Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச சமூகத்திடம் சரணாகதி அடையும் நிலையில் மஹிந்த அரசு!

Featured Replies

சர்வதேச சமூகத்திடம் சரணாகதி அடையும் நிலையில் மஹிந்த அரசு! - கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன

"வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும், இறுதி யுத்தத்தின் போது பொது மக்களைப் படுகொலை செய்தார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும் மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகியவை உள்ளடக்கப்படாத தீர்வுத்திட்டமானது முழுமையானதொரு தீர்வுப் பொதியாக அமையாது."

இவ்வாறு நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், தெஹிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன "உதயனு"க்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெரிவித்தார். சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு:

கேள்வி: மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டைத் தான் புறக்கணிப்பார் எனக் கனேடியப் பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இவரின் கருத்தை ஏனைய சில நாடுகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இலங்கையில் தற்போது மனித உரிமை விவகாரம் எவ்வாறானதொரு கட்டத்தில் உள்ளது என நீங்கள் கருதுகின்றீர்கள்?

பதில்: மாபெரும் தமிழ்த் தலைவர் தந்தைச் செல்வாவின் உருவச்சிலையின் தலைப்பகுதியை அண்மையில் காடையர்கள் உடைத்தெறிந்தனர். பாதுகாப்புத் தரப்பினர் இரவும் பகலும் உலாவித் திரியும் திருகோணமலையிலேயே இந்த அராஜகம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் ஆடைகளைந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி வெறியாட்டம் ஆடியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர்.

இவற்றையெல்லாம் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.

ஜனநாயக ஆட்சியே நாட்டில் நிலவுகின்றது என அங்கும் இங்கும் பெருமை கூறித்திரிபவர்கள் இதனை நன்கு உணர்ந்து செயற்படவேண்டும். இவ்வாறான சம்பவங்களிலிருந்தே நாட்டில் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். இதை நான் கூறித்தான் புரியவேண்டும் என்றில்லை.

கே: ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க இராணுவ தலைமையகத்தின் நிதியுதவியுடன் வடக்கில் நான்கு வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் நிதி உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் தேசியப் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறி அமைச்சர்கள் சிலர் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

ப: யுத்தகாலத்தில் அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவிடம் இருந்து அரசு பெருமளவு எண்ணிக்ககையான ஆயுதங்களை கொள்வனவு செய்தது. இராணுவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டது. ஆலோசகர்கள்கூட இங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

யுத்தத்தை முன்னெடுத்து மக்களை அழிப்பதற்கு மட்டும் அமெரிக்காவின் உதவியை விரும்பும் இனவாதிகள் மக்கள் நலனைக்காக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்?

நாட்டின் வளங்களை அரசு அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தலையாட்டிப் பொம்மையாகச் செயற்பட்ட அமைச்சர்கள், தமிழர் பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத்தின் நிதியுதவியுடன் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படியானால் கோதுமை மா இறக்குமதிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் அல்லவா?

வைத்தியசாலைகள் அமைக்கப்படுவது மிகவும் அருமையானதொரு விடயம். அதனை நாம் வரவேற்க வேண்டும். சாத்தான் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டாது.

ஆனால், காரணமில்லாமல் அமெரிக்கா களத்தில் இறங்காது என்பதும் எமக்குத் தெரியும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பகிரங்கப்படுத்துமாறு இதனால் தான் நாம் அரசை கோருகின்றோம்.

கே: வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகிய விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொங்கியிருக்காது, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என அரசு தரப்பினர் கூறுகின்றனர். மேற்கூறப்பட்ட விடயங்கள் உள்ளடங்காத ஒரு தீர்வுப்பொதி இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முழுமை பெறுமா?

ப: இனப்பிரச்சினை விவகாரத்தில், வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், சட்ட ஒழுங்கு ஆகியவை இன்றியமையாத விடயங்களாகும். எனவே, அது குறித்துக் கட்டாயம் அரசு பேசியே ஆக வேண்டும். இந்த விடயங்களை உள்ளடக்காமல் ஒரு தீர்வு வழங்கப்பட்டால் அது முழுமைபெறாது. அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

சுயநிர்ணய ஆட்சிக்கு இந்த மூன்று விடயங்களும் அத்தியாவசியம். இவற்றைப் பற்றி பரிசீலிக்காவிட்டால் சுயநிர்ணய ஆட்சி குறித்து பேசுவதில் எதுவிதப் பயனும் இல்லை.

