பாகம் பன்னிரண்டு
கோம்பாவில் குளத்தடியால் வந்த ராணுவத்தையும் தேவிபுரம் காட்டுப்பகுதியால் வந்த ராணுவத்தையும் இரணைப்பாலை வடக்கு பகுதியில் மறித்து உக்கிர சமர் நடத்தினர் புலிகள்.
கடும் சமர்க்களம் அது.
தளபதி லோரன்ஸ், தளபதி தீபன் வழி நடத்தலில் புலிகள் தீரமாக சண்டை போட்டனர்.
அந்த களமுனையின் காவலரணில் ஒரு தொகுதி தலைவனாக என்னை நியமித்து இருந்தனர்.
ஒரு நாள் மாலை பொழுதில் அவள் வந்தாள்.
பின்னால் இருந்து ஒரு பழக்கமான குரலில் அண்ணா என்று கூப்பிட்ட போது, திரும்பிய என்னை அவளின் அழகான புன்னகை மூலம் அன்பை காட்டினாள்.
அவள் வேறு யாருமில்லை என் உடன் பிறவா கள தங்கை கலையரசி தான்.
கேப்பாபுலவு களமுனைக்கு பிறகு இப்போ தான் சந்திக்கிறேன். ஒரு நாற்பது நாள் இடைவெளி. எவ்வளவு மாற்றம் காலங்களில்.
எதிரி புதுக்குடியிருப்பை பிடித்து இரணைப்பாலை வரை வந்துவிட்டான். மறுபக்கத்தாலே விசுவமடுவில் இருந்த இராணுவம் உடையார்கட்டு, சுதந்திரபுரம், தேவிபுரம் பிடித்து இரணைப்பாலை வடக்கு வரை வந்துவிட்டான்.
மக்கள் புதிய பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த புதுமாத்தளன், பொக்கணை, வலைஞர்மட பகுதிகள் நோக்கி நகர்ந்துவிட்டார்கள்.
இடைவிடாத செல் மழை, கிபிர் குண்டுவீச்சுகள், பல்குழல் எறிகணைகள், கொத்து குண்டுகளுக்கு நடுவில் மக்களுக்காக மறவர்கள் தீராத மனவுறுதியுடன் போராடினார்கள்.
இவற்றுக்கும் மத்தியிலும், போராளிகளின் மனவுறுதியை குலைப்பதற்காக, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் வரும், வழங்கல் (உணவு) தொகுதிக்கும் அடிக்கடி குறி சூட்டு (சினைப்பர்) தாக்குதல் மூலம் தடுத்து நிறுத்தினான் சிங்கள ராணுவம்.
சிலவேளைகளில் ஐந்து நாட்களுக்கு கூட சாப்பாடு இல்லாமல் சண்டை போட்டார்கள் போராளிகள். அது அவர்கள் மக்கள் மேல் வைத்த பாசத்தின் வெளிப்பாடு.
ஒரு நேர சாப்பாடு தராவிட்டாலும் அம்மாவுடன் சண்டைபோட்ட நாங்கள், ஐந்து நாட்கள் சாப்பாடு வராவிட்டாலும் யாரையும் நோகாமல எதிரியுடன் சண்டை போட மக்கள் மீது எவ்வளவு பாசம் வேண்டும்.
அது சில வேளைகளில் அவர்களின் அம்மா மீது இருந்த பாசத்தை போல பல மடங்காக கூட இருக்கலாம் இல்லையா.?
பட்டினிக்கும் மனவுறுதிக்குமான போராட்டத்தில் மனவுறுதி வென்றாலும், சில வேளைகளில் வயிற்றுபசி எங்களுக்கு சில நோய்களையும்,எரிச்சலையும், சிந்தனை குலைவையும் ஏற்படுத்துவதுண்டு.
வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பால் படும் வேதனையை தவிர்க்க, தென்னங்குருத்துகளையும், புளியம் இலைகளையும் ஏன் சில வேளைகளில் பூவரசமிலைகளையும் சாப்பிட்டு அந்த வயிற்று எரிவை குறைத்து இருக்கிறோம்.
ஏறத்தாழ ஆடுமாடுகள் போல எம்மை மாற்றி கொண்டோம். எல்லாம் எம் மக்களுக்காக என்ற உணர்வு, எங்களை இந்த இலைகுழைகளை கூட அமிர்தமாக உண்ண வைத்தது. இதை கூட என்னால் வார்த்தைகளால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. எல்லாம் உணர்வு.
