Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மே 18, 19ற்கு பின்னரான சூழ்நிலைகள் குறித்த சாட்சியங்கள் - துணிகரமான இலங்கைப் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 செப்டம்பர் 2011

அனுபவங்களை பகிர்கிறார் - அருட்தந்தை ராஜ் - GTBC.FMன் விழுதுகள் நிகழ்ச்சியின் ஒலிவடிவமும் கட்டுரை வடிவமும்

பகுதி 1

http://youtu.be/1zDmNCTDBKA

பகுதி 2

http://youtu.be/BHmuxj1zgSU

பகுதி 3

http://youtu.be/l5GtNm-Gots

நேயர்கள்

http://youtu.be/RtCipKQxnpc

தமிழக யேசு சபையின் ஆளுமைகளில் ஒருவரும், தமிழர்களுக்கான மனித நேய பணிக்குழுவின் தலைவருமான அருட்தந்தை ராஜ்

குருபரன் : கனக்குறிஞ்சி அவர்களுடன் நீங்களும் பயணித்திருந்தீர்கள். உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

அருட்தந்தை ராஜ் : நான் இரண்டாவது முறையாக இலங்கை சென்றிருக்கிறேன். கடந்த வருடம் ஜுலை மாதம் கிழக்கிற்கு சென்றிருந்தேன். திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மடுமாதா ஆலயத்துக்கும், மனிக் ஃபாம் முகாமுக்கெல்லாம் சென்றேன். அது வித்தியாசமான அனுபவம். அப்போது திருகோணமலையில் நிறைந்த கெடுபிடி, இராணுவக் குவிப்பு, அடிக்கொரு இராணுவத்தினர் ஏ.கே.47 உடன் நின்றுகொண்டிருந்தார்கள். அங்கு செயலாற்றிய தன்னார்வத் தொண்டு நிறுவனத்தோடு உள்பிரதேசங்களுக்கும் சென்றோம். குறிப்பாக முள்வேலி முகாமிலிருந்து அரசு விடுதலை தந்துவிட்டது, வெளியே அனுப்பிவிட்டது என்று சொல்லப்பட்ட மக்களுக்கு உண்மையான மீள்குடியேற்றம் நடந்திருக்கிறதாக என்பதை நாம் பார்க்கச் சென்றோம். இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இந்த மீள்குடியேற்றம் திருப்திகரமான முறையிலோ மனிதாபிமான முறையிலேயோ மனித மாண்போடோ நடத்தப்படாத நிலையில், கடந்த ஆண்டில் அது இன்னும் எவ்வளவு மோசமாக இருந்தது என்று பார்த்தேன்.

இப்போது இரண்டாவது முறையாக நான் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு 20 நாட்கள் பயணம் செய்தேன். அங்குள்ள தமிழ் அன்பர்கள், ஒருசில மனித உரிமை போற்றுகின்ற சிங்கள அன்பர்கள் இவர்களின் உதவியுடன் ஒரு சுற்றுலா பயணமாகத்தான் சென்றேன். அதற்குத்தான் எனக்கு அனுமதி கிடைத்தது. அப்போது திருயாத்திரை செல்வதாகவும் ஒருசில இடங்களில் சொன்னேன்.

இவ்வாறு நான் செல்லும்போது மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நெடுஞ்சாலை வழியாக... பகல் முழுவதும் கடினமான, கரடுமுரடான நெடுஞ்சாலையில் பயணம் செய்த அனுபவம், போகும்போது ஆங்காங்கே மக்களைச் சந்தித்த அனுபவம், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தேன், அங்கிருந்து கிளிநொச்சி வந்தேன், அங்கிருந்து புதுக்குடியிருப்பு வழியாக முல்லைதீவு வந்து, கொடூரமான இறுதிக்கட்ட நிகழ்வு நடந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்குக் கூடச் சென்று பார்த்தேன். போரில் பாதிக்கப்பட்ட மக்கள், வீடிழந்த மக்கள், வாழ்விழந்த மக்கள், உற்றார் உறவினரை இழந்த மக்கள், உடல் உறுப்புகளை இழந்த மக்கள் இவர்களை நேரடியாக பார்த்த அனுபவம் நெஞ்சை உருக்கியது. அவர்கள் இந்த யுத்தத்திற்கு, அழிவுக்கு என்றும் சாட்சி பகிர, வெளிவந்து சுந்திரமாக சொல்ல முடியாது. பேசும்போதுகூட மறைந்து மறைந்துதான் பேசுவார்கள். இப்படி இந்த மக்களையெல்லாம் பார்க்கும்போது இன்று 21ம் நூற்றாண்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுகிறது. 30,40 ஆண்டுகளுக்கு மேலாக நம்முடைய மக்கள் உள்நாட்டுப் போர், விடுதலைப் போர், அதிகார துஷபிரயோகம், பெரும்பான்மையாக இருக்கிற சிங்களவருடைய ஆட்சியால் தொடர்ந்து தமிழ் மக்களின் சுதந்திர உரிமை, ஜனநாயக உரிமை திட்டமிட்ட விதத்தில் மறுக்கப்பட்டு இன்று உச்சகட்டமாக ஒரு யுத்தம் வந்து, அதிலும் பயங்கரவாதத்துடன் மேற்கொள்ளப்பட்ட போர் என்ற ஒரு போர்வையைப் போர்த்தி லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் சகோதர சகோதரிகளை கொன்று குவித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மிகவும் கொடூரமாக இருந்தது.

குருபரன் : நீங்கள் இலங்கையர் அல்லாத ஒரு புறநிலையில் இந்தியராக தமிழகத்திலிருந்து வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்குச் சென்றபோது அங்கு வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் எனும் பிரம்மாண்டமான அபிவிருத்தி, பிரம்மாண்ட வாழ்க்கை வாய்ப்புகள், மக்கள் விடுதலை பெற்ற உணர்வோடு வாழ்கிறார்கள் என்று பேசப்படுவதை எவ்வாறு உணர்கிறீர்கள்?

