• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  19,359
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. நிதியியல் அறிவு அவசியமா? அனுதினன் சுதந்திரநாதன் / 2020 பெப்ரவரி 11 உண்மையில், நமது கல்வியறிவு விகிதமானது, நமது நிதியியல் சார்ந்த விடயங்களைச் சார்ந்தோ நிதிசார் தேவைகளை முழுமைபெறச் செய்வதாகவோ அமைந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும், அதிகரித்த கல்வியறிவு விகிதமானது, நாளாந்த நமது நிதியியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவோ அல்லது அடிப்படையான நிதியியல்சார் விடயங்களைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுவதாகவோ அமைந்திருக்க வேண்டியது அவசியமாகும். உதாரணமாக, கல்வியறிவு அதிகம் கொண்ட நம்மில் பலருக்கே, காசோலைகளை எப்படி நிரப்புவது, அதனை எப்படி வங்கியில் வைப்பிலிடுவது, பண வைப்பு மற்றும் பணம் மீளப்பெறல் இயந்திரங்களை எப்படி இயக்குவது, வங்கிக் கூற்றுகளை எவ்வாறு ஆய்வுசெய்வது, நிதிச் செயற்பாடுகளைத் திட்டமிடுவது என்பதில் பலத்த குழப்பங்களும் சந்தேகங்களும் உள்ளன. படித்தவர்கள் நிலையே இவ்வாறிருக்க, சாதாரணப் பொதுமக்களின் நிலை என்னவாக உள்ளதெனச் சிந்தித்துப் பாருங்கள். தென்னாசியாவிலேயே, இலங்கையின் கல்வியறிவு விகிதமானது, ஏனைய அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் கல்வியறிவு விகிதத்துக்கு மிக நெருக்கமான போட்டித்தன்மை வழங்கும் நிலையிலேயே உள்ளது. குறிப்பாக, இலங்கையில் முதிர்ச்சி அடைந்தவர்களின் கல்வியறிவு விகிதமானது, 2018ஆம் ஆண்டின் பிரகாரம் 92 சதவீதமாக உள்ளது. ஆனாலும், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்கிற பழமொழிக்கு ஏற்றாற் போல, இந்தக் கல்வியறிவு விகிதமானது, மக்களின் நிதியியல் சார்ந்த அறிவு விகிதத்தில் எவ்விதப் பயனையும் கொண்டிராத ஒன்றாகவே உள்ளது. 2018ஆம் ஆண்டு ஆய்வுகளின்படி, இலங்கையின் நிதியியல்சார் அறிவு விகிதமானது, 35 சதவீதமாகவுள்ளது. 92 சதவீதமான கல்வியறிவைக் கொண்டிருக்கும் நாம், நிதியியல் சார் அறிவில் 35 சதவீதமாக இருப்பது நமது கல்வியறிவுக்கும் நடைமுறை வாழ்வியல்சார் விடயங்களுக்கும் இடையிலான இடைவெளியைத் தெள்ளத்தெளிவாகக் காட்டி நிற்கின்றது. நிதிசார் அறிவென்பதை, பணம் எவ்வாறு செயற்படுகின்றதென அறிந்து கொள்வதாக வரையறுத்துக்கொள்ள முடியும். இதனுள், எவ்வாறு பணத்தை உழைத்துக்கொள்வது, முதலீடுகளை எவ்வாறு செய்வது, செலவீனங்களைக் கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளுவது, எவ்வாறு சேமித்துக்கொள்வது போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.எனவே, தனிநபரொருவர் நிதியியல் சார் அறிவைப் பொருத்தமான வகையில் கொண்டிருக்கும்போது, அவர் தனது நிதி நலன்களைத் தானே சமாளித்துக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், அதுசார் வரிச் சுமைகள் தொடர்பான அறிவையும் தனது வருமானத்துக்கேற்ப செலவுகளைத் திட்டமிட்டுக் கொள்ளக்கூடிய திறனையும் கொண்டிருப்பவராக இருப்பார்கள். தெற்காசியாவில், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து, இலங்கை போன்ற நாடொன்றில் மக்களுக்கும் வங்கிகளுக்கும் இடையிலான இடைவெளியானது, மிகக் குறைவாகும். உதாரணமாக, இந்தியா போன்ற நாடொன்றில், பல கிராமங்களில் பொருத்தமான வங்கி வசதிகளைக் கொண்ட வங்கிகளற்ற நிலையே காணப்படுகின்றது. ஆனாலும், இலங்கை போன்ற நாடொன்றில், மிகப்பெரிய முன்னேற்றகரமான நிலையுள்ள போதிலும், நிதியியல்சார் அறிவில் நம்மவர்கள் மிகவும் பின்தங்கி யநிலையிலுள்ளமை ஆச்சரியத்தைத் தரக்கூடிய தரவாக அமைந்துள்ளது. பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகள், வங்கிகளுடன் பின்னிப் பிணைந்திருப்பதால், நமது அடிப்படையான நிதியியல் செயற்பாடுகள் அனைத்துமே அங்கிருந்துதான் ஆரம்பிக்கின்றன. எனவே, இலங்கை போன்ற நாடொன்றில், வங்கிகளுடன் மிக நெருக்கமான உறவை நாம் கொண்டிருக்கின்ற போதிலும், அவை சார்ந்த அடிப்படையான விடயங்களில்கூட நாம் கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மையாகவுள்ளது. நிதியியல் ரீதியான படிப்பினையானது, கல்விக் கூடங்களிலிருந்து ஆரம்பிப்பது என்பது பொருத்தமானதாகாது. மாறாக, அவை ஒவ்வொரு வீட்டிலும் அல்லது குடும்பங்களிலிருந்துமே ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான், அவை மேலும் அர்த்தமுடையதாக அமையும். ஆனால், அவை நடைமுறைக்குச் சாத்தியமற்றே உள்ளன. இதற்குப் பிரதான காரணம், இலங்கையின் பெரும்பாலான குடும்பங்கள், பொருத்தமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருப்பதில்லை. எனவே, அத்தகைய குடும்பங்கள், நிதிசார் பராமரிப்புகளை மேற்கொள்ளவோ அதற்கு முக்கியத்துவம் வழங்கவோ முற்படுவதில்லை. மாறாக, அத்தகைய குடும்பங்கள், நாளாந்த நிதியியல் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதையே பிரதானமானதாகக் கொண்டிருக்கின்றன. இதுதான், பெரும்பாலான நடுத்தர வருமானத்தைக் கொண்ட குடும்பங்களின் நிலையாகவும் இருப்பதால், நம்மவர்களின் நிதியியல்சார் அறிவு விகிதத்தில் தளம்பல் காணக் காரணமாகவுள்ளது. இன்றைய இலங்கையில், பெரும்பாலும் நகரத்தை நோக்கி பறந்துகொண்டிருப்பவர்களும் நகரத்தில் வாழ்பவர்களும், நிதியியல் ரீதியான அடிப்படை அறிவைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால், நிதிசார்ந்து வெளியிடப்படும் கவர்ச்சிகரமான விளம்பரங்களில் பெரும்பாலானவற்றின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது. ஆனால், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கே கடனட்டையின் செயற்பாடுகள், வங்கியின் குறுங்கால மற்றும் நீண்டகால கடன்களுக்கு எவ்வாறு வட்டி விகிதம் அறிவிடப்படுகின்றது என்பது போன்ற பல்வேறு விடயங்களில், இன்னமும் தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. இவை அனைத்துமே, நாம் இன்னமும் நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தில் வளர்ச்சியடைய வேண்டும் என்பதையும் இது நம்மைச் சுற்றியிருக்கும் நிதி நிறுவனங்களுக்கும் ஏதுவாக அமைந்துள்ளது. இலங்கையின் நகரங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இந்த நிலை மிக மோசமாக இருக்கின்றது. இதற்குப் பிரதான காரணம், கிராமங்களில் நிதியியல்சார் விடயங்கள், வீட்டின் தலைவர்களைச் சுற்றியே வியாபித்திருப்பதாகும். பெரும்பாலும், உழைக்கும் தரப்பாக ஆண்களிருப்பதுடன், அவர்கள் பெரும்பாலான நிதியியல் செயற்பாடுகளையும் நிதிசார் நெருக்கடிகளையும் குடும்பத்தில் பகிர்ந்துகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது. இதன் விளைவால், குடும்பங்களில் நிதியியல்சார் தகவல் பரிமாற்றம் குறைவடைகிறது. அத்துடன், பெண்கள் அடியோடு இது தொடர்பான புரிதலைக் கொண்டிராத நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, கிராமப்புறங்களில் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல்சார் செயற்பாடுகள், நேரத்துக்கு நேரம் புல்லுருவியாகத் தோன்றி, மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டுள்ளது. பணம் சார்ந்த கவர்ச்சியும் அதனை மிக விரைவாக உழைத்துக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலும், அதனுடன் சேர்ந்ததாக நிதியியல் சார்பாகப் போதிய அறிவின்மையும், இந்தச் சட்டத்துக்குப் புறம்பான நிதியியல் செயற்பாடுகள் வெற்றிபெறவும், அதனூடாக மக்கள் தமது உழைப்பை இழக்கவும் காரணமாகி இருக்கிறது. இத்தகைய நிலையிலிருந்து நாம் மீளவும் நமது நிதியியல்சார் கல்வியறிவு விகிதத்தை அதிகரித்துக் கொள்ளவும், நாம் நிறைய விடயங்களை நமது குடும்பங்களிலிருந்தும் கல்வியியல் ரீதியாகவும் மாற்றவேண்டியது அவசியமாகிறது. குடும்பங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு நிதியியல் சார்ந்த சுதந்திரத்தை வழங்குவது அவசியமாகிறது. தற்போதைய காலகட்டத்தில், ஆண்களுக்கு சமமாகப் பெண்களும் வீட்டின் தலைமைப் பொறுப்பைக் கையாளும் நிலையுள்ளது. எனவே, அவர்கள் நிதியியல் ரீதியான சுதந்திரத்தைக் கொண்டிருப்பதுடன், நிதிசார் அடிப்படை அறிவைப் பெற்றிருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும். அத்துடன், பெரும்பாலான கிராமப்புறங்களிலும் சரி நகர்ப்புறங்களிலும் சரி, நாட்கூலியை நம்பியே வாழ்க்கையைக் கொண்டு நடத்தும் குடும்பங்கள் இருக்கின்றன. இத்தகைய குடும்பங்களில், ஒரு நாள் வருமானம் இல்லாதுபோகின்ற போது, அவர்களுக்கான உணவைக்கூட அவர்கள் குறித்த நாளில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, நாளாந்த வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்களில்கூட, இந்த நிதியியல் ஒழுக்கத்தை (Financial Discipline) கொண்டுவருகின்ற வகையில், இலங்கை அரசாங்கமும் இலங்கை வங்கியும், பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். இது, நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஒருவகையில் உதவுவதாக அமைந்திருப்பதுடன், சிறு குடும்பங்களின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதாகவும் அமையும். 2016ஆம் ஆண்டின் இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் பிரகாரம், இலங்கை மக்களின் சராசரிக் கடனின் உச்ச வரம்பு, 196.00 ரூபாயெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது, தனித்து வடக்கு - கிழக்கு பகுதிகளாகப் பார்க்கின்ற போது, இன்னும் அதிகமாகவிருக்க வாய்ப்புள்ளது. போர் காரணமாக, பல்வேறு வகையில் நிதியியல் இழப்புகளைச் சந்தித்துள்ள நம்மவர்கள், நிதியியல் ரீதியான ஒழுக்கநிலையில் இன்னமும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, நுண்ணியல் நிதிக்கடனில் சிக்கியுள்ளவர்களின் நிலையே போதுமானது. எனவே, இந்த நிலையிலிருந்து மீண்டுவர, நமது இளம் சந்ததியினராவது கல்வியறிவு விகிதத்துடன், நிதியியல் சார் அறிவு விகிதத்தையும் அதிகரித்துக்கொள்வது அவசியமாகிறது. http://www.tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/நிதியியல்-அறிவு-அவசியமா/145-245337
 2. ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்? என்.கே. அஷோக்பரன் / 2020 பெப்ரவரி 17 தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தனித்ததொரு கட்சியாக அல்லது கூட்டணிக் கட்சியாகப் பதிவுசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை, மிக நீண்ட காலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும், பதிவுசெய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெறுவதற்கான எந்தவொரு சமிக்ஞையும் தென்படுவதாக இல்லை. மறுபுறத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரளவிலான அமைப்பிலிருந்து, கூட்டுக்கட்சிகளும் அக்கட்சிகளின் உறுப்பினர்களும் விலகி, தனிவழி சென்று கொண்டிருக்கின்ற போக்கை, நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. தமிழ் மக்களிடம், “நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு” என்று, விழுமிய வகுப்பெடுக்கும் இந்தக் கூட்டமைப்பின் தலைமைகள், கூட்டமைப்பைத் தனிக்கட்சியாகப் பதிவுசெய்து, முறையான கட்டமைப்பை உருவாக்கி இயங்குவதில், தொடர்ந்தும் மெத்தனம் காட்டி வருவது என்பது, முரண்நகை. சுதந்திர இலங்கையில், ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த தமிழ்க் கட்சிகள், கூட்டணியாக ஒன்றிணைந்த சந்தர்ப்பங்கள் இரண்டு. முதலாவது, 1972இல் அன்றைய சிறிமாவோவினதும் அவரது ‘தோழர்’களினதும் ஆட்சியில், தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அதன்போது, தமிழர்கள் கட்சி ரீதியாகப் பிளவடைவது, தமிழ் மக்களையும் அவர்களது அரசியலையும் பலவீனப்படுத்தும் என்றுணர்ந்த அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர், கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்த சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியை உருவாக்கினர். தமிழர் ஐக்கிய முன்னணி, 1976இன் வட்டுக்கோட்டை தனிநாட்டுத் தீர்மானத்தையொட்டி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி ஆனது. தமிழர்களிடம் பொதுவழக்கில், ‘கூட்டணி’ என்று அறியப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, தனித்த கட்சியாக இருந்ததுடன், அதற்கெனத் தனியான சின்னத்தையும் கொண்டிருந்தது. அதுதான், 1977ஆம் ஆண்டுத் தேர்தல் முதல், 2004ஆம் ஆண்டுத் தேர்தல் வரை, தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்ற சின்னமாக இருந்தது. தமிழ் அரசியலில் உதயம் பெற்ற இந்த முதலாவது கூட்டானது, முறைப்படி, தனிக்கட்சியாகப் பதிவுசெய்யப்பட்ட கூட்டாகவே அமைந்தது. 2001இல், ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற கூட்டை ஸ்தாபிப்பதில், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களின் முதன்முயற்சி முக்கியமானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்டது என்பதில் எந்த உண்மையும் இல்லை. அது அடிப்படையில்லாத ஒரு மாயை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் கூட, அந்த மாயையை, தமக்கு வாக்குவங்கி ரீதியான செல்வாக்கை அதிகரிப்பதால், அதை மறுப்பதுகூட இல்லை. ஆனால், உண்மையான அரசியல் வரலாறு என்னவென்றால், ஊடக மற்றும் சிவில் சமூகத்தின் முயற்சியாலேயே, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டுச் சாத்தியமானது. இந்தக் கூட்டை, அடுத்த இரண்டு வருடங்களில், தமது அரசியல் முகவர்களாக, விடுதலைப் புலிகள் சுவீகரித்துக் கொண்டார்கள். 2001இல், தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (இது பெரும்பாலும் தமிழரசுக் கட்சியினரையும் குமார் பொன்னம்பலத்தோடு பிரிந்து சென்று, மீண்டும் தமிழ்க் காங்கிரஸை ஸ்தாபிக்காது கூட்டணியுடன் தொடர்ந்த எம். சிவசிதம்பரம், ஆனந்தசங்கரி உள்ளிட்ட முன்னாள் தமிழ்க் காங்கிரஸினரையும் கொண்டமைந்தது), தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எப் - சுரேஷ் பிரேமசந்திரனின் அணி) ஆகிய நான்கு கட்சிகள், பொது இணக்கப்பாடொன்றில் கையொப்பமிட்டதன் மூலம் பிறப்பெடுத்தது. தமிழர் ஐக்கிய முன்னணியைப் போன்று, ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ இன்னொரு தனியமைப்பாகப் பிறப்பெடுக்கவில்லை. மாறாக, இது இந்த நான்கு கட்சிகளிடையேயான பொது இணக்கப்பாட்டை வௌிப்படுத்தும் தளமாகவும் தேர்தல் கூட்டாகவுமே பிறப்பெடுத்தது. ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ என்ற பதாகையின் கீழ் இயங்கிய கட்சிகளிலும் ஒரு நிரந்தரத் தன்மையும் தொடர்ச்சியும் இருக்கவில்லை என்பதையும், நாம் காணக்கூடியதாக உள்ளது. விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சுவீகரித்துக் கொண்டதன் பின்னர், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்குள் இருந்த, விடுதலைப் புலிகள் அமைப்பு மீது நல்லபிப்பிராயம் இல்லாத தலைவர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் தொடர்ந்திருக்க விரும்பவில்லை. ஆகவே, கூட்டமைப்பில் முதல் பிரிவாக, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கூட்டமைப்பிலிருந்து விலகியமை அமைந்திருந்தது. இந்தப் பிரிவோடு கூட்டமைப்பு, தனது தேர்தல் சின்னத்தையும் இழந்திருந்தது. ஏனெனில், உதய சூரியன் சின்னம், தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் சின்னமாகும். இந்தப் பிரிவைத் தொடர்ந்துதான், அதுவரை காலமும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழரசுக் கட்சியினர், மீண்டும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு உயிர்கொடுத்தார்கள். தமிழரசுக் கட்சியின் சின்னமான ‘வீடு’, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தேர்தலில் போட்டியிடும் சின்னமாக, விடுதலைப் புலிகள் அமைப்பால் சிபாரிசு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது, விடுதலைப் புலிகள் அமைப்பின் முடிவாக இருந்திராவிட்டால், நிச்சயமாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதை ஏற்றுக்கொண்டிருக்கக் கூடிய வாய்ப்பு இல்லவேயில்லை எனலாம். 