கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,210
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. நேர்காணல்: கிழக்கில் நிகழ்வது ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன் ; நேர்கண்டவர் : அகர முதல்வன் May 10, 2020 கிழக்கில் நிகழ்வது ஒருவகைப் பங்காளிச் சண்டை தான் — சோமிதரன் சோமிதரன்.ஈழத்தின் ஊடகவியலாளர்.சிங்கள இனவெறி அரசினால் தீக்கிரையாக்கப்பட்ட யாழ்ப்பாண பொது நூலகம் குறித்து இவர் இயக்கிய “எரியும் நினைவுகள்” என்ற ஆவணப்படத்தின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். பல ஆவணப்படங்களை இயக்கிய இவர் இப்போது திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். ஈழத்தில் கவிஞர்கள் அதிகம், எழுத்தாளர்களுக்கும் குறைவில்லை. ஆனால் உங்கள் துறையான ஆவணப்பட இயக்கம் சார்ந்து செயற்படுவதற்கு செயற்பாட்டாளர்கள் பெரியளவில் முன் வருவதில்லை. எப்படி ஆவணப்படங்களை உருவாக்க வேண்டுமென தோன்றியது. அதுவும் ஈழத்தின் மிக முக்கியமான பிரச்சனைகளை தொட்டு இருக்கிறீர்களே? ஆவணங்களை பெருமளவில் இழந்து விட்டவர்கள். நாங்கள் இண்டைக்கு ஒரு வேர்ச்சுவல் ரியாலிட்டியில் வாழுகின்ற இனக்குழுமம். எங்கள் கதைகளை, வாழ்வை, வரலாற்றின் உண்மைகளை இந்த தலைமுறைக்கும் இனி வரும் தலைமுறைக்கும் ஆவணப்படுத்தலின் ஊடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். இன்று நான் எடுக்க நினைக்கிற ஒரு கற்பனைக் கதைப்படத்தை எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் இன்று எடுக்கத் தவறும் ஒரு ஆவணப்படம் நாளை அதனைக் காட்சிப்படுத்த முடியாதபடி வேறொன்றாக மாறலாம். நாங்கள் இன்று இந்த புதிய உலகில் புனைவுகளின் வரலாற்றில் வாழ்பவர்கள். பல புனையப்பட்ட கதைகளைத்தான் வரலாறு எண்டு நம்ப வைக்கப்படுகிறோம். நானும் ஆரம்பத்தில் கதை கவிதை என்று எழுதத் தொடங்கியவன் தான். ஆனால் அது என்னுடைய வேலையல்ல என்று தெளிவு பெற்ற பின்னால் என் பயணத்தை மாற்றிக் கொண்டேன். நான் அடிப்படையில் ஒரு ஊடகவியலாளன். தினக்குரல் பத்திரிகையில் தொடங்கிய பணி பின்னர் தராக்கி சிவராம், திஸ்ஸநாயகம் ஆகியோரோடு “நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட்” ஆங்கில வாரப் பத்திரிகையில் தொடர்ந்தது. அந்த காலப்பகுதியில் பிபிசி ஆங்கில சேவைக்காக தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி ஆவணப்பதிவுகளில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. பிரான்சிஸ் ஹாரிசனோடு இணைந்து ஆவணப்படங்களில் வேலை செய்தேன். குறிப்பாக காணாமல் போனவர்கள் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றை அடியொற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணப்படம்தான், நான் முதன்முதலில் வேலை பார்த்தது. அந்த படத்தின் கமெராமென் ஈராக் போர் மற்றும் ஆப்கான் போர்களில் பிபிசிக்காக களத்தில் வேலை பார்த்தவர். அவரிண்ட அனுபவங்களைக் கேட்கவும் இந்த ஆவணப்படுத்தல்களில் ஈடுபடும் போது எனக்குள்ள உருவான காட்சி ஊடகம் மீதான ஈர்ப்பும் தான் எனக்குள் விழுந்த முதல் விதை எண்டு நினைக்கிறன். இதற்குப் பிறகு நாம் சுயாதீனமாக ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நானும் சரிநிகர் ஆசிரியர் சிவகுமாரும் முயற்சிக்கத் தொடங்கினோம். யாழ்ப்பாண நூலக எரிப்பை முதன் முதலில் ஆவணப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் என்ர முதல் படம் யாழ் நூலக எரிப்பு பற்றியதல்ல. போபால் நச்சு வாயுக் காசிவால் பாதிக்கப்பட்ட வாழ்விழந்தவர்கள் குறித்த படம்தான் . அதன் பின்னர் கடலூரில் சிப்காட் இரசாயனத் தொழிற்சாலைகளால் உருவான சூழலியல் பற்றிய ஆவணப்படம். அதற்குப் பிறகு 2004 சுனாமி போரழிவு குறித்து ஒரு படம். இவைகளை எடுத்த பின்னர்தான் யாழ் நூலக எரிப்பு பற்றிய “எரியும் நினைவுகள்” ஆவணப்படத்தை எடுத்தேன். 2006 இல் இலங்கையில் மாற்றமுற்ற அரசியல் சூழல் அந்தப்படத்தை திட்டமிட்டபடி எடுத்து முடிப்பதில் பெரும் தடங்களை ஏற்படுத்தியது. ஆனால் அந்த நூலகம் எரிக்கப்பட 25 ஆவது ஆண்டில் அந்த படத்தை எடுத்தோம். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிந்த கையோடு ஒரு ஆவணப் படத்தை எடுத்தேன். “முல்லைத் தீவின் பெருங்கதை (mullaithivu saga)” என்ற அந்த ஆவணப்படம் தான் போர் முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட முதல் படம். இலங்கையில் வாழ்வதை விட சற்று சவுகரியமான ஆனால் அதே கண்காணிப்புக்குள் தமிழகத்தில் வாழ்ந்த ஈழத்தமிழனான எனக்கு அந்த படத்தை உலகெங்கும் பிரச்சாரப்படுத்த அப்போது முடியவில்லை. கடும் புற நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தமிழகத்தில் வாழும் ஈழச் செயற்பாட்டளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி உங்களுக்கும் தெரிந்ததுதானே அகரன். அதன் பின்னர் இலங்கையில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்த எனது ஆவணப்படம். வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி என்ற ஈழ வரலாற்றுப் படம் என இப்போது வரை என் ஆவணப்பட வேலைகள் தொடர்கிறது. இன்னும் சில படங்களை போர் முடிந்த கடந்த பத்தாண்டுகளில் பதிவு செய்திருகிறேன். அவற்றின் பிற தயாரிப்பு வேலைகள் போய்க் கொண்டிருக்கிறது. இலங்கை அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் நிலவியகாலத்தில் ஊடகவியலாளராக செயற்பட்டீர்கள் என நிறையத் தருணங்களில் கூறியிருக்கிறீர்கள். அந்தக்காலத்தில் இலங்கைத் தீவெங்கும் நிறைய ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நீங்கள் எந்த மாதிரியான நெருக்கடிகளைச் சந்தித்தீர்கள்? இலங்கையில் ஊடகவியலாளராக அந்த நாட்களில் வேலை செய்வது என்பது துப்பாக்கிகளுக்கு நடுவிலே வேலை செய்வது. 2004 இல் முதல் தடவையாக நான் சென்னைக்கு வந்தேன் ஆனாலும் என் பணி இங்கும் அங்குமாகவே இருந்தது. 2007 வரை நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட்டில் எழுதிக் கொண்டிருந்தேன். 2007 இற்கு பிறகான சூழல் என்னை சென்னையிலேயே நிரந்தரமாகத் தங்கச் செய்தது. நான் இறுதியாக வேலை செய்த நோர்த் ஈஸ்டன் ஹெரல்ட் பத்திரிகை இலங்கை அரசால் தடை செய்யப்பட்டு அதன் ஆசிரியர் திசநாயகம் கைது செய்யப்பட்டார். இலங்கை அரசுக்கு எதிராகச் செயற்பட்டதற்காக அவருக்கு 20 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. அந்த பத்திரிகையில் 2003 இல் என்னைச் சேர்த்துக் கொண்டவர் தராக்கி என்கிற சிவராம். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர். தமிழ்நெற்செய்தித் தளமும் அவரின் நெறிபடுதலில்தான் செயற்பட்டது. 2005ஏப்பிரல் இறுதியில் ஒருநாள் நான் வவுனியாவில் இருந்து இரவுப் பேருந்தில் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது சரிநிகர் சிவகுமார் போன் பண்ணி, சிவராம் கடத்தப்பட்டதாகச் சொன்னார். அந்த இரவு முடிந்த போது அவருடைய உடல் கொழும்பில் உள்ள இலங்கைப் பாரளுமன்றத்திற்குப் பின் புறமாக வீதியோரத்தில் வீசப்பட்டுக் கிடந்தது. 2002 இல் இலங்கையில் உருவான அமைதிப் பேச்சுக்காலத்திற்கு முன்னரும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பேச்சுகள் தொடங்கி அமைதிக்காலம் வந்த பின்னர் கிழக்கில் கருணா – புலிகள் பிளவால் உருவான நெருக்கடி ஊடகவியலாளர்களைக் காவு வாங்கத் தொடங்கியது. 2004 இல் மட்டக்களப்பில் பத்திரிகையாளர் நடேசன் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப் பிறகு கிழக்கில் பத்திரிகையாளர்களே போக முடியாத சூழல் ஒன்று இருந்தது, சிவராம் கொலை தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பெரும் அச்சுறுத்தலாகவே மாறியது. எல்லோரிடமும் ஆயுதம் இருந்தது. ஆகவே யாரைக் குறித்தும் அல்லது எந்தவொரு தரப்பையும் விமர்சித்தோ அல்லது யாருக்கேனும் விரும்பமில்லாதவாறு எழுதினாலோ பேசினாலோ யார் வேண்டுமானாலும் துப்பாக்கிகளால் நமக்கு பதில் தருவர்கள் என்பதே நியதியாகிவிட்டது. அமைதி காலத்திலேயே இந்த அச்சுறுத்தல் இருந்தது. அமைதி காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில் தினக்குரலில் பணியாற்றிய போது ஒரு செய்தி போட்டேன். அமைதி காலம் தொடங்குவதற் கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஆயுதங்களோடு இருந்த அரச ஆதரவு இயக்கம் ஒன்றின் அலுவலகத்தில் இருந்து அழைப்பெடுத்தார்கள். எதிர் முனையில் பேசியவர் “என்ன பயம் விட்டுட்டுது போல கண்டபடிக்கு செய்தி போடுறியள்” எண்டார். உண்மைதான் 2002 இற்கு முதல் எண்டால் அந்த தொலைபேசிக் குரல் கடும் அச்சுறுத்தல்தான். இந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுதாமல் பணியாற்றியதால்தான் அந்த காலப் பகுதியில் நிமலராஜன் போன்ற பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டர்கள். அரசாலும், அரசு சார்பு தமிழ் ஆயுதக் குழுக்களாலும் மட்டுமல்ல புலிகளாலும் கருத்து நிலை வேறுபாடுடைய ஊடகவியலாளர்கள் சிலர் அந்த நாட்களில் கொல்லப் பட்டிருகிறார்கள். ஆனால் யாரை யார் சுட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது எந்த விசாரணையும் இருக்காது. கொல்லப்பட்டவர் செய்த வேலை அவரின் அரசியல் ஆகியவற்றைக் கொண்டே இவர் யாரால் சுடப்பட்டார் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும். இலங்கையில் ஊடகவியலாளர்களை கொலை செய்தவர்கள் “இனம் தெரியாத ஆயுததாரிகள்” என்றே காலகாலமாக அழைக்கப்பட்டார்கள். உங்களுடைய “எரியும் நினைவுகள்” ஆவணப்படமானது யாழ்ப்பாண நூலக எரிப்பையும் அதன் அரசியல் பின்னணியும் பதிவு செய்தது. அந்த வகையில் அது ஈழத்தமிழருக்கும் ஒரு அரசியல் ஆவணமே. இந்தியளவில் அந்த ஆவணப் படத்திற்கு எப்படியான வரவேற்பு இருந்தது? அந்த ஆவணப் படம் 2008 இன் ஜூன் ஒன்றாம் திகதி வெளியானது. அந்த காலப்பகுதியில் போரும் உச்சமாக இருந்ததால் அந்த படம் பரவலான கவனத்தைப் பெற்றது. தமிழகத்தில் பரவலாகத் திரையிடப்பட்டது. நான் அப்போதைய நிலையில் அதிக டிவிடிக்கள் விற்பனையான தமிழ் ஆவணப்படமாக அது இருக்கும் என்று நினைக்கிறேன். புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில்தான் இன்னும் அதிகமாக ஆவணப்படங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எரியும் நினைவுகள் ஆவணப்படம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன்-டொச் மொழிகளில் தயாரிக்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் தமிழில் சரிவர புரிந்து கொள்ள முடியாத எங்கள் அடுத்த தலைமுறைக்கும் கூட அது போக வேண்டும். தமிழர் அல்லாதவர்களுக்கும் அது சென்று சேர வேண்டும் என்பதே. அந்த படம் ஜேர்மன், போலந்து, அமெரிக்கா, மலேசியா போன்ற நாடுகளிலும் இந்தியாவின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டது . தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையிடப்பட்டது. அதே போல் கேரளாவிலும் இருபதிற்கும் அதிகமான இடங்களில் அது திரையிடப்பட்டது. எரியும் நினைவுகளைவிடவும் முல்லைதீவு சாகா கேரளாவில் அதிக இடங்களில் திரையிடப்பட்டது. அதற்க்கு காரணம், அந்த படம் புலிகளுக்கு பிரச்சாரம் செய்வதற்காக நான் திரையிடுகிறேன் என்று கேரள உளவுத்துறையை ஆதாரம் காட்டி மாத்ருபூமியில் வந்த முதல் பக்கச் செய்தியும் அதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர் மன்றத்தில் கருத்துரிமைக்கு சார்பாக நிகழ்ந்த போரட்டம் மற்றும் அந்த படத்தை திரையிடுவதற்கு கட்டுப்பாடுகளை கேரள காவல் துறை விதித்ததும்தான். பிறகு அந்தப்படத்திற்கு கேரள திரைப்பட விழாவில் முதலமைச்சரால் விருது வழங்கப்பட்ட போது இந்த நெருக்கடிகள் தளர்ந்து அது பல இடங்களில் திரையிடுவதற்கு வழியேற்பட்டது. அதன் பின்னர் அது இந்தியா முழுவதும் நூற்றுக்கு அதிகமான திரையிடல்களைக் கண்டது. நம் அழிவைக் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எமது அரசியலைக் குறித்து பேசும் வாய்ப்பை அது ஏற்படுத்தியது. முள்ளிவாய்க்கால் போன்றதொரு பேரழிவின் பின்னராக இன்றைக்கிருக்கும் ஈழத்தமிழர் அரசியலின் போதாமைகளை கவனிக்கிறீர்களா? குறிப்பாக தமிழ்தேசியக் கூட்டமைப்பினரின் பரிவு தேடும் மிதவாதம் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுத் தருமா? எதையும் யாரிடமும் இறைஞ்சிப் பெற முடியாது அரசியல் செய்துதான் பெற முடியும். நாம் நமக்கான நீதியையும் அரசியல் தீர்வையும் பெறுவதற்கு எந்த வகையான அரசியலைச் செய்தோம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சீர்தூக்கிப் பார்த்தால்) எங்கட அரசியல் ராஜதந்திரத்தின் வங்குறொத்து நிலை தெரியும். உலகில் போர் நடந்த பல நாடுகளிலும் பிற்போர்காலம் என்பது சீரழிவுகளையும் துயரங்களையும் கொடுத்திருக்கிறது. பல இனக்குழுக்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட நுகர்வுப் பண்பாட்டுக்குள் சிக்குண்ட மக்களாக மாற்றப் பட்ட உதாரணங்கள் வரலாற்றில் நமக்கு முன்னான பாடங்களாக இருந்தன. பல இடங்களில் போர் முடிவு என்பது அரசியல் போராட்டமாகவோ அல்லது அரசியல் தீர்வாகவும் கூட மாறியிருக்கிறது. ஆனால் ஈழத்தின் பிற்போர்காலம் என்பது ஒரு கதம்பமாக கழிந்திருக்கிறது. உலகம் சிறிதளவும் கரிசனம் கொள்ளாத ஒன்றாகவே பிற்போர்க்காலம் இருக்கின்றது. பிற்போர்கால அரசியலை முன்னெடுக்கக் கூடிய தலைமைகள் இல்லாமல் குழப்ப அரசியலே அதிகம் இருந்திருக்கிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஈழத்தில் உள்ள தமிழர்கள், தமிழகத்தில் உள்ளவர்கள், புலம்பெயந்தோர் என மூன்று தளங்களாக பிற்போர்காலத்தில் அரசியலைப் பேச ஆரம்பித்தார்கள். ஈழத்தில் ஒற்றை அரசியல் சக்தியாகவும் , தமிழகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் பல குழுகளாகவும் செயல்பட ஆரம்பித்தனர். காலப் போக்கில் ஈழத்திலும் பல குழுக்களாகப் பிரியத் தொடங்கினர். தமிழகம் பிற்போர்கால ஈழத்தை மறந்து தமிழகத்தின் நெருக்கடிகளை எதிர் கொள்வதை நோக்கித் திரும்பிவிட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் லாபிகளை தாம் வாழும் நாடுகளில் உருவாகுவதன் மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளை போதிய அளவு முன்னெடுக்கவில்லை. மாறாக இலங்கையில் லாபிகளை உருவாக்கி தமக்குத் தோதாக அரசியல் அமைப்புகளை கட்டமைத்து புதிய குழு அரசியலைச் செய்வதும் அதேபோல் புலத்திலும் குழுகளாக பிரிந்து எமக்குள்ளேயே லாபி செய்வதையும் அதிகமாக சிரத்தை எடுத்து முன்னெடுக்கிறார்கள். ஈழத்தில் மிக முக்கியமான 10 ஆண்டு கால பிற்போர்க்காலத்தில் எந்த அரசியல் முன்னேற்றமும் நடைபெறவில்லை. போர் நடந்த போது இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. அதே போல போர் முடிவுறும் நிலையில் ஈழத்தமிழ் அரசியல் தலைமைகளிடம் சர்வதேச சமூகமும் இந்தியாவும் ஈழத்து தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து சில வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது. போருக்கு பிறகு அரசியல் தீர்வுகள் குறித்து எந்த முன்னெடுப்பையும் செய்யவில்லை. ஐநா மனித உரிமை அவையில் சம்பிரதாயச் சடங்காக அறிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டன. ஒரு வேளை உலகின் ஒழுங்கு இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து மாறும் போது அவர்கள் புதிய நாட்டைக்கூடப் பெற்றுக் கொடுக்கலாம். ஆனால் அதற்காக நாம் இலவு காத்த கிளிகளாக ஐநா மனித உரிமை அவை வாசலையே மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பத்தாண்டுகளை சாவகாசமாக இலங்கை அரசு காலம் கடத்துவதற்கே மனித உரிமை அவை உதவியிருக்கிறது. இப்போது மீண்டும் ஒரு சிறு ஓய்வுக்குப் பிறகு ராஜபக்சே வம்சத்திடம் இலங்கையின் அத்தனை அதிகாரங்களும் போயிருக்கிறது அவர்களாகப் பார்த்து ஏதும் செய்தால் உண்டு. இந்த நிலையில் அவர்களோடுதான் திரும்பவும் பேச வேண்டியிருக்கிறது. முறுக்கி கொண்டு நாங்கள் மீண்டும் சண்டையிட்டு பிடித்துவிடலாம் என்பது போன்ற கற்பனைகளில் தமிழ்நாட்டில் சினிமா மனோநிலையில் அரசியல் பேசும் வாய் வீரர்கள் வேண்டுமானால் நினைக்கலாம் நான் நாம் நினைக்க முடியாது. ஆங்… நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி ஏதோ கேட்டீங்கள். தங்களுக்கு அரசியல் செய்வதற்கு கிடைத்த சிறந்த காலமொன்றை அவர்கள் தவறவிட்டு தமிழர்களின் தலைமைக் கட்சியாக தங்களைத் தக்க வைக்கும் அதிகாரப் போட்டியில் அதிக கவனம் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அரசியல் செய்ய தெரிந்த அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள். போர் வாழ்க்கை தொடர்ச்சியாக எழுதப்ட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்னும் ஈழத்தமிழரின் திரைக்கலை முழுத்தீவிரத்தோடு ஆரம்பிக்கவில்லை. நாவல்களும்,சிறுகதைகளும் திரைப்படமாக உருவாக்கப்பட வேண்டுமென நிறைய பேர் என்னிடமே கூறுகிறார்கள்.உங்களுக்கு அது போன்று முழுநீளத் திரைப்படம் இயக்க ஆசை இல்லையா? நான் என்னுடைய முதல் முழு நீளப்படத்திற்கான வேலையில்தான் தற்போது இருக்கிறேன். அது என் மக்களின் கதையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருக்கிறேன். எனது முதல் முழுநீளப்படம் எனக்கு நெருக்கமான கதையாக இருக்க வேண்டும் என்கிற விருப்பு உண்டு. முடிந்தவரை என் நண்பர்களில் படங்களில் திரைக்கதை சார்ந்து வேலை செய்கிறபோது ஈழம் பற்றிய எதாவது ஒரு விசயம் வருவதற்கு முயல்கிறேன். ஈழம் பற்றிய கதைகள் உரையாடல்களில் உள்ள அந்நியத் தன்மை இதன் மூலம் சினிமாவில் இருந்து விலகும். அது தமிழ் வணிக சினிமாவிலும் ஈழக் கதைகள் வரும் காலத்தை உருவாக்கும் 90களில் புலிகளின் நிதர்சனம் விஎச்எஸ் கமெராவில் எடுத்த ”உறங்காத கண்மணிகள்” படம்என்னை இன்றளவும் பாதித்த படங்களில் ஒன்று. வேவு பார்க்கும் போராளிகள் பற்றிய கதைதான். எனக்குத் தெரிந்து அதனைத் திரும்பவும் இண்டைக்கு எடுத்தால் அது வணிக வாய்ப்புள்ள ஒருசாகச சினிமாதான். இதைப் போன்ற பல கதைகள் வணிக வாய்ப்புள்ள சினிமாக்களாக வரும்என நம்புகிறேன். சயந்தனின் ஆறாவடு, குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, தாமரைச்செல்வியின் உயிர்வாசம் என சில நாவல்களும் பல சிறுகதைகளும் படமாக்குவதற்கான வலுவுள்ளஎழுத்துக்கள். நான் பாலுமகேந்திரா சேரோடு பணியாற்றிய காலத்தில் அவர் ஒருமுறை தாமரைச் செல்வியின்ஒரு மழைக்கால இரவு தொகுப்பைக் கொடுத்து தினம் ஒரு சிறுகதைக்கான சினொப்சிஸ்எழுதச் சொன்னார். அப்படி எழுதியதில் இருந்து சில கதைகளை அவர் படமாக்க வாய்ப்புள்ளதுஎன தேர்ந்தெடுத்துச் சொன்னார். அவை அவரின் கைபட்ட திருத்தங்களோடு இன்னமும்என்னிடம் இருக்கிறது. அவருக்கும் கூட ஈழம் பற்றிய கதையைப் படமாக்க வேண்டும் எனஆர்வம் இருந்தது. 80களில் நடந்த புகழ்மிக்க ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்ஒரு கதையும் வைத்திருந்தார். 80களில் பாலுமகேந்திரா சேர் எடுக்க நினைத்த கதையை அவரால் எடுக்க முடியாது போய்விட்டது. ஈழப்பிரச்சனையை மையப்படுத்தி, அல்லது அதனை ஊறுகாயாக தொட்டுக்கொண்ட தமிழ்நாட்டு திரைப்படங்கள் பெரிதும் கற்பனையாக எமது வாழ்க்கையை அணுகியிருக்கின்றன. மேலும் “நந்தா” போன்ற ஆத்மார்த்தமான திரைப்படத்திலும் புரிதலற்ற தன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக படகுகளில் வந்த ஈழ அகதிகள் – தாயகம் திரும்பிய மக்கள் என சுட்டும் ஓரிடம் அந்தப்படத்தில் வருகிறது. இதுபோன்ற சிந்தனைகள் இன்றும் தொடர்கின்றனவா? ஈழம், அங்குள்ள வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றிய புரிதல் குறைபாடு தமிழ் சினிமாவில்இருப்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். நான் இந்தியாவில் சந்தித்த ஒரு காஷ்மீரியிடமோ, வடகிழக்கு இந்தியனிடமோ ஏன் சத்தீஸ்காரிலோ, ஜார்கண்டிலோ இருப்பவனிடமோ கூடபோர்க்கால ஈழ வாழ்வியலை இலகுவில் புரிய வைத்து விடுவேன். ஏனெனில் அவர்கள் மொழியால்வேறாயினும் இராணுவம் சூழ் போராட்ட வாழ்க்கையை வாழ்பவர்கள். தமிழ்நாடு அப்படியல்ல. துப்பாக்கியுடன் வீதியில் பொலிசைப் பார்ப்பதுகூட அரிதிலும் அரிதுதான். தமிழ்நாட்டில்உள்ளவர்களுக்கு போர்க்கால வாழ்வியலைப் புரிய வைப்பது பெரும்பாலும் கடினமாகவேஇருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் நம்முடைய வலிகளோடு உணர்வால் கலந்திருக்கிறார்கள். அவர்களால் நமது வலிகளை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. திரைத் துறையிலும் அவ்வாறுஉணர்வு மேலிட்ட ஏராளமான படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்த போர் திரைப்படங்களின் வழியாக நமது கதைகளைக் கற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஈழப்போரியல் கதைகளைப் படமாக்க வேண்டும் என்கிற விருப்பமும் ஈழ மக்கள் மீதான பற்றும்கொண்டிருக்கிற நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் வணிக சினிமா எல்லைக்குள்ஊறுகாயாக தொட்டுக் கொள்வதைத் தாண்டி அவர்களால் அதிகம் செய்ய முடிவதில்லை. அல்லது பலரும் அந்த ரிஸ்க்கை எடுப்பதில்லை. ஈழத்தில் எப்போதும் வசித்திருக்காத ஒரு முறை கூட அந்த மண்ணிற்கு சென்றிருக்காதவர்கள்எடுக்கக் கூடிய திரைப்படங்களில் குறைபாடுகள் இருப்பது இயல்பானதே. ஈழத்தவர்களுக்கு எனதிரைப்படங்கள் பெருமளவில் இல்லாத போது. ஒரு படத்தைப் பார்த்து அதன் மூலம் அந்தவாழ்க்கையை அறியும் வாய்ப்பு கூட இல்லை. ஈரான், தென்கொரிய வாழ்க்கையை அமெரிக்கவாழ்க்கையை அறிந்த அளவிற்க்கு கூட அவர்களால் ஈழ வாழ்க்கையை அறிய முடியாத நிலைஇருந்தது. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. சமூக ஊடகங்கள் மூலம் பரவும் ஈழம் குறித்த சிலவீடியோக்கள் மற்றும் பல்கிப்பெருகி விட்ட ஈழ எழுத்துகள் மூலம் ஓரளவு ஈழத்துக் கதைகள்படைப்பாளிகளை சென்றடைகிறது. நீங்கள் நத்தா படத்தைப் பற்றிக் கேட்டீர்கள். உண்மையில் தாய் தமிழகம் என்ற சொல்லாடலின்ஊடாக இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள்தான் ஈழத்தமிழர் அல்லது எஸ்பொதமிழில் சொன்னால் தமிழ்ஈழர் என்று சொன்னாலும் தாய் தமிழக உணர்வில் தாயகத்திற்குஅவர்கள் வரவேற்கிறார்கள். நாங்கள் தனித்த பூர்வகுடிகள் என்ற அரசியல் விளிப்புபெரும்பாலான தமிழக தமிழர்களுக்கு இல்லை என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்தானே. ஆனால் சில குறைகளால் மட்டும் வணிக சினிமாவில் வரும் ஈழம் பற்றிய கதையாடல்கள்முழுவதையும் நாம் நிராகரிக்கவோ தூக்கியெறியவோ வேண்டியதில்லை. கன்னத்தில்முத்தமிட்டால் படத்தை அது வெளியான காலத்தில் பார்த்தபோது எரிச்சல் எரிச்சலாக வந்தது. ஆனால் இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்து ஈழம் பற்றிய சினிமாக்கள், நீங்கள் சொல்லுவதுபோல ஊறுகாயாக தொட்டுக்கொண்ட படங்கள், ஈழப் பிரச்சினையை முன் வைத்து எடுக்கப்பட்டஅரசியல் படங்கள் என பல படங்களைப் பார்த்துவிட்ட பிறகு மீண்டும் கன்னத்தில்முத்தமிட்டாலைப் பார்க்கிற போது சில குறைகள் இருந்தாலும் சினிமாவாக அது ஈழக்கதையின்சில காட்சிகளை மனதுக்கு நெருக்கமாக பாதித்திருக்கிறது. இன்றைக்கு ஈழத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நிறைய குறும்டங்கள் எடுக்கப்படுகின்றன. சில குறும்படங்கள் உலகின் மிகப்பெரிய திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டிருக்கின்றன. ஆனால் பெருமளவிலான குறும்படங்கள் தமிழகத் திரைப்படங்களின் பாதிப்பில் உருவாகி இருக்கின்றன. உரையாடல்கள் “பேசப்படுகிறது”, கதைக்கப் படுவதில்லை. இதுபோன்ற சீரற்ற போக்குகளை அவதானிக்கிறீர்களா? நான் சிறுவயதுகளில் சினிமா பார்க்கிற போது எனக்கு ஒரு ஏக்கம் இருந்தது. இந்த படங்களில்எங்கள் ஊர் பாசை வராதா எங்கட ஊரைக் கட்டமாட்டார்களா என்கிற எதிர்பார்ப்பு. சினிமாஎன்கிற ஊடகம் எங்களிடமிருந்து வெகு தொலைவில் இருந்து வருகிற ஒன்று எண்டே எனக்குஎண்ணத் தோன்றும். பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் குருதிஸ் இயக்குனர் ஹினர் சலீம்தனது பால்ய காலத்து அனுபவங்களை எழுதிய “அப்பாவின் துப்பாக்கி” என்ற புத்தகத்தில் இதேபோல அவருக்கும் இருந்த ஆசையை சொல்லியிருப்பார். எப்போதாவது இந்த பெரும் திரையில்விரிகிற கதைகளின் மாந்தர்கள் என்னுடைய குருது மொழியைப் பேச மாட்டார்களா என்று அவர்ஏங்கியிருக்கிறார். பிற்பாடு அவர் புலம்பெயர்ந்து சென்று திரைப்படக் கல்வியைப் பயின்று தனதுகனவை நிறைவேற்றினார். அப்படித்தான் எனக்கும் ஆசை. அந்த ஆசை ஈழத்திலும் புலத்திலும்இருக்கும் பல திரைப் படைப்பாளிகளிடமும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் சினிமா என்றால் அது தமிழ்ச் சினிமாதான். தமிழகத்திற்குஎந்தளவிற்கும் குறைவில்லாத, சில வேளை அதனிலும் சற்று அதிகமான திரைப்பட மோகம் ஈழத்தவர்களிடம் இருக்கிறது. அன்றைய எம்ஜிஆர் சிவாஜியில் இருந்து இன்று விஜய் அஜித்வரைக்கும் கட்டவுட் வைத்து பட ரிலீசை பெருவிழாவாகக் கொண்டாடும் பெரும் ரசிகர்கள்ஈழத்திலும் புலத்திலும் இருக்கிறார்கள். போரும் புலிகளின் நிர்வாகமும் இருந்த போது ஈழத்தில்அது இல்லாமல் இருந்தது. ஆகவே அவர்கள் குறும்படம் என்கிற திரை ஊடகத்தைக் கையில் எடுக்கிற போது அவர்களுக்குத்தெரிந்த சினிமாவைப் “போல” ஒன்றை உருவாக்க முனைக்கிறார்கள். அந்த மொழியையும்பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு சினிமா மொழியென்பது தமிழ்சினிமாவில் பேசும்மொழிதான். ஏன் இப்போது எழுதத் தொடங்கியுள்ள சில எழுத்தாளர்களின் மொழியிலும்கூடத்தான் தமிழக வாடை வருகிறது. புலம்பெயர் மற்றும் இலங்கைத் தொலைக்காட்சிவானொலி பத்திரிகைகளின் மொழியிலும்தான் தமிழ்ச்சினிமா மொழி வருகிறது. குறும்படங்களில்உள்ள இந்த போக்கு படிப்படியாக மாறவும் கூடும். அது ஒரு பக்கம் இருக்க இதில் இருந்துசினிமாவைக் கற்றுக் கொள்ளும் புதியவர்கள் வருங்காலத்தில் நல்ல படங்களை எடுக்கவும்கூடும். உங்களுடை முந்தைய கேள்வியில் கேட்டது போல தமிழகத்தில் ஈழ வாழ்வியலை, அரசியலைசரியாக பதிவு செய்யாததற்க்கு அவர்கள் ஈழ வாழ்க்கையைப் படத்தில் கூட பார்க்கவில்லை. ஆகவே ஈழத்தவர்களின் படங்கள் அந்த வாழ்வியலை பதிவு செய்கிற போது அதனைப் பார்க்கிறதமிழ் திரைப்படப்படைபாளிகளுக்கும் அந்த வாழ்வை திரையினூடே பார்க்கும் வாய்ப்பு கிட்டும். ஈழத்து படைப்பாளிகளாலேயே அந்த வாழ்க்கையை செழுமையாகச் சொல்ல முடியும் என்றுநான் நம்புகிறேன். மலையாளத் திரைப்படங்களில் இருக்கிற “தமிழ்வெறுப்புவாதம்” தமிழகத்தின் எல்லையைக் கடந்து ஈழத்தமிழ் மக்களையும் இழிவுபடுத்தத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் வெளியான மலையாள திரைப்படத்தில் நாயொன்றுக்கு “பிரபாகரா” என பெயர் சூட்டப்பட்டிருப்பது அதில் ஒன்று. இதன் பின்னணியில் இயங்கும் மனநிலை எந்த அரசியலில் இருந்து உருவாகிறது என எண்ணுகிறீர்கள்? தமிழகத்திற்கு வெளியே ஈழ அரசியலை நாட்டு நிலவரங்களை அதிகம் தங்கள் ஊடகங்களில்பதிவு செய்யும் இந்திய மாநிலம் கேரளம்தான். நான் 2007 இல் “மிசன் நைன்றி டேய்ஸ் ” என்றமலையாளப்படத்தில் வேலை செய்தேன். அது ராஜிவ் கொலை பற்றிய படம். மேஜர் ரவி என்கிறமுன்னாள் ராணுவ அதிகாரி இயக்கியபடம். அவர் ஆளவந்தான் திரைப்படத்தில் கமலுடன்நடித்தவர். இப்போது நீங்கள் உங்கள் கேள்வியில் சொல்லியிருக்கும் படத்திலும் கூடசுரேஷ்கோபி நண்பராக நடித்திருக்கிறார். அவர் இந்திய அமைதி காக்கும் படையிலும்இருந்தவர். இயல்பிலேயே மலையாளிகள் ஒன்று காங்கிரஸ்காரர்களாகவோ அல்லது மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்டுகளாகவோ இருப்பார்கள். இருவருமே இந்திய பெரும் தேசியத்தின் அரசியலைபின்புலமாகக் கொண்டு தமது அரசியலைச் செய்பவர்கள் ஆகவே புலிகள் மீதான விமர்சனம்அவர்களுக்கு இருக்கும். ஆனால் இதனை கொண்டு ஒட்டுமொத்த மலையாளப்படைப்பாளிகளையும் பொத்தம் பொதுவாக இனவெறுப்பாளர்களாக சித்தரிப்பதை என்னால்ஏற்றுக் கொள்ள முடியாது. எனக்கு மலையாளப்படைப்பாளிகள் பலரோடு நல்ல பரிச்சயம் உண்டு அவர்களில் பலரும்ஈழப்பிரச்சினை குறித்து கரிசனையான பார்வையைக் கொண்டிருக்கிறார்கள். நான் அங்குள்ளசினிமாவில் வேலை செய்திருக்கிறேன் என்பது மட்டுமல்ல என்னுடைய ஆவணப்படங்களைஅதிகமாகத் திரையிட்டதும் கேரளாவில்தான். எனக்கு கேரளாவில் ஒரு சிக்கல் வந்த போதுஎழுத்தாளர் பால் சாக்கரியா முதலான பல எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும்படைப்பாளிகளுமாக இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். தமிழகத்தில் திரையிடுவதற்கு பலஇடங்களில் அனுமதி மறுக்கப்பட்ட என் படத்திற்கு கேரளத் திரைப்பட விழாவில் அந்த மாநிலமுதலமைச்சர் விருது தந்தார். அந்த படைப்புச் சுதந்திரம் அங்கு இருக்கிறது. ஆகவே எமதுஅரசியலை எமது படைப்புகளின் வழி அவர்களோடு பேசுகிற போது ஈழம் குறித்த சரியானபதிவுகளை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். கேரளா உன்னத சினிமாக்களை எடுக்கவல்லஇடம். எங்கள் கலைஞன் பாலுமகேந்திரா கேரள சினிமாவின் ஊடாகவே அறிமுகமானார். இன்னொன்றையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். 