.

சமீப காலங்களில் இந்தியா, பலவிதங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. ராகுல் காந்தியோ வேண்டுமென்றே தினசரி அரசியலில் இருந்து தொடர்ந்து விலகி நிற்கிறார். பல்வேறு பிரச்சினைகளில் அவரது எண்ணம் என்ன என்பது பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, ராகுல் காந்தியின் அரசியல் நிலைப்பாட்டை ரகசியமாக வைத்திருப்பது கட்சிக்குச் சாதகமாகக்கூட இருக்கலாம். அகில இந்திய அளவில் உள்ள முக்கிய பிரச்சினைகளில் அவரது நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரிந்தால் அவர் பதவிக்கு வருமுன்னரே சில சிக்கல்களைச் சந்திக்கலாம் என்று ஒருவேளை காங்கிரஸ் கட்சி மேலிடம் நினைத்திருக்கலாம்.

அவரது அரசியல் கொள்கைகள் மூடுமந்திரமாக இருந்தாலும், கிராமப் பகுதிகளில் நலத்திட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் ஏழைகளைக் கவர்ந்து கடந்த 2 தேசியத் தேர்தல்களில் கட்சிக்கு அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுத்தருபவராக ராகுல் காந்தி இருந்திருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

மவராசன் புகுந்து விளையாடுறாரு!

அரசின் அதிகாரம் மறைமுகமாக அவரது கைகளில் இருப்பதால் எந்தவொரு நலத்திட்டத்துக்கும் அவரால் ஒப்புதல் பெற்று நிறைவேற்ற முடியும் என்பதும் உண்மைதான். ஆனால் இந்தியக் கிராமங்களில் இதெல்லாம் அரசின் பணம் என்று நோக்கப்படுவதில்லை. மவராசன் அள்ளி அள்ளிக் கொடுக்கிறாரு என்றுதான் நோக்கப்படுவது வழக்கம்.

பொதுவாகவே இந்தியாவில் தேர்தல் காலங்களில்தான் வீதிப் பணியாளர்களுக்கும் வீடியோகிராபர்களுக்கும் வேலை அதிகம். வோட்டு வேண்டுமானால் ரோட்டுப் போடவும் வேண்டும், அதை டீவியில் போடவும் வேண்டும்.

என்னதான் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகள் பெற்றுக் கொடுத்தாலும், காங்கிரஸ் கட்சி இப்போதும் நம்ப இயலாத கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆட்சியில் தொடர கூட்டணிக் கட்சிகளின் மிரட்டல்களுக்கும் பணிந்துபோக வேண்டிய சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது

“வேணாம்… எங்கிட்ட வேணாம்…”

காங்கிரஸ் அரசுக்கு தமிழகத்தின் கலைஞர் கருணாநிதியின் பதவி விலகல் மிரட்டல்தான் இந்த வகையில் லேட்டஸ்ட்!

வழமையாக இப்படியொரு மிரட்டல் வந்தவுடன், காங்கிரஸ் தலைமை செய்வது ஒரோயொரு காரியம்தான். அது, மிரட்டியவரின் காலில் விழுவதற்காகவென்றே பலியாடுபோல டில்லியிலிருந்து சென்னைக்கு ஒரு ஆளை அனுப்பி வைத்துவிடும். அந்த ஆளும் காந்திக் குல்லா போட்டுக்கொண்டு வந்திறங்கி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் காலில் விழுவார்! ஆனால் ராகுல்காந்தி தான் பதவிக்கு வருமுன் இதை மாற்றிவிட்டு வரவே முயல்வதாகவே காங்கிரஸ் கட்சியின் தற்போதய நடவடிக்கைகளில் இருந்து ஊகிக்கக் கூடியதாகவுள்ளது.

உதாரணமாக கருணாநிதியின் சமீபகால மிரட்டலை காங்கிரஸ் கட்சி கணக்கில் எடுக்கவேயில்லை. மிரட்டிய ஆளை அம்போ என்று விட்டுவிட, கடைசியில் மிரட்டத் தொடங்கிய ஆளே மீசையில் மண்ணைத் தட்டிக் கொண்டு எழ வேண்டியதாகிவிட்டது. மிரட்டிய கலைஞரின் காலில் விழ டில்லியிலிருந்து ஆட்கள் வந்த காலம்போய், இப்போது கலைஞரே விமானம் ஏறி டில்லிக்குப் போய் அல்லாட வேண்டியதாகிப் போனது.

