Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையம் மூலம் சிறிலங்கா அதிபருக்கு அழைப்பாணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

mahinda-150x150.jpg

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகப் போர்க் குற்றச்சாட்டில் மூன்று ஈழத் தமிழர்கள் அமெரிக்க நீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நெற் இணையத்தின் மூலம் எதிரிக்கு அழைப்பாணை வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதித்துறை வரலாற்றில் இது மிகவும் முக்கியமான மைல்கல்.

கொலம்பியா டிஸ்திறிக்கின் டிஸ்திறிக் நீதி மன்றத்தில் (District Court of The District of Columbia) டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் உட்பட மூன்று வழக்காளிகள் ஜனவரி 2011ல் தாக்கல் செய்த வழக்கில் நீதிக்குப் புறம்பான விதத்தில் தமது உறவுகளை அரச படைகள் கொலை செய்த குற்றத்திற்கு அரச அதிபர் தண்டிக்கப்பட வேண்டும் என்று குற்றஞ் சுமத்தினார்கள்.

திருகோணமலை கடற்கரையில் வைத்து டாக்டர் காசிப்பிள்ளை மனோகரனின் மகன் ராஜீகர் மனோகரனும் இன்னும் ஜந்து இளவயது மாணவர்களும் சில வருடங்களுக்கு முன்பு பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டது தெரிந்ததே. அதே போல் பட்டினிக்கு எதிரான நடவடிக்கை (Action Against Hunger) என்ற தொண்டு அமைப்பு ஊழியர்கள் 17பேரும் அவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தப் படுகொலைகளுக்கு அரசுத் தலைவர் மற்றும் அரசியல் சாசனத்தின் மூலம் முப்படைத் தளபதியான மகிந்த ராஜபக்ச கட்டளைப் பொறுப்பு (Command Responsibility) ஏற்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன், மேற்கூறிய தொண்டு நிறுவன ஊழியர் பிறேமாஸ் ஆனந்தராஜா மனைவி கலைச்செல்வி லவான், கொல்லப்பட்ட தேவராஜா குடும்ப நால்வரின் உறவினர் ஜெயக்குமார் ஜய்யாத்துரை ஆகிய மூவரும் வழக்காளிகள்.

மகிந்த ராஜபக்ச நீதிமன்ற அழைப்பாணையை ஏற்க மறுத்ததாலும் அவருக்கு அழைப்பாணை வழங்குவது கடினமான காரணத்தாலும் ஒக்ரோபர் 13, 2011ம் நாள் நீதிபதி திருவாட்டி கொலார் – கொடெலி (Ms Kollar Kotelly) தமிழ்நெற் இணையத்தின் மூலம் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டார்.

உலகின் கட்டளை வழங்கல் வரலாற்றில் (Service of Summons) இது முன்மாதரியாகும்.இந்த உத்தரவுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில் நவம்பர் 22,2011ம் நாள் வழக்காளிகளின் முதன்மைச் சட்டத்தரணி மேலதிக தகவல்களை நீதி மன்றத்திற்கு வழங்கினார். கொழும்பு ஊடகங்களில் அழைப்பாணையின் பிரதியைப் பிரசுரிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்று அவர் எழுத்து மூலம் சமர்ப்பித்தார்.

அரசை விமர்சிக்கும் ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அரசியல் பழிவாங்கல் படுகொலைகள், காணாமற் போதல்கள் நடப்பதற்கான ஆதாரச் சத்தியக் கடதாசிகளையும் பிற ஆவணங்களையும் அவர் நீதி மன்றத்திற்கு வழங்கினார்.

உள்ளுர்ப் பிரசுரம் எதிரியின் ஊடகச் சுதந்திரத்தின் மீதான பாரதூரமான தாக்குதல்களால் தடை பட்டதால் இதைக் கருத்தில் கொண்டு நீதி மன்றம் உள்ளுர் பிரசுர உத்தரவை நீக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் ஜனாதிபதி ராஜபக்சவின் அஞ்சல் முகவரி மூலமாகவும் அவருடைய பேஸ்புக் (Facebook)மற்றும் ருவிற்ரர் (Twitter)தளங்கள் மூலமாகவும், நீதிபதி விரும்பினால் அவ்வாறு அழைப்பாணை அனுப்ப அனுமதி அளிக்குமாறும் அதே வழக்கறிஞர் மனுச் செய்தார்.

இந்த வழக்கை விசாரிப்பதற்கும் தகுந்த சமயா சமய உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் திருவாட்டி கொலார் – கொடெலி மிகவும் தகுதி வாய்ந்தவர்.

அமெரிக்க வெளிநாட்டு புலனாய்வு நடவடிக்கைகள் கண்காணிப்புச் சட்டத்தின் (United States Foreign Intelligence Surveillance Act – FISA) தலைமை நீதிபதியாக அவர் செயற்பட்டார். அவர் நாடுகடந்த நியாய ஆதிக்கம் (Jurisdiction)நாடு கடந்து வாழும் எதிரிகள், மற்றும் சட்டப் பாதுகாப்பு விதிமுறைகள் பற்றிய நுண் அறிவு கைவரப் பெற்றவர்.

தமிழ்நெற் இணையத்தின் மூலம் அழைப்பாணை எதிரிக்கு அனுப்பும் உத்தரவு வரலாற்றில் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த உத்தரவு இனி வரும் காலத்தில் பிற நீதி மன்றங்களைக் கட்டுப்படுத்துமா என்பது வாதத்திற்குரிய விடயம்.