2012 இல் என்று நினைக்கிறேன். கேரளத் திரைப்பட விழாவில் ஐந்து சிங்களத் திரைப்படங்கள் திரையிடப்பட்டதாக நினைவு. சிறிலங்கன் படங்களின் சிறப்புத் தொகுப்பென அந்த படங்கள் திரையிடப்பட்டன. இலங்கைஅரசும் பல வெளிநாடுகளைப் போல அந்த திரைப்பட விழாவின் ஸ்பான்சர்களில் ஒன்றாகஇருந்திருக்க வேண்டும். இப்ப விசயம் என்னவென்றால் திரையிடப்பட்ட பெரும்பாலான படங்கள்இலங்கை அரசு சொல்ல விழைகின்ற சிங்கள மனோநிலையின் திரை வடிவங்களே. இப்ப சொல்லுங்கள். அந்த படங்களை பார்க்கிற பார்வையாளனுக்கு என்ன போய்ச் சேரும். அப்படியெனில் இந்த பத்தாண்டுகளில் இத்தனை பெரிய வணிக வளத்துடன், இந்தியில்பாலிவூட்க்கு அடுத்து உலகம் முழுவதும் வியாபித்துள்ள திரைப்படத்துறையை வைத்திருக்கும்தமிழ் சினிமா என்ன செய்திருக்கிறது என்கிற கேள்வியை வக்கணையாக மறந்து விட்டுவிடுகிறோம். அல்லவா. நான் நாய்க்கு பிரபாகரன் என்று பெயரிட்டு அழைத்ததை நியாயப்படுத்தவில்லை. நான் அந்தபடத்தைப் பார்க்கும் போது எனக்கு பளீர் என்று அந்த இடம் தாக்கியது. அந்த பெயருக்கானமரியாதையை அவர்கள் புரிந்திருக்க வேணும். மக்களின் உணர்வைக் கருத்தில் எடுத்திருக்கவேண்டும். படைப்பாள மனோநிலையில் கேரளத்தை மையமாக வைத்து யோசிக்கப்பட்டகதையில் தெரியாமல் இப்படிப் பெயர் வைத்து விட்டோம் என்கிறார்கள். அது அந்தநோக்கத்தில் வைக்கப்பட்டதில்லை என்று மன்னிப்புக் கோரிவிட்டார்கள். மற்றபடி நானும் பார்த்திருக்கிறேன். தமிழர்களை கிண்டல் செய்வதும் நகையாடுவதும்மலையாள சினிமாவில் இருக்கத்தான் செய்கிறது. அது பழைய சேர சோழ பாண்டியசாம்ராச்சியங்களின் பகையோ என்னவோ. ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டார். அவர் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்த படுகொலைகளை கண்டித்து எழுதியவர் கிடையாது. மாறாக அன்றைய அரசின் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக காட்டமாக எழுதியவர். இதுபோன்ற பத்திரிக்கையாளர் படுகொலைகளுக்கான நீதியைக்கூட சர்வதேச சமூகம் பெற்றுத்தர முன்வரவில்லையே, அதற்கான காரணம் எதுவாக இருக்கும்? முதலில் லசந்த தமிழர்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையை ஆதரித்தவரல்ல. இலங்கை அரசபயங்கரவாதத்தினை வலுவாக எதிர்த்த குரல் அவருடையது. சிவராம் கொலை செய்யப்பட்டபின்னர் நான் லசந்தவைப் பேட்டி கண்டிருந்தேன் ஆகையால் என்னால் இதைச் சொல்லமுடியும். அவர் புலி அதரவாளரோ தமிழீழத் தனி நாட்டுக்கான ஆதரவாளரோ அல்ல. ஆனால்நியாயமான அரசியல் தீர்வுடன் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் உள்ளஇலங்கையை விசுவாசிக்கின்ற சிங்களவர்தான். அவருடைய இறுதி ஆசிரியர் தலையங்கத்தைப்படித்தாலே இது உங்களுக்குப் புரியும். அது இருக்க, சர்வேதசம் என்றால் யார். அது யாரிடமிருந்து நீதியைப் பெற்றுத் தரும். லசந்தவுக்கு முன்னரும் பின்னரும் கூடபத்திரிகையாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் கடத்தப்பட்டும்இருக்கிறார்கள். இலங்கையில் இதுவரை ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளின் காலத்திலும்பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ரிச்சட் டி சொய்சா கொல்லப்படும் போதுஐதேகதான் ஆட்சியில் இருந்தது. அப்போது மகிந்த ஐதேகாவின் அராஜகத்திற்கு எதிராக மனித உரிமை பேசிக் கொண்டிருந்தார். சிவராம் கொல்லப்படும் போது அதிபராக இருந்த சந்திரிக்காதான் மகிந்தவின் ஊடகஒடுக்குமுறை குறித்துப் பேசுகிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திரிக்காவை தந்தை செல்வாநினைவுப் பேருரை ஆற்றுவதற்கு அழைத்த வரலாறெல்லாம் நிகழ்ந்தது. இதுவரையில்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் எவருக்கும் எந்த நீதியும் கிடைக்கவில்லை. காட்டுனிஸ்ட் பிரகீத் எங்கலிய கொட மகிந்த காலத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனார். அவர்கடத்தல் வழக்கை விரைந்து விசாரித்து நீதி வழங்குவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்தரணில்–மைத்திரி கூட்டு தங்கள் நான்கு ஆண்டு ஆட்சியில் ஒன்றையும் வெளிக்கொணரவில்லை. அவரும் தமிழருக்காக காட்டூன் போட்டதற்காக காணாமல் ஆக்கப்படவில்லை. நீங்கள்சொல்லுகிற சர்வதேச சமூகம் நீதியைப் பெற்றுத்தரும் என்றுதான் தமிழர்களும் இலவு காத்தகிளியாக பத்து வருசமாகக் காத்து இருக்கிறார்கள். என்ன ஒன்று சர்வேச அழுத்தங்கள் உருவாகிறபோது மேலும் இது போன்ற கொலைகள்தொடராமல் இருக்க வாய்ப்புள்ளது என்பதைத் தாண்டி நீதி கிடைப்பது என்பதுநாடுகளுக்கிடையிலான அரசியல் ஒழுங்கில் உருவாகும் மாற்றத்திலேயே தங்கியுள்ளது. தமிழ் – முஸ்லிம் உறவானது இன்றைக்கு இன்னும் விரிசலடைந்து இருக்கிறது. தமிழ் மக்களின் சுடுகாடிருக்கும் காணிகளை வன்கவர்ந்து அதற்குள் மசூதி கட்டி, அதனையே தேர்தல் பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டி வாக்குகள் வாங்கும் அளவிற்கு கிழக்கில் இனத்துவேச அரசியல் கொதிக்கிறது. ஆனால் இதனை ஜனநாயக சக்திகள் யாரும் கண்டிப்பதில்லையே ஏன்? தமிழ் முஸ்லிம் உறவு இண்டைக்கு இன்னும் விரிசலடைந்து இருக்கிறது என்கிறீர்கள் அப்படியெண்டால் நேற்று கொஞ்சம் குறைவான விரிசலோடு இருந்தது என்று அர்த்தம். இந்தவிரிசலில் குளிர்காய்வதற்கும் அரசியல் செய்வதற்கும் இரண்டு தரப்பிலும் நிறையபேர்இருக்கிறார்கள். சிங்கள அரசியல்வாதிகளும் கடும்போக்காளர்களும் கூட இதனைத்தான்விரும்புகிறார்கள். எப்படியாவது தமிழ் பேசும் இனங்களைப் பிரித்து எதிர் நிலையில் நிறுத்த வேண்டும் என்பதுஅவர்களின் நீண்டகாலக் கனவு. உங்களுக்கும் தெரிந்திருக்கும். கடந்த வருடத்தில், கல்முனையில் தமிழர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வேண்டும் என்று பெளத்த பிக்குக்கள்உண்ணாவிரதமிருந்தார்கள். சிங்கள கடும்போக்காளர்களின் இனத்துவேசத்தால், இனவாதத்தால்தமக்கென தனிநாடு கேட்டுப் போராடியவர்களை முஸ்லிம் பகுதியில் இருந்து பிரித்து தனியானதமிழ் பிரதேச செயலகம் என்கிற ஒன்றைப் பெறுவதற்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவைத்ததின் மூலம் வெற்றியடைந்தது எந்த தரப்பு என்பதை இரு தமிழ் பேசும் சமூகங்களும்புரிந்து கொள்ள வேண்டும். 1977 தேர்தலில் தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவு வேண்டி தமிழர் விடுதலைக் கூட்டணியின்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னின்ற எம் எச் எம் அஷ்ரப் 80 களின் இறுதியில் முஸ்லிம்களுக்கெனதனி இயக்கம் காணத் தலைப்பட்டதும் தமிழ் இயக்கங்களோடு இணைந்து செயற்பட்ட முஸ்லிம்போராளிகள் அஷ்ரப்புக்குப் பின்னாலும் தனி இஸ்லாமிய அமைப்புகளாகவும் சுருங்கிவிட்டதும்ஏன் நடந்தது என்கிற விசாரணை நமக்குத் தேவை. 80 களில், கிழக்கில் ஏறாவூரில் என் நான்கு வயதில் முஸ்லிம்கள் வீடுகளை எரித்து வருகிறார்கள்என்று குரல் எழுப்பியவாறு தமிழர்கள் ஓட அவர்களோடு நாங்களும் காடுகளை நோக்கி ஓடித்தஞ்சமடைந்த அனுபவத்தில் இருந்து முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் இயக்கங்கள் நிகழ்த்தியபடுகொலைகள் பதிலுக்கு பதிலென முஸ்லிம்களும் அவர்களின் ஊர்காவல் படையினரும்நிகழ்த்திய வன்முறைகள் என கிழக்கில் இந்த விரிசலை அதிகப் படுத்திய நீண்ட வரலாற்றில் என்பதின்மங்களின் அனுபவங்கள் சாட்சி. நான் இங்கே இயக்கங்கள் என்று குறிப்பிடுவது பலருக்குகேள்விகளை எழுப்பலாம். ஏறாவூரில், காத்தான்குடியில், மூதூரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதற்குவிடுதலைப்புலிகள் பொறுப்பாளிகள் ஆனார்கள். ஆனால் அதற்கு முன்னரே 85 வாக்கில்அம்பாரையில் முஸ்லிம்கள் முதன் முதலில் படுகொலை செய்யப்பட்டது ஈபிஆர்எல்எப்தோழர்களால் என்று சொல்லப்பட்டது. இந்த படுகொலைகள் நடந்திருக்கக் கூடாத ஒன்று. தமிழ்பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் புட்டும் தேங்காய்ப் பூவுமாக பிணைந்திருந்த கிழக்கின்ஊர்களில் ஒன்றுதான் ஏறுவூர். அங்குதான் வீடு இழந்து நாங்கள் ஏதிலிகளானதும் நிகழ்ந்தது. அப்போதெல்லாம் நம் நண்பர்களான முஸ்லிம்கள் நம்மை நம்பவைத்து இரணுவத்தோடு சேர்ந்துகழுத்தறுத்து விட்டார்கள் என தோன்றும். ஆனால் பின்னாளில் அரசியல் கற்று வரலாறுபுரிகிறபோதுதான் தமிழர்கள் தரபில் நிகழ்ந்த அரசியல் பிழைகளும் சிங்களர் அரசின் பிரித்தாளும்சூட்சிக்கும் உணர்ச்சி அரசியலுக்கும் பலியான தமிழ் இயக்ககால அரசியலும் விளங்கியது. மற்றும்படி அருகருகே வாழும் இரண்டு இனக்குழுகளின் இயல்பான, சமரசத் தீர்வுகாணக் கூடியபிரச்சினைகளைக் கொம்பு சீவும் எத்தனிப்பில் இருந்து என்னால் இந்த கேள்விக்குப் பதில்சொல்ல முடியாது. உணமைதான் 90 களுக்கு பிறகான அரசியலில் சிங்கள அரசுகளோடு ஒத்தோடத் தொடங்கியமுஸ்லிம் அரசியல் சக்திகள் இன்று அதே சிங்களத்தால் கைவிடப்பட்ட யதார்த்தத்தைப்புரிந்துகொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். இப்போது நாங்கள் அவர்களோடுஅரசியல் பேச வேண்டும் சிண்டு முடியக் கூடாது. ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகத்தை இலங்கைஅரசு கைப்பற்றி விட்டது என்பதால் புளகாங்கிதம் அடைந்து. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகானமுஸ்லிம்களுக்கு எதிரான பொது மனோநிலையால் “பார்ரா என்னை ஒடுக்கும்போது பாத்துக்கொண்டிருந்தாயே, இப்போது பார் உன்னை ஒடுக்கும் போது நான் சிரிக்கிறேன்” என்கிற சிறுசந்தோசம் கொள்ளும் கும்பல் மனோநிலைக்கு மேலும் தூபம் போடுவதன் மூலம் எதையும்செய்ய முடியாது. புலிகள் – ரணில் அமைதி காலத்தில் இரு இன மக்களுக்குமான உறவைப் பலப்படுத்த எடுத்தமுயற்சிகளையும் குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக கெளசல்யன் மட்டக்களப்பு அரசியல்துறைப்பொறுப்பாளராக செயற்பட்ட போது முரண்பாடுகளைக் களைவதற்க்கு முயற்சிகள்எடுக்கப்பட்டது. ஆனால் அது தொடரப்படுவதற்கு முன்னர் அவரும் கொல்லப்பட்டு எல்லாமும்மாறிவிட்டது. முஸ்லிம் ஊர்காவற்படையினர் இலங்கை இராணுவத்துடன் இணைந்து செய்த வன்முறையில் பாதிக்கப்பட்ட அனுபவம் உங்களுக்கிருக்கிறது.ஆனால் இதனைச் சொன்னால் உங்கள் மீதும் “தமிழ் இனவெறியன்”என்ற குற்றச்சாட்டு எழுமே?இன்றைக்கும் முஸ்லிம்களின் “ஒடுக்குதல்”தமிழர்களை நோக்கி இருக்கிறதே? எனது வீடு இஸ்லாமிய ஊர்காவல் படையினரால் சூறையாடப்பட்டது. அவர்கள் சிங்களசிப்பாய்களோடு இணைந்து நடத்திய தாக்குதலுக்குப் பயந்துதான் என் பால்யங்களின்நினைவுகளை காவிக் கொண்டு அந்த ஊரைவிட்டு ஓடினேன் என்பதைச் சொல்வதால் நான் ஏன்இனவெறியன் ஆகப் போகிறேன். ஒருவேளை இதற்க்குப் பதிலடியென விடுதலைப் புலிகள்பள்ளிவாசலில் தொழுகையில் இருந்த அப்பாவி இஸ்லாமியர்களை கொன்று குவித்ததை நான்ஆதரித்தால் என்னை நீங்கள் தமிழ் இனவெறியன் என்று சொல்லலாம். நீங்கள் இந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இலங்கை வரலாற்றில்முதல் தடவையாக இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் ஏதும் இல்லாத அமைச்சரவை ஒன்றுபதவியில் இருக்கிறது. இஸ்லாமிய வெறுப்புவாதம் அதாவது இஸ்லாமோபியா வலுவாக உள்ளது. ஆகவே, இன்றைக்கும் முஸ்லிம்களின் ஒடுக்குதல் இருக்கிறது என்கிற உங்கள் கேள்வியில் உள்ள “ஒடுக்குதல்” என்பதன் அர்த்தம் வலுவற்றது. ஏனெனில் சிங்கள இனவாத அரசு தமிழர்களை ஒடுக்குகிறது என்று சொல்கிற அதே”ஒடுக்குமுறை” என்ற சொற்பிரயோகத்தை நீங்கள் இந்த இடத்தில் பயன்படுத்துவதை என்னால்ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் கிழக்கில் இருப்பது ஒருவகைப்பங்காளிச் சண்டைதான். பெரும்பாலான இந்தக் குடும்பச் சண்டைகள் தவறான புரிதல்களால்மேலும் கூர்மைப் படுத்தப் படுபவை. ஆகவே பேசித்தீர்க்க கூடிய பிரச்சனைதான். இந்த பங்காளிச் சண்டையை கூர்மைப்படுத்த பெளத்த கடும்போக்கு அமைப்பானபொதுபலசேனாவும் கிழக்கில் புதிதாக உருவெடுக்கும் இந்துத்துவ பின்புலத்தில் இயங்கும்செயற்பாட்டாளர்களும் ஒரு புறம் முனைப்பாக இருக்க வகாபிச கடும் பிற்போக்கு இஸ்லாமியசக்திகள் மறுபுறமும் உள்ளன. நான் சிறுவனாக இருக்கும் போது இஸ்லாமியருக்கும் ஏனையதமிழர்களுக்கும் இடையில் பெரிய வித்தியசங்கள் எதுவும் இருந்ததில்லை. ஆனால் காலப் போக்கில் ஒரு அன்னியத் தன்மை உருவக்கப்பட்டுவிட்டது. அரேபிய பேரிச்சைமரங்களை அரேபியாவில் இருந்து தருவித்து காத்தான் குடியில் நட்டதும் தமிழ் மட்டுமே தெரிந்தமுஸ்லிம் ஊர்களில் அரேபிய எழுத்துகளில் தெருப்பெயர்களையும் விளம்பர தட்டிகளையும்வைக்க ஆரம்பித்ததும் இந்த அன்னியத் தன்மையை வெளிப்படையாக்கி விட்டது. மட்டக்களப்பில்வருசத்திற்கு ஒருகால் கதவு திறந்து கலையாடி சாராயம் படைத்து பலியிட்டு குளிர்வித்துப் பாடி, சடங்கு முடிந்து நேர்த்திக்கு வந்த கோழி,ஆடுகளை ஏலத்தில் எடுத்து ஆக்கித் தின்பதோடுமுடியும் மக்கள் வழிபாட்டிடங்கள் பலவும் இப்போது ஆறுகாலப் பூசையும் புரியாத சமஸ்கிருதமந்திரமும் பிராமணக் குருக்களும் என்று மாறிவிட்டதைப் போலத்தான் முஸ்லிம்களும் புரியாதஅரபிக்குள் என்றும் சொல்லலாம். இவை இரண்டுமே மத காலனியாதிக்கம் தானே. தமிழீழ விடுதலைப் புலிகளை வெறுமென இராணுவவாத கண்ணோட்ட மிக்க இயக்கமாக சித்தரிக்கும் போக்குகளை தமிழ்நாட்டில் சில இடதுசாரிகள் முன்னெடுத்து வருகின்றனர். அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதற்கும் மேலாக தமிழ்தேசியம் என்பதே வெள்ளாளத்தேசியம் என்கிறார்களே? அவர்கள் தமிழ் தேசியம் என்றா சொல்கிறார்கள்? இல்லை புலித்தேசியம் என்கிறார்களா? தமிழ்நாட்டின் சில இடதுசாரிகள் ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈபிஆர் எல் எவ்) இயக்கத்தைமார்க்சிய இயக்கம் என்று எப்படி நம்புகிறார்களோ அப்படியே புலிகளையும் வெறும் இராணுவக்கண்ணோட்டமுடைய இயக்கம் என நம்புகிறார்கள். ஆயுதப்போராட்ட இயக்கங்களின் காலத்திற்கு முன்னர் இலங்கை விடுதலை பெற்ற பின்னர்உருவான தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அதிகம் மேட்டுக்குடி வெள்ளாள தலைமைகளைமையப்படுத்தியே இருந்தது. அதே காலப்பகுதியில் தமிழரசின் இனவிடுதலை கருத்தியலைமுன்னெடுக்காமல் வர்க்க அரசியல் பேசிய இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கும்தமிழர்களிடமிருந்தது. சாதிய அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்கள் இடதுசாரி இயக்கங்களால்முன்னெடுக்கப்பட்டது. அதில் முக்கியமானவர் தோழர் சண்முகதாசன். இலங்கையில் முதல்ஆயுதப் புரட்சியைச் செய்த ஜேவிபியின் ரோகன விஜயவீர சண்முக்தாசன் முகாமில் இருந்தவரே. பாரளுமன்ற அரசியலை நிராகரித்து இளைஞர்கள் எழுச்சிகொள்ள வேண்டுமென ஒலித்த முதல்குரலாக சண்முகதாசனின் குரலைக் கொள்ள முடியும். ஆயுதப் போராட்ட இயக்கங்கள்தோற்றம் பெற்ற போது தமிழ் இடதுசாரிகள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வர்க்க விடுதலைஎன்கிற தங்கள் எண்ணத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிர்பந்தத்தை சிங்கள இனவாதம்உருவாகியது. சண்முகதாசனே தனது இறுதிக்காலத்தில் தாயகப் போராட்டத்தை ஆதரிக்கும் மனோநிலைக்குவந்திருந்தார். அதே போலத்தான் இடதுசாரிகள் பலரும் ஈழவிடுதலைப் போராட்டத்தில்இணைந்தனர். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராக இருந்தபுதுவை இரத்தினதுரையும் அப்படி இடதுசாரி இயக்கத்தில் இருந்து வந்தவர்தான். இதிலே வெள்ளாளத் தேசியம் என்ற கண்டுபிடிப்பு எப்படியெனத் தெரியவில்லை. 90களில்புலிகள் வீதிகளுக்குப் போராளிகளின் பெயர்களை வைத்த போது எங்கள் ஊரில் வெள்ளாளர்கள்90(%) வீதத்திற்கும் சற்று அதிகமாகவே உள்ள ஒரு தெருவிற்கு ஒரு நல்லவர் பிரிவைச் சேர்ந்த பெயரைப் புலிகள் சூட்டினர். யாழ்ப்பாணச் சாதிய சனாதன அமைப்பினை உடைத்துநிகழ்த்தப்பட்ட மாற்றம்தான் இது. புலிகளின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தபெரும்பான்மையினர் வெள்ளாளர் அல்லாதோரே. தமிழகத்தில் பிராமணர் போல இலங்கையில் வெள்ளாளர் அளவில் சிறியவர்கள் அல்ல. மற்றையஅனைத்துச் சாதிகளையும் விட வெள்ளாளரே அதிகம். அதாவது 60(%) வீதத்திற்கும் மேல். ஆனாலும் புலிகளின் தலைமைப் பொறுப்புகளில் இந்த சாதி விகிதாச்சாரமெல்லாம்இருந்ததில்லை. ஆனால் புலிகளை வெள்ளாளச் சாதிய அமைப்பாக முன்னிறுத்துகிற போக்கு 90களில் அ.மார்க்ஸ்போன்றவர்களால் தமிழகத்தில் உருவாகியது. இதேகாலப் பகுதியிலேயே புலம்பெயர்ந்தநாடுகளிலும், வெள்ளாள நலன்சார் அரசியலை முன்னெடுக்கும் அமைப்பாக புலிகளைநிறுவுவதற்கு முயற்சிகள் நடந்தன. 60களில் தமிழரசுக் கட்சி மீது இருந்த விமர்சனத்தைபுலிகள் மீது வைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றே கருதுகிறேன். ஈபிஆர் எல் எவ் இயக்கத்தின் முக்கியஸ்தரும் ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலசெயற்பாட்டாளரும் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் நூலை எழுதியவருமானபுஸ்ராஜாவை, அவர் இறப்பதற்கு சிறிது காலம் முன்பு ஒரு நீண்ட பேட்டி கண்டேன். அந்தப்பேட்டியில் இயக்கங்களில் சாதியம் பாற்றி பேசியபோது அவர் சொன்னார். “ஈழத்தில் உருவானஇயக்கத் தலைவர்களிலேயே வெள்ளாளர் அல்லாத சாதியைச் சேர்ந்த ஒரே தலைவர் பிரபாகரன்மட்டும்தான். அத்தோடு, நாங்கள் அனைவரும் கட்டமைக்க கனவு கண்ட ஒரு இராணுவ பலமிக்கஇயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்” என்றார். சரி அது இருக்க, ஒரு சம்பவத்தை மட்டும் சொல்கிறேன். 2002 இல் விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் ஈழம், தமிழகம், தமிழ், முஸ்லிம், சிங்களம் எனஅனைவரும் இணைந்த “மானுடத்தின் தமிழ்கூடல் “என்ற மாநாடு நடந்தது. அதில்தமிழகத்திலிருந்து வந்து கலந்துகொண்ட தொல்.திருமாவளவன் அவர்கள் தனது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது இனஒடுக்குமுறைக்கு எதிரானது மட்டும் தானா என்று கேள்வி எழுப்பியதன் பின்னால் ஈழத்துச் சாதியம் தொடர்பாக புலிகளின் நிலைப்பாட்டை அறிய முற்பட்டார். நாவலர் வழிவந்த சைவமும் அந்த சைவம் பாதுகாக்கும் யாழ்ப்பாண வெள்ளாளக் கட்டமைப்பும்அவரின் இந்த கேள்விக்கான பின்புலமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். ஆனால் அதே மேடையில் புலிகளால் ஒரு பிரகடனம் பதிலாகச் சொல்லப்பட்டது. அதுவே இந்தக் கூற்று. “ஈழப்போராட்டம் இனவிடுதலைப் போராட்டம் மட்டுமல்ல அது சாதிய, வர்க்க, பால்பேதங்களைக் கடந்த மானுட விடுதலை போராட்டம்” போருக்கு பிறகான ஈழத்தில் கிறிஸ்தவ மதமாற்ற சபைகள் உருவெடுத்து, போரில் பாதிக்கப்பட்ட சனங்களை மூளைச்சலவை செய்துவருகின்றனவே, இது பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? உண்மைதான் புற்றீசல் போல நிறையச் சபைகளை போர் தின்ற பூமியெங்கும் காணமுடிகிறது. எப்படி புதிய அய்யப்பன் கோயில்களும் கல்கிபகவான் முதல் கொண்டு இந்தியாவில் உள்ள எல்லாச் சாமியர்களுக்கும் மடங்களும் நிலையங்களும் உருவாக்கப்படுகிறதோ அப்படி நாம் இதுவரை கேள்விப்படாத பெயர்களில் எல்லாம் கிறிஸ்தவ சபைகள் அங்கே உள்ளது. எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் எங்கே போவார்கள். அவர்களுக்கு அருகே வந்து ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளை யார் சொல்கிறார்களோ அவர்களைத் தஞ்சமடைவார்கள். மனதளவிலும் பொருளாதார வலுவிலும் தளர்ந்து கைவிடப்பட்ட நிலையில் உள்ள மக்களை இத்தகைய மத நிறுவனங்கள் இலகுவில் வசியப்படுத்திவிடுகின்றன. இது அவர்களுக்கு ஒரு வியாபாரம். பாவப்பட்ட மக்களை வைத்து அரசியல் வியாபாரமும்,மத வியாபாரமும் நடப்பது ரகசியமானதல்லவே. காணாமல் போன மகன் இத்தனையாம் திகதி உங்களிட்ட வருவான் என்று சொல்லும் சோதிடரை நம்பிக் காசை செலவழித்து, அந்த நம்பிக்கையின் தைரியத்தில் வாழும் தாய்களும், உறவுகளும் வாழும் மண் அது. ஒரு வேளை பழையகடவுள் கைவிட்டுவிட்டார் என புதிய கடவுளர்களைத் தேடியும் அவர்கள் இந்த சபைகளில் விழக் கூடும். பழைய அரசியல்வாதி சரியில்லை என புதிய அரசியல்வாதி நாந்தான் மீட்பர் எனக் குதிப்பது போலத்தான் இதுவும். ஆனால் அதற்காக இந்திய இந்துத்துவ கருத்தியல்களோடு குதித்துள்ள இந்துத்துவ அமைப்புகள் வடக்கில் உருவாக்க முனையும் மதப் பதற்ற நிலை ஆபத்தானது. உங்கள் அரசியல் கொள்கை குறித்து விளக்க முடியுமா? என் பால்ய காலத்தில் இருந்து பயிற்றுவிக்கப்பட்ட இன உணர்வும் விடுதலை வேட்கையும்அத்தனை சீக்கிரத்தில் மறைந்து போகக் கூடியதல்ல. ஆனால் அதற்காக கொடுக்கப்பட்டவிலை மிக அதிகம். போரை நான் துளியும் விரும்பவில்லை. கடந்த பத்தாண்டுகளில் தாயகத்திலும்வெளியேயும் நான் சந்தித்த மனிதர்கள் கேட்ட கதைகள் பார்த்த அவஸ்தைகள் எல்லாம் என்னைஅழுத்திக் கொண்டே இருக்கிறது. பகமை எல்லாவற்றையும் அழித்துவிடும். அன்பும் அறவழியுமேசேதாரம் குறைந்த விடுதலைப்பயணம். ஈழத்துக்கும் இப்போது அதுவே அவசியம். மானுட விடுதலையும் சமத்துவமும் தனிமனிதனின் வாழ்வுரிமையும் சுய மரியாதையும் மதிக்கப்படவேண்டும். என் முதல் ஆவணப்படம் போபால் மக்களுக்கு எதிரான அநீதியைப் பற்றியது. அந்தஊர் எங்கிருக்கிறது என்றுகூட சரியாகத் தெரியாத ஈழத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துவந்தவன் நான். 1984 இல் விசவாயு கசிந்து இறந்த அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகளை காப்பாற்றிய காங்கிரஸ் அரசு 2004 இல் அதே குற்றவாளிகளோடு புதியஒப்பந்தத்தைப் போட்டது. 20 ஆண்டுகளில் நச்சு வாயுவின் தாக்கம் அந்த மக்களின் அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்தது. குற்றவாளியான அந்த நிறுவனம் புதிய காப்பிரேட் நிறுவனத்தின் பெயரோடு மீண்டும்இந்தியாவுக்குள் நுழைந்தது. போர்குற்றம் மட்டுமல்ல கார்ப்பரேட்டுகள் நிகழ்த்தும் குற்றங்களும் அத்தகையதுதான். ஈழத்தில் போரின் வடுக்களை தலைமுறைகள் கடந்தும் உடலிலும் மனதிலும்தாங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வலியும் இந்த மக்களின் வலியும் வேறானதல்ல. இப்போது என் அரசியல் கொள்கை உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். வியாபாரத்திற்காக எல்லைக் கோடுகளைத் தகர்த்தும், அரசியலுக்காக மேலும் மேலும் சுருங்கிக்கொண்டும், வெறுப்புணர்வை வளர்த்தும் வருகிற பெரும்பான்மையினரின் விருப்பங்களுக்காகசிறுபான்மையினரின் உரிமைகளை நசுக்கும் அரசியலுக்கு எதிர் அரசியல் எதுவோ அதுவே எனதுஅரசியலும். இன்றைய காலகட்டத்தில் ஈழப்போராட்டம் தேக்கம் அடைந்திருப்பதாக ஒரு கருத்துண்டு.என்.ஜி.ஓக்களின் அரசியல் அதிகரித்திருக்கிறது. அவர்கள் இதுபோன்ற கருத்துக்களை உருவாக்குகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ஜிஓகளின் அரசியல்தானே இன்று உலகம் முழுவதையும் வியாபித்துள்ளது. அவை உருவாக்கும் கருத்தியல்தானே உலகநாடுகளின் கொள்கைகளாகவும் திட்டங்களாகவும் உருமாறுகிறது. நமது உணவில் இருந்து மருந்துகள், தடுப்பூசிகள் வரை நமது பண்பாடு விவசாயம் எல்லாவற்றையும் அவைதான் முடிவு செய்கிறது. இந்த என் ஜி ஓ லாபி இலங்கை இனச்சிக்கலில் மட்டும் எப்படி இல்லாது போகும். எந்த ஒரு இனமும் தமக்கான தனித்துவத்தைப் பேணமுடியாத தங்கி வாழும் கைப்பாவைகளாக மனித உயிரிகள் உருமாற்றப்படுகின்றது. உதாரணமாக 20 ஆண்டுகள் கடும் பொருளாதாரத் தடைகளை எதிர் கொண்ட போதும், தற்சார்ப்பு பொருளாதார அமைப்பு முறையால் தாக்குப்பிடித்து நின்றது புலிகளின் போராட்டம். எதுவுமே வெளியில் இருந்து வராவிட்டாலும் வாழமுடியும் என்ற நிலை இருந்தது ஆனால் இன்று கொரொனா ஊரடங்குக்கே பதட்டமாகும் நுகர்வுநிலையில் இருக்கிறோம். போர் முடிந்த கையோடு நடந்த முதல் அழிப்பு இந்த தற்சார்பு கட்டமைப்புத்தான். செயற்கை உரங்களாலும் மருந்துகளாலும் பாழ்படாத வன்னி நிலத்தில் வகைதொகையின்றி கிருமிநாசினிக்கடைகளையும் விதைக் கடைகளையும் ஆரம்பித்ததுடன் தொடங்குகிறது புதிய யுத்தம். சரி வேறு பதிலுக்காக கேட்ட கேள்விக்கு நான் இந்த பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஈழப்போராட்டத்தின் கடந்த அத்தியாயம் ஆயுதங்கள் மவுனிக்கப்பட்டதாக அறிவுப்புவெளியிடப்பட்ட போதே முடிவுக்கு வந்துவிட்டது. அதில் இருந்து இன்னொரு போராட்ட வடிவம்முகிழ்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. The Battle of Algiers என்றபடம் அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் பற்றியது 1966இல் வெளியானது. அன்ரன் பாலசிங்கம்தமிழ்படுத்தலில் புலிகளே தொண்ணுறுகளில் அந்த படத்தை திரையிட்டதாகச் சொல்கிறார்கள். அந்த படத்தின் இறுதிக் காட்சிகளைச் சொல்கிறேன். அல்ஜீரிய விடுதலைப் போராட்டக் குழுவின் தலைவரை பிரன்ஞ்சுப் படைகள் முன்னரேகொன்றுவிடும். இறுதியில் அந்த போராட்ட இயக்கத்தின் தளபதியை ஆயிரக் கணக்கானோர்வாழும் குடியிருப்புக்குள் வைத்து இராணுவம் சுற்றிவளைத்துவிடும். சரணடையச் சொல்லிஇராணுவம் அறிவிக்கும். வீடுகளில் இருந்த பொதுமக்கள் அனைவரும் வெளியேறுவர்.அந்தமக்கள், தங்கள் ஆயுதப் போராட்டத்தின் இறுதித் தளபதியின் விரும்பாத முடிவை துயரத்தோடுபார்த்துக் கொண்டிருப்பர். தளபதி இருந்த வீடு குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. அத்தோடு முடிந்தது அவர்கள் போராட்டம் என்று நினைத்த ஆக்கிரமிப்பாளர்களைத்தூங்கவிடாமல் செய்தது அந்த மக்களின் எழுச்சி. மக்கள் வீதிகளுக்கு வந்தார்கள். இரண்டுஆண்டுகள் கழித்து அவர்கள் விடுதலை பெற்றபோதுதான் வீட்டுக்குத் திரும்பினார்கள். அவர்களின் ஆயுதப் போராட்டம் மவுனித்த போது அது வேறு வடிவங் கொண்டது. 90களில்புலிகள் இந்தப் படத்தை திரையிடும்போது என்ன நினைத்திருந்தார்களோ தெரியவில்லைஆனால் 2009இற்க்கு பிறகு அப்படியெதுவும் நிகழவில்லை என்பது கண்கூடு. தமிழகத்தின் சில வாய்ச்சொல் வீரர்களின் புரூடாக்களையும், ஈழத்து அரசியல் தலைவர்களின் காலம் கடத்தும் வாக்குறுதிகளையும் தானே நாங்கள் பத்தாண்டுகளில் கடந்திருக்கிறோம். ஆகவே இது தேக்க நிலை என்று நீங்கள் சொல்லுகிற என் ஜி ஓ க்கள் சொல்லக் கூடும். *** http://www.yaavarum.com/archives/5646
