Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர் அரசியலை முன்னகர்த்துவதற்காக மாயைகளை களைதல் அல்லது தடைகளை அகற்றல்

Featured Replies

'புதினப்பலகை'க்காக நிர்மானுசன் பாலசுந்தரம்.

சமகாலத்திற்குப் பொருத்தமான பலஸ்தீன போராட்ட அமைப்புகளான பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] இயக்கங்களுக்கிடையில் கடந்த ஏப்ரல் 27ம் திகதி கைச்சாத்தான உடன்படிக்கை, அதனுடைய தாக்கம் போன்றவை ஈழத்தமிழர்களுக்கு சொல்லும் பாடம் என்னவென்பதை இம்முறை பத்தியிலே அலசுவோம்.

தேசிய விடுதலைக்காக போராடும் இனங்களின் ஆயுதங்களும், களங்களும், அந்த இனங்களின் விடுதலைக்காக போராடும் போராட்ட அமைப்புக்களால் நிர்ணயிக்கப்படுவதில்லை. காலப்போக்கில் இதில் ஒரு மாற்றம் வரலாம், ஆனால், ஆரம்பக் கட்டம் அடக்குமுறையாளர்களாலேயே இது நிர்ப்பந்திக்கப்படுகிறது.

இந்த நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பதாக போராட்டங்கள் உருவாகும் போது பிளவுகள் உண்டாவது தவிர்க்க முடியாததாகவுள்ளது.

குறித்த போராட்ட அமைப்புகளின் இலக்கு ஒன்றாக அமைந்தாலும், அவர்களுடைய அணுகுமுறைகளில் உருவாகும் வேற்றுமை, பிளவுகளின் இடைவெளியை அதிகரித்து, பிரிவுகளை நிரந்தரமாக்கக்கூடிய ஆபத்தான சாத்தியப்பாடுகள் பெரும்பாலும் உருவாகின்றன. இவை, சிலவேளைகளில் இலக்கினை கூட சிதறடித்து விடுகின்றன. அல்லது, பலவீனப்படுத்தி விடுகின்றன.

இதற்கு ஈழப்போராட்டம் சிறந்த உதாரணம். ஈழப்போராட்டத்தோடு சில ஒற்றுமைகளை கொண்டுள்ள பலஸ்தீன போராட்டம், ஈழப்போராட்டத்தின் பலவீனமான பகுதி கற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினையை தந்து நிற்கிறது.

பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] இயக்கங்களுக்கிடையிலான முரண்பாடென்பது நாம் அறிந்த கடந்த கால வரலாறு. ஆனால், கடந்த ஏப்ரல் மாத இறுதிப் பகுதியிலிருந்து, புதிய தேசத்தை காணும் நம்பிக்கையுடன், புதிய உடன்பாட்டில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

நீண்டகாலமாக இருதரப்புகளுக்குமிடையில் நிலவிவந்த பகமை, ஏன் ஆயுத மோதல்கள் போன்ற எல்லாவற்றையும் மறந்து, தாம் என்ன காரணத்துக்காக இந்த போராட்ட பாதைக்குள் காலடி எடுத்து வைத்தோமோ, அதற்காகவே ஒன்றிணைந்துள்ளார்கள்.

இந்த ஒன்றிணைவே, தமது மக்களது அவலங்களை கட்டுப்படுத்தி இறுதியில் ஒரு முடிவினை கொண்டுவரும், அந்த முடிவானது புதிகாக பிறக்கும் ஒரு தேசத்திற்கான அடித்தளமாக இருக்கும் என்பது இருதரப்பினரும் ஒன்றிணைந்தமைக்கான பிரதான காரணங்களில் ஒன்று.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், ஒரு பகுதி தமிழ் தரப்பினர் அழிவிலிருந்து மீண்டெழுந்த யூதர்கள் போல நாங்கள் மாற்றமடைய வேண்டும் என விருப்பப்பட்டார்கள்.

தென்சூடான் சுதந்திரமடைந்த பின், அடுத்தது தமிழீழம்தான் என்றார்கள் விடுதலை உணர்வாளர்கள். தற்போது, பலஸ்தீனத்திற்கு சாதகமாக உலகசூழல் மாறினால் அதனையும் எமக்கு ஏற்ற வகையில் பேசுவதற்கு தயாராக இருக்கிறார்கள் போராட்டத்தை சரியான பாதையில் நகர்த்த வேண்டும் என்ற அவாவுடையோர்.

இந்த விருப்பங்கள் பிழையானவையல்ல. இந்த ஆசைகள் தப்பானவையல்ல. இந்த நம்பிக்கைகள் அடிப்படையில் நியாயமானவை.

