Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 12)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 12)

m12.JPG

உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது. கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்​பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள்.

மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சி​யங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சட்டப்படி உரிமை உண்டு! என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்த வழக்கில் சிபி.ஐ-யினரின் சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்டும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்ட விதியினை அடிப்படையாகக் கொண்டும்தான் நாங்கள் நிரபராதிகள் என்று வலியுறுத்துகிறோம்.

எமக்கு இழைக்கப்பட்டு இருக்கிற அநீதிகளையும், சித்ரவதைகளையும் நாங்கள் வெளியே சொல்வதைக்கூட உங்களால் ஏற்க முடியவில்லை. 'தூக்கில் போடு’ எனக் குரல் எழுப்புகிறீர்கள்.

உங்கள் தலைவி சோனியா காந்தி அவர்களே எங்களை மன்னிக்கச் சொன்ன பிறகும் நீங்கள் உடன்பட மறுக்கின்றீர்களே... அப்படி என்றால், உங்களுக்கு இருக்கும் நாட்டுப் பற்று சோனியா காந்தி அவர்களுக்கு இல்லை என்றுதானே சொல்ல வருகிறீர்கள்?

எங்களை மன்னித்து தண்டனையைக் குறைக்கும்படி பரிந்துரை செய்தது சோனியா காந்தியின் தனிப்பட்ட விடயம் என்று மேடைக்கு மேடை பேசுகிறீர்கள். நாட்டு நலனைவிட, சட்டத்தைவிட சோனியா காந்தி அவர்களுக்குத் தனிப்பட்ட உணர்வும், உணர்ச்சியுமே முக்கி​யம் என்று நீங்கள் பிரசாரம் செய்வது உங்களுக்கே தகுமா? ராஜீவ் காந்தியை தாணு ஒரு முறைதான் கொலை செய்தார்.

ஆனால், பரபரப்பு அரசியலுக்குத் தேவைப்படும் போதெல்லாம், அந்த உடலை எடுத்துவைத்து ஆராய்ச்சி என்கிற பெயரில் நீங்கள் 20 வருடங்களுக்கும் மேலாகக் கொலை செய்கிறீர்களே... இது என்ன நியா​யம்?

19. எமக்கு மரண தண்டனை வழங்​கிய தலைமை நீதிபதி அவர்கள் 2.9.2011 அன்று ஏசியன் வெப் (Asian Web) என்ற இணையதளத்தில் தனது மனசாட்சியை இறக்கிவைத்தார்.

அதில், நாங்கள் அப்பாவிகளாக, நிரபராதிகளாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு எனச் சொல்லி இருக்கிறார். எமக்​குத் தூக்குத் தண்டனை வழங்கியது தவறு என்​கிறார். எம்மை தூக்கில் போட்டுக் கொன்றால், 2,000 வருடங்களுக்கு முன் நிரபராதியான ஏசுவை சிலு​வையில் அறைந்து கொன்றது போன்ற பெரும் தவறினை இப்போது செய்தது போலாகிவிடும் என்று மனசு துடிக்கச் சொல்லி இருக்கிறார்.

எமக்குத் தீர்ப்பு எழுதிய நீதிபதியின் மனக் குரலைவிட, எங்​கள் தரப்பின் நியாயத்துக்கு வேறென்ன பிடி​மானம் வேண்டும்? சி.பி.ஐ. சொல்வதை நம்பும் நீங்கள் - நீதிமன்றக் கருத்துகளை நம்பும் நீங்கள் - அந்த நீதிபதியின் ஆன்ம அலறலை மட்டும் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்? உங்களின் சந்தேகத்துக்கு ஆதாரம்தான் என்ன?

இலங்கைத் தமிழர்கள் இப்படித்தான் செய்வார்கள்’ என்கிற கருத்தா? இல்லை, 'குற்றவாளிகளாக நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட வெறுப்​பா?’

20. கேரளாவைச் சேர்ந்த மெர்வின் என்ற பெண்ணின் கணவர் பாபு எலியாஸ் அரபு நாட்டில் இருந்தார். அவரை நெல்லையைச் சேர்ந்த இரண்டு பேர் கொலை செய்துவிட்டனர்.

கொலையாளிகளுக்கு சட்டப்படி மன்னிப்பு வழங்கி இரு உயிர்களையும் காப்பாற்ற மெர்வின், 'கொலைக்குக் கொலைதான் தீர்வா? இரண்டு பேரின் உயிர்களை எடுப்பதால் என் கணவரின் உயிர் திரும்பக் கிடைத்துவிடுமா?’ என அவர் எழுப்பிய மனிதநேயக் குரலே நீதியின் கவனத்தைத் திருப்பி, அந்தக் கொலைகாரர்களைக் காப்பாற்றியது.

சோனியா காந்தி அவர்களுக்கு மெர்வின் ஒரு கடிதம் எழுதினார். 'மிகச் சாதாரண பெண்மணியான நானே இரண்டு உயிர்கள் வாழ்வதற்குக் காரணமாக இருக்கிறேன். மிக உயரிய இடத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் கணவரின் கொலை வழக்கில் சிக்கி இருப்பவர்களுக்காக நிச்சயம் மனம் இரங்க முடியும்’ என அதில் கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த நிஜத்தைப் படித்த பிறகுதான் சோனியா காந்தி அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதினார். எமக்கான தண்டனையைக் குறைக்கப் பரிந்துரை செய்தார். அதன்பேரில் நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்​பட்டது.

எமது தண்டனை கடந்த 10 வருட காலமாக அப்படியே இருக்கிறது. எங்களின் தண்டனைக் குறைப்புக்காக சோனியா காந்தி அவர்கள் கடிதம் கொடுத்தபோது அமைதியாக இருந்த நீங்கள், 10 வருடங்கள் கழித்து எம்மைத் தூக்கில் போட்டு சாகடிக்கும்படி உண்ணாவிரதம் இருக்கிறீர்கள். காரணம் தேசபக்தி என்கிறீர்கள்...

ராஜீவ் காந்தியை மட்டும் அல்லாது சம்பவ இடத்தில் இருந்த 17 பேர்களையும் கொலை செய்தோம் என்கிறீர்கள்... அவர்களின் குடும்பங்களைத் திரட்டிவந்து எமக்கு எதிராகக் கொடி பிடிக்க வைக்கிறீர்கள். எங்களைக் காவு வாங்குவதற்காக இறந்தவர்களின் குடும்பத்தவர்களிடத்தில் பழைய வருத்தங்களைக் கிளறுகிறீர்களே... இதுதான் உங்கள் மனசாட்சியின் மகத்துவமா?

21. உச்ச நீதிமன்றம் முடிவு செய்துவிட்ட ஒரே காரணத்தினாலேயே சட்டக் கயிறு எங்களின் கழுத்தை இறுக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தும் நீங்கள், இரண்டு விடயங்களில் உச்ச நீதிமன்ற முடிவுக்கே எதிராக நிற்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் (TADA Act) வராது என்றும், ராஜீவ் காந்தி கொலை நாட்டுக்கு எதிரான குற்றம் அல்ல என்றும், அது ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல என்றும், 21.5.91 அன்று ஸ்ரீபெரும்புதூர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியைத் தவிர மற்ற எந்த நபருடைய இறப்புக்கும் நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல என்றும் உறுதியான வார்த்தைகளால் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பினை நீங்கள் உணர மறுப்பது ஏன்?

நீதிமன்றத் தீர்ப்புகளில்கூட உங்களுக்கு உகந்தது எது என்பதை மட்டுமே எடுத்துவைத்துப் பேசுகிறீர்களே... இதுதான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நீதிக்குக் கொடுக்கும் மரியாதையா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வார்த்தைகளை மறந்துவிட்டு 17 பேர்களின் குடும்பங்களைத் திரட்டிவந்து போராட்டம் நடத்தும் புண்ணியவான்களே... நீங்கள் செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

கொலைகாரர்களுக்கு ராஜீவ் காந்தியைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள். சம்பவத்தை நிகழ்த்தினால் எத்தனை பேர் சாவார்கள் என்பதை அவர்கள் சட்டை செய்திருக்க மாட்டார்கள்.

ஆனால், ராஜீவ் காந்தியோடு மட்டும் அல்லாது, இன்னும் பலரைச் சாகடிக்கிற சதித் திட்டத்தோடு கொலையாளிகள் வந்ததாக அர்த்தமற்ற அரசியல் கூச்சல் போடுகிறீர்கள். 'உங்கள் குடும்பத்தினரைக் கொன்​றவர்கள் இவர்கள்தான்... அவர்கள் தப்பிக்கலாமா?

இறந்த​வர்​களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமானால், கொ​லைகாரர்கள் தூக்கில் போ​டப்பட வேண்டும்?’ என எம்​மைக் கைகாட்டி உணர்ச்​சியைக் கிளப்புகிறீர்கள் உங்களின் அரசியலுக்கு உறவு​களை இழந்தவர்களின் பரித​விப்பை ஊறுகாயாகப் பயன்​படுத்துகிறீர்கள். உங்களின் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... உங்களில் எத்தனை பேர் அந்த 17 பேர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லப் போனீர்கள்?

அந்தக் குடும்பங்களின் நல்லது கெட்டதுகளில் நீங்கள் எத்தனை பேர் பங்கெடுத்தீர்கள்? 'எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியைப் பார்க்க வந்ததால்தானே உங்களுக்கு இந்த நிலை. உங்களின் கஷ்டங்களில் இனி நாங்கள் உடன் இருக்கிறோம்?’ என உளமார்ந்த ஆறுதலை உங்களில் எத்தனை பேர் சொன்னீர்கள்?

