Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜூனியர் விகடன்-தமிழ் மக்களின் நாடித்துடிப்பா?முதலாளியின் நாடித்துடிப்பா?

Featured Replies

logo.jpg

ஜூனியர் விகடன் தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொள்வது உண்மையோ இல்லையோ பிற ஊடகங்களை ஒப்பிடும் பொழுது கடந்த 3 ஆண்டுகளில் பெரும்பாலான மக்கள் பிரச்சனைகளை சிறப்பாகவே வெளிக் கொணர்ந்து உள்ளது.

ஜெயலலிதாவோ,கருணாநிதியோ யார் மீதான விமர்சனம் என்றாலும் கூர்மையாகச் செய்வது,மற்ற பத்திரிக்கைகளைக் காட்டிலும் சமரசமின்றி எழுதுவது என்று இவர்கள் செயலைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். (ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஆ.ராசாவை வன்மத்துடன் பாய்ந்து கடித்துக் குதறுவதும் மாறன் சகோதரர்களிடம் வாலை ஆட்டியபடி மண்டியிட்டுக் கிடப்பதும் தனி)

அதுவும் கடந்த திமுக ஆட்சியில் மக்கள் விரோத காரியங்கள்,மற்றும் நடைபெற்ற ஊழல்,முறைகேடுகள் நடைபெற்ற பொழுது பெருமளவு அதனைப் பொது வெளிக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு ஜூனியர் விகடனுக்கு உண்டு.

அதன் காரணமாகவே விகடன் குழும இதழ்கள் இன்று விற்பனைச் சந்தையில் முதலிடத்தில் இருக்கின்றன.ஆட்சி மாறிய பின்னும் அதிமுக ஆட்சியின் மீதான விமர்சனத்தை மிகச் சரியாகவே ஜூனியர் விகடன் செய்திருக்கின்றது.

நக்கீரனில் எழுதப்படும் அதிமுகவின் மீதான விமர்சனத்தை உள் நோக்கத்துடன் கூடிய எழுத்து என்று படிக்காமலேயே முடிவு செய்யும் வாசகன் கூட விகடனின் விமர்சனத்தை நடுநிலையானது என்று கருதுகிறான்.திமுக ஆட்சியில் முரசொலியின் வாரமிருமுறைப் பதிப்பாக நக்கீரன் இதழ் வெளிவந்ததே இதற்குக் காரணம்.

இனி மேட்டருக்கு வருவோம்.

ஆட்சியில் இருக்கும் பொழுது திமுக அமைச்சர்களின் மீது கடும் விமர்சனத்தை வைத்த ஜூனியர் விகடன் ஆட்சி இழந்த பின் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டினை பணம் கொடுத்து அத்துமீறி அபகரிதத வழக்கு வந்தவுடன் சமரசம் இன்றி எழுதித் தள்ளியது.

பக்கத்து வீடு பாய்ந்த வழக்கு,வளைக்கப்பட்ட ஸ்டாலின் கதை என்ற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரியும்,அப்பா அருகில் புது மாப்பிள்ளை இன்று மகன் மீது புகார் மழை என்று அடுத்த இதழில் மற்றுமொரு ஒரு கவர் ஸ்டோரியும் வெளியிட்டது.இரண்டையும் எஸ்.கோபாலகிருஷ்ணன் என்பவர்(இதற்கு முன் தினகரன் இதழில் வேலை செய்தவர்) எழுதியிருக்கிறார்.

இது தான் அது.

large_wrapper+1.jpg

alwarpet+1.jpg

alwarpet+2.jpg

உத்தமராக” வலம் வரும் மு.க.ஸ்டாலினின் முறைகேட்டினை அம்பலப்படுத்தியதற்கு ஜூனியர் விகடனின் பணியைப் பாராட்டலாம்.

ந்த நிலையில் தான் திரிசக்தி சுந்தர்ராமன் என்னும் தமிழக அரசியல் பத்திரிக்கையின் அதிபர் மீது சுமார் 10 கோடி மதிப்புள்ள மோசடிப் புகார் வந்தது.காவல்துறையின் விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அனுப்பப் பட்டார்.

