Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,RED GIANT MOVIES/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் “நான் ஒரு மருத்துவரிடம் ஏடிஹெச்டி (ADHD) எனும் குறைபாடு குணப்படுத்தக் கூடியதா என்று கேட்டேன். சிறுவயதில் கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என்றார்.' 41 வயதில் கண்டறிந்தால்?' எனக் கேட்டேன். ஆம், எனக்கு மருத்துவ ரீதியாக ஏடிஹெச்டி என்ற குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.” பிரபல நடிகர் ஃபஹத் பாசில் பேசிய வார்த்தைகள் இவை. கேரளாவின் எர்ணாகுளம் பகுதியின் கோதமங்கலம் அருகே உள்ள கிராமத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இதைத் தெரிவித்திருந்தார் நடிகர் ஃபஹத் பாசில். ஒலிம்பிக் போட்டிகளில் 28 முறை தங்கப் பதக்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸ், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ், இவர்களும் ஏடிஹெச்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. ஏடிஹெச்டி என்றால் என்ன? குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இந்தக் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா? குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏடிஹெச்டி பட மூலாதாரம்,GETTY IMAGES ஏடிஹெச்டி என்பது மூளையின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொதுவான ஒரு நரம்பியல் குறைபாடு அல்லது கோளாறு என அமெரிக்க மனநலச் சங்கம் வரையறுக்கிறது (American Psychiatric Association). இதுதொடர்பாக மேலும் அறிந்துகொள்ள, சென்னை, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகாவிடம் பேசினோம். “ஏடிஹெச்டி என்றால் ‘கவனக்குறைவு அல்லது அதியியக்கக் குறைபாடு’ (Attention-deficit/hyperactivity disorder). இது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்படும் பல குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இது சரியாகிவிடும், சிலருக்கு வளரிளம் பருவத்தைக் கடந்து பெரியவர்களான பிறகும் இருக்கும்,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. படக்குறிப்பு, கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா குறைபாட்டின் பெயருக்கு ஏற்றாற்போல் இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கவனச்சிதறல் பிரச்னை இருக்கும் என்றும், வழக்கத்திற்கு மாறான அதீத சுறுசுறுப்புடன் அவர்கள் இருப்பார்கள் என்று அவர் கூறுகிறார். “ஏடிஹெச்டி குறைபாடு உடைய குழந்தைகள் காலையில் இருந்து இரவு வரை சோர்வடையாமல் அதே புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். சில நேரங்களில் இவர்களைக் கவனிக்க முடியாமல், பெற்றோர் சோர்வடைந்து விடுவார்கள். ஆனால் பிள்ளைகள் தொடர்ந்து சுறுசுறுப்புடன் இருப்பார்கள்." "இவர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள். பள்ளி, கல்லூரி என வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர்கள் செல்லும்போது, கவனச் சிதறலும் சேர்ந்து இது பிரச்னையாக மாறுகிறது,” என்று கூறுகிறார் மனநல மருத்துவர் சந்திரிகா. ஏடிஹெச்டி குறைபாட்டின் அறிகுறிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES ஏடிஹெச்டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் குறித்து நம்மிடம் பேசினார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. “ஏடிஹெச்டி அறிகுறிகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம், ஒன்று கவனச்சிதறல் தொடர்பான அறிகுறிகள் மற்றொன்று அதியியக்கம் தொடர்பான அறிகுறிகள்,” என்று கூறிய அவர் அவற்றைப் பட்டியலிட்டார். கவனக்குறைவுக்கான அறிகுறிகள் அன்றாடப் பணிகள் அல்லது விளையாட்டு நடவடிக்கைகளில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதில் சிரமம் பள்ளியில் அல்லது பிற செயல்பாடுகளில் அடிக்கடி கவனக் குறைவால் ஏற்படும் தவறுகள் பணிகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் சிக்கல். தொடர்ச்சியான சிந்தனை அல்லது கவனம் தேவைப்படும் பணிகளில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் அல்லது தயக்கம் காட்டுதல் பெரும்பாலும் அன்றாடப் பணிகள் மற்றும் செயல்பாடுகளுக்குத் தேவையான பொருட்களைத் தொலைப்பது (உதாரணம்- பேனா, பென்சில், சாவிகள் அல்லது பர்ஸை தொலைப்பது) வெளிப்புற தூண்டுதல்களால் எளிதில் திசை திருப்பப்படுதல் அன்றாட நடவடிக்கைகளில் மறதி படக்குறிப்பு, உளவியலாளர் ராஜலக்ஷ்மி அதியியக்கம் தொடர்பான அறிகுறிகள் மன அமைதியின்மையால் கை அல்லது கால்களை அசைத்துக்கொண்டே இருப்பது, இருக்கையில் அடிக்கடி நெளிவது. ஓரிடத்தில் உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும்கூட அவ்வாறு இருக்க இயலாமை பொருத்தமற்ற சூழ்நிலைகளில் அங்குமிங்கும் ஓடுதல் விளையாட்டுகளில் அல்லது ஓய்வு நேரச் செயல்களில் பொறுமையாக ஈடுபட இயலாமை அதிகமாகப் பேசுவது அல்லது எதிரில் பேசுபவருக்கு வாய்ப்பளிக்காமல் தொடர்ந்து பேசுவது எப்போதும் ஏதோ மோட்டார் மூலம் இயக்கப்படுவது போல் ஓர் உந்துசக்தியுடன் செயல்படுவது கேள்வி முடிவதற்குள் பதில்களைக் கடகடவெனக் கூறுவது தன்னுடைய முறை வரும்வரை காத்திருப்பதில் சிரமம் மற்றவர்களின் உரையாடல்கள் அல்லது செயல்பாடுகளில் குறுக்கிடுவது “மேலே உள்ள அறிகுறிகளைப் படித்தவுடன் நமக்கும் ஏடிஹெச்டி இருக்குமோ எனப் பலருக்கும் தோன்றலாம், ஏனெனில் இவை பொதுவான அறிகுறிகள். இவை ஒரு குழந்தைக்கு அல்லது பெரியவருக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து ஏற்படும்போதுதான் மருத்துவரை அணுக வேண்டும். நடத்தைவழிச் சோதனைகள் (Behavioral assessments) மற்றும் பிற உளவியல் முறைகள் மூலம் அதை மனநல மருத்துவர்கள் உறுதி செய்வார்கள்” என்று கூறுகிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. தொடர்ந்து பேசிய அவர், ஏடிஹெச்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்கிறார், கவனக்குறைவு தொடர்பான பிரச்னைகள் அதிகமாக இருப்பது அதியியக்கம் தொடர்பான பிரச்னைகள் அதிகமாக இருப்பது கவனக்குறைவு, அதியியக்கம் என இரண்டுமே அதிகமாக இருப்பது "இதைப் புரிந்துகொண்டு குழந்தைகளை வழிநடத்துவது அவசியம்” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. ஏடிஹெச்டி எப்போது சிக்கலாக மாறும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏடிஹெச்டி குறைபாடு உடைய குழந்தைகள் கல்வி கற்பதில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்கிறார் மருத்துவர் சந்திரிகா ஏடிஹெச்டி குறைபாடு உடைய குழந்தைகளுக்கு கவனக்குறைவு பிரச்னை இருப்பதால், அவர்கள் கல்வி கற்பதில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. “என்னிடம் ஏடிஹெச்டி சிகிச்சைக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் பெரும்பாலானோர், பள்ளி நிர்வாகம் அல்லது வகுப்பு ஆசிரியர் அறிவுறுத்தியதால்தான் அழைத்து வந்திருப்பார்கள். ஏனென்றால் பொதுவாக ஒரு சுட்டித்தனத்தோடு செயல்படும்போது, பெற்றோர் அதைப் பெருமையாகப் பார்ப்பார்கள் அல்லது அவனது அப்பாவைப் போல் இவன், என எளிதாகக் கடந்து சென்றுவிடுவார்கள்." ஆனால் "பள்ளியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள்தான், இந்தப் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்தத் திணறுவதையும், அமைதியின்றி இருப்பதையும் கவனித்து பெற்றோரிடம் அறிவுறுத்துவார்கள். ஏடிஹெச்டி இருந்தால் கற்றல் குறைபாடு ஏற்படவும் பெரும்பாலும் வாய்ப்புகள் உண்டு,” என்று கூறுகிறார் அவர். ஏடிஹெச்டி குறைபாட்டை சிறுவயதில் கண்டுகொள்ளாமல் விட்டால், பெரியவர்களானதும் வேலை முதல் திருமண வாழ்க்கை வரை அனைத்தையும் இது பாதிக்கும் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. “இன்று பல அலுவலகங்களில் ஒருவரே ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கையாள வேண்டிய சூழல் உள்ளது (Multi-Tasking). ஏடிஹெச்டி உள்ளவர்கள் அதைச் செய்ய சிரமப்படுவார்கள். அதே போல ஒரு காதல் அல்லது திருமண உறவிலும் அவர்கள் நிலையாக இருக்க மாட்டார்கள், அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, திடீர் உற்சாகம் என உணர்ச்சிக் கட்டுப்பாடின்மை இருக்கும்." "இது தவிர ஞாபகமறதியும் இருக்கும். இதனால் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி மனச்சோர்வு, இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) போன்ற இணை குறைபாடுகளும் ஏற்படும்,” என எச்சரிக்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா. ஏடிஹெச்டி குறைபாட்டிற்கான காரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES “மூளையிலுள்ள நரம்புக் கடத்திகளின் (Neurotransmitters) செயல்பாடு குறைவாக இருப்பதுதான் ஏடிஹெச்டி என்றாலும் இந்தக் குறைபாட்டிற்கான காரணங்கள் இன்னும் முழுமையாகக் கண்டறியப்படவில்லை,” என்கிறார் உளவியலாளர் ராஜலக்ஷ்மி. தொடர்ந்து பேசிய அவர், “மரபியல் காரணங்கள், குழந்தை கருவாக இருக்கும்போது மூளை வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு, குறைப் பிரசவம் அலலது குறைவான எடையுடன் குழந்தை பிறப்பது, வலிப்பு நோயாலும்கூட இது ஏற்படும்,” என்று கூறினார். ஏடிஹெச்டி குறைபாட்டிற்கான சிகிச்சைகள் குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கு ஏடிஹெச்டி குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டாலும் அதைக் கண்டிப்பாக குணப்படுத்தலாம் என்கிறார் மனநல மருத்துவர் கிருபாகரன். “ஏடிஹெச்டி இருந்தால் மூளையில் ரசாயன மாற்றங்கள் நிகழும். அதைச் சரி செய்வதற்கான மருந்து, மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்," என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனநல மருத்துவர் கிருபாகரன் "மனநல மருத்துவர் ஒருவரின் ஆலோசனையோடு, நடத்தைவழி சிகிச்சை (Behaviour Therapy) அளிக்கப்படும். கவனச் சிதறலை ஒழுங்குபடுத்த, மனதை ஒருமுகப்படுத்துவதைக் கற்றுக்கொடுக்க