2009 வரை விடுதலைப் புலிகள் அமைப்பே, கூட்டமைப்பின் இணைக்கும் சக்தியாக இருந்தது. அவர்களுக்குப் பின்னர், கூட்டமைப்பு பிளவடையத் தொடங்கியது. இன்று கூட்டமைப்பு என்பது, இலங்கைத் தமிழரசுக் கட்சிதான். டெலோவும் புளொட்டும் வெறும் தேர்தல் பங்காளிகள் மட்டுமே. அரசியல் முடிவுகளில், நிலைப்பாடுகளில் டெலோவோ, புளொட்டோ எதுவிதப் பங்களிப்பும் செய்வதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சித் தலைமைகளின் முடிவுகளை, அங்கிகரிக்க வேண்டிய நிலையில்தான் அவர்கள் தொடர்கிறார்கள். உண்மையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட வேண்டும் என்ற மிக நீண்ட காலமாகக் குரல்கொடுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர், இப்போது கூட்டமைப்பில் இல்லை. கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் ஆகியவை, தமக்குத் தேவையான தேர்தல் ஆசனங்கள் ஒதுக்கப்படும் வரை, தமிழரசுக் கட்சி எடுக்கும் முடிவுகளோடு, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. எமக்கு, எமக்கான ஆசனங்களும் நாடாளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றம் போன்றவற்றுக்கான பதவிகள் இருந்தால் போதும் என்ற நிலையிலேயே, அவர்கள் இருக்கிறார்கள். தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில், “தமிழரசுக் கட்சியும் நானே; கூட்டமைப்பும் நானே” எனத் தமிழரசுக் கட்சித் தலைமைகள் மிகச் சுதந்திரமாக, கூட்டுக் கட்சிகளின் எந்த அழுத்தமுமின்றிச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டமைப்பைப் பதிவதற்கு, அவர்களுக்கு எந்த அவசியமும் தேவையும் ஆர்வமும் இருக்காது என்பது யதார்த்தமானதே. ஆக, இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, பதியப்பட வேண்டும் என்பதற்கான தேவை என்ன என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில், தமிழர் அரசியலின் எதிர்காலம் என்பதாக அமைய வேண்டும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பதே, நாம் பொதுவாக எண்ணுவதைவிட, மிகப்பெரியதொரு சாதனை. ஒன்றுக்கொன்று வைரிகளாக இருந்த கட்சிகளை, ஒரு மேடைக்குக் கொண்டுவருவது, அவ்வளவு எளிதானதொரு காரியமல்ல. விடுதலைப் புலிகள் இருந்தவரை, கொள்கை ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் தனிமனிதர்களால் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே, கூட்டமைப்புக்கு உள்ளான ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ விடுதலைப் புலிகளே செய்துவந்தார்கள். விடுதலைப் புலிகளுக்குப் பிறகு, கூட்டமைப்பு என்பது, தமிழரசுக் கட்சியின் கைப்பொம்மையாகவும் அதன் பின்னர், அது ஒன்றிரண்டு தமிழரசுக் கட்சித் தலைமைகளின் கைப்பொம்மையுமாக மாறிவிட்டது. இதன்காரணத்தால், கூட்டுக் கட்சியினருக்கு மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கவோ, தமிழரசுக் கட்சி தலைமைகளின், கூட்டமைப்பின் மீதான அதிகாரச் செல்வாக்கை மட்டுப்படுத்தவதற்கானதொரு கட்டமைப்பு முறையோ இல்லாததன் காரணத்தால், தேர்தல் வெற்றி, பதவி ஆசை என்பவற்றைத் தாண்டி, தமது கொள்கை மீதும் அக்கறைகொண்ட தரப்பினரால், கூட்டமைப்புக்குள் நீடிக்க முடியவில்லை. உண்மையில், இன்று கூட்டமைப்பென்பது தமிழரசுக் கட்சியும் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற தரப்புகளும்தான். கூட்டமைப்பிலுள்ள டெலோ, புளொட் கொள்கை சார்ந்த முடிவுகளில் மட்டுமல்ல, இராஜதந்திரச் சந்திப்புகளில் கலந்துகொள்வதுகூட மிக அரிதே! தமிழரசுக் கட்சிக்காரருக்கு வேண்டுமானால், இது சாதகமான ஒன்றாக இருக்கலாம்; ஆனால், ‘தமிழரின் ஒற்றுமை’ என்று, மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைமைகள், உச்சரிக்கின்ற ‘ஒற்றுமையை’ச் சிதைத்து, இன்று தமிழ் மக்களின் அரசியல் பலத்தைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது. கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்பவர்களை விமர்சிப்பதற்கு அவசரப்படுபவர்கள், அவர்கள் ஏன் பிரிந்து செல்கிறார்கள் என்று சிந்திப்பதற்கு ஒரு நிமிடத்தையேனும் செலவளிப்பதில்லை. உண்மையில், அவர்களுக்குப் பதவி ஆசை இருந்தால், அவர்கள் பிரிந்து சென்றிருக்கவே மாட்டார்கள். இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டிபோடுவது நிச்சயமான வெற்றியைத் தரும் என்பதைச் சிறுபிள்ளைகூட அறியும். அதையும் மீறி, அவர்கள் பிரிந்து செல்வதற்கு, என்ன காரணம் என்பதைச் சிந்திக்க வேண்டும். பல கட்சிகளினதும் அமைப்புகளினதும் கூட்டு என்பது, அனைத்துத் தரப்பையும் ஒன்றிணைக்கக் கூடியதொரு கட்டமைப்பைக் கொண்டதாக அமைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அந்தக் கூட்டு நிலைக்காது. இன்று, கூட்டமைப்பு ஒரு முடிவை எடுக்கும் போது, அது வெறுமனே, தமிழரசுக் கட்சியின் முடிவாக மட்டுமோ, அவர்களால் திணிக்கப்படும் முடிவாக மட்டுமோ இந்தால், ஏனைய கட்சிகளால் அத்தகைய கூட்டுக்குள், எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கேள்விக்குறியே. ஆகவே தான், கூட்டமைப்பு ஒரு சுயாதீனமான கூட்டணியாகவும் அதற்கெனத் தனித்த ‘தடைகள் மற்றும் சமப்படுத்தல்களை’ உள்ளடக்கிய கட்டமைப்பையும் கொண்டமைய வேண்டும். அத்தகைய கட்டமைப்பு ஏற்படும் போது, அது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப அல்லது ஒரு கட்சியின் விருப்பத்துக்கு மட்டுமே ஏற்ப இயங்கும் அமைப்பாக அல்லாது, அர்த்தபூர்வமான கூட்டமைப்பாக அமையும். இல்லாவிட்டால், கூட்டமைப்பென்பது ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகவே அமைந்துவிடும். மறுபுறத்தில், கூட்டமைப்பைப் பதிவுசெய்வதில் தமிழரசுக் கட்சிக்கு சட்டரீதியான நன்மையொன்றும் உள்ளது. இன்றைய சூழலில், தமிழரசுக் கட்சி அல்லாத ஏனைய கூட்டுக்கட்சி உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றிபெற்றுப் பின்னர் கட்சிதாவினாலோ, கட்சிக் கோட்பாடுகளுக்கு மாறாக நடந்தாலோ, தமிழரசுக் கட்சியால் அவர்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவர்களது மிக அடிப்படையான வாதமாக, “நாம், உங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல; ஆகவே, எங்கள் மீது நடவடிக்கை எடுக்க, உங்களுக்கு எதுவித அதிகாரமோ நியாயாதிக்கமோ கிடையாது” என்பதாக அமையும். அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் பட்டியலூடாகத் தெரிவுசெய்யப்பட்ட அல்லது பிரேரிக்கப்பட்ட நபரொருவர் குறித்த, அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே எமது சட்டமாகும். பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் மற்றும் ஏனையோர் என்ற பஷீர் சேகுதாவூத் பதவி விலக்கல் வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘பஷீர் சேகுதாவூத் தேசிய ஐக்கிய கூட்டணியின் உறுப்பினர் அல்ல; அவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரே ஆவார். ஆகவே, தமது கட்சியின் உறுப்பினரல்லாத ஒருவரை, தேசிய ஐக்கிய கூட்டணியால், தமது கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க முடியாது என்பதோடு, அதனால் அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியாது’ என்று வழங்கியிருந்த தீர்ப்பு, இங்கு கவனிக்கத்தக்கது. இதனால்தான், தனிக்கூட்டணியாகப் பதிவுசெய்யப்பட்டு ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தனது யாப்பில், கூட்டணிக் கட்சியின் அங்கத்தவர்கள், கூட்டணியின் அங்கத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்ற ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழரசுக் கட்சி அல்லாத கூட்டமைப்பின் ஏனைய கட்சி உறுப்பினர்கள் கட்சிதாவினாலோ, கட்சிக் கட்டுக்கோப்புக்கு முரணாகச் செயற்பட்டாலோ, இன்றைய சூழலில் தமிழரசுக் கட்சி எனப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பால், எதுவுமே செய்ய முடியாது என்பதுதான், பட்டவர்த்தனமான உண்மையாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, தனித்த கூட்டமைப்பாகப் பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சியின் சுயநலத்தைத் தவிர வேறெதுவும் தடையாக இல்லை என்பதுதான், நடப்பவற்றை வைத்து, யூகிக்கக் கூடியதாக இருக்கின்ற விடயம் ஆகும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசிய-கூட்டமைப்பு-ஏன்-பதிவு-செய்யப்பட-வேண்டும்/91-245596
 3. அ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா? எம். காசிநாதன் / 2020 பெப்ரவரி 17 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்து, நான்காவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கிறது அ.தி.மு.க ஆட்சி. தமிழ்நாட்டில், ஒரு தேர்தலில் மூன்று முதலமைச்சர்களைச் சந்தித்த காலகட்டமாக, 2016 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலம் அமைந்து விட்டது. முதலில் பதவியேற்ற ஜெயலலிதா, டிசெம்பர் 2016இல் மறைவு எய்தியதை அடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவருக்கும் சசிகலாவுக்கும் ஏற்பட்ட மோதலில், எடப்பாடி பழனிசாமி 2017 பெப்ரவரி மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சரானார். ஆனால், குறிப்பிடத்தக்க நிகழ்வு என்னவென்றால், சசிகலாவின் தயவில் முதலமைச்சர்களாக ஆக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் பதவியில் நீடிப்பதற்கு, மத்தியில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவாகவே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சசிகலா வெளியில் இருந்த நேரத்தில், ஓ. பன்னீர்செல்வத்தின் பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு முதல், “ஸ்டாலினைப் பார்த்துச் சிரித்தார்” போன்ற குற்றச்சாடுகளைச் சுமத்தி, வெளியேற்றப்படும் சூழலுக்கு பன்னீர்செல்வம் தள்ளப்பட்டார். ஜெயலலிதாவின் சமாதியில், ‘தர்மயுத்தம்’ நடத்திய அவர், இன்றைக்குச் சசிகலா உருவாக்கிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தில் துணை முதலமைச்சராக இருக்கிறார். காரணம், சசிகலாவால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, யோகம் என்பது ‘சிறை’ வடிவில் கிடைத்தது. அதாவது, ஜெயலலிதா- சசிகலா ஆகியோர் மீதான ஊழல் வழக்கில், நான்கு வருட சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டதால், சசிகலா பெங்களூர் சிறைக்குச் சென்றார். அவரது சிறைவாசம், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.கவையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்வதில் முக்கிய காரணியாக அமைந்துவிட்டது. அதேநேரத்தில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்டாலின், ‘கொல்லைப் புறமாக ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை’ என்று அறிவித்து விட்டதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு, எவ்வித தொந்தரவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த ‘சசிகலா ஆபத்தும்’ ‘ஸ்டாலின் ஆபத்தும்’ எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. ஆகவே, “நான் முதலமைச்சர்; இல்லையேல் தேர்தல்” என்ற ஒற்றை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்தையே, தனது தலைமையை ஏற்றுக் கொள்ள வைத்தார். கட்சிக்குள் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் இருந்தாலும், இன்று வரை அ.தி.மு.கவின் நிர்வாகக் கட்டுப்பாடு முழுக்க முழுக்க, எடப்பாடி பழனிசாமி கையிலேயே இருக்கிறது. தனக்குக் கட்டுப்படாத அமைச்சர் மணிகண்டனைப் பதவியை விட்டு நீக்குவதாக இருக்கட்டும், ராஜ்ய சபை உறுப்பினர் பதவிகளுக்கு தன் விசுவாசிகளுக்கு இடம் வழங்குவதாக இருக்கட்டும் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் அதிகார வட்டத்துக்குள் மட்டுமே நடந்தது. ஏன், ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவையே கட்சியை விட்டு நீக்கும் அதிகாரத்தைக் கூட, பன்னீர்செல்வத்தால் தடுக்க முடியவில்லை. இன்றைக்கு மூன்று வருடங்கள் ஆட்சி நிறைவு பெற்றுள்ள நிலையில், கட்சிக்குள் இருந்த அனைத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறி விட்டார்கள். அல்லது, “இனி நம் அதிகாரம் எடுபடாது” என்று அமைதியாகி விட்டார்கள் என்றே எண்ண இடமிருக்கிறது. அ.தி.மு.கவுக்குள் இனி ‘ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம்’ என்று எதுவும் எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சியிலும் அவருக்கு என்று தனிப்பட்ட முக்கியத்துவமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, ‘நிதி நிலை அறிக்கை தயாரிக்க ஆலோசனை வழங்கிய ஜெயலலிதா குறித்து, எப்படித் தனது ‘பட்ஜெட்’ உரையில் ஓ.பன்னீர்செல்வம்’ குறிப்பிடுவாரோ அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய சிறந்த ஆலோசனைகள் என்று பட்ஜெட்டில் பாராட்டியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஆகவே, கட்சி ரீதியாகவும் ஆட்சி ரீதியாகவும் அ.தி.மு.கவின் தலைவர் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி என்பது நூற்றுக்கு இரு நூறு சதவீதம் உறுதியாகி விட்டது. ஆட்சியைப் பொறுத்தமட்டில், 16,382 கோப்புகளை மூன்று வருடங்களில் பார்த்துக் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததாக, ‘மூன்று ஆண்டு சாதனை’ பட்டியலை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அந்தக் பட்டியலில் பல்வேறு சாதனைத் திட்டங்கள் குறித்துக் கூறப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்கள், பொலிஸாரை நிம்மதியிழக்க வைத்துள்ளன. தொடர் போராட்டங்களில் நிம்மதியிழந்த பொலிஸார், சென்னையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது, தடியடி நடத்த, இப்போது தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நியமித்து, சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகளைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க வாக்களித்தது மிகப்பெரிய தலைவலியாக அக்கட்சிக்கு தமிழகத்தில் மாறியிருக்கிறது. அது மட்டுமின்றி, சிறுபான்மையினர் வாக்குகளை இனிமேல் அந்தக் கட்சி கனவிலும் பெற முடியாது என்ற சூழல் ஏற்பட்டு விட்டது. இதேபோன்று, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ‘காவிரி டெல்டா’வை அறிவிக்கப் போகிறேன் என்று முதலமைச்சர் கூறியிருந்தாலும் அந்தக் காவிரி டெல்டா பகுதிகளில், ஏற்கெனவே செயல்படும் அல்லது, புதிதாக ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டங்களின் நிலை என்ன? தொடருமா, அதற்கும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்தின் கீழ், இரத்துச் செய்யப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. மாநில அரசாங்கம், தனது அதிகாரத்தின் கீழ் இந்தச் சட்டத்தை நிறைவேற்றி விட முடியுமா? அப்படி நிறைவேற்றப்படும் சட்டத்தை, மத்திய அரசு ஏற்றுக் கொள்ளுமா? இதெல்லாம் மில்லியன் டொலர் கேள்விகளாக வலம் வருகின்றன. இது போன்ற சூழ்நிலையில், புதிதாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அ.தி.மு.க ஆட்சியின் ‘கடைசி முழு நிதி நிலை அறிக்கை’, தேர்தல் நிதி நிலை அறிக்கையாகவோ தேர்தலை மனதில் வைத்தோ வெளியிடப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், மாநிலம் 4.56 இலட்சம் கோடி கடனில் சிக்கிக் கொண்டிருப்பதே ஆகும். மிகப்பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும், தேர்தல் வருடத்தில் செலவிட முடியாத அளவில், நிதி நெருக்கடியில் தமிழ்நாடு இன்றைக்கு உள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, நிதி மேலாண்மை மிகப்பெரும் சவாலாகவே இன்றுவரை இருந்து வருகிறது. எஞ்சியிருக்கின்ற ஒரு வருடத்துக்குள், இதைச் சரியான பாதையில் திருப்பி விட முடியும் என்று, பொருளாதார நிபுணர்களாலும் நம்பிக்கை தெரிவிக்க முடியவில்லை என்ற நிலை உள்ளது. அரசாங்க நிர்வாகத்தில் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய ‘சுதந்திரம்’ கிடைத்துள்ள காலகட்டமாக, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக் காலம் இருக்கிறது. அமைச்சர்களுக்குச் ‘சுதந்திரம்’ இருக்கிறது. ஆனால், அவை எல்லாம் ‘நிர்வாகத் திறமைகளாக’ அ.தி.மு.க ஆட்சிக்கு நல்ல பெயர் வாங்கித் தருவதாக இருக்கிறதா என்றால், “இல்லை” என்றே கூறிவிட வேண்டும். ஏனென்றால், வரலாறு காணாத வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முறைகேடு, பல்வேறு ஊழல் புகார்கள் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள், ஊழல் வழக்குகள் அமைச்சர்கள் மீதே தொடரப்படுவது எல்லாம், இந்த மூன்றாண்டு கால ஆட்சி வெளியிட்டுள்ள ‘சாதனைப் பட்டியலுக்கு’ வேதனை அளிக்கும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. ஆகவே, தேர்தல் வருடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் அ.தி.மு.கவுக்கு இப்போதைக்கு கட்சிக்குள் பிரச்சினை இல்லை; ஒற்றைத் தலைமை என்பது உறுதியாகி விட்டது. இனிமேல், சட்டமன்றத் தேர்தலில், ‘முதலமைச்சர் வேட்பாளர்’ யார் என்பதில், அடுத்த குழப்பம் வரலாம் என்பது மட்டுமே இப்போதுள்ள பிரச்சினை. ஆனால், ஆட்சி நிர்வாகத்தில், மத்திய அரசு கொடுத்த ஆதரவைப் பயன்படுத்தி, ஒரு நல்ல நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் கொடுத்து விட்டதா என்று கேட்டால், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளில், அதற்கு ஆதரவான காட்சிகளைக் காணமுடியவில்லை. அதற்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலும், அப்படியோர் உறுதிமொழியை அ.தி.மு.கவுக்குக் கொடுக்கவில்லை. இந்நிலையில், ‘மூன்றாண்டு சாதனை’, இனி அடுத்துச் சந்திக்கப் போகும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்குச் சாதகமான ‘ஆதரவு அலை’ வீச வைக்கும் சாத்தியகூறுகள் காணப்படவில்லை என்பதே தற்போதைய நிலைமை. ஒருவேளை இன்னும் இருக்கின்ற ஒரு வருடத்தில் அந்த ஆதரவு அலையை, அ.தி.மு.கவால் உருவாக்கிக் கொள்ள முடியுமா? அது மிகப்பெரிய சவால் என்றே அ.தி.மு.கவினருக்கு இப்போது தெரிகிறது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அ-தி-மு-கவுக்கு-2021-ஆதரவு-அலை-வீசுமா/91-245592
 4. யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபர் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றார் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள கணபதிப்பிள்ளை மகேசன் முன்னதாக மட்டக்களப்பு வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராக பதவி வகித்துள்ளார்.அத்துடன் கென்யாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் பதில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றியுள்ளதோடு, உணவு ஊக்குவிப்பு வாரியத்தின் உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளார். இந்நிலையில் யாழ்.மாவட்டத்தின் புதிய அராசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை மகேசன் இன்று திங்கட்கிழமை காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-மாவட்டத்தின்-புதிய-2/