பொதுவாக இலங்கை என்பது ஒரு நாடு. அந்த நாட்டுக்குள்ளே தமிழர்கள் தெற்கில் வாழ்வதுபோல சிங்களவர்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழ்கிறார்கள், அவர்கள் காணிகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள், தங்களுக்குத் தேவையான ஆலயங்களை அமைத்துக் கொள்கிறார்கள், பாடசாலைகளை கட்டிக்கொள்கிறார்கள், இது உள்நாட்டில் எல்லா மக்களும் இணைந்து வாழ்வதற்கான ஒரு சூழல். அதில் என்ன தவறு என்று கேள்விகள் எழுகின்றன. நீங்கள் யேசு சபையை சார்ந்தவர், அருட்தந்தை என்ற ரீதியில் தனிப்பட்ட, குறுகிய வேறுபாடுகள் எல்லாவற்றையும் களைந்து உலகத்தை நேசிப்பவர். இவ்வாறான வகையில் அங்கு உண்மையில் என்ன நிலைமை காணப்படுகிறது?

அருட்தந்தை ராஜ் :நான் பார்க்கிறபோது இவர்கள் செய்வதெல்லாம் விளம்பரம் என்று தெளிவாகத் தெரிந்தது. இது முழுக்க முழுக்க பொய்தான் என்று உண்மையாக உலகிற்கு அறிவிக்கப்பட்டிருப்பதை நேரடியாக கண்ட அனுபவம் எனக்கிருக்கிறது. இலங்கை ஒரு நாடு, எல்லா இனத்தவரும் வாழும் நாடு, தமிழர் பகுதிகளில் சிங்களவர்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு என்று பேசப்படுவதாக கூறினீர்கள். ஆனால் இது சிங்களர் தமிழர் முஸ்லிம் என்று எல்லோருக்கும் உரிய நாடு என்றால் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் நம் தமிழ் மக்களுடைய வாழ்வு பலவந்தத்திற்கும் வன்முறைக்கும் ஆளாகியிருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு பக்கம் மகிந்த படம், மறுபக்கம் பசில் படம், இன்னொருபக்கம் அபிவிருத்தி நடவடிக்கைகள் என்ற அறிவிப்பு பலகைகளை காண முடிகிறது. ஆனால் என்ன பொருளாதார அபிவிருத்தி நடக்கிறது? இந்தியா அனுப்பும் உதவிகளை கொண்டு மீள்கட்டமைப்பு என்னும் பெயரில் தமிழ் பகுதிகளையெல்லாம் பன்னாட்டு முதலைகளுக்கும் மற்றவர்களுக்கும் தாரை வார்ப்பதற்கும் சிங்கள முதலாளிகளுக்கும் தாரைவார்ப்பதற்கும் உரிய உள்கட்டமைப்பே செயல்படுகிறது.

நான் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும்போது ஒருநாள் பயணத்துக்கு பின் இரண்டு நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்ற அளவுக்கு உடல் வலித்தது.

மகிந்த ராஜபக்ச சொன்னார் இவர்கள் நமது சகோதர சகோதரிகள் என்று. இவையெல்லாம் வார்த்தை ஜாலங்கள். அங்கு நடக்கிற நிகழ்வுளைப் பார்த்தால் யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முள்வேலி முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட மக்களுக்கு மனித மாண்போடு தேவையான அளவில் வாழ்வாதரத்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என்றால்.... இங்கு சொல்லப்படுகிறது 25 ஆயிரம் ரூபா கொடுக்கப்படுகிறது என்று... நான் பலரை சந்தித்தேன். அவர்கள் சொல்கிறார்கள் 8 ஆயிரம் கொடுத்தார்கள், 5 ஆயிரம் கொடுத்தார்கள், 8 தகரம் கொடுத்தார்கள். உங்கள் பகுதிகளுக்கு சென்றால் வங்கியில் போடப்படும் என்றார்கள். இங்கு வந்தால் அது போடப்படவில்லை. கேட்டால்,... நாம் பல ஆண்டுகள் வாழ்ந்ததற்கான பட்டா எங்கே என்று இராணுவத்தினர் கேட்கிறார்கள். நாம் உயிரை கையில் பிடித்துக்கொண்டு 8 மாதம் வீதி வீதியாக அலைந்து கொண்டி ருக்கும்போது எத்தனைபேர் பட்டா (உறுதிகள் ஆவணங்கள்) வைத்திருப்போம்? ஒரு சிலரிடம் இருக்கிறது. ஆனால் வீட்டில் வைத்துவிட்டு சென்ற பட்டா (உறுதிகள் -ஆவணங்கள்) எல்லாம் சிங்கள இராணுவம் வீடுகளை சூரையாடிய நிலையில் இப்போது பட்டா இல்லை என்றால் இப்போது மறுபடியும் வீடு கட்ட அனுமதிப்பதில்லை. ஆகவே இன்றும் மக்கள் டென்ட் அடித்து பொலித்தீன் சீற் போட்டு - எங்கள் ஊரில் நரிக்குறவர்கள் என்று சொல்வார்கள் அவர்களைப் போல வாழ்ந்தகொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு ஒன்றும் கிடையாது.

வடக்கில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது நான் அங்கிருந்தேன். தினமும் நாளிதழ்களை வாசித்தேன். அந்த உறுதியை செய்யப்போகிறோம்... இதை செய்யப் போகிறோம் என்று வாய்கிழிய பேசினார்கள். எப்படியாவது இந்த வடக்கு பகுதியில் ராஜபக்ஷவின் கட்சி ஜெயித்துவிட்டதென்றால் உலகத்தின் வாயை அடைத்துவிடலாம் என்று முழுமூச்சாக இருந்தார்கள். தமிழகத்தில் தி.மு.க கட்சியோ, அ.தி.மு.க கட்சியோ அள்ளிக் கொடுத்த இலவசங்களைவிட அதிகமாக கொடுத்து மக்களை மயக்கப் பார்த்தார்கள். அதற்கு மேல் அச்சுறுத்தல் நடந்தது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள தீவுகளில் எல்லாம் ராஜபக்ஷவின் கூட்டணிக் கட்சிகள் அதிலும் குறிப்பாக டக்ளஸ், அவருடைய கட்சிதான் அங்கு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்பட்டடே ஒழிய தமிழ் கட்சிகள் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

