Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலையும் இறுதிச்சடங்கில் அரசின் தலையீடும்: சிறிலங்காவில் சுதந்திரத்தை ஒடுக்கும் புதிய வடிவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

22 ஜூன் 2011

ஜே.சி.வெலிஅமுன பகுதி 2 - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்

இறுதிச் சடங்கும் அரச கைப்பற்றுகையும்

அனேகமாக, அரசினுடைய நடவடிக்கைகளில் ஆகத் திகைப்பு ஊட்டுவதாக, கொல்லப்பட்டவரின் 'இறுதிச் சடங்கு' இருக்கிறது.

ஒரு சனநாயக சமூகமானது அந்த இறுதிச் சடங்குகளில் என்ன நடந்தது என்பதை மறக்கக் கூடாது என்பது கட்டாயமானதாகும். மீண்டும் சொல்கிறேன், கட்டாயமானதாகும். குறிப்பாக, இனி வரப் போகும் காலங்களில், இதுதான் நடக்கப் போகிறதாக இருக்கலாம் என்பதனால்தான் அதனை மறைக்க வேண்டாம் என்கிறேன்.

இறுதிச் சடங்குகளை அரச ஊடகங்கள் கையாண்ட முறையானது, போர்ச் செய்திகளை அவை கையாண்ட முறையிலிருந்து வேறுபட்டதாக இல்லை. அச் செய்திகள் அரசுக்கு ஆதரவானதும் ஒரு பக்கச் சார்பானதாகவும் இருக்கிறது. அந்த வகையில், காரணம் கூறமுடியாத படையினரின் பிரசன்னமானது, - ஆயிரக்கணக்கான படையினரின் - பிரசன்னமானது, அது ஒரு பயங்கரவாத தலைவரின் இறுதிச்சடங்கா? என்ற கேள்வியை எழுப்புகிறது. குழப்பங்கள் ஏற்படுவதைத் தடுக்க அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால், ஒரு தனிப்பட்ட இறுதிச் சடங்கிலே இந்த அளவுக்கு தலையிடுவதற்கான உரிமை அரசுக்கு இருக்கிறதா என்பது சந்தேகத்துக்கிடமானதே. நன்கு திட்டமிடப்பட்ட ஒரு 'உளவியல் நடவடிக்கை' இது எனப் பலரும் கூறுவதை நான் கேட்டேன் (எனினும் இப்பதம் பொருத்தமானதா என நிச்சயமாக தெரியவில்லை). படைஉறுப்பினர்களுடன் மோதிக்கொள்ளாமல் அங்குமிங்கும் நகர முடியவில்லை. யாருடனாவது பேசமுயன்றால் அவ்வுரையாடலை கேட்டு அவதானிக்கவென யாராவது நெருங்கி வந்தார்கள். அரசு குற்றத்துக்குப் பலியான ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்த அங்கே இருப்பதற்கே மனமில்லாது மக்கள் இருந்தார்கள்.

இறுதிச்சடங்குகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான வரையறைகள் நீதிமன்றினால் வழங்கப்பட்டிருப்பதாக செய்தித்தாள்கள் தெரிவித்தன. ஒரு நீதிவானுக்கு, மரணச்சடங்குகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை, எந்தச் சட்டபிரிவு வழங்குகிறது என்று இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வழமையாக, குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் ஒரு நீதிவானுக்கு ஒரு விசாரணையை நடத்தவும் விசாரணை நடத்தும் நீதிவான் குற்றம் நடந்த இடத்துக்கு வருகை தருதல், மரணத்துக்கான காரணத்தை பிரகடனப்படுத்துதல், உடலை குடும்ப உறுப்பினரிடம் கையளித்தல் போன்ற, சம்பவங்கள்; தொடர்பான கட்டளைகளை வழங்கவும் அதிகாரம் உள்ளது. இந்த நீதிவான் அல்லது மரணவிசாரணை அதிகாரி உடலை எரிக்காமல் அவர்களால் அடையாளம் காட்டப்படுகின்ற மயானத்தில் புதைக்கும்படி அறிவுறுத்தல்களை வழங்க முடியம். ஆனால் ஒரு மரணச்சடங்கில் ஆற்றப்படக்கூடிய உரைகளின் எண்ணிக்கை, உடலை எங்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்று வரையறை செய்யும் நீதிமன்ற ஆணை இதற்கு முன் வழங்கப்பட்ட சந்தர்ப்பம் எதையும் என்னால் நினைவு கொள்ள முடியவில்லை. இந்த நீதிவான் ஆணையினுடைய சட்டபூர்வ தன்மை பற்றிய காத்திரமான கல்விசார் கலந்துரையாடல் இடம் பெறுமென நம்புவோம்.

