Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. களப்பிரர் காலத்து இலங்கை பாலா கருப்பசாமி March 11, 2026 வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை சமீபத்தில் வாசித்தேன். களப்பிரர் காலம் குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைத்துள்ளன என்று ஆரம்பத்தில் அவர் நூலைத் தொடங்கும்போது, இதெற்கெதற்கு 180 பக்கப் புத்தகம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் களப்பிரர் காலத்தில் அண்டை நாடுகள், சமயம், இலக்கியம், போர்கள் என விரிவாக இந்நூல் அலசிச் செல்வதன் மூலம் களப்பிரர் ஆட்சி குறித்து ஓரளவு தெளிவான சித்திரத்தை அளிக்கிறது. ஒன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் எத்தனை மன்னர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் சட்டென்று ஆதித்த கரிகாலன் மட்டுமே நினைவுக்கு வருகிறார். அதைத் தவிர்த்து நம்மிடம் முறையான வரலாறு இல்லை. எழுதப்பட்ட கல்வெட்டு, செப்பேடுகளிலும் ”துஞ்சினார்” என்று பொத்தாம்பொதுவாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. பௌத்தம் பரவிய சீனம், இலங்கையில் எல்லாம் அவர்கள் வரலாற்றைத் தெளிவாகப் பதிவு செய்து வைத்துள்ளனர். தமிழகத்தில் பௌத்தம் பரவியிருந்தும் நம்மிடம் தரவுகள் இல்லை. காரணம் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப்பின் பௌத்த நூல்கள் அனைத்தும் இங்கே அழிக்கப்பட்டுவிட்டன. எனக்கு இந்த நூலில் களப்பிரர் காலத்தில் இலங்கை அரசர்கள் என்ற பகுதி ஆச்சரியமாக இருந்தது. இந்த மன்னர்களின் வரலாறு சூலவம்சம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சூலவம்சத்தை பௌத்தத் துறவிகள் வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளனர். இந்நூலை அவர்கள் பாலி மொழியில் எழுதி வந்துள்ளனர். ஓகாரிக திஸ்ஸன் (கி.பி. 209-231) ஹீனயான பௌத்தம் ஒருகட்டத்தில் 18 பிரிவுகளைக் கொண்டதாகப் பிரிந்து போயிருந்தது. அதிலொன்று தேரவாதம். இது இப்போதுவரை இலங்கையில் பின்பற்றப்படும் பௌத்தமதப் பிரிவாக உள்ளது. திஸ்ஸனின் ஆட்சியில் மகாயானம் உள்ளே நுழைந்தது. அதை இம்மன்னன் வளரவிடாமல் தடுத்தான். அபயநாகன் (கி.பி. 231 – 239) இவர் திஸ்ஸனின் தம்பி. இவனுக்கும் பட்டத்து இராணிக்கும் கூடா ஒழுக்கம் இருந்துள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதும் தம்பி தமிழ்நாட்டுக்கு ஓடிவந்துவிட்டார். தமிழ்நாட்டிலிருந்து ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு அண்ணன் மீது படையெடுக்க, அண்ணன் இராணியோடு இலங்கையின் மத்தியிலுள்ள மலைநாட்டுக்கு ஓடிவிட்டான். இவன் பின்னாலேயே விரட்டிச் சென்று அவனைக் கொன்று இராணியைக் கவர்ந்துவந்து தனது இராணியாக்கிக் கொண்டான். ஸ்ரீநாகன் II (கி.பி. 240 – 242) இவர் திஸ்ஸனின் மகன். அபயநாகன் இறந்தபின் இரண்டாண்டுகள் மட்டுமே நாட்டை ஆண்டிருக்கிறான். விஜயகுமரன் (கி.பி. 242 – 243) இவர் ஸ்ரீநாகன் II-இன் மகன். இவரது தாத்தா திஸ்ஸன் காலத்திலேயே அரண்மனையில் லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்தவர்களின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. விஜயகுமாரன் அரியணை ஏறியபோது, லம்பகர்ண வம்சத்தைச் சேர்ந்த சங்க திஸ்ஸன், சங்கபோதி, கோதபய என்ற மூன்று நெருங்கிய நண்பர்கள் அவரிடம் அமைச்சர்களாகப் பணியாற்றி வந்தனர். இம்மூவரும் சதி செய்து கி.பி. 243ல் மன்னர் விஜயகுமரனைக் கொன்றனர். அத்துடன் திஸ்ஸனின் வம்சம் முடிவுக்கு வந்தது. சங்க திஸ்ஸன் (கி.பி. 243 – 252) இவரும் சதியில் கொல்லப்பட்டார். மாம்பழப் பிரியரான இவர் இலங்கையின் கிழக்குத் தீவு ஒன்றுக்குச் சென்றபோது அங்கே மாம்பழத்தில் நஞ்சூட்டிக் கொன்றிருக்கிறார்கள். சங்கபோதி (கி.பி. 252 – 254) இவர் காலத்தில் மரண தண்டனையை ஒழித்திருக்கிறார். இவர் எந்தளவு இரக்க குணமுள்ளவர் என்றால், ஒரு மரண தண்டனைக் கைதியைக் கொல்வதற்குப் பதில் போலியாக ஓர் உருவம் செய்து அவன்தான் இவன் என்பதுபோல ஏமாற்றி கொலையாளியைத் தப்பிக்க வைத்துவிடுவாராம். இதையெல்லாம் சகிக்காமல் இந்தக் கூட்டாளிகளில் ஒருவரான கோத்தபய என்னும் இலம்பகன்னன் இவருக்கு எதிராகக் கலகம் செய்தான். அரசருக்கு எதிராக அவன் போர்தொடுக்க, சங்கபோதி போர் புரியாமல் தப்பியோட, அவரைப் பிடித்த சேனாபதி ஒருவன் அவர் தலையை வெட்டி கோத்தபயவுக்கு அனுப்பினான். கோதபய ஆட்சியைப் பிடித்து மேகவண்ணாபயன் என்ற பெயரில் நாட்டை ஆண்டான். கோதபய (கி.பி. 254 – 267) இவனது காலத்திலும் மகாயானம் தலைதூக்கியிருக்கிறது. அதை அடக்கி தேரவாதத்தை ஓங்கச் செய்தார். மகாயான பிக்குகளை நாடுகடத்தினான். அப்படி நாடு கடத்தப்பட்ட பிக்குகள் தமிழகம் வந்து இங்கிருந்த மகாயான பௌத்தத் தலைவராக இருந்த சங்கமித்திரர் இலங்கையில் மகாயானத்தைப் பரப்ப கங்கணம் கட்டிக் கொண்டார். அங்கே தேரவாத பிக்குகளுடன் வாதஞ்செய்து வென்றார். இதனால் மன்னனும் அவரை ஆதரித்தான். தன் பிள்ளைகளான ஜேட்ட திஸ்ஸன், மகாசேனன் ஆகிய இருவரை அவரிடம் கல்வி கற்க அனுப்பினான். ஜேட்டதிஸ்ஸன் I (கி.பி. 267 – 277) சங்கமித்திரரின் மாணவனாக இருந்தாலும் இவனுக்கு குருவிடம் பகை இருந்தது. அதனால் இவன் அரியணை ஏறியதும் அவர் ஏரம் கட்டிக் கொண்டு சோழநாட்டுக்கு வந்துவிட்டார். சங்கமித்திரருக்கு கோதபயவின் இரண்டாவது மகன் மகாசேனனிடம்தான் அன்பு இருந்தது. இவர் காலத்தில் மணிமேகலைக்கு ஒரு விகாரை எழுப்பியுள்ளார். மகாசேனன் (கி.பி. 277 – 304) மகாசேனன் அரியணை ஏறியதும் சங்கமித்திரர் திரும்பி வந்து தன் கையாலேயே முடிசூட்டி அழகு பார்த்தார். மன்னன் ஆதரவுடன் மகாயானம் பரவ வழிவகுத்தார். தேரவாத மகாயானப் பூசல்கள் இவனது காலத்தில் அடிக்கடி நிகழ்ந்தன. ஸ்ரீ மேகவண்ணன் (கி.பி. 304 -332) இவனது ஆட்சிக்காலத்தில்தான் கலிங்கத்திலிருந்து புத்தரின் பல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போது இந்தியாவில் வடக்கே சந்திரகுப்தன் ஆட்சி செய்துவந்தான். அவனிடம் புத்த பிக்குகளைத் தூது அனுப்பி புத்தகயாவுக்கு வருகைதரும் பிக்குகளுக்கு பாதுகாப்பு அளித்து ஆதரிக்கும்படி கேட்டுக்கொண்டான். ஜேட்டதிஸ்ஸன் II (கி.பி. 332 – 341) இவன் ஸ்ரீ மேகவண்ணனின் தம்பி. நுண்கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தான். தந்தத்தில் சிற்பங்கள் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவன் அரண்மனையிலேயே அதைப் பொதுமக்களுக்குக் கற்பிக்கவும் செய்தான். புத்ததாசன் (கி.பி. 341 – 370) ஜேட்டதிஸ்ஸனின் மகன். மருத்துவ நிபுணனாகவும் இருந்தான். பாம்புக்கே வைத்தியம் பார்த்து நோய் தீர்த்ததாகச் சொல்கிறார்கள். இவனது காலத்தில் வைத்தியசாலைகள் பெருகின. மருத்துவர்களுக்கு நிலங்களும் தானமளித்திருக்கிறான். பாஹியான் என்னும் சீன யாத்திரிகர் இவனது காலத்தில் இலங்கையில் வந்து தங்கியிருக்கிறார். உபதிஸ்ஸன் (கி.பி. 370 – 412) புத்ததாசனின் மூத்த பிள்ளை. இவன் 42 ஆண்டுகள் அரசாண்டிருக்கிறான். தந்தையைப் போலவே மருத்துவத்தில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவனது பட்டத்து இராணி உபதிஸ்ஸனின் தம்பி மகாநாமனோடு கள்ள உறவில் இருந்தாள். மகாநாமன் பிக்குவாகச் சேரவிருந்தான். இந்நிலையில் இராணி அரசனைக் குத்திக் கொன்றுவிட்டாள். அதனால் மகாநாமன் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். மகாநாமன் (கி.பி. 412 – 434) அண்ணனின் மனைவியும் பழைய இராணியுமானவளை புதிய இராணியாக்கிக் கொண்டான். இவனுக்கு ஆண் வாரிசு இல்லை. சங்கா என்றொரு பெண்பிள்ளை மட்டுமே. மகாநாமனுக்கு இன்னொரு தமிழினத்தைச் சேர்ந்த மனைவி இருந்தாள். தமிழ் இராணிக்கு சொத்திசேனன் என்றொரு மகன் இருந்தான். சொத்தி சேனன் (கி.பி. 434) இலங்கையை ஆண்ட மன்னர்களிலேயே மிகவும் கெடுபேறுடையவன் இந்த மன்னன்தான். இவன் அரியணை ஏறிய அன்றே கொல்லப்பட்டான். முந்தைய அரசனின் மூத்த இராணிக்குப் பிறந்த சங்காவால் சொத்திசேனன் அரியணை ஏறுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் நஞ்சூட்டி அவனைக் கொன்றாள். சத்தக் காகசன் (கி.பி. 434) பிறகு சங்கா தன் கணவனான சத்தக் காகசனை அரியணை ஏறச் செய்தாள். சத்தக் காகசன் என்றால் குடை ஏந்துபவன் என்று அர்த்தம். மகாநாமனுக்கு கொற்றக்குடை ஏந்தியவனாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஓராண்டுகாலமே இவன் அரசாண்டான். இவன் இறந்ததும் அமைச்சர் சடலத்தை அரண்மனையிலேயே கொளுத்திவிட்டு மித்தசேளன் என்பவனை மன்னராக்கினார். அத்துடன் லம்பகர்ண பரம்பரை முடிவுக்கு வந்தது. மித்தசேளன் (கி.பி. 435 – 436) இவன் ஒருகாலத்தில் கொள்ளைக்காரனாக இருந்திருக்கிறான். இவனை மன்னனாக்கிய அமைச்சரின் பெயர் தெரியவில்லை. அரசன் நோய்வாய்ப்பட்டிருப்பதால் வெளியே வரமுடியவில்லை என்று சொல்லி காலத்தை ஓட்டியிருக்கிறார்கள். இவ்வாறாக இலங்கையில் தொடர்ந்து குழப்பங்கள் நிகழ, பாண்டிய மன்னன் படையெடுத்துவந்து மன்னனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். பாண்டியர் ஆட்சி (கி.பி. 436 – 463) அனுராதபுரத்திலிருந்து ஆண்ட இப்பாண்டிய மன்னனது பெயர் தெரியவில்லை. பாண்டு என்று பொதுவாக அழைக்கின்றனர். இக்காலகட்டத்தை ஆறு திராவிட மன்னர்களின் காலம் என்றழைக்கின்றனர். அந்த ஆறு மன்னர்கள், 1) பாண்டு, 2) பரிந்தன், 3) இளம்பரிந்தன், 4) தீர்த்தரன், 5) தாட்டியன், 6) பீடியன். பாண்டியர்கள் ஆட்சியின்போது இலங்கையின் தெற்குப் பகுதியான உரோகணத்தை ஆண்டுவந்த தாதுசேனன் என்பவனுடன் அடிக்கடி போர் நடந்தது. அத்தகைய போர்களில் தீர்த்தரன், தாட்டியன், பீடியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர். கடைசியில் பீடியன் தாதுசேனனிடம் தோற்றுப்போய் தாதுசேனன் அரியணை ஏறினான். தாதுசேனன் (கி.பி. 463 – 479) பாண்டியர்களுக்கெதிராக 27 ஆண்டுகள் கலகம் செய்து ஒருவழியாக மன்னரானான் தாதுசேனன். இவன் வாழ்க்கை துயரமானது. இவனுக்கு இரண்டு மனைவியர். ஒரு மகளும் மொக்கல்லானன் என்ற மகனும் உண்டு. இரண்டாவது மனைவி குலத்தில் தாழ்த்தப்பட்டவள். அவள் மூலமாக கஸ்ஸபன் என்றொரு மகன் பிறந்தான். மகளை தன் தங்கை மகனுக்கு மணம் செய்வித்தான். மருமகனை தனது சேனாதிபதியாக்கிக் கொண்டான். மருமகனது பெயர் உபதிஸ்ஸன். அவன் அரசனின் மகளும் தனது மனைவியுமானவளை ஒருமுறை சவுக்கால் விளாச, காரணமே இல்லாமல் தன் மகளை அடித்திருக்கிறான் என்பதை அறிந்து மகள்மேல் பேரன்பு கொண்டிருந்த அரசன் கடுஞ்சினம் கொண்டான். அவனது அம்மாவும் தனது தங்கையுமானவளை உயிரோடு நெருப்பிலிட்டு எரித்துவிட்டான். இதனால் அரசன் மேல் தீராப்பகை கொண்ட சேனாதிபதி பழிதீர்க்கத் தீர்மானித்தான். அரசனின் இரண்டாம் மனைவிக்குப் பிறந்த கஸ்ஸபனுக்கு அரசாளும் ஆசையைத் தூண்டிவிட்டான். தன் பக்கம் ஆட்களைச் சேர்த்துக் கொண்டு அரசனைச் சிறையிலடைத்தான். அரசனின் இன்னொரு மகன் மொக்கல்லானனைக் கொல்ல முயல அவன் தமிழகத்துக்குத் தப்பியோடினான். அத்தோடு சேனாதிபதி நிற்கவில்லை. கஸ்ஸபனிடம் அவனது தந்தை பெருஞ்செல்வத்தை மொக்கல்லானனுக்குத் தருவதற்காக ஒளித்து வைத்திருப்பதாகவும் அந்த இடத்தைத் தெரிந்துகொள்ளுமாறும் தூண்டினான். பலமுறை ஆட்களை விட்டுக் கேட்டும் அரசன் பதில் சொல்லாதிருக்கவே, அவனைக் கொன்றுவிடும்படி கஸ்ஸபன் ஆணையிட்டான். சேனாதிபதி அரசனை நிர்வாணமாக்கி சுவரோடு சேர்த்துச் செங்கல்லால் சுவரெழுப்பிப் பூசிவிட்டான். கஸ்ஸபன் I (கி.பி. 479 – 497) இவன் பாதுகாப்புக்காக சீக்கிரி மலைமேல் கோட்டையமைத்து அரசாண்டான். இந்தக் கோட்டை மற்றும் அரண்மனைச் சிதிலங்கள் இன்னமும் இலங்கையில் உள்ளன. தமிழகத்தில் உதவிதேடிச் சென்ற மொக்கல்லானனுக்கு சாமானியமாக உதவி கிடைக்கவில்லை. பதினெட்டு ஆண்டுகள் கழித்து தனக்குக் கிடைத்த போர் செய்வதில் திறன் பெர்ற பதினெட்டு தமிழ் நண்பர்களுடன் கஸ்ஸபன் மீது படையெடுத்தான். தோற்கும் நிலையில் இருந்தபோது யானை மீதிருந்தபடி வாளால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு கஸ்ஸபன் இறந்துபோனான். மொக்கல்லானன் (கி.பி 497 – 515) இவன் அரசனானதும் தன் தந்தையைக் கொல்ல கஸ்ஸபனுக்கு உதவியாக இருந்தவர்களைக் கொன்றுகுவித்தான். பலருக்கு மூக்கையும் காதையும் அரிந்து நாடுகடத்தினான். குமார தாதுசேனன் (கி.பி. 515 – 524) மொக்கல்லானனின் மகன். இவன் ஒரு கவிஞனும்கூட. இவன் எழுதிய ஜானகி ஹரணம் என்ற காவியம் பிரபலமானது. இவருக்கும் இந்தியாவின் காளிதாசருக்கும் இடையே நட்பு இருந்ததாகவும் அவர் இலங்கை வந்து தங்கியிருந்தபோது ஒரு சதியில் கொல்லப்பட அத்துயர் தாங்காது அவரை எரியூட்டிய நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்டதாக ஒரு கதை உண்டு. இல்லை, இது மொக்கல்லானனின் அமைச்சரின் மகனான காளிதாசன். அவன் அரசனின் நெருங்கிய நண்பன், அவன் இறந்தபோதுதான் துயர் தாங்காமல் தானும் தீயில் குதித்து உயிர்விட்டான் என்றும் சொல்கிறார்கள். கீத்திசேனன் (கி.பி. 524) குமார தாதுசேனனின் மகன். ஆட்சிக்காலத்தில் 9 மாதங்கள் சென்ற நிலையில் இவனது தாய்மாமன் சிவன் இவனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினான். சிவன் (கி.பி. 524) இவன் அரியணை ஏறிய இருபத்தைந்து நாட்களில் உபதிஸ்ஸன் என்பவனால் கொல்லப்பட்டான். உபதிஸ்ஸன் III (கி.பி. 524 – 526) இந்த உபதிஸ்ஸன் யாரென்றால் தாதுசேனனின் மகளை மணந்து, அவன்மேல் வஞ்சம் கொண்டு கஸ்ஸபனைத் தூண்டி கடைசியில் உயிரோடு அரசனுக்குச் சமாதி கட்டியவன். அதாவது, மொக்கல்லானனின் தங்கையை மணந்தவன். மொக்கல்லானன் தன் தந்தையைக் கொல்ல உதவிய ஆயிரம் பேரைக் கொன்றிருக்கிறான். இவன் எப்படித் தப்பினானென்று தெரியவில்லை. உபதிஸ்ஸன் தன் மகளை சிலாகாலன் என்பவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். உபதிஸ்ஸனுக்கு கஸ்ஸபன் என்றொரு மகனுண்டு. சிலாகாலன் ஆளும் ஆசைகொண்டு மாமனாரோடு போர் செய்தான். உபதிஸ்ஸனுக்கு ஏற்கெனவே வயதாகிவிட்ட காரணத்தால் கஸ்ஸபன் போர் செய்துவந்தான். கடைசியில் கஸ்ஸபன் தோற்றுப்போய் களத்தில் தற்கொலை செய்துகொண்டான். அச்செய்தியறிந்து உபதிஸ்ஸனும் இறந்துபோனான். சிலாகாலன் (கி.பி. 526 – 539) இவனுக்கு மொக்கல்லானன், தாட்டாபபூதி, உபதிஸ்ஸன் என மூன்று மகன்கள். மூவருக்கும் ஆளுக்கொரு திக்கில் ஆட்சியைக் கொடுத்து ஆளச் செய்தான். மகாநாகன் என்ற கொள்ளைக்காரனை அரசு அலுவலில் உதவிக்கு வைத்துக்கொண்டு, உரோகணத்தில் அவனை வரி வசூலிப்பவனாக நியமித்தான். அவன் வரியை வாங்கித் தானே வைத்துக்கொண்டு உரோகணத்திலேயே தங்கிவிட்டான். தாட்டாபபூதி (கி.பி. 539 – 540) சிலாகாலன் இறந்தபின், இரண்டாவது மகன் தாட்டாபபூதி ஆட்சியைக் கைப்பற்றினான். மூத்த அண்ணனான மொக்கல்லானனுக்கு ஆட்சிப் பொறுப்பைத் தராமல் இரண்டாமவன் வந்ததை மூன்றாவது தம்பி உபதிஸ்ஸன் கண்டித்தான். அதனால் அவனைக் கொன்றுவிட்டான். மொக்கல்லானன் தாட்டாபபூதி மீது படையெடுத்தான். மொக்கல்லானன் எதற்கு தேவையில்லாமல் படைவீரர்கள் ஒருவருக்கொருவர் கொன்று சாக வேண்டும், ஒற்றைக்கு ஒற்றை போர்செய்து யார் ஆள்வது என்று முடிவு செய்வோம் என்று செய்தியனுப்பினான். இருவரும் யானை மீது அமர்ந்து போர்செய்ய, மொக்கல்லானனின் யானை தாட்டாபபூதியின் யானையைத் தந்தத்தால் குத்திவிட அது திரும்பி ஓடியது. தோற்றுப்போனதால் வாளெடுத்துக் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான், தாட்டாபபூதி. மொக்கல்லானன் II (கி.பி. 540 – 560) கீர்த்தி ஸ்ரீமேகன் (கி.பி. 560 – 561) மொக்கல்லானன் இறந்ததும் அவனது இராணி மற்ற உறவினர்களுக்கு நஞ்சிட்டுக் கொன்றுவிட்டு தன் மகனை அரசனாக்கினாள். ஆனால் பின்னாலிருந்து அவளே ஆண்டாள். இவளது ஆட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்தேறின. கீர்த்தி ஸ்ரீமேகனின் பாட்டனார் சிலாகாலனால் உரோகணத்தில் வரி வசூலிக்க அமர்த்தப்பட்டிருந்த மகாநாகன், இக்குழப்பத்தைப் பயன்படுத்தி படையெடுத்து வந்து ஆட்சியைக் கைப்பற்றினான். கீர்த்தி ஸ்ரீமேகன் வெறும் பத்தொன்பதே நாட்கள் அரியணையிலிருந்தான். இலங்கையின் அரசியல் அப்போதிருந்தே ஓர் இரத்த சரித்திரமாக இருந்திருப்பது ஆச்சரியம்தான். https://mayir.in/essays/bala-karubbasamy/4523/ களப்பிரர்கள் AI உதவியுடன்.. Kalabhra Dynasty (களப்பிரர்கள்) என்பது தென் இந்திய வரலாற்றில் குறைவாக பதிவாகிய ஒரு ஆட்சிக் குழுவாகும். அவர்கள் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாக கிடைக்கின்றன. 1️⃣ களப்பிரர்கள் கி.பி. 3–6ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்ததாக கருதப்படுகிறார்கள். 2️⃣ அவர்கள் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய பாரம்பரிய அரசுகளை தற்காலிகமாக வீழ்த்தி ஆட்சி செய்தனர். 3️⃣ இந்த காலத்தை சில வரலாற்றாளர்கள் “தமிழகத்தின் இருண்ட காலம்” என்று குறிப்பிடுகிறார்கள், ஏனெனில் எழுத்து ஆதாரங்கள் குறைவு. 4️⃣ களப்பிரர்கள் பௌத்தம் மற்றும் ஜைனம் போன்ற மதங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 5️⃣ பின்னர் பாண்டியர் மற்றும் பல்லவர் போன்ற அரசுகள் அவர்களை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைப் பெற்றன. இலங்கையில் அவர்கள் பரவினார்களா? நேரடியான ஆதாரம் இல்லை. ஆனால் சில வரலாற்றாளர்கள் அவர்கள் தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சில மக்கள் இடம்பெயர்ச்சியில் கலந்து இருக்கலாம் என்று மட்டும் கருதுகின்றனர். உறுதியான ஆதாரங்கள் இல்லை. களப்பிரர் தமிழரா? 1️⃣ சில வரலாற்றாளர்கள் களப்பிரர்கள் தமிழ் மலைப்பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி அல்லது வீரக்குடிகள் (hill tribes) என்று கருதுகின்றனர். 2️⃣ மற்றொரு கருத்துப்படி அவர்கள் கர்நாடகப் பகுதியிலிருந்து வந்த “களப்ர/கலவர” என்ற குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுகிறது. 3️⃣ சில ஆய்வாளர்கள் அவர்கள் தமிழர்களே ஆனால் சங்க கால அரசுகளுக்கு எதிராக எழுந்த ஒரு புதிய அரசியல் சக்தி என்று கூறுகிறார்கள்.