 2. ‘இரத்தத்தின் கதை’-கதை 03 -‘இடப்பெயர்வு’-போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன் ஓவியம் : டிசாந்தினி நடராசா கிறவல் வீதியில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது உழவு இயந்திரம். பள்ளங்கள் நிறைந்த வீதிமீது இயந் திரத்தை மிகக் கவனமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அதன் சாரதி. உழவு இயந்திரத்தின் முன்பாகவும் பின்பாகவும் வேறுசில வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. பெட்டியின் இருபக்கவாட்டிலும் மக்கள் தங்கள் மிதிவண்டிகளில் நகர்ந்தவண்ணமிருந்தனர். காற்று கிறவல்வீதியின் செம்மண் புழுதியை பாரபட்சமின்றி எல்லோர் மீதும் வாரியிறைத்தபடி தன் பாட்டுக்கு வீசியபடியிருந்தது. மதியம் கடந்த பொழுதாயினும், வெயிலின் தாக்கம் குறையாத நேரம் அது. உழவு இயந்திரப்பெட்டியின்மேல் பொருள்களோடு பொருள்களாக சிவத்தாரும் அவரது மனைவியும் அமர்ந்திருந்தார்கள். உழவு இயந்திரம் ஓடிக்கொண்டிருந்தது. ‘போக்கறுந்து போவார்… நாசமறுப்பார்… ‘ தமிழீழம்’ எண்டு போராட வெளிக்கிட்டு, இப்படியே தெருத்தெருவா நாயாபேயா அலைய வேண்டிக் கிடக்குது…’ வார்த்தைகள் அவருக்குள் குமுறுகின்றன. அவற்றை வெளியே கொட்டப் பயந்தவர் அப்படியே தன்னுள் அடக்கிக் கொண்டார். வாழ்க்கையில் இயலாமைகளில் எழும் மன அவதிகளோடு, உடல் அசெளகரியப்படும் பொழுதுகளில் இப்படியான வார்த்தைகள் அவருள் பீறிட்டு எழும். ஆனால், வெளியே உரைத்து விடுவதற்கு உள்ளூர எழுந்து நிற்கும் அச்சம் அவரைத் தடுத்து விடும். சிவத்தாருக்கு இது நான்காவது இடப்பெயர்வு! அவரால் தாக்குப்பிடிக்க முடியவிவில்லை. ‘மன்னாரில் இருந்து சிங்கள இராணுவம் வெளியேறிவிட்டது…’ என்ற செய்தி பரவலானபோது, அவர் அது குறித்து அச்சப்படவில்லை. அலட்சியப்படுத்தினார். ‘உதுகள்(புலிகள்) விடாதுகள். எப்பிடியும் அடிச்சுக் கலைச்சு உள்ளுக்கை தள்ளிப் போடுங்கள்…’ என்றுதான் நினைத்தார். அவரது கணிப்பீடு ஒரு வாரம் கழியத் தவறாகி விட்டது. அவருக்கு மனம் இருப்புக் கொள்ள வில்லை. தகிப்பும் தவிப்புமான இருமன நிலை உணர்வு அவருக்குள் எழுந்தவண்ணமிருந்தது. நகரின் மத்தியில் பிரபலமான பல்பொருள் வாணிபம், ஊரின் ஒதுக்குப் புறத்தில் அரிசி ஆலை. அதனோடிணைந்த தோட்டவெளி என்று எல்லாவற்ருக்கும் உரித்துடையவர். அவரது அதிகார ஆளுமையின் கீழ் பல தொழிலாளிகள் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். ஆலை மற்றும் வாணிபக்கடையில் ஊர் இளைஞர்கள் இருவருடன், மலையகத்தைச் சேர்ந்தவர்களும் வேலை செய்தார்கள். தோட்டவேலைகளுக்கு மட்டும் சமூகத்தில் பின்நிலைப்படுத்தப்பட்டவர்களும் சாதிரீதியில் குறைவானவர்கள் என்று கூறப்படுவோரும் நாள்கூலிகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். தனக்கான சுயகெளரவத்தோடு கூடிய எந்தவொருவிடயத்திலும் தனக்குக் கீழே பணிபுரியும் தொழிலாளர்கள் வரம்புமீறாதபடிக்கு அவர்களை அந்தந்த நிலைகளில் வைத்து வேலையை வாங்கினார் சிவத்தார். காரணம், அவர் தன்னை எப்பொழுதும் ஓர் உயர்சாதிமானாக உருவகப்படுத்தி வாழ்பவர். ‘ காசுக்காரன்’ ,’வெள்ளாமாள்’… என்ற அடைமொழி அவரது பெயருக்கு முன்பாக நிமிர்ந்து நகர்ந்து போனாலும், புலிப்பொடியள் பலருக்கு மத்தியில் சில நேரங்களில் சில இடங்களில் பணிந்து குனிந்து அடங்கிப்போக வேண்டியிருந்தது. இது குறித்து அவர் தனக்குள் குமையாத நாள்களே இல்லை. பொதுவெளிக்குத் தெரியாமல் தன் மூலதனத்தை விரிவாக்கம் செய்து கொண்டிருந்ததன் நிமித்தம், சேரும் பணத்திற்கும் சாதித்தடிப்புக்கும் ‘ பொடியள்’ எடுபடாமல்போவது அவருக்கு உளரீதியான தாக்கத்தை உண்டுபண்ணிக் கொண்டிருந்தது. அவர் தனது வருமானத்தை ஒரு மந்தநிலைபோல் மற்றவர்களின் பார்வைக்குக் காட்டிக் கொண்டாலும், அவரது செயல்பாடுகள் குறித்த தகவல்கள், அமைப்பின் மேலிடத்துக்கு சென்றவண்ணமே இருந்தன. பொடியள் அடிக்கடிவந்து நிதி கேட்பது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் ‘ பஞ்சப்பாட்டு’ பாடினார். நாளடைவில் ‘ஒப்பாரிஓலம்’ ஓதத் தொடங்கினார். பொடியளும் விடவில்லை. மறைமுக கண்காணிப்புடன் அவரைப் பின்தொடர்ந்தவண்ணமே இருந்தனர். சிவத்தாருக்கு புலிகள் இயக்கம்மீது வெறுப்பு வந்துவிட்டது. ‘ வரி’ எனும் பெயரில் நிதி வசூலித்து, உடம்பு நோகாமல் பணம் சேர்ப்பதை அவர் தனக்குள் ஒரு கெளரவப் பிரச்சினையாகவே பார்த்தார். இதன் நிமித்தம் அவருக்குள் மெல்ல வளரத் தொடங்கியது பகையுணர்வு. ‘தூத்தேறிக் கூட்டங்கள்… உதுகள் எண்டைக்கு இந்த மண்ணைவிட்டுத் துலையுதுகளோ… அண்டைக்குத்தான் எங்களுக்கு நிம்மதி…’ என்று அவர் தனக்குள் சாபம்போட ஆரம்பித்தார். ஒருதடவை தனது தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரை வேலையில் பிழைகண்டு பிடித்ததன் நிமித்தம், பேச்சோடு பேச்சாக அவரைப் பார்த்து அவரது சாதியத்தைக்கூறிப் பேசிவிட்டார். ஆனால், அவரோ மாவீரர் குடும்பம். தனது மூன்று பிள்ளைகளை விடுதலைப் போருக்கு ஆகுதியாக்கினவர். அவர் நேரே தனது பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் சென்றார். பொறுப்பாளர் இந்த விடயத்தை தலைமைச் செயலகத் திடம் பாரப்படுத்தினார். விசாரணைக்கு வரும்படி சிவத்தாருக்கு அழைப்புக் கட்டளை வந்தது. சாதித்தடிப்பும் மிதமிஞ்சிய பணமும் விசாரணை தன்னை என்ன செய்துவிட முடியும்…? என்ற திமிர் அவருக்குள் ஊறியிருந்தது. ‘காசுக்காக தங்களைப் போன்ற முதலாளிகளை நம்பித்தானே புலிகள் அமைப்பு இருக்கிறது.’ என்ற மனவோட்டம் அவரிடமிருந்தது. ‘எப்படியும் அவர்கள் தன்னிடம் வரத்தானே வேண்டும்.’ எனும் நினைப்பும் இருந்தது. இதன்நிமித்தம் அவர் விசாரணைக்குப் போனார். சாதியிலூறிய பணத்தடிப்பு அவரது சுயபுத்தியை பலவீனமடையச் செய்திருந்தது. “ஓம்… நான் சொன்னனான்தான். ‘**ப்பொறுக்கி’ எண்டு சொன்னனான்தான். அதுக்கிப்ப என்ன?” சிவத்தாரின் தடிப்புக் குணம் ஏற்படப்போகும் பின்விளைவுகளைப் பற்றி யோசிக்க விடவில்லை. பொறுப்பாளர் எதுவும் கூறவில்லை. முறைப்பாடு கொடுத்தவரை வீடு செல்லும்படி பணித்தார். சிவத்தாருக்கு மூன்றுமாதங்கள் அமைப்பின் கோழிப்பண்ணையில் வேலை செய்யுமாறு ‘பணிஷ்மன்’ வழங்கப்பட்டது. சிவத்தாரால் அந்தத் தண்டனையை ஏற்கவும் முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்கவும் தெரியவில்லை. தண்டனை முடிந்து வெளியே வந்த பின்பும் அவருக்குள் இருந்த அந்தத் ‘தடிப்பு’ இருந்ததைவிட மேலும் திமிறத் தொடங்கியது. “வீட்டுக்கொருவர் நாட்டுக்காக விரைந்து வாரீர்…” என்ற பிரசாரத்தை அமைப்பின் பரப்புரையினர் முன்னெடுத்தபோது, பணத்தைச் செலவழித்து ‘ஏதோ ஒருவழியில்’ அவர் தனது இரண்டு மகன்களையும் ஒரேமகளையும் மன்னார் – இராமேஸ்வரக் கடல்பாதையூடாக அந்நிய தேசத்திற்கு அனுப்பி விட்டார். பிள்ளைகள் பத்திரமாகப் போய்சேர்ந்து விட்டபோதிலும், அவர்களால் தனக்கும் தன்மனைவிக்கும் செய்யவேண்டிய அந்திமகால காரியங்கள் குறித்து மனம் கவலைப்படவே செய்தது. வன்னிப்பெருநிலப்பரப்பினுள் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. துக்கரமான பலநிகழ்வுகளும் ஆங்காங்கே நடைபெற்றவண்ணமிருந்தன. வீரச்சாவுகள், விமானத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களின் உடல்கள், உடைமைகள் சேதாரமாகின. எங்கும் ஒரே இழவுகளாகக் காட்சியளித்துக்கொண்டிருந்தது வன்னிப் பெருநிலப்பரப்பு. மண்ணில் நிகழும் அவலங்களைப் பார்த்த சிவத்தாருக்கு எதையும் நம்பமுடியவில்லை. நாளுக்குநாள் ஏற்பட்டுவரும் அசாதாரண சூழ்நிலைகள் அவருக்கு எதுவும் புரிபடுவதாக இல்லை. ஏன் இப்படிப் போகிறது…? இயக்கத்துக்குள் என்ன நடக்கிறது…? என்பது குறித்து பொதுமக்களைப் போன்றே அவருக்குள்ளும் பலத்த சந் தேகங்கள் எழுந்தன. புலிகள் தமது போராட்டத்துக்கான ஆள்பற்றாக்குறையைப் போக்குவதற்கு பொதுமக்களைப் பங்களிப்புச் செய்யுமாறு கோரியபோது, மேட்டுக் குடிவர்க்கமும், நடுத்தரவர்க்கத்தில் பெரும்பாலானவர்களும் ‘கள்ளமெளனம்’ காத்தார்கள். தாழ்நிலை வர்க்கத்திலிருந்தே பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தங்கள் பங்களிப்பைச் செய்ய முன்வந்தனர். இது புலிகள் அமைப்பின் தலைமைப்பீடத்துக்கு சற்று நெருடலைக் கொடுத்திருக்க வேண்டும். ‘போராட்டத்தில் இணையுங்கள். இல்லையேல் ஆமியை யாழ்ப்பாணத்துக்குள் வரவிடுவம்.’ எனப் புலிகள் மிரட்டியதாக ஒரு ‘வாய்மூல வதந்தி’ பரவியதை சிவத்தார் அறிந்திருந்தார். பின்பு சிங்கள இராணுவம் யாழ்நகருக்குள் ஊடுருவ, அதற்கு ‘வலிகாம இடப்பெயர்வு’ எனும் நாமம் பொறித்ததையும் சிவத்தார் நினைத்துப் பார்க்கிறார். ‘ஒருவேளை அந்த வலிகாம இடப்பெயர்வுக்கான சூழ்நிலைகள்தான் இப்பவும் வன்னியில் அமைஞ்சிருக்குதோ…?’ சிவத்தாரின் மனதுக்குள் வலுவடையத்தொடங்கியது சந்தேகம். “தம்பி! கவனமாப் பாத்துப் போ…” சிவத்தாரின் மனைவி உழவுஇயந்திர சாரதியைப் பார்த்துக் கூறுகிறாள். சாரதிக்கு அவள் கூறியது கேட்கவில்லை. கிறவல்வீதி சீரில்லாமல் இருந்தினால், அவனது கவனம் முழுக்க வீதியிலேயே நிலைத்திருந்தது. தூரத்தே வீதியின் அருகோரம் ஒரு ‘லான்ட்மாஸ்டர்’ இயந்திரம் பெட்டியோடு பொருள்கள் உட்பட சரிந்து விழுந்து கிடந்ததைக் கண்டி ருக்க வேண்டும். கிளிநொச்சி நகரினுள் ஷெல்கள் விழ ஆரம்பித்தவுடன், சிவத்தார் தனது பல்பொருள் வாணிபத்தையும் ஆலையில் இருந்த நெல் மற்றும் அரிசிமூடைகளையும் விசுவமடுவுக்கு இடம்மாற்றி, இருப்பிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். ஆமி பரந்தனுக்கு வந்துவிட்ட செய்தியை அறிந்ததும், மீண்டும் நான்காவது தடவையாக இடம்மாற வேண்டிவந்து விட்டது சிவத்தாருக்கு. மனதுக்குள் புலிகளைத் திட்டிச் சாபம் போட்டவாறு இப்போது மாத்தளன் கடற்கரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். பொழுது மெல்ல இறங்கி விட்டிருந்தது. நீலம்பாரித்த பெருங்கடல் கிழக்கே பரந்திருந்தது. காற்றும் ஒருவித ஓசையுடன் வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையை அண்டிய பகுதிகள் எங்கும் ஏற்கனவே வந்தமக்கள் தரப்பாள் கொட்டில் அமைத்து குடியிருந்தார் கள். மக்கள் தொடர்ந்தும் கடற்கரையை நோக்கி வருவதைக் கண்டதும், நிலம்பிடிக்கும் போட்டியைத் தவிர்க்க, சிவத்தார் அவசரம் அவசரமாக அருகில் இருந்த இருவரைக் கூலிக்கு அமர்த்தி, தரப்பாள் கொட்டிலைப் போட்டுக் கொண்டார். 0000000000000000000000000000 மாலைப்பொழுது கவிழ்ந்து இருள் எங்கும் பரவியிருந்தபோதிலும், முன்நிலவின் ஒளியானது நிலத்தில் மட்டுமன்றி கடல்நீரிலும் வியாபித்திருந்தது. தரப்பாள் வீடுகளில் ஆங்காங்கே தெரியும் லாம்பு வெளிச்சம் மனிதமுகங்களை இனம் காண உதவியது. சிவத்தார் கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அவருக்கு இயற்கை உபாதை ஏற்பட்டிருந்தது. கடற்கரை வெளியைத்தவிர, வேறு மார்க்கம் தெரியவில்லை. கடற்கரைக்கு வந்ததும் அவர் திகைத்துப் போனார். கரைநீளத்திற்கு ஆண் – பெண் என்ற பேதமின்றி கிழக்குமுகம் பார்த்தவாறு எல்லோரும் தங்கள் உடைகளை இடுப்புக்கு மேலே தூக்கியபடி குந்திக்கொண்டிருந்தார்கள். ஒரே இடநெருக்கடி! குந்தியவர் எழும்பியதும் உடனே இன்னொருவர் ஓடிவந்து குந்துவதுமாக அந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘சே… என்ன அரியண்டம்…’ என்று மனம் அருக்களித்துக் கொள்கிறது சிவத்தாருக்கு. சிலவிநாடிகளின்பின், அவருக்குப் பக்கத்தில் குந்தியிருந்த கிழவியொருத்தி தனது கடமையை முடித்துக்கொண்டு எழுந்தபோது, ஒருவர் வேகமாக வந்து அந்த இடத்தில் குந்தினார். சிவத்தார் சற்று தலையைத் திருப்பி குந்தியவரைப் பார்த்தார். நிலவொளியாயினும் குந்தியவரது முகம் தெளிவாகத் தெரிவில்லை. எங்கும் ஒரே மலவெக்கை. எல்லோரும் மூக்கைப் பொத்தியபடி இருந்தார்கள். சிவத்தார் எழுந்து கொண்டார். கூடவே அவருக்குப் பக்கத்தில் இருந்தவரும் அலைநீரில் கையைக் கழுவிவிட்டு, சிவத்தாருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தார். இடைவழியில் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தபோது, ஒருபெட்டிக் கடையில் தொங்கவிடப்பட்ட லாம்பு வெளிச்சத்தில் அவரது முகம் தெளிவாகத் தெரிந்தது. ‘அட…! இவனா…?’ சிவத்தார் பதறிப்போனார். அவர் வேறு யாருமல்ல. ஒருநாள் இயக்கப் பொறுப்பாளருக்கு முன்பாக ‘**ப்பொறுக்கி.’ என விளிக்கப்பட்ட வரும், சிவத்தாரின் தோட்டத்தில் நாள்கூலியாக வேலை செய்தவருமான கதிரன் என்பவர். எந்த இடத்திலும் கதிரனது சமூகத்தை தங்களுடன் சமநிலையில் வைத்துப் பார்க்க விரும்பாத சிவத்தாரின் மேட்டுக்குடி உணர்விலூறிய சாதித்தடிப்பும் பணத்திமிரும் கடற்கரையில் ‘கக்கா’ கழிக்க வந்த இடத்திலும், கதிரன் தனக்கு சமநிலையாக இருந்ததை ஏற்க மறுத்தது. தறப்பாள் கொட்டிலுக்கு வந்தவர், மனைவியிடம் விபரத்தைக் கூறிவிட்டு, வாயில் வந்தபடி வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்தார். “பொடியளுக்குக் கேட்டாலும் பேசாமல் இருங்கோ…” “நீ பொத்தடி வாயை…” சிவத்தார் தன் மனைவியை அதட்டினார். மனிதர்களின் கழிவுகளை எதுவித பேதமுமின்றி, மாத்தளன் கடல் தன்னுள் உள்வாங்கிக் கொண்டிருந்தது. அதற்கு பிரிவினை எண்ணம் கிடையாது. சாதிமத பேதம் தெரியாது. ஒவ்வொரு இரவுகளிலும் அதிகாலை வேளைகளிலும் அந்த மனிதர்கள் கழிக்கும் கழிவுகள் நீரோடு கலந்தபடி… கரைந்தபடி… அலெக்ஸ் பரந்தாமன்-இலங்கை https://naduweb.com/?p=11786
 3. உடைவு – போகன் சங்கர் ‘’சார் ஒரு ரிக்வஸ்ட். இவரு இந்த ஒரு நாள் மட்டும் இங்கே தங்கிக்கட்டுமா? இவரோட ரூம்ல திடீர்னு பியூஸ் போயிடிச்சி. எலெக்ட்ரிசியனை காலைல தான் கூப்பிட முடியும். நல்ல மள பார்த்திகளா? கீழே விகெ புரத்தில இருந்து தான் வரணும்.’’ நான் அந்த நபரைப் பார்த்தேன். நல்ல சிகப்பாக, உடம்புக்குப் பொருத்தமில்லாத சற்றே சிறிய முகத்தோடு, அந்தச் சிறிய முகத்துக்குப் பொருந்தாத சற்றே பெரிய தும்பு மீசையோடு இருந்தார். ‘’நான் டாக்டர் ராமேந்திரன். திருநெல்வேலி மெடிக்கல் காலேஜில சைக்யாற்றிஸ்ட்டா இருக்கேன்‘’ என்றார். ’’I’m not mad.’’ நான் சிரித்தேன். ’’நான் ஒரு எழுத்தாளன், கவிஞன்” என்றேன். ’’நானும் பைத்தியமில்லை.’’ அவர் சிரித்தார். ’’காலையில் ரிஷப்ஷனில் பார்த்தேன். எங்கோ பார்த்தது போலத் தோன்றியது.’’ ’நீங்கள் தமிழ் இலக்கியப் பத்திரிகைகள் வாசிப்பதுண்டா? தமிழ்க் கவிதைகள்?’’ ‘’ஒரு காலத்தில்.. பிஜி உளவியல் எடுத்தப்பிறகு அங்கே எழுதுவதெல்லாம் என்னுடைய நோயாளிகள் என்று தோன்றிய பிறகு விட்டுவிட்டேன். அவ்வப்போது புரட்டுவதுண்டு.’’ அவர் தனது வென்னீர் ப்ளாஸ்க், மொபைல் மற்றும் சிறிய மாத்திரைகள் அடங்கிய பெட்டி போன்றவற்றை அங்கிருந்த இன்னொரு படுக்கையில் வைத்தார். ‘’ராமேந்திரன், நீங்கள் மலையாளியா?’’ ‘’கன்னியாகுமரி மாவட்டம்’’ என்றவர், ‘’நீங்கள் மனப் பதற்றத்துக்கு மருந்து எடுத்துக் கொள்கிறீர்களா?’’ என்றார். நான் சட்டென்று அடங்கிய குரலில், ‘’ஆம்’’ என்றேன். ’’எப்படி கண்டுபிடித்தீர்கள்?’’ ‘’அடிக்கடி நாக்கை பாம்பு போல வெளியே துருத்தி இழுத்துக் கொள்கிறீர்கள். அது மனப் பதற்றத்துக்கு எடுத்துக் கொள்ளும் சில மாத்திரைகளில் ஒரு சிறிய பக்கவிளைவு’’ என்றவர், ‘’நீங்கள் மது அருந்துவீர்களா?’’ எனக் கேட்டார். நான் சற்று ஆயாசமடைந்து, ‘’ஆம். இதை எப்படி கண்டுபிடித்தீர்கள்?’’ அவர் சிரித்து, ‘’இல்லை. நான் அருந்துவேன். அதான் கேட்டேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?’’ ‘’இல்லை. நான் இரவில் கொஞ்ச நேரம் படிப்பேன். அது உங்களுக்கு தொந்திரவாக இருக்குமா? வெளியே கொசு கடிக்கிறது.’’ ‘’இல்லை. நான் கொஞ்ச நேரம் இசை கேட்பேன். பிறகு கண்பட்டி கொண்டு வந்திருக்கிறேன். அதைக் கட்டிகொண்டு தூங்கிவிடுவேன். கொசுவை அஞ்சுவது சரியான செயல்தான். இந்தப் பக்கம் டெங்குவும் மலேரியாவும் அதிகம்.‘’ ‘’சாப்பாடு?’’ ‘’வாட்ச்மேன் கொண்டு வந்தான். முயல் கறி. அதைச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கையில் தான் மின்சாரம் போய்விட்டது. நீங்கள்?’’ ‘’நான் சைவம். முட்டை சாப்பிடுவேன். வேறு வழியே இல்லை எனில் மற்றதும்…’’ ‘’ஓ! நடராஜ குருவைப் போல.’’ ‘’நடராஜ குரு?’’ ‘’நாராயணகுருவின் சீடர். அவர் சைவம்தான். ஆனாலும் உணவில் ரொம்பக் கட்டுப்பாடாக, குறிப்பாக இருப்பதில் ஒரு அடிப்படைவாதம் உள்ளது என்கிறார்.’’ ‘’ஓ! நீங்கள் ஒரு அத்வைதியா?’’ ‘’ஈழவர்‘’ என்று சிரித்தார். ’’என் அப்பா ஈழவர். இந்தப் பக்கம் இல்லத்து பிள்ளைமார் என்பார்கள். எங்களுக்கு நாராயண குரு தெய்வம். அவர் அத்வைதம் போதித்தாரா அல்லது epicureanism-ஆ என்று கவலையில்லை.’’ ‘’புரிகிறது’’ ‘’ஒருவர் தனது சிறந்த சிந்தனைகளோடு தனியாக இருக்கவேண்டும் என்று நடராஜ குரு சொல்லியிருக்கிறார். அதற்காகத் தான் இந்த மலை வாசஸ்தலத்துக்கு வந்தேன்.’’ ‘’சிறந்த சிந்தனைகளோடு? உங்களது சிறந்த சிந்தனை என்ன?’’ ‘’அவற்றோடு தனியாக இருக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறாரே?’’ என்று அவர் சிரித்தார். பிறகு எழுந்து, ‘’எக்ஸ்க்யூஸ் மீ‘’ என்றபடி பாத்ரூமுக்கு போனார். நான் எழுந்து எனது சாப்பாட்டு பொட்டலத்தைப் பிரித்தேன். பரோட்டாவும் முட்டைக் கறியும். பரோட்டா காய்ந்து வற்றல் போலிருந்தது. முட்டைக் கறியால் அதனைப் பொதுமவைத்துச் சாப்பிட்டேன். முட்டை, வாத்து முட்டையா என்று சந்தேகம் வந்தது. அதனை எடுத்து குழல்விளக்கின் வெளிச்சத்தில் உருட்டி உருட்டிப் பார்த்தேன். ‘’வாத்து முட்டையின் கரு பச்சை நிறத்தில் இருக்கும்‘’ என்றபடி வெளியே வந்தார் அவர். ’’சற்றே பெரிதாக துர்நாற்றமும் வீசும்‘ ’என்றவர், ‘’துர்நாற்றமல்ல. நமக்குப் பழக்கமில்லாத ஒரு நாற்றம். கோழி முட்டையின் நாற்றத்துக்கு நாம் பழகியிருக்கிறோம். கொச்சி பக்கம் முட்டை என்றாலே வாத்து முட்டை தான். இது இங்கே கிடைக்கும் மலைக் கோழியாக இருக்கும். Semi-wild hen. வெறுமே சாப்பிடுகிறீர்களே? Appetizer எதுவும் வேண்டாமா? என்னிடம் ஜாக் டேனியல் இருக்கிறது’’ என்றார். எனக்கு ஒரு கணம் சபலம் தோன்றினாலும் மறுத்துவிட்டேன். ஏனோ அவரிடம் ஒரு விலகல் தோன்றியிருந்தது. அவர் என் எண்ணங்களை எல்லாம் எனக்குத் தோன்றும் ஒரு நொடி முன்பே படித்துவிடுவது போல ஒரு சிறிய அச்சம் ஏற்பட்டது. ஆசாமி அவரே சொன்னது போல பைத்தியம் இல்லை. ஆனால்… அதன்பிறகு அவர் சற்றே மது அருந்தினார். பிறகு காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு படுத்துவிட்டார். நான் பரோட்டாவைத் தின்ன முடியாமல் சுருட்டி அறைக்கு வெளியே போய் எறிந்தேன். அந்த பங்களாவில் இருந்த மற்ற அறைகள் எதிலும் ஆட்களும் இல்லை. மின்சாரமும் இல்லை. ரிசப்ஷனில் இருந்த பையன் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொண்டு எதையோ எழுதிக்கொண்டிருந்தான். ’’சார் உங்க ரூம்ல மட்டும்தான் கரண்ட் இருக்கு. அதான் அவரை அங்கே கொண்டுவிட்டேன்.’’ ‘’வேற கெஸ்ட் யாரும் இல்லியா?’’ ‘’இல்லை சார். இது கடுமையா மழை பெய்ற காலம் இங்கே. வெளியவே போக முடியாது. அதுனால டூரிஸ்ட் யாரும் வர மாட்டங்க. உங்களை மாதிரி, டாக்டர் மாதிரி யாராவது வருவாங்க’’ ‘’டாக்டர் அடிக்கடி இங்கே வருவாரா?’’ அவன் தயங்கி, ‘’ஆமா. அவரு எங்க முதலாளியம்மாவுக்கு வைத்தியம் பார்த்தார்’’ என்று தலைக்கு மேல் காண்பித்தான். அங்கே ஒரு பெரிய படத்தில் ஒரு நடுவயதுப் பெண் காய்ந்த மாலை குங்குமத்திடையே சிரித்துக் கொண்டிருந்தாள். ’’அகஸ்தியர் மலை உச்சிலிருந்து தவறி விழுந்து செத்துப் போயிட்டாங்க.’’ ‘’ஓ’’ ‘’இங்கேதான் படுத்துக் கிடப்பேன். எதுனா வேணும்னா எழுப்புங்க சார்’’ ‘’சரி’’ நான் வெளியே அடர்ந்து கிடக்கும் இருளைத் துளைத்துப் பார்க்க முயன்றேன். தூய இருள். மழை கனமாகப் பெய்யும் சத்தம் மட்டுமே கேட்டது. வேறு எதையுமே பார்க்க முடியவில்லை. நான் மெதுவாக எனது மொபைலின் வெளிச்சத்தில் அறைக்குத் திரும்பினேன். வராண்டா முழுவதுமே ஈரமாக இருந்தது. எனது சப்பல் அந்த ஈரத்தோடு ஒட்டிக்கொண்டு வர மறுத்தது. ஒரு பாசி மணம் எங்கும் நிரம்பியிருந்தது. பூனை ஒன்று என் பின்னாலேயே வருவது போல் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. அதன் மெல்லிய தப்படிகள். ஆனால் திரும்பிப் பார்த்தால் ஒன்றுமில்லை. அறைக்குள் டாக்டர் இப்போது சட்டையை எல்லாம் கழற்றிவிட்டு கைலிக்கு மாறியிருந்தார். பலகை போன்ற மார்புப் படமும் அதில் அடர்ந்திருந்த நரை கலந்த மயிர்க்காடும். அவரது புஜங்களில் கூட அந்த மயிர்ப்பரவல் இருந்தது. அவர், ‘’Semi naked ape’’ என்று சிரித்தார். எழுந்து மீண்டுமொருமுறை ஜேக் டேனியல் புட்டியைச் சரித்து ஒரு மிடறு குடித்துக்கொண்டு படுக்கையில் சாய்ந்து கொண்டார். ’’உங்களது புத்தகங்களை எல்லாம் பார்த்தேன். மாண்டேய்ன், ரூசோ, அசோகமித்திரன், செஸ்டர்டன்… ஒரு பேய்க்கதை கூட இல்லை‘’ என்றார். ’’லவ்கிராப்ட், எட்கர் ஆலன் போ, ஏன் ஒரு ஸ்டீபன் கிங் கூட இல்லை? இந்தச் சூழலுக்கு, மது போல, பேய்க்கதைகள் நல்ல பொருத்தமாக இருக்கும் அல்லவா?’’ ‘’எனக்கு கோட்டயம் புஷ்பநாத் கதைகள் பிடிக்கும்.’’ ‘’நான் கோட்டயம் புஷ்பநாத் வகையைச் சொல்லவில்லை. கோட்டயம் புஷ்பநாத்துக்கு கோட்டயம் சொந்த ஊர் இல்லை. நாகர்கோவில் தான். ஒருவகையில் எனக்கு உறவு கூட வரும். நான் சொல்வது சற்று சீரியசான கதைகளை, பஷீர் எழுதிய நீல வெளிச்சம் போல, மலையாற்றூர் ராமகிருஷ்னன் எழுதிய யக்‌ஷி போல. தமிழில் நல்ல பேய்க் கதைகளே இல்லை. மேலை நாடுகளில் எல்லா மாஸ்டர்களும் ஒரே ஒரு பேய்க்கதையாவது எழுதியிருக்கிறார்கள்.” ‘’டால்ஸ்டாயும் தஸ்தாவ்ய்ஸ்கியும் எழுதியதில்லை.’’ ‘’அவர்கள் புனித ஆவி பற்றி எழுதிக்கொண்டிருந்தார்கள்.’’ “‘தமிழில் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.’’ ‘’ஆனால் அவரும் மலையாளி தானே?’ நான், ‘’புதுமைப்பித்தன் காஞ்சனை என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். தமிழின் மிகச் சிறந்த பேய்க்கதை காஞ்சனை தான்‘’ என்றேன். அவர், ‘’ஆம்‘’ என்றார். ’’காஞ்சனை’’, என்றவர் எழுந்து சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து, ‘’மே ஐ?’’ என்றார். ‘’காஞ்சனா என்று எனக்கு ஒரு பேஷண்ட் இருக்கிறாள். அவளுக்கும் பேய் பிடித்துவிட்டது என்று தான் சொன்னார்கள். இப்போது நல்ல சுகமாக இருக்கிறாள்’’ என்றார். பிறகு, ‘’நான் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ள அத்தனை பேய்க் கதைகளையும் படித்திருக்கிறேன். கோட்டயம் புஷ்பநாத்தின் பெரும்பாலான கதைகள் ஐதீக மாலையின் ஏதாவது ஒரு வரியிலிருந்து தொடங்கி வளர்பவை. பஷீருக்கும் மலையாற்றுருக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. பஷீர் பேய்களை நம்புகிறவர். மலையாற்றூர் தனது யக்‌ஷி கதைக்கு ஒரு பகுத்தறிவு முடிவு கொடுத்தார். பஷீர் ஒரு பிராந்தாஸ்பத்திரியில் இருந்தார். தெரியுமில்லையா?’’ ‘’ஆக பஷீரின் பேய்க்கதைகள் அவரது மன நோயின் ஒரு பகுதி.”’ ‘’அவரது கதைகள் அத்தனையுமே அவரது மன நோயின் ஒரு பகுதிதான். ஒரு கிறுக்கனால் தான் அப்படி எழுத முடியும்’’ என்றவர், ‘’மேலைக் கிறித்துவத்தில் புனிதக் கிறுக்கன் என்று சொல்வார்கள். டால்ஸ்டாயின் கதைகளில் இப்படிப்பட்ட புனிதக் கிறுக்கர்களை நிறைய காணலாம்.’’ ‘’ஆம். ஆனால் அவர் தன் வாழ்க்கையில் கண்டதாகச் சொன்ன அமானுடப் பெண் அல்லது யக்‌ஷியை அவரது மனப் பிராந்து என்று பொற்றெகாட் அவரிடம் சொன்னபோது, ‘இருக்கலாம். பிராந்து யக்‌ஷியை உண்டாக்கியிருக்கலாம் அல்லது யக்‌ஷி பிராந்தை உண்டாக்கியிருக்கலாம்’ என்று சொன்னார் எனப் படித்திருக்கிறேன்.” ‘’நீங்கள் பேய்களை நம்புகிறீர்களோ?’’ என்று அவர் சிரித்தார். ’’அப்கோர்ஸ், நீங்கள் பேய்களை நம்பியாக வேண்டும். நீங்கள் ஒரு கவிஞர் அல்லவா? பருண்மை இல்லாத பொருட்கள் இல்லாவிட்டால் கவிஞர்கள் கவிதைகளுக்கு என்ன செய்வார்கள்?’’ நான், ‘’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இடதுசாரிக் கவிஞர்களுக்கு எந்தவொரு மாயத் தோற்றமும் தேவைப்படுவதில்லை.’’ ‘’புரட்சி ஒரு மாயத் தோற்றம்தானே?’’ என்றார். ’’Specters of Marx. கார்ல் மார்க்சின் பேய்கள். பேய்கள் என்பவை வந்தவை மட்டுமல்ல. வரவிருப்பவையும் கூட. அதாவது இறந்தவை மட்டுமல்ல. இன்னும் பிறக்காதவையும் கூடத்தான். ஆனால் என்னால் உங்கள் ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ‘பேய்களே இல்லாத உலகம்தான் எவ்வளவு பயங்கரமானது!’ என்றொரு கவிதை ஞாபகம் வருகிறது’’ ‘’யார் எழுதியது?’’ ‘’யாரோ போகன் சங்கர் என நினைக்கிறேன்.’’ ‘’அவர் நல்ல கவிஞர் இல்லை. சில நல்ல கவிதைகள் மட்டும் எழுதியிருக்கிறார். இணையம் எழுப்பி வந்த குப்பைகளில் ஒருவர்.’’ ‘’இருக்கலாம். இதை நான் இணையத்தில் வாசித்தேன். ஆனால், that poem argues my point’’ ‘’உங்களுக்கு பேய்கள் நம்பிக்கை இருக்காது என்று எனக்குத் தெரியும். நீங்கள் டாக்டர். அதுவும் உளவியல் மருத்துவர். ஆனால் நீங்கள் உங்கள் வாழ்வில் மருத்துவக் கோட்பாடுகளைச் சந்தேகித்த ஒரே ஒரு கேசை கூடவா சந்திக்கவில்லை? ஆம் என்று சொன்னால் நான் உங்களைத் திறந்த மனம் இல்லாதவராகவும் நேர்மையற்றவராகவும் மட்டுமே கருதுவேன்.‘’ அவர் சிகரெட் புகைப்பதை நிறுத்திவிட்டு என்னையே பார்த்தார். ‘’வெல். ஒரே ஒரு சந்தர்ப்பத்தில்’’ என்றார். ’’இந்தக் காஞ்சனை என்று சொன்னேன் இல்லையா? ஆனால் அந்த கேசின் முடிவு பகுத்தறிவின் பக்கமே முடிந்தது‘’ என்றவர், ‘’ஐ வில் டெல் யூ த ஸ்டோரி. ஒரு எழுத்தாளனுக்கு கதையை மறுக்கக்கூடாது. அது பாவம். ஆனால் அதைக் கேட்க நீங்கள் என்னுடன் குடிக்க வேண்டும்.”’ 2 “இந்தக் கதையை நான் சற்று விரைவாகக் கூற வேண்டியிருக்கிறது. காரணம், நான் தூக்க மாத்திரை எடுத்திருக்கிறேன். அது வலுவாக அரை மணி நேரம் ஆகும். அதற்குள் இந்தக் கதையைச் சொல்ல முடியுமா என்று பார்க்கிறேன்.” “அப்போது நான் திருநெல்வேலி என்.ஜி.ஓ காலனியில் க்ளினிக் வைத்திருந்தேன். பொதுவாக திருநெல்வேலியில் புகழ்பெற்ற டாக்டர்கள் அப்போது ஜங்ஷனிலோ டவுனிலோ அல்லது பாளையம்கோட்டை பகுதியிலோ தான் பிராக்டீஸ் பண்ணுவார்கள். ஆனால் மக்களுக்கு மனநல மருத்துவரிடம் போவதில் ஒரு தயக்கம் இருந்தது. மனநல மருத்துவரிடமும் செக்சாலஜிஸ்ட்டிடமும் வெளிப்படையாகப் போக பயப்படுவார்கள். முதலில் நெல்லையப்பர் சன்னதித் தெருவில் க்ளினிக் வைத்துவிட்டு ஒரு பேஷண்ட் கூட வராமல் ஈ ஓட்டியிருக்கிறேன். அப்போது தான் உங்களது இலக்கியப் பத்திரிகைகள், சுதிர் காக்கர் போன்று கண்டதையும் படித்தேன். அவ்வகையில் அந்தக் காலக்கட்டத்தின் லாபம் அதுதான். பண்டைய இந்திய வரலாற்றில் மன நோய்கள் எவ்விதம் பார்க்கப்பட்டிருக்கின்றன, சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் விரிவாகப் படித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதி இந்தியன் சைக்கியாட்ரிஸ்ட் அசோசியேஷன் ஜர்னலுக்கு அனுப்பினேன். அவர்கள் அதை உடனே மறு தபாலிலேயே திருப்பி அனுப்பிவிட்டார்கள்” என்று சிரித்தார். ’’கடைசியில் அந்தக் கட்டுரையை உங்களது சிறு பத்திரிகைகளில் ஒன்றுதான் பிரசுரித்தது.’’ ‘’அப்படியா? உங்கள் ஆட்கள் ஏன் அதைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்?’’ ‘’அவர்கள் மடையர்கள் என்பதால். அது வேறு கதை. அதைச் சொல்லப் போனால் இந்த அரை மணிக் கூறுக்குள் கதை முடியாது.’’ ‘’சரி. சொல்லுங்கள்’’ ‘இந்தக் காஞ்சனா என்ற பெண்தான் எனது பேஷண்ட். இவளுக்கு மனநிலை சரியில்லை என்று என்னிடம் கூட்டி வந்தார்கள். ரொம்ப சிவியர் ஸ்கிட்ஸோப்ரீனியா. திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் உள்ள எல்லா டாக்டர்களிடமும் காண்பித்துவிட்டு என்னிடம் கூட்டி வந்தார்கள். ரொம்ப வயலண்டாக இருந்தாள். ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக வெளியே ஓடிவிடும் பழக்கமும் இருந்தது. யார் வீட்டுக்கு ஓடுகிறாள் என்றால் ஜெயந்தியக்கா என்ற அவளது தோழி வீட்டுக்கு. இந்த ஜெயந்தியக்கா ஒன்றரை வருடம் முன்பு ஒரு நாள் அதிகாலையில் தனது வீட்டு மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள். இந்தக் காஞ்சனையும் ஜெயந்தியும் சிறுவயதிலிருந்தே மிகவும் நெருங்கிய தோழிகள். இருவரும் மாற்றி மாற்றி ஒருவர் வீட்டிலேயே சாப்பிட்டு, உறங்கி, அதிகாலையில் ஆற்றுக்கு சேர்ந்தே போய், பள்ளிக்கூடத்துக்கும் சேந்தே கைபிடித்துப் போய் என்று மிக நெருக்கம். செத்துப்போன ஜெயந்திக்கு காஞ்சனையை விட மூன்று வயது அதிகம். இருவருக்கும் தேக சம்பந்தமும் இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து.’’ ‘’அப்படியென்றால்..’’ ‘’ஓர்பால் உறவுதான். இதில் ஜெயந்திதான் முன்கை எடுத்திருக்க வேண்டும். அவள் காஞ்சனாவின் உடலைப் பயன்படுத்தியிருக்கிறாள். இவளும் ஒத்துழைத்திருக்கிறாள். இதன் நடுவில் ஜெயந்திக்கு கல்யாணம் ஆகிவிட்டது. கல்யாணம் ஆன நாளிலிருந்தே ஜெயந்திக்கும் அவள் புருஷனுக்கும் ஒத்துப்போகவில்லை. எப்படி ஒத்துப்போகும்? ஜெயந்தியின் திசை வேறு. அவனுக்கு விஷயம் புரிய சற்று காலம் எடுத்தது. அவன் காஞ்சனாவின் வீட்டுக்குப் போகக்கூடாது என்று தடை விதித்தான். அவள் ஒத்துக்கொள்ளவில்லை. மீறி வந்திருக்கிறாள். அவன் இங்கு வந்து சண்டை போட்டிருக்கிறான். அப்போது தான் காஞ்சனாவின் வீட்டுக்கும் இந்த உறவில் இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவர்களும் எடுத்துச் சொல்லி கேட்கவில்லை என்றதும் தடை போட்டிருக்கிறார்கள். விஷயம் கைக்குள் நிற்கவில்லை. ஒரு நாள் இரவு காஞ்சனா வீட்டுக்கு வந்து ஜெயந்தி பேசிக்கொண்டு இருந்திருக்கிறாள். அப்போது காஞ்சனாவின் அண்ணன் வந்து கடுமையாகப் பேசி அவளை வெளியே துரத்தியிருக்கிறான். மறுநாள் அதிகாலை தான் ஜெயந்தி தற்கொலை செய்துகொண்டாள்’’ ‘’ஓ! அந்த அதிர்ச்ச்சியில் காஞ்சனாவுக்கு சித்தம் கலங்கிவிட்டது. இல்லையா?’’ ‘’ஒருவகையில் அப்படித்தான். ஆனால் ‘the devil is in the details’ இல்லையா? நீங்கள் குடிக்கவே இல்லியே?’’ நான் அவரிடமிருந்து பாட்டிலை வாங்கி ஒரு வாய் சரித்துக்கொண்டேன். சரியாக சாப்பிடாததால் சட்டென்று தலைக்கு ஏறுவது போல பட்டது. ‘’விஷயம் என்னவெனில் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி ஜெயந்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது அதிகாலை ஒரு மணிக்கு. ஊருக்குத் தெரியவந்தது காலை சுமார் எழு மணிக்கு. ஆனால் காலை சுமார் ஐந்து மணி போல ஜெயந்தி காஞ்சனா வீட்டுக்கு வந்திருக்கிறாள்.’’ நான் சற்று பலவீனமாக, ‘’அது எப்படி?’’ “எப்போதும் செல்வது போல அவர்களுடன் குறுக்குத்துறை ஆற்றுக்கு குளிக்கப் போகும் முப்பிடாதி என்ற பெண் அப்படித்தான் சொல்கிறாள். அதிகாலை சுமார் ஐந்து மணிக்கு ஜெயந்தி வந்து முப்பிடாதியின் வீட்டுக்கு வெளியே இருந்து கூப்பிட்டிருக்கிறாள். காஞ்சனாவை கூட்டி வரும்படி கேட்டிருக்கிறாள். பிரச்சினையாக இருப்பதால் முப்பிடாதி மூலம் ஜெயந்தியை அழைத்திருக்கிறார்கள். முப்பிடாதி வந்து அழைத்ததால் காஞ்சனாவின் வீட்டிலும் விட்டிருக்கிறார்கள். மூவரும் சேர்ந்து அந்தக் கருக்கல் ஒளியில் தாமிரபரணிக்கு குளிக்கப் போயிருக்கிறார்கள். வழி முழுவதும் ஜெயந்தி காஞ்சனாவை முத்திக்கொண்டே இருந்தாள் என்றும் அழுதுகொண்டே இருந்தாள் என்றும் முப்பிடாதி சொல்கிறாள். கருப்பந்துறை மயான விலக்கு வரும்போது அவள் ஓவென்று கதறினாள் என்றும் கூட முப்பிடாதி சொல்கிறாள்.’’ எனக்கு இலேசாக போதை ஏறுவது மட்டுப்படுவது போல இருந்தது. ‘இந்த முப்பிடாதிக்கும் பைத்தியமா?’’ ‘’சேச்சே. அவள் நன்றாக புள்ளைக் குட்டிகளோடு இருக்கிறாள். ஆனால் இப்போதும் ஜெயந்தி அன்று காலையில் தங்களோடு குளிக்க வந்தாள் என்று சத்தியம் பண்ணுகிறாள்.’’ ‘’காஞ்சனாவின் வீட்டில் என்ன சொல்கிறார்கள்?’’ ‘’அவள் ஆற்றுக்குப் போய்விட்டு வந்ததிலிருந்தே அவளது மன நிலை தவறிவிட்டது என்று சொல்கிறார்கள். அவள் அப்போதே ஒரே நேரத்தில் காஞ்சனாவாகவும் ஜெயந்தியாகவும் மாறி மாறிப் பேச ஆரம்பித்துவிட்டாள். அதாவது ஜெயந்தி செத்துப் போனது ஊருக்குத் தெரியும் முன்பே. இருவரும் இப்போது ஒரே தேகத்தில். ஜெயந்தியாக இருக்கும்போது அவள் ரொம்ப வயலண்டாக ஆகிவிடுவாள். உடைகளைக் களைந்துவிட்டு தனது கணவனது வீட்டுக்கு ஓட நிற்பாள். அவனைக் கொல்வது அவளது இலட்சியமாக இருந்தது.’’ நான், ’’ம்ம்‘’ என்றேன். நான் அந்த வறண்ட புரோட்டாவைச் சாப்பிட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது. ‘’வழக்கமாக எல்லா டாக்டர்களும் இவ்வளவு விலாவரியாக ஒரு கேசின் பின்புலத்தை ஆராய்வர்களா டாக்டர்?’’ ‘’அட! அவர்கள் அடிப்படையாக சில கேள்விகள் கேட்பார்கள். காதில் குரல் கேட்கிறதா, உங்களுக்கு நீங்கள் வேறு ஒரு நபர் என்று தோன்றுகிறதா என்றெல்லாம் பரிசோதிப்பார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே மாத்திரை கொடுத்துவிட்டு மறந்துவிடுவார்கள். நான் சுதிர்காக்கரின் மாணவன். அவர்தான் இந்தியாவின் முதல் சைக்கோ அனலிஸ்ட். காந்தியின் சீடர் கூட. இப்போதும் இருக்கிறார். அவருடன் இப்போதும் கடிதத் தொடர்பு உண்டு. புது யுக டாக்டர்கள் சைக்கோ அனலஸிஸ் எல்லாம் கதை என்று நினைக்கிறார்கள்.’’ ‘’இந்தக் கதையின் முடிவு என்ன டாக்டர்?’’ ‘’நான் அதுவரை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருந்த மருத்துவத்தை எல்லாம் புரட்டிப் பார்த்தேன். எலக்ட்ரிக் ஷாக், செரடோனின் ரீஅப்டேக் தடுப்பான்கள் என அன்றைக்கு வந்திருந்த எல்லா கெமிக்கல் குப்பைகளையும் அவள் தலைக்குள் கொட்டியிருந்தார்கள். எதற்கும் அந்த ஜெயந்தி அசைந்து கொடுக்கவில்லை.’’ ‘’அப்படியானால் பேய் என்று ஒன்று இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?’’ அவர் சிரித்து, ‘’ஒரு விஷயத்தை தீவிரமாக நீங்கள் நம்பும்போது அது பருப்பொருள் ஆகிவிடுகிறது. இதோ இந்த மேசையைப் போல’’ என்று அவர் மேசையை உதைத்தார். ’’உண்மையில் இதைச் சொன்னது கார்ல் மார்க்ஸ் என்று அறிய உங்களுக்கு வியப்பாக இருக்கும். அதை அவர் வேறொரு பொருத்தலில் சொன்னார் என்பது இருக்கட்டும். பல்லாயிரம் பேர் சேர்ந்து ஒன்றை நம்பும்போது அதற்கு ஒரு உயிரும் பௌதீகத் தன்மையும் வந்துவிடுகிறது. உதாரணமாக மதங்கள். மதங்கள் உண்மைத்தன்மை அடிப்படையற்ற கருத்து ஒன்றின் மீது கட்டப்பட்டிருந்தாலும் பல லட்சம் பேர் அதை நம்புவதால் அது ஒரு பௌதீகப் பொருளாகி விடுகிறது. அதை அப்படியே அணுகவேண்டும்.’’ ‘’நீங்கள் இந்த ஜெயந்தியை எப்படி அணுகினீர்கள்?’’ ‘’ஆசான் மார்க்ஸ் சொன்னது போலவேதான். ஜெயந்தியின் ஒரே லட்சியம் அவளது கணவனைக் கொல்வதாக இருந்தது. அவன் மீது முதலில் போலீசாருக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. ஆனால் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் தெளிவாக இருந்தது. அது தற்கொலை தான். ஆனால் ஜெயந்தியின் பார்வையில் அவன்தான் அவளது சாவுக்குக் காரணம். அவன் கொஞ்ச நாள் நெல்லையில் நாய் போல கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேசனுக்கும் திரிந்துவிட்டு சென்னைக்குப் போய்விட்டான். நான் கொஞ்ச நாள் மருந்துகளை மாற்றி மாற்றிக் கொடுத்துப் பார்த்தேன். கொஞ்சம் கூட குணம் இல்லை. எனவே ஜெயந்தியின் விருப்பப்படி அவளது கணவனைக் கொல்வது என்று முடிவெடுத்தேன்’’ ‘’டாக்டர்!’’ ‘’பயப்படாதீர்கள். ஒரு mock killing. என்னுடைய பத்திரிகைத் துறை நண்பர் ஒருவர் இருக்கிறார். அவரை வைத்து ஜெயந்தியின் கணவன் மதுரையில் ஒரு லாட்ஜில் வைத்து தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்தி உள்ளது போல் எல்லாப் பத்திரிகை மாடல்களிலும் சிவகாசியில் ஒரு ப்ரஸ்ஸில் ப்ரிண்ட் செய்தேன். போலிப் பத்திரிகை, போலிச் செய்தி. சில பிரதிகள் மட்டும். உண்மையில் அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம். ஒரு நாள் மாலை காஞ்சனா என்கிற ஜெயந்தியை அவளது அம்மாவோடு மட்டும் க்ளினிக்குக்கு வரச் சொன்னேன். நர்ஸை எல்லாம் அனுப்பிவிட்டு சில சடங்குகள் போன்ற விஷயங்களைச் செய்துவிட்டு ஜெயந்தியிடம் அவளது கணவன் இறந்த பத்திரிகைச் செய்தியைக் காண்பித்தேன். முதலில் அவள் நம்பவில்லை. ஆனால் நான் அவன் புகைப்படம் போட்டிருந்த மாலை தினசரிகளைக் காண்பித்ததும் அவள் நம்பிவிட்டாள். நெல்லையைச் சேர்ந்த வாலிபர் மதுரை விடுதியில் தற்கொலை!’’ ‘’இது மணிச்சித்திரத்தாழ் திரைப்படத்தில் வருவது போல அல்லவா?’’ ‘’அதேதான். ரொம்ப ஒரிஜினலான ஐடியா என்று இதைச் சொல்லவில்லை. ஆனால் எபக்டிவ்’’ ‘’அவளுக்குக் குணமாகி விட்டதா?’’ ‘’ஆமாம்’’ ‘’திரும்ப வரவே இல்லையா?’’ ‘’இல்லை”’ எனக்குச் சற்று குழப்பமாக இருந்தது. ‘’ஆனால் நீங்கள் சொன்னது பொய் அல்லவா?’’ ‘’ஜெயந்தியே ஒரு பொய்தானே?’’ ‘’ஓ‘’ என்றேன். எனக்குச் சப்பென்று இருந்தது. ’’ஆனால்…..’’ என்று இழுத்தேன். ’’சரி…..”’ ‘’ஏமாற்றமாக இருக்கிறதோ? ஆனால் இந்தக் கதையில் ஒரு இடம் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கிறது. நீங்கள் அதைக் கவனிக்கவில்லை’’ ‘’எது?’’ ‘’முப்பிடாதி. அவள் ஒரு இண்டிபெண்டண்ட் விட்னஸ்.’’ ‘’ஆம். அவளை எப்படி விளக்குவீர்கள்?’’ ‘’அவளும் ஒரு மன நோயாளி என்றுதான்’’ என்று அவர் சிரித்தார். ’’அவளுக்கு ஏற்பட்டது ஒரு தற்காலிக பிரமை. உருவெளித் தோற்றம்’’ ‘’இரண்டு மூன்று பேருக்கு ஒரே நேரத்தில் ஒரே மாதிரி பிரமை ஏற்படுவது சாத்தியமா?’ ‘’சாத்தியம். 1940-களில் ஆர்சன் வெல்சின் ஒரு ரேடியோ நாடகத்தைக் கேட்டுவிட்டு உண்மையான செய்தி என்று நம்பி செவ்வாய்க் கிரகவாசிகள் பூமிக்கு வந்துவிட்டார்கள் என்று பயந்து ஆயிரக்கணக்கான பேர் தங்கள் வீடுகளைக் காலி பண்ணிவிட்டு வேறு இடங்களுக்கு அமெரிக்காவில் தப்பியோடி இருக்கிறார்கள்.’’ ‘’அப்படியானால் அவளையும் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் இல்லையா?’’ ‘’தேவையில்லை. அது அவளது இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காத வரைக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் அவளுக்கு இப்படி ஒரு வீக்னெஸ் அவள் மன அமைப்பில் இருக்கிறது. சற்று ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவ்வளவு தான். அவள் ஒரு மோசமான சூழலில் முற்றிலும் தன்னை இழந்துவிடலாம். அப்போது சிகிச்சை தேவைப்படும்.’’ ‘’ம்ம்’’ ‘’சரி தூங்குவோம். எனது மாத்திரை வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.’’ ‘’சரி டாக்டர். குட் நைட்’’. நான் எழுந்து லைட்டை அணைத்தேன். அதுவரை கேட்காதிருந்த மழைச் சத்தம் திடீரென்று கேட்பது போல் பட்டது. ஒருவேளை மழை அதிகரிக்கிறதா? டாக்டர் உறங்கிவிட்டார். நான் வெகுநேரம் புரண்டு கொண்டிருந்தேன். அவ்வப்போது கண்ணாடி ஜன்னல் வழியே உள்ளே வெட்டிய மின்னல்களின் நீல வாள்கள் வேறு இமைகளுக்குள் ஊடுருவி தூக்கத்தின் சரடை அறுத்தன. எப்படியோ கண் அசந்துவிட்டேன். எப்போது எதற்காக விழித்தேன் என்று தெரியவில்லை. திடுக்கிட்டு விழித்தேன். மொபைலை உயிர்ப்பித்து மணியைப் பார்த்தேன். 1.23 am. யாரோ எதையோ திறக்க முயல்வது போல் சுரண்டுவது போல் சத்தம். டாக்டரைப் பார்த்தேன். அவரிடம் எந்த அசைவும் இல்லை. ஜன்னல் கண்ணாடியோடு ஒட்டி நின்ற செடி மழையால் அறையப்பட்டு சன்னலோடு மோதிக் கொண்டிருந்தது மின்னல் ஒளியில் தெரிந்தது. அது அந்தச் செடி அறைக்குள் புக முயற்சிப்பது போல் தோன்றியது. என் மனம் ஆசுவாசமடைந்த போது அதை மீறிய இன்னொரு சத்தமும் அங்கே இருப்பதை உணர்ந்தேன். ஒரு பெண்ணின் விசும்பல் சப்தம். பெண்? எனக்கு வராண்டாவில் ஒரு பூனை ஒன்று பின்னால் வருவதைப் போல உணர்ந்தது நினைவுக்கு வந்தது. பூனைதான். நான் கண்களை மூடிக்கொண்டு திரும்பவும் தூங்க முயற்சி செய்தேன். இம்முறை மீண்டும் அந்த சப்தம். வெறும் விசும்பலாக இல்லாமல் வார்த்தைகளாகவும் திரண்டு.. நான் சட்டென்று எழுந்து விளக்கைப் போட்டேன். எரியவில்லை. சனியன். இங்கும் பியூஸ் போய்விட்டதா அல்லது மின்சாரம் போய்விட்டதா? நான் மொபைல் டார்ச்சை உயிர்ப்பித்து, ‘டாக்டர், டாக்டர்’ என்று கூப்பிட்டேன். அவர் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நான் கதவைத் திறந்து வராண்டாவைப் பார்த்தேன். அங்கே யாருமில்லை. கடும் குளிர் முகத்தில் அறைந்தது. பூனைகள் எதையும் காணவில்லை. நான் சற்றே தயங்கி, வழுக்காமல் கவனமாக அடி எடுத்து வைத்து ரிசப்ஷனுக்குப் போனேன். ’’தம்பி… ஏய் தம்பி…’’ அங்கே அவன் தலை வரை மூடி தூங்கிக் கொண்டிருந்தான். எனக்குச் சட்டென்று நாணம் ஏற்பட்டது. கவிஞர்களால் பேய்களை நம்பாமல் இருக்க முடியாது என்று டாக்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. திரும்ப அறைக்கு வந்தேன். கதவைத் திறக்கும் போது மீண்டும் அந்த ஓசையைக் கேட்டேன். ஒரு பெண் விசும்பும் சப்தம். இப்போது அறைக்குள்ளிருந்து! இம்முறை அதன் வார்த்தைகளை இனம் பிரித்து உணரக்கூட என்னால் முடிந்தது. ‘’ராமேந்திரா! என்னை விடுடா!”’ நான் மயிர்க்கூச்செறிந்து அப்படியே நின்றேன். அடுத்து அது சொன்னதுதான் என்னை அதிரடித்தது. ‘’அண்ணே, ரைட்டர் அண்ணே! இந்த மலையாள டாக்டர்கிட்ட இருந்து எப்படியாவது என்னைக் காப்பாத்துண்ணே, இவன் என்கிட்டே பொய் சொல்லிட்டான். எனக்கு அவனைக் கொல்லனும். அவனை அப்புறம் என்கிட்டே பொய் சொன்ன இவனை.. பொறவு என் காஞ்சனாவைப் பார்க்கணும்.. அண்ணே… தயவு பண்ணுண்ணே.. அண்ணே உன் தங்கச்சியா நினைச்சுக்கண்ணே.. எங்களை ஏன்னே வாழவே விட மாட்டேங்கிறீங்க? அண்ணே…’’ அடுத்து என்ன நிகழ்ந்தது என்று எனக்கு நினைவே இல்லை. கடும் காய்ச்சலில் நான் விழுந்துவிட்டதாக லாட்ஜில் சொன்னார்கள். நான் விழித்தபோது அம்பாசமுத்திரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அவர்கள் தான் என்னைச் சேர்த்திருக்க வேண்டும். முதலில் டெங்குவாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டார்கள். டெஸ்ட்டில் ஒன்றும் காட்டவில்லை. பிறகு Scrub Typhus என்று சந்தேகப்பட்டார்கள். அந்தப் பகுதிகளில் பழ உண்ணிகள் போன்ற பூச்சிகள் அதிகம். ஆனால் நான் நான்காம் நாள் குணமடைந்து விட்டேன். ஒரு டாக்சி வைத்துக்கொண்டு நாகர்கோவில் வந்தேன். இரண்டு நாட்கள் எதையும் நினைக்காமல் சும்மா தூங்கித் தூங்கி எழுந்துகொண்டிருந்தேன். மூன்றாவது நாள் திருநெல்வேலியில் இருக்கும் எனது டாக்டர் நண்பருக்கு போன் செய்தேன். அவரும் உளவியல் நிபுணர்தான். ’’தோழர், உங்களுக்கு டாக்டர் ராமேந்திரன்னு யாரையாவது தெரியுமா?’’ ‘’யாரு?’’ ‘’டாக்டர் ராமேந்திரன்’’ ‘’அவரு எங்க சீனியர். அவர் இப்போ ப்ராக்டிஸ்ல இல்லியே?’’ ‘’ஏன்?’ ‘’ஆளு கொஞ்சம் எக்ஸன்ட்ரிக். எம் சி ஐ அன்எதிகல் பிராக்டிஸ்னு ஆறு மாசம் பான் பண்ணிச்சு அவரை. அதுக்கப்புறம் அவரு திரும்ப வரவே இல்லை. ஆனா ஆளு ப்ரில்லியண்ட். சக்சஸ் ரேட் மிக அதிகம். மத்தவங்களால குணப்படுத்த முடியாத கேசையெல்லாம் குணப்படுத்திக் காமிச்சிருக்காரு. அந்த மாதிரி கேசுகளை மட்டும்தான் எடுப்பாரு. கொஞ்சம் பொம்பள வீக்னெஸ் உண்டு. அதாவது பரவாயில்லை. க்ளினிக்கல் ப்ரோட்டோகாலை மீறி என்னென்னவோ பண்ண ஆரம்பிச்சிட்டார்.’’ ‘’என்னென்னவோன்னா?’’ ‘’முதல்ல ஹார்ம்லெஸ்ஸா சைக்கோ அனலிஸிஸ் டெக்னிக்ஸ்னுதான் ஆரம்பிச்சாரு. அப்புறம் தான்….’’ ‘’அப்புறம் தான்…?’ ‘’மாந்திரீகம்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.’’ 3 ‘’வென்றிலாக்கிசம்’’ என்றது அந்தக் குரல். ’’குரல் நாண்களைக் கட்டுப்படுத்தி வாயைத் திறக்காம பேசற ஒரு கலை. தமிழ்ல ஒரு கமல்ஹாசன் படத்துல கூட வரும்’’ ‘’டாக்டர் நீங்கதானா?’’ டாக்டர், ‘’நாந்தான்‘’ என்று போனில் சிரித்தார். ‘’ஒரு சிறிய விளையாட்டு விளையாடலாம்னு நினைச்சேன். அதுக்கே உங்களுக்கு ஜன்னி வந்திடிச்சி. நிஜமாவே பேய் வந்தா என்ன பண்னுவீங்க?’’ ‘’இந்த போன் நம்பர் எப்படி கிடைச்சது டாக்டர்?’’ ‘’எலிமெண்டரி வாட்சன். லாட்ஜ் பையன் கிட்டே வாங்கினேன்.’’ ‘’அப்போ பேய் என்பது இல்லை, இல்லையா?’’ ‘’தெரியலை. எனக்கும் இந்தக் கேள்வி இருக்கு. நான் சொன்ன இந்த கதைல வருகிற முப்பிடாதிங்கிற பொண்ணுக்கு இதுக்கு விடை தெரிஞ்சிருக்கலாம். நீங்க அவளை ஏன் சந்திச்சுப் பேசக்கூடாது? நான் அவ விலாசம் தரேன்.” நான் பேசாதது கண்டு, ‘’இதுதான் கவிஞனுக்கும் தத்துவவாதிக்கும் உள்ள வித்தியாசம். கவிஞனுக்கு கேள்விகளின் வசீகரம் போதும். அவனால் அவற்றின் பின்தொடர்ந்து ஆழமாக செல்ல முடியாது. அதனாலதான் அவன் ஒரு மோசமான காதலனாகவும் இருக்கான்.’’ நான், ‘’அப்படியில்லை’’ என்றேன். ’’நீங்க அந்தப் பொண்னுகிட்டே பேசிப் பார்த்தீங்களா?’’ ‘’இல்லை, சில சூழ்நிலைகளினால் அவ கிட்டே என்னால பேச முடியலை. இப்போ என்னால நெல்லைக்குள்ளேயும் போக முடியாது’’ ‘’நீங்க சொன்னது சரிதான். எனக்கு இப்போ இதுல ஆர்வம் போயிடுச்சு.’’ ‘’ஓ’’ என்றார். அவர் குரலில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது. ‘’எனிவே நீங்க எப்பவாவது நெல்லைக்குப் போனீங்கன்னா, வேற வேலை எதுவும் இல்லைன்னா, அந்தப் பொண்ணைப் போய்ப் பாருங்க. அவகிட்ட கேட்க எனக்கு சில கேள்விகள் இருக்கு. அவளோட வீடு….’’ என்று விலாசம் சொன்னார். நான் அதனை மறந்துவிட்டேன். அதன்பிறகு என் சொந்த வாழ்க்கையில் சில கடும் பிரச்சனைகளைச் சந்தித்தேன். அப்பாவுக்கு திடீரென்று ஒரு முழுச் சந்திர கிரகண தினத்தன்று மனநிலை தவறிவிட்டது. அவருக்கு ஒரு வருடம் முன்புதான் பை பாஸ் செய்திருந்தார்கள். நான் எனது நண்பரிடம் தான் கூட்டிப் போனேன். அவருக்கு அக்யூட் ஸ்கிட்ஸோப்ரீனியா என்று அவர் சொன்னார். ’’உங்கள் குடும்பத்தில் முன்பு யாருக்காவது இருந்திருக்கிறதா?’’ எனக்குத் தெரியவில்லை. பொதுவாக நாங்கள் இயல்பிலேயே சற்று ஒடுங்கிய குடும்பம். தாத்தா சின்ன வயதிலேயே இறந்துவிட்டார். ஆச்சி வழியில் இருந்ததா என்று கேட்க அவள் உயிருடன் இல்லை. சித்தப்பாவிடம் பேச்சு வார்த்தை இல்லை. ’’பொதுவாக, இளமையில் ஒருவர் செக்ஸுவலாக ஆக்டிவாக இருக்கும் காலக்கட்டத்தில் தான் மனச்சிதைவு நோய் தாக்கும்‘’ என்றார் நண்பர். ‘’பைபாஸ் சர்ஜரி பண்ணின குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மூளைக்குப் போகிற ரத்த ஓட்டம் குறைந்து போய் இப்படி ஆகிவிடுவதுண்டு என்று ஒரு ஆய்வு சொல்கிறது. இன்னும் நிரூபிக்கப்படவில்லை.’’ காரணம் எதுவாயினும் அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டார். என்னை பல நேரங்களில் அவருக்கு அடையாளம் தெரியவே இல்லை. சில நேரங்களில் அவரை அடித்து பூட்டி வைக்க வேண்டியிருந்தது. அதை நான் இந்தப் பாவப்பட்ட கரங்களால் செய்தேன். ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிற வீடு கண் முன்னால் இடிந்து விழுவதைப் போன்றதொரு காட்சியை நாங்கள் காண நேரிட்டோம். மனச்சிதைவுக்குத் தரப்பட்ட மாத்திரைகளும் அவரது இதய நோய்க்கான மாத்திரைகளும் ஒன்றுக்கொன்று அவர் உடலில் சண்டையிட்டன. அவர் உடலிலிருந்து சதையை யாரோ உருக்கி எடுத்தார் போல் வற்றிப்போனார். “கால்வலி, கால்வலி” என்று கத்திக்கொண்டே இரவெல்லாம் இருந்தார். யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் என்று என்னென்னவோ தகடுகளை அம்மா வீட்டுக்குக் கொண்டுவந்தாள். அப்பா நடிக்கிறார் என்றோ அவரது உறவினர்களின் பில்லி சூனியம் என்றோ அவள் கருதினாள். இந்த விஷயத்தில் எனது மனைவி நடந்துகொண்டது தான் எனக்கு அதிர்ச்சியை அளித்தது. அப்பாவுக்கு மனநிலை தவறியதும் அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனது வீட்டுக்குப் போய்விட்டாள். அப்பாவுக்கு ஒழுங்காக மாத்திரைகளைத் தரவேண்டியது அவசியம். அம்மாவுக்கு அந்த விஷயமே புரியாது. எனக்கு ஆபீசில் விடுமுறை தரமாட்டார்கள். நான் தவித்தேன். அவளிடம் விஷயத்தை விளக்கி வீட்டுக்குத் திரும்ப வரச் சொன்னேன். அவளது அம்மா, ‘’குழந்தையையும் வச்சுக்கிட்டு மனநிலை சரியில்லாத ஒருத்தர் இருக்கற வீட்டுல சின்னப் பொண்னு எப்படி இருப்பா?’’ என்றார். நான் அங்கேயே உடைந்து அழுதேன். அவளது அப்பா வந்து, ‘’நீங்க இவ்வளவு டிராமா பண்ண வேண்டிய அவசியமே இல்லை. முன்னமே உங்க அப்பாவுக்கு இப்படி வந்திருந்தா நாங்க உங்க வீட்டுக்கு பொண்ணைக் கொடுத்திருக்கவே மாட்டோம்’’ என்றார். ’’ஒருவேளை இது பரம்பரை நோயா இருந்தா?’’ நான் அதிர்ச்சி அடைந்தேன். அன்று வீட்டுக்கு வந்து, ‘’அவன் வந்துட்டான். வெளியே நிக்கான். நம்ம வீட்டைத் தீ வச்சிக் கொளுத்தப் போறான்’’ என்று வெளியே ஓடிய அப்பாவைக் கடுமையாக அடித்து இழுத்து அறையில் இட்டுப் பூட்டினேன். நான் மெடிக்கல் லீவ் போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து அப்பாவுக்கு மருந்துகளைக் கொடுத்தேன். ஆபீசில் அதை மறுத்து மெடிக்கல் போர்டுக்கு மறு ஆய்வுக்கு அனுப்பினார்கள். நான் போகவில்லை. இந்த தேதிக்குள் நான் பணியில் சேராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் வந்தது. இந்தக் காலக்கட்டத்தில் தான் நான் உணர்வுப்பூர்வமாக இதுபோன்ற இடர்களைச் சமாளிக்கும் ஆற்றலும் மனத் துணிவும் உடையவன் அல்ல என்று உணர்ந்தேன். மாத்திரைகள் கொடுத்தும் அப்பாவின் பிரமைகள் நீங்கவில்லை. தீவிரமடைந்தன. நான் மெதுவாக நவீன மன சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இழக்க ஆரம்பித்தேன். டாக்டர் ராமேந்திரனின் பேச்சு நினைவுக்கு வந்தது. துரதிர்ஷ்டவசமாக நான் அவரது எண்ணை சேமித்து வைத்துக் கொள்ளவில்லை. நான் நண்பனுக்கு ஃபோன் செய்து அவன் எங்கிருக்கிறான் எனக் கேட்டேன். இந்த இடைப்பட்ட சமயத்தில் நாங்கள் ஒருமையில் விளித்துக் கொள்ளும் அளவுக்கு நட்பாகி இருந்தோம். அவரால்தான் அப்பாவை குணப்படுத்த முடியும் என்று தோன்றியது. அவன், ‘’எதுக்கு?‘’ என்றான். அவன் என் ஏமாற்றத்தை உணர்ந்திருந்தான். ’’அவர் நெல்லையை விட்டு போய் பத்து வருடங்களுக்கு மேல் இருக்குமே? உன் மூலமாகத் தான் மீண்டும் நான் அவரைக் கேளவிப்பட்டேன். அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்?’’ என்றான். பிறகு, ‘’விசாரிக்கிறேன்’’ என்றான். நான் இப்போது நவீன மன சாஸ்திரத்தை விட்டுவிட்டு வேறு வழிகளைத் தேட ஆரம்பித்தேன். Dianetics, Mad pride movement பற்றியெல்லாம் படித்தேன். விக்கிரவாண்டி ரவிச்சந்திரனிடம் போன் செய்து பேசினேன். அவர் எனது அம்மாவைப் போலத்தான் பேசினார். எனது அப்பாவின் உடலில் வேறொரு ஆன்மா இருக்கிறது என்றார். எங்கள் உறவினர்கள் யாரோ கரும காரியம் செய்து விட்டார்கள் என்றார். யார் அப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. அப்பா மிக மென்மையான மனிதர். அம்மா, அப்பாவின் வாழ்க்கையில் எப்போதோ வந்த ஒரு பெண் பற்றிப் பேசினாள். எல்லாம் அபத்தம். சிலர் சில கோவில்களுக்குப் போகச் சொன்னார்கள். அப்படியொரு கோவில்தான் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள திருமோகூர் என்ற ஊர்க் கோவில். திருமாலின் சுதர்சனச் சக்கரம் சக்கத்தாழ்வாராக அங்கே இருக்கிறார். சக்கரத்தாழ்வாருக்குப் பின்னால் யோக நரசிம்மர். வெளியே பெரிய ஆல மரங்கள் நடுவே கோவில் அதிகக் கூட்டமில்லாமல் இருந்தது. அப்பாவைக் கூப்பிட்டு போய் சன்னிதியில் நிற்க வைத்தோம். பட்டர், ‘’இங்கே வாறவங்கல்லாம் இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவங்க தான். நம்பிகையோட போங்க‘’ என்று பூசை செய்து செந்தூரமும் கொடுத்து விட்டார். அதிசயப்படும் விதமாக அங்கிருந்து திரும்பி வரும்போது அப்பா அமைதியாகி இருந்தார். எங்கோ யாரோ பேசுவதை, ஆணையிடுவதை, தலை சாய்த்து உற்றுக் கேட்பதை, நிறுத்தி இருந்தார். இரண்டே நாட்களில் அவரது மாற்றம் வெகுவாக இருந்தது. ஒரு நாள் தானே போய் முடிவெட்டிக் கொண்டார். ஒரு நாள் பூர்ணகலா தியேட்டரில் போய் படம் பார்த்துவிட்டு வந்தார். ஏதோ வெங்கடேஷ் நடித்த ஒரு தெலுங்கு டப்பிங் படம். “படம் நல்லா இல்லே” என்று சொன்னார். நான் அவரை அம்மாவிடம் விட்டுவிட்டு ஆபீசுக்குப் போனேன். தினம் போன் செய்து கேட்டுக் கொண்டேன். ஒரு நாள் அவரே எடுத்து பேசினார். “எனக்கு ஒன்னுமில்லடா. நீ வரும்போது மார்த்தாண்டம் தேன் வாங்கிட்டு வா’’ என்றார். வாழ்க்கை மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியது போல தோன்றியது. ஒரு நாள் மனைவி போன் செய்தாள். ’’அடுத்த வாரம் குழந்தைக்கு முதல் பொறந்த நாள் வருது’’ என்றாள். ’’அப்பா ஒரு ஆயுஷ் ஹோமமும் கணபதி ஹோமமும் பண்ணலாம்னு நினைக்கறாங்க’’. நான் ‘’சரி‘’ என்றேன். ’’நீ எப்போ வீட்டுக்கு வரே? நான் கூட வீட்டுல அப்படி ஒன்னு பண்ணனும்னு நினைக்கறேன்.’’ அவள், ‘’உங்க வீட்ல இல்லே. எங்க வீட்ல’’ என்றாள். நான், ‘’இப்போ அப்பாவுக்கு குணமாயிடுச்சு‘’ என்றேன். அவள் எனது கோவில் பிரவேசங்களை எல்லாம் ஆர்வமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, திரும்பத் திரும்ப, ‘’டாக்டர் என்ன சொன்னார்?’’ என்றே கேட்டுக் கொண்டிருந்தாள். ’’மாத்திரைகளைக் கொடுக்கறதை நிப்பாட்டிட்டீங்களா?’’ நான், ‘’இல்லை‘’ என்றேன். நான் மாத்திரைகளையும் கொடுத்துக்கொண்டு தான் இருந்தேன். இம்முறை அப்பாவே எடுத்துச் சாப்பிட்டார். அவள், ‘’டாக்டர் குணமாயிடுச்சின்னு சொன்னா வருவது பற்றி பேசிப் பார்க்கிறேன். இவங்கல்லாம் என்ன சொல்றாங்கன்னா..’’ நான் போனை வைத்துவிட்டேன். ஆனால் அந்த வார இறுதியில் அவள் சொன்னபடி நண்பனிடம் அழைத்துப் போனேன். நான் செய்த மிகப்பெரிய தவறு அது. அவன், “கொஞ்சம் பரவாயில்லை மாதிரி தெரியுது. மாத்திரை இப்பதான் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு. பொதுவா ஒரு மூணு மாசம் வரை எடுத்துக்கும். நிப்பாட்டிடாதீங்க’’ என்றான். ஒரு ஊசி போட்டான். அப்பா விரிந்த விழிகளுடன் எல்லாவற்றையும் பார்த்தபடியே வந்தார். அதுவரைக்கும் தான் சாப்பிடும் மாத்திரைகள் தனது இருதயத்துக்கானவை என்று நம்பியிருந்தார். இல்லை என்று அறிந்ததும் மௌனமாகி விட்டார். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்ததும் பைபாஸில் உள்ள சரஸ்வதி காயத்திரி ஓட்டல் சென்று சப்பாத்தியும் காபியும் சாப்பிட்டோம். நாங்கள் சேர்ந்து சாப்பிட்ட கடைசி உணவு அது. திரும்பும் வழியிலேயே அப்பா மீண்டும் தனது மனச்சிதைவுக்குள் விழுந்துவிட்டார். 4 அதன்பிறகு நடந்த காரியங்கள் அலுவலகத்தில் இருந்து உடனடியாக வீட்டுக்குச் செல்ல விரும்பும் ஒரு மனிதர் செய்யும் காரியங்கள் போல இருந்தன. கட்டுப்பாடு இல்லாமல் வேகமாக ஓடும் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல நான் உணர்ந்தேன். அந்தத் திரைப்படத்துக்குள் நானும் இருந்தேன் அல்லது இருந்தேனா? மறுநாள் நான் கண்ணீருடன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வேலைக்குப் போனேன். இரண்டாம் நாளே அம்மா போன் செய்து விட்டாள். ’’சங்கரு உங்கப்பன் இரண்டு நாளா படுக்கையை விட்டு எந்திருக்கவே இல்லலே. நீ வந்தா நல்லது.’’ நான் சென்றபோது அப்பா மலமூத்திராதிகள் நடுவே ஈ மொய்க்கக் கிடந்தார். ’’எல்லாம் போச்சு. எல்லாம்’’ என்று பிதற்றிக் கொண்டிருந்தார். ’’நாத்தத்தில கிடக்கேன். நாத்தத்திலே‘’ என்றார். கண்களிலிருந்து கண்ணீர் கரகரவென்று வழிந்தது. நான் அப்படியே வாரிக்கொண்டு போய் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். பத்து நாட்களும் லட்ச ரூபாயும் போன பிறகு அவர்கள் முடியாது என்று அனுப்பி வைத்தார்கள். படுத்துப் படுத்து அவருக்குப் படுக்கைப் புண் வந்திருந்தது. ஸ்டிரெச்சரிலிருந்து தூக்கும்போது அவரது முதுகுத்தோல் அப்படியே ஒரு பிலிம் போலக் கழன்று அதோடு ஒட்டிக்கொண்டது. வீட்டுக்குக் கொண்டுவந்த மறுதினம் காலை இறந்துபோனார். விஷயம் தெரிந்ததும் என் மனைவி வந்துவிட்டாள். அவளது உறவினர்கள் தான் எல்லா வேலையையும் செய்தார்கள். எதையும் செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் அதை ஒரு கொண்டாட்டம் போலச் செய்தார்கள். திருமண வீட்டு வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் காட்டுகிற அதே உற்சாகம். பதினாறு நாள் காரியம் முடிகிற வரைக்கும் நான் வெளியே செல்லக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பதினாறு நாளும் செய்யவேண்டிய சடங்குகள் நிறைய இருந்தன. நான் மெதுவாக, இறந்தவரை உயிரோடு இருப்பவர் விரைவாக மறக்கச் செய்வதே அந்தச் சடங்குகளின் நோக்கம் என்று கண்டுபிடித்தேன். உதாரணமாக, அப்பாவின் பூத உடலிலிருந்து நான் ஒரு சிறிய பகுதியையாவது, ஒரு சிறிய எலும்பு மாத்திரமாவது எடுத்து வைத்துக் கொள்ள விரும்பினேன். அவர்கள் அனுமதிக்கவில்லை. பதினாறாம் நாள் காரியம் ஒரு சிறிய கல்யாணம் போலவே நடந்தது. விருந்துடன். நான் அதுவரை பார்த்திராதவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். கூடத்தில் சிரிப்பொலி நிறைந்திருந்தது. அதில் என் மனைவியின் சிரிப்பொலியையும் கேட்டேன். நான் கசப்புடன் எழுந்து மெல்ல வெளியே வந்தேன். இம்முறை யாரும் தடுக்கவில்லை. பதினாறு நாட்களுக்குப் பிறகு இறந்தவர்களுக்கு வாழ்பவர்கள் மீதான செல்வாக்கு முற்றிலும் மறைந்துவிடுவதாக அவர்கள் நம்பினார்கள். நான் பேருந்து ஏறி ஜங்க்‌ஷன் வந்தேன். அப்பாவும் நானும் போகும் இடங்களில் எல்லாம் போய்ப் போய் நின்றேன். லேசாகக் குளிர்க் காய்ச்சல் வருவது போல் இருந்தது. வானம் இருண்டுகொண்டே வந்தது. சூரியா டீ ஸ்டாலில் டீ சாப்பிட்டுக்கொண்டிருந்த போது நண்பன் போன் அடித்தான். முதலில் எடுக்கவில்லை. பிறகு எடுத்தேன். ’’என்ன?’’ என்றேன். ’’அப்பா விஷேசத்துக்கு வீட்டுக்கு வந்தேன். நீ எங்கே போயிட்டே?’’ என்றான். ‘’சங்கர் வீட்டுக்கு உடனடியா வா. இல்லேன்னா என்னோட க்ளினிக்குக்கு.’’ ‘’ஏன்?’’ என்றேன். ’’அதான் அப்பா செத்துப் போயிட்டாரே?’’ ‘’இல்லடா. நீ அந்த டாக்டர் ராமேந்திரன் பத்திக் கேட்டே இல்லே?’’ ‘’ஆமா’’ ‘’இன்னிக்குத் தான் ஒரு பிரண்டு சொன்னான். அவரு அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே மதுரைல ஒரு லாட்ஜ்ல செத்துப் போயிட்டாராம்’’ நான், ‘’நான்சென்ஸ்’’ என்றேன். ‘’ஆமாடா. அவர் மனைவி சூசைடுக்குப் பிறகு கொஞ்சம் ஆளு சரியில்லாம இருந்தாராம். பிறகு எம் சி ஐ தடை வேற’’ நான், ‘’அவர் மனைவி பேரு ஜெயந்தியா?’’ என்றேன். ‘’ஆமா. அவங்க இறக்கும்போது மாசமா இருந்தாங்க போல. இந்தக் கதை எல்லாம் அப்போ நெற்றிக்கண் பத்திரிகைல ஒரு தொடரா வந்ததுன்னு அவன் சொல்றான். நீ அதைப் படிச்சிருக்கே.’’ நான், ‘’இல்லை’’ என்றேன். பிறகு குரல் நடுங்க, ‘’நீங்கள்லாம் என்ன சொல்றீங்க?’’ என்றேன். ’’நீ அவ கிட்டே… அவங்க உன்கிட்டே பேசிட்டாங்க. அப்படித்தானே?’’ அவன், ‘’யாருகிட்டே? நீ முதல்ல என் க்ளினிக்குக்கு வா.‘’ ‘’என் பொண்டாட்டி கிட்டே. அவ வீட்டு ஆளுங்ககிட்டே.’’ ‘’என்னடா உளர்றே? நீ முதல்ல என் க்ளினிக்குக்கு வா. எல்லோரும் உன்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க. இல்லேன்னா வீட்டுக்காவது போ.’’ நான் அமைதியாக இருந்தேன். ‘’சரி’’ என்றேன். ‘’அப்பா கேசு வேற. அப்பாவுக்கு உடல்ல பிரச்சினை நிறைய இருந்தது. என்னாலே உனக்கு உதவ முடியும்’’ என்றான் அவன். நான், ‘’சரி’’ என்றேன். 5 என் தலைக்குள் ஒரு வினோத தினவு ஏற்பட்டது. வேதனை போன்ற இன்பம். இன்பம் போன்ற ஒரு வேதனை. ஒரு கவிதை எழுதும் முன்பு, சதுரங்க விளையாட்டில் ஒரு முக்கியமான நகர்த்தலைச் செய்வதற்கு முன்பு, நமது மூளைக்குள் ஒரே நேரத்தில் ஏற்படும் அமைதியும் பரபரப்பும். ஆனால் அது சில கணங்கள்தான். அதன்பிறகு நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு ரொம்பத் தெளிவாக இருந்தது போல் நடந்துகொண்டேன். மறுபடி பஸ் ஏறி டவுன் போனேன். டாக்டர் சொல்லியிருந்த விலாசம் தெளிவாக நினைவில் இருந்தது. டவுனில் ஒரு வளவு வீடு. பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி, ‘’முப்பிடாதியா? பீடி கட்டுனதைக் கொடுக்க பண்டல் ஆபீக்குப் போயிருப்பா’’ என்றாள். ’’உள்ளே போய் உக்காருங்க. சொல்லிட்டுத் தான் போனா. சாந்தி கல்யாண விஷயமா வந்திருக்கீகளோ?’’ நான், ‘’அஹ்…ஆமா’’ என்றபடி உள்ளே போனேன். அந்த வீட்டின் இருட்டுக்குப் பழகிக் கொள்வது சற்று சிரமமாக இருந்தது. நீளமாக ஒற்றை ஒற்றையாய் செல்லும் அறைகள் கொண்ட வீடு. முதல் அறையில் இருந்த ஸ்டீல் நாற்காலியில் அமர்ந்தேன். ஒரு கருப்பு வெள்ளை டிவி இருந்தது. கூடத்தின் நடுவில் காய்கறி அரியும் ஒரு அரிவாள்மனைக்கு அருகில் கத்தரிக்காய் நறுக்கப்பட்டு அப்படியே பாதியில் விடப்பட்டுக் கிடந்தது. உள்ளே இருந்த அறையில் ஒரு தொட்டில் இருப்பதும் அது அசைவதும் தெரிந்தது. அதன் கீழ் நீர்க்கோலம். ஒரு முருகன் காலண்டர். பிறையில் இருக்கும் விளக்கு. சுவரில் புகைப்படங்கள். நான் எளிதாகவே அந்தப் புகைப்படத்தைக் கண்டுகொண்டேன். மற்ற படங்கள் நடுவே மூன்று பெண்கள் சேர்ந்து நிற்கிற புகைப்படம். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவள் வந்தாள். ‘’வாங்க வாங்க. லைட்டைப் போட்டுக்கிட்டா என்ன?’’ என்றாள். ’’புரோக்கர் சொல்லிருந்தாரு வருவீங்கன்னு. இந்தா தானேன்னு போனேன். காப்பி சாப்பிடுதீகளா?’ நான் அவளைப் பார்த்தேன். கோர்ட்டில் பார்த்தபிறகு இன்றுதான் அவளைப் பார்க்கிறேன். அப்போது ரொம்ப ஒடிசலாக இருந்தாள். இப்போதுதான் குழந்தை பெற்றிருக்கிறாள் போல. இன்னொரு குழந்தை! மார்புகள் தடித்து ரவிக்கைக்கு வெளியே வரத் துடித்துக்கொண்டிருந்தன. அவள் என்னைப் புதிதாகப் பார்ப்பது போலவே நடந்துகொண்டது ஆச்சர்யமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. அவள், ‘’இருங்க காப்பி போட்டுட்டு வாரேன் ’ என்றாள். அவள் கடந்து போகும்போது அவள் மார்பு வாசம் உணர்ந்து தொட்டிலில் இருந்த குழந்தை துள்ளி அசைந்தது. ‘’ஓ.. அம்மோ.. அம்மோ வந்தது தெரிஞ்சிடுச்சோ? ஜெயாக்குட்டி.. இருடி வாரேன்’’ என்று அவள் பேசுவது கேட்டது. அவள் காப்பியைக் கொண்டுவந்து கொடுத்து, ‘’குடியுங்க. இந்தக் குட்டியைக் கொஞ்சம் கவனிச்சிட்டு வாரேன். பசிக்குது போலிருக்கு.’’ நான் சற்று நேரம் காபிக் கோப்பையை உருட்டியபடி இருந்தேன். பிறகு மெதுவாக எழுந்தேன். மெல்ல எட்டி உள்ளே பார்த்தேன். அவள் தரையில் அமர்ந்து ஜாக்கெட்டை தளர்த்தி குழந்தைக்கு முலை கொடுத்துக் கொண்டிருந்தாள். நிழல் கண்டு நிமிர்ந்து பார்த்தாள். குழந்தையும் முலையை விட்டுவிட்டு என்னைப் பார்த்தது. பருத்துப் புடைத்த முலை அதன் முகத்தின் மேல் ஒரு கேள்விக்குறி போல் நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்து ஒரு துளி பால் நழுவி குழந்தையின் முகத்தில் சொட்டியது. அவள் முகம் கடினமாகி, ‘’அண்ணே வெளியே இருங்க.. பால் கொடுத்திட்டு …’’ ஆனால், அந்த நொடியில், அந்த நொடியில், முப்பிடாதி என்னைச் சரியாகக் கண்டுகொண்டாள். ‘’எலேய்.. டாக்டர் நாயே’’ என்றபடி எழ முயன்றாள். நான் அதற்குள் பாய்ந்து அவள் முடியைப் பிடித்து, ‘’கொன்னாலும் உங்க தேவிடியாத்தனத்தை விட மாட்டீங்க. என்னட்டி?’’ என்று கத்தியபடியே அரிவாள்மனையால் அவள் கழுத்தைக் கரகரவென்று அறுக்க ஆரம்பித்தேன். http://tamizhini.co.in/2020/05/16/உடைவு-போகன்-சங்கர்/
 4. ஏழு வருடங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்குப் போனபோது அங்கு எஞ்சியிருந்தவர்க “இடையில் 30 வருடத்தைக் காணோம்” என்பது போல 83 க்கு முன்னைய காலத்தவர்கள் போலக் கதைத்தார்கள். அதன் பின்னர் போகவே மனம் வரவில்லை. அப்படி எல்லோரும் ஏன் ஒரு போராட்டம் நடந்தது என்பதை மறந்து இடையிடையே சடங்காகத்தான் நினைவுகூர்கின்றார்கள். இன்னும் பத்து வருடத்தில் சடங்கும் நின்றுபோய்விடும்!