அரசியல்வாதிகளின் ஊழலுக்கும் மோசடிக்கும்,முறைகேட்டுக்கும் எதிராகக் கொதித்து எழும் ஜுனியர் விகடன்,தனது பத்திரிக்கையின் நிருபர்கள் விகேஷ்,சரவணகுமார் போன்றவர்கள் மீது ஊரறிய ஊழல் குற்றச்சாட்டு எழுந்தவுடன் (தாமதமாகவேனும்) நடவடிக்கை எடுத்ததாகச் சொல்லும் ஜுனியர் விகடன், ஒட்டுமொத்த சமூத்தையே விமர்சிக்கும் வல்லமை படைத்த நான்காவது தூணாண பத்திரிக்கைத் துறை மீது இப்படிப்பட்ட களங்கம், ஒரு பத்திரிக்கையின் அதிபர் திரிசக்தி சுந்தர்ராமன் மீது பல கோடி மோசடிக் குற்றச்சாட்டு,கைது என்றவுடன் உன்னதமான பத்திரிக்கைத் தொழிலை அவமதித்து விட்டாரே இந்தப்பாவி என்ற ஆத்திரத்திலும்,தார்மீகக் கோபத்திலும் கொதித்து எழும்.

திரிசக்தி சுந்தர்ராமனின் தவறுகளையும்,முறைகேடுகளையும்,மோசடிகளையும் அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் வெளியிட்டு இனி ஒரு பத்திரிக்கைக்காரன் இது போன்ற தவறுகளைச் செய்யக்கூடாது,பத்திரிக்கை உலகுக்கு இனியும் ஒரு அவமானம் இப்படிப்பட்ட கழிசடைகளால் ஏற்படக்கூடாது என்ற கோபம் கொப்பளிக்க வெறியுடன் உண்மைகளை வெளிப்படுத்தும்,புத்தம் புது, பகீர், பின்னணித் தகவல்களை தோண்டி எடுத்து நமக்குத் தருவார்கள் என்ற எண்ணம் நமக்கு இருந்தது.

பலத்த எதிர்பார்ப்புடன் ஆர்வத்துடன் சனிக்கிழமை அதிகாலையில் சென்று ஜூ.வி.வாங்கிப் படித்த நமக்கு ஜு.வி.நிர்வாகத்தின் மீது உச்சந்தலை வரை கோபமேற்பட்டு விட்டது.திரிசக்தி சுந்தர்ராமன் மீதான மோசடிக் குற்றச்சாட்டு குறித்து ஆராயாமல்,புலனாய்வு செய்யாமல்,உட்கார்ந்த இடத்தில் இருந்து அவரைப் பாதுகாக்கும் விதத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்தது.

அது தான் இது.

tmb+1.jpg

tmb+2.jpg

தமிழக அரசியல் பத்திரிக்கையின் அதிபர் திரிசக்தி சுந்தர்ராமன் மீதான மோசடிக் குற்றச்சாட்டு பற்றிய செய்தியை எழுதியவர் உதவிப் பொறுப்பாசிரியர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி.இவரை நீண்ட காலமாகவே நாம் அறிவோம்.மேலும் இவர் நினைத்தாலும் இன்னொரு பத்திரிக்கை முதலாளியைப் பற்றி நல்லவிதமாகவோ கெட்ட விதமாகவோ எழுதி விட முடியாது.

மேலும் சக பத்திரிக்கை அதிபர் மீதான மோசடி குறித்து வெளியிடப்பட்ட இந்தச் செய்தி ஜூனியர் விகடன் முதலாளியின் முழு ஒப்புதலுடனும் ஆசீர்வாதத்துடனும் மட்டுமே வெளிவந்திருக்க முடியும்.அவர் அனுமதியின்றி ஒரு எழுத்து கூட வெளிவந்திருக்க முடியாது.

இந்தக் கட்டுரை வருவதற்குக் காரணம் நூல்களுக்குள் இருக்கும் பிணைப்பே காரணம்.எந்த நூலுக்குச் சிக்கல் என்றாலும் எல்லா நூல்களும் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.முழுக்க முழுக்க ஜூனியர் விகடன் முதலாளி மட்டுமே இதற்குப் பொறுப்பு.

மு.க.ஸ்டாலின் மீதான 7 கோடி ருபாய் மதிப்புள்ள மோசடிக் குற்றச்சாட்டும் திரிசக்தி சுந்தர்ராமன் மீதான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள மோசடியும் ஏறத்தாழ ஒன்று தான்.இரண்டையும் ஜூனியர் விகடன் அணுகிய விதத்தைப் பார்ப்போம்.அதற்கு முன் இரண்டு செய்தியையும் படித்து விடுங்கள்.

