Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1983ம் ஆண்டு யூலை மாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலைமகள் ராமரத்னம் குறு நாவல் போட்டி-2011

பரிசு பெற்ற கதை

1983ம் ஆண்டு யூலை மாதம் நடந்த சம்பவத்தை எழுத்தாளர் குரு அரவிந்தன்

கதையாக்கியிருக்கின்றார். .

அது கொழும்பு துறைமுகம்…

ஒவ்வொருவராக வரிசையில் நின்று உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டோம். எங்களுக்காக துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலின் படிகளில் ஏறும்போது நங்கூரி என்ற பெயர் பெரிதாக அந்தக் கப்பலில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் எழுதியிருந்ததை அவதானித்தேன். 1983ம் ஆண்டு யூலை மாதம் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகளைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்வதற்காக அந்தக் கப்பல் இந்தியாவில் இருந்து நல்லெண்ண விஜயத்தில் வந்திருந்தது. நீண்ட நாட்களின்பின் சிரித்த முகத்தோடு ‘வாங்க வாங்க’ என்று கப்பலின் வாசலில் நின்றவர்கள் எங்களை அன்போடு வரவேற்றார்கள். அவர்களின் சிரித்த முகத்தையும், அந்த அன்பான உபசரிப்பையும் பார்த்ததும் மருண்டு போயிருந்த எங்கள் மனசுக்குச் சற்று ஆறதலாக இருந்தது மட்டுமல்ல, பாதுகாப்பான ஒரு இடத்திற்கு வந்துவிட்ட நிம்மதியும் அந்தக் கணமே ஏற்பட்டது. சொந்த மண்ணிலேயே அகதியாக்கப்பட்ட துரதிர்ஷ்டத்தை நினைத்தபடி அருகே நின்ற அக்காவின் முகத்தைப் பார்த்தேன், எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாய் ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் என்ற கவலை அவள் முகத்தில் படர்ந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக நடந்த கலவரத்தின் பாதிப்பால், உயிர் தப்பினால் போதும் என்ற பயத்தில் அக்காவின் பாதியுயிரே போயிருந்தது. கப்பலின் கீழ்த்தளத்தில் வரிசையாக இருந்த படுக்கைகளில் அக்காவிற்கு ஒரு படுக்கையை ஏற்பாடு செய்து கொடுத்து, நிம்மதியாகப் படுக்கச் சொன்னேன். தூக்கமில்லாத இரவுகளாலோ என்னவோ படுத்த உடனேயே அக்கா அயர்ந்து தூங்கிவிட்டாள்.

அக்கா தூங்கியதும், அப்போது மாணவப் பருவத்தில் இருந்த நானும் எனது நண்பர்களும் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்றோம். கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலரும் மேற்தளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். யாரை நம்பி ஒன்றாக, ஒற்றுமையாக வாழலாம் என்று நினைத்தார்களோ, அவர்களே கைவிட்டு விட்டபோது, வேலியே பயிரை மேய்ந்துவிட்ட ஏமாற்றம் எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதிந்திருந்தது. இனியும் இவர்களோடு ஒற்றுமையாக வாழமுடியாது, வாழவிடமாட்டாரகள் என்ற உண்மையும் இந்த இனக் கலவரத்தின்போது தெளிவாகப் புரிந்தது. உறவை, உயிரை, உடமையை, மானத்தை என்று பலவிதமான இழப்புகளின் பாதிப்பு ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தாலும், அந்த சோகத்திலும் உயிர்தப்பி சொந்த மண்ணை நோக்கிப் பாதுகாப்பாய்ப் போகிறோமே என்ற நிம்மதி அவர்கள் முகத்தில் பிரதிபலித்தது.

யாரோ அழும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அவளுக்கு அருகே நின்ற அவன் விறைத்தபடி அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். கணவனாய் இருக்குமோ என்று நினைத்துப் பார்த்தேன். கணவனாய் இருந்தால் அவளை அணைத்து அவளுக்கு ஆறுதலாவது சொல்லியிருப்பானே, ஏன் இப்படி வேண்டாத யாரோபோல எட்டநிற்கிறான். அவளோ வெறி பிடித்தவள்போல ஓவென்று கத்தி அழுவதும் பின் அடங்கிப் போவதுமாய் இருந்தாள். அங்கே நடப்பது ஏதோ அசாதாரண நிகழ்வுபோல எனக்குத் தெரிந்தது. அவசரமாக கீழ்த்தளத்திற்கு ஓடிவந்து தூங்கிக் கொண்டிருந்த அக்காவை எழுப்பி அங்கே நடந்ததை மெதுவாக சொன்னேன். பெண்களின் துயரத்தைப் பார்த்துக் கொண்டு ஆசிரியையான அக்கா ஒருபோதும் மௌனமாய் இருந்ததில்லை. பதட்டத்தோடு அக்கா துள்ளி எழுந்து மேற்தளத்தில் இருந்த அவர்களை நோக்கிச் சென்றாள். நானும் கூடவே சென்றேன்.