அந்தத் துயர சம்பவத்தில் தன் உறவைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் இன்றைக்கு வாழவே வழி இல்லாமல், அனுதினமும் அல்லாடித் தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? அவருடைய பெயரை நான் சொல்லப் போவது இல்லை.

17 பேர்களின் குடும்பங்களைத் திரட்டி வந்து தெருவில் நின்றீர்களே... அதேபோல், நான் கோடிட்டுக் காட்டும் அந்தக் குடும்பஸ்தனையும் தேடுங்கள். அப்படி ஒருவர் உங்களின் கண்ணுக்குத் தெரியாவிட்டால், அப்போது கேளுங்கள். காங்கிரஸ் கட்சியின் மிகக் கொடூர அரசியலை அம்பலம் ஆக்கும் விதமாக அந்த கஷ்ட ஜீவனக்காரரை உங்களின் கண் முன்னால் நிறுத்துகிறேன்.

ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை, - அதுவும் காங்கிரஸ் குடும்பத்தை வாழவைக்கத் தெரியாத நீங்கள் எங்களைச் சாகடிப்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்து அழைத்து வருகிறீர்களே... இது எவ்வளவு பெரிய மோசமான காரியம்?

22. இத்தனைக் கேள்விகள் உங்களுக்குப் போதும். நான் வரிசைப்பட வைத்திருக்கும் அத்தனைக் கேள்விகளையும் அலசி ஆராய்ந்தவர்களாகச் சொல்லுங்கள். நாங்கள் குற்றவாளிகளா? ராஜீவைக் கொலை செய்யும் சதி உண்மையிலேயே நாங்கள் நிகழ்த்தியதுதானா? விசாரணை அதிகாரிகள் போகிறபோக்கில் எங்கள் வயிற்றில் அடித்த நிகழ்வுதானே இது.

எங்களைத் தூக்கில் போடு​வதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது? மரணப் போர்வை போர்த்தியபடிதானே இத்தனை நாட்களும் நாங்கள் வாடிக்கிடக்கிறோம். 21 வருடங்களாக அடைபட்டுக் கிடக்கும் எங்களின் நியாயம் நிச்சயம் உங்களின் நெஞ்சத்து நீதிபதியை கருணைகொள்ள வைத்திருக்கும் என்பது எமது நம்பிக்கை.

இதற்குப் பின்னரும், 'நீங்கள்தான் குற்றவாளிகள். உங்களைத் தூக்கில் போடுவதுதான் ஒரே தீர்வு!’ என நீங்கள் உறுதியாக நின்றால், அதை தைரியத்தோடு ஏற்றுக்கொள்ளத் தயார். அதற்கு முன் உங்களிடத்தில் ஒரு கோரிக்கை... மன்னிக்கிற மனோபாவத்துக்கும், உயரிய எண்ணங்களுக்கும் நீங்கள் வளராவிட்டாலும், விஞ்ஞானம் இன்றைக்கு பெரிய அளவில் வளர்ந்துவிட்டது.

துல்லியமாக உண்மைகளைக் கண்டறியும் விஞ்ஞானப் பரிசோதனைகள் வந்துவிட்டன. ஒருவனை அந்த விசாரணைக்கு உட்படுத்தினால், பால்ய கால நினைவுகளைக்கூட அவனது மூளைச் சேமிப்பில் இருந்து எடுக்க முடியும் என்கிறார்கள்.

அத்தகைய சோதனைக்கு நீங்கள் என்னை உட்படுத்த வேண்டும். என்னைக் காப்பாற்றக் கோரி உங்களிடம் கதறினால்தானே தவறு. கடைசியாக என்னை ஒரு முறை விசாரிக்கச் சொல்கிறேன். என் மனக் கிடக்கையில் சொல்ல முடியாமல் கிடக்கும் ஆயிரமாயிரம் எண்ணங்களை அந்த விசாரணை முடிவில் அறிந்துகொள்ளுங்கள்.

மனிதர்களின் விசாரணையில் எமக்கு சம்மதம் இல்லை. விஞ்ஞானமும் எங்களின் ரணமான மனதோடு சில மணி நேரங்கள் விளையாடிப் பார்க்கட்டும். மரணத்துக்கு முந்தைய ஒப்புதல் வாக்குமூலமாக அதுவே மாறட்டும்.

அதைக் கேட்கிற உளத் துணிச்சலும் உண்மையைத் தாங்கிக்கொள்ளும் பக்குவமும் உங்களுக்கு இருந்தால், அந்த இறுதி வார்த்தைகளைக் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னைத் தூக்கில் போட்டுக் கொன்றாலும் சரி... வெட்டி வைத்துத் தின்றாலும் சரி!

காயங்கள் ஆறாது...

நன்றி ஜூனியர் விகடன்

http://www.vannionli...2011/11/12.html

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு பகிர்விற்க்கு...இதை தனித்தனி திரியாக இணைக்காமல் ஒரே திரியின் கீழ் பாகம்களை இணையுங்கள்...அல்லாவிட்டால் முந்திய பாகம்களை படிக்க தேடித்திரியவேண்டி உள்ளது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 13)

m13.JPG

எங்களின் உயிர் மீது விதிக்கு அப்படி என்னதான் விருப்பமோ... மீண்டும் மரண மேகம் கவிழ்ந்துவிட்டது. கருணை மனுவைக் கணக்கில் கொள்ள​வேண்டிய அவசியம் இல்லை என மத்திய, மாநில அரசுகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் சொல்கின்றன.

எங்களின் உயிர் இந்த அளவுக்கு உதாசீனப்படுத்தப்படும் என நாங்கள் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. இனி, வழக்கம்போல் தேதி குறிக்கப்படும். தினசரி நரகங்கள் தீர்மானிக்கப்படும். காப்பாற்றப்படுவோமா... கைவிடப்படுவோமா என உயிரும் உடலும் பட்டிமன்றம் நடத்திப் பதற்றத்தைக் கிளப்பும். ஆனாலும், அடுத்த கட்ட விசாரணையில் எங்களின் ஆயுள் காப்பாற்றப்படும் என இந்தக் கணத்திலும் நம்பி நிற்கிறோம்.

கடந்த முறைபோலவே எங்​களின் உயிர் காக்க மொத்தத் தமிழகமும் கைகோர்க்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எங்களுக்காகத் தீக்குளித்து மடிந்த எங்கள் தங்கை செங்கொடியை இந்தக் கணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். 'அவர்கள் தவறு செய்யவில்லை’ என்று உறுதியாக நம்பிய அந்தத் தங்கை தன்னை மாய்த்துக்​கொண்ட நிலையில், நாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன சாதித்துவிடப் போகிறோம்? தங்கையைப் பின்தொடர்ந்து சாவதில் எங்களுக்கு சந்தோஷம்தான்.

ஆனால், கயிறு எங்களின் கழுத்தை இறுக்கும் முன் என்னுடைய முழுக் குமுறலையும் இறக்கிவைக்க வேண்டும். காங்கிரஸ்காரர்கள் சொல்வதைப்போல் நடந்த படுகொலை மறக்க முடியாதது. மன்னிக்க முடியாததுதான். ஆனால், அந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதைப்பற்றி மனசாட்சியோடு விவாதிக்க ஏன் யாருமே முன்வருவது இல்லை?

உண்மையாகவே ராஜீவ் காந்தி மீது ஆத்மார்த்தமான அன்பு எந்தக் காங்கிரஸ்காரர்களுக்காவது இருந்திருந்தால், அவர் மரணத்தைத் தன் வீட்டு இழவாக எண்ணித் துடித்திருந்தால், நிச்சயம் எங்களை வேலூர் சிறையில் வந்து சந்தித்து இருக்கலாம். 'ஏனடா எங்களின் தலைவனைக் கொன்றீர்கள்?’ என நெஞ்சு குலுங்க எங்களின் சட்டையைப் பிடித்து உலுக்கி இருக்கலாம். ஆனால், ஒரு காங்கிரஸ்காரருக்குக்கூட எங்களைச் சந்திக்கும் தைரியம் ஏனய்யா இல்லாமல் போயிற்று?

இந்தியாவின் இளைய சக்தியாக வளர்ந்துவந்த ராஜீவ் காந்திக்கு யார் எதிரிகள்? எதிர்ப்பை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு என்ன பகை? செஞ்சிவப்பு முகமும், சிறுபிள்ளைச் சிரிப்புமாக வலம் வந்த அவரைச் சுக்குச் சுக்காகச் சிதறடிக்க சதிகாரர்களுக்கு எப்படி மனம் வந்தது?

''இலங்கையில் நடந்த கொடுமைகளுக்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்பதால், பெண்கள் குழுவின் மத்தியில் அவரைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு பலமாக இருந்தது. இதை மூன்றாவது குற்றவாளி முருகன் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்...'' - இவை ராஜீவ் காந்தி வழக்கில் நீதிபதி அவர்கள் எழுதி இருக்கும் வார்த்தைகள்.

என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் எப்படி எல்லாம் சித்திரிக்கப்பட்டது என்பதை மறுபடியும் சொல்லி, பரிதாபத்தை நீட்டிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், எனது வாக்குமூலமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் மேற்கண்ட வரிகளை, மறுபடியும் படித்துப் பாருங்கள். ராஜீவ் காந்தி இலங்கைக்கு அனுப்பிய அமைதிப் படை அங்கே போய் அமைதியைத்தானே நிலைநாட்டி இருக்க வேண்டும்? அசிங்கங்களையும் அக்கிரமங்களையும் நிறைவேற்றுவதற்குப் பெயர்தான் அமைதிப் படையா?