 5. இப்போதும் நேரே சொல்ல பயம் இருக்கின்றதாக்கும். எல்லோருக்கும் சொல்ல/எழுத ஏதோ இருக்கும்தானே. புதிதாக ஏதாவது சொல்கின்றார்களா பார்ப்போம்!
 6. தமிழ் மக்கள் தேசமாகவும் இல்லை. தேசியமாகவும் இல்லை! இரண்டும் தமிழர்களைப் பொறுத்தவரை கற்பிதமே!
 7. மயங்குகிறாள் ஒரு மாது – சி.சரவணகார்த்திகேயன் கடந்த காலங்களில் ரமணிசந்திரன் எழுத்துகள் பற்றி நான் சமூக வலைதளங்களில் விமர்சன‌க் கருத்துகள் சொல்லி கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து இருக்கிறேன். அவரது வாசக பலம் அப்படி. கிட்டத்தட்ட ஒரு தற்கொலைப் படை மாதிரியான விசுவாசமான வாசகிகள் திரள். நான் முன்வைத்த கருத்துகள் பெரும்பான்மை பகடியானவை என்பதால் இது பற்றிய என் எண்ணங்களைக் கொஞ்சம் சீரியஸாக எழுதிப் பார்க்கலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் இது ஒரு சுயபரிசீலனை. ரமணிசந்திரன் 1970லிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். படைப்புலகில் அவருக்கு இது பொன்விழா ஆண்டு. அதற்கு முதலில் அவருக்கு வாழ்த்துகள். 2014ல் அவள் விகடன் பேட்டியில் அது வரை 157 நாவல்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறார். ஸ்டாக் உண்டோ இல்லையோ என் அத்தனை நூல்களையும் பட்டியலிட்டிருக்கும் ஒரு தளம் காமன்ஃபோக்ஸ்.இன். அவர்கள் கணக்குப்படி இன்றைய தேதியில் ரமணிசந்திரன் 183 நாவல்கள் எழுதி இருக்கிறார். ஒருவேளை விடுபாடுகள் இருந்தாலும் அதிகபட்சம் 200 நாவல்கள் வரை போயிருக்கலாம் என்பதாக‌க் கணிக்கிறேன். கணக்குப் பார்த்தால் சராசரியாக ஆண்டுக்கு நான்கைந்து நாவல்கள் வருகின்றன. நல்ல எண்ணிக்கை தான். விபத்தாகவே எழுத்துத் துறைக்குள் வந்திருக்கிறார். ராணி, தினத்தந்தி என ஊடக உறவினர்கள் சூழ்பின்புலமானது அதற்கு முக்கியத் தூண்டுதலாய் இருந்திருக்கிறது. ரமணிசந்திரன் ரமணிசந்திரனில் ரமணி என்பது மட்டும் அவரது பெயர்; சந்திரன் அவர் கணவரின் கொடை. இந்தப் பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் ஏன் தம் கணவர் பெயரையும் தம் பெயருடன் இணைத்துக் கொள்கிறார்கள் என யோசித்திருக்கிறேன். இரண்டு காரணங்கள் தோன்றின. முதலாவது அதுவே ஒரு குறியீடு. தான் குடும்பம் எனும் வட்டத்துள் நின்று குடும்பப் பாங்கான கதைகளை மட்டுமே எழுதுவேன் என்ற மறைமுக அறிவிப்பு அதில் இருக்கிறது. அடுத்து அது கணவருக்கு வழங்கப்படும் நன்றி அல்லது லஞ்சம். தன்னை எழுத அனுமதிப்பதற்கும், அதற்கு வேண்டிய உதவிகள் செய்வதற்கும் பதிலீடாக அவரது பெயருக்குத் தரும் ஒரு கௌரவம். ரமணிசந்திரனை நான் என் ஒன்பதாம் வகுப்பு கோடை விடுமுறையில் வாசித்தேன். அப்போது நான் ராஜேஷ்குமார் ரசிகன் (அன்று அவரது பாணியில் ஒரு சிறுநாவலும் எழுதியிருந்தேன்). பொன்னியின் செல்வன் வாசித்திருந்தேன். குமுதம், ஆனந்த விகடன் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். கோவையில் பிஎஸ்என்எல்லில் பணிபுரிந்து கொண்டிருந்த என்னுடைய‌ அத்தை கிருஷ்ணவேணி தன் அலுவலக நூலகத்திலிருந்து தினம் இரண்டு நூல்கள் எனக்கு எடுத்து வருவார். இப்போது binge watching என்கிறார்களே, அது போல் binge reading நாட்கள். அப்படி அறிமுகமானவர்கள் தாம் சாண்டில்யன், பாலகுமாரன், லக்ஷ்மி, அநுத்தமா, ரமணிசந்திரன் முதலானோர். அப்படி சுமார் 20 ரமணிசந்திரன் நாவல்கள் வாசித்திருப்பேன். ஐந்தாறு லக்ஷ்மி நாவல்கள். ஓரிரு அநுத்தமா நாவல்கள். அப்போதே ரமணிசந்திரன் நாவல் ஏதும் பெரிதாய் ஈர்க்கவில்லை. அவருக்கு முற்காலத்தவர்களான லக்ஷ்மி மற்றும் அநுத்தமாவின் எழுத்துகள் மேலானதாகத் தோன்றின. (குறிப்பாக லக்ஷ்மியின் மிதிலா விலாஸின் காட்சிகள் இப்போதும் நினைவில் இருக்கின்றன.) இந்தப் பெண் எழுத்தாளர்கள் எல்லோரையும் விட பாலகுமாரன் மனதுக்கு நெருக்கமானவராக இருந்தார். அவரே பெண்களையும் அவர்த‌ம் மனதையும் நேர்மையாகக் காட்டியதாக எண்ணினேன். ரமணிசந்திரனின் பாத்திர வார்ப்புகள் செயற்கையாக, யதார்த்தத்தில் இருந்து விலகி, அந்தரத்தில் நின்றதாகத் தோன்றின. அது ஒரு விலகலை அளித்தது. (அப்போது எனக்கு பதின்வயது என்பதையும் இங்கே அடிக்கோடிட விரும்புகிறேன்.) அப்புறம் எது இல்லையென்றாலும் நடை ஒரு வெகுஜனப் புனைவுக்கு மிக முக்கியம் எனக் கருதுகிறேன். சுஜாதாவின் பல தொடர்கதைகள் உள்ளடக்கம் சற்று முன்பின் இருந்தாலும் தப்பித்தது அவரது அபாரமான நடையால் தான். பாலகுமாரன் குமுதம் இதழில் தொடராக எழுதிய ‘இது தான் காதல் என்பதா’ ஒரு கதைக்குரிய அம்சங்கள் கொண்டிருக்கவில்லை என்றாலும் பிழைத்தது நடையால். ரமணிசந்திரனுடையது சற்றே அலுப்பூட்டும் நடை. அதுவும் அந்த மனவிலக்கத்துக்கு முக்கியக் காரணம். அது தான் கடைசி. அதிலிருந்து இன்று சுத்தமாய் இருபதாண்டுகள் ஓடி விட்டன. பிறகெப்போதும் ரமணிசந்திரனை வாங்கியதோ, வாசித்ததோ, வாய்ப்பிருந்தும் நூலகத்தில் எடுத்ததோ இல்லை. இது தான் ரமணிசந்திரனுக்கும் எனக்குமான உறவு. * இவ்விடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வெகுஜன எழுத்துக்கு (அல்லது சினிமா உள்ளிட்ட எந்த வெகுஜனப் படைப்பு வடிவிற்கும்) எதிரானவன் அல்லன். இவ்விஷயத்தில் ஜெயமோகனிலிருந்து மிக வேறுபடுகிறேன். “வணிக எழுத்து இலக்கியத்துக்கு ஆட்களைக் கொண்டுவந்தது என்பது ஒரு மாயை. உண்மையில் அது இலக்கியத்தை மறைக்கிறது. இலக்கிய வாசிப்புக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. வணிக எழுத்தே இலக்கியம் என்று சொல்லப்பட்டு நம்பப்படுகையில் அடுத்தக்கட்ட இலக்கியத்துக்கான தேடலே இல்லாமல் ஆகிறது. கணிசமான கேளிக்கை வாசகர்களின் மனநிலை இது. அவர்களுக்கு இலக்கியம் தற்செயலாக அறிமுகமானால்தான் உண்டு” என்பது தான் ஜெயமோகனின் கருத்து. வெகுஜன எழுத்து வாசிப்பானது கொஞ்சம் சதவிகித வாசகர்களையேனும் நிச்சயம் சீரியஸ் இலக்கியத்தின் பக்கம் நகர்த்தும் என நான் நம்புகிறேன் என்பது ஒருபுறம் இருக்கட்டும், ஜெயமோகன் சொல்வது உண்மையே என்றாலும் அதற்காக வெகுஜன எழுத்தைப் புறந்தள்ள முடியாது. அது ஒரு ரசனை நுகர்வுப் பண்டம் என்கிற அடிப்படையில் சமூகத்தில் ஜீவித்திருக்க வேண்டியது மிக அவசியம். சுதந்திர, ஜனநாயக தேசத்தில் மக்கள் தமக்குப் பிடித்த விஷயத்தைப் பெற எந்தத் தடையும் இருக்கக் கூடாது – அந்த விஷயம் உயர்வு அல்லது தாழ்வு என்கிற மதிப்பீடுகள் எல்லாம் தாண்டி. அதனால் வெகுஜன எழுத்தின் இருப்பை ஆதரிக்கிறேன். அதன் செழிப்பை வரவேற்கிறேன். அவ்வகையில் ரமணிசந்திரன் மாதிரி எழுத்துக்களும் சமூகத்தில் நிச்சயம் இருக்கலாம். அதை வாசகர்கள் போஷிக்கலாம். தவறே இல்லை. இத்தனை வாசிப்பிற்குப் பின்பும் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய வெகுஜன‌ எழுத்தாளர்களை இன்னமும் விரும்பி வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சமீப ஆண்டுகளில் சிறந்த வெகுஜன எழுத்தாளராக உருவாகியுள்ள ஷான் வரை இந்த‌ எழுத்துக்களின் தேவை அவசியம் என‌ அழுத்திச் சொல்கிறேன். ஆக, நான் என் வாசிப்புத் திமிரைக் காட்டும் அற்ப எண்ணத்தில், வெகுஜன எழுத்து கேவலம் என்றெண்ணி ரமணிசந்திரன் எழுத்துகள் மீதான என் விமர்சனத்தை வைக்கவில்லை. பிறகு என்ன தான் பிரச்சனை? ரமணிசந்திரன் அவரது எழுத்தின் இயல்பை உணர்ந்த, அதை விரும்பும் வட்டத்துக்காக மட்டும் தானே எழுதுகிறார்? இரு தரப்பும் பரஸ்பரம் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதில் உனக்கு என்ன வந்தது என்பது வழமையான பழமையான கேள்விக‌ள். அக்கேள்விகள் நியாயமானவை தாம். ரமணிசந்திரன் எழுத்துகளில் எந்தத் தரிசனமும், தத்துவார்த்தமும் கிடையாது – எந்தவொரு வெகுஜன எழுத்தையும் விட அவரது நாவல்களில் அது சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். அவரது எழுத்திலிருந்து வாசகன் பெற்றுக் கொள்ள ஏதுமில்லை. ஆனால் அவரே அவரது எல்லையைத் தெளிவாக‌ வகுத்துக் கொண்டு விட்டதால் இதை எதையும் நான் அவரது எழுத்துகளில் எதிர்பார்க்கவும் இல்லை. பிறகு ஏன் ரமணிசந்திரன் எழுத்துகளை விமர்சிக்கிறேன்? அவரது எழுத்தில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அதைச் சுட்டுவதே என் விமர்சனங்களின் மைய நோக்கு. அவர் ஒரே ஒரு டெம்ப்ளேட்டை கடந்த ஐம்பது ஆண்டுகளாக எடுத்தாண்டு கொண்டிருகிறார். தலைப்பு, அட்டையை அகற்றி விட்டால் அவரது நாவல்கள் எல்லாமே ஒன்று தான். அவரது சுமார் இருபது நாவல்களை வாசித்திருப்பதாகச் சொன்னேன். அவற்றில் ஒன்றின் தலைப்பு கூட இன்று நினைவில்லை. ஒரே விஷயத்தை வெவ்வேறு கதாபாத்திரங்களையும், மாற்றப்பட்ட புன்புலங்களையும் வைத்து ஆண்டுக்கணக்கில் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பதால் யாருக்கு என்ன லாபம்? எழுத்தாளனும் ஓர் அங்குலம் கூட நகரவில்லை; வாசகரையும் கொஞ்சமும் முன்னேற விடவில்லை என்று தானே அர்த்தம்! எழுத்தாளரோ, வாசகரோ இயந்திரம் அல்ல. செக்கு மாடு அல்ல. அவர்கள் மெதுவாகவேனும் நகர வேண்டும். அது அரை நூற்றாண்டாக நடக்கவில்லை என்பது ஒருவித‌ சலிப்பை அளிக்கிறது. எனக்குப் பிடித்த வெகுஜன எழுத்தாளர்களாய் நான் குறிப்பிட்ட மூவரிலும் இந்தப் பிரச்சனை இல்லவே இல்லை என்பதையும் இவ்விடத்தில் சுட்ட விரும்புகிறேன். அடுத்து அவரது எழுத்தின் உள்ளடக்கத்திற்கு வருவோம். அது வாழ்க்கையைப் பேசுவதில்லை. யதார்த்தத்தைக் காட்டுவதில்லை. அது காட்டுவதெல்லாம் ஒரு கற்பனை உலகை. ஒரு பகற்கனவை. அதில் ஓர் ஆபத்து இருக்கிறது. அந்த எழுத்து வாசகரை ஒரு கற்பனாவாத உலகிற்கு இழுத்துச் சென்று, அதை உண்மை என நம்ப வைக்கிறது, அது போல் வேண்டும் என எதிர்பார்க்க வைக்கிறது. அது ஒரு நப்பாசை. நப்பாசை என்றே தெரியாத நப்பாசை. (ஒருவகையில் ரமணிசந்திரன் நாவல்களின் ஒளி ஊடக வடிவம் தான் திருமுருகனின் தொலைக்காட்சி சீரியல்கள் எனலாம்.) அந்தரத்தில் மிதக்கும் அழகிய கற்பனை. பூமியில் கால் பதித்த நிஜ வாழ்வில் அது இல்லை என்றாகும் போது கடும் ஏமாற்றத்தையும் உளைச்சலையும் நிஜ வாழ்வில் வாசகருக்கு அளிக்கிறது. சில சமயம் அதன் பாதிப்பு நிஜ வாழ்வில் பிரதிபலிக்கிறது. இந்த‌ விஷயம் வணிகரீதியாகத் திட்டமிட்டே செய்யப்படுகிறது என்றே நம்புகிறேன். எல்லா பெண்கள் மாத‌ நாவல்களின் அட்டையிலும் ஓர் அழகான‌ பெண்ணின் முகம் தான் ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கும் அல்லது ஏதேனும் ஒரு நடிகையின் நிழற்படத்தைப் போட்டிருப்பார்கள். ஏன்? அது அந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் அந்நாவலின் நாயகியாக உணரச் செய்யும் உத்தி. அந்தக் கனவுலகில் தன்னைப் பொருத்திக் கொள்ள புத்தக அட்டையிலிருந்தே பொறி வைக்கிறார்கள். உடைத்துச் சொல்வதாக இருந்தால் உளவியல்பூர்வமாக‌ ஏமாற்றுகிறார்கள். அது வாசகருக்கு இழைக்கப்படும் துரோகம் என்றே சொல்வேன். போதை மருந்து போல். ராஜேஷ் குமார் நாவல் வாசித்து அதைப் போல் கொலை செய்வேன் என்று யாரும் கிளம்பி இருக்கிறார்களா? அது ஒரு சமூகத் தொந்தரவற்ற வெகுஜன எழுத்து. மாறாக ரமணிசந்திரன் வாசகிகள் அவரது நாவலை வாசித்து விட்டு அம்மாதிரி வாழ்வுக்கு, அம்மாதிரி வாழ்க்கைத் துணைக்கு ஆசைப்படுகிறார்கள். உண்மையில் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தாலுமே தன் கணவன் ரமணிசந்திரன் நாயகனின் இந்தக் குணம் இல்லையே, அந்நாவலின் ஹீரோ மாதிரி இச்சூழலில் நடந்து கொள்ளவில்லையே என எண்ணிக் குமைகிறார்கள். அதைத்தான் அது விளைவிக்கும் ஆபத்து என்கிறேன். இன்னொரு விஷயம் அவரது நாவல் நாயகிகளின் லட்சியவாதத் தன்மை. அவர்கள் எத்தனை கஷ்டத்திலும் நேர்மையாக இருப்பது போல் இருக்கும். அதுவும் வாசிக்கும் பெண்களுக்கு ஒரு மயக்கத்தை ஊட்டுகிறது. தான் நிஜத்தில் அப்படி இல்லையே என தன்னிரக்கம் எழுகிறது. அதற்கு அடுத்தபடியாக யதார்த்தத்தை உதறி விட்டு தானே அந்நாயகி என்று கற்பனை செய்து கொள்ள வைக்கிறது. அது அவர்களுக்கு ஒரு தற்காலிக மகிழ்ச்சியையும் குற்றவுணர்ச்சிகளிலிருந்து விடுதலையையும் அளிக்கிறது. அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. நிஜத்தில் ஏதும் மாற்றத்தைச் செய்ய எத்தனிப்பதில்லை. இந்த உளவியல் தான் அவரது நாவல்களின் பெருவெற்றி! சில பெண்கள் – ரமணிசந்திரனின் தீவிர வாசகிகள் – ஆண்களுக்கு எப்படி சரோஜா தேவி புத்தகங்களோ பெண்களுக்கு அதே போல் தான் ரமணிசந்திரன் நாவல்கள் என சமூக வலைதளங்களில் எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். (எழுத்தாளர் சவிதா வெங்கடகிருஷ்ணன் நேற்று கூட ரமணிச்சந்திரன் பற்றிய குறிப்பொன்றில் இதைச் சொல்லி இருந்தார்.) அதாவது நல்ல அர்த்தத்தில். பெண்கள் உடற்காமத்தை விட மென்மையாக மனதை வருடும் விஷயங்களின் மூலமாகத் தான் பெரும் திருப்தியை எய்துவார்கள், அதை அவர் எழுத்துக்கள் தருகின்றன என்ற பாஸிடிவ் அர்த்தத்தில். அவரது வாசிப்போ, வெளியுலக அறிமுகமோ அத்தனை விரிவானதல்ல என அவரே பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார். அதிகபட்சம் ஜெர்ஃப்ரி ஆர்ச்சர். ஆக, ஒரு house-wifeனால் லட்சக்கணக்கான house-wifeகளுக்காக எழுதப்பட்டவை ரமணிசந்திரன் நாவல்கள். இந்தியக் கலாசாரத்துக்குள் நின்று எழுதப்பட்ட Mills & Boon இப்புதினங்கள். நான் ரமணிசந்திரன் தீவிர வாசகர்களைப் புரிந்து கொள்கிறேன். ரமணிசந்திரனைக் குறை சொல்வது அவர்களின் அறிவின் உயரத்தை நேரடியாகத் தாக்குவதாகவே புரிந்து கொள்கிறார்கள் என‌. துரதிர்ஷ்டவசமாக அது உண்மையும் கூடத்தான். அவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், கண்டும் காணாமல் கடப்பது தான் இதைக் கையாளும் எளிய வழி. நவீன இலக்கியம் என்பது விமர்சனங்களால் செழுமையுறுவது. அதனால் இந்தத் தரப்பிலிருந்து கடுமையான கருத்துகள் வந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டிய ஒரே விஷயம் நவீன இலக்கிய ஆட்களால் அவ்வப்போதேனும் பொருட்படுத்தி விமர்சிக்கப்படும் இடத்தில் இன்றும் ரமணிசந்திரன் இருக்கிறார் என்பது தான். காரணம் அவரது வாசகப் பரப்பு மற்றும் விற்பனை வீச்சு. நவீனப் பெருங்கவி அடையாளம் கூடத் காணப்படாமல் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் உட்கார்ந்திருக்கும் போது எந்த ஓர் ஆழமும் இல்லாத எழுத்து லட்சக்கணக்கில் விற்று உச்ச நட்சத்திரமாகக் கருதப்படுவது எரிச்சலை ஊட்டும் தான். உலகம் எங்கிலும் உள்ள ஓர் சிற்றிலக்கிய வட்ட மனநிலை தான் இது. அம்மாதிரியான நவீன வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களை ரமணிசந்திரன் தீவிர விசிறிகள் பாவம் பார்த்து மன்னித்து நகரலாம். மாறாக அவர்கள் விமர்சனத்தை மேட்டிமைத்தனம், மண்டைக் கொழுப்பு என எண்ணினால் அது சிறுபிள்ளைத்தனம். * எனில் என்ன அர்த்தம்? ரமணிசந்திரன் நாவல்களை வாசிக்கவே கூடாதா? அப்படி இல்லை. பதின்மங்களில் ரசித்துக் கூட‌ வாசிக்கலாம். கற்பனை செய்யலாம். அது அறியாத வயது. பிறகு அதெல்லாம் ஒரு பகற்கனவு எனப் புரிந்து விட வேண்டும். அதன் பிறகும் வாசிக்கலாம். ஆனால் அது ஒரு ஃபேன்டஸி என்ற பிரக்ஞையுடன். தன் சொந்த வாழ்வைப் பாதிக்காத அளவில். ஆனால் அதற்கு மனமுதிர்ச்சி வேண்டும். அது பெரும்பான்மை இந்தியப் பெண்களிடம் கிடையாது என்பதால் இதெல்லாம் சிலருக்கே சாத்தியம். மற்றவர்கள் கடைசி வரை ரமணிசந்திரன் நாயகர்களை எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். அவருடையவை எளிய மனங்களுக்கான எழுத்து. கெட்ட ஆண்களைக் காதல் மூலம் திருத்தி தன்னை உருகக் காதலிக்க வைக்கலாம் என்ற நாடகீய நம்பிக்கைகளை விரும்புபவர்களுக்கானது. அவரை ரசிக்க ஏராள அப்பாவியாய் இருக்க வேண்டும். தமிழகத்தில் இத்தனை லட்சம் அப்பாவிகள் இருப்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. ரமணிசந்திரனுடைய நாவல்கள் எவரது மனதையும் புண்படுத்தாத ரம்மியமானவை. அவரது கதைகளில் வன்முறை இராது, பிரிவுகள் இராது, நோய்கள் கிடையாது, கெட்டவர்கள் கிடையாது, மரணம் இராது, சோகமே இல்லாத ஒரு கற்பனாலோகம் அவருடையது. இதை அவர் தெரிந்தே செய்கிறார். “என் கதைகள் கற்பனைகள் மட்டுமே. நிஜ வாழ்க்கையை என் எழுத்துக்குள் நான் கொண்டு வருவதே இல்லை. இன்றைக்குச் சண்டை போட்டவர்கள் இன்னும் சில வருடங்களில் சமாதானமாகி விடலாம்; அவர்கள் சண்டை போட்ட காலத்தில் அவர்கள் வாழ்க்கையைக் கதையாக எழுதி, அதை அவர்கள் சமாதானம் ஆன பின்பு படித்தால் எவ்வளவு வலிக்கும்?” என அவரே வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அவரது நோக்கம் என்றுமே உண்மை வாழ்க்கையைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதல்ல. இது மிக எலிமெண்டரியான பார்வை. ஆனால் பாவம், அவரது வாசகிகளுக்குத் தான் அந்தப் புரிதல் இல்லை. இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. ரமணிசந்திரனின் வணிக வெற்றியைப் பார்த்து அவரை நகல் செய்து சுமார் நூறு பெண் எழுத்தாளர்களேனும் இன்று மாதம் ஒரு நாவல் என எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ரமணிசந்திரன் போலவே அவர்களும் ஏகமாய் விற்கிறார்கள். (அவர்களில் பலருக்கு அது ஒரு தற்சார்பை அளிக்கிறது என்ற அளவில் அதை வரவேற்கிறேன்.) எல்லோருமே அதே டெம்ப்ளேட். அதே உணர்ச்சிகள். அதே கற்பனாலோகம். அதே கண்கள் சொருகிய ஏகாந்த நிலை வாசிப்பு. தொடக்கப் புள்ளியான ரமணிசந்திரனே சக்கை என்று சொல்லி விட்ட பிறகு இதெல்லாம் ஏன் எழுதவும் வாசிக்கவும் படுகின்றன என ஆதங்கமாய் இருக்கிறது. இதை எழுதுபவர்களும், வாசிப்பவர்களும் கொஞ்சம் முயன்றால் ஒரு வேளை இன்னும் வேறு மாதிரி எழுத்துக்கு நகரலாம். ஆனால் செய்யாமல் தேனில் விழுந்த வண்டு போல் இதிலேயே கிடக்கிறார்கள். எத்தனை பெரும் மனித வள இழப்பு! இந்தத் திசையில் ரமணிசந்திரன் சொல்லியிருக்கும் விஷயம் இது: “என்னைக் கேட்டா எல்லாப் பெண்களுமே எழுத்தாளர்கள்னுதான் சொல்வேன். பெண்களுக்கே கற்பனைத்திறன் ரொம்ப அதிகம். குழந்தைகளை வளர்க்கிறப்பவே தினமும் ஏதாவது கதை சொல்லிச் சொல்லித்தானே வளர்க்கிறோம். கதை சொல்லத் தெரிஞ்ச நம்மால், கதை எழுத முடியாதா என்ன?”. எழுத்தை இவ்வளவு அலட்சியமாக ஒரு வெகுஜனப் படைப்பாளி கூட அணுகக்கூடாது. அதற்கென்று ஒரு மரியாதையும் உழைப்பும் இருக்கிறது. பக்கத்தை நிரப்புவதும் பணம் சம்பாதிப்பதும் மட்டும் படைப்பு அல்ல. ரமணிசந்திரன் மீது (அல்லது அவரது நூற்றுக்கணக்கான நகல் எழுத்தாளர்கள் மீது) எனக்கு எந்த தனிப்பட்ட காழ்ப்போ பொறாமையோ அல்ல. ஆனால் நவீன இலக்கிய வாசகனாகவும், சமூகத்தின் மீதும் சமூகத்தில் சரிபாதியான பெண்கள்மீதும் அக்கறை கொண்டவனாகவும் சில கருத்துக்களைப் பதிவு செய்வதே என் மேலான விருப்பு. http://tamizhini.co.in/2020/05/16/மயங்குகிறாள்-ஒரு-மாது-சி/
 8. மன்னாரில் பிறந்து, கல்வி கற்ற தமிழரே அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் - முருங்கன் ரஜமஹா விகாரை விகாராதிபதி மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்தார். மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) அலுவலகம் நேற்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார். -இதன் போது அமைச்சருடன் உரையாடுகையிலேயே மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அவ்வாறு தெரிவித்தார். அவர் அமைச்சரிடம் மேலும் தெரிவிக்கையில், நீங்கள் சரியாக யோசிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் சேர்ந்து கடமையாற்ற வேண்டும். நான் உங்களுடன் முன்னுக்கு நிற்கின்றேன். எல்லாறும் வேலை செய்ய வேண்டும்.வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக புத்தளம் மற்றும் வேறு இடங்களில் இருந்து இங்கு வந்து வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளுகின்றனர். ஏன் காலி மாவட்டத்தில் உள்ள சிங்களவர் ஒருவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் வேறு மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வந்த அரசாங்க அதிபர். மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்படவேண்டும். என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/82629
 9. 2 ஆவது உலகப்போர் குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய முதலை உயிரிழப்பு ஜெர்மனியில் பெர்லின் நகரில் இரண்டாம் உலகப்போர் நடந்தபோது மேற்கொள்ளப்பட்ட குண்டு வீச்சில் உயிர் தப்பிய, 84 வயதுடைய முதலை ரஷ்ய தலைநகர் மொஷ்கோவில் உயிரிழந்துள்ளது. இந்த முதலை ஹிட்லருக்கு சொந்தமானது என்று ஒரு காலத்தில் வதந்தி பரவியது. "நேற்று காலை, எங்கள் மிசிசிப்பியைச் சேர்ந்த சாட்டர்ன் என்ற பெயருடை முதலை இறந்துவிட்டது. அதற்கு சுமார் 84 வயது, மிகவும் மரியாதைக்குரிய வயதில் முதலை இறந்துவிட்டதாக மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாட்டர்ன் என்று பெயரிடப்பட்ட அந்த முதலை 1936 ஆம் ஆண்டு அமெரிக்காவில் மிசிசிப்பியில் இருந்து ஜெர்மனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டு வந்த அந்த முதலை உலகப்போருக்குப் பின் ஹிட்லர் இறந்து போனதால் அங்கிருந்து 1946 ஆம் ஆண்டளவில் ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த முதலையை ஹிட்லர் வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ரஷ்யா கூறிவந்தது. பின்னர் அந்த முதலை மொஸ்கோவில் நீண்ட காலமாக வளர்க்கப்பட்டு வந்தது. "சாட்டர்ன் என்ற முதலையை 74 ஆண்டுகளாக வளர்த்த பெருமை எங்களுக்கு உண்டு" என அந்த உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உலகத்திலேயே மிகவும் வயதான முதலையாக சாட்டர்ன் இருந்திருக்கலாம். செர்பியாவில் பெல்கிரேட் உயிரியல் பூங்காவில் இருக்கும் மற்றொரு முஜா என்கிற ஆண் முதலையும் தனது 80 வயதுவரை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/82619
 10. பாகிஸ்தான் வசமுள்ள கஷ்மீரை இந்தியா கைப்பற்றுமா? - வேல் தர்மா 2020 ஜனவரியில் இந்திய படைத் தளபதி மனோஜ் நரவானே இந்தியப் பாராளுமன்றம் அனுமதித்தால் தமது படையினர் பாக்கிஸ்த்தான் கைப்பற்றி வைத்திருக்கும் கஷ்மீரைக் கைப்பற்றத்தயார் என்றார். 2020 பெப்ரவரி 23-ம் திகதி இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் இந்தியா பாக்கிஸ்த்தான் ஆக்கிரமித்திருக்கும் கஷ்மீரை “மீளக் கைப்பற்றுவது” செய்யக் கூடிய ஒன்று ஆனால் இலகுவானதல்ல என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் இந்தியா செய்ய வேண்டி படை நடவடிக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. 1. இந்தியாவின் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பல் தனது அமெரிக்கத் தயாரிப்பு F/A-18 Super Hornet விமானங்களுடனும் மற்ற போர்க்கப்பல்களுடனும் அரபிக்கடலில் செயற்பட்டு பாக்கிஸ்த்தான் மீது ஒரு கடல் முற்றுகை செய்ய வேண்டும். 2. F/A-18இல் இரசிய இந்திய கூட்டுத்தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தாங்கி நிற்கும். 3. ஐம்பதாயிரம் இந்தியப் படையினர் T-90, T-72 ஆகிய போர்த்தாங்கிகளுடன் தானாகவே செலுத்தும் தென் கொரியாவின் கே-9 வஜ்ரா எறிகணைகளுடனும் பிரெஞ்சு ரஃபேல் விமானங்களின் ஆதரவுடனும் எல்லை தாண்டிச் செல்ல வேண்டும் 4. ரஃபேல் விமானங்கள் இஸ்ரேலியத் தயாரிப்பு லேசர்-வழிகாட்டி குண்டுகளை பாக்கிஸ்த்தானின் படைக்கலக் கிடங்குகள் மீது வீச வேண்டும். 5. இரசியவின் எஸ்யூ-30எம்கேஐ விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளை எதிரி இலக்குகள் மீது வீச வேண்டும். இந்தியப் படை நடவடிக்கைகளுக்கான பாக்கிஸ்த்தானின் எதிர்வினையையும் இண்டியன் எக்ஸ்பிரஸ் வரிசைப்படுத்தியது: 1. பாக்கிஸ்த்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலை இந்திய எதிர்கொள்ளவேண்டும். 2. பாக்கிஸ்த்தானுடன் எல்லாக்காலமும் நண்பனாக இருக்கு சீனா இந்தியப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க இந்தியப் படைகள் மீது தாக்குதல் செய்யும். வளரும் இந்தியாவால் தேயும் பாக்கிஸ்த்தான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானுக்கும் இடையிலான படைவலிமை இடைவெளி மட்டுமல்ல பொருளாதார வலு இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. உலகிலேயே அதிக அளவு செலவில் படைக்கலன்களை இறக்குமதி செய்யும் நாடாக கடந்த சில ஆண்டுகளாக இந்தியா இருந்து வருகின்றது. பா.ஜ.க.வின் பெரிய கஷ்மீர் கனவு நேருவின் தலையில் சுதந்திரப் போராட்ட வீர்ர் என்ற மகுடமும் இந்திரா கந்தியின் தலையில் பங்களாதேச விடுதலை என்ற மகுடமும் இருப்பது போல் நரேந்திர மோடியின் தலையில் கஷ்மீரை முழுமையாக மீட்ட வீரர் என்ற மகுடம் சூட்ட பாரதிய ஜனதாக் கட்சி விரும்பலாம். அவர்களின் திட்டம் பாக்கிஸ்த்தான் வசமுள்ள கஷ்மீரும் அதனுடன் இணைந்த கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசமும் இந்தியாவிற்கு சொந்தமாக வேண்டும் என்பதே. பாக்கிஸ்த்தானிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்க 2020 மே 16 ஆம் திகதி பாக்கிஸ்த்தானிய அதிபர் கில்ஜிட் பலிஸ்டானில் தேர்தல் நடத்துவதற்கான அரச ஆணையைப் பிறப்பித்தார். அதன்படி 24-06-2020 அங்கு தேர்தல் நடத்தப்படும். அது இந்தியாவின் இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் எனச் சொல்லி தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. கில்ஜிட்-பலிஸ்த்தான் பிரதேசத்தில் சீனாவின் உதவியுடன் ஐந்து அணைக்கட்டுக்கள் கட்டப்படுவதையும் இந்தியா ஆட்சேபித்துள்ளது. மோடியின் அரசு இந்தியத் தொலைக்காட்சிகள் இந்தியாவிற்கான கால நிலை அறிக்கை ஒளிபரப்பும் போது பாக்கிஸ்த்தான் கைப்பற்றியுள்ள கஷ்மீரையும் உள்ளடக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளது. அதில் காட்டப்படும் வரைபடத்தில் இந்தியாவுடன் முழுக் கஷ்மீரும் இருக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சூழலை இந்தியா சாதமாக நினைக்கின்றதா? 2020 ஏப்ரில் மாதம் ஏசியா ரைம்ஸில் சீனா தைவானை ஆக்கிரமிக்க காலம் கனிந்துள்ளது என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அமெரிக்கா கோவிட்-19 தொற்றுநோயால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் சூழலை சீனா தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தைவானைக் கைப்பற்ற வேண்டும் என சீனாவில் சிலர் கருதுகின்றனர். முதன்மை நாடு ஒன்று சிக்கலில் இருக்கும் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்தி இன்னொரு முதன்மை நாடு மூன்றாம் நாடு ஒன்றை ஆக்கிரமிக்க முடியுமா என்பதற்கு 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்ததை உதாரணமாகப் பார்க்கலாம். 1962- ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16-ம் திகதி முதல் 28-ம் திகதிகவரி கியூப ஏவுகணை நெருக்கடி உருவானது. 1962 ஒக்டோபர் மாதம் 20-ம் திகதி சீனா இந்தியா மீது படையெடுத்தது. அமெரிக்கா கியூபாவில் இரசியா நிறுத்தி வைத்துள்ள அணுக்குண்டுகளை காவிச்செலும் ஏவுகணை அகற்றும் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் அமெரிக்க இரசிய அணுப்படைக்களப் போர் உருவாகும் என்ற சூழலில் இந்தியாவைப் பாதுகாக்க யாரும் வரமாட்டாரகள் என்ற எண்ணத்துடன் சீனா இந்தியாவை ஆக்கிரமித்தது. ஆனால் அமெரிக்க அதிபர் ஜோன் எஃப் கெனடி இந்தியத் தலைமை அமைச்சர் நேருவுடன் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைத் தான் செய்வதாக வாக்குறுதியளித்தார். பிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் இருந்து இந்தியப் படைகளுக்கு தேவையான படைக்கலன்களும் குளிர்கால ஆடைகளும் அவசரமாக இந்தியாவில் கொண்டு வந்து இறக்கப்பட்டன. நேரு 350 அமெரிக்கப் போர்விமானங்கள் இந்தியாவிற்கு வந்து சீனர்களுக்கு எதிராக தாக்குதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தார். அமெரிக்கா இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பின் ஊடாக சீனாவிற்கு தொடர்ச்சியாக பல அழுத்தங்களைப் பிரயோகித்த போது சீனா ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவித்து கஷ்மீரில் ஒரு சிறு உயர் மலைப்பிரதேசத்தை தவிர தான் கைப்பற்றிய ஏனைய இடங்களில் இருந்து வெளியேறியது. 1962இல் இந்தியாவைக் காப்பாற்றியது போல் அமெரிக்கா தைவானைக் காப்பாற்றும் என எதிர்பார்க்கலம். அதிலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தைவான் மீது அதிக அக்கறை காட்டுபவராக உள்ளார். சீனா தைவான் மீது போர் தொடுத்தால் அந்த சூழலைப் பயன்படுத்தி இந்தியா கஷ்மீரைக் கைப்பற்ற முயற்ச்சிக்கலாம். தைவானில் அமெரிக்காவுடன் மோதிக் கொண்டிருக்கும் சீனாவால் பாக்கிஸ்த்தானைக் காப்பாற்ற முடியாமல் போகலாம். இந்தியாவிற்கான காலம் கனிகின்றதா? இந்தியாவிலும் பார்க்க அதிகஅளவு அணுக்குண்டுகளை வைத்திருக்கும் பாக்கிஸ்த்தானிடமிருந்து இந்தியா தன்னை இரசியாவிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் எஸ்-400-ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளால் பாதுகாக்கலாம். அத்துடன் பாக்கிஸ்த்தான் அணுக்குண்டு வீசினால் தானும் பாக்கிஸ்த்தான் மீது அணுக்குண்டு வீசுவேன் என மிரட்டலாம். ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் அமெரிக்கா செய்யும் சமாதான முயற்ச்சி வெற்றியளித்தால் அமெரிக்காவிற்கு பாக்கித்தான் அவசியமற்ற ஒரு நாடாக மாற வாய்ப்புண்டு. பாக்கிஸ்த்தான் மீது இந்தியா போர் தொடுப்பது என்பது செய்தியாக அடிபட முன்னரே சீனா தனது படையை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தியிருந்தது. இந்தியா குவாட் என்ற நான்கு நாடுகளின் கூட்டமைப்பில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டும் என்ற குரல் இந்தியாவில் மீண்டும் உரத்து ஒலிக்கின்றது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஒஸ்ரேலியா ஆகிய நான்கு நாடுகள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒன்றகாச் செயற்படவேண்டும் என்பதே குவாட் அமைப்பின் நோக்கம். குவாட்டில் இப்போது தென் கொரியா, வியட்னாம், நியூசீலாந்து என்பவையும் இணையும் முயற்ச்சிக்கப்படுவதால் குவாட்+ என அது பெயரிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளிடையே ஒரு படைத்துறை ஒத்துழைப்பு ஒப்பந்த அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டால் அது இந்தியாவிற்கு சீனாவின் சவாலை சமாளிக்க முடியும். இந்தியா தனித்து பாக்கிஸ்த்தானிற்கும் சீனாவிற்கும் எதிராகப் போர் புரிந்தால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகலாந்து ஆகியவற்றை சீனா கைப்பற்றலாம். இந்தியா கஷ்மீரை ஆட்சி செய்வதிலும் பார்க்க இலகுவாக சீனாவால் அந்த மாநிலங்களை ஆள முடியும். அவர்கள் சீனர்களைப் போல் தோற்றமுடையவர்கள். அங்கு வாழும் பல இனக்குழுமங்கள் ஒலிம்பிக் போட்டியின் போது சீனா வெற்றி பெறுவதை பெரிதும் விரும்பி ஆராவரிப்பார்கள். அதனால் பாக்கிஸ்த்தான் மீது போர் தொடுக்க முன்னர் ஒரு வலுவான பன்னாட்டு படைத்துறைக் கூட்டமைப்பில் இந்தியா இணைந்திருப்ப்பது அவசியம். https://www.virakesari.lk/article/82616