  3. Today
  4. ஒரு கொலையும் யாழ்ப்பாணத்தவரின் பயங்களும் - நிலாந்தன் சித்த மருத்துவத்துறை விரிவுரையாளரின் கொலைச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றச்செயலா? அல்லது பொதுவான சமூகப் பிறழ்வின் குறிகாட்டியா ? கொல்லப்பட்டவர் ஒரு மருத்துவர், விரிவுரையாளர் என்பதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்தச் சம்பவம் அதிகம் கவனிப்பைப் பெறக் காரணம். அவர் ஒரு படித்த தாய். பிள்ளையும் யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலையில் படித்திருக்கிறார். ஒரு படித்த தாய், பதின்ம வயதிலும் அதன் பின்னரும் பிள்ளையை வெற்றிகரமாகக் கையாள முடியாமல் போனது அவருடைய தனிப்பட்ட தோல்வியா? அல்லது நடப்பில் உள்ள கல்வி முறையின் தோல்வியா? இக்கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயல் மட்டும் போதாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் நிகழ்ந்த குற்றச் செயல்களைத் தொகுத்து ஆராய வேண்டும். பொருத்தமான புள்ளி விபரங்களைத் தொகுத்தும் பகுத்தும் கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் அது ஒரு சமூகப் பொதுத் தோறப்பாடா? இல்லையா? என்ற முடிவுக்கு வர வேண்டும். யாழ்ப்பாணத்தின் படித்த கல் வீட்டுக்காரர்கள் அதிகமாக சிசிடிவி கமராவை வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பொருத்தி வைத்திருக்கிறார்கள். குற்றச்செயல்களையும் திருடர்களையும் கண்காணிப்பதற்கு கமராவை பொருத்தும் ஒரு சமூகம், தங்கள் வீட்டுக்குள் தங்கள் கண் முன்னே வளரும் பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கின்றதா? பிள்ளைகளை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் பெற்றோரும் மூத்தவர்களும் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை உடனடியாகக் கண்டு கொள்வார்கள். பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தவறும் பெற்றோரே பிள்ளைகளைத் தவறவிடுகிறார்கள். பெரும்பாலான படித்த வசதியானவர்கள் வீடுகளில் கமராவைப் பொருத்தும் ஒரு சமூகத்தில் பிள்ளைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க முடியாமல் போவது ஏன்? பிள்ளைகளைக் கண்காணிப்பதற்கு கமராவைப் பொருத்தும் பெற்றோரும் உண்டு. ஆனால் கமராவால் மட்டும் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாது. அன்பினால்தான், பாசத்தால்தான் ,அறிவினால்தான் பிள்ளைகளைப் பின்தொடரலாம்; கண்காணிக்கலாம். ஒரு பகுதி படித்த பெற்றோராலேயே ஏன் பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாமல் போகிறது ? இக்கட்டுரையாளர் யாழ்ப்பாணத்தில் கிராம மட்டங்களில் நடக்கும் சந்திப்புகளின்போது ஒரு கேள்வி கேட்பார். உங்களில் எத்தனை பேரிடம் கைபேசிகள் உண்டு? எல்லாருமே உண்டு என்று கூறுவார்கள். அதில் எத்தனை ஸ்மார்ட் கைபேசிகள்? என்று கேட்டால்,அநேகமானவர்கள் தங்களிடம் இருப்பது அதுதான் என்று கூறுவார்கள். பின்னர் ஒரு கேள்வி “கைபேசியில் நீங்கள் சராசரியாக ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலங்கள் செலவழிப்பீர்கள்?” அதற்குக் கிடைக்கும் பதில் பெரும்பாலும் அதிர்ச்சியூட்டுவதாக இருக்கும். ஆகக் குறைந்தது ஒரு மணித்தியாலமும் ஆகக்கூடியது 5 மணித்தியாளங்களும் என்று பதில் கிடைக்கும். அதை வைத்து மீண்டும் ஒரு கேள்வி. “அப்படியென்றால் கடந்த வாரம் முழுவதும் நீங்கள் கைபேசியில் இருந்து கற்றுக்கொண்ட ஒரு விடயத்தைச் சொல்லுங்கள்? அல்லது கைபேசியில் நீங்கள் பார்த்த, கேட்டவற்றுள் உங்களை மிகவும் பாதித்த, உங்களுடைய உணர்வில், சிந்தனையயில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு விடயத்தைச் சொல்லுங்கள் ? என்று கேட்டால், அநேகமானவர்கள் பொருத்தமான பதிலைச் சொல்ல மாட்டார்கள். அரிதாகத்தான் நல்ல பதில் வரும். இது கிராமப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது; நகர்ப்புறச் சந்திப்புகளின் போதும் அவதானிக்கப்பட்டது. படிப்பறிவு மட்டம் குறைந்தவர்கள் மத்தியிலும் அவதானிக்கப்பட்டது; அரசு அலுவலகங்களிலும் அவதானிக்கப்பட்டது. எனவே தொகுத்துப் பார்த்தால் படித்தவர்,படிக்காதவர், வேலை செய்பவர்,வேலை செய்யாதவர்,வசதியானவர்,வசதி குறைந்தவர், என்ற வேறுபாடு இன்றி சமூகத்தில் அதிக தொகையினர் கைபேசிகளின் கைதிகளாகவே காணப்படுகிறார்கள். அவ்வாறு கைபேசிகளின் கைதிகளாகக் காணப்படுவோரிடம் மேலும் ஒரு கூர்மையான கேள்வி கேட்கப்படும்.” நீங்கள் சராசரியாக ஒரு மணித்தியாலத்தில் இருந்து ஐந்து மணித்தியாலங்கள் வரை கைபேசியோடு மினக்கெடுக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய வளரும் பிள்ளைகளின் கண்களைப் பார்த்து எத்தனை நிமிடங்கள் கதைக்கிறீர்கள்? உங்கள் வளரும் பிள்ளைகளைத் தொட்டு அரவணைத்து எவ்வளவு நேரம் உரையாடுகிறீர்கள்? உங்கள் பிள்ளைகளோடு நீங்கள் எத்தனை மணித்தியாளங்களைச் செலவழிக்கிறீர்கள்? இந்த கேள்விக்கு அவர்கள் கூறும் பதில் பெரும்பாலும் கைபேசியோடு அவர்கள் செலவழிக்கும் நேரத்தைவிட குறைவான நேரந்தான் தங்கள் பிள்ளைகளோடு அவர்கள் செலவழிக்கிறார்கள் என்பதாக இருக்கும். கைபேசி மட்டுமல்ல, தொலைக்காட்சியும் ஒரு நேரம் தின்னிதான். வீட்டில் இருப்பவர்கள், வயோதிபர்கள், குடும்பப் பெண்கள் தொலைக்காட்சியோடு கண்ணை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் கற்றுக் கொள்வது பெரும்பாலும் முற்போக்கானது அல்ல. பெரும்பாலான தொலைக்காட்சி சீரியல்கள் அவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுக்கின்றன ? தொகுத்துப் பார்த்தால் பெரும்பாலான திரைத் தொடர்களில் பெண்கள்தான் சூழ்ச்சிகள், சதிகள் நிறைந்த தந்திரசாலிகள். மேலும், ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் ஆசைப்படுவார்கள். அந்த ஆண் ஒரு நாகமாக இருந்தால் இரண்டு பெண் நாகங்கள் ஆசைப்படும். இப்படிப்பட்ட திரைத் தொடர்களில் இருந்து முற்போக்கான விடையங்களை,பெண் விடுதலையை, சமூக விடுதலையை, கற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் பெண்களுக்கு எதிராக எப்படிச் சூழ்ச்சிகள் செய்வது என்று வேண்டுமானால் கற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கைபேசிகளோடும் தொலைக்காட்சிகளோடும் தம் பொழுதைப் போக்கும் பெற்றோரும் முதியோரும் அதே அளவு நேரத்தை பிள்ளைகளோடு செலவழிக்கிறார்களா ? கிராம மட்ட சந்திப்புகளில் உங்கள் வளர்ந்த பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கும் போது பிள்ளைகளோடு கதைத்துக் கதைத்து உணவு பரிமாறுவீர்களா? பிள்ளையின் கண்களைப் பார்த்து உரையாடுவீர்களா ? என்று கேட்டால், கணிசமான தாய்மார் கூறுவார்கள், இல்லை பிள்ளைகளோடு ஒன்றாக இருந்து சாப்பிடும் சந்தர்ப்பங்கள் குறைவு என்று. பிள்ளைக்கு சோலி அதிகம். பிள்ளையும் கைபேசியில் கண்ணை ஒட்டிக்கொண்டிருக்கும். மனிதர்கள் முன்னெப்பொழுதையும் விட பாரதூரமான விதத்தில் பொழுது போக்கிகளாக மாறிவிட்டார்கள். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே முதியோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே பொழுதுபோக்குச் சாதனங்கள் பெருகிவிட்டன. கைபேசியின் கைதிகளும் தொலைக்காட்சியின் கைதிகளும் மெய்யான பொருளில் பிள்ளைகளை முழுமையாகக் கண்காணிப்பதில்லை . போதைப்பொருள் பாவனை தொடர்பான கருத்தரங்குகளில், துறைசார்ந்த மருத்துவர்களும் நிபுணர்களும் கூறுவார்கள், பிள்ளைகளின் கண்களை உற்றுக் கவனியுங்கள். அவை அசாதாரணமாகச் சிவந்திருக்கின்றனவா? பிள்ளையின் நடத்தைகளைப் பாருங்கள். அது எங்கே போகிறது? எப்பொழுது வருகிறது? யாரோடு சேர்க்கிறது? யாரோடும் சேர்வதில்லை? என்பவற்றைக் கவனியுங்கள். அது நித்திரை கொள்கிறதா? இல்லையா? ஒழுங்காகச் சாப்பிடுகிறதா? ஒழுங்காக மலம் கழிக்கிறதா? ஒழுங்காகக் குளிக்கிறதா? ஒழுங்காக ஆடை உடுத்துகிறதா? என்று கவனியுங்கள். பிள்ளைகளின் கண்களில் ,நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கவனியுங்கள்.பிள்ளைகளின் கைபேசிகளில் யார் யார் இருக்கிறார்கள்? யாரோடு கதைக்கும்போது பிள்ளை தனியே போகிறது? பிள்ளை அதிகம் தனிமையில் இருக்கிறதா? இல்லையா? என்று உற்றுக் கவனியுங்கள். தனிமையில் இருக்கும்பொழுது பிள்ளை என்ன செய்கிறது? என்று பாருங்கள். அதாவது ஒரு சிசிடிவி கமராவானது நடக்கும் சம்பவங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதுபோல பெற்றோரும் பிள்ளைகளை இடையறாது கவனிப்பார்களாக இருந்தால் ஒரு பிள்ளையும் பெற்றோரிடம் இருந்து தவறிப்போகாது. பிள்ளைகளைக் கையாள்வது பெற்றோருக்குப் பெரிய சவாலாகவும் இராது. எனவே கைப்பேசிகளின் காலத்தில்,பொழுதுபோக்குகளின் யுகத்தில், பெற்றோருடைய குடும்ப முகாமைத்துவத் திறன்களை அதிகப்படுத்த வேண்டியுள்ளது. பிள்ளை வளர்ப்புக்கான அறிவு சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியுள்ளது. ஒரு குடும்பத்தின் கொள்ளளவை அறிவுபூர்வமாக,விஞ்ஞானபூர்வமாக,அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. அரசுசார்பற்ற நிறுவனங்கள் கிராம மட்டத்திலும் அலுவலகங்களிலும் நிறுவனங்களிலும் திறன்களைக் கட்டியெழுப்பும் கருத்தரங்குகளையும் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்துவதுண்டு. ஆனால் அரசுசார்பற்ற நிறுவனங்களால் அழைத்து வரப்படுகின்ற வளவாளர்களில் அநேகமானவர்கள் யாந்திரீகமானவர்கள். சமூகத்தை அதன் பண்பாட்டு அம்சங்களின் ஊடாக அணுக முடியாதவர்கள். பெரும்பாலான அரசசார்பற்ற நிறுவனங்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்கள் ஒரே மாதிரியானவை. அங்கேயே ஒரு யாந்திரீகப் பண்பு வந்து விடுகிறது. படைப்புத்திறன் இருக்காது. எனவே சமூகத்தின், குடும்பங்களின், தனிநபர்களின் கொள்ளளவைக் கட்டியெழுப்பும் விடயத்தை அரசசார்பற்ற நிறுவனங்கள் மட்டும் கையாள முடியாது. அது ஓர் அரசியல், பண்பாட்டுச் செயல்திட்டம்.குடும்பங்களின் கொள்ளளவைக் கட்டி எழுப்புவது,பிள்ளை வளர்ப்புத் திறனைக் கட்டியெழுப்புவது,சமூக முகமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது,முரண்பாடுகள் மோதல்களாக வராமல் தடுப்பதற்குரிய திறன்களைக் கட்டியெழுப்புவது, உள்முரண்பாடுகள் குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுப்பதற்குரிய அறிவு சார் திறன்களைக் கட்டியெழுப்புவது…..போன்ற எல்லாமே அரசியல் செயற் திட்டங்கள்தான். அது முழுக்கமுழுக்க அரசியல் பண்பாட்டு மறுமலர்ச்சி. அதற்கு ஒரு அரசியல் தரிசனமும் அதன் வழிவந்த பண்பாட்டு தரிசனமும் இருக்க வேண்டும். அதற்கு அரசியல் தலைமைத்துவம் வேண்டும் பண்பாட்டுத் தலைமைத்துவம் வேண்டும். ஆனால் கொடுமை என்னவென்றால், நமது அரசியல்வாதிகள் தங்கள் கட்சிக்குள் வரும் விவகாரங்களையே தீர்க்க முடியாதவர்களாக, தங்களுடைய கட்சிக்காரனுக்கு எதிராகவே வழக்குப் போடுகிறவர்களாக, தங்கள் கட்சியைக் கொண்டுபோய் நீதிமன்றத்தில் நிறுத்துகிறவர்களாகக் காணப்படும் ஒரு சமூகத்தில், குடும்பங்களுக்குள் வரும் முரண்பாடுகள்,குற்றச்செயல்களாக விகார வளர்ச்சி அடைவதைத் தடுக்கும் விதத்தில் குடும்பத் தலைமைத்துவத்தின் முகாமைத்துவத் திறன்களைக் கட்டியெழுப்புவது யார்? https://www.nillanthan.com/8224/
  5. புனைகதாசிரியராக யாரையும் புனிதப்படுத்துவதோ யாருடைய புனிதங்களை உடைப்பதோ என்னுடைய நோக்கமல்ல-நட்சத்திரன் செவ்விந்தியன் By க.விக்னேஸ்வரன் - March 22, 2026 நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற அருண் அம்பலவாணர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவரது இரண்டு கவிதைத் தொகுப்புகள் ‘வசந்தம் 91’, ‘எப்போதாவது ஒருநாள்’ ஏற்கனவே வெளிவந்துள்ளன், தன்னுடைய முதற் கவிதைத் தொகுப்புகளின் வழியே ஈழ இலக்கியத்தில் தனக்கான கவனத்தை பெற்றவர் நட்சத்திரன் செவ்விந்தியன். தற்போது பத்திரிகைகளில் தனது தனிப்பட்ட இணையதளத்தில் அரசியல் மற்றும் இலக்கிய விமர்சனங்களை எழுதியும் வருகிறார்.முகாமுகம் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. இத்தொகுப்பை மையமாக வைத்து இந்த உரையாடல் இணையம் வழியே எடுக்கப்பட்டுள்ளது. நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற குறிப்பிட்ட புனைபெயரைச் சூடிக்கொண்டதற்கான பின்புலம் என்ன? என்னுடைய பத்து வயதில் நான் மிக்க காதலோடு படித்து ரசித்தவை ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் முதலிய சித்திரக்கதைப் புத்தகங்களே. அப்புத்தகங்களில் செவ்விந்தியப் பாத்திரங்கள் இடம்பெற்றன. அதில் வந்த கவர்ச்சியால் செவ்விந்தியன் என்று பெயர் வைத்தேன். நட்சத்திரன் என்பது இரண்டு பெயர்கள் இடம் பெறவேண்டும், தனியே தமிழர் பெயர்கள் போல (அப்பாவின் பெயரின் முதலெழுத்து அல்லாது) சிங்களவரின் பெயர்கள் போல இரண்டு பெயர்கள் வரவேண்டும் என்கிற ஆர்வத்தில் வைத்த இன்னொரு கவர்ச்சிப் பெயர். இப்போதும் நட்சத்திரன் என்கிறதில் எனக்குத் திருப்திதான். ஆனால் செவ்விந்தியன் என்கிற பெயரில் எனக்குச் சிறிது அசௌகரியம் உண்டு. இதற்குக் காரணம், இப்போது செவ்விந்தியர்(Red Indians) என்கிற பதம் பிழையாக, அவ்வினத்தவர்களை இழிவாக இனவாதத்தோடு சித்தரிக்கப்படுகிறது என்பதற்காகக் கைவிடப்பட்டு விட்டது. பூர்வகுடி அமெரிக்கர் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகரீகமான பதம். ஆனால் இப்போது என் பெயரை மாற்ற முடியாத அளவுக்குக் காலதாமதமாகிவிட்டதால் அதனையே பயன்படுத்துகிறேன். உங்கள் வாழ்க்கைச் சூழல் பற்றியும் (முடிந்தால் மட்டுமே ) அதனூடாக வாசிப்பு,இலக்கிய வாசிப்பு போன்றவற்றிலிருந்து எழுதுவதை நோக்கி நகர்ந்து வந்த பின்புலம் பற்றியும் சொல்ல இயலுமா? என்னுடைய ஐந்து வயதில் அம்மா இறந்து விட்டார். என்னுடைய ஏழு வயதில் அப்பா இறந்துவிட்டார். இறக்கும்போது அப்பா உதவி அரசாங்க அதிபராக(தாசில்தார்) இருந்தார். 71 வயதான என் தாத்தாவே என்னையும் என் அண்ணாவையும் தங்கையையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்று தன் மகள்களான சின்னம்மாக்களின்(சித்திகள்) உதவியோடு வளர்த்தார். எனக்கு மூன்று அற்புதமான சின்னம்மாக்கள். என் மூத்த சின்னம்மாவே என்னுடைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்திற்குக் காரணம். ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கக்கூடிய அவரே எனக்கும் அண்ணாவுக்கும் ஆரம்பத்தில் அம்புலி மாமா, ரத்ன பாலா முதலிய சிறார் இதழ்களை வாங்கித்தந்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவர் விவசாயம் சம்பந்தப்பட்ட ஓர் அரசாங்க உத்தியோகத்தராக இருந்தார். தனது சம்பளத்தில் எமக்குப் படிக்க புத்தகங்கள் வாங்கித் தந்தார். பெருந்துயரம் என்னவென்றால் என் அப்பா இறந்த அடுத்த வருடம் திருமணமாகாமலிருந்த என் முத்தச் சின்னம்மா என்னுடைய எட்டு வயதில் தற்கொலை செய்து கொண்டார். வெறும் நாலு வருடங்களில் என் தூண்களாக இருந்த அம்மா, அப்பா, மூத்த சின்னம்மா என மூவரை இழந்துவிட்டேன். எட்டு வயதில் அந்தத் துயரம் தெரியவில்லை எனக்கு. அந்த மூன்று சாவு வீடுகளும் அப்போது கொண்டாட்டமாகவே இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்தச் சாவுகளுக்காக நான் அழுதேன். இப்போது இதையும் கண்களில் கண்ணீரோடேயே சொல்கிறேன். மூத்தச் சின்னம்மா வாங்கித்தந்த சிறுவர் இதழ்களை பிறகும் தொடர்ந்து தாத்தா வாங்கித் தந்தார். என்னுடைய 12 வயதில் எமது வடமராட்சிப் பிரதேசத்தில் சிறப்பான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரியில் படிக்க வைக்கும் தெரிவுப் பரீட்சையில் நான் முதலாவதாகத் தேறினேன். எனக்கு இப்போதும் மிகத்தெளிவாக ஞாபகமிருக்கிறது , தாத்தா முதல்நாள் பஸ்ஸில் ஹாட்லிக் கல்லூரி அனுமதிக்கு என்னைக் கூட்டிச் சென்றுவிட்டு வரும்போது நம்மூர் பஸ் நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் எனக்கு ரத்னபாலா வாங்கிக்கொடுக்கக் கேட்டபோது புத்தகக் கடை உரிமையாளர் “ரத்ன பாலா இல்லை, கோகுலம் இருக்கிறது. இது ரத்ன பாலாவை விடச் சிறப்பானது” என்று சொன்னார். நான் ரத்ன பாலாவே வேண்டும் என்று அடம்பிடித்தேன்..கடைக்காரரோ “இல்லை உங்கள் பேரன் வளர்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவனுக்குக் கோகுலம் தான் சரியாக இருக்கும். பிடிக்காவிட்டால் திரும்பிக் கொண்டு வாருங்கள். நான் பணத்தைத் திருப்பித் தருவேன்” என்றார். கோகுலத்தை வீட்டுக்குச் சென்று வாசித்தேன். அது என் அப்போதைய வயதுக்கு ரத்ன பாலாவை விடச்சிறப்பாக இருந்தது. அந்தக் கடைக்காரர் எனக்குச் செய்த நன்மை அப்போதே புரிந்தது. ஹாடலிக் கல்லூரிக்குச் செல்வதற்காக என் ஒரு மாமனார் அந்தக்கால ஆடம்பரப் பொருளான ஒரு புதிய ஏசியா சைக்கிள் வாங்கித் தந்தார். அந்தச் சைக்கிளில் நான் நம்மூரில் உள்ள எல்லா நூலகங்களுக்கும் நேரம் கிடைக்கிறபோது செல்வேன். கோகுலமும் அலுப்புத் தரக் குமுதம், ஆனந்தவிகடன், தினசரிப் பத்திரிகைகள் எல்லாம் படித்தேன். அந்த நூலகங்களில் நான் முதல் முதலாகப் படித்த இலக்கியச் சஞ்சிகை டொமினிக் ஜீவாவின் மல்லிகை. நான் ஈழ யுத்தத்தின் குழந்தை. எங்கள் பள்ளிப் பருவகாலம் முழுவதும் ஈழ யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. யாழ் குடநாடு புலிகளின் கட்டுப்பாடு, பின் இந்தியச் சமாதானப் படைகளின் கட்டுப்பாடு மீண்டும் புலிகளின் கட்டுப்பாடு என்று ஆட்சிகள் மாறினாலும் சமாதானமில்லாத காலமாகவே இருந்தது. ஆகவே உள்ளூராட்சி சபைகளின் கீழ்வரும் நூலகங்கள் சிறப்பாக இயங்க முடியவில்லை. என்னுடைய பதினாலாவது வயதில் மாலை நேரத் தனியார் ரியூட்டறி வகுப்பில் தமிழாசிரியராக இருந்தவர் செ. யோகராசா என்கிற எழுத்தாளரும் விமர்சகரும் ஆனவர். பின்னாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆனவர். அவர் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு தனது தனிப்பட்ட நூலகத்தில் வைத்திருந்த ஈழ, தமிழக கிளாசிக்கல் புனைகதை நூல்களையும் கவிதைத் தொகுதிகளையும் இலக்கிய சஞ்சிகைகளைமும் மிகத் தாராளமாகப் படிக்கத் தந்தார். சிறு பத்திரிகைகளான அலை( யாழ்ப்பாணம்), படிகள்(பெங்களூர்), மீட்சி(தமிழகம்) முதலிய இதழ்களை அவரிடமிருந்து பெற்றே வாசித்தேன். அவ்வயதில் அவ்விதழ்களில் வரும் புனைவு சாரா(அல் புனைவு) எழுத்துக்களில் ஒரு 65 வீதம் தான் எனக்குப் புரிந்தாலும் அந்த மொழி தந்த பரபரப்புக்காகவும் பரவசத்துக்காகவும் படித்தேன். இதை விடச்சுவாரசியமானது நான் அவற்றைப் படித்த காலங்களும் இடமும். பாடசாலையில் விஞ்ஞானப் பாடத்தை அல்லது கணிதப் பாடத்தை ஆசியர் படிப்பித்துக் கொண்டிருக்கும் போது நான் பாடப்புத்தகத்துக்குள் மறைத்து வைத்து ஓர் இலக்கியப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன். ஒன்பதாவது வகுப்பில் ஒருநாள் என் விஞ்ஞான ஆசிரியை நான் வேறேதோ புத்தகத்தை மறைத்துப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பிடித்துவிட்டார். கிட்ட வந்து புத்தகத்தை எடுத்தார். அது இலங்கைப் பேராசிரியர் வி.