Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலங்கோலமான ஆங்கில ஆர்ப்பாட்டம்

Featured Replies

அலங்கோலமான ஆங்கில ஆர்ப்பாட்டம்

-சச்சிதானந்தன் சுகிர்தராஜா-

ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்று பாடப்புத்தகங்களில் படித் திருப்பீர்கள். லண்டனும் பார்மீங்கமும் தீக்கிரையானபோது நான் அந்த அரசன் போல் இசைக்கருவியில் மெனக்கெடவில்லை. எல்லாரையும் போல் ஆங்கிலக் கலவரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் நான் வசிக்கும் இடத்திலிருந்து பத்துப் பேருந்து நிற்குமிடங்களைத் தாண்டியிருக்கும் நகர் மையக் கடைகள் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தன.

என்னுடைய இங்கிலாந்து வாழ் நாள் அனுபவத்தில் இது நான் பார்க்கும் இரண்டாவது பெரிய கலவரம். முதலாவது 1981இல் நடந்தது. இவை இரண்டுக்குமிடையே சில இணைவுகளும் வேறுபாடுகளும் உண்டு. அவற்றை இக்கட்டுரையில் இணைத்திருக்கிறேன்.

ஏழு நாட்களாகத் திக்குத்தெரியாமல் நடந்த இந்தக் கலவரத்திற்கு உடனடிக் காரணம் ஒருவேளை மறந்துபோயிருக்கலாம். காவல் படையினரால் மார்க் டூகன் என்னும் கறுப்பர் கொலைசெய்யப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றது மட்டுமல்ல, இந்தக் கொலைபற்றிக் காவல் துறையினர் கொடுத்த தப்பிதமான தகவல்கள், அதன் பின் குடும்பத்தினருடன் சற்று அலட்சியமாகக் காவலாளர்கள் நடந்துகொண்ட விதம் கறுப்பர்களிடையே ஒரு அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. லண்டனில் மட்டுமல்ல இங்கிலாந்து பூராவுமே கறுப்பர்கள், காவல் துறையினருக்கிடையேயான உறவு அவ்வளவு சுமூகமானதல்ல. தெருக்களில் காவல் துறையினரால் சும்மா நிறுத்திச் சோதிக்கப்படுகிறவர் களில் அதிகமானவர்கள் கறுப்பர்களாய்த்தான் இருப்பார்கள். ஒரு புள்ளிவிவரம் ஒவ்வொரு ஆங்கிலேயருக்கும் 28 கறுப்பர்கள் சோதனைக்குள்ளாகிறார்கள் எனத் தகவல் தெரிவிக்கிறது. இந்த நீண்ட நாளைய கசப்பான உறவு மேலும் சிதைவடைய மார்க் டூகனின் மரணம் வினையூக்கியாக அமைந்தது.

இந்த ஆண்டு கலவரங்களின் ஆண்டு. முதலில் டூனிசியா, பிறகு எகிப்து, தொடர்ந்து பாரேன், லிபியா, சிரியா என்று ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த அரேபியப் புரட்சிக்கும் ஆங்கிலக் கலவரத்திற்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே தலைவர்கள் இல்லாத போராட்டங்கள். இரண்டுமே தாறுமாறான அரசியல் குறியீடுகள் கொண்டவை. இரண்டுமே இணைய, சமூக அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்டவை. இரண்டுமே ஒன்றுக்கொன்று மாறான கும்பல்களால் வழிநடத்தப்பட்டவை. இவற்றுடன் அரேபிய ஆங்கிலக் கிளர்ச்சிகளின் இணைப்போக்குகள் நின்றுவிடுகின்றன. ஒருவிதத்தில் இந்த அரேபியப் புரட்சிகளுடன் ஆங்கில உணர்ச்சிக் கொந்தளிப்பை இணைத்துப் பார்ப்பது தவறாகவும் படலாம். அரபு நாடுகளில் நிகழ்வது அரசியல் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் சுயாதீனத்திற்காகவும் மனித உரிமைகளுக்காகவும் நடத்தும் போராட்டம். இவற்றுடன் ஒப்பிடும்போது ஆங்கிலக் குழப்பம் கண்டிக்காமல் வளர்க்கப்பட்ட செல்லப் பிள்ளைகளின் சிணுங்கல்போல் தென்படுகிறது. மேற்கு ஆசியாவில் வாக்கு உரிமைக்காகத் தீக்குளிக்கத் தயாராக இருக்கிறார்கள். இங்கே தட்டைத் திரைத் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்காகக் கடைகளைத் தீக்கிரையாக்கியிருக்கிறார்கள்.