தமிழர் பிரச்சினை குறித்து வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள், இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள் ஆகியன மிகுந்த அவதானத்துடனும், அக்கறையுடனும் அவதானித்து வருகின்றன. தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப் பொதியொன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என இந்த அமைப்புகள் தமது நாடுகளில் உள்ள மத்திய அரசுகளை வலியுறுத்தினால் ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப் பொதியொன்றை அரசு உடன் வழங்க வேண்டும். இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் நாலாபுறமும் அரசை வாட்டிவதைக்கும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

கே: சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சி தேசிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதில் உங்கள் கட்சியும் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரங்களும் உள்வாங்கப்படுமா?

ப: சரத் பொன்காசேவை அடித்தளமாகப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாம் பாடுபடுவோம். எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு இணங்கியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் விவகாரம் உலகளாவிய ரீதியில் பேசப்படுவதால் அவரை வைத்தே நாம் எமது நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும். சரத் பொன்சேகாவின் விடுதலைக்கான போராட்டம் ஏனைய அரசியல் கைதிகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

சரத் பொன்சேகாவை இராணுவ வீரர் எனக் கூறி நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வீரர். நான் ஏன் அப்படிக் கூறுகின்றேனென்றால், வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்கு வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இவற்றையெல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்தவர்களுக்கு மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது. அவர்களும் கோட்சூட்டை மாட்டிக்கொண்டு சுகபோகம் அனுபவிக்கின்றனர். இவ்வாறானவர்களையே அரசு இராணுவ வீரர்கள் என்று கூறிப் பெருமையடைகின்றது. எனவே, அந்தபட்டியலில் சரத் பொன்சேகாவையும் சேர்க்கக்கூடாது. ஒரு கைதியாகவே அவரை நாம் பார்க்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார் என்ற ஒரே காரணத்திற்காகச் சரத் பொன்சேகா இன்று அரசியல் ரீதியில் பழிவாங்கப்படுகின்றார். எனவே, அரசின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கவேண்டும்.

ஜனாதிபதியிடம் சரத் பொன்சேகா மண்டியிட்டு மன்னிப்பு கோரினால் அவரை 24 மணித்தியாலங்களுக்குள் விடுதலை செய்துவிடுவர். ஆனால், பொன்சேகா மண்டியிட்டு மஹிந்த அரசிடம் ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டார்.

சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக எமது கட்சி போராடினாலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையே நாம் பிரதானமாகக் கையாள்வோம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

கே: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு கோணங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளுமா?

ப: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறே தற்போது சர்வதேச நாடுகள் கூறிவருகின்றன. அரசு குறித்த அறிக்கையை வெளியிட்ட பின்னரே அது குறித்து உலக நாடுகள் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்துக் கொண்டே இலங்கை விவகாரம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

ஏதாவது பிரச்சினை என்றால் ஆணைக்குழு அமைப்பதும், அந்தக் குழு விசாரணைகளை நடத்திய பின்னர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதும் அதன் பின்னர் ஆட்சியாளர்கள் அந்த அறிக்கையை கிடப்பில் போடுவதும் நாட்டில் வழமையாகிவிட்டது.

எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் விவகாரத்தில் அரசு தனது பழைய பாணியை பாவிக்க முடியாது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.

இலங்கை அரசே ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து அறிக்கை தயாரித்துள்ளதால் ஒரு சில நாடுகள் அறிக்கையை நிராகரிக்கவும் கூடும்.

கே: மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைக்கு இந்தியாவும், சீனாவும் ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதே இது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: இலங்கையில் எண்ணெய்வளம் இருக்கின்றது என தெரிந்திருந்ததாலேயே இந்தியாவும், சீனாவும் இலங்கை அரசுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கின. உலக நாடுகள் அரசுக்கு ஆயுதங்களை வழங்க மறுத்தபோது சீன அரசு அள்ளிக்கொடுத்தது.

இந்தியாவும் இலங்கையைத் தலைக்கு மேல் தூக்கிவைத்து ஆடியது. மஹிந்த அரசு எவ்வளவு கரக்கமுடியுமோ அவை அனைத்தையும் இந்த இரண்டு நாடுகளிடம் இருந்து கறந்துவிட்டது. தற்போதுதான் அதன் பின்விளைவுகளை அனுபவிக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் போது நாங்கள் உங்களுடன் தான் இருந்தோம் என இந்தியாவும், இல்லை... இல்லை நாங்கள்தான் ஆயுதங்களை வாரி வழங்கினோம் என சீனாவும் அரசுக்கு ஏதோவொருவிதத்தில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன.

