Jump to content

கடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா


Recommended Posts

கடவுளின் பெயரால் முதல்வராகப் பதவியேற்றார் ஜெயலலிதா: விஜய்காந்த்-மோடி பங்கேற்பு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இதைக்காண ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சென்னையில் திரண்டனர்.

இந்த பதவியேற்பு விழாவில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள தவிர குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் பங்கேற்றனர்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்று 147 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று வேகம் பிடித்தன.

முதலில் அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் ராயப்பேட்டையி்ல் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடந்தது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சட்டசபை கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பான தீர்மான முடிவை கட்சிப் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவை சந்தித்துக் கொடுத்தார். பின்னர் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையனுடன் ஆளுநர் மாளிகை சென்றார் ஜெயலலிதா.

அங்கு ஆளுநர் பர்னாலாவை சந்தித்து இக்கடிதத்தைக் கொடுத்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். கடிதத்தை ஏற்றுக் கொண்ட பர்னாலா ஆட்சியமைக்குமாறு ஜெயலலிதாவைக் கேட்டுக் கொண்டார்.

ஆளுநரைச் சந்தித்தபோது அமைச்சரவைப் பட்டியலையும் ஜெயலலிதா வழங்கினார். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்று இரவு அமைச்சர்கள் பட்டியல் வெளியானது.

இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. இன்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ஜெ. ஜெயலலிதாவாகிய நான்

ஜெயலலிதா எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு உறுதிமொழி...

ஜெ. ஜெயலலிதா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,

தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விளக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

ஜெ.ஜெயலலிதா என்னும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ஜெ முதல்வராகும்போது கூட்டுத் தொகை 1:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பது இது 3வது முறையாகும். இதற்கு முன்பு 1991 முதல் 96 வரையிலும், பின்னர் 2001 முதல் 2006 வரையிலும் முதல்வராக பதவி வகித்துள்ளார் ஜெயலலிதா. தற்போது 2011ல் அவர் முதல்வராகிறார்.

அவர் முதல்வர் பதவிக்கு வரும் போதெல்லாம் அந்த ஆண்டில் ஒன்றாம் எண் இருப்பது ஆச்சரியமான ஒரு ஒற்றுமையாகும்.

விஜய்காந்த் வந்தார்:

ஜெயலலிதா முதல்வர் பதவியேற்பதைக் காண அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

இவர்கள் தவிர சிபிஐ பொதுச் செயலாளர் பரதன், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனதா தள் தலைவர் அஜீத் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

சசிகலா-சோ பங்கேற்பு:

அதே போல ஜெயலலிதாவின் தோழி சசிகலா, துக்ளக் சோ, முன்னாள் டிஜிபி தேவாரம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விழாவில் மிக உற்சாகமாகக் காணப்பட்ட சோ, விஜய்காந்த் வந்தவுடன் ஓடோடிச் சென்று வரவேற்றேதோடு அவரை நரேந்திர மோடிக்கு சிறப்பு அறிமுகமும் செய்து வைத்தார்.

நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவோடு வந்திருந்தார்.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதைப் பொதுமக்களும் காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்காக பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு வெளியே பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான டிஜிட்டல் டிவிக்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல பல்கலைக்கழகப் பகுதி மற்றும் மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை ஆகிய இடங்களில் பெரிய சைஸ் டிஜிட்டல் டிவியும் வைக்கப்பட்டிருந்தது.

முதல்வராகப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா 12.30 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். அனைவரும் ஆளுநர் பர்னலாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். அவர் 12.40 மணிக்கு மேடைக்கு வந்தார். அவர் வந்தவுடன் தனது அமைச்சர்களை ஆளுநருக்கு ஜெயலலிதா அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதையடுத்து ஜெயலலிதாவுக்கு பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். தமிழில், கடவுளின் பெயரால் ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார்.

ஜெயலலிதாவைத் தொடர்ந்து நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், வேளாண்மைத்துறை அமைச்சராக கே.ஏ.செங்கோட்டையன், மின்துறை அமைச்சராக நத்தம் ஆர்.விஸ்வநாதன், உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி, தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஆர்.வைத்திலிங்கம், உணவுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றனர்.

'ஓவர் ஸ்பீடு' கருப்பசாமி:

அடு்த்ததாக கால்நடைத்துறை அமைச்சராக கருப்பசாமி படுவேகமாக ஓடி வந்து, அதே வேகத்தில் படு வேகத்தில் பதவிப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டு, ஆளுநரின் கையை மிக வேகமாகப் பிடித்து குலுக்கிவிட்டு, படு ஸ்பீடாக திரும்பி வந்து ஜெயலலிதாவுக்கு கும்பிடு போட்டுவிட்டுச் செல்ல, அவரது வேகத்தைப் பார்த்து ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தார். கூட்டத்தில் இருந்த அனைவருமே சிரிப்பில் ஆழ்ந்தனர்.

இவரைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சராக பி.பழனியப்பன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக சி.வி.சண்முகம், கூட்டுறவுத்துறை அமைச்சராக செல்லூர் ராஜூ, வனத்துறை அமைச்சராக கே.டி.பச்சமால், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி, இந்து அறநிலையத்துறை அமைச்சராக எஸ்.வி.சண்முகநாதன், பொதுப்பணித்துறை அமைச்சராக கே.வி. ராமலிங்கம் ஆகியோர் பதவியேற்றனர்.

தொடர்ந்து சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராக எஸ்.பி.வேலுமணி, சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராக எஸ்.பி.வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சராக எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சராக தங்கமணி, செய்தித்துறை அமைச்சராக ஜி.செந்தமிழன் ஆகியோர் பதவியேற்றனர்.

கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம்:

இவர்களைத் தொடர்ந்து வணிகவரித்துறை அமைச்சராக கோகுல இந்திரா, சமூக நலத்துறை அமைச்சராக செல்வி ராமஜெயம், கைத்தறி-ஜவுளித்துறை அமைச்சராக பி.வி.ரமணா, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக என்.சுப்பிரமணியன், போக்குவரத்து அமைச்சராக செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் அமைச்சராக என்.மரியம் பிச்சை, மீன்வளத்துறை அமைச்சராக கே.ஏ.ஜெயபால், சட்ட அமைச்சராக இசக்கி சுப்பையா, சுற்றுலாத்துறை அமைச்சராக புத்தி சந்திரன் ஆகியோர் பதவியேற்றனர்.

அடுத்ததாக தொழிலாளர் நலத்துறை அமைச்சராக செல்லப்பாண்டியன், சுகாதாரத் துறை அமைச்சராக டாக்டர் வி.எஸ்.விஜய், விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர். சிவபதி ஆகியோர் பதவியேற்றனர்.

இந் நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பாடகி பி.சுசீலா, நடிகை அஞ்சலி தேவி, நடிகை செளகார் ஜானகி உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

முதல் கையெழுத்து:

முதல்வர் பதவியை ஏற்றதும் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் முதலில் உத்தரவிடப்போகும் திட்டம் எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட உறுதி மொழி ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பான உத்தரவாக அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/05/16/jayalalitha-take-oath-as-cm-today-aid0091.html

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.