பயிற்சிகள் உள்ளன. உடற்பயிற்சி மற்றும் உணவுமுறை தொடர்பான மருத்துவரின் ஆலோசனைகளும் இதற்கு உதவும்,” என்கிறார் அவர். மேலும் மிகச்சிறிய வேலைகள், பயிற்சிகளைக் கொடுத்து அவற்றுக்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார் மனநல மருத்துவர் கிருபாகரன். “குழந்தைகளின் எல்லா செயல்களையும் பாராட்ட வேண்டியதும், ஒழுங்குமுறைகளை அவர்களுக்குப் போதிக்க வேண்டியதும் அவசியம்." "ஏடிஹெச்டி-யை கவனிக்காமல் அப்படியே விட்டால், அது மட்டுமின்றி கூடவே கற்றல் குறைபாடு, மனச்சோர்வு, ஆட்டிசம் குறைபாடு, போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளதால் முறையான மனநல மருத்துவரை அணுகி சிகிச்சைகள் எடுத்துக் கொள்வது நல்லது,” என்கிறார் மனநல மருத்துவர் கிருபாகரன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸுக்கு ஏடிஹெச்டி இருப்பது சிறுவயதில் கண்டறியப்பட்டது. சிறுவயதில் ஏடிஹெச்டி குறைபாட்டைக் கண்டறிந்தால் அதை எளிதில் குணப்படுத்தலாம் என்பதைவிட, குழந்தையின் வாழ்க்கையைப் பாதிக்காதவாறு நேர்மறையாக அதை மடைமாற்றலாம் என்கிறார் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா. “தனது ஏடிஹெச்டி குறைபாட்டைச் சிறுவயதில் கண்டறிந்து, அந்த உந்து சக்தியை விளையாட்டுத் துறையில் நேர்மறையாகப் பயன்படுத்தியதால்தான் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸால் 28 தங்க பதக்கங்களை வெல்ல முடிந்தது,” என்கிறார் அவர். மருத்துவர் பூர்ண சந்திரிகாவின் கூற்றுப்படி, "ஏடிஹெச்டி குறைபாட்டைப் பார்த்து பயப்பட அல்லது புறக்கணிக்க வேண்டாம், அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் அவர்கள் பல உயரங்களை அடைவார்கள்.” https://www.bbc.com/tamil/articles/cw88eywv3xeo
  2. Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 04:14 PM மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாதாட் கிராமத்தில் தனது மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தடியால் தாக்கியதாக குறித்த பெண்ணின் கணவரால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் முதல் கணவரால் கைவிடப்பட்ட நிலையில் புத்தளம் பகுதியில் உள்ள மேலும் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் குறித்த இரண்டாவது கணவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாகவும் குறித்த கணவரும் குறித்த பெண்ணை விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த இரண்டாவது கணவரின் பிள்ளை குறித்த பெண்ணினால் தாக்கப்படுவதாக அயலவர்களினால் குறித்த நபருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் ஊரான ஏறாவூர் சாதாட்ற்கு வந்த இரண்டாவது கணவர் தனது பிள்ளையை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு குறித்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் பெண்ணின் கையடக்கத் தொலைபேசியை எடுத்து பார்த்த போது தனது பிள்ளையை குறித்த பெண் தாக்கியது காணொளியாக எடுக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். உடனடியாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து பொலிஸாரிடம் காணொளியை காண்பித்துள்ளார். இதன்போது பொலிஸார் அதிர்ச்சியடைந்த நிலையில் குறித்த காணொளிக்கு அமைய குறித்த பெண்ணை நேற்று கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/184798
  3. தலைசிறந்த கலைப்படைப்புக்களைத் தந்தவர்களுடனும், புகழ்மிகுந்த பெரும் கலைஞர்களுடனும் மனிதர்களுடனும் பழகும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அவர்களது படைப்பும் பிரபலமும் செயற்பாடும் கவர்ச்சியும் தரும் பிம்பத்தை அவர்களின் ‘மனவறுமை’ பெரும்பான்மையான இடங்களில் சிதறடித்திருக்கிறது. இன்னொரு மனிதரை வருத்தும் அல்லது அடிப்படை அறம், மனிதநேயமின்றி நடந்துகொள்ளும் மனிதர்களுடன் எனது மனம் ஒட்டுவதில்லை. ஆகக்குறைந்தது தவறை உணர்ந்து வருந்தாது ஞானச்செருக்குடன் அலையும் மனிதர்களிடத்தே ஒருவித வெறுப்பே உருவாகிறது. சில மனிதர்களது நல்நினைவுகள் மனதில் படிந்துவிடும். காலம் அவர்களை அழைத்துக்கொண்ட பின்னும் அந்நினைவுகளின் ஈரலிப்பும் கதகதப்பும் மனதைப் பல நேரங்களில் ஆற்றுப்படுத்தும். சில மனிதர்களின் கொள்கைகள், அரசியல், நம்பிக்கைகள் போன்றவற்றைக் கடந்து, அவர்களது சில நடவடிக்கைகளின் காரணமாக அவர்களை எமக்குப் பிடித்துப்போகும் அல்லவா! அப்படித்தான் வாழ்வின் வீரியம் புரியத்தொடங்கிய காலத்தின் பின், இசைபற்றிய அடிப்படை அறிவே அற்ற எனக்கு, பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாடல்களைவிட, அவரது வேறு சில முகங்களாலேயே மனதுக்குப் பிடித்த மனிதராகியிருந்தார். அவற்றில் முக்கியமானது தன்னடக்கம், நெகிழ்ச்சித் தன்மையுடைய ஞானச் செருக்கற்ற தன்மை, மற்றையவர்களை அரவணைக்கும் குணமும் அவரது மனிதநேயமும். இக்குணாதிசயங்களைத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடும் ஞானிகளும் புரிந்துகொண்டால், அவர்களும் இறவாவரம் பெற்றுவிடுவார்கள். இதனாலோ என்னவோ எத்தனை திறமையிருந்தாலும், சில பெருங்கலைஞர்களை என் மனது கிஞ்சித்தும் கொண்டாடுவதில்லை. எஸ்.பி.பியின் மேடை நிகழ்வுகள், பேட்டிகளை உற்றுப் பார்த்திருப்பீர்களெனில், சக மனிதனை நேசிக்கும் அவர் மனம் அழகாக வெளிப்படும். ஒரு மனிதனுடன் கனிவு, வாஞ்சை, தோழமை, மரியாதை கலந்து உரையாடும்போது இருவருடைய மனங்களும் துளிர்க்குமல்லவா? அதை அங்கு காணலாம். ஒருவரின் போலியான உணர்வுடைய பேச்சினை, அவரது குரலின் தன்மையும், குரலதிர்வுகளும், உடல்மொழியும் இலகுவில் அடையாளம் காண்பித்துவிடும். எஸ்.பி.பியிடம் போலித்தனம் இருந்ததில்லை. சக மனிதனை மனம் திறந்து பாராட்டும் தன்மை பலருக்கும் வாய்ப்பதில்லை. ஆனால், எஸ்.பி.பியிடம் இந்தக் குணம் நிறையவே இருந்தது. வயதெல்லையைக் கணக்கிலெடுக்காது, தான் ஓர் உலகப் புகழ்பெற்ற பாடகன் எனும் எண்ணத்தில் இருந்து விடுபட்டு, கண் கலங்கி, குரல் தழுதழுக்க இன்னொரு கலைஞனைப் பாராட்டும் பெருங்குணம் அனைவருக்கும் வாய்த்துவிடாது. அற்புத மனம் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் குணம் இது. ஒரு காணொளியில் பார்வையற்ற ரசிகர் ஒருவர், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைச் சந்திப்பது தனது வாழ்நாளின் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்று கூறிவிட்டு, அவரது பாடலொன்றைப் பாடுவார். அப்போது அங்கு எஸ்.பி.பி அழைத்துவரப்படுவார். அவரும் அப்பாடலை அம்மனிதருடன் இணைந்து பாடுவார். தன்னுடன் இணைந்து பாடுவது யார் என்று அம்மனிதர் உணர்ந்துகொள்ளும் கணம் மிகவும் உருக்கமானது. இதன்பின், பார்வையற்றவருடன் எஸ்.பி.பி. உரையாடும் உரையாடல் என்னை மிகவும் கவர்ந்தது. கண்பார்வையற்ற சக மனிதனை ஆற்றுப்படுத்தி, அமைதிப்படுத்தி, உற்சாகமளித்துத் தோளணைக்கும் அந்தக் காட்சிகளில் அவரது உடல்மொழியும் வார்த்தைத் தேர்வுகளும் இன்னமும் மனதிலேயே தங்கிவிட்டிருக்கிறது. இந்த உரையாடலின்போது அமைதியான நதியின் ஒலியையும், கடலின் ஆழத்தையும் கொண்ட எஸ்.பி.பியின் குரலதிர்வுகளை மீள மீள ஒலிக்கவிட்டுக் கேட்டிருக்கிறேன். அவை அவரின் மனதின் ஆழத்தில் இருந்து வந்தவை என்பதை அறிந்துகொள்ள அதிக வாழ்பனுபவம் அவசியமில்லை. இதேபோன்று, ஒரு மலைக் கோயிலுக்கு அவர் செல்ல விரும்புவார். ஆனால், உடற்பருமனும் உடல்வலுவும் அவர் மலையேறிச் செல்வதைத் தடுத்திருக்கும். அவரை ஒரு நாற்காலியில் உட்கார்த்தி நால்வர் அவரைத் தூக்கிச் செல்ல ஒழுங்கமைத்திருப்பார்கள். எமது பண்பாட்டில் காலில் விழுந்து வணங்குவது என்பது பெரும் மரியாதையைக் காண்பிப்பதற்கானது. ஆனால், உயரிய இடத்தில் உள்ளவர்கள் கீழுள்ளவர்களின் காலில் விழுவதில்லை என்பதையும் அறிவோம். மலைப் பயணம் தொடங்க முன், அந்த நான்கு மனிதர்களின் கால்களையும் தொட்டு வணங்கியிருப்பார் எஸ்.பி.பி. என்னை மிகவும் நெகிழவைத்த இன்னுமொரு நிகழ்வு இது. இப்படியான மனதுகொண்ட மனிதர்களாலேயே சகமனிதனை நேசிக்கும் மதிக்கும் பண்பு இப்போதும் மீதமிருக்கிறதாகக் கருதத் தோன்றுகிறது. இன்னுமொரு காணொளியில் கே.ஜே. ஜேசுதாசின் காலை மரியாதை நிமித்தம் கழுவிவிடுவார். ஞானச்செருக்கும் அகங்காரமும் தற்புகழ்ச்சியும் உள்ள எவரும் இப்படியான செயலைச் செய்யவே மாட்டார்கள். ஆனால், எஸ்.பி.பியால் இது முடிந்திருக்கிறது. 1984ஆம் ஆண்டு பாடசாலைக் காலம் முடிந்த காலத்தில், எனது ஆசிரியர்களிடம் ‘நினைவுக் குறிப்பு’ (ஆட்டோகிராப்) வாங்கிக்கொண்டபோது புண்ணியமூர்த்தி சேர் இப்படி எழுதியிருந்தார். “வாழ்க்கை உன்னை உயர உயரத் தூக்கிச்செல்லும். அந்நாட்களில் மேலும் மேலும் பணிவாயும் நெகிழ்வுணர்வுடனும், சக மனிதனை மதிப்பவனாகவும் இருக்கக் கற்றுக்கொள். அதுவே மனங்களை வெற்றிகொள்ளும் வழி” இன்றும் இக்குறிப்பு என்னிடம் இருக்கிறது. இப்போது புண்ணியமூர்த்தி சேரும் இல்லை. எஸ்.பி.பியும் இல்லை. அவர்களின் போதனைகள் மட்டுமே மீதமிருக்கின்றன. அனுபவங்களை மற்றையவர்களுக்குக் கடத்திவிட்டுக் கரைந்துபோவதுதானே வாழ்க்கை. http://visaran.blogspot.com/2024/05/blog-post.html