இந்த இரண்டு நாடுகளையும் பகைத்துக் கொண்டால் அரசுக்குச் சர்வதேச ரீதியில் வேறு பல சிக்கல்கள் ஏற்படும். எனவே, அரசியல் ரீதியாக சரணாகதி அடைய வேண்டியதொரு நிலை மஹிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகளிடம் அதிக வட்டிக்குக் கடன்களை வாங்கும் அரசு அந்தச் சுமையையும் மக்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கின்றது. விவசாயத்தில் சிறந்துவிளங்கிய எமது நாடு இன்று இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே எமது நாட்டின் பொருளாதாரம் உள்ளது.

இந்நிலையில் சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கை அரசால் தட்டிக்கழிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

கே: வரவுசெலவுத்திட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: தனியார்துறை ஊழியர்களை மஹிந்த அரசு அடியோடு புறக்கணித்துள்ளது. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றிலும் அது அடித்துள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு எவ்வித நன்மைகளும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் இல்லை. மக்கள் நலன்களைப் புறக்கணித்துள்ள அரசு, பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. அரசு இன்று அதிவேக வீதிகளை அமைக்கின்றது; துறைமுகங்களை அமைக்கின்றது; விமானநிலையங்களை அமைக்கின்றது. செல்வந்தர்களை கருத்திற்கொண்டே அரசு இவற்றையெல்லாம் செய்கின்றது.

அடிப்படை வசதிகள்கூட இன்றித் தோட்டத் தொழிலாளர்கள் இன்று சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. "லயன்' அறைகளிலேயே இன்றும் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அதிவேக வீதிகளை அமைத்து சாதனை படைக்கும் அரசுக்கு இவர்களின் சோகங்கள் புரியவில்லையா! உலக நாகரிகம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், தோட்டப்புற மக்களின் வாழ்க்கை இன்று படுபாதாளத்தை நோக்கி பயணிக்கின்றது.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கை மாறவேண்டுமானால் இவர்களின் பிரச்சினைகளையும் அரசு கவனத்தில் எடுக்கவேண்டும்.

கே: நுவரெலியா மாவட்டத்தில் வட்டகொட ஜொக்ஸ்டன் தோட்டத்தில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மலையகத்தையும் இராணுவமயப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: மலையகத்தில் மட்டுமல்ல, மாவட்ட ரீதியில் அரசு இராணுவ பலத்தை ஏற்படுத்தி வருகின்றது. அரச பயங்கரவாதத்தை நாடு பூராகவும் விஸ்தரித்து எதுவித தங்குதடையும் இன்றி கொடுங்கோல் ஆட்சியை முன்னெடுப்பதற்கே அரசு இந்த அத்திவாரத்தை இட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணத்தை வாட்டிவதைத்த இந்த இராணுவப் பிரச்சினை மலையகத்திலும் தொற்றிக் கொண்டால் நிலைமை மோசமாகிவிடும். மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும். இடதுசாரிகளுக்கு ஆட்சிபீட மேறக்கூடிய சக்தியை மக்கள் வழங்குவார்களாயின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நாம் அனைவரும் சுதந்திரமாக நகர முடியும்.

மூலம்: உதயன் - மார்கழி 14, 2011

பிரசுரித்த நாள்: Dec 15, 2011 17:48:42 GMT

நிறையத்தான் சலசலப்புகள் ஆரம்பமாகியிருக்கின்றன. பல கிறாம போன்களில் ஒரேநேரத்தில் தட்டுகளைப்போட்டு பாட விட்டிருக்கிறது அரசு. தெற்கை தாலாட்ட ஆரம்பித்திருக்கும் துறைமுக அபிவிருத்திகள், விமானநிலையங்கள், அதிவேக நெடுஞ்சாலைகள், எண்ணெய் கிணறுகள் தோண்டுதல், புதிய தலை நகர அடுக்குகள் என்பவை மட்டுமல்ல, தமிழருக்கு பாசாங்கு காட்ட, வடக்கில் வசந்தம், கிழக்கில் உதயம், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, பராளுமன்ற குழு, கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை என்று பல. இதில் எல்லாம் தேறுவது ஒன்றுமல்ல ஆனால், ராசபக்சா குடும்பங்களுக்கு தெற்கில் பாரிய முதலீடுகளும் தமிழருக்கு வடக்கில் ராணுவமயமாதலும், ஆட்கடத்தல்களும், சிங்கள்குடியேற்றமும் தான்.

உள்னாட்டுப்பிரச்சனை இப்படியிருக்க போருக்கு இலவச ஆயுதம் கொடுத்த இந்தியா, அமெரிக்கா, சீனா தங்கள் பாகத்திற்கு கதவை தட்டுகின்றன. இந்தியாவென்றால் ஒப்பந்தம் எழுதிக்கிழித்துவிட, தங்கபாலுவும், மனமோகன் சிங்கும் நாம் சொல்வதை இலங்கை கேட்குதில்லையே என்றுவிட்டு போய் விடுவார்கள். ஆனால் சீனாவிடமும் அமெரிக்காவிடமும் இது எளிதில் எடுபடுகுதில்லை.

