Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலைதீவு 'அமைதி புரட்சி'யில் வென்றது இந்திய 'சாணக்கியமே'

Featured Replies

மாலைதீவு 'அமைதி புரட்சி'யில் வென்றது இந்திய 'சாணக்கியமே'

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலைதீவில் அரங்கேறிய 'அமைதி புரட்சி'யின் காரணமாக

அங்கு 'அதிரடி' ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் இலங்கையை போன்றே நமது

நாட்டின் கடல்வழி பாதுகாப்பிற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மாலைதீவும் முக்கியமான ஒரு நாடு. அதிலும் குறிப்பாக, கிட்டத்தட்ட நாலு லட்சம் மக்கள் தொகையே உள்ள மாலைதீவில் பரந்து விரிந்து கிடக்கும் 1190 தீவுகளில், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர்; மட்டுமே பிரஜாவுரிமை பெறமுடியும்.

மேலாக உள்ள ஒரு லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பாலானோர் வங்காள தேசத்தை சேர்ந்தவர்கள். முன்பு இலங்கையை சேர்ந்த அலுவலர்களும் பெருகிய வண்ணம் இருந்தனர். சுமார் முப்பதாயிரம் பேர் இந்தியர்கள். அவர்களில் பெரும்பாலானோர் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். அவர்கள், அங்குள்ள ஹோட்டல்களிலும் அலுவலகங்களிலும் சிறப்பாக பணியாற்றுபவர்கள். அல்லது, அந்த நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் ஆங்கில ஆசிரியர்களாகவும் அரசு மருத்துவ மனைகளில் டாக்டர்கள். தாதிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களாகவும் பணியாற்றுபவர்கள். ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து செல்வோர் கட்டிட பணிகளில் இருப்பவர்கள். அங்கு வருடம் முழுவதும் வேலை, மாதத்தின் முதலாம் திகதி நிச்சய சம்பளம் என்ற காரணங்களுக்காக தங்களது குடும்பத்தவரை பிரிந்து சென்று வாழ்பவர்கள்.

இவர்களில் மருத்துவ ஊழியர்கள், நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் தவிர பெரும்பாலானோர் தங்களது ஊர்களில் உள்ள மோசடி நிறுவனங்களால் வேலையில் சேர்ந்து, வெளியே சொல்லாமல் வேதனையை அனுபவிப்பவர்கள். அண்மைக் காலங்களில், கட்டிடத் துறையிலும் சிறிய ஹோட்டல்களில் உள்ள கடின வேலைகளிலும் பீஹார், மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். காரணம், மாலைதீவின் அதிகபட்சமான 'பிளஸ்-டூ'-விற்கு சமமாக படித்தவர்கள், அரசு அலுவலகங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் உத்தியோகத்தர்களாக பணியாற்றுவதையே கௌரவமாக கருதுகிறார்கள்.

இவர்களை வைத்து பார்க்கும் போது, இந்தியாவின் வடமாநிலத்தவர்களும் வங்கதேசத்தவரும் கடின உழைப்பிற்கு தயங்காதவர்கள். மேலும், தென்னிந்தியர்களைப் போல் விடுமுறையில் செல்ல விழையாதவர்கள். காரணம், அடிக்கடி விடுமுறையில் வீட்டிற்கு சென்றால் சம்பளம் முழுவதும் அதற்கு தான் சரியாக இருக்கும். அப்புறம், அக்காவிற்கு எங்கே கல்யாணம் செய்து வைப்பது, அப்பாவிற்கு எப்போது வைத்தியம் பார்ப்பது - அல்லது, மோசடி ஏஜன்டிற்கு கொடுப்பதற்காக வாங்கிய 'மீற்றர் வட்டி' கடனை யார் அடைப்பது?

எது எப்படியோ, மாலைதீவில் தற்போது பணிசெய்யும் இந்தியர்கள் எந்த பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்ளாமல், இந்திய அரசியலை மட்டும் இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகளில் பார்த்துக் கொண்டு, அந்த நாட்டு அரசியலிலோ வேறு பிரச்சினைகளிலோ மாட்டிக் கொள்ளாமல் நல்ல பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். என்ன, சில சமயங்களில் அவர்கள் அங்குள்ள ரௌடிகளிடம் மாட்டிக் கொண்டாலோ, இந்திய பெண் ஊழியர்கள்; தங்களது வீடுகளில் அதீதமாக தங்க நகைகள் வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில் கொள்ளையடிக்கப் பட்டாலோ, அவர்களுக்கு என்று அதிகமான பொலிஸ் உதவியை எதிர்பார்க்க முடியாது. என்றாலும், இஸ்லாம் மட்டுமே அரசியல் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த நாட்டில், இந்திய பெண்கள் பூவோடும் பொட்டோடும் அனைத்து தீவுகளிலுமே காணப்படுவது வரவேற்கப்பட வேண்டிய ஓன்று.

