Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றவாளி மகிந்த இராசபக்சேக்குப் பாடம் படிப்பிக்க உள்ளாட்சித் தேர்தல் நல்ல வாய்ப்பாகும்! நக்கீரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க் குற்றவாளி மகிந்த இராசபக்சேக்குப் பாடம் படிப்பிக்க உள்ளாட்சித் தேர்தல் நல்ல வாய்ப்பாகும்! நக்கீரன்

[Friday, 2011-07-15 20:12:26]

பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெரியளவில் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் இந்தத் தேர்தலில் ஆட்சித்தலைவர் மகிந்த இராசபக்சே தனது அமைச்சர் பட்டாளத்தோடு யாழ்ப்பாணத்தில் முகாமிட்டுத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

மக்களது வாக்குகளை அறுவடை செய்யப் பணம், பதவி மற்றும் சலுகைகள் ஆளும்கட்சியால் வாரி வழங்கப்படுகின்றன. வடக்கில் நடக்கும் தேர்தல் பரப்புரைக்கு இபிடிபி கட்சித் தலைவர் டக்லஸ் தேவானந்தா தலைமை தாங்குகிறார் எனச் சொல்லப் பட்டாலும் யாழ்ப்பாணத்தில் முகாம் இட்டுள்ள பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பஸில் இராசபக்சே மற்றும் நாமல் இராசபக்சே இருவருமே தேர்தல் பரப்புரைக்குப் பொறுப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக அமைச்சர்கள் ஜி.எல்.பீரிஸ், சுசில்பிரேமஜெயந்த, மைத்திரபால சிறிசேன, டலஸ் அழகப்பெரும, திஸ்ஸ கரலியத்த, ஜெகத் புஸ்பகுமார, மஹிந்தானந்த அளுத்கமகே, துணை அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோருடன் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலம் வருகிறார்கள்.

மாட்டுக்குப் புண்ணாக்குக் காட்டுவது போல ஆங்காங்கே மேம்பாடு என்று சொல்லிக் கொண்டு அத்திவாரக் கற்கள் நாட்டப்படுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 325 மில்லியன் ரூபாய் செலவில் கட்ட இருக்கும் ஒரு விளையாட்டு மைதானத்துக்கு மகிந்த இராசபக்சே அடிக்கல் நாட்டியுள்ளார்.

ஆளும் கட்சி வாக்காளர்களுக்கு மிதிவண்டிகள், சமையல் அடுப்புக்கள், விளக்குகள், தண்ணீர் இறைக்கும் இயந்திரங்கள், துணிமணிகள், சாராயப் போத்தல்கள் எனத் தாராளமாகத் தானம் செய்கிறது.

ஆண்டுக்கணக்காக தமிழ் மீனவர்கள் தங்கள் தொழிலைச் சுதந்திரமாகச் செய்யவிடாது தடைகளைப் போட்ட சிங்கள அரசு தேர்தலை மனதில் வைத்து அந்தத் தடைகளை நீக்கி உள்ளது. வடமராச்சியில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களை இரவோடு இரவாக அவர்களது சொந்த இடங்களில் கொண்டு போய் கொட்டியுள்ளார்கள். அவர்கள் வாழ்ந்த வீடுகளின் அத்திவாரமே எஞ்சியிருந்தன. அதனால் இரவு முழுதும் அவர்கள் மழையில் நனைந்தார்கள்.

தெற்கில் இருந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சு போட்டிருந்த பயணக் கட்டுப்பாட்டை அரசு தளர்த்தியுள்ளது. இதனால் புலத்தில் இருந்து போகும் தமிழர்கள், கொழும்பில் இருக்கும் இராசதந்திரிகள், ஊடகவியலாளர்கள் வடக்கு நோக்கி சுதந்திரமாகப் போய் வரலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புத் தேர்தல் மட்டுந்தானா அல்லது நிரந்தரமா என்பது போகப் போகத்தான் தெரியவரும்.

நேற்றுவரை ஆள்வோருக்கு ஆலவட்டம் வீசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரியே இன்று இராசபக்சே அரசு மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் காட்டுகிறார்.

"யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் தமது வீடுகளில் நிம்மதியாக வாழ முடியவில்லை. அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை. இன்னும் மூன்று நேர உணவும் உண்ண வழியில்லாமல் பலபேர் பசியுடன் வாழ்கின்றார்கள். தமது உடைமைகளை முற்றும் இழந்த நிலையிலே, அரசு கொடுத்துவந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு அனேகர் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளார்கள்.