மரணச் சடங்கை கட்டுப்படுத்துவதற்கான அரசினுடைய ஒட்டுமொத்த நடவடிக்கைகள், ஆகக்குறைந்தது இரண்டு குறுகிய கால இலக்குகளை கொண்டிருப்பதாக தோன்றியது. முதலாவதாக, அரசினுடைய அதிகாரத்துக்குச் சவால் விடுக்கக்கூடிய ஒரு நிகழ்வைத் தடுத்தல். இரண்டாவதாக மரணச்சடங்கின் போதான கருத்து வெளிப்படுத்தும் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துதல். எது எப்படியான போதிலும் இதனுடைய விளைவாக 'அரச கட்டுப்பாட்டிலான மரணச்சடங்கு' அங்கே நிகழ்ந்தது. இது சிறிலங்காவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய புதிய பாடமாக இருக்கிறது. 'நாங்கள் உங்களை கொல்வோம். பின்பு எங்கள் பாணியில் உங்களைப் புதைப்போம்'. மரணசடங்கின்போது நாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் வைத்துப் பார்த்தால், திருச்சபையால் (குறிப்பாக பங்குத்தந்தையால் ) வகிக்கப்பட்ட பாகம் கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமாக இருக்கிறது.

தங்களுடைய நேர்மை குறித்து நல்ல வரலாற்றை கொண்டிருக்கும் திருச்சபையினுடைய இந்தச்செயல், மிகவும் அசாதாரணமானது. இந்த முறையிலான திருச்சபையின் தலையீட்டின் மூலம் யார் நன்மை பெறுவார்கள்? ஒரு குடும்ப உறுப்பினர் ஒரு சத்தியக்கடதாசியை வழங்கியுள்ளார் என்ற கதையின்மூலம், ஒரு மரணச்சடங்கை, இப்படி அரசு கைப்பற்றுவதை நியாயப்படுத்த முடியாது. பங்குத்தந்தை அல்லது திருச்சபை வழங்கிய ஆதரவு, அற முறையற்ற, பக்திபூர்வமற்ற, நடத்தையை துடைத்து அழித்து விடமுடியாது.

சகிப்பு தன்மை இல்லாமை மற்றும் அதிருப்தியை தணிக்க அதிகார வரம்பை மீறிச்செல்லுதல்:

சிறிலங்காவிலான சட்ட நடைமுறைப் படுத்தும் செயற்பாடுகள், அரசினுடைய எந்தச் சட்டபூர்வமற்ற நடவடிக்கையையும் தண்டனை பயமில்லாமல், இலகுவாக நியாயப்படுத்தக்கூடிய அளவுக்கு, அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இன்னுமொரு சிக்கல் என்னவென்றால், சட்டநடைமுறைப் படுத்தலானது, இப்பொழுது. சிரியா, எகிப்து மற்றும் லிபியாவில் போலவே, படையணி நடவடிக்கைகளுடன் கலந்துள்ளது. படையணி நடவடிக்கைகளுக்கும் பொலிஸ் நடவடிக்கைகளுக்குமிடையே, தெளிவான வேறுபாட்டை நிர்ணயித்திருக்கும் சனநாயகம், செழித்தோங்க வாய்ப்பான சூழலாக இந்தச் சேர்மானம், நிச்சயமாக இல்லை. தொடர்ச்சியான அவசரகால நிலைமைகளும் ஒன்றன்பின் ஒன்றாக வந்த அரசுகள் மேற்கொண்ட பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடையே ஒரு வித்தியாசமான மனப்போக்கை உருவாக்கி விட்டிருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

எனினும், இவ்வாறான அவசரகால நிலைமைகளின் கீழ், அரசியல் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை, இலகுவாகச் சரிசெய்ய முடியாது. அவர்கள் தங்களிடம் 'பெரும்பான்மை பலம்' இருப்பதாக நம்புவதுதான் இதற்குக் காரணமாகும். அவர்களுக்கு ஒரு தன்நல மேம்பாட்டு நாட்டமும் இதில் உள்ளது. ஓய்வூதிய சட்ட மூலத்துக்கு எதிரான வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு ஆhப்;பாட்ட அலைகள் முதலியவற்றால் உருவாக்கப்படக்கூடிய அரசியல் நிலைபேறற்ற தன்மையைக் காரணம் காட்டி, சுடுகலன்களின் பயன்பாட்டை, சிலவேளை, அரசு நியாயப்படுத்தக்கூடும.; இது, ஒரு சனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப் படக்கூடியது அல்ல. சுடுகலன்களின் பயன்பாடு தொடர்பான ஐ.நா. கோட்பாடுகளின்படி, 'இந்த அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து விலகிச் செல்வதை நியாயப்படுத்த, உள்ளக அரசியல் நிலைபேறின்மை, அல்லது வேறு எந்த ஒரு விதிவிலக்கான சூழ்நிலை போன்றவைகளைப் பயன்படுத்தக்கூடாது.'

