Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள்

26 ஜூலை 2011

குளோபல் தமிழ்ச் செய்திகளின் பிரதான கட்டுரையாளரும், செய்தியாளருமான தீபச் செல்வனுக்கு:-

2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடகத்துறைக்கான 2 விருதுகள்

குளோபல் தமிழ்ச் செய்திகளின் பிரதான கட்டுரையாளரும், செய்தியாளரும், போருக்குப் பின்னரான முக்கிய பதிவுகளை புகைப்பட ஆதாரங்களுடன் துல்லியமாக எமது இணையத்தில் பதிவு செய்தவருமான தீபசெல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1.சிறந்த புகைப்பட ஊடகவியலாளன் விருது

2.நெருக்கடி சூலில் செய்தி தேடலுக்கான விருது

இவ் இரண்டு விருதுகளையும் வெற்றி கொண்டுள்ளார். தீபச்செல்வன் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சி, இரத்தினபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கவிதைகள், கதைகள், களச்செய்தியறிக்கை, பத்தி எழுத்து, ஓவியங்கள், வீடியோ விவரணம், புகைப்படங்கள், ஆவணப்படம், வானொலிப்பெட்டகம், ஊடகவியல், விமர்சனங்கள் என பல துறைகளில் இயங்கிவருகிறார். போர், அரசியல், மாணவத்துவம், தனிமனித உணர்வுகள் என்று இவர் எழுதிவருகிறார்.

இவர் எழுதிய செய்திகள், செய்திக்கட்டுரைகள், விவரணக்கட்டுரைகள், கதைகள் என்பன குளோபல் தமிழ்ச் செய்திகள், தினக்குரல், உதயன், சுடரொளி, இருக்கிறம் முதலிய ஊடகங்களில் வெளியாகியுள்ளன. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் செயலாளராக 2008ஃ2009 இல் பதவி வகித்த இவர் யாழ் பல்கலைக்கழக தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்று சிறிது காலம் யாழ் பல்கலைக்கழக ஊடக பிரிவில் வருகை விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். அத்தோடு குளோபல் தமிழ்ச் செய்திகளின் ஊடகவியலாளராகவும் இயங்குகிறார். கவிதைகள் தவிர, விமர்சனம், ஓவியம், புகைப்படம் போன்ற பங்களிப்புகளையும் செய்து வருகிறார். குளோபல் தமிழ்ச் செய்திகளில் இவர் பதிவுசெய்த புகைப்படம், செய்திகள், செய்திக்கட்டுரைகள், நேரடி அறிக்கைகள், மக்கள் கதைகள், வீடியோ விவரணங்கள், வானொலிப் பெட்டகங்கள் போன்றன பல ஊடகங்களில் மீள்பதிவு செய்யப்பட்டதோடு வரலாற்றுப் பதிவுகளாகவும் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

எமக்கு எழுதிய இந்தக் கட்டுரைக்காகவும் இதற்கான படங்களுக்காகவுமே இந்த விருதுகள் கிடைக்கப் பெற்றுள்ளன

சாந்தபுரம் :‐ நிலத்திற்காய் அழும் சனங்கள

11 ஆகஸ்ட் 2010

Bookmark and Share

சாந்தபுரம் :‐ நிலத்திற்காய் அழும் சனங்களின் குரல்கள் ‐ குளோபல் தமிழ் செய்திகளுக்காக நவராஜ் பார்த்தீபன்