  4. கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட செருப்புகளை சந்தையிலிருந்து அகற்ற வடக்கிலிருந்து கோரிக்கை Published By: DIGITAL DESK 3 29 MAY, 2024 | 02:59 PM வடக்கில் காட்சிப்படுத்தப்பட்ட போது பொலிஸாரால் கேள்வி எழுப்பப்பட்ட மலரான கார்த்திகைப் பூ, மிகப் பெரிய வர்த்தக நிறுவனத்தால், நாடு முழுவதும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடையின்றி பயன்படுத்தப்படுவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. நாட்டின் முதல்தர பாதணிகளை விளம்பரப்படுத்தும் வகையில் தெற்கில் உள்ள நிறுவனம் ஒன்று செருப்புகளில் தமிழ் தேசிய மலரான கார்த்திகை மலரின் உருவத்தை பொறித்துள்ளமையால் தமிழர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். செருப்பு விற்பனை நிறுத்தப்படாவிட்டால் அவற்றை தமிழர்கள் புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகை பூக்கள் பொறிக்கப்பட்ட செருப்புகளை சந்தையில் இருந்து உடனடியாக மீளப் பெறுமாறு காலணி தயாரிக்கும் நிறுவனத்திடம் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார். “தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணிகளை, உற்பத்தி நிறுவனம் அதனை மீளப்பெற வேண்டுமென விநயமாக வேண்டுகின்றோம்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திகளை புறக்கணிக்குமாறும் அவர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “அவ்வாறு மீளப்பெறத் தவறும் பட்சத்தில், குறித்த நிறுவனத்தினுடைய உற்பத்திப் பொருட்களையும் அவற்றை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களையும் புறக்கணிக்குமாறு எம் உறவுகளைக் கோருகின்றோம்!” வட மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் செவ்வாய்க்கிழமை (மே 28) யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தி, காலணியில் கார்த்திகை பூ பொறிக்கப்பட்டமை தமிழ் மக்களை மிதிக்கும் வகையிலான செயற்பாடு என விமர்சித்துள்ளார். “தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு புனிதமான பூவாக போற்றுகின்ற இந்த பூவை, காலில் போட்டு மிதிக்கின்றோம் என அவர்கள் சொல்லத் தக்க வகையில் அவர்கள் கால் செருப்பில் பயன்படுத்தியிருக்கின்றார்கள். " தமிழர்கள் அதிகம் வாழும் வெள்ளவத்தை பகுதியில் உள்ள செருப்பு கடை ஒன்றில் கார்த்திகை மலரின் உருவத்தை பொறித்து வடிவமைக்கப்பட்ட காலணி கண்டுபிடிக்கப்பட்டதாக பல தமிழ் செய்தி இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த காலணிகள் பிரபல தனியார் காலணி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு ஆகும். இது அதிக எண்ணிக்கையிலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு காலணி தயாரிப்புகளை விற்பனை செய்யும் நாட்டின் மிகப்பெரிய காலணி வர்த்தக சங்கிலியாகும். ஒரு தேசத்தை அவமதிக்கும் வகையில் கார்த்திகை மலரை பகிரங்கமாக பயன்படுத்த தென்னிலங்கை நிறுவனத்திற்கு எந்த தடையும் இல்லை என்றாலும், அதே பூவை மரியாதையுடன் பயன்படுத்தும்போது பாதுகாப்புப் படையினர் அதற்கு எதிராகச் செயற்பட்ட பல சந்தர்ப்பங்கள் உண்டு. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டிக்காக மாணவர்கள் இல்லங்களை வடிவமைக்கும் போது, யுத்த தாங்கி மற்றும் கார்த்திகை பூ வடிவங்களை பயன்படுத்தி அலங்காரங்களை மேற்கொண்டமையைால் அவர்கள் இராணுவம், பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். தெல்லிப்பளை பொலிஸார் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பொலிஸுக்கு அழைத்து அந்த படைப்புகள் தொடர்பில் விசாரணை நடத்தியிருந்தனர். போரில் உயிரிழந்த தமிழ் மக்களை நினைவு கூர்ந்து கார்த்திகை மலரை அலங்கரித்த பல சந்தர்ப்பங்களில் அந்த அலங்காரத்தை பொலிஸார் அழித்துள்ளதுடன், கார்த்திகை மலரை பேஸ்புக்கில் பகிர்ந்த சிலர் பொலிஸாருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கார்த்திகை பூவை பயன்படுத்தும் தமிழ் மாணவர்களை பொலிஸார் ஊடாக அடக்கும் பேரினவாத அரசாங்கம், கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை அனுமதிக்கும் அந்த மனநிலையை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென வடமாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார். “வடக்கில் அவர்கள் கார்த்திகை பூவை, மாணவர்கள் பயன்படுத்தினால், இல்ல விளையாட்டுப் போட்டிகளில் இல்ல அலங்காரங்களுக்கு பயன்படுத்தினால் அதனை இரும்புக் கரம் கொண்டு பொலிஸாரின் கரத்தால் அடக்கும் அரசாங்கம் தென்னிலங்கையில் காழுக்கு கீழே மிதிபடுகின்ற அளவுக்கு இந்த கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை அனுமதிக்கும் என்று சொன்னால் இந்த பேரினவாத அரசாங்கத்தின் மனநிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனை உற்பத்திசெய்த நிறுவனம் கால் செருப்பை விற்பனையில் இருந்து மீளப்பெற்று இதுத் தொடர்பாக வருத்தம் தெரிவிக்கும் வரையில் அந்த நிறுவனத்தின் உற்பத்திகளை புறக்கணிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.” https://www.virakesari.lk/article/184777
  5. பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ராமேஷ்வர் வால்மீகியின் தாயார் ராதா தேவி கட்டுரை தகவல் எழுதியவர், மோஹர் சிங் மீணா பதவி, பிபிசி இந்திக்காக, ஜுன்ஜுனுவின் பலெளதா கிராமத்திலிருந்து திரும்பிய பிறகு 28 மே 2024 ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன்ஜுனு கிராமத்தில் தங்கள் கடையிலிருந்து மதுபானம் வாங்காததால் ஒரு இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றிருக்கிறது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர் என்ன சொல்கிறார்? அக்கிராமத்தின் மக்கள் என்ன சொல்கின்றனர்? "நான் தனியாக ஆகிவிட்டேன். எனக்கிருந்த துணை போய்விட்டது. என் செல்லம், என் தங்கம். நான் அவனை சிறு வயதில் இருந்து தனியாக வளர்த்தேன். என்னை தூக்கில் போடட்டும் அல்லது அவர்களை தூக்கில் போடட்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன்." இவ்வாறு புலம்பியபடி, மரத்தடியில் கட்டிலுக்குப் பக்கத்தில் கைகளை கட்டிக்கொண்டு, அழுதுகொண்டே தரையில் அமர்ந்திருக்கும் இந்தப் பெண்மணி அறுபத்தைந்து வயதான ராதாதேவி. 26 ஆண்டுகளுக்கு முன்பு ராதா தேவியின் கணவர் ஹட்மான் வால்மீகி இறந்தபோது அவரது இளைய மகன் ராமேஷ்வர் பிறந்து ஆறு நாட்களே ஆகியிருந்தன. ராதா தேவி தனித்துப் போராடி ராமேஷ்வரை வளர்த்தார். முதுமையில் அவருக்கு ஆதரவாகவும் துணையாகவும் ராமேஷ்வர் இருந்தார். இந்நிலையில், கடந்த மே 14-ஆம் தேதி ராமேஷ்வர் அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில், சுமார் 6 மணி நேரம் தடிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். வயதாகி, உடல் நலிவுற்ற நிலையில் கடந்த பத்து நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட ராதாதேவி, தன் மகனைக் கொன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும் என்று கோருகிறார். பலெளதா கிராமத்தில் நடந்த சம்பவம் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ராமேஷ்வர் வால்மீகி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து சுமார் 250கி.மீ. தொலைவில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஹரியாணா எல்லைக்கு மிக அருகில் பலெளதா கிராமம் அமைந்துள்ளது. கிராமத்தின் கான்கிரீட் சாலைகள் வழியாக, அரசுப் பள்ளியை ஒட்டிச்செல்லும் மணல் நிறைந்த சாலையில், ஒரு கி.மீ. துாரத்தில் சாலையோரம் கட்டப்பட்ட ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு உள்ளே ஒரு மரத்தடியில் ராதாதேவி அமர்ந்திருக்கிறார். வீட்டின் பின்புறம் சற்று தூரத்தில் கோஷாலா (மாடுகள் பராமரிக்கப்படும் இடம்) உள்ளது. 26 வயதான ராமேஷ்வர் ரூ.9,500 சம்பளத்தில் இங்கு வேலை செய்து வந்தார். வீட்டின் மறுபுறம் சிறிது தூரத்தில் சூரஜ்மல்ஜியின் பெரிய வெறிச்சோடிய மாளிகை உள்ளது. இந்த மாளிகையில்தான் ராமேஷ்வர் சுமார் 6 மணி நேரம் தடிகளால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். கிராமத்தின் பல இளைஞர்கள் இவ்வாறு தொடர்ந்து அடிக்கப்பட்டாலும் புகார் செய்யாத அளவிற்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பயம் காணப்படுகிறது. "இந்தக் குற்றவாளிகள் RBM என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இதில் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து எல்லாவித சட்டவிரோத வேலைகளையும் செய்கிறார்கள்," என்று அதே கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞரான மனீஷ் கூறினார். "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கிராமத்தில் யாரைவேண்டுமானாலும் அடிப்பார்கள். அவர்கள் கிராமத்திற்குள் பெரும் அச்சத்தை பரப்பியுள்ளனர்,” என்றார் மனீஷ். உணவு கூட சாப்பிடவில்லை பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ராமேஷ்வரின் வீடு அவருடைய பொருளாதார நிலையைப் பற்றி சொல்கிறது. ராதாதேவியின் வீட்டின் சூழல் இந்தக் குடும்பத்தின் நிதி நிலையை வெளிப்படுத்துகிறது. அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் கூட வீட்டில் இல்லை. ஒரு கட்டிலில் சில பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. சில துணிகள் மற்றும் அணைக்கப்பட்ட அடுப்பும் காணப்படுகிறது. "கோஷாலாவில் இருந்து வீட்டிற்கு வந்தான். நான் அவனை சாப்பிடச் சொன்னபோது, இப்போழுதுதானே வந்தேன், சிறிது நேரத்தில் சாப்பிடுகிறேன் என்று சொன்னான். பிறகு குளிர்ந்த தண்ணீர் எடுக்க தொட்டிக்கு அருகில் சென்றான்,” என்று ராதாதேவி கண்களில் கண்ணீருடன் கூறுகிறார். "பத்து நாட்களாக நான் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தேன். சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக நான் படுத்தேன். நீண்ட நேரமாகியும் ராமேஷ்வர் வரவில்லை. அவனை தேடிச்சென்றபோது, ராமேஷ்வரை மது விற்பனை செய்யும் ஆட்கள் அழைத்துச் சென்றதாக கிராமத்தைச்சேர்ந்த சுபாஷ் என்னிடம் சொன்னான்,” என்று அவர் குறிப்பிட்டார். "என்னையும் அங்கே அழைத்துச்செல் என்று நான் கைகூப்பிக் கேட்டேன். நானே தேடிப் போனேன் ஆனால் என் ராமேஷ்வரை எங்கே கொண்டு சென்றார்கள் என்று யாரும் சொல்லவில்லை. நான் சோர்ந்துபோய் வீடு திரும்பி, மூன்று மணிக்கு கட்டிலில் படுத்துவிட்டேன்,” என்றார். கையால் வீட்டு வாசலை சுட்டிக் காட்டிய அவர், "மாலை நேரம் கண்விழித்து பார்த்தபோது, ராமேஷ்வர் தரையில் கிடப்பதை கண்டேன். நான் அழத் தொடங்கியதும், அனைவரும் ஒன்று கூடினர். எல்லோரும் என்னை பிடித்துக் கொண்டு கேட்டை அடைத்தனர்,” என்றார் ராதாதேவி. "என் மகன் யாருடனும் சண்டை போடமாட்டான். என்னுடைய வேறு இரண்டு மகன்களும் கோட்புத்லி மற்றும் சிகர் ஆகிய இடங்களில் தலா 5,000 ரூபாய்க்கு கூலி வேலை செய்கிறார்கள். என் ராமேஷ்வர்தான் என்னுடன் இருந்தான். ஏன் என் செல்லத்தை