Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

Featured Replies

இருப்பாய் தமிழா நெருப்பாய்! குமுதம் இதழுக்காக சீமான் எழுதும் தொடர்

சீமான் இப்போது நாம் தமிழர் அமைப்பை கட்டமைக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். நடிகர் விஜயை இயக்கும் பகலவன் பட வேலைகளும் அவரை பரபரவென சுழற்றி வருகிறது. இதற்கிடையில் குமுதம் வாசகர்களுக்காக சீமான் எழுதும் பரபரப்புத் தொடர்...

கடந்த மாதம் 13-ம் தேதி... அதிகாலை இரண்டு மணி வரை உறக்கம் இல்லை. புரண்டு புரண்டு படுக்கிறேன். இத்தனைக்கும் முதல் நாள் களைப்பில் படுக்கையில் விழுந்த; கணமே நான் உறங்கியிருக்க வேண்டும். அசதியோ, களைப்போ என் கண்களில் தூக்கத்தை வார்க்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து என் அலுவலக மாடியில் இருக்கும் தனி அறைக்குப் போகிறேன். யாரு?. என அதட்டுகிறது பாதுகாப்பாகப் படுத்திருக்கும் தம்பியின் குரல். அருகே வந்து முகம் பார்த்து, அண்ணே, தூக்கம் வரலியா? என்கிறான் அந்தத் தம்பி. இந்த அண்ணனுக்கு ஏதும் ஆகிடுமோன்னு நீ எப்படி உறங்காமல் கிடக்குறியோ... அதே மாதிரி இத்தனை நாள் அடை காத்த கனவுக்கு ஏதும் ஆகிடுமோன்னு பதற்றமா இருக்குப்பா...என்றேன்.

கவலை, கண்ணீர், ஏக்கம், எதிர்பார்ப்பு, வெற்றி, வீம்பு எதுவானாலும் அதனை நான் இறக்கி வைக்கும் இடம் என் அலுவலகத்தின் மாடியிலுள்ள தனியறைதான். மாவீரனாய் என் அண்ணன் அந்த அறையில் சிரித்துக் கொண்டிருப்பான். அவன் ஈழத்தில் எப்படி மரங்களாலும் கூரைகளாலும் அறை அமைத்திருந்தானோ... அதே ; போலத்தான் என் தனி அறையையும் அமைத்திருந்தேன்.

என் ஆழ்மன ஆங்காரத்தைப் போலவே என் அறையையொட்டிப் படர்ந்திருந்த மாமரம் பெருங்காற்றில் இரைச்சலோடு அசைந்தது. அண்ணனின் முகத்தில் இருக்கும் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்களைக் கொண்டது. வெற்றி என்றால் நெற்றி வியர்வையைப் போல் சுண்டி எறியவும், தோல்வி என்றால் தோளில் சுமக்கவும் கற்றறிந்த சிரிப்பு அது.

அண்ணன் எவ்வளவு பெரிய அசாத்தியன் என்பது அவன் முன்னால் சிறு உயிரியைப் போல் நான் சில்லிட்டுக் கிடக்கிறேன் என்பது அப்போது தான் புரிந்தது. உனக்கான கடமையை நீ செய்துவிட்டாய். விளைவு என்னவாக இருந்தாலும் எதிர்கொள்! மனதுக்குள் அண்ணன் தைரியம் வார்ப்பது போலிருந்தது. சிறு மரக்கட்டைகளை அடுக்கிச் செய்யப்பட்ட இருக்கையில் அமர்கிறேன். அதுதான் என் சிம்மாசனம்.

எனக்கு மிக நெருங்கிய பத்திரிகையாளர் தம்பி ஒருவரை அலைபேசியில் அழைக்கிறேன். என்னண்ணே... இந்த நேரத்தில்? ஒண்ணுமில்லப்பா... இன்னிக்கு தேர்தல் முடிவு. நான் மட்டும் இல்ல. ஆயிரமாயிரம் அண்ணன் தம்பிங்க உக்கிரமும் ஒப்பாரியுமா கதறியிருக்கோம். இதையும் மீறி காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வென்றாலும் நமக்கு அவமானம்டா தம்பி. அதான் இருப்புக் கொள்ளலை பெரு வலியோடு பிரசவத்துக்குத் துடிக்கும் ஒரு தாயைப் போல் என் காத்திருப்பைச் சொல்கிறேன். எதிர்முனையில் சத்தம் போட்டுச் சிரித்த அந்த தம்பி, கருணாநிதி, ஜெயலலிதா கூட இந்த நேரத்தில் நிம்மதியா தூங்கிட்டு இருப்பாங்க. உங்க அளவுக்கு பதற்றமா இருக்க மாட்டாங்க. நிம்மதியா படுங்கண்ணே.. என்கிறான். தொடர்பைத் துண்டிக்கும் வரை அவனுடைய சிரிப்புச் சத்தம் கேட்கிறது.