1)ஸ்டாலின் மீது மோசடிக் குற்றச்சாட்டு குறித்து வந்த முதல் கவர் ஸ்டோரி செய்தியில் அதற்கு வைக்கப்பட்ட தலைப்பு,

பக்கத்து வீடு பாய்ந்த வழக்கு,வளைக்கப்பட்ட ஸ்டாலின் கதை

திரிசக்தி சுந்தர்ராமன் மீதான மோசடிக் குற்றச்சாட்டு குறித்து வந்த செய்தியில் அதற்கு வைக்கப்பட்ட தலைப்பு

போலி ஆவணம் கொடுத்தாரா?கோஷ்டி மோதலில் சிக்கினாரா?பத்திரிக்கை அதிபர் கைது பின்னணி என்ன?

வாசகன் செய்தியைப் படிப்பதற்கு முன்பு,செய்தி தலைப்பிலேயே தங்களின் எண்ணத்திற்கு ஏற்ப வாசகனின் மனநிலையைத் தீர்மானித்து விடுகிறார்கள்.இரண்டு செய்திக்கும் சூட்டப்பட்ட தலைப்பே அதனைப் பறைசாட்டும்.

ஸ்டாலின் வளைக்கப்பட்டதாகச் சொல்லும் தலைப்பு,இங்கு கோஷ்டி மோதலில் சிக்கினாரா?கைது பின்னணி என்ன?என்று பரிதாப எண்ணத்தை உருவாக்கும் படி வந்துள்ளது.

2) மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு மீதான செய்தியில் மு.க.ஸ்டாலினை வீட்டினை ஆக்கிரமித்தவராகவும்,புகார் அளித்த சேஷாத்திரியை பாதிக்கப்பட்டவராகவும் ஜூனியர் விகடன் மிகச் சரியாகவே அணுகி இருந்தது.

ஆனால் திரிசக்தி சுந்தர்ராமன் மீதான மோசடிக் குற்றச்சாட்டினை ஜூனியர் விகடன் அணுகிய விதம் மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரிசக்தி சுந்தர்ராமனை பாதிக்கப்பட்டவர் போலவும்,பணத்தை இழந்து பாதிக்கப்ப்ட்டு புகார் அளித்த தனியார் வங்கி நிர்வாகத்தைக் குற்றவாளிகள் போலவும்,வங்கி இயக்குனர்களின் கோஷ்டி மோதலினாலும்,அவர்களுக்கிடையே உரிய பேரம் படியாததாலும் ஒன்றுமறியாத அப்பாவி திரிசக்தி சுந்தர்ராமன் பாதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் எண்ணும் வண்ணம் சொல்லப் பட்டுள்ளது.

எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது?

3)மு.க.ஸ்டாலின் பிரச்சனை வெளிவந்துள்ள ஜூ.வி.இதழில் பாதிக்கப்பட்டவரான சேஷாத்ரி காவல்துறைக்கு அளித்த புகார் மனுவின் முழு சாராம்சமும் அளிக்கப் பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் மீதான புகார் கொடுக்கப் பட்டது நவம்பர் 28 திங்கள் கிழமை மதியம் 12 மணி.(ஜு.வி.இதழில் தவறுதலாக நவம்பர் 29 என்று கூறப்பட்டுள்ளது)ஜூ.வி இதழ் நவம்பர் 28 திங்கள் இரவு 10 மணிக்குத் தோராயமாக லேஅவுட் முடிக்கப்பட்டிருக்கலாம்.

புகார் கொடுத்த 10 மணி நேரத்தில் மு.க.ஸ்டாலின மீதான புகாரைத் துப்பறிந்தோ,காவல்துறையிடம் கேட்டு வாங்கியோ ஜூ.வி.வெளியிட்டது.

ஆனால் மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளான திரிசக்தி சுந்தராமன் குறித்த செய்தியில் புகார் மனுவின் நகலோ,சாராம்சமோ வெளியிடப்படவில்லை.மேம்போக்காக 10 வரியில் போலீஸ் தரப்பு செய்தி என சொல்லப்பட்டுள்ளது.