எங்கள் மண்ணில் அவர்கள் நிகழ்த்திய கோரங்கள் கொஞ்சநஞ்சமா? சிங்களப் படைகளின் குரூரங்களுக்கு நாங்கள் கொஞ்சமும் குறைந்தவர்கள் அல்ல என்பதை அன்றைக்குத்தானே அந்தப் படைகள் நிரூபித்துக் காட்டின. திரும்பிய பக்கம் எல்லாம் ஓலம்... ஆண்களைக் கண்டால் அடித்துத் துவைப்பதும், பெண்களைக் கண்டால் துரத்திச் சுவைப்பதும்தான் அவர்களின் ஒரே வேலையாக இருந்தது என்பதற்கு எமது மண்ணில் அநேக ஆதாரங்கள் உண்டு!

மரணம் என்கிற கத்தி எங்களின் தலைக்கு மேலாகத் தொங்கியபடி இருக்கிறது. இந்தக் கணத்தி​லும் அங்கே அமைதிப் படை நிகழ்த்திய கொடூர மரணங்களை எண்ணிப் பார்க்கிறேன். இனம், மொழி பாராமல் குழந்தைகளைக்கூட குருவிகளைப்​போல் சுட்டு வீழ்த்திய அமைதிப் படையின் குரூரத்தை எத்தனை காலம் கடந்தாலும் சகிக்கவோ, மன்னிக்கவோ முடியுமா?

உங்கள் குழந்தையின் தலையில் ஷூவை வைத்து ஒருவன் நசுக்குகிறான். திமிற முடியாத கட்டுக்குள் நீங்கள் சிதைக்கப்படுகிறீர்கள். உங்களின் வலியை சட்டை செய்ய முடியாத அளவுக்கு குழந்தையை நசுக்கி எறிகிறது இராணுவப் படை. ஒரு சிகரெட்டைக் காலில் போட்டு அணைப்பதுபோல் ஈழத்து சிசுக்களின் உயிர்கள் அணைக்கப்பட்டன.

நஞ்சுக்கொடிகூட குழந்தையை இறுக்கிவிடக் கூடாது எனக் கர்ப்ப காலத்திலேயே மிகக் கவனமாக இருப்பவர்கள் எங்களின் தாய்மார்கள். சிதைக்கப்பட்ட சிசுக்களை அலறலோடு கண்ணுற்ற பெற்ற வயிறுகளில் எத்தகைய வைராக்கியம் கூடு கட்டி இருக்கும்? வாசல் மண்ணை வாரி இறைத்து அவர்கள் இட்ட சாபம் அமைதிப் படையை அனுப்பியவர்களுக்குக் கேட்டி​ருக்குமா?

மிகப் பெரிய கொடூரங்களை நிகழ்த்துபவர்களின் பின்னணியில் இருக்கும் ஒரே காரணம் என்ன தெரியுமா? இயலாமைதான்!

எதையும் செய்யத் துணிகிற துணிச்சல், கையறு நிலையில்தான் மனதுக்குள் கருவாகிறது. இந்தியாவின் பலம் பொருந்திய தலைவராக உருவெடுத்த ராஜீவ் காந்தியை சுக்கு நூறாகச் சிதைக்க முடியும் என அன்றைய காலகட்டத்தில் யாரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா? அடுக்கடுக்கான பாதுகாப்புகளைக் கடந்து அவரை நெருங்கி இருக்க முடியுமா? எங்கே வருவார்... எங்கே போவார் என்பதை எல்லாம் உளவுத் துறையே கணிக்க முடியாத நிலையில் மிக கவனமாகத் திட்டமிட்டு அவரை எப்படித் தீர்த்துக் கட்டினார்கள்?

அரசு ஆவணம் 81-ல், ''இலங்கையில் இயக்கத்​தினர் மீது இந்திய அமைதிப் படையினர் செய்த கொடுமைகளுக்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்பதினால், அவரைப் பழிவாங்கும் எண்ணம் இயக்கத்தினருக்கு இருந்தது...'' என்று நான் சொல்லி​யதாக எழுதப்பட்டு உள்ளது. அதில், இயக்கப் பெண்கள் குழுவைப்பற்றி நான் பேசியதாக இல்லை. மேற்கண்டவாறு எழுதியதன் மூலம் 1991 மார்ச் மாதத்திலேயே ராஜீவ் காந்தி கொலை குறித்து எனக்குத் தெரிந்துவிட்டது என்று மறைமுகப் பொருள்படுகிறது.

ஏனென்றால், 1991 மார்ச் மாதம், சிவராசன் என்னிடம் மாலை அணிவிக்க ஒரு பெண் வேண்டும் என்று கேட்ட சமயத்தில்தான், எனக்கு மேற்படி தோன்றியதாக எழுதப்பட்டு உள்ளது. ஆனால், இந்த இடத்தில் 7.5.91 தேதிக்கு முன் சிவராசன், சுபா, தாணு ஆகியோர் தவிர யாருக்கும் சதி குறித்து தெரிந்து இருக்கவில்லை என்று நீதிபதிகளே சொல்லி இருக்கிறார்கள்.

இயக்கத்தினர் மீது பழியை ஏற்படுத்த வேண்டும் என்கிற கட்டாயத்தில் என்னுடைய வாக்குமூலம்(?) என ஏதேதோ கற்பனைக் கதைகளைப் பயன்படுத்திக்கொண்டவர்கள், மிக முக்கிய இடங்களில் வசதியாக அந்த வாக்குமூலத்தை மறந்துவிட்டு கதை பரப்புகிறார்கள்.

பக்கம் 140-ல், ''1991 மே மாதத்தின் முதல் வாரத்தில் 'இரண்டு பெண்களைக் கூட்டி வந்து இருக்கிறேன். அவர்களைப் பயன்படுத்தி வேலையை முடிக்க ஓர் இந்தியப் பெண் தேவை’ என ஏ-3 முருகனிடம் சிவராசன் சொன்னார்...'' என எழுதப்பட்டு உள்ளது.

இப்படி ஒரு கருத்துப் பகிர்தல் எனக்கும் சிவராசனுக்கும், 1991 மே மாதத்தில் அதுவும் குறிப்பாக... சுபா, தாணு 2.5.91 அன்று இங்கு வந்த பின்னர் நடந்தாக எவ்வித சாட்சியமும் சான்றும் எங்குமே கிடையாது.

அரசு ஆவணம் 81-ல், ''1991 மார்ச் மாதத்தில் எதிர்காலத்தில் நல்லுறவினை வளர்க்க ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க ஓர் இந்தியப் பெண் தேவை என சிவராசன் கேட்டார்...'' என்றும், ''1991 ஏப்ரல் முதல் வாரத்தில் சுபா, தணு என்கிற பெண்களைக் கூட்டிவரப் போவதாகவும், அவர்களுடன் கூடச் சென்று வேலையை முடிக்க (இலங்கைப் பெண்கள் எனத் தெரியாதிருக்க) ஒரு பெண் தேவைப்பட்டது. அதற்கு நளினியைப் பயன்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது...'' என்று மட்டுமே எழுதப்பட்டு இருக்கிறது.

இந்த இரண்டு பகுதிகளையும் சேர்த்துப் பார்த்தால், அந்த வேலை 'மாலை அணிவிப்பது’ என்று வெளிப்படையாக உள்ளது. அதே நேரம், அதில் உள்ள முக்கிய முரண்பாட்டினையும் கவனிக்காமல் இருக்க முடியாது. முதல் பகுதியில், இந்தியப் பெண்ணே நேரடியாக மாலை அணிவிப்பதாக உள்ளது.

இரண்டாவது பகுதியில், இரு இலங்கைப் பெண்கள் மாலை அணிவிக்க அவர்களது அடை​யாளம் தெரிந்துவிடாமல் இருக்க மறைப்புக் கொடுத்து உதவுவது. முதல் பகுதிக்கு நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னதாக உள்ளது. இரண்டாவது பகுதிக்கு நான் உடன்பட்டதாக எங்கும் குறிப்பு இல்லை. 'தீர்மானிக்கப்பட்டது’ என்று மட்டுமே எழுதி இருக்கிறார்களே தவிர, யாரால் தீர்மானிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் இல்லை.

மேலும் அரசுத் தரப்பு வாதத்தில் சுபா, தணு என்ற இரு பெயர்களும் 2.5.91 அன்றுதான் முதன் முதலில் சூட்டப்பட்டது என்று இருக்கிறது. ஆனால், 1991 ஏப்ரல் முதல் வாரத்திலேயே சிவராசன் அந்த இரு பெயரால் குறிப்பிட்டு அவர்களைப்பற்றி சொன்னார் என இருக்கிறது. இந்தக் குளறுபடிகளை எல்லாம் நீதிபதிகள் எப்படி ஏற்றுக்​கொண்டார்கள்?

இடைச்செருகலாக வழக்கு விவரங்​களைச் சொன்னதன் பின்னணிக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது. ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் இருப்பது புலியா? இல்லை புலிகள் மீதான பழியா? என்பதை எல்லாம் சுட்டிக்காட்டும் நிலையில் நான் இல்லை. ஆனால், உற்ற உறவுகள் இரத்தத்தில் மிதந்ததைக் கண்ணுற்ற எவர் வேண்டுமானாலும், வெறியோடு அலைந்திருக்க முடியும்.

எத்தனை விதமான இழப்புகள்... எவ்வளவு துயரங்கள்... சிங்களப் படைகளின் குரூரமே தேவலாம் என்கிற அளவுக்கு பலாத்காரங்கள்... கொலைகள்... அதில், பாதிக்கப்பட்ட ஈ எறும்புக்குக்கூட பழிவாங்கும் எண்ணம் உருவாகி இருக்கும். அப்படி இருக்க, ரத்தமும் சதையுமாய் மண்ணையும் மரத்தையும் நேசித்த எங்களின் உறவுகள், அமைதிப் படைக்கு எதிராக எப்படித் துடித்து இருப்பார்கள்? அதை ஏவிய ராஜீவ் காந்தி மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருந்திருப்பார்கள்? பழிவாங்கும் வெறியை மடியில் கட்டியபடி அமைதிப் படையை விரட்டத் தங்களின் உயிரையே தீய்த்திருப்பார்கள்?

