Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சாரத்தை புரட்சிகரமாக மாற்றுங்கள்! -இலக்கியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ,எதோ ஒரு வகையில் ஒடுக்கு முறைக்குட்பட்டதன் விளைவாகவே இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ,அல்லது போராடும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை வெளிக் காட்டாது, இன -மொழி ரீதியாக மாத்திரமே அடையாளப் படுத்துபவர்களாகவுள்ளனர். இக் குறுகலான வெளிக்காட்டலுக்கு முழுமையான காரணி, தமிழ்த் தேசிய இன விடுதலைக்காக தோற்றம் பெற்ற விடுதலை இயக்கங்கள் , தமிழ் மக்கள் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெற வேண்டிய மார்க்கத்தை , வெறும் சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான போராட்டமாகவே மாத்திரம் குறுக்கிக் கொண்டது தான் என்றால் அது மிகையாகாது.

மேலே குறிப்பிட்ட விடயத்தை முழுமையாக ஆராய்வதாயின் தமிழர்களின் சமூக, பொருளாதார, பண்பாடு, கலை-கலாச்சார பாரம்பரியம் தொடக்கம் , பல்வேறு காலகட்டங்களில் வடக்கு, கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் நடந்த போராட்டங்களையும், இதையொட்டிய அரசியல் வழி நடத்தல்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை அவசியம் .இதை ஏற்கனவே பலர் செய்திருக்கின்றனர். சம காலத்திலும் இந் நடவடிக்கைகளில் பலர் காத்திரமான முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை முழுமையாக ஆராய்வது எனது நோக்கமல்ல என்பதை ஆரம்பத்திலே தெளிவு படுத்த வேண்டியது எனது கடமையாகும்.

ஒடுக்கு முறைக்குட்பட்ட இனங்கள் எதோ ஒரு கூர்மையான முரண்பாட்டின் பால் போராட முனைப்புப் பெறுகின்றது. போராட்ட நுகத்தடியாக தோற்றம் பெறும் சக்திகள், சித்தாந்த வரையறையாக பல்வேறு பட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலேயே, போராட்டத்தை நெறிப்படுத்துவது மாத்திரமல்லாமல், சமகால பிரதான சமூக முரண்பாட்டை முதன்மைக் காரணியாக கொண்ட போதிலும், அச் சமூகத்தில் உள்ள சமூக, பொருளாதார, கலை, கலாச்சாரம், தொழில் முறை, சுரண்டல், இலக்கியம், சாதியம் போன்ற பல தரப்பட்ட சமூக அம்சங்களிலுள்ள முரண்பாடுகளை வெல்லவும், மூட நம்பிக்கைகளையும் களைந்து ஒரு முற்று முழுதான மக்களுக்கான புதிய சனநாயகத்தையும், அதைப் பாதுகாக்கும் ஒரு புதிய சமூக அமைப்பையும் உருவாக்கி விடுதலை பெறுகின்றனர் அல்லது விடுதலை பெறப்போராடுகின்றனர் .

முள்ளிவாய்க்கால் வரை மரணத்துள் வாழ்வைத் தேடிய நம் மக்கள், இன்னும் அதே கரு மேகங்கள் கலையாத, ராணுவக் கெடுபிடிக்குள் வாழ்வை நகர்த்தும் சூழலில், மேலே குறிப்பிட்ட ஒரு சமூகம் தோன்றுவதற்குரிய அடித்தளம் பற்றிய மதிப்பீட்டை ஆய்வு ரீதியில் இக் கட்டுரையில் எழுத முடியாததின் நோக்கம், கட்டுரையாளர் சூழலிலிருந்து புறவயமாக அன்னியப்பட்டிருப்பதேயாகும். இருந்த போதிலும் போராடிய ஒரு இனம், இன்னும் அதே மன- உ-தாக்கங்களோடு வாழும் தமிழினத்தின், ஒரு பகுதியினர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில், தாய் நாட்டின் கடந்த காலப் போரும், இன்றைய அவலமும், பல்வேறுபட்ட ஒடுக்கு முறைக்குட்பட்டத்தின் விளைவும் எத்தகைய பாதிப்பை புலம் பெயர் நாடுகளில் இவர்களிடம் ஏற்படுத்தியுள்ளது என நோக்குமிடத்து , பௌவுத்த சிங்கள மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்கள் என்னும் முற்போக்கு அம்சத்தைத் தவிர ,அனைத்து வழிகளிலும் மிகவும் பிற்போக்கு இனமாகவே உள்ளனர் என்றால் மிகையாகாது.