அண்ணனின் சிரிப்பும் என் அன்பு மாமரத்தின் அசைவும் என்னை மர நாற்காலியிலேயே உறங்க வைக்கின்றன.

அண்ணே..நான்கு மணி வரை விழித்திருந்தவன் எப்படி கண் அசந்தேன்? மணி காலை 7.30.குளித்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன் அமர்கிறேன். தம்பிகள் புடைசூழ நிற்கிறார்கள்.8, 9, 10 என கடிகார முட்கள் சுழலச் சுழலத்தான் எனக்கொரு உண்மை புரிந்தது. நான் மட்டும் அல்ல.. நாடி நரம்புகளில் தமிழன் என்கிற அடையாளத்தைச் சுமக்கும் அத்தனை பேரும் இன்றைய விடியலுக்காக தவிப்போடுதான் காத்திருந்திருக்கிறார்கள். சாதிமதக் கூறுகளைக் கூறுபோட்டுவிட்டு தமிழன் என்கிற சங்கிலிக்குள் ஒன்று திரண்டு காங்கிரஸின் சங்கறுக்க எல்லோரும் காத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை.நடந்து முடிந்தது எல்லோருக்கும் தேர்தல் களம்; ஆனால் நமக்கு அது யுத்த களம். நாம் வீழ்த்தியது காங்கிரஸ் என்கிற கட்சியை அல்ல. ஆண்டாண்டு காலமாக தமிழனின் தலையில் மிதித்த கொடூர சக்தியை.. காங்கிரஸின் செவிட்டில் அறைய அப்போதே தடி எடுத்தவர் தந்தை பெரியார். காங்கிரஸ் ஒரு நாசகார சக்தி எனச் சொல்லி வேரறுக்க கங்கணம் கட்டியவர் அண்ணல் அம்பேத்கர். தேசத்துக்கு விடியலை வாங்கித் தந்த அண்ணல் காந்தியே காங்கிரஸ் இனியும் தொடர்வது நாட்டுக்கு ந ல்லது அல்ல? என்றுதான் முழங்கினார். பேரறிஞர் அண்ணா காங்கிரஸை ஒழிப்பதையே கனவாகக் கொண்டார். ஆனால் அண்ணாவின் தம்பிகள் அதே காங்கிரஸுடன் கைகுலுக்கி நின்றார்கள்.

அண்ணாவின் தம்பிகள் செய்யத் தவறியதை அண்ணாவின் பேரப்பிள்ளைகள் இந்த அன்னை மண்ணில் நிகழ்த்திக் காட்டி இருக்கிறோம். சின்னத்தைத் தூக்கி வீசிவிட்டு எண்ணத்தில் ஒருமித்து நின்றதால்தான் இந்த வெற்றி! பணத்தை வீசினால் இனத்தைக் காட்டிக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என தமிழர்களைத் தரக் குறைவாக நினைத்தவர்களுக்கான தண்டனை. உறவுகளைக் கருவறுத் தவர்களின் முகத்தில் நாங்கள் உமிழ்ந்த எச்சில்! கையறு நிலையில் கதறியவர்கள், வெறும் விரல்களாலேயே வீழ்த்திக் காட்டிய விந்தை! மொத்தத்தில் சாதுவின் மிரட்சி...சாய்க்கப்பட்டவர்களின் புரட்சி!

முதல் சுற்றிலேயே எதிரியின் முகத்தைப் பிளந்துவிட்டோம் உறவுகளே.. காயங்களையும் தழும்புகளையும் மட்டுமே தாங்கி வளர்ந்தவர்கள் முதல் முறையாய் திருப்பி அடி த்திருக்கிறோம்.தமிழனின் சக்தி உச்சந்தலை ஆணியாய் காங்கிரஸை உலுக்கி இருக்கும் நிலையில் உங்களோடு நிறையப் பேச நினைக்கிறேன் உறவுகளே..