மடியில் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு வந்த தாணுவுக்கு உயிர் வாழும் ஆசை இருந்திருக்காதா? இந்த மண்ணைவிட்டு மறையப்போகிறோமே என்கிறத் தவிப்பு கடைசிக் கணத்திலும் அவருக்கு ஏற்படாமல்​போனது ஏன்? இந்தக் கணத்திலும் ராஜீவ் கொலையை நான் துளியும் நியாயப்படுத்தவில்லை. 'கொலைக்கு கொலையே தீர்வு’ என்கிற கோட்பாடு மனித வர்க்கத்துக்குக் கூடாது. ஆனாலும், சிலர் சிந்தும் கண்ணீருக்குக் காரணமே, அவர்கள் பலருக்கும் விதைத்த கண்ணீர்தான் என்பதை ஈழத்துப் பிறப்பெடுத்தவனாக சொல்ல வேண்டியது என் கடமை!

காயங்கள் ஆறாது...

நன்றி ஜூனியர் விகடன்

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 14)

m14.JPG

எந்த விதத்திலும் ஒருவனை வீழ்த்த முடியாத நிலையில், அவனுடைய அந்தரங்கத்தைத் துழாவிப் பார்ப்பது சிலருடைய அரக்கக் குணம். ராஜீவ் காந்தியைக் கொலை செய்யப் போகிறார்கள் என்பது எந்தக் கணத்திலும் எனக்குத் தெரியாது என்பது விசாரணை அதிகாரிகளுக்கு உறுதியாகத் தெரியும்.

ஆனால், அந்தச் சதி எனக்குத் தெரிந்தே நடந்ததாகச் சித்திரிக்கத் துடித்தார்கள். ஒப்புதல் வாக்குமூலத்தை எனக்கு எதிராக வாங்க நளினியை பலவிதங்களிலும் சித்திரவதை செய்தனர். நளினி மசியாதபோது அதிகாரிகள் கையில் எடுத்த ஆயுதம் 'அந்தரங்கம்.’ எனக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நளினியிடம் சொன்னார்கள். அவரது நடத்தைபற்றி மோசமாக என்னிடம் சொன்னார்கள். மனைவியின் கருவைக்கூட களங்கப்படுத்தினார்கள். ஆனால், எங்கள் இருவருக்குமான இல்லறப் பிணைப்பை அவ்வளவு சீக்கிரத்தில் அதிகாரிகளால் அறுக்க முடியவில்லை.

தீர்ப்பின் பக்கம் 299-ல், எந்தவொரு இடத்திலும் தமக்கு ஏதேனும் அநீதி (Prejudice) இழைக்கப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின்போது (during the trial period) எதிரிகள் புகார் எதுவும் செய்யவில்லை என்று எழுதப்பட்டு உள்ளது.

எங்களைக் கொலை செய்யாதது மட்டும்தான் பாக்கி என்கிற நிலையில், எங்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை என்பது எத்தகைய கொடூரம்? வழக்கின் புலன் விசாரணையும் நீதிமன்ற விசாரணையும், முறைகேடுகளையும் சட்டத் துஷ்பிரயோகங்களையும் மூலா தாரமாகக்கொண்டே நடத்தப்பட்டன.

ஈவு இரக்கத்தைக் காலில் போட்டு மிதித்தபடியே அதிகாரிகளும் சட்ட நிபுணர்களும் பணியாற்றினார்கள். 'சட்டப் போராட்டம் எப்படியும் எங்களைக் காப்பாற்றிவிடும் என நாங்கள் இவ்வளவு உறுதியாக நம்புவதற்குக் காரணமே, கடந்து வந்த துயரங்கள்தான்.

எங்களின் ஆயுள் பலம் இல்லாததாக இருந்திருந்தால், விசாரணை அதிகாரிகளின் கொடுமைகளிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கும். யுத்தமும் இரத்தமுமாகக் கலங்கடித்த அந்த நாட்களையே கடந்து வந்த உயிர், அவ்வளவு சீக்கிரத்தில் கயிற்றுக்கு இரையாகிவிடாது.

சி.பி.ஐ., எஸ்.ஐ.டி-யினரின் கொடூரங்களுக்குப் பயந்து சுமார் 35 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கைது செய்யப்பட்ட எதிரி சண்முகம் மண்டியிட்டபடி தூக்கில் தொங்கிய காட்சியை தமிழகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்காது. அதனைத் திட்டமிட்ட கொலை என்றே ஊடகங்கள் சுட்டிக் காட்டின.

அனைத்து விதமான சட்ட விரோதங்களையும், முறைகேடுகளையும், பாரபட்சங்களையும், அநீதிகளையும் அவ்வப்போது எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் புகார் செய்து இருக்கிறோம். அது தொடர்பாக விசாரணை நீதிமன்றம் எடுத்த முடிவுகளின் பதிவான ஆவணங்களும் எம்மிடம் உள்ளன.

சுமார் 500-க்கும் மேற்பட்ட புகார் அல்லது எதிர் மனுக்களை நாம் சமர்ப்பித்து இருக்கிறோம். இவ்வளவு இருந்தும் உயர் நீதிமன்ற நீதிபதி, எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை எனக் குறிப்பிடுகிறார் என்றால், அரசுத் தரப்பு எப்படி எல்லாம் பொய்யை நிரூபிக்கப் போராடி இருக்கிறது என்பது புரியும்.

விசாரணை நீதிமன்றத்தில் நாம் இறுதியாக எழுத்து மூலம் சமர்ப்பித்த வாதங்களுடனும், Cr.p.c. 313 பிரிவின் கீழ் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த வாக்குமூலங்களுடனும் அவசியமான அனைத்து புகார் மனுக்களின் நகல்களையும், அதன் மீதான நீதிமன்ற முடிவுகளின் நகல்களையும் நாங்கள் சமர்ப்பித்து இருக்கிறோம். இவை யாவுமே நீதிபதிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படவில்லை.

தீர்ப்புப் பக்கம் 356-ல், சிவராசன், சுபா, தாணு மற்றும் முருகன் ஆகியோரின் கூட்டுப் பழக்கத்தினால் நளினி, ராஜீவ் காந்தி மீதும் இந்திய அமைதிப் படை(IPKF) மீதும் அதீத வெறுப்போடு இருந்தார் என்று எழுதப்பட்டு உள்ளது.

நளினியே இதனை ஒப்புதல் வாக்குமூலத்தில் சொல்லி இருப்பதாகவும் கதைக்குத் துணையாய் ஒரு கட்டுக்கதை. நளினிக்கு ராஜீவ் காந்தி மீது பலமான வெறுப்பு (extreme hatred) இருந்ததாக அரசு ஆவணம் 77-ல் எந்த இடத்திலும் இல்லை. மாறாக ‘strong feeling’, ‘strong emotions’ என்ற வார்த்தைகள்தான் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இவற்றிற்குகூட நான் காரணமாக இருந்தேன் என்று எந்த இடத்திலும் குறிப்பு இல்லை. அரசு ஆவணம் 77, 81 ஆகியவற்றிலோ அல்லது வேறு சாட்சியங்களிலோ, ராஜீவ் காந்தி மீது அதீத வெறுப்பை நளினிக்கு ஏற்படுத்தும் வகையில் நான் அவரிடம் பேசினேன் என்பதற்கு எவ்விதக் குறிப்பும் கிடையாது. அசல்களுடன் போலிகளைக் கலந்துவிட்டால், போலிகளும் அசல்களாக கருதப்பட்டுவிடும் என்ற கோட்பாட்டை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

சுபா, தாணு ஆகியோருடன் சேர்ந்து நான் இந்திய அமைதிப்படை, ஈழத்து மண்ணில் நிகழ்த்திய கொடுமைகள் பற்றி நளினியுடன் கலந்து பேசியதாக மட்டும் அரசு ஆவணம் 77-ல் இருக் கிறது. இந்த வார்த்தைகளைத்தான் தந்திரமாகத் திரித்து கொலைச் சதிக்கு நளினியை நானே உடன்படவைத்ததாக சித்திரித்தார்கள்.

ஈழத்தில் நடந்த படுகொலைகளையும் கோரங்களையும் நளினியிடம் சொல்லி அழுததில் என்ன தவறு?

ஒப்பாரி வைப்பதில்கூட உங்களுக்கு உடன்பாடு இல்லையா?

உங்களுக்கு நெருக்கமானவர்களின் இறப்பையோ, வேதனையையோ பிறரிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டீர்களா? ஈழத்து வேதனையைப் பகிர்ந்தததன் மூலமாக ராஜீவ் காந்திக்கு எதிரான மனநிலையை நளினிக்கு ஏற்படுத்தினோம் என்பது எந்த விதத்தில் நியாயம்?

இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களைத் தமிழ் ஊடகங்கள் கண்ணீர் சொட்டச் சொட்ட எழுதி, கடைக்கோடி உறவுகள் வரை கொண்டுபோய்ச் சேர்த்தனவே... அதைவைத்து ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய ஊடகங்களும் காரணம் எனச் சொல்ல முடியுமா?

சோகத்தைச் சொல்வதுகூட இந்த மண்ணில் பாவமா? காதலித்துக் கரம் பிடித்த - கர்ப்பம் சுமக்கும் மனைவியின் மனதில் கொலைச் சதியை என்னால் எப்படி உருவாக்க முடியும்?

தீர்ப்புப் பக்கம் 356-ல், 1991 பெப்ரவரி மாதத்தில் இருந்து விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் நளினி கூட்டுச் சேர்ந்தார் என எழுதப்பட்டு உள்ளது.