இவையெல்லாம் ஒரு போராடும் இனத்துக்கு நிச்சயமாக இருந்தேயாக வேண்டும். ஆனால், இவையெல்லாவற்றிற்கும் அடித்தளமானது, பகைமைகளை கடந்து இலக்கில் ஒன்றுபட்டு முன்னோக்கிப் பயணிப்பது. ஆயுதப்போரட்டத்துக்கு மட்டுமல்ல, அரசியல் போராட்டத்துக்கும் அதீதமான அர்ப்பணிப்பு வேண்டும்.

சுயநிர்ணய உரிமை அடிப்படையில், சுதந்திரமும், இறைமையும் கொண்ட தேசம் தமிழர்களுக்கு உருவாக வேண்டும் என்றால், இலக்கினை அடிப்படையாகக் கொண்ட ஐக்கியம் தமிழர் தரப்புகளுக்கிடையில் மலர்ந்தாக வேண்டும். அந்த மலர்வே, சுதந்திரமான தேசமொன்றின் பிரசவத்திற்கு வழியமைக்கும்.

கோசங்களும், கொள்கைகளும், கனவுகளும் புதியதேசத்தை உருவாக்காது. அவற்றிற்கு செயல்வடிவம் கொடுக்கவேண்டும். அதற்காக அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பான்மையுடனும் செயற்பட வேண்டும். இதற்கமைவாகவே, தமிழ் தேசியப் போராட்டம் உருவாக்கம்பெற்று, முன்னகர்ந்து, மாற்றுநிலையாக்கம் அடைந்தது.

முப்பத்தெட்டு வருடகால ஆயுதப் போராட்டம் என்பது, தனித்து கொள்கையுடனும், கோசத்துடனும் நகரவில்லை. மாறாக, அதற்கு செயல்வடிவம் கொடுத்ததுதான் அந்த போராட்டம் உலகளாவியரீதியில் தனித்துவம் அடைவதற்கான காரணமாக அமைந்தது. அதற்காக செலுத்தப்பட்ட விலை, அர்ப்பணிப்பு, தியாகங்கள் அளவிடப்பட முடியாதவை.

தேர் நகர வேண்டும் என்றால் தேவையானளவானோர் இணைந்து தள்ளினால்தான் தேர் நகரும். அதைவிடுத்து, அரோகரா என்றால் தேர் அசையக்கூட மாட்டாது.

போராட்டத் தேர் நகர்ந்து, இலக்கு அடையப்பட வேண்டும். அது எவ்வாறு நகரவேண்டும், அதை எவ்வாறு நகர்த்துவது போன்ற தயார்ப்படுத்தல்களை மனதிலிருத்தி செயற்பட்டதாலேயே, இன்று பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] அமைப்புக்கள் ஒன்றிணைந்தன.

இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கு அப்பால், இதனுடைய இன்றைய தாக்கமும், இது எவ்வாறு பலஸ்தீனத்தின் எதிர்காலத்தை மாற்றப் போகிறது என்பதுவுமே முக்கியமாகும்.

இவர்களுடைய ஒன்றிணைவு பலஸ்தீனப் போராட்டத்துக்கு ஆதரவான சக்திகளை உற்சாகத்துடன் செயற்படத் தூண்டியுள்ளது. விலகி இருந்தவர்களை மீண்டும் ஈடுபாட்டு நிலைக்கு தள்ளியள்ளது. அவர்களது பிரதான எதிரியான இஸ்ரேலுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது.

இதன் வெளிப்பாடே, அமெரிக்கா ஜனாதிபதி பரக் ஓபாமாவுடன் கருத்தியல் ரீதியான வேறுபாட்டை வெளிப்படையாகக் காட்டுமளவுக்கு இஸ்ரேலிய பிரதமர் நேதன்ஜாகுவை நிர்ப்பந்தித்துள்ளது.

இந்த அரசியல் அபிவிருத்திகளுக்கு மத்தியிலேயே, கடந்த[செப்டெம்பர்] 13ம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அறுபத்தாறாவது கூட்டத்தொடர், செப்டெம்பர் 20ம் திகதி பலஸ்தீனம் தொடர்பாக விவாதிக்கவுள்ளது.

இதனடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படும்;. அந்த தீர்மானம் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாகவும், அவர்களது தேச விடுதலைக்கு அடித்தளமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தமக்கு வேறுபாடுகளைத் தாண்டி பல்வேறு இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்துள்ளதோடு. அதற்கு ஆதரவாக வாக்களிக்கும் படி, உலகிலுள்ள ஏனைய நாடுகளையும் கோரும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.