அவர்களுக்குள் வாக்குவாதம் சூடேறியிருந்தது. அவள் கைகளை அகல விரித்து அவனைத் தடுத்தபடி ஏதோ உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் சொல்வதைக் கேட்கும் நிலையில் அவனோ இல்லை. ஆவேசம் கொண்டவளாய் திடீரென அவளைத் தள்ளிவிட்டு கப்பலின் ஓரம் நோக்கி ஓடிவந்தான். எங்களைக் கடந்து செல்ல முற்பட்டபோது, எதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தில் எதிரே வந்த அக்கா அவனைத் தடுத்து நிறுத்தினாள்.

‘என்ன, என்னாச்சு..?’

‘என்னை விடுங்கோக்கா’

‘அப்படி என்ன கோபம், அவள் உன்னை ஏசினாளா?’

‘இல்லையக்கா, என்னை விடுங்கோ’

‘ஏன் என்ன செய்யப் போகிறாய்?’

‘நான் தற்கொலை செய்யப் போறேன். மானம் போச்சு, என்னால இனி உயிரோட இருக்க முடியாது.’ அவன் ஆவேசமாக கைகளை விடுவிக்க உதறினான்.

தற்கொலையா? எனக்கு உதறல் எடுத்தது, வாக்குவாதப் படும்போது அவள் ஏதாவது மனம் நோகக்கூடியதாகச் சொல்லியிருப்பாளோ? அந்த ஆத்திரம் தாங்கமுடியாமல் இப்படி முடிவு எடுத்திருப்பானோ என்று என் மனசு அலைபாய்ந்து கொண்டிருக்கையில்,

‘சரி நான் விடுகிறேன், எனக்கு என்ன நடந்தது என்று சொல்லலிவிட்டு அப்புறம் குதி’ என்றாள் அக்கா.

அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை., சட்டென்று அடங்கிப் போய்விட்டான். அவனது இயலாமையின் விசும்பும் ஓசை மட்டும் மெதுவாய்க் கேட்டது. தற்கொலை என்பது ஒரு கணத்தில் சடுதியாக எடுக்கும் சந்தர்ப்பம் சார்ந்த முடிவு. சிந்திக்க நேரம் கிடைத்தால் அந்த முடிவை மாற்றிக் கொள்ள நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது.

அவள் இப்போது தயங்கித் தயங்கி அருகே வந்தாள்.

‘நீங்க..?’ என்றாள் அக்கா.

‘நான் தான் இவருடைய மனைவி’ அவனைப் பாரத்துக் கொண்டே தயக்கத்தோடு சொன்னான்.

‘இல்லை, இல்லை இல்லை..!’ அவன் மீண்டும் ஆத்திரத்தில் கத்தினான்.

‘இது உன்னுடைய மனைவி இல்லையா?’ அவளைக் காட்டி அக்கா கேட்டாள்.

‘இவள் எல்லாம் ஒரு பெண்டாட்டியா? மானம் கெட்டவள், சொல்லவே வெட்கமாயிருக்கு!’ வெறுப்பால் அருவருப்போடு அவள்மீது ‘தூ’ என்று எச்சில் துப்பினான்.

அவளோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடிபட்ட மான்போல, ஒரு கணம் கூனிக்குறுகி அதிர்ச்சியில் அப்படியே ஒடுங்கிப் போய்விட்டாள்.

‘பாவி, உன்னுடைய உயிரைக் காப்பாற்றத்தானே என்னை நானே பலி கொடுத்தேன், இப்ப என்மேல பழிபோடுறியே..!’ அவள் ஓவென்று தலையில் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்து அழுதாள். இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டித் தங்களின் இயலாமையை வெளிப்படுத்தத் தொடங்கவே, அவனது பழிச்சொல் தாங்கமுடியாமல் அவளும் கடலில் குதித்து விடுவாளோ என்ற பீதி அக்காவின் முகத்தில் தெரிந்தது.