ஐ. நாவினுடைய அடிப்படைக் கோட்பாடுகளின்படி சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளால் வலு மற்றும் சுடுகலன்கள், எழுந்தமான முறையிலும் துஷ்பிரயோகம் செய்யும் வகையிலும் பயன்படுத்தப் படுவதானது சட்டத்தின் கீழான குற்றவியல் குற்றமாக கருதப்படுவதை உறுதிசெய்யும் கடப்பாடு அரசுகளுக்கு உள்ளது. சட்ட நடைமுறைப்படுத்தல் துறை மேலதிகாரிகள், அவர்களது ஆணைக்கு கீழுள்ள சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள், சட்ட விரோதமான முறையில் வலுவையும் சுடுகலன்களையும் பயன்படுத்துகிறார்கள் என அறிந்திருந்தும் அல்லது அறிந்து கொண்டிருக்க வேண்டியிருந்தும், அதனைத் தடுக்க அல்லது நிறுத்த அல்லது அறிக்கை தர, தனது அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்தையும் செய்யத் தவறினால், அவ்வாறான அதிகாரிகளை, அதற்குப் பொறுப்பாக்குவதை, அரசுகளோ அல்லது சட்டமுறைப்படுத்தல் முகவரமைப்புகளோ உறுதிசெய்ய வேண்டும் என்றும் இந்த கோட்பாடுகள் கூறுகின்றன.

தேசிய, சர்வதேசிய சட்டங்களிலே, சட்ட விரோதமான கட்டளைகள் மற்றம் சட்டவிரோத கட்டளைகளை அலட்சியப்படுத்தும் உரிமை ஆகியவை தொடர்பான சட்டம் மிகத்தெளிவாக இருக்கிறது. புகழ் பெற்ற கதிர்காம அழகுராணி கொலை வழக்கை (விஜயசூரிய எதிர் குயின் 77 Nடுசு 25) இலங்கையர்கள் மறந்துவிட முடியாது. அந்த வழக்கிலே, சிறிலங்காவின் குற்றவியல் மேன்முறையீட்டு நீதிமன்றம், ஒரு கொலையை செய்வதற்கு 'மேலிடத்துக்கட்டளை'யை காரணமாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தது. இந்த வழக்கிலே இராணுவ அதிகாரி ஒருவர் தனது மேலதிகாரியின் கட்டளைப்படி, தடுத்து வைக்கப்பட்டவரை சுட்டுக் கொன்றிருந்தார். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒருவரை கொல்வது சட்டவிரோதமானது என எந்தச் சட்டநடைமுறைப்படுத்தல் அதிகாரிக்கும் தெரியும். இந்த வழக்கில் முடிவு செய்யப்பட்டபடி இராணுவச் சட்டம் சரத்து 100 இன்படி, படைய சட்டங்களுக்கு உட்பட்டவர்கள், சட்டபூர்வமான ஆணைகளுக்கே கீழப்;படிய வேண்டும் (சட்டவிரோதமான ஆணைகளுக்கு அல்ல). இந்த சட்டநிலைப்பாடு பொலிசிற்கும் அதே அளவில் பொருந்தும.; சர்வதேச குற்றவியல் சட்டமும் இதிலிருந்து வேறுபட்டதல்ல. ஐநா அடிப்படை கோட்பாடு இல. 26 ஐ இங்கே தருகிறேன். 'குறித்த சட்டநடைமுறைப்படுத்தல் அதிகாரி, ஒரு நபர் காயமடைதலை அல்லது மரணமடைதலை விளைவிக்கக்கூடிய வலுவை அல்லது சுடுகலனை பயன்படுத்துதலை மேற்கொள்ளும்படியான ஆணையானது, சட்டவிரோதமானது என்று அறிந்திருந்து, அதற்கமைவாக நடக்க மறுப்பதற்கு, நியாயமான அளவில் சந்தர்ப்பங்களும் இருந்தால,; மேலதிகாரியின் ஆணைக்கு பணிதல் என்பது குற்றச்சாட்டுக்கு எதிரான தன்னிலை விளக்கமாக ஏற்கப்படக்கூடாது. எப்படியாயினும், இக் குற்றத்துக்கான பொறுப்பு, சட்டவிரோதமான ஆணைகளை வழங்கிய உயர் அதிகாரிகளையே சாரும்.

சனக்கூட்டத்தை நோக்கிச் சுட்ட அதிகாரியின் உள்நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்று யாரும் வாதிக்கக்கூடும். சுடுவதற்கு ஆணையிட்டவர்களின் உள்நோக்கம் இந்தளவிற்கு தெளிவற்றதாக இருக்க முடியாது. இந்த கொலைக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளையும் அரசினுடைய கடந்த கால நடத்தையையும் வைத்துப் பாhத்தால், அடிப்படையில் இது பொதுமக்களின் அதிருப்தியைக் கட்டுப்படுத்துவதற்காகவே இடம் பெற்றிருப்பதான முடிவுக்கு ஒருவர் இலகுவாக வரமுடியும். (தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளடங்கலான) பொதுமக்களுக்கு, எதிர்ப்பு பேரணிகளை நடத்துவது மற்றும் வேறு செயல் வழிகளில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் கடமை உள்ளது. இந்த கட்டுரையை முடிவுக்கு கொண்டுவர முன்னதாக, இங்கு குறிப்பிடுவதற்கு பொருத்தமானதாக காணப்படும், தெளிவான அரசியலமைப்பு ரீதியான கோட்பாடு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசுக்கு விருப்பமில்லாத அமைதியான கருத்து வெளிப்பாட்டை, குற்றவியல் செயற்பாடு ஆக்கவோ, எதிர்ப்பு பேரணி நடத்துவோரை குற்றவாளிகள் போல் நடத்தவோ, அரசுக்கு அதிகாரம் இல்லை.

பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரங்கள் கொண்டிருக்கும் அரசியலமைப்பு ரீதியான முக்கியத்துவம் தொடர்பாக, நீதியரசர் பிறாண்டெய்ஸ் (வைற்னி எதிர் கலிபோணியா) இன் கருத்தை இங்கு மேற்கோள்காட்டி, கட்டுரையை முடிக்க விரும்புகிறேன். ' எமது சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்கள், ஒரு அரசினுடைய இறுதி இலக்காக மக்கள், தங்கள் தங்கள் வினைத்திறன்களை அபிவிருத்தி செய்யும் சுதந்திரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அந்த அரசினுடைய ஆட்சியில் ஆராய்ந்து தீர்மானிக்கிற சக்திகள், கொடுங்கோலாட்சி சக்திகளை மேலாட்சிகொள்ள வேண்டும், என்றும் நம்பினார்கள். சுதந்திரத்தை ஒரு இறுதி இலக்காகவும் ஒரு வழியாகவும் மதித்தார்கள். நீங்கள் நினைக்கிறபடி சிந்திக்கவும் நீங்கள் சிந்திக்கிறபடி பேசவும் சுதந்திரம் இருப்பதென்பது அரசியல் உண்மையை கண்டுபிடிக்கவும் பரப்புவதற்கும் இன்றியமையாத வழி என்று அவர்கள் நம்பினார்கள். பேசுவதற்கும் ஒன்றுகூடுவதற்கும் சுதந்திரம் இல்லாவிட்டால் கலந்துரையாடல் பயனற்றதாகிவிடும்...என்றும், செயலூக்கமின்றி இருக்கும் மக்கள்தான், சனநாயகத்துக்கு ஆகப் பெரிய அச்சுறுத்தல்; என்றும், பகிரங்க கலந்துரையாடல் என்பது ஒரு அடிப்படைக் கோட்பாடாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் நம்பினார்கள்.'

எமது தலைவர்களும், வாசகர்களும் இந்த மாண்புமிகு நீதியரசரான, நீதியரசர் பிறாண்டெய்ஸின்;, மேற்படி தீர்ப்பின் ஒரு பகுதியான, கீழ்வரும் பந்தியை, மீண்டும் மீண்டும் வாசிப்பார்கள் என்று மனப்பூர்வமாக நான் எதிர்பார்க்கிறேன்.

'எமது சுதந்திரத்தை வென்று தந்தவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள் அரசியல் மாற்றுங்களுக்குப் பயப்படவில்லை. கடுமையான தாக்கம் ஏற்படலாம் என்ற பயம், பேச்சு சுதந்திரத்தை ஒடுக்குவதை நியாயப்படுத்த முடியாது.'

-----

ஜே.சி.வெலிஅமுனு

சட்டத்தரணியும் ட்ரான்பரன்ஸி இன்ரநஷனல் என்ற அமைப்பின் முன்னாள் பணிப்பாளருமான ஜேசி.வெலிஅமுன லஞ்சம் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், நல்லாட்சி அடிப்படை உரிமைகள் போன்றவற்றுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவரது கருத்துக்கள் காரணமாக அரசின் அச்சுறுத்தலுக்கும் ஆளானவர். 2008இல் அவரது வீட்டின் மீது எறியப்பட்ட கிரனைட் தாக்குதலில் அதிஷ்டவசமாகத் தப்பியவர்.

கொலையும் இறுதிச்சடங்கில் அரசின் தலையீடும்: சிறிலங்காவில் சுதந்திரத்தை ஒடுக்கும் புதிய வடிவம் - ஜே.சி.வெலிஅமுன - பகுதி 1

21-06-2011= 1:50

'அபிப்பிராய பேதம்' என்ற குற்றமும் கொலைக்குற்றமும்:

கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு தொழிற்சாலை பணியாளராக இருந்த றொஷென் ஷானக ரத்னசேகரவின் கொலையானது, அமைதியாக எதிர்ப்பு பேரணி நடத்துவோர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்த சமிக்கை ஒன்றை நாட்டுக்குக் கொடுத்திருக்கிறது. காவல்துறையினரின் பொறுப்புக்கூறும் கடப்பாடு தொடர்பாக பரிச்சயம் கொண்டவர்கள், பொறுப்புக்கூறும் கடப்பாடு இல்லாமல் காவல்துறையினர் துப்பாக்கிகளையோ வெடிபொருட்களையோ கொண்டு செல்ல முடியாது என்பதனை ஏற்றுக் கொள்வார்கள். சுடுகலன்களையும் வெடிபொருட்களையும் யார் வழங்கினார்கள் என்பதையும் காவல்துறையினருக்கு, சுடுவதற்கான கட்டளையை யார் வழங்கினார்கள் என்பதையும் காவல்துறைப் பதிவுகள் வெளிப்படுத்த வேண்டும். காவல்துறையினர் காவல்துறை நிலையத்துக்கு திரும்பிய பின், தங்கள் செயற்பாடுகள் குறித்து நேர்மையான பதிவுகளைச் செய்ய வேண்டும்.