கொன்றார்கள் என்று தெரியவில்லை," என்று ராதாதேவி அழுதபடி கூறினார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ராமேஷ்வருடன் ஜேடுராமையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடத்தினர் ராமேஷ்வருக்கு நீதி கிடைக்க, ஜுன்ஜுனு மாவட்டக் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டுத் திரும்பிய கிராம மக்கள் மத்தியில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜேடுராமும் இருந்தார். ராமேஷ்வருடன் தானும் கடத்தப்பட்டு, வெறிச்சோடிய ஒரு மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார். "மே 14-ஆம் தேதி மதியம் 12:15 மணிக்கு அரசு மருத்துவமனையில் இருந்து மருந்துகளை வாங்கிக்கொண்டு நான் வந்துகொண்டிருந்தேன். ராமேஷ்வர் கிராமத்தில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கொண்டிருந்தான். நாங்கள் ஒன்றாகவே நடந்து வந்தோம்," என்று ஜேடுராம் பிபிசியிடம் தெரிவித்தார். "மதுக்கடைக்காரர்கள் வந்து எங்களை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் சூரஜ்மல்ஜியின் மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு போனவுடன் மாளிகையின் கதவை மூடிவிட்டு என்னை காதை பிடித்தபடி மண்டியிட்டு அமர வைத்தனர்,” என்று அவர் கூறினார். "அவர்கள் ஐந்து பேர் இருந்தனர். ஒவ்வொருவரும் அவரை நூறு முறை தடியால் அடிக்க வேண்டும் என்று பேசிக்கொண்டனர். ராமேஷ்வரின் கைகளைக் கட்டி மேலே தொங்கவிட்டனர். அவர்கள் ராமேஷ்வரை சில சமயங்களில் காலில், சில சமயங்களில் படுக்க வைத்து கம்புகளால் கொடூரமாக தாக்கினர்,” என்று ஜேடுராம் கூறினார். "அவர்களில் ஒருவர் அதை வீடியோ எடுத்தார். அவர் முற்றிலும் பயமின்றி இருந்தார். மாலை சுமார் 6 மணி வரை அவரை அடித்துக் கொண்டே இருந்தார்கள். ராமேஷ்வர் மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டார்,” என்றார். "ராமேஷ்வர் அங்கேயே மயக்கமாகிவிட்டார். பின்னர் ராமேஷ்வரை அவர்கள் அங்கிருந்து கூட்டிச்சென்றனர். எனக்கு வாய்ப்பு கிடைத்ததும் நான் மாளிகையை விட்டு ஓடிவிட்டேன்," என்றார் அவர். "அடிக்கும் போது அவர்கள் ‘இருபது லட்சம் ரூபாய் கொடுத்து மதுபான ஒப்பந்தம் எடுத்துள்ளோம். நீ எங்களிடமிருந்துதான் மது வாங்கவேண்டும்’ என்று சொன்னார்கள். அவர்கள் அனைவரையும் கடுமையாக தண்டிக்கவேண்டும்," என்கிறார் ஜேடுராம். ஹரியாணாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராமேஷ்வர் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ராமேஷ்வர் வால்மீகியையும் மற்றொரு நபரையும் இந்த மாளிகையில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். "அடித்ததால் ராமேஷ்வர் சுயநினைவை இழந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரை ஹரியாணாவில் சத்னாலியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவர் இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது உடலை பலெளதா கிராமத்திற்குக் கொண்டுசென்று அவரது வீட்டு வாசலில் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்," என்று ஜுன்ஜுனு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜர்ஷி ராஜ் வர்மா பிபிசியிடம் தெரிவித்தார். "மாலை 6.30 மணியளவில் கடையில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தேன். ராமேஷ்வர் வீட்டு வாசலில் ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. இதே ஊரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் அதில் இருந்தனர். அருகில் வருமாறு என்னை அழைத்தனர். நான் பயந்துவிட்டேன்,” என்று கிராமத்தை சேர்ந்த முகேஷ் கூறினார். "காரில் இருந்து இவரை கீழே இறக்கு. அவர் மயக்கம் அடைந்துவிட்டார். அவரது குடும்பத்தாரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். பயத்தில் அவரை கீழே இறக்கியபிறகு நான் இங்கு வந்துவிட்டேன். ராமேஷ்வரின் உடலில் உடைகள் இருக்கவில்லை,” என்றார் அவர். ராமேஷ்வரின் அண்ணன் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,காலூராம், ராமேஷ்வர் வால்மீகியின் சகோதரர். ராமேஷ்வரின் மூத்த சகோதரர் காலுராம், கோட்புத்லியில் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வீட்டுக்கு வந்துள்ளார். "கோஷாலாவில் வேலை செய்வதோடு கூடவே, ராமேஷ்வர் மேளமும் வாசிப்பார். கிராமத்தில் யாராவது வயதானவர்கள் இறந்தால் ராமேஷ்வர் மேளம் வாசிக்க அழைக்கப்படுவார். அவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். ஆடுவதும், பாடுவதும் ராமேஷ்வருக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அவர் குறிப்பிட்டார். “கோட்புத்லியில் ராமேஷ்வரின் திருமணத்திற்காகப் பெண் தேடிக்கொண்டிருந்தேன். அதற்குள் இந்த சம்பவம் இங்கு நடந்துள்ளது,” என்று காலுராம் கனத்த குரலுடன் கூறுகிறார். ராமேஷ்வர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கோஷாலாவில் சுமார் நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். "அவர் மிகவும் நல்லவர். நிறைய பாடுவார். சிரித்து, நகைச்சுவையாக பேசுவார். காலை ஐந்து மணிக்கே இங்கு வந்துவிடுவோம். மாட்டுக்கு தீவனம் கொடுப்பது மற்றும் சுத்தம் செய்யும் பணியை இங்கு நாங்கள் செய்கிறோம்," என்று இங்கு பணிபுரியும் சந்தோஷ் கூறினார். பிறகு ராமேஷ்வரை நினைத்து அழ ஆரம்பித்துவிட்டார். கடையில் இருந்து மதுபானம் வாங்க அழுத்தம் பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,கிராமத்திற்கு அருகில் இருக்கும் மதுக்கடை. சூரஜ்கரில் இருந்து பலெளதா கிராமத்திற்கு வரும் போது பிரதான சாலையிலேயே ஒரு மதுபானக் கடை இருக்கிறது. ராஜஸ்தான் கலால் துறையின் இந்த மதுபானக் கடையின் உரிமம் பலெளதா கிராமத்தைச் சேர்ந்த சுஷீல் குமாரின் பெயரில் உள்ளது. ஆனால் சுஷீல் குமார், கடையை இயக்கும் ஒப்பந்தத்தை குற்றம் சாட்டப்பட்ட சிண்டுவுக்கு சட்டவிரோதமாக கொடுத்துள்ளார். சிண்டு குற்ற நடத்தை உள்ளவர். அவர் மீது சூரஜ்கர் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது கடையில் இருந்து மது வாங்கும்படி கூறி, சிண்டு கிராம மக்களை மிரட்டுவார், அடிப்பார், என்கின்றனர் அக்கிராமத்து மக்கள். “இருபது நாட்களுக்கு முன்பு இதே ஆட்கள் ஜீத்துவையும், பவனையும் அடித்தனர். என்னை மண்டியிட வைத்தனர். எங்கள் கடையில் இருந்து மது வாங்குங்கள் என்று இவர்கள் சொல்வார்கள்,” என்று பலெளதா கிராமப் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நிற்கும் காலு ஷர்மா கூறினார். "இவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் இப்போது அந்த இளைஞரை கொன்றுவிட்டார்கள். பிறகு அவர்கள் வேறு யாரையாவது கொல்வார்கள்," என்று காலு ஷர்மா குறிப்பிட்டார். “இறந்தவர் தங்கள் கடையில் இருந்து மது வாங்கிக் குடிக்கவில்லை என்று மதுக்கடை உரிமையாளர்களுக்கு கோபம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவரை தாக்கியதில் அவர் இறந்துவிட்டார்," என்று எஸ்.பி ராஜர்ஷி ராஜ் வர்மா கூறினார். ‘கால்களில் விழுந்தும் விடவில்லை’ பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கலெக்டரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர் "நான் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். என் அப்பாவையும் ராமேஷ்வரையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். அதனால் நான் உணவைக்கூட சாப்பிடாமல் அங்கிருந்து ஓடினேன்,” என்று இதுகுறித்து ஜேடுவின் மகன் மனீஷ் கூறினார். "நானும் என் மனைவியும் மாளிகைக்குச் சென்றபோது அங்கு என் தந்தையை மண்டியிட்டு அமர வைத்திருந்தனர். ராமேஷ்வரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. அவரை தடி மற்றும் பெல்ட்டால் அடித்தார்கள். நானும் என் மனைவியும் கைகூப்பிக் கெஞ்சினோம். அவர்களது கால்களில் விழுந்தோம். ஆனால் 'நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். சிறிது நேரத்தில் அவரை விட்டுவிடுவோம்' என்று அவர்கள் சொன்னார்கள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். "நான் கிராம மக்களிடம் உதவி கேட்கச் சென்றேன். ஆனால் எல்லோரும் என்னை சூரஜ்கர் சென்று காவல்துறையில் புகார் கொடுக்கச் சொன்னார்கள். ஆனால் காவல்நிலையத்துக்கு செல்ல எனக்கு தைரியம் இருக்கவில்லை. காவல் நிலையத்திற்குச் சென்றால் எனக்கு என்ன ஆகுமோ என்று பயந்தேன்,” என்றார் அவர். "அவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்று என் தந்தையும் மிரட்டப்பட்டார். பிறகு என் தந்தையை மாளிகையில் இருந்து விட்டுவிட்டார்கள்," என்று மனீஷ் குறிப்பிட்டார். "11 மணிக்கு ராமேஷ்வர் வீடு திரும்பினார். மதியம் 3 மணியளவில் மதுகடைக்கார்கள் ராமேஷ்வரை அழைத்து சென்றது தெரிய வந்தது. நான் பலரையும் தொலைபேசியில் அழைத்தேன். 