மனசில் உள்ளதைக் கொட்டித் தீர்க்கட்டும் என்று அவர்களுக்காக அக்கா காத்திருந்தாள். அவளது கன்னத்திலும் கழுத்திலும் பிறாண்டியது போன்ற கீறல் காயம் காய்ந்து சிவந்து போயிருந்தது. மானம் போனபின் எதற்காக உயிர்வாழவேண்டும் என்று அவர்கள்; நினைத்திருக்கலாம். அவர்களின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் என்னவாய் இருக்குமென்று ஓரளவு புரியலாயிற்று.

அவள் விம்மி விம்மி அழுவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், அவளை மெல்லத் தாங்கி அழைத்துச் சென்று ஆசுவாசப் படுத்தி ஓரிடத்தில் அமரவைத்தாள் அக்கா. அவளைக் கண்காணிக்கும்படி என்னிடம் சைகை செய்துவிட்டு கணவனிடம் சென்று விசாரித்தாள்.

இனக்கலவரத்தின்போது காடையர் கூட்டம் அவனைப் பிடித்துக் கொள்ள, அவனுக்கு முன்பாகவே அவளைத் துகிலுரிந்து மானபங்கப்படுத்தி விட்டதாக அவன் முறையிட்டான்.

‘நீ ஒரு ஆண்பிள்ளைதானே, அவளைக் காப்பாற்றியிருக்கலாமே?’ என்றாள் அக்கா.

‘என்னாலே முடியலையே!’

‘அவளைக் காப்பாற்ற ஏதாவது முயற்சியாவது நீ செய்திருக்கலாமே?’

‘எப்படியம்மா முடியும், அவங்க கூட்டமாய் வந்தாங்க, கையிலே கத்தி, துப்பாக்கி, சைக்கிள் செயின் என்று எல்லாம் கொண்டு வந்தாங்க’

‘இரண்டுபேரும் தப்பியாவது ஓடியிருக்கலாமே’

‘ஊரடங்கு சட்ட நேரம் தெரு முனையிலே இராணுவம் கடமையில் இருந்தாங்க, அந்தப் பக்கம் ஓடிப்போனால் சுட்டுப் போடுவாங்க, அதனாலே..!’

‘அதனாலே..?’

க்ட்ட்ப்://2.ப்ப்.ப்லொக்ச்பொட்.cஒம்/_Wன்ற்க்Tx9ய்xஉஏ/Tஈ1xஆK02ற்xஈ/ஆஆஆஆஆஆஆஆஆC8/4Jற்2MYப்HயெM/ச்400/ணஙோரி+-+4.JPG

‘மகனையும் தூக்கிக் கொண்டு பின்பக்க வாசல் கதவால் ஓடி ஒளியப் போனபோதுதான் அவங்கள் எங்களைப் பிடிச்சுக் கொண்டாங்கள். என்னைக் கட்டிப்போட்டிட்டு என் கண் முன்னாலேயே…’

மேற்கொண்டு எதையும் கேட்க அக்கா விரும்பவில்லை. ஆனாலும் அவன் தொடர்ந்தான்.

‘நான் திமிறினேன், துப்பாக்கியாலே எனது மண்டையிலே ஒரு போடு போட்டாங்க, நான் மயங்கிப் போயிட்டேன். அப்புறம் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது..!’

‘அப்புறம் எப்படித் தப்பி வந்தீங்க..?’

‘நான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபோது, கசக்கிப்போட்ட மலர்போல கலைந்த முடியோடு அவள் அழுதபடி மூலையிலே உட்கார்ந்திருந்தாள், காலையிலே ஊரங்குச் சட்டத்தை ஒரு மணிநேரம் தளர்த்தினாங்க, அப்போ தப்பி ஓடிவந்து அகதிகள் முகாமிலே தஞ்சம் புகுந்தோம்..’

அக்கா பதில் ஏதும் சொல்லவில்லை.

யார்மீதும் பிழை சொல்ல முடியாத நிலமை. அவர்களின் பையனைத் தூக்கிக் கொண்டு, அவளையும் அணைத்து ஆசுவாசப் படுத்தியபடி கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றாள். அவளுக்கு ஆறதல் சொல்லி அவளை அமைதிப் படுத்தினாள். சோகமும், வலியும் வேதனையும் வெறுப்பும் மிக்கதாய் அந்தக் கப்பல் பயணம் இரண்டு நாட்கள் தொடர்ந்தது.