தினமும் நாலு திறப்புவிழா, நாலு அமைச்சர்களின் பவனி என்று மக்களை இங்கும் அங்கும் அலைத்து பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்று புரியாணி சாப்பிட வைத்து அனுப்பப்படும் அப்பாவிகள், இராணுவத்தின் கட்டளைகளுக்குப் பயந்து தமது உழைக்கும் வாய்ப்பை இழந்து அலைக்களிக்கப் படுகின்றார்கள்" என்கிறார் ஆனந்தசங்கரி.

டக்லஸ் தேவானந்தா தனது சிங்கள் எசமானர்களது கட்டளைக்கு இணங்க தனது கட்சிச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தாது ஆளும் அய்க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இபிடிபி கட்சி வேட்பாளர்களைப் போட்டியிட வைத்திருக்கிறார். நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கம் என்ன இரண்டும் ஒன்றுதான் என்பார்கள். இந்தப் பழமொழி டக்லஸ் தேவானந்தாவுக்கு முற்றிலும் பொருந்தும். சிங்கள எசமானர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதாக அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட தேவானந்தாவுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க நியாயமில்லை. அதனை நாம் அவரிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர்பார்ப்பது பாவமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் சீருடை அணிந்த இராணுவம், காவல்துறை மற்றும் ஆயுதக் குழுக்களால் மிரட்டப்படுகிறார்கள். அவர்களது வீடுகள் இரவில் கல் வீசித் தாக்கப்படுகின்றன. அவர்களுக்கு அச்சமூட்ட வெட்டிய நாயின் தலை படலையில் தொங்க விடப்படுகிறது. சுவரொட்டிகள் மசகு எண்ணெய் ஊற்றிச் சேதப்படுத்தப் படுகின்றன. இவையெல்லாம் தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானவை. ஆனால் வேலியே பயிரை மேய்வது போல அதனைத் தடுக்க வேண்டிய இராணுவமும் காவல்துறைதுறையும் செய்யும் போது மக்கள் யாரிடம் முறையிட முடியும்?

இந்தத் தேர்தலில் தமிழ் வாக்காளர்களுக்குக் கொடுத்ததைக் கொடுத்து காட்டுவதைக் காட்டி யார் கழுத்தை முறித்தாவது ஆளும் கட்சி வெல்லப் படாதபாடு படுகிறது.

"தமிழ் மக்கள் மகிந்த இராசபச்சே பக்கம் நிற்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் தீர்வு தேவையில்லை அவர்கள் கேட்பதெல்லாம் வேலை, இருக்கக் குடிசை, உண்ண உணவு, உடுக்க நாலு முழம் மட்டுந்தான்" என்பதை உலகுக்குச் சொல்லவே இப்படி ஆளும்கட்சி தலைகீழாக நிற்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் கூட்டங்கள் குழப்பப்படுகின்றன. கூட்டமைப்பு ஒட்டும் சுவரொட்டிகள் கிழித்து எறியப்படுகின்றன. இந்தத் திருப்பணியை வெள்ளைவானில் பயணம் செய்யும் தமிழ்க் காடையர்களும் சிங்களக் காடையர்களும் செய்கிறார்கள். இந்தக் காடையர்களால் "ஆளும் கட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். இல்லையேல் நடப்பது வேறு" என வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள்.

"யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிரணியினரால் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை சுதந்திரமான முறையில் முன்னெடுக்க முடியாதுள்ளது. அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் மட்டுமின்றி உள்ளகக் கூட்டங்களைக் கூட நடத்தமுடியாத நிலைமையே இன்றிருக்கின்றது" என தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்ளும் கபே (CaFFE) என்ற அமைப்புத் தெரிவித்துள்ளது.

போர் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அவர்களது சொந்தக் காணியில் குடியமர்த்தப்பட வில்லை. தாங்கள் குந்தியிருக்க ஒரு வீடு வேண்டும் வாழ்க்கைத் தேரை ஓட்ட ஒரு வேலை வாய்ப்புச் செய்துதர வேண்டும் என்று வன்னி மக்கள் கண்ணீர் மல்கக் கேட்கிறார்கள். "இந்த முறைதான் எங்களுக்கு வாக்குரிமை தந்திருக்கிறார்கள். அந்த உரிமையை நாம் பயன்படுத்துவோம். ஓராண்டு கழிந்தும் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. நடுத்தெருவில் நிற்கிறோம். இருக்க வீடில்லை. வாசலில்லை. நிம்மதியாக இருக்க இடவசதியில்லை. எமது பிள்ளைகளின் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புவதுதான் எமக்கு முக்கியம்" எனச் சலிப்போடு இலண்டன் பிபிசி தமிழோசை (யூலை 14) நிருபருக்குச் சொல்லி அழுகிறார்கள்.