saanthapuram20vanni2012.jpg

இன்னுமொரு அகதிமுகாமாக திறந்திருக்கிற வெளியில் வெயிலில் அந்த மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். தீராத சாபமாக தொடருகின்ற தடுப்பு முகாம் என்ற சமகால அவலத்தின் மற்றொரு வடிவமாகி விட்ட சாந்தபுரம் மக்கள், தங்கள் காணிக்கு திரும்புவதை பெருங்கனவாக கொண்டிருக்கின்றனர். தீக்குளிப்போம் என்று நிலம் குறித்து உறுதிபடச் சொல்லும் இந்த மக்கள் சமகால வன்னி நிலம் மீதான ஆக்கிரமிப்பின் எதிரான குரலின் அடையாளமாக எனக்குத் தெரிகிறது என்று குறிப்பிடும் குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் நவராஜ் பார்த்தீபன் அண்மையில் தங்கள் சொந்த நிலத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படாது தங்கியிருக்கும் சாந்தபுரம் மக்களை சந்தித்த பின்னர் இந்த கட்டுரையை எழுதியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பார்த்த தடுப்பு முகாங்களை மாதிரித்தான் சாந்தபுரம் மக்கள் தங்கியிருக்கும் அகதிமுகாமும் தெரிகிறது. சாந்தபுரம் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படாமல் கடந்த பல மாதங்களாக தடுக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது சாந்தபுரம் மக்கள், சாந்தபுரம் பாடசாலை எனப்படும் அம்பாள்நகர் கலைமகள் வித்தியாலயத்தில் தடுத்து வைத்திருக்கப்படாது தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த முகாம் திறந்தேயிருக்கிறது. அந்த மக்கள் அந்த முகாமை விட்டு எப்பொழுதும் வெளியேற முடியும். அந்தப் பாடசாலை சாந்தபுரம் கிராமத்தில்தான் இருக்கிறது அந்தப் பாடசாலை அகதிமுகாம் திறந்திருந்தாலும் அதை விட்டு வெளியேறாத மக்கள் தங்கள் காணிகளுக்கு திரும்புவதற்காக தவம் கிடக்கிறார்கள்.

மீள்குடியேற்றம் என்ற நிகழ்ச்சித்திட்டம் பற்றிய மெய்யான முகத்தை சாந்தபுரம் மக்கள்மீதுதான் பார்க்க முடிகிறது. தீராத சாபமாக தொடருகின்ற தடுப்பு முகாம் என்ற சமகால அவலத்தின் மற்றொரு வடிவமாகி விட்ட சாந்தபுரம் மக்கள், தங்கள் காணிக்கு திரும்புவதை பெருங்கனவாக கொண்டிருக்கின்றனர். சமகால வன்னி நிலம் மீதான ஆக்கிரமிப்பின் எதிரான குரலின் அடையாளமாக எனக்குத் தெரிகிறது. சாந்தபுரம் கிளிநொச்சி மாவட்டத்தில் முல்லைத்தீவின் எல்லையில் இருக்கிறது. கிளிநொச்சி நகரத்திலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் இரணைமடுக் குளத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது. சமதரையான மேட்டு நிலமான சாந்தபுரத்திற்கு பக்கத்தில் கனகாம்பிக்கைக ;குளம், இந்துபுரம், பொன்நகர், வசந்தநகர், செல்வாநகர், முறிகண்டி என்று முக்கியத்துவம் வாய்ந்த கிராமங்களும் நகர்த்தெருக்களும் பிரதான தெருக்களும் அமைந்திருக்கின்றன. முக்கியமாக விடுதலைப் புலிகளின் தலமை விமானத்தளம் இந்தப் பகுதிக்குப் பக்கத்தில் இரணைமடுவில் அமைக்கப்பட்டிருந்தது.

வன்னியை கையகப்படுத்தியிருக்கும் சூழலில் ஆக்கிரமிப்பின் கனவு நிலமாக சாந்தபுரமும் அதனை அண்டிய கிராமங்களும் மாறியிருக்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து முறிகண்டியைக் கடந்து கொக்காவில் பகுதி வரை சுமார் 4611 ஏக்கர் காணிகளை முழுமையாக கையகப்படுத்த அரசு திட்டமிட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இது சனங்களின் நிலம். சனங்கள் வாழத்துடிக்கிற நிலம். வன்னி நிலம் எந்தளவுக்கு ஆக்கிரமிப்புக்குள் இருக்கிறது? வன்னி நிலம் மீதான இலக்கு எப்படியானது? வன்னியை ஏன் அரசு கைப்பற்றத் துடித்தது? பேரின அரசின் நிலவெறி எப்படி ஈழமக்களை வாட்டுகிறது என்ற சமகால அவலத்தின் குறியீடாக சாந்தபுரம் எனக்குத் தெரிகிறது. இந்த நிலத்திற்கான சனங்களின் குரல் வலிமையானது. பலமான எதிர்க்குரல்களை உண்டு பண்ணி அதிகாரத்தை நோக்கி நகரும் நிலையிலிருக்கிறது.