கோபதாபங்கள் அரசியல் கருவியாகிய கதை

எந்தப் புரட்சிக்குப் பின்னும் ஒரு கணிசமான அரசியல் காரணம் இருக்கும். இந்த ஆங்கிலக் கலவரத்தில் தெளிவான அரசியல் எண்ணயியல் நிலைப்பாடுகள் இல்லை. இந்தக் கலவரக்காரர்கள் ஒரு தீர்க்கமான அரசியல் கருத்தியலையோ அல்லது தெளிவான குறிக்கோளையோ அல்லது பின்பற்றத்தக்க செயல்முறைத் திட்டங்களையோ முன்வைக்கவில்லை. சமூகத்தின் மீது கொண்ட கடுஞ்சினத்தை, நுகர்வோர் கலாச்சாரம் ஏற்படுத்திய ஏமாற்றத்தை, அரசு நிறுவனங்கள் முக்கியமாகக் காவல் துறையினர்மீது உள்ள வெறுப்பை ஒரு அரசியல் முறையாவணமாக (instrument) உபயோகித்திருக்கிறார்கள். இவர்கள் கடைகளைக் களவாடவில்லை. சூறையாடியிருக்கிறார்கள். சூறையாடலை ஓர் அரசியல் கோரிக்கைக் கூற்றாக மாற்றியிருக்கிறார்கள். சூறையாட்டம் ஓர் அரசியல் கருவியாக அர்ஜெண்டினாவில் 2001இல் உபயோகிக்கப்பட்டது. மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துகளை ஆளும்கட்சி தனியார் உடமையாக்கி நாட்டின் செல்வத்தை நிர்மூலமாக்கியபோது பாவிக்கப்பட்ட சொல் ‘திட்டமிட்ட பறிப்பு’ அர்ஜெண்டினிய மக்கள் திரளாக அங்காடிகளை, பொருட்களை அபகரித்தபோது அதற்கு அரசியல் அங்கீகாரம் கொடுத்து இந்தக் கொள்ளைச் செயலை வர்ணிக்க இதே வார்த்தைதான் உபயோகிக்கப்பட்டது. ஆங்கிலக் கலவரம் மக்களின் கோபவெடிப்பை ஓர் அரசியல் செயல்முறையாக மறு உருவாக்கம் (re-configure) செய்திருக்கிறது.

ஒருவிதத்தில் பார்க்கும்போது இந்த ஆங்கிலச் சீற்றம் அகப்பட்டதை அள்ளிக்கொண்டுபோகும் இன்றைய ஆங்கிலக் கலாச்சாரத்தின் அறிகுறி என்றுபடுகிறது. வங்கியாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து காட்டியதைத்தான் இந்தக் குழப்பக்காரர்கள் செய்திருக்கிறார்கள். வங்கியாளர்கள் பொதுமக்களின் சேமிப்புப் பணம், இளைப்பாறும் நாட்களுக்காகத் தொழிலாளிகள் சேகரித்த ஓய்வூதியம் ஆகியவற்றை மறைமுகமாகச் சூறையாடினார்கள். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசின் பொக்கிஷ சாலையிலிருந்த பொதுச் சொத்திலிருந்து தார்மீகக் கட்டுமானத்தையும் மீறித் தங்களின் பேராசையைப் பூர்த்திசெய்யத் தாராளமாகப் பணம் பெற்றிருந்தார்கள். அதே வரிசையில் தான் இந்த ஆங்கிலக் குழப்பக்காரர்களை வைத்துப் பார்க்க வேண்டும். வங்கியாளர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பகலில் செய்ததை இந்தக் குழப்படிக்காரர்கள் இரவில் செயலுருவாக்கியிருக்கிறார்கள். கலவரக்காரர் ஒருவர் தொலைக் காட்சி அலைவரிசைக்குக் கொடுத்த பேட்டியில் இதைத்தான் சொல்லியிருந்தார்: ‘வங்கியாளர்கள்தாம் எங்கள் முன் உதாரணங்கள். அவர்கள்தாம் அசல் சூறையாளர்கள். அவர்களைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம்’. எதற்காக இந்தப் பொருட்களைக் களவாடுகிறாய் என்று கேட்டபோது இன்னுமொரு சூறையாளர் கொடுத்த நியாயம் அமெரிக்க Tea Party உறுப்பினர்களின் நெஞ்சைக் குளிரவைத்திருக்கும்: ‘நான் கட்டிய வரியைத் திரும்பப் பெறுகிறேன்’.