 5. ஆஸ்கார் விருதுகளும் ஆச்சர்யங்களும்- நிலவழகன் சுப்பையா February 11, 2020 - Editor · சினிமா / Flash News ஆஸ்கார் எதிர்பாராத முடிவுகளுடனும் திருப்பங்களுடனும் நிறைவடைந்தது. முதல்முறையாக முழுவதும் ஆங்கிலம் அல்லாத மொழியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட Parasite நான்கு விருதுகளை அள்ளியது. சிறந்தஇயக்குனர், சிறந்த சர்வதேசப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நேரடித் திரைப்படம் என எதிர்பார்க்காத பரிசுகளை பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு வெளிநாட்டுப்படம் நேரடியாக போட்டியில் கலந்துகொண்டு இத்தனை விருதுகளை பெறுவது சாத்தியமா? அகாடமி விதிகள் என்ன சொல்கின்றன? சிறந்த படத்திற்கான பிரிவில் போட்டியிட அது ஆங்கிலப்படமாக இருக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, சென்ற ஆன்று ஜனவரி 1முதல் டிசம்பர்30-க்குள் அந்தப் படம் ஹாலிவுட் என்றழைக்கப்படும் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் இருக்கும் வணிக திரையரங்குகளில் பொதுமக்களின் பார்வைக்கு திரையிடப்பட்டிருக்க வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டிருக்க வேண்டும், குறிப்பாக மாலை ஆறு மணி மற்றும் பத்து மணிக்காட்சிகள் அவற்றுள் அடங்கியிருப்பது அவசியம். அப்படத்தைப் பற்றியான போதுமான விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். திரையரங்கு அல்லாத மற்ற வழிகளில் வெளியிடப்பட்ட படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது. படத்தைப்பற்றிய விவரங்கள் அகாடமியிடம் டிசம்பர் 1 குள் சமர்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். மேற்கண்ட விதிகளை பூர்த்தி செய்த எந்த படமும் நேரடியாக அனைத்து ஆஸ்கார் விருதுக்கான பிரிவுகளிலும் கலந்துகொள்ளலாம். சரி அதோடு முடிந்துவிட்டதா என்றால் இல்லை. அகாடமி என்பது சுமார் ஆறாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சங்கம். போட்டிக்கு தயாரிப்பாளரால் சமர்பிக்கப்பட்ட படங்கள் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட, குறைந்தது மொத்த உறுப்பினர்களில் ஐந்து சத ஓட்டுக்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு முன்னோட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுஐந்து முதல் பத்து படங்கள் முன்மொழியப்படும். அந்தப்படங்கள் இறுதி ஓட்டெடுப்புக்கு உறுதிசெய்யப்பட்டு ஆறாயிரம் உறுப்பினரின் வீட்டிற்கும் கடிதம் மூலம் அனுப்பப்படும். உறுப்பினர்களின் ஓட்டெண்ணிக்கையே அனைத்து பிரிவுகளிலும் வெற்றியை தீர்மானிக்கிறது. பொதுவாக வெளிநாட்டுப்படங்கள் இப்படி பரவலான வெளியீட்டையும் கவனத்தையும் பெறுவது இதுவரை நடந்திராத நிகழ்வு, CrouchingTiger Hidden Dragon போன்ற படங்கள் இதற்கு முன்னர் அந்த வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் அது அமெரிக்க நிறுவனமும் இணைந்து தயாரித்து ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிடப்பட்டது. முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வேற்றுமொழிப்படம் இத்தகைய பரவலான வெளியீட்டைப்பெற்றது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வணிக வெற்றியை அடைந்ததும் Parasite படத்திற்குபலமாக அமைந்தது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே Parasite சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.இந்த வெற்றியின் தொடக்கம் சென்ற ஆண்டில்கான்ஸ் திரைப்பட விழாவில் Palmde Or விருதைப் பெற்றதிலிருந்து தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தைப்பெற்று ஐரோப்பா முழுவதும் வெளியாகி பெரும் வெற்றியை கண்டது. குறிப்பாக உலகம் முழுக்கவே கொரிய மொழியில் துனைத்தலைப்புகளுடன்இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதுஇதுவேமுதல்முறையாகஇருக்கவேண்டும். இந்தப்படத்தினை பரவலாக மக்கள் பார்த்துவிட்டால் ஆஸ்கார் கிடைத்துவிடுமா? என்றால் இல்லை. அதற்க்கு மேலும் பல்வேறு குட்டிக்கரணங்களைப் போட்டாகவேண்டியிருக்கிறது. அகாடமியின் ஆறாயிரம் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் படத்தை பார்த்திருந்தாலோ அல்லது கேள்விப்பட்டிருந்தால் மட்டுமே அதற்க்கு ஆதரவாக அவர்கள் ஓட்டளிக்க முன்வருவார்கள். தயாரிப்பாளர் அதற்கென தரகர்களை ஹாலிவுட்டில் கண்டுபிடித்து, பெரிதாக விளம்பரப்படுத்தி பல்வேறு திரையிடல்களையும் விருந்துகளையும் நடத்தி அகாடமியின் உறுப்பினர்களின் மத்தியில் விழிப்புணர்வையும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் இந்த முயற்சிக்கே சில மில்லியன் வரை செலவு செய்தாக வேண்டியிருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. விசாரணை ஆஸ்காருக்கு முன்மொழியப்பட்டு நீண்ட பட்டியலில் இருந்த பொழுது, வெற்றிமாறன் அங்கு ஆறுமாதம் தங்கி சிலகோடிகள் செலவு செய்து இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாக பேட்டிகள் தந்தது நினைவிருக்கலாம். இத்தனையும் தாண்டிபடம் அகாடமி உறுப்பினர்களை கவர்ந்திருக்கவும் வேண்டும். Bohn Joon Ho மிகவும் ஆழமான சமூக கதைகளை வெகுஜனஜானர் திரைப்படங்களுக்குள் ஒழித்து அசலான திரைமொழியுடன் படைக்கக் கூடியவர். அவருடைய ஏனைய படங்கள் கூட முன்னரே Masterpeice என்றே அழைக்கப்படுகின்றன. இயக்குனராக அவருடைய படிநிலை வளர்ச்சி Parasite படத்தில் அசாதியமான எல்லைகளை தொட்டு நிற்கிறது. காட்சியமைப்பு கதாபத்திர வடிவமைப்பு அவர் பேச வரும் கருத்து என் அனைத்தும் ஒன்றாக குவிந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம் Parasite. சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பது வளர்ச்சிபெற்ற மேலை நாடுகளில் கூட கொடிய தக்குத்துடன் இன்றைய நாட்களில் உணரப்பட்டு வருகிறது. படம் திரையிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் கதையோடு மக்கள் ஒத்துப்போய் வரவேற்பதை கண்டு ஆச்சர்யப்பட்டு போனதாக இயக்குனர் தனது பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ‘நாம் நாடுகளால், இனத்தால், மொழியால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பிளவு பட்டிருந்தாலும்; முதாலாளித்துவம் என்ற கொடிய அரக்கனால் பிணைக்கப்பட்ட ஒற்றை தேசமாகத்தான் வாழ்ந்தது வருகிறோம்’ என்பதை இப்படம் உணர்த்தியதாக பதிவுசெய்துள்ளார். Parasite வெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் வரும் வெளிப்புற முரணை மட்டும் பேசவில்லை. அத்தகைய சமூக படிநிலை மனிதமனங்களுக்குள் ஏற்படுத்தும் வன்மத்தையும் ஒவ்வாமையையும் கடுமையாக விமர்சிக்கிறது. கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் ஏற்படுத்திய சமூகப்பிளவுகள் பலரை கரையான்களைப்போல பாதாள இருட்டிலும், சிலரை ஒளிபொருந்திய அரண்மனைகளிலும் விட்டுவைத்திருக்கிறது. எல்லாவற்றாலும் கைவிடப்பட்டு ஒட்டுண்ணிகளாக மாற்றப்பட்டவர்கள் தனக்கான ஒரு சிறிய ஆசுவாசத்தையும் பாதுகாப்பையும் தேடும்பொழுது. அவர்களின் நியாயங்களும் அறங்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. Parasite இந்த சமூகப்படிநிலைகளில் பிறக்கும் வெவ்வேறு முரண்களை நேருக்கு நேர் மோதவிட்டு பெரும் வன்மனத்தை வெடிக்கவைத்து முடிகிறது, இங்கு எவர் எவருக்கு ஒட்டுண்ணியாக வாழ்கிறார். முடிவுறாமல் ஒட்டுண்ணிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்ற சுழற்சியை கண்முன்னே விவரிக்கிறது. இதுவரை உலகம் முழுக்க வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களுக்குகூட கிடைக்காத வாய்ப்பை Parasite பயன்படுத்திக்கொண்டு அமெரிக்க மனசாட்சியை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆஸ்கார் விதிகளில் வெகுகாலமாகவே வெளிநாட்டுப்படங்கள் கலந்துகொள்ளலாம் என்றிருந்தாலும், எழுதபப்டாத மரபாக எதையும் கண்டுகொள்ளாமல் கண்மூடி வாழ்ந்து வந்து அகாடெமி இந்த முறை விழித்துப் பார்த்திறுக்கிறது. Parasite மாபெரும் வெற்றியை நிகழ்த்திசாதனை புரிந்திருக்கிறது. சிறந்த நடிகருக்கான பிரிவில் Parasite படத்தின் நாயகன் சாங்காங்கோ முன்மொழியப்படவில்லை, ஒருவேளை அது நடந்திருந்தால் ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு கடுமையான போட்டியாக இருந்திருக்கக்கூடும். இருப்பினும் ஆண்டின் சிறந்த நடிப்பை ஜாக்வின் பீனிக்ஸ் சந்தேகமில்லாமல் நிகழ்த்திக்காட்டி சுலபமாக சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார். மிகவும் போற்றுதலுக்குரிய ஒளிப்பதிவாளரான ரோஜர் டீகின்ஸ் 1917 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இரண்டு மணிநேரப்படத்தை ஒரே ஷாட் போல கட்டமைத்து தொடர்ந்து நகர்ந்து கொண்டும் ஓடிக்கொண்டும் பாய்ந்து தாவியும் முதல் உலகப்போரின் கிடங்குகளின் வழியே அடவாடித்தனமாக ஒளிப்பதிவு செய்திருந்தது பிரம்மிக்கபடக்கூடிய சாதனை. இத்தகைய பெரும் சவால் மிக்க படத்தில், ஒளிப்பதிவை அழகியல் நேர்த்தியுடனும் சுவாரஸ்யத்தை எகிற வைக்கும் விதமாகவும் அமைத்து பிரம்மிக்க வைத்தார். ஹாலிவுட்டின் முடிசூடா மன்னன் பிராட் பிட் மூன்று முறை நடிப்பிற்காக முன்மொழியப்பட்டு இருந்தாலும் இதுவரைவென்றதில்லை என்பது குறையாகவே இருந்து வந்தது, இந்தமுறை Once Upon a Time in Hollywood படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப்பெற்றது நெகிழ்ச்சி. சிறந்த துணை நடிகைக்கான விருதை லாரா டென்ன்னும், சிறந்த நடிகைக்கான விருதை ரேனே செல்வேக்கேரும் பெற்றனர். பொதுவாக ஆண்கள் கோலோச்சிவரும் மற்றொரு பிரிவான இசைத் துறையில், இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ஹில்தூர் என்ற பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸ்காரில் ஜோஜோ ராபிட் என்ற படம் ஹிட்லரை நகைப்புக்குரிய பாத்திரமாக மாற்றி பகடி விமர்சனத்துடன் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது பெரும் கவனத்தைப் பெற்றது. இதைப்போன்ற அரசியல் பகடிப்படங்கள் சமீகாலங்களில் உலகெங்கும் பெருகிவரும் வலதுசாரி அரசியலிற்கு எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் பார்க்கப்படுகிறது. சிறந்த மறுவுருவாக்கப்பட்ட திரைக்கதைக்கான விருதையும் அப்படத்தின் இயக்குனரும் ஹிட்லர் பாத்திரத்தை ஏற்று வெகுசிறப்பாக நடித்திருந்த Taika Waitti வென்றார், வழக்கமாக மிகுந்த கட்டுக்கோப்புடன் தொகுத்து வழங்கப்படும் ஆஸ்கார் இந்த முறை நல்ல தொகுப்பாளர் இல்லாமல் சற்று தொய்வுடன் காணப்பட்டது ஏமாற்றமே. இரண்டாண்டுகளுக்கு முன்பு மிகச்சிறப்பாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கியது நினைவிருக்கலாம். இந்த ஆஸ்கருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ‘கெவின் ஹர்ட்’ சமீபத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களை புண்படுத்தும் விதமாக பதியப்பட்ட tweet காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டார். இருப்பினும் வேறொரு நகைச்சுவை தொகுப்பாளர் ஹாலிவூட்டில் கிடைக்காமலா போய்விட்டார் என்பது ஆச்சர்யமே! https://uyirmmai.com/செய்திகள்/சினிமா/ஆஸ்கார்-விருதுகளும்-ஆச்ச/
 6. நூறு கதை நூறு படம்: 44 வறுமையின் நிறம் சிவப்பு July 6, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்கள் அன்பை விட பணத்தை விட விசுவாசத்தை விட புகழை விட நன்மையை விட எனக்கு உண்மையைத் தா போதும் (SEAN PENN எழுதி நடித்து இயக்கிய INTO THE WILD 2007 படத்தின் ஒரு வசனம்) பல தலங்களுக்கும் எடுத்துச் சென்று படமாக்கப்பட்ட விரிந்த நாடகங்களாகவே கே.பாலச்சந்தரின் ஆரம்பகாலப் படங்களைக் கொள்ள முடியும். மனித உணர்வுகளின் அதீதங்கள் வினோதங்கள் விளிம்புகளைத் தாண்ட விழையும் சாமான்ய மனங்களின் சரி மற்றும் தவறுகள் அவரவர் கதையில் வாய்க்கவல்ல அவரவர் நியாயம் எல்லாவற்றினூடாக பாலச்சந்தர் தொடர் குரலொன்றை எழுப்பினார். இதை நீ ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்கிற எல்லா நிர்ப்பந்திக்கப்பட்ட சமூக நியாயங்களையும் முன் வடிவமைக்கப்பட்ட சார்புநிலைகள் பூர்த்தி செய்யப்பட்ட பாரபட்ச தர்மங்கள் எனத் தன்னாலான அளவு தன் பாத்திரங்களின் தைரியத்தை முன்வைத்து ஆனமட்டிலும் வினவுதலையும் மீறலையும் அந்தத் தொடர்குரல் சாத்தியம் செய்தது. அவர் இயங்க வந்த காலத்தோடு பொருத்திப் பார்க்கையில் கே.பாலச்சந்தர் நல்லதொரு கதைசொல்லி மேலும் தைரியமான படைப்பாளியும் ஆகிறார். ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதாம் ஆண்டு வெளியான வறுமையின் நிறம் சிவப்புஅன்றைய இந்தியாவின் தேசிய பிரச்சினைகளில் தலையாயதான வேலை இல்லாத் திண்டாட்டத்துக்கு எதிரான கலைவழிக் கலகக் குரல்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. சிறந்த படமாக 1980 ஆமாண்டுக்கான தமிழ்நாடு மாநில விருதைப் பெற்ற படம். இதை இயக்கியதற்காக பாலச்சந்தருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் மாநில மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஸ்ரீதேவி, எஸ்.வி.சேகர், திலீப், ப்ரதாப் போத்தன், பூர்ணம் விஸ்வநாதன், தேங்காய் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தந்தை ஒரு இசைமேதை அவரது சொல்வழி எதிலும் ஈடுபாடற்ற தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற ரங்கன் தன் வழி செல்கிறான். வீட்டைவிட்டு ஓடிவந்து டெல்லியை அடைகிறான். அங்கே நண்பர்கள், காதல், வேலையில்லா சூழல், வறுமை, உபகதைகள் எல்லாவற்றுக்கும் அப்பால் என்னவாகிறான் தந்தையை மகன் மறுபடி சந்திக்கையில் எப்படியான சந்திப்பாக அது விளங்குகிறது என்பதெல்லாம் வறுமையின் நிறம் சிவப்பு முன்வைத்த மீதக் கதை. பாரதியாரின் பாடல்களைத் தன் நெஞ்சகத்தில் ஒளிர்விதையென்றே தூவிய நாயகன் படத்தின் இறுதியில் தன் தகப்பனிடம் சொல்லும் அத்தனை பெரிய வசனம் இந்தப் படத்தின் முதுகெலும்பு எனலாம். ஸ்ரீதேவிக்குத் தெரியாமல் வெறும் கலயங்களை சப்தித்து தாங்கள் விருந்துண்ணுகிறாற்போல நடிக்கும் நண்பர்கள் மாட்டிக்கொண்டு விழிப்பது அந்தக் காலகட்டத்தின் துன்பியல் மென்மலர் என்றால் திலீப் என்ற கற்பனை கதாபாத்திரத்தை கிட்டத்தட்ட தன் பொய்களால் வழிபடும் திலீப் கதாபாத்திரம் இண்டர்வ்யூவுக்கு ரங்கன் செல்வதற்காக வழிப்போக்கர் ஒருவரிடமிருந்து கோட்டை அவரறியாமல் திருடித் தரும் காட்சி அற்புதம் என்றால் அதே கோட்டை வழியில் செல்கையில் சேறடித்து கமல் திகைப்பதும் இண்டர்வ்யூவில் கோட்டை மடித்து வைத்துக்கொண்டு விரக்தியில் தன் சான்றிதழ்களைக் கிழித்தெறியும் காட்சி யூகிக்கமுடியாத ஒன்று. கல்வியின் பின்னதான இருளும் நிச்சயமற்ற எதிர்காலமும் வறுமையும் பசியும் மெல்ல மெல்ல சமாதானமடைந்து எதாவது செய் என்று தன்னைத்தானே கெஞ்சும் இளைய மனங்களின் யதார்த்தமும் இந்தப் படத்தினூடாக துல்லியமாக வெளிக்காட்டப்பட்டன. ஸ்ரீதேவி, திலீப் ப்ரதாப், எஸ்.வி.சேகர் நால்வரின் திரைவாழ்விலும் இந்தப் படம் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றது. குறிப்பாக ப்ரதாப் பின்னியிருந்தார் எனலாம். சாகாவரம் பெற்ற சிப்பியிருக்குது முத்துமிருக்குது பாடல் இந்தப் படத்தின் அணிகலனாயிற்று. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை கண்ணதாசனின் பாடல்கள் தவிர பாரதியாரின் தீர்த்தக்கரையினிலே நல்லதோர் வீணை செய்தே போன்றவை இசையுடன் கூடி ஒலித்தன. கலைப் படைப்பு என்பது தன்னளவில் ஒரு பூர்த்தியை தைரியமான தீர்வை இதுதான் இன்னதுதான் என்று முடிவைக் கொண்டிருத்தல் அவசியம். அந்த வகையில் இந்தப் படம் அப்படியான நிறைவை நோக்கி நகர்ந்தோடியது நல்லதொரு ஆறுதல். கமல்ஹாசன் கதாபாத்திரத்தின் கதாமுடிவோடு ப்ரதாப்பின் பாத்திர முடிவும் எஸ்.வி.சேகரின் அழிதலும் திலீப்பின் சிதைவுமாக நான்கு மனிதர்களின் கதை-முடிவு-முரண் வாயிலாக அழகான கற்பனைக் கோலமொன்றை சாத்தியம் செய்தார் பாலச்சந்தர். கே.பாலச்சந்தர் எழுதி இயக்கிய வறுமையின் நிறம் சிவப்பு ஓங்கி ஒலித்த சாமான்யர்களின் நடுங்கும் குரல். வாழ்க சினிமா! https://uyirmmai.com/இலக்கியம்/நூறு-கதை-நூறு-படம்-44-வறுமைய/
 7. நீங்களே நடாத்துங்கள் ஈழப்பிரியன் அண்ணா! எப்போதும் போல உதவிக்கு நாங்கள் இருக்கின்றோம்
 8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகஸ்தியன், நுணாவிலான்
 9. 'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் பாதிக்கப்பட்டோர் தொகை 356 உயர்வு, தமது பிரஜைகளை அழைத்துவர அமெரிக்கா, கனடா தீர்மானம்! யோகோகாமாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 'டயமண்ட் பிரின்சஸ்' கப்பலில் மேலும் 70 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகையானது 356 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதனால் ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 408 ஆக பதிவாகியுள்ளது. கப்பலில் உள்ளவர்களிடம் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகள் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் 21 ஆம் திகதி வரை பரிசோதனை முடிவுகள் வெளியானதும், கப்பலில் உள்ள வைரஸ் தொற்றுக்குள்ளாகாத பயணிகளை தரையிறங்க அனுமதி வழங்கப்படவுள்ளதுடன், ஏனையோரை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை கப்பலில் உள்ள அமெரிக்கர்களை வெளியேற்றுமாறு அமெரிக்கா அறிவித்துள்ளது. இவ்வாறு வெளியேற்றப்படும் தமது பிரஜைகளை சிறப்பு விமானங்களினூடாக அமெரிக்காவுக்கு அழைத்து வந்து கலிபோர்னியாவில் உள்ள டிராவிஸ் விமானப்படை தளத்திலோ அல்லது டெக்சாஸில் உள்ள லாக்லேண்ட் விமானப்படை தளத்திலோ தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை கருத்திற் கொண்டு கனடாவும் கப்பலில் உள்ள தமது பிரஜைகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. photo credit : twitter https://www.virakesari.lk/article/75711
 10. மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சாத்திரியின் முத்திரையுள்ள சிறுகதை விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்குள் ஆயிரம் கதைகள் இருக்கும். பழகினால்தான் தெரியும்.
