Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 8)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

a7.JPG

நான் ஓர் ஈழத் தமிழன். எமக்கு எனத் தனித்துவமான பேச்சுத் தமிழ் உண்டு. தமிழ்நாட்டுத் தமிழர்கள் பேச்சுத் தமிழில் பயன்படுத்துகிற பல சொற்களை நாம் பயன்படுத்த மாட்டோம்.

சொற்களைப் பயன்படுத்துவதில் இரு பிரதேசத் தமிழர்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் தமிழ்நாட்டுக்கு வந்த ஆறு மாத காலத்துக்குள் இங்கு உள்ள பேச்சுத் தமிழ் எனக்குப் பரிச்சயம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை.

ஆனாலும், அரசுத் தரப்பு சித்திரிப்புகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலங்கைத் தமிழர் பயன்படுத்தாத, தமிழ்நாட்டில் வழக்கில் உள்ள சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் இருந்தே ஒப்புதல் வாக்குமூலம் என் சொல் படி எழுதப்படவில்லை என்பதும், அவர்களின் இஷ்டத்துக்குத் தகுந்தபடி எழுதப்பட்டது என்பதும் அப்பட்டமாகத் தெரியவரும்.

சொற்களின் பிரயோ கத்தைக்கூட அப்படியே பதிவு செய்வது அவசியமா?’ என யாரும் கேட்கலாம். நடந்தது சாதாரண நபரின் கொலை விவகாரம் அல்ல. இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் தலைவர். நாட்டையே உலுக்கிய வழக்கில் குற்றவாளியின் ஒப்புதல் வாக்கு மூலம் என்பது எந்த அளவுக்கு முக்கியமானது?

ஒவ்வொரு வார்த்தையும் மிக நுணுக்கமாகவும், அச்சு அசலாகவும் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லவா? 'ஒப்புதல் வாக்குமூலம் ஓர் எதிரியால் சொல்லப்படும்போது எவ்வித மாற்றமும் இல்லாமல், அவரது சொந்தச் சொற்களில் உரைநடையில் அப்படியே பதிவு செய்யப்பட வேண்டும்’ என்பது தடா சட்டத்தின் 15-வது பிரிவின் விதியாகும்.

இதுபோல், எத்தனையோ விதிமுறை மீறல்கள்... கட்டுக்கதைகள்... தில்லுமுல்லுத் திணிப்புகள்!

ஒருவேளை மேற்சொன்ன அனைத்தும் ஏற்பதற்கு இல்லை என்று சொன்னால்கூட, அரசுத் தரப்பு காட்டிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய அளவு சாட்சியச் சான்றுகள் உள்ளனவா? அவை, உரிய முறையில் திறந்த மனதுடன், நடுநிலைமையுடன் பரிசீலிக்கப்பட்டனவா? காட்டிய நிரூபணங்கள் சட்டப்படியும், நியாயப்படியும், உண்மையின்படியும் ஏற்கத்தக்கனவா? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும் வல்லமை நெஞ்சுரம் படைத்த எவருக்கேனும் இருக்கிறதா?

இறுதியாக, எம் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள். ராஜீவ் கொலை வழக்கு உரிய முறையில் விசாரிக்கப்படவில்லை என்பதற்கும், போகிற போக்கில் யாரை எல்லாமோ குற்றவாளிகளாகச் சித்திரித்தார்கள் என்பதற்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைவிட வேறு உதாரணம் வேண்டியது இல்லை.

குற்றச் சதியின் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்தை வைத்தே, நாங்கள் தண்டிக்கப்பட்டு இருக்கிறோம். விடுதலை செய்யப்பட்டவர்களுக்குச் சொல்லப் பட்ட தீர்ப்பு எங்களுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தும். ஆனால், குற்றச் சதியின் உறுப்பினர்களாக நாங்கள் நிறுத்தப்பட்டதால், உச்ச நீதிமன்றத்தின் கருணைக் கதவுகள் எங்களுக்காகத் திறக்கவில்லை.

'இந்திரா காந்தி கொலை வழக்கில் ஹேகர் சிங் என்பவருக்கு வெளியார் தலையீடு காரணமாக மரண தண்டனை கொடுத்தேன்; அது எனது மனச்சாட்சியை இன்றைக்கும் உறுத்துகிறது!’ - முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியே மனசாட்சியின் முன்னால் மண்டியிட்டுச் சொன்ன வார்த்தைகள் இவை.

அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் என்கிற உயரிய கோபுரமே தப்ப முடியவில்லை என்கிறபோது, சாதாரண நபர்களாகிய எமக்கு எதிராக அதிகாரங்கள் விளையாடியதில் ஆச்சர்யம் இல்லை.

சரி, என் மீது அப்படி என்னதான் குற்றச்சாட்டு? சிவராசனுக்கும் எனக்குமான தொடர்புதான் புலனாய்வுப் புள்ளிகளின் கண்ணுக்குக் கிடைத்த முதல் பொறி. சிவராசனோடு பேசியதையோ, பழகியதையோ, நான் மறுக்கவில்லை. நம்மோடு பழகுபவர்களின் அத்தனை விதமான நகர்வுகளும் நமக்குத் தெரிந்தே நடக்கும் என நினைப்பது எப்படி சாத்தியமாகும்?