எனினும், நம்பத்தகுந்த ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டாலே, இவை எல்லாம் வெளியே வரும். நாட்டிலுள்ள ஆட்சியின் கடந்தகால வரலாறுகளையும், சட்ட நடைமுறைப்படுத்துபவர்களும், அரசியல் அதிகாரிகளும் தண்டனை குறித்த பயமின்றி, அவற்றை மீறிச் செயல்படுவதையும் அறிந்திருக்கும் நிலையில், எந்த ஒரு விசாரணையிலும் இவ்வாறான வெளிப்படையான தன்மை இருக்கும் என்பது குறித்து உண்மையான நம்பிக்கை கொள்ள வாய்ப்பு எதுவும் இல்லை.

சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளின் மிகை-வலுப் பயன்பாட்டின் சட்டபூர்வமான தன்மை மற்றும் குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்கள் தொடர்பான, அரசின் பதில் வினையின் தாக்கம் பற்றியும் சுருக்கமாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

இந்தத் தொழிலாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அடிப்படையாக அமைந்தது. அவர்களைப் பாதிக்கும் விடயம் ஒன்றுக்கு எதிரான சட்டபூர்வமான கோரிக்கையாகும். அவர்கள், முன்மொழியப்பட்டிருக்கும் ஓய்வூதியச் சட்ட மூலத்துக்கு எதிராகச் சவால் விடுத்தார்கள். தொழிலாளர் சேமநலநிதியம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் முறைமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்த சட்டமூலம் எந்த விதக் கலந்துரையாடலும் இல்லாமல் அமுலுக்கு வந்துள்ளது. அது குறித்து மாற்றுக் கருத்துக்களை மக்கள் கொள்வது ஒன்றும் வியப்புக்குரிய விடயமில்;லை. அரசின் முன்மொழிவுக்கு எதிரான கருத்து வெளியிடும் சுதந்திரத்தை சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீதியாக அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், உச்ச நீதிமன்றம் இந்த சட்டமூலத்துக்கான அங்கீகாரத்தை வழங்கி விட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசு, நாடாளுமன்றத்தில் இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றி விடலாம் என்பதில் நம்பிக்கையுடன் இருந்தது.

இப்போது கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தை மையமாகக் கொண்ட தொழிலாளர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிகழ்தியிருக்கிறார்கள். இந்த வலயத்துக்கு உள்ளும் அதன் சூழலிலுமான எனது தனிப்பட்ட அனுபவத்தின்படி (தொழிலாளர்களின் தொழிற்சங்கமயப்படுத்துதலை முன்னெடுக்கும் பிரதான பெண்கள் மையம் ஒன்றுடன் பலவருடங்களாக நான் இணைந்து பணியாற்றி வருகிறேன்.) இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தாமாகவே உருவானதோடு அதை நடத்துவதற்கான முடிவும் தொழிலாளர்களுடையதாக மட்டுமானதாகவே இருந்தது என்று நான் நம்புகிறேன். அரசு கூறுவதற்கு முரணாக, ஒரிரு அரசியல் கட்சிகளால் அவர்கள் கையாளப்பட்டார்கள் என்று நான் நம்பவில்லை. சுதந்திர வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்ட புதிதில், இந்தத் தொழிலாளர்கள், தொழிற்சங்க மயப்படுத்தப் பட்டிருக்கவில்லையெனினும் இப்போது மெதுமெதுவாக அப்படி ஆகி வந்தார்கள். சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிலாளர்கள், இந்த சட்ட மூலத்துக்கு எதிரான தங்கள் எதிhப்புகளை தெரிவிக்க, சட்ட பூர்வமான உரிமை பெற்ற குழுவினர்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கியே ஆர்பாட்டத்தை நடத்தினார்கள். இது ஒரு சனநாயக ரீதியான செயற்பாடு என்று யாரும் எடுத்துக் கொள்ளலாம். உலகமெங்கும் உள்ள தொழிலாளர்கள் தொடர்பு படும் சட்டபூர்வமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் வழமையான வடிவம் இதுதான். அந்த மக்களுடைய உத்தேசம் மிகத்தெளிவாக இருந்திருக்கிறது. அதாவது, ஓய்வூதிய சட்டமூலத்தை மீளப்பெறச் செய்து, தங்களுடைய சேமிப்புகளை 'அரசினால் நடத்தப்படும் கொள்ளை' என்று தாங்கள் அழைப்பதிலிருந்து காப்பாற்றுவதே அந்த உத்தேசமாகும். தொலைக்காட்சி சேவைகளின் ஆதார பதிவுகளும் சில சிங்களப்பத்திரிகைகளில் வெளிவந்த கண் கண்ட சாட்சிகளின் கூற்றுகளும் பொலிசாரினால் தொழிலாளர்கள் தாக்கப்படும்வரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெற்றுக் கொண்டிருந்ததை எடுத்துக் காட்டுகின்றன.