இதனால்த்தான் பொன்சேக்கா, சுமந்திரன் போல புது பிரச்சனைகளை அரசு கிளறிவிடுகிறது. சீனாவுடன் அன்னியோன்னிய உறவை விரும்பும் அரசு மெல்ல மெல்ல சீனா கேட்பதையெல்லாம் கொடுத்துக்கொண்டுதான் வருகிறது. ஆனால் அமெரிக்காவைத்தான் தற்காலிகமாக வாயை மூடவைத்துவிட்டு மிகுதியை பின்னர் யோசிக்கலாம் என்று நினைக்கிறது அரசு. இதனால்த்தான் இந்த இரு புதிய பாட்டு தட்டுகளையும் மேலதிக கிறாம போன்களில் பாட விட்டுருக்கிறது.

பொன்சேக்காபக்கம் சந்தர்பத்தை பயன்படுத்தி தமது அரசியல் முன்னெடுப்புகளை அதிகரித்து தமது முயற்சியால்த்தான் பொன்சேக்கா விடுவிக்கபட்டிகிறார் எனக் காட்ட முயன்றாலும் அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன, அந்தவிடத்தில் அரசுக்கு அமெரிக்கவிடம் நல்லாய் இறுக்கிப்போயிருபதால் பொன்சேக்கா மாசில் வெளியே வரும் ஒரு சந்தர்பம் இருக்கு என்ம்தை நாமெல்லோரும் உணரவேண்டும். அரசு, பிளேக் ஒருகாலத்தில் எப்படி ரணிலை கட்டியெழுப்ப நேரத்தை வீணடித்தாரோ அதேபோல் பொன்சேக்காவை அதிபராக்க சில காலத்தை செலவிடும்; அந்த நேரத்தில் தான் மீதமிருக்கும் கற்களையும் பிரட்டிவிடலாம் அமெரிக்கவை எப்படி கையாள வேண்டுமென்பதற்கு என்று நினைக்கிறது.

அமெரிக்கா கொடுக்கும் அடுத்த தலையிடி பேச்சுவார்த்தை. ஒருதொகை பணத்தை கொட்டி, பெரும்திரளான பேர்களை தொழிலுக்கமர்த்தி அரசு கொடுப்பதை த.தே.கூ ஏற்றுக்கொளாமல் ஏமாளியாகபொகின்றதென்று பிரச்சாரம் செய்ய வைத்தது. சிங்கள மந்திரிகள் முதல் K.P., பிள்ளையான் வரை ஒரே சங்கை தொடர்ந்து ஊதி அலுத்து விட்டது. முன்னேற்றம் காணாததால், வீரகேசரி அண்மையில் குறிப்பிடிருந்த புலம்பெயர் மக்களை நோக்கி பாஞ்சன்னியம் ஊதிமிரட்டி சமாதான அழைப்புகள் விட்டர்கள். அரசின் பலத்தபிரசாரத்தால், எந்த தமிழ் இணையம் எதை கூறுகின்றதென்று அறியாமல் புலம் பெயர்மக்கள் தடுமாறினார்கள். அவ்வளவும் ஏதோ உண்மை என்றாலும் அரசு செலவழித்த பணத்திற்கு எதிர்பார்த்த பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால்த்தான் கூட்டமைப்பை வழிக்குக் கொண்டுவர சங்கிலியின் நெகிழ்வான மொளி சுமந்திரனை புதிய இலக்கொன்று வைக்கிறர்கள். பழுத்த அரசியல் ஞானிகளின் முதிர்ந்த ஆரூடத்தில் கூட்டமைப்பின் சுமந்திரன் அரசுடன் சேருவார் என்று கனகாலமாக காட்டி கொண்டிருக்கிறது. அதனால்த்தான் சிறீரங்கன் முதல் சித்தாந்த மகிந்தா வரை ஒரேநேரத்தில் சாமபேத தான தண்ட மூறைகளை பாவித்து சுமந்திரன் தாக்குதல் நடத்துகிறர்கள். கொலிவூட்டின் கோக்கோகன் பாணி மல்யுத்தத்தை எல்லோரும் பார்த்திருக்கிறோம். இரட்டை வீரரகள் விளையாடும் போட்டிகளில் ஒருவர் மேடையின் நடுவில் தனது கையோ காலோ முறிந்ததுபோல்ப் படுத்திருப்பார். எதிர்கன்னை வீரரகளோ இருவரும் சேர்ந்து முறிந்த உறுப்பை மேலும் முறிப்பதாக நடித்து அதன் மேல் துள்ளி துள்ளி விழுவார்கள். எல்லோரும் விழுந்த வீரனைபார்த்து பரிதாபப்பட்டு நம்பிக்கை இழந்தபின்னர், அவர் திடுதிடுப்பென நளுவி தனது கன்னையாளைத்தொட அவர் பறந்தோடிவந்து இருவரையும் ஒரேஅடியில் அடித்துதுரத்தி மக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் வெற்றிவாகை சூடுவார்.

