பாகம் பதினேழு
காத்திருந்த அந்த நாளும் வந்தது.
நேற்று தான் விடுதலை புலிகளின் தலைமை அந்த முடிவுக்கு வந்தது.
கடந்த பத்து நாளாக நடந்த பயிற்சிக்கான சண்டைகளம் நாளை.
விடுதலைப்புலிகளின் தலைமையும் முக்கிய தளபதிகளும் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நடாத்தி காட்டுக்குள் செல்லும் முடிவானது, காயபட்ட போராளிகள் பொதுமக்கள் , ஏனைய போராளிகள், ஆதரவாளர்கள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்களை என்ன செய்வது தெரியாமல் காலம் தள்ளி போய் கொண்டே இருந்தது.
இந்த நிலையில் நேற்று அரசியல் பிரிவு, ஜெனிவா சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக நாளை மதியம் இரண்டு மணியளவில் செஞ்சிலுவைச்சங்கம் போராளிகளையும் பொதுமக்களையும் தங்களின் பாதுகாப்பில் கையேற்பதாக உறுதியளித்திருந்தது.
அதனடிப்படையில் நாளை நடு இரவில் ஒரு பாரிய ஊடறுப்பு தாக்குதலை நிகழ்த்துவதற்கான தயாரிப்பு பணியில் புலிகள் ஈடுபட்டிருந்தனர்.
கடல் தாண்டிய அந்த தாக்குதலுக்காக, நேற்று இரவு முதல் உலர் உணவுகளையும், பழ ரின்களையும், இறைச்சி துண்டுகள் நிறைந்த ரின்களையும் பொதி பண்ணிகொண்டிருந்தார்கள் போராளிகள்.
கடந்த மூன்று நாட்களாக எதுவுமே சாப்பிடாமல், வயிறுகள் காயும்போதும், பொதிகள் மெழுகுதிரியில் உருக்கி கட்டும்போது வாயில் வரும் உமிழ்நீர்களை கூட அடக்க முடியாத பசி அவர்களுக்கு. இருந்தாலும் அடுத்த மூன்று மாதத்துக்கு தேவையான உணவு என்று ஒரு சொற்ப உணவையே பகிர்ந்தளிதிருந்தார்கள்.
சொல்லுங்கள் உறவுகளே ,மக்களுக்காக போராட உணவு தேவை என்று, பட்டினியோடு பொதி பண்ணும் போராளிகள் கிடைக்க
என்ன தவம் செய்தீர்கள்.?
கொண்டு செல்ல வேண்டிய ஆயுதங்களையும் நன்றாக சுத்தப்படுத்தி பொலித்தீன் பைகளால் சுத்திகட்டி வைத்திருந்தார்கள்.
இன்று மதியம் ஒரு மணியளவில் அந்த சந்திப்பு தொடங்கி இருந்தது.
முள்ளிவாய்க்கால் உண்டியல் சந்திக்கு அருகாமையில் இருந்த பிள்ளையார் கோவிலின் கருவறைக்கு அருகே அந்த மூத்த தலைவரின் வழிகாட்டலுக்காக தளபதிகள் உட்பட நானூற்று ஐம்பது விசுவாசமான போராளிகள் காத்திருந்தார்கள்.அதில் ஒருவனாக ராணிமைந்தனும் காத்திருந்தான்.
அந்த மூத்த தலைவர் ஊடறுப்பிற்கான திட்டத்தை விளக்க தொடங்கி இருந்தார். ஆங்காங்கே விழும் செல்களுக்கும், மிக அருகில் கேட்கும் யுத்த டாங்கியின் இரைச்சலுக்கும், பெரும் சண்டை சத்தத்துக்கும் நடுவில், அவரின் மிடுக்கான பேச்சு கொஞ்சம் உரத்தே ஒலித்தது.