இதற்கான பிரதான பின்புலங்களில் ஒன்றாகத் திகழ்வது பற்றா [FATAH] மற்றும் ஹமாஸ் [Hamas] அமைப்புக்களின் ஒன்றிணைவே ஆகும்.

இந்த ஒன்றிணைவு தொடர்பாக காஸாவிலுள்ள [Gaza] அல்-அஷார் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் பேராசிரியராக கடமையாற்றும் மஹைமர் அபுசட பின்வருமாறு கூறினார். “பிரிவுகளின் காரணமாக, திட்டமிட்ட குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கினோம். இன்று அந்த பக்கத்தை மூடி ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம்”

இந்த ஒன்றிணைவினூடாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில்; தமக்கு ஆதரவாக, அதாவது 1967 ஆண்டு இனங்காணப்பட்ட எல்லைகளை அடிப்பமையாக வைத்து, வெஸ்ட் பாங் [West Bank], கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒருதலைப்பட்சமான தனிநாட்டுப் பிரகடனத்தை [unilateral Declaration of Independence –UDI] அல்லது அதனை வலுப்படுத்தக்கூடிய தீர்மானத்தை ஐ.நாவில் மேற்கொள்வதற்கு பலஸ்தீனம் முயற்சிக்கிறது.

ஐ.நாவின் பொதுச்சபையையும்[uN General Assembly], ஐ.நா பாதுகாப்புச் சபையையும் [uN Security Council] இலக்குவைத்தே பலஸ்தீனத்தின் நகர்வுகள் அமைந்துள்ளது.

இதில், ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்துக்கு ஆதரவான கைகள் ஓங்கினாலும், பாதுகாப்புச் சபையில் பூரண அங்கத்துவத்தை கோரும் பலஸ்தீனத்தின் முயற்சிக்கு அமெரிக்கா தனது வீற்றோ அதிகாரத்தைப் பயன்படுத்தி பலஸ்தீனத்துக்கு கோரிக்கையை தோற்கடிக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகத் தென்படுகிறது [இதற்கான காரணத்தை இன்னொரு தொடரிலே பார்ப்போம்].

பலஸ்தீனத்தின் இந்த முன்னெடுப்பானது, வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால், நில ஆக்கிரமிப்பை இனியும் தாங்கமுடியாது, எமக்கு சுதந்திரமாக, கௌரவமாக வழக்கூடிய ஒரு தனித் தேசம் வேண்டும் என்ற அபிலாசையை உலகெங்கும் வெளிப்படுத்த முனைகிறது.

இதனை தனது சகல பலங்களையும் பிரயோகத்து தடுப்பதற்கு இஸ்ரேல் முயல்கிறது. அது, பலஸ்தீனத்துக்கு வரலாற்றில் மிகப்பொரும் நெருக்கடியை கொடுக்கும் என்பது பெரும்பாலன அனைத்துலக உறவு தொடர்பான ஆய்வாளர்களின் கருத்து.

அதேவேளை, பலஸ்தீனியர்களுக்கு இன்று இருப்பது இரண்டு பிரதான தெரிவுகள். அதாவது, இல்ரேலின் நில ஆக்கிரமிப்பபையும், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களையும், ஏனைய கெடுபிடிகளையும் பொறுத்துக்கொண்டு, கௌரவத்தையும், சுதந்திரத்தையும் இழந்து பாதிக்கப்பட்ட இனம் என்ற அனுதாபத்துடன் வாழ்வதா

அல்லது வேறுபாடுகளைத் தாண்டி இலக்கினை அடிப்படையாக வைத்து ஒன்றிணைந்ததனூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் போராட்டத்தை தொடர்ந்து, அதனுடாக பலஸ்தீன மக்களின் நியாயமான அபிலாசைகளை உலகிற்கு உரிய முறையில் எடுத்துக்கூறி காலக்கனிவு வரும் வரை தளர்வின்றி சுதந்திரத்திற்கான போராட்டத்தை எடுத்துச் செல்வதா என்பதே அவர்களுக்குரிய இரண்டாவது தெரிவுவாகும்.

இரண்டாவது தெரிவிற்கே பெரும்பான்மையான உள்ளக ஆதரவும், கடந்த காலத்தோடு ஒப்பிடுமிடத்து கணிசமானளவு அதிகரிப்புடன் கூடிய அனைத்துலக ஆதரவு நிலையம் காணப்படுகிறது.

