Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவை தள்ளி வீழ்த்திவிட்டு சீனாவை கட்டித் தழுவ சிறிலங்காவால் முடியுமா?

Featured Replies

[ புதன்கிழமை, 06 யூலை 2011, 00:18 GMT

கடந்த மாதம் சென் பீற்றஸ்பேக்கில் இடம்பெற்ற அனைத்துலக பொருளாதார மாநாட்டின்போது சீன அதிபர் கூ ஜின்ரோ மற்றும் ரஷிய அதிபர் டிமிற்றி மிட்வடேவ் [sri Lanka’s friends - Dimitry Medvedev and Hu Jintao]ஆகியோரது அரவணைப்பில் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்ச இருந்த அதே காலப்பகுதியில் பிரித்தானிய அரச தலைவர் டேவிற் கமறோன் மற்றும் அமெரிக்கா இராசாங்கத் திணைக்களம் என்பன வெளியிட்ட கருத்துக்கள் மகிந்தவிற்குக் கசப்பாக அமைந்தது.

போரின் இறுதிநாட்களில் சிறிலங்கா அரசபடையினரால் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையினது முயற்சிகளுக்கு எதிரான தங்களது முழுமையான ஆதரவு என்றும் இருக்கும் என ரஷிய மற்றும் சீனத் தலைவர்கள் மகிந்தவிடம் உறுதியளித்திருக்கிறார்கள்.

ஐ.நாவின் இந்த முனைப்புக்களுக்கு ஐக்கிய அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகள் தங்களது ஆதரவினை வழங்கி நிற்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசாங்கமானது "போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உடனடித் தீர்வுகாணவேண்டும்" என்றும் "அது நல்லிணக்கத்தினை நாடிநிற்கும் இந்த வேளையில் தனக்கிருக்கும் அனைத்துக் கடப்பாடுகளையும் முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்தவேண்டும்" எனவும் கடந்த புதனன்று அமெரிக்க இராசாங்கத் திணைக்களம் மகிந்த அரசாங்கத்தினைக் கோரியிருக்கிறது.

"சிறிலங்கா அரசாங்கமானது தனக்கான இந்தப் பணியினை மேற்கொள்ளத் தவறுமிடத்து ஏனைய வழிவகைகள் தொடர்பாக ஆராயுமாறு கோரும் அனைத்துலக சமூகத்தின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும்" என இராசாங்கத் திணைக்களம் தொடர்ந்து குறிப்பிட்டிருந்தது.

இறையாண்மையுள்ளதொரு தேசத்திடம் இதுபோல வேண்டுகையினை விடுப்பதற்கான தார்மீக உரிமை அல்லது அனைத்துலக சட்டத்தின் பிரகாரம் அமைந்த உரிமை ஏதேனும் அமெரிக்காவும் அதனது நட்புநாடுகளும் இருக்கிறதா என்ற கேள்விகள் முன்னரைப் போலவே மீளவும் எழும். சிறிலங்காவினதும் மேற்கு நாடுகளினதும் வெளிநாட்டுக் கொள்கையில் இது ஒரு புள்ளியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

சங்காய் அமைப்பில் சிறிலங்கா

கசஹஸ்தானின் அஸ்தனாவில் [Astana, Kazakhstan]இடம்பெற்ற சங்காய் ஒத்துழைப்பு நிறுவனத்தின் மாநாட்டில் [the Shanghai Cooperation Organisation -SCO] கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்துதான் ரஷிய அதிபரும் சீனப் பிரதமரும் அனைத்துலக பொருளாதார மாநாட்டில் பங்கெடுப்பதற்காக சென் பீற்றஸ்பேக்கிற்கு வந்திருந்தார்கள்.

சங்காய் அமைப்பானது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் ஆறு நாடுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மத்திய ஆசியப் பிராந்திய நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் சீனாவும் ரஷியாவும் முதன்மையான நாடுகளாகத் திகழ்கின்றன.

சங்காய் அமைப்பில் சிறிலங்காவிற்குப் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உண்மை நம்மில் பலருக்குத் தெரியாது. இந்தியா, பாகிஸ்தான், ஈரான் மற்றும் மொங்கோலியா ஆகிய நாடுகளும்கும் சங்காய் அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

மத்திய ஆசியாவின் பாதுகாப்புத் தொடர்பில் அதிகம் கரிசனைகொள்ளும் இந்தச் சங்காய் அமைப்பில் அங்கம் வகிக்கும் மத்திய ஆசியப் பிராந்தியத்திய நாடுகளுக்கு அருகாக இருக்கும் மேற்குறித்த இந்த நாடுகள் சங்காய் அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து கோரியது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

ஆனால் சீனாவிலிருந்து வெகு தூரத்திற்கு அப்பால் இந்து சமுத்திரத்தின் மத்தியிலிருக்கும் சிறிலங்கா சங்காய் அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்தினைப் பெற முனைந்தது ஏன்? சீனாவின் காலைச் சுற்றியிருக்கும் கொழும்பினது விரும்பத்தினையே இது காட்டுகிறது.