இந்தக் கிளர்ச்சிக்கான பின்னணிச் சாத்தியங்களைப் புரிந்துகொள்வதற்கு விண்வெளி விஞ்ஞானி ஒருவரின் மூளை தேவையில்லை. அரசியல்வாதிகளும் சமூக ஆராய்ச்சியாளர்களும் புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. சலித்துப்போன சாக்குப்போக்குகள் மறுபடியும் உயிர்பெற்றிருக்கின்றன. ஊடகம் வெளிப்படுத்தும் இந்தக் கலவரத்திற்கான காரணங்களைப் பார்க்கும்போது சொன்னவர்களின் அரசியல் பக்கச்சாய்வு தெரியவரும். தார்மீகச் சரிவு, எது பிழை எது சரி என்று தெரியாத மனப்போக்கு, தந்தையர் இல்லாமல் வளரும் குழந்தைகள், பொறுப்புகளைக் கற்பிக்காத மனித உரிமைகள், குற்றக்குழுக்களின் (ரீணீஸீரீstமீக்ஷீ) கலாச்சாரம், கறுப்பினர்களிடையே பரவலான இனவாதத்தைத் தூண்டிவிடும் ராப் இசை - இவை வலதுசாரிப் பார்வையுள்ளவர்களின் கணிப்பு. அரசின் சிக்கனச் செயல் திட்டங்கள், சந்தை அடிப்படைவாதம், நிறுவன இனவெறி, அரசு, தனியார் துறைகளில் காணப்படும் பாரபட்சம், வேலைவாய்ப்பு இல்லாமை, ஆங்கிலச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள், சர்வகலாசாலைக் கட்டண அதிகரிப்பு, மாணவர் கல்விப் படிக்காசு ரத்தானது, இளைஞர் நலம்புரி சங்கங்கள் துண்டிக்கப்பட்டது - இவை இடதுசாரிக் கண்ணோட்டம் உள்ளவர்களின் கருத்து. உண்மை வழமைபோல் இந்த இரு நிலைப்பாடுகளின் மத்தியிலிருக்கிறது.

ஆளும் கட்சி இந்தக் கலவரத்தை முற்றிலும் ஒரு குற்றச் செயலாக வர்ணிப்பதில் மும்முரமாக இருக்கிறது. இதில் ஓர் அரசியல் உள் நோக்கமிருக்கிறது. தற்போது இந்த அரசு அமல்படுத்தும் இரக்கமற்ற பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இந்தக் கலவரங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று நிரூபிப்பதே அது.