 11. கஞ்சத்தனம் இருக்கலாம். ஆனால் மக்டொனால்ட்ஸில் போயிருந்து வீட்டில் இருந்து கொண்டுவந்த பேர்கரை சாப்பிடும் அளவிற்கு இருக்கலாமா! புட்டும் முட்டைக்கொழம்பும் சாப்பிட்டிருக்கலாம்
 12. யாழ் குமரியாக இருப்பதனால்தான் கிழவர்களின் கொட்டம் அதிகரித்துள்ளது
 13. கொரோனா வைரஸின் தாக்கம் : ஆசியாவிற்கு வெளியே முதல் மரணம் பதிவு! கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட 80 வயதுடைய சீன சுற்றுலாப் பயணி ஒருவர் பிரான்சில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஆசியாவிற்கு வெளியே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைககள் பலனின்றி ஏற்ட்ட முதலாவது மரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை சீனாவில் தற்போத வரை உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 66,492 ஆகவும் இறப்பு எண்ணிக்கை 1,524 ஆகவும் உய உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/75703
 14. தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து செயற்படவேண்டும் - சுமந்திரன் சி.வி.விக்கினேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கெ­தி­ராகக் கூறும் மாற்றுத் தலைமை என்னும் கோசம் எம்மை வலு­வி­ழக்கச் செய்யும் சதியே எனத்­தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் குறிப்­பிட்­டுள்ளார். காரணம், தமி­ழரின் பிரச்­சி­னை­பற்றி எவ­ரோடு பேசு­வது என அரசு கைவி­ரிக்கும் நிலை வேண்டாம். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­போடு மட்­டுமே பேச வேண்டும் என்னும் ஆணையை வழங்­குங்கள். எமது அடிப்­படை பிரச்­சி­னை­யான தமிழ் தேசிய பிரச்­சினை என்ன? இந்­நாட்டில் நாம் எத்­த­கைய பிர­ஜை­க­ளாக வாழ்­கிறோம். சம பிர­ஜை­க­ளா­கவா, இரண்டாம் மூன்றாம் தரப் பிர­ஜை­க­ளா­கவா? உரி­மை­க­ளோடு வாழ வேண்­டுமா? அவற்றைக் கேட்கக் கூடாது என்னும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளோமா? இவை தாம் எமது அடிப்­படைப் பிரச்­சி­னைகள் எனவும் அவர் கூறி­யி­ருந்தார். அவர்­ மேலும் குறிப்­பி­டு­கையில், முன்பு ஒரு மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கையில் இப்­போது வேறு மாற்றம் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. அதா­வது 2015 ஆம் ஆண்டு நிகழ்ந்த மாற்­றத்தைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்­தி­ருக்­கி­றது. இதைத் தவிர்க்­கவே நாம் பல முயற்­சி­க­ளையும் எடுத்தோம். நல்­லாட்சி அரசு எம்மை ஏமாற்­றி­யது என்னும் உண்ணம் எமது மக்­க­ளிடம் இருப்­பதில் சில உண்­மைகள் இருக்­கலாம். எனினும் அதில் புதிய யாப்பை உரு­வாக்கப் பாரிய முயற்சி நிக­ழவே செய்­தது. அதற்­கெனப் புதிய யாப்­புக்­கு­ரிய வரைபும் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அது முடி­வு­றும் ­தறு­வாயில் இரு பெருங்­கட்­சி­களும் பிரிந்து சாதா­ரண பெரும்­பான்­மையும் கூட கிடைக்­காத நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. தற்­போது இந்­நாடு பிள­வு­படப் போகி­றது. இஸ்­லா­மிய குடி­ய­ர­சாகப் போகி­றது என்­றெல்லாம் பிர­சாரம் செய்தே பேரி­ன­வாதக் கருத்­துக்­களை முன்­வைத்துப் பெரும்­பான்­மை­யி­னரை அச்­சு­றுத்­தியே தெற்கில் வெற்றி பெற்­றுள்­ளார்கள். இத்­த­கைய சூழலில் நாம் எவ்­வாறு தமி­ழரின் தேசியப் பிரச்­சி­னையைக் கையா­ளு­வது என்னும் சவால் எமக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்­நி­லை­யில்தான் தற்­போது எதிர்க்­கட்­சி­யாக இருக்கும் ஐக்­கிய தேசியக் கட்சி வலு­வின்றி திசை தெரி­யாது மறு­தேர்­தலில் 50 ஆச­னங்­க­ளை­யேனும் பெறுமா என சந்­தே­கிக்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­யுள்­ளது என்றார். தொடர்ந்தும் சுமந்­திரன் எம்.பி. குறிப்­பி­டு­கையில், மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறு­வார்­களா என்னும் இக்­கட்­டான நிலை­யி­லேயே எதிர்­வரும் பொதுத் தேர்­தலை நாம் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. தெற்கின் அர­சி­யலை முழு­தாக தீர்­மா­னிக்க முடி­யாது. அது எமது கட்­டுப்­பாட்டை மீறிய விட­ய­மாகும். சில விட­யங்­களில் எம்மால் தாக்கம் செலுத்த முடிந்­த­போதும் அதை மீறிய விட­யத்தில் எமது இருப்­பையே சிந்­திக்கும் சூழல் இருக்­கி­றது. சில முன்­னேற்­றங்­களை நாம் சிறி­தாகக் கண்­ட­போதும் இறு­தியில் எதுவும் நிக­ழ­வில்லை. அதற்­காக நாம் இப்­போது பின்­வாங்கும் சூழல் இருக்­கி­றதா? அவ்­வாறு பெற்ற அடை­வு­களைக் காத்துக்கொண்டே முன்­னே­று­வது எப்­படி என்றும் கடின கேள்­வி­க­ளுக்கு நாம் விடை தேடு­கிறோம். ஒன்று மட்டும் எமக்குத் தெளிவு. பொதுத் தேர்தல் முடி­வுகள் வெளி­யாகும்போது எந்த செய்­தியை ஜனா­தி­பதித் தேர்­தலில் பறை­சாற்­றி­யி­ருந்­தோமோ அதே செய்­தி­யையே முடி­வு­க­ளாக உறு­திப்­ப­டுத்த வேண்டும். ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கு கிழக்கு, நுவ­ரெ­லியா, கொழும்பு நகரம், நீர்­கொழும்பு தவிர்ந்த இடங்­களில் கோத்­தபா­யவே பெளத்­தரின் வாக்­கு­களால் வெற்­றி­பெற்­றி­ருந்தார். இது அவ­ருக்கு ஒரு இழுக்­கே­யாகும். காரணம், சிறு­பான்­மைகள் நம்­ப­மு­டி­யாத ஒரு தலை­வ­ரா­கவே அவர் இருக்­கிறார். தமி­ழரின் அபி­லா­ஷை­களை சுமந்த கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பே­யாகும். அதைத் தவிர்த்து வேறு எவ­ரோடும் பேசி முடி­வு­காண முடி­யாது. எம்­மோடு பேச வைப்­பதே எமக்கு முன்­னா­லுள்ள பெரும் சவா­லாகும். காரணம் என்ன தெரி­யுமா? யாருடன் பேசு­வது? எமக்குத் தெரி­யாது உங்­க­ளிடம் ஐந்­தாறு கட்­சிகள் இருக்­கின்­றனவே என அரசு சொல்­லி­விடக் கூடாது. ஒரே அணி­யாக இது­வரை தமி­ழரின் அர­சியல் அபி­லா­ஷை­களைக் கட்டிக் காத்து வந்த தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மட்­டுமே பல­மான அணி­யாக பாரா­ளு­மன்­றத்தில் இருக்க வேண்டும். காரணம் யாருடன் பேசு­வது என அரசு கைவிரிக்கும் நிலைக்கு நாம் ஆளாகக் கூடாது. மாற்றுத் தலைமை என்னும் கோசம் அவ்­வாறு எம்மை வலு­வி­ழக்கச் செய்யும் ஒரு சதித்­திட்­ட­மே­யாகும். அதற்கு எமது மக்கள் துணை­போ­கக்­கூ­டாது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் பல குறை­பா­டுகள் இருக்­கலாம் எனவும் அவர் தனது தற்­போ­தைய அர­சியல் நிலைப்­பாட்டை தெளி­வாக முன்­வைத்­தி­ருந்தார். வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் தற்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றாக ஓர் அணியை உரு­வாக்கியுள்ளார். அர­சி­யலில் 2013 ஆம் ஆண்­டுக்கு முன் ஒதுங்­கி­யி­ருந்த இவரை அப்­போது நிகழ்ந்த வட­மா­காண சபைத் தேர்­தலில் முத­ல­மைச்­ச­ருக்­கான அபேட்­ச­க­ராகத் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் எம்.பியே கொண்டுவந்­தி­ருந்தார். காரணம் இவர் ஓர் உயர் நீதி­ய­ரசர். அர­சியலில் சக்­திக்கும் எதிர்­கால செயற்­பா­டு­க­ளுக்கும் உந்­து­சக்­தி­யாக இருப்பார் என்னும் எண்­ணத்­தி­னா­லே­யாகும். எனினும் சில மாற்று தரப்பு தமிழ்க் கட்­சி­களை விடவும் இவரே உள்­ளி­ருந்து கொண்டே பாரிய சவா­லுக்­குட்­ப­டுத்தி வந்தார். அப்­போ­தும்­கூட தமிழர் அர­சியல் ரீதியில் பாரிய பிளவை சந்­திக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக சம்­பந்தன் எம்.பி.எதுவும் பேச­வில்லை. சி.வி.விக்கினேஸ்­வரன் பதவிக் காலம் முழுதும் இருந்­து­விட்டுப் பிற­குதான் கொள்கை பிழை எனக் கூறிக் கொண்டு போட்டித் தலை­மையை உரு­வாக் ­கியிருக்கிறார். இப்­போது இவர் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாய­க­மா­கவும் தமிழ் மக்கள் பேர­வையின் இணைத்­த­லை­வ­ரு­மா­கவும் இருக்­கிறார். இவர் வெகு­கா­ல­மா­கவே சம்­பந்தன் எம்.பி.யோடும் சுமந்­திரன் எம்.பி.யோடும் முரண்­பட்டு வந்­தி­ருக்­கிறார். எனினும் வட­மா­கா­ண­ச­பையின் காலம் முடி­யும்­வரை உள்­ளூர புழுங்கிக்கொண்­டி­ருந்­து­விட்டு இப்­போது பகி­ரங்­க­மா­கவே ஒரு மாற்று அணியை உரு­வாக்கியுள்ளார். நாம் 2013 ஆம் ஆண்டின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை ஆத­ரித்தோம். அதை தற்­போ­தைய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைமை புறக்­க­ணித்­த­தா­லேயே தலை­மையை எதிர்க்கும் நிலை ஏற்­பட்­டது. இது கொள்கை ரீதி­யான எதிர்ப்பு காலக்­கி­ர­மத்தில் வேட்­பாளர் பகிர்வு நிகழும். முயல் வேக­மாக முன்னால் ஓடு­வதால் அதுவே வெல்லும் என்று இல்லை. அது ஓரி­டத்தில் உறங்­கி­விடும். ஆமை அப்­ப­டி­யல்ல நிதா­ன­மா­கவே உரிய இலக்கை அடையும் என சம்­பந்­த­னையும் தன்­னையும் சி.வி.விக்கினேஸ்­வரன் பாலர் பாடப்­படி உவமை காட்­டு­கிறார். புலி­களின் போராட்டம் அழிக்­கப்­பட்­டது நல்ல விடயம் என அண்­மையில் சம்­பந்தன் எம்.பி. குறிப்­பிட்­டி­ருந்தார் அல்­லவா? அது இப்­போது வெறும் வாய்க்கு அவல் கிடைத்­தது போல் ஆகி­விட்­டது. புலி­க­ளதோ தமிழ் இளை­ஞர்­க­ளதோ போராட்­டங்கள் தாமாக உரு­வா­க­வில்லை. மத்­திய அரசைக் கவிழ்க்க உரு­வா­க­வு­மில்லை. சிங்­களப் பேரின அர­சுகள் தொட­ராக நீதி­யின்றி தமி­ழர்­க­ளுக்­கெ­தி­ராக செயற்­பட்­ட­தாலும் அடக்­கு­மு­றைக்­குட்­ப­டுத்­தி­ய­தா­லுமே புலிகள் உரு­வாகக் கார­ணங்கள் அமைந்­தன. ஆக புலிகள் தமி­ழரின் உரி­மைக்­காகப் போரா­டினர் என்­பதே உண்­மை­யாகும். புலி­களை அழித்­தது நல்­லது என்போர் 2016 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும், 2017 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும், 2018 ஆம் ஆண்டு தீர்வு கிடைக்கும் என்­றெல்லாம் கூறி 5 ஆண்­டு­க­ளாக ஏமாற்­றி­யதைத் தவிர அவர்­களால் எதைச் சாதிக்க முடிந்­தது. இத்­த­கையோர் என்­றேனும் ஒருநாள் பாரா­ளு­மன்­றத்தை விட்டும் விரட்­டப்­பட்டால் அதை ஒரு நல்ல விடயம் எனத் தமிழ்ச் சமூகம் நிச்­சயம் கூறும் என எதிர்­பார்க்­கலாம் என சி.வி.விக்கினேஸ்­வரன் தீர்க்­க­மாகக் குறிப்­பி­டு­கிறார். சம்­பந்தன் ஓய்வு பெற்­றால்தான் இவர் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இணை­வாராம். சம்­பந்­தனும் விக்கினேஸ்­வ­ரனும் அறிவில் முதிர்ச்சி பெற்­ற­வர்கள். தற்­போ­தைய இக்­கட்­டான கால­கட்­டத்தில் தமிழ் சமூ­கத்­துக்கு இரு கண்­களைப் போல் வழி­காட்ட வேண்­டி­ய­வர்கள். புலி­களை இக­ழு­வதும் புக­ழு­வ­துமா தற்­போ­தைய உட­னடி தேவை? இக­ழப்­ப­டு­வதும் புக­ழப்­ப­டு­வதும் இயல்­பு­தானே எனவும் விட்­டு­வி­ட­மு­டி­யாது. புலி எதிர்ப்பு, புலி ஆத­ரவு என இரு பிரி­வு­க­ளாக தமிழ்ச் சமூகம் பிள­வு­ப­டு­வது அவர்­களின் இருப்­பையே கேள்­விக்­கு­றி­யாக்­கி­விடும் அல்­லவா? புலி­களின் மீதான சம்­பந்­தனின் எதிர்ப்பு நிலை தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் அவ­ருக்கு வெகு­ஜன ஆத­ரவைக் குறைத்­து­வி­டு­மாயின் அது ஒரு வியூ­க­மான செய­லல்ல என்றே நான் கூறிக்­கொள்வேன். அதுபோல் தற்­போ­துள்ள சூழ்­நி­லையில் சி.வி.விக்கினேஸ்­வ­ரனின் முன்­னெ­டுப்­பும்­கூட வியூ­க­மல்ல. இரு­வரும் ஒன்­றி­ணைந்து பரஸ்­பரம் விட்­டுக்­கொ­டுத்து ஒரு­மு­கப்­பட்டு செயற்­பட வேண்டும். இவர்கள் மத்­தி­யி­லேயே இணக்கம் இல்­லா­விட்டால் சிங்­கள மக்­களை இணக்­கத்­துக்குக் கொண்­டு­வ­ரு­வது எவ்­வாறு? தமிழ், முஸ்லிம் இணக்கம் கைகூடுமா? தற்­போது பேசப்­பட்டு மட்டும் வரும் தமி­ழ­ருக்­கான தீர்வும்கூட தட்­டத்தில் வைத்துத் தரப்­பட்­ட­தல்ல. போராட்­டத்தின் விளை­வா­க­வே­யாகும். இதுவும் பேசப்­ப­டு­கி­றது. எனினும் எதிர்­ம­ன­நிலை இணக்­கப்­பாட்­டுக்கு முர­ணா­ன­தாகும் என்­பதும் புரிந்து கொள்­ளப்­ப­ட­வேண்டும். தெற்கில் பேரி­ன­வாதம் தலை­தூக்கி நிற்­கையில் வடக்கு, கிழக்கில் எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ஒரே அணி­யாக இருக்க வேண்­டிய தமிழ் மக்­களைப் பிள­வு­ப­டுத்தும் நோக்கம் இருக்­கு­மாயின் அது ஒரு வர­லாற்றுத் துரோகம் என்றே நான் சொல்லிக் கொள்வேன். ஆனந்தசங்­க­ரியும் இவ­ரோடு இணைந்தால் கேட்­கவே வேண்டாம். எல்­லோரும் ஒரே அணி­யாக இருக்க வேண்­டிய இக்­கா­ல­கட்­டத்தில் தற்­போ­துள்ள அணியா? மாற்று அணியா? தமிழர் தீர்­மா­னிப்­பார்கள் என சி.வி.விக்கினேஸ்­வரன் கூறி­யுள்­ளாரே. இது பிள­வு­ப­டுத்தும் செயற்­பாடு அல்­லவா? தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி.க்களை இவர் விமர்­சிக்­கையில் வடக்கு, கிழக்கில் பிறந்து கொழும்பில் சொகு­சாக வாழ்ந்து பலர் தேர்­தல்­களின் போது வடக்கு, கிழக்­குக்கு வந்து கூடா­ர­மிட்டுத் தங்­கி­விட்டு தேர்தல் முடிந்­ததும் பறந்­து­வி­டு­வார்கள். பின்பு அடுத்த தேர்­த­லுக்கே திரும்பி வரு­வார்கள் என்­கிறார். கட்சி சார்­பற்ற நடு­நிலைச் சிந்­த­னை­யோடு பார்ப்­போ­மாயின் பாரா­ளு­மன்றம் கொழும்பில் இருக்­கையில் அடிக்­கடி தூர பயணம் போக­மு­டி­யாது என்­ப­தா­லேயே எம்.பி.க்கள் கொழும்பில் தங்­கி­யி­ருந்து இடைக்­கி­டையே ஊர்­க­ளுக்குப் போக வேண்­டி­யி­ருக்­கி­றது. கொழும்பு வாழ்­வையே சி.வி.விக்கினேஸ்­வரன் சொகுசு வாழ்வு என்­கிறார். எந்த எம்.பி.யானாலும் அவ­ருக்குத் தனது சொந்த ஊர் போல் வராது. பிறந்த ஊரில் வாழ்­வ­தையே பெரிதும் விரும்­பு­வார்கள். ஊர் துறந்து வயது முதிர்ந்த நிலையில் அவர்கள் கொழும்பில் வாழ்­வதைத் தியாகம் என்றே நான் கூறிக்கொள்வேன். மேலும் விக்கினேஸ்­வரன் குறிப்­பி­டு­கையில், நாம் கொள்­கையின் அடிப்­ப­டையில் பய­ணிக்க விரும்­பு­கிறோம். தமிழ் மக்கள் கொள்­கைக்கு முத­லி­ட­ம­ளித்­தா­லேயே மாற்றுத் தலைமை ஏற்­படும். இன்றேல் இவர்­களை தெய்­வமே காப்­பாற்ற வேண்டும் எனக் கூறி­விட்டு நாம் ஒதுங்கிக்கொள்வோம். கொள்­கையைப் புறக்­க­ணிக்கத் தலைமை முற்­பட்டால் மாற்று அணிக்­கான இடை­வெளி கட்­டாயம் ஏற்­ப­டவே செய்யும். மாற்று அணியே பொது மக்­களின் விருப்­ப­மாகும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிக்க வேண்டும் என்­பதே அத்­த­கைய அணியை விரும்­பு­வோரின் நோக்­க­மாகும். எனவே, தமிழ் மக்கள் சரி­யா­னவர்களை நிச்­சயம் அடை­யாளம் காணு­வார்கள் எனவும் குறிப்­பிட்டார். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வரப்­பி­ர­சா­தங்­க­ளுக்­கா­கவும் வாழ்வு வச­தி­க­ளுக்­கா­கவும் பெருந்­தே­சியக் கட்­சி­களின் பேரி­ன­வா­தி­க­ளிடம் அடிப்­படை உரி­மை­களைத் தாரை­வார்க்­கின்­றது என்­பதே இவ­ரது வலு­வான குற்­றச்­சாட்டு என நான் நினைக்­கிறேன். சி.வி.