அய்யன்னா மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுத்துள்ள அறிக்கையின் படி போர் முடிந்தபின்னர் இடம்பெயர்ந்த 110,652 குடும்பங்கள் (365,082 பேர்) வட மாகாணத்துக்குத் திரும்பியுள்ளன. இந்தக் குடும்பங்கள் ஏப்ரில் 2008 க்கு முன்னரும் பின்னரும் இடம்பெயர்ந்தவர்கள். ஏப்ரில் 2008 க்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 45,024 (157,269 பேர்) ஆகும். ஏப்ரில் மாதத்துக்குப் பின்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களில் 5,284 குடும்பங்கள் (17,488 பேர்) இன்னமும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன. அதே போல் ஏப்ரில் மாதத்துக்கு முன்னர் இடம் பெயர்ந்த 2,360 குடும்பங்கள் (8,521 பேர்) இன்னமும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கின்றன. இடம்பெயர்ந்த மொத்தம் 189,221 பேர் உறவினர்களோடு தங்கியிருக்கின்றனர். (The Island - June 27, 2011)

மீள்கட்டமைப்பு மற்றும் மீள் குடியேற்றத்துக்கு நிதியில்லை என்று கைவிரிக்கும் மகிந்த இராசபக்சே அரசு வவுனியாவில் 522 அடி உயரமான புத்தர் சிலையை ரூபா 100 பில்லியன் (10,000 கோடி) செலவில் நிறுவ இருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய இந்தச் சிலை பொருளியல் திணைக்களத்தின் அனுசரணையோடு நிறுவப்படுமாம். இதே போல் சிங்கள இராணுவத்துக்குப் புதிய தலைமையகம் கட்ட இராசபக்சே அரசு ரூபா 20 பில்லியன் (2000 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது.

யாழ்ப்பாண வணிகர்களிடம் ஒரு மஞ்சள் அங்கி அணிந்த பிக்கு புத்த அனுராதபுரத்தில் விகாரை கட்டுவதற்கு தலைக்கு ஆயிரம் ரூபா வெருட்டி வாங்கும் அளவுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிங்கள - பவுத்த இனவாத சக்திகளது ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது! இதனால் வடக்கில் மக்கள் ஆளும் கட்சியின் அடாவடித்தனங்கள், அடக்குமுறைகளைக் கண்டு கொதிப்படைந்துள்ளார்கள்.

வடக்கும் கிழக்கும் இராணுமயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல், பண்பாட்டுச் சீரழிவுகள், பொருளாதாரச் சிதைவுகள், அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் ததேகூ மட்டுமே குரல் எழுப்பி வருகிறது. அதனை முறியடிக்க சிங்கள அரசு கடுமையாகப் பாடுபடுகிறது. அதன் எதிரொலியே எப்பாடு பட்டும் வடக்கில் ததேகூட்டமைப்பைப் தோற்கடித்து உள்ளாட்சி சபைகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என சிங்கள - பவுத்த இனவாத அரசு ஒற்றைக் காலில் நிற்கிறது.

எமது மக்கள் ஆளும் கட்சியின் மிரட்டல், உருட்டல் போன்ற அடக்குமுறைகளுக்கு இடம்கொடுக்காது முன்னைய தேர்தல்கள் போல் இம்முறையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்குத் தங்கள் வாக்குகளை அளித்து அவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களையும் போராளிகளையும் கொத்துக் குண்டுகள் போட்டு கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்து இன்று போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டு அனைத்துலக நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மகிந்த இராசபக்சேக்கு தமிழ்வாக்காளர்கள் தக்க பாட்ம் படிப்பிக்க வேண்டும். அதன் மூலம் தமிழர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை அவர்கள் வாழ்வில் வசந்தம் வீசுகிறது என வெளிநாடுகளில் மகிந்த இராசபக்சேயும் அவரது தூதுவர்களும் செய்து வரும் பொய்ப் பரப்புரைகளை முறியடிக்க வேண்டும். அதற்கு இந்தத் தேர்தல் நல்ல வாயப்பாகும்.

அந்த வாய்ப்பை எமது சொந்தங்கள் நழுவ விடக்கூடாது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46563&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.