இந்தக் கோடையில் இரண்டு நிகழ்ச்சிகள் உலக ஊடகக் கவனத்தைப் பெற்றிருந்தன. ஒன்று ஜூலை 22ஆம் நாளன்று நோர்வேயில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல், அதைத் தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகத்தில் 76 பேர் மரணமடைந்தது. மற்றது இந்த ஆங்கில ஒழுங்கின்மை. இதில் என் கவனத்தை அதிகம் ஈர்த்தது இரண்டு அரசுகளும் இந்தச் சம்பவங்களுக்குக் காட்டிய எதிர்விளைவுகள். நோர்வேயில் இஸ்லாமியர்களை வெறுப்ப வரும் அதுமட்டுமில்லாமல் குடியேறியவர்களுக்கு ஆதரவு காட்டும் கட்சிகள்மீதும் கோபம் கொண்டிருந்தவருமான Anders Breivik என்பவர் நோர்வேக்கு வடக்கே இருக்கும் யுரோயா என்னும் தீவை ஒரு கொலை நிலமாக்கியிருந்தார். உணர்ச்சியற்ற, துயரச் சம்பவம் நடந்த கையுடன் தொலைக்காட்சியில் தோன்றிய நோர்வே பிரதமரின் பதில் வாசகம்: ‘எங்களுடைய சகிப்புத்தன்மையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்தச் செயலுக்குச் சரியான எதிர்விளக்கம் மேலும் ஜன நாயகப் பண்புகளை அதிகரிப்பது. எங்கள் தாராளத்தன்மையை இன்னும் விரிவுபடுத்துவது’. கமரனின் செய்கை இதற்கு எதிர்மாறானது. அவரின் சமீபத்திய பேச்சுகளில் அடிபட்டவை: தாராளவாத விழுமியங்களை இருமைப்படுத்துவது, மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துவது, இணையச் சாதனங்களைத் தடைப்படுத்துவது, நீதிமன்றங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கொடுப்பது, நீதிபதிகளுக்கு என்ன மாதிரியான தீர்ப்பு கொடுப்பது என்று மறைமுகமாக அறிவுறுத்துவது, மீறிப்போனால் குறிப்பிட்ட ஊர்களுக்கு ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்துவது. சீனாவின் தியன்மன் சதுக்கத்திற்கு ராணுவம் அனுப்பப்பட்டதுபோல் இன்னும் தரைப்படையை ஆங்கில நகர்ப்புறத் தெருக்களுக்குக் கமரன் வரவழைக்கவில்லை.

கொள்ளையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் செய்த குற்றத்திற்குப் பொருத்தமற்றதாக இருக்கிறது. நீதிபதிகளின் தீர்ப்புகள் மிகையுணர்ச்சியுள்ளவையாகக் காணப்படுகின்றன. ஒரு போத்தல் தண்ணீர் திருடியவருக்கு ஆறுமாதச் சிறைவாசம். முகச்சுவடியில் செஸ்டர் என்ற நகரில் கிளர்ச்சி செய்யுமாறு ஏவிவிட்ட இருவருக்கு நான்கு வருடங்கள். ஆனால் இவர்கள் ஊக்குவித்த இந்தக் கலாட்டா நடைபெறவேயில்லை. மட்டுமீறிய தண்டனைகள் எதிர்காலக் கலவரக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் ஒரு கடுமையான செய்தியையும் அறிவிக்கும் என்று அரசியல்வாதிகளும் வலதுசாரிப் பார்வையுள்ளவர்களும் நம்புகிறார்கள். இதற்கு மாறாக இந்த இசைவுப் பொருத்தமில்லாத தீர்ப்புகள் அரசு எந்த மாதிரியான மனிதர்களை ஆதரிக்கிறது, பாதுகாக்கிறது என்று புலப்படச் செய்கிறது. பல கோடிகள் சூறையாடிய வங்கியாளர்களுக்குத் தண்டனையில்லை. பதிலுக்கு அவர்களின் மிகையூதியம் (bonus) அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பல ஆயிரங்களை முறைகேடான விதத்தில் பெற்றுக்கொண்டு பிறகு தவறை உணர்ந்து காசைத் திருப்பி அரசின் பொக்கிஷசாலைக்கு அனுப்பிய அரசின் மந்திரி இன்றைக்கும் பதவியிலிருக்கிறார். பிழைசெய்துவிட்டோம், எங்களை மன்னித்துவிடுங்கள் என்று இதுவரை எந்தக் குற்றமும் செய்யாத ஷோன சிமித்தும் அவருடைய தங்கையும் அவர்களின் கூட்டாளியும் பரிந்து வேண்டியபோதும் நீதிபதி மூவரையும் கண்டித்து ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்தார். இந்தத் தண்டனை திருடியதற்காக அல்ல. திருட முயன்றதற்காக. நடு நிலைமை வகிக்க வேண்டிய நீதிபதிகளே அரசின் வஞ்சத்தீர்வுக்கும் மத்தியதர வர்க்கத்தினரின் தற்போக்கெண்ணத்திற்கும் இணைந்து போகிறவர்களாகத் தென்படுகிறார்கள்.