விக்கினேஸ்­வரன் போர்க்­கால மன­நி­லையைப் பிர­தி­ப­லிக்­கிறார். அந்த மன­நி­லை­யோடு தோல்­வி­யுற்ற தரப்பு வெற்­றி­பெற்ற தரப்­போடு நல்­லி­ணக்க முயற்­சியை மேற்­கொள்­வ­தென்­பது உசி­த­மே­யல்ல என்­பதே உண்­மை­யாகும். இல்­லாத பிரச்­சி­னையை உரு­வாக்கிப் புதிய அழிவில் சிக்கவைக்கும் முயற்சி மிகவும் ஆபத்­தா­ன­தாகும். இதைப்போல் ஒன்­றுதான் முஸ்­லிம்கள் பற்­றிய விட­ய­மு­மாகும். அது பற்றி நான் முன்பே கூறி­யி­ருக்­கிறேன். முஸ்­லிம்­களைத் தவிர்த்துக் கொண்டு சிங்­க­ளவர் தமி­ழ­ருடன் மட்டும் பேசியோ தமிழர் சிங்­க­ள­வ­ருடன் மட்டும் பேசியோ மூவினம் பூர்­வீ­க­மாக வாழும் இலங்­கையில் பிர­தேச அதி­காரப் பர­வலைப் பகிர்ந்துகொள்ள முடி­யாது. இது பின்னால் வேறு பிரச்­சி­னைக்கு வித்­திட்­டு­விடும் சிங்­க­ளத்­த­ரப்பு மத்­திய அரசை முழு­மை­யாக வைத்­துக்­கொண்டு தமிழ்த் தரப்­புக்கும் முஸ்லிம் தரப்­புக்கும் பிர­தேச அதி­காரப் பர­வல்­க­ளை­யும்­கூடத் தரா­ம­லி­ருக்­கி­றது. ஒற்­றை­யாட்சி என்னும் சொல்­லுக்குள் தனது ஏக­போ­கத்­தையே வைத்துக் கொண்­டி­ருக்­கி­றது. பேரின ஒற்­றை­யாட்சி வேறு, பல்­லின ஒற்­றை­யாட்சி வேறு. இது பேரின ஒற்­றை­யாட்­சி­யாகும். சிறு­பான்­மை­க­ளுக்கும் பிர­தேச அதி­காரப் பர­வல்­களை வழங்கி அமை­வதே பல்­லின ஒற்­றை­யாட்­சி­யாகும். சிங்­களத் தரப்பும் தமிழ் தரப்பும் முஸ்லிம் தரப்­புக்­கான பிர­தேச அதி­காரப் பரவல் பற்றி கலந்­து­பே­சு­வ­தில்லை. சிங்­களத் தரப்பு கவனம் செலுத்­து­வ­தில்லை. அது தமிழ் தரப்பின் பிர­தேச அதி­காரப் பர­வ­லுக்­கும்­கூட உத்­த­ர­வாதம் வழங்­கு­வ­தில்லை. தமிழ்த் தரப்பு முஸ்லிம் தரப்­புக்கு உத்­த­ர­வாதம் வழங்­கி­ய­போதும் அத­னிடம் அதற்­கான அதி­காரம் இல்லை. மூவி­னத்­தி­னரும் இலங்­கையில் பர­வ­லாக இணைந்து வாழ்­வதால் தீர்வு மூவி­னத்­துக்கும் பொது­வாக அமை­ய­வேண்டும். இன்றேல் முஸ்­லிம்­களை ஒதுக்கு­வ­தா­கவே அமையும். விக்கினேஸ்­வ­ரனின் சொல்­லா­டல்கள் தமிழ்– முஸ்லிம் உற­வுக்கு பாதிப்­பா­கவே அமைந்­தன. பெளத்­த­ரையும் குழப்­பி­ய­டித்­தன. இவை தீர்க்­கப்­பட வேண்­டிய தமி­ழரின் நீண்­ட­கால அடிப்­படைப் பிரச்­சி­னையை மத சார்பு நிலைப்­பாட்­டுக்குக் கொண்­டுபோய் குழப்­பி­ய­டிக்கும் செயல்­வ­டி­வங்­க­ளாகும். சி.வி.விக்கினேஸ்­வரன் அதையும் கையா­ளு­கிறார். பெளத்த பேரி­ன­வா­திகள் தற்­போது மதப்­போர்­வை­யால்தான் சிறு­பான்­மை­களை இன ஒடுக்­கு­த­லுக்கு உட்­ப­டுத்­தப்­பார்க்­கி­றார்கள். இந்­நி­லையில் தமிழ் தரப்பு தனது மதத்தை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தா­னது முடி­வுற வேண்­டிய ஓர் இலக்கை வேறு வழியில் திருப்பிப் புதிய விளைவை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு இருக்கும் பிரச்­சி­னைக்­கான தீர்வை இழந்து விடு­வ­து­மாகும். ஏற்­க­னவே 21/4 குண்­டு­வெ­டிப்பு நிகழ்வு பெளத்த மேலா­திக்­கத்­துக்கு வித்­திட்டு முழு­மை­யான பேரின ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கையில், விக்கினேஸ்­வ­ரனின் முந்­திய மதம் எது என்னும் ஆராய்ச்சி வெளி­யீடு நீறு­பூத்த தணலில் காற்­ற­டிப்­பது போன்றே அமைந்­தி­ருந்­தது. இப்­போது எந்த மதத்­துக்கு இலங்கை சொந்தம் என்­பதா பிரச்­சினை. இதனால் வடக்கு–கிழக்கைப் பேரி­ன­வா­திகள் ஆக்­கி­ர­மிப்­ப­தோடு பிக்­கு­களும் ஆக்­கி­ர­மிக்கும் நிலையே ஏற்­படும். வடக்கு–கிழக்­குக்கு வெளி­யே­யுள்ள தமி­ழரின் இடங்­க­ளிலும் விகா­ரைகள் கட்­டப்­பட்டு கோயில்­க­ளுக்கும் இடை­யூறு ஏற்­ப­டலாம். எனவே உள்ள பிரச்­சி­னைக்­கான தீர்வைக் குழப்­பி­ய­டித்­து­விடும் இத்­த­கைய செயற்­பாடு ஆபத்­தா­ன­தாகும். உள்­நாட்டு விட­யத்தில் மட்­டு­மன்றி சர்­வ­தே­சத்­துக்கும் முகம் கொடுக்க வேண்­டிய இந்த முக்­கிய கால­கட்­டத்­தி­லும்­கூட ஏட்­டிக்குப் போட்­டி­யான செயற்­பா­டு­களும் ஒத்தொ­ரு­மித்த கொள்­கையும் இல்­லா­தி­ருப்­பது பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழப்­ப­தற்கே வழி­வ­குக்கும். கருத்­துக்­களை கலந்­து­பேசி ஒத்­தொ­ரு­மி­யுங்கள். ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய் என்னும் வகையில் அணு­க­வேண்டும். பரஸ்­பரம் ஒரு­வ­ரோடு ஒருவர் அன்­போடும் மரி­யா­தை­யோடும் நோக்க வேண்டும். கருத்­துக்­களைப் பரி­மா­றும்­போது இங்­கி­த­மா­கவும் நளி­ன­மா­கவும் அர்த்­த­முள்­ள­தா­கவும் அமைய வேண்டும். விதண்­டா­வாதம் பேசி சுய நலத்துக்காக குறுக்­கீ­டுகள் செய்து பிள­வு­ப­டுத்­தக்­கூ­டாது. யுத்­தத்­திலும் சமா­தா­னத்­திலும் பின்­ன­டை­வு­களைக் கண்­ட­தற்­காக மேலும் பல கூறு­க­ளாகப் பிளவுபடுவது மேலும் அழிவையே தரும். சி.வி.விக்கினேஸ்வரனிடம் வடக்கு–கிழக்கு தமிழரின் தாயகக் கோட்பாடு இருக்கிறது. அதையே அவர் வடமாகாண முதலமைச்சராக இருக்கையில் நிறைவேற்றியிருந்தார். அதன் பிறகு இவர் எதற்காக அஸ்கிரிய பீடத்தைக் கண்டு கொள்கை விளக்கம் செய்ய வேண்டும். இது கட்சியுடன் கூட்டிணைவற்ற தனிவழிப்போக்காகும். அதன் பிறகு இவர் அங்கு மரியாதைக்குறைவாக நடத்தப்பட்டதாக விமர்சனமும் செய்திருந்தார். இவர் ஏன் இணக்கம் பேச அஸ்கிரிய பீடத்தைத் தெரிவு செய்ய வேண்டும்? யாப்பில் பெளத்தமத சாசன முன்னுரிமைகள் இருப்பதாலா? முஸ்லிம்களின் கடைகளில் உண்ணவேண்டாம் அவர்களின் கடைகளில் ஆடைகள் வாங்கி அணிய வேண்டாம் எனக்கூறியவர்தான் இந்த அஸ்கிரிய பீடாதிபதி அல்லவா? கிழக்கில் முஸ்லிம்களின் இனப்பெருக்கம் அதிகம். அதிக வளங்களும் முஸ்லிம்களின் வசம் என அதுரலியே ரதன தேரர் தன்னிடம் கூறியதாக ஒரு முறை சி.வி.விக்கினேஸ்வரன் கூறினாரே? தெற்கு முஸ்லிம்கள் அரபிகளின் சந்ததிகள். அதனால்தான் வடக்கு–கிழக்கு இணைப்பை எதிர்க்கிறார்கள். வடக்கு–கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் பரம்பரையினர். அதனால்தான் வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரிக்கின்றார்கள் எனவும் ஒருமுறை கூறினாரே இது முஸ்லிம்களை சீண்டிவிடும் கருத்து அல்லவா? இந்துக்களே இலங்கையின் முதற்குடிகள். பெளத்தரல்லர் என விக்கினேஸ்வரன் கூறி சில பெளத்த மத மேலாதிக்க பிக்குகளைக் கிளறியிருந்தாரே. இது தேவைதானா? தந்தை செல்வாவின் போராட்டம் இனவெறியால் ஏற்பட்டதல்ல. இன ஒடுக்குமுறைக்கு எதிரானதாகும். எனவே முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்திப் பேரினவாதமற்ற சிங்கள மக்களின் மனங்களையும் கவரவேண்டும். - ஏ.ஜே.எம்.நிழாம் https://www.virakesari.lk/article/75612
 15. எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன் On Feb 13, 2020 லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப்டினன்ட் கேணல் வீரமைந்தன். கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். தொடர்ந்து எமது கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டான். பின்னர் தரைத் தாக்குதல் விசேட பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு 1999 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் இணைக்கப்பட்டான். ஊரியான் பரந்தன் முன்னரங்கில் படையணியின் வீரமணி கொம்பனியில் ஒரு செக்சன் லீடராக வீரமைந்தன் தனது களச் செயற்பாடுகளைத் துவங்கினான். பாதுகாப்பு கடமைகளிலும் பயிற்சிகளிலும் திறமுடன் செயற்பட்ட வீரமைந்தன் சிறப்புத் தளபதி ராகவன், துணைத் தளபதி ராஜசிங்கம் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்ற அணித் தலைவராக வளர்ந்தான். 1999ல் பரந்தன் பகுதிகளில் எதிரி மேற்கொண்ட பாரிய இராணுவ நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் படையணியின் தளபதி விமலன் அவர்களின் கட்டளையில் திறமுடன் களமாடினான் . சுட்டத்தீவு வரையிலான முன்னரங்க பகுதிகளில் பாதுகாப்பு கடமைகளில் தனது செக்சனை திறமுடன் ஈடுபடுத்தினான் . கொம்பனி லீடர் இராசநாயகத்தின் பொறுப்பில் தடையுடைப்பு அணியில் பங்கேற்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு தனது திறன்களை மேலும் வளர்த்துக் கொண்டான். படையணியின் போர்ப் பயிற்சி ஆசிரியர்கள் வரதன் முதலானோர் நடத்திய இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு சிறந்த இளம் அணித் தலைவனாக வளர்ந்தான். “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கை துவங்கிய போது, வீரமைந்தன் தடையுடைப்பு அணியில் செக்சன் லீடராக கடுஞ்சமர் புரிந்தார். அம்பகாமம், கறிப்பட்டமுறிப்பு களங்களில் தீரமுடன் செயற்பட்ட வீரமைந்தன், இச் சமரில் படுகாயமுற்று சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். உடல் நலம் பெற்று களமுனைக்கு திரும்பிய வீரமைந்தன் ஆனையிறவு மீட்புச் சமரில் திறமுடன் செயற்பட்டார். 2000ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதி சேகர் அவர்களின் கட்டளையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளில் தீவிரமாக களமாடிய வீரமைந்தன் காலில் படுகாயமுற்று சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மிக மோசமாக சிதைந்த நிலையில் பல மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியேற்பட்டது. படையணியின் மேஜர் பிரியக்கோன் மருத்துவ தளத்தில் வீரமைந்தன் தங்கியிருந்த நாட்களில் அழகாக ஓவியங்கள் வரைவதிலும் வெற்றுப் போத்தல்கள் போன்ற கழிவுப் பொருட்களைக் கொண்டு அழகிய கலைப் பொருட்களைக் செய்வதிலும் தனது நேரத்தை செலவிட்டார். தன்னுடன் இணைந்து போராடி வீரச்சாவைத தழுவிக் கொண்ட மாவீரர்களின் நினைவாக பல ஓவியங்களை வரைந்து எமது தளங்களை அழகுபடுத்தினார் . படையணி போராளிகளால் நடத்தப்பட்ட ” அக்கினி வீச்சு ” கையெழுத்து இதழ் வீரமைந்தனின் அழகிய ஓவியங்களைத் தாங்கி வந்து, போராளிகளிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றன. 2001 ம் ஆண்டு படையணியின் பத்தாண்டுகள் நிறைவின் போது, சிறப்பாக செயற்படடவர்களுக்காக தேசியத் தலைவரால் வழங்கப்பட்ட சிறப்புச் சான்றிதழய வீரமைந்தன் பெற்றார். 2002 ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில் வீரமைந்தன் வட்டக்கச்சியில் புதிய மருத்துவ தளம் அமைக்கும் பணியில் கடமையாற்றினார். தொடர்ந்து பிரபல்யன் மருத்துவ தளத்தின் பொறுப்பாளராக செயற்பட்டார். தளபதி கோபித் அவர்களின் வழிநடத்தலில் படையணியின் மருத்துவ பொறுப்பாளர் கடற்கதிருடன் இணைந்து காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரிப்பதில் திறமுடன் கடமையாற்றினார். பின் தள நிர்வாகத்தில் பல்வேறு கடமைகளில் நின்ற நவக்குமார் , ரகுராம், குமுதன், தமிழரசன், முல்லை, ஈழப்பருதி, வைத்தி, சிலம்பரசன், தேவமாறன், யாழின்பன், மதன், முதலானோருடன் இணைந்து பல கடமைகளில் செயற்பட்டார். தாக்குதலணி பின்தளத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் தளபதிகளின் வழிகாட்டுதல் படி கலை நிகழ்ச்சிகளையும் பயிற்சி வகுப்புகளையும் திறம்பட ஒழுங்குபடுத்தி நடத்துவதில் மிகுந்த விருப்புடன் செயற்பட்டு போராளிகளின் அன்பையும் பாராட்டையும் பெற்ற பொறுப்பாளராக வீரமைந்தன் திகழ்ந்தார். மேலும் தனது சக தோழன் கப்டன் இளஞ்சுடர் அவர்களின் களச் செயற்பாடுகளை களப் படப்பிடிப்பாளர் தமிழவள் மற்றும் இசைப்பிரியாவுடன் இணைந்து துயிலறைக் காவியம் நிகழ்ச்சியில் பதிவு செய்தார். 2005ம் ஆண்டு வீரமைந்தன் மீண்டும் தாக்குதலணிக்கு வந்துவிட்டார். பிரிகேடியர் தீபன் அவர்களின் G-10 போர்ப்பயிற்சி கல்லூரியில் தாக்குதலணியில் பிளாட்டூன் லீடராக கடமையேற்று தன் களச் செயற்பாடுகளை தொடர்ந்தார். இன்னும் நேராக நிமிர்ந்து நடக்க முடியாத உடல்நிலையிலும் தளபதிகள் மற்றும் சக தோழர்களின் மிகுந்த ஊக்கத்தினால் வீரமைந்தன் தனது பிளாட்டூனை பயிற்சிகளிலும் பாதுகாப்பு கடமைகளிலும் திறமுடன் நடத்தினார். முகமாலை கண்டல் முன்னரங்கிலும் நாகர்கோவில் முன்னரங்கிலும் பாதுகாப்பு பணியில் சிறப்புடன் செயலாற்றினார். இந் நாட்களில் வீரமைந்தன் இடையறாது தொடர்ந்து நடந்து நடந்து திரிந்ததால் அவருடைய கால் அங்கவீனம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி நேராக நிமிர்ந்து நடக்கலானார். படையணியின் போர்ப் பயிற்சி ஆசிரியர்கள் தென்னரசன், பாவலன் முதலானோருடன் இணைந்து தனது அணியை பல்வேறு சிறப்பு பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுத்தினார். 2006 ம் ஆணடில் முகமாலை களமுனையில் யுத்தம் மூண்டபோது வீரமைந்தன், படையணியின் தாக்குதல் தளபதி அமுதாப்புடன் நாகர்கோவில் களமுனையில் நின்று செயற்பட்டார். பின்னர் சிறப்புத் தளபதி கோபித்தின் வழிநடத்தலில் கொம்பனி லீடராக பொறுப்பேற்று இளம் போராளிகளுக்கு சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதில் ஓய்வின்றி செயற்பட்டார். இந் நாட்களில் இவருடைய இணைபிரியா தோழன் செல்லக்கண்டு இவருடன் நின்று பல்வேறு கடமைகளில் திறமுடன் கடமையாற்றினார். 2007ம் ஆண்டு அமுதாப்புடன் இணைந்து கொம்பனி லீடராக செயற்பட்ட வீரமைந்தன், மன்னார் களமுனையில் சிறப்புத் தளபதி கோபித் அவர்களால் களமிறக்கப்பட்டார். இங்கு எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்தார். தாக்குதல் தளபதியாக வளர்ந்த வீரமைந்தன், தனது சக தோழர்கள் சோழநேயன், வாணன், செல்லக்கண்டு முதலானோருடன் இணைந்து சிறந்த பாதுகாப்பு வியூகங்களை உருவாக்கி எதிரியின் முன்னேற்றத்தை பல மாதங்கள் தடுத்து நிறுத்தினார். மன்னார் பெரிய தம்பனை பகுதியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பாரிய ஆக்கிரமிப்பு நகர்வை வீரமைந்தன் மிகுந்த மன உறுதியுடனும் அசாத்தியமான வீரத்துடனும் தடுத்துப் போராடி மாபெரும் வெற்றிகளைப் பெற்று எமது இயக்கத்தின் வீரமரபுக்கு பெருமை சேர்த்தார். 2008 ம் ஆண்டு துவக்கத்தில் பனங்காமம் களமுனையில் எதிரி பாரிய ஆக்கிரமிப்புக்கான தயார்படுத்தலை மேற்கொண்டதை தொடர்ந்து, அங்கு கடமையிலிருந்த தாக்குதல் தளபதி செங்கோலன் அவர்களுடன் இணைந்து பணியாற்ற வீரமைந்தன் பனங்காமத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கு உடனடியாகவே தனது அதிரடிச் செயற்பாடுகளைத் துவங்கிய வீரமைந்தன், செங்கோலனின் கட்டளையில் எமது முன்னரண் பகுதிகளைப் பாதுகாப்பதற்கான விரிவான திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தினார். படையணியின் மூத்த அணித் தலைவர்கள் ஜெயசீலன், பகலவன் (மாவைநம்பி ), படைய ரசன், புயலரசன், செல்லக்கண்டு, கரிகாலன் முதலானோருடன் இணைந்து பல முறியடிப்புத் தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தினார். ஏராளமான கிளைமோர்களையும் நிலக் கண்ணிவெடிகளையும் கையாண்டு, குறைந்தளவிலான போராளிகளைக் கொண்டு பெரும் பிரதேசத்தை பாதுகாத்து நின்றார். இவ்வாறானதொரு திட்டத்தின் படி எதிரிக்கு மிக நெருக்கமான பகுதியொன்றில், வீரமைந்தன் தனது குழுவுடன் கண்ணிவெடிகளை நிலைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, எதிரி திடீரென ஒரு நகர்வை மேற்கொண்டான். வீரமைந்தன் உடனடியாக முறியடிப்புத் தாக்குதலை தீரமுடன் நடத்தினர். இந்த வீரம்மிக்க தாக்குதலில் படுகாயமடைந்த வீரமைந்தன் அங்கே வீரச்சாவைத தழுவிக் கொண்டார. இளம் வயதிலேயே தாயக விடுதலை வேட்கையுடன் புலிகள் இயக்கத்தில் இணைந்த வீரமைந்தன், பலமுறை படுகாயங்களுக்கு உள்ளாகியும் இறுதிவரை உறுதியுடன் போராடினார். தனது சக போராளிகளிடம் மிகுந்த அன்பும் சகோதரனுக்குரிய பரிவும் கொண்ட வீரமைந்தன் சிறந்த போராளிக் கலைஞனாகவும் திகழ்ந்தார். இவருடைய சீரிய செயற்பாடுகளுக்காக எமது தேசியத் தலைவராலும், கட்டளைத் தளபதிகள் பால்ராஜ், ஜெயம் ஆகியோராலும் பாராட்டப் பெற்ற போராளியாக வீரமைந்தன் விளங்கினார். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த வீரமைந்தன் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேரன்பைப் பெற்ற போராளியாக திகழ்ந்தார். லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் புகழ்பூத்த தாக்குதல் தளபதிகளுள் ஒருவராக விளங்கிய லெப்டினன்ட் கேணல் வீரமைந்தன் அவர்களின் உற்சாகம் பொங்கும் வரலாறு தமிழினத்தின் வீரமரபாக என்றும் நிலைத்திருக்கும். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவுப்பகிர்வு: பெ.தமிழின்பன். https://www.thaarakam.com/news/113368
