Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி, பொறுப்புக்கூறும் தன்மை நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்

Featured Replies

நீதி, பொறுப்புக்கூறும் தன்மை நிரந்தரத் தீர்வுக்கு அவசியம்

- பிரித்தானிய தமிழர் பேரவை

நீதி மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை என்பவை வறுமை மற்றும் போலியான அபிவிருத்தி என்னும் பெயரில் விட்டுக் கொடுக்கப்படவோ அல்லது பதிலீடு செய்யப்படவோ முடியாதவை. பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் புனர்வாழ்வு ஆகிய இரண்டும் இலங்கையில் ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அவசியமாகும் என பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

சமகால அரசியல் நிலமைகளை விளக்கி பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

நீதி மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை என்பவை வறுமை மற்றும் போலியான அபிவிருத்தி என்னும் பெயரில் விட்டுக் கொடுக்கப்படவோ அல்லது பதிலீடு செய்யப்படவோ முடியாதவை. பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் புனர்வாழ்வு ஆகிய இரண்டும் இலங்கையில் ஒரு நிரந்தரத் தீர்வுக்கு அவசியமாகும்.

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் உரிமை மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்காக தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களினது தார்மீக அடிப்படையிலான நிலைப்பாட்டுக்கு பிரித்தானிய தமிழர் பேரவை புலம்பெயர் தமிழ் மக்களினது சார்பாக மீண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றது.

போர்க்குற்றம் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றுச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்கா அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச ஆகியோரினால் வழிநடத்தப்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஏமாற்று நாடகத்தை வெளிப்படுத்தியமைக்காக 'ஹெட்லைன்ஸ் ருடே' தொலைக்காட்சிக்கும் நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

சிறிலங்கா மீது பொருண்மியத் தடை விதிக்க வேண்டும் என்றும், அனைத்துலக ரீதியான போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் கூறிய கருத்தை, அண்மையில் கோத்தாபய ராஜபக்ச 'ஹெட்லைன்ஸ் ருடே' தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தாக்கிப் பேசியிருந்தார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் ஜெயலலிதாவினது அறிக்கைகள் என்பவை அவரது அரசியல் ஆதாயத்திற்கானவை எனவும், இது நியாயமற்றது, ஏனெனில் இலங்கைத்தீவில் சிங்கள - தமிழ் - முஸ்லீம்கள் என்பவற்றுக்கு அப்பால் நாம் எல்லோரும் இலங்கையர்கள். வேறு எவரையும்விட நாம் எமது சொந்தப் பிரஜைகளில் அக்கறை கொள்ளுகின்றோம். இது (தமிழ்நாடு சட்டப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமும், ஜெயலலிதாவின் அறிக்கையும்;) உண்மைத் தன்மைகளை அறியாமல் செய்யப்பட்டதாகும்.' என்று கொழும்பில் 'ஹெட்லைன்ஸ் ருடே' தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

'ஹெட்லைன்ஸ் ருடே' தொலைக்காட்சியினால் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படமானது, போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்ட பொய்ப் பரப்புரையைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. எவ்வாறு சுமார் மூன்று இலட்சம் சிங்களப் படையினர் வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் வாழ்விற்குள் ஊடுருவி இருக்கின்றனர் என்பதையும், எவ்வாறு அவர்களின் வாழ்வினை நாளாந்தம் அந்தப் படைகள் கட்டுப்படுத்துகின்றன என்பதையும் இந்த ஆவணப்படம் காட்டியிருந்தது.

இந்தப் படையினர்தான் பொது நிருவாகத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். உள்ளுர் மக்கள் நீதி மற்றும் சட்ட அமுலாக்கம் பற்றிய சேவைகளில் அதிகாரமற்றவர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். படை உட்கட்டுமானங்கள் மற்றும் வழிபாடு செய்யும் பௌத்தர்கள் இல்லாத இடங்களில் கட்டப்படும் பௌத்த கோவில்களுமே இந்த 'ஹெட்லைன்ஸ் ருடே' தொலைக்காட்சியினால் கண்டறியப்பட்ட அபிவிருத்தி ஆகும். இவை படைத்துறை ஆக்கிரமிப்பை வலுப்படுத்துகின்றன.