தாங்கள் சிறிலங்காவிற்கு எப்போதும் உறுதுணையாக இருப்போம் என சீன மற்றும் ரஷியத் தலைவர்கள் சென் பீற்றஸ்பேக்கில் வைத்து அதிபர் ராஜபக்சவிற்கு வழங்கிய உறுதிமொழிக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டுச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கொழும்புடன் கடும்போக்கினைக் கைக்கொண்டுவரும் மேற்கிலிருந்து விலகிச்செல்லும் சிறிலங்கா மேற்கு-எதிர் சக்திகளான சீனா மற்றும் ரஷியாவினை நோக்கி அதிகம் ஈர்க்கப்படுகிறது.

ராஜபக்சவின் இராசதந்திரம்

அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் மேற்குலம் முட்டிமோதுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மகிந்தவினது இராசதந்திரச் செயற்பாடுகள் நலிவடைந்திருப்பதும் ஒரு காரணம்.

1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தினைத் தொடர்ந்து சிறிலங்காவினது அப்போதைய அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தன இனக்கொலையில் ஈடுபட்டதாகக்கூறி இந்திரா காந்தியும் பின்னர் ராஜீவ் காந்தியும் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

எந்தவொரு நாடும் அப்போது ஜெயவர்த்தனாவிற்கு உதவுவதற்குத் தயாராக இருக்கவில்லை. இடம்பெற்றது எதுவோ அதனை அவ்வாறே ஒப்புக்கொண்டார் ஜெயவர்த்தனா.

இருந்தும் தான் முன்னெடுத்துவந்த அளவில் பெரிய மகாவலித் திட்டத்திற்கான மேற்கினது நிதியுதவியினையும், புதிய நாடாளுமன்றம். மற்றும் ஜெயவர்த்தனபுர நகரத்தினைக் கட்டுவதற்கான யப்பானின் நிதியுதவியினையும் அவர் தங்கு தடையின்றிப் பெற்றிருந்தார்.

சிறிலங்காவிற்குத் தனது படைத்தளபாடங்களை விற்பனை செய்வதில்லை என்ற முடிவினை அமெரிக்கா எடுத்தபோது, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இஸ்ரேலிய நலப் புரிவு என்ற ஒன்று அமைக்கப்பட்டது.

இதன் ஊடாக கொழும்பு தனக்குத் தேவையான ஆயுத தளபாடங்கள் அனைத்தையும் பெற்றுக்கொண்டது. ஏன் இஸ்ரேலிய இராணுவத்தினர் சிறிலங்காப் படையினருக்குப் படைத்துறைப் பயிற்சிகளைக்கூட வழங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பென்றும் அவர்கள் சிறுவர்களைக்கூடப் படையில் திரட்டுகிறார்கள் என்றும் தங்களது பரப்புரைகள் ஊடாக மேற்குலகத்தினை நம்பவைத்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரும் அதிபர் சந்திரிக குமாரதுங்கவும் மேற்குலக நாடுகளில் பலவற்றில் விடுதலைப் புலிகளமைப்பு தடைசெய்யப்படுவதற்கு வழிகோலினர்.

இணைத்தலைமை நாடுகளை வெளியேற்றியமை

விடுதலைப் புலிகளுடனான பேச்சினை நெறிப்படுத்திக்கொண்டிந்த இணைத்தலைமை நாடுகளை வெளியேற்றியதுடன் ராஜபக்சவின் நலிந்த இராசதந்திரப் பயணம் ஆரம்பித்தது.

இதற்கானதொரு சூழமைவு இல்லாததொரு புறநிலையில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் ஊடானதொரு தீர்வினை எட்டுவதற்கே இந்த இணைத்தலைமை நாடுகள் முனைந்தன.

இந்த நிலையில் எந்தவித பலனையும் பெற்றுத்தராத இணைத்தலைமை நாடுகளின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்ற மகிந்தவின் வாதம் சரியானது.

