Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் பிரதிநிதிகளா? - ஹரிகரன்

Featured Replies

முன்னர் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்லர், அவர்களை அப்படி ஏற்றுக் கொண்டுவிடாதீர்கள் என்று வெளிநாடுகளிடம் கூறி வந்த அரசாங்கம் இப்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவ்வாறு கூறத் தொடங்கியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த முதலாம் திகதி ஐ.நா.பொதுச்செயலர் பான் கீமுனைச் சந்திக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

அதற்கு முன்னர் ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவரும், மனித உரிமைகள் அமைச்சருமான மகிந்த சமரசிங்க, ஐ.நா. பொதுச் செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் லைன் பாஸ்கோ, ஐ.நா.பொதுச்செயலரின் தலைமை அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் ஐ.நா. பொதுச் செயலரைச் சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். அங்கே தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வேறும் பல அரசியல்கட்சிகள் இருக்கின்றன.

அவை கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு எதிர்மாறான கருத்தைக் கொண்டுள்ளன. பெரும்பாலான தமிழ்மக்கள் வாழும் தென் பகுதியிலுள்ள தமிழ்க் கட்சிகளையும் அழைத்து பேசுங்கள் என்று கூறியிருக்கிறார் மகிந்த சமரசிங்க. அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸும் இதையேதான் கூறியுள்ளார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதற்காக அவர்களை தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது“ என்று அவர் கூறியுள்ளார். இப்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யார் என்ற கேள்வியை சர்வதேச அரங்கில் இலங்கை அரசு எழுப்ப முற்பட்டுள்ளதற்கான காரணமே, தமிழர் பிரச்சினை சர்வதேசமயப்படத் தொடங்கியுள்ளதனால்தான்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு பேசப்பட்டதும், ஐ.நா பொதுச் செயலரை சந்திக்கப் போவதாக வெளியான தகவலும்தான், இந்த விவகாரத்தை அரசு மீண்டும் கையில் எடுத்ததற்குக் காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னரும், அரசாங்கம் இதே கருத்தைத்தான் கூறி வந்தது.

தேர்தல்களில் கூட்டமைப்பு வெற்றி பெற்ற பின்னர் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்க வேறு வழியின்றியே, அந்த ஏகப் பிரதிநிதித்துவப் பிரச்சினையைத் தூர எறிந்து விட்டு கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்தது. இப்போது பிரச்சினை சர்வதேசமயப்படுவதைத் தடுப்பதற்கு, மீண்டும் அதே உத்தியை கையில் எடுத்துள்ளது அரசாங்கம். ஆனால், இப்போது உள்ள முக்கியமான பிரச்சினை தமிழன் ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதல்ல.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வே முக்கியமானது தன்மையானது. தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடுவதை எதிர்க்கும் சக்திகள் இப்போது மிகக்குறைவு. புலிகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்று சர்வதேச சமூகம் பேச்சுக்களை நடத்தியபோது, அதனை ஏற்றுக் கொள்ளாத தரப்பினர் கூட, கூட்டமைப்பு அந்த நிலையிலிருந்து பேசுவதை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஒரு சில தமிழர்களைத் தவிர வேறு எந்தத் தரப்பினரும் கூட்டமைப்பை தமிழர் தரப்பில் பேசவல்ல சக்தியாக ஏற்க முடியாது என்று கூறவில்லை. அரசியல் ரீதியாக முரண்பட்டாலும், அனைவருமே இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

இந்தநிலையில் அரசாங்கம், தமிழன் பிரதிநிதிகள் அல்லர் என்று கூட்டமைப்பை சுட்டிக் காட்ட முற்படுவதானது பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பதற்காகவே என்பதில் சிறிதளவேனும் சந்தேகம் இல்லை. சர்வதேச சமூகத்திடம் கூட்டமைப்பை தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்று கூறும் அரசாங்கம் ஒரு விவகாரத்தை மறந்துவிட்டது. தாம் அதே கூட்டமைப்புடன் தான் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுகிறோம் என்ற உண்மை அரசுக்கு உறைக்காமல் போய்விட்டது.