சிவராசனுக்கும் எனக்கும் எப்படிப்பட்ட தொடர்பு? ராஜீவ் கொலை சம்பந்தமான அத்தனை விடயங்களையும் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டாரா? அவர் ராஜீவைக் கொல்லப் போகிறார் என்பது எனக்குத் தெரியுமா... தெரியாதா? இப்படி எத்தனையோ கேள்விகள் 21 வருடங்களாக பதில் இல்லாமல் அலைகின்றன! என்னை அலைக்கழிக்கின்றன.

சிவராசனுக்கும் எனக்குமான பழக்கம் எத்தகையது என்பதை இங்கே மனம் திறந்து உடைக்கப் போகிறேன். சாவின் தலைக்குள் வாய்விட்ட நிலையில் இருப்பவன் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அரசுத் தரப்பு தயாரிப்புகளில், 'எதிர் காலத்தில் நல்லெண்ண உறவினை வளர்க்க உதவும் என்பதினால், ராஜீவ் காந்திக்கு எமது சார்பில் மாலை அணிவிக்க ஓர் இந்தியப் பெண் வேண்டும்’ என்று சிவராசன் என்னிடம் மார்ச் மாதம் கேட்டதாகவும், 'முயற்சி செய்கிறேன்’ என்று நான் கூறியதாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

நல்ல உறவினை வளர்க்க அவசியம் என்று சொல்லிக் கேட்கும்போது அதற்கு முயற்சி செய்கிறேன் என்று சொல்வதில் என்ன தவறு? நல்ல விடயத்துக்கு என்னால் உதவ முடியாது என்று தடாலடியாக பதில் சொல்வது முறையா? 'ராஜீவைக் கொல்வதற்கு உதவுங்கள்’ என சிவராசன் என்னிடம் கேட்டு, அதற்கு நான் உதவி இருந்தால்தானே தவறு?

தனது உண்மையான திட்டம் எனக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் சிவராசன் உறுதியாக இருந்தார் என்பதற்கு அரசுத் தரப்பு ஆவணங்களே சாட்சி. கொலைத் திட்டத்தை சிவராசன் என்னிடம் மறைத்திருந்தாலும், நானே அதைச் சரியாக யூகித்து, 'முயற்சி செய்கிறேன்’ என்று சிவராசனுக்கு பதில் சொன்னதாகவும், அதில் இருந்தே அந்தத் திட்டத்தில் எனக்கு உடன்பாடு இருந்ததாக உறுதியாகத் தெரிவதாகவும் அதிகாரிகள் தரப்பு இப்போதும் வாதிடலாம்.

அப்படி எனக்கு (நல்லதோ கெட்டதோ) உடன்பாடு இருந்து இருந்தால், அந்த சம்பாஷணைக்குப் பிறகு நான் நளினியிடம் இதுபற்றிப் பேசி இருப்பேனே... அந்தத் திட்டத்துக்கு நளினியின் சம்மதத்தைப் பெற்று இருப்பேனே... அதைப் பெருமிதமாக சிவராசனிடம் சொல்லி இருக்கலாமே... இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தரப்பால் சொல்ல முடியுமா?

என் பெயரில் அதிகாரிகள் இயற்றிய ஒப்புதல் வாக்குமூலத்தில்கூட இப்படிப்பட்ட சம்பவங்கள் ஜோடிக்கப்படவில்லையே... அவசர கதியில் கதாசிரியர்கள் (அதிகாரிகளைத்தான் சொல்கிறேன்!) மறந்திருக்கலாம்.

ராஜீவ் கொலைத் திட்டத்தில் தனது உண்மையான செயல்பாடுகள் எனக்குத் தெரியக் கூடாது எனவும், என்னை நம்பவைத்து, தனது வேலைக்காகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் சிவராசன் உறுதியாக இருந்தார்.

என்னுடைய வார்த்தைகளாக இதை நம்ப வேண்டியது இல்லை. என் வழக்கில் அரசுத் தரப்பு அடுக்கி இருக்கும் ஆவணங்களையும், விசாரணைக் குறிப்புகளையும் படித்தாலே, இது தெரியும்.