அரசு ஆவணம் 77-ல் மேற்சொன்னவாறு எந்தக் குறிப்பும் கிடையாது. மாறாக நான் (A3)1991 பிப்ரவரியில் இங்கு ஆங்கிலம் படிக்க வந்திருப் பதாகவும், தம்முடன் தங்கி இருப்பதாகவும் நளினி சொன்னதாக இருக்கிறது. 1991 பெப்ரவரி மாதத்துக்கு முன்போ, பின்போ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு அவர்களது வேலைகளை நான் செய்து கொடுத்ததாக எவ்விதக் குறிப்புகளும் இல்லை.

சிவராசன், சுபா, தாணு ஆகியோருடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதற்கும் எவ்விதச் சாட்சியச் சான்றுகளும் கிடையாது. நான் முதலில் அவர்களது வீட்டில் தங்கி இருப்பவனாகவும், பின்பு நளினியின் காதலனாகவும், பின்பு கணவன் ஆகவும்தான் அறிமுகம் ஆனேன். இதற்குத்தான் இத்தனை ஜோடிப்புகள்.

அரசு ஆவணம் 77-ல், கொலை நடந்த பிறகு சுபா ஏதாவது ஒரு நகரத்தில் அடைக்கலமாக நான் உதவுவதாக இருந்தது, (சிவராசனின் மேலதிக பணிப்புரை வரும் வரை) முழு நிகழ்வின்போதும் சுபாவுக்கும் தாணுவுக்கும் நான் மறைப்புக் கொடுக்க வேண்டி இருந்தது என நளினி சொன்னதாக எழுதப்பட்டு இருக்கிறது. மேற்படி நளினி அவ்வாறே செய்தார் என்றும் நடக்காத ஒன்றை நடந்ததாக எழுதி இருக்கிறார்கள்.

சம்பவ இடத்தில் இருந்து சுபாவால் அழைத்து வரப்பட்ட நளினி, சுபாவுடன் ஒளிந்துகொண்டார் என்பதும் உண்மைக்கு எதிரான கற்பனைதான். 9.06.91 அன்று வரை நளினி தனது வீட்டில் குடும்பத்தாருடன் தங்கி இருந்தார். அவருடைய அலுவலகத்துக்கு வேலைக்குப் போய் வந்தார்.

பக்கம் 358-ல் 233-வது அரசு சாட்சியான பாரதி, நளினியின் தங்கை கல்யாணியின் தோழி, நளினியின் புலிகள் உடனான கூட்டாளித்தனம் பற்றி சொல்லி இருப்பதாக எழுதப்பட்டு உள்ளது.

233-வது அரசு சாட்சி தனது சாட்சியத்தில் நளினிக்கு புலிகளின் தொடர்பு இருப்பதாக எதுவும் சொல்லவில்லை. மேற்படி சாட்சி ஒரே வீட்டில் என்னுடன் நான்கு மாதங்கள் தங்கினார். நளினியைவிட பல மடங்கு கூடுதலாக என்னுடன் இருந்த சாட்சி புலிகள் உறுப்பினர் எனத் தெரிந்துகொண்டு தங்கினார், நன்கு பழகினார்.

நாம் நீதிமன்றக் காவலில் இருந்தபோது (1991 டிசம்பர் மாதத்தின்போது) நளினி குடும்பத்துக்கு கடிதம் எழுதியபோது, எனக்கும் சேர்த்துத்தான் எழுதினார். 8.6.91 அன்று நளினி வீட்டில் அனைவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்தபோது, இந்த சாட்சியும் சேர்ந்துதான் தற்கொலை செய்ய முயன்றார்.

அப்போது நான் தற்செயலாகப் போனதால், அதைத் தடுத்தேன். இதனால் மேற்சொன்னது போல் நளினிக்குப் பதிலாக மேற்படி சாட்சியையும் சொல்ல முடியுமா? விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவரைக் கணவராக ஏற்றுக்கொண்டு உறவாடுவது அந்த அமைப்பினர் உடனான கூட்டாளித்தனம் என (Association) என எப்படிச் சொல்ல முடியும்?

பக்கம் 365-ல், இலங்கையில் புலிகளின் நடவடிக்கை பற்றியும், இந்திய அமைதிப் படை செய்த கொடுமைகள் பற்றியும், அவர்களுக்கு ராஜீவ் காந்தி மீது இருந்த வெறுப்பினைப் பற்றியும் நளினியிடம் சொல்லி அவரை முழுமையாக indoctrinate செய்ததாக எழுதப்பட்டு உள்ளது.

நளினியிடம் விடுதலைப் புலிகளின் கொள்கைகள் பற்றியும் இந்திய அமைதிப் படையினரின் நடவடிக்கைகள் பற்றியும் நான் பேசியதாக அரசு ஆவணம் 81-ல் எழுதப்பட்டு உள்ளது. ஆனால், ராஜீவ் காந்தி மீது எனக்கு வெறுப்பு இருந்ததாக நான் நினைத்துப் பார்த்ததாகக்கூட எவ்வித சான்றும் இல்லை. இந்த இடத்தில் ஓர் இடைச் செருகலைப் பொய்யாகச் செருகி உள்ளனர்.

பக்கம் 366-ல், வேலூர் கோட்டையைக் குண்டு வைத்துத் தகர்த்து அங்கே இருந்த போராளிகளை மீட்பது புலிகளின் நடவடிக்கையில் (இங்கிருந்த) ஒன்றாகும் என்று A3 முருகன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக எழுதப்பட்டு உள்ளது.

தண்டனை கொடுக்க வேண்டும் என்ற முடிவை நியாயப்படுத்த, வழக்கில் அரசுத் தரப்பு தாக்கல் செய்த சாட்சியச் சான்றுகளுக்கு எதிராகவும் நேர்மாறாகவும்கூட ஒரு கற்பனைக் கதையினைச் சொல்லலாம் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

தமிழகத்தில் தங்கி இருந்து புலிகளின் உளவுத் துறைத் தலைவர் பொட்டு அம்மானுக்கு நான் தகவல்கள் சொன்னதாகவும், அவர் பல பணிகளை எனக்கு வழங்கியதாகவும் அந்தக் கட்டுக்கதைகள் நீண்டதுதான் வேதனை.

வேலூர் கோட்டையைப்பற்றி அவருக்கு நான் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வைத்தேனாம். பொட்டு அம்மான் இயக்கத்தில் எத்தகைய இடத்தில் இருந்தவர், என்னைப்போன்ற சாதாரண நபர்களோடு அவர் வயர்லெஸ் போனில் பேசுவாரா என்பதை எல்லாம் ஏன் யாருமே எண்ணிப் பார்க்கவில்லை.

நல்ல வேளை... பொட்டு அம்மானுக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்ததே நான்தான் எனச் சொல்லாமல் இருந்தார்களே..!

காயங்கள் ஆறாது...

ஜூனியர் விகடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 15)

m5-100x80.jpg

பழி பாவங்கள் நம்மைச் சூழும்போது பிடிமானமற்ற நிராதரவான எண்ணம் நெஞ்சைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது. ‘என் நியாயம் ஏன் எவருக்குமே கேட்கவில்லை?’ என உலகே அதிரும் அளவுக்கு அலறத் தோன்றுகிறது.

‘உன் கண்ணீர் ஒருவனையும் சட்டை செய் யாது’ என உள்ளுணர்வு சொன்ன பிறகே, சுரணைக்கு சுதாரிப்பு வருகிறது. ‘என் தரப்பு நியாயத்தை நிரூபிப்பேன். அநியாய பழிச் சுமையின் அவலத்தை நிச்சயம் எனக்கான நீதி அம்பலமாக்கும்’ என எனக்கு நானே நம்பிக்கை சொல்லி எழுந்து நிற்கிறேன். ஆனாலும், ‘நான் செய்தது நியாயம் இல்லை’ என்பதை உலகம் ஒரேயடியாய்த் தீர்மானித்துவிட்டது. என்னுடைய ஒற்றைக் குரலால் அந்தத் தீர்மானிப்பை மாற்றுவது சாத்தியம் இல்லாதது. ‘உலகத்தின் எண்ணப்படியே நான் குற்றவாளியாக இருந்துவிட்டுப் போகிறேன். இனி எனக்கு விடிவு இல்லை; நியாயம் இல்லை. சொந்தம் சுற்றம் என எதையுமே பார்க்காமல் மடியப்போகும் ஒருவனின் நிலைதான் எனக்கு!’ என சோர்ந்து சுருண்டுவிட்டேன். ‘சீக்கிரமே தூக்கில் போடுங்கள்’ என என் அனுதினங்கள் அலறுகின்றன.

உலகத்தின் துயரமான தண்டனை புறக்கணிப்புதான். தோல்வியான கணங்களில் மிக நெருக்கமானவர்களின் புறக்கணிப்பு இரட்டிப்பாகிவிடுகிறது. யாருமற்ற நிலை யாருக்குமே வரக் கூடாது. தினமும் எழுந்து காலை, மதியம், மாலை சாப்பிட்டுவிட்டு கூண்டுக்குள் அடைந்து, தூங்கி எழும் வாழ்க்கையில் எமக்கான நிறைவு என்ன? எதற்காக இந்தக் காத்திருப்பு? நம்பிக்கைக் கீற்று எந்தக் கணத்திலும் ஏற்படப்போவது இல்லை என்பது தெரிந்தும் ஏன் இந்த எதிர்பார்ப்பு? கயிற்றுக்குள் தலை நுழைக் கும் கடைசிக் கணத்துக்காக எத்தனை காலம்தான் காத்திருப்பது? எம் கனவுகள் பொய்யாகிவிட்ட நிலையில் ஏன் இந்த வாழ்க்கை? ஒதிய மரம் பெருத்து உத்திரத் துக்கு ஆகப் போகிறதா என்ன? எதற்காக இந்தக் காத்திருப்பு? எத்தனை கொடூரம்!