இரணைமடுச் சந்தியிலிருந்து சாந்தபுரம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். அந்த சந்தியிலிருந்து சாந்தபுரம் கிராம வீதி சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது. கிராமத்திற்கு செல்லும் தொடக்கத்தில் கனகாம்பிகை அம்மன் ஆலய வீதியை அண்டி சில மக்கள் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 2கிலோ மீற்றர் தூரம் சென்றதும் சாந்தபுரம் பாடசாலை எனப்படும் அம்பாள் நகர் கலைமகள் வித்தியாலயம் தெரிந்தது. திறந்தபடியிருக்கும் அந்த முகாமில் நிறைய கூடாரங்கள் தெரிந்தன. இதற்கு முன்பு நான் சென்ற எந்த முகாங்களும் திறந்திருக்கவில்லை. முகாங்களின் வாசலை தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டிருக்கும். அது போல உள்ளே இருப்பவர்கள் வெளியில் வர முடியாது. அதுவும் தண்டனைக்குரியது. சாந்தபுரம் முகாமில் யாரும் உள்ளே செல்லவும் தடுக்கப்படவில்லை. வெளிச்செல்லவும் தடுக்கப்படவில்லை. மக்கள் காணிகளுக்கு செல்லாது தடுக்கப்பட்டிருக்கின்றனர்.

இன்னொரு தடுப்புமுகாம் என்று சொல்லும் விதத்திலேயே இருக்கிறது. அதுவும் அந்த மக்கள் பிறந்து வளர்ந்த வாழ்ந்த சொந்த கிராமத்தில் அந்த அகதிமுகாம் அமைந்திருக்கிறது. எங்கள் காணிநிலம் பார்க்ககூடிய தூரத்திலேயே இருக்கிறது என்று அந்த மக்கள் குறிப்பிடுகிறார்கள். முன்னால் உள்ள வீதியுடன் 23 வீதிகள் உள்ள சீரான வடிவமைப்பு கொண்டது சாந்தபுரம் கிராமம். வாசலால் செல்லும் பொழுது வெயிலுக்குள் கிடந்து குழந்தைக்கு பாலுட்டும் மெலிந்த தாயையும் கூடாரத்தின் முன்பாக இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சிறுமி ஒருவரையும் பார்த்தேன். வெயில் வெக்கையில் மெலிந்து கறுத்துப் போயிருந்தார்கள்.

அடுக்கடுக்காக கூடாரங்கள்தானிருந்தன. யாருமற்ற மூதாட்டி ஒருவர் கூடாரத்திற்குள் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். எம்மைப் பார்த்து எப்பய்யா எங்களை விடுவார்கள்? என்று கேட்டார். அது அவ்வளவு சாதாரண கேள்வியல்ல. சோகமும் வெறுமையும் நீண்ட காத்திருப்பும் இயலாமையும் என்று பொறுக்க முடியாத நிலையில் வெளிப்பட்டதைப் போலிருந்தது. சிலர் கடுமையான மதிய நேர வெயிலுக்குள்ளும் கூடாரத்திற்குள் தகித்துக் கொண்டிருந்தார்கள். பிறப்பிலே ஊனமடைந்த சகோதரர் ஒருவர் கூடாரத்திற்குள் இருந்தபடி வெயிலைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாடசாலையில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இருக்கிறது. அதில் பத்து அறைகள் உள்ளன. ஒரு அறையில் நான்கு குடும்பங்கள் இருக்கின்றனர். 281 குடும்பங்களை சேர்ந்த ஆயிரம் பேரில் மிகுதிப் பேர் வெளியில் கூடாரங்கள் அமைத்து இருக்கிறார்கள். 200 இற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள். ஒரு சிறிய கூரையற்ற கட்டடத்திலும் சில மக்கள் தங்கியிருக்கிறார்கள். 6 ஏக்கர் பாடசாலை வளாகத்தில் 4 ஏக்கரில் இந்த மக்கள் முழுப்பேரும் தங்கி இருக்கிறார்கள்.