மேலும் இவர்கள் பொது இடங்களில் கூட இந்தத் தமிழ்க் கட்சிகள் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஒருவர் சொன்னார் அவரின் பாதுகாப்பிற்காக அவரின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு மூடிய அறையில் தன்னுடைய கட்சியுடன் கூட்டம் நடத்திய போது திடீரென்று இராணுவத்தினர் வந்து அடித்து இவரையும் அடித்து நொருக்கி பிரசாரம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர். தேர்தல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சிப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் நுழைந்து அங்குள்ள ஆறாயிரம் வாக்கு அட்டைகளைக் கிழித்துப் போட்டு இருக்கிறார்கள் இராணுவத்தினர். ஆகவே கொடுமையான அச்சுறுத்தல், இராணுவத்தின் தாக்குதல், இலவசங்கள் இவற்றை எல்லாம் கொடுத்து ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட ராஜபக்ஷவின் அமைச்சர்கள், அவருடைய அரச அலுவலர்கள் இவர்கள் எல்லாம் தங்கி, முகாமிட்டு அந்த ஒரு மாதம் எப்படியாவது இந்த வடக்குப் பகுதியில் நாம் கால் ஊன்றி விட்டோம் என்று அகில உலகத்திற்கு அறிவித்துவிட்டோம் என்றால், அகில உலகத்தை வாய் அடைத்துவிடலாம், ஏனென்றால் தமிழ் மக்களே எம்பக்கம் தான் இருக்கின்றார்கள் என்று கூறுவதற்காக கங்கனம் கட்டிக்கொண்டு என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஆனால் உண்மையில் தமிழ் மக்களை நாம் தலைவணங்க வேண்டும். எந்த அச்சுறுத்தல்களுக்கோ, எந்த இலவசங்களுக்கோ, தங்களின் குடியுரிமையையோ, சுதந்திரத்தையோ காவுகொடுக்காமல் அவர்கள் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தான் வாக்களித்தார்கள். அவ்வாறு வாக்களித்திருப்பதே இன்னும் நாங்கள் சுதந்திர மக்களாக, முழுக் குடியுரிமையைப் பெற்று தமிழ் இனம் மதிக்கப்பட்டு வாழக்கூடிய ஒரு இனமாக இந்த இலங்கை மாறவேண்டும் என்ற கருத்தை இந்தத் தேர்தலை அறிவித்திருக்கிறார்கள்.

ஆகவே இந்தச் சமயத்தில் நாம் பார்க்கும்போதுகூட வழிநெடுக, ஆங்காங்கே, கொஞ்சமிடத்தில் மண்ணைப் போட்டிருப்பார்கள் கொஞ்சமிடத்தில் கல்லைப் போட்டிருப்பார்கள். ஏனென்றால் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இதனை உத்தியாக பயன்படுத்தினார்கள். நாங்கள் உங்களின் வீதிகளை எல்லாம் சீரமைக்கப் போகிறோம். உங்களுக்குப் பொருளாதார அபிவிருத்தி கொண்டுவரப் போகிறோம் என்ற ஒரு பசப்பு நாடகம் நடத்துவதற்காக இவற்றைச் செய்திருந்தார்கள். ஆனால், இப்பொழுது போய் பார்த்தோம் என்றால் அங்கு சாலைகள் போடப்படவில்லை. அபிவிருத்திகள் செய்யப்படவில்லை. அத்துடன் மீள் குடியேற்றம் என்பது உண்மையிலேயே ஒரு பெரிய கேள்விக்குறி. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வீடுகளை இழந்த மக்களுக்கு, தங்களின் சொந்தங்களை இழந்த மக்களுக்கு, உடல் உறுப்புக்களை இழந்த மக்களுக்கு, விதவைகளாக்கப்பட்ட தமிழ் பெண்களுக்கு, இன்று உண்மையான சர்வதேச தரம்வாய்ந்த மீள்குடியேற்றம் நடக்கவில்லை. இதனை நான் பதிவு செய்ய விரும்புகின்றேன். இரண்டாவது சிங்களர்கள் வந்து சுதந்திரமாக தங்கியிருந்த நிகழ்வாக நான் பார்க்கவில்லை. திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம், பௌத்த மயமாக்கல் என்பது இராணுவத்தின் முழு வீச்சோடு நடந்துகொண்டிருப்பதை நான் சென்ற இடமெல்லாம் பார்த்தேன்.

ஒரு கிலோமீற்றருக்கு, இரண்டு கிலோமீற்றருக்கு இராணுவக் கூடாரம் இருக்கின்றது, இராணுவத் தடுப்பு முகாம்கள் இருக்கின்றன, இவற்றை எல்லாம் கடந்துதான் நாங்களும் செல்லவேண்டியிருந்தது. ஒரு சில முக்கியமான இடங்களில் எல்லாம் எங்களை அவர்கள் சோதனை செய்வார்கள். அல்லது என்றால் நாங்கள் தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தோம். ஆகவே எங்கு பார்த்தாலும் முழு இராணுவம். இந்த இராணுவக் குடியேற்றத்தால், நம்முடைய தமிழ் மக்களின் நிலங்கள், அநியாயமாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் பறிக்கப்படுகின்றன. ஆகவே அங்கு பயிர் செய்தோ தங்களின் வாழ்வை நடத்திக் கொள்ளக்கூடிய தமிழ் மக்களின் வாழ்வாதாரங்கள் இப்பொழுது வேரோடுப் பிடுங்கப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் கடற்படைத் தளங்கள், இராணுவப் படைத் தளங்கள், விமானப் படைத் தளங்கள், இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள், இவர்களுக்கு வீடுகள் எனவே இவர்களுக்கு வீடுகள் வந்துவிட்டால், குடியிருப்புக்கள் வந்துவிட்டால் நாங்கள் பௌத்தவர்கள் அல்லவா? எனவே எங்களுக்கு பௌத்த விகாரைகள் கட்ட வேண்டும் என்று மிகவும் மிகவும் நாசுக்காக இதுவொரு சுதந்திர எண்ணத்தோடு செய்வதாக இல்லை. மாறாக எவ்வாறு இந்தத் திருகோணமலையில் ஏறக்குறைய 90 வீதம் நம் தமிழர்கள் இருந்த இடத்தில் இன்றைக்கு 40 சதவீதமாக தமிழர்கள் குறைக்கப்பட்டிருக்கிறார்களோ அதேபோல கிழக்குப் பகுதியில் இந்தத் திட்டத்தை மிகவும் கொடுரமாக நிறைவேற்றிவிட்டார்கள். அதனைப் போல் வடக்குப் பகுதியில் ராஜபக்ஷவின் அரசு மிகவும் சாதுர்யமாக எனவே தான் நான் சொல்கின்றேன், யுத்தம் முடிந்துவிட்டது மீண்டும் ஒரு யுத்தம் நம்முடைய தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே, விலை நிளங்கள் பறிபோகின்றன. இராணுவக் கண்காணிப்பு அதிகமாகிறது. மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. சிவில் நிர்வாகம் கொண்டுவரப்பட முடியவில்லை. ஆகவே மக்கள் பலவகையான இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