இந்த மனநிலையில்தான் எங்களின் 21 வருடங்கள் கழிந்தன. இளமை தொலைத்து – இல்லறம் இழந்து – உறவுகள் முகம் மறந்து – உற்ற துணைக்கு யாருமற்று இத்தனைக் காலங்களை எப்படிக் கடந்தோம் என்பது மிச்சம் இருக்கும் எங்கள் உயிருக்கே வெளிச்சமான வினா. ஆனால், இன்றைக்கு கம்பிகளுக்குப் பின்னால் நம்பிக்கையோடு நிற்கிறோம். அமாவாசை இருட்டில் ஆகாயமே மின்னல் வடிவில் தீக்குச்சி உரசியதைப்போல், எங்கள் விழிகளுக்கு முன்னால் வெளிச்சம் தெரிகிறது. சிறு சிறு கணங்களில் அந்த வெளிச்சம் மறைந்தாலும், திரி நீளமான வெடி விட்டுவிட்டுப் புகைவதைப்போல் இடைவெளிகள் கடந்தும், அந்த வெளிச்சம் எங்களின் விழிகளைப் பற்றிக்கொள்கிறது.

‘செப்டம்பர் – 9’ எனத் தூக்குக்கு நாள் குறிக்கப்பட்ட வேளையிலும், எங்கள் மூவருடைய மூச்சும் இயல்பாகத்தான் இருந்தது. தமிழ்நாடே ஆர்த்தெழும் வேளையில், எங்கள் கழுத்தை எந்தக் கயிற்றாலும் இறுக்க முடியாது என்கிற நம்பிக்கை பிறந்திருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் மிகப் பரபரப்பான சூழலில், எங்களின் தூக்குத் தண்டனை குறித்த வழக்கு நடந்தது. மாபெரும் வழக்கறிஞர்களான ராம்ஜெத்மலானி, காலின் கான்சால்வேஸ் உள்ளிட் டவர்கள் நீதிப்பெருமான்கள் திரு.நாகப்பன், திரு.எம்.சத்திய நாராயணன் இருவரின் முன்னால் எங்களுக்காக நின்றார்கள். நீதிமன்றத்துக்கு வெளியே எங்களுக்காக தமிழ் உறவுகள் கணக்கிட முடியாத அளவுக்குக் கூடி இருந்ததை கம்பிகளுக்குள் இருந்தபடியே மனசால் பார்த்து சிலிர்த்தோம். எங்களுக்காகப் பேசிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி அய்யா அவர்கள், ”ராஜீவ் காந்தி கொலை வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்ற நடவடிக்கைகள் 1999-ம் வருடத்துடன் முடிந்துவிட்டன.

மூன்று பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை ஆளுநர் 10 நாட்களில் தள்ளுபடி செய்துவிட்டார். அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆளுநரின் உத்தரவை ரத்துசெய்த உயர் நீதிமன்றம் கருணை மனுக்களை மீண்டும் பரிசீலனை நடத்தும்படி உத்தரவிட்டது. அதையடுத்து, இரண்டாவது முறை கருணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஐந்து மாதங்களில் அது குறித்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் மூன்று பேரும் 2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். 11 ஆண்டுகள் கழித்து 28.7.11 அன்று குடியரசுத் தலைவர் அந்த மனுக்களை நிராகரித்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஐந்து முறை குடியரசுத் தலைவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதித்து கருணை மனுவை நிராகரித்து இருப்பது சட்டத்துக்குப் புறம்பானது. அரசியல் சாசனம் 21-ல் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு எதிரானது. இந்த இடைப்பட்ட காலத்தில் மூவரும் எத்தகைய துயரங் களுக்கு ஆளாகி இருப்பார்கள். அனுதினமும் மரண வேதனையில் துடித்து இருப்பார்கள். அதனால், குடியரசுத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்!” என உரத்து முழங்க, எட்டு வார இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.

தூக்குக்குத் தயார் செய்யப்பட்ட பொம்மைகளைப் போல் (மனதளவில் தைரியம் இருந்தாலும் உடை, சாப்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளில்) தனித் தனியே பிரித்து அமரவைக்கப்பட்டு இருந்த எங்களுக்கு இடைக்காலத் தடை குறித்த தகவல் வந்தது. தம்பி பேரறிவாளன், ‘தமிழ் மக்கள் நம்மைக் காப்பாற்றிவிட்டனர் அண்ணா’ எனக் கைகளை உயர்த்திச் சொன்னான். சாந்தன் பேரமைதியோடு தொப்புள் கொடி உறவுகளுக்கு நன்றி பகர்ந்தார். எமக்காகப் போராடிய பெருமக்களை, உயிரையே எதிர்ப்புப் பத்திரமாக எழுதிக் கொடுத்த தங்கை செங்கொடியை, சட்டப் போராட்டம் நடத்திய உணர்வாளர்களை, குடும்பத்தில் ஒருவராக எம்மைப் பாவித்து உருகித் தவித்த தகையாளர்களை நேரில் பார்த்து நெஞ்சாரக் கட்டி அணைக்க முடியாத கம்பி வளையத்துக்குள் நாங்கள். கம்பிகளுக்குள் அடைபட்ட காரணத்துக்காக அன்றுதான் ஆதங்கப்பட்டோம். சென்னை உயர் நீதிமன்றத்தின் திசையில் எங்களால் கை கூப்பிக் கதறி அழ மட்டுமே முடிந்தது. சுருண்டு சோர்ந்திருந்த எங்கள் நரம்புகளில் நம்பிக்கை வெளிச்சத்தைப் பாய்ச்சிய பெருமக்களுக்கு நன்றிக்கடனாக நாங்கள் என்ன செய்யப்போகிறோம்?

அடுத்தடுத்தும் எமக்கான சட்டப் போராட்டங்கள் நீளுகிற நிலையில், எங்களைச் சந்திக்க வேலூருக்கு வந்தார் எமது உயிர் மீட்ட சக்தியான வர். நிமிடங்களை ஒதுக்கிக் கொடுக் கக்கூட அவகாசம் இல்லாமல், எந்நேர மும் பரபரப்பைக் கட்டிச் சுமக்கும் அந்தக் கடமையாளருக்கு எங்களைச் சந்திக்க எப்படி நேரம் கிடைத்ததோ? எங்களின் உயிர் மீது அவருக்கு அப்படி என்ன அக்கறையோ? சட்டத்தின் விதிகளைப் போல் அழுந்தப் படிந்த முக ரேகைகள் அவருடைய அறிவு முதிர்ச்சியின் அடையாளங்களாக இருந்தன. கை கூப்பிக் கும்பிடத் தோன்றியது.

”உங்களுக்கு எப்படி அய்யா நாங்கள் நன்றி செலுத்தப்போகிறோம்?” – எங்களின் கண்ணீர் வழியே வழிந்தது கேள்வி. மெல்லிய புன்னகையில், ”கவலைப்படாதீர்கள்!” என்றார் ஒற்றைக் கையை உயர்த்தி. இந்தியாவின் சட்ட ஜாம்பவான் அவரிடத்தில் நாங்கள் என்ன கேட்க முடியும்? அவர் கேட்ட விவரங்களை மட்டும் விரிவாகச் சொன்னோம். பேரறிவாளனை இரக்கத்தோடு ஏறிட்டார். சாந்தனின் அமைதியை நியாயத்துக்கான அடையாளமாக எண்ணினார். ”நான் இருக்கேன்” என்கிற நம்பிக்கையை எங்களுக்கான பெரும் பரிசாகக் கொடுத்துவிட்டுப் போனார். சிறைக்கு வெளியே பத்திரிகையாளர்கள் சிலர் சந்தித்தபோது, ”சட்டம், நீதி, விசாரணை, விளக்கம் என்பதை எல்லாம் தாண்டி ஒருவரின் முகத்தைப் பார்த்தாலே அவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை என்னால் அடையாளம் கண்டுவிட முடியும். அந்த விதத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் நிரபராதிகள் என என்னால் சொல்ல முடியும்!” எனச் சொல்லி இருக்கிறார். அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் கண்ணீரை மட்டுமே கைமாறாகக் கொடுக்க முடியும்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாங்கள் கைது செய்யப்பட்டோம். கைதான நாள் முதல் கயிற்றின் நிழலில் கதறிக்கிடக்கும் இன்றையநாள் வரை எமது வாழ்க்கை சோகச் சூறாவளியால் சூறையாடப்படுகிறது. விசாரணை என்கிற பெயரில் நாங்கள் சுமக்காத சித்ரவதைகள் இல்லை. உடலின் ஒவ்வோர் உறுப்பும் விசாரணை நடத்திய அதிகாரிகளிடத்தில் கை கூப்பிக் கதறின. பாதுகாப்பு என்கிற பெயரில் எமக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகள், வாழ்வதற்கான ஆசையை அடியோடு வெறுக்கவைத்துவிட்டன. 20 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் தனிமைச் சிறையில்… தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு 12 வருடங்களுக்கும் மேலாக, கயிறு எங்களோடு கபடி ஆடுகிறது. ஏற்கெனவே, பல தடவை தூக்குக்குத் தேதி குறிக்கப்பட்டு கண்ணியில் சிக்கிய காடைக் குருவிகளாக எங்களை நிறுத்திப் பார்த்திருக்கிறது விதி. (சட்ட விதி என நீங்கள் அர்த்தப்படுத்திக் கொண்டாலும் எமக்கு சரிதான். தீர்த்துக்கட்டுவதுதான் தீர்ப்பு என்கிற நிலையில் தலையெழுத்து என்கிற விதியும், சட்டம் என்கிற விதியும் எமக்கு ஒரே விதமாகத்தானே இருக் கின்றன!) பின்னர் கடைசி நேரத்தில் தடைஆணைப் பெறப்பட்டு, எங்களின் உயிர்கள் தப்பித்தன.