'வாருங்கள் நாம் சென்று அவரை விடுவிப்போம்' என்று சொன்னேன். ஆனால் யாரும் என்னுடன் வரத்தயாராக இருக்கவில்லை," என்று கோஷாலாவில் வேலை பார்க்கும் சந்தோஷ் கூறினார். இலக்கை எட்டாவிட்டால் கலால் துறை அபராதம் விதிக்கிறது பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ராமேஸ்வர் வால்மீகி தனது வீட்டின் அருகே உள்ள கோஷாலாவில் வேலை செய்து வந்தார். ராஜஸ்தான் கலால் துறை வெவ்வேறு மதுபான விற்பனையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு (உத்தரவாதம்) மதுபானத்தை விற்பனை செய்ய இலக்கை வழங்குகிறது. அந்தத் தொகையை விடக் குறைவாக விற்பனை நடந்தால், ஒப்பந்த ஆபரேட்டருக்கு கலால் துறை அபராதம் விதிக்கிறது. "பலெளதா கிராமத்தின் மதுபான ஒப்பந்தத்திற்கு ஐம்பது லட்சம் ரூபாய் (ஆண்டுக்கு) உத்தரவாதம் உள்ளது. அதாவது துறையின் விதிகளின்படி மதுபான ஒப்பந்ததாரர் ஒரு வருடத்தில் ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிற்கு மதுபானங்களை விற்கவில்லை என்றால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும்," என்று ஜுன்ஜுனு மாவட்ட கலால் அதிகாரி அமர்ஜீத் சிங் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட சிண்டு பலெளதா கிராமத்தில் உரிமம் பெறாமலேயே சட்டவிரோதமாக மதுபானக் கடையை நடத்தி வருகிறார். இது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமர்ஜீத் சிங்கிடம் கேட்டபோது, "இது பற்றி எங்களுக்கு தகவல் கிடைக்கவில்லை," என்று அவர் கூறினார். ”இது குறித்து உரிமம் பெற்றவர் கூட துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் மூன்று நாட்களாக கடை மூடப்பட்டுள்ளது. உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்கிறார் அவர். காவல்துறை சொல்வது என்ன? பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,ஜுன்ஜுனு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜர்ஷி ராஜ் வர்மா பலெளதா கிராமத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரின் வீடுகள் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி நிர்வாகம் மே 23-ஆம் தேதி மாலை புல்டோசர்களால் வீடுகளை தகர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. "சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாவட்டம் முழுவதும் உடனடியாக ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, முக்கிய குற்றவாளிகள் 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்," என்று ஜுன்ஜுனு மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜர்ஷி ராஜ் வர்மா பிபிசியிடம் கூறினார். "இந்த வழக்கில் முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் உள்ளனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு மைனர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். வேறு ஒருவரையும் இதில் நாங்கள் குற்றவாளியாகச் சேர்த்துள்ளோம். விரைவில் அவரும் கைது செய்யப்படுவார். அவர் சம்பவ இடத்தில் இருந்தார். ஆனால் சம்பவத்தில் நேரடியாக ஈடுபடவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த விவகாரத்தை ராஜஸ்தான் போலீசார் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகவும், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் எஸ்.பி. வர்மா தெரிவித்தார். இறந்த ராமேஷ்வரின் 38 வயதான மூத்த சகோதரர் காலு ராம், சம்பவம் நடந்த மறுநாள், அதாவது மே 15-ஆம் தேதி சூரஜ்கர் காவல் நிலையத்தில் சிண்டு, பிரவீன் குமார், சுபாஷ், சுகோ, பிரவீண், திபேந்திரா உட்பட சிலர் மீது எப்ஐஆர் பதிவு செய்தார். போலீசார் ஐபிசி பிரிவுகள் 143, 341, 323, 362, 342, 302, 201 மற்றும் எஸ்.சி எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்தார். அது சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இந்தச் சம்பவம் வெளியில் தெரிந்தது. இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியானதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நடவடிக்கை எடுக்கத் தாமதமானதா என்ற கேள்விக்கு பதிலளித்த எஸ்.பி. வர்மா,"சம்பவம் நடந்தபிறகு 16-ஆம் தேதியே நாங்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துவிட்டோம். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சமூக வலைதளங்களில் வீடியோ வந்தது,” என்று பதில் அளித்தார். சம்பவம் குறித்த அரசியல் எதிர்வினை பட மூலாதாரம்,MOHAR SINGH MEENA/BBC படக்குறிப்பு,இந்த வீட்டில் ராமேஷ்வர் வால்மீகி வசித்து வந்தார் இந்தச் சம்பவம் குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அஷோக் கேலாட் சமூக வலைதளமான X-இல் ட்வீட் செய்துள்ளார். “ஜுன்ஜுனுவில் மதுபான மாஃபியா தலித் இளைஞரை அடித்துக் கொன்று, அதன் வீடியோவை வைரலாக்கியிருப்பது, ராஜஸ்தானில் அரசு மற்றும் காவல்துறையின் பலவீனத்தின் அடையாளமாகும்,” என்று அவர் பதிவிட்டுள்ளார். ”மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஊடகங்களில் தனது பிம்பத்தை உருவாக்குவதில் மும்முரமாக இருக்கும் ராஜஸ்தான் அரசு, இந்தச் சம்பவங்களைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும். எதிர்காலத்தில் இவை மீண்டும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று பதிவிட்டிருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “மோதி ஆட்சியில் தலித்துகளின் உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்படுகிறார்கள்,” என்று பதிவிட்டுள்ளது. பீம் ஆர்மியின் ராஜஸ்தான் பிரிவின் முன்னாள் தலைவர் ஜிதேந்திர ஹட்வால், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சந்திக்க வந்தார். “இந்தச் சம்பவத்தால் தலித் சமூகத்தில் கோபம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வருகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும், எனவே கடுமையான சட்டத்தை நாங்கள் கோருகிறோம்," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், அரசு வேலை வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்தார். “மாநில பா.ஜ.க அரசு குற்றவாளிகளைப் பிடித்துள்ளது. அவர்களின் வீடுகளின் மீது புல்டோசர்கள் பயன்படுத்தப்படும் என்று சாக்குப்போக்கு கூறி வருகிறது. ஆனால், இந்த இளைஞர்கள் ஏன் குற்றங்களைச் செய்கிறார்கள்? வேலையில்லாத இளைஞர்கள் மது அருந்தும் அல்லது வியாபாரம் செய்யும் சூழ்ச்சியில் சிக்கித் தவிக்கின்றனர். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களின் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தாததால் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன,” என்று காங்கிரஸின் ஜுன்ஜுனு மாவட்டத் தலைவர் தினேஷ் சுண்டா பிபிசியிடம் தெரிவித்தார். “அரசும் காவல்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் இருக்கவேண்டுமானால் குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது பயம் இருக்க வேண்டும். எனவே, எந்த ஒரு நடவடிக்கையும் சாத்தியம் என்பதை குற்றவாளிகளுக்குத் தெரிவிக்கும் சிமிஞ்சை இது,” என்று பா.ஜ.க-வின் ஜுன்ஜுனு மாவட்டத் தலைவர் பன்வாரி லால் சைனி குறிப்பிட்டார். https://www.bbc.com/tamil/articles/ce449e1ygy7o
  6. மயிலத்தமடுவில் கால்நடைகளை துப்பாக்கியால் சுட்டும் மின்வேலியை பயன்படுத்தியும் கொலை செய்கின்றனர் - மனிதர்களை போல அவற்றையும் காணாமலாக்குகின்றனர் - சிவில் சமூக செயற்பாட்டாளர் சிவயோகநாதன் Published By: RAJEEBAN 29 MAY, 2024 | 03:16 PM மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனைபகுதியில் அத்துமீறி குடியேறியவர்களின் அக்கிரமங்கள் இன்றுவரை தொடர்கின்றன. பொலிஸார், இராணுவத்தினரின் உதவியுடன் இவர்கள் தங்கள் அநீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். பண்ணையாளர்களின் போராட்டம் 270 நாட்களை கடந்து எந்த தீர்வும் இன்றி தொடர்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டளர்கள் ஒன்றியத்தின் தலைவர் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய கிறிஸ்தவ சங்கத்தில் இடம்பெற்ற மட்டகளப்பு மயிலத்தமடு பால்பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பான உரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். மனிதர்களை போல கால்நடைகளும் காணாமல் ஆக்கப்படுகின்றனர், அவற்றை கொலை செய்கின்றனர், உணவிற்குள் வெடிபொருட்களை வைக்கின்றனர், கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்கின்றனர், துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர் என அவர் தெரிவித்தார். சிவயோகநாதன் மேலும் தெரிவித்துள்ளதாவது, மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை நீண்ட வரலாற்றை கொண்ட பகுதி ஐந்து தலைமுறைக்கு மேல் அங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் அதிகாரிகளின் அனுமதியுடன் கால்நடை வளர்ப்பிற்காக ஒடுக்கப்பட்ட இடம் அது. 2009ம் ஆண்டுக்கு பின்னரே இந்த பிரச்சினை உருவானது. 2013 வரை அந்த பகுதி மக்கள் எந்த பிரச்சினையும் இன்றி வாழ்ந்தனர். 2013 முதல் 2016 வரை இதேமாதிரியான திட்டமிட்ட குடியேற்றங்கள் இடம்பெற்றன - அரசநிகழ்ச்சி நிரலின் கீழ் இவை முன்னெடுக்கப்பட்டன. கால்நடைகளை வளர்ப்பதில் பண்ணையாளர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அதன் பின்னர் 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்கட்சியாகியது - கிழக்கு மாகாண சபையின் விவசாய கால்நடை கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரான துரைராஜசிங்கத்தினால் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக 2017 இல் அங்கிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 2019 இல் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகும் வரை சுமூகமான நிலையே இந்த பகுதியில் காணப்பட்டது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர் கிழக்கு மாகாண ஆளுநராக அனுராத ஜகம்பத் நியமிக்கப்பட்டார், இதனை தொடர்ந்து மீண்டும் முன்னரை போன்று குடியேற்றங்கள் ஆக்கிரமிப்புகள் ஆரம்பமாகின அவை இன்றுவரை தொடர்கின்றன. இதற்கு எதிரான பண்ணையாளர்களின் போராட்டம் 270 நாட்களை கடந்து இன்றும் நீடிக்கின்றது. ஆரம்பகாலத்தில் கால்நடைகள் துன்புறுத்தப்பட்டன காணாமலாக்கப்பட்டன. மனிதர்களை போல கால்நடைகளும் காணாமலாக்கப்படுகின்றன. கால்நடைகளை கொலை செய்கின்றனர், சட்டவிரோத மின்வேலிகளை அமைத்து அவை அதில் சிக்குப்படும் நிலையை உருவாக்குகின்றனர். உணவிற்குள் வெடிபொருட்களை வைக்கின்றனர், கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்கின்றனர், துப்பாக்கியால் சுட்டுக்கொல்கின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்ட கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் மேய்ச்சல் தரையில் கால்நடைகளை வளர்க்க முடியாததால் பண்ணையாளர்கள் காடுகளிற்கும் பாலைநிலங்களிற்கும் அவற்றை கொண்டு செல்கின்றனர். அங்கு போதிய உணவு இல்லாததால் அவை உயிரிழக்கின்றன. இவ்வாறு 1400க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மயிலத்தமடு மாதவனைக்கு நான்கு திணைக்களங்கள் உரிமை கோருகின்றன - இந்த நான்கு திணைக்களங்களும் பண்ணையாளர்களை