'7.5.91 வரை தனக்கும் சுபா, தாணு தவிர வேறு யாருக்கும் எமது திட்டம் தெரியாது’ என்று சிவராசன் அனுப்பிய செய்தியை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, 'மேற்படி மூவரைத் தவிர, அந்தத் தேதி வரை வேறு யாருக்கும் தெரியாது’ என்று பக்கம் 357, 402 ஆகியவற்றில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த இடத்தில் சிவராசன் என்னைப் பொய்யாக நம்பவைக்கச் சொன்னவை, செய்தவை உரிய பலனை அளித்துள்ளன என்பதனை அப்பட்டமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

21.05.91 அன்று (என்னை சந்தித்துவிட்டுப் போன பிறகு ) மாலை சுபாவும் தாணுவும் தமது கொலைத் திட்டத்தைச் சொன்னதாகவும், 'கூட வந்தால் சந்தோஷப்படுவோம்’ என அவர்கள் கேட்க, அதற்கு நளினி உடன்பட்டதாகவும் அரசுத் தரப்பில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பக்கங்கள் 356, 357 ஆகியவற்றில் 19.05.91 அன்று சிவராசனின் இலக்கு ராஜீவ் காந்திதான் என தான் உணர்ந்ததாகவும், தனக்கு ஒரு பீதி உணர்வு ஏற்பட்டதால், பொதுக் கூட்டத்துக்கு வர நளினி தயங்கியதாகவும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால், 21.05.91 அன்று மாலைதான் நளினி குற்றச் சதியின் (சுபா, தாணு சொல்லி உடன்பட்டபோது) உறுப்பினர் ஆனார் என்றும் நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். அரசுத் தரப்பின் இந்த வாதங்களே நளினி விவகாரத்தில் நான் தலையிடவில்லை என்பதற்கான சாட்சி. நளினியை எந்த இடத்திலும் நான் வற்புறுத்தியது இல்லை. அப்படி இருக்க இந்த வழக்கில் நான் எப்படி குற்றவாளி ஆக்கப்பட்டேன்?

ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பதும், புகைப்படம் எடுப்பதும்தான் அவசியம் என எம்மை நம்பவைப்பதற்கு சிவராசன் எவ்வளவு உறுதியாக இருந்தார் என்பதற்கு அரசுத் தரப்பு சாட்சியங்களே சான்றாக உள்ளன.

18.05.91 அன்று மெரினா கடற்கரையில் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பேசிய கூட்டத்துக்கு நான், நளினி, அரிபாபு ஆகியோர் போனதாகவும், அங்கு எடுத்த புகைப்படங்களை சிவராசன் கேட்டுப் பெற்றதாகவும், சிவராசனோடு நான் அங்கே நெருக்கமாகப் பேசி வலம் வந்ததாகவும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளன.

7.5.91 அன்று சென்னை நந்தனத்தில் நடந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பொதுக் கூட்டத்துக்கு சிவராசன், சுபா, தாணுவுடன், நானும், நளினியும், அரிபாபுவும் கூடப் போனதாகவும், அங்கு மேடையில் ஏறி மாலை அணிவிக்கத் தவறியமைக்கும், போட்டோ எடுக்க முடியாமல் போனதற்கும் சிவராசன் என்னையும் நளினியையும் திட்டி எச்சரித்ததாகவும் அரசுத் தரப்பில் சான்றுகள் வைக்கப்பட்டுள்ளன.

என்னிடமோ, புகைப்படக்காரர் அரிபாபுவிடமோ, சிவராசன் எந்த இரகசியத்தையும் சொல்லவில்லை என்பதற்கு ஒரே சாட்சி அரிபாபுவின் மரணம்தான். 'புகைப்படங்கள் முக்கியம்’ எனச் சொன்னதால்தான் அரிபாபு ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் ராஜீவ் காந்தியை நெருங்கிப் போய் படம் எடுத்தார்.

தாணுவின் உடலில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு இருப்பது தெரிந்தால், அரிபாபு எப்படி அந்த இடத்தில் முன்னேறி இருப்பார்? தாணு, சுபாவுடன் எந்தச் சலனத்தையும் வெளிப்படுத்தாதவராக எப்படி உரையாடி இருப்பார்? எம்மை எப்படி நம்பவைத்துத் தனது வேலைகளுக்கு சிவராசன் பயன்படுத்தினாரோ... அதேபோல்தான் அரிபாபுவையும் பயன்படுத்தினார்.

யாருக்கும் தெரியக் கூடாது; அதே நேரம் திட்டமும் கச்சிதமாக நிறைவேற வேண்டும் என்பதில் மட்டுமே சிவராசன் உறுதியாக இருந்தார்.

குண்டுவெடிப்பு நிகழ இருந்த கடைசி நிமிடம் வரை அரிபாபுவுக்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கப்போவது தெரியாது. இந்த விடயத்தை அரசுத் தரப்புச் சான்றுகளே உறுதியாகச் சொல்கின்றன.

சிவராசனின் வார்த்தைகளுக்காக புகைப்படங்களை நல்லபடி எடுக்க வேண்டும் என நினைத்த அரிபாபு சிதறிக்கிடந்த காட்சி இன்றைக்கும் என்னை உலுக்குகிறது.

அவர் எடுத்த புகைப்படங்கள்தான் ராஜீவ் கொலையை யார் செய்தது என்பதற்கான ஒரே சாட்சி. வாழைக்குருத்தாக வாழ்ந்திருக்க வேண்டிய அரிபாபு, சடலமாகக் கிடந்த கோலம் இன்றைக்கும் நெஞ்சை அறுக்கிறது.

காயங்கள் ஆறாது...

ஜூனியர் விகடன்

http://www.vannionli.../2011/10/8.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.