தூக்கா..? தண்டனை நீக்கா? என்கிற பட்டிமன்றத்தில் எங்களின் வாழ்க்கை அடிக்கடி படபடக்கிறது. சாவின் விளிம்புக்குப் போய்த் திரும்புகிற நிலையை எத்தனை முறைதான் எதிர்கொள்வது? பிராய்லர் கோழி அடுத்த நாள் வரை தன் உயிரை பத்திரப்படுத்திக் கொள்வதைப்போல், ஒவ்வொரு முறையும் பதுங்கித் தப்புகிறது எங்களின் உயிர். சட்டம் என்கிற கத்தி எங்களின் கழுத்துகளைக் குறிபார்த்தபடியே கூர் தீட்டப்படுகிறது. நிராகரிக்கப்படுவதைவிட காத்திருப்பில் இருப்பதுதான் நம் வாழ்க்கையை இன்னமும் கடினம் ஆக்குகிறது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மூன்று வருடங்களைக் காத்திருப்பிலேயே கடந்து இருந்தால்கூட, நிச்சயம் தூக்கை ரத்து செய்து தண்டனைக் குறைப்பு செய்ய முடியும். இதற்கு உதாரணமான பல சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. ஆனால், 12 வருடங்களுக்கும் மேலாகக் காத்திருப்பிலேயே கழிகிற எங்களின் வாழ்க்கைக்கு மட்டும் எவரிடத்திலுமே பதில் இல்லாதுபோனது ஏன்? எமக்கான போராட்டங்கள் நிரந்தர விடுதலையை நோக்கி எமை அழைத்துச் செல்லும் என எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது நம்புகிறோம்; ஏங்குகிறோம். காரணம், கயிறைவிட ‘காத்திருப்பு’தான் எங்களை அதிகம் இறுக்குகிறது!

காயங்கள் ஆறாது

ஜூனியர் விகடன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 16)

mudi.jpg

உங்களோடு பேசுவது இதுவே இறுதியாக இருக்கலாம். பன்னெடுங்காலம் பழகிய நண்பனை சிறு கைகுலுக்கலோடு பிரிவதைப்போல், என் இறுதிப் பகுதியை எழுதுகிறேன். மரணத்துக்கு சற்றும் குறைந்தது அல்ல மனதார நினைத்தவர்களைப் பிரிவது. என் மனப்பாரம் பகிரும் சுமைதாங்கிகளாகவே வாசகர்களைப் பார்க்கிறேன்.

இப்போது 'கயிறா... உயிரா?’ என்கிற பட்டிமன்றத்தில் கடைசி உரை நிகழ்த்துபவனாக உங்களிடத்தில் நிற்கிறேன்.

எந்தச் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தூக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்பதை எமக்கு எதிரான வழக்கின் தீர்ப்பிலேயே, பக்கம் 157, 158-ல் நீதிபதி தோமஸ் அவர்களும், நீதிபதி குவாத்ரி அவர்களும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

1. எதிரியின் வயது இளம் வயதாக இருந்தால், தூக்குத் தண்டனை தவிர்க்கப்பட வேண்டும்.

2. சமுதாயத்துக்கு தொடர் பயத்தை ஏற்படுத்தக்கூடிய மாதிரி எந்த வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டார் என்பதற்கான சாத்தியக்கூறு இருந்தால், தூக்குத் தண்டனையைத் தவிர்க்கலாம்.

3. இன்னொரு நபருடைய ஆதிக்கத்துக்கோ, வலுக்கட்டாயத்துக்கோ ஆட்பட்டு அந்தக் குற்றச் செயலைச் செய்து இருந்தால், தூக்குத் தண்டனை தவிர்க்கப்பட வேண்டும்.

மேற்படி மூன்று சாதக காரணங்​களும் இந்த வழக்கில் எனக்கும் நளினிக்கும் அப்படியே பொருந்துகின்றன. அந்தக் குற்றம் நடந்தபோது எனக்கு 20 வயது, நளினிக்கு 25 வயது. நீதிபதி வாத்வா அவர்கள் வழங்கிய தீர்ப்பில் 433, 434-ம் பக்கங்களில் 18, 23, 26 வயதுடைய மூவரை இளம் வயதினர் எனக் கருதி (அவர்கள் கையில் துப்பாக்கிவைத்து பலரை சுட்டுக்கொண்டு இருந்தபோதுகூட) விடுதலை செய்யப்பட்ட ஒரு பழைய உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தி உள்ளார்.

இரண்டாவது கருத்தைப் பொறுத்தவரையில், எம்மால் எதிர்காலத்தில் இந்தச் சமுதாயத்துக்கு வன்முறை அச்சுறுத்தல் நிச்சயமாக ஏற்படாது. ராஜீவ் காந்தி தனிப்பட்ட விரோத உணர்ச்சி காரணமாகவே கொல்லப்பட்டார். அதில் நாம் ஈடுபடுத்தப்பட்டோம் என்பதுதான் நீதிமன்றம் எடுத்த முடிவு.

ஒருவேளை, நாம் குற்றவாளிகள் என்பது சரி என எடுத்துக்கொண்டாலும் நாம் திரும்ப அப்படி ஒரு தவறைச் செய்ய நிச்சயம் வாய்ப்பு இல்லை. மூன்றாவது காரணத்தைப் பொறுத்த அளவில், நானும் நளினியும் சிவராசனின் கோபத்துக்கும் எரிச்சலுக்கும் பயந்தோம். சிவராசன் எனக்கு மிகவும் மூத்த எல்.டி.டி.ஈ உறுப்பினர் எனக்கு ஒரு Commander ஆகவும், Bossஆகவும் இருந்தார்.

சிவராசன் எனக்குக் கட்டளைகளை வழங்கினார். இவற்றை எல்லாம் நான் அல்ல, அரசுத் தரப்புச் சான்றுகளே சொல்கின்றன. மூன்று தருணங்களில் சிவராசனின் நடத்தையைப் பார்த்து நளினி பீதி அடைந்தார். நாம் சிவராசனை மறுத்துப் பேச முடியாத நிலையிலும், மனதில் எழும் சந்தேகத்தை வெளிப்படுத்தி உறுதிப்படுத்தவும் முடியாத நிலையில் இருந்தோம். இவ்வளவு இருந்தும் சிவராசனின் அதிகாரத்துக்கும் ஆதிக்கத்துக்கும் உட்பட்டு, அவருடைய கட்டாயத்துக்குப் பயந்து அவர் சொன்னதை ஏன், எதற்கு என்று கேள்வி கேட்காது செய்தோம் என்று அரசு தரப்புச் சான்றுகள் சொல்கின்றன.

மரண தண்டனையைத் தடுக்க நீதிபதி குறிப்பிட்ட மூன்று காரணிகளும் எமக்குச் சாதகமாக இருந்தும், எமக்கான தண்டனை தளர்த்தப்படவில்லை.

நீதிபதிகள் தோமஸ், குவாத்ரி ஆகியோர் பக்கம் 156-ல், 'A3 முருகன் முதல் வகை நபர்களின் உத்தரவுகளை மட்டும் நிறைவேற்றவில்லை. அத்தோடு, மற்றவர்களையும் அந்த உத்தரவுக்கு ஏற்ப வேலை செய்யவைத்து, குற்றமுறு சதியின் இறுதி இலக்கினை அடையச் செயல்பட்டார். அதனால் அவர் குற்றமுறு சதியாளர்களின் தலைமைத்துவ மட்டத்தினுள் (leadership layer among the conspiators) வந்துவிடுகிறார்’ என்று முடிவு செய்தனர். அதன் பேரில் தூக்குத் தண்டனையும் கொடுத்தனர்.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக ஏதாவது செய்யும்படி எனக்கு எவரேனும் உத்தரவு போட்டார்கள் என்பதற்கோ, நான் யாருக்காவது உத்தரவு அல்லது பணிப்புரை வழங்கினேன் என்றோ அல்லது குறைந்தபட்சம் கேட்டுக்கொண்டேன் என்றாவது சான்று பகரக்கூடிய ஒரு வாசகத்தையாவது அரசுத் தரப்புச் சான்றுகள் சுட்டிக்காட்ட முடியுமா? நான் மறைமுகமாக அவ்வாறு உத்தரவு போட்டதாகக்கூட எவ்விதச் சான்றும் கிடையாது.

சிவராசன் என்னை நம்பவே இல்லை. என்னிடம் உண்மையைச் சொல்லக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். உண்மை தெரியக்கூடிய சூழ்நிலைகளில் இருந்து என்னைத் தவிர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகக் கவனமாக இருந்தார். இதற்கு அரசுத் தரப்பு சான்றுகளே உள்ளன. அப்படி இருந்தும் நீதிபதிகள் எப்படி என்னை அந்தத் தலைமைப் பட்டியலில் சேர்த்தார்கள் என்பதுதான் புதிராக இருக்கிறது.

ஒருவரை சாகடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவரைத் தலைவராக்கினால் போதும் என நினைத்திருக்கிறார்கள். நான் யாருக்கும் உத்தரவு ஏதும் போடவில்லை என்பதற்கும், மற்றவர் உத்தரவுப்படி செயல்பட்டேன் என்றும் உறுதிப்படுத்தும் முடிவுகளின் வாசகங்களை நீதிபதி வாத்வா அவர்களின் தீர்ப்புப் பக்கங்கள் 106, 107, 141, 366, 368, 369 ஆகியவற்றில், யார் வேண்டுமானாலும் படித்துப் பார்க்கலாம்.