நிவாரணப்பொருட்கள், உடுப்புப்பொதிகள் என்று தம்மிடம் இருக்கும் சில பொருட்களையே சிறிய வேலிகளாக வைத்து பிரித்திருக்கிறார்கள். அவர்களுடன் இருந்து உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது மலம் நாற்றமடிக்கத் தொடங்கி விட்டது. எல்லோரும் தங்கள் மூக்கையும் வாயையும் தங்கள் சீலைத் துணிகளால் மூடிக் கொண்டனர். குழந்தைகளின் வாயையும் மூக்கையும் பெற்றோர்கள் பொத்திக் கொண்டார்கள். பக்கத்தில் உள்ள மலக்கூடம் நாறிக் கொண்டிருப்பதாகவும் அதனால் இருக்க முடியவில்லை எனவும் அறையில் இருந்தமக்கள் குறிப்பிட்டார்கள்.

எங்களது வார்த்தைகளை யாராவது கேட்டார்களா? கேட்டு என்ன செய்வார்கள்? நாங்கள் எங்கள் காணிகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காத்திருக்க பொறுத்திருக்க இனி எங்களால் முடியாது என்ற வார்த்தைகள் அந்த மக்களிடமிருந்து பரவலாக எழுந்தன. அந்த மக்கள் விரக்கியுடன் துயருடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம்பிக்கை தளராது ஆறுதல் அளிப்பது அவர்களது குரல்களை, பிரச்சினைகளை வெளிப்பிடுத்துவது முக்கியமான பணி. கடந்த இருபது வருடங்களாக அந்தக் கிராமத்தில் அவர்கள் வசித்து வருகின்றார்கள். முப்பது முதல் நாற்பது வரையாக அவர்கள் நட்ட தென்னைகளில் தேங்காய்கள் காய்த்து கொட்டியிருக்கின்றன. பலா, மா, வீடு, வாசல் என்று தங்கள் காணி குறித்து மிகுந்த கனவை கொண்டிருக்கிறார்கள்.

எங்களது காணி நிலம் எங்களுக்கு வேண்டும் அதற்காக நாங்கள் சாவோம், தீக்குளிப்போம். இனி எந்த வாகனங்களிலும் நாங்கள் ஏறப்போவதில்லை என உறுதிபட மக்கள் தெரிவிக்கிறார்கள். அந்த மக்களுடன் இருந்து விட்டு பாலசிங்கம் சிவகுமார் என்ற குடும்பஸ்தர் மணல் ஏற்றச் சென்ற பொழுது மணல் இடிந்து விழுந்து மரணம் அடைந்திருக்கிறார். அவர் ஏன் இப்படி மணல் ஏற்றச் செல்ல வேண்டும்? அவரது காணிக்குச் சென்றிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று குறிப்பிட்ட அவரது மனைவி தங்கள் காணிகளை தெருவால் பார்ப்பதற்காக மக்கள் இராணுவத்தினரிடம் அனுமதி பெற்று மயானத்திற்கு சென்றதாக குறிப்பிட்டார். பெண்களும் குழந்தைகளும் மயானம் சென்று காணிகளை பார்த்ததாக குறிப்பிட்டார். சிலர் தங்கள் காணிகளில் போய் உறங்கி விட்டு வருகிறார்கள். பக்கத்தில் இருந்த சில காணிகளை நான் சென்று பார்வையிட்ட பொழுது சிலர் மரங்களின் கீழாக படுத்திருந்தார்கள்.

உக்கிப் போயிருக்கும் கூடாரமும் இறப்பர் பாய்களும் உரப்பைகளும் எங்களிடம உள்ளன. எல்லாவற்றையும் யுத்தகளத்தில் இழந்து வெறும் ஆட்களாக வந்த எங்களிடம் இருக்கும் இறுதிச் சொத்தான கால் ஏக்கர் நிலத்தையும் தருகிறார்கள் இல்லை என வயது முதிர்ந்த தாய் என்னிடம் குறிப்பிட்டார். ஏன் எங்களை விடுகிறீர்களில்லை? எனக்கேடட்டால் மிதிவெடிகள் உள்ளன. துப்பரவு செய்யவில்லை என்கிறார்கள். இதையே கடந்த நான்கு மாதங்களின் மேலாக சொல்லி வருகிறார்கள். ஆனால் முறிகண்டியை சுற்றி நடக்கும் வேலைத்திட்டங்களை பார்த்து நாங்கள் அஞ்சிக் கிடக்கிறோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டார்.