டிசம்பர் 7 புதன்கிழமை அதிகாலை திரிசக்தி சுந்தர்ராமனை காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றனர்.அன்று காலை 10 மணிக்கு கைது செய்கின்றனர்.சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கின்றனர்.

ஜூ.வி.இதழ் தோராயமாக டிசம்பர் 8 வியாழன் இரவு 10 மணிக்கு லேஅவுட் முடிக்கப்பட்டிருக்கலாம்.ஆக கைது செய்யப்பட்டதில் இருந்து 36 மணி நேரம் இடையில் இருக்கிறது.ஆகவே புகார் மனு கிடைக்காமல் இருக்காது.வேண்டும் என்றே வெளியிடாமல் ஜூ.வி.இருந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் விஷயத்தில் 10 மணி நேரத்தில் புகார் மனுவைப் பெற்ற ”புலனாய்வுப் புலி”களால் திரிசக்தி சுந்தர்ராமன் விஷயத்தில் 36 மணி நேரத்தில் புகார் மனுவினைக் காவல்துறையிடம் இருந்து பெற முடிய வில்லையா?

புலனாய்வுப் புலிகளை முடக்கிய சக்தி எது?சம்பளம் கொடுக்கும் மவராசனா?

4)மு.க.ஸ்டாலின் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட சேஷாத்ரி 2010 இல் காவல்துறையிடம் அளித்த புகார்,இப்பொழுது 2011 இல் காவல் ஆணையாளரிடம் அளித்த புகார்,தேவியுடன் ஒப்பந்தம்,உதயநிதியுடன் ஒப்பந்தம் என அனைத்தையும் வரிந்து கட்டி,கட்டம் கட்டி வெளியிட்டுள்ளது.

ஆனால் திரிசக்தி சுந்தர்ராமன் அளித்த ஆவணங்கள் மோசடியானவை என மத்தியக் குற்றப்பிரிவு இணை ஆணையர் ராதிகா அளித்த பேட்டியைப் போகிற போக்கில் வெளியிட்டுக் கடந்து போகும் ஜூ.வி.திரிசகதி சுந்தர்ராமன் தயாரித்த மோசடி ஆவணங்களைக் கட்டம் கட்டியோ பொட்டு வைத்தோ வெளியிடவில்லை.

5)ஜூ.வி.யில் பொதுவாக பாதிக்கப்பட்டவர் தரப்புச் செய்தி தான் அதிக அளவில் வெளியிடப்படும்.ஜூ.வி.நிருபரே பாதிக்கப் பட்டவர் பக்கம் இருந்து தான் செய்தியை அணுகுவார்,எழுதுவார்.

எதிர்த்தரப்புச் செய்தி,அவர்களது கருத்து,அவர்களது வழக்குரைஞர் கருத்து என அனைத்தும் சேர்ந்து ஒரு பத்தியோ அல்லது இரண்டு பத்தியோ வெளியிடப்படும்.இது தான் வழக்கமான ஜூ.வி.இதழ் நடைமுறை.

எடுத்துக்காட்டாக மு.க.ஸ்டாலின் பிரச்சனையில் 2 பக்கத்துக்கு புகார் கொடுத்தவரின் தரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.இது குறித்து மு.க.ஸ்டாலின் தரப்பு செய்தி கிடைக்க வில்லை,அவர்கள் விளக்கம் அளித்தால் வெளியிடத் தயாராய் இருப்பதாக கூறியுள்ளது.இதுதான் சரியான அணுகுமுறை.இந்த விஷயத்தில் ஜூனியர் விகடன் மிகச் சரியாகவே இதனைச் செய்துள்ளது.

ஆனால் மோசடிப் பேர்வழி திரிசக்தி சுந்தர்ராமன் குறித்த செய்தியில் மூன்றில் இரண்டு பங்குச் செய்தி சுந்தர்ராமன் தரப்பாகவே இருக்கிறது.பாதிக்கப்பட்ட செய்தி ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே இருக்கிறது.

மேலும் திரிசக்தி சுந்தர்ராமன் நடத்தும் தமிழக அரசியல் பத்திரிக்கையின் பெயரே குறிப்பிடப்படவில்லை.அவர் நிலக்கரி வணிகம் செய்பவர்,மிகப்பெரும் தொழில் அதிபர் என்று ஜு.வி.,அவருக்கு பில்ட் அப் கொடுக்கிறது.