ஆனால் மேற்குடனான உறவினைத் தொடர்ந்தும் பேணுவதற்கு மகிந்த ஒன்றும் கதிர்காமர் இல்லையே. இந்த நிலையில் இணைத்தலைமை நாடுகளுடனான உறவினைத் தொடர்ந்தும் பேணுவதற்கு எந்தக் கதிர்காமரும் முனையவில்லை. மேற்குடனான சிறிலங்காவின் உறவு இங்குதான் பிசுபிசுக்க ஆரம்பித்தது.

சீனாவின் நுழைவு

சிறிலங்கா தொடர்பில் மேற்குலகம் முட்டிமோதும் அணுகுமுறையினைக் கைக்கொள்வதற்குப் பிரதான காரணம் சீனாதான். இன்றைய நிலையில் மேற்குலக வல்லரசுகளுக்கு சவாலாக இருக்கும் ஒரேயொரு தரப்பு சீனாவே.

போரின்போது சீனா வழங்கிநின்ற பாரிய படைத்தளபாட உதவிகள் இல்லையெனில் மகிந்தவால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்றிருக்கமுடியாது.

ராஜபக்சவின் பலவீனத்தினைச் சீனா தனக்குச் சாதகமாக்கிக்கொண்டது. மகிந்த அரசாங்கத்திற்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கு நெடு நாட்களுக்கு முன்னரே அவரது ஆட்சிக்கு எதிரான மனித உரிமைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் மேற்கினால் முன்வைக்கப்பட்டிருந்தன.

மனித உரிமைகளைக் காரணம்காட்டி மேற்கு வழங்குவதற்கு மறுத்த ஆயுத தளபாடங்களை வழங்கிய சீனாவிற்கு மகிந்த எப்போதுமே நன்றியுடையவராகவே செயற்பட்டார்.

பல ஆண்டுகளின் பின்னர் திருப்பிச் செலுத்தவேண்டிய நீண்ட காலக் கடனாகவே சீனா சிறிலங்காவிற்கான உதவிகள் பலவற்றை வழங்குகிறது. இதனால் நாட்டுக்கு ஏற்படும் செலவு மற்றும் செலுத்தவேண்டிய வட்டி என்பன தொடர்பில் நாட்டு மக்களுக்கு எதுவும் தெரியாது.

தகவல் சுதந்திரச் சட்டமூலப் பிரேரணை அண்மையில் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டபோது அது ஆளும் தரப்பினரால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இது ஒன்றும் ஆச்சரியத்திற்குரிய விடயமன்று.

அண்மைய ஆண்டுகளில் சீனா பல பில்லியன் கணக்கான டொலர்களைச் சிறிலங்காவிற்குக் கடனாக வழங்கியிருக்கிறது. அம்பாந்தோட்டை அபிவிருத்தி வலயத்தினை அமைப்பதற்காக 1.5 பில்லியன் டொலர்களைச் சீனா கடனாக வழங்கியிருக்கிறது.

இதுவிடயம் தொடர்பாக உலக அரசியல் மீள்பார்வை என்ற இணைய வழிச் சஞ்சிகைக்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக்கத்தின் பேராசிரியர் சுவாரான் சிங் கடந்த வாரம் கருத்துரைத்திருந்தார்.

இந்தத் திட்டமானது "அதிக நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடிய வர்த்தக ரீதியிலான வாய்ப்பு" என வாதிடப்படுகின்ற போதும் இது மூலோபாயச் சிக்கல்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என பேராசிரியர் சுவரான் சிங் குறிப்பிடுகிறார்.

இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்காகச் சீனா சிறிலங்காவிற்கு முண்டு கொடுத்து நிற்கிறது. தான் சிறிலங்காவிற்கு எதிரான மேற்கொள்ளும் உதவிகளுக்கு அல்லது தந்துநிற்கும் ஆதரவுகளுக்கு உள்நோக்கம் எதுவுமில்லை என்கிறது சீனா.

அதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீன வகுத்திருக்கும் முத்துமாலை மூலோபாயத்தின் ஒரு அங்கமாக இந்தத் திட்டங்கள் இல்லை எனச் சீனா வாதிடுவதாக பேராசிரியர் சுவரான் சிங் கூறுகிறார்.

வீட்டுத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக 500 மில்லியன் டொலரையும், அனல் மின்நிலைய விரிவாக்கத்திற்காக 891 மில்லியன் டொலர்களையும் உட்கட்டுமான அபிவிருத்திக்காக 3 பில்லியன் டொலர்களையும் கடனாக வழங்குவதற்குச் சீனா உடன்பட்டிருக்கிறது.