கூட்டணிக் கட்சிகள் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் இந்தப் புதிய கடினமான அணுகுமுறைக்குக் காரணம் ராகுல் காந்திதான் என்று மிரட்சியுடன் கூறுகிறார்கள் கருணாநிதியின் தி.மு.க. முக்கியஸ்தர்கள்.

ராகுல் காந்தியின் வயதைவிட அரசியலில் அதிக வருடங்கள் அனுபவமுள்ள கருணாநிதி அடுத்த மிரட்டலை விடுவதற்குமுன் ஒருமுறைக்கு இருமுறையாக யோசிப்பார் என்பதே நிலைமை!

கட்சியின் அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்த ராகுல் காந்தி தனக்குள்ள அபரிமிதமான பிரபலத்தைப் பயன்படுத்த முயல்கிறார் என்பதை ஊகிக்கலாம். காங்கிரஸ் கட்சியின் வயதான தலைவர்களின் வழமையான பாணி “ஆயாராம் காயாராம்” அரசியலில் இருந்து கட்சியை வெளியே கொண்டுவர அவர் முயற்சிப்பதும் தெரிகின்றது.

காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பெரும்பான்மையைப் பெற ராகுல் காந்தியின் இந்த நிலைப்பாடு உதவும்; இருந்தாலும், அவர் வெற்றி பெற்றால் அத்தகைய பெரும்பான்மையை வைத்து என்ன செய்யப்போகிறார் என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை.

அதெல்லாம் வெளியே சொல்ல மாட்டாருங்க!

புதுடில்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தின் தலைவர் பிரதாப் பானு மேத்தா, “ராகுல் காந்தியின் கண்ணோட்டம் என்ன என்பது பெரும்பாலான மக்களின் மனதில் உள்ள கேள்வியாக உள்ளது” என்கிறார். தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ள அவர், இதுபற்றி அவரிடம் விரிவாகப் பேசியுள்ளதாகவும் கூறுகிறார். “ராகுல் காந்தியின் ஆழ்ந்த அரசியல் கொள்கை எது என்ற கேள்விக்குப் பதில் அவருடன் பேசிய பின்னரும் எனக்குத் தெரியவில்லை” என்பதே மேத்தாவின் இறுதிக் கூற்று.

கட்சிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பது ராகுல் காந்தி அடிக்கடி தெரிவிக்கும் ஒரு கருத்து. அதன் அர்த்தம் புதிய தலைமுறையின் கையில் கட்சி செல்லவேண்டும் என்பதே. 10 மில்லியன் இளைஞர்களைக் கட்சியில் சேர்க்கும் நோக்கத்துடன் ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடிக்கடி ரகசியப் பயணங்களையும் மேற்கொள்கிறார்.

காலேஜ் ஸ்டூடன்டுங்களா நம்மாளு?

கட்சிக்குள் இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பைப் பலப்படுத்தி முன்னிலைப் படுத்துவதே வெளிப்படையான அவரது திட்டம். பழம் பெருச்சாளிகளை அதிகம் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியில் 41 வயதான ராகுல் காந்தி ஒரு இளைஞராக நோக்கப்படுகிறார். ஆனால் தமிழக நடிகர் விஜய் இளைஞர் காங்கிரஸின் தமிழகத் தலைமைக்கு வரப்போகிறார் என்ற பேச்சு உச்சத்தில் இருந்தபோது “அவர் (நடிகர் விஜய்) இளைஞர் காங்கிரஸில் சேரும் வயது எல்லையைத் தாண்டிவிட்டாரே” என்று கூறியதில் விஜய் ரசிகர்கள் ஒரே நறநற.

எது எப்படியோ, தமிழகத்தில் நான்கைந்துபேர் நாங்கள்தான் இளைஞர் காங்கிரஸ் என்று கூறிக்கொண்டு, பேரன் பேத்திகளையும் துணைக்குக் கூட்டி வந்து கொடிபிடித்த காலம் போய், ராகுல் காந்தியின் முயற்சியில் இப்போதெல்லாம் டை அடிக்காத கறுப்புத் தலைகளையும் தமிழக இளைஞர் காங்கிரஸில் காண முடிகின்றது.