இந்த நேரத்தில் அண்ணன் காசி ஆனந்தனின் வரிகள் என் நெஞ்சுக்குள் உருமியாய் முழங்குகின்றன

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

இருந்தது போதும் இதுவரை செருப்பாய்!

கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா

கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்

செய்யக் களம் வாடா, கொடுமை தூள்படும்

சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

இருப்பாய் தமிழா நெருப்பாய்

என்கிற வார்த்தைகளை என் தொடருக்குத் தலைப்பாக வைத்திருப்பது ஏன் தெரியுமா? நெருப்பு ஒன்றுதான் எதனோடு சேர்ந்தாலும் அதன் சுயத்தை இழக்காமல் இருக்கும்.நெஞ்சுக்கூட்டுக்கு நெருப்பு வைத்து மரித்த தமிழர்களின் வயிற்றில் தரித்த தமிழர்களாக நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.. நெருப்பாய் தகிக்கிறது!

(பொறி பறக்கும்)

நன்றி: குமுதம்

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={82DC7EE6-40AE-4751-826B-A2707E5AD122}

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகளே!தேர்தல்களத்தில் தமிழ் இனத் துரோகிகளை கறுவறுத்துவிட்டு களத்தைத் தாண்டி இன்னும் வீடுவந்து சேரவில்லை. அதற்குள் என் மீது வீண் பழி விழுந்திருக்கிறது. கொஞ்சமும் உண்மைக் கலப்பில்லாமல் ஒரு பெண்மை என்மீது பொய் வழக்குப் போட்டிருக்கிறது. அணுகுண்டுக்கே அஞ்சாதவன் இந்த சீமான்! பெண் குண்டுக்கா பதுங்கி ஒளியப் போகிறான். இந்த தந்திரம் எல்லாம் எனக்கு எம்மாத்திரம்?

என் தம்பிகளுக்குத் தெரியும், இந்த அண்ணன் எப்படிப்பட்டவன் என்று. என் சொந்தங்களுக்குத் தெரியும் இவன் எந்த லட்சியக் கனவோடு புறப்பட்டவன் என்று. எங்களின் போர்க் கனவுக்கு முன்னால் இந்தக் காதல் கனவுக்கு கணக்குக் கூட செல்லாது.

தேசிய இன விடுதலைக்காக கடந்த சில ஆண்டுகளாய் ஈழ மண்ணில் கொத்துக் கொத்தாய் என் தொப்புள்கொடி உறவுகள் செத்துமடிவதைப் பார்த்து இரவுத் தூக்கம் பிடிக்காமல் துன்பப்பட்டுக் கிடக்கிறேன். நானா துணைக்கு ஆள் தேடப்போகிறேன்? கண்ணை மூடினால் கனல் நெருப்பில் வெந்து சாவும் என் சொந்தங்களின் கதறல் ச த்தம் என்னை நித்தம் சாகடித்துக் கொண்டிருக்கிறதே; இதைக் கேட்டும் ஒருவன் காதலிப்பானா? செத்த உடம்பிற்கு சம்சாரம் ஒரு கேடா? கேள்வி கேட்கவும் புகாரை நீ ட்டவும் கொஞ்சமாவது பொருத்தம் வேண்டாமா?

இன்றைக்கு காவல் நிலையம் போய் புகாரை நீட்டியவர்கள்,ஒரு முறையாவது என் முகத்திற்கு முன்னால் கைவிரல் நீட்டி நியாயம் கேட்டு களங்கி நின்றிருப்பார்களா.. இல்லையே?காதல் நடந்திருந்தால்தானே பின்னால் நியாயம் கேட்க முடியும்?அடிப்படை ஆதாரம் இல்லாத வழக்கை எப்படி எழுப்ப முடிகிறது இவர்களால்!