 11. மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை - கல்வி அமைச்சர் டலஸ் உயர்தர பரீட்சை விடயத்தில் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது. மாணவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும் வடக்கு கிழக்கு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வசதிகள் இன்மை என பல குறைபாடுகள் நிலவுகின்றன. எந்தப் பிரச்சினையுமின்றி ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் பாராளுமன்ற தேர்தலை நடத்தலாம். வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையானது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது. மிக நீண்டகாலமாக இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. இதற்கு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும். அதிகார பகிர்வு 13 ஆவது திருத்தம் குறித்து பேசிக்கொண்டிருந்தனரே தவிர இந்த பிள்ளைகளின் கல்வி குறித்தும் கவனம் செலுத்தவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தைக் கூட நான் கண்டதில்லை என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு, கேள்வி; தற்போது வீடுகளில் இருக்கின்ற 43 இலட்சம் மாணவர்களிடம் நீங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்ன? புதில்; அனைத்து மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் கிடைத்த சிறந்ததொரு சவாலாகும். இந்த சவாலை வெற்றிகொள்ள எமது தன்னம்பிக்கையை அதிகரித்து எவ்வாறு செயற்படவேணடும் என்பது மிக முக்கியமாகும். இதுபோன்ற நீண்டகாலம் இந்த 43 இலட்சம் மாணவர்களும் பாடசாலையை விட்டு விலகி வீடுகளில் இருக்கவில்லை. குறிப்பாக வீட்டு சிறையில் இருக்கின்றனர் என்று கூறலாம். இந்த சிறுவர் பராயத்தை அவ்வாறு வீடுகளில் கடத்துவது மிகவும் கடினமாகும். எமது பாடசாலை வாழ்க்கையிலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது. கேள்வி; நீங்கள் எப்போது எதற்காக? எவ்வளவு காலம் வீடுகளில் முடங்கி இருந்தீர்கள்? புதில்; 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது எமக்கு இவ்வாறான ஒரு அனுபவம் கிடைத்தது. நான் அப்போது 4 அல்லது 5 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தேன். நான்கு மாதங்கள் பாடசாலைகள் மூடப்பட்டன. ஊரடங்கு சட்டம் போடப்பட்டிருந்தது. எமக்கு அந்த அனுபவம் உள்ளது. அதனால் இந்த சவாலை வெற்றியாக மாற்றிக்கொள்ள தன்னம்பிக்கையை கட்டியெழுப்பவும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் விடுமுறை காலத்தை பயன்படுத்துமாறு மாணவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். கேள்வி; பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது காணப்படும் நிலைமை என்ன? பதில்; பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் தற்போது உறுதியாக எதனையும் கூற முடியாது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான முதலாவது போராட்டமாகவே நாங்கள் பாடசாலைகளை மூடினோம். இலங்கையை சேர்ந்த தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டு 48 மணிநேரத்துக்குள் இந்த முடிவை நாங்கள் எடுத்தோம். பிள்ளைகளை பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றின் இறுதி போராட்டம் தான் பிள்ளைகளை மீண்டும் பாடசாலைக்கு அழைத்து வருவதாகும். கொரோனா தடுப்பின் முதல் நடவடிக்கை பாடசாலை மூடப்பட்டதாகும். இறுதி நடவடிக்கை பாடசாலைகளை ஆரம்பிப்பதாகும். ஐரோப்பிய நாடுகளில் இடம்பெற்ற அழிவை பாருங்கள். ஐரோப்பிய நாடுகளை நாங்கள் சொர்க்க நாடுகள் என்று கருதினோம். குறிப்பாக இத்தாலியில் முதல் 1000 உயிரிழப்புக்களின் பின்னரே பாடசாலைகள் மூடப்பட்டன. மிகவும் பாதுகாப்பான நேரத்திலேயே மீண்டும் மாணவர்கள் பாடசாலைகளுக்கு அழைக்கப்படுவர். கேள்வி; உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன? பதில்; உயர்தரப் பரீட்சை விடயத்தில் இரண்டு மாற்று தெரிவுகளே எம்மிடம் உள்ளன. ஒன்று உயர்தரப் பரீட்சையை தாமதிப்பதாகும். இரண்டாவது கற்பிக்கப்படாத பாடங்களை நீக்கிவிட்டு பரீட்சையை வினாத்தாள்களை தயாரிப்பதாகும். இவைதான் எமது முன் காணப்படுகின்ற இரண்டு மாற்று தெரிவுகளாகும். ஆனால் கற்பிக்கப்படாத பாடங்களை நீக்கிவிட்டு பரீட்சையை வினாத்தாள்களை தயாரிப்பதிலும் ஒரு சிக்கல் உள்ளது. காரணம் இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை பரீட்சை எழுதுகின்ற மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்றிருப்பர். ஆதனால் இரண்டாவது தெரிவு அவர்களுக்கு பாதகமாக அமையலாம். மேலும் முதலாவது முறை எழுதும் மாணவர்கள் பாடத்திட்டத்தின் இறுதி பகுதிகள் இலகுவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர். அது எனக்கு தெரியாது. கேள்வி; அப்படியானால் என்ன செய்யப்போகின்றீர்கள்? பதில்; மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன். கேள்வி; கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து? பதில்; இந்த நாட்டின் பிரஜையானமை எந்தளவு தூரம் அதிஷ்டமானது என்பதனை நான் எண்ணிப்பார்க்கின்றேன். சொர்க்க நாடுகள் என்ற வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ விரும்பினோம். மீனின் முதுகில் ஏறியாவது இத்தாலி செல்ல மக்கள் விரும்பினர். ஆனால் அங்கு வாழும் இலங்கையர்கள் இலங்கை வர திண்டாடுகின்றனர். எனவே இலங்கையனாக இருப்பது தொடர்பில் எமக்கு எவ்வளவு தைரியம் கிடைக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். கேள்வி; நீங்கள் கல்வியமைச்சராகிய பின்னர் வடக்கு கிழக்கு கல்வி நிலை குறித்து மதிப்பீடு செய்தீர்களா? பதில்; வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலையானது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கின்றது. மிக நீண்டகாலமாக இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. இதற்கு வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களும் பொறுப்புக்கூறவேண்டும். அதிகார பகிர்வு 13 ஆவது திருத்தம் குறித்து பேசிக்கொண்டிருந்தனரே தவிர இந்த பிள்ளைகளின் கல்வி குறித்தும் கவனம் செலுத்தவில்லை. பாராளுமன்றத்தில் ஒரு விவாதத்தைக் கூட நான் கண்டதில்லை. மிகவும் மோசமான நிலைமையே காணப்படுகின்றது. எந்த அளவீட்டை எடுத்துப் பார்த்தாலும் வீழ்ச்சியே உள்ளது. ஆசிரியர்கள் பாடசாலை வசதிகள் என்பனவற்றை பார்த்தால் தெரியும். வசதியுள்ள சில பாடசாலைகள் இருக்கலாம். ஆனால் பொதுவான நிலை அவ்வாறானதல்ல. ஆசிரியர் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது. மதவாச்சியிலிருந்தே இந்த ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதிபர்கள் தலையிட்டு ஆசிரியர்கள் அல்லாதவர்கயை கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கும் நிலைமையே காணப்படுகின்றது. ஆரம்ப பாடசாகைகளில் ஆசிரியர்களில் ஆசிரியர்கள் 50 வீதமானவர்கள் பயிற்சி பெறாதவர்களாக உள்ளனர். தொண்டர் அடிப்படையில் கற்பிக்கின்றனர். எவ்வாறான மோசமான நிலைமை என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். கேள்வி; இந்த நிலையை சரிசெய்ய என்ன செய்யப்போகின்றீர்கள்? பதில்; கட்டாயமாக இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனக்கு வடக்கு தெற்கு என்ற பேதம் இல்லை. மாத்தறை யாழ்ப்பணம் என்ற பேதம் இல்லை. மாணவர்கள் சிங்களமா? தமிழா? முஸ்லிமா? என்று நான் பார்க்கமாட்டேன். நான் 43 இலட்சம் மாணவர்களின் தந்தை என்றே கருதுகின்றேன். நான் அதிகாரிகளை அழைத்து தொடர்ச்சியாக கலந்துரையாடிவருகின்றேன். நேற்றும் ( கடந்த வியாழக்கிழமை) என அமைச்சின் செயலாளர் இராஜாங்க அமைச்சின் செயலாளர் இரண்டு மேலதிக செயலாளர்கள் அனைவரும் வடக்கு மாகாண அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர். மாகாண செயலாளர் பணிப்பாளர் அதிபர்களுடன் இந்த பேச்சுக்கள் நாள் முழுவதும் நடைபெற்றன. எனவே எங்கள் முழு அவதானமும் இந்த விடயத்தில் செலுத்தப்படும். சமமான நிலை ஏற்படுத்தப்படும். தமிழ் மொழி மூல மாணவர்கள் சிங்களம் கற்கவும் சிங்கள மொழி மூல மாணவர்கள் தமிழ் கற்கவும் இவர்கள் இருவரும் ஆங்கிலம் கற்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டதாரி நியமனங்கள் நடைபெறுகின்றன. அதில் வடக்கில் உள்ள பட்டதாரிகளை அந்த மாகாணத்திலேயே ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்க திட்டமிட்டுள்ளேன். கேள்வி; 2010 ஆம் ஆண்டு நீங்கள் இளைஞர் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டபோது இனி இந்த நாட்டில் இளைஞர்கள் விரக்தியடைய இடமளிக்கக் கூடாது என்று கூறினீர்கள். 2009 ஆம் ஆண்டின் பின்னரான 11 வருடங்கள் எவ்வாறு உள்ளன? பதில்; வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கல்வித்துறை போன்ற பல விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை. அதனை நாம் நேர்மையாக ஏற்கவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுத்துறையில் திறமையுள்ள பிள்ளைகள் எவ்வளவு பேர் உள்ளனர்? வடக்கு மாகாணததில் தொழிற்பயிற்சி இல்லாத பிள்ளைகள் உள்ளனர். வேலையின்மை பிரச்சினை கணவனை இழந்த குடும்பத் தலைவிகளின் நெருக்கடி என ஏனைய மாகாணங்களுக்கு இல்லாத பல பாரதுரமான பிரச்சினைகள் உள்ளன. அதற்கு நாமும் பொறுப்புக் கூறவேண்டும். கேள்வி; எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவீர்களா? பதில்; தற்போது கூட நாங்கள் அவர்களுடன் பேச்சு நடத்துகின்றோம். ஆனால் அதனை உயர்ந்த மட்டததில் செய்யவேண்டும். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும். நேர்கண்டவர் : ரொபட் அன்டனி https://www.virakesari.lk/article/82615
 12. ட்ரம்ப் வழியில் கோத்தா... இலங்கைப் படையினருக்கு எதிராக அநீதியான முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அழுத்தம் கொடுப்பதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லவில் நடந்த போர் வீரர்கள் நாள் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கிறார். இந்தமுறை போர் வெற்றி நாள் நிகழ்வுகளை அரசாங்கம் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்ததில் இருந்தே, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் போர் வெற்றி விழா பெரியளவில் தான் கொண்டாடப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பிந்திய முதலாவது போர் வெற்றி நாளை இன்னமும் சிறப்பாக கொண்டாடுவது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கனவாகவும் இருந்தது. போருக்கு தலைமை தாங்கியவர் என்று கருதப்படும் அவர், ஜனாதிபதியாக உள்ள நிலையில், கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் நினைத்தவாறு பிரமாண்ட வெற்றிக்களிப்புகள் கொண்டாட்டங்களுக்கு வாய்ப்புக் கிட்டவில்லை. ஆனாலும், கொரோனாவுக்குப் பின்னர், தொற்று பரவத் தொடங்கி சுமார் இரண்டு மாதங்கள் கழித்து, முதலாவது பாரிய அரசாங்க நிகழ்வாக இது அமைந்திருந்தது. அதற்கு முந்திய நாள், முள்ளிவாய்க்காலிலும், வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதிகளிலும், நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதை தடுப்பதில், படையினரையும், பொலிசாரையும் அரசாங்கம் முழு வீச்சியில் பணியில் ஈடுபடுத்தியது. தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி, நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவற்றைத தடுப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கும், பொலிசாருக்கும். உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருந்தது. எனினும், அதனை விட பெரியளவிலானதாக, அரசாங்க நிகழ்வாக, இந்த போர் வீரர் நாள் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. முள்ளிவாய்க்காலில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால், அரசாங்கத்தின் போர் வீரர் நாள் நடந்த இடம், கொரோனா ஆபத்து அதிகம் உள்ள, இன்னமும் ஊரடங்கு நீக்கப்படாத பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும், அரசாங்கத்தின் ஏற்பாடு என்பதால், இராணுவத்தினரை நினைவு கூரும் அந்த நிகழ்வு சாத்தியமானது, ஆனாலும் கொரோனா அச்சுறுத்தல் விட்டுப் போகவில்லை- இந்த நிகழ்வுக்கான அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்ற இரண்டு கடற்படையினருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிலும் பலருக்கு தொற்று ஏற்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அதனை சார்ந்த சுகாதார விதிமுறைகளைப் புறக்கணித்தே, போர் வீரர் நாள் நிகழ்வுகளை அரசாங்கம் நடத்தியிருந்தது. இந்த நிகழ்வுக்கு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, வழக்கம் போலவே சிவில் உடையில் தான் வந்திருந்தார். இராணுவ சேவையில் இருந்த போது பெற்றிருந்த விருதுகள், பதக்கங்களையும் தனது சட்டையில் அணிந்திருந்தார். ஏற்கனவே, கடந்த பெப்ரவரி மாதம் நடந்த சுதந்திர தின விழாவிலும். இதேபோன்று தான், அவர் விருதுகளை சிவில் உடையில் அணிந்திருந்தார். அது அப்போது கடுமையான விமர்சனங்களை எற்படுத்தியிருந்தது. இராணுவ விருதுகளை சிவில் உடையில் அணிந்திருப்பது கோமாளித்தனம் என்ற தொனியில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விமர்சனம் செய்திருந்தார். இம்முறை போர் வீரர் நாள் நிகழ்வில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பங்கேற்கவில்லை. போரில் நேரடியாக தலைமை தாங்கிய அவர், இதுவரை நடந்த பெரும்பாலான போர் வெற்றி விழாக்களில் பங்கேற்க முடியவில்லை. போர் முடிந்ததும், அவர் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிட்டார். அதனால் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இராணுவ நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் இராணுவத்தில் இருந்தபோது பெற்ற விருதுகள், பதக்கங்கள் பறிக்கப்பட்டன. அதனால் 2014 வரையான காலத்தில் அவர் போர் வெற்றி கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட விருதுகள், பதக்கங்கள், மீளக் கொடுக்கப்பட்டு பீல்ட் மார்ஷல் பதவியும் அளிக்கப்பட்டது. இந்தமுறை அவருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்தது. ஆனால், தனக்கு வேறு நிகழ்வுகள் இருப்பதாக கூறி பங்கேற்க மறுத்து விட்டார் சரத் பொன்சேகா. ஒரு பீல்ட் மார்ஷலான தன்னை, லெப்.கேணலுக்கு மரியாதை செலுத்த வைக்க முயன்றனர் என்றும், அவ்வாறு தாம் ஒரு போதும் மரியாதை செலுத்தப் போவதில்லை என்றும் சரத் பொன்சேகா கூறியதாக தகவல். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஒரு லெப்.கேணல் தர இராணுவ அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், போர் முடிவுக்கு வந்த போது கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொடவும் மார்ஷல் ஒவ் த எயர்போர்ஸ் ரொஷான் குணதிலகவும், இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்வில் தான், நாட்டுக்கும், படையினருக்கும் எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களை கடுமையாக எச்சரித்திருக்கிறார் ஜனாதிபதி. இவ்வாறு தமது படையினரைக் குறிவைத்தால், அந்த அமைப்புகளில் இருந்து விலகிக் கொள்வதற்கும் தயங்கமாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட, தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என தெளிவாக தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.” என்று கூறி விட்டே, அவ்வாறான அமைப்புகளில் இருந்து வெளியேற தயங்கப் போவதில்லை என்ற செய்தியை அவர் வெளியிட்டிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி, பிரித்தானிய பிரதமர் ஆகியோரே, வெளிநாடுகளில் குற்றமிழைத்த படையினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்கப் போவதில்லை என்று கூறியிருந்தார்கள். அவர்களின் வழியிலேயே தாமும் செல்லப் போவதாக உறுதிப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி. இதன் மூலம், போர்க்குற்றங்களுக்கு நீதி, பொறுப்புக்கூறலை வலியுறுத்தும், அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு செக் வைப்பதற்கு முயன்றிருக்கிறார் அவர். கடந்த பெப்ரவரி மாதம், போர்க்குற்றசாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவையும் அவரது குடும்பத்தினரையும், அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதித்திருந்தது ட்ரம்ப் நிர்வாகம். இது கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், சர்வதேச ரீதியாக எடுக்கப்பட்ட முதலாவது கடும் நடவடிக்கையாக இருந்தது. அதற்குப் பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கை விவகாரம் வந்த போது, நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக, பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக கூறி விட்டது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் அதனை நிறைவேற்றப் போவதில்லை என்றும் கூறியிருந்தது. இவ்வாறான நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கை அரசாங்கத்துக்காக காலக்கெடு முடிவடையப் போகிறது. அதற்குப் பின்னர் இலங்கை விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறது என்ற கேள்வி உள்ளது. பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில், எப்படியும், ஜெனிவா களத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனைக் கருத்தில் கொண்டு தான், படையினருக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து விலகிக் கொள்ளவும் தயங்கப் போவதில்லை என்று எச்சரித்திருக்கிறார் ஜனாதிபதி. இவ்வாறான எச்சரிக்கையை எந்தவொரு ஜனாதிபதியும் இதுவரை வெளியிட்டதில்லை. கோத்தாபய ராஜபக்ச கடும்போக்காளர் என்பதை இதன் மூலம் மீண்டும் சர்வதேச சமூகத்துக்கு கூற முனைந்திருக்கிறார். அவரது இந்த நிலைப்பாடு உள்நாட்டில் படையினருக்கும், சிங்கள தேசியவாத சக்திகளுக்கும் பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருந்தாலும் சர்வதேச சமூகத்துக்கு அவ்வாறான ஒரு சமிக்ஞையை காட்டியிருக்காது. இலங்கை ஆபத்தான ஒரு பாதையில் பயணிக்க முனைகிறது என்ற செய்தி தான் அவர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தியின் ஆழத்தை ஜனாதிபதி புரிந்து கொள்ளாமல் வெளியிட்டிருக்கமாட்டார். ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் வேலையை மேற்கொண்டிருந்த தாமரா குணநாயகம், ஜனாதிபதியின் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஜனாதிபதிக்கு தவறான ஆலோசனை கூறப்பட்டிருப்பதாகவும், இது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேறும் முடிவை அறிவிக்கவும் தற்போதைய அரசாங்கம் தயங்காது என்பதே, ஜனாதிபதியின் உரையில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. அவ்வாறு தான் பெரும்பாலானவர்களால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அத்தகைய ஒரு முடிவை அரசாங்கம் எடுப்பதென்பது, அறிவார்ந்த செயலாக இருக்க முடியாது. ஏனென்றால், ஐந. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஒரு உறுப்பு நாடு அல்ல. அங்கு இலங்கை இப்போது அவதானிப்பு நாடுகளில் ஒன்றாகத் தான் இருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகும், முடிவை கோத்தாபய ராஜபக்ச ஒருவேளை எடுத்தால், அதற்கும் கூட அவர், அமெரிக்காவையே முன்னுதாரணமாக காட்டுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரேல் மீது அநீதியாக செயற்படுகிறது என்று, அமெரிக்காவை பேரவையில் இருந்து விலக்கியிருந்தார் ட்ரம்ப். அவரது வழியில் தான், கோத்தாபய ராஜபக்சவும் செயற்படப் போகிறாரா? – அவ்வாறு செய்தால் அது கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவின் பிரதியாக பார்க்கப்படுவாரே தவிர, அவரது தனித்துவமான முடிவாக கருதப்படாது. -சுபத்ரா - https://www.virakesari.lk/article/82594
 13. இன்று சூடாக என்ன இருக்கின்றது என்று பலர் பார்ப்பதனால் வரலாறுகள் மறந்துபோகின்றன. அவற்றை கொஞ்சமாவது நினைவூட்டத்தான் நான் படிப்பவற்றைப் பகிர்கின்றேன். நேரம் இருக்கும்போது படியுங்கள்
 14. பிரபாகரனும் பூரியும் -கார்வண்ணன் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார். இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்துடன், பதிவு ஒன்றை வெளியிட்டதன் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறார். “1987 ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான முதல் நிலைச் செயலாளராக பணியாற்றிய நான், இன மோதலை முடிவுக்கு கொண்டுவர இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை எடுத்துக் கூறி, புதுடெல்லிக்கு வந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு பிரபாகரனிடம் வலியுறுத்தினேன். வல்வெட்டித்துறையில் இருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகொப்டரில், பிரபாகரனுடன் பயணம் செய்து, முதலில் தமிழக முதல்வர் எம்ஜிஆரை சந்தித்ததுடன், அதனையடுத்து, புதுடெல்லிக்கு சென்றோம். தொடர்ந்து அமைதிக்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வந்த போதிலும், இனப் பிளவுகளை தூண்டுவதற்கு இரு பக்கங்களிலும், ஆட்கள் இருந்தனர். 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி வெடித்த மோதலில் பிரபாகரன் இறந்து விட்டார்” என்று ஹர்தீப் சிங் பூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டது போல, பிரபாகரனுடன், அவர் ஹெலிகொப்டர் பயணத்தை ஆரம்பித்தது வல்வெட்டித்துறையில் இருந்து அல்ல. அப்போது வல்வெட்டித்துறை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கவில்லை. ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், வல்வெட்டித்துறையை உள்ளடக்கிய வடமராட்சிப் பிரதேசம் முழுவதையும் கைப்பற்றி வைத்திருந்தனர். அந்த நடவடிக்கைக்குப் பின்னர் தான், இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா பேச்சுக்களை தீவிரப்படுத்தியது. அத்துடன், விடுதலைப் புலிகளுடனும் கலந்துரையாடல்களை ஆரம்பித்தது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான முதல் நிலைச் செயலராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த- இளம் இராஜதந்திரியான, ஹர்தீப் சிங் பூரியும், இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் குப்தாவும், 1987 ஜூலை 19ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் வந்து - விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அந்தப் பேச்சுக்களில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன், மாத்தயா, குமரப்பா, ஜொனி, சங்கர், யோகி, திலீபன் உள்ளிட்ட புலிகளின் மூத்த தளபதிகள், போராளிகளும் கலந்து கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இந்திய அரசாங்கத்தின் இராஜதந்திரி ஒருவர், அதிகாரபூர்வமாக சந்தித்து பேசிய முதல் சந்தர்ப்பம் அதுவே. அதற்குப் பின்னர், மீண்டும் ஜூலை 23ஆம் திகதி ஹர்தீப் சிங் பூரியும், கப்டன் குப்தாவும், மீண்டும் யாழ்ப்பாணம் வந்து, பிரபாகரனைச் சந்தித்தனர் அப்போது, புதுடெல்லிக்கு வருமாறு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியின் அழைப்பை பிரபாகரனிடம் அவர்கள் நேரிலேயே கையளித்தனர். அதையடுத்து மறுநாள், 24ஆம் திகதி காலை 10.25 மணியளவில், இந்திய விமானப்படையின் இரண்டு எம்.ஐ -17 ஹெலிகொப்டர்கள் சுதுமலை அம்மன் கோவில் பகுதியில் தரையிறங்கின. அவற்றில், Z 2903 இலக்கமுடைய, ஹெலிகொப்டரில், பிரபாகரனை அழைத்துக் கொண்டு இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார் பூரி. பிரபாகரனுடன் அவரது மனைவி மதிவதனி, பிள்ளைகளான சாள்ஸ் அன்ரனி, துவாரகா, யோகி, திலீபன், கடாபி, ரொபேர்ட், இம்ரான் ஆகியோரும், இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்தியா புறப்படுவதற்கு முன்னர் பிரபாகரன் புலிகள் இயக்கத்தின் பதில் தலைவராக மாத்தயா செயற்படுவார் என்று அறிவித்து விட்டுச் சென்றார். திருச்சியில் ஹெலிகள் தரையிறங்கியதை அடுத்து அங்கிருந்து விமானம் மூலம், சென்னைக்கு சென்ற தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆரைச் சந்தித்து விட்டு, அன்ரன் பாலசிங்கம் மற்றும் கிட்டு ஆகியோருடன் , புதுடெல்லிக்கு பிரபாகரனை அழைத்துச் சென்றிருந்தார் பூரி. விடுதலைப் புலிகளுடன் முதல் கட்ட தொடர்புகளை ஏற்படுத்தி, பிரபாகரனின் புதுடெல்லிப் பயணத்துக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதில் ஹர்தீப் சிங் பூரியின் பங்கு காத்திரமானது. அவர் பிரபாகரனுடன் நடத்திய பேச்சுக்களின் போது, அமைதி முயற்சிக்கு இணங்கும்படி கேட்டிருந்தார். ஆனால், புதுடெல்லிக்குச் சென்ற பின்னர், அவரை விட உயர்ந்த பதவி நிலையில் இருந்த அதிகாரிகளே பிரபாகரனுடன் பேசினர். அந்த விவகாரங்களைக் கையாண்டனர். அந்தப் பேச்சுக்கள் இறுக்கமாக மாற, பிரபாகரன் இந்திய -இலங்கை உடன்பாட்டை ஏற்க மறுத்தார். புதுடெல்லியில் உள்ள விடுதியில் பிரபாகரனை அடைத்து வைத்து விட்டு, கொழும்பில் வந்து உடன்பாட்டில் கையெழுத்திட்டு விட்டு சென்றார். இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி. உடன்பாட்டுக்கு இணங்க மறுத்த பிரபாகரனை இந்தியா அடைத்து வைத்திருந்து- ஒரு வாரத்துக்குப் பின்னரே யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்து இறங்கியது, பிரபாகரனுடன் பேச்சுக்களை நடத்திய அமைதியை ஏற்படுத்த முயன்றதாக பூரி தனது பதிவில் கூறியிருந்தாலும், அந்தப் பதிவுகளில் அவர் பிரபாகரன் குறித்து புகழ்ந்துரைக்கவும் இல்லை. அதேவேளை, இழிவுபடுத்தவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. பூரியின் ஏற்பாட்டில் பிரபாகரன் புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்ற போது, அந்தப் பயணம் ஒரு மாபெரும் வெற்றியாகவே இலங்கையில் பார்க்கப்பட்டது. ஆனால், அங்கிருந்து திரும்பும் போது அவ்வாறானதொரு நிலை இருக்கவில்லை. அந்தப் பயணம் தான், பல வரலாற்று நிகழ்வுகளுக்கு காரணமாக மாறியது. புதுடெல்லியில் தன்னை அடைத்து வைத்து மிரட்டியதற்காக ராஜீவ் காந்திக்கு பாடம் கற்பிப்பேன் என்று தளபதி கிட்டுவிடம், புலிகளின் தலைவர் பிரபாகரன் தொலைபேசியில் கூறியதாக பின்னர் தகவல்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாகத் தான், 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்குப் பன்னர், புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் இருந்து வந்த ஆதரவுத் தளம் உடைந்து போனது. இலங்கைப் பிரச்சினையில் இருந்து இந்தியா விலகிச் சென்றது. கடைசியில் புலிகள் இயக்கத்தை முற்றாக அழித்தொழிப்பதற்கான எல்லா உதவிகளையும் இந்தியா செய்தது. அதனையெல்லாம் ஹர்தீப் சிங் பூரி தனது பதிவுகளில் கூறவில்லை. பிரபாகரனுடன் அதிகாரபூர்வ தொடர்பை ஏற்படுத்திய முதல் வெளிநாட்டு பிரதிநிதி என்ற அந்தஸ்தைக் கொண்டிருக்கும் பூரிக்கு, 33 ஆண்டுகளுக்குப் பின்னர், மே 18ஆம் திகதி பிரபாகரனின் நினைவுகள் மீண்டும் வந்திருக்கிறது. அதுவும் பிரபாகரனின் மரணம் நிகழ்ந்த நாளுக்கு முந்திய நாள் அது. இந்தப் பதிவில் அவர் பிரபாகரன் அமைதியைக் குழப்பி விட்டார் என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால், அந்தக் காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் பூரி அறிந்திருப்பார். 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் பூரி பிரபாகரனைச் சந்தித்திருக்கவில்லை. ஆனால் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகள் அவரைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள். நோர்வேயின் அமைச்சர்கள், அதிகாரிகள், வேறு பல நாடுகளின் தூதுவர்கள், இராஜதந்திரிகள் பிரபாகரனுடன் சந்திப்புகளை நடத்தியிருந்தனர். ஆனால், பிரபாகரனுடன் பூரி நடத்திய கலந்துரையாடல் அளவுக்கு அவர்கள் நெருக்கமான கலந்துரையாடல்களை நடத்தவில்லை என்றே கூறலாம். அதனால் தானோ என்னவோ, பிரபாகரனுடனான சந்திப்பு, வேறு எந்த வெளிநாட்டு இராஜதந்திரிக்கும் நினைவில் வரவில்லை. மாறாக, ஹர்தீப் சிங் பூரி 33 ஆண்டுகளுக்குப் பின்னரும், பிரபாகரனுடனான தொடர்பை தனது டுவிட்டர் பதிவுகள் மூலம், வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்திருக்கிறார். இந்திய அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து கொண்டே அவர் இந்தப் பதிவை இட்டிருப்பது தான் முக்கியம். இதன்மூலம், பிரபாகரனை அவர் மரியாதையுடன் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. https://www.virakesari.lk/article/82586
 15. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - கற்றுத்தரும் பாடம் -கபில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் இன்னொரு நினைவேந்தல் தமிழ் மக்களைக் கடந்து போயிருக்கிறது. 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், முள்ளிவாய்க்கால் என்ற சொல்லும், அதனை நினைவில் கொள்ளும், மே 18 ஆம் திகதியும், தமிழ் மக்களின் ஆன்மாவைப் பிழியும் ஒன்றாக மாறி விட்டது. போர் முடிவுக்கு வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்ய முடியாதளவுக்கு இராணுவ நெருக்குவாரங்கள் காணப்பட்டன. காலப் போக்கில், நினைவேந்தல் நிகழ்வுகள், தடைகளையும் மீறி நடக்க ஆரம்பித்தன. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல், பெருமளவான மக்களின் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தேறின. 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களால் காணப்பட்ட பாதுகாப்பு இறுக்க நிலைக்கு மத்தியில், கடந்த ஆண்டு நினைவேந்தல் நடந்து முடிந்தது. இந்த ஆண்டு வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிய கதையாக, 2015இற்கு முற்பட்ட காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட அத்தனை நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே நினைவேந்தலை நடத்த வேண்டிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள். கடந்த ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம் இதுபோன்ற நினைவேந்தல்களை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுவாகவே இருந்து வந்தது. ஆனாலும், கடந்த நொவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு, பெரியளவில் எதிர்ப்பை தெரிவிக்காமல் அரசாங்கம் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொண்டது. அதுபோலவே தமிழர் தரப்பும், சற்று கட்டுப்பாட்டுடனேயே அந்த நிகழ்வை நடத்தியது. எனினும், முள்ளிவாய்க்கால நினைவேந்தல் நிகழ்வுக்கு பெரியளவில் சிக்கல் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், இம்முறை கொரோனா தொற்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குப் பெரும் சவாலாக மாறி விட்டது. மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுமதித்த அரசாங்கம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடமளிப்பதற்கு தயாராக இல்லை என்றே தற்போது தெரிகிறது. ஏனென்றால், மாவீரர் நாள் என்பது பொதுவான ஒன்று. போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருகின்ற நிகழ்வு. அதன் மீது கை வைக்கின்ற போது, கடும் எதிர்ப்புணர்வுகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படும். ஆனால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பொறுத்தவரையில் தந்போதைய அரசாங்கம் தமக்கு எதிரான ஒன்றாகவே அதனைப் பார்க்கிறது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஆட்சியில் இருந்த அரசாங்கமே இப்போது பதவியில் இருக்கிறது. அந்தப் படுகொலைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று சர்வதேச சமூகத்தினால் வலியுறுத்தப்படுகின்றவர்களே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான தலைவர்களாக மாத்திரமன்றி, முக்கியமான பொறுப்புகளிலும் இருக்கிறார்கள். போருடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த – போரில் நடந்த மீறல் சம்பவங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களாக, அடையாளப்படுத்தப்பட்ட - கோத்தாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் இப்போதைய அரசாங்கத்தில் மிக முக்கியமான பதவிகளில் இருக்கின்றனர். இவ்வாறான நிலையில், தாம் பதவியில் இருக்கின்ற போதே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுப்பது தமது முகத்துக்கு நேராக விடுக்கப்படுகின்ற சவாலாகவே அவர்கள் உணருவதாக தெரிகிறது. அதனால் தான், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஒரு தீபத்தைக் கூட ஏற்றுவதற்கு அனுமதிக்காத வகையில், பொலிசாரையும், இராணுவத்தினரையும் களமிறக்கியிருந்தது அரசாங்கம். இந்த நினைவேந்தலை தடுப்பது அரசாங்கத்தின் இலக்காக இருந்த நிலையிலும், அதனையும் மீறி நிகழ்வுகள் ஆங்காங்கே நடத்தப்பட்டிருந்தன. நினைவேந்தல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். தனிமைப்படுத்தல் உத்தரவுக்கும் முகம் கொடுத்து, பின்னர் அந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் நிலையும் ஏற்பட்டது. நினைவேந்தலைத் தடுப்பதற்கு அரசாங்கம் கொரோனா தொற்றுச் சூழலையும், தனது ஆளணியையும் ஒருங்கிணைத்துச் செயற்படுத்தியிருந்தது. ஆனால், தமிழர் தரப்பு இந்தச் சூழலை சரியாக கையாளுவதற்கோ, நினைவேந்தலை நடத்துவதற்கோ ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டிருக்கவில்லை என்பதே உண்மை. தமிழர் தரப்பு அரசியல் ரீதியாகப் பிளவுபட்டுப் போயிருந்ததானது, இந்த நினைவேந்தல் இன்னும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படாமல் போனதற்கு முக்கிய காரணம் எனலாம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் கட்சிகள் தமது நலன்களை அடைவதற்காகவே பயன்படுத்திக் கொள்கின்றன என்றொரு குற்றச்சாட்டு கடந்த காலங்களில், இருந்தது. எனினும், கடந்த ஓரிரு ஆண்டுகளில், அரசியல் கட்சிகளுக்கு - பிரமுகர்களுக்கு முக்கியத்தும் குறைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் முன்னுரிமைப்படுத்தப்படும் நிலை காணப்பட்டது. ஆனாலும், நெருக்கடியான சூழலில் இதுபோன்ற நினைவேந்தல்களை முன்னின்று செயற்படுவதில் அரசியல் கட்சிகளுக்குத் தான் பலம் அதிகம். நினைவேந்தல் கட்டமைப்பு ஒன்றே நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தாலும், அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்திருந்தார் இன்னும் வலுவாக செயற்பட்டிருக்க முடியும். நினைவேந்தல் நிகழ்வுகள் அரசியலுக்கு பயன்படுத்தப்படக் கூடாது என்ற போதும், இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில், நிகழ்வுகளை வலுவாக நடத்துவதற்கு, அரசியல் கட்சிகளின் ஆதரவு அவசியம். இந்தமுறை நினைவேந்தல் நிகழ்வை முள்ளிவாயக்கால் மண்ணில் நடத்துவதில் பெரும் சிக்கல்கள் இருந்தாலும், ஏனைய நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கவில்லை என்பதே உண்மை. உதாரணத்துக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்களும் அறிக்கைகளை வெளியிட்டார்களே தவிர, எவ்வாறான முறையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டு முறையை சரியாக கொடுக்கவில்லை. மாவீர்ர் நாள் என்றால், அது எப்படி எந்த நேரத்தில் நடத்த வேண்டும் என்றொரு வழிகாட்டு நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. மாலை 6.05 மணிக்கு, மணி யொலி எழுப்பப்படும், அதையடுத்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்படும். மாலை 6.07 மணிக்கு சுடர் ஏற்றப்படும். இந்த வழிகாட்டு முறை எங்கும் எப்போதும் மாற்றப்படுவதில்லை. முள்ளிவாய்க்கால் நிகழ்வில், காலை 10.30 மணிக்கு சுடர் ஏற்றுவதென ஒரு வழக்கம், அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலையில் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ஆளாளுக்கு ஒரு நேரத்தை முன்மொழிந்து, குழப்பி விட்டனர் என்றே தெரிகிறது. இந்தமுறை பொது இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாததால், வீடுகளிலேயே நிகழ்வுகளை நடத்துங்கள் என்றே அனைத் தரப்பினரும் கோரியிருந்தனர். ஆனால் எந்த நேரத்தில் அதனைச் செய்ய வேண்டும் என்பதை கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க எல்லாத் தரப்பினரும் தவறி விட்டனர். வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், 18.18.18 என்ற அடிப்படையில், அதாவது, மே 18 ஆம் திகதி, 18 மணி 18 நிமிடத்துக்கு ( மாலை 6.18 மணி) அஞ்சலி செலுத்துமாறு கேட்டிருந்தார். தமிழ். அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வெளியிட்ட அறிக்கை, இந்த முன்மொழிவை ஏற்றுக் கொள்வதாக இருந்தது. ஆனால் வேறு சில அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாலை 7 மணிக்கு தீபம் ஏற்றுமாறு கோரி அறிக்கைகளை வெளியிட்டன. இன்னும் சில தரப்புகள் 6 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் தீபம் ஏற்றுமாறு கோரின. இந்து மத அமைப்பு ஒன்று ஆலயங்களில் மாலை 6 மணிக்கு மணியொலி எழுப்பி அதனையடுத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்துமாறு கோரியது. இவ்வாறான பல்வேறு நேரங்களையும், முன்னிறுத்தி விடுக்கப்பட்ட கோரிக்கைள் சரியாக மக்களை சென்றடையவில்லை. நேரமா முக்கியம், நினைவேந்தல் தான் முக்கியம் என்று கேள்வி எழுப்பக் கூடும். ஆனால், நினைவேந்தலை முன்னெடுக்கும் போது ஒரு நிலையான நேரம் வகுக்கப்படுவது அவசியம். “அந்தக் கணம் அவர்களுக்கானது” என்ற உணர்வு இருந்தால் தான், அது நிலையானதாக வலுப்பெறும். நொவம்பர் 27 மாலை 6.07 மணி என்பது எவ்வளவுக்கு உணர்வுகளில் ஊறிப் போயிருக்கிறதோ அதுபோலவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான தருணமும் தீர்மானிக்கப்படுவது அவசியம். இதனை தீர்மானிப்பதற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லா தரப்புகளும் இணைவது முக்கியம். முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் மக்களின் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு அடையாளமாக இருக்கப் போகிறது. அந்த அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு இதுபோன்ற தனித்துவமான அடையாளங்கள் உருவாக்கப்படுவது அவசியம். அடுத்த முறையாவது இதற்கான முயற்சிகளில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இறங்குமா? https://www.virakesari.lk/article/82590