நில்ப் பிரபித்துவ சமூக அமைப்பில் சுரண்டலை நோக்கமாகக் கொண்டு பார்ப்பணீயத்தால் திணிக்கப்பட்ட சாதியம் , தொழில் வளர்ச்சி பெற்ற , புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் இன்றும் வாழ்கின்றது என்பதிலும் பார்க்க செழிப்பாக வளர்கின்றது என்று கூறின் அது விந்தையான உண்மை தான். தமிழர் திருமணங்கள், பிறந்த நாள் விழாக்கள், பூப்பூ நீராட்டு விழாக்கள், இலங்கையில் வசதியின்மை காரணமாக தாலி கட்டாமல் திருமணம் செய்தவர்கள் தங்கள் குழந்தைகள் புடைசூழ தாலி கட்டிக் கொள்ளும் வைபவங்கள், மிகவும் லாபகரமான தொழிலாக இன்று நடைபெறுவது கண் கொள்ளா காட்சியகவுள்ளது. திருமண வைபவத்தின் தார்ப்பரியம் லாப நோக்கம் என்ற அளவுக்கு கொச்சைப் படுத்தப்பட்டுள்ளது. ஒரு வயது வந்த ஆணும், பெண்ணும் கருத்தியல் ரீதியாக ஒருமைப்பட்டு ஒருத்தரை, ஒருத்தர் புரிந்துகொண்டு வாழ உடன்பாடு ஏற்படின் இருவரும் இணைந்து வாழ்வதில் தவறு ஏதும் இருக்க வாய்ப்பில்லை.

அதற்கும் மேலாக விழாக்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள், உறவினர்கள் , நண்பர்களோடு அவ் விழாவை கொண்டாடி மகிழ்வது ஒன்றும் இயல்புக்கு மாறானவையல்லவே. ஆனால் இன்றைய புலம் பெயர் திருமணங்கள் அப்படியல்லாமல் புதியதோர் மதிப்பீட்டையும், நோக்கத்தையும் அடிப்படையாக கொண்டுள்ளது. ஐரோப்பாவில் மணமகன் இருந்தால் அவரது பெற்றோரோ, உறவினரோ, இவருக்காக ஒரு பெண் பார்த்து வீடு, நகை, ரொக்கம், போன்றவைகளை சீதனமாக பெற்று ஆடு, மாடு, குதிரை, போன்ற மிருகங்களை வாங்கும் போது நிறம், இனம், நோயற்றதன்மை, போன்றவைகள் ஆராயப்படுவது போல் மணமகள் நிழற்படத்தின் மூலம் தெரிவு செய்தபின்னர் ஏஜன்சி மூலம் அனுப்பி வைக்கப்படுவதும், இவ்விடம் வந்தப் பின்னர் தனது கணவர் தனது உணர்வுகளை புரிந்து கொள்ளாதவராகவும் குறைந்த பட்சம் எவ்வித ஒருமைப்பாடும் இல்லாதவர்களாகவும், சமூகத்தின் பார்வைக்கும் வசைவுக்கும் இடமளியாமல் போலியான ஜட வாழ்க்கை நடத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமானது. இதை முழுமையாக ஆராயாது இக்கட்டுரையை எழுதுவது முழுமையானதல்ல என்பதை நான் உணர்கின்றபோதிலும், எனது நோக்கம் ஐரோப்பிய விழாக்களின் வக்கிரத்தை வெளிக்கொண்டு வருவதே என்பதால் திட்டமிட்டே இதை தவிர்க்க வேண்டிய அவசியம் எனக்கு.