அதிரடி ஆட்சி மாற்றம்

இந்த மாதம் ஏழாம் திகதி, ஜனாதிபதி முஹமத் நஷீத் தீடீரென்று பதவி விலகினார். அன்று மாலையே, துணை ஜனாதிபதி முஹமத் வாஹீத் ஹாசன் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். ஜனநாயக முறைப்படி முதல் முறையாக கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நஷீத்தின் ஐந்தாண்டு கால பதவி 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைகிறது. அமெரிக்க ஜனாதிபதி முறையை பின்பற்றும் மாலைதீவில், புதிய ஜனாதிபதி வாஹீத் அடுத்த வருடம் நவம்பர் மாதம் மட்டுமே பதவியை தொடர முடியும்.

ஆனால், பதவி விலகிய மறுநாளே, தன்னை இராணுவம் கட்டாயப்படுத்தியதால் மட்டுமே தான் பதவி விலகியதாகவும் அதனால் புதிய ஜனாதிபதி வாஹீத் உடனடி ராஜினாமா செய்து, அதிபர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் நஷீத் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களில் நாடு முழுவதும் பலருக்கு காயம் ஏற்பட்டது. பொலிஸ் நிலையங்களும் நீதிமன்றங்களும் தனியார் வாகனங்களும் தீக்கிரையாயின. என்றாலும், அன்று மாலையே நிலைமை கட்டுக்குள் வந்தது. ஆனால் ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிக்கப்போவதாக நஷீத் அறிவித்தது புதிய அதிபருக்கு தலைவலியாக அமைந்தது.

இதற்கு காரணம் என்ன? அதிபர் நஷீத் - தான் பதவி விலகிய தினத்தன்று காலை அந்த கோரிக்கையை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தலைநகர் மாலேயில் போராட்டம் நடத்தினர். அதில் சில பொலிஸாரும் கலந்து கொண்டனர். இராணுவ வீரர்களும் அந்த போராட்டத்தில் பங்கு பெற்றதாக நஷீத் தலைமையிலான மாலைதீவு ஜனநாயக கட்சி பின்னர் கூறியது. அந்த போராட்டத்தை ஒடுக்குமாறு இராணுவத் தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி நஷீத் கோரியதாகவும் அதற்கு இராணுவத் தலைமை செவிசாய்க்கவில்லை என்றும் தெரிகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, தற்போது இரண்டாக பிரிவுபடுத்தப்பட்டுள்ள இராணுவமும் பொலிஸும் கடந்த 2004ஆம் ஆண்டு வரை ஒன்றாகவே செயல்பட்டு வந்தன. எனவே, தற்போது பொலிஸில் உள்ள பழைய வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால் உண்மையிலேயே இராணுவப் புரட்சி ஏற்பட்டுவிடுமோ என்று தலைமை தயங்கியது. இதுபோன்றே கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் பொலிஸ் கையாள வேண்டிய சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி நஷீத் - இராணுவத்தினரை பணித்ததற்கு இரு தரப்பினுள்ளும் எதிர்ப்பு இருந்தது. இதில் குறிப்பாக 2010ஆம் ஆண்டு, நாட்டின் உச்ச நீதிமன்றத்தை மூடி வைக்குமாறு ஜனாதிபதி நஷீத் இராணுவத்திற்கு உத்தரவிட்டதும், கடந்த ஜனவரி மாதம் ஒரு நீதிபதியை இராணுவத்தினரை வைத்து கைது செய்ததும் அடங்கும்.

எதிர்ப்பு அலை ஏன்?