அன்றும் இன்றும்

இது நான் பார்த்த இரண்டாவது கலவரம் என்று சொல்லியிருந்தேன். 1981க்கும் 2011க்கும் சில சமாந்தரங்கள் உண்டு. இரண்டு கிளர்ச்சிகளும் பழமைவாதக் கட்சி ஆட்சியில்தான் நடந்தன. கலாட்டா நடக்குமுன் ஆடம்பரமான ஒரு ராச கல்யாணம் நடந்திருந்தது. 1981இல் சார்ல்ஸ்-டயானா, 2011இல் வில்லியம்-கேட். இத்திருமணங்களில் கடைப்பிடிக்கப்பட்ட சத்திரியச் சடங்குகள் பழைய ஏகாதிபத்தியத்தைத் திருப்பி நினைப் பூட்டிய பரவசத்தில் ஆங்கிலேயர்கள் திளைத்துப்போயிருந்தார்கள். இந்த உயர்குடி வாழ்க்கைக்கு அப்பால் ஒரு தாழ்மட்ட உலகம் வெடிக்கும் நிலையிலிருக்கிறது என்பதை இருகால கட்டத்தில் வாழ்ந்தவர்களுமே நினைத்துப்பார்க்கவில்லை.

அன்றுபோல் இன்றைக்கும் காவல் துறையினர்தான் எதிரிகளாகக் காணப்படுகிறார்கள். அன்று புழக்கத்திலிருந்த Sus Lawsகளை உபயோகித்து உள்ளூர் காவலாளர்கள் கறுப்பர்களுக்குத் தொந்தரவு கொடுத்தார்கள். இன்று இந்தக் கடுப்பான சட்டங்கள் இல்லை. அதற்குப் பதிலாகச் சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட Criminal Justice and Public Order Act நீக்கம் செய்யப்பட்ட பழைய சட்டத்தின் மறு அவதாரம். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி காவலாளர்கள் கறுப்பர்களுக்கு ஆக்கினை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். காவல் துறையினரின் தோற்றமும் முக்கியமாக உடைபாவனையும் மாறியிருக்கிறது. இன்றைய காவலாளிகள் தலைக்கவசம், கையில் குறுந்தடி, மார்புக் கேடயம், தேர்ந்தெடுக்கப்பட்ட காவலாளர்கள் சிலர் கையில் துப்பாக்கி சகிதம் தோற்றமளிக்கிறார்கள். அன்றைய காவலாளிகள் காந்தியவாதிகள் போல் எந்தவிதமான ஆயுதங்களுமில்லாமல் அகிம்சைவாதிகள் போல் காணப்பட்டார்கள். மேற்குலகில் ஆயுதம் தாங்காத காவலாளர்கள் என்னும் பெருமை ஆங்கிலக் காவல் துறைக்கு அன்றிருந்தது. காவலாளர்களுக்குக் கிளர்ச்சியாளர்கள் இட்ட நாமம்கூட மாறியிருக்கிறது. அன்றைய செல்லப் பெயர் filth இன்றைக்கு feds. இந்த வார்த்தை அமெரிக்காவிலிருந்து ஹாலிவுட் தொலைக்காட்சி வழியாக இறக்குமதி செய்யப்பட்டது.

இவற்றைவிட இந்த இரண்டு கிளர்ச்சிகளும் ஒரே விதமான பொருளியல் மந்த நிலையான சூழ்நிலையில்தான் நிகழ்ந்தன. அன்று மார்கிரட் தாட்சர் மிகக் கெடுபிடியான பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருந்தார். இன்று டேவிட் காமரன் அரசின் கடனை அடைக்கக் கடுமையான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்தச் சிக்கனமான நிதிக்கொள்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு, வெள்ளை இனங்களைச் சேர்ந்த உடலுழைப்பு தொழிலாளக் குடும்பங்களே. அரசின் பொதுச் செலவு இந்த ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரிடையே பாரதூரமான செயல் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. அரசின் முழுக் கவனமும் வர்த்தகக் கூட்டுஸ்தாபனங்களையும் பொருளாதார நிறுவனங்களைப் பராமரிப்பதிலும் அவற்றின் நலன்களைப் பேணுவதிலும்தான் இருக்கிறது என்ற எண்ணம் விளிம்புநிலை மக்களிடத்தில் அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.