ஐரோப்பாவில் ஒரு திருமணத்தை நடத்துவதில் ஒரு பெரிய மூலதனமே உருவாக்கப்படுகின்றது. திருமண வைபவத்திற்கு முன்னர் மிகவும் வெளிப்படையாகவே வரவு , செலவு திட்டமிடப்படுகின்றது. செலவு செய்யும் பணத்திலும் பார்க்க எட்டு தொடக்கம் பத்து மடங்கு வருமானம் எதிர்பார்க்கப்படுகின்றது. பணம், நகை காசோலைகள், பரிசளிப்பவர்களது விபரம், பரிசின் தொகை அல்லது பெறுமதி போன்றவைகள் குறிப்பு புத்தகத்தில் குறித்து வைக்கப்படுகின்றன. ஏற்கனவே தன்னால் வழங்கப்பட்ட தொகையிலும் பார்க்க குறைவாக அல்லது சமமாக கொண்டு வருபவர்களது பெயர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளபடுகின்றது. சில வேளைகளில் பரிசுத் தொகை கொண்டுவராதவரிடோமோ அல்லது சமூகமளிக்காதவரிடமோ நேரடியாக சுட்டிக்காட்டப்படுகின்றது. அண்மையில் நடந்த ஒரு உதாரணம் சொல்ல முடியும். எனக்கு தெரிந்த ஒருவர் இங்கு நடக்கும் தமிழர்களின் விழாக்களுக்கு அழைப்பிதழ் கிடைத்தால் தவறாமல் சென்று ஒரு குறிப்பிட்ட தொகை பணம் அன்பளிப்பார். அவர் தனது வீட்டிலும் இதுபோன்ற ஒரு விழா நடைபெற இருப்பதை மனதில் வைத்து திட்டமிட்டு ஒரு பெரிய மூலதனத்தை உருவாக்கி விடுவதென நினைத்ததால் எந்த ஒரு விழாவையும் தவற விடுவதில்லை. தூரதிஸ்ட்டவசமாக இவர் வீட்டு விழா நடந்த போது ஒரு பெரிய கல்யாண சீசனாக இருந்து விட்டது. (இது இவரது திட்டமிடுகையில் ஏற்பட்ட தவறாக பின்னாளில் கூறியதுண்டு) ஒரே நாளில் பலரது வைபவங்கட்கு ஒரு குறிப்பிட்ட கூட்டமே செல்ல வேண்டி ஏற்பட்டதால், இவரது அழைப்பை அதிகமானவர்கள் நாடவில்லை. அதனால் இவர் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை. இதையொட்டி கோபத்தின் உச்சத்திற்கே சென்ற இவர், தனது விழாவுக்கு வராத ஒருத்தரை தொடர்பு கொண்டு நான் உனது விழாவுக்கு 300 பரிசளித்தேன், நீர் என்னுடைய விழாவுக்கு வந்து கடனை அடைக்கவில்லை ஆதலால், நான் தந்த தொகையை வட்டியோடு தரும்படி கேட்டு பெற்றுக் கொண்டார். இது ஒரு வெறும் உதாரண விபரம். இது போன்ற வக்கிரங்கள் தான் தமிழர்களின் கலாசாரத்தின் விளைவென்றால், இவர்கள் இன்னும் கூர்ப்படையாத, ஒடுக்கு முறைக்கு உட்பட்டு புலம் பெயர்ந்ததற்க்கான, எவ்வித முற்போக்கு அம்சத்தையும் கொண்டிராத சமூகமே.

திருமண விழாக்களை லாபகரமான தொழிலாக நடத்தி முடிக்க எழுதப்படாத சட்டங்களின் அடிப்படையில் ஒரு கூட்டு நிறுவனமாக செயற்படுகின்றனர். திருமணத்திற்குரிய சுப முகூர்த்தங்களை தீர்மானிக்கும் சோதிடர்கள் தங்கள் நுண்ணறிவால் சனி, ஞாயிறு,அல்லது ஒரு பொது விடுமுறை தினத்திலோ ,சுப தினங்களை கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவர்களாகச் செயற்படுகின்றனர். விடுமுறையல்லாத தினங்களில் சுப தினம் தெரிவு செய்யப்பட்டால் , வியாபாரம் அமோகமாக நடந்து லாபமீட்டுமளவுக்கு (collection) விழாக்கான வருவோர், வரமாட்டார்கள் என்பதை இவர்கள் நன்குணர்ந்தவர்கள்.