இதைப்படிப்பவர்கள் திரிசக்தி சுந்தர்ராமன் சுமார் நூற்றுக்கணக்கான கோடிக்குச் சொந்தக்காரர் எனவும் இவர் ஏமாற்றியிருக்க மாட்டார் எனவும் நினைக்கும் வண்ணம் வக்காலத்து வாங்கப்பட்டுள்ளது.

இவர் மோசடியான ஆவணங்களைக் கொடுத்து கடன் வாங்கியிருந்தாலும் வாங்கிய கடனுக்குத் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தியிருந்தால், விஷயம் வெளியே தெரிந்திருக்காது.ஒரு தவணை கூடச் செலுத்தவில்லை என்பது தான் முக்கியப் பிரச்சனை.அதனால் தான் விஷயம் வீதிக்கு வந்துள்ளது.கைது நடைபெற்றுள்ளது.

வங்கியில் எப்பொழுது கடன் வாங்கினார்,எத்தனை தவணை செலுத்தவில்லை,எவ்வளவு வட்டி என்று வெளியிடப்பட வில்லை.

போலி ஆவணங்கள் கொடுத்து ஆட்டையைப் போட்ட பல கோடிகளை திரிசக்தி சுந்தர்ராமன் எங்கு பதுக்கியுள்ளார் என புலனாய்வு செய்து செய்தி வெளியிடத் துப்புக் கெட்ட ஜூ.வி.,சமபந்தமே இல்லாமல் தமிழ்நாடு மெர்க்கண்டல் வங்கியின் இயக்குனர்களுக்கு இடையே நிலவுவதாகச் சொல்லப்படும் தகராறைப் புலானாய்வு செய்து விலாவாரியாக வெளியிட்டுள்ளது.

6)மு.க.ஸ்டாலின் பிரச்சனையில் 11.12.2011 தேதியிட்ட இதழில் அப்பா அருகில் புது மாப்பிள்ளை இன்று மகன் மீது புகார் மழை மேலும் ஒரு கவர் ஸ்டோரியும்,பாதிக்கப்பட்டவரின் முழுமையான பேட்டி,அவரது அந்தக்கால நினைவுகள் என விரிவாக வெளியிட்டுள்ளது.

large_wrapper+2.jpg

வ்வாறு ஜூனியர் விகடனின் ஒரு சார்பான பார்வையை பக்கம் பக்க்மாக எழுதிக் கொண்டே செல்லலாம் தான்.உங்களதும் எமதும் பொன்னான நேரம் தான் விரயமாகும்.இனி கட்டுரையின் முதல் பகுதியின் இறுதிக்கு வருவோம்.

ஆட்டோ டிரைவருக்கும் பயணிக்கும் தகராறு என்றால் ஆட்டோ டிரைவர் மீது தவறு என்றாலும் முன்பின் அறிமுகம் இல்லாவிட்டாலும்,யாரென்றே தெரியாவிட்டாலும் சக ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாய் இன்னொரு ஆட்டோ டிரைவர் சண்டைக்கு வருவதைப்போல,

வழக்கறிஞருக்கும் காவலருக்கும் சண்டை என்றால் வழக்குரைஞர் மீது தவறு என்றாலும் தனது சக வழக்கறிஞரை விட்டுக் கொடுக்காமல் வீதிக்கு வந்து காவல்துறையுடன் சண்டை போடும் இன்னொரு வழக்குரைஞர் போல,

சக பத்திரிக்கை அதிபர் மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டாலும்,ஒரே துறையில் இருக்கும் சக முதலாளி என்ற அடிப்படையில் திரிசக்தி சுந்தர்ராமனுக்கு ஆதரவாய் விகடன் முதலாளி பா.சீனிவாசன் செய்தியை வெளியிட்டுள்ளார்.ஒரே தொழிலில் இருப்பவர்களுக்கு இடையே இப்படி நட்புறவு இருப்பது சகஜம்,வர்க்க பாசத்தில் இப்படிச் செய்து விட்டார்.திரிசக்தி சுந்தர்ராமன் அய்யர் என்பதால் இவ்வாறு நடக்கவில்லை,பா.சீனிவாசன் எப்பொழுதும்,யாராக இருந்தாலும் மோசடிக்குத் துணை போக மாட்டார் என யாராவது ஜூ.வி.நிர்வாகம் சார்பாக வாதிடலாம்.வாலண்டியராக வக்காலத்து வாங்கலாம்.