ஒரு நீதித்துறை முன்னுதாரணம் (Judicial Precedent) என்றும் நிலைக்க வேண்டுமாயின் வழங்கப்பட்ட உத்தரவும் அந்த உத்தரவுக்கான அடிப்படை நியாங்களும் ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஒரு நீதித்துறை முன்னுதாரணம் நிலைத்து நின்று ஆட்சி செய்வதை இலத்தீன் மொழியில் ஸ்ராறே டெசிசிஸ் (Stare Decisis) என்பார்கள்.

ஒரு முறை நன்கு அலசி ஆராயப்பட்டு உத்தரவாக வழங்கப்பட்ட நீதி மன்றத் தீர்ப்பு வழமையாக நிலைத்து நிற்கும். மிக அபூர்வமான சந்தர்ப்பங்களில் வலுவான முன்னுதாரணங்கள் கவிழ்க்கப் படுவதுண்டு. ஆனால் அப்படியான சந்தர்ப்பங்கள் மிக அரிது என்பது சட்ட நிபுணர்களின் கருத்து.

சித்தரவதைக்கு உட்பட்டோர் பாதுகாப்புச் சட்டத்தின் (Torture Victims Protection Act – TUPA)சரத்துக்களை மீறியதற்காகவும் இலங்கை அதிபரின் கட்டளைப் பொறுப்பின் அடிப்படையிலும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் நீதி வேண்டி நிற்கும் அதே வேலையில் சர்வதேச நீதித் துறை ஆய்வாளர்கள் இந்த வழக்கில் இணைந்துள்ள சட்டப் பிரச்சனைகளை மிகவும் கூர்மையாக அவதானிக்கின்றனர். நீதித்துறை சமகால நிகழ்ச்சிகளைப் பிரதிபலிக்கும் என்பது பொது விதி. நீதித் துறையால் தனியொரு பிரத்தியேக உலகில் செயற்பட இயலாது.

ஊடகத்துறையின் பரந்துபட்ட வளர்ச்சி நீதித் துறையைத் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்துள்ளதற்கான சான்றாக இணையத்தில் அழைப்பாணையைப் பதிவு செய்யும் படியான உத்தரவு அமைகிறது. அதுகும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட உலகத் தமிழர்களின் குரலாகவும் பதிவாகவும் இடம்பெறும் தமிழ்நெற்றில் என்பது ஒரு வகை கவிதா நீதி (Poetic Justice)

பொதுப் பாதுகாப்புச் சட்டம் (Public Security Ordinance) அரசியல் சாசனத்தின் ஆறாவது திருத்தம் என்பன மூலம் ஊடாக சுதந்திரம் இலங்கை அரசினால் கட்டுப் படுத்தப்படுகிறது. 157A என்று ஆறாம் திருத்தம் அரசியல் சாசனத்தில் எண் இடப்பட்டுள்ளது.

குடியுரிமைப் பறிப்பு, அசைவுள்ள அசைவற்ற சொத்துக்கள் பறிமுதல் உட்பட பல தண்டனைகளை பிரிவினையைத் தூண்டும் பிரசுரங்களையும் பதிவுகளையும் வெளியிடும் ஊடகங்கள் தண்டிக்கப் படுகின்றன. இதற்கு 157A உதவுகிறது. பிரிட்டிஸ் ஆட்சியில் இருந்து விடுபட்ட நாட் தொட்டு இன்று வரை மொத்தம் இருபதிற்கும் மேற்பட்ட ஆண்டுகள் அவசர காலச் சட்டத்தின் கீழ் இலங்கை ஆளப்படுகிறது.

அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் வக்கிர நோக்கில் இந்தச் சட்டங்கள் ஊடகவியலாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் எதிராகப் பயன்படுகின்றன. இவற்றை கொலம்பியா டிஸ்திறிக் நீதி மன்றம் தனது பார்வைக்கு எடுத்துள்ளது.

இலங்கையில் தீவிரமடையும் ஊடகங்கள் மீதான அடக்குமுறை கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. அண்மைக் காலமாக இணைய தளங்கள் மீதான அடக்குமுறை தமிழ்நெற் தடையைத் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது.

இலங்கை தொடர்பான செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள் உட்பட அனைத்து ஊடகங்களும் இலங்கையில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசின் நவம்பர் 2011 அறிவிப்பு கூறுகிறது. அது சாத்தியமற்றதாக இருந்தாலும் ஒட்டுமொத்த ஊடகத் துறைக்கும் விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய அறிவிப்பு வெளியான உடனேயே ஜந்து இணைய தளங்களை முடக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. லங்கா ஈ நியூஸ் என்ற இணைய தளம் இக்காலப் பகுதியில் முடக்கப்பட்டுள்ளது.

இணைய ஊடகங்களை அடக்கி ஒடுக்கி வைக்கும் நோக்கில் பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் சார்ந்த செய்திகளையும் அரசிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் இணையங்கள் பதிவேற்றம் செய்வதைத் தடுப்பது தான் அரசின் பிரதான நோக்கம்.

பதிவு அறிவித்தலின் பின்னணியில் இலங்கையின் சர்வாதிகார ஆட்சி முறையின் விம்பம் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இணைய தளங்களைத் தடை செய்வது இயலாத காரியம். தடைகளை அர்த்தமற்ற தாக்கும் இணையங்களைப் பார்க்கும் வசதிகள் கிடைக்கின்றன.

உலக ஊடக ஒழுங்கிற்கு எதிரான இலங்கையின் போக்கு கண்டனத்திற்குரியது. அரசிற்கு எதிராக இது வரை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளையும் தாக்கல் செய்யப்படவிருக்கும் வழக்குகளையும் அது பாதிக்கும் என்பது திண்ணம்.

-செண்பகத்தார்-

http://www.saritham.com/?p=42696

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.