செல்வநாயகம் எழுதிய தமிழிலக்கிய வரலாறு. அவர் கோபப்படுவதற்குப் பதில் ஆச்சரியப்பட்டார். இந்த வயதில் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாயா என்று என்னிடமே திருப்பித் தந்தார். நான் புத்தகத்தை வாங்கி பையினுள் வைத்து விட்டு ஒன்றுமே நடவாதது போல பிறகு அவரின் விஞ்ஞானப் பாடத்தில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினேன். எங்களுக்கு எட்டாம் வகுப்பில் கணித ஆசிரியராக இருந்தவர் அர்ப்பணிப்போடு படிப்பித்தாலும் அப்பாவி. வகுப்பில் எத்தனை பேர் இருக்கிறார்கள் போன்ற விடயங்களைக் கருத்தில் எடுக்கமாட்டார். நான் அவரது வகுப்பு தொடங்கி அவர் கரும்பலகைப் பார்த்து எழுதத் தொடங்க ஓசைப்படாமல் வகுப்பை விட்டு வெளியேறி ஒரு பச்சோந்தியைப் போல அனைத்து வகுப்புகளையும் கடந்து பாடசாலை நூலகத்திற்குச் சென்று விடுவேன். என் சக மாணவர்கள் யாருமே காட்டிக் கொடுக்கமாட்டார்கள். நூலகத்தில் நான் செங்கை ஆழியானின் கங்கைக் கரையோரத்தை விட்ட இடத்திலிருந்து அடுத்த பாட ஆசிரியர் வகுப்புக்கு வருவதற்கு முதல்வரை படிப்பேன். இந்தச் சாகசத்தில் நான் ஒருபோதும் மாட்டுப்பட்டு தண்டிக்கப்படாதது எனக்கே ஆச்சரியம் தான். என் பதினாறு வயதில் இவன் என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். அதைத் திசை என்கிற வாரப்பத்திரிகைக்கு அனுப்பினேன். திசையின் இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் அ.யேசுராசா. கவிஞரும், சிறுகதாசிரியரும் விமர்சகருமான அ. யேசுராசாதான் இருபதாம் நூற்றாண்டில் பிற்பாதியில் ஈழத்தில் வெளிவந்த தரமான இலக்கியச் சிற்றிதழான அலையின் ஆசிரியராகக் கடைசிவரை இருந்தவர். பிரசுரிப்பதற்குத் தேர்வானதாகப் பிரசுரிப்பதற்கு முதல் வாரத்திலேயே பாராட்டி அஞ்சலட்டை எழுதி அனுப்பினார். இன்றும் எனக்கு என் சின்னக்கால இலக்கிய ஆசான் அ.யேசுராசாவே. அதற்குக் காரணம் என் பதின்ம வயதுகளிலேயே இலக்கியத்தின், கலைகளின் அடிப்படை “இலக்கணங்களை” எனக்குக் கற்றுத் தந்தது அலை சிற்றிதழ்களே. நான் எழுத்தாளரான பிறகு ஊரில் எனக்குக் கிடைத்த முதிய நண்பர் எழுத்தாளரான குப்பிளான். ஐ.சண்முகம். அவரும் அலை சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர். அவர் எனக்கு இன்னும் தரமான சிறப்பான இலக்கியங்களைத் தன் தனிப்பட்ட நூலகத்திலிருந்து படிக்கத் தந்தார். அவற்றில் முக்கியமானவை மகத்தான ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள், ஜத்மாத்தவ்வின் அன்னை வயல், தாஸ்தேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், கொரலென்கோவின் கண் தெரியாத இசைஞன் இப்படிப் பல நாவல்கள். பிறகு, இந்தியச் சமாதானப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறி ஓர் ஆறு மாதங்கள் தமிழீழம் பாதிக் கனவில் மறையும் பறவைபோலவும் Virtual Reality போலவும் புலிகளிடமிருந்து. அந்தச் சமாதானம் நீடிக்கவில்லை. 1987 இலங்கை இந்தியச் சமாதானத்தைக் குழப்பிய போரிலிருந்து பிறகு வந்த அனைத்துப் போர்களின் சிற்பியான பிரபாகரனே இரண்டாம் ஈழப்போரையும் தொடங்கினார். நான் 17 வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குத் தப்பியோடினேன். பதினாறாம் வயதில் முதற் சிறுகதை எழுதியதாகச் சொல்கிறீர்கள், அப்படியானதொரு நிலையில் முதல் புத்தகமாகக் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளீர்கள். புனைவுகளில் தொடங்கிய பயணம் கவிதைகள் பக்கம் மாறியதன் இரகசியம் என்ன? சிறுகதை, நாவல்களைப் படித்தது போலவே கவிதைகளையும் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்த ஈழக்கவிதைகளின் தொகுப்பான “பதினொரு ஈழக்கவிஞர்கள்” மற்றும் “மரணத்துள் வாழ்வோம்” என்கிற போர்க்கால ஈழக்கவிதைகளின் தொகுப்பு ஆகியவற்றைப் படித்தேன். இவ்விரு தொகுப்புக்களிலும் இடம்பெற்றிருந்த கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்களையும் தேடித் தேடிப் படித்தேன். யாழ்ப்பாணத்தில் அப்போது கிடைத்த தேவதேவனின் சிறு தொகுப்பையும் சுகுமாரனின் சிறுதொகுப்பையும் சோலைக்கிளியின் எட்டாவது நரகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படித்தேன். என் அயலவரான பழனி என்கிற NLFT போராட்ட இயக்க அண்ணா எனக்கு மரணத்துள் வாழ்வோம் தொகுப்பையும் வ.ஜ.ச ஜெயபாலனின் சூரியனோடு பேசுதலையும் இரவலாகப் படிக்கத் தந்தார். (சில மாதங்களிலேயே என் வீட்டுப் பின்புறத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் பழனி அண்ணாவும் கெங்கன் அண்ணா என்கிற இன்னொரு NLFT உறுப்பினரும் உதைபந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் “கைது செய்யப்பட்டு” கொண்டு செல்லப்படுவதைக் கண்டேன்..இருவரும் பின்னர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்) இதே காலத்தில் தமிழில் வந்த மொழிபெயர்ப்பு கவிதைகளையும் படித்தேன். பதினேழாம் வயதின் ஆரம்பத்தில் ஈழப்போரின் உச்சத்தில் தற்செயலாகக் கவிதை எழுதிப் பார்த்தேன். பதினேழு வயது என் வாழ்வில் மிக முக்கியமான காலம். ஒரு திரைக்கலைஞனாக திரைப்பட நெறியாளராக வரவேண்டும் என்கிற பதின்ம வயதுக் கனவு தீவிரமாக என்னுள் எரிந்து கொண்டிருந்த காலம். இத்தனைக்கும் தமிழ் வணிகப்படங்களை விடத் தரமான சினிமாக்களை நான் பார்த்தது மிகக் குறைவு. மின்சாரமே இல்லாத அக்காலப் போர்க்கால யாழில் திரையரங்குகளோ, தொலைக் காட்சிகளோ இல்லை. அலை சஞ்சிகையில் வந்த தரமான உலகத் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளைப் படித்தது, அலை ஆசிரியர் யேசுராசா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குச் சென்று விட்டு வந்து சொன்ன கதைகளைக் கேட்டது, யாத்ரா சிறுபத்திரிகையில் வந்த சினிமாக் கட்டுரைகளைப் படித்தது, வெங்கட் சாமிநாதனின் சினிமா சம்பந்தமான சில கட்டுரைகளைப் படித்தது, முக்கியமாக செர்கீ ஐசென்ன்ஸ்டைனின் பொட்டம்கின் போர்க்கப்பல் சினிமா பற்றிய சில கட்டுரைகளைப் படித்தது முதலியவற்றால் வந்த ஒரு குருட்டுக் கனவு. என்னுடைய கனவு நனவாக வேண்டுமென்றால் நான் போர்க்கால யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு செல்லவேண்டும். ஆனால் அது முடியாத காரியம். ஏனெனில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்த மக்கள் குறிப்பாகப் போராடத் தகுதியான மாணவர்களும் இளைஞர்களும் வெளியேறுவதற்குப் புலிகள் தடை விதித்திருந்தார்கள். நானும் என் வயது சக மாணவனும் சட்டவிரோதமாகக் காடுகள் வழியாகப் புலிகளுக்குத் தெரியாமல் தப்பிப் போகும் ஓர் ஆபத்தான சாகசப் பயணத்தைத் தெரிவு செய்தோம். இந்தப் பயணம் தான் என்னைக் கவிஞனாக்கியது. என்னுடைய சாகசப் பயணத்திற்கு அப்போது 81 வயதாக இருந்த தாத்தா கடும் எதிர்ப்பாக இருந்தார். எனக்குள் எப்படி ஒரு மிருகம் வந்ததோ தெரியாது. அவர் என்னை கொழும்பு செல்ல அனுமதிக்காவிட்டால் நான் இயக்கத்துக்குப் போகவேண்டிவரும் என்று மிரட்டினேன். அவர் பேச்சிழந்து மிரண்டுபோனார். என்னுடைய சின்னம்மாவே தாத்தாவுக்குத் தெரியாமல் செலவுக்குப் பணம் தந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து மிதி வண்டிகளில் நானும் நண்பனும் எல்லைப்புற வன்னிக் காடுகளில் உள்ள நண்பனின் ஊரான மாங்குளத்துக்குப் போய் அங்குள்ள நண்பனின் உறவினர் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தோம். அங்கிருந்தே எம் வெற்றிகரமான பயணத்தின் திட்டம் தீட்டப்பட்டது. அது என் படைப்பிலக்கியத்தின் பொற்காலம். நான் எப்படிக் கவிஞனானேன் என்பதைப்பற்றி எழுதிய ஒரு விரிவான கட்டுரை கடந்த வருடம் சொல்வனம் இதழில் பிரசுரமானது. வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள் – சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026 புலிகளிடம் மாட்டுப் படாமல் காடுகள் வழியாகத் தப்பிச் சென்று இலங்கை அரசாங்கத்தின் கட்டுப் பாட்டிலிருந்த வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் கொழும்புக்குப் போனோம்..அந்தப் பயணத்தில் நான் கவிஞனாவேனோ என்கிற ஓர் அங்கலாய்ப்பு எனக்கு வந்தது. காரணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நம் வடமாகாணப் பிரதேசங்கள் மிக வறண்டவை. சங்ககால மொழியில் சொன்னால் பாலை. ஆனால் வவுனியாவிலிருந்து கொழும்பு செல்லும் ரயில் பயணம் முல்லை, குறிஞ்சி, மருதம் வழிப் பயணம். இந்த ரயில் பயணத்தைப் பற்றி பத்தாண்டுகளின் பின் ஒரு கவிதை எழுதினேன். இப்போது உங்கள் கேள்விக்குத் தெளிவான பதில் வருகிறது. யாழிலிருந்து விலகி கொழும்பு அடையும் வரையான ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திலேயே என் மகத்தான கவிதைகள் எல்லாம் பிறந்தன. அவற்றை அப்போதே எழுதவில்லை. அல்லது முழுமையாக எழுதவில்லை. ஆனால் கவிதை வாய் வழியானது. வாய் மொழி( Oral). அதனால் தான் எழுத்து வடிவம், வரி வடிவம் வருவதற்கு முதலே கவிதையும் பாடலும் உருவானது. ஆனால் சிறுகதை நாவல் அப்படிப் பட்டதல்ல. அது வரி வடிவங்களில் தங்கியிருப்பது. பதினேழு வயதில் நான் கொழும்பை அடைந்தபின் வாய் மொழியாக என்னுள் இருந்த கவிதைகளை வரி வடிவங்களாக எழுதினேன். அது அருவி பிரவகிப்பது போல மிக இலகுவாக இருந்தது. ஒரு கவிதை எழுத எனக்கு அதிக பட்சம் பத்து நிமிடங்கள் தான் தேவையாக இருந்தது. பெரும்பாலும் என் கவிதைகளை எனக்குத் திருத்தி செம்மையாக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஒரு கட்டுக் கவிதைகளோடுதான் நான் கொழும்பில் ஈழக் கவிஞர் சேரனைச் சந்தித்தேன். அதிலிருந்து ஒவ்வொரு கவிதைகளாகத் தான் ஆசிரியராக இருந்த சரிநிகர் மாத பத்திரிகையில் பிரசுரித்தார். பெரும்பாலான கவிதைகள் என் பதினெட்டு/பத்தொன்பது வயதுகளில் பிரசுரமானாலும் என் பெரும்பாலான கவிதைகள் வாய்மொழியாக உருவானவை என் பதினேழு வயது சாகசப் பயணத்தில்தான். அந்தக் கவிதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு என்னைச் சோம்பேறியாக்கியது. இக்கால மொழியில் சொன்னால் கவிதை T20 கிரிக்கெட்டுக்கு ஒப்பானதென்றால் சிறுகதை ரெஸ்ட் மச்சுக்கு ஒப்பானது. ஒரு சிறுகதையை வெறும் பத்து நிமிடத்தில் எழுதமுடியாது. ஒரு வாரமோ ஒரு மாதமோ தேவை. அது மட்டுமல்ல. கவிதையினதும் சிறுகதையினதும்( அதன் தொடர்ச்சியாகக் குறுநாவல் நாவலதும் அடிப்படைக் கூறுகள் (Elements) முற்றிலும் வேறுபட்டவை. சிறுகதை, நாவலின் அடிப்படையான மூலக்கூறுகளான கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண்/பிரச்சனை, theme, setting, point of view என்பவற்றில் ஒருவர் தேறவேண்டுமானால் வயதில் இருபதுகளின் இறுதிவரை காத்திருக்கவேண்டும். முக்கியமாகக் கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண் முதலிய மூலக்கூறுகளைச் சிறப்பாக விருத்தி செய்ய வாழ்க்கை அனுபவங்கள் தேவை. கவிதையின் அடிப்படை மூலக்கூறுகள் கவிதை உருவம், காட்சிப்புலம், உருவகமான மொழி, உருக்கமான உணர்ச்சி செழிப்பான மொழி, எதுகை, மோனை, ஒலிப்பொறிமுறைகள், பெரும்பாலும் கதைப்பின்னலால் அல்லாது காட்சிப் புலங்களாலும் ஒலிப்பொறிமுறைகளாலும் வெளிப்படுத்தப்படும் பாடுபொருள் முதலியவையே. இதனால் ஒருவர் தன்னுடைய பதின்ம வயதுகளின் இறுதியிலோ இருபதுகளின் ஆரம்பத்திலோ சிறப்பான கவிதை எழுதமுடியும். இன்னுஞ் சொல்லப்போனால் மகத்தான கவிஞர்களின் மகத்தான கவிதைகள் எல்லாம் அவர்களின் முப்பது வயதுகளுக்குள் எழுதப்பட்டவைதான். (விதி விலக்குகள் எங்கும் எப்போதும் உண்டு) மகத்தான ரூசியப் பெருங்கவி புஷ்கின் 37 வயதில் மரித்தார். மகாகவி பாரதியார் 38 வயதில் மரித்தார். ஈழத்து நவீன மகாகவி( து. உருத்திரமூர்த்தி) 44 வயதில் மரித்தார். புஷ்கின் தன் இருபதுகளின் இறுதியிலேயே சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார். பாரதியும் ஈழத்து மகாகவியும் சிறுகதைகளில் சோபிக்கவில்லை. ஆனால் சிறுகதைகளையும் தாண்டி ஒருவர் நல்ல நாவல் எழுதுவது அவரின் முப்பதுகளின் இறுதியில் அல்லது நாற்பதுகளின் ஆரம்பத்தில். உங்களின் முதற் கவிதைத் தொகுப்பில் வாழும் ஊரின் வழியே அடிக்கடி நடைப்பயணம் போவதைச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் அதனூடாக இளம்பருவம், தனிமை,கழி விரக்கம்,யுத்தம் அதன் துயரம்,மரணங்கள் எல்லாம் வருகின்றன. இன்று நாட்டில் யுத்தம் முடிந்து நீண்டகாலமாகிவிட்டது என்கிற போது அதே ஊரில் அதே நடைப்பயணம் போகும் பொழுதுகளில் என்ன மாதிரியான மனநிலை வாய்க்கிறது? 105.pdf நெடுங்காலத்தின் பின் மூன்று வருடங்களுக்கு முன் முன்பனிக்காலத்தில் என் பதினேழு வயதில் விட்டுச்சென்ற ஊருக்கு முதல்முறையாகத் திரும்பியபோது ஊர் எனக்குப் புதிராக இருந்தது. ஊர் மாறவில்லை. நான் தான் மாறிவிட்டேன். எனக்கு எது ஊர்? சிட்னியிலிருந்து சென்னைக்கு வந்து அங்குப் பத்து நாட்கள் நின்று பின் கொழும்புக்கு வந்தேன். கொழும்பில் இரு நாட்கள். பின் யாழ் நகரம். யாழ் நகரில் ஐந்தரை நாட்கள். ஒரு ஞாயிறு நண்பகல் வல்லைப் பாலத்தைக் கடந்து என் ஊரின் எல்லை சிறுநகரான நெல்லியடியில் வந்திறங்கினேன். என் வீட்டில் யாருமில்லை. சொந்த ஊரிலேயே நான் ஹோட்டலில் றூம் போட்டுத்தான் தங்கினேன். கடந்த மூன்றாண்டுகளாக என் சொந்த ஊரே மீள மீள வரும் என்னுடைய Favourite Holiday destination ஆக இருக்கிறது. என் பால்ய கால நண்பனுடன் உணவருந்தியபின் நான் ஊரை அளக்கத் தனித்து நடந்தேன். நெல்லியடி பெற்றோல் நிலையத்திலிருந்து தெற்காகச் செல்வது விக்னேஸ்வரா வீதி. ஊரைவிட்டு ஓடியபின் இத்தனை ஆண்டுகளாக அது நேராகச் செல்லும் வீதி என்பதே என் மனப்படத்திலிருந்தது. ஆனால் அது ஒவ்வொரு நூறு மீற்றர்களுக்கும் வளைந்து நெளிந்து சென்றது. இது என் முதற் புதிர். இரண்டாவது புதிர் என்னூர் மிகப்பெரிதானது என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் வெறும் 20 நிமிடங்களில் விக்னேஸ்வராக் கல்லூரியை நான் நடந்து அடைந்து விட்டேன். உண்மையில் என் ஊரில் நடந்து செல்வது ஒரு மாந்திரீக யதார்த்தவாத நாவலைப் படிப்பது போலிருந்தது. சொந்த ஊரிலேயே வழி தொலைவது நம் தலைமுறையினருக்கு அனாயாசமாக நிகழ்வது. நம் தவத்துக்குக் கிடைக்கும் வரம் அல்ல அது. பாவம். பிறகு வெறும் ஐந்து நிமிட நடையில் பதினேழு வயது வரை நான் ஊரில் பிறந்து வளர்ந்த என் வீட்டைக் கண்டுபிடித்தேன். தமிழில் கண்டுபிடித்தல் என்பதற்குப் பல அர்த்தங்கள். இதனை நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் இவ்விடத்தில் நான் Discover அல்லது Invent என்ற வினைச்சொல்லையா பயன்படுத்தவேண்டும் என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டிருக்கும். என் வீடே ஒரு பேய் வீடு போலிருந்தது. அதன் படலையைத் தட்டவோ திறக்கவோ எனக்கு அச்சமாயிருந்தது. பயத்தில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்துக்கொண்டு முன்னொரு காலத்தில் எங்கள் சுப்பர் மார்க்கெட்டாக இருந்த சம்பந்தர் கடைவரை நடந்தேன். சம்பந்தர் கடையடி ஒரு Ghost Town போலிருந்தது. ஓர் அரைப்பாலைவன Dirt Road சந்தி. எனக்கு அங்கு யாரையும் தெரியவில்லை. யாரும் என்னை இனங்காணவில்லை. இன்னொரு சிகரெட்டைப் பற்றிப் புகைத்தேன். ஊர் மாறிவிட்டது. நான்தான் மாறவில்லை. சிறுகதை எழுதுவதைப் பற்றி உங்கள் கருத்துகள் எனக்கு ஆர்வமூட்டுகின்றன. அவ்வழியே இக்கேள்வியைத் தொகுத்துக் கொள்கிறேன் முகாமுகம் தொகுப்பில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளில் வடிவ நேர்த்தியிலும் அவற்றின் விறுவிறுப்பான போக்குகளிலும் வாசிப்பவர்களுக்கு ஒருவிதமான சுவாரஸ்யமான விடயத்தை அளித்துவிடுகிறது, அதற்கான காரணம் தொகுப்பிலுள்ள கதைகளின் மையங்கள் இப்படியான மையங்களை எப்படி உங்களை வந்து சேர்க்கின்றன அப்படி வந்து சேர்ந்தாலும் சிறுகதைகளில் நீங்கள் செய்திருக்கும் நுட்பமான போக்குகளை எப்படித் தொடர்ந்து உருவாக்குகிறீர்கள்? உதாரணமாக நீங்கள் அமைப்பில் இல்லாதவர்கள் என்கிறீர்கள் ஆனால் அமைப்பு பற்றி எழுதப்பட்ட எவ்வளவு எழுத்துகளில் உங்களுடையது இன்னும் அமைப்பை நெருக்கமாகவே என் போன்றோர்களைப் பார்க்க வைக்கிறது அதனால் இக்கேள்வியை உங்களிடம் முன் வைக்கிறேன்? இதற்கான விடை முகாமுகம் தொகுப்பின் முன்னுரையில் இருக்கிறது. அப்பகுதிகள் பின்வருபவை. “ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விடப் போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்குத் துடுப்பு மட்டையையை விடக் கால்பந்தாட்டப் பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும். ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து யுத்தங்களைப்பற்றி லியோ ரோல்ஸ்ரோய் எழுதிய போரும் சமாதானமும் என்ற நாவல். அது என்னில் பெரிய உத்வேகமாகப் படிந்துவிட்டது. இக்கணம் இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது நான் மேலே கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கிறது. ரோல்ஸ்ரோய் நெப்போலிய யுத்தங்களை தன்நூலுக்குப் பாடுபொருளாக்கியது போல நான் என் சிறுகதைகளுக்கு ஈழ யுத்தத்தைப் பாடுபொருளாக்கியிருக்கிறேன்.ரோல்ஸ்ராயின் மாதிரியை நான் பின்பற்றத் தொடங்கியபின் என் பாதை இலகுவானது. கதைகளுக்குக் குறைவிருக்கவில்லை. மழைபோலப் பொழியத்தொடங்கியது. எழுதினேன்.” எனக்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்ட பிறகு என் ஈடுபாடுகள் அரசியலிலும் சமூக விஞ்ஞானங்களிலும் இலக்கியத்திலும் இருந்தது. எனக்கு அரசியல் என்றால் உக்கிரமாக அப்போது நடந்து கொண்டிருந்த ஈழப்போர். அதன் மையமாக இருந்தவர் பிரபாகரன்., தன் பாசிச ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தைச் சிதைப்பதற்காக இந்தியச் சமாதானப் படைகளுக்கெதிராகத் தொடங்கிய யுத்தத்திலிருந்து அதற்குப் பிற்பட்ட எல்லா யுத்தங்களினதும் சிற்பி பிரபாகரனே. என் இளமையை மட்டுமல்ல எம் தலைமுறையினரதும் இளமையைக் காவு கொண்டவர் அவரே. என் 25வது வயதில் காலங்கடந்து சிட்னிப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் கலைமாணிப் பட்டம் படிக்க அனுமதி கிடைத்தது. அரசியல் ஒரு பாடம். தென் அரைக்கோளத்திலேயே சமூக விஞ்ஞானங்களுக்கான மிகப்பெரிய பல்கலைக்கழக (ஒன்பது மாடி) நூலகம் அங்குதான் இருக்கிறது. Fisher Library அதன் பெயர். 