எனவே பொருளாதாரத்தில் உண்மையில் அபிவிருத்தி கிடையாது. அப்படியே இந்தப் பொருளாதாரத் திட்டங்கள் என்றால் அதில் பயனடைவது யார், சிங்கள ஆட்களே. ஆகவே தமிழ்கள் மக்கள் கூலி ஆட்களாக பயன்படுத்தப்படுகிறார்கள். ஆகவே நம்முடைய பொருளாதாரம், வெகுவாக பாதிக்கப்படுகிறது. வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த வகையில் பார்க்கும் போது இதுவொரு திணிக்கப்பட்ட சிங்கள மயமாக்கல். இதுவொரு திணிக்கப்பட்ட பௌத்த மயமாக்கல். புகுத்தப்பட்ட இராணுவ மயமாக்கல். இவை மூன்றையும் வைத்துப் பார்க்கும் பொழுது இவர்கள் ஒரு சுதந்திர உணர்வோடு வரவில்லை மாறாக இவ்வளவு காலம் வடக்குப் பகுதியில் பெருவாரியாக வாழ்ந்த தமிழ் இனத்தை நாம் சனத்தொகை ரீதியாக குறைத்துவிட்டு ஏனென்றால் யுத்தத்தினால் கொன்றார்கள், வன்முறையினால் கொன்றார்கள், பட்டினிப் போட்டுக் கொன்றார்கள், முள்வேலி முகாம்களில் பலவகையான தொற்று நோய்கள் வருமளவுக்கு கொடுரமான, ஆரோக்கியமற்ற, நலமற்ற சூழலை உருவாக்கினார்கள். 20 பேர் பயன்படுத்தக்கூடிய ஒரு கழிப்பறையை 400, 500 பேர் பயன்படுத்தும் அளவுக்கு வைத்திருந்தார்கள். இப்படிப்பட்ட கொடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அதிலும் கொன்று அழித்தார்கள்.

இப்பொழுது மிகவும் நாசுக்காக அவரிகள் உரிமைகளைப் பறித்து அவர்களின் வாழ்வாதாரங்களைப் பறித்து, அவர்களின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களைக் கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கும் ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருப்பதை மிகவும் சாதுர்யமாக திட்டமிட்டவிதத்தில் செயல்படுத்தப்படுவதை நான் பார்க்கின்றேன். மேலும், அங்கு நம்முடைய மக்கள் வைத்திருக்கின்ற சிறு சிறு தொழில்கள் எல்லாம் பாதிக்கக்கூடிய அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இராணுவ்ததினரால் நடத்தப்படுகின்ற உணவகங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதனை கணக்குறிஞ்சி ஐயா அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள், அதனுடன் நான் இன்னுமொரு கருத்தையும் சொல்ல விரும்புகின்றேன். இந்த உணவங்களில் உள்ள மக்கள் சொல்கின்றார்கள், ஒன்று தமிழக உணவங்களைவிட மிகக்குறைந்த விலையில் கொடுப்பது, அலங்காரம் செய்யப்பட்ட ஒரு இடத்தில் வைத்திருப்பது, மக்களைக் கவர்ந்துகொள்ளக்கூடிய அளவுக்கு அருமையான இடமாக மாற்றுவது, எனவே தமிழ் வியாபாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இங்கு கொடுக்கப்படுகின்ற உணவுப் பொருட்களில் குறிப்பாக தமிழர்கள் வந்தால் அதில் ஒருசில இரசாயனப் பொருட்களைச் சேர்த்து ஆண்களை மலடாக்குவதும், பெண்கள் பிள்ளை பெறாமல் போகக்கூடிய ஒரு உடல் சீர்கேட்டிற்கும் இந்த உணவுப் பொருட்களை இப்பொழுது மிகவும் சாதுர்யமாக பயன்படுத்துகின்றார்கள். எனவே தான் நான் சொல்கிறேன், பல வகையில் எங்களின் தமிழ் மக்களின் மேல் இன்னுமொரு யுத்தம் தொடுக்கப்பட்டிருக்கிறது.

கத்தி இன்றி, இரத்தம் இன்றி, இயந்திரத் துப்பாக்கிகள் இன்றி, பீரங்கிககள் இன்றி, இன்று அந்த யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஊடகங்கள் பேசுவதில்லை. உலகத்திற்கு அறிவிக்கப்படுவதில்லை. இவ்வாறு நேரில் சென்று பார்ப்பவர்களினால் தான் இந்த உண்மைகள், வெளிவருகின்றன. ஒரு சில குழுக்கள் இந்தத் தரவுகளை எல்லாம் நிரல்படுத்தி அதனையொரு அறிக்கையாகக் கொடுக்கும் பொழுது அங்கே நடக்கும் கொடுரங்கள் வெளி உலகிற்குத் தெரியவரும்.

எனவே, இவற்றை வைத்து சிந்தித்துப் பார்க்கம் பொழுது இது திட்டமிட்டபடி, சுதந்திர மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஒரு எண்ணம் அல்ல. ஆதிக்கம் செலுத்த வேண்ம். தமிழர்களை அடியோடு அழிக்க வேண்டும். சிங்களப் பேரினவாதம் நிலைக்க வேண்டும் என்ற உணர்வோடு, வலிந்து, வன்முறைக்கு உட்பட்ட விதத்தில் இந்தக் குடியேற்றங்கள் எல்லாம் நிகழ்ந்துகொண்டிருப்பதையும் காணமுடிகிறது. அத்தோடு, தெற்குப் பகுதியில் இருந்து, மத்தியப் பகுதியில் இருந்து சிங்களவர்களை இலவசப் பேருந்துகளில், வாருங்கள் வடக்குப் பகுதியைப் பாருங்கள், விடுதலைப் புலிகள் வைத்திருந்த பகுதியைப் பாருங்கள், இவற்றை எல்லாம் வென்றுவிட்டோம், எங்களுடைய வெற்றிச் சின்னங்களைப் பாருங்கள் என்ற ஒரு வகையான சிங்கள வெறியை ஊட்டுகின்ற ஒரு நிகழ்வு நாசுக்காக நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

என்னைப் பொருத்த வரையில் யுத்தத்தினால் ராஜபக்ஷ இன்னொரு காரியத்தையம் சாதித்திருக்கிறார். ஆங்காங்கே பிளவுபட்ட சிங்களவர்களை எல்லாம், குறிப்பாக இவ்வாறு சிங்களப் பேரினவாதத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற குழுக்களை எல்லாம் இந்த யுத்தத்தின் வழியாக அவர் இணைத்திருக்கின்றார். இதனையும் தாண்டி ஒரு சில நல்ல சிங்கள அன்பர்கள் இருக்கிறார்கள். மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் சிங்களவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிக மிகக் குறைவானவர்கள். அவர்களையும் இனங்கண்டுகொண்டு இலங்கை அரசு பல்வகையான வன்முறைக்கு உட்படுத்துவதையும் நாம் அறிவோம். ஆகவே இப்போது நடந்துகொண்டிருப்பது இதுதான்.