ஒரு கட்டத்திலே சுதந்திர வர்த்தக வலயத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த பொலிசார், தொழிலாளர்கள் கெஞ்சக் கெஞ்ச ஈவிரக்கமின்றித் தாக்கியிருக்கிறார்கள். இன்னொரு பத்திரிகையில் வெளிவந்த நேரடியாக கண்டவர் ஒருவரின் கூற்று, அப்போதைய நிலைமையைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. 'சத்தங்களைக் கேட்டவுடன் நாங்கள் ஒடிப்போய் ஒளிந்து கொண்டோம். ஆனால் பொலிசார் தொழிற்சாலைக்குள் புகுந்து எங்களை வெளியே இழுத்தெடுத்தனர். அவர்கள் ஆண்களைத் தாக்கினார்கள். பெண் பொலிசார் எங்களைத் தாக்கினார்கள.; நான் ஒரு தலைக் கவசத்தால் தாக்கப்பட்டேன். அதற்கு பிறகு, கண்மூடித்தனமான சூட்டுச்சத்தங்கள் எல்லா இடங்களிலும் இருந்து கேட்டன. யாருக்கு எதிராக அவர்கள் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தினார்கள்? சட்டமூலத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமலும் முன்கூட்டியே திட்டமிடாமலும் எதிர்ப்பு காட்டிக் கொண்டிருந்த தொழிலாளர் மீதே அதை நடத்தினார்கள். பல ஆர்பாட்டக்காரர்களுக்கு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் ஏற்பட்டன. ஏனைய நூற்றுக்கணக்கானோருக்கு, பிரதானமாக பெண்களுக்கு காயங்கள் ஏற்பட்டதோடு அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர், தாங்கள் கைது செய்யப்படலாம் என்ற பயத்தில் அண்மையில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதை விரும்பவில்லையென்றும் எதிர் விளைவுகளை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில், தொலை தூரங்களில் இருந்த தங்கள் கிராமங்களுக்கச் செல்வதை தெரிவு செய்து கொண்டார்கள் என்றும் ஒரு செய்தித்தாள் தெரிவித்தது.

சட்ட நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளால் சுடுகலன்கள் பயன்படுததப்படுவதென்பது, தற்போது சர்வதேச சட்டங்களுடன் தொடர்புபட்ட விடயமாக ஆகிவிட்டது என்பதை மிக உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன். உதாரணமாக ஐநாவின் சட்டநடை முறைப்படுத்தம் அதிகாரிகளால் வலு மற்றும் சுடுகலன்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகளின் (அடிப்படைக் கோட்பாடுகள்) 9வது கோட்பாடு, 'தற்பாதுகாப்பு அல்லது மற்றவர்களுக்கு மரண அச்சுறுத்தல் அல்லது கடுமையான காயத்தை விளைவிக்கக்கூடிய சூழ்நிலைகளில, சுடுகலன்களை பன்படுத்துவதைவிட குறைந்தளவு-முனைப்பான வழிகள் மேற்படி இலக்குகளை எட்டப் போதுமானவையாக இல்லாமல் இருந்தாலொழிய, எவருக்கும் எதிராகச் சுடுகலன்களைப் பயன்படுத்தக்கூடாது' என்று தெரிவிக்கிறது. வன்செயலைப் பயன்படுத்தும் சனக்கூட்டத்தைக் கையாளும் சூழ்நிலைகளில் சுடுகலன்களை பயன்படுத்துவதைவிட குறைந்தளவு ஆபத்தான முறைகளை கைக்கொள்ள முடியாதிருந்தால் மட்டுமே, சாத்தியமான ஆகக்குறைந்தளவில், கோட்பாடு 9 இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ், சுடுகலன்களை சட்டநடை முறைப்படுத்தல் அதிகாரிகள் பயன்படுத்தலாம் என்று இந்த கோட்பாடுகள் தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. வேறு எந்த முறையிலான சுடுகலன்களின் பயன்பாட்டையும் நியாயப்படுத்த முடியாது. ஊடகங்களில் வெளி வந்த நேரடியாக கண்டவர்களின் கூற்றுகளை வைத்துச் சொல்வதானால், கட்டுநாயக்காவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தின்போது சுடுகலன்கள் பயன்படுத்தப்படுவதற்கான எந்தவொரு நியாயப்பாடும் இல்லை.