வஞ்சிக்கின்றன. பண்ணையாளர்கள் ஆக்கிரமிப்பாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கைதுசெய்யப்படுகின்றனர். வனஜீவராசிகள் திணைக்களம், வன இலாகா, தொல்பொருள் அபிவிருத்தி திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியனவே இவ்வாறு பண்ணையாளர்களை வஞ்சிக்கின்றன. பண்ணையாளர்கள் அந்த பகுதியில் அத்துமீறி பிரவேசிக்கின்றனர் காட்டு விலங்குகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனர் என பொய் வழக்கை போடுகின்றனர். பண்ணையாளர்களை வெளியேற்ற ஆக்கிரமிப்பாளர்கள் சட்ட கட்டமைப்பை பயன்படுத்துகின்றனர். மட்டக்களப்பில் ஏழு இலட்சம் கால்நடைகள் உள்ளன மயிலத்தமடு மாதனையில் மாத்திரம் 3 இலட்சம் கால்நடைகள் உள்ளன பெரும்போகத்தின்போது மேலும் ஒருஇலட்சம் கால்நடைகள் இந்த பகுதிக்குசெல்வது வழமை. மட்டக்களப்பிலிருந்து கொள்வனவு செய்யப்படும் பாலின் அளவு பல மடங்காக குறைவடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையில் உள்ள அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. பாரம்பரிய கால்நடைகளை அழித்தால் மீண்டும் அவற்றை உருவாக்க முடியாது, நல்ல இனகறவை மாட்டை அழித்துவிட்டு வெளிநாட்டிலிருந்து மாடுகளை இறக்குமதி செய்ய முயலக்கூடும். எங்கள் காளைகள அழிந்தால் அவற்றை மீண்டும் உருவாக்க முடியாது. இது ஒருவகை அரசியல் முதலீடு - இனவாதத்தில் முதலீடு செய்யும் நடவடிக்கை, விவசாய குடியேற்றங்களை உருவாக்கி சமூகங்களிற்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அரசியல் இலாபம் சம்பாதிக்க முயல்கின்றனர். இவ்விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கதைத்துவிட்டோம். ஜனாதிபதி விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை, சர்வதேச சமூகத்திற்கு கடிதங்களை அனுப்பினோம், வெளிநாட்டு ஊடகங்களிற்கு தெரிவித்தோம், வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்தோம். தென்ஆபிரிக்காவினதும் ஜப்பான் சுவிட்சர்லாந்தினதும் தூதுவர்கள் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிக்கு வந்து சந்தித்துவிட்டு சென்றனர். ஆனாலும் இன்றுவரை போராட்டம் தொடர்கின்றது எந்ததீர்வும் கிட்டவில்லை. சிவில் சமூகத்தினர் சிஎச்ஆர்டி ஊடாக அதிகாரிகளிற்கு எதிராக மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அதிகாரிகள் தான் கால்நடைகளை அங்கு கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள் தற்போது ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றார்கள் இல்லை என தெரிவித்த மக்கள் அதிகாரிகளிற்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். மகாவலி அதிகார சபைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம் சாணக்கியன் சார்பில் கொழும்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கின் தீர்ப்பு 2022 இல் வழங்கப்பட்டது, அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு மாகாவலி அதிகார சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த பகுதியில் பொலிஸாரின் உதவியுடன் ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். பண்ணையாளர்கள் அங்கு அடையாள அட்டை கெடுபிடிக்குள்ளாக்கியுள்ளனர். சிவில் சமூகத்தினர் ஊடகவியலாளர்கள் ஏனையவர்கள் அங்கு செல்வதற்கு அனுமதி மறுக்கின்றனர். நீதிமன்றங்களின் கட்டளைகளை சட்டங்களை புறக்கணிக்கின்றனர் சட்டத்தை மதிக்கின்றார்கள் இல்லை. அத்துமீறி குடியேறியவர்களின் அக்கிரமங்கள் இன்றுவரை தொடர்கின்றன. பொலிஸார் இராணுவத்தினரின் உதவியுடன் இவர்கள் தங்கள் அக்கிரமங்களை முன்னெடுக்கின்றனர். இதுதான் இந்த நாட்டில் ஆட்சியின் நிலைமை வடக்கிலும் இதே அடக்குமுறையின் கீழ்தான் மக்கள் வாழ்கின்றனர். ஆறு மாதங்களாக பால் கறக்காத நிலை காணப்படுகின்றது. போதிய உணவின்றி மாடுகள் உயிரிழக்கின்றன அவற்றிற்கு போசாக்கான உணவு கிடைப்பது கடினமான விடயமாக காணப்படுகின்றது. மாடுகள் குறைமாத கன்றுகளை ஈனுகின்றன, சில மாடுகள் எழுந்து நிற்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு சில நாட்களில் இறந்துவிடுகின்றன. இந்த கால்நடைகளை வேறு இடத்திற்கு மாற்ற முடியாது கொண்டுபோக முடியாது இவை ஒரு பாரம்பரிய இனத்தை சேர்ந்தவை மூன்று நான்கு தலைமுறைகளாக அந்த பகுதியிலேயே வாழ்ந்தவை அவை அங்குதான் வாழும். மேலும் அவைகளிற்கு ஏற்ற விதத்தில் புதிய இடங்களை கண்டுபிடிக்க முடியாது மயிலத்தமடுவில் கால்நடைகளிற்கான அனைத்து வளங்களும் உள்ளன இது வேறு இடத்தில் கிடைக்காது. https://www.virakesari.lk/article/184786
  7. கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது’’ - மோடியின் பேச்சுக்கு மம்தா எதிர்வினை 29 MAY, 2024 | 03:38 PM கொல்கத்தா: கடவுள்தான் தன்னை அனுப்பி வைத்ததாக இந்திய பிரதமர்பிரதமர் மோடி அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், நரேந்திர மோடி கடவுள் என்றால் அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது; கலவரத்தை தூண்டக் கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசியது. “ஒருவர் சொல்கிறார் அவரை கடவுளுக்கு எல்லாம் கடவுள் என்று. மற்றொருவர் சொல்கிறார் புரி ஜெகந்நாதரே அவருடையே பக்தர் என்று. அவர் கடவுள் என்றால் அரசியலில் ஈடுபட கூடாது. கடவுள் கலவரத்தை தூண்டக் கூடாது. அவருக்கு கோயில் கட்டுவோம். பிரசாதம், பூக்கள் போன்றவை வழங்குவோம். நான் பல்வேறு பிரதமர்களுடன் பணியாற்றி உள்ளேன். வாஜ்பாய், மன்மோகன் சிங், ராஜிவ் காந்தி, நரசிம்ம ராவ், தேவகவுடா ஆகியோருடன் பணியாற்றி உள்ளேன். ஆனால், இவரைப் போன்ற பிரதமரை நான் பார்த்தது இல்லை. அந்த மாதிரியான பிரதமர் நமக்கு வேண்டவே வேண்டாம்” என மம்தா கூறினார். மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி அண்மையில் பேட்டியளித்தார். அப்போது எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி என்று பிரதமர் மோடியிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன். அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான் என தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/184791
  8. Published By: RAJEEBAN 29 MAY, 2024 | 11:51 AM அமெரிக்காவின் ஒகாயோவின் யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர்காயமடைந்துள்ளனர் இருவர் காணாமல்போயுள்ளனர். ஒகாயோ மத்திய சதுக்கத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகள் தொடர்மாடிகள் காணப்பட்ட கட்டிடத்திலேயே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. வாயு கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும இது வெடிப்பு சம்பவம் என உறுதியாக தெரிவிக்க முடியும் என யங்டவுனின் தீயணைப்புபிரிவின் தலைவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கின்றோம் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண் ஒருவரையும் பெண்ணையும் காணவில்லை ஆண் வங்கி ஊழியர் என தீயணைப்பு படையின் தலைவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184759
  9. ரபாவில் 45 பேரை பலி கொண்ட தாக்குதல்; - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குண்டே பயன்படுத்தப்பட்டது என்கின்றது சிஎன்என் Published By: RAJEEBAN 29 MAY, 2024 | 11:38 AM காசாவின் ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் கூடாரங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் அமெரிக்காவின் வெடிமருந்துகளை பயன்படுத்தியது என சிஎன்என் தெரிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பதிவான வீடியோவை சிஎன்என் ஆய்வு செய்த வேளை இது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் வெடிகுண்டு நிபுணர்களின் ஆய்வின் மூலமும் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. காசாவின் தென்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பெரும் தீ மூண்டமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் காரணமாக 45க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 200க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரபாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் அனேகமானவர்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என காசாவின் சுகாதார அமைச்சு வட்டாரங்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். சிஎன்என் தன்னிடம் உள்ள வீடியோ காட்சிகள் ரபா முகாம் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கின்றது என குறிப்பிட்டுள்ளதுடன், இரவு நேரத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இருந்து தப்புவதற்கு பலர் முயல்வதையும் காணமுடிவதாக தெரிவித்துள்ளது. சிறுவர்களின் உடல்கள் உட்பட எரிந்த உடல்களை இடிபாடுகளிற்குள் இருந்து மீட்பு பணியாளர்கள் வெளியில் எடுப்பதை அவதானிக்க முடிவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. குவைத் அகதி முகாம் 1 என அழைக்கப்படும் இந்த முகாமின் மீது இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்பட்ட வீடியோக்களை ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சிஎன்என் தெரிவித்துள்ளது. சிஎன்என்னின் வீடியோவை ஆராய்ந்த வெடிகுண்டுகள் ஆயுத நிபுணர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஜிபியு 39 குண்டின் ஒரு பகுதியை காணமுடிவதாக தெரிவித்துள்ளனர். பொயிங் நிறுவனம் ஜிபியு39 குண்டுகளை தயாரிக்கின்றது. மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை துல்லியமாக தாக்குவதற்கு இந்த குண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என வெடிபொருள் ஆயுத நிபுணர் கிறிஸ்கொப் ஸ்மித் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். அமெரிக்க இராணுவத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவின் முன்னாள் உறுப்பினரான டிரெவெர் போல் குண்டு சிதறல்களை அடிப்படையாக வைத்து ஜிபியு39 குண்டே பயன்படுத்தப்பட்டுள்ளது என உறுதி செய்துள்ளார் என சிஎன்என் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184755