உண்மையான மீள்குடியேற்றம் கிடையாது, சிங்களவர்கள் சுதந்திரமாக அங்குவந்து தங்கவரவில்லை. மாறாக சிங்கள மயமாக்கி, இராணுவ மயமாக்கி, பௌத்த மயமாக்கி, சிங்களப் பேரினவாதம் தான் சிங்களத்தை பெரும்பான்மையாக பேசும், பெரும்பாலான சிங்களர்வகளுக்கு உரியதுதான் இலங்கை பூமி என்று அவர்கள் சொல்லாமல் அறிவிக்கக்கூடிய உத்திகளை, தந்திரங்களை அரச இயந்திரங்களோடு, இராணுவத் துணையோடு இன்று தொடர்ந்து மௌன யுத்தமாக நடந்துகொண்டிருப்பதை நான் பார்க்கின்றேன்.

குருபரன் : புலம்பெயர் தமிழர்களும், சர்வதேச ஊடகங்களுக்கும் அங்குள்ள சாதாரண நிலைமைகளை ஊதிப்பெருப்பிப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டுகிறது. யுத்தத்திற்கு பின்னர் தமிழ்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கின்றனர், ஒற்றுமையாக வாழ்க்கின்றன. எனினும், தமிழ் இனவாதத்தைப் பேசும் கட்சிகளும் இந்தியாவில் இருக்கின்ற தமிழ்த் தேசிய வாதிகளும், புலம்பெயர் மக்களும் அங்கே அமைதியின்மைப் பெருக்கி தங்களின் அரசியல் இலாபங்களுக்காக, தங்களின் சுயநலன்களுக்காக செயற்படுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. எனவே நேரில் சென்று பார்த்தவர் என்ற வகையில் இதுபற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

அருட்தந்தை ராஜ் : மறுபடியும் கூறுகிறேன், இவர்கள் செய்த அநியாயங்களை எல்லாம் மூடி மறைப்பதற்கு, போர்க் குற்றங்களை ஒரு போர்வை போர்த்தி மூடி மறைப்பதற்கு, சர்வதேசத்தில் ஒரு நல்ல பெயர் வாங்குவதற்கு, ஏனென்றால் இப்பொழுது நாடுகள் விழித்துக் கொண்டுவிட்டன. இரண்டு நாடுகள் பேசாத ஐ.நா.கூட மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு வழியாக நடந்தது என்ன என்று தௌ;ளத்தெளிவாக கொண்டுவந்திருக்கிறது. லண்டன் செனல் 4, அப்பட்டமாக கொண்டுவந்திருக்கிறது. அதற்குப் பின்னால் வருகின்ற சாட்சியங்கள் இலங்கையில் இன்று என்ன நடந்துகொண்டிருக்கின்றது என்பதை வெளிக்கொண்டுவந்துவிட்டன. மேலும், நம் எல்லோருக்கும் தெரிந்தது அங்கு நடந்த யுத்தம் சாட்சி இல்லாத யுத்தம் என்று. திட்டமிட்ட வகையில் ராஜபக்ஷ அரசு பன்னாட்டு நிறுவனங்களை ஐ,நா அமைப்புக்களை, சர்வதேச தொண்டு நிறுவனங்களை, ஊடகவியலாளர்களை எல்லாம் இலங்கையைவிட்டு வெளியே அகற்றியது. இது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஆகவே இங்கு நடந்தது என்ன? என்பதை முழுமையாக தெரியாமல் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இதுவொரு பக்கம்.

இப்பொழுது நடந்துகொண்டிருப்பது என்ன? இதைப் பற்றி பேசுவது, இலங்கையிலுள்ள தமிழ் மக்களை பகடைகளாக வைத்துக்கொண்டோ, தமிழீழத்தைப் பற்றி, தமிழ் தேசியத்தைப் பற்றி பேசுபவர்கள் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காகவோ, அல்லது புலம்பெயர்ந்த மக்கள் ஒரு நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவோ, இந்த கரிசனைகள் எழுப்பப்படவில்லை. மாறாக அவர்கள் சொல்லுகின்ற இந்த விமர்சனத்தை முழுமையாக மறுக்கின்றோம். ஏனென்றால் பார்க்கின்றோம். கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடுமைக்கும், இன்றும் கட்டவிழ்த்துவிடப்படுகின்ற கொடுமைகளையும் பார்க்கின்ற பொழுது, இவர்கள் சொல்கின்ற கருத்துக்கும், நடக்கின்ற யதார்த்தங்களுக்கும் எவ்வளவோ பாரதூரமான வித்தியாசம் இருக்கின்றது.

இப்பொழுது நானும் ஒரு தமிழன் தான். தமிழ் மொழி பேசுபவன் தான். இங்கே தமிழக மக்களை ஒன்றிணைக்கும்போதோ அல்லது இந்திய மக்களை ஒன்றிணைக்கும்போதோ வெறும் தமிழ் மொழி என்று மட்டும் பாராமல், தமிழ் இனம் என்று மட்டும் பாராமல் மனித இனம், மனித நேயம், மனித மாண்பு, அங்கு கொல்லப்பட்ட, கொல்லப்படுகின்ற தமிழ் மக்கள், தமிழ் சகோதர, சகோதரிகளின் உடம்பிலும் சிவப்பு இரத்தம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அவர்களும் குடிமக்கள், உரிமையாக வாழப் பிறந்த சுதந்திர ஜீவிகள் என்ற அடிப்படையான மனித உரிமை, மனித மாண்பு, மனித நீதி சமுக நிதியத் என்ற கண்ணோட்டத்தில் தான் நானும் இதனைப் பார்க்க விரும்புகின்றேன். ஆகவே இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்ற பொழுது நான் தமிழ் என்பதைக்கூட ஒதுக்கி வைத்துவிடுகிறேன். நான் ஒரு தமிழ் இனத்தைச் சார்ந்தவன், தமிழ் மொழி பேசுகின்றவன் என்பதைக் கூட ஒதுக்கிவைத்துவிடுகிறேன். ஏன் நான் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்பதைக்கூட ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு மாண்பு நிறைந்த ஒரு மனிதாபிமானம் உள்ள, மனிதான அங்கு நடக்கின்ற நிகழ்வுகளை பார்த்தேன் என்றால் அங்கு நடப்பது இந்த அரசு சொல்கின்ற விமர்சனத்திற்கு எதிராக நடப்பதைத் தான் நாம் அங்கு பார்க்கின்றோம்.