அந்த நாட்களில் கலவரக்காரர்களைப் புரிந்துகொண்டு அவர்களின் சார்பாகப் பேசக்கூடிய

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். Bernie Grant, Paul Boetang முதலான கறுப்பின நாடாளுமன்றப் பிரதிநிதிகள் மறக்கப்பட்டவர்களின் மொழியை நன்கு அறிந்திருந்தார்கள். குழப்பக்காரர்களின் ஆவேசமான பாஷையைப் பொதுக்களத்தில் கிராட்ண்டும், போட்டாங்கும் தெளிவாக்க முடிந்தது. நாடாளு மன்றத்தில் இப்போது 12க்கும் மேற்பட்ட கறுப்பின உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கும் இந்தக் கலவரக்காரர்களுக்குமிடையே இருக்கும் சமூக, பொருளாதார இடைவெளி மிக அகலமானது. இந்தக் கறுப்பு அரசியல்வாதிகள் பின்-இன அரசியலைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு இனம் ஒரு சுமையாக இருக்கிறது. கறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று கூறுவதைவிட நாடாளுமன்ற உறுப்பினர்களாய் இருக்கும் கறுப்பர்கள் என்றே இவர்கள் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். இதில் சற்று வித்தியாசமானவர் டயான அப்பேட் என்னும் பெண். ‘புரட்சி புறக்கணிக்கப்பட்டவர்களின் பாஷை’ என்று மார்டின் லூதர் கீங் ஜூனியர் கூறியிருந்தார். அந்த பாஷையை மைய நீரோட்ட அரசியல் கவனத்திற்கு மொழிபெயர்க்கத்தக்க ஆட்கள் இல்லை.

1981 கலவரத்தை ஒருவிதத்தில் இரு இனங்களின் மோதல் என்று கூறிவிடலாம். கறுப்பர்- வெள்ளையர் சண்டையாகவே அது கருதப்படுகிறது. இன்றையக் கலாட்டா ஒரு இனப் பிரச்சினையல்ல. இதை டேவிட் கமரனே ஒத்துக்கொண்டிருக்கிறார். இந்தக் கோடைக் குழப்படி இன்றைய இங்கிலாந்தைப் பிரதிபலிக்கும் பல்லின மக்களின் போராட்டம். கறுப்பர்கள், வெள்ளையர்கள் எல்லாருமே சூறையாடுவதில் கலந்துகொண்டார்கள். வர்க்கரீதியானதுமல்ல. மேல், கீழ் தட்டு உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தலைமுறை பாகுபாடுகூட இல்லை. ஒரு சூறையாளரின் வயது 11.

நிலையான சில ஒளித்தோற்ற வடிவங்கள்

காட்சி சார்ந்த கலாச்சார நாட்களில் எந்தக் கலவரங்களாயினும், இயற்கை சேதங்களாயினும் மனத்திலிருந்து துடைத்தழிக்க முடியாத சில காட்சிப் பிம்பங்களை உருவாக்குகின்றன. ஆங்கிலக் கலாட்டாகூடச் சில நிலையான ஒளித்தோற்றக் குறியீடுகளைத் தந்திருக்கின்றன. அவற்றில் மூன்றை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன். வருங்காலத்தில் இந்தக் கலவரத்தை நிபுணத்துவ முறையில் பகுப்பாய்வு செய்கிறவர்களின் அடிக் குறிப்பிலாவது இவை தோன்றுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இவை இந்தக் கலாட்டாவின் கலாச்சாரக் குறியீடுகளாகவும் இந்தக் குழப்பத்தை விவரிக்கும் முக்கியக் கணங்களாகவும் தென்படுகின்றன. முதலில் தன் மகனை இழந்த அந்தத் தகப்பன். பார்மீங்கம் டாட்லி தெருவில் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் முக்கியமாகத் தங்களின் எண்ணெய் விற்பனை நிலையத்தைப் பாதுகாக்க முயன்ற அந்த மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அனாவசியமாக ஒரு சீருந்தால் மோதித் தள்ளிக்கொல்லப்பட்டார்கள்.