கடந்த 2008ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நஷீத், தனக்கு முன்னர் முப்பது ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்திருந்த ஜனாதிபதி அப்துல் கயூமை ஒரு எதேச்சாதிகாரியாகவே சர்வதேச சமூகத்திற்கு சித்திரித்திருந்தார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. என்றாலும் கடந்த பத்து ஆண்டுகளாகவே ஒஸாமா பின்லேடனையும் சர்வதேச அரங்கில் சீனாவின் அதீத வளர்ச்சியையும் கண்டு பயந்து வந்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் அந்த பிரசாரமாயையில் மயங்கினர். எங்கே மாலைதீவில் சீனாவோ, அல்லது இஸ்லாமிய தீவிரவாதமோ தலைதூக்கிவிடுமோ என்ற பயத்தை அவர்களில் சிலரே நஷீத் தலைமை மூலம் பரப்பி வந்தனர்.

இதில் முக்கிய பங்கு வகித்தது மாலைதீவை முன்னர் ஆட்சி செய்து வந்த இங்கிலாந்து. கயூமிற்கு எதிராக நஷீதின் கட்சியை வெளிப்படையாகவே ஆதரித்ததில் தொடங்கி, அவர்களுக்கு அரசியல் வகுப்பு நடத்தியதும் தாராளமாக பண உதவி செய்து வந்ததும் இங்கிலாந்து நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சி தான். அவரது 2008ஆம் ஆண்டு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்ததும் ஓர் இங்கிலாந்து நாட்டவர் தான். நஷீத் பதவியில் அமர்ந்த பின்னரும் கூட, உலக அளவில் அவருக்கு புகழ் தேடித் தந்த சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்து இன்றும் அவரது ஆலோசகராக இருந்து வருபவர் கூட ஓர் இங்கிலாந்து நாட்டவர் தான்.

இங்கே தான் பிரச்சினையின் தொடக்கமே. உலக அளவில் தனது புகழை பரப்புவதிலும், ஜனநாயகம், இஸ்லாமிய தீவிரவாதம் ஆகிய இரட்டை குழல் துப்பாக்கியால் சர்வதேச சமூகத்தை தனது வசம் ஆக்கிக்கொள்வதிலும் மட்டுமே ஜனாதிபதி நஷீத் ஆர்வமாக இருந்தார். உள்நாட்டு பிரச்சினைகளான விலைவாசி உயர்வு, வேலைவாய்பு ஆகிய விடயங்களில், தான் உயர்கல்வி கற்ற இங்கிலாந்து போன்ற நாடுகளின் அறிவுரைப்படி, சர்வதேச நிதி நாணயத்தின் கட்டுப்பாடுகளுக்கு மட்டுமே செவிசாய்த்தார். அதனால் அரசு வேலை வாய்ப்புகள் குறைந்தன. அந்நிய செலவாணி சந்தையில், உள்நாட்டு நாணயமான ரூஃபியா-வின் மதிப்பும் குறைக்கப்பட்டது. உப்பில் இருந்து கற்பூரம் வரை இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ள நாட்டில், இது மக்கள் மீது மேலும் ஒரு சுமையானது.

போதாததற்கு, தன்னை பெரிய ஜனநாயகவாதியாக உலகளவில் சித்திரித்துக் கொண்ட ஜனாதிபதி நஷீத், உள்நாட்டில் ஜனநாயக மரபுகளை குழிதோண்டி புதைப்பதாக அவரது தீவிர ஆதரவாளர்களே எண்ணத் தொடங்கினர். இதுபோன்றே சர்வதேச சமூகத்தின் முன் தன்னை இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக காட்டிக் கொண்டவர் உள்நாட்டில் இருக்கும் ஒரே மதவாத கட்சியான 'அதாலத் கட்சியோடு' அண்மைகாலம் வரை கூட்டணியாகவே இருந்தார். அது கூட அந்த கட்சி தான் அவரை விட்டு பிரிந்தது. இஸ்லாமிய முறைகளுக்கு எதிராகவும் நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தை மாற்றியும் மக்கள் வசிக்கும் தீவுகளில் அரசு மதுபான விற்பனைக்கு அனுமதி கொடுப்பதற்கு முடிவு எடுத்தது உட்பட்ட காரணங்களுக்காகவே அதாலத் கட்சி - அரசை புறக்கணிக்க முடிவு செய்தது.