இனமானத்தை காக்கத் துடிக்கிறானே.. இவன் மானத்தை கேவலப்படுத்திப் பார்ப்போம் என்றால்.. மக்கள் மயங்கிவிடுவார்களா? ஊர் ஊராய் உங்களை உதைத்து வெளியேற்றி இருப்பவர்கள் அவர்கள்தானே.. அவர்களுக்குத் தெரியும் இது ஈன புத்தி என்று.எத்தனை வழக்குகள் போட்டாலும் புழுவாய் சுருண்டாப் போவோம்? புயலாய் எழுந்திடுவோம்! பாட்டன் பெரியாரின் பிள்ளைகள் நாங்கள். பொசுக்கென்று நசுக்க நாங்கள் ஒன்றும் மூட்டைப்பூச்சியில்லை. வீரத் தமிழச்சியின் உயிர் மூச்சு! காற்றில் கந்தகமாய் கலந்திருப்போம்..பகைவனைப் பார்த்துப் பார்த்து ஒன்றுவிடாமல் ஒழிப்போம்!

என் மீது குற்றம் சாட்டியிருக்கும் இந்தப் பெண்ணை என் படங்களில் நடிக்கவைத்தபோது கூட நான் நெருங்கிப் பேசியதில்லையே? நான் போய் அவரின் காட்சிகளை அவருக்கு விளக்கிக் காட்டியதில்லையே? என் தம்பிகள்தான் அந்த வேலைகளைப் பார்த்தார்கள். அப்படி இருக்க அவசர அடியில் இந்தப் புகார் புறப்பட்டதற்கு யார் காரணம்? இந்த சதிக்கு பின்னால் சவுக்கை சுழற்றுபவர்கள் யார்?எங்கிருந்து யாரால் ஏவப்படுகிறார்? எல்லாம் எனக்குத் தெரியும். வழக்கை வழக்காக சந்தித்து நியாயத் தை நீதிமன்றத்தில் நிரூபித்துக்காட்டினால் இவர் என்ன செய்வார்?

இது ஏதோ சீமான் மீது போடப்பட்ட முதல் குற்றச்சாட்டில்லை. ஆறு வழக்குகளுக்கு அப்புறம் அவர் தேடிப்பிடித்திருக்கும் ஆள் இந்த சீமான்! இது போதாதா பொய் வழக்கு என்று நிரூபிக்க?

ஊர் ஊருக்கு ஒரு வழக்கை என் தம்பிகள் அவர்மீது போடுவார்கள்; நியாயம் கேட்பார்கள்.மான நஷ்ட ஈடு கேட்டு நானே நீதிமன்றம் போவேன்! ஒரு பெண்னை வைத்து எது வேண்டுமானாலும் செய்து விடலாம் என்பவர்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டுவேன்?

‘தன் அக்காளின் குழந்தையைப் பிடுங்கி வைத்துக்கொண்டு அவரது கணவர் மிரட்டுகிறார் உதவி செய்யுங்கள்’என்று என்னிடம் வந்து முறையிட்டார். பாவம் ஒரு பெண் துன்பப்படுகிறாரே என்று உதவ முயற்சித்தேன். ராமாத்தாள் அவர்களிடம் பேசி ஏதாவது செய்யச் சொன்னேன். தோழர் சங்கமித்ரன் கவனத்திற்குக் கொண்டு போனேன். தடா சந்திரசேகர் இந்த வழக்கை சட்டரீதியாக சந்தித்தார்.அவரின் உதவி வழக்கறிஞர்கள் வழக்கை ஏற்றார்கள்.இந்த விஷயம் எல்லாம் திரைமறைவிலா நடந்தது? நாலு பேர், நாற்பது தம்பிகள் தன் பிரச்னையாக நினைத்து ஓடிவந்து நின்றார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்புறம் ‘ஒருமுறை வீட்டு வாடகைக்கு காசில்லை’ என்று கதறினார். திருச்சி, சிவகங்கை என்று பல ஊர்களில் இருந்த என் தம்பிகள் அவரின் வங்கிக்கணக்கில் காசை கரை சேர்த்தார்கள்... அந்தத் தம்பிகள் செய்த உதவிக்கு ந ன்றிக்கடனா இது? நீங்களே சொல்லுங்கள்... நல்ல மனநிலையோடு இந்தப் பெண் இதைச் செய்திருக்க முடியுமா?