இனக்கலவரமே உருவாவதற்கான சந்தர்ப்பம் அமைந்தபோது கூர் உணர்வுடனும் மென்மையுடனும் எந்த விதமான இனக் கடுமையின்றியும் இவர்களுடைய தகப்பனாரில் ஒருவர் தாரீக் ஜாகன் நடந்து கொண்ட விதம் எப்போதுமே பரிகாசப் பார்வையுள்ள ஊடகங்களிடையும் இஸ்லாமியரை ஒரு வெருட்சியுடன் அணுகும் ஆங்கிலப் பொதுமக்களிடையேயும் ஒரு பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. ‘உங்களுடைய புத்திரர்களைப் பலி கொடுக்க வேண்டுமானால் முன்னுக்கு வாருங்கள். மற்றவர்கள் அமைதியாகப் போய் விடுங்கள்’ என்று தாரீக் ஜாகன் சொன்ன அந்த நிதானமான வார்த்தைகள் அந்த மத மக்கள் மீதான ஆங்கிலேயரின் அசையாத வார்ப்பெண்ணங்களைச் சற்று நகர்த்த காரணமாயின. இஸ்லாமியர் என்றாலே சினங் கொள்ளும், கொதித்த குருதியுள்ள வர்கள் என்ற படிவார்ப்பை தாரீக் ஜாகனின் நடத்தை மாற்றியமைத்தி ருக்கிறது.

இரண்டாவதாக அந்த மலேசிய மாணவனுக்கு நடந்த அடாத செயல். ஆஷ்ராவ் ஹாசீக் கணக்கியல் படிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்புதான் இங்கு வந்திருந்தார். இவர் கலவரத்தில் மாட்டிக்கொண்டது மட்டுமல்ல இவருடைய தாடையில் சரியான அடிபட்டு ரத்தம்கூட வழிந்துகொண்டிருந்தது. இவருடைய துவிச்சக்கர வண்டி பறிக்கப்பட்டது. ஏதோ உதவிக்கு வருகிறவர்கள் போல் வந்தவர்கள் இவருடைய முதுகுப்பையிலிருந்த கைதொலைபேசியையும் இன்னுமொரு மின் பொருளையும் திருடுவதை உலகம் முழுவதும் தொலைக் காட்சியில் பார்த்திருக்கலாம். ஆஷ்ராவ் ஹாசீக்கும் தன்னைத் தாக்கியவர்கள்மீது எந்தவிதமான துவேச உணர்வையோ பெருவெறுப்பையோ காட்டவில்லை. நல்ல சமாரியன்களே கெட்ட குமாரன்களாகிய கதை இது. உதவுவதுபோல் வந்து பிறரின் நாடுகளையும் கலாச்சாரச் சின்னங்களையும் உடமைகளையும் அபகரிப்பது காலனிய நாட்களிலிருந்து ஆங்கிலேயர் கடைப்பிடித்த உத்தி. ஆஷ்ராவ் ஹாசீக்கு நன்மை செய்வது போல் ஊறுவிளைவித்த இந்தச் சம்பவம் கலவரத்தின் ஈர்ப்பு மையமாக இருந்தது மட்டுமல்ல உதவி செய்பவர்களே உபாதையாகவும் இருப்பார்கள் என்ற காலனிய மனப்பாங்கை மேலும் உறுதிசெய்தது போல் தெரிந்தது.