 16. யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் தலை தூக்கும் பகிடி வதை பகிடிவதை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவன் ஒருவன் தவறான முடிவு எடுத்து உயிரிழக்க முயற்சித்த நிலையில், அதிகாரிகளின் தலையீட்டால் மாணவன் காப்பாற்றப்பட்டான்.யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீட புதுமுகமாணவனை, மூத்த மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த புதுமுக மாணவன் தான் உயிரிழக்கப் போவதாக சக மாணவர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியுள்ளார். இந்தத் தகவலை சக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் விசாரணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டார்.விசாரணையின் போது கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பொறுப்பில் இருக்கும் மாணவனின் அதட்டலையடுத்து தான் பதவியிலிருந்து விலகுவதாக, புறொக்டர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரிக்கு நேற்றுமுன்தினம் மாலையே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பாலியல் பகிடிவதை விவகாரம் அடங்கும் முன்னரே மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-பல்கலைக்கழகத்தில்-16/
 17. கொல்லப்பட்ட மகனின் நீதிக்காக போராடிய தாயார் உயிரிழப்பு திருகோணமலை மாணவர் படுகொலை கடந்த 2006 ஜனவரி 2ஆம் திகதி மாலை இடம்பெற்றது. உயர்தர பரீட்சைக்கு பின்னர் பல்கலைகழகம் உள்ளிட்ட வாய்ப்புக்களை எதிர்நோக்கியிருந்த மாணவர்களே படையினரால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சுற்று வட்டத்தின் அருகில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.இந்நிலையில் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான மனோகரன் ரஜித்தர் என்ற மாணவனின் தாயார் உயிரிழந்துள்ளார்.தனது மகனின் படுகொலைக்கு உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் நீதி கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதற்கான நீதியை பெற்றுக்கொள்ளாமலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் குறித்த தாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பதின்நான்கு வருடங்களிற்கு முன் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலையில் மரணித்த மாணவன் மனோகரன் ரஜித்தர் அவர்களின் தாயார் திருமதி மனோகரனின் அகாலச் செய்தி குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். தம் சொந்தங்களிற்கு நடந்த அநீதிகளிற்கு நீண்ட கால போராட்டங்களின் பின்னும் நீதியை காணாமல் இயற்கை எய்திய எம்மக்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்வது மிகுந்த மனவேதனையை தருகின்றது.தனது மகனின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப்படுவதனை கண்டுகொள்ளாமல் திருமதி மனோகரன் அவர்கள் மரணித்தமை ஆழ்ந்த துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்த இழப்பினால் துயருற்றுள்ள வைத்தியர் மனோகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொல்லப்பட்ட ரஜித்தர் என்ற மாணவனின் தந்தையான வைத்தியர் மனோகரனும் அவரது மனைவியும் நீதி கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.ஆனால், இதற்கு இதுவரை காலமும் நீதி வழங்கப்படாத நிலையில் ரஜித்தரின் தாயார் காலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.(15) http://www.samakalam.com/செய்திகள்/கொல்லப்பட்ட-மகனின்-நீதிக/
 18. தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றம் சவேந்திர சில்வாவின் தடை குறித்து கூட்டமைப்பு இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூறவேண்டியவராகின்றார்.இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது .அத்துடன் தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக இராணுவ தளபதிக்கான அமெரிக்க தடையை நாம் காண்கிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.(15) http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-மக்களின்-நீதிக்கா-2/
 19. பிரதமரின் கருத்தை மறுதலிக்கும் கூட்டமைப்பு அதிகாரப் பகிர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ள கருத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுதலித்துள்ளது. 13 ஆம் திருத்தத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம், அதிகாரப் பகிர்வுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வம் காட்டவில்லை எனவும், மாறாக இலங்கையிலுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாத விடயங்களைக் கோருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது ‘தி ஹிந்து’-விற்கு தெரிவித்திருந்தார். எனினும், பிரதமரின் இந்த குற்றச்சாட்டினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முற்றாக மறுதலித்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான அனைத்து விடயங்களும் தமது தரப்பால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் இந்த கருத்து தொடர்பில் விரைவில் பதில் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். -(3) http://www.samakalam.com/செய்திகள்/பிரதமரின்-கருத்தை-மறுதலி/
 20. பகடிவதை: இனியாவது புனிதங்களை களைவோமா? பல்கலைக்கழகங்கள் பற்றி, எமது சமூகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ள புனிதங்கள் பல. அவையே, பல்கலைக்கழக சமூகத்தை, அனைத்துக்கும் மேலானதாக, கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாக மாற்றியுள்ளன. ‘கற்றோருக்கு எல்லாம் தெரியும்’ என்ற மனோநிலை, தமிழ்ச் சமூகத்தை ஆண்டாண்டு காலமாகப் பீடித்த நோய். அது, படித்தவர்கள் அரசியல் செய்தால், உரிமைகள் கிடைக்கும் என்று நம்பி, வாக்களிக்கத் தொடங்கிய காலம் முதல் இருந்து வரும் ஒன்று. ‘அப்புக்காத்து’ அரசியலின் அடிப்படையும் இதுதான். இன்றுவரை, பல்கலைக்கழகங்களை அதுசார்ந்த சமூகங்களைக் கேள்வி கேட்காத, விமர்சிக்காத ஒரு சமூகமாக, நாம் இருந்து வந்திருக்கிறோம். ஆனால், எமது சமூகத்தில் புரையோடிப் போயுள்ள அனைத்துத் தீவினைகளின் இருப்பிடங்களாகப் பல்கலைக்கழகங்களே திகழ்கின்றன. இதன் ஒரு பகுதியே பகடிவதை. இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. வெறுமனே குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதன் மூலமோ, அரசாங்கம் சொல்கிறபடி ஆணைக்குழுக்கள் அமைப்பதன் மூலமோ, எதுவும் மாறப்போவதில்லை. ஏனெனில், இதற்கு முன்னும், சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; தண்டனைகள் வழங்கப்பட்டுள்ள. பகடிவதைக்கு எதிரான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால், பகடிவதை இன்னும் மோசமான வடிவங்களில் நடந்தேறுகிறது. இன்றுவரை, பல்கலைக்கழகங்களில் பதவிகளில் உள்ளவர்களிடம் வினவினால், பெரும்பாலானோர் சொல்கின்ற பதில், “இப்போது பல்கலைக்கழகங்களில் பகடிவதை இல்லை” என்பதே. “உங்களது பீடத்தில் பகடிவதை நடக்கிறது” என்று, ஒரு பீடாதிபதிக்கோ, துறைத்தலைவருக்கோ சொன்னால், உங்களுக்குக் கிடைக்கும் பதில், “இல்லை, அப்படி எதுவும் நடப்பதில்லை” என்பதே ஆகும். இது எதைக் காட்டுகிறது என்றால், பகடிவதை நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கான அங்கிகாரமும் ஒப்புதலும் நிர்வாக மட்டங்களில், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் போன்ற மட்டங்களில் இருக்கிறது. இன்றும், பல்கலைக்கழகங்களில் பகடிவதைக்கு எதிரான குழுவைச் (anti-raggers) சேர்ந்தவர்கள், பழிவாங்கப்படுகிறார்கள். முதலாம் ஆண்டு மாணவர்கள் பலர், அவர்தம் ஆசிரியர்களாலேயே பகடிவதை நோக்கித் தள்ளப்படுவதும் நடக்கிறது. பகடிவதையை அறிக்கையிடும் முறையில், இரகசியத் தன்மை பேணப்படுவதில்லை. அதற்கான வாய்ப்புகள் அற்ற ஒரு முறையே நடைமுறையில் உள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்கள், திறமையின் அடிப்படையிலன்றி, ‘ஜால்ரா’வின் அடிப்படையில் அமைந்துவிட்டதன் பின்னணியில், புரையோடிப்போன பல்கலைக்கழகக் கல்வியின், கேடுகெட்ட விளைவுகளில் ஒன்றே, இந்தப் பகடிவதை. தங்கள் பதவிகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவும் போராடும், பொதுவெளியில் கருத்துரைக்கும் அத்தனை புத்திஜீவிகளும், இப்போது மௌனம் காக்கிறார்கள். கருத்துப் போராளிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எல்லோரும் அமைதியைக் கடைப்பிடிக்கிறார்கள். சில நாள்களுக்கு முன்னர், பகடிவதைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வெகுசிலரே. இன்னமும் வாய்மூடி மௌனம் காக்கவே, யாழ்ப்பாணச் சமூகம் விரும்புகிறது. பல்கலைக்கழகத்தின் மீது கட்டப்பட்டுள்ள பரிவட்டத்தைக் கழற்றியெடுக்கவோ, புனிதங்களைக் களையவோ யாழ்ப்பாணச் சமூகம் இன்னமும் தயாரில்லை. ஆனால், அந்தப் பல்கலைக்கழக சமூகத்தின் யோக்கியதை, சமூக வலைத்தளங்களின் ஊடு, ‘சந்தி சிரிக்கிறது’. இதையும், கேள்விகளற்றுச் சமூகம் கடந்து போகுமாயின், அதை வெட்கமற்ற, சமூக அக்கறையற்ற, சுயநலம் பிடித்த, கீழ்த்தரமான செயல்களை அங்கிகரிக்கின்ற ஒன்றாகவே பார்க்கத் தோன்றுகிறது. புனிதங்களால் விளைந்த பயன் யாதெனில், அறிவு பரவலாகாமல் பார்த்துக் கொண்டதும் அறிவின் பெயரால் அதிகாரத்தையும் அகங்காரத்தையும் ஒரு கும்பல் செலுத்தியதுமே ஆகும். தமிழ்ச் சமூகம், இவற்றால் இழந்தது அதிகம். இந்தப் பகடிவதை, எங்கள் எதிர்காலக் குழந்தைகளின் கனவை மட்டுமல்ல வாழ்க்கையையும் கெடுக்கிறது. குற்றங்களைக் குற்றமென உணராத, ஒரு கற்ற சமூகத்தால் விளைவது, கேடன்றி நற்பலனல்ல. இனியாவது, எமது குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காய், பல்கலைக்கழக சமூகம் பற்றிய புனிதங்களைக் களைய வேண்டும். அவர்கள், கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. சமூகத்துக்குப் பயனில்லாத கல்வியாலும் கற்பித்தலாலும் விளையும் பயன் ஏதுமில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பகடிவதை-இனியாவது-புனிதங்களை-களைவோமா/91-245457
 21. தமிழர் பிரச்சினை; கைவிடுகிறதா இந்தியா? கே. சஞ்சயன் / 2020 பெப்ரவரி 14 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறுகிய கால இடைவெளிக்குள், இரண்டாவது தடவையாக தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் கௌரவமான, நீதியான, சமத்துவமான தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என்பதை இலங்கைத் தலைவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, முதல் முறையாக இந்தக் கருத்தை வலியுறுத்தியிருந்த நரேந்திர மோடி, கடந்த வாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடமும் அதனையே கூறியிருக்கிறார். இரண்டு நாடுகளினதும் பிரதமர்கள் சந்தித்துப் பேசிய பின்னர், கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோதே, தமிழ் மக்களின் அபிலாசைகளை இலங்கை நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்பதாக, மோடி குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதே ஊடகச் சந்திப்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு பற்றி எதுவும் கூறவில்லை. இந்தியப் பிரதமரின் கருத்துக்கான பதிலையும் அவர் வெளிப்படுத்தவில்லை. கடந்த நவம்பர் மாதம், புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபயவிடமும், இதே வேண்டுகோளை, பகிரங்கமாக விடுத்திருந்தார் மோடி. அவரும் கூட, அந்தச் சந்தர்ப்பத்தில் மௌனமாகத் தான் இருந்து விட்டுச் சென்றிருந்தார். எனினும், புதுடெல்லியில் இந்திய ஊடகங்கள் சிலவற்றுக்கு அளித்த தனிப்பட்ட செவ்விகளில், 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறியிருந்தார். மஹிந்த ராஜபக்‌ஷ, புதுடெல்லி ஊடகங்களுக்கு அளித்த செவ்விகளில், அவ்வாறான கருத்தை வெளியிடாத போதும், 13 ஆவது திருத்தச்சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் தான் இருக்கிறது என்றும், ஆனால், வடக்கு மாகாண சபை தான் அதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது, வடக்கு மாகாண சபைக்கு அளிக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். அவ்வாறு எந்த நிதியும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என்று, விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த போதும், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னரும், பல தடவைகள் தெரிவித்திருந்தார். ஆனாலும், மஹிந்த அந்தக் குற்றச்சாட்டை, புதுடெல்லி வரைக்கும் கொண்டு சென்று, தமது பக்கத்தில் நியாயம் இருப்பதாகக் காட்டிக் கொள்ள முனைந்திருக்கிறார். 13ஆவது திருத்தச்சட்டம், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது என்று அவர் கூறியிருப்பது உண்மையே என்றாலும், மாகாண சபைகள் அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தவறி விட்டதாக மஹிந்த கூறியிருப்பது சரியானது தானா? 