ஒரு செடியின் கதை
அமீதாம்மாள்
பொத்திக் கிடந்த
பூவித்து
புறப்பட்டது-மண்
வழிவிட்டது
நாளும் வளர்ச்சி
நாலைந்து அங்குலம்
ஆறேழு தளிர்கள்
அன்றாடம் பிரசவம்
தேதி கிழித்தது இயற்கை
புதுச் சேதி சொன்னது செடி
முகம் கழுவியது பனித்துளி
தலை சீவியது காற்று
மொட்டுக்கள் அவிழ்ந்து
பூச்சூட்டியது
பட்டாம்பூச்சிக் கெல்லாம்
பந்தியும் வைத்தது
முதுகுத் தண்டில்
பச்சைப் பூச்சிகள்
கிச்சுச் செய்தது
தேன் சிட்டொன்று
முத்தமிட்டது
கூசுகிறதாம்
சிரித்தது செடி
உதிர்ந்தன சருகுக்
கழிவுகள்
திமிறிய அழகில்
திமிரும் வளர்ந்தது
மமதைச் செருக்கில் செடி
மண்ணிடம் சொன்னது
‘கடவுளும் காதலும்
எனக்காக
என் கழிவுகள் மட்டுமே
உனக்காக
என் கழிவைத் தின்று
கழுவிக் கொள்
உன் வயிறை’
நக்கலடித்தது செடி
தத்துப் பூச்சிகளிடம்
தட்டான்களிடம்
சொல்லிச் சொல்லிச்
சிரித்தது
அறியாமை பொறுக்கலாம்
ஆணவம் பொறுப்பதோ?
கூடவே கூடாது
வேரை விட்டு
விலகிக் கொண்டது
மண்
முதுகுத் தண்டு முறிந்து
மண்ணில் சாய்ந்தது செடி
செடியிடம் சொன்னது மண்
‘உனக்கு
உன்னையும் தெரியவில்லை
என்னையும் தெரியவில்லை
நீ வாழ்வதிலும் பொருளில்லை
செடியைச் செரித்து
மீண்டும் அசைவற்றுக்
கிடந்தது மண்
http://puthu.thinnai.com/?p=20574