  10. Published By: RAJEEBAN 29 MAY, 2024 | 10:11 AM மனித உரிமை விடயத்தில் இலங்கை பிரிட்டனின் முன்னுரிமைக்குரிய நாடாக விளங்குகின்றது என பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் பிரிட்டனின் நிலைப்பாடு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க சந்தேகங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக அனைவரையும் உள்வாங்கிய நடைமுஐறயின் அவசியத்தை பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்த பொறிமுறையும் சுயாதீனமானதாக அர்த்தபூர்வமானதாக பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை பெறக்கூடியதாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ள பிரிட்டனின் பொதுநலவாய வெளிவிவகார அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் மேரி டிரெவல்யன் முன்னைய நிலைமாற்றுக்கால செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவும் பொறுப்புக்கூறலிற்கான பாதைகளை வழங்குவதாக காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/184744
  11. சீனாவின் ஹெபெய் (Hebei) மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலா (Ebola) வைரஸின் சில பகுதிகளைப் பயன்படுத்தி புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா உருவாக்கியுள்ள புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக அமையலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது . சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோ புரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ளனர். இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவும். அதனால் இந்த வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம் என தெரிவித்த சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளனர். அதேவேளை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸினால் உலகத்திலுள்ள பல கோடி மக்கள் உயிரிழந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை உருவாக்கியுள்ளமை அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/302679
  12. A/L பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு! 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302656
  13. தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது - நாமல் ராஜபக்ஷ Published By: VISHNU 29 MAY, 2024 | 01:14 AM தேர்தலை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களின் விருப்பத்துக்கு அமைய நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தேர்தல்களை நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்தாது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலும் இரண்டாண்டு காலம் பதவி நீடிப்பு வழங்க வேண்டும். அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் செலவுகளும், சுற்றாடல் மாசடைவும் மாத்திரம் மிகுதியாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரது இந்த கருத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு பதிவேற்றம் செய்துள்ளார். தேர்தலை நடத்தாது ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவி காலத்தை நீட்டிப்பது ஜனநாயகத்தின் அடிப்படை கொள்கைகளை பாதிக்கும். தற்போதைய நிலையில் மக்களின் விருப்பத்துக்கு அமைய நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமே தவிர, மக்களின் குரல்களை தாமதப்படுத்த கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/184729
  14. முதலீடு இல்லாத காரணத்தால் இலங்கை ரயில்வே மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ரயில் சேவைகள் இரத்து மற்றும் புகையிரத பயணிகள் அனுபவிக்கும் தாமதங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “இலங்கை ரயில்வே மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. திறமையான ரயில்வே சேவையை முன்னெடுக்க, முதலீடு தேவை. கடலோர ரயில் பாதைகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அத்துடன் பயணிகள் பெட்டிகள், ஸ்லீப்பர்கள் மற்றும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி தேவை‘ என்று அமைச்சர் விளக்கினார். ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்தியாவின் உதவியுடன் ரயில் பாதைகள் கடைசியாக மேம்படுத்தப்பட்டதாக குணவர்தன குறிப்பிட்டார். “இந்திய கடனுதவியுடன் வடக்கு ரயில் பாதை மேம்படுத்தப்பட்டு வருகிறது. 20 ரயில் இன்ஜின்களை சலுகையின் கீழ் பெற இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,” என்றார். நலிவடைந்த புகையிரதத் துறையை மேம்படுத்துவதற்கு வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்கான நாட்டின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை இலங்கை ரயில்வே தொடர்ந்து குறைபாடுகளை சந்திக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். “குறைந்தபட்சம் 50 முதல் 60 வருடங்கள் பழமையான ரயில்களுடன் சேவைகளை பராமரிப்பதற்காக இலங்கை ரயில்வே ஊழியர்களுக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்” என்று குணவர்தன கூறினார். https://thinakkural.lk/article/302628
  15. Published By: VISHNU 29 MAY, 2024 | 01:07 AM முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கமைய சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூடகட்டிட நிர்மாணத்திற்கு 110மில்லியன் ரூபாநிதி ஜனாதிபதியினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபாய் நிதி இன்று பாடசாலை கட்டிட நிர்மாணத்துக்காக விடுவிக்கப்பட்டு கட்டட நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 ம் ஆண்டு சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்போதைய நல்லாட்சி அரசினால் 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதோடு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாடசாலை பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு புதிய கேட்போர் கூட கட்டிடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்திருந்தார். நாட்டின் ஸ்திரமற்ற அரசியல் நிலை காரணமாக குறித்த வேலை திட்டம் முடிவுறுத்தப்படாமை தொடர்பில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டமருத்துவ பீட புதிய கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனால் குறித்த விடயம் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டதோடு முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கும் இந்த விடயம் கொண்டுவரப்பட்டிருந்தது. குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சர்விஜயகலா மகேஸ்வரன் உடனடியாக ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடுத்த கோரிக்கையினையடுத்து 110 மில்லியன் ரூபா நிதியினை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கேட்போர் கூட கட்டிட நிர்மாணத்துக்காக ஒதுக்குமாறு ஜனாதிபதியினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதோடு முதல் கட்டமாக 70 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதோடு மிகுதி 40 மில்லியன் எதிர்வரும் வாரமளவில் விடுவிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதம செயலருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/184728
  16. இன்றைய நவீன காலகட்டத்தில் ‘சும்மா தான் இருக்கேன்’ என்று சொன்னால் கூட கையில் ஃபோன் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று எதையாவது பார்த்துக் கொண்டோ அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள். உலகில் என்னென்னவோ போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தென்கொரியா வித்தியாசமாக “ஸ்பேஸ்- அவுட்” என்ற போட்டியை நடத்தியது. அதாவது 90 நிமிடங்கள், எந்த வேலையும் செய்யாமல், தூங்காமல், ஃபோன் பார்க்காமல், அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். இவ்வளவு தானே என்று ஈசியாக எண்ணிவிட முடியாது. போட்டியாளர்களின் இதய துடிப்பு சீராக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்களால் வாக்களிக்கப்பட்ட முதல் 10 போட்டியாளர்களில் யாருக்கு நிலையான இதய துடிப்பு இருந்ததோ அவர்களே இந்த போட்டியின் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார். மேலும் இப்போட்டி வீக் – எண்ட் நாட்களில் நடத்தாமல், வாரத்தின் பிஸி நாட்களில் தான் நடைபெறும். 2014ஆம் ஆண்டு இந்த போட்டி வூப்சாங் என்ற ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்டால் தொடங்கப்பட்டது. “நான் ஒரு விஷுவல் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும், எப்பொழுதும் என்னைவிட அதிகமாக வேலை பார்ப்பவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வேன். வேலை செய்யாமல் இருந்தால் அது மிகவும் தவறு என்று நினைத்து என்னை நானே வருத்திக் கொள்வேன். ஆனால் என்னை நானே அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வது தான் மிகப்பெரிய தவறு என்று உணர்ந்தேன். நமக்கென்று சிறிது நேரம் ஒதுக்க வேண்டும். அது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம்,” என்று வூப்சாங் கூறியிருந்தார். அதிக நேரம் வேலை பார்த்துக்கொண்டே இருப்பதால் பலரும் ஸ்ட்ரெஸ், டென்ஷன் என பல மனநல நோய்களுக்கு ஆளாகிறார்கள். அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு இடைவேளை தேவைப்படும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகவே இப்போட்டியை தொடங்கியுள்ளார். “பணமோ, டெக்னொலஜியோ இல்லாமல், ‘சும்மா’ இருப்பதையே ஒரு பொழுதுபோக்கு நிகழ்வாக ஏற்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் கூறினார். இந்த ஆண்டு மே 15ஆம் தேதி தென்கொரியாவில் தலைநகரான சியோலில் நடைபெற்ற போட்டிக்கு கிட்டதட்ட 4,000 போட்டியாளர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 117 போட்டியாளர்கள் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 6 வயது சிறுவன் முதல் 60 வயது முதியவர் வரை பங்கேற்றுள்ளனர். 5 முறை ஒலிம்பிக்கிற்கு முயற்சி செய்து இரண்டு முறை வெள்ளி பதக்கம் வென்ற க்வாக் யூன் ஜீ- யும் இம்முறை போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தை வென்றுள்ளார். “நான் ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதற்கு ஐந்து முறை முயற்சி செய்துள்ளேன். எனக்கு சரியான தூக்கமும் ஓய்வும் இருந்ததில்லை. இந்த இடத்தில் என்னுடைய உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு கிடைக்கும் என்பதால் நான் இப்போட்டியில் கலந்துக் கொண்டேன்” என்றார். https://thinakkural.lk/article/302630