13 ஆவது திருத்தச்சட்டத்தில் காணி அதிகாரங்களும் பொலிஸ் அதிகாரங்களும் கூட, மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த இரண்டு அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு எந்தவோர் அரசாங்கமும் வழங்கவில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொடுக்க முடியாது என்று, எல்லாச் சிங்களத் தலைவர்களும் கூறி விட்டனர். ஜனாதிபதி கோட்டாபய கூட, கடந்த நவம்பர் மாதம் ‘தி ஹிந்து’ உள்ளிட்ட இந்திய ஊடகங்களுக்கு, புதுடெல்லியில் அளித்திருந்த செவ்விகளில், “மாகாண சபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க முடியாது. 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது” என்றும் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். இவ்வாறான நிலையில், “இப்போதும் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் தான் இருக்கிறது; அதனை மாகாண சபைகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருப்பது, பித்தலாட்டமாகவே உள்ளது. “13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது, இந்தியாவின் நிலைப்பாடு” என்று நரேந்திர மோடி குறிப்பிட்டிருந்தாலும், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அவ்வாறான ஒரு நடவடிக்கையை எடுக்கப் போவதில்லை. ஜனாதிபதி கோட்டாபய அதனைத் தெளிவாகக் கூறியிருந்தார். ஆனால், மகிந்த ராஜபக்‌ஷ அதனை நேரடியாகக் கூறாமல், ஏற்கெனவே 13 ஆவது திருத்தம் நடைமுறையில் தான் இருக்கிறது என்று புரட்டிப் போட முனைந்திருக்கிறார். பிரதமர் மோடியும் சரி, அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கும் சரி, இலங்கைத் தலைவர்கள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் , இலங்கைத் தமிழர்களுக்கு கௌரவமான நீதியான, சமத்துவமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதைக் கூறி வந்திருக்கின்றனர்.ஆனால், அதனை எந்தவொரு சிங்களத் தலைவரும் ஏற்றுக்கொண்டதும் இல்லை; நடைமுறைப்படுத்த முயன்றதும் இல்லை. புதுடெல்லியில் பகிரங்கமாக, இந்தியப் பிரதமரின் வலியுறுத்தலுக்குச் சாதகமாகப் பதிலளித்தால், சிங்கள மக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்றும், அதனால் பொதுத்தேர்தலில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்காமல் போகும் என்றும் ஜனாதிபதியும் பிரதமரும் கருதிக் கொண்டிருக்கலாம் என்று சமாளிப்பவர்களும் இருக்கிறார்கள். தேர்தல் ஆதாயத்துக்காக அவ்வாறு நடந்து கொள்வது இயல்பு தான். ஆனால், சிங்களத் தலைவர்கள் அனைவரும், தமிழர் பிரச்சினை விடயத்தில், எப்போதுமே பிடிகொடுக்காமல் தான் இருந்து வருகிறார்கள். எனவே, மோடியின் வலியுறுத்தலை அவர்கள், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கருத முடியும். அதேவேளை, மோடி, தமிழர்களின் அபிலாசைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருப்பினும், அவருக்கு தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளதா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது. மூத்த இந்திய ஊடகவியலாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பி.பி.சிக்கு அளித்திருந்த செவ்வி ஒன்றில், “இலங்கைத் தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வு பற்றி, இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தாலும், அவருக்கு தமிழர் பிரச்சினையில் அக்கறையில்லை.அவ்வாறாக அக்கறை கொண்டிருந்தால், குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இலங்கைத் தமிழர்களையும் உள்ளடக்கி இருந்திருப்பார்” என, அவர் நியாயப்படுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் மீது இந்தியாவுக்கோ, இந்தியப் பிரதமருக்கோ முழுமையான அக்கறை இருந்திருந்தால், 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதனை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஆனால், இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளையும் ஒத்துழைப்புகளையும் இந்தியா எதிர்பார்ப்பதால், அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்க முடியாத நிலையில் புதுடெல்லி இருக்கிறது. சீனத் தலையீடுகளில் இருந்து இலங்கையைத் தமது பக்கம் திருப்பிக் கொள்வதற்கு, இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. அதற்காகத் தான் 450 மில்லியன் டொலர் கடனுதவியையும் அறிவித்திருக்கிறது. இலங்கையுடன் நெருக்கமான பாதுகாப்பு, பொருளாதார உறவுகளைப் பேண இந்தியா விரும்புகின்ற நிலையில், கொழும்புக்கு அழுத்தங்களைக் கொடுக்க முயன்றால், அந்த உறவுகளில் குழப்பம் ஏற்பட்டு விடும் என்பது புதுடெல்லியின் கணிப்பு. இந்தியாவுடன் இருந்து வந்த இடைவெளியும் அவநம்பிக்கையும் ராஜபக்‌ஷவினரின் புதிய அரசாங்கத்துக்குச் சவாலாகவே இருந்து வந்தது. சீன துரும்புச்சீட்டை அடிப்படையாகக் கொண்டு, இந்தியா முடிவுகளை எடுக்கத் தலைப்பட்டுள்ளதால், அது கொழும்புக்கு சாதகமானதாகக் காணப்படுகிறது. இந்தியாவின் இந்தப் பலவீனத்தை, கொழும்பு அரசாங்கமும் நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் தமது பலத்தை வைத்து முடிவுகளை எடுக்கவில்லை. பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களைள எடுத்திருக்கின்றன. பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்தியப் பயணமும் அவ்வாறான பலவீனங்களைக் கடந்து செல்வதற்கான ஒன்றாகத் தான் கருதப்படுகிறது. அதைவிட, தனது பயணத்தின் போது அவர், இந்தியாவிடம் பெறப்பட்ட கடன்தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு மூன்று ஆண்டுகள் காலஅவகாசம் கோரியிருக்கிறார். இந்தியாவை வைத்து ஜப்பான், சீனா போன்ற நாடுகளிடம் பெறப்பட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தும் காலஅவகாசத்தை நீடித்துக் கொள்ள பிரதமர் மஹிந்த முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.இது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை, இந்திய, இலங்கை அரசுகள் இரண்டுக்கும் இப்போதைய நிலையில், தமிழர் பிரச்சினை முக்கியமல்ல. அதனை இரண்டு தலைவர்களும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழர்-பிரச்சினை-கைவிடுகிறதா-இந்தியா/91-245477
 22. உதட்டில் ஐக்கியம்; மனதில் குரோதம் -இலட்சுமணன் தமிழ்த் தேசிய அரசியல் சூழ்நிலையானது, மிகவும் மோசமானதொரு வரலாற்றுச் சிக்கலுக்குள் சிக்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசியத்தின் அரசியல் விடுதலை தொடர்பாக, கடந்த 22 ஆண்டுகளாக அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தி, தனது உரிமையை நிலைநிறுத்தப் போராடி இருக்கிறது தமிழினம். இத்தகைய போராட்டச் சூழலில், எண்ணங்களில் தோன்றாததும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாத, ‘சுயநல அபிலாசைகள்’ தமிழ் அரசியலில் இன்று முனைப்புப் பெற்றுள்ளன. தமிழரின் அரசியல் விடுதலை தொடர்பாக, பல்வேறு துயர்நிறைந்த அனுபவங்களை, வரலாற்று ரீதியாக அனுபவித்த இனத்துக்குச் சாபக்கேடானதோர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றுள்ளது. இந்தத் தோற்றுவாய், தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையின் பேரில், அதன் தியாகங்களையும் இழப்புகளையும் கொச்சைப்படுத்தும் இச்சை அரசியலின் விளைவே ஆகும். தமிழர் தாயகம், உரிமை, அபிலாசை, தீர்வு என்ற வெற்றுக் கோசங்களுடன், தமது நாடாளுமன்றக் கனவையும் அதன் சுகபோகங்களையும் அனுபவிப்பதற்கு, பலம் பொருந்திய ஓர் ஆயுதமாக, இந்த வெற்றுக் கோச அரசியல், தமிழ் மக்களிடையே வலம் வருகிறது. தமிழரின் ஐக்கியத்தையும் அதன் அபிலாசைகளையும் அதன் பிரதிநிதித்துவத்தையும் சிதறடிக்கும் நோக்கில், எவ்வித அரசியல் ஞானமும் பகுத்தறிவும் பொதுஅறிவும் அற்ற, நடைப்பிணங்களாகப் நாடாளுமன்றப் பதவி வெறியுடன் இவை வலம்வருகின்றன. இந்த வகையில், தமிழரின் ஐக்கியம் தொடர்பாக, உதட்டளவில் பேசிக்கொண்டு, மனதளவில் ஒருவரை ஒருவர் ‘பாம்பும் கீரியும் போல்’ பார்க்கின்றனர். போதாக்குறைக்கு, தங்கள் தங்கள் வசதிக்கேற்ப, ‘தடியெடுத்தவன் எல்லாம், தண்டக்காரன் போல்’, ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுகின்றது. அதுவும் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியம், தமிழ் ஐக்கியம், தமிழர் விடுதலை, தமிழ்க் கூட்டமைப்பு, தமிழர் முற்போக்கு, தமிழர் கூட்டணி என, தமிழையும் தமிழரையும் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது. இதுமட்டுமல்ல, தமிழர் ஐக்கியத்துக்காகவும் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றவும் தமிழ்த் தேசிய விடுதலையை வென்றெடுக்கவும் எனவும் பல்வேறு கூப்பாடுகள், கோசங்கள், முழக்கங்களுடன் பல்வேறு கட்சிகள் வடக்கிலும் கிழக்கிலும் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு கட்சிகள் ஆரம்பிக்கப்படுவதன் தத்துவம் யாது என்பது, இக்கட்சிகளை ஆரம்பிப்போருக்கோ, இக்கட்சிகளின் கொள்கை வகுப்பாளர்களுக்கோ புரியாது; புரியப்போவதும் இல்லை. ஏனெனில், அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், தமிழர்களின் வாக்குப் பலத்தால், தாம் நாடாளுமன்றப் பிரதிநிதியாக வந்தால் போதும் என்பதுதான். ஆயினும் அவ்வாறு வருவதற்குத் தனித்துச் செயற்பட முடியாது. எனவே, கூட்டுகள் அவசியம். எத்தனை கூட்டுச் சேர்த்தாலும், இந்தக் கூட்டுகள் சாதிக்க நினைப்பது, தமிழர் ஐக்கியத்தையும் தமிழ்த் தேசிய விடுதலையையும் அல்ல. மாறாக, அவர்கள் நாடாளுமன்ற ஆட்சி, அதிகாரம், சலுகைகள் போன்றவற்றை அனுபவிப்பதற்கே ஆகும். இதனால்தான், ஆயுதம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியலை, தமது வியாபார உத்தியாக, இவர்கள் கையில் எடுத்துள்ளார்கள். தமிழர்களின் இருப்பைக் காப்பாற்றும் பொருட்டும், இழப்புகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டும் செல்ல வேண்டியதும் தேட வேண்டியதும் எத்தனையோ பணிகளாகக் காத்துக்கிடக்க, அதற்காகக் குரல் கொடுக்காத, அந்தச் சூழலைத் துவம்சம் செய்யும், தமிழ் மக்களின் துயரங்களில் ஒருதுளியேனும் பங்கு எடுக்காத ‘பச்சோந்திகள்’, இன்று பேரினவாத கைக்கூலிகளுடனும் நேரடி, மறைமுக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, தமிழரின் அரசியல் களத்தில் உலாவருகின்றனர். உண்மையில், தமிழ் அரசியலில் தமிழ் மக்கள், ‘மேய்ப்பன்’ அற்ற மந்தைகளாக அல்லற்படுகின்றனர். எவரை நம்புவது, எவரை நம்பக் கூடாது என்ற நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு, இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் நொருங்குண்டு போயுள்ளது. தமிழ்த் தேசிய இனத்தின் மேய்ப்பர்களாகத் தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்திக் கொள்ளும் தமிழ் அரசியல் கட்சிகள், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றத் தம்மோடு இணையும் படி, ஏட்டிக்குப் போட்டியாக, உதட்டளவில் ஐக்கியம் பேசி, மனதளவில் கழுத்தறுப்புக்கு கங்கணம் கட்டி நிற்கின்றன. உண்மையில், இவர்கள் எல்லோருக்கும் நாடாளுமன்றக் கனவோ, சுயநலமோ, வியாபார நோக்கோ, சொகுசு வாழ்க்கையோ தேவையில்லை என்றால், தமிழினத்தின் உரிமைகளையும் அபிலாசைகளையும்தான் வென்றெடுக்கும் ஒரே நோக்கம் இருந்தால், ஏன் இத்தனை தமிழ்க் கட்சிகள் உருவாக்கப்பட வேண்டும்? எல்லோருடைய குறிக்கோளும், தமிழ்த் தேசிய அரசின்பால் இருந்தால், ஏன் இந்த மோதல்? எல்லோரும் ஓர் அணியாகத் தேர்தலில் போட்டியிடலாமே! உண்மையில், தமிழ்க் கட்சிகளும் இதன் தலைமைகளும் தமிழ் மக்கள் முன்வைக்கும் போலிக் கோசங்கள் இவைகளாகும். பதவி வெறியும் ஆட்சி அதிகார ஆசையும் இவர்களை, ஒருபோதும் ஓரணியில் ஒன்று சேரவிடாது. ஏனெனில், ஒவ்வொரு கூட்டிலும் இருப்பவர்களுக்கு இடையில், ஆசனப் பங்கீட்டில் மோதல், ஒரு கட்சியில் பிரதிநிதித்துவம் பெற ஆளுக்கு ஆள் போட்டி, வாக்குபலம், பணபலம், ஆட்சிப்பலம் இவை பற்றிய கணிப்புகள், பேரம்பேசல்கள், கழுத்தறுப்புகள், குழிபறிப்புகள், முதுகில் குத்துதல்கள், காலை வாருதல்கள் என எண்ணிக்கையற்ற படாடோபகாரச் செயற்பாடுகள், தமிழ்த் தேசிய அரசியல் என்ற பெயரில், வடக்கிலும் கிழக்கிலும் விசேடமாகத் தமிழர் பகுதிகளில் அரங்கேறி வருகின்றன. ஏனெனில், இவர்களை எவருமே தமிழையும் தமிழ் இனத்தையும் அதன் அபிலாசைகளையும் நேசிக்கவில்லை. தமிழர் விடுதலைப் போராட்டம் பற்றியோ, அதன் அரசியல் வரலாறுகள் படிப்பினைகள் பற்றியோ அதிகம் அறியாதவர்களே இவர்கள். இவர்கள் அறிந்ததெல்லாம், நாடாளுமன்றம் சென்றால் கிடைக்கும் அனுகூலங்களைப் பற்றித்தான். உண்மையில், தமிழர் ஐக்கியத்தில் கரிசனை இருந்தால், “இத்தனை தமிழ்க் கட்சிகள் எதற்கு? இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே, எங்கோ மறைந்தனர் எம் எதிரிகள்” என்ற கோசம் நீறுபூத்த நெருப்பாக இருக்க, அந்த நீற்றில் சுழி ஓடுகிறார்கள் நம் அரசியல் எஜமானர்கள். இங்குள்ள கூட்டுகளுக்கும் இக்கூட்டுகளில் உள்ள கட்சிகளுக்கும் ஆசனப் பங்கீடே ஒருதறிகெட்ட பிரச்சினையாகப் பூதாகரம் பெற்றுள்ளது. இதன்போது, இத்தனை கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் சுயநல நோக்கங்கள், ஒரு கட்சியில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்து , எவ்வாறு ஈடேறப்போகிறது. எனவே, தமிழர் ஐக்கியம் என்பது, கலைந்து போன கனவே ஆகும். தமிழர் பிரதிநிதித்துவம் என்பதும் வாய் பேச்சே ஆகும். தமிழர் உரிமைகளையும் அபிலாசைகளையும் அதிபற்றிய தீர்வும் எமது வரலாற்றில் கனாக்காணும் காலங்களே. தமிழினம் கற்பனையும் கனவும் கண்டு கொண்டு, வாழ்வதற்குப் பிறந்த பாவப்பட்ட இனமாகிப் போயுள்ளது. ஏனெனில், தமிழர் தம் எஜமானர்களாகத் தம்மைத் தாமே ஏக பிரதிநிதிகளாகப் பிரகடனப்படுத்தும் இந்த போலி வேடாதாரிகள் இருக்கும் வரை, தமிழ்த் தேசியத்தின் தலைவிதியை மாற்ற முடியாது. எனவே, இங்கு தமிழர் தம் ஐக்கியம் என்பதற்குள், உதட்டளவிலும் மனதளவிலும் குழிபறிப்பும் குத்து வெட்டுகளுமே எஞ்சி இருக்கும். இந்த இருப்புகளில் இருந்து, உண்மை விடுதலை வேண்டுமாக இருந்தால், தமிழ் மக்கள் நின்று நிதானித்து, தாம் தொடர்ந்து பயணித்த பாதையைச் செப்பனிட்டு, முன்னோக்கி நகர வேண்டும். கானல் நீரையெல்லாம், தமிழர் விடுதலைத் தாகத்தைத் தீர்க்கும் நீராக நினைத்து விடக்கூடாது. தமிழர் தம் அபிலாசைகள், பயணித்த ஒரே பாதையில் தீர்க்கதரிசனத்துடன் தீயதை அகற்றி, ஓரணியாய்ப் பயணிக்க, புல்லுருவிகளும் மழைக் காளான்களும் முளைத்திட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு, நிராகரிக்காதுவிடின் இம்முறை தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவமும் இல்லை; தமிழர் அபிலாசைகளும் நிறைவேறப் போவதும் இல்லை; தமிழருக்குத் தீர்வுமில்லை. அரசியல் அநாதைகளாகத் தமிழர் தமது அரசியல் பயணத்தை மீண்டும் பூச்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எனவே ஐக்கியத்தின் பேரில் ஏமாற்ற வருபவர்களிடம், தமிழர் ஏமாறாது விட்டால், அதுவே போதும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உதட்டில்-ஐக்கியம்-மனதில்-குரோதம்/91-245458