தமிழ் மக்களின் நிலங்கள் மீதான சிங்கள ஆக்கிரமிப்பானது, நீண்டகால படை ஆக்கிரமிப்பை வலுப்படுத்தத் தேவையான உட்கட்டுமானத்தை நிறுவுவதற்காகவே இந்த அபிவிருத்தி என்ற நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக குரல் கொடுத்திருப்பதுடன், இலங்கையில் உள்ள தமிழ் மக்களினது நிதர்சனமான வாழ்க்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ் மக்களின் தற்போதையை நிலமையை இரண்டாம் தரப்பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ளது. சிங்கள அரசாங்கத்தினாலேயே பௌத்த விஹாரைகள், படை முகாம்கள் ஆகியவை கட்டப்பட்டு வருவதாகக் கூறும் இந்த அறிக்கை, தமிழர் தாயகத்தில் சிங்களவர்களை குடியேற்றி வருவது தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஆவண வகைப்படுத்தலை தயாரித்துள்ளது.

சிங்கள அரசாங்கமானது இந்தத் திட்டங்களிற்கான செலவுகளை அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வுக்கான செலவுகள் என்று காண்பித்து வருகின்றது. அரசாங்கத்தின் இந்த போலி அபிவிருத்திப் பரப்புரையை தமிழ் மக்கள் நிராகரித்திருப்பதுடன், தமது சொந்த விடயங்களை தாமே கவனித்துக் கொள்வதற்கும், தமது சொந்த நிலத்தினை தாமே பாதுகாப்பதற்கும் அரசியல் உரிமைகள் வழங்கப்படுவதே தற்போதையை தேவையாகும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் கொழும்பின் டெய்லி மிரர் பத்திரிகைக்கு செவ்வி வழங்கியிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய மற்றும் படைப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கபில ஹெந்தவித்தாரண ஆகியோரது பிடியில் இருப்பவருமான கே.பத்மநாதன், புலம்பெயர் தமிழ் மக்கள் பழிவாங்குவதிலேயே குறியாக இருக்கின்றார்களேயன்றி, வழக்கு கிழக்கு தமிழ் மக்களின் நல்வாழ்வில் அக்கறையற்று இருக்கின்றார்கள் எனக் கூறியிருந்தார்.

இந்த அப்பட்டமான பொய்யானது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் மற்றொரு தோல்வியடைந்த நடடிக்கையாகும். கடந்த காலாண்டில் மட்டும் வெளிநாட்டுப் பண வருகை 27 வீதம் அதிகரித்திருப்பதாக இலங்கையின் மத்திய வைப்பகம் அறிவித்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போதிய புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரச அதிபரிடம் வினவியபோது, அதற்கு அவர் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தனிப்பட்ட வைப்பகக் கணக்குகளிற்கு புலம்பெயர் மக்களால் போதிய பணம் அனுப்பப்படுவதாகக் கூறினார். அவரது இந்த இறுக்கமான பதிலானது அவரை அறியாமலே புலம்பெயர் மக்கள்தான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் கவனித்து வருகின்றார்கள் என்பதையும், அவர்களது புனர்வாழ்வு நடவடிக்கைகளில் அரசாங்கம் பொறுப்பற்று இருப்பதையும் காட்டியிருக்கின்றது.

தமிழ் மக்களின் பகுதிகளில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பிற்காக வெளிநாடுகளால் வழங்கப்படும் அனைத்துலக உதவியானது, பௌத்த விஹாரைகள், படைமுகாம்கள் மற்றும் போர் வெற்றி நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்காகவே பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், நன்கொடையளிக்கப்படும் கணிசமான நிதி எந்தப் பொறுப்பு கூறலும் இல்லாத நிலையில் தெற்கின் செயற்திட்டங்களிற்கும், அரசாங்க ஆதாரவாளர்களினது தனிப்பட்ட கணக்குகளிற்குமே சென்றடைவதாக சந்தேகிக்கப்படுகின்றது.

போரில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் மற்றும் மாற்று வலுவுள்ளோரை (அங்கவீனர்கள்) புலம்பெயர் தமிழ் மக்களே கவனித்து வருகின்றனர் என்பதை இலங்கைத்தீவிலுள்ள தமிழ் மக்கள் அறிவர். சிறீலங்கா அரசாங்கமானது வடக்குகிழக்கில் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுளுக்கு தடை விதித்து இருப்பதுடன், உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளையும் மோசமாகக் கட்டுப்படுத்தி இருக்கின்றது.