ராகுல் காந்தியின் தினசரி வாழ்க்கை ரகசியமானது. இதுவே இந்திய ஊடகங்களுக்கு மழுப்பலான விஷயமாகத் தெரிகிறது. புதுடில்லியின் வீதியொன்றில் ராகுல் காந்தி சைக்கிள் ஓட்டியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைத் தற்செயலாகப் பெற்ற ஒரு செய்தி நிறுவனம், அதுபற்றி விரிவான செய்தியை வெளியிடுகிறது. அந்தளவுக்கு இதெல்லாம் சூடான சமாச்சாரமாக இருக்கின்றது.

சேச்சே சூப்பர் ஸ்டாரா? நம்மாள் சூப்பர்சோனிக் ஸ்டாருங்க!

சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியாவிலுள்ள ‘தகுதியான பிரம்மச்சாரி’ என்ற பிரிவில் சினிமா நடிகர்களைவிட முதலிடத்தில் இருந்தது ராகுல் காந்தியின் பெயர்தான்! இருந்தாலும், அவர் ‘வெட்கம்’ அதிகமுள்ளவர், அடக்கம், அக்கறையுள்ளவர் என்று இந்தியாவுக்குள் மக்கள் மத்தியில் ஒரு இமேஜ் ஏற்பட்டுள்ளது.

தனக்கு ஸ்பெயின் நாட்டு கேர்ள் ஃபிரண்ட் ஒருவர் இருப்பதாக 2004ம் ஆண்டு வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார் ராகுல் காந்தி. ஆனால் தாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்பதை இன்றுவரை அவர் தெளிவுபடுத்தவில்லை.

இதற்கு இமேஜ் மாத்திரமே ஒரேயொரு காரணம் என்றில்லாமல் வேறு சில காரணங்களும் உள்ளன.

முக்கியமாக, ராகுல் காந்தியின் தாய் சோனியா காந்தி இத்தாலி நாட்டுக்காரர் என்பதால் இந்தியாவின் பிரதமராக வருவதற்கு அவருக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. சட்டப்படி அவர் பிரதமராக அவரால் பதவியேற்க முடிந்திருந்தாலும் அவர் மீதான நம்பகத்தன்மையில் பலரும் கேள்வி எழுப்புவார்கள் என்ற அச்சம் காரணமாக பிரதமராக பதவியேற்பதை அவரே தவிர்த்து விட்டார்.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டால் மீண்டும் சோனியா காந்தியின் குடும்பம் விமர்சனத்திற்கு உள்ளாவதோடு ராகுல் பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு பெரிய சர்ச்சையை உருவாக்கி விடக்கூடாது என்பதில் சோனியா காந்தி மிகவும் கவனமாக இருக்கிறார் என்று ஒரு கூற்று உண்டு.

பாதுகாப்புக் காரணங்களுக்காக ராகுலின் நடமாட்டங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் ரகசியம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அதே வேளையில், இந்தப் பாதுகாப்பு வளையங்கள் தனது சுதந்திரத்தைக் குலைத்து விடுகின்றது என்று அவர் கருதுவதாக அவரது ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

மின்னலு… நம்ம தம்பி வந்திருக்காக…

சமீபத்தில் யாரிடமும் சொல்லாமல் பயணிகள் விமானம் ஒன்றில் ஏறி அவர் பயணித்ததாகவும், சம்மந்தப்பட்ட மாநில அரசுக்கே அவர் வரும் விஷயம் அறிவிக்கப்படிருக்கவில்லை என்றும் கூறப்பட்டது. அதைவிட உத்தரப்பிரதேச் சுற்றுப் பயணங்களின்போது தனது பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறி அவர் தலித் மக்களின் குடிசைகளுக்குச் செல்வதும், அங்கு உணவருந்துவதும் இந்தியப் பாதுகாப்புத் தரப்பினரால் ஒரு குறையாகக் கூறப்படுகின்றது.

ராகுல் காந்திக்குத் தீவிரவாதிகளால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், இப்படியான விபரீத நடவடிக்கைகளில் அவர் இறங்குவது அவரது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் பாதுகாப்புத் தரப்பிலிருந்து அவருக்குக் கூறப்பட்டிருக்கிறது.