இரண்டாவது பெரிய பொருளாதாரம்

ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரும் பொருளாதார சக்தியாக சீனா உருமாறியிருப்பதாகவும் ஓரிரு ஆண்டுகளில் அது அமெரிக்காவினையும் முந்திவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

உலகின் முதல்தர பொருளாதாரமாக சீனா மாறும் என்ற எதிர்பார்ப்பு தற்போது பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

சிறிலங்கா தனது அண்மைய வரலாற்றில் மேற்குடன் முட்டிமோதும் அணுகுமுறையினைக் கைக்கொள்ளும் சூழமைவில் சீனாதான் உலகின் முதன்மையான பொருளாதார சக்தியாக மாறும் என்ற எண்ணம் இலங்கையர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

வர்த்தகம் மற்றும் ஏனைய பொருளாதார விடங்களில் ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஏனைய மேற்கு நாடுகளுக்கும் பதிலாக சீனாவினைப் பயன்படுத்துவதற்கு சிறிலங்காவினால் முடியுமா?

சிறிலங்காவினது அதி முக்கியான வர்த்தகப் பங்காளராக இன்னமும் ஐக்கிய அமெரிக்காதான் இருந்துவருகிறது. சிறிலங்காவினது மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் 22.1 சதவிதமானவை ஐக்கிய அமெரிக்காவிற்கும் 12.1 சதவீதமானவை பிரித்தானியாவிற்கும், 5.2 சதவீதமானவை ஜேர்மனிக்கும், 4.9 சதவீதமானவை பெல்ஜியத்திற்கும் 4.8 சதவீதமானவை இத்தாலிக்கும், 4.5 சதவீதமானவை இந்தியாவிற்கும் ஏற்றுமதியாகின்றன.

இந்த நிலையில் தனது வெளிநாட்டு ஏற்றுமதியில் 50 சதவீதமான சந்தையினை இழப்பதற்குச் சிறிலங்கா தயாராக இருக்கிறதா என்பதுதான் தற்போது எழுகின்றன கேள்வி.

சீனாவின் மாற்றம்

எத்தகைய சூழமைவிலும் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றம் குழப்பமின்றித் தொடருவதுதான் அமெரிக்காவின் பொருளாதாரத்தினை சீனப் பொருளாதாரம் முந்தும் என்ற நம்பிக்கைக்குக் காரணம்.

ஆனால் ஒரு நாட்டினது பொருளாதாரம் மற்றும் அரசியல் என்பது திடீர் திருப்பத்திற்கு உள்ளாகக்கூடியதொன்றுதான்.

வேகமாக வளர்ந்துவந்த யப்பானியப் பொருளாதாரம் அமெரிக்காவினை முந்தும் என்ற எதிர்பார்ப்பு ஒன்றரைத் தசாப்தத்திற்கு முன்னர் காணப்பட்டது.

யப்பானியப் பன்நாட்டு நிறுவனங்களின் துரித வளர்ச்சி அமெரிக்க நிறுவனங்களை விழுங்கிவிடுமோ என்ற பேரச்சம் அப்போது நிலவியது. ஆனால் பாரிய முன்னேற்றங்களையோ அன்றி திருப்புமுனைகளையோ ஏற்படுத்திக் காட்டுவதற்கு யப்பானியப் பொருளாதாரம் இன்றும் போராடுகிறது.

கொம்யுனிஸ்ட்டுக்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர்கூட எதிர்பார்க்காத அரசியல் மாற்றங்கள் சீன அரசியலில் நிகழ்ந்தேறியிருக்கின்றன.

மாவோவினது இடதுசாரிக் காலத்தில் சீனாவில் பெரும் கலாச்சாரப் புரட்சியொன்று வெடித்தது.

திடமான பொதுவுடமை அம்சங்களையும் தன்னகத்தேகொண்ட முதலாளித்துவ ஆட்சிமுறையினை டென் சியாவ் பிங் கொண்டுவந்ததைத் தொடர்ந்து சீனாவில் என்றுமில்லாத பொருளாதார வளர்ச்சி காணப்பட்டது.

அண்மைய வரலாற்றில் ஏற்பட்ட உலகப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு மேற்கு நாடுகள் இன்றும் திண்டாடிக்கொண்டிருக்கும் அதேநேரம் சீனா வேகமாக அதிலிருந்து மீண்டிருந்தது.

