Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் ஜெனிவா உடன்படிக்கைகளும்

Featured Replies

சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் ஜெனிவா உடன்படிக்கைகளும்

போர் மனித வரலாற்றில் முக்கிய இடம்பிடிக்கிறது. புராதன காலந் தொட்டு போர் பற்றிய விதிமுறைகளும் சம்பிரதாயங்களும் நிலவுகின்றன. பொது மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் படைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை. போரின் போது பொது மக்கள் பாதிப்படைகின்றனர் என்பது தான் உண்மை. இதனால் போர் சூழலில் அகப்பட்ட பொது மக்களையும் போரில் இருந்து விலகிய போராளிகளையும் பாதுகாப்பதற்கு மனிதநேயச் சட்டங்கள்(Humanitarian Laws) உருவாக்கப் பட்டுள்ளன.

போர் தொடர்பான சட்டங்களும் விதிகளும் 1864,1906,1929,1949 ஆகிய வருடங்களில் உருவாக்கப்பட்டு இன்று நடை முறையில் இருக்கின்றன. சர்வதேச மனிதநேயச் சட்டங்கள் ஜெனிவா கொன்வென்ஷன்கள் (Geneva Conventions) எனப்படும் ஜெனிவா உடன்படிக்கைகளில் காணப்படுகின்றன.

மேற்கூறிய நான்கு வருடங்களில் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் ஜெனிவா கொன்வென்ஷன்கள் உருவாக்கப்பட்டன. சர்வதேச சட்ட வரம்பிற்குள் போர்ச் சட்டங்களையும் விதிகளையும் கொண்டு வரும் முதலாவது முயற்சியாக கொன்வென்ஷன்கள் இடம்பெறுகின்றன.

சுருக்கமாக கூறுவதாயின் ஜெனிவா கொன்வென்ஷன் என்றால் மேற்கூறிய நான்கு வருடங்களில் செய்யப்பட்ட உடன்படிக்கைகளையும் அவற்றிற்குச் செய்யப்பட்ட மூன்று மேலதிக புறொட்டக்கொல்ஸ் (Protocols) எனப்படும் திருத்தங்களையும் கூட்டாக குறிப்பிடுகிறது.

போரால் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு பற்றிய கரிசனையை ஜெனிவா உடன்படிக்கைகளும் மேலதிக திருத்தங்களும் கொண்டிருக்கின்றன. பொதுவாக ஆங்கிலத்தில் கொன்வென்ஷன் என்றால் மக்களின் ஒன்றுகூடலைக் குறிப்பிடும் சொல்லாக அமைகிறது.

இராசதந்திரத்தில் கொன்வென்ஷன் நாடுகளுக்கிடையிலான உடன்படிக்கையை (Treaty) குறிப்பிடுகிறது. புறொட்டக்கொல் என்ற சொல் திருத்தங்களையும் மேலதிக தகவல்களையும் உள்ளடக்கிய திருத்தத்தைக் குறிப்பிடுகிறது.

1864,1906,1929, ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்ட உடன்படிக்கைகளை விரிவுபடுத்துவதோடு மேலதிக சட்டங்களையும் விதிகளையும் 1949ம் ஆண்டின் நான்காவது உடன்படிக்கை கொண்டிருப்பதோடு தானே தனியொரு சட்டமாக இடம்பெறுகிறது.

ஜசிஆர்சி (ICRC) எனப்படும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (International Committee of the Red Cross)ஸ்தாபகர் ஹென்றி டுனான்ங் (Henry Dunant) என்பாரின் முயற்சியால் ஜெனிவா உடன்படிக்கைகள் தோன்றின. இந்த உடன்படிக்கைகளின் பாதுகாவலனாகவும் நடைமுறைப்படுத்தும் அமைப்பாகவும் ஜசிஆர்சி இடம்பெறுகிறது.

ஜெனிவா உடன்படிக்கைகள் தொடர்பான எல்லா வகை பிரச்சனைகளுக்கும் தீர்ப்பு வழங்கும் இறுதித் தீர்ப்பாயமாக ஐநா பாதுகாப்புச் சபை இடம் பெறுகிறது. பாதுகாப்புச் சபையியன் உடன்படிக்கைகள் தொடர்பான தீர்ப்பு இறுதியானது.

1949ம் ஆண்டு நிறைவேறிய நான்காம் ஜெனிவா உடன்படிக்கை போர்க் காலத்தில் சிவில் மற்றும் படைக் கைதிகளின் உரிமைகள் பற்றிக் குறிப்பிடுகிறது. காயம் அடைந்தோரின் பாதுகாப்பு விதிகளை அது நிறுவியது போர் வலயத்தினுள் அல்லது போர்ச் சூழலில் அகப்பட்ட பொது மக்களின் பாதுகாப்பு விதிமுறைகளையும் அது பட்டியலிடுகிறது.