இனப்பகையை ஒழிக்க ஓடி ஓடி களமாடிய என்னை தேசத்துரோகி என்று சிறைக்குள் சிக்க வைத்தார்கள்.கம்பிகளுக்குப் பின்னால் கிடந்தவன் காதலிக்க முடியுமா? சிறையைக் கண்டு அடங்கிவிடுவேன் என்று நினைத்தார்கள். பீரங்கிப் படைகள் எழுப்பும் பெரும் நெருப்பைக் கண்டே களங்காதவன் சிறைக்கா சிதறிவிடப்போகிறேன். தைரியமாய் நின்று வழக்கை உடைத்தேன்.என் இனத்தை அழித்தவன் மீது மேடையில் சினத்தைக் கக்கிய காலத்தில் காதல் செய்தேன் என்றால் மடையனும் மன் னிக்கமாட்டானே? பல நாள் சிறைவாசம். இங்கே எங்கே வந்தது பெண் நேசம்?அவரின் அக்காள் பிரச்னைக்குப் பின்னால் ஒன்றரை வருடமாய் அவருடன் பேச்சு வார்த்தையே இல்லை.

இந்த சின்னத்தனங்களுக்கு எல்லாம் உடைந்து விடக் கூடியவன் இல்லை நான். பகைவனைப் பார்த்து பயப்படுபவர்கள் அல்ல நாங்கள். கங்குகளாய் கனன்று நிற்பவர்கள். புயலைக் கண்டே புண்படாத எங்கள் நெஞ்சம் இந்த புகாரைக் கண்டா நடுநடுங்கப் போகிறது?

விழவிழ எழுவோம்!

ஒன்று விழ

ஒன்பதாய் எழுவோம்!

(பொறி பறக்கும்)

-குமுதம்

  • கருத்துக்கள உறவுகள்

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என சீமான் எப்படிச் சொல்ல லாம்?’’

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே என்னைத் திணறடிக்கத் துடித்த கேள்வி இது. ஈழத்தில் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த நேரத்திலும், ‘இலையை எப்படி ஆதரிக்கலாம்?’ என்கிற கேள்வி என் மீது பாய்ச்சப்பட்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மையார், ‘தனித் தமிழீழம்தான் ஒரே தீர்வு’ என முழங்கினார். ‘‘ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகள் கண்டு துடித்துப் போனேன். ஈழப் பிரச்னைக்குத் தீர்வு காண இந்திய ராணுவத்தை அனுப்ப நடவடிக்கை எடுப்பேன். பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசை பிரித்துக் கொடுத்ததுபோல் தனி ஈழத்துக்கும் தீர்வு காண்பேன்’’ என அவர் அறிவித்தபோது தமிழகமே திரண்டு கைதட்டியது. ஈழத்துச் சொந்தங்கள் நம்பிக்கை கீற்று முளைத்த மகிழ்வில் விடிவுக்கு ஏங்கினார்கள்.

ஆனால், இங்கிருக்கும் சிலரோ, ‘அம்மையார் அரசியல் லாபத்துக்காக திடீர் அக்கறை காட்டுகிறார்’ என்றார்கள். அப்போது நான் ஒரு மேடையில் சொன்னேன்.

‘‘அந்த அம்மையார் அரசியலுக்காக ஈழம் பற்றிப் பேசுகிறார் என்றால், நீங்கள் அதற்காகக் கூட ஈழத்தைப் பற்றி பேச மறுக்கிறீர்களே... இது எந்த ஊர் நியாயம்?’’ என கேள்வி எழுப்பினேன்.

அதுகாலம் வரை தலைவர் பிரபாகரனுக்கோ தனித் தமிழீழத் தீர்வுக்கோ ஜெயலலிதா அம்மையார் எதிராக இருந்தவர்தான். ஆனால், ரத்தமும் சதையுமாக நம் சொந்தங்கள் தத்தளித்து நின்றபோது சிங்கள அரசின் சிண்டைப் பிடித்தவர் அவர். எங்களின் இழவு வீட்டுக்கு ஆறுதல் சொல்ல வந்த உறவு! அவரை ஆதரித்ததில் என்ன தவறு? காங்கிரஸை

வீழ்த்த என் கைக்கு கிடைத்த ஆயுதம், இலை.