அதே சமயம், பிற இஸ்லாமிய நாடுகளில் இருந்து விலகி, அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இஸ்ரேலோடு உறவு வைத்துக்கொள்ள முடிவு செய்ததையும் நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னதாக, ஒஸாமா பின்லேடனை தேடுகிறோம் என்ற சாக்கில் அமெரிக்கா கைது செய்து கியூபா நாட்டில் குவதநாமோ பே என்ற இடத்தில் சிறை வைத்திருந்த தீவிரவாதிகளில் ஒருவரை தனது நாட்டில் ஏற்றுக்கொள்ள ஜனாதிபதி நஷீத் முடிவு செய்ததையும் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு நடந்தால் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்து மாலைதீவில் வரவேற்பு கொடுப்பதற்கு சமமாகும் என்றே அவர்கள் கூறினர்.

ஆனால், அவர்களையே அடிப்படைவாதிகளின் ஆதரவாளர்களான நஷீத் சித்திரித்ததையும் மக்கள் ரசிக்கவில்லை. அதாவது, அடிப்படைவாதத்தை எதிர்க்கும் மாலைதீவின் ஒரே தலைவராக தன்னை சர்வதேச சமூகத்தின் முன் சித்திரித்துக் கொள்வதற்காக நாட்டில் அடிப்படைவாதம் தலைதூக்குவதற்கு அவரே காரணமாகி விடுவாரோ என்ற கவலை அந்த நாட்டுத் அறிவுஜீவிகள் பலருக்கும் தோன்றியது. அதேசமயம் தங்களது தனிப்பட்ட அரசியல் நிரலின் காரணமாக தனியாவர்த்தனம் பாடிவந்த எதிர்க்கட்சி தலைவர்கள், மதத்தை காப்பாற்ற என்று சில அடிப்படைவாத சக்திகள் கடந்த டிசெம்பர் 23ஆம் திகதி தலைநகரில் நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் தங்களது நஷீத் எதிர்ப்பு கொள்கைகளுக்கு ஒரு முழுவடிவம் கொடுத்தார்கள்என்பதே உண்மை.

அதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகத் தான், ஜனாதிபதி நஷீத் தனது வழக்கமான பாணியில், நாட்டின் குற்றவியல் தலைமை நீதிபதி அப்துல்லா முஹமதை கைது செய்யுமாறு இராணுவத்திற்கு உத்தரவிட்டார். நீதிபதி முஹமது மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நஷீத் - ஜனாதிபதி ஆவதற்கு முன்னரே உள்ளன. என்றாலும் அவரது உத்தரவை மக்கள் ரசிக்கவில்லை என்றான பிறகு இராணுவமும் இதுபோன்ற தவறான போக்கை இனிமேல் ஆதரிக்கப்போவதில்லை என்று முடிவு செய்ததாகவே தெரிகிறது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஓர் அரசியல் பிரச்சினையை காரணம் காட்டி தனது மொத்த அமைச்சரவையையும் ஜனாதிபதி நஷீத் அதிரடியாக கூண்டோடு இராஜினாமா செய்ய வைத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி அப்போதைய துணை ஜனாதிபதி வாஹீத் இராஜினாமா செய்யாததால் நஷீதின் திட்டம் தவிடுபொடியாகியது. அதற்கு பின்னர் தற்போது தோன்றிய பிரச்சினையில் அதிரடியாக அவர் ஏதாவது செய்யவேண்டும் என்று இருந்தால், அதற்கு அவரே பதவியை இராஜினாமா செய்வதை தவிர வேறுவழி இல்லை. வேறு ஒன்றும் இல்லை என்றாலும், அவரது இராஜினாமா, அவர் எதிர்பார்த்தது போல் சர்வதேச சமூகத்தின் கவனத்தை மாலைதீவின் அரசியல் பிரச்சினை மீது திருப்பிவிட்டது. ஆனால், அதில் அவர் குளிர்காயலாம் என்ற நஷீதின் எண்ணம் முற்றிலுமாக வெற்றிவெறவில்லை.

என்ன செய்தது இந்தியா?