சொல்லொண துன்பங்களை தாங்கி, மனிதப் பேரவலங்களுக்கு பல ஆண்டுகாலமாக முகம்கொடுத்து நின்றாலும், சுதந்திமும், கௌரவவுமான தீர்வு கிடைக்கும் வரை எமது விடுதலைத் தாகம் அடங்காது என்ற மக்களின் உறுதியாலேயே தனிநாட்டை உருவாக்குவதற்கான பலஸ்தீனியத்தின் முயற்சி கருவாகி வளர்ச்சியடைந்தது எனலாம்.

பலஸ்தீனம் என்ற அடையாளத்துடன் கூடிய தேசம் இருந்தாலும், ஒரு இறைமையுள்ள அரசிற்கு இருக்கவேண்டியப பண்புகள் அங்கு காணப்படவில்லை. அதனை உருவாக்க வேண்டுமானால், அதற்கு செயல்வடிவம் கொடுத்து தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதற்கு இரு போராட்ட அமைப்புகளுக்குமான ஒற்றிணைவே வழிகோலும் என்பதாலேயே பலஸ்தீனியர்கள் உள்ளகப் பிரிவுகளுக்கு முடிவுகட்ட முக்கியத்துவம் அளித்தனர்.

தற்போது, பலஸ்தீன இளையோர் அனைவரதும் பிரதான கோசமாக, “பிரிவுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், ஆக்கிரமிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் ஆகியனவே இன்று மக்களுக்கு வேண்டும்” என்பதாக மாறியுள்ளது.

ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டு, தமது இலக்கு நோக்கிய பயணம் உரியவாறு நகரவேண்டும் என்றால், இலட்சியத் தாகத்துடன், கடந்த கால தியாகங்களையும், அர்ப்பணிப்புகளையும் மனதிலிருத்தி இலக்கு நோக்கிய ஒன்றிணைவு அவசியமானது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

2009 மே 19 ம் திகதிக்கு பின்னர் தமிழர்கள் பல்வேறு கூறுகளாக பிளவுபட்டுப்போயுள்ளனர். இதில் சிங்கள தேசத்துடன் கைகோர்த்துள்ளவர்களை விடுத்து, தமிழ் தேசத்தின் விடுதலைக்காக பணியாற்றுவதாக கூறிக்கொள்ளும் குழுமத்தினரில் எந்தவொரு தரப்பினராலும் தமது தரப்பு நியாங்களை எடுத்துக்கூறி ஏகோபித்த மக்கள் ஆதரவை பெறமுடியவில்லை.

அதேவேளை, இந்தப் பிரிவுகள் மக்களை குழப்பத்துக்கும், வேதனைக்கும் ஆழக்கியுள்ளது. அதேவேளை, தமிழ்த் தேசிய விடுதலை விரும்பிகளை, தேசநிர்மாணிப்புக்காக பணியாற்றக் கூடியவர்களைக் கூட இந்த பிரிவு போராட்டத்திலிருந்து விலக்கிவைக்க முற்பட்டுள்ளது.

சுதந்திரமும், இறைமையும்முள்ள தமிழீழத்திற்காக போராடுகிறோம் என்ற சொல்கின்ற ஒவ்வொரு தரப்புகளிலுமே பலங்களும், பலவீனங்களும் காணப்படுகின்றன. அவை சரிவர அடையாளம் காணப்பட்டு, அதனடிப்படையில் ஒரு பொதுப்புள்ளி வரைந்து, அதிலிருந்து தமிழ்த் தேசிய விடுதலையை நோக்கிய பயணம் தொரடப்பட வேண்டும்.

இதன் மையப்புள்ளியாக, தமிழ் மக்களுக்கு நிம்மதியான, நிலையான, நீதியான வாழ்வு கிடைக்கக் கூடிய வகையில் அணுகுமுறைகளை உருவாக்கி, இலக்கினை அடைவதற்கான உபாயங்களுடனும், உத்திகளுடனானுமான செயற்திட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

பி கு: ஊடகவியலாளரான நிர்மானுசன் பாலசுந்தரம் அனைத்துலக அளவிலான மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதுடன், சமாதானம் மற்றும் மோதுகை மாற்றுநிலையாக்கம் தொடர்பான துறைகளிலான ஆய்வாளரும் ஆவார். கட்டுரை பற்றிய கருத்துகளை எழுதுவதற்கும் ஆக்கபூர்வமான விவாதங்களை முன்வைப்பதற்கும்: bnirmanusan@gmail.com

http://www.puthinappalakai.com/view.php?20110921104729

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.