"நாங்கள் நாளை இரவு ஒரு பாரிய தாக்குதலை தொடங்க போகிறோம். அந்த வேளையில் இங்கே எந்த மக்களும் இருக்க மாட்டார்கள். எல்லாருமே செஞ்சிலுவைச்சங்க பாதுகாப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு போயிருப்பார்கள். இந்த இடத்தை சூசை அண்ணை தலைமையிலான போராளிகள் தக்க வைக்க போராடி கொண்டிருப்பார்கள். அவர்கள் இராணுவத்துக்கு இறுதிநேர இழப்பை கொடுத்து கொண்டு எங்கள் ஊடறுப்பு தாக்குதலுக்கு அவனது முழு பலத்தையும் ஒருங்கிணைக்க விடாமல் பார்ப்பார்கள்"
"நீங்கள் எல்லாரும் பதினெட்டு பேர் கொண்ட இருபத்தைந்து அணிகளாக பிரிக்கபட்டு இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த தளபதி தலைமை தாங்குவார். தொடர்பாடல் பிரச்சனை காரணமாக இந்த சண்டை முடியும் மட்டும் அவரது கட்டளை தான் உங்களுக்கான இறுதிக்கட்டளை"
"உங்களின் பிரதான இலக்கு, எவ்வளவு கெதியாக முன்னணி நிலைகளை உடைத்து, உங்களை நிலைநிறுத்தி, ஒரு மனித பாதுகாப்பு அரணாக தலைவர் வெளியேறுவதற்கான ஒரு பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி கொடுப்பது தான்".
"உங்கள் எல்லாருக்கும் தெரியும், எங்கள் விடுதலை போராட்டத்தின் உயிர் மூச்சு தலைவர் தான், அவரை நாங்கள் பாதுகாப்பாக நகர்த்தினால் தான் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும், மக்களுக்கு ஒரு விடிவை நாங்கள் பெற்று கொடுக்கலாம்"
"எனவே உங்களின் கைகளில் தான் தங்கியுள்ளது, எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டம், அதற்காக தான் விசுவாசமான உங்களை தெரிவு செய்து இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தி இருக்கிறோம்"
"இந்த சண்டை எங்கள் வழக்கமான சண்டைகள் போல இருக்காது. உங்களுக்கான பின்கள வழங்கல்களோ, சூட்டு ஆதரவோ கிடைக்காது. உங்களின் வீரமும் தியாகமும் தான் காவலரண்களை உடைத்து வழி ஏற்படுத்தும். எதிரி எங்களின் வருவுக்காக அங்கே காத்துகொண்டிருப்பான். தடங்கல் ஏற்படும் இடங்களில் கரும்புலிகள் அதை உடைத்து கொடுப்பார்கள்"
"இன்னொரு முக்கியமான விடயம், இந்த தாக்குதலில் எதிரியிடம் நாங்கள் எக்காரணம் கொண்டும் பிடிபடக்கூடாது, உங்களுக்கு வெடிகுண்டு அங்கிகள் (ஜாக்கெட்) வழங்கப்படும், உங்கள் ஆயுதங்கள் தீர்ந்தாலோ, எதிரியிடம் அகப்படும் நிலை தோன்றினாலோ அதை பாவியுங்கள்"
"இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை அண்ணை சந்திப்பார்.."
இவ்வாறு அந்த மூத்த தலைவர் திட்டங்களை தெளிவுபடுத்தி கொண்டிருக்கும்போது, அவரின் பிரத்தியேக அலைபேசி அழைத்தது.
"பப்பா அல்பா ..பப்பா அல்பா .. ரோமியோ ஒஸ்கா "
"பப்பா அல்பா ..பப்பா அல்பா ..ரோமியோ ஒஸ்கா "
"சொல்லுங்க ரோமியோ ஒஸ்கா "
"என்னென்டா பப்பா அல்பா ..ஆமி வன்-வன் இன் (11 இன் ) லைனை உடைச்சு உங்களுக்கு கிட்டே வந்திட்டான். புது பெடியள் விட்டிட்டு ஓடிட்டாங்கள்..உங்களுக்கு முப்பது மீற்றருக்குள்ளே அவன் வந்திட்டான் அண்ணே ..நீங்கள் உங்கட ஆட்களை பின்னுக்கு எடுக்கிறது தான் நல்லது அண்ணே " மூச்சிரைக்க சொல்லி முடித்தான்.
"தம்பி..இப்போ அது சாத்தியம் இல்லை..நிறைய ஆட்கள்.. வில்லுகள் (ஆயுதங்கள்) பொதிக்குள்ளே பின்னுக்கு எடுக்கிறது என்றால் இழப்புகள் வரும். அதை தவிர இந்த இடத்துக்கு சாமி கும்பிட (தலைவர்) வரபோறார் தெரியும் தானே . எதிரியை பின்னுக்கு தள்ள முடியாதோ ?"
"இல்லை அண்ணே அவனின் 8 (8 man team ) வெளிகிட்டான்கள் அண்ணே. எங்கட உடுப்போட வாறாங்கள்.. கிட்டே வந்திட்டாங்கள் என்றால் கலைகிறது கஷ்டம் அண்ணே ..எண்ட ஆக்கள் எல்லாம் சங்கர் (இறந்திட்டார்கள் )..விளங்குதா அண்ணே .."