அவர்களின் சார்பிலான வாத்தை ஏற்றுக் கொள்ளலாமா?

அடுத்த பகுதியைப் படித்த பின்பு உங்கள் தீர்ப்பினைச் சொல்லுங்கள்.

குமுதம் குழுமம் ஏறத்தாழ விகடன் குழுமம் அளவுக்கு வரலாறு உடையது.மறைந்த எஸ்.ஏ.பி.யால் உருவாக்கப்பட்டது,அவரால் வளர்த்தெடுக்கப் பட்டது, எஸ்.ஏ.பி.,க்குச் சொந்தமானது என்பது ஊருக்கும் உலகுக்கும் தெரியும்.அவருக்குப் பின் குமுதம் பத்திரிக்கை குழுமம் முழுவதும் எஸ்.ஏ.பி.யின் சட்டபூர்வ ஒரே ஆண் வாரிசான டாக்டர் ஜவஹர் பழனியப்பனுக்குத் தான் சொந்தம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

உலக்கே தெரிந்த இந்த உண்மை சக போட்டியாளரான பா.சீனிவாசனுக்குத் தெரியாதா என்ன?கண்டிப்பாகத் தெரியும்.ஏனென்றால் பா.சீனிவாசனின் தந்தையார் பாலசுப்ரமணியத்திடம் இருந்து விகடன் குழுமம் முழுவதையும் வாரிசு என்பதனால் பா.சீனிவாசன் இப்பொழுது நிர்வகித்தும் அனுபவித்தும் வருகிறார்.ஆகவே கண்டிப்பாகத் தெரியும்.

இனி மேட்டருக்கு வருவோம்.

அந்த குமுதம் நிறுவனத்தில் சமீபகாலத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை.அதன் இயக்குனர்களில் ஒருவரான பா.வரதராஜன் பல கோடி மோசடி செய்து விட்டார் என்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு குமுதம் குழுமத்தின் அப்பொழுதைய நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் புகார் அளிக்கிறார்.

அவரது புகாரின் பேரில் சென்னை மாநகரக் காவல்துறை பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வரதராஜனைக் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்கிறது.குற்ற எண்.196/2010

van.JPG

கைது செய்யப்பட்டு காவல்துறை வேனில் அழைத்துச் செல்லப்படும் பா.வரதராஜன்

kd+both.jpg

காவல்துறை ஆய்வாளர் அலுவலகத்தில்

dinakaran.JPG

ஆனால் பா.வரதராஜன் மோசடி குறித்தும்,அவரது கைது குறித்தும் ஜீ.வி.,இதழில் அப்பொழுது ஒரு வரி கூட செய்தி வெளிவர வில்லை.சரி ஜூ.வி.க்கு இதனை விட மிக முக்கியமான பிரச்சனை அப்பொழுது இருந்திருக்கலாம் அல்லது பத்திரிக்கை நிர்வாகத்தை யார் நிர்வகிப்பது என்பது குறித்து இரண்டு பத்திரிக்கை அதிபர்கள் இடையே தொழில் சண்டை,சக பத்திரிக்கை அதிபரான நாம் இதில் தலையிடுவதோ,செய்தி வெளியிடுவதோ தார்மீக ரீதியில் தவறு என்ற சீனிவாசனின் நல்லெண்ணம் என்றோ நீங்கள் நினைத்து விட முடியாது. ஏனென்றால் கீழ்க்கண்ட புகைப்படத்தைப் பாருங்கள்.

seeni+1.JPG

மாமனை மச்சான் அழைத்து வருவது போல

seeni+2.JPG

“வெற்றி வீரரை” அழைத்து வருவது போல

இந்தப் புகைப்படம் குமுதம் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜவகர் பழனியப்பனின் புகாருக்குப் பின்பு காவல் துறையால் பா.வரதராஜன் கைது செய்யப்பட்டு அதன் பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பொழுது அவரை விகடன் அதிபர் பா.சீனிவாசன் தோள் மேல் கை போட்டு அரவணைத்தபடி அழைத்து வரும் புகைப்படம்.

உலகில் எங்கு மோசடி நடந்தாலும் தவறு செய்பவனை,மோசடி செய்பவனை ஜுனியர் விகடன் முதலாளி பா.சீனிவாசன் தனது பத்திரிகையில் வீறு கொண்டு விமர்சிக்கிறார்.