பெரியகுளத்தில் பிரசாரத்தை முடித்துவிட்டு அறைக்குத் திரும்பிய நேரம். என் அண்ணன் ரவி, ‘யாரோ சூசைன்னு ஒருத்தர் பேசினார். பத்து நிமிஷம் கழித்து பேசச் சொன்னேன்’ என்றார் என் அலைபேசியை நீட்டியபடி. ஒரு கணம் துடித்துப் போனேன். நினைத்த நேரத்தில் எல்லாம் அலைபேசியில் பேச என் பக்கத்து ஊர் நண்பரா சூசை? என் தலைவன் பிரபாகரனின் கடற்படைத் தளபதி. ஆயுதங்களை மட்டுமல்ல... அன்பைச் சுமக்கவும் அகன்ற மார்பு கொண்ட வல்லமைக்காரன். எந்தக் குரலைக் கேட்பதற்காக நான் ஏங்கிக் கிடந்தேனோ... அந்தக் குரல் சில நிமிடங்களுக்கு முன்னால் என் அலைபேசியில் ஒலித்தும் கேட்க முடியாமல் போய்விட்டது. அலைபேசியை இறுகப் பற்றியபடி தவிப்போடு காத்திருந்தேன். அழைப்பு வந்தது. ‘‘அண்ணா தலைவர் எப்படி இருக்கிறார்?’’ தவிப்போடு கேட்கிறேன்.

‘‘‘என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் எனச் சொல்லுங்கள்; சீமானை நம்பிக்கையோடு களமாடச் சொல்லுங்கள்’ என தலைவர் சொல்கிறார்’’ என்றார் சூசை அண் ணன். பேசும்போது இருமிக்கொண்டே இருந்தார்.

‘‘நச்சுக் குண்டுகளை ஆமிக்காரன் வீசிக்கொண்டே இருக்கிறான். திரும்பிய பக்கம் எல்லாம் புகை. அதான் இருமல் தீரலை. எம்மைப் பற்றி விசனப்படவேண்டாம். நீங்கள் கவனம்... கவனம். பரப்புரையின்போது சோனியாகாந்தி அம்மையாரையோ கலைஞர் அய்யாவையோ விமர்சிக்காதீர்கள். அது தவறு. நமது சோகங்களைச் சொன்னால் போதும். கவனம்!’’ எனச் சொன்னவர் இறுதியாக ‘‘மயிலாடுதுறையில் மணிசங்கர் ஐயரும் திருச்சியில் சாருபாலாவும் முந்துவதுபோல் தகவல் வருகிறது. அங்கே பரப்புரையைப் பலப்படுத்துங்கள்!’’ என்றார்.

எங்களுடைய பயணத் திட்டத்தில் திருச்சியும் மயிலாடுதுறையும் அப்போது இல்லை.இங்கே உள்ள ஆட்களின் உளவுத் தகவல் வேண்டுமானால் தப்பலாம். எங்கள் அ ண்ணன்களின் உளவுத் தகவல் மிகச் சரியாக இருக்கும். அதனால் திருச்சியிலும் மயிலாடுதுறையிலும் இலையை ஆதரித்து தீவிர பரப்புரை செய்தோம். மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் அந்த இரு தொகுதிகளிலும் இலை வென்ற போதுதான் புலிகளின் புலனாய்வு வல்லமை புரிந்தது.

காங்கிரஸ் கருவறுக்கப்படுகிற காலம் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே தொடங்கி விட்டது. ஆனால் அப்போது, ‘‘தேர்தல் நேரத்தில் ஈழம் குறித்துப் பேசிய ஜெயலலிதா இனிமேல் பேச மாட்டார். அவருடைய பசப்புரையை சீமான் போன்றவர்கள் பரப்புரையாக நம்பி விட்டார்கள்’’ எனச் சொன்னார்கள் பலரும்.

அதனாலோ என்னவோ... இப்போதைய சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது மரியாதைக்குரிய ஜெயலலிதா அம்மையார் ஈழம் குறித்து எதுவும் பேசவில்லை. அவர் ஈழம் குறித்து வாய்திறக்கவில்லை என வருத்த புராணம் பாடியவர்கள் கூட,கடந்த தேர்தலில் ஈழம் குறித்துப் பேசாததுதான் வரலாற்றுத் துயரம். ஈழம் யுத்தத்திலும் ரத்தத் திலும் நனைந்து 500 ஆண்டுகள் ஆகிவிடவில்லை. வரலாற்றை தேடித் துளாவுகிற அளவுக்கு வருத்தங்கள் காலம் கடந்து போய் விடவில்லை. நம் இனத்தின் துயரங்கள் இன்றைக்கும் அங்கே தொடர்கின்றன. பசியும் பட்டினியும் கொலைகார அரசால் குரூரமாக ஏவிவிடப்படுகிறது. உறவுகளைத் தேடும் ஒப்பாரிகள் ஓயவில்லை. விசாரணை என்கிற பெயரில் இழுத்துச் செல்லப்படுபவர்கள் இன்னமும் திரும்பவில்லை. வக்கிரத்தை இறக்கி வைக்கும் வடிகாலாக நம் ரத்த உறவுகள் பாலியல் வல்லுறவுகளுக்கு பலியாக்கப்படுவது தீரவில்லை.