"சரி பொறுடாப்பா...கொஞ்ச அரிசி (ஆட்கள்) அனுப்புறேன். எண்ட மூட்டையிலே (அணியிலே) இருந்து .."
"சரி அண்ணே விரைவா ..கோயில் முருகன் மூலை (வடகிழக்கு) "
"நன்றி அவுட்'
அந்த அலைபேசி அணைப்பை துண்டித்த அந்த மூத்த தலைவர். தம்பிமார் கேட்டு கொண்டு தானே இருந்தனீங்கள் ..இப்ப்போ உங்களிலே ஒரு அணி எதிரியின் முன்னேற்றத்தை முறியடிக்க போகவேணும் என்று சொல்லி முடிக்க முன்னர் அகிலன் தலைமையில் ஒரு அணி எழுந்து நின்றது.
அண்ணே நாங்கள் போறம் அண்ணே..
அண்ணே ..நாங்கள் உங்கள் கூடவும் தலைவர்கூடவும் கடைசி மட்டும் இருக்க வேண்டும் என்று தான் விரும்பினான்கள். இப்போ இந்த சண்டையில் காயப்பட்டால் அந்த அணியில் நாங்கள் இருக்க முடியாது என்றும் எங்களுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு பேரும் உங்களையும் தலைவரையும் காப்பாத்தி எங்கட விடுதலைப்போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோவான்கள் என்ற நம்பிக்கையில் நானும் என்ர அணியும் போறோம் அண்ணே ...
அந்த மூத்த தலைவர் தலையசைக்க .பதினெட்டு பேர் கொண்ட அகிலனின் அணி களமுனைக்கு விரைந்தது. பொதி செய்யப்பட்ட ஆயுதங்களை பொதியிலிருந்து எடுத்தவாறு ஓடிபோனார்கள் அந்த மானமாவீரர்கள் தங்கள் ஆசை துறந்து... தலைவன் உயிர் காக்க.
அந்த மூத்த தலைவர் சண்டைப்பொறுப்பை தளபதி அன்பு மாஸ்டரிடம் கொடுத்தார். அன்பு மாஸ்ரர் அலைபேசியில் சண்டையை நெறிப்படுத்தினார்.
"அல்பா ரோமியோ ..சண்டை நெருக்கமாக நடக்குது எங்களிலே மூன்று சங்கர் ..அவன் வேகமாக வாறான்..வாழைப்பொத்திகள் (ஆர்பிஜி) வைச்சு அடிக்கிறான்.இன்னும் கொஞ்ச நேரம் தான் நிண்டுபிடிக்கலாம்..வேகமாக முடிக்க சொல்லுங்க அண்ணே"
"அல்பா கிலோ ..அப்படி இல்லை உங்களுக்கு என்ன வேணும் என்று சொல்லுங்க ..தரலாம் அவனை ஒரு அடி கூட முன்னுக்கு நகரவிடக்கூடாது..பிறகு எல்லாம் பிழைச்சு போகும் தெரியும் தானே .."
"அல்பா ரோமியோ ..ஒரு கிபிர் (கரும்புலி ) வந்தால் ..நிலைமையை கொஞ்சம் சமாளிக்கலாம் .."
"சரி கொஞ்சம் பொறுங்கள் கிபிருக்கு ஏற்பாடு செய்கிறேன்"..
அன்பு மாஸ்டர் அந்த மூத்த தலைவரை நோக்கி திரும்ப.
"எனக்கு விளங்குதடாப்பா..ஆனால் எல்லா கரும்புலிகளையும் பின்னுக்கு நகர்த்தியாச்சே ..சக்கை மட்டும் தான் இங்கே இருக்கு ..ஆட்கள் பின்னாலிருந்து வர ஒரு இருபது முப்பது நிமிஷம் என்றாலும் ஆகும் (மக்கள் நெரிசல் அப்படி)..என்ன செய்கிறது என்று தாண்டாப்பா யோசிக்கிறேன். "என்றார் அந்த மூத்த தலைவர்.
அப்போது யாரும் எதிர்பாராதவகையில் ஒரு குரல் ..
நான் போகிறேன் அண்ணே ..
ராணிமைந்தன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான் .
(தொடரும்)
பாகம் பதினெட்டு இங்கே அழுத்துங்கள்