சக பத்திரிக்கை அதிபரும் தனது ஜாதிக்காரர் மீதும் மோசடிக் குற்றச்சாட்டு எழுந்து கைது செய்யப்பட்டால் விகடன் முதலாளி பா.சீனிவாசன் பாதிக்கப்பட்ட தனியார் வங்கி பக்கம் நிற்காமல் ஜாதிக்காரர் என்பதற்காகவும் பத்திரிக்கை அதிபர் என்பதற்காகவும் மோசடிப் பேர்வழி பக்கம் நிற்கிறார்.

அதே நேரம் இன்னொரு பத்திரிக்கை அதிபர் தனது நிறுவனத்தில் மோசடி நடந்துள்ளது என்று புகார் செய்ததினால் காவல்துறை மோசடிப் பேர்வழியைக் கைது செய்தால்,பாதிக்கப்பட்ட பத்திரிக்கை அதிபர் பக்கம் நிற்காமல்,அவர் சார்பாகக் குரல் கொடுக்காமல்,(குறைந்தபட்சம் இருபக்கமும் சேராமல் ஒதுங்கிக் கூட இருக்காமல்)பல கோடி செய்த மோசடிப் பேர்வழி பக்கம் நிற்கிறார்.ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவரை மாமன் மச்சான் உறவு போலக் கருதி,அவரை வெற்றி வீரராக்கி காவல்துறை ஆணையாளர்அலுவகத்தில் இருந்து தோளில் கை போட்டு அழைத்துச் செல்கிறார்.

இப்பொழுது உங்கள் தீர்ப்பினைச் சொல்லுங்கள்.

ஜூனியர் விகடன்-தமிழ் மக்களின் நாடித்துடிப்பா?முதலாளியின் நாடித்துடிப்பா?

இனி இறுதியாக இந்த வார ஆனந்த விகடன் தலையங்கம்.

editorial.jpg

”திகார் சிறைவாசத்தில் இருந்து கனிமொழி வந்திருப்பது ஜாமீனில்தான் என்றபோதும்...ஏதோ இறுதித் தீர்ப்பே வந்து அவரை நிரபராதி என்று அறிவித்து விட்டதைப்போன்ற தோற்றத்தை உருவாக்கும் வண்ணம் வரவேற்பு திமிலோகப்பட்டு இருக்கிறது.”

”விமான நிலையம் தொடங்கி,வீடு வரை நீண்ட கூட்டமும் ...படபடத்த கொடிகலும் தோரணங்களும்....முழங்கிய செண்டை மேளங்களும்...இனி நீ பூங்கொடி அல்ல..போர்க்கொடி”என்பது போன்ற வீராவேஷக் கோஷங்களும் ...அடடா!தேச விடுதலைக்குப் பாடுபட்சு சிறை சென்று மீண்ட எந்தவொரு தியாகச் செம்மலுக்கும் கூட இதுவரை அளிக்கப்படாத ஆரவாரம் !.”

மேற்கண்ட புரட்சிகரத் தலையங்கம்.14-12-2011 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் எழுதப்பட்டுள்ளது.

ஜூனியர் விகடன் முதலாளி பா.சீனிவாசன் மோசடிக் குற்றச்சாட்டினால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பா.வரதராஜனைக் காவல் நிலையத்தில் இருந்து தோளில் கை போட்டு வெற்றிவீரரைப் போல அழைத்துச் செல்வதைப் பார்த்தவன் ஆனந்த விகடன் தலையங்கத்தைப் படித்தால் ...... சிரிக்க மாட்டான்.

தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொண்டு ஜெயலலிதா,கருணாநிதி என்று அனைவரையும்,விமர்சிக்கும் இவர்கள் முதலில் அதற்கு உண்மையாய் இருப்பார்களா?

தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொண்டு ஜெயலலிதா,கருணாநிதி என்று அனைவரையும்,விமர்சிக்கும் இவர்கள் முதலில் அதற்கு உண்மையாய் இருப்பார்களா?அதற்கான தகுதி இவர்களுக்கு இருக்கிறதா?

பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது.

"மாயக்காரனே உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு,பின் உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப் போட வழி சொல்".

kakakakkural.com

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.