சுமந்திரனை விழுத்திவிட்டாதாக அரசு குதுகலிக்க ஆரம்பித்த நேரம் தான் சம்பந்தரின் பேச்சு புதிய தலையிடியை கொடுத்திருக்கிறது அரசுக்கு. இப்போது அரசாங்க பேச்சாளர்களான பீரிசு, ரம்புகவெல சம்பந்தரின் பேச்சுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள். போர்முடிந்து இரண்டரையாண்டு காலமாக புலம் பெயர் மக்கள் போர் குற்ற விசாரணையை முடுக்க முயல்வது தவறு என்று கூறிவந்த சம்பந்தர், சர்வதேச நாடுகளை வந்து போர்குற்ற விசாரணையை நடத்தும் படி பாராளுமன்றத்திலிருந்து கூவி அழைத்திருக்கிறார். சமந்திரனை இலகுவில் வென்றாலும் கூட இந்த போர்குற்ற விசாரணை என்பதை இலகுவில் கம்பளத்தின் கீழ் கூட்டி தள்ள முடியாது என்பதை இப்போது அரசு கண்டுகொண்டிருக்கிறது. சுமந்திரன் அரசுடன் போய்ச்சேர்ந்தாலும் அவர் இன்னொரு K.P. யோ, கருணவோ அல்லது டக்கிளஸ் மாதிரியோதான் வரமுடியுமே தவிர, போக்குகளின் திசையை திருப்பதக்க ஆறலைத்தக்க வைத்திருக்க முடியாது என்பதையெ தான் சம்பந்தரின் பேச்சு காட்டியிருக்கிறது.

விக்கிரமபாகு இன்னோரன்ன அரசியல் நிலைமைகளை விளங்கிகொண்டுதான் பேச்சுவார்த்தைகள் அடைந்திருக்கும் தேக்க நிலைக்கு காரணமான வடக்கு-கிழக்கின் நீதி, நிலம், நெருக்கம்(இணைப்பு) போன்ற மூன்று நிபந்தனைகளையும் அரசு நிறைவேற்றாவிட்டால் பேச்சுவார்த்தை தோல்விதான் என்று கூறுகிறார்.

விக்கிரமபாகு சொல்வது பொன்சேக்கா, பேச்சு வார்த்தை, சீனா என்று மூன்று விடையத்தாலும் இலங்கை சர்வதேசத்திடம் சரணடைய வேண்டிய நிலையில் தான் சென்று கொண்டிருக்கிறது. சீனாவை போகவிடாவிட்டால் போர்க்குற்ற விசாரணை நிசம் என்பது விக்கிரமபாகுவிற்கு தெரியும். அவருக்கு சீனாவிடம் கூடிட தோழமை அமெரிக்கவை விட. ஆனால் அமெரிக்காதான் அவரின் நண்பன் பொன்சேக்கவை விடுவிக்க கூடியநாடும்; சீனாவல்ல. சீனா இலங்கையை விட்டு வெளியேற நேர்ந்தால், வல்லரசு மாதிரிகாணப்படும் இலங்கையை இந்தியா என்ற நிலவு கூட மிதிக்கும் என்பதும் அவருக்கு தெரியும். எனவே அவர் மற்ற இடங்களில் நடந்து கொண்டதுபோல் இந்த இடத்தில் மனம் திறந்த பேட்டியை கொடுக்க வில்லை.

யுத்தத்தை முன்னெடுத்து மக்களை அழிப்பதற்கு மட்டும் அமெரிக்காவின் உதவியை விரும்பும் இனவாதிகள் மக்கள் நலனைக்காக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்?

நாட்டின் வளங்களை அரசு அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது.

ஆனால், காரணமில்லாமல் அமெரிக்கா களத்தில் இறங்காது என்பதும் எமக்குத் தெரியும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பகிரங்கப்படுத்துமாறு இதனால் தான் நாம் அரசை கோருகின்றோம்.

சரத் பொன்காசேவை அடித்தளமாகப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாம் பாடுபடுவோம்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.