சிலர் தங்கள் காணிகளுக்குச் சென்று குடியேறிய பொழுது திரும்ப உழவு இயந்திரத்தை விட்டு ஏற்றி மீண்டும் பாடசாலையில் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். நிமோனியா, டெங்கு முதலிய தொற்று நோய்கள் சிலருக்கு வந்திருப்பதாக குறிப்பிடுகிறார்கள். குளிப்பு, படுக்கை, சாப்பாடு என்று ஒன்றும் ஒழுங்கில்லாமல் முகாமை விட கேவலமாக இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். சோற்றிலிருந்த இலையான்களை காட்டி அவை மலத்தில் இருந்து விட்டு வந்திருக்கலாம் என அஞ்சுகிறார்கள் சாந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆயிரம் பேருக்கு மேல் இன்னும் வன்னி தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள.

தரப்பாலுக்குள் இருக்க முடியாது அவதியுறும் கர்ப்பணிகளும் மரங்களின் கீழ் வந்து அமர்ந்திருந்தார்கள். கூடாரங்களின் இடையிடையே சில சவுக்குமரங்கள் நிற்கின்றன. தனது மகளும் மருமனும் கிபீர் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதால் அவர்களது இரண்டு குழந்தைகளையும் தானே பார்த்துக் கொள்வதாக லட்சுமி காளிமுத்து என்பவர் சொன்னார். பார்க்கும் தூரத்தில் உள்ள அவர்களது காணியில் பயன்தரு மரங்கள் இந்தக் குழந்தைகளின் இன்றைய தேவைக்கு போதுமானது என என்னிடம் குறிப்பிட்டார். எங்கள் மாமரத்தின் நிழலில் படுத்து உறங்க வேண்டும். தென்னையில் இளநீர் பருக வேண்டும் என்று குறிப்பிடும் இளந்தாய் காலை முதல் மாலை வரை வெயிலில் வேகிக் கொண்டிருப்பதாக சொன்னார். தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களும் வெளிச் செல்லும் படிவங்களை நிரப்பி அனுமதி பெற்று அங்கு வந்திருந்தார்கள்.

தங்கள் காணிகளில் உள்ள மணல், கற்கள் போன்ற வளங்கள் திருடிச் செல்லப்படுவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். படிவெட்டி அதன் வாயிலாக கிணறு வெட்டி இறங்கித் தண்ணீர் பெற்ற நாங்கள் கிராமங்களில் கூலி செய்து தென்னம் பிள்ளைகளும் மாங்கன்றுகளும் வாங்கி வளர்த்ததாக குறிப்பிட்டார்கள். வரும் இராணுவ அதிகாரிகள் எல்லோரிடமும் கால்களில் விழுந்து கும்பிட்டும் தங்கள் காணிகளுக்கு செல்ல அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து வெயிலில் தவம் கிடக்கிறார்கள்.

சாந்தபுரம் மக்களின் தவம், மனமுள்ளவர்களை துயரத்திறகு உள்ளாக்கும். இந்தக் கிராமத்தை பார்க்ககூட முடியாத நிலையில் இருந்து கடும் போராட்டத்தின் மூலம் இந்தப் பாடசாலைக்கு வந்ததாக குறிப்பிடும் இந்த மக்கள் இந்தக் கிராமத்தை விட்டு தாங்கள் செல்லப் போவதில்லை. குண்டுகளை கொட்டி கொன்று பிணங்களாகவே தங்களை அகற்ற வேண்டிவரும் என்று தெரிவித்தார்கள். நிலம் திரும்புவதற்காய் சாந்தபுரம் கிராமமக்களின் குரல்கள் அழுகின்றன. இதைப்போலவே இந்துபுரம், செல்வபுரம், பொன்நகர். வசந்தநகர், முறிகண்டி போன்ற அந்தப் பிரதேச மக்கள் ஒரு வருடத்தை கடந்து பல மாதங்களாக தவம் கிடக்கிறார்கள். பாடசாலையை விட்டு வெளியேறுவதில்லை தடுப்பு முகாங்களை விட்டு வெளியேறுவதில்லை எங்கள் காணி நிலத்திற்கு திரும்பியே தீருவோம் என்றுதான் இந்த மக்களின் வலிமை மிகு குரலும் இன்று நம் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் நிலத்திற்கான போராட்டமுமாக தெரிகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64697/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.