அன்றும் அப்படி தான்.
எனக்கு இரண்டு மூன்று நாளாக காய்ச்சல்.
பட்டினி, உடலில் சத்தின்மை, அசுத்த நீர் இதில் ஏதாவது ஒன்றினால் தான் அந்த காய்ச்சல். இருந்தும் களத்தை விட்டு நகரமுடியாத நிலை. எனக்கு ஆறுதலாக இருந்தவள் கலையரசி தான்.
எதிரிக்கு தெரியாமல் அடுப்பு மூட்டி, கொதிநீர் வைத்து தருவாள். குடிக்கவும் ஒத்தணம் பிடிக்கவும். என் கூட பிறந்த தங்கை அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாளோ அதை விட அதிகமாக செய்தால் என் அன்பு தங்கை கலை.
இரண்டு நாளாக சாப்பாடும் இல்லை. வாயெல்லாம் கசத்தது. ஏதாவது புளிப்பாக சாப்பிட வேண்டும் போல இருந்தது. கலையிடம் கெஞ்சினேன். "அண்ணா உனக்கில்லாததா.. இரு இப்பவே கொண்டு வாறன்" என்று சொல்லிவிட்டு போனவள் தான்.
ஒரு படீர் என்ற வெடிச்சத்தம். அதை தொடர்ந்து "அண்ணா....." என்ற அலறல் என்னை திடுக்கிட்டு எழும்ப வைத்தது. காய்ச்சலுடன் சத்தம் வந்த திசை நோக்கி ஓடினேன் கையில் என் ஆயுதத்தையும் எடுத்து கொண்டு.
அங்கெ எங்களுக்கும் எதிரிக்குமிடைப்பட்ட பகுதியில் இருந்த புளியமரத்துக்கு கீழே, கையில் கொத்தாக புளியமிலையுடன், என் தங்கை உயிரை விட்டிருந்தாள். நெத்தியில் இருந்து வந்த அவளின் குருதி மண்ணை நனைத்திருந்தது.
இந்த பாழாய் போன அண்ணனுக்காக, காய்ச்சலுடன் நான் கேட்டேன் என்ற கடமைக்காக, ஒரு கொத்து புளியமிலைக்காக, இந்த மண்ணுக்காக என் தங்கை, இந்த மண்ணிலே வீழ்ந்து கிடக்கிறாள்.
எனக்கே களம் என்றும் பாராமல் ஓஒ ... என்று கத்தி அழனும் போல இருக்கு..உங்களுக்கு அப்படி இல்லையா உறவுகளே..
போராளிகள் என்றால் கல் மனம் படைத்தவர்கள் அல்ல. அவர்களும் உங்களை போல தான். அவர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். சாவுகள், இரத்தம், சதைகள் என அவர்களின் மனசை இறுக்கி இருந்தாலும் சில வேளைகளில் அவற்றையும் மீறி உணர்வுகள் வெளிபடுவது தவிர்க்க முடியாமல் போய்விடும்.
ஏன் என்றால் நாங்களும் மனுஷர் தானே உறவுகளே..எங்களுக்கு மட்டும் கடவுள் மனசை கல்லாக படைக்கவில்லை தானே ..
அங்கெ நடந்ததை என்னால் ஊகிக்க முடிந்தது. கலை கொஞ்சம் உயரம் குறைவானவள். அதுவே அவளுக்கு எமனாகவும் வரும் என்று எள்ளளவும் யோசித்தும் இருக்கமாட்டாள். எங்கள் நிலைகளுக்கு பின்னால் இருந்த புளியமரத்தில் தாழ்வாக இருந்த இலைகள் எல்லாம் கடந்த ஒன்பது பத்து நாட்களாக போராளிகளின் வயிற்றுபசிக்காக பிடுங்கபட்டு மொட்டையாக இருந்தது. உயரத்தில் இருந்தவை அவளுக்கு எட்ட வாய்ப்பில்லை. ஏறி தான் பிடுங்கவேண்டும்.