மாலைதீவில் ஆட்சிமாற்றம் என்ற செய்தி வெளிவந்த நிமிடம் தொடங்கி, அங்கு அரங்கேறிவந்த அரசியல் பிரச்சினைகள் குறித்து இந்திய அரசுக்கு எதுவுமே தெரியாதது போலவும், அவ்வாறு தெரிந்திருந்தால் தவறான முடிவுகளை எடுத்துவிட்டது போலவும் இந்தியாவில் உள்ள ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி மற்றும் விமர்சனங்கள் வெளியிட தொடங்கின. அதேபோன்று அந்த நாட்டில் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் உள்ள மரியாதை குறித்து அறியாமலே அவர்களது பாதுகாப்பு குறித்து அனாவசியமாக கவலை தெரிவித்தனர். அந்த செய்தியாளர்கள் பலருக்கும் மாலத்தீவு எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்பதே சந்தேகம். அவர்களது விமர்சகர்களுக்கு இன்டெர்நெட் செய்தி தவிர்த்து மாலத்தீவு குறித்து எதுவுமே தெரியாது. என்றாலும், அவர்களது தவறான யூகங்கள் அங்குள்ள இந்திய மக்களுக்கு பிரச்சினையாக ஆகிவிடக்கூடாது.

இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பு விடயத்தில் மாலைதீவு முக்கியமானதாகும். காதும் காதும் வைத்தாற்போல், இந்த இரு நாடுகளும் இலங்கையுமாக சேர்ந்து கடல்சார் பாதுகாப்பு குறித்து கடந்த ஓராண்டாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. இது பாதுகாப்பு விடயங்களில் இலங்கையும் மாலைதீவும் ஏதோ சீனாவிற்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து விட்டதாக தோன்றியுள்ள எண்ணத்திற்கு பதிலடி. இதேபோன்று இன்று நேற்று என்று அல்ல, பல ஆண்டுகாலமாக மாலைதீவின் உள்நாட்டு அரசியல் நிலைமைகள் குறித்து அங்குள்ள இந்திய தூதரகம் நன்றாகவே அறிந்து வைத்திருந்தது. அதனை உடனுக்குடனாக மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தி அவசியமான முடிவுகளை அவசியமான சமயங்களில் நடைமுறைப்படுத்தி வந்ததுண்டு.

அப்படித்தான், துணை ஜனாதிபதி வாஹீத் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இந்திய அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் அவருக்கு பாராட்டு தெரிவித்ததும். எப்போது நஷீத் இராஜினாமா செய்துவிட்டாரோ, அதைத்தொடர்ந்து எப்போது வாஹீத் பதவி ஏற்றுக்கொண்டுவிட்டாரோ, புதிய அரசை முறைப்படி ஏற்றுக்கொள்ளாமல், இந்தியா தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தோ, இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்தோ, அல்லது அங்கு தோன்றியுள்ள அரசியல் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதிலோ இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்க முடியாது. அதே சமயம், மாலே நகரில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரியாமல் அந்த நாட்டில் எதுவும் நடக்க வாய்ப்பில்லை.

அதனால் தான், அவசியமில்லாத உள்நாட்டு விவகாரங்களில், அவசியத்திற்கும் மேலாக தலையிடுவதில்லை என்பதில் இந்திய அரசு கடைசிவரை கவனமாக இருந்தது. இதனை அந்த நாட்டு கட்சி தலைமைகளுக்கும் மிக தெளிவாகவே பல்வேறு காலகட்டங்களில் தெரிவித்து வந்தும் உள்ளது. அதே சமயம், கடந்த 2010ஆம் ஆண்டு அரங்கேறிய அரசியல் குழப்பங்களை தீர்த்து வைத்தது என்னவோ இந்தியா. ஆனால் அது குறித்து தடாலடியாக செய்தி வெளியிடவில்லை.

இன்னும் சொல்லப்போனால், இப்போது போன்றே அப்போதும் மாலைதீவிற்கு விரைந்த அமெரிக்க உயர் அதிகாரி ரொபேர்ட் பிளேக்-கிற்கு அந்த புகழை இந்தியா எடுத்துக்கொள்ளட்டும் போ என்ற விதத்தில் விட்டுக்கொடுத்தது. ஆனால், அமெரிக்காவிற்கும் சரி, சம்பந்தப்பட்ட மாலைதீவு அரசியல்வாதிகளுக்கும் சரி, உண்மை நன்றாகவே தெரியும். ஆக, அப்போதும் சரி, இப்போதும் சரி, வென்றது இந்திய சாணக்கியமே! அது குறித்து அறியாமல் பேசுபவர்களுக்கு எல்லாம் இந்திய அரசு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, பதில் அளித்துக்கொண்டு இருக்கும் பாரம்பரியம் இல்லை.

http://www.tamilmirror.lk/2010-08-31-14-50-37/35888-2012-02-13-08-15-46.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.