1988 வரையான ஈழப்போராட்ட அரசியலையும் புலிகளின் அரசியலையும் தீவிரமாக விமர்சித்த Broken Palmyrah மூல ஆங்கிலப்பிரதி, நாராயண் சுவாமி எழுதிய Tigers of Lanka : From Boys to Guerrillas முதலிய நூல்களை அங்கு இரவல் பெற்றே வாசித்தேன். எங்கள் காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் புகழ் பெற்றிருந்த யாசர் அரபாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், மற்றும் பாசிஸ்டுகளாக பெயர்பெற்ற ஹிற்லர், ஸ்ராலின் ஆகியோரின் சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின் வந்த பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்பவற்றைப் படிக்க முடிந்தது. ஒரு புத்தகத்தைப் படித்தால் அது நூறு புத்தகங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும் யாசர் அரபாத் பாசிஸ்ட் அல்லர். பின்வந்த பலஸ்தீன விடுதலை இயக்கங்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்றனவும் பாசிச இயக்கங்கள் அல்ல.. இத்தகைய நூல்களைப் படித்து பிரபாகரனின் போராட்டத்தை மற்றவர்களோடு ஒப்பிட்டபோது பிரபாகரன் பற்றிய தெளிவான சித்திரம் வந்தது. பிரபாகரன் ஓர் “அக்மார்க்” பாசிஸ்ட். பல்கலைக்கழகத்தில் நான் விரிவுரைகளுக்கும் நூலகத்துக்குமே போய் வந்தேன். பரீட்சைகள் எழுதவில்லை. Assignments எதுவும் எழுதிக் கொடுக்கவில்லை. ஆகவே சரியான காரணம் சொல்லாவிட்டால் இனித்தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாது என்று என்னைக் கலைத்துவிட்டார்கள். நானும் நூறு விரிவுரைகளைக்குப் போனேன், இருநூறு புத்தகங்கள் படித்தேன். ஓர் ஆங்கிலப் புத்தகத்தை முழுமையாகப் படித்துக் கிரகிக்கும் அளவுக்கு என் ஆங்கிலப்புலமை வந்துவிட்டது. இது இப்போதைக்குப் போதும் என்ற திருப்தியோடு வந்துவிட்டேன். பிரபாகரனுக்கு ஒரு விமர்சன ரீதியான வாழ்க்கை வரலாறு எழுதவேண்டும் என்பது என் வாழ்நாள் காலக் கனவு.. பிரபாகரனுக்கு இன்றுவரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய முழுமையான வாழ்க்கை வரலாறுகள் இரண்டு வந்திருக்கின்றன. INSIDE AN ELUSIVE MIND(2003) and THE ROUT OF PRABHAKARAN(2024). இரண்டுமே தமிழகப் பத்திரிகையாளர் நாராயண் சுவாமியால் எழுதப்பட்டவை. இரண்டுமே எனக்குத் திருப்தியாக இல்லை. இதைவிட வேறு பலரால் எழுதப்பட்ட பிரபாகரனின் வாழ்க்கை வரலாறுகள் மொக்கையானவை. ஒரு தமிழ் நாட்டுக்காரரால் பிரபாகரனுக்கு வாழ்க்கை வரலாறு எழுத முடியாது. என்னைப்போன்ற ஓர் ஈழத்தவர்களால் தான் எழுதமுடியும்..என்னைவிடப் பிரபாகரனுக்கு மகத்தான விமர்சன ரீதியான வாழ்க்கை வரலாறு எழுதத் தகுதியானவர்கள் என்று நான் நம்பியிருந்தது பிரபாகரனின்(1954) தலைமுறையைச் சேர்ந்த இருவர். ஒருவர் கவிஞரும் பத்திரிகையாளரும் பேராசிரியருமான சேரன்(1958). மற்றவர் முன்னாள் புளட் இயக்க உறுப்பினரும் பத்திரிகையாளரும் Tamilnet ஸ்தாபன ஆசிரியருமான தராக்கி சிவராம்(1959). இருவருமே ஆரம்பத்தில் புலிகளின் தீவிரமான விமர்சகர்களாக இருந்தவர்கள். தொண்ணூறுகளின் இறுதியில் இருவருமே புலிகளால் வாங்கப்பட்டு புலிகளின் லாபியிஸ்ட் ஆகிவிட்டது நம் காலத்தின் மிகப்பெரிய சோகம்..சிவராம் 2005ல் இலங்கை அரசாங்க அனுசரணையோடு கொல்லப்பட்டுவிட்டார். கவிஞர் சேரனுக்கோ இப்போது மறுபடியும் புலிகளை விமர்சிக்கும் நிலையெடுப்பது தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை உறுதிப்படுத்தும் என்பதால் புலி சார்பு நிலையிலிருந்தே தன் வாதங்களை முன்வைத்து வருகிறார். போர் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே புலிகளைப் பற்றிப் படிப்பதே என் காதலாக இருந்தது. 2009ல் ஈழப்போர் முடிந்தபின் புலிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டுவது இலகுவானது.. உயிராபத்து இல்லாததால் முன்னாள் புலிப்போராளிகளும் புலிகள் சம்பந்தப்பட்டவர்களும் எழுதிய புலிகளைப்பற்றிய உண்மை வரலாறுகள் வர ஆரம்பித்தன. ஆனால் இந்தப்புத்தகங்களில் இல்லாத மகத்தான தகவல்கள் Primary Sources என்கிற முதன்மை ஆதாரங்களிலிருந்தே வரத்தொடங்கின. முக்கியமாக இறுதிப்போரில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் சொன்ன கதைகள். யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே புலிகளிலிருந்து வெளியேறிவந்த முன்னாள் போராளிகளின் கதைகள் எனக்குக் கேட்டவண்ணமே இருந்தது. ஆனால் யுத்தம் முடிந்தபின் வந்த முதன்மை ஆதாரங்கள் அளவிலும் தரத்திலும் அற்புதமாக இருந்தன. முதன்மை ஆதாரங்கள் பகுத்தறியப்பட்டு வேறு தகவல்களோடு ஒப்பாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. நம் கதையைக் கேட்க ஓர் இளிச்சவாயன் வந்துவிட்டான். இன்றைக்குத் தம் காட்டில் மழை என்று அண்டப்புழுகுகளை அவிட்டுவிடத் தயாராக இருக்கும் பல முன்னாள் புலிகளை நான் சந்தித்திருக்கிறேன். உண்மையில் உண்மையை அச்சொட்டாக ஒப்புவித்த புலிகளைவிட அண்டப்புழுகுகளை அவிழ்த்துவிட்ட புலிகளே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். ஏற்கெனவே புலிகளைப்பற்றிய கணிசமான தகவல் களஞ்சியம் இருக்கும் என்னிடம் பொய் சொல்லும்போது மாட்டுப்படுவார்கள். என் உடல் மொழி அவர்களை நான் நம்பவில்லை என்பதை வெளிப்படுத்தும்போது உடனே சுதாரித்துக்கொண்டு தாம் வாய்மொழியாகச் சொல்லும் கதைகளை இடைச்செருகல்களை வைத்து “எடிற்றிங்” பண்ணத்தொடங்குவார்கள். இவர்கள் விதிவசத்தால் தவறான தொழிலைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அற்புதமான புனை கதாசிரியர்களாக வந்திருக்க வேண்டியவர்கள். தமிழ்ச்சூழலில் புனைவு எழுத்தாளர்கள் அ புனைவுகளைப் படிக்கக்கூடாது. படித்தால் அது அவர்களின் புனைவு மொழியைப் பாதிக்கும் என்றொரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. இது உண்மையல்ல. பத்திரிகைத் துறை அ புனைவைச் சேர்ந்தது. பத்திரிகையாளர்கள் தம் பத்திரிகை அனுபவங்களை வைத்து அற்புதமான எழுத்தாளர்களான வரமுடியும். இதற்கு நல்ல உதாரணம் கேப்ரியல் கார்சியா மார்க்கியூஸ். அவருடைய நாவல்களின் பலங்களிலொன்று அவர் படித்த வரலாற்று மற்றும் லத்தீன் அமெரிக்க வரலாற்று அ புனைவுகளிலிருந்து வந்தது. ஆக உங்கள் இரண்டு கேள்வியின் சுருக்கமான 1. “உங்கள் கதைகளின் மையங்கள் எப்படி உங்களை வந்து சேர்ந்தன? “ 2. இவற்றிலுள்ள நுட்பமான போக்குகளை எப்படி உருவாக்குகிறீர்கள்? என்பாவற்றுச் சுருக்கமான விடையாக இதைச் சொல்கிறேன். கதைகளின் மையம் என்பதைக் கதைப்பின்னல்(Plot) என்று புரிந்து கொள்கிறேன். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகப் புலிகளைப் பற்றிப் பின்வரும் மூன்று வழிகளில் சேகரித்த தகவல்களிலிருந்தே அவை வந்தன. 1. நான் ஈழ யுத்தத்தின் குழந்தையாக யாழ்ப்பாணத்திலிருக்கும் போது என் கண்களாலும் காதுகளாலும் புலிகளைப்பற்றிப் பெற்ற என் பட்டறிவு. என் வயது என் வகுப்பு நண்பர்கள், உறவினர்கள், என் அயல் வீட்டுக்காரர்கள், என் நண்பர்களின் சகோதரங்கள் முதலிய பலர் புலிகளில் சேர்ந்து போராடி இறந்திருக்கிறார்கள். இதில் இறக்காதவர்கள் இப்போதும் உயிரோடிருக்கிறார்கள். மேற்கூறிய வகைகளுக்குள் வரும் புலிகளால் வேட்டையாடப்பட்ட மாற்று விடுதலைப் போராளிகள். 2. புலிகளைப் பற்றி வந்த அ புனைவு வரலாற்று நூல்கள், நம்பகரமான அச்சு மற்றும் இணையச் செய்திகள். 3. யுத்தம் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று வந்த முன்னாள் புலிகள் முதன்மை ஆதாரங்களாக நேரடியாக மற்றும் தொலைப்பேசி, இணைய வழிகள் முலமாக வழங்கிய வாக்குமூலங்கள். நேரடியான பதிவுகளில் அல்லது உங்கள் விசாரணைக் குறிப்புகள் போன்றவற்றில் அமைப்பின் மீதான பல்வேறு விமரிசனங்களை நான் வாசித்திருக்கிறேன் இப்படியாக இத்தொகுப்பை மேலோட்டமாக எடுத்துக் கொண்டாலும் விமரிசனங்களை மீறி அமைப்பின் மேலே வெளிப்படும் காதலையும் அதன் தலைவர்களின் மீதான நெகிழ்ச்சியான மையத்தையும் தொகுப்பு தன்னையறியாமல் வெளிப்படுத்தும் இடங்களை இத்தொகுப்பின் ஆசிரியராக எப்படிப் பார்க்கிறீர்கள்? முகாமுகம் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. ஏறத்தாழ 12 ஆண்டுகளில் எழுதப்பட்ட கதைகள். 2011, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட கமக்காரன், கர்னலின் காமம் ஆகிய கதைகள் புலிகள் மீதான புனிதப் பிம்பத்தை உடைக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட கதைகள் என்று சரவணன் மாணிக்கவாசகம் சொல்கிறார். ஒரு புனை கதாசிரியராக யாரையும் புனிதப்படுத்துவதோ யாருடைய “புனிதங்களை “ உடைப்பதோ என்னுடைய நோக்கமல்ல. என்னுடைய நோக்கம் வாசிப்பில் பரவசத்தைத் தரக்கூடிய (The Pleasure of Reading) காலத்தை வென்று வாழும் புனைகதைகளை உருவாக்குவதே. பன்னிரண்டு ஆண்டுக்கால இறுதியில் நான் எழுதிய நீண்ட கதைகளான முள்ளும் மலரும், முகாமுகம் ஆகிய கதைகளே இத்தொகுப்பின் சிறப்பான கதைகள் என்பது சீரிய இலக்கிய வாசகர்களினதும் விமர்சகர்களினதும் மதிப்புரை. இவ்விரு கதைகளையும் புலிகளின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் விரும்பிப் படித்தார்கள். இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தக்கூடிய என்னுடைய பன்னிரண்டு கால இலக்கிய அறுவடைக்குக் கிடைத்த படைப்பு பரிசுகள். கவிஞர் சுகன் கனகசபை என்பவரே விதிவிலக்காக முள்ளும் மலரும் கதையைப் படித்து “இது உங்கள் முத்திரைக் கதையென்றாலும் ஒரு புலி ஆதரவுக் கதை எழுதியிருக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்த இரு கதைகளையும் சுட்டியே இந்தக் கேள்வியை நீங்களும் முன் வைக்கிறீர்கள். அ புனைவு எழுதும் போதே நான் எனக்குக் கடிவாளம் போட்டுக்கொண்டு எழுதவேண்டும். தரவுகள் நம்பகரமானதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். தருக்கங்கள் நியாயப்போலி(Fallacy) இல்லாமல் இருக்கும்படியாக வாதிக்கவேண்டும். புனைவுக்குக் கடிவாளம் கிடையாது. அது பறவைபோல பறக்கவேண்டும். புனைவின் மூலங்களான பாத்திரவாக்கம், கதைப்பின்னல், முரண் முதலியவற்றைத் தரையில் ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்துவதுபோலக் கட்டுப்படுத்த முடியாது. அதைக் கட்டுப்படுத்தும் திறன் எழுத்தாளருக்குக் கிடையாது. விட்டுப் பிடிக்கவேண்டும். பாத்திரங்கள் காலநிலை/வானிலை, புவியீர்ப்பு விசை இவற்றுக்கேற்கவே பறக்கும். பிறகும் வெற்றிகரமாக நம்பகரமான கதையாக ஒரு விமானத்தைப் போல பாதுகாப்பாகத் தரையிறக்கவேண்டும். பறப்பது மட்டும் புனைவல்ல. தரையிறக்கமும் ஆபத்தில்லாமல் நடக்கவேண்டும். இவையெல்லாம் நடந்தால் அது ஒரு வெற்றிகரமான புனைவு. மானிடப் புனைவு. “முள்ளும் மலரும்” , “முகாமுகம்” இரண்டும் புயலில் சிக்கினாலும் கடைசியில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானங்கள். அவற்றின் உயிர்பிழைப்புக்கு விமானி செய்த சமரசங்கள் போன்றதுதான் என் படைப்புச் செயன்முறை. இன்னொரு முறையில் சொன்னால் புனைவில் வரும் பாத்திரம் ஒரு பேயைப்போல எழுத்தாளருக்குள் இறங்குகிறது. பிறகு அதுதான் எழுத்தாளரை ஓட்டிச்செல்கிறது. போகிற போக்கில் அதுவே புனைவின் கதைப்பின்னலையும் முரண்களையும் உருவாக்குகிறது. எழுதி முடித்தபின்னர் தான் எழுத்தாளரே அதிசயிப்பார். “ இதை எழுதியது நான் தானா? அல்லது என்னுள் இறங்கிய பேயா? “ என்று. இவ்வுலகின் ஆகச்சிறந்த சிக்கல்களான காமம்,தனிமை,போதை போன்றவற்றில் உங்களின் பெரும்பாலான சிறுகதைகளின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றாலும் இவற்றில் நான் அதிகம் ரசனையுடன் அணுகியது தனிமை போன்ற குணத்தையே, தனிமை தொடர்ந்து உங்கள் தொகுப்பில் உலவும் அத்தனை மனிதர்களிடம் உள்ளது.அதை அவர்கள் ஒரு மிருகத்தைப் போலவே பழகி தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் இத்தனைக்கும் எவ்வளவு உறவில் அவர்கள் உறவாடினாலும், தொகுப்பில் தனிமை மீதான இவ்வளவு வெளிப்பாட்டிற்கான காரணம் என்னவாக உள்ளது? காமம், தனிமை, போதை போன்றவற்றை இவ்வுலகின் ஆகச்சிறந்த சிக்கல்கள் என்று உங்கள் கேள்வியில் சொல்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் காமமும் தனிமையும் போதையும் சிக்கல்கள் அல்ல. அவை மனிதரின் அடிப்படையான உயிரியல் உளவியல் தேவைகள். காமத்தையும் தனிமையையும் போதையையும் சிக்கலாக்கிக் கொள்வது அதை எதிர்கொள்ளும் மனிதர்களே தவிரக் காமமும் தனிமையும் போதையும் அடிப்படையில் சிக்கலானவை அல்ல. வாழ்க்கையில் பிரச்சனைகள் சவால்கள் இன்றி ஒரு பணக்கார “உயர்” சாதிக் குடும்பத்தில் யுத்தமோ பொருளாதாரப் பிரச்சனைகளோ இல்லாத காலத்தில் பிறந்து நல்ல பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல தொழில் பெற்று நிறையச் சம்பாதித்து விசுவாசமான ஒரு மனைவியை மணமுடித்து பிள்ளைகள் பெற்று அவர்களையும் சமூகத்தின் சிறப்பானவர்களாக்கி வறுமை, தோல்வி, துரோகம், இன்னபிற மானுட அல்லல்கள் இன்றி 90 வயதில் தூக்கத்தில் இறந்த ஒரு வென்ற மனிதனின் கதை நல்ல புனைவோ இலக்கியமோ ஆகாது. வாழ்க்கையில் தோற்ற மனிதனின் கதைதான், தப்பிப் பிழைத்த மனிதனின் கதைதான் நல்ல இலக்கியமாகும். நல்ல புனைவுக்கு நாடகப் பாங்கான களேபரமான சூழல் அவசியம். அவை வாழ்க்கையில் தோற்ற மனிதர்கள், திருடர்கள், கொலைகாரர்கள். காமுகர், அனாதைகள், போதைக்கு அடிமையானவர்கள், சூதாடிகள், ஒற்றர்கள், விபச்சாரிகள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், யுத்தக் காலங்களில் வாழ்பவர்கள், சைக்கோ பாத் வகையானவர்கள், குற்றவாளிகள், மன நோயாளிகள் முதலியோரின் கதைகளிலேயே வரும். அங்குதான் பாத்திரவாக்கம், கதைப்பின்னல், முரண் முதலிய கூறுகள் சிறப்பாக வரும். அங்குதான் மானுட மனதின் ஆழங்களுக்குச் சென்று முத்து எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். முள்ளும் மலரும் கதையின் மூல பாத்திரமான அனாதையான “ பிரிகேடியர் முகமட்” புலிகளால் சிறப்பான ஓர் ஒற்றனாகவும் தற்கொலைப் போராளியாகவும் ஆவதற்குப் பயிற்சி பெற்றவன். ஈழ யுத்தம் முடிந்தபின் அவன் கொழும்பில் வேறொரு போலி அடையாளமான சர்வதேசப் பல்கலைக்கழக மாணவனாகக் கைவிடப்படுகிறான். முகாமுகம் கதையின் முலபாத்திரமானவனுக்கு பெயரே இல்லை. கதிர்காமர் கொலையைச் செய்ய அவனை ஒரு குறிபார்த்துச் சுடுபவனாகப் புலிகள் உபயோகித்தபின் அவனை நட்டாற்றில் கைவிடுகிறார்கள். அவன் ஒரு போலிப்பெயரில் ஒஸ்றேலியாவில் அகதியாகிறான். அசல் அடையாளம் அற்ற இந்த இரண்டு பாத்திரங்களும் போதையையே தனிமையையோ விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. அவை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. தப்பிப் பிழைப்பதற்கு அவர்களுக்கு அவற்றைவிட வேறு வழிகளிலிருக்கவில்லை. காமம் பற்றிய அதீதமான சொல்லாடல்களில் சில இடங்களிலும் உங்கள் சிறுகதைகள் அதன் கலைத்தன்மை இழந்து நிற்கிறது என்றே நான் விமரிசனம் வைத்தால் உங்கள் பதிலடி எப்படியிருக்கும்? இக்குற்றச்சாட்டை இதுவரையில் வைத்தது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். இப்போதுதான் முதல் தடவையாக இளந்தலைமுறையைச் சேர்ந்தவரான உங்களிடமிருந்து வருகிறது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. உங்களுடைய ரசனை, கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை வைக்கலாம். ஆனால் இளந்தலைமுறை இலக்கிய வாசகர்கள் என் காமம் சார்ந்த சொற்களையோ, சொல்லாடல்களையோ உவப்போடு ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழில் ஆக மோசமான வசைச்சொற்களான “*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம் “ , “*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்” ஆகியவற்றை வரலாற்றில் முதன் முதலாக இலக்கியத்தில் பயன்படுத்தியது நானல்ல. கடந்த எழுபது வருடங்களுக்கு முதலே இச்சொற்கள் தமிழ்ப் புனைவுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முள்ளும் மலரும் கதையில் முகமட்டின் காதலியான ஒரு உக்ரேனியப் பெண் முகமட்டுக்கு நிராசையான காமத்தின் உச்ச உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவனுக்கு அனுப்பிய ரெக்ஸ் மெசேச்சில் தன் பெண்குறி என்பதற்குப்பதிலாக அந்த வசைச்சொல்லைப் பயன்படுத்திவிட்டாள் என்பதுதான் பல 65 வயது கடந்த முதியவர்களுக்குப் பிரச்சனை. அவர்கள் காலத்தில் கைத்தொலைபேசிகளோ, ரெக்ஸ் மெசேச்சொ இல்லை. அவர்கள் காதலிகள் அந்த வசைச்சொல்லைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதற்காக இந்த 2020 களின் இளந்தலைமுறை ஈழப்பெண்கள் பெண்கள் இச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? மேலும் என் கதாபாத்திரங்கள் வெளிநாட்டவர்கள். உக்ரேனியப் பெண், ஒஸ்றேலியப் பெண். நம் ஈழ, தமிழகப் பெண்களே வசைச் சொற்களை நெருக்கமான ஆண் நண்பர்களிடம் இக்காலத்தில் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்சனை என் கதைகளில் பெண்கள் இச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். ஆண்கள் பயன்படுத்தியிருந்தால் அந்த 65+ முதியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். இது தலைமுறை சார்ந்த, தலைமுறை மாற்றங்களை உணரத்தவறிய முதிய ஆண்களின் ஆணாதிக்க மனநிலையில் வெளிப்பாடு. எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே. எனினும் எல்லாச் சொற்களும் வசைச்சொற்கள் உட்படச் சந்தர்ப்பங்களுக்கேற்பவே அவற்றின் அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. எல்லாச் சொற்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கேற்ப, Denotation, Connotation என இரண்டு அர்த்தங்கள் உண்டு. Denotation என்பது ஒரு சொல்லின் அசலான அகராதி அர்த்தம். Connotation என்பது அகராதி அர்த்தத்திற்கு அப்பால் சந்தர்ப்பங்களுக்கேற்ப உணர்ச்சிகளையும் மறை பொருளையும் வெளிப்படுத்துவது. நூறாண்டுகளுக்கு முன் தமிழ்ப் பெண்கள் தம் கணவரைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. நீ என்று ஒருமையில் அழைத்ததில்லை. இன்றைய பெண்கள் பெயர் சொல்லி, நீ என்று, அவன் என்று சொல்லி தம் கணவனைக் காதலரை விளிக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கணவன் பலான படம் பார்த்தால் அவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துவிட்டான் என்ற கணக்கில் பிரச்சனையாக்கி சன்னதமாடுவாள் மனைவி. இன்றைக்கு மனைவியோ காதலியோ தமக்கு மூட் வந்துவிட்டால் களைப்பாயிருக்கிற கணவனிடமே ஸ்மாட் போனிலிருந்து ஒரு பலான வீடியோவைப் போட்டுக் காட்டி அவனைக் காம மூட்டுக்கு கொண்டு வருவாளவை. இதுபோன்ற ஒரு தலைமுறை மாற்றம்தான் பெண்கள் தம் கணவர் காதலரிடம் வசைச் சொற்களைப் பயன்படுத்துவது. அதனுடைய மறைபொருள் – Connotation என்ன? அன்பு, காமம், நெருக்கம். வேற்று ஆடவரிடமோ ஏன் சொந்த ஆண் சகோதரரிடமோ இந்த வசைச்சொற்களைப் பயன்படுத்த முடியாது. புலம்பெயர் வாழ்வு உருவாக்கும் அகச்சிக்கல்களையும் புறச்சிக்கல்களையும் எதிர்கொள்ளும் பொழுதுகளில் ஒருவரின் கலைத்தன்மை இன்னொரு கூர்மையான பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது என்றாலும் இவற்றின் ஊடாகவே தொடர்ந்து பயணிப்பதும் சில நேரங்களில் ஒருவரின் கலைத்தன்மை மழுங்கிவிடும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது இல்லையா? அகதி வாழ்வின் நெருக்கடியும், இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் போன்ற முனைகளிலிருந்து ஈழ இலக்கியம் விடுபட மறுப்பதன் காரணம் என்ன? உங்கள் தொகுப்பின் கதைகளும் இந்த விமர்சனப் பள்ளியிலிருந்து தப்பவில்லையே? இந்தக் கேள்வியிலிருந்து வரும் விமர்சனம் பல ஈழ மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்குப் பொருந்தும். எல்லாருக்கும் பொருந்தாது. ஷோபாசக்திக்கு இந்த விமர்சனம் மிகப்பொருந்தும். ஷோபாசக்தியினுடைய Masterpiece ஆன படைப்பு கொரில்லா குறுநாவல்தான். ம் குறுநாவல் சுமாரான படைப்பு. பொக்ஸ், இச்சா நாவல்கள் மோசமானவை, மொக்கையானவை. [இவற்றுக்கு நான் எழுதிய விமர்சன லிங் இணைப்புக்கள்.( பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம், இச்சா – ஷோபா சக்தியின் ‘மட்டரக காக்ரெயில்’ தயாரிப்பு: நட்சத்திரன் செவ்விந்தியன்) சலாம் அலைக் சுமாரானது. நாவல்களைப்போலவே அவர் நல்ல சுமாரான மற்றும் மொக்கையான சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் சொன்னபடியே அகதி வாழ்வின் நெருக்கடியும் இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து வருகிறது. சரியாகச் சொல்லப்போனால் அவரின் மொக்கை நாவல்களான பொக்சிலும் இச்சாவிலும் இவை சலிப்பூட்டும் அளவுக்கு மீள மீளச் சொல்லப்படுகின்றன. அதாவது Recycling செய்யப்படுகின்றன. அதனால்தான் பொக்சும் இச்சாவும் தோற்றன. “இவற்றின் ஊடாகவே தொடர்ந்து பயணிப்பதும் சில நேரங்களில் ஒருவரின் கலைத்தன்மை மழுங்கிவிடும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது” என்ற உங்கள் கேள்வியில் வரும் சில நேரங்களில் அழுத்தப்படவேண்டியது. ஷோபாசக்தியைப் போலச் சில ஈழ எழுத்தாளர்களின் விடயத்தில் இது சரியென்றாலும் எல்லா ஈழ எழுத்தாளர் விடயத்திலும் இந்த விடயம் சரியானதல்ல. ஏனெனில் எல்லா மானுடக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டவை. இதனை மிக அழகாகச் சொன்னவர் அமெரிக்கத் திரைக்கலைஞர் ஸ்டான்லி கூப்ரிக். அவர் சொன்னார் “எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டவை எல்லா சீனும் ஏற்கெனவே எடுக்கப்பட்டவை எமது பணி அதை மேலுஞ் செம்மையாக்குவதே” அகதி வாழ்வும் போரும் மானுட வரலாற்றில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அன்றிலிருந்தே இவை வாய்மொழி இலக்கியம் வழியாகவும் எழுத்துவழி இலக்கியம் வழியாகவும் சொல்லப்பட்டு வருகின்றன. உலகின் முதல் நாவலாகக் கருதப்படுவது ஜப்பானிய மொழியில் பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட The Tale of Genji. உலகின் முதல் நவீன நாவலாகக் கருதப்படுவது 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Don Quixote. ஆனால் இன்றை வரைக்கும் உலகின் எல்லா நாவலாசிரியர்களும் எழுதிய/ எழுதாத எல்லாக் கதைகளையும் ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைகளாக எழுத்து வரிவடிவங்களில் வசன நடையில் எழுதப்பட்டது, எழுதித் தொகுக்கப்பட்டது இற்றைக்கு ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதியாகமத்தில் தான். ஆதியாகமம் ஒரு நாவல் அல்ல, நூற்றுக்கணக்கான நாவல்கள். ஆதியாகமம் பல எழுத்தாளர்களால் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட வாய்மொழிக் கதைகளையும் இலக்கிய வடிவங்களையும் தொகுத்து அடிப்படையில் ஒரு மதநூலாக ஆக்கியதால் அதனை நாவல் என்கிற சொல்லப்பட்ட வடிவத்துக்குள் வைக்கமுடியவில்லையாம். என்னைப் பொறுத்த வரையில் ஆதியாகம் தான் நாம் அறிந்த எழுத்து வரி வடிவங்களில், வசன நடையில் வந்த உலகில் முதல் நாவல். ஆதியாகமம், அதை உள்ளடக்கிய வேதாகமம் இவற்றில் இல்லாத புதிய மானுடக் கதைகளையா இப்போது இருபத்தோராம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் சொல்லிவிட்டார்கள்? ஆக எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்ட, எழுதப்பட்ட கதைகள்தான். பாடுபொருட்கள் தான். அதை மேலுஞ் சிறப்பாக எப்படி எழுதுவது என்பதே சமகால எழுத்தாளர்களின் சவாலே தவிரப் பாடுபொருள் அல்ல பிரச்சனை. உங்கள் கேள்விக்கான இன்னொரு இரண்டாவது பதிலை ஈழப் போரிலக்கியத்தை தம் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய தமிழக வணிக இதழ்களின் அஜெண்டாவில் வைத்து விளக்கலாம். 2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்தப் போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பை பெற்று பிரபல்யமாகின்றன. ஈழ இலக்கியத்தைத் தமிழக வணிகத் தொலைக்காட்சி சீரியல்கள் போன்று மலினமாக்கிய காலம் இது. இதன் தொடர்ச்சியாக அகரமுதல்வன், வாசு முருகவேல் போன்ற ஈழ எழுத்தாளர்களும் வந்தார்கள். சீரிய இலக்கியம் சினிமா சீரியல்களான காலம். இந்தச் சினிமா சீரியல் வகை பெரும்பாலான படைப்புக்கள் காலத்தை வென்று நிலைக்கக்கூடியவல்ல. “அகதி வாழ்வின் நெருக்கடியும், இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் போன்ற முனைகளிலிருந்து ஈழ இலக்கியம் விடுபட மறுப்பதன் காரணம் என்ன?” என்கிற உங்கள் கேள்விக்குப் பதில் ஒன்றுதான் அது வணிக நோக்கங்கள். இக்காலத்தில் விதி விலக்கான ஈழ எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் அருந்ததி. அவர் எழுதிய ஈழத் தலித்திய நாவலான ஆண்பால் உலகு 2019 ல் வந்தது. கடந்த நாற்பதாண்டுகளில் வந்த சிறப்பான ஈழப்போர்க்கால ஈழத் தலித்திய நாவல். இரண்டாமவர் மீ டூ குற்றச்சாட்டுக்குள்ளான எழுத்தாளரான யதார்த்தனால் எழுதப்பட்ட 2022 வெளிவந்த நகுலாத்தை நாவல். அகதி வாழ்வு, ஈழப்போர், இயக்கத்தின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பவைதான் பாடுபொருட்கள். இதுகாலவரை வந்த சயந்தனின் நாவல்களை விட சோபாசக்தியின் பொக்ஸ், இச்சா, சலாம் அலைக் ஆகிய நாவல்களை விட, நான் மேலே குறிப்பிட்ட பல ஈழப்போரிலக்கிய சினிமா சீரியல் வகை நாவல்களைவிட நகுலாத்தை படைப்பாற்றலில் சிறப்பானது. உங்கள் நீண்ட கேள்வியின் கடைசியில் “உங்கள் தொகுப்பின் கதைகளும் இந்த விமர்சனப் பள்ளியிலிருந்து தப்பவில்லையே? “ என்று கேட்டிருக்கிறீர்கள். கவிதைகளிலிருந்து விடுபட்டு இப்போதுதான் முதல் புனைவிலக்கியமாக முகாமுகம் என்ற என் சிறுகதைத்தொகுதி வந்திருக்கிறது. பெங்களூரிலிருந்தே நீங்கள் என் தொகுதியை ஆடர் செய்து வாங்கியிருக்கிறீர்கள். இவ்வருடச் சனவரி பெப்ரவரி மாதங்களில் நீங்களே உங்கள் முகநூலில் என் புத்தகத்தை மூன்று முறை குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் முக்கியமானது “ வருடத்தின் முதற் சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் ஏமாற்றங்களை அளிக்கவில்லை என்பதே நிறைவானது” என்று தொடங்கி நீங்கள் உங்கள் முகநூலில் எழுதிய முகாமுகம் தொகுப்புக்கான Critically acclaimed மதிப்புரை. இப்போது என்னைப் பேட்டி காண்கிறீர்கள். இது என் தொகுப்புக்கான வெற்றி இல்லையா? தமிழகத்தின் முதன்மையான இலக்கியப் பதிப்பகமான காலச்சுவடு முதல் பதிப்பில் வந்த அனைத்து முகாமுகம் பிரதிகளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் விற்றுத் தீர்ந்தன. இரண்டு மாதங்களில் இப்போது இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது. இத்தனைக்கும் முகாமுகம் தொகுப்பைப் பற்றி தி இந்து நாளிதழில் யாரும் மதிப்புரை எழுதவில்லை. ஆனந்த விகடனிலோ குமுதத்திலோ கூட மதிப்புரைகள் வரவில்லை. ஆனந்த விகடன் என்னைப் பேட்டி காணவில்லை. எல்லா ஈழப் போரிலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய அதே பாடுபொருட்களான போர், அகதி வாழ்வின் நெருக்கடிகள், இயக்கத்தின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பவையே நானும் எழுதினேன். இப்போதுதான் நான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதே பாடு பொருட்களை வைத்து. அது வெளிவந்தபின் என் படைப்பாற்றலை மதிப்பீடுகளைக் காலத்தை விட மிகப்பெரிய இலக்கிய அளவுகோல் எது? ஷோபாசக்தியின் மாஸ்டர் பீஸ் கொரில்லா என்கிற உங்கள் பதில் பிடித்திருக்கிறது என்னைப் பொருத்தவரையில் ஷோபாசக்தி தன்னுடைய சிறுகதைகளிலும் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இந்த இடத்தில் ஈழ இலக்கியத்திலிருந்து வந்து அகரமுதல்வன் போன்றவர்கள் இங்கிருக்கும் அதிகார மையங்களுடன் தன்னை இணைந்து கொண்டு இங்கே அவர்கள் அடைந்திருக்கம் இன்னொரு அதிகார மையம் முக்கியமானது தானே. கிட்டத்தட்ட தமிழிலக்கியச் சூழலில் கூடவும் யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதைக் கூடவும் அவர்களே முடிவு செய்கிறார்கள் , இத்தகைய போக்கும் ஈழ இலக்கியத்திற்கு வலுச் சேர்க்கும் தானே? அதிகார மையங்களிருந்து இலக்கியம் மதிப்பிடப்படுவது இல்லை. காலத்தை வென்று வாழும் இலக்கியத்தை நேர்மையான விமர்சகர்கள் ஆரம்பத்தில் இனங்காட்டினாலும் பல தலைமுறையாக வரும் வாசகர்களே தீர்மானிக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் பூராகவும் சமகாலத்தில் சில அதிகார மையங்கள் குறிப்பிட்ட சில இலக்கியப்பிரதிகளையும் எழுத்தாளர்களையும் முன்னிறுத்தினாலும் அப்பிரதிகளையும் எழுத்தாளர்களையும் காலம் விரைவில் நிராகரித்துவிடும். இன்றைய ஆங்கில மொழி இலக்கிய உலகில் நாசகார அதிகார மையமாக இருந்து மொக்கை நாவல்களை முன்னிறுத்திக் கொண்டிருப்பது மான் புக்கர் பரிசு அமைப்பு. சில பல ஆங்கிலப் பதிப்பாளர்கள் புக்கர் தேர்வுக் குழுவில் அதிகார மையமாக இருந்து தமக்குள் இரகசிய வணிக பேரம்பேசல்கள் மூலம் தமது நலன்களுக்காக இலக்கியத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நேர்மையான ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் இதனைச் சுட்டிக்காட்டினாலும் அவர்களைவிடப் பதிப்பகங்கள் பலமாக இருப்பதால் சமகாலத்தில் விமர்சகர்களின் குரல் எடுபடுவதில்லை. இலக்கிய விருதுகளில் இட ஒதுக்கீடு, Populism என்பவற்றுக்கு இடம் இருக்கக்கூடாது. தமிழ்ச்சூழலிலும் விருது வழங்கும் அரசு சாரா நிறுவனங்கள் பல விருதுகள் மூலம் தம்மை இலக்கிய அதிகார மையங்களாக்குகின்றன. இதில் விஷ்ணுபுரம் விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது என்பன ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. அமெரிக்க விளக்கு விருது மட்டுந்தான் சர்ச்சைகளற்ற நேர்மையான தெரிவுக்குழு முலம் விருதைத் தெரியும் அமைப்பாக இருக்கிறது. இப்படி அதிகார மையங்களிலிருந்து தீர்மானிக்கப்படும் இலக்கியங்களைக் காலம் வெகு விரைவில் நிராகரித்துவிடும். அகரமுதல்வன்அதிகார மையமாவதற்கு முதல் அதிகார மையமானவர் ஷோபாசக்தி. அ.மார்க்ஸ் இலக்கியவாதி அல்லர். ஆய்வாளர். ஆனால் ஓர் அதிகார மையமான அவருக்கு இலக்கியத்தில் யாரை முன்னிறுத்தவேண்டும், புறக்கணிக்கவேண்டும் என்கிற தனிப்பட்ட நலன் சார்ந்த அஜெண்டா இருந்தது. 1998/1999 காலப்பகுதியில் ஷோபாசக்தி, சுகன் கனகசபை, கற்சுறா முதலிய பாரிஸ் வாழ் ஈழத்தமிழர் அ.மார்க்ஸை பாரீசுக்கு அழைத்தார்கள். அங்கு மார்க்ஸ் அவர்களின் மூளையைக்கழுவி இலக்கியமே எழுதத்தெரியாத சாரு நிவேதிதாவை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அடுத்த வருடம் சாரு நிவேதிதாவை பாரீசுக்கு அழைத்தார்கள். சாரு தன்னை விருந்தினராக அழைத்தவர்களுக்கு அங்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தார். அவர்கள் இரவல் பெற்றுக்கொடுத்த கமெராவையே திருடிக்கொண்டு இந்தியா வர முயன்றார். அவர்களின் பணத்தைத் திருடினார். பிறகு சாருவே ஓர் இலக்கிய அதிகார மையமாக வந்து இலக்கியத்தைப் பாழ் படுத்தினார். ஒரு விளம்பர நடிக மாடலாக பணம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டே சாரு இன்றுவரையும் மொக்கை இலக்கியங்களைப் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் அ.மார்க்சுக்கும் ரவிக்குமாருக்குமிடையில் முரண்பாடு வந்தபின் ரவிக்குமார் காலச்சுவடு சஞ்சிகையோடு நெருக்கமானார். 2000ம் ஆண்டு காலச்சுவடு சஞ்சிகையும் கவிஞர் சேரனின் சரிநிகர் வார இதழும் சேர்ந்து மிகப்பிரமாண்டமான தமிழ் இனி 2000 மாநாட்டை சென்னையில் ஒழுங்கு செய்தார்கள். விடுவாரா அ.மார்க்ஸ்? காலச்சுவடு கண்ணனும் அவர் தந்தையார் சுந்தர ராமசாமியும் பிறப்பால் பிராமணர்கள் என்பதை மட்டுமே வைத்து இந்த மாநாட்டைக் குழப்பப் பல அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பினார் அ.மார்க்ஸ். அதற்கு உதவியாக ஷோபாசக்தி முதலியவர்களைப் பயன்படுத்தினார். பிறகு ஷோபாசக்தியை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் அவரைப் பிரபல்லியமாக்கி ஷோபாசக்தியையே ஓர் அதிகாரமையமாக்கினார். ஓர் அதிகார மையமாக ஷோபாசக்தி இன்று செய்வதென்ன? தன்னைப்போலப் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின், அவர்களைப் பாதுகாப்பவர்களின் மொக்கைப் படைப்புக்களை அவர்களின் குற்ற வரலாறுகளைப் பணயமாக வைத்துக்கொண்டு முன்னிறுத்துவது. (உதாரணம் கிரிசாந்தின் மொக்கை நாவல்களான கொடிறோஸ், கல்விரல் என்பவற்றை முன்னிறுத்துவது). இதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் ஷோபாசக்தியின் Public Relations ஏஜண்டுகளாக தொழிற்படுகிறார்கள். மறுபுறத்தில் இலக்கியமே எழுத்தே எழுதத் தெரியாதவர்களுக்கு, அவர்களிடமிருந்து பணமும் சலுகைகளும் பெற்றுக்கொண்டு தன்வரலாறு, மற்றும் நாவலை ஒரு Ghost Writer ஆக ஷோபாசக்தி எழுதிக் கொடுக்கிறார். தன் கட்டுப்பாட்டில் இயங்கும் கருப்பு பிரதிகள் பதிப்பகம் மூலமாகப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து அதிகப் பணம் பெற்று அவர்களின் நூலை வெளியிட்டு பணமோசடி செய்கிறார். இலக்கிய அதிகார மையங்கள் யார் முன்னிறுத்தப்படவேண்டும் என்பதைத் தம் தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியே செய்வார்கள். இது இலக்கியத்திற்கு வலுச் சேர்க்காது. இலக்கியத்தைச் சம காலத்தில் பாழ்படுத்தவே செய்யும். ஆனால் காலம் அதிகார மையங்கள் முன்னிறுத்திய அனைத்துப் படைப்புகளையும் நிராகரிக்கும். இப்ப அகரமுதல்வனுக்கு வருகிறேன். அவரும் ஓர் அதிகார மையமாகி இருக்கிறார் என்கிறீர்கள். ஷோபாசக்தியாவது கொரில்லா என்றொரு மாஸ்டர் பீஸ் குறுநாவலும் சில நல்ல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அகர முதல்வன் எம்மாத்திரம்? காலம் அவர் படைப்புக்களையும் அவர் முன்னிறுத்தும் படைப்புக்களையும் மிக விரைவிலேயே நிராகரித்துவிடும். இலக்கியப் பயணத்தில் ஏதேனும் இலக்குகளையும் நோக்கி நகரும் எண்ணங்கள் உண்டா? உண்டு என்றால் அப்பயணத்தில் அடுத்தென்ன? என் முதல் கவிதைத்தொகுதியான வசந்தம் 91 என் இருபது வயதில் பிரசுரமானது. இரண்டாவது கவிதைத் தொகுதியான எப்போதாவது ஒருநாள் 25 வயதில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் நான் சில சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதினாலும் அவை எனக்கே திருப்தியாக இருக்கவில்லை. ஒஸ்றேலியாவில் சிட்னி நகரில் குடியேறிய பின் சில கவிதைகளே எழுத முடிந்தது. பிறகு ஒரு பத்தாண்டுகளுக்குப் படைப்பிலக்கியங்களே எழுதவில்லை. ஈழ அரசியல் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் குறிப்பாகப் புலிகளின் பாசிச அரசியலை விமர்சித்த கட்டுரைகளும் சில இலக்கிய விமர்சனங்களுமே எழுதினேன். பத்தாண்டுகளின் பின் கமக்காரன் என்கிற சிறுகதையை எழுதியபோது எனக்குத் திருப்தியாக இருந்தது. சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதுவதற்குரிய திறமை வந்தது எனக்கே தெரிந்தது. அதற்குப் பிறகு பிரவாகமாக முன்னையைப் போலக் கவிதைகள் வரவில்லை. ஒரு சில கவிதைகளே எழுதினேன். சிறுகதைகள், நாவல்களே இனி எனது வசதியான வடிவமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். பின் கர்னலின் காமம் என்கிற நீண்ட சிறுகதை ஒன்று எழுதினேன். அது இன்னும் திருப்தியாக இருந்தது. இக்காலத்திலேயே பல சிறுகதைகளுக்கான சில நாவல்களுக்கான கருக்கள் எனக்குள் உருவாகியது. சிட்னி நகரில் பல ஆண்டுகள் வசித்தபின் ஆங்கிலமும் வசமானபின் இப்போது என்னிடம் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதுவதற்கான கருவும் இருக்கிறது. ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளால் அவற்றை எழுத எனக்கு நேரமும் வசதியும் கிடைக்கவில்லை. கொரோனா காலத்தில் ஒரு வருடம் வேலையில்லாது இருந்தேன். அக்காலத்திலேயே என் Jaffnafashion.com வலைத்தளத்தை ஆரம்பித்தேன். முள்ளும் மலரும் சிறுகதையையும் முகாமுகம் நீள் கதையையும் எழுதினேன். பிறகு வேலை செய்யத் தொடங்கிய பின்னரும் ஓய்வு நேரங்களில் தடையின்றி புனைவுகள் எழுத முடிந்தது. சினிமாக் கலைஞராக வரவேண்டும் என்கிற என் கனவு பாதிக்கனவில் முறிந்தது. ஆனால் என்னுடைய புனைவுகளைக் குறிப்பாக முகாமுகம் நீள் கதையைப் படித்த பலர் அற்புதமான சினிமா ஆக்கக்கூடியது என்று விதந்துரைத்தார்கள். ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்து வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்து இப்போது வெற்றிமாறனின் ஆதரவோடு ஒரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஹசீன் அதம், மூன்று வருடங்களுக்கு முதல் ஒஸ்றேலியா வந்திருந்த போது என் கனகி புராணம் என்ற குறுங்குறு நாவலை (Novelette) படித்துவிட்டுச் சொன்னார். “உங்களால் நல்ல திரைக்கதைகளை எழுத முடியும். முழுநேரத் தொழிலாகவும் செய்யலாம். உங்கள் திரைக்கதைகளை விற்றுப் பண மீட்டுவதற்கு நான் உதவத் தயாராக இருக்கிறேன்” இனி கடவுள் விடும் வழி. பார்ப்போம். https://kanali.in/natchitra-sevindian/