சிறிலங்காவினுடைய பொலிஸ் சட்டமூலம், தண்டச் சட்டக் கோவை, பொலிஸ்திணைக்கள கட்டளைகள் மற்றும் நடைமுறைகளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும், சட்டபூர்வமான நிலைப்பாடுகள,; உண்மையில் ஒரு குற்றம் நிகழ்வதைத் தடுக்க அல்லது தற்பாதுகாப்புக்காக குறைந்த அளவு வலுப்பிரயோகமாக மட்டுமே பொலிசார் சுடுகலன்களைப் பயன்படுத்தலாம், என்று கூறும், சர்வதேச நியமங்களுக்கு ஒத்திசையக்கூடியவையாக இருக்கின்றன. எனக்கு நினைவில் உள்ளபடி, இவ்வாறு பயன்படுத்தப்பட்ட படைக்கலன்கள் பரிசோதிக்கப்பட்டு, பின்பு பரிசீலனை செய்யப்படுவதற்காக, விவரமான குறிப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த விதிகள் பொலிசாரால் கைக்கொள்ளப்படுவதாக நம்புவோமாக. குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகளின் இரகசியமான குறிப்புகள் இன்னமும் வெளித் தெரியாத போதும், 'ஏதோ காரணங்களுக்காக' பொலிசார் 'மிகை தயார்ப்படுத்தல்களில்' ஈடுபட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. சம்பவ இடத்துக்கு அண்மையாக பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உயர் அதிகாரிகள் பிரசன்னமாக இருந்தார்கள் என்ற உண்மையிலிருந்து மேற்படி விடயம் தெளிவாகத் தெரிகிறது.

சட்டத்துக்கு புறம்பான செயற்பாடுகள் மற்றும் பிரச்சாரத்திற்கு ஊடாக குற்றத்தை மூடிமறைத்தல்:

அரசு தன்னுடைய வழமையான உத்தியின்படி நடந்த விடயத்தை மூடிமறைக்க, அதனுடைய எதிர்மறைப் புகழ்பெற்றவையும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயற்படுபவையுமான பிரச்சார பொறியமைப்பினை உதவிக்கழைத்தது. அரசியல் மட்டத்திலே அவர்கள் பல முடிவுகளை எடுத்திருப்பார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. முதலாவது முடிவாக இருந்தது: பொலிஸ்மா அதிபர், உண்மையில் ஒரு வாரத்தில் ஓய்வு பெற்றுச் செல்ல இருக்கையில், அவரது ஓய்வு பெறும் திகதிக்கு முன்னதாக அவரை, 'ஓய்வுக்கு முந்திய விடுப்பில்' செல்லவைப்பது என்பதாக இருந்தது. (பின்பு இவர் ஒரு ஆணைக்குழு ஆணையாளராகவோ அல்லது வெளிநாட்டுத் தூதுவராகவோ நியமிக்கப்பட்டால் நான் ஆச்சரியப்பட மாட்டேன்)

காயமடைந்தவர்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியாவதைத் தடுக்க மருத்துவமனைகளில் பயன்விளைவான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனுமதிக்கப்பட்டிருப்பவர்களைப் பார்ப்பதற்கு மருத்துவ மனைகளுக்குள் நுழைய முயன்றவர்களில் பலரும் தடுக்கப்பட்டார்கள். பின்னர் இந்தச் சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றம் சாட்டும் அரசின் அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்ததாக, வழமையான 'சதிமுயற்சி கோட்பாடு' முன்வைக்கப்பட்டது. அடுத்ததாக, துப்பாக்கி சூட்டுக்காயங்களுக்கு உள்ளான இளைஞர் மரணமடைந்த செய்தி வெளியானது. அரசினுடைய அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடப்பட்ட இந் நிகழ்வு பற்றிய செய்திகள் மற்றும் வீடியோக்கள், இந்நிகழ்வு தொடர்பாக அரச ஊடகங்களில் வெளியான செய்திகள், அரசியல் கலந்துரையாடல்கள் (அரசு கட்டுப்பாட்டிலான தனியார் ஊடகங்களைப்பற்றி சொல்லவே தேவையில்லை) அனைத்தும் இந்நிகழ்வு தொடர்பான அரசின் ஒட்டுமொத்த பொறுப்புகளையும் மூடிமறைக்க பகீரதப் பிரயத்தனம் எடுத்தன. பலியானவரின் குடும்பத்துக்கான மில்லியன் கணக்கான உதவிகள், மற்றும் மேற்படி சட்டமூலத்தை மீளப்பெற அரசு எடுத்துள்ள முடிவு, ஆகியவை தொடர்பான செய்திகள் அரசு ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அத்தோடு அரசின் கூற்றுப்படி, சுதந்திர வர்த்தக வலயத்துள் 'வெளியார்' ஊடுருவியிருந்தார்களா என்பதை நிர்ணயிக்க உயர்மட்ட பொலிஸ் விசாரணை ஒன்று இடம் பெறுவதையும் மறப்பதற்கில்லை.

பொhறுப்பை இன்னொருவரிடம் தள்ளிவிடுவதுதான் மூலோபாயம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரசினுடைய முன்னணி ஞாயிறு ஆங்கில வார இதழின் ஆசிரியர் தலையங்கத்தின் முதல் வரிகளை மேற்கோள் காட்டுவதானால், 'மக்கள் விடுதலை முன்னணியினர், வாக்குகளை விட, குண்டுகள் மீதுதான் தங்களுக்கு அதிக நம்பிக்கையிருக்கிறது என்பதை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார்கள்'.