சடங்கு செய்வதற்கு தேவையான ஐயர் பிராமண வழிவந்தவராயின் அவரது கூலி சற்று அதிகம் . சைவ வழி வந்தவராயின் அவரது கூலி சற்று குறைவானதாகும் . பூமாலை போன்ற ஏனைய பொருட்களையும் ஐயரே கொண்டுவருவார் .அதற்கு மேலதிக கட்டணமுண்டு. கல்யாணமண்டபம் v.d.o வசதி, மணவறை போன்றவைகளையும் அவரே ஒழுங்கு செய்வார். இதற்குரிய கட்டணம் ஒவ்வொரு விதமாகவிருக்கும் . இவைகளை மீறும் பட்சத்தில் மண்டபம் கிடையாது . திருமணம் செய்பவர்கள் லாப நோக்கோடு செய்வதால் இந்த நிபந்தனைகளையிட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளாது ஒத்துப்போகின்றனர் .

பிறந்தநாள் விழாக்களை எடுத்துக் கொண்டால், முதலாவது பிறந்த நாள் தொடக்கம் முதுமை நிலைப்பிறந்த நாள் வரை கொண்டாட்டம் அமக்களம் தான்.

இப் பிறந்தநாள் விழாக்களின் உச்சநிலை வக்கிரம் ஒன்றை விளக்க வேண்டியது எனது கடமையாகின்றது .அண்மையில் சுவீஸ் நாட்டிலுள்ள ஒரு தமிழ் அகதி தனது குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு கேக் வெட்டுவதற்கான கத்தியையும், ஏனைய கரண்டி போன்ற சிலவற்றையும் , தங்கத்தில் செய்து கொள்ள பாரீசில் உள்ள ஓர் நகைக்கடையில் ஓடர் கொடுத்துள்ளார் என்றால் , இவர் ஏன் தங்கத்தால் கேக் செய்யவில்லை என்பதை விளங்கிக் கொள்வது சிரமமல்ல. அறிவியல் சார்ந்த புத்தகங்கள் மற்றும் கலைப்பொருட்கள் ,வாழ்த்து மடல்கள் போன்றவைகளை பரிசாகக் கொடுப்போர் , ஏளனத்துக்குட்படுத்தப்படுவதை என்னவென்று கூறுவது .

இங்கு வாழும் அநேகமான குழந்தைகள் மம்மி ,டாடி போன்ற ஐரோப்பிய மொழிகளிலேயே பெற்றோரை அழைப்பது வழமை. (இதைத்தான் அநேகமான பெற்றோரும் விரும்புகின்றனர் ) அநேகமான குழந்தைகளுக்கு தமிழே தெரியாமலுள்ளது. இதில் மிகச் சிலரே விதிவிலக்கு . இக் குழந்தைகள் ஐரோப்பிய மொழிகளில் மாத்திரம் பேசுவதும் மம்மி, டாடி என அழைப்பதற்கும் குழந்தையின் சூழல் தான் காரணம் என நியாயப்படுத்துகின்றனர் . இது உண்மையாயின் ,ஐரோப்பிய நாடொன்றில் ஒரு ஐரோப்பியப் பெண் பருவமடைவது விழா நடத்தி வியாபாரம் செய்யும் விடயமல்ல , மாறாக உடல் கூறுகளில் ஏற்படும் பருவ மாற்றமாகவே மாத்திரம் கருதி விடுகின்றனர். பருவமடைந்த பெண்ணுக்கு அதை ஒரு விசேட காரணியாகக் கருதி பாடசாலைகளில் விடுப்பு வழங்கப்படுவதில்லை. தமிழ் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் பிள்ளைகள் பருவமடைந்தால் விடுப்புத் தேவை என பாடசாலை அதிபர்களிடம் கேட்டபோது, அதிபர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உட்பட்டதோடு எச்சரிக்கப்பட்ட குடும்பங்களும் உண்டு .