புலம்பெயர் தமிழ் மக்களால் அனுப்பப்படும் பணத்தை மோசடி செய்வதற்கே கே.பத்மநாதனை முதன்மைப்படுத்தி நேர்டோ (NERDO) என்ற அமைப்பை சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் உருவாக்கி இருக்கின்றார்கள். தாம் அனுப்பும் பணம் தமது சொந்த நிலம், பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை அழிப்பதற்கு பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்யும் வழிகளினூடாக மட்டுமே புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பணத்தை அனுப்புவர்.[

சிறிலங்கா அரசாங்கமானது தனது 'அரச தலைவர் செயலணிக்குழு' (PTF) மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் ஊடாக அனைத்துலக மனிதநேய அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் போன்றவற்றின் புனர்வாழ்வு நடவடிக்கைகளை முடக்கி வைத்திருக்கின்றது.

சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பிற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் ஒருபோதும் பணம் அனுப்பப்போவதில்லை. இவ்வாறான அமைப்பின் ஊடாகப் பெறப்படும் பணத்தை தமது படைப் புலனாய்வு உட்கட்டுமானத்தை அபிவிருத்தி செய்யவும், பலப்படுத்தவும், தமிழ் மக்களை மேலும் அடக்குவதற்குமே பயன்படுத்தும்.

சிங்கள அரசாங்கத்தினால் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் மத்தியிலும் புலம்பெயர் சமூகம் தமது உறவுகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்யும் வகையில், அனைத்துலக மற்றும் உள்ளுர்

நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு முயற்சி எடுத்து வருகின்றது.

அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு கோரிக்கை விடுப்பது பயனற்றது எனவும், இது எதனையும் தமிழ் மக்களிற்கு கொண்டுவரப் போவதில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச அண்மையில் தனது செவ்வியில் கூறியிருந்தார்.

இது தமிழ் மக்களை அச்சுறுத்தி, தமிழர் தாயகத்தை அடக்கியாளும் போர்க் குற்றவாளிகளினது மனோநிலையை வெளிப்படுத்துகின்றது. குற்றங்களில் இருந்து தாம் தப்பித்துக் கொள்வதற்கான பரிமாற்றாக தமிழ் மக்களது சுதந்திரம், மற்றும் நல்வாழ்வை பேரம் பேசுவதற்காக, தமிழ் மக்களின் தாயகத்தில் சிங்களப் படைகளை அதிகரிக்கும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறி தமிழ் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

இலங்கைத்தீவில் நிரந்தரமான ஒரு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நீதி விசாரணை ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாதது என்று பிரித்தானிய தமிழர் பேரவை திடமாக நம்புகின்றது. எந்தவொரு நீதி முறைமையினதும் இலக்கு குற்றவாளிகளை தண்டிப்பதேயாகும். இதன் மூலம் அதே குற்றத்தை மீண்டும் எவரும் செய்யாது இருப்பதுடன், பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு (இலங்கை தமிழ் மக்களிற்கு) பொருத்தமான பரிகாரத்தை வழங்கவும் முடியும்.

நீதியை மறுப்பதன் மூலம், சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களிற்கு இழைத்த குற்றத்தைப் பின்பற்றி ஏனைய போர்க்குற்ற நபர்கள் செயற்படுவதற்கும், குற்றத்திலிருந்து தப்பிக்கொள்வதற்குமான ஒரு முன்னுதாரணத்தை உலகம் ஏற்படுத்திவிடக்கூடாது.

அனைவருக்கும் இந்த உலகம் சமன் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தமிழ் மக்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவதுடன், நீதி மற்றும் சுதந்திரத்திற்கான ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். கோட்டாபய ராஜபக்ச போன்ற கொடுங்கோலர்கள் அனைத்துலக நீதி முறைமையைச் சந்திக்க வேண்டும். ஏனெனில் இலங்கையில் ஒரு சுதந்திரமான நீதி விசாரணை இடம்பெற வாய்ப்பில்லை.

நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கும், தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் ஒரு அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணை மற்றும் பன்னாட்டு மனிதாபிமான தலையீடு மிகவும் அவசியமானதாகும்.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={C2D4061F-D2CB-43B6-971D-4FAFD0C51034}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.