பொதுவாக இவ்வாறான சூழ்நிலைகளில், அரசினுடைய உள்நோக்கத்தை, அதனுடைய பதில் வினைகளிலிருந்து மதிப்பிட்டுக் கொள்ளலாம். இதே போலவே அரசினுடைய உண்மையான நோக்கம் பற்றிய மதிப்பீட்டை, அதனுடைய நடத்தையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். தொழிற்சங்கங்கள், குடிசார் சமூகக் குழுக்கள், அரசியற் கட்சிகளால் நடத்தப்பட்ட எதிர்ப்புப் பேரணிகள் பற்றியோ அல்லது அதில் பங்கு கொண்ட மக்கள் பற்றியோ, அரசு எந்தக் கவலையும் படவில்லை என்பது வெளிப்படையானதாகும். ஒரு கட்டத்திலே, கட்டுநாயக்கா வலயம் மூடப்பட்டிருப்பதாகவும், அதில் பணியாற்றும் பணியாளர்கள், (அனேகமாக வாடகை அறைகளில் தங்கியிருந்தவர்கள்) மறு அறிவித்தல் வரும்வரை தங்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டுமென்றும் கூறும் அறிவித்தல்கள், ஒலிபெருக்கிகள் மூலம் செய்யப்பட்டன.

இந்தப் பேரணிகளில் பலவற்றையும் தடுக்கமுடியாமல் போனதற்கு, அவை அரசியல் கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல என்பதும், தாமாகவே உருவானவை என்பதும் காரணங்களாக இருக்கின்றன. இவற்றுள் ஆகப் பெரிய பேரணி, மக்கள் விடுதலை முன்னணியினரால், நகர மண்டபத்துக்கு அருகே, லிப்டன் சுற்றுவட்டத்தில் நடத்;தப்பட்டது. அங்கே அரசின் ஆற்றுகைகள் ஆகக் கூடிய அளவில் வெளித் தெரியக்கூடியவையாக இருந்தன. இராணுவமும் பொலிசாரும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலே நிறுத்தப்பட்டிருந்த அதேவேளை, பேரூந்துகள் நிரம்பிய குண்டர்கள், கைகளில் குண்டாந்தடிகளுடன், அமைதியாக எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தவர்கள் மீது, தாக்குதல் நடத்துவதற்கான கட்டளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அந்த குண்டர்கள் பாதுகாப்பு அமைச்சின், 'கண்காணிக்கும் பா.உ' ஆல் கொண்டு வரப்பட்டிருந்தனர் என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல. இந்த குண்டர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது.

'கையில் பொல்லுகளுடன் ஆட்கள் வீதியால் போவதற்கு எந்தத் தடையுமில்லை. கையில் பொல்லுடன் செல்பவர் நாய் கடிக்க வந்தால் நாயை அதனால் தாக்கலாம்' என்று பொலிஸ் ஊடகத்துறைப் பேச்சாளர் முதுநிலை பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜயக்கொடி கூறியது (பேச்சாளரை மேற்கோள் காட்டியுள்ளது, லங்கா ட்ருத் இணையத் தளம்) பற்றி நான் ஆச்சரியப்படவில்லை. சுதந்திர வர்த்தக வலயப் பணியாளர்கள், தங்கள் கைகளில் சில குண்டாந்தடிகளை வைத்துக் கொண்டு இருந்திருந்தால், பொலிஸ் பேச்சாளர்; என்ன சொல்லியிருப்பார்? தொழில்முறை செயற்பாடுகள், எந்த மட்டத்துக்கு தரம் தாழ்ந்து போய் விட்டன என்று இது காட்டுகிறது. ஒரு வருடத்துக்கு முன், இவ்வாறு ஆயுதம் தரித்த கும்பல் ஒன்று, உச்ச நீதி மன்றம் அருகே, ஆயுதம் தரிக்காத, குடிசார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதை நாம் கண்டோம். ஆனால் இத் தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தும், பொலிசாரால,; அப்போதும் பயன் விளைவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை

இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாக மக்கள் விடுதலை முன்னணி தலமையிலான பல குழுக்களால் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான சுவரொட்டிகள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன என்பதற்குச் சான்றாக, நம்பத் தகுந்த தகவல்களும் பத்திரிகைச் செய்திகளும் உள்ளன. இது நிச்சயமாகவே, அரசு தொடர்பான அரசியல் ரீதியான விமர்சனங்களைக் கட்டுப்படுத்துவதற்கான, ஒரு முறியடிப்பு நடவடிக்கை ஆகும். சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகளின் பணி இதுவல்ல என்று கூறினால் போதுமானதாகும்.

பகுதி 2 தொடரும்

ஜே.சி.வெலிஅமுனு

சட்டத்தரணியும் ட்ரான்பரன்ஸி இன்ரநஷனல் என்ற அமைப்பின் முன்னாள் பணிப்பாளருமான ஜேசி.வெலிஅமுன லஞ்சம் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், நல்லாட்சி அடிப்படை உரிமைகள் போன்றவற்றுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவரது கருத்துக்கள் காரணமாக அரசின் அச்சுறுத்தலுக்கும் ஆளானவர். 2008இல் அவரது வீட்டின் மீது எறியப்பட்ட கிரனைட் தாக்குதலில் அதிஷ்டவசமாகத் தப்பியவர்.

தமிழில் குளோபல் தமிழ் செய்திகள்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/62912/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.