  17. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்துள்ளார். நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வினவுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது அமெரிக்க தூதுவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவியுள்ளார். அரசியலமைப்பினூடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய எதிர்வரும் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர்கள், ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட பலரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களை சந்தித்து எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கடந்த சில நாட்களாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/302660
  18. Published By: VISHNU 29 MAY, 2024 | 08:59 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் அண்மையில் விடுவிக்கப்பட்ட 234.83 ஏக்கர் காணிக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கு தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பில், விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் சுமார் 55 ஆயிரம் சதுர அடி காணியில் கண்ணிவெடிகள் காணப்படகூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் (10) திகதி வரை விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்ல வேண்டாம் என காணி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்போது கண்ணிவெடிகள் காணப்படும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டால் அந்த பகுதிகளை தவிர்த்து ஏனைய காணிகளுக்குள் எதிர்வரும் பத்தாம் திகதிக்கு பின்னர் பொதுமக்கள் தங்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கண்ணிவெடிகள் காணப்படும் பட்சத்தில் அவற்றை உரிய நடைமுறைகளை பின்பற்றி செயலிழக்கச் செய்யப்பட்டு அகற்றப்படவுள்ளன. அதன் பின்னர் குறித்த பகுதிகள் கண்ணிவெடி அற்ற பிரதேசமாக அறிவித்தல் விடுக்கப்பட்டதும் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இன்றி தங்களின் காணிகளுக்குள் செல்ல முடியும். பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), பலாலி வடக்கு(J/254), பலாலி கிழக்கு(J/253), பலாலி தெற்கு(J/252) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளுக்குட்பட்ட 234.83 ஏக்கர் காணி விவசாய நடவடிக்கையின் நிமித்தம் அண்மையில் விடுவிக்கப்பட்டது. இராணுவ கட்டுப்பாட்டிற்குள் காணப்பட்ட இந்த பகுதிக்கு பொதுமக்கள் இலகுவாக செல்லக்கூடிய வீதிகளும் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைய விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/184726
  19. இலங்கையை சேர்ந்த நால்வர் கைது செய்யப்படட விவகாரம் - விசாரணைகளிற்காக குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டம் Published By: RAJEEBAN 29 MAY, 2024 | 10:49 AM குஜராத் விமானநிலையத்தில் ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இலங்கை அரசாங்கம் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு பேரை கைது செய்துள்ளது, எனினும் ஒஸ்மண்ட் ஜெராட் என்ற நபர் தலைமறைவாகியுள்ள நிலையிலேயே குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஜெராட் தேடப்படுகின்றார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், அவரை கைது செய்யபவர்களிற்கு சன்மானத்தை அறிவித்துள்ளது. மே 20 திகதி குஜராத்தின் அஹமதாபாத் விமானநிலையத்தில் ஐஎஸ் சந்தேகநபர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வரை கைது செய்ததன் மூலம் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் பாரிய தாக்குதல் முயற்சியை முறியடித்துள்ளனர். மாநிலத்திற்கு வெளியே இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதில் குஜராத் பயங்கரவாத தடுப்புபிரிவின் மூன்று குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் விசாரணைகளின் மூலம் ஒஸ்மன்ட் ஜெராட் என்ற நபர் நான்கு சந்தேக நபர்களிற்கும் நான்கு இலட்சம் ரூபாய்களை வழங்கியமையும், இந்த நபர் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றுவதும் தெரியவந்துள்ளது. இலங்கை அதிகாரிகள் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர் ஒஸ்மன்ட் ஜெராட் தலைமறைவாகியுள்ளார் என குஜராத்தின் பயங்கரவாத விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். விசாரணைகளின் போது இந்தியாவில் சந்தேகநபர்களின் நடவடிக்கைகளிற்கு மேலும் மூவர் உதவியமை தெரியவந்துள்ளது. குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தற்போது இந்த நபர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/184750
  20. ரபா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது - அவுஸ்திரேலியா Published By: RAJEEBAN 28 MAY, 2024 | 11:43 AM ரபா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தற்போது மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தவேண்டும் அதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தாக்குதல்கள் பயங்கரமான ஏற்றுக்கொள்ள முடியாத விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள பெனிவொங் காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ள ரபாவின் மீது இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கையை முன்னெடுக்க கூடாது என்பது குறித்து அவுஸ்திரேலியா தெளிவாக உள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார். ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் பொதுமக்களை மனித கேடயங்களா பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் தனது ஆயுதங்களை கைவிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/184675
  21. 28 MAY, 2024 | 08:10 PM ஸ்பெயின், நோர்வே, அயர்லாந்து ஆகிய நாடுகள் இன்று உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனிய தேசத்தை அங்கீகரித்துள்ளன. மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்காக இந்த நடவடிக்கை என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன. மூன்று நாடுகளும் தாங்கள் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதன் மூலம் ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் தங்களை பின்பற்ற செய்ய முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளதுடன் இது காசாவில் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் விடுதலை போன்றவற்றிற்கான இராஜதந்திர முயற்சிக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இதனை கடுமையாக எதிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184722
  22. 28 MAY, 2024 | 09:51 PM யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்த கோரி போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது . ஊர்காவற்துறையில் பிரபல்யமான பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பவனத்திற்கு அண்மையாக மதுபான சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் பல சமூகப் புரள்வான நடவடிக்கைகள் இந்த பிரதேசத்தில் நடைபெற்று நீதிமன்ற வழக்குகளாகவும் காணப்படுகின்றது. இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதாகைகளை தாங்கியும் மதுபான சாலை நிறுத்த கோரியும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது மதுபான சாலையை நிறுத்த கோரி கையொப்பமும் பெறப்பட்டது. ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் ஊர்காவற்த்துறை சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற மதுபான சாலையை அனுமதியை நிறுத்த கோரி ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்திற்கு சென்று ஊர்காவலத்துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியிடம் மகஜரையும் கையளித்தனர். https://www.virakesari.lk/article/184719
  23. 28 MAY, 2024 | 09:52 PM யாழ். போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (28) அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழிமொழியப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மிகவிரைவில் தரமுயர்த்தப்படவுள்ள யாழ். போதனா வைத்திசாலைக்கு பௌதீக மற்றும் ஆளணி ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு மக்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்குவதற்கான சூழல் உருவாக்கப்படவுள்ளது. இதேவேளை கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதியால் யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கான மருத்துவ பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிக்கான தொகுதி திறக்கப்பட்டது. யாழ் போதனா வைத்திய சாலையை தேசிய வைத்தியசாலை ஆக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதியால் கூறப்பட்டது. ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த விடயத்தை கூறி அடுத்துவரும் அமைச்சரவையில் அதற்கான பொறிமுறைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184718

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.