  6. வெறுப்புப் பேச்சை ரசிக்கும் தமிழர்கள்? - நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை நல்லூரடியில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதை ஒழுங்குபடுத்தியது “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பு” என்ற அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதுதொடர்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகளின் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்தார்கள். நல்லூரில் அவர்கள் நடத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் அவர்கள் பொதுவாக அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டதற்கு பதிலாக அர்ஜுனா என்று சுட்டிப்பாகக் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும் என்று ஒருபகுதி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் தாங்கள் அர்ஜுனாவை மட்டும் அவ்வாறு குற்றம் சாட்டவில்லை என்றும் தமிழ்த் தேசியப் பரப்பில் வேறு அரசியல்வாதிகளும் அவ்வாறு வெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்திருக்கிறார்கள் என்றும் அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றார்கள். அதில் உண்மை உண்டு. வெறுப்புப் பேச்சு அர்ஜுனாவில் இருந்து தொடங்கவில்லை. அவருக்கு முன்னரே அது இருந்தது. தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்கள் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் ஜனநாயக இதயம் நோய் வாய்ப்படும்போது, தமிழ்த் தேசிய அரசியலில் பகை முரண்பாடு எது? நேசமுரண்பாடு எது? என்பதை பிரித்தறியத் தேவையான முதிர்ச்சியும் பண்பாடும் குறையும்போது வெறுப்பர்கள் வேட்டைப் பற்கள் துருத்திக் கொண்டு தெரிய மேலெழுகிறார்கள். நல்லூரில் நடந்த அந்தப் போராட்டத்தின் பின் ஏறக்குறைய அதே காலப்பகுதியில், வெவ்வேறு அரசு சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இணைந்து அர்ஜுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒரு முறைப்பாட்டை செய்து இருக்கிறார்கள். அண்மையில் அர்ஜுனா கிளிநொச்சி மக்களுக்கு எதிராகவும் மலையக மக்களுக்கு எதிராகவும் தெரிவித்த கருத்து தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளின் கீழ் அர்ஜுனா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது வேறு. ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராக அல்லது நபர்களுக்கு எதிராக அல்லது அமைப்புகளுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்களை சட்ட ரீதியாகக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்று அவர்கள் கருத்துவதாகத் தெரிகிறது. தமிழ்த் தேசியப் பரப்பில், கட்சிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த அதே கட்சிக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில் தொடங்கி இப்பொழுது வெறுப்பைக் கக்கும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு நிலைமை தோன்றியிருக்கிறதா? உள்நாட்டு நீதி போதாது என்று கூறி அனைத்துலக விசாரணையைக் கோரி நிற்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்கு போடும் நிலைமை அதிகரித்து வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் சங்கங்களைச் சேர்ந்த அன்னையர்கள் சில ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கிடையே மோதிக்கொண்ட போது போலீசுக்குப் போய் முறைப்பாடு செய்தார்கள். பின்னர் ஒரே கட்சிக்குள் ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்குப் போடும் நிலைமை வந்தது. அது அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தன் சொந்தக் கட்சிக்காரருக்கு எதிராகவே வழக்குப் போடும் ஒரு நிலையை அடைந்து விட்டது. இப்பொழுது வெறுப்புப் பேச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகிறது. தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் போகிறது? அதேசமயம் வெறுப்புப் பேச்சுக்கு எதிராகவும் அரசியல் அவதூறுகளுக்கு எதிராகவும் மேற்கண்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட அதே காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ஜுனாவும் கஜேந்திரனும் மோதியிருக்கிறார்கள். அது ஒரு தரக்குறைவான, அருவருப்பான மோதல். மோதலின் ஒரு கட்டத்தில் அர்ஜுனா, கஜேந்திரனை நோக்கித் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு சபையில் அமர்ந்திருந்த ஒரு பகுதியினர் கைதட்டுகிறார்கள். அவ்வாறு கைதட்டியவர்கள் அரசாங்கக் கட்சியை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கூறினார். தமிழ் அரசியல்வாதிகள் எதை ரசிக்கிறார்கள் ? எதற்குக் கைதட்டுகிறார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் அதிகமாக மினக்கெடும் தமிழ் மக்களில் கணிசமான தொகையினர் அல்லது அதிகளவு தொகையினர் எதை ரசிக்கிறார்கள்? எதை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள்? மேற்கண்ட வெறுப்புப் பேச்சுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முறைப்பாடுகளோடு சம்பந்தப்பட்ட காணொளிகளோடு ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் காணொளிதான் அதிகமாகப் பகிரப்பட்டது; அதிகமாக பார்க்கப்பட்டது. வெறுப்புப் பேச்சு மற்றும் அரசியல் அவதூறுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை விடவும் வெறுப்பு பேச்சுகளையும் ஒருவர் மற்றவரை கீழ்மைப்படுத்தும் அருவருப்பான மோதல்களையும் ரசிக்கும் அளவுக்கு தமிழ்ப் பொதுப் புத்தி விகாரமடைந்து வருகிறதா? கடந்த பெப்ரவரி மாதம் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் ஒரு மருத்துவர் முகநூலில் ஒரு குறிப்புப் போட்டிருந்தார். அக்குறிப்பில் அவர் கனடாவில் வசிக்கும் தமிழ் அரசியல் விமர்சகர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய விடயத்தை ஆங்கிலத்திலும் தமிழில் மொழிபெயர்த்தும் பகிர்ந்திருந்தார். மேற்படி கனடாவில் வசிக்கும் அரசியல் விமர்சகர் அர்ஜுனாவை ஏன் தான் ஆதரிக்கிறார் என்பதற்கு பின்வருமாறு விளக்கம் அளித்திருந்தார்… “ராமநாதன் அர்ஜூனா எம்.பி.யை நான் மதிக்கிறேன். காரணங்கள்: 1) அவர் தமிழ்த் தேசியவாதத்தை நகைச்சுவைப் பொருளாக்கினார், 2) அவர் நாடாளுமன்றத்தை சாதாரணமான அவையாக்கினார், 3) மருத்துவத் தொழிலை வேறு எந்தத் தொழிலையும் போல சாதாரண தொழிலாக எளிமைப்படுத்தினார் – யாழ்ப்பாணத்தில் அது உயர்ந்த தொழில் என நினைக்கும் இடத்தில் இது குறிப்பிடத்தக்க சாதனை, 4) அவர் அரசியலை சாதாரண மனிதனின் நிலையில் அணுகினார். வக்கீல்களுக்கு மட்டும் பாராளமன்றம் என்பதை நாளை ஒரு விவசாயியால் பாராளுமன்றத்தில் பேசமுடியும் என்பதை உறுதிபடுத்தினார்…..” மேற்கண்ட முகநூல் குறிப்பின் மீது பலரும் பலவிதமாக பதில்வினை ஆற்றியிருந்தார்கள். அதைத் தனியாகத் தொகுத்துப் பார்க்க வேண்டும். ஆனால் மேற்படி முகநூல் குறிப்பு எழுதிய அந்த மருத்துவர், சில நாட்கள் கழித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பில், ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட்டிருந்தார். தான் வழமையாக எழுதும் பதிவுகளை நுகர்பவர்களின் எண்ணிக்கை 500 ஐக் கடப்பதில்லை என்றும் ஆனால் அர்ஜுனாவைப் பற்றிய தன்னுடைய பதிவை நுகர்ந்தவர்கள் 35,000க்கும் அதிகம் என்று. அதாவது வழமையை விட 70 மடங்கு அதிகம். இது எதைக் காட்டுகிறது? ஒன்றில் அவருடைய குறிப்பை சமூக வலைத்தளப் பரப்பில் யாரோ காசு கொடுத்துத் திட்டமிட்டுப் பரவலாக்குகிறார்கள். அல்லது அதுபோன்ற குறிப்புகளை ரசிப்பவர்களின் அல்லது நுகர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று பொருள். இது தமிழ்க் கூட்டு உளவியல் தொடர்பான, தமிழ்ப் பொதுப் புத்தி தொடர்பான ஒரு பண்பாட்டுப் பிரச்சினை. இதனை சட்டரீதியாக மட்டும் அணுக முடியாது தீர்க்கவும் முடியாது. இதற்கு ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. சீரழிந்து வரும் தமிழ்த் தேசிய அரசியலில் புது ரத்தம் பாய்ச்சும் விதத்தில் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி தேவை. அது ஒரு கூட்டு முயற்சி. அது ஒரு கூட்டு உழைப்பு. அது ஒரு கூட்டுச் சிகிச்சை. ஒரு சமூகத்தில் கூட்டு முயற்சிகள் பெரும்பாலும் அரசியல் தளத்தில்தான் சாத்தியம். அதாவது அரசியல் தலைமைதான் இதுபோன்ற கூட்டு முயற்சிகளில் வெவ்வேறு தரப்புகளைய ஒரு மையத்தில் ஒன்றிணைக்க முடியும். ஆனால் துயரம் என்னவென்றால், தமிழில் அதே அரசியல் தரப்புகள்தான் இந்தச் சீரழிந்த பண்பாட்டை உற்பத்தி செய்கின்றன, ஊக்குவிக்கின்றன, காசு கொடுத்து வளர்த்து விடுகின்றன. அவர்கள் பெற்றெடுத்த ஒன்றை,அவர்களே காசு கொடுத்து, அணி திரட்டி வளர்த்துவிட்ட குருட்டு விசுவாசத்தை, அழிப்பதற்கு அவர்களாக முன்வருவார்களா? ஆனால் அப்படி ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்படவில்லையென்றால் தமிழ்ச் சமூகம் அவிழ்த்துவிட்ட பாக்கு முட்டைபோல சிதறிப் போய்விடும். அதன் பின் தாயகம், தேசம், சுயநிர்ணயம் என்றெல்லாம் பொய் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. https://www.nillanthan.com/8222/
  7. இலங்கையில் அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை? ஞாயிறு, 29 மார்ச் 2026 05:22 AM இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பல காரணிகள் ஒன்றாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான நீர்மின் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. ஒரு அலகு டீசல் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அரசாங்கத்திற்கு சுமார் 90 ரூபா செலவாகிறது. மாலை நேர உச்சப்பயன்பாட்டு நேரத்தில் நிலவும் 150 மெகாவாட் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தினசரி 36 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களால் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதியில் தடைகள் ஏற்பட்டுள்ளதோடு, அவற்றின் விலைகளும் உயர்ந்துள்ளன. நுரைச்சோலை மின்நிலையத்தில் நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல்கள் இன்னும் நீடிக்கின்றன. நாடு தழுவிய ரீதியில் பாரிய மின் முறிவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க, குறுகிய கால சுழற்சி முறையிலான மின்வெட்டுக்களே ஒரே தீர்வு என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் இரவு 6 மணி முதல் 10 மணி வரை இந்த மின்தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணவும், பராமரிப்புப் பணிகளை முன்னெடுக்கவும் இது அவசியமாகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு குறித்து இதுவரை உத்தியோகபூர்வ அட்டவணை எதுவும் வெளியிடப்படவில்லை. இது ஒரு இறுதி முயற்சியாகவே எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் 21 வீதம் சூரிய சக்தி, 14 வீதம் நீர்மின்மற்றும் 26 வீதம் அனல் மின் என மின்சாரம் பெறப்படுகிறது. இருப்பினும், இலங்கையிடம் போதிய மின்கல சேமிப்பு கட்டமைப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் 1,500 மெகாவாட் சூரிய சக்தியைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் இரவு வேளையில் நீர்மின்சாரத்தின் தேவை 42 சதவீதமாக உயர்கிறது. 2030 ஆம் ஆண்டளவில் தேசிய மின் கட்டமைப்பில் 70 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஈடு செய்ய இலங்கை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதுவரை, மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். https://jaffnazone.com/news/55910
  8. தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள 9 பேரடங்கிய இணைக்குழு நியமனம் தமிழரசுக்கட்சி - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி சந்திப்பில் தீர்மானம் 29 Mar, 2026 | 01:08 PM (நா.தனுஜா) இரு கட்சிகளினதும் சார்பில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்குமென இலங்கைத் தமிழரசுக்கட்சியிலிருந்து மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியிலிருந்து அறுவரும் என மொத்தமாக 9 பேரடங்கிய இணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ் மக்களின் கரிசனைக்குரிய பொதுவான விடயங்கள் தொடர்பில் ஒரு பொதுநிலைப்பாட்டின் அடிப்படையில் இணைந்து செயலாற்றும் நோக்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியும் தொடர் சந்திப்புக்களை நடாத்திவருகின்றன. அதற்கமைய இவ்விரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று சனிக்கிழமை மு.ப 10.00 - பி.ப 12.30 மணி வரை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இரட்ணலிங்கம், ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், வேந்தன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், கொள்கைகளை வகுப்பதற்கும் இரு கட்சிகளினதும் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஒரு இணைக்குழுவை நியமிப்பதற்கு ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழு நேற்றைய தினம் நியமிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் துரைராஜசிங்கம் ஆகிய மூவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமசந்திரன், வேந்தன், சந்திரகுமார் மற்றும் இரட்ணலிங்கம் ஆகிய அறுவரும் என மொத்தமாக ஒன்பது பேர் அங்கம் வகிக்கும் இக்குழுவுக்கு தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயலாளர் இரட்ணலிங்கமும் ஒருங்கிணைப்பாளர்களாக செயற்படுவர். அதேபோன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்தும் இச்சந்திப்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டதுடன், அதில் இரு கட்சிகளும் ஒருமித்துச் செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டது. அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் நடாத்தப்படவேண்டிய மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து தாமதப்படுத்தி, 'பிரஜாசக்தி' எனும் முறையற்ற செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்துவருவது பற்றியும், இத்தகைய பின்னணியில் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துவதற்குரிய அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் நாட்டின் சமகால அரசியல் மற்றும் பூகோள அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/242220
  9. யாழில். கைப்பற்றப்படும் சட்டவிரோத மணலை , காவல்நிலையத்தில் வைத்து ஏலத்தில் விட தீர்மானம் adminMarch 29, 2026 சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி, அவற்றை காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்று அந்த மணலை ஏலத்தில் விடுவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன. அவையாவன, சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், இரவு நேரங்களில் மணல் கொண்டு செல்வதற்கு முற்றாகத் தடை விதிப்பதற்கும், பகல் நேரங்களில் மாத்திரம் மணல் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு வருவதற்கான அனுமதியை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய பொறிமுறையூடாக நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், காவல்துறையினரும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளும் இணைந்து விசேட வீதிச்சோதனைகளை மேற்கொள்வதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி காவல் நிலையங்களுக்குக் கொண்டு சென்று மணலை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது. குளத்து மணலைக் கழுவி உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விநியோகிப்பதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு மணலைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது மணல் மாபியாக்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், வடக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களில் செயற்பாட்டு நிலையிலுள்ளவை தொடர்பான விவரங்களைப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் வழங்கவேண்டும் என்றும், எதிர்காலத்தில் காவல்துறையினர், மாவட்டச் செயலாளர்கள், ஆளுநர் செயலகம் இணைந்த குழுவில் அதனை இற்றைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் ஊடாக மணல் அகழப்படும் இடங்கள் காவல்துறையினருக்குத் தெரியவருவதுடன், அகழப்படும் மணல் கொண்டு செல்லும் பாதைகளை அறியமுடிவதன் மூலம் ஏனைய மார்க்கங்களில் செல்லும் மணல் வாகனங்களைப் பிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், மணல் விநியோக வாகனத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும்போது எவ்வளவு மணி நேரத்துள் அதனை விநியோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பது குறித்தும் ஆராயப்பட்டது. கனரக வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாகப் பாடசாலை நேரங்களில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகத் தண்டப்பணங்களை விதிப்பதை நடைமுறைப்படுத்தவும் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. எதிர்காலத்தில் கனியவளங்கள் தேவைப்படுபவர்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிப்பதற்கும், அதன் ஊடாகத் தேவைப்படும் மணலின் அளவு கணிக்கப்பட்டு ஒரு நாளில் எவ்வளவு மணல் விநியோகம், எந்த மார்க்கம் ஊடாக நடைபெறும் என்ற விவரங்கள் துல்லியப்படுத்தப்படுவதன் ஊடாக மணல் மாபியாக்களைக் கட்டுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் புத்திக சிறிவர்தன, யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிக் காவல்துறை மா அதிபர் மாறப்பன, யாழ். பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர் ஜெயமஹா, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடபிராந்திய முகாமையாளர் டி.மயூரன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் நேரடியாகப் பங்கேற்றனர். மேலும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களின் பிரதி காவல்துறைமா அதிபர்கள் நிகழ்நிலை காணொளி ஊடாக கலந்து கொண்டிருந்தனர். https://globaltamilnews.net/2026/231208/
  10. ஈரானில் சிவில் உடமைகளுக்கு பாரிய சேதம்: 93,000க்கும் அதிகமான இடங்கள் பாதிப்பு என ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை! 28 Mar, 2026 | 06:05 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் சிவில் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்த அறிக்கையொன்றை ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது. தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வாரங்களுக்குள் 93,000க்கும் அதிகமான சிவில் இடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 71,547 வீடுகளும், 20,779 வர்த்தக நிலையங்களும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. தெஹ்ரான் நகரில் மாத்திரம் 31,562 வீடுகள் மற்றும் வர்த்தக அலகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 600 பாடசாலைகளும், 295 சுகாதார நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. யுத்த சூழ்நிலை காரணமாக 46 ஆம்புலன்ஸ் வண்டிகள், 48 அவசர விபத்து சேவை வாகனங்கள் மற்றும் 3 நிவாரண சேவை ஹெலிகொப்டர்கள் சேதமடைந்துள்ள அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242170
  11. 'நெடுந்தாரகை' படகுச் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! Mar 28, 2026 - 11:09 PM யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள 'நெடுந்தாரகை' படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, இன்றைய தினம் 'நெடுந்தாரகை' படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் குறித்த படகு நாளை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. மேலும், 'நெடுந்தாரகை' படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmnalnz2r0001356polzyrie7