அவரது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜிவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டே இறந்தனர்.

இந்தப் பாதுகாப்புப் பின்னணி காரணமாக புதுடில்லியில் உள்ள அவரது அதிகாரபூர்வ இல்லம் மிகுந்த பாதுகாப்பு உடைய இடமாக இருக்கின்றது. கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட உத்தரப்பிரதேசக் கூட்டத்துக்கும் விசேட கொமாண்டோப் பாதுகாப்புடன்தான் அவர் வந்திருந்தார்.

ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகள் படித்த ராகுல், அவரது தந்தை ராஜிவ் காந்தியின் மரணத்துக்குப் பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக புளோரிடாவில் உள்ள ரோலின்ஸ் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். கேம்பிரிட்ஜில் வளர்ச்சிக் கல்வியில் முதுகலைப்பட்டம் பெற்றார். இந்தியா திரும்புவதற்கு முன்னர் லண்டனில் நிர்வாக ஆலோசகராக வேலை செய்தார். தனது தாய் காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததும், அவர் இந்தியா திரும்பினார். இதுதான் அவரது சுருக்கமான கடந்த காலம்.

அவரது சகோதரியான பிரியங்காதான், இந்தக் குடும்பத்தின் வாரிசாக அரசியலுக்குள் வருவார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள தலைவர்கள் முதலில் நினைத்திருந்தனர். ஆனால், அரசியலுக்குள் வருவதைவிட, தனது குழந்தைகளை வளர்ப்பதற்கு பிரியங்கா முக்கியத்துவம் தரத் தொடங்கி விடவே, அனைவரது பார்வையும் ராகுல்மீது படியத் தொடங்கியது.

பாப்பு வெச்சாரே ஆப்பு!

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அதன் வெற்றிக்கு நேரு குடும்பம் என்ற லேபல் அவசியம் என்ற நிலை இந்தியாவில் இருக்கிறது. பிரியங்கா அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவே காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

ராகுல் காந்தி அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் சில முதிய அரசியல்வாதிகள் அவரை ”பாப்பு” என்று அழைத்தனர். ஹிந்தியில் பாப்பு என்றால் அடக்கமான பையன் என்று அர்த்தம். ஆனால், நாளாக நாளாக அவர்களுக்குத் தெரிய வந்துள்ள விஷயம் என்னவென்றால் ராகுல் காந்தி தாங்கள் நினைத்தபடி கட்சிக்கு அடங்கிய பாப்புவாக இல்லை என்பதே.

அவர் பாப்பு இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்குத் தெரிந்த விஷயத்தை மற்றய தலைவர்களுக்கும் சமீபத்தில் உறுதி செய்திருப்பார் கலைஞர் கருணாநிதி!

பூனையை அவுத்து விட்டுரலாங்களா?

இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசமான பிராந்திய அரசியலும் உள்ளது. இருந்தபோதிலும் இவற்றில் ஒரேயொரு மாநிலத்தை அச்சாக வைத்தே அகில இந்திய அரசியல் சுழன்று வருவது இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து நடைமுறை. அந்த மாநிலம் உத்தரப்பிரதேசம். உத்தரப்பிரதேச அரசியலை யார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாரோ அவரே அகில இந்திய அரசியலையும் தமது கையில் வைத்திருப்பார் என்பது இந்திரா காந்தி காலத்திலிருந்தே கிட்டத்தட்ட ஒரு எழுதப்படாத விதி.

இப்படிப்பட்ட உத்தரப்பிரதேசத்தைத் தங்களது பலமான சொந்த மைதானம் என்று நேரு குடும்பத்தினர் கூறினாலும், தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் ராகுல் காந்தி தனது அரசியல் பலத்தை பில்ட்அப் செய்ய முதலில் உத்தரப்பிரதேசத்தை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாற்ற முயல்கிறார் என்பது ஊரறிந்த ரகசியம்.