அவர்கள் சொல்வது போல அவர்கள் அந்த மக்களை வாழ வைக்கின்றார்கள் என்று சொன்னால், ஏன் இன்னம் பல வகையான தடைகளை விதித்துக் கொண்டு வருகின்றார்கள். ஏன் இன்னும் இந்த இராணுவ மயமாக்கல் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது. ஏன் இராணுவத்தை இன்னும் மீள்வாங்க மறுக்கிறார்கள். ஏன் சிவில் நிர்வாகத்தைக் கொண்டுவர இன்னம் தடை விதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் மக்களை சுதந்திரமாக நடமாட விடாமல் இராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. முகாமில் வெளியே அனுப்பப்பட்ட எத்தனையோ மக்களை நான் பார்த்தேன். ஆனால் ஒவ்வொருவரும், அடிக்கடி எங்களை வந்து தொந்தரவு செய்கிறார்கள், அடிக்கடி நாங்கள் எங்கே போகிறோம், உங்கள் வீட்டிற்கு யார் வருகிறார்கள், என்ன நடக்கிறது, இதனைவிட என்ன கொடுரம் என்றால் இறந்துபோன தன்னுடைய கணவனுக்காக, இறந்துபோன தன்னுடைய மனைவிக்காக, இறந்துபோன தன்னுடைய தாய்க்காக, தந்தைக்காக, பிள்ளைகளுக்காக, கண்ணீர்கூட விடக்கூடாது, இறங்கல் கூட்டம் நடத்தக்கூடாது, ஜெபக்கூட்டம் நடத்தக்கூடாது என்று கூட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் எல்லாவற்றையும் இராணுவத்தைக் கேட்டுதான் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

நான் மன்னார் பகுதியில் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே ஏறக்குறைய 10, 15 விதவைப் பெண்கள் என்னைச் சந்தித்தார்கள். ஒன்றும் இல்லை பாதர் எங்களுக்கு ஒன்றும் வேண்டாம், எங்களை அழவிட மாட்டான் என்கிறார்கள். அவ்வளவு கண்ணீரும், கம்பளையுமாக தங்களுக்கு நடந்த கொடுமைகளை தங்களுடைய கணவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா, அப்பா வருவாரா என்று தெரியாமல் பிள்ளைகளும் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். ஆகவே, இந்த நிலைமை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் உண்மையில் அவர்களுக்கு இன்று திட்டங்கள் சரியான விதத்தில் தீட்டப்பட்டு நடத்தப்படவில்லை. இந்தத் தேர்தலுக்காகத்தான் ஒரு சில மாயைகள், பாசாங்குகள் செய்யப்பட்டன. இன்றும் போய் பார்த்தோம் என்றால் உண்மையான அபிவிருத்தி என்ன? தமிழ் மக்கள் பயன்பெறுகிறார்களா என்று பார்த்தோம் என்றால், இதில் முழுக்க முழுக்க நடந்துகொண்டிருப்பது ஒரு வகையான பொய்ப் பிரசாரம். இதனை இவர்கள் சர்வதேசத்தை திசை திருப்புவதற்காக, இப்போதுகூட ஜனாதிபதி சொல்லியிருக்கிறார் இவ்வளவு நாள் இருந்த இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கி விடுகிறேன் என்று சொல்லவிட்டு, அடுத்தநாள் என்ன சொல்கிறார், தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இளைஞர்களை வெளியில் விடமாட்டோம். இவர்களை நாங்கள் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்களாகத்தான் நடத்துவோம். அப்போது அவர்கள் சொல்வதில் எவ்வளவு மாற்றங்கள் பாருங்கள். ராஜபக்ஷ மிகவும் புத்திகூர்மையான, சாதுர்யமான ஒரு கொடுரவாதி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் யுத்தம் ஆரம்ப நாள் முதல் இருந்து அவரின் பிரகடனங்களை எல்லாம் பார்த்து, பின்பற்றி வருகிறேன். ஒரு நெருக்கடி வரும்போது, நிறைய வாக்குறுதிகளைக் கொடுப்பார். இந்திய அரசாங்கம் ஒன்றைக் கேட்கும்போது, உடனே வாக்குறுதிகளை அள்ளிவிடுவார். தமிழ் அரசியல் கட்சிகள் நிர்ப்பந்திக்கும் போது ஒரு வாக்குறுதியைக் கொடுப்பார். உடனே என்ன நடக்கும், ஆஹா, இவர் மாறிவிட்டார் நல்ல நடக்கும் என நம்பிவிடுவார்கள். இப்பொழுது அதே மாதிரி தான், இம்மாதம் ஐ.நா. பாதுகாப்பு பேரவை இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசிவிடுமோ, சர்வதேச அளவில் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்திருக்கின்றன. இவை எல்லாம் இவையெல்லாம் நெருக்கடியைக் கொடுக்க முனைந்துகொண்டிருக்கின்றன. ஆங்காங்கே, ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எனவே இவ்வற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்ற ஒருவகையான நெருக்கடிக்கு வந்திருக்கும் நிலையில், இறுதியாக நடத்தும் நாடகம் தான் இது என்று நினைக்கின்றேன்.

அவரும், அவருடைய சாக்காக்களம், அவருடைய அரசாங்கமும் சொல்வதில் உண்மை இல்லை என்பதை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அகில உலக ரீதியாக ஒரு விசாரணை ஆணையத்தை அங்கு வையுங்கள். இப்பொழுது அங்கு நடந்துகொண்டிருப்பது கற்றுக்கொண்ட படங்கள், நல்லிணக்க ஆணைககுழு. யார் நடத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசு நியமித்த அந்தக் குழு. அந்தக் குழுவிடம் கூட போய், அவர்களிடம் வாய்விட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு பயந்துபயந்து சொல்கிறார்கள். இதனை எவ்வாறு அவர்கள் எழுதிக் கொண்டார்கள். எவ்வாறு இதனை ஆவணப்படுத்தினார்கள் என்பது எல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆகவே இன்று ஒரு சர்வதேச அளவில் ஒரு விசாரணைக்குழுவை அங்கு அனுப்புங்கள். அப்போது அந்த மக்களை சுதந்திரமாகப் பேசவிடுங்கள். அப்போது உண்மைகளை உலக அரங்கு அறியும்.