  12. சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஓம்கார் கரம்பேல்கர் பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது. மக்கள் பெரும்பாலும், இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும் பிரச்னை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இது இளம் வயதினர் மத்தியிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது. சிறுநீர் கழித்த பிறகு, சில துளிகள் வெளியேறித் தங்கள் உள்ளாடைகளை நனைப்பதையோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவதையோ பல ஆண்கள் கவனிக்கின்றனர். இது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் இதைப் பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள். "சிறுநீர் கழித்த பின் சொட்டுதல்" என்ற பிரச்னை பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. பொதுவாக, கூச்சம், மற்றவர்கள் கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சம், "இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும்" என்ற தவறான நம்பிக்கை அல்லது "இதுவொரு தீவிரமான பிரச்னை இல்லை" என்ற எண்ணம் ஆகியவை அதற்குக் காரணமாக அமைகின்றன. உண்மையில், பி.எம்.டி என்பது வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. பகல் நேரங்களில் சிறு துளி சிறுநீர் வெளியேறுவது, குறிப்பாகப் பணியிடத்திலோ அல்லது பயணம் செய்யும்போதோ, அதை அனுபவிப்பவருக்கு உள்ளாடை நனைந்த உணர்வையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவர்கள் அடிக்கடி தங்கள் ஆடைகளைச் சரிபார்த்துக் கொண்டே இருக்க நேரிடலாம். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும், தன்னம்பிக்கையைப் பாதிக்கவும் கூடும். நிபுணர்களின் கூற்றுப்படி, பி.எம்.டி என்பது ஒரு தீவிரமான நோய் அல்ல. முறையான உடற்பயிற்சிகள், எளிய நுட்பங்கள், சிறுநீர் கழிப்பதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் பி.எம்.டி-யை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, பி.எம்.டி ஏன் ஏற்படுகிறது, எத்தகைய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும், எத்தகைய தீர்வுகள் உண்மையில் பலனளிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி என்றால் என்ன? சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் (PMD) என்பது ஒரு நபர் சிறுநீர் கழித்து முடித்த பிறகும் சிறுநீர் கசிவதைக் குறிக்கிறது. இந்தப் பிரச்னையின் முக்கிய அறிகுறி, கழிவறையைவிட்டு வெளியேறிய சில விநாடிகள் அல்லது சில நிமிடங்களுக்குப் பிறகு, சில துளிகள் சிறுநீர் திடீரென வெளியேறுவதாகும். பொதுவாக, சிறுநீர் வெளியேறும் குழாயின் (urethra) கீழ் பகுதியில், சிறிதளவு சிறுநீர் தேங்கி நிற்பதாலேயே இது நிகழ்கிறது. கிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அகில் கான், இது குறித்து பிபிசி மராத்திக்கு விரிவாக விளக்கினார். "சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் என்பது 'சிறுநீர் அடங்காமை' என்ற வழக்கமான வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை. மாறாக, இது 'சிறுநீர் வெளியேற்றச் செயல்பாட்டுக் குறைபாடு' (voiding dysfunction) என்ற தனி வகையின் கீழ் வருகிறது. இதில் சிறுநீர் கழித்த பிறகும் சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் புறக்குழாயிலேயே தங்கிவிட்டுப் பின்னர் கசிந்து வெளியேறுகிறது," என்று அவர் விவரித்தார். இந்தப் பிரச்னை சங்கடப்படுத்தக் கூடியதாகவோ அல்லது கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ தோன்றினாலும், இதுவொரு தீவிரமான பாதிப்பு இல்லை எனவும், சரியான உடற்பயிற்சிகள் மற்றும் எளிய வழிமுறைகளின் மூலம் இதை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Getty Images இடுப்புத் தளம் என்றால் என்ன? இடுப்புத் தளம் (Pelvic floor) என்பது, வயிற்றின் அடிப்பகுதியில் (கீழ் வயிறு) அமைந்துள்ள, வலிமையான அதேநேரம் நெகிழ்வுத்தன்மை கொண்ட தசைகள், திசுக்கள், தசைநார்கள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பாகும். இந்த அமைப்பானது, ஒரு தொட்டிலைப் போல அல்லது எடையைத் தாங்கும் பொருளைப் போலச் செயல்படுகிறது. இது இடுப்புப் பகுதியில் உள்ள முக்கியமான உறுப்புகளான சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய், குடல், ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பி போன்றவற்றைத் தாங்கிப் பிடித்து, அவற்றுக்கு ஆதரவளிக்கிறது. ஒருவர் நிற்கும்போதோ, நடக்கும்போதோ அல்லது அசைந்து இயங்கும்போதோ, இந்த உறுப்புகளின் எடையைச் சுமப்பதற்கும் அவற்றை அவற்றுக்குரிய சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கும் இந்தத் தசைகள் உதவுகின்றன. படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக பிபிசியுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் உறுப்புகளுக்கு ஆதரவளிப்பது இடுப்புத் தளத்தின் மற்றுமொரு முக்கியமான பணி. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, உதாரணமாக, ஆழமான மூச்சுவிடும்போது, இருமும்போது, தும்மும்போது, கனமான பொருட்களைத் தூக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடுப்புத் தளத் தசைகள் அந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு உறுப்புகள் நிலையாக இருக்க உதவுகின்றன. சுருக்கமாகக் கூறுவதெனில், உடல் சமநிலை, உடலின் மையப்பகுதியுடைய வலிமை, சிறுநீர், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடுப்புத் தளம் மிகவும் இன்றியமையாதது. அன்றாட ஆரோக்கியத்தில் இது மிக முக்கியப் பங்காற்றினாலும், பலரும் இந்த அமைப்பின் மீது போதிய கவனம் செலுத்துவதில்லை. பி.எம்.டி யாருக்கு ஏற்படுகிறது? இது பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையதா? பி.எம்.டி ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணம், இடுப்புத் தளத் தசைகள் பலவீனமாக இருப்பது அல்லது சரியாகச் செயல்படாமல் இருப்பதாகும். இந்தத் தசைகள் சிறுநீரின் கடைசி சில துளிகளை வெளியே தள்ள உதவுகின்றன. அவை பலவீனமாக இருந்தால், சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் பாதையில் தங்கி, பின்னர் வெளியே கசியும். இந்தப் பிரச்னை வயது முதிர்ச்சியால் மட்டுமே ஏற்படுவதாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால் அது இளம் ஆண்களுக்கும் ஏற்படலாம். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக எடையுடன் இருப்பது, தவறான சிறுநீர் கழிக்கும் பழக்கங்களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி எப்போதும் பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையது என்ற பொதுவானதொரு தவறான புரிதலும் உள்ளது. சில நேரங்களில் பிராஸ்டேட் சுரப்பி வீக்கமடைவது இந்தப் பிரச்னைக்குக் காரணமாக அமையலாம். ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பிராஸ்டேட் நோய் இருப்பதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், பி.எம்.டி உடலில் ஏற்படும் எந்தவொரு சேதம் அல்லது கட்டமைப்புப் பிரச்னையாலும் ஏற்படுவதில்லை. இதுவொரு "செயல்பாட்டு" பிரச்னையாகும். அதாவது, இது தசைகள் செயல்படும் விதத்துடன் தொடர்புடையது. பி.எம்.டி-யுடன் வேறு அறிகுறிகளும் இருந்தால், அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு, பலவீனமான சிறுநீர் ஓட்டம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி கழிவறைக்குச் செல்லுதல், சிறுநீரில் ரத்தம், அடிவயிற்றில் அதாவது இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவர்கள் சிறுநீர்ப் பாதை தொற்று, சிறுநீர்க் குழாய் சுருக்கம், அல்லது பிராஸ்டேட் அழற்சி போன்ற பிற நிலைகள் குறித்தும் பரிசோதிக்கலாம். பட மூலாதாரம்,Getty Images கண்டறியும் வழிமுறையும் எளிய தீர்வும் ஒருவருக்கு சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளதா என்பதைக் கண்டறிய, மருத்துவர்கள் பொதுவாக முதலில் அந்த நபரின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டு, ஓர் எளிய உடல் பரிசோதனையைச் செய்வார்கள். சில நேரங்களில், அவர்கள் யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் எவ்வாறு பாய்கிறது என்பதைச் சரிபார்க்க) அல்லது சிறுநீர் பகுப்பாய்வு (சிறுநீரில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனச் சரிபார்க்க) போன்ற சோதனைகளைப் பரிந்துரைக்கலாம். சிகிச்சையின் மிக முக்கியமான பகுதி, இடுப்புத் தளப் பயிற்சிகளைச் சரியாகச் செய்வதாகும். "இந்த நோயறிதல் மருத்துவரீதியாக, அறிகுறிகளின் வரலாறு மற்றும் உடல் பரிசோதனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சில நேரங்களில், சிறுநீர் பகுப்பாய்வு அல்லது யூரோஃப்ளோமெட்ரி போன்ற சோதனைகள் அறிவுறுத்தப்படலாம். சிறுநீர் கழிப்பதை நிறுத்திய பிறகும் தொடர்ந்து சிறுநீர் வடிதல் போன்ற சில விஷயங்களை அந்த நபரே கவனிக்கக்கூடும். இருப்பினும், தீவிரமான காரணம் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய ஒரு முறையான மருத்துவப் பரிசோதனை அவசியம்," என்று தெரிவித்தார் மருத்துவர் அகில் கான். மேலும் அவர், "பி.எம்.டி-ஐ நிர்வகிப்பதில் இடுப்புத் தளத்திற்கான உடற்பயிற்சிகள் மிக முக்கியமானவை. 'சிறுநீர்க் குழாய் மில்கிங்' என்பது சிறுநீர் கழித்த பிறகு விதைப்பையின் பின்புறத்தில் மென்மையான அழுத்தத்தைக் கொடுப்பதாகும். இது மீதமுள்ள சிறுநீரை வெளியேற்ற உதவுகிறது. கெகல் பயிற்சிகளைத் தவறாகவோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ செய்வது பொதுவாக நடக்கும் ஒரு தவறு. அதற்குச் சரியான வழிகாட்டுதல் அவசியம். தொற்று அல்லது பிராஸ்டேட் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்னை இல்லாவிட்டால், இதற்கு மருந்து தேவையில்லை," என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி-யுடன் காணப்படும் தீவிர பிரச்னைகளின் அறிகுறிகள் ஒருவருக்கு பி.எம்.டி-யுடன் மற்ற அறிகுறிகளும் இருந்தால், அதுவொரு தீவிரமான உடல்நலப் பிரச்னையாக இருக்கலாம். சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் அல்லது கால்களுக்கு இடையில் வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் அல்லது அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் ஆகியவை எச்சரிக்கைக்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவை சிறுநீர் பாதையில் அடைப்பு, தொற்று அல்லது சுருக்கம் போன்ற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டலாம். கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஷ்யாம் வர்மா இதுகுறித்து விரிவாக விளக்கினார். "பி.எம்.டி-யுடன் சிறுநீரில் ரத்தம், வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அது வெறும் பி.எம்.டி பிரச்னையாக மட்டுமே இருக்காது. வேறு சிக்கலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே அது கவனிக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். பி.எம்.டி மற்ற சிறுநீர் பிரச்னைகளுடன் சேர்ந்து ஏற்படலாம். உதாரணமாக, அதீத சிறுநீர்ப்பை செயல்பாட்டில், ஒருவருக்கு ஏற்கெனவே அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு இருக்கும். அதனால் சிறுநீர் கழித்த பிறகு சொட்டு சொட்டாக வெளியேறுவது இன்னும் மோசமாக உணரப்படும். சிறுநீர்க்குழாய் குறுகினால் (சிறுநீர்க்குழாய் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது), சிறுநீரின் கடைசிப் பகுதி சரியாக வெளியேறாமல் போகலாம். பிராஸ்டேட்டிடிஸ் நோயில், இடுப்புத் தசைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி சிறுநீர் சொட்டுசொட்டாக வெளியேறுவதை அதிகரிக்கலாம். "சிறுநீர்க் குழாய் முழுமையாகக் காலியாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால், சிறுநீர்ப் பையின் அதிக உணர்திறன், சுருக்கங்கள், பிராஸ்டேடிடிஸ் நோயால் ஏற்படும் அழற்சி ஆகிய அனைத்தும் சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியேறுவதற்கு காரணமாகலாம்," என்று கூறுகிறார் மருத்துவர் வர்மா. பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி பிரச்னை எவ்வாறு கண்டறியப்படுகிறது? மருத்துவர்கள் முதலில் இதுகுறித்து விரிவான கேள்விகளைக் கேட்பதன் மூலம் பரிசோதனையைத் தொடங்குகின்றனர். சிறுநீர் வடிதல் எப்போது நிகழ்கிறது, எவ்வளவு சிறுநீர் கசிகிறது, சிறுநீர் கழிக்கும்போது ஏதேனும் எரிச்சல் அல்லது வலி உள்ளதா, இது அன்றாட வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பன போன்ற கேள்விகளை அவர்கள் கேட்கின்றனர். இதற்குப் பிறகு, உடல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். தேவைப்பட்டால், பிரோஸ்டேட் சுரப்பியையும் பரிசோதிக்கலாம். சிறுநீர் பரிசோதனை (சிறுநீரைச் சோதிக்க), யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் வெளியேறும் வேகத்தை அறிய), சிறுநீர் கழித்த பின் சிறுநீர்ப்பையில் எஞ்சியிருக்கும் சிறுநீரின் அளவை அளவிடுதல் (post-void residual measurement) போன்ற சில எளிய பரிசோதனைகளும் செய்யப்படலாம். ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவர்கள் சிஸ்டோஸ்கோபி (Cystoscopy) அல்லது இமேஜிங் ஸ்கேன்கள் போன்ற இன்னும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைக்கலாம். பி.எம்.டி நிலையாகத் தொடர்ந்தாலோ, தீவிரமடைந்தாலோ, அசௌகரியத்தை ஏற்படுத்தினாலோ, அல்லது எரிச்சல், வலி, சிறுநீரில் ரத்தம், அல்லது பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்பட்டாலோ, அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக இளம் ஆண்கள் இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. பெரும்பாலான நேரங்களில், லேசான அளவிலான பி.எம்.டி ஆபத்தானது அல்ல. ஆனால் இதுவொரு பெரிய உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்குமாயின், நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். பெரும்பாலும், பி.எம்.டி-யின் மிகப்பெரிய தாக்கம் மனநலத்தின் மீதே ஏற்படுகிறது. இது மன அழுத்தம் மற்றும் கூச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடும். பட மூலாதாரம்,Getty Images வீட்டிலேயே அவதானிப்பது எப்படி? சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டில் ஓர் எளிய "சிறுநீர்ப்பை நாட்குறிப்பை" வைத்திருக்கலாம். அதில், எப்போது சொட்டுசொட்டாக சிறுநீர் வடிதல் ஏற்படுகிறது, அது எவ்வளவு அதிகமாக நிகழ்கிறது, எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள், சிறுநீர் கழித்த பிறகு சிறிது நேரம் காத்திருப்பது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பனவற்றைக் குறித்து வைக்கலாம். ஆனால், இந்தக் குறிப்புகளை வைத்திருப்பதால் மருத்துவரை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று அர்த்தமல்ல. இந்தப் பிரச்னை மோசமடைந்தால், மருத்துவ உதவி நிச்சயமாக அவசியம். "இந்த நாட்குறிப்பு பயனுள்ளது. இந்தப் பிரச்னையின் போக்கு குறித்துத் தெளிவான புரிதலை ஏற்படுத்த இது உதவுகிறது. ஆனால் அறிகுறிகள் தொடர்ந்தால், சுய கவனிப்பு மட்டுமே போதாது, பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்," என்று மருத்துவர் ஷ்யாம் வர்மா விளக்குகிறார். மேலும் அவர், "சில சொட்டுகள் மட்டும் வடிந்தால், அதற்குப் பெரிய காரணம் இருந்தால் மட்டுமே மருந்து தேவைப்படும். தனிப்பட்ட அளவில் பி.எம்.டி மட்டும் இருந்தால் மருந்துகள் அரிதாகவே பரிந்துரைக்கப்படுகின்றன. இடுப்புத் தளப் பயிற்சி மற்றும் சிறுநீர்க் குழாய் மில்கிங் போன்ற பயிற்சிகள் பி.எம்.டி-க்கான மிகவும் பயனுள்ள, ஆதாரங்கள் அடிப்படையிலான பலனளிக்கும் நுட்பங்களாகும்," என்று கூறினார். மருத்துவர் வர்மா கெகல் பயிற்சிகள் பற்றிய சில முக்கியக் குறிப்புகளையும் விளக்கினார். "தவறான தசைகளை இறுக்குவது, வயிற்று, பிட்ட அல்லது தொடைத் தசைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, மூச்சை அடக்கி வைப்பது, ஒழுங்கற்ற முறையில் உடற்பயிற்சி செய்வது, சில நாட்களில் உடனடிப் பலன்களை எதிர்பார்ப்பது போன்றவை மிகப்பெரிய தவறுகளாகும். பல ஆண்கள் 'இறுக்குதல்' பயிற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் இடுப்புத் தளத்தை எவ்வாறு சரியாகச் சுருக்குவது என்று அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. உடற்பயிற்சியின் தீவிரத்தைவிட, அவர்கள் செய்யும் பயிற்சியின் நுட்பமே மிகவும் முக்கியமானது." பி.எம்.டி-யால் ஏற்படும் மனநல சிக்கல்கள் சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை ஒரு தீவிரமான மருத்துவ நோயல்ல என்றாலும், அது ஒருவரை உளவியல் ரீதியாகப் பாதிக்கக்கூடும். இதன் காரணமாகப் பல ஆண்கள் கூச்சம், பதற்றம், தன்னம்பிக்கை இழப்பு ஆகியவற்றை உணர்கின்றனர். தங்கள் ஆடை ஈரமாகிவிடுமோ அல்லது கறைபட்டுவிடுமோ என்ற கவலையில் சிலர் வெளியே செல்வதையோ அல்லது பிறரைச் சந்திப்பதையோகூட தவிர்க்கக்கூடும். இதுகுறித்துப் பேசிய மருத்துவர் ஷ்யாம் வர்மா, "பல நோயாளிகள், பி.எம்.டி பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் இதுவொரு பொதுவான, சிகிச்சை அளிக்கக்கூடிய குறைபாடு என்பதால், இதற்காக கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறுகிறார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... ஒருவர் தனது அன்றாட வாழ்வில் உணவுமுறையை மாற்றுவது அல்லது உடற்பயிற்சிகளைச் செய்வது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ஒரு மருத்துவர் மற்றும் தகுந்த பயிற்சி பெற்ற நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். முதலில் ஒரு மருத்துவரிடம் சென்று முறையான பரிசோதனைகளைச் செய்துகொள்வதே இதற்கான மிகச் சிறந்த வழிமுறை. அதன் மூலம் பிரச்னையைத் தெளிவாகப் புரிந்துகொள்வது, பின்னர் அவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதற்கு உதவும். சுருக்கமாகக் கூறினால், பி.எம்.டி என்பது உயிருக்கோ உடலுக்கோ ஆபத்தான பிரச்னையல்ல என்றாலும், அது ஒருவரின் தன்னம்பிக்கையையும் மன அமைதியையும் பாதிக்கக்கூடியது. இதற்கு சரியான மருத்துவ உதவியைப் பெறுவதன் மூலம், இந்த நிலையை வெகுவாக மேம்படுத்திக்கொள்ள முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20344lrly6o