மூன்றாவது சூறையாடாமல் தப்பித்த புத்தகக்கடைகள். எவ்வளவோ நுகர்பொருள் அங்காடிகள் தாக்கப்பட்டன. ஆனால் லண்டனிலோ பார்மீங்கமிலோ நூல்விற்பனை நிலையங்கள் பக்கமே இந்தக் கலாட்டாக்காரர்கள் தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை. இவ்வளவுக்கும் பார்மீங்கமில் தாக்கப்பட்ட கைப்பேசிக் கடைக்கு முன்னால் பிரமாண்டமான நான்கு மாடிகள் கொண்ட Waterstone என்னும் புத்தகக்கடை இருக்கிறது. இந்தப் புத்தகங்களில் இவர்கள் அதிகம் கரிசனை செலுத்தவில்லை. முன்பு நீங்கள் என்ன மாதியான ஆள் என்பதற்கு நீங்கள் வாசிக்கும் புத்தகம் ஒரு அளவுருவாக (parameter) இருந்தது. இப்போது சூறையாளர்களுக்கு அவர்களுடைய ஆளுமையையும் அவர்களின் அந்தஸ்தையும் உயர்த்துவது அச்சுப் புத்தகங்கள் அல்ல. அவர்கள் அனியும் வடிவமைப்பு பயிற்சிக் காலணிகள் (designer trainers). ஆகையால்தான் இந்தக் காலணிகள் விற்பனையாகும் JD Sports, Footlocker முதலான கடைகள் அதிகமாகத் தாக்கப்பட்டன. இவர்களின் தகுதியைப் பல அங்குலங்கள் அதிகரிப்பது இவர்கள் கையிலிருக்கும் சமீபத்தில் வெளிவந்த இணைய அட்டைகள் (ipad), மிடுக்கான கைப்பேசிகள். கடுதாசி நூல்கள் அல்ல.

கடைசியாகக் கல்வித் துறைசார் கட்டுரைகளில் இந்த மாதிரியான சங்கதிகளை எழுதும்போது இரண்டு வாசகங்கள் வலுக் கட்டாயமாகச் சேர்க்கப்படுவதுண்டு. அதில் ஒன்று சரித்திரம் மீண்டும் திரும்பி வரும் என்பது. உதாரணத்திற்கு ஆங்கிலக் கலவரங்கள் நடந்தபோது வெவ்வேறு காலகட்டங்களில் அரசியல்வாதிகள் இருவர் சொன்னதைக் கீழே தருகிறேன். சற்று ஊன்றிப் படித்தீர்கள் என்றால் காலவித்தியாசமில்லாமல் ஒருவர் சொன்னதையே மற்றவரும் திருப்பிச் சொல்லியிருப்பது தெரிய வரும். ஒருவர் கூறியது: ‘இந்தச் சம்பவங்களை யாராலும் நியாயப்படுத்த முடியாது. இதைச் சாதித்தவர்கள் அத்தனை பேருமே முழுக் குற்றவாளிகள்’. மற்றவர் விளித்தது: ‘இது பூரணமான, தெளிவான குற்றச் செயல்’. முன்னையது வலதுசாரிகளால் தெய்வ மகளாகக் கருதப்படும் மார்க்ரட் தட்சரின் பொன் மொழி. பின்னையது தட்சரின் அரசியல் பேரப் புத்திரன் டேவிட் கமரனின் உதடுகளிலிருந்து உதிர்ந்தது.

ஒன்றின் காலகட்டம் 1981இன் கிளர்ச்சி. மற்றதன் சூழலமைவு 2011இன் கலவரம். முப்பது வருடங்களுக்கு முன் தட்சர் பாவித்த அதே வலது சாரி அரசியல் சாக்குப் போக்குச் சொல்லாடலைத்தான் கமரன் மறுபடியும் உபயோகித்திருக்கிறார். சரித்திரம் எவ்வாறு மீண்டும் சுழன்று வந்திருக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். இந்த இரண்டு பிரதமர்களின் எடுத்துக்கூறுகளை ஒன்று சேர்த்துப் படிக்கும்போது இத்தருணங்களில் உபயோகப்படுத்தும் இன்னுமொரு வாசகத்தையும் தவிர்க்க முடியாமல் இருக்கிறது. தற்போது ஆட்சியிலிருப்பவர்கள் இந்தக் கலவர விஷயத்தில் நடந்துகொள்ளும் விதம் பற்றி அவதானிக்கும்போது இந்த வசனம் எவ்வளவு அத்தியாவசியமானது என்றுபடுகிறது. அதை மீள் மேற்கோள் காட்டி இக்கட்டுரையை முடிவுக்குக் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன்: வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வது வரலாறு கற்பிக்கும் படிப்பினைகளை நாம் கற்றுக்கொள்வது இல்லை என்பது தான்.=

நன்றி: காலச்சுவடு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.