 16. காதல்,காமம், ஓரினச் சேர்க்கை, பாலியல் அத்துமீறல்: ஒரு செக்ஸ் தெரபிஸ்டின் அனுபவம் Getty Images பீட்டர் சேடிங்டன் மற்ற செக்ஸ் தெரபிஸ்ட்களைப் போல, தன் வாடிக்கையாளர்களிடம் பேசும் விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர், அவர்களைப் பற்றி வெளியில் பேசி நம்பகத்தன்மையை கெடுத்துக் கொள்ளாதவர். ஒரு தெரபிஸ்ட்டாக பல ஆண்டுகளாக இள வயதினருக்கு அவர் அளித்த சிகிச்சைகள் அடிப்படையில் அவருடைய வாடிக்கையாளர் பற்றிய கதைகள் உள்ளன. மிகவும் அந்தரங்கமான ரகசியங்கள் பற்றி அவர்களுடன் நான் பேசுவேன். ஆனால், என்னைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அப்படி தான் இருக்க வேண்டும். நான் ஒரு செக்ஸ் தெரபிஸ்ட். ஆண்களின் விரைப்புத்தன்மை குறைபாடு, உடலுறவின் போது பெண்ணுறுப்பு இறுக்கமாகிக் கொள்ளக் கூடிய வலி மிகுந்த பெண்ணுறுப்புக் கோளாறு போன்ற விஷயங்களுக்காக உதவிநாடி என்னிடம் வருவார்கள். `உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா' என்று ஒரு வாடிக்கையாளர் கேட்டால், ஆமாம் ஆகிவிட்டது என்று கூறுவேன். அதற்கு மேல் எதுவும் சொல்ல மாட்டேன். தொழில் சார்ந்து மட்டும் பேசுவோம். இவர்களிடம் ஒரு தெரபிஸ்ட் ஆக நான் பேசுவேன், நண்பராக அல்ல. அதனால் சில வாடிக்கையாளர்களுடன் ஒரு பிணைப்பு ஏற்படும். இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு உதவும் செயல்பாடுகள் காரணமாக அப்படி ஏற்படும். நான் பணியாற்றும் கிளினிக்கில், தெரபி அளிக்கப்படும் அறைகள் வீட்டின் ஹால் போல இருக்கும் - யாரும் இல்லாத ஹால் போல இருக்கும். செளகரியமான மூன்று இருக்கைகள் இருக்கும் - ஒன்று எனக்கு, வாடிக்கையாளர்களுக்கு இரண்டு. குடும்ப புகைப்படங்களோ, தனிப்பட்ட பொருட்களோ அங்கு வைத்திருக்க மாட்டேன். அதனால் ஒரு இடைவெளியை கடைபிடிக்க உதவியாக இருக்கும். ஜோடிகளையும் பார்ப்பேன், தனியாக வருபவர்களையும் பார்ப்பேன். தனியாக வரக் கூடியவர் அல்லது துணைவர் இருந்து, தனியாக ஆலோசனை பெற வருபவராக இருக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு, ராப் என்ற 29 வயது ஆண் என்னை சந்திக்க வந்தார். தன்னுடைய புதிய பெண் தோழி, ஏற்கெனவே அதிக அனுபவம் உள்ள அந்தத் தோழியுடன் தன்னுடைய செயல்பாடு குறித்து அவருக்கு அதிக கவலை இருந்ததால் என்னிடம் வந்தார். அந்தப் பெண்ணையும் தெரபிக்கு உள்ளாக்க அவர் விரும்பவில்லை. ஏனெனில் அவ்வாறு செய்வது சங்கடத்தை உருவாக்கும் என்று நினைத்தார். VICKY LETA / BBC Three அனுபவம் குறைவாக இருப்பதால் கெல்லியை வேறு மாதிரியாக பார்ப்பீர்களா என்று பேச்சின் இடையே நான் கேட்டேன். இந்த நிலை அவருடைய தோழிக்கு இருந்தால் எப்படி இருக்கும் என கேட்டேன். இது எந்த அளவுக்கு முக்கியமற்றது என்பதை அவர் விரைவாக உணரத் தொடங்கினார். தன்னுடன் வருமாறு தோழியை அவர் கேட்டுக் கொண்டார். கெல்லியும் வரத் தொடங்கியதும், ராப்-க்கு நம்பிக்கை திரும்பிவிட்டது. தனக்கு தெரிந்தவற்றைவிட, நிறைய தெரிந்தவனைப் போல காட்டிக் கொள்ளாமல், தன்னுடைய கவலைகளை நேர்மையாக வெளிப்படுத்தியதால் மாற்றம் ஏற்பட்டது. 20 வயதுகளின் முடிவில் இருப்பவர்கள் தொடங்கி 40 வயதுகளின் ஆரம்பத்தில் இருப்பவர்கள் வரை என் வாடிக்கையாளராக வருகிறார்கள். ஆனால், நீங்கள் நினைப்பதைப் போல, இள வயதினர் செக்ஸ் தெரபியை நாடுவதற்கு அச்சப்படுவது கிடையாது. உண்மையில், கடந்த 15 ஆண்டுகளில் என்னை நாடி வரும் இளவயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிக வயதானவர்களும், வாழ்வின் பிற்பகுதயில் புதிய உறவுகள் கிடைத்த நிலையில் தெரபிக்கு வருகிறார்கள். பாலியல் குறைபாடுகள் பாலியல் குறைபாடுகள் என்பது இப்போது பெரிய சங்கடங்களை ஏற்படுத்துவதாக இல்லை. ஆபாச வீடியோக்கள், செக்ஸ் குறித்த மாறிவரும் எதிர்பார்ப்புகள் இதற்குக் காரணமாக உள்ளன. மக்கள் பல வகையான பிரச்சினைகளை இளவயதில் எதிர்கொள்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆறாவது பாரம் படிக்கும் வயதில் உள்ளவர்கள் முதல் என்னிடம் வருகிறார்கள். விரைப்புத்தன்மை இல்லை என்பது முதல், செக்ஸ் குறித்த குழப்பங்கள் வரையிலான கேள்விகளுடன் அவர்கள் வருகிறார்கள். 2018 ஆம் ஆண்டில் ஒரு செக்ஸ் தெரபி மையத்தில் ஆலோசனைக்கு வந்தவர்களில் 42 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், 35 வயதுக்கும் கீழானவர்களாக இருந்தனர் என்று நான் பணியாற்றும், ரிலேட் (Relate) அமைப்பு தெரிவித்துள்ளது. அதேசமயத்தில், என்னுடைய வாடிக்கையாளர்களில் முதியவருக்கு வயது 89. ஓரிரு ஆண்டுகளாக புதியவருடன் அவர் உறவில் இருந்து வருகிறார். துரதிருஷ்டவசமாக, அவரும், புதிய துணையும் பாலியல் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்கள் பொது மருத்துவரிடம் சென்றிருக்கிறார்கள். அந்த வயதிலும் அவர்கள் பாலியல் உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து டாக்டர் அதிர்ச்சி அடைந்ததைப் போல அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் என்னிடம் வந்திருந்தனர். VICKY LETA / BBC Three செக்ஸ் தெரபிக்கு வருபவர்களில் பலர் ஏற்கெனவே வேறு டாக்டரிடம் சென்றிருப்பார்கள். தங்களுடைய பிரச்சினை பற்றி யாராவது ஒருவரிடம் விரிவாகப் பேசுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பலரும் பதற்றமாக இருப்பார்கள் - அறைக்குள் எனக்கு எதிரே செக்ஸ் பிரச்சினைகளை செய்முறையில் காட்ட வேண்டி இருக்குமோ என்று நினைப்பார்கள். அப்படி நடப்பது கிடையாது! விரைப்புத்தன்மைக் குறைபாடு என்னுடைய மிக இளவயது வாடிக்கையாளர், 17 வயது பையன். அவனுக்கு விரைப்புத்தன்மைக் குறைபாடு இருந்தது. அவனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள அவனுடைய தோழி முயற்சி செய்திருக்கிறார். அவனால் முடியவில்லை. அதனால் இருவரும் பிரிந்துவிட்டனர். தனது விரைப்புத்தன்மை கோளாறு தான் இதற்குக் காரணம் என்றான் அந்தப் பையன். பிறகு விலை மாதர்களிடம் முயற்சி செய்து பார்த்திருக்கிறான். மது அருந்தி பிரச்சினையை மறந்திருக்கிறான். ஆனால் எதுவுமே அவனுக்கு கை கொடுக்கவில்லை. என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை. இப்போது அவனுடைய வகுப்பில் அவன்பால் ஈர்ப்பு கொண்ட ஒரு மாணவி இருக்கிறாள். அவனை அவள் விரும்புவது போலவும் தெரிகிறது. ஆனால் அந்த நட்பைத் தொடருவதற்கு அவன் பயப்படுகிறான். VICKY LETA / BBC Three ஆலோசனை கேட்டு பொது மருத்துவரை நாடியிருக்கிறான். இப்போது சிறிய வயதுதான் என்பதால், தானாக பிரச்சினை சரியாகிவிடும் என்று அந்த மருத்துவர் கூறியிருக்கிறார். அங்கே இருந்தபோது செக்ஸ் தெரபி பற்றிய ஒரு பிரசுரத்தை பார்த்திருக்கிறான். அதனால் இதை முயற்சித்துப் பார்க்கலாம் என வந்திருக்கிறான். முதலில் அவன் வந்தபோது பதற்றமாக இருந்தான். நாங்கள் பேசிய நேரம் முழுக்க முகம் முழுவதும் சிவந்து இருந்தது. ஒவ்வொரு செக்ஸ் தெரபி ஆலோசனை நேரமும் வித்தியாசமாக இருக்கும். பெரும்பாலும் நாங்கள் அளிப்பது செக்ஸ் கல்வி தான். உடல் பாகங்களின் வரைபடங்களைப் பார்த்து பேசுவோம். உங்களுக்கு எப்படி இருந்தது, விரைப்பு எப்படி இருந்தது என்பது பற்றி படங்களைக் காட்டி பேசுவோம். அவனைப் பொருத்த வரையில் ஆர்வம் தான் பிரச்சினையாக உள்ளது என்று புரிய வைத்தேன். வீட்டில் விரைப்புத்தன்மை பெறுவதற்கும், தொடர்ந்து மூன்று முறை அதைக் குறைப்பதற்கும் நான் பயிற்சி கொடுத்தேன். தனக்கு மீண்டும் விரைப்புத்தன்மை ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த இவ்வாறு செய்தேன். படிப்படியாக, அவனுக்கு அதிக நம்பிக்கையாக உணர்ந்தான். ஏழு சந்திப்புகளில் அவனுடைய பிரச்சினை தீர்ந்து போனது. தெரபி முடிந்து ஒரு மாதம் கழித்து, மையத்துக்கு வந்த அவன் ஒரு குறிப்பை கொடுத்துவிட்டு சென்றான். தன் வகுப்பில் உள்ள அந்த மாணவியுடன் வெளியில் செல்வதாகவும், விரைவில் தாங்கள் உறவு கொள்ள வாய்ப்புள்ளதாக நினைப்பதாகவும் அதில் எழுதியிருந்தான். தெரபிஸ்ட் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, இருப்பிடப் பள்ளிக்கூடம் ஒன்றில் சிறப்புக் கல்வி தேவைகளுக்கான ஆலோசகராக இருந்தேன். பள்ளிக்கூடத்தில் பணி செய்வது எவ்வளவு கஷ்டமானது, மாணவர்களால் தம்பதியினரின் உறவுகளை சரியாக பராமரிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பதை அறிந்து கொண்டேன். அவர்களுக்கு உதவியாக நிறைய செய்ய வேண்டும் என்று விரும்பினேன். என் வேலைகளுடன் சேர்த்து, தம்பதியினரின் ஆலோசகராக இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றேன். பிறகு முழுநேர பணிக்கு மாறினேன். உறவுகள் குறித்த பிரச்சினை தொடர்பாக தம்பதியினருக்கு நான் உதவி செய்யும்போது, அவர்களுடைய பிரச்சினைகள் பாலியல் சார்ந்ததாகவும், உணர்வுகள் சார்ந்ததாகவும் இருப்பதை அறிந்தேன். எனவே அனைத்து நிலைகளிலும் அவர்களுக்கு உதவிட, செக்ஸ் தெரபி பயிற்சி அளிப்பது என்று நான் முடிவு செய்தேன். VICKY LETA / BBC Three ஓரினச் சேர்க்கையாளர்கள் செக்ஸ் தெரபிஸ்ட் ஆக நான் தகுதி பெற்றதும் நான் பார்த்த ஒரு ஜோடியினர், உணர்வு ரீதியாக பலமான பிணைப்பு கொண்டிருந்தனர். ஆனால் 20கள் மற்றும் 30கள் என்ற வயதில் இருந்த மேட் மற்றும் அலெக்ஸ் என்ற அவர்கள் செக்ஸ் வாழ்வில் உதவி தேவைப்படும் நிலையில் இருந்தனர். முதலாவது அமர்வில் நாங்கள் பேசியபோது, இருவருமே வெட்கப்பட்டனர். இருக்கையில் முழுதாக அமரவில்லை, என் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்த்தனர். பின்புறம் வழியாக உறவு கொள்தல் போன்ற, வெளிப்படையான செக்ஸ் விஷயங்கள் பற்றி என்னிடம் பேச அவர்கள் தயங்கினர். நான் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டேனோ என்று தயங்கியதைப் போல தெரிந்தது. ஏனெனில் அவர்கள் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள். விரைப்புத் தன்மை தான் பிரச்சினையாக இருக்கும் என்று யூகித்தேன். எனவே வெளிப்படையாக நேர்மையாக செக்ஸ் பற்றி பேச தயாரா என்ற கேள்வியை எழுப்பினேன். விரைப்புத்தன்மை கோளாறுகள், விந்து முந்துதல் ஆகியவைதான் நிறைய ஆண்கள் என்னைப் பார்க்க வருவதற்கான காரணங்களாக உள்ளன. ஆண் ஓரினச் சேர்க்கை உறவுகளில், இருவருக்கும் விரைப்புத்தன்மை எதிர்பார்க்கப்படும் நிலையில், செயல்படுதலில் அதிக மன அழுத்தம் இருக்கும். இருபால் உறவு தம்பதிகளைப் பொருத்த வரையில், குறைந்தபட்சம் அந்தத் தருணத்தில் ஆணுக்கு ஒப்பீடு எதுவும் இருக்காது. அந்தரங்கத் தொடுதலில் மன அழுத்தத்தை நீக்குவதற்கு மேட் மற்றும் அலெக்ஸ்-க்கு தொடுதலுக்கான பயிற்சிகளை அளித்தேன். ஒருவர் இன்னொருவரை அரை மணி நேரத்துக்கு தொட வேண்டும் - அவருடைய உடலின் பாகங்களை தொட்டு ஆனந்தம் அளிக்க வேண்டும். அவர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். ஆனால், அடுத்தவரின் பிறப்புறுப்பைத் தொடுவதற்கு இருவருக்குமே அனுமதி கிடையாது. இது உறவுக்கு முந்தைய விளையாட்டு அல்ல. ஆனால் உணர்வுகளில் கவனம் செலுத்தும் விஷயம். இறுதியாக, அவர்கள் உடல் முழுக்க தொட்டுக் கொண்டனர். உறவில் இறங்குவதற்கு முன், அடுத்தவரின் உணர்ச்சியை எப்படி தூண்டுவது என புரிந்து கொண்டனர். அவர்கள் நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். இந்த ஆலோசனை நேரங்களை, உறவுக்கான இரவுகளைப் போல கருதிக் கொண்டனர். மெழுகுவர்த்திகள் வைத்து, உணர்ச்சியைத் தூண்டும் இசையை கேட்டனர். மேட்டின் நம்பிக்கை சீக்கிரமாக அதிகரித்துவிட்டது என்பது மகிழ்ச்சியான செய்தி. 15 வார கால தெரபிக்குப் பிறகு, இருவருமே உறவு கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். பிறகு சில வாரங்களில், எல்லா நேரங்களிலும் உறவு கொள்ள முடிவதாக அவர்கள் என்னிடம் கூறினர். தெரபி முடிந்து 3 மாதங்கள் கழித்து, தொடர் ஆலோசனைக்காக அவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் அதிக காதலாக இருந்தனர். தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அவர்கள் கூறினர்! அவர்கள் மகிழ்வாக இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள் என அறிந்ததில் மகிழ்ச்சியாக இருந்தது. என்னுடைய வேலை கிளர்ச்சி தருவதாக இருக்கிறது என என் நண்பர்கள் கூறுகிறார்கள். நீங்கள் ஓர் ஆலோசகர் என்று கூறும்போது மற்றவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நீங்கள் செக்ஸ் தெரபிஸ்ட் என்று கூறினால் பார்வை முற்றிலுமாக மாறிப் போகிறது. சிலர் செக்ஸ் பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அதைப் பேசினால் கொஞ்சம் அசவுகரியமாக உணர்வார்கள். இருந்தாலும் மற்றவர்கள் தங்கள் செக்ஸ் பிரச்சினைகளை மகிழ்ச்சியுடன் என்னிடம் கூறுகிறார்கள். சிலர் தொழில் ரீதியாக என்னை அணுகலாமா என கேட்பார்கள், தெரிந்த ஒருவருடன் பேசுவது அதிக நம்பிக்கை தருவதாக இருக்கிறது என்பார்கள். ஆனால் நான் மறுக்க வேண்டியிருக்கும். என் வேலை சார்ந்த விஷயங்களை நான் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருடன் சிகிச்சைக்கான உறவு முறையை நீங்கள் கொண்டிருக்க முடியாது. பாலியல் அத்துமீறல் அல்லது பாலியல் தாக்குதல் போன்ற கடந்த கால அதிர்ச்சிகள் தான் செக்ஸ் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கும். ஒரு பெண் வாடிக்கையாளர், அவருக்கு உறவு நேரத்தில் பெண் உறுப்பு இறுக்கமாகிக் கொள்ளும். தனது தம்பி பிறந்த போது, தாயார் சாவைத் தொட்டுவிட்டு வந்தார் என்று சொன்னதை அவர் கேட்டிருக்கிறார். VICKY LETA / BBC Three நாங்கள் இரண்டாவது சந்திப்பில் பேசியபோது, வாடிக்கையாளரின் குழந்தைப் பருவம், குடும்பப் பின்னணி மற்றும் ஆரம்ப கால பாலியல் அனுபவங்கள் பற்றி பேசினோம். சிறு வயதாக இருந்தபோது, தன் தாயாரின் அலறைக் கேட்டதாகவும், தன்னால் அப்படி தாங்க முடியாது என மற்றவர்கள் பேசியதைக் கேட்டதாகவும் தெரிவித்தார். உறவு குறித்த அவருடைய கவலைகளை தீர்ப்பதற்கு, சி.பி.டி. என்ற பழக்கப்படுத்தும் தெரபி முறையை செய்தோம். நிகழ்வுகளுக்கு தானாகவே விளைவுகளை வெளிப்படுத்துவதற்குப் பழகுதல் பற்றியது அது. இடுப்புப் பகுதியில் வயிற்றில் உள்ள பெல்விக் புளோர் தசைகளை தளர்வாக வைத்துக் கொள்ள நான் கற்றுக் கொடுத்தேன். செயற்கையாக பெண்ணுறுப்பில் நுழைப்பது போல பயிற்சி செய்ய ஊக்கம் கொடுத்தேன். முனையில் உருண்டையாக இருக்கும் குச்சி போன்ற ஒரு பொருளை அதற்குப் பயன்படுத்துவோம். அது வெவ்வேறு அளவுகளில் இருக்கும். அவர்களின் பெண்ணுறுப்பில் யாராவது உள்ளே நுழைத்து உதவி செய்வார்கள். சிகிச்சைகளைப் பிரித்துக் கொள்ளும் முறைகளை நான் கற்றுக் கொள்ளாமல் போயிருந்தால், இந்த வேலையில் நீடித்திருக்க முடியாது. சில கஷ்டமான, துயரமான கதைகளையும் நான் கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் ஒருபக்கமாக தள்ளி வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நான் வெற்றிகரமாக இருக்க முடியாது. நோயாளிக்காக வருத்தப்படுவது பயன்தராது. ஆனால் சோகமான ஒரு நேரம் இருந்தால், மகிழ்ச்சியான நேரமும் இருக்கும். சிலநேரங்களில், தெரபி முடிந்த நிலையில் தம்பதியினரிடம் இருந்து எனக்கு மெசேஜ்கள், கார்டுகள் வரும். ``உங்கள் உதவிக்கு நன்றி, இப்போது கர்ப்பமாக இருக்கிறோம்!'' என அவை வரும். உண்மையில், ஒரு தம்பதியினரிடம் இருந்து, 12 ஆண்டுகளுக்குப் பிறகும் கார்டுகள் வருகின்றன. இப்போது எப்படி இருக்கிறோம் என்பதை அதில் கூறியிருப்பார்கள். அவர்களுடைய ஒரு குழந்தைக்கு என்னுடைய பெயரை வைத்து, என்னை பெருமைப்படுத்தி இருக்கிறார்கள்! இந்த வேலையை செய்வதால் நீங்கள் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை என்பதால், இதைச் செய்வதற்கு வேறு காரணம் இருக்க வேண்டும். உங்களுடைய ஆலோசனையைக் கேட்டு தங்கள் வாழ்க்கையில் மக்கள் மாற்றம் பெறுவதைப் பார்ப்பது அற்புதமான உணர்வைத் தரும். பிபிசி 3-க்காக நடாஷா பிரெஸ்கியிடம் கூறியது... https://www.bbc.com/tamil/global-52785457
 17. யாழில் பொலிஸார் மீது வாள்வெட்டு; இருவர் கைது எம்.றொசாந்த் யாழில் ஊரடங்கு வேளையில் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய சென்ற பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். வலி. வடக்கு நகுலேஸ்வரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்த வேளை இரவு 10 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெறுவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழு மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முயன்ற போது பொலிஸ் உப பரிசோதகர் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டு வாளினால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். அதனை அடுத்து காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற ஏனைய பொலிஸார், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கும் அறிவித்தனர். சம்பவம் தொடர்பில் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த மேலதிக பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் அதிகாரி மீது வாள் வெட்டினை மேற்கொண்ட இருவரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், குழு மோதலில் ஈடுபட்ட ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்/யாழில்-பொலிஸார்-மீது-வாள்வெட்டு-இருவர்-கைது/175-250741
 18. நிறமிழக்கும் வண்ணங்கள் சரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே கலைந்துவிடும். ஏனெனில், சில வாடகை வீடுகளில், மாடிவீட்டுக்கான ஏறுபடிகளைக் கூட, தங்கள் வீட்டுக்குள்ளே ஒழித்துவைத்துக் கொள்வர். அதனால்தான் என்னவோ, “கல்யாணம் கட்டிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்” என, முன்னோர் கூறிக்கொண்டிருப்பதை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். கல்யாணத்தைக் கட்டிக்கொள்ளும் எம்மில் பலருடைய, வீட்டைக் கட்டுவதற்கான ஆசைகள், நிராசைகளாகவே முடிந்துவிடுகின்றன. இருக்கும் வரையிலும் சொந்த வீடிலில்லாமலே வாழ்க்கையைக் கழித்துவிடும் பலரும், வாடகை வீடுகளிலேயே பாட்டி, தாத்தாவென ஒவ்வொருவரை இழந்து, முழுக்குடும்பத்தையும் தொலைத்துவிடுவர். இன்னும் சிலருக்கு, வாடகை வீட்டிலேயே திருமணமும் நடைபெற்று, ஆரம்பப் புள்ளி இடப்படுகிறது. “எலி வங்குக்கு ஒப்பான உன்வீட்டில், எத்தனை ஆண்டுகள்தான், தலையை குனிந்துகொண்டே பயணிப்பது” என, வீராப்பாக யோசித்தாலும், அடுத்த தவணைக்கான பணத்தைச் சேமிப்பதில், அதிக கவனத்தையே இன்னும் சிலர் செலுத்துகின்றனர்; இது கொடும் கனவாகும். பொதுவானதெனக் கூறி, மின்சாரம், தண்ணீர் மீற்றர்கள் எல்லாவற்றையும் ஒன்றென ஒற்றுமை பேசி, கட்டணத் தொகையைப் பிரிக்கும்போது மட்டும், ஆகக் குறைவாகத் தங்களுக்குப் பிரித்துக்கு கொள்வது, வீட்டு உரிமையாளர்களுக்கு மட்டுமே, கைவந்த கலையாக இருக்கிறது. இதனால், இரண்டு வருடங்களுக்கான முற்பணத்தில் மாத வாடகையையும் கழித்து, அடுத்த இரண்டு வருடங்களுக்கு யாரிடமாவது கையேந்தும் நிலைமை ஏற்பட்டுகிறது. இதனால்தான் என்னவோ மகாகவி பாரதியார், காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும் - அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்தினிடையே - ஒருமாளிகை கட்டித் தரவேண்டும்! எனப்பாடி வைத்துள்ளார். மகாகவி பாரதியாரின் இந்தப் பாடல் வரிகளே, இன்று அநேக இல்லத்தரசர்களின் ஏக்கமாக உள்ளன. தமக்கெனச் சொந்தக் காணி, வீடு இருக்க வேண்டுமென்பதே அவர்களின் இலட்சியமாக உள்ளது. இதற்காகவே இரவு, பகலாக உழைக்கின்றனர். ஆனால், அந்த இலட்சியம் நிறைவேறும் வரை, வாடகை வீடுகளில் கூண்டுப் பறவைகளாக, இவர்கள் படும் அவஸ்தைகள் சொல்லிலடங்காதவை. ஆனால், என்ன அவஸ்தைகள் ஏற்பட்டாலும், தமக்கு மாற்று வழியொன்று இல்லாமையால், மீண்டும் மீண்டும் அதே வாடகைக் கூண்டுகளுக்குள்ளேயே சுற்றிவருகின்றனர். வேலைவாய்ப்பு, கல்வி எனப் பல தேவைகள் நிமித்தமும் வசதிவாய்ப்பு, நகர மோகம் போன்றவற்றாலும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு நகரும் பலரே, வாடகை வீடுகளில் அல்லது, அறைகளில் பெரிதும் அல்லற்படுகின்றனர். பத்திரிகை, இணையத்தள விளம்பரங்கள் ஊடாகவே, அனேகமானோர் வாடகை வீடுகளை நாடுகின்றனர். விளம்பரத்தைப் பார்த்துச் செல்லும் பெரும்பாலானோருக்கு, ஏமாற்றமே கிட்டுகின்றது. காரணம், விளம்பரப்படுத்தப்பட்ட வீட்டுக்கும், நேரில் அவர்கள் பார்க்கும் வீட்டுக்கும் சம்பந்தமே இருக்காது. இரண்டு அறைகள் எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அங்கு சென்றால், ஓர் அறையே இருக்கும். வாகனத் தரிப்பிடம் உள்ளதென, வீடு அமைந்திருக்கும் வீதியோரத்தைக் காட்டுவார்கள். விளம்பரப் புகைப்படங்களில், வீடுகளை அழகாகக் காட்டியிருப்பர். ஆனால், அவ்வீட்டுச் சூற்றுச்சூழல் மிக மோசமானதாக இருக்கும். இவ்வாறு, பல்வேறு பிரச்சினைகள் அங்கிருக்கும். இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டுதான், வாடகை வீட்டில் பலர் குடியேறுகின்றனர். இந்தச் சகிப்புத் தன்மையும் கால ஓட்டத்தில் பழகிப்போய்விடும். கொவிட்-19 தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, முடக்கங்கள் காரணமாக, பல நாடுகளின் அபிவிருத்திகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில், சுமார் 60 மில்லியன் மக்களைத் தீவிர வறுமைக்குள் இட்டுச் செல்லும் என, உலக வங்கி எச்சரித்துள்ளது. மில்லியன் கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருடம், உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் மந்த நிலையிலேயே காணப்படும் என்றும், உலக வங்கியின் தலைவர் டேவிட் மெல்பாஸ் தெரிவித்துள்ளார். இதுபோன்றதொரு சூழ்நிலையில், வாடகை வீடுகளில் இருப்பவர்கள் குறிப்பாக, கொழும்பு போன்ற பிரதான நகரங்களில் வாழ்பவர்கள், அறைகள், வீடுகள், கடைகள் என்பவற்றை வாடகைக்கு எடுத்திருப்போர், தற்போது பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். தமது வருமானத்தை இழந்திருக்கும் நிலையில், வாடகையைக் கட்டமுடியாது திணறுகின்றனர். அவர்கள் மாத்திரமல்லாது, தமது வீடு, அறை, கடை என்பவற்றை வாடகைக்கு விட்டு, அதில் வரும் வருமானத்தில் மட்டுமே தங்கியிருப்போரின், நிலைமையும் மோசமாகவே உள்ளது. இதனால், பெரும்பாலானோர் இந்த இடர் காலத்தையும் பொருட்படுத்தாது, வாடகைப் பணத்தை வசூலிப்பதிலேயே குறியாக உள்ளனர். அதிலும், சிலர் வெளிநாடுகளில் இருந்துகொண்டும், மனிதாபிமானம் இல்லாது வாடகைகளை அறவிடுகின்றனர். எனவே, வாடகை கட்டுதல், பெறுதலில் பல முரண்பாடுகள் தோன்றியுள்ளன. வீட்டைக் காலி செய்யுமாறும், கடையைத் திருப்பித் தருமாறும் உரிமையாளர்கள் பலர் தகராறிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இடையிலான முரண்பாடுகள், நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதைக் காண முடிகின்றது. பலர் தொழில்களை இழந்து, அன்றாட வாழ்க்கையையே பெரும் போராட்டத்துக்கு மத்தியில் கொண்டு செல்கையில், இப்படியான பிரச்சினைகள் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் அபாயம் தோன்றியுள்ளது. அண்மைக் காலமாக, இந்த வாடகைப் பிரச்சினை குறித்த பல உரையாடல்கள், பேஸ்புக் ஊடாக உலா வருகின்றன. தனிநபரொருவர் தங்குவதற்கான, குளியலறையுடனான ஓர் அறைக்கு, சுமார் 6,000 முதல் 15,000 ரூபாய் வரை, மாதாந்த வாடகை அறவிடப்படுகின்றது. குளியலறை, சமையல் அறையுடன் கூடிய வீடுகள், 15,000 முதல் 150,000 ரூபாய் வரை அறவிடப்படுகின்றன. அதிலும், ஆரம்பர வீடுகளின் மாத வாடகை பல இலட்சங்கள் வரை செல்கின்றன. இவை, இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. இங்கு, வாடகைகளுக்கென ஒரு வரையறை நிர்ணயிப்பு கிடையாது. வீடுகளை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள், தங்களுக்கு ஏற்றவாறு, வீட்டு வாடகைகளை உயர்த்திக் கூறுவதோடு, உரிமையாளர் பாவிப்பதற்கான மின்சாரக் கட்டணம், நீர்க் கட்டணம், சுத்தம் செய்பவர்களுக்கான கட்டணம், வீட்டுக்காவலர் கட்டணம், பராமரிப்புக் கட்டணம் எனப் பல வகைகளிலும் கட்டணங்களை வசூலிக்கின்றனர். இயலுமானவர்கள் குடியேறுகின்றர்; ஏனையோர் வேறு இடம் தேடுகின்றனர். மேலும், முற்பணம், வாடகை ஒப்பந்தம், குத்தகை உள்ளிட்ட பல விடயங்களில் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் இடையில் பலவேறு சிக்கல்கள் நிலவி வருகின்றன. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில், வீடொன்றை வாடகைக்கு வழங்கும் போது, அங்குள்ள அறைகளுக்கு ஏற்ப வாடகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை மீறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டில், மக்களுக்குத் தெரிந்த வகையில், வாடகை நிர்ணயிப்புத் தொடர்பான சட்டம் நடைமுறையில் இல்லையென்றுதான் கூற வேண்டும். ஆனாலும், வாடகை வீடுகளில் வசிப்பவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வீட்டு வாடகை நிர்வாகக் குழுவொன்று இலங்கையில் செயற்படுகின்றது. இது, பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டாலும், அது பற்றி மக்கள் பெரிதாக அறிந்திருக்கவில்லை. எனினும், சில நகர சபைகளின் ஊடாக, இவ்வாறான பிரச்சினைகள் தீர்த்துவைக்கப்படுவதும் உண்டு. இவ்வாறான பிரச்சினைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், எல்லோருக்கும் சொந்த வீடுகள் இருக்க வேண்டும். இந்த இடர் காலத்தில், வாடகை வீட்டில் குடியிருப்போருக்கு, நிவாரணமே மறுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சொந்த வீடுகளா வழங்கப்படும்? ஆனால், கொழும்பு மாவட்டத்தில் மூன்று இலட்சம் பேர், வாடகை வீடுகளில் வசிக்கின்றனர் என்றும் இவ்வாறு வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு, நிரந்தர வீடுகளை வழங்கவுள்ளதாக, நல்லாட்சி அரசாங்கத்தில், பெருநகரம், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக இருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க, கடந்தாண்டு தெரிவித்திருந்தார். எனினும், தற்போது அது குறித்த பேச்சுக்கே இடமில்லாமல் போயுள்ளது. இந்த வாடகைப் பிரச்சினை குறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிர்கள், ஊடகவியலாளர்கள் சிலர், அரசாங்கத்தின் கவனத்துக்கு அண்மையில் கொண்டுசென்றனர். இதன் தொடராக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பித்திருந்தார். அத்துடன், “கொழும்பில் வாடகை வீடுகள், அறைகளில் தங்கியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வீடுகளின் உரிமையாளர்கள், வாடகை அறவீட்டில் மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டும்” என்றும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், வீடுகள், அறைகள், கடைகளை வாடகைக்கு விடுவோர், மனிதாபிமானமாக நடந்துகொள்ள வேண்டுமென, அரசாங்கமும் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்ததுடன், ஒதுங்கிக்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை, மனிதாபிமான முறையில் பரிசீலிப்பவர்கள் யார் என்பது இங்கு கோள்விக்குறியே. கொரோனா வைரஸ் அனர்த்த வேளையில், வாடகை வீட்டில் தங்கியிருப்போர், வாடகை செலுத்த முடியாத பணநெருக்கடி ஏற்படும் பட்சத்தில், வாடகைக்குத் தங்கி இருப்பவரை வீட்டின் உரிமையாளர், வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாதளவுக்கு அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள், தற்போது கட்டுப்பாடுகளை விதித்து சட்டங்களை அமல்படுத்தியுள்ளன. எமது நாட்டிலும், இந்த நடைமுறையைத் தற்சமயத்தில், எவ்வகையிலாவது கொண்டு வர முனையலாம். வேறுமனே வேண்டுகோளை விடுப்பதைத் தவிர்த்து, இந்த விடயத்தில் இரு தரப்பும் பாதிக்கப்படாதவாறு, அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறைந்தது, ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில், இரண்டு மாத வாடகையை, உரிமையாளர்கள் அறவிடாமல், இலவசமாக இருக்க அனுமதிக்க வேண்டுமென, கண்டிப்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருக்கலாம். அதேநேரத்தில், அறைகள், வீடுகள், கடைகள் ஆகியவற்றi வாடகைக்கு வழங்கி உள்ளவர்களுக்கு, சிறு நிவாரணத்தை வழங்கி, குடியிருப்பாளர்களிடமிருந்து வாடகையை அறவிடாத நிலையை உறுதிப்படுத்தி இருக்கலாம். எனினும், இவ்விரு தரப்பினரும், அரசாங்கத்தால் கவனிக்கத் தவறிய சமூகத்தினராகவே இன்று வரை உள்ளனர். இதனாலேயே, மாடிகளுக்கான எலிவங்குப் படிகளை, தங்கள் வீட்டுக்குள்ளேயே ஒழித்துவைத்துக் கொள்வோரும், மின்சாரம், தண்ணீர் மீற்றர்களைப் பொதுவெனக்கூறி, கட்டணத் தொகைகளைக் கழிப்பதிலும் கூட்டியே கணக்கிடும் வாடகை வீட்டாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியாயின், அறைகளின் சுவர்களையும் தரையையும் மட்டுமே நாம் பயன்படுத்தலாமென நினைக்கலாம். இல்லையில்லை; அவற்றையும் பயன்படுத்த முடியாது. தவறுதலாக அடித்த ஆணியை சொற்களால் பிடுங்கிவிட்டு, வாடகைக் குடியிருப்பாளர்களையும் தொங்கவிட்டுச் செல்வர். அவ்வளவுக்கு அவர்களுடைய வார்த்தைகள் சுத்தியல் அடியைவிடப் பலமானதாகவும் நிறையுடையதாகவும் இருக்கும். இன்னும் சில வீடுகளில், அவர்களின் செல்லக் குழந்தைகளெனக் கூறப்படும் செல்லப்பிராணிகள், வாடகைக் குடியிருப்பாளர்களின் வீட்டுக்கதவை சிறுநீரால் கழுவிச்செல்லும்; அது செல்லமாகும். ஆனால், தத்தித் தத்தித் தவழும் எமது செல்வங்கள், சுவரைத் தொட்டு நடக்கத் தொடங்கிவிட்டால், செல்லத்தின் கால்களுக்குக் கொலுசு போட்டு, அழகு பார்ப்பதற்கு யாருக்குதான் ஆசையிருக்காது. ஆசையிருந்தாலும், ஏதாவது தொட்டு, சுவர்களில் கிறுக்கி விடுவாளோ(னோ) என்ற அச்சம், வாடகைக் குடியிருப்பாளர்களிடத்தில் சூழ்கொண்டுவிடும். இங்கு, எமது செல்வங்களின் எண்ணங்கள் மட்டுமல்ல, வண்ணங்களும் எமது எண்ணங்களும் கனவுகளும்கூட நிறமிழந்துவிடுகின்றன. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நிறமிழக்கும்-வண்ணங்கள்/91-250767