நடப்பது என்ன? அரசு, எதை சொல்லிக் கொண்டு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவரும். ஏனென்றால் மக்கள் வெளியில் சொல்வதற்கு பயப்படுகிறார்கள். ஏனென்றால் அதனைச் சொன்னால் இராணுவம் தங்களைத் தாக்குமோ, இருக்கின்ற தங்களின் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டுசெல்லுமோ, தன்னுடைய கற்பு கொள்ளை போகுமோ, பெண் பிள்ளைகளைக் கொன்றுவிடுமோ என்று பயந்துகொண்டிருப்பதால் அவர்களால் உண்மையைச் சொல்ல முடியவில்லை. சர்வதேச அளவில் நீங்கள் அங்கு விசாரணை நடத்துங்கள். அப்போது உண்மையெல்லாம் அப்பட்டமாக வெளிவரும்.

குருபரன் : ஆம் நீங்கள் மிகத் தெளிவாக பல்வேறு விடயங்களைக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் அங்கு நேரடியாக சந்தித்த மக்களிடம் எவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டீர்கள், அங்கு என்ன நடக்கிறது என்ற முழுமையான விபரங்களைத் தந்திருக்கிறீர்கள். உங்களின் பயண அனுபவத்தில் இன்னும் ஏதாவது கூறுவதற்கு உண்டா?

அருட்தந்தை ராஜ் : ஆம். குறிப்பாக அங்கே நடந்த போர்க் குற்றங்கள் சர்வதேசத்திற்குத் தெரியவரக் கூடாது என்று அரசாங்கம் சில விடயங்களை மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது. குறிப்பான நான் சிங்கள நண்பர் ஒருவருடன் தான் சென்றேன். அதனால் தான் என்னால் எளிதாக செல்ல முடிந்தது. அவருடன் புதுகுடியிருப்பு வழியாக செல்லும் பொழுது, முல்லைத்தீவுக்குச் செல்லும் போது இரண்டு வழிகள் இருக்கின்றன. இடதுபக்கம் செல்கின்ற வழியை இராணுவம் மறைத்து வைத்திருக்கிறது. அங்கு எவரையும் அனுமதிக்க மாட்டேன் என்கிறது. வலது பக்க வழியில் எங்களை அனுமதித்தது. நாங்கள் வலதுபக்க வழியாக முல்லைத்தீவு நுழைந்து, அந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கே நான் சென்றுவிட்டு வந்தேன். அப்பொழுது என்ன நடந்தது என்று கேட்டோம் என்றால், எங்கெல்லாம் கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டார்களோ, அவர்களது கல்லறைகளை எல்லாம், அவர்களது உடல்களை எல்லாம் அப்புறப்படுத்தும் வேலைகள் தான் நடந்துகொண்டிருக்கிறது. எப்பொழுது இவர்கள் அந்த முள்வேலி முகாமில் இருந்து மக்களை விடுவித்தார்க்ளக் என்றால், எந்தவொரு பிரேதங்களும் இல்லாத அளவிற்கு கல்லறைகளை அப்புறப்படுத்தி, இங்கு கல்லறைகளே இல்லாத அளவுக்கு, ஒரு சூழலை உருவாக்கிவிட்டுத்தான் இவர்கள் கொஞ்சம், கொஞ்சமாக கிளிநொச்சி மக்களை, முல்லைத்தீவு மக்களை அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் இப்பொழுதுகூட முள்ளிவாய்க்கால் மக்களை வெளியே அனுப்பாமல் இன்னும் முகாமில் தான் வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால், முகாமில் இருக்கின்ற இரண்டு மூன்று பேரைச் சந்தித்தேன். ஏதே ஆங்காங்கே வேலை செய்வதற்காக வெளியே விடுவார்கள். ஆனால் திரும்பி வந்துவிட வேண்டுமென அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்கள் சொன்னார்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தைத் தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று. தூய்மை படுத்துவது என்று சொன்னால், கொத்துக் கொத்தாக கொன்றுகுவிக்கப்பட்ட நம்முடைய மக்களின் உடல்களை எரிப்பது, எரித்து சாமலை கடலோடு கலப்பது போன்ற இதுமாதிரியான கொடுரங்கள் நடந்த தடயங்களை அழிப்பது என்று முடிவு செய்து இன்னும் முள்ளிவாய்க்கால் பகுதி மக்களை இங்கு அனுப்பிவல்லை.

சமீபத்தில் நான் வாசித்த செய்தி இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. என்ன செய்திகொடுத்திருக்கிறார்கள் என்றால் முள்ளிவாய்க்காலில் நாங்கள் மறுபடியும் மீள்குடியேற்றம் செய்ய மாட்டோம். ஏனென்றால் மிகவும் பதற்றமான பகுதி. இது அமைதிக்கு ஊறுவிளைவிக்கின்ற பகுதி. எனவே இந்தப் பகுதி இராணுவத் தளமாக மாற்றப்படும். ஏனென்றால், தெரிந்துவிட்டது அவர்களினால் போர்த் தடயங்களை முழுமையாக அகற்ற முடியாமல் இருக்கின்றது என்பதை. எனவே இங்கொரு இராணுவத் தளத்தை அமைத்துவிட்டால், சர்வதேச கண்காணிப்பாளர் ஒருவர் இங்கு நுழையவிடாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ளது. ஆகவே, இதுமாதிரியான திட்டமிட்ட விதத்தில் போர்க் குற்றங்களை மூடிமறைப்பதற்கு அங்கே இராணுவத்தினரால் பலவகையான வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

நான் என்ன சொல்ல விரும்புகின்றேன் என்று சொன்னால், 21ஆம் நூற்றாண்டில் வாழ்கின்ற நமக்கு இலங்கையில் நடந்த அந்த பேரின அழிப்பு, இதுவொரு இன அழிப்புப் போர் தான் என்று சொல்ல வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குகின்றோம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்களை அநியாயமாக, கொடுரமாக, எவ்விதப் போர், சர்வதேச போர் நிபந்தனைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு செய்திருக்கிறார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட ஒரு யுத்தம் சர்வதேச நிபந்தனைகளை எல்லாம் தாண்டிய கொடுரமான இன அழிப்புப் போர், இதில் ஈடுபட்ட, இதனை முன் நின்று நடத்தியவர்கள், ராஜபக்ஷ அரசு, ராஜபக்ஷ போன்றவர்கள் எல்லாம் இன்று போர்க் குற்றவாளிகளாக நிறுத்தப்படாவிட்டால், இந்த பூமி ஒரு பெரிய கொடுரத்தை அங்கீகரித்ததாக ஆகிவிடும்.