போரில் இருந்து விலகிய படையினர் பாதுகாப்பு பற்றியும் நான்காம் ஜெனிவா உடன்படிக்கை குறிப்பிடுகிறது. நான்காவது ஜெனிவா உடன்படிக்கையை 194 நாடுகள் முற்றாகவோ பகுதியாகவோ அங்கீகரித்துள்ளன.

நான்காம் உடன்படிக்கை விதிமுறைகள் (Rules) போரில் பங்கு பற்றாதவர்கள் (Non-combatants) போரில் பங்கு பற்றுவதில் இருந்து விலகியவர்கள் ஆகிய இரு பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. சுகயீனம் அடைந்த அல்லது காயமடைந்த காரணத்தில் போரில் பங்கு பற்றுவதில் இருந்து விலகியவர்களின் பாதுகாப்பு இதனால் உறுதி செய்யப்படுகிறது.

1949ம் ஆண்டின் நான்காவது உடன்படிக்கைக்கு மூன்று திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவது திருத்தம் (ProtocoI)1977ல் செய்யப்பட்டது. அது சர்வதேசப் போர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு பற்றிக் குறிப்பிடுகிறது. (Protection of victims of International armed conflicts)

இரண்டாவது திருத்தமும் (ProtocoI) 1977ல் செய்யப்பட்டது. சர்வதேசப் போர் நடவடிக்கைகளாக அமையாத உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டோரின் பாதுகாப்பு பற்றி அது குறிப்பிடுகிறது. (Protection of victims of non-international armed conflicts).

மூன்றாவது திருத்தம் 2005ல் செய்யப்பட்டது. உடன்படிக்கையின் பிரகாரம் ஒரு மேலதிக நன்கு எடுத்துக் காட்டும் தெளிவான அடையாளத்தை அங்கீகரிப்பது தொடர்பானது. (Adoption of an additional distinctive emblem)

ஜெனிவா உடன்படிக்கைகளும் அவற்றிற்கான திருத்தங்களும் அவற்றை அங்கீகரித்த நாடுகளைப் போர் காலத்தில் கட்டுப்படுத்துகின்றன. உடன்படிக்கைகளின் பொதுச் சரத்து (Common article 2) இரண்டு சர்வதேச போர் நடவடிக்கைகள் தொடர்பானது. பொதுச் சரத்து (Common article 3) மூன்று சர்வதேசப் போர் நடவடிக்கைகளாக இடம்பெறாத உள்நாட்டுப் போர் பற்றிக் குறிப்பிடுகிறது.

ஒரு நாட்டின் எல்லைக்குள் நடக்கும் உள்நாட்டுப் போர் பொதுச் சரத்து 3க்குள் வருகிறது. இரு கிளர்ச்சிப் படைகளுக்கிடையில் நடக்கும் போர் அல்லது அரசுக்கு எதிராக ஒரு கிளர்ச்சிப் படை நடத்தும் போர் என்பன இதிலடங்கும். மூன்றாவது பொதுச் சரத்தும் இரண்டாவது திருத்தமும் இணைந்து செயற்படுகின்றன.

சென்ற வருடம் நெதர்லாந்து நாட்டின் ஹேக் மாவட்ட நீதிமன்றம் (Hague District Court) எல்ரிரிஈ அமைப்பைப் பயங்கரவாத இயக்கமாகப் பட்டியலிட மறுத்தது. இந்த அமைப்பு 26 வருட காலமாக நடத்திய விடுதலைப் போர் “சர்வதேச மட்டத்தில் நடவாத உள்நாட்டுப் போர்” என்றும் அதைப் பயங்கரவாத நடவடிக்கையாக ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் தீர்ப்பு வழங்கியது.

1949ம் ஆண்டின் உடன்படிக்கைப்படி போரில் பங்கு பற்றாதவர்களாக சுகயீனம், உடற் காயம், தடுத்து வைப்பு ஆகிய காரணங்களுக்காக விலகிய படையினரும் கருதப்படுவார்கள். படையினர் என்ற சொல்லில் கிளர்ச்சிப் போராளிகளும் அடங்குவர். இவர்களை மனிதநேய அடிப்படையில் நடத்த வேண்டும்.

போரில் பங்கு பற்றாதவர்கள் தொடர்பான பின்வரும் நடவடிக்கைகளை உடன்படிக்கை தடை செய்கிறது. உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து விளைவித்தல், குறிப்பாக எல்லாவிதப் படுகொலைகள், உடல் உறுப்புக்களை வெட்டி அகற்றுதல்கள், கொடுமை செய்தல்கள் மற்றும் சித்திரவதைகள் இதிலடங்கும்.

