பாகம் நான்கு
"ஐயா! இந்த கத்தரிக்காய் என்ன விலை.?"
"கால் கிலோ நாற்பத்தைந்து ரூபாய் அம்மா.." என்று சொல்லிவிட்டு அடுத்த வாடிக்கையாளருக்கு தக்காளிபழம் நிறுத்து கொண்டிருந்தார் அந்த மரக்கறி வர்த்தகர்.
"ஒரு கால் கிலோ போடுங்கையா.."
அவர் அதை நிறுத்துகொண்டே "வேற ஏதாவது.." என்று கேட்டபோது தான் ராணியம்மா அவர்களை பார்த்தார்.
"ஓம் அவர்களே தான்.." என்று மனசுக்குள்ளே சொல்லிகொண்டு "ஐயா இந்த மரக்கறி கூடையை கொஞ்சம் பார்த்துகொள்ளுங்கள் நான் இப்பவே வந்திடுவன் " என்று சொல்லிவிட்டு ஐயாவின் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அவர்களை நோக்கி வேகமாக நடக்க தொடங்கினார்.
"தம்பி நீங்க தானே அண்டைக்கு வீட்டுக்கு வந்து நேசனை கூட்டி கொண்டு போனீர்கள்..." சிறு ஐயத்துடன் தான் ராணியம்மா கேட்டார்.
"ஓம் அம்மா.. அவர் எங்களுடன் தான் இருக்கிறார். உங்கட பெயரை தான் தனக்கும் வைச்சிருக்கிறார். ராணிமைந்தன் என்று"
ராணியம்மாவுக்கு கண்கள் கலங்கின. ஒருகையால் துடைத்துக்கொண்டே "தம்பி கேட்கிறேன் என்று குறை நினைக்காதீங்க..மற்ற பிள்ளைகள் எல்லாம் இயக்கத்துக்கு போய் ஒன்று இரண்டு மாதங்களிலேயே பெற்றோருக்கு காட்டினார்கள். நேசன் போய் ஐந்து மாதங்கள் ஒரு நாள் கூட அவனை காட்டலை. என் மகனுக்கு ஏதாவது காயம்.. கீயம்..." மனசிலே இருந்த வலிகள் வார்த்தைகளாக..
"அப்படி ஒன்றும் இல்லையம்மா. அவர் சண்டைக்கே போகவில்லை. ஒரு முக்கியமான வேலையாக இருப்பதால் அதை விட்டு வரமுடியாமல் உள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் உங்களை வந்து பார்ப்பார்".
"எப்போ தம்பி .?"
இந்த கேள்விக்கு அவர்களுக்கு என்ன. அந்த ஆண்டவனுக்கே பதில் தெரியாது.
"கூடிய சீக்கிரம் அம்மா. அந்த வேலை முடிஞ்சதும் வருவார்".
"சரி தம்பி. நீங்கள் அவனை கண்டால் அம்மா ரொம்பவும் விசாரித்ததாக சொல்லுங்க. கிழமைக்கு ஒருக்கா எண்ணெய் தேச்சு குளிக்க சொல்லுங்க. நல்லா சாப்பிட சொல்லுங்க. கவனமாக இருக்க சொல்லுங்க. தங்களை பற்றி கவலை படவேண்டாம் என்று சொல்லுங்க.. தங்கச்சிமார் நல்லா படிக்கினம் என்று சொல்லுங்க ... " என்று அடுக்கி கொண்டே போனார்.
"ஓம் அம்மா.. நிச்சயமாக சொல்லுறம்" என்று அவர்கள் புறப்படும் போது..
"தம்பிமார் ..எனக்கு ஒரு உதவி செய்வீங்களா.. நாளைக்கு மதியம் போல ஒருக்கா வீட்டுக்கு வருவீங்களா"
"அம்மா நாளைக்கு பெரும்பாலும் இஞ்சாலை பக்கம் தான் வேலை. நிச்சயமாக வருவோம்" என்று சொல்லிட்டு போய்விட்டார்கள்.
வீட்டுக்கு வந்த ராணியம்மவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. நேசனின் சிறுவயசு படத்தை கொஞ்சியபடியே சொன்னாள் "என் பிள்ளை என் பிள்ளை தான்" என்று கண்களில் நீர்வர ஆனந்தமாக சொன்னாள்.
தங்கைகள் சுபாவுக்கு மதிக்கும் என்னவென்றே புரியவில்லை.
"அம்மா.. என்னம்மா நடந்தது அண்ணாவை பார்த்தியா"
"இல்லையடி.. அண்ணாவை கூட்டி கொண்டு போனவர்களை பார்த்தேன். அவன் என் பெயரைத்தான் தனக்கு வைச்சிருக்கிறான். என் பிள்ளை என்னை மறக்கவே இல்லை."