சீனா ஒரு நாள் உலகப் பொருளாதார வல்லரசாகும் என்ற நம்பிக்கையினை இது மேலும் வலுப்படுத்தியிருக்கிறது.

ஆனால் சீனாவின் எதிர்கால நிலைமைகள் தொடர்பாக அதன் தலைவர்கள் கலக்கத்துடன் இருப்பதாகவே தெரிகிறது. பொதுவுடமை ஆட்சியாளர்களின்மீது இளையோர்கள் கொண்ட அதிருப்தியினை வெளிப்படுத்தும் வகையில் 1989ம் ஆண்டு இடம்பெற்ற தியன்மன் சதுக்கப் போராட்டம் அமைந்தது.

தங்களது எதிர்காலம் தொடர்பாக சீன மக்கள் உறுதியான நம்பிக்கையுடன் இருக்கும் அதேநேரம் இதுபோன்ற இளையோர் புரட்சிகள் வெடிக்கலாம் என்ற கலக்கத்துடனேயே சீனத் தலைவர்கள் இருப்பதை மேற்குலக சமூகம் கவனிக்காமல் இல்லை.

தெளிவற்ற தலைமைத்துவம்

அண்மையில் லண்டனுக்கு பயணம் செய்திருந்த சீனப் பிரதமர் சீனாவின் பலவீனங்கள் சிலவற்றினை ஏற்றுக்கொண்டிருந்தார். லண்டனில் இடம்பெற்ற நிழ்வு ஒன்றில் அவர் உரையாற்றுகையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

"மக்களின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் ஊழல், முறை தவறிய வருவாய்ப் பங்கீடு மற்றும் ஏனைய குறைபாடுகள் இன்னமும் சீனாவில் நிலவுகின்றன. சுதந்திரம் இல்லையேல் அங்கு உண்மையான மக்களாட்சி இருக்காது. அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான உத்தரவாதம் இல்லையேல் அங்கு உண்மையான அரசியல் சுதந்திரம் இருக்காது" எனக் குறிப்பிட்டார் சீனப் பிதமர்.

சீனாவுடனான தனது கலந்துரையாடல்களின்போது மனித உரிமைகள் தொடர்பாக சுட்டிக் காட்டுவதைப் பிரித்தானிய உடனடியாக நிறுத்தவேண்டும் என எச்சரித்த சீனா தங்களுக்கு பிரித்தானியாவிற்கும் இடையில் இந்தவிதமான மோதல்நிலையும் இல்லை என்றார்.

"எமக்கிடையிலான வேறுபாடுகளை விட பொதுவான நலன்கள்கள்தான் அதிகம்" என இரு தரப்பு உறவு தொடர்பில் கருத்துரைத்த சீனப் பிரதமர் கூ ஜின்ரோ குறிப்பிட்டார்.

தி எக்கொணமிக் சஞ்சிகை தனது அண்மைய வெளியீட்டில் சீனா தொடர்பான சிறப்பு ஆய்வினை வெளியிட்டிருந்தது.

"சீனாவில் அரச கட்டுப்பாட்டின் கீழுள்ள வெளியீட்டு நிறுவனங்களை விட சீன அரசியல் தலைவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுகிறார்களாம். தங்களது துரித பொருளாதார வளர்ச்சி தொடர்பாக கூறும்போது அது அளவிக்கு மிஞ்சாமல் இருப்பதைச் சீனத் அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். குறிப்பாக 'செழிப்பின் யுகம்' என்றோ அன்றி துரிதப் பொருளாதார வளர்சிக்கான 'சீனா மாதிரி' என்றோ விபரிப்பதை இந்தத் தலைவர்கள் தவிர்க்கிறார்கள்."

சீனாவின் கடந்த பத்தாண்டு வரலாற்றினை நோக்கும் போது சீனத் தலைவர்கள் என்றுமில்லாத பதற்றத்துடன் இருப்பதாகவே தெரிகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்பிற்கான செலவீனத்தினை என்றுமில்லாதவாறு இவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். நாட்டினது வரவு செலவுத் திட்டத்தில் முதன்முறையாக உள்நாட்டுப்பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாவோயிச முறைமையான பொதுத் தொண்டர்கள் ஊடான விழிப்புக்குழு முறைமையினை மீண்டும் கொண்டுவருவது தொடர்பாக சீன அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

பொதுமக்களை இலக்குவைத்த நடவடிக்கைகளை கடந்த மாதங்களில் சீனப் பொலிசார் துரிதப்படுத்தியிருக்கிறார்கள். சட்டவாளர்கள், தொண்டுநிறுவனப் பணியாளர்கள், இணையப் பத்தியாளர்கள் மற்றும் கலைஞர்கள் எனப் பலர் இதன்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அரபுலகில் ஏற்பட்டிருக்கும் புரட்சி சீனத் தலைமையினை அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. அரபுக் கிளர்சிகளின் முறைமையினை நோக்குமிடத்து சீனாவும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கத்தான் செய்கிறது.