அடுத்து எமக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதற்குக் காட்டிய காரணங்களில் ஒன்று, சம்பவ இடத்தில் ராஜீவ் காந்தி தவிர, காவல் துறையினர் உட்பட மேலும் 17 பேர் இறந்தனர் என்பது. இரண்டு எதிரிகளுக்கு (A1,A3) தனிப்பட்ட ரீதியில் ராஜீவ் காந்தி மீது வெறுப்பு ஏதும் இல்லாவிட்டாலும், அவர் இந்தியப் பிரதமராக இருந்து எடுத்த முடிவுக்காக கொல்லப்பட்டார் என்பது காரணமாக இருக்கலாம்.

இவை இரண்டுமே நீதிபதிகள் முதலில் எடுத்த முடிவுகளுக்கு முரண்பட்டு நிற்கின்றன. தீர்ப்பின் பக்கம் 29-ல், ''ராஜீவ் காந்தியைத் தவிர வேறு ஒருவரைக்கூட கொல்ல குற்றமுறு சதியாளர்கள் விரும்பினார்கள் என்பதற்கு நிச்சயமாக எவ்வித சான்றும் கிடையாது'' எனத் தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது.

மேலும், அரசு ஆவணம் 77-ன்படி, ''21.05.91 அன்று ஜெயகுமார் (A10) வீட்டுக்குப் போன பிறகுதான் (பின் இரவு), சுபா அங்கு குண்டு வெடித்ததைப்பற்றி நளினியிடம் சொல்கிறார்.

இதுவரை நளினிக்கு குண்டுபற்றி எதுவும் தெரியாது. அங்கு பலர் இறந்ததும் நளினிக்குத் தெரியாது. குண்டுச் சத்தம் கேட்பதற்கு முன்பு வரை தணுவிடம் குண்டு இருந்தது என்பதுகூட நளினிக்குத் தெரியாது.

அதேபோல், 25.5.91 அன்றுதான் தாணு வைத்திருந்து வெடிக்கவைத்த குண்டுபற்றி சிவராசன் முதன்முதலில் சொன்னதாக அரசு ஆவணம் 81-ல் எழுதப்பட்டு உள்ளது. அரசுத் தரப்புச் சான்றின்படியே எமக்குத் தெரிந்திராத, அதற்கு வாய்ப்பே இல்லாத இறப்புகளுக்கு எம்மை பொறுப்பாக்கித் தூக்குத் தண்டனை கொடுப்பது என்ன நீதி?

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் பக்கம் 30-ல், ''அந்த குண்டு வெடிப்பதால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது சிவராசனுக்கும் அவரது உயர் மட்டத் தலைவர்களுக்கும் தெரிந்து இருக்கலாம். ஆனால், அதனைக்கொண்டு அவர்கள் வேறு நபர்களை கொல்லக் கருதி இருந்தார்கள் எனக் கருத முடியாது!'' எனச் சொல்லி இருக்கிறார்கள். எமக்கான தீர்ப்பின்போது மட்டும் இந்த வரிகள் மறந்துபோனது ஏனோ?

இதே நீதிபதிகள் 28, 29-ம் பக்கத் தீர்ப்புகளில், ''ராஜீவ் காந்தி மீது இருந்த தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே அவர் கொல்லப்பட்டார். அவர் திரும்பவும் பதவிக்கு வந்தால் தமக்கு ஆபத்து என்று கருதியதும் அதற்குக் காரணம்'' என்பதாக முடிவு செய்யப்பட்டு உள்ளது. இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பியதற்கு தனிப்பட்ட ராஜீவ் காந்தி மட்டும் காரணம் அல்ல. அது அந்த அரசின் முடிவு. அந்த அரசின் பிரதம மந்திரியாக ராஜீவ் காந்தி இருந்தார் என்பதால் அவர்தான் அனுப்பினார். அவர் மட்டும்தான் அதற்குப் பொறுப்பு என்று சொல்வது எப்படி உண்மையாகும்?

அடுத்து, தடா சட்டத்தில் ஒரு வழக்கை விசாரணை செய்கிறபோது, அந்த சட்டத்தின் கீழ் வருகிற குற்றங்களுடன் மற்ற சட்டங்களுக்குக் கீழ் வருகிற குற்றங்களும் செய்ததாகத் தெரிந்தால், அவற்றையும் சேர்த்து சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம். தடா சட்டத்துக்கு கீழ் வருகிற குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கிறபோது, மற்றைய சட்டங்களுக்கு கீழ் வருகிற குற்றங்களுக்கும் சேர்த்து அதே சிறப்பு நீதிமன்றம் தண்டனை கொடுக்கலாம். ஆனால், அந்தக் குற்றங்கள் தடா சட்டத்தின் கீழ் வருகிற குற்றங்களுடன் கண்டிப்பாகத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதனைத் தான் 12(1) பிரிவின் ‘ If the offence (under the TADA Act) is connected with such other offence (under other laws)சொற்றொடர் வலியுறுத்துகிறது. ஆனால், இங்கு அந்த சொற்றொடர் கருத்தில்கொள்ளப்படாது விடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்(Trial court) தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்ட ஒரே காரணத்தினால், அதே சட்டப் பிரிவு 12-ன் உதவியுடன் பிரிவு 15-ன் கீழ் தயார் செய்யப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களைப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் முடிவெடுத்தது. பிரிவு 12-ல் விசாரிப்பது பற்றியும், தண்டனை கொடுப்பது பற்றியும் மட்டும்தான் உள்ளது. அதில் 14-வது பிரிவைப் பற்றியோ, ஒப்புதல் வாக்குமூலங்களை அல்லது சான்றுகளைப் பயன்படுத்துவது பற்றியோ எவ்விதக் குறிப்பும், வாசகமும் இல்லை.

15-வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் ஒப்புதல் வாக்குமூலங்கள் சான்றுகளாக எப்படி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றி இதே 15-வது பிரிவிலும் 21-வது விதியிலும் தெளிவாக வெளிப்படையாக சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், வற்புறுத்தியும், பொய்யாகத் திரித்தும், கற்பனையாகக் கடைவிரிக்கப்பட்டும் உருவான ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்தே எங்களுக்கான தீர்ப்பு எழுதப்பட்டது எந்த விதத்தில் நியாயம்? தடா சட்டம் நீக்கப்பட்ட பிறகும், அந்தச் சட்டத்தின்படி சுமத்தப்பட்ட குற்றங்களை நீக்காமல் இருப்பது நியாயமா?

எனக்கு இந்திய சட்டங்களைப் பற்றிப் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், இன்றைக்கு ராஜீவ் கொலை வழக்கு குறித்த அத்தனை சட்டக் குறிப்புகளையும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட சொல்கிற அளவுக்குத் தெளிவாக இருக்கிறேன். சட்டத்தை எப்படி எல்லாம் வலையாக்கி எங்களை வளைத்து இருக்கிறார்கள் என்பதை விளக்கவே இவ்வளவு விபரமாக உங்களுக்கு சொல்கிறேன்.

வழக்கு விசாரணை நடந்த விதம், அதில் அடுக்கடுக்காக ஏற்பட்ட குளறுபடிகள், இழைக்கப்​பட்ட கொடுமைகள், சித்திரிப்புகள், கொலைச் சதி அறியாத எங்களின் தவிப்புகள் என இத்தனை நாட்களாய் எங்கள் இதயத்தில் சுமையாக வருத்திய அத்தனை விஷயங்களையும் உங்களிடத்தில் இறக்கிவைத்திருக்கிறேன்.

சுமந்த சித்திரவதைகளில் நான் பகிர்ந்தது 10 சதவீதம்தான். ஆனால், அதைப் படித்துவிட்டே, ''அப்பா, நீங்கள் இப்படி எல்லாம் சிரமப்பட்டீங்களா? ஜூ.வி. படிக்கிறப்ப எல்லாம் அழுதிடுறேன்பா...'' எனக் கடிதம் எழுதி இருக்கிறாள் என் செல்ல மகள் ஆரித்ரா. கடைசி ஆசையாய் அவளைப் பார்த்துவிட என் மனம் துடிக்கிறது. மரண மேகம் விலகுவதும் சூழ்வதுமாக விளையாடும் நிலை பொறுக்காமல், இந்தியா வந்து என்னைச் சந்திக்க லண்டனில் இருந்தபடி விசா கேட்டிருக்கிறாள் ஆரித்ரா. ஆனால், விசா கிடைக்கவில்லை. அப்பன் - மகள் பாசம் எல்லாம் அரசாங்கத்துக்குத் தெரியுமா என்ன?

நீதிமன்றத்தில் அடுத்தபடியாய் எங்களின் தூக்குக்கு நாள் அறிவிக்கப்படலாம், ஒருவேளை உண்மைக்கு வெற்றி கிடைத்து எங்களுக்கான தூக்கை ரத்து செய்யும் நாளும் வரலாம். 'விடிவா மடிவா?’ என்கிற வினாவின் நீட்சியில் எங்களின் வாழ்க்கை இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கப்போகிறதோ? இந்தச் சிறு இடைவெளியில் என் தரப்பு நியாயத்தைச் சொல்ல இடம் அளித்த ஜூ.வி-யை நன்றியோடு நினைக்கிறேன். ஒருவேளை, மரணம் தவிர்க்க முடியாததாக எங்களைச் சூழ்ந்தாலும், உள்ளத்து உண்மைகளை உங்களிடம் இறக்கிவைத்த திருப்தியில் என் உயிர் சற்று நிறைவோடு கயிறேறும்!

காயங்கள், எழுத்தில் ஆறியது! எண்ணத்தில் ஆறாது!

ஜூனியர் விகடன்

http://www.vannionline.com/2011/11/14_19.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீரை வரவைக்கும் கதை. தமிழர்களை ஏன் கடவுள் இப்படி சோதிக்கிறார் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.