ஏனென்றால் இவர்கள் போர்க் குற்றவாளிகள் என்று சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால், மற்றைய நாடுகளுக்கும் திமிர் விட்டுவிடும். எப்படியும் அப்பாவி சனங்களைக் கொல்லாம். உரிமை கேட்பவர்களை, ஜனநாயகம் கேட்பவர்களை, சுதந்திரம் கேட்பவர்களை, விடுதலைக் கேட்பவர்களை கொன்று குவித்துவிடலாம், கேட்பதற்கு நாதி இல்லை என்று ஆகிவிடும். இது மாற்றப்பட வேண்டும். எனவே தான், இன்று தமிழகத்திலும் சரி, நாங்களும் பலவகையான அமைப்புக்களோடு சேர்ந்து, ராஜபக்ஷ போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு இன்னும் நெருக்கடி கொடுத்து, ஏன் இலங்கையின் மேல் பொருளாதாரத் தடை விதிக்கக்கூடாது. எப்பொழுது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கின்றதோ, அப்பொழுதுதான் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும். ஆனால், நமது இந்திய அரசாங்கம் எவ்வளவு தூரம் உண்மையாக செயல்படுகின்றது என்பது இந்தியர்களுக்கும், மனித உரிமை வாதிகளுக்கும் பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

ஆகவே இந்தப் போர்க் குற்றம். வெளியே கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு கொண்டுவரப்படுவதனால் அந்த ஆட்சிக்கு ஒரு ஆட்டம் கொடுக்கப்பட வேண்டும். போர்க் குற்ற நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்துவதால் மட்டும் தமது மக்கள் வந்து சுபீட்சம் பெறுவதில்லை. மாறாக சர்வதேச விதிகளின்படி இங்கு இவர்களுக்கு உண்மையான மீள்குடியேற்றம் கொடுக்கப்பட்டு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படவேண்டம். இதனைத் தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து, 1948இல் இருந்து, அங்கு தமிழினக் குழுக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இதுதான் சரியான தருணம். இந்தத் தருணத்தை நாம் விட்டுவிட்டோம் என்று சொன்னால், ஏற்கனவே ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட நம்முடைய மக்கள் கொல்லப்பட்டு, 90 ஆயிரத்திற்கு மேல் விதவைகளாக்கப்பட்டு, 60 ஆயிரத்திற்கும் மேல் ஊனமாக்கப்பட்ட, இப்படியான கொடுர நிகழ்வை எதிர்த்து நாம் குரல்கொடுக்கவில்லை என்றால் மறுபடிடையும் இன்னுமொரு லட்சம் மக்களைக் கொன்றுவிட்டா நாம் குரல்கொடுக்கப் போகிறோம்?

எனவே இதுதான் சரியான தருணம். எனவே புலம்பெயர்ந்த நம்முடைய தமிழ் மக்கள், மனித உரிமை பேசுகின்ற எல்லாக் குழுக்களும், இந்தியர்களும், தமிழர்களும், இனம், மொழி என்பதைக் கூட கடந்துவிட்டு இதுவொரு மனித உரிமைப் போராட்டம், இங்கு வாழ்கின்ற மக்கள் மனிதர்கள், சகோதர, சகோதரிகள் என்ற உணர்வில் நாம் அங்கு மனித நீதியை, சமுக நீதியை, மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காக தொடர்ந்து அழுத்தங்களையும், குரலையும் கொடுத்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னால், எனக்கு என்னமோ நம்பிக்கைக் கீற்று இருக்கின்றது கட்டாயம் நம்முடைய மக்களுக்கு ஒரு விடிவு பிறக்கும் என்று. அதற்காக நாங்கள் இந்தியாவிலிருந்து தொடர்ந்து உழைப்போம். தற்போது கூட அடுத்தக்கட்டமாக நாங்கள் என்ன செய்யலாம், எவ்வாறு தமிழக அரசையும், இந்திய அரசை, ஐ.நாவை எல்லாம் வலியுறுத்தலாம் என்று எல்லாம் பலவகையான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கின்றோம்.

எனவே, அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்று சொல்வதைப் போல இந்தத் தருணத்தில் சரியான வரலாற்றுப் பதிவை மற்றைய தமிழர்களோ, புலம்பெயர்ந்த தமிழர்களோ, இந்தியத் தமிழர்களோ கொடுக்கத் தவறிவிட்டோம் என்றால் ஒரு பெரிய வாய்ப்பை, இலங்கைத் தமிழர்கள் சுபீட்சமாக வாழக்கூடிய ஒரு வாய்ப்பை, நாம் வரலாற்றில் இழந்துவிடுவோம் என்ற ஒரு பயம் தான் இன்று இருக்கிறது.

குருபரன் : நன்றி அருத்தந்தை ராஜ் அவர்களே.

அருட்தந்தை ராஜ் :அங்கே நடக்கின்ற உண்மை நிலவரங்களை, நம்முடைய புலம்பெயர்ந்த மக்களுக்கும், மற்றயவர்களும் அறியக்கூடிய வாய்ப்பைக்கொடுத்த எல்லோருக்கும் நம்முடைய பாசமிகு நன்றிகள். வணக்கம்.

www.gtbc.fmல் பிரதி சனிக் கிழமைகளில் லண்டன் நேரம் மலை 5 மணிமுதல் 8.30வரை இடம்பெறும் விழுதுகள் நிகழ்ச்சிக்காக வானலையில் நாம் கண்ட நேர்காணல் இது. இந்த சாட்சியங்களின் பதிவையோ ஒலிவடிவத்தையோ மறு பதிவு செய்பவர்கள் எமது வானொலி மற்றும் இணையங்களின் பெயர்களைக் குறிப்பிட்டே மறுபதிவு செய்ய முடியும்.

நாளை கணக்குறிஞ்சி அர்களின் துணிகரப் பயண அனுபவங்களின் ஒலி மற்றும் கட்டுரை வடிவம் வெளியிடப்படும்:-

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/67290/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தந்தையே

அப்படியே கொஞ்சம் ஐ.நா. க்கும் சொல்லுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.