"சரி மச மச என்று நிக்காமல் அண்ணாவுக்கு கடிதம் எழுதுங்கோ.. நாளைக்கு அவர்கள் வருவார்கள் அவர்களிடம் கொடுத்துவிடலாம்" என்று பிள்ளைகளை துரத்தினாள்.
தானும் கடிதம் எழுத தொடங்கினாள்.
அன்புள்ள தம்பி,
நாங்கள் நலம். தம்பி.. வட்டக்கச்சி முருகன் துணையால் நீயும் நலமாக இருப்பாய். தம்பி உன்னை கூட்டி சென்றவர்களை இன்று சந்தையில் பார்த்தேன். அவர்களிடம் கொடுக்க தான் இந்த கடிதம் எழுதுகிறேன்.
தம்பி..ஒவ்வொரு நாளும் உன் நினைப்பு தான். எந்த நாளும் நான் சாப்பிட ஒரு வாயை வைக்கும்போது... நீ சாப்பிடியா..உனக்கு நல்ல சாப்பாடு கிடைச்சுதா என்ற எண்ணமே என்னை சாப்பிட விடாது தம்பி. எங்க வீட்டு நாய் கூட நீ இல்லாமல் சாப்பிடுது இல்லை..நாங்க மட்டும் எப்படி தம்பி...??
நீ எத்தனை நாள் என்னிடம் கேட்டிருப்பாய் எனக்கு ஊட்டிவிடம்மா என்று. நானும் நீ வளர்ந்திட்டாய் என்று தட்டிகழிப்பேன் .. இப்போ தோணுதையா..உன்னை பக்கத்தில் வைச்சு ஊட்டிவிடணும் போல..எப்போ அப்பா இந்த அம்மாவை பார்க்க வருவாய்.
தம்பி..தங்கச்சிகள் எல்லாம் நல்ல படிக்குதுகள். தங்களுக்காக தான் அண்ணன் இயக்கத்துக்கு போனான் என்று உணர்ந்து படிக்குதுகள். அப்பா வயலுக்கு போய்ட்டார். வந்ததும் சொல்லுறன். அவரும் உனக்கு கடிதம் எழுதணும் என்று சொன்னவர்.
தம்பி..உனக்கு நிறைய எழுதணும் என்று யோசிச்சு வைச்சேன். இப்போ கண்ணீர் மட்டும் தான் வருகுது எழுத்து வருகுதில்ல. குறை நினைக்காதே இந்த அம்மா உன்னை எண்டைக்கும் நினைச்சு கொண்டுதான் இருப்பா.
கவனமாக இருந்து கொள். பதில் போடு. பொறுப்பாளரிடம் கேட்டு வீட்டுக்கு ஒருக்கா வந்திட்டு போ.
அன்புடன்,
அம்மா.
குறிப்பு : தம்பி இந்த கடிதத்துடன் உனக்கு பிடிச்ச பத்து கோழிக்கறி சாப்பாடு பொதிகள் கொடுத்துவிடுறேன்.. நீயும் சாப்பிட்டு மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்துவிடு.
"பாவம் அவர்கள் எல்லாம் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு எத்தனை நாளோ. அவங்கள் அம்மாவும் என்னை போல தானே கவலைபடுவாங்க. ஒரு அம்மாவின் வலி இன்னொரு அம்மாவுக்கு தானே தெரியும் " என்று மனசிலே சொல்லிக்கொண்டு ராணியம்மா நாளைக்கு சமைபதற்கான ஆயத்தங்களில் ஈடுபட தொடங்கினார்.
மறுநாள் காலையிலையே எழும்பி தன் மகனுக்காகவும், மகன்களுக்காவும் தன் பாசம் எல்லாம் கொட்டி சமைக்க தொடங்கினாள்.
மதியமளவில் எல்லாவற்றையும் பொதிகளாக கட்டி, குடும்பத்தின் கடிதங்களுடன் வாசலில் காத்திருந்தாள் ராணியம்மா... அவர்களுக்காக.
அந்த விழிகளில் இருந்த தேடலும் ஏக்கமும் வார்த்தைகளால் வடிக்க கூடியவை அல்ல.
ஒரு நிமிஷம்.....ஒரே ஒரு நிமிஷம்..நீங்கள் அந்த ராணியம்மாவாக இருந்து பாருங்கள்.
உங்களுக்கு புரிகிறதா அந்த ஏக்கம்..
ராணியம்மா காத்திருக்கிறாள்.........................!
அவர்கள் வரவில்லை..
வரவேயில்லை..
இனி வரபோவதும் இல்லை..
ஆம்..நேற்று மாலை ஒரு பணிக்காக மல்லாவி போய்வந்தபோது, ஆழ ஊடுருவும் படையினர் நடாத்திய கிளைமோர் தாக்குதலில் அவர்கள் வீரச்சாவு என்று, ராணியம்மாவுக்கு உங்களில் யாராவது சொல்லிவிடுவீங்களா..?
(காத்திருப்பு தொடரும்)
பாகம் ஐந்து இங்கே அழுத்துங்கள்