பாகம் ஐந்து
நாயகன்...
ராணிமைந்தனுக்கு இயக்கத்தில் இருந்த ஆறுதலும் அரவணைப்பும் பொழுதுபோக்கும் அவன் தான்.
பெயர் மட்டும் தான் நாயகன். தோற்றத்திலும் செயற்பாட்டிலும் ஒரு நகைச்சுவை நடிகனுக்கு ஒப்பானவன்.இயக்கத்தில் இப்படி விசித்திரமாகவும் பெயர்கள் அமைவதுண்டு. குள்ளமான உயரத்தை கொண்டவனுக்கு நெடியவன், சண்டைக்கே போக பயப்டுபவனுக்கு போர்பிரியன், வார்த்தையிலே என்றைக்குமே அன்பை காட்டாதவனுக்கு அன்பரசன், முப்பது வயசுக்கு மேல் இருப்பவனுக்கு இளையவன், முகத்திலே சிரிப்பே இல்லாதவனுக்கு இனியவன், நீந்த தெரியாதவனுக்கு கடலரசன், வழுக்கையாக தலை இருப்பவனுக்கு முடியரசன்... இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.
ராணிமைந்தனுக்கு தொழிநுட்ப உதவியாளனாக நாயகன் இணைக்கப்படத்தில் இருந்தே இருவருக்கும் இடையில் ஒரு இனம்புரியாத பிணைப்பு. நாயகனின் நகைச்சுவை பேச்சும், குறும்பு செயல்களும் , ராணிமைந்தனுக்கு வீட்டு நினைப்பை கொஞ்சம் தூரவைக்கும்.
நாயகனின் குறும்புகள், இந்த தலைப்பிலேயே ஒரு தனி தொடர்கதை எழுதலாம். அந்த அளவுக்கு அவனின் குழப்படி பட்டியலும் அதற்கான சேகர் அண்ணாவின் தண்டனை பட்டியலும் நீண்டு கொண்டே போகும்.
இருந்தாலும் உங்களுக்கும் சிலது தெரிந்தே ஆகவேண்டும்.
பொருளாதார தடைகள், போரின் தீவிரம் காரணமாக போராளிகளுக்கு வழங்கப்படும் வழங்கல்களின் அளவுகள் குறைந்து கொண்டே போயின. ஐந்து பேருக்கு ஒரு பற்பசை,பாதி சவர்க்காரம், பால்மா இல்லாத தேநீர், குளிர்களி (ஐஸ்கிரீம்), சொக்கிலேட் போன்றவை எல்லாம் கண்ணாலும் காணமுடியாது.
இருந்தாலும் முகாம்களுக்கு, தங்களுக்கு தேவையான சிறு பொருட்களை வாங்குவதற்காக, சிறு பயிர்செய்கையோ(கத்தரி, வெண்டி,தக்காளி..) அல்லது கோழி வளர்ப்போ மேற்கொள்ள கூடிய அதிகாரம் வழங்கபட்டிருந்தது.
சேகர் அண்ணா, கோழி வளர்ப்பு பணியை நாயகனிடம் கொடுத்திருந்தார். அவனும் அதை நன்றாக தான் செய்து வந்தான். அவனது புண்ணியத்திலே எல்லாருக்கும் நாளுக்கு ஒரு முட்டை, வாரந்தோறும் ஒருமுறை குளிர்களி, பிஸ்கட் என்று நல்லாத்தான் போய் கொண்டிருந்தது.
அதிகாலையிலே சரக்கட்டுடன், சைக்கிளில் இரண்டு பக்கமும் சேவல்களை கட்டி தொங்க போட்டு கொண்டு நாயகன் சந்தைக்கு போகும் பாணியை யாராலும் மிஞ்ச முடியாது. சந்தையிலிருந்து திரும்பும் போது கையிலே பொருட்களையும் வாயிலே புன்னைகையும் வைத்தே சொல்லமுடியும் அவனிடம் அம்பிட்ட ஏமாளிகள் எத்தனை பேர் என்று.
இப்படி போன அவனது வியாபாரத்திலும் இடிவிழுந்தது.
அவன் வளர்த்த கோழிகளுக்கு வந்தது தூங்கும் வியாதி. ஒரே நாளில் தூங்கி செத்தது ஆறு கோழி.