 19. கவாசாகி நோய் குறித்து பெற்றோருக்கு எச்சரிக்கை May 24, 2020 கொரோனா வைரஸ் தொற்றுடன் உலக நாடுகள் சிலவற்றில் பதிவான கவாசாகி (Kawasaki) என்ற நோய் தற்போது இலங்கையிலும் காணப்படுவதாக லெடி ரிஜ்வே அம்மையார் சிறுவர் Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நோய் ஏற்கனவே இருந்த போதிலும் தற்போது கொரோனா தொற்றுக்கு மத்தியில் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கத்தேய நாடுகளில் தற்போது காணப்படுவதாக தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படவேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 5 முதல் 12 வயது வரையான பிள்ளைகளையே இந்த நோய் பாதிக்கின்றது என்று தெரிவித்த, அவர் 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல், நாக்கு சிவந்து ஸ்ரோபெரி போன்று தோற்றமளித்தல், தோலில் ஏற்படும் சிவப்பு நிறமான பருக்கள், தோல் உரிதல், உதடு மற்றும் கண் ஆகியன சிவப்பு நிறமாகி வீக்கமடைதல் , கழுத்தில் ஒரு வகை சொறி போன்றவையே இந்த நோயின் அறிகுறிகளாகும் என்றார். இலங்கையில் பொதுவாக வருடத்தில் கவாசகி நோயினால் பாதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 50க்கும 100 க்கும் இடையில் காணப்படுகின்ற போதிலும் கொரோனா வைரஸ் தொற்றையடுத்து உலகில் குழந்தைகள் மத்தியில் இந்நோய் வேகமாக பரவும் தன்மை காணப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் , இந்தநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டதால் பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். இந்த நோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாத போதிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார். மனித உடலில் குருதியைக்கொண்டு செல்லும் நாடியில் காணப்படும் அழற்சியினால் இந்த நோய் ஏற்படுகின்றது. இந்த நோய் நடுத்தர அளவுள்ள நாடிகளை தாக்குகின்றது. அதனால் இதயத்திற்கு இரத்தத்தை கொண்டு செல்லும் நாடிகளில் வீக்கம் ஏற்படும்போது இதயத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் . இதுவொரு தன்னுடல் தாக்கும் நோய் என்பதோடு குழந்தைகளின் இதயத்தை பாதிக்கும் ஆபத்து உள்ளது. எனவே இந்தநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுவர் வைத்தியர் நிபுணரை நாட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் தீபல் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார். #கவாசாகி #எச்சரிக்கை #கொரோனா http://globaltamilnews.net/2020/143566/
 20. ‘இரத்தத்தின் கதை’-கதை 02 -‘உப்புக்காற்றினுள் உறைந்த உண்மைகள்’- போர்க்கால அனுபவக் குறிப்புகள்-அலெக்ஸ் பரந்தாமன் ஓவியம் : டிசாந்தினி நடராசா “ஆமி கிளிநொச்சியைவிட்டு வெளிக்கிட்டு விட்டானாம். உங்கை சனங்களெல்லாம் அள்ளுப்பட்டு வருகுதுகள்.” வெளியே யாரோ கூறிக்கொண்டுசெல்வது தரப்பாள் கொட்டிலுக்குள் இருந்த அவனுக்கு வெகு துல்லியமாகவே கேட்டது. அவன் தரப்பாள் கொட்டிலை விட்டு வெளியே வந்தான். கடலில் இருந்து வீசும் உப்புக்காற்று அவனை உதைத்துத் தள்ளுமாப்போல் வீசிக்கொண்டிருந்தது. இந்த நிகழ்வு உண்மையா? அன்றிப் பொய்யா? சிலவேளைகளில் உண்மையாகவும் இருக்க்கூடும். பொய் யெனில், மக்களின் மனதைக்குழப்பி… அக்குழப்பத்தில் அவர்கள் பதற்றப் படுவதை சிலர் ரசிக்கக் கூடும். ஊர் இரண்டு படும்போது அதன் இடையே இருக்கும் கூத்தாடிகள் தமக்குள் குதூகலிப்பதுபோன்று, புலிகள் – இராணு வத்தின் போர்க்கள நிலைவரத்தைப் பல புனைவுகள் கொண்டு சோடிப்பதனூடாக மேலும் பல குழப்பநிலைகள் உருவாகு வதை அவர்கள் விரும்பக் கூடும். சிந்தனைகள் அவனுள் பலதெனவாய் விரிவடையத்தொடங்கின. 01.2009, திங்கள்கிழமை முற் பகல் பத்துமணியளவில்,கைவேலிக் கிராமத்தில் முதன்முதலாக ஷெல் ஒன்று வந்து விழுந்து வெடித்துப் பெரும் சேதாரத்தை உண்டுபண்ணிய அந்த நிகழ்வை அவன் நினைத்துப் பார்க்கிறான். வீட்டின் பின்வளவுள் மரவள்ளிப் பாத்திகளுக்குள் சொரிந்து கிடந்த மரத்தின் இலைகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தபோதுதான், அந்தச் ஷெல் கூவிக்கொண்டு வந்து விழுந்து வெடித்துச் சிதறியது. அதிர்ந்துபோனது அவன்மட்டுமல்ல. அந்தப்பகுதி மக்களும்தான். அடுத்த ஷெல்லும் வரக்கூடும்… என்ற அச்ச உணர்வு அற்றவர்களாக அயலில் இருந்த அனைவரும் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றார்கள். என்ன அகோரமான காட்சி அது. அங்கு சிதறிப்போனதில் எதுவுமே மிச்சமாக இருக்கவில்லை. எங்கோ தூரத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்து, அக்காணியுள் தஞ்ச மடைந்திருந்த குடும்ப உறவுகள் அனைத்தும், தறப்பாள் கொட்டிலுடன் சின்னாபின்னமாகிக் கிடந்தன. குளறி அழுவதற்கு அந்தக்குடும்ப உறவுகளுக்காக அங்கு எவருமிருக்கவில்லை. ஒரு கிழவிமட்டும் அவலமாய் கத்திக்கொண்டிருந்தாள். அதுகூட அவளால் முடியாதிருந்தது. அவளது அகவையின் உச்ச மும் மனதுள் பரவி நின்ற அச்சத்தின் முழுமையும் அவளது உடலை நடுங்கச் செய்து கொண்டிருந்தன. அவனால் மேற்கொண்டு அங்கு நிற்க முடியவில்லை.அவனுள் விபரிக்க முடியாத விபரீத உணர்வுகள்… “நாசமறுப்பார்! எங்கையிருந்து அடிச்சாங்களோ தெரியேல்லை?” விடுப்புப் பார்க்கும் கூட்டத்தைவிட்டு அவன் வெளியேறிக்கொண்டிருந்தபோது அங்கிருந்து யாரோ கூறுவது அவனுக்குக் கேட்டது. கைவேலிக்கிராமத்துள் ஷெல் வந்து விழுந்து வெடித்ததைத் தொடர்ந்து, பலர் கிராமத்தைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அங்கு இனியும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்ற எண்ணம் அவனையும் விட்டு விலகியது. அவனும் தன் குடும்பத்தோடு கிராமத்தைவிட்டு வெளியேற முடிவு செய்தான். மக்க ளோடு மக்களாக மூடை முடிச்சுகளுடன் அயற்கிராமமான மாத்தளன் கடற் கரையை நோக்கி நடந்தவன், கடற்கரை க்கு அருகாமையில், தரப்பாள் கொட்டில் அமைத்துத் தங்கிக்கொண்டான். மக்கள் தொடர்ந்தும் மாத்தளனை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மன்னாரில் இருந்து தொடங்கப்பட்டது இராணுவத்தினரின் முன்னேறும் நடவடி க்கை. இதனால் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள், கிளிநொச்சிக்கு வந்து சேர்ந்தார்கள். ‘ஓடுகிற நாயைக் கண்டால் துரத்துகின்ற நாய்களுக்கு இலகு’ என்பது போன்று, மக்களும் உயிருக்கஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு நகர, நகர இராணுவமும் அதனூடாக ஊடுருவி, இப்போது கிளிநொச்சி வரைக்கும் வந்து நின்றது. கைவேலியை விட்டு வெளிக்கிட்டு மூன்று மாதங்களாகி விட்டன. அவனு க்கு வீட்டின் நினைவுகளே மனதுள் அங்கலாய்த்துக் கொண்டிருந்தன. அவரவர் ஏதோ அசட்டுத் துணிவில் தமது வீடுகளைப் பார்த்து விட்டு வருவதை அறிந்து கொண்ட அவனுக்கும், தனது வீட்டையும் வளவையும் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் எழுந்தது. குறிப்பாக, அவன் ஆசையோடு நட்டு வளர்த்த மரவள்ளிச்செடிகள், மனதில் வந்து நின்றன. இன்னும் ஒருமாதமும் பத்து நாள்களும் கடந்தால் கிழங்குகள் அனைத்தும் உண்பதற்கேற்ற உணவாகிவிடும். சிங்கள அரசின் பொருளாதாரத் தடையின் நிமித்தம், அவன் நட்டு வளர்த்த பயிர்கள் அவை. ஆள் அரவம் இல்லையென்றால், குரங்குகள் கூட்டமாக வந்து எல்லாவற்றையும் சேதாரப்படுத்தி விடும். அவனுக்கு மரவள்ளிச் செடிகள் குறித்து கவலையாக இருந்தது. கைவேலிக்குப் போக வெளிக்கிட்டவனைத் தடுத்து நிறுத்தினாள் மனைவி. மனைவியின் உறவினர்களும் அதை விரும்பவில்லை. ஒருநாள் மாத்தளனுக்கு அருகில் உள்ள வலைஞன்மடம் எனும் இடத்தில் ஒருவரைப் பார்த்து விட்டு வருவதாக மனைவிக்குப் பொய் கூறிவிட்டு, தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு, கைவேலி நோக்கிப் புறப்பட்டான். மாத்தளன் கடற்கரையில் இருந்து கப்பல்றோட்டு வழியாக வந்து, பிரதான கிறவல்வீதியில் ஏறி ஓடிக்கொண்டி ருந்தது அவனது மிதிவண்டி. எதிரே சிலர் தலையில் மூடை முடிச்சுகளுடன் கால்நடையாக வந்து கொண்டிருந்தனர். இடம்பெயர்ந்துவந்த ஒரு குடும்பமொ ன்று இரணைப்பாலை மாதா கோவில் முன்பாக இளைப்பாறிக் கொண்டிரு ந்தது. அருகே சிலமாடுகளும் மேச்சலுக்குச் செல்ல மனமன்றி, சோர்ந்துபோய் படுத்திருந்தன. மாடுகளுக்கு எதிர்த்திசையில் பல நாய்கள் கூட்டமாகச் சேர்ந்தநிலையில், ஊளையிட்டுக் கொண்டிருந்தன. நாய்கள் ஊளையிடுவது அபசகுனத் துக்குரியது… என்பது அவனது ஆன்மீக நம்பிக்கை. பொதுவாக, ஒருவர் இறப்பதற்கு முன், நாய்கள் இப்படி ஊளையிடுவதைக் கண்டிருக்கிறான். அப்படி யானால்…? அவனுக்கு திக்கென்று மனதுள் ஏதோ அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது அவனது மனைவி அவன் வலைஞன்மடத்தில் நிற்பதாகவே நினைத்துக் கொண்டிருப்பாள். புதுக்குடியிருப்பு – ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் காட்டுப்பக்கமாக ஷெல் ஒன்று விழுந்து வெடிக்கும் ஒலி கேட்கி றது. அவன் தனது மிதிவண்டியை நிறுத்தி விட்டு, அந்த இடத்தில் நின்ற வாறு யோசித்தான். ‘கைவேலிப்பக்கம் போவமா? விடுவமா?’ எதிரே வந்த சிறிய உழவு இயந்திர மொன்று அவனைக்கடந்து அப்பால் போனது. ‘சரி… போவம்!’ மனதில் துணிவு வந்தது. தனது மிதிவண்டியை பிரதான வீதியில் இருந்து உள்ஒழுங்கையில் திருப்பினான். ஷெல் கூவிவரும் ஒலிதனைக் கேட்டால், ஒருகணத்துள் நிலத்தில் விழுந்து படுத்து விடலாம். வெடிக்கும் ஷெல்லில் இருந்து பறக்கும் ஈயத்துகள்களை மரம் தடிகள் கூடுமான வரை தடுத்து நிறுத்தும்… என்ற நம்பிக்கையோடு சென்று கொண்டிரு ந்தான். ஆள்களற்ற வீட்டில் சிலரது நடமாட்டம் தெரிந்தது. அவர்கள் கள்வராகவும் இருக்கக் கூடும். எரிகிற வீட்டில் பிடுங்குவதே இப்போது பலருக்குத் தொழிலாகி ப்போய்விட்டதை அவன் உணர்ந்தான். அவனுக்கு தனது வீட்டின் நினைவு வந்தது. கிடுகினால் வேயப்பட்ட ஒரு சிறுவீடு. அவனது குடும்பத்துக்குப் போதுமான வீடு அது. வீட்டை நினைக்க அவனுக்கு கவலை அதிகரித்தது. உள் ஒழுங்கைகளால் ஓடிக்கொண்டிரு ந்த அவனது மிதிவண்டி, இப்போது வேறு ஒரு பிரதான வீதியில் ஏறி…ஓடிக்கொண் டிருந்தது. சுற்று வட்டமெங்கும் அமைதி கலந்த ஓர் அச்சநிலை காணப்பட்டது. தெருவில் ஓரிருவர் ஆங்காங்கே மிதிவண்டிகளில் வந்து கொண்டிருப்பது அவனுக்கு சற்று ஆறுதலைக் கொடுத் தது. அவன் தன் வீட்டு வளவினுள் நுழைந்தான். அங்கே வீட்டு முற்றத்தில், நான்கு பேர் துவக்குகளுடன் நின்றார்கள். அவனது வருகையை அவர்கள் விரும்பவில்லை என்பதை அவர்களின் முகங்கள் வெளிக்காட்டி நின்றன. “எதுக்கு இஞ்சை வந்தனீங்கள்?” கேள்வி கேட்டவனின் குரலில் கடுமை இருந்தது. அவனுக்கோ கடும் சினம் பொங்கியது. “இது எங்கட வீடு. வீட்டைப் பாத்திட்டுப் போவமெண்டு வந்தனான்”. கேள்வி கேட்டவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் பதிலளித்தான் அவன். துவக்கு வைத்திருந்தவன் எதுவும் கூறவில்லை. கடுப்பேறிய தனது முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டான். வீட்டின் உள்கதவு உடைக்கப்பட்டு, அறையினுள் இருந்த பொருள்கள் பலவும் சூறையாடப் பட்டிருந்தன. அவனுக்கு அதிர்ச்சியும் கவலையும் ஒருங்கே சேர்ந்தன. திரும்பி துவக்கு களுடன் நின்றவர்களைப் பார்த்துக் கேட்டான். “கதவு உடைச்சுக் கிடக்குது. ஆர் உடைச்சது?” “ஆமி வந்து உடைச்சிருப்பான்…” துவக்குக் கூட்டத்திலிருந்து வந்தது பதில்! “ஆமி வந்து உடைக்கும் வரைக்கும் நீங்கள் என்ன செய்தனீங்கள்?” “ஹலோ…………..! வீட்டைப் பாக்க வந்தால், பாத்திட்டுப் போம். தேவையில்லாமல் உதில நிண்டுகொண்டு விசர்க் கதை கதையாதையும்”. அவன் எதுவும் கூறவில்லை. தான் நிற்கும் சூழ்நிலையை உணர்ந்தான். மனித சஞ்சாரமற்ற, எதுவித சாட்சிகளுமற்ற அந்தச் சூழ்நிலையில், தனக்கு எதுவும் நேரிடலாம்… என்ற அச்ச உணர்வு அவனுள் எழுந்தது. மனைவி மற்றும் பிள்ளையின் முகங்கள் ஒருகணம் மனத்திரையில் வந்துவிட்டு மறைந்தன. அவன் திரும்பிக் கிணற்றடிப் பக்கம் வந்தான். கிணற்றை ஒருதடவை எட்டிப் பார்த்து விட்டு, பக்கத்து வேலியோரம் சென்று தனது மைத்துனரின் வீட்டை எட்டிப் பார்த்தான். அங்கே முற்றத்தில் தாழப்பதிந்த வேப்பமரக்கிளையொன்றில் தோல் உரிந்த நிலையில், ஒரு குட்டி ஆடு தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அந்தக்குட்டியின் தோலை இடுப்பினில் ‘பிஸ்டல்’கொழுவியிருந்த ஒருவன் மேலும் உரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தலைக்குள் விறைக்கத் தொடங்கியது. திரும்பி தனது வீட்டின் முற்றத்துக்கு வந்தவன், தற்செயலாகத் திரும்பி வளவின் பின்பக்கத்தைப்பார்த்தான். நட்ட மரவள்ளித்தடிகளில் அரைக் கரைவாசி கிழங்குகளோடு பிடுங்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஏனைய கிழங்குத் தடிகளில் ஒன்றை இரு துப்பாக்கிக்காரர் இழுப்பதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். அவன் மெளனமாக தனது மிதிவண்டியை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினான். தெரு இப்போது வெறிச்சோடிப்போய் இருந்தது. அதேநேரம் மாதா கோவில் வளவினுள் அபசகுனமாக ஊளையிட்ட நாய்களும் நினைவினில் வந்து நின்றன. விடுதலைக்கான பயணம் திசைமாறிப் பயணிப்பது அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அமைப்புக்குள் எங்கேயோ பாரிய வெடிப்பொன்று ஏற்பட்டு விட்டதையும், அந்த வெடிப்பினூடாக விரும்பத்தகாதவர்கள் ஊடுருவி விட்டதையும் சமகள நிகழ்வுகள் சாட்சியங்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. ஆமி கிளிநொச்சியைவிட்டு வெளிக்கிட்டு விட்டான்… என்ற செய்தி வெறும் புனைவல்ல என்பது புரிந்தது அவனுக்கு. கதை விரியும் அலெக்ஸ் பரந்தாமன்-புதுக்குடியிருப்பு-இலங்கை https://naduweb.com/?p=11532
 21. விகடன் விருதுகளை திரும்ப ஒப்படைக்கிறேன் May 23, 2020 ஷோபாசக்தி மூன்று தடவைகள் ‘விகடன்’ விருதுகளைப் பெற்றிருக்கிறேன் (வேலைக்காரிகளின் புத்தகம், எம்.ஜி.ஆர் கொலை வழக்கு, BOX). இந்த விருதுகளுக்காக என்னைத் தேர்வு செய்தவர்கள் விகடன் குழுமத்திலிருந்த எழுத்தாளத் தோழர்கள். அது மட்டுமல்லாமல் விகடன் பல முறை என்னிடம் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் கேட்டுப் பெற்று வெளியிட்டதற்குக் காரணமும் இந்த எழுத்தாளத் தோழர்களே. இன்று எழுத்தாளத் தோழர்களும் மற்றும் பணியாளர்களும் விகடன் குழுமத்திலிருந்து பெருந்தொகையில் வெளியேற்றப்படுவதைக் கண்டித்தும் அந்த வெளியேற்றத்திற்கு எதிராகப் போராடும் தோழமைகளுக்கான ஒரு சிறிய துணைச் செயற்பாடாகவும், மூன்று விகடன் விருதுகளையும் திரும்பவும் விகடன் குழுமத்திடமே ஒப்படைக்கிறேன். http://www.shobasakthi.com/shobasakthi/2020/05/23/விகடன்-விருதுகளை-திரும்ப/
 22. “இரத்தத்தின் கதை”- போர்க்கால அனுபவக்குறிப்புகள்-கதை 01-அலெக்ஸ் பரந்தாமன் இரத்தத்தின் கதையை சொல்ல முன்பு : வன்னிப்போரியல் வாழ்க்கைக்குள் எவருமே எதிர்பார்த்திருக்காத திருப்பங்களும், அவலங்களும் நடந்து முடிந்தன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் அவை. அந்த அனுபவங்களானது சந்தோஷப்படுதல் ஒன்றைத்தவிர, மற்றைய எல்லாவிதமான உணர்வுகளையும் உள்வாங்கி, மீண்டெழுந்தனவாக அமைந்தன. அந்த மீண்டெழுதலோடு வாழ்வின் இன்னொருபக்கத்தை அனுபவங்கள் வெளிக்காட்டி நின்றன. சக மனிதர்களைப் பற்றித் தெரியவும் அவர்களது குணவியல்புகள் மற்றும் குரோதச் செயற்பாடுகள் பற்றியும் அறியச் செய்தன. வன்னிப்போர் முடிவடைந்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போர் மனப்புரிதலுள்ளவர்களுக்கு மட்டுமன்றி, ஏனையோருக்கும் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்றவை ஏராளம்! இந்தப்போருக்குள் அநேகமானவர்கள் இறந்தும், ஏனையோர் உயிர்மீண்டவர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி வாழ்பவர்களைப் பார்ப்பதிலும், அவர்களது அனுபவங்களைப் படிப்பதிலும் ஒரு சுவாரஸ்சியம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு கட்டத்தில் உளரீதியான சுகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது. சிந்தனை செய்பவர்களுக்கு அவர்தம் வாழ்க்கையைச் செழுமைப்படுத்த உதவியிருக்கின்றது. எழுத்து இலக்கியத்துக்கு கருக்களமாகவும் அமைந்திருக்கின்றது. இந்த மனிதர்களைப்பற்றி நிறையவே எழுதலாம்! எழுதிக்கொண்டே போகலாம்! தொய்வில்லாத வசனநடைக்கு, அவர்களது துயர் தோய்ந்த வாழ்வின் பல பகுதிகளைத் தெரிந்தெடுக்கலாம். எழுதுவதை விரும்புபவனுக்கும், எழுத்தின்மீதான தேடல்களை அறிந்து கொள்பவனுக்கும் இந்த மனிதர்களின் வாழ்க்கை ஒரு கட்டாய தேவையாக இருக்கிறது. புலிகளின் தமிழ்மக்களுக்கான விடுதலைப் போராட்ட காலத்தில், சிங்கள அரசின் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ஆங்காங்கே தமது சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்த இந்த மனிதர்களை, நிலம்மீதான படையினரின் ‘ முன்னேறுதல்’ நடவடிக்கை மெல்லமெல்ல அவர்களது இருப்பிடங்களை விட்டு நகர்த்தியது. துடைப்பங்களால் கூட்டி ஒதுக்கப்படும் குப்பைகள்போன்று ஓரிடத்தில் சேர்த்து விட்டது. அப்படிச் சேர்த்து விட்டதன் மூலம், அந்த இடத்தில் மிக நெருக்கமாக வாழ்ந்த இவர்களிடமிருந்து பல அனுபவங்களைப் பெறவும், அந்த அனுபவங்களூடாக அநேக விடயதானங்களையும் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மாத்தளன் கடற்கரைப் பகுதியில் இருந்து அம்பலவன் பொக்கணை, வலைஞன்மடம், முள்ளிவாய்கால் வரை, ஒன்று சேர்த்து விடப்பட்டிருந்த இந்த இடம்பெயர் மனிதர்களுக்குள் பலகதைகள் கனத்தனவாய் தேங்கிக் கிடந்தன. அக்கதைகள் ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்ள முடியாத சோகக்கதைகளாகவே இருந்தன. யாரை யார் தேற்றுவது என்பதுகூடத் தெரியாததொரு அவலநிலைக்குள்ளும் பல அராஜகச் செயற்பாடுகளும் அரங்கேறத்தான் செய்தன. எல்லா மனித முகங்களிலுமிருந்து வழிந்து கொண்டிருந்தன கண்ணீர்த்துளிகள். வாய் இருந்தும் ஊமைகளாக… பேசுவதற்கு சுதந்திர மற்றவர்களாக… அவலக்குரல்களை மட்டுமே வெளிப்படுத்தக்கூடியவர்களாக… இருந்தார்கள். அழுது… அழுது… அரற்றியபடியே, தங்களது அன்றாட வாழ்வினைக் கடந்து சென்ற இந்த மனிதர்கள், படிப்பதற்கு தலைசிறந்த நூல்களாகவே இருந்திருக்கிறார்கள் ; இன்றும் கூட இருக்கிறார்கள்! போரியல் நிகழ்வுகள்… வாழ்வனுபவத்துக்கு புதுப்புது அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தன. இந்த அனுபவமானது அவர்களோடும் அவர்கள் மத்தியிலும் வாழ்ந்த எனக்கும் ஏற்பட்டிருந்தது என்பது புனைவல்ல. இலக்கு நோக்கி நகர்வதாகத் தோற்றம் காட்டிக்கொண்டிருந்த விடுதலைப் போராட்டம், இடைநடுவில் பல பாதைகளில் பயணிக்கத்தொடங்கியபோது, வாழ்வின் இன்னொரு பக்கத்தையும், வஞ்சகங்களின் உச்சித் தொடுகையையும் அவ்வப்போது காணக்கூடிய தாக இருந்தது. அசலெது? நகலெது? உண்மையெது? பொய்மையெது? நீதியெது? அநீதியெது? நட்பெது? பகையெது? என்பதையெல்லாம் வன்னிப்போருக்குள் பெற்றுக்கொள்ளக்கூடிய தாக இருந்தது. மன அயர்ச்சியும் மரணத்தை நிதம்நிதம் ருசித்துப்பார்க்கும் வாழ்வுமாக, அவை எமக்கு எழுதப்படாத விதியுமாக இருந்த போதிலும், அவற்றையெல்லாம் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு அஞ்சியபடி… கடந்துதான் போகவேண்டியிருந்தது. சுதந்திரத்துக்காகப் போராடியநாம், இறுதிவரை சுதந்திர மற்ற மனிதர்களாகவும் சுகம் யாவும் இழந்து சோகத்தைச் சுமப்பவர்களாகவுமே வாழ்ந்து கொண்டிருந்ததை கவனித்துக்கொண்டிருந்தது முல்லைப் பெருங்கடல்வெளி. கடற்கரைவெளியில் கிழக்குத் திசையில் தோன்றும் பூரண உதயத்தின் ஒவ்வொரு அழகியலையும் ரசிக்கமுடியாதவர்களாக நித்தமும் அவலங்களைச் சுமந்து வாழ்ந்த காலங்கள் கொடிதிலும் கொடியவை. இந்த அவலக்கொடுமைகளுக்குள் சாதி, சமயம், பணம், படிப்பு, பிரதேசவாதம் மற்றும் தமக்கான ‘ பிற தகைமை’ களை வெளிப்படுத்தியவர்களும் உண்டு. குண்டுகள் உடலைத் துளைப்பினும், உயிரது கணங்களில் பிரியினும் ; கூடவே கொண்டுவந்த மரபுசார் கொள்கைகளை விட்டுக்கொடுக்காது வாழ்ந்த மனிதர்கள் மத்தியில் தான், நானும் வாழ்ந்திருக்கிறேன். இந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் விசித்திர மனப்பாங்குடையவர்கள். இந்த விசித்திரமனோபாவமே என்னை எழுதத் தூண்டுகிறது. வன்னிப்போர் எனக்குக் கற்றுத்தந்தவை ஏராளம்! இந்த ஏராளத்தில் இருந்து சிலவற்றை எழுத்துக்களாகத் தொகுத்து ‘நடு’ வாசகர்களுடன் இனிவரும் நாள்களில் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி! அலெக்ஸ் பரந்தாமன்-புதுக்குடியிருப்பு- இலங்கை https://naduweb.com/?p=11277
 23. விகடன் விருதை திருப்பி அனுப்பிய இயக்குநர்! மின்னம்பலம் தமிழில் 94 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் ஊடக நிறுவனம் விகடன் குழுமம். இந்த நிறுவனம் கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி ஒரே நாளில் 176 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்திருக்கிறது. உங்களில் யாருக்கெல்லாம் தொலைபேசி அழைப்பு வருகிறதோ அவர்கள் எல்லாம் வெளியேறத் தயாராகுங்கள் என்கிற அறிவிப்பினால் எல்லா ஊழியர்களுமே கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதன் பின் 176 பேருக்கு தொலைபேசியில் அழைத்து நீங்களாக பதவி விலகல் கடிதம் கொடுத்து விடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இவர்களில் 87 பேர் நேரடியாக விகடன் குழும இதழ்களின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்கள். அவர்கள் தவிர புதிய செயலிக்கான குழு, தொழில்நுட்பக்குழு என எல்லாப் பக்கங்களிலும் ஆட்குறைப்பு செய்திருக்கிறது விகடன் நிறுவனம். இது இதழியல் உலகில் பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பாரம்பரியம் மிக்க நிறுவனம் மூன்று மாத நெருக்கடிக்காக ஊழியர்களைக் கைவிடலாமா? என்று பலரும் கேள்வியெழுப்புகின்றனர். இந்நிலையில், 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் இயக்குநர் லெனின் பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "176 தொழிலாளர்களை மனசாட்சியின்றி பணிநீக்கம் செய்துள்ள விகடன் குழுமத்தைக் கண்டித்து 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்திற்கு வழங்கிய சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதையும் விகடன் குழுமத்திற்கே திரும்ப அனுப்புகிறேன். #stopvikatanlayoff" இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இதனால் அவருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றன. https://minnambalam.com/entertainment/2020/05/23/53/Lenin-bharathi-return-back-vikatan-award
 24. 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் ! பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். May 22, 2020 அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் ! 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்தினர்களும் அதை தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதாலாகவே உணர்ந்தார்கள். மீதமுள்ள 10 சதவிகிதம் பேரும் இந்தப் பெருவாரியான கருத்துக்களுக்கு முன்பு தங்களது கருத்தை வெளியில் சொல்லவில்லை. அந்த 10 சதவிகிதம் பேரில் பெருவாரியானவர்கள் சங்பரிவாரின் ஆதரவாளர்கள். நாங்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட அன்று மாலை வாயிற்கூட்டத்தில் நான் பேசினேன். பைபிளில் உள்ள ஒரு வாசகத்தை அப்போது நான் அவர்களிடம் சொன்னேன். உத்தேசகமாக அந்த வார்த்தை இயேசு சிலுவையேற்றி அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்காக அழுத மக்களைப் பார்த்து அவர் எனக்காக அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் சந்ததியினருக்காகவும் அழுங்கள் என்று பேசியதாக என் நினைவில் இருந்ததைச் சொன்னேன். எல்லோர் தலையும் கவிழ்ந்திருந்தது. பலர் கண்ணீர் வடித்தார்கள். அப்போது எங்களில் யாருக்கும் 35 வயதைத் தாண்டவில்லை. எனக்கு வயது 32. எங்களில் இளையவருக்கு 29 வயது இருக்கும். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். எங்களை வருடுகிற பார்வைகள், தங்களை விடவும் எங்களை நேசித்ததை நாங்கள் அறிவோம். நாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தையும் அதேசமயம் நாங்கள்தான் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்று தெரியாமலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘உங்க கம்பெனில கொஞ்ச பேர டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களாமே, அவர்களை கொஞ்சம் நல்லா பாத்துகோங்கப்பா’ என்று சொன்னபோது உலகமே எங்களுக்கு ஆதரவாக நிற்பது போன்ற உணர்வை நாங்கள் பெற்றோம். இதையெல்லாம் சொல்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. இன்று அதுபோல ஒரு நிலை இருக்கிறதா? இன்று ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு இவையெல்லாம் தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ன மாதிரியான மனஉளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாவார்கள் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. எங்கள் விசயத்தில் ஒரு போராட்டம். ஒரு நீண்ட நெடிய விசாரணை. அதன்பிறகு விளக்கம் கேட்பு. அதன் பின்பு வேலைநீக்கம் என்றிருந்தது. ஆனால், நேற்றைய தினம் ஆனந்த விகடன் குழுமத்திலுள்ள தொழிலாளிகளை திடீரென அழைத்து நாளை முதல் உங்களில் 176 பேரை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். சுமார் 600 பேர் வேலை செய்கிற அந்த நிறுவனத்தில் இந்த முடிவுகளை எடுத்த சில பேரைத் தவிர, கடந்த 24 மணி நேரமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அது தங்கள் பெற்றோராக, தங்கள் பிள்ளையாக, தனது கணவராக அல்லது தனக்கு மருகமளாகவோ, மருமகனாகவோ இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள். இது எத்தனை பெரிய கொடூரம். 176 பேர் என்று நிச்சயிக்கப்பட்ட பிறகு, வேறு யாருக்காகவாவது வந்துவிட வேண்டும் என்று மனிதத்தைச் சிதைக்கிற ஒரு சிந்தனைக்கு தூண்டும் இந்த முடிவை எவ்வித தயக்கமுமின்றி அந்த நிர்வாகம் எடுத்திருக்கிறது. மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இவர்கள். கடந்த மாதமோ அதற்கு முன்பாகவோ இந்த நிறுவனம் தொழிலாளிகளை அழைத்து உங்களில் யாரையும் வீட்டிற்கு அனுப்பப் போவதில்லை. அதன் காரணமாகவே 30 சதவிகிதம் வரை சம்பளத்தை வெட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மூன்றில் ஒரு பகுதியை வெளியேற்றப் போகிறார்கள். இது திடீரென இறங்கிய இடி. யாரும் எதிர்பாராத ஒரு பெரும் திடீர் தாக்குதல். தங்களின் எந்த நேரடிக் காரணத்திற்காகவும் அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவில்லை. லாபம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள். பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். அந்த லாபத்திற்கு முன்பாக அனைத்து மனித மாண்புகளும் விழுமியங்களும் அடித்து நொறுக்கப்படும். சிதைத்து அழிக்கப்படும். அந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னதாக சமீபத்தில் ஒரு கருத்தை பார்க்க நேர்ந்தது. “உங்கள் தொழிலாளிகளை வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை எனில் அவர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் அவர்களைக் குறைப்பதற்கு இரண்டு முறை கூட யோசிக்காதீர்கள்”. இதன் பொருள் உங்கள் லாபத்திற்கு பாதிப்பு வருமெனில் அவர் எத்தனை திறமையானவராக இருந்தாலும் சரி, எத்தனை நல்லவராக இருந்தாலும் அவரை வெளியே துரத்திவிடுங்கள், தாமதிக்காதீர்கள், இன்னொரு முறை கூட யோசிக்காதீர்கள் என்பதுதான். மனிதர்கள் முக்கிமல்ல, லாபம் மட்டும்தான் முக்கியம் என்பதுதான். ஒப்பீட்டளவில் நிரந்தரமான வேலை ஆனந்த விகடனில் பணிபுரிவது என்று ஊடகவியலாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமே இப்படி செய்கிறது. மற்ற நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாது என்று நம்புவதற்கு எந்தவிதமான தர்க்கமும் இடமளிக்கவில்லை. இந்தப் பின்னணியில் இப்போதுள்ள நிலையில் இதிலுள்ள பலராலும் மாற்று வேலை தேடுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நம்பிக்கையோடு ஒரு பதிலை சொல்ல முடியவில்லை. மத்திய பாஜக அரசு ஏதோ தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போன்று கொரோனா காலத்தில் யாரையும் வேலைநீக்கம் செய்யக் கூடாது, சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது என்று உபதேசித்துவிட்டு தன் பணி முடிந்ததாக ஒதுங்கிக் கொண்டது. உலகின் பல முதலாளித்துவ நாடுகள் 60% முதல் 100% வரை தொழிலாளர்களின் சம்பளத்தை, இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர்களுக்கு ஆகிற செலவைக் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கமும், ஊடகவியலாளருக்கான அமைப்புகளும் பெருமளவிற்கு போராட்ட குணங்களை அதற்கு தேவையான அளவில் கொண்டிருக்காத நிலையில் மிக இயல்பாக கடந்து போய்க் கொண்டிருக்கிறோம். இதை அனுமதிப்பது சரியல்ல, நியாயமல்ல. அவர்கள் எல்லாம் யார் வீட்டுப் பிள்ளைகளோதான். ஆனால், அவர்கள் தாக்கப்படும்போது, நிராதரவாக விடப்பட்டால், நாளை நமது பிள்ளைகளுக்கு ஏற்படும்போது கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.இவையெல்லாவற்றையும்விட இந்த வேலைநீக்கங்கள் சட்ட விரோதம். வாசகர்களும் விளம்பரதாரர்களும் குறைந்தபட்சம் அவர்களின் செயலியிலாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும். இதற்கெதிராக அனைவரும் சாத்தியமான அனைத்து வகைகளிலும் வழிகளிலும் குரல் எழுப்ப வேண்டும்… கே.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர். CPIM *** விகடனில் நடைபெற்றுவரும் ஊழியர்கள் வேலை நீக்கம் தொடர்பாக, சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் எழுதியுள்ள பதிவு… https://www.vinavu.com/2020/05/22/176-workers-dismissed-by-vikatan-group-cpm-leader-kanagaraj-letter/