இந்தத் துயரங்களை கடந்த தேர்தலில் நம்மைத் தவிர வேறு யாராவது இங்கே எடுத்து வைத்தார்களா? தொண்டைத் தண்ணீரின் கடைசி ஈரம் காயும் வரை நான் கதறிய போதும், ஈழப் பிரச்னையோ மீனவர் விவகாரமோ இந்தத் தேர்தலைப் பாதிக்காது என பரப்பினார்கள். ஒற்றை நாவாக ஒலித்த துயரமும் துடிப்பும்தானே இன்றைக்கு காங்கிரஸைக் கருவறுத்தது. ‘உறவுகளைப் பற்றிப் பேச இங்கே ஒருவருமே இல்லையே..’ என நாம் கதறிய போதும், ‘அதையே பேசுறார்’ என இந்தத் தம்பிக்குத் தடைபோட்ட நாக்குகளுக்கு மட்டும் பஞ்சமில்லை.

ஆனால், தேர்தல் முடிந்த பிறகு, ‘‘ராஜபக்ஷேவும் அவருடைய சகாக்களும் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட வேண்டியவர்கள். இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுக்காவிட்டால் போரை நடத்தியதே இந்தியா தான் என்கிற கருத்து உறுதியாகிவிடும்!’’என எச்சரித்தார் ஜெயலலிதா.

வெற்றி அறிவிப்பு வெளியான நாளிலும் சிங்கள அரசுக்கு எதிரான கருத்துக்களை தமிழ் மக்களின் ஒருமித்த பிரதிநிதியாக இருந்து துணிச்சலாக எடுத்துரைத்தார்.

அதே துணிவுடன் இன்று தமிழகத்தின் முதலமைச்சரானவுடன் சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றியுள்ளார். இது உலகளாவிய தமிழர்களுக்கும் தமிழகத்து மைந் தர்களுக்கும் அவர் செய்திருக்கும் மகத்தான பணி! இதன்மூலம் தமிழர்களின் தன்மானம் உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலக மாற்றம், சமச்சீர் கல்வி ரத்து, அதிகாரிகள் பணிமாற்றம் ஆகியவற்றை வைத்து ‘அவர் இன்னும் மாறவில்லை’ என சிலர் அனுமானம் சொல் கிறார்கள்.

என்னைப் பொறுத்தமட்டில் பழைய நிலைப்பாட்டில் இருந்து அவர் மாறிவிட்டதாக உறுதியாக நம்புகிறேன். தான் போகும்வரை யாரும் போக முடியாதபடி போக்குவரத்தை நிறுத்தி வைத்தவர், இன்றைக்கு தான் போவதே தெரியக் கூடாது என்கிற அளவுக்கு மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார். காலில் விழுந்து கிடந்தவர்களை கண்டுகொள் ளாமல் நகர்ந்த காலம் போய், காலில் யாரும் விழக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கும் காலம் உருவாகி இருக்கிறது. ஆடம்பரமே அழகு என்கிற எண்ணம் மாறி எளிமையின் சின்னமாக அரசு விழாக்கள் அரங்கேறுகின்றன. தங்க நகை அணிவதற்கான காரணத்தைக் கூட மக்கள் மன்றத்தில் வைக்கிற அளவுக்கு அவருடைய மனப்போக்கு மாறி இருக்கிறது.

நீங்களே சொல்லுங்கள்... இவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள் இல்லையா?

- பொறி பறக்கும்

தொகுப்பு : கடற்கரய்

படங்கள் : ஆர்.சண்முகம்

-குமுதம் 22.06.11

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.