சேகர் அண்ணா பார்த்துவிட்டு செத்த கோழிகளை வெட்டி தாக்க சொல்லிட்டு போய்விட்டார்.நாயகன் கிடங்கு வெட்டியதை எல்லோரும்பார்த்தோம். எல்லாரும் அவரவர் வேலைக்கு போய்விட்டோம். மாலை நேரம் கை நிறைய குளிர்களியுடன் வந்தான் நாயகன். எல்லாரும் ஆளாளுக்கு அடிபட்டு வேண்டி சாப்பிட்டு ஏப்பம் விட்டிட்டு கேட்டோம்.
"எதுடா காசு"
"நான் செத்த கோழிகளை வித்திட்டேன் மச்சான்"
"எப்படியடா"
"எல்லாத்தையும் உரிச்சு சிறகுகளை மட்டும் தாட்டுவிட்டு. கோழிகளை கொண்டுபோய் பக்கத்து வீடுகளிலே வித்தேன்" என்றான் நாயகன்.
"சனம் வாங்கிச்சா ?" இது நாங்கள்.
"அது விக்கிறமாதிரி வித்தா சனம் வாங்கும்"
"என்ன சொல்லி வித்தணீ"
"எங்கட முகாமுக்கு தலைவர் வாறது என்று சொன்னவர். நாங்கள் கோழி எல்லாம் உரிச்சு சாப்பாடுக்கு ரெடிப்பண்ண, கடைசி நேரத்திலே தலைவர் வரமுடியாமல் போச்சு. இந்த கோழிகளை என்ன செய்கிறது என்று தெரியலை. அது தான் நம்பிக்கையான ஆட்களிடம் தான் இதை சொல்லி விக்க முடியும். அது தான் உங்களை தேடிவந்தேன்.ஒருத்தருக்கும் சொல்லிபோடாதீங்கள் என்று நாலு வீடுக்கும் ஒரே மாதிரி சொல்லி வித்தாச்சு" என்றான் நாயகன் கூலாக..
இது சேகர் அண்ணாவுக்கு தெரிந்து ஒரு வார சமையல் தண்டனையை வாங்கி கட்டி கொண்டான் நாயகன்.
அடுத்த சம்பவம் சேகர் அண்ணாவுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது.
முகாமில் ஒரு சந்திப்புக்காக இருபத்தைந்து கதிரைகள் தேவைப்பட்டன. எங்களிடம் இருந்ததோ ஆறு கதிரைகள் தான். கதிரை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு நாயகனிடம் விடபட்டது. ஒவ்வொரு வீட்டிலும் போய் இரண்டு இரண்டு கதிரையாக இருபது கதிரை சேர்க்கவேண்டும்.
நாயகனின் குறும்பு மூளை வேலை செய்தது. இருபது கதிரையுடன் நின்றான். சந்திப்பும் இனிதே முடிந்தது. எங்கள் எல்லாருக்கும் ஒரு சந்தேகம். என்ன இருபது கதிரையும் ஒரே மாதிரி இருக்கு என்று. நாயகன் ஏதோ சொல்லி சமாளித்துவிட்டான்.
ஆனால் உண்மையில் நாயகன் எங்கட முகாமுக்கு பக்கத்தில் இருந்த தேநீர் கடைக்கு சென்று, அதன் உரிமையாளரிடம்" எங்கட முகாமுக்கு தலைவர் வாறார், சந்திப்புக்கு இருபது கதிரை தேவை எல்லாரிடமும் கேட்கமுடியாது அண்ணே. இரகசிய பிரச்சனை. உங்களிலே வைச்சிருக்கிற நம்பிக்கை விசுவாசத்தில தான் வந்தனான்" என்று அவிச்சு, அந்தாள் கடையையும் பூட்டிவிட்டு கதிரைகளை கொடுத்திருந்தார்.
இது சேகர் அண்ணாவுக்கு தெரியவர, நாயகன் தலைவரை வைத்து பண்ணிய குறும்பால் கோபமடைந்து, நாயகனுக்கு தண்டனையாக மன்னார் எல்லைக்கு ஒரு மாதம் சண்டைக்கு போக சொல்லிவிட்டார்.
உண்மையிலையே சண்டைக்கு போறதெண்டால் நாயகனுக்கு உள்ளூர பயம் தான்.
ஆனால் அந்த மன்னார் எல்லையில் நடந்த சண்டை அவன் தலைவிதியையே மாற்றியது.
(தொடரும்)
பாகம் ஆறு இங்கே அழுத்துங்கள்