மேலும் பின்வரும் அத்துமீறல்களும் அடங்கும்.

- பணயக் கைதிகளாகப் பிடித்தல்,

-சுய கவுரவத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகள், குறிப்பாக அவமானகரமாகவும் கீழ்த்தரமாகவும் நடத்துதல்,

-முறைப்படி நிறுவப்படாத நீதி மன்றத்தின் தீர்ப்பு மூலம் மரண தண்டனை நிறைவேற்றுதல் (Executions), நாகரிகமடைந்த மக்களால் உருவாக்கப்பட்ட நீதி உத்தரவாதங்களை (Judicial Guarantees) மீறிச் செயற்படுதல் என்பனவாகும்.

-அத்தோடு காயமடைந்தோர் மற்றும் நோய் வாய்ப் பட்டோரைச் சேகரித்து அவர்களைப் பராமரிக்க வேண்டும்.

உடன்படிக்கைச் சரத்துக்களின் அத்துமீறல்கள் அனைத்தும் சம அளவில் பார்க்கப்படுவதில்லை. பின்வருவன பாரதூரமான அத்துமீறல்களாகவும் (Grave Breaches) சட்டப்படி போர்க் குற்றங்களாகவும் கணிப்பிடப் படுகின்றன. மூன்றாம், நான்காம் ஜெனிவா உடன்படிக்கைகள் பாதுகாப்பிற்கு உரியவர்கள் மீது புரியும் பாரதூரமான அத்துமீறல்கள் என்று பின் வருவனவற்றைப் பட்டியலிடுகின்றன.-

- திட்டமிட்டுப் படுகொலை செய்தல், சித்திரவதை, மனித உடலில் உயிரியல் ஆராய்ச்சி செய்தல் உட்பட மனிதத்திற்கு எதிரான நடவடிக்கைகள்.

- திட்டமிட்டு பெருந் துன்பம் விளைவித்தல் அல்லது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் கடும் துயரம் விளைவித்தல்.

- கட்டாயப்படுத்தி எதிரிப் படையில் இணைத்தல்,

- போர்க் குற்றம் சுமத்தப்பட்டால் முறையான நீதி விசாரணைக்குரிய உரிமையை வழங்காமல் விடுதல்.

நான்காவது ஜெனிவா உடன்படிக்கையின் கீழ் இராணுவத் தேவை என்று நியாயப்படுத்த முடியாத அளவுக்குச் சொத்துக்களை அபகரித்தல் அல்லது பாரியளவில் அழித்தல், அப்படியான நடவடிக்கைகளை சட்டத்திற்குப் புறம்பாகவும் சகட்டு மேனிக்கும் நடத்துதல் பாரதூரமான அத்துமீறல்களாகும்.

ஐநா சாசனம் வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் ஐநா பாதுகாப்பு சபை பாரதூரமான அத்துமீறல்களைத் தனது பரந்த அனைத்தும் உள்ளடங்கிய நியாயாதிக்கத்தின் அடிப்படையில் (Universal Jurisdiction)அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் குற்றவாளி நாட்டை முன்நிலைப் படுத்தலாம்.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் மனிதநேயச் சட்டங்கள் தொடர்பாக இலங்கை அரசு எடுத்த நிலைப்பாடு பின்வருமாறு. போர்ச் சட்டங்களை மீறுவது மூலம் இராணுவ அனுகூலங்களைப் பெறும் உத்தியை அது கையாண்டது. பொது மக்கள் மீது குண்டுமாரி பொழிந்து பாரதூரமான உயிரிழப்புக்களை அது ஏற்படுத்தியது.பாதுகாப்பு வலயங்களைப் பிரகடனப்படுத்தி அதற்குள் பொது மக்களை வரச் செய்து அதே வலயங்கள் மீது கனரக ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது.

கைது செய்த போராளிகளையும் சரண்புகுந்த போராளிகளையும் சுட்டுக் கொன்றதோடு சித்திரவதை செய்து மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியது.

மருத்துவ மனைகள், பொதுச் சொத்துக்கள் மீது எறிகணை வீச்சு மற்றும் விமானக் குண்டு வீச்சு நடத்திப் பாரதூரமான அத்துமீறல்களைப் புரிந்தது. நான்காவது ஜெனிவா உடன்படிக்கையின் படியும் ஐநா சாசனத்தின் படியும் போர்க் குற்றங்களைப் வகை தொகையாகச் செய்த இலங்கை அரசைத் தண்டிக்க ஐநா பாதுகாப்புச் சபையும் சர்வதேச சமூகமும் பின்னடிக்கின்றன.

– செண்பகத்தார்

http://www.eelamview.com/2012/03/09/humanitarian-laws/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.