ஏறி பிடுங்கும் போது குறி சூட்டு தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற நிலையில், எங்கள் அரணுக்கு முன்னால் இருந்த மரத்தில் தாழ்வாக இருந்த இலைகளை பறித்து கொண்டு ஓடிவந்திடலாம் என்று முடிவெடுத்து அதனை செயற்படுத்திய போது தான் அவள் கொடிய எதிரியின் குறி சூட்டுக்கு இலக்காகி இருக்கிறாள்.
என்னால் என் தங்கையின் உயிரை தான் காப்பற்ற முடியவில்லை. அவளின் புகழுடலையாவது எதிரியின் கைகளில் சிக்காமல் எடுத்து அவளின் குடும்பத்தினரின் கைகளில் சேர்ப்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
ஒரு அண்ணனாக நான் இதைக்கூட செய்யணும் இல்லையா என் உறவுகளே..?
பதுங்கி நிலையெடுத்து, ஊர்ந்தபடி அவளின் புகழுடல் இருந்த இடத்தை அண்மித்துவிட்டேன்.
மீண்டும் படீர் என்ற சத்தம்.
என் காலை பதம் பார்த்தது கொடிய சிங்கள எதிரியின் குறி சூட்டு சன்னம் ஒன்று. என் தொடைகளை ஊடுருவி மறுபக்கத்தால் சென்று இருந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த என் சக போராளிகளை சைகை மூலம் நிறுத்திவிட்டு, அந்த புளியமரத்தின் வேர்களுக்குள் உருண்டு மறைந்து கொண்டேன்.
உடலை தூக்க வரும் போராளிகளுக்காக வெறியுடன் காத்திருந்தான் அந்த கொடிய குறி சூட்டாளன். மறைந்திருந்தவாறே என் ஆயுதத்தை நிமிர்த்தி, எதிரிகளின் நிலைகளை நோக்கி எழுந்தமானத்துக்கு சுட்டு என் கோபத்தை காட்டினேன்.
கால் விறைத்து, இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. கள மருத்துவ இறுக்கி துணியை (பில்ட் கொம்பிரசறை) எடுத்து என் காலை சுற்றி கட்டினேன். என்ன விலை கொடுத்தாவது என் தங்கையின் உடலை எடுத்தே தீருவது என்ற மன வைராக்கியத்தை என்னுள் வளர்த்து கொண்டேன்.
இந்த வைராக்கியம் இதை கேட்கும் உங்களுக்கு வந்திருந்தாலும் ஆச்சரியமில்லை உறவுகளே. ஏன் என்றால் அங்கெ விழுந்திருப்பது என் தங்கை மட்டும் இல்லை. உங்கள் தங்கையும் கூட.
என்னில் இருந்து ஒரு நான்கு அல்லது ஐந்தடி தள்ளி தான் அவள் உடல் இருந்தது. தனது ஆசை அண்ணனுக்கு பிடுங்கிய புளியமிலை கொத்தை விடாமல் பிடித்திருந்தாள். இந்த இலைகளை எப்படியும் அண்ணனிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவள் முகத்தில் தெரிந்தது. அந்த கனவுடனே மண்ணில் கிடந்தாள், என் மன்னிக்கவும் எங்கள் தங்கை கலையரசி.
அருகில் இருந்த ஒரு மொத்த தடியினை எடுத்து அதன் கிளையினை என் தங்கையின் தலை முடியினுள் செருகி, அதனை சுற்றி சிக்கு பட வைத்தேன். பின்னர் என் பலம் கொண்ட மட்டும் இழுத்தேன். என் தங்கை என்னை நோக்கி அசைய தொடங்கினாள். இடையில் அந்த சிக்கு கழன்று தடி விடுபட்டது. ஆனால் நான் என் முயற்சியை விடவில்லை. மறுபடியும் முயன்றேன் என் கை எட்டும் அளவுக்கு வந்து விட்டாள் என் தங்கை.
கையால் எட்டி அவள் தலை முடியை பிடித்து எனக்கு அருகில் அவளை , அவளின் உடலை எடுத்து விட்டேன்.
கட்டி அழனும் போல இருக்கு. உங்களுக்கு இல்லையா ..??
அவளின் கைகளுக்கு நடுவில் இருந்த புளியம் இலைகளை, கண்ணீருடன் சாப்பிட்டேன்.
இது என் வயிற்றுப்பசிக்காக அல்ல உறவுகளே.
இது அவளின் கடைசி ஆசைக்காக..
(தொடரும்)
பாகம் பதின்மூன்று இங்கே அழுத்துங்கள்