  13. கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை 29 Mar, 2026 | 09:27 AM வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள், சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டாம். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை கூட காவு வாங்கியுள்ளனர். இது ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்ச கதையாக பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை ஒழுங்கு படுத்தி அனுமதி பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக ஒரு கியூப் மண் 7500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர் மண் 23 ஆயிரத்திற்கு பெற முடியும். யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால், சுமார் 55 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரத்திற்கும் மண்ணை விநியோகிக்க முடியும். சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர் மண்ணை ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். அவ்வாறான மண் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள் சில பொலிஸார் உள்ளனர் என்பதும் எமக்கும் தெரியும் கடந்த கால அரசாங்கங்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் விளையாட்டு கட்டலாம் என நினைக்க வேண்டாம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறை செய்தால் 20 இலட்ச ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். அத்துடன் பொலிசாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக இருக்காது , மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம். மாஃபியாக்களுக்கு மக்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க பயப்படுகிறார்கள். அதனால் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க மிக விரைவில் தொலைபேசி இலக்கங்களை அறிவிப்போம். அதனூடாக அவர்கள் தகவல்களை தெரியப்படுத்த முடியும். இவ்வாறான செயற்பாடுகளை தனியே பொலிஸாரோ , அரசாங்கமோ கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/242184
  14. இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல் Mar 29, 2026 - 10:51 AM இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய 3 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு குறித்த வழக்கினூடாக இந்த டிஜிட்டல் முறைமை பரிசீலிக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கமான காகிதக் கோப்புகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் கோப்புகளை நீதியரசர்கள் கணினி மூலம் பரிசீலித்தனர். பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற பதிவாளர் மனோதி ஹேவாவசம் தெளிவுபடுத்தியதுடன், அதன் மீது டிஜிட்டல் கையொப்பமிட்டு மின்-முறைமையில் பதிவேற்றியதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026 மே 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் "E-court" திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உயர் நீதிமன்றத்தாலேயே இந்தச் செயலி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இந்த E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnbb5ai4000d356p2oaomw8t
  15. 3 விக்கெட், 3 கேட்ச், 3 அதிரடி இன்னிங்ஸ்: ஆர்சிபியின் சாதனை வெற்றிக்கு காரணமான 3 விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது. பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200+ இலக்கை ஒரு அணி செய்த அதிவிரைவான சேஸ் இதுதான். இந்தப் போட்டியில் ஆர்சிபி பௌலர் ஜேக்கப் டஃபியின் பவர்பிளே ஸ்பெல், ஃபில் சால்ட்டின் சிறப்பான ஃபீல்டிங் மற்றும் அந்த அணி பேட்டர்களின் அதிரடி பேட்டிங் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக விளங்கின. டஃபி 3 விக்கெட் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவதற்குத் தயாராக இருந்தார் டஃபி. அப்போது வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டஃபி பற்றி "டி20 உலகக் கோப்பையில் டஃபியைப் போன்ற எண்கள் கொண்டிருந்தால், மறுபடியும் இங்கு வந்து பந்துவீசுவது எளிதாக இருக்காது. அவர் இங்கு தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் யாருக்கு எதிராகப் பந்துவீசப் போகிறார் என்று பாருங்கள்… இது அவருக்கு மிகமிகக் கடினமாக இருக்கப்போகிறது." என்று கூறினார்: பட மூலாதாரம்,Getty Images பீட்டர்சன் அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருந்தது... சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜேக்கப் டஃபிக்கும் நியூசிலாந்தின் பிற பௌலர்களுக்கும் எதிர்பார்த்துபோல் செல்லவில்லை. அன்று ஆமதாபாத்தில் 3 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார் டஃபி. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் டஃபியின் பந்துவீச்சை பதம்பார்த்தார்கள். அந்த செயல்பாட்டுக்குப் பின் ஜேக்கப் டஃபி விளையாடிய போட்டி இது. மறுபடியும் இந்தியாவில்… மறுபடியும் அபிஷேக்கிற்கு எதிராக. ஆனால், இவை மட்டுமே அவர் மீதான நெருக்கடியாக இருக்கவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் டஃபி அறிமுகம் ஆனதற்கான காரணம், ஜாஷ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியோடு இல்லாதது. 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி கோப்பை வென்றதற்கான மிகமுக்கியக் காரணமாக விளங்கியவர் ஹேசில்வுட். அந்த சீசனில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் டாப் விக்கெட் டேக்கராக விளங்கினார். அப்படியொரு தாக்கம் ஏற்படுத்திய வீரரின் இடத்தில் விளையாடியதால், ஹேசில்வுட் கொடுத்தது போன்ற செயல்பாடு எதிர்பார்க்கப்படும் என்ற நெருக்கடியும் டஃபி மீது இருந்தது. ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அனைவருமே பீட்டர்சன் சொன்னது போலத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால், அப்படியொரு நிலையில் தான் டஃபியிடமிருந்து பெங்களூருவில் 'ஆட்ட நாயகன்' செயல்பாடு வந்தது. பவுன்ஸ் அதிகமாக இருந்த அந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டிகளில் வீசுவதைப்போல் ஷார்ட் மற்றும் குட் லென்த்களுக்கு இடைப்பட்ட லென்த்திலேயே அதிகம் பந்துவீசினார் டஃபி. அவருடைய உயரத்தின் காரணமாக அவரது பந்துகள் கூடுதல் பவுன்சாக காரணமாக அமைந்தன. அதனால் அவர் பந்துவீச்சில் அடித்து ஆடுவது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. பட மூலாதாரம்,Getty Images முதல் ஓவரிலேயே அபிஷேக்குக்கு எதிராக ஒரு வாய்ப்பை உருவாக்கியிருந்தார் டஃபி. ஆட்டத்தின் மூன்றாவது பந்தில், பந்து பேட்டை விட்டு சற்று தள்ளிச் சென்றதால் அவுட் ஆகாமல் தப்பித்தார் அபிஷேக் ஷர்மா. ஆனால், டஃபி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இம்முறை டஃபி வீசிய ஷார்ட் பாலை அவர் பலமாக அடிக்க நினைக்க, பந்து டாப் எட்ஜாகி கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா கைகளில் விழுந்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டஃபிக்கு எதிராக 9 பந்துகளை சந்தித்த அபிஷேக் அதில் 29 ரன்கள் விளாசினார். அந்த அளவுக்கு டஃபிக்கு எதிராக அதிரடி காட்டினார் இந்திய ஓப்பனர் அபிஷேக். ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் அபிஷேக்குக்கு எதிராக 5 பந்துகள் வீசி, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார் டஃபி. அதே ஓவரின் கடைசிப் பந்தில் அவர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் வீழ்த்தினார். 'பேக் ஆஃப் லென்த்' பந்தை ஹெட் தூக்கி அடிக்க, டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ஃபில் சால்ட் அதை கேட்ச் பிடித்தார். டஃபி வீசிய மூன்றாவது ஓவரில், இன்னொரு ஷார்ட் லென்த் பாலுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்தது - அவருடைய மூன்றாவது விக்கெட். மணிக்கு சுமார் 134 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தில் நித்திஷ் குமார் பெரிய ஷாட் அடிக்க முயற்சிக்க பந்து டாப் எட்ஜாகி மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த அபிநந்தன் சிங் கைகளில் தஞ்சமடைந்தது. தொடர்ந்து கடினமான அந்த டெஸ்ட் போட்டி லென்த்களில் வீசி பேட்டர்களுக்குக் கடுமையான சவால் கொடுத்தார் டஃபி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரிடமிருந்து எதிர்பார்த்தது இதைத்தான்: ஹேசில்வுட் செய்யும் அதே வேலை. பட மூலாதாரம்,Getty Images சில தினங்களுக்கு முன்பு, மினி ஏலத்துக்கு தாங்கள் தயாரானது பற்றிய வீடியோக்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்டது. அதில் ஜேக்கப் டஃபியை வாங்கும் முடிவுக்கு வந்த விவாதங்கள் பற்றியும் பார்க்க முடிந்தது. அதில், ஹேசில்வுட்டுக்கு மாற்றாக அவர்கள் வாங்க நினைத்த முதல் வீரர் ஜேக்கப் டஃபி. ஹேசில்வுட் போல் உயரமான வீரர் என்பதால், அவரைப் போலவே உயரத்திலிருந்து பந்தை ரிலீஸ் செய்வார் என்பதாலும், சமீபமாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பதாலும், அவரையே முதல் இலக்காக வைத்திருந்தார்கள். அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கும் வாங்கினார்கள். அறிமுக போட்டியில், ஹேசில்வுட் போன்ற தாக்கத்தையே டஃபி ஏற்படுத்திவிட்டார். டஃபியின் செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் வேகப்பந்துவீச்சாளருமான யோமஹேஷ், "ஹேசில்வுட் இந்தப் போட்டியை ஆடியிருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதையே டஃபி செய்தார். ஆனால், இது எளிதான விஷயம் இல்லை. ஆர்சிபி போன்ற ஒரு நடப்பு சாம்பியன் அணிக்கு வந்து, ஹேசில்வுட் போன்ற ஒரு உலகத்தர வீரரின் இடத்தை நிரப்பும்போது பெரும் நெருக்கடி ஏற்படும். அதை சமாளித்து டஃபி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்" என்றார். மேலும் பேசிய அவர், "அவர் தெளிவான ஒரு திட்டத்தோடு வந்திருந்தார். சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் பந்துவீசும்போது பவுன்ஸ் சற்று கூடுதலாகக் கிடைக்கும். சீம் மூவ்மென்ட் இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். மேலும், அபிஷேக் & ஹெட் இருவருக்கும் எதிராக அவர் ஒரேயொரு தவறான பந்தை மட்டுமே வீசினார். மற்றபடி பேட் (pad) லைனில் வீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார். ஒரு சரியான திட்டத்தைத் தீட்டி அதை சரியாக அரங்கேற்றவும் செய்தார்" என்றும் யோமஹேஷ் கூறினார். சால்ட் பிடித்த 3 கேட்ச்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு விக்கெட் கீப்பர் ஃபீல்டிங்கில் ஜொலிப்பது அதிகம் பார்த்திட முடியாத விஷயம். அரிதாகவே நடப்பது. கீப்பிங் கடினம் என்றாலும், அதற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. கிளவுஸ் போட்டுக்கொண்டு, அதிகம் நகராமல் களத்தில் செயல்படும் கீப்பர்கள், அந்த கிளவுஸ் இல்லாமல் மைதானத்தின் முழு பரப்பிலும் செயல்படுவது முற்றிலும் வேறுபட்டது. ஆனால், விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் ஃபீல்டிங் செய்வது கடினமே இல்லாத ஒரு விஷயம் என்பதைப் போல் காட்டியிருக்கிறார். சன்ரைசர்ஸுக்கு எதிராக அவர் பிடித்த 3 கேட்ச்கள் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. டிராவிஸ் ஹெட் அடித்த பந்து அவர் இடுப்பு உயரத்துக்கு வந்தது. விரைந்து வந்த பந்தின் வேகத்தை சரியாகக் கணித்து, தன் உயரத்தைக் குறைத்து 'ரிவர்ஸ் கப்' முறையில் சிறப்பாக அந்தப் பந்தைப் பிடித்தார் அவர். கிளாசன் கேட்சை சால்ட் பிடித்தது விவாதத்துக்கு உட்படக்கூடியதுதான். சிலர் அவர் பவுண்டரி எல்லையைத் தொடவில்லை என்றும், சிலர் அவர் தொட்டுவிட்டார் என்றும் கருதுகிறார்கள். அது எப்படியாக இருந்தாலும், சால்ட் அதைப் பிடித்த விதம் அசாத்தியமானது. அவர் முதலில் நின்றிருந்த இடத்துக்கும் பவுண்டரி எல்லைக்கும் பெரிய இடைவெளி இல்லை. அப்படியொரு நிலையில் அவர் பின்னால் தன் உடல் பாரத்தைத் தள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது அவரையும் பின்னுக்குத் தள்ளியது. பவுண்டரி எல்லையுடனான இடைவெளி குறைவாக இருக்கும்போது அதைத் தாண்டாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆனால், பின்னால் அப்படியே கரணம் அடித்து எல்லையைத் தாண்டாமல் மைதானத்துக்குள்ளேயே இருந்தார் சால்ட். பட மூலாதாரம்,Getty Images அவர் பிடித்த மூன்றாவது கேட்ச் அதையெல்லாம் விடக் கடினமானது. இஷான் கிஷன் அடித்த பந்தை டீப் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் நின்றிருந்த அவர் வலது புறம் ஓடி ஒற்றைக் கையை நீட்டி டைவ் அடித்துப் பிடித்தார் அவர். யாருமே அப்படியொரு கேட்ச் பிடிக்கப்படும் என்று நினைத்திருக்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாதும் ஆர்சிபி வீரர்களுமே கூட அதை ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனுமே பார்த்தார்கள். ஹெட், கிளாசன், கிஷன் என மூன்றுமே மிகப் பெரிய விக்கெட்டுகள். அதிலும் கிளாசன் மற்றும் கிஷன் இருவரும் நன்கு ஆடிக்கொண்டிருந்த வீரர்கள். அந்தத் தருணங்களில் அப்படியான கடினமான கேட்ச்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் சன்ரைசர்ஸின் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும். அதிரடியான 3 இன்னிங்ஸ்கள் 202 ரன்களை சேஸ் செய்த ஆர்சிபி அதை 15.4 ஓவர்களிலேயே எட்டி ஐபிஎல் சாதனை படைத்திருக்கிறது. அந்த அணியின் ரன்ரேட்டும் பெருமளவு (+ 2.907) அதிகமாகியிருக்கிறது. இந்தப் பெரும் வெற்றிக் காரணம் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் பட்டிதார் ஆடிய அதிரடி ஆட்டம். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய படிக்கல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத்தான் இன்னிங்ஸைத் தொடங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர் டேவிட் பெய்ன், ஹர்ஷல் பட்டேல், நித்திஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட் என அனைவரின் பந்துவீச்சையும் அடித்து ஆடினார். அவருடைய 'டைமிங்' மிகச் சிறப்பாக இருந்தது. 21 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஒருவகையில் படிக்கலை விடவும் வேகமாக ஆடினார். அவர் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அதீத அதிரடி காட்டும் பட்டிதார், இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதே மாதிரியான அதிரடியைக் காட்டினார். அவர் அடித்த 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே ஸ்பின்னுக்கு எதிராக வந்தது. பட மூலாதாரம்,Getty Images படிக்கல் 234.61 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிச் சென்றிருக்க, பட்டிதாரோ 258.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருந்தார். அவர் அவுட்டானபோதே தேவைப்படும் ரன்ரேட் 6 ரன்களுக்கும் குறைவாகிவிட்டிருந்தது. கடைசி கட்டத்தில் விராட் கோலியுமே அதே அதிரடியைக் கையில் எடுத்து வழக்கம்போல் போட்டியை ஆர்சிபி-க்கு முடித்துக் கொடுத்தார். ஆரம்ப கட்டத்தில் சற்று நிதானமாக விளையாடியவர் மெல்ல ரன் ஸ்கோரிங் ரேட்டைக் கூட்டி ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 64வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த 3 அதிரடி இன்னிங்ஸ்கள் ஆர்சிபி அணி இந்த அதிரடி சேஸை அரங்கேற்றி சிறந்த ரன்ரேட்டும் பெற உதவியது. தங்கள் அணியின் அதிரடி பேட்டிங் பற்றிப் பேசிய கேப்டன் பட்டிதார், "சரியான திட்டமிடல் என்று எதுவும் இல்லை. ஆடுகளத்தை கணித்தோம், அது நன்றாக இருந்தது, அதற்கேற்ப ஆடினோம். படிக்கல் மற்றும் கோலியின் இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c145jvz16ndo
  16. அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம் Mar 29, 2026 - 11:30 AM அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmnbcna85000f356puzf7zq5a
  17. ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார் Mar 29, 2026 - 08:02 AM ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போர்த் திட்டங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாரசூட் படைவீரர்களும் இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnb4kgfl0007356pb4v79e4v
  18. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது. ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470306
  19. கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை. வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன. இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கனிய வள திருட்டுக்கள் , சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம். எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1470309
  20. மணல் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை. வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: ‘மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 6 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். இது ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த’ கதையாக, பொலிஸாரின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை முறைப்படுத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக, ஒரு கியூப் மணலை 7, 500 ரூபாவுக்கு வழங்க முடியும். அதன்படி ஒரு டிப்பர் மணலை 23, 000 ரூபாவுக்குப் பெறலாம். யாழ்ப்பாணத்திற்கு அதனைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செலவுகளைக் கணித்தால், சுமார் 55, 000 முதல் 65, 000 ரூபாவுக்குள் மணலை விநியோகிக்க முடியும். ஆனால் சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மாஃபியாக்கள், ஒரு டிப்பர் மணலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான மாஃபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் இருப்பதை நாம் அறிவோம். எமது அரசாங்கத்திடம் இத்தகைய விளையாட்டுகள் செல்லுபடியாகாது. அத்துடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது; அது மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அமைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470297
  21. நான் பார்க்கும் போட்டி முடிவடைந்தால், மசகு எண்ணெய்தட்டுப்பாடே நீங்கி விடும் போலுள்ளது.
  22. இவரின் வாயால் ஒருநாள் மாட்டுவார் என எதிர்பார்த்திருந்தேன். ஒரு வைத்தியராகவும் சரியாக பணியாற்ற முடியவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காக செயற்பட முடியவில்லை, மொத்தத்தில் ஒரு பண்பாளனாக பேசவும் தெரியவில்லை. அவர் மக்களுக்காக பாராளுமன்றம் போகவில்லை, வைத்தியர் சத்தியமூர்த்தியை பாழிவாங்கப்போய் தன்னை தாழ்த்திக்கொள்கிறார். எத்தனை தடவை போலீஸ் நிலையம் அழைக்கப்பட்டிருக்கிறார், நீதிமன்றம் சென்றிருக்கிறார்? அத்தனையும் அவரது பிழையான தனி நடத்தைக்காகவே. இவர் அடுத்த சிலோன் ட்ரம்ப். ஒருநாளைக்கு நாமலை புகழ்ந்து அடுத்த ஜனாதிபதி என்பார், இன்னொருநாள் சஜித்துக்கு பின்னால் ஓடுவார், சுயமாக தன் இருப்பை தக்க வைக்க முடியாத கோமாளி, இவருக்கு வாக்கு போட்ட மக்கள் வெட்க்கித் தலை குனிய வேண்டும். இதில, நடிகர் விஜய்க்கு வக்காலத்து வேறு.
  23. சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்
  24. “நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.