இந்திய நாடாளுமன்றத்துக்கான 2009ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்குப் பாதகமாகவே இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் (இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கூட அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்ததாக இப்போது கூறப்படுகிறது) காங்கிரஸ் கட்சி எதிர்பாராத வகையில் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருப்பினும், தனியாக ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்தக் காரணத்தால் தி.மு.க. போன்ற (அவ்வப்போது மிரட்டப் பார்க்கும்) கூட்டணிக் கட்சிகளை நம்பித்தான் ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம். வருங்காலத்தில் இதுபோல பூனையை மடியினுள் கட்டிக்கொண்டு அல்லாடாமல் இருக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம்.

இங்கிட்டுப் புடிச்சா… அம்புட்டும் நமக்குத் தானுங்க!

காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பெரும்பான்மையைப் பெறவேண்டும் என்றால், உத்தரப்பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான பீகார் ஆகியவற்றில் அதிக அளவு இடங்களைப் பெறவேண்டும். உண்மையான சோதனை உத்தரப் பிரதேசம்தான். மற்றைய அனைத்துமே இதனைச் சார்ந்துதான் உள்ளது. உத்தரப்பிரதேசம் மக்கள் தொகை மிகுந்த மாநிலம் மாத்திரமல்ல இந்திய அரசியலின் மையமும் அதுதான்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2012) மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கப் போகின்றது. இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் ராகுல் காந்திக்குத் தற்போதுள்ள முக்கிய சவால். கிட்டத்தட்ட அவரது அரசியல் வாழ்க்கையே இதில்தான் தங்கியிருக்கிறது.

கடந்த சில மாதங்களாக, ராகுல் காந்தி அவ்வப்போது உத்தரப்பிரதேசக் கிராமப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜாதி அந்தஸ்துக் குறைந்ததாகக் கருதப்படும் தலித் வீடுகளில் சாப்பிடுகிறார் அல்லது தலித் குடும்பத்துடன் இரவைக் கழிக்கிறார். “மக்களை ஜாதி அடிப்படையில் நான் பார்ப்பதில்லை, அவர்கள் ஏழைகள் என்றுதான் நான் பார்க்கிறேன்” என்று கிராமம் ஒன்றில் தங்கியிருந்தபோது அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி கட்சியின் எதிர்காலக் கண்ணோட்டத்தை அதிகமாக வெளிப்படுத்தாமல் அதே நேரத்தில் தன்னை அதிகமாக வெளிப்படுத்திக் கொள்ளும் இந்த உத்தி எந்தளவுக்கு வேலை செய்யும் என்பது அடுத்த வருடம் உத்தரப்பிரதேசத் தேர்தலில்தான் தெரியவரும்.

உத்தரப்பிரதேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் ராகுலின் முகம், விளம்பரப் பலகைகள், அரசியல் சுவரொட்டிகளில் பளிச்சிடுகிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் உள்ள ஏதாவது ஒரு குடிசைக்குள் அவரை அடிக்கடி ஊடகவியலாளர்களால் சந்திக்க முடிகிறது.

அப்போதெல்லாம் அவர்களுக்கு குடிசைகளுக்குள் பொதுமக்களோடு மிங்கிள் பண்ணும் ராகுல் காந்தியின் விதவித புகைப்படங்கள் கிடைக்கின்றன. இந்தக் குடிசைப் புகைப்படங்கள் இந்தியா முழுவதும் செய்தித்தாள்களில் தவிர்க்க முடியாத வகையில் பிரசுரமாகின்றன. எல்லாமே சரிதான். ஆனால், ஒரேயொரு விஷயம்தான் புரியவில்லை.

ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தியும் அந்த நாட்களில் புதிதாக அரசியலுக்கு வந்தபோது இப்படி ஏழைகளின் குடிசைகளுக்குள் அவ்வப்போது சென்று வந்துகொண்டிருந்தார். இப்போது 30 வருடங்களின்பின் ராகுல் காந்தியும் அதே குடிசைக்குள் நுழைந்து வந்துகொண்டிருக்கிறார்.

புரியாத விஷயம் என்னவென்றால், 30 வருடங்கள் (இதில் பெரும்பகுதி காங்கிரஸ் ஆட்சி) கடந்த பின்னரும் உத்தரப்பிரதேச ஏழைகள் இன்னமும் குடிசைகளில்தான் வசிக்கிறார்களே!

நன்றி - விறுவிறுப்பு.கொம்

http://viruvirupu.com/2011/05/05/267/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.