புதிய தலைமைத்துவம்

சீனத் தலைமைத்துவத்திடம் காணப்படும் இந்த அச்சத்திற்கு இன்னொரு காரணமும் உண்டு. அடுத்த ஆண்டு ஒக்ரோபரில் கொமினிஸ்ட் கட்சி தனது தேசிய மாநாட்டினை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாநாட்டின் பின்னர் பத்தாண்டுகளுக்கு மேலாகத் தொடரும் கட்சியின் தலைமைத்துவத்தில் மறுசீரமைப்பு செய்யப்படவிருக்கிறது.

அதிபர் கூ ஜின்ரோ மற்றும் பிரதமர் வென் ஜியாவோ ஆகியோர் பதவியிறங்க இளந்தலைமுறையினர் கட்சியின் முதன்மைப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளனர்.

2002ம் ஆண்டு இறுதியாக இடம்பெற்ற இந்த மாநாட்டினன்போது கட்சியின் தலைமைத்துவ மாற்றம் ஏந்தவிதமான பிரச்சினையுமின்றி இடம்பெற்றிருந்தபோதும் 1976ம் ஆண்டு இடம்பெற்ற மாநாட்டு ஒரு சதிப்புரட்சியில் முடிவடைந்தது.

போ எக்சலியிடம் அல்லது சி ஜின் பிங்கிடம் கட்சியின் தலைமைப்பொறுப்பு வழங்கப்படலாம் என்ற ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. இவர்கள் இருவருமே சீனாவின் லோங்க் மார்ச் என்ற இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தவர்களின் புதல்வர்கள்.

இவர்கள் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவார்களா அல்லது அமைதியான ஆட்சி மாற்றத்தினை தொடர்வார்களா என்ற கரிசனை சீனாவுக்கு மட்டுமன்றி முழு உலகிற்குமே உண்டு.

http://www.puthinappalakai.com/view.php?20110706104213

சிக்கலான கேள்வி சிக்கலான விடயமும் கூட.......

உலகின் திறந்த பொருளாதார கொள்கையை முழுவதையும் பயன்படுத்திய ஒரே நாடு சீனா.உலகின் முக்கால்வாசி உற்பத்தியாளர்களையும் வரவேற்று உலகின் முக்கால்வாசி உற்பத்தியையும் தன்னகத்தே உள்வாங்கி விட்டது அதில் வெற்றியும் கண்டது.இதில் சீன அரசு கணக்கிடமுடியாத அளவுக்கு அன்னிய செலாவணியை ஈட்டி கொண்டிருக்கிறது.இதே அளவை இந்தியா உள்வாங்கியிருந்தாலும் இதில் முக்கால்வாசி அன்னிய செலாவணி சுவிஸ் வங்கிகளில் முடங்கி கிடக்கிறது. இது உலகறிந்த உண்மை.

ஒரு வாரத்திற்கு சீனா தனது வெளி நாட்டு வர்த்தகத்திற்கு பூட்டு போட்டாலே முழு உலகளவில் ஒரு அதிர்ச்சி உருவாகும்.இதை அறிந்த ஒபாமா ஒரு வருடத்திற்கு முன்னைய அறிக்கையில் ஒவ்வொரு அமரிக்கனும் உள் நாட்டு உற்பத்தியையே பாவிக்க கற்றுகொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இப்படி உலகம் உருளும் போது இலங்கை அரசுக்காக சீனாவும் மேற்குலகை பகைக்காது.மேற்குலகும் சீனாவை பகைக்காது.

உ+ம்

இந்தியா சீனாவுடன் சண்டை வருவதை எவ்வளவோ விட்டு கொடுப்புடன் தவிர்த்துவருகிறது என்பது தான் உண்மை.மொத்தத்தில் ராஜபக்ச குடும்பம் தவிக்க விடப்படுவார்கள்.பின்பு நஸ்டத்தில் இயங்கிய நிறுவனத்தை பொறுப்பெடுப்பதுபோல யாராவது கடனை உடனை பட்டு இலங்கை ஆட்சியை எடுத்து நடத்தவேண்டியதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.