குறிப்பிட்ட விடையத்தை நான் இங்கு குறிப்பிடும் நோக்கம் சூழலால் பாதிக்கப்பட்ட குழந்தை என காரணம் கூறுபவர்கள் ,பருவமடைதல் அதற்கு விழா எடுத்தல் போன்ற விடயங்களில் ஏன் சூழலின் பாதிப்பு ஏற்படவில்லை என்பதே?. இங்கு பெற்றோர், சடங்கு , போன்ற பிற்போக்கான காரணத்தை முன் வைத்தாலும் , லாப நோக்கம் முன்னணி வகிப்பதை காணமுடிகின்றது. அதே வேளை இது ஒரு அவசியமான விழா என்னும் அளவுக்கு குழந்தைகளின் மனதில் பதியப்பட்டதாலும் , பெற்றோரின் லாப நோக்கத்துக்கு உறுதுணையாகின்றது. இக் குழந்தைகளின் ஐரோப்பிய்த் தோழிகள் , பருவமடைவதை விழாவாகக் கொண்டாடுவதை விந்தையாக நோக்குவதையிட்டு இக்குழந்தைகள் வெட்கித்து விடவில்லையே?. அப்படியாயின் சூழலால் பாதிக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

பேரினவாதம், நமது முகங்களை அளித்தபோது அதற்கெதிராக பல வழிகளிலும் போராடினோம் . அவ்வேளை நமது சமூக ,பொருளாதார ,பண்பாட்டு விழுமியங்களை நாம் போராட்டத்துக்குத் தேவையான அடிப்படையில் புரட்சிகரமாக அமைத்துக் கொள்ளவில்லை. நடந்து முடிந்த அவலங்களின் பின்னரும், புரட்ட்சிகரமான மாற்றங்கள் வருவதற்கான அறி குறிகள் மிகவும் சொற்பமாகவே தென்படுகின்றன. போராட்ட வரலாற்றில், தேக்க நிலையும், தற்காப்பு யுத்தங்களும், காட்டிக் கொடுப்புக்களும் மேலும், இன்னோரன்ன தடைளும் பல்வேறு சூழ் நிலைகளிலும் பல்வேறு வடிவத்தில் ஏற்பட்டவைகளே.

இதை மீள்பரிசீலனை செய்து நமது தத்துவங்களையும், கோட்பாடுகளையும் விமர்சனத்துக் குட்படுத்தி நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பதநூடாக புதிய தேடல் எதற்குமே யாரும் தயாராக இருக்கவில்லை. அதனாலே நமது சிங்கள நேச சக்திகளும் பேரினவாதத்தை எதிர்க்காமல் மவுனிக்கும் நிலை ஏற்பட்டது. அனைத்து வழிகளிலும் ஒடுக்கப்பட்ட ஒரு இனம், அல்லது ஒடுக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஒரு இனம், ஏனைய இனங்களில்லும் பார்க்க தனது கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு போன்றவைகளில் வக்கிரமான கேளிக்கைகளை தவிர்த்து மக்கள் தேவையை முதன்மைப் படுத்திய, முற்போக்கான சமூகமாக, திகழ்ந்ததை வரலாறுகளில் நாம் அறிந்திருக்கின்றோம். இந்நிலையில் நமது சமூகம் எந்த ஒரு முற்போக்கான பண்பாட்டையும் வெளிக் காட்டாதது வரலாற்றில் மிகவும் வெறுக்கத்தக்க உண்மை. இதன் பிரதிப்பலிப்பு புலம் பெயர்ந்த தமிழர்களிநூடாக வெளிப்படுகின்றது. மேற்கத்தைய நாடுகளில் இன்று ஏற்பட்டுள்ள ‘நாசிகளின்’ வளர்ச்சியும், வலதுசாரிகளின் இறுக்கமான பிடியும், வேலையில்லா திண்டாட்டமும், புலம்பெயரந்தவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ, நாடு திரும்ப வேண்டிய மாற்றங்கள் ஏற்படலாம். அவ்வேளை இவர்கள் சமூகத்தை பாதிக்கும் பெரிய நோய்க்கிருமிகளாக மாறுவது திண்ணம். இந் நிலையைத் தவிர்த்திட விரைந்து செயற்படும் கூட்டு முயற்சி அவசியம். இது கைகூடுமா?????

இலக்கியா

http://www.ndpfront.com/?p=18388

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு!

நிதரிசனமான உண்மையும் கூட!

நன்றிகள், சுபேஸ்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.