தமிழர்கள் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான வடபகுதியில் உள்ள காங்கேயன்துறை துறைமுகத்தில் நாங்கள் வந்து இறங்கியபோது அவளும் எங்களுடன் இறங்கினாள். அக்காவின் ஆலோசனையை ஏற்று மனம் தெளிந்து, தற்கொலை முயற்ச்சியைக் கைவிட்டிருந்தாள். தற்காலிக அகதிகள் முகாமில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மாணவியான அக்காவின் மகள் ரோசாவிடம் அவர்களுக்கு நடந்ததைகூறி அவர்களை அவளிடம் ஒப்படைத்தோம்.

அந்தக் கப்பலில் வந்த ஒவ்வொரு பயணிகளும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். அது போன்ற பல உண்மைச் சம்பவங்களை அவலப்பட்டு வந்த பலரிடம் நேரில் கேட்டு அறிந்து கொண்டதாலோ என்னவோ கொஞ்ச நாட்களாக எதிலும் நாட்டமில்லாமல் ரோசா மனம் கலங்கிப் போயிருந்தாள். சில நாட்களின்பின் தானும் ஒரு போராளியாக மாறப்போவதாக வீட்டிலே சொல்லிவிட்டு அக்காவின் மகள் ரோசாவும் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டாள். அப்போதைய சந்தர்ப்ப சூழ்நிலையில் அவளைப் போன்ற பலர் சென்ற பாதை சரியானதா தவறானதா என்பதைச் சிந்திக்க இடம் தரவில்லை. தமிழர்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏதாவது தற்பாதுகாப்பு முறை ஒன்று வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட எல்லோரது குறிக்கோளாகவும் இருந்தது. அதை அடைவதற்குத் தற்பாதுகாப்புப் போராட்டமே ஏற்றதாகவும் இருந்தது. ஆயுதம் தாங்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட எதிரிக்கு அகிம்சை என்றால் என்னவென்று புரியவில்லை. அகிம்சை மூலம் புரியவைக்கப் பலமுறை முயன்றபோதும் அது தோல்வியிலேயே முடிந்தது. தமிழ் இனத்தை அழிவில் இருந்து காப்பாற்றப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்த ரோசாவின் மரணச்செய்தி வந்தபோதும் அக்கா கலங்கவில்லை. ஆக்கரமிப்பு இராணுவத்திடம் அகப்பட்டு, மானமிழந்து கோழை போலச் சாவதைவிட, தனது மகள் மாவீரராய் களத்தில் போராடி இறந்து போனதில் பெருமைப்பட்டுக் கொண்டாள் அக்கா. எந்தப் பெண்ணைத் தற்கொலை முயற்சியில் இருந்து அக்கா காப்பாற்றினாவோ அந்தப் பெண் இப்போது வன்னியில் உள்ள முதியோர் காப்பகத்தின் காப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அவளது கணவனோ மனநோயாளியாய் மனநோயாளர் காப்பகத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அன்று சிறுவனாக இருந்த அவர்களின் மகன் இன்று மணலாறு களமுனையில் முனைப்போடு போராடும் ஒரு தற்பாதுகாப்புப் போராளியாகத் தன்னைத்தானே அர்ப்பணித்து நிற்கின்றான். அந்த வலியும், வேதனையும் அனுபவித்த அவர்களுக்குத்தான் புரியும்.

இனக் கலவரங்களின் போது மட்டுமல்ல, மதம் பிடித்த யானைபோல, வெறிபிடித்த ஒருசில அரசியல் வாதிகளால் எத்தனை தமிழ் குடும்பங்கள் இன்று சீரழிந்து போயின. வேண்டாத விதி அவ்வப்போது வலியவந்து ஒவ்வோர் குடும்பத்திலும் விளையாடிக் கொண்டே இருக்கிறது. மனிதநேயமற்ற ஆயுத விற்பனையாளர்களால் அப்பாவி உயிர்கள் பறிக்கப்பட்டு இழப்புக்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. சரி, பிழை யாரறிவார்?

-விகடன் தீபாவளி மலரில் வெளிவந்த இக்கதை

Edited by கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.