அப்படியானால் நீங்கள் எதற்கு அவர்களுடன் பேசுகிறீர்கள் என்று எந்த நாடாவது திருப்பிக் கேட்டால் வாயைப் பொத்திக் கொள்ளும் நிலைதான் வரும். இதைவிட உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார்கள் என்பதற்காக தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளது நகைப்புக்கிடமான கருத்தாகும். ஏனென்றால் உலக சமுதாயம் எப்போது ஜனநாயக ரீதியாக நடை பெறும் தேர்தலில் வெளிப்படுத்தப்படும் முடிவுகளைத்தான் மக்களின் கருத்தாக பார்க்கிறது.

அந்தவகையில்தான் கூட்டமைப்பை தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என்று உலகம் நம்பத் தொடங்கியுள்ளது. அவர்கள் ஏகப் பிரதிநிதிகளா இல்லையா என்ற விவாதம் எல்லாம் தேவையற்றது. ஏனென்றால் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற ஒரே நோக்கில் செயற்படும் எவருமே தமிழர்கள் சார்பில் குரல் கொடுக்கலாம். தமிழர்களுக்கு நியாயமான நீதியான யாருமே பிழை கண்டுபிடிக்காத தீர்வு ஒன்றை தானாக வழங்க முன்வந்தால் அரசாங்கத் தரப்புக் கூட தமிழர்களின் பிரதிநிதியாகி விடலாம்.

இப்போது பிரச்சினை அதுவல்ல. அந்தப் பிரச்சினையின் மையத்தைத் திசை திருப்பவே அரசாங்கம் தமிழன் பிரதிநிதிகள், கூட்டமைப்பு அல்ல என்ற வாதத்தை முன்வைத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் தமிழர் பிரச்சினை சர்வதேச மயப்படத் தொடங்கியுள்ளதை அரசாங்கத்தினாலோ சிங்களத் தேசியவாத சக்திகளாலோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதை ஜீரணித்துக் கொள்ளும் நிலையிலும் அவர்கள் இல்லை. இதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விஷம் கக்கப்படுகிறது. ஒருபக்கத்தில் சர்வதேச சமூகத்திடம் இவர்கள் தமிழன் பிரதிநிதிகள் அல்ல என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கத்தில் நாட்டுக்குத் துரோகம் செய்து விட்டு வரும் அவர்களை விமான நிலையத்தில் கைது செய்ய வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன.

இவையெல்லாம் இயலாமையினால் விளையும் காழ்ப்புணர்வுகளே. இலங்கைப் பிரச்சினை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லப்படக் காரணமாகியது சிங்களத் தேசியவாத சக்திகளே. இதை உள்நாட்டில் தீர்ப்பதற்கு, கையில் கிடைத்திருந்த 30 மாத கால அவகாசத்தை நழுவவிட்டது அவர்களே. தமிழருக்கு நிரந்தரமான அரசியல் தீர்வையோ அமைதியான வாழ்வையோ கொடுக்காமல், குழப்பம் விளைவித்துக் கொண்டு சர்வதேச கவனம் திரும்பாமல் தடுக்கலாம் என்று எண்ணுவது மடமை.

தெற்கிலுள்ள மக்கள் அரசாங்கத்துக்கு தேர்தல்களின் மூலம் எத்தகைய ஆணையை வழங்கினார்களோ, அதேபோன்ற அங்கீகாரத்தைதான் கூட்டமைப்புக்கும் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். இதனை அரசாங்கம் ஒருபோதும் மறந்து போய் விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி இல்லாது போனாலும் சரி, இப்போது தேவை இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான நீதியான அரசியல்தீர்வே. அது ஒன்றே எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய பிரசாரங்கள் ஒருபோதும் சர்வதேச கவனத்தை ஈர்க்கப் போவதில்லை.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.