 23. கீனி மீனி: இலங்கையில் பிரித்தானிய கூலிப்படைகள் உண்மை வலியது; அதலபாதாளத்தில் ஒளித்து வைத்தாலும், உண்மை ஒருநாள் வௌிவந்தே தீரும். உண்மைகள் வெளியாகிற போது, பலவித உணர்வுகளை அது ஏற்படுத்தும். சங்கடம், துரோகம், வேதனை, அதிர்ச்சி போன்றவற்றை, வெளிக்கொணரப்பட்ட உண்மை உருவாக்கிவிடும். இது, உண்மையின் வலிமையையும் ஆழத்தையும் முக்கியத்துவத்தையும் எமக்குப் புரிய வைக்கின்றன. பெரும்பாலும், நீண்ட முயற்சியின் பின்னர் வெளிவரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ள, ‘பொதுப்புத்தி’ மனநிலை தயாராக இருப்பதில்லை. “இப்படி நடந்திருக்காது” என்ற ஆறுதலுடன், அப்பால் கடந்து போகிறோம். உண்மைகள் கொடியன; அவை, எமது நம்பிக்கைகளில் தீ வைப்பன; எதிர்பார்ப்புகளில் கல்லெறிவன. ‘கீனி மீனி’ என்ற தலைப்பே, ஒரு மாதிரியாக இருக்கிறது என்று, நீங்கள் நினைக்கக்கூடும். இலங்கை, ஓமான், நிக்கரக்குவா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை இணைக்கும் ‘கண்ணி’, இந்தக் ‘கீனி மீனி’. ‘கீனி மீனி’ என்றால் என்ன, இது பற்றி இப்போது ஏன் பேச வேண்டும் என்று, நீங்கள் கேட்கலாம்? இது கொஞ்சம் பழைய கதை. பழைய கதை மட்டுந்தான் என்பதையும், கோடிட்டுச் சொல்ல விரும்புகிறேன். கடந்த வாரம், மிகவும் சுவாரஷ்யமான புத்தகமொன்று வெளிவந்தது. அதன் தலைப்பு ‘கீனி மீனி: போர்க் குற்றங்களில் இருந்து தப்பிய பிரித்தானிய கூலிப்படைகள்’ (Keenie Meenie: The British Mercenaries Who Got Away with War Crimes). பிரித்தானியாவில் முக்கியமான புலனாய்வு ஊடகவியலாளர்களில் ஒருவரான பில் மில்லர் (Phil Miller) எழுதிய இப்புத்தகம், இலங்கை வரலாற்றில், மறைக்கப்பட்ட சில பக்கங்களை வெளிக்கொணர்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, 1970-80களில் பிரித்தானியா, தனது முன்னாள் கொலனிகளில் எவ்வாறு இயங்கியது என்பதன் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை, சில உதாரணங்களுடன் காட்ட முற்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், ‘கீனி மீனி’ பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவுடனும் முழுமையாக ஆசிர்வாதத்துடனும் இயங்கிய ஒரு தனியார் நிறுவனம் ஆகும். சரியாகச் சொல்வதாயின், கூலிப்படை; ஏனெனில், அவர்கள் செய்த காரியங்கள், அந்த மாதிரி. அவை, எந்த மாதிரி என்று பார்ப்பதற்கு முன்னர் .....! ‘கீனி மீனி’யின் கதைக்கான முன்கதை இரண்டாம் உலகப் போரின் முடிவின் பின்னர், சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தில், சூரியன் அஸ்தமிக்கத் தொடங்கியது. ஆம், பிரித்தானியக் கொலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள், ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. தனது முன்னாள் கொலனிகள் மீதான காதலால், (செல்வத்தின் மீதான) பொம்மை அரசாங்கங்களை நிறுவியோ, வேறு வழிகளிலோ கட்டுப்பாட்டை வைத்திருக்க பிரித்தானியா முயன்றது. இதை நேரடியாகச் செய்வதற்குத் தடைகள் இருந்தன. விடுதலை அடைந்த சுதந்திர நாடுகளில் தலையிடுவது, நன்மதிப்புடைய செயலாக இருக்காது; தப்பித்தவறி, யாராவது நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினால், பதில் சொல்லியாக வேண்டும்; ஊடகங்களின் ஊடாகக் கெட்ட பெயருக்கு ஆளாகினால், ஆட்சியை இழக்க நேரிடும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அனைத்தையும் மறைமுகமாகச் செய்ய, பிரித்தானிய விரும்பியது. இக்காலத்தில், எகிப்தில் ஜனாதிபதியாகப் பதவிவகித்த கமல் அப்துல் நாசார், அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்; பிரித்தானிய வர்த்தக நலன்களுக்குப் பிரச்சினை கொடுத்துக் கொண்டிருந்தார். இதையடுத்து, பிரித்தானிய சிறப்பு விமானச் சேவையில் கொமாண்டராகப் பணியாற்றிய கேர்ணல் ஜிம் ஜோன்ஸன் தலைமையிலான கூலிப்படை, 1960களில் ஜெமனில் நாசருக்கு எதிராகப் போரிட்டது. நாசருக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்திய பின்னர், இந்தக் கூலிப்படை நாடு திரும்பியது. இது, பிரித்தானிய இராணுவ, அரசியல் உயரடுக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான செயற்பாடுகள், அரசாங்கத்தைப் பொறுப்பில் இருந்து அகற்றுவதால், இதற்கான கணிசமான ஆதரவு அரசாங்கத்தில் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, 1970களில் ஜோன்சனால் Keenie Meenie Services (KMS) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இது, பிரித்தானியா விரும்புகின்ற வேலைகளை, பிரித்தானியாவுக்காகச் செய்து முடித்தது. 1980களில் இது, மிகப்பெரிய இலாபம் தருகிற வியாபாரமானது. 1975ஆம் ஆண்டு, முன்னாள் இராணுவ வீரர்கள் நால்வரினால் ‘கீனி மீனி’ உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம், ஆர்ஜென்டீனாவின் தலைநகர் பொர்ன்ஸ் அய்ரிஸில் இருந்த, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கியது. இவ்வாறு தான், இந்த நிறுவனம் பிரித்தானியப் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை சார்ந்த வட்டாரங்களில் அறிமுகமானது. பிரித்தானியப் பிரதமர் மார்க்கிரட் தச்சரின் அளவு கடந்த தனியார் மயமாக்கல், சுதந்திர சந்தை ஆகிய கொள்கைகளும் அமெரிக்க ஜனாபதி ரொனால்ட் றீகனின் கொம்யூனிசத்துக்கு எதிரான நிலைப்பாடும் இணைந்து, இவ்வகையான நிறுவனங்களுக்குச் செங்கம்பளம் விரித்தன. இந்நிறுவனங்கள், பிரதானமாக இடதுசாரி ஆட்சிகளை அகற்றுவதற்கு வேலை செய்தன. அந்நாடுகளில், நாசகார வேலைகளில் ஈடுபடுவது, வலதுசாரி சர்வாதிகார ஆட்சிகளை நிறுவுவதும் அவற்றை நிலைபெற உதவிகள் செய்வதும் போன்ற பணிகளில் ஈடுபட்டன. சரி, ‘கீனி மீனி’ என்ற பெயர், ஏன் வைக்கப்பட்டது என்பதற்குப் பல கதைகளும் கிளைக் கதைகளும் உண்டு. இவற்றை, இந்தப் புத்தகத்தில் பில் மில்லர் அழகாக எடுத்துரைக்கிறார். ஓமான் - நிக்கரகுவா - இலங்கை ஓமானில் புரட்சிகர விடுதலைப் போராட்ட இயக்கம் ஒன்று, 1960களில் வீரியத்துடன் இயங்கத் தொடங்கியது. எகிப்தின் நாசரின் ஆதரவு, ஜெமன் உள்ளிட்ட நாடுகளில், எழுச்சிபெற்ற இடதுசாரிச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக, ஓமானில் டொவார் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இந்தப் புரட்சியில் ஈடுபட்டனர். அவர்கள், ஓமானில் சுல்தான் செயிட் பின் தைமூரின் ஆட்சியில் இருந்து பிரிந்து, தனியானதும் சுதந்திரமானதுமான ஆட்சியைக் கோரினர். இது பிரித்தானியாவுக்கு உவப்புடையதாக இருக்கவில்லை. 1962 முதல், ஆட்சிக்குக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்தப் போராளிகள், பிரித்தானியாவின் நலன்களில் ஆப்பு வைத்து விடுவார்கள் என்று, பிரித்தானியா அஞ்சியது. பிரித்தானிய இராணுவக் கல்லூரியில் பயின்ற இளவரசர் கபூஸ் பின் சைட்டின் உதவியுடன், சதிப்புரட்சி அரங்கேறியது. பிரித்தானிய இராணுவ வீரர்களின் உதவியுடன் மகன், தந்தையைப் பதவியை விட்டு அகற்றினார். இந்த மகன்தான், அண்மையில் காலமான ஓமானிய சுல்தான். புதிய சுல்தான், தனக்கெனச் சிறப்புப் படைகளை உருவாக்க, ‘கீனி மீனி’யை நாடினார். அவர்களின் உதவியுடன், கிளர்ச்சி அடக்கப்பட்டது. தனது தந்தைக்கு நேர்ந்தது, தனக்கும் நேரா வண்ணம், தனக்கெனப் பிரத்தியேகப் படைகளை, ‘கீனி மீனி’யின் உதவியுடன் உருவாக்கினார். நிக்கரக்குவாவில் ஆட்சிக்கு வந்த சன்டனிஸ்டாக்களுக்கு எதிரான போரில், நேரடியாக ஈடுபட விரும்பாத பிரித்தானியா, ‘கீனி மீனி’யை உதவிக்கு நாடியது. அவர்கள், நிக்கரக்குவாவில் நேரடியாகப் போரில் ஈடுபட்டார்கள். வைத்தியசாலைகள் மீது குண்டு போடுவதில் தொடங்கி, அனைத்து அட்டூழியங்களையும் செய்தார்கள். நூலின் பல பக்கங்களில், இவை குறித்த சான்றுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ‘கீனி மீனி’ இனி, இலங்கைக்கு வருவோம். 1980ஆம் ஆண்டு முதல், ஜெயவர்தனவின் அரசாங்கம், பிரித்தானியாவிடம் இராணுவப் பயிற்சி உதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்தது. ஆனால், 1983ஆம் ஆண்டு, கலவரத்தைத் தொடர்ந்து, நேரடியான இராணுவ உதவிக்கு, பிரித்தானியா பின்னடித்தது. இதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசாங்கத்தின் பரிந்துரையில், ‘கீனி மீனி’ நிறுவனம் இலங்கையின் பாதுகாப்பு உதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டது. ‘கீனி மீனி’யே இலங்கையில், விசேட அதிரடிப் படையினரை உருவாக்கிப் பயிற்சியளித்தது. இலங்கையில் பல விமர்சனங்களுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவாக, விசேட அதிரடிப் படையினர் உருவாகினர். இதற்கான பெருமையை, ஜே. ஆர். ஜெயவர்தனவின் மகன், ரவி ஜெயவர்த்தன தனதாக்கிக் கொண்டார். 1985ஆம் ஆண்டு, இலங்கை விமானப் படை பெற்றிருந்த நவீன ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்களைச் சரியாகப் பயன்படுத்தக்கூடிய விமானிகள் இன்மையால், ‘கீனி மீனி’ ஊழியர்கள், அப்பணியையும் செய்தார்கள். இவர்கள், அக்காலத்தில் இடம்பெற்ற பாதகச் செயல்களில், பங்காளிகளாக இருந்தார்கள். இவை அனைத்தும், பிரித்தானியாவின் ஆசிர்வாதத்துடன் நடந்தன. இந்த உதவிகள், இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கையில் இருந்த போதும் தொடர்ந்தன என்பதை, ஆராய்ந்து ஆதாரங்களுடன் இந்நூல் தருகிறது. கற்காத பாடங்களுக்குக் கொடுக்கும் விலை இப்போதும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்; ‘டவுனிங் ஸ்ரீட்’ வாசலில், ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இருக்கிறார்கள். மேற்குலகம் தான், தமிழ் மக்களுக்கான ஒரே போக்கிடம் என்பவர்கள், இவ்வாறான உண்மைகளின் பின்னரவாவது, திருந்துவார்களோ தெரியாது. மேற்குலகம், தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி இருக்கிறது. எம்மை மட்டுமல்ல, உலகில் உள்ள எத்தனையோ விடுதலைப் போராட்டங்களைத் தோற்கடித்து இருக்கிறது. இந்த உண்மைகளை ஏற்காத வரை, எமக்கு விடுதலை சாத்தியமில்லை. நல்லவேளை, இந்த ஏற்கக் கடினமான உண்மைகளை, ஒரு பிரித்தானியப் பத்திரிகையாளர் வெளிக்கொணர்ந்தார். அல்லாவிடின், இதற்கும் கதைகளையும் காரணங்களையும் கட்ட, நாம் தயாராக இருப்போம். இந்த நூலின் சிறப்பு, இது தேக்கி வைத்துள்ள தகவல்களும் சான்றாதாரங்களும் ஆகும். பில் மில்லர், கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள், இந்த நூலுக்காக உழைத்திருக்கிறார். ஆவணக் காப்பகங்கள் அனைத்திலும் பல நூறு மணித்தியாலங்களைச் செலவிட்டிருக்கிறார். மேலும், பிரித்தானிய அரச ஆவணங்கள், 30 ஆண்டுகளின் பின்னரே, பொதுவெளிக்கு அனுமதிக்கப்படுவதால் அதுவரை பொறுமை காத்திருக்கிறார். ஒரு புலனாய்வு ஊடகவியலாளனாக மிகச் சிறப்பான பணியை அவர் செய்திருக்கிறார். எம் வாழ்வில், எத்தனையோ விடயங்களைக் கடந்து போகிறோம்; எத்தனையோ புத்தகங்களைக் கடந்து போகிறோம்; பலவும் எமது கண்களுக்குத் தென்படாமலே போய்விடுகின்றன. அது, எவ்வளவு அபத்தமானது. எமது சமூகத்தால், இந்தப் புத்தகமும் அவ்வாறே கடக்கப்படும். ஏனெனில், இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தக் ‘கீனி மீனி’ நிறுவனத்தில் விமானியான இருந்த ஒருவர், இலங்கையில் தனது அனுபங்களைப் புத்தகமாக வெளியிட்டார். அதன் பெயர் ‘தயங்கிய கூலிப்படையாள்: இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் ஒரு பிரித்தானிய முன்னாள் இராணுவ வானூர்தி ஓட்டியின் நினைவுகள்’ (The reluctant mercenary : the recollections of a British ex-Army helicopter pilot in the anti-terrorist war in Sri Lanka). இந்தப் புத்தகம் வந்தபோது, இலங்கையில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது; சமாதானம் குறித்து, அதிகம் பேசப்பட்டது. இந்தப் புத்தகம், யார் கவனத்தையும் ஈர்க்காமல் போய்விட்டது. ‘கீனி மீனி’ நூலில் பேசப்பட்ட விடயங்களில், இலங்கை ஒருபகுதி மட்டுமே. ஆனால், இன்று இலங்கையை முன்னிறுத்தியே இப்புத்தகம் பிரபல்யமாகிறது. உண்மைதான், இப்போது ‘சன்டனிஸ்டாக்கள்’ பற்றியோ, ஓமானின் புரட்சிகர இடதுசாரிகள் பற்றியோ, ‘முஜாகிதீன்கள்’ பற்றியோ அறியும் ஆவல் குறைவுதானே! http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கீனி-மீனி-இலங்கையில்-பிரித்தானிய-கூலிப்படைகள்/91-245456
 24. கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ஆம் திகதி பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இந்நிலையில், கச்சதீவிற்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.இந்தக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் திருவிழாவிற்கான பூர்வாங்க ஏற்பாடுகளும், அனைத்து தரப்பினர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர் என்றும், யாத்திரிகர்கள் எந்தவித அச்சமும் இன்றி, பாதுகாப்பான முறையில் தமது வழிபாட்டில் ஈடுபட முடியுமென்றும் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.அத்துடன் இம்முறை நடைபெறவுள்ள பெருவிழாவில் இந்தியாவில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமாக யாத்திரிகர்களும் இலங்கையில் இருந்து 7 ஆயிரம் யாத்திரிகர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்போது, மார்ச் மாதம் 6ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை கச்சதீவிற்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்தும் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்தும் குறிகட்டுவானுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவிற்கான படகுச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிகட்டுவானில் இருந்து கச்சதீவிற்கான ஒருவழி படகுச் சேவைக் கட்டணமாக 325 ரூபாயும், நெடுந்தீவில் இருந்து கச்சதீவிற்கான கட்டணமாக 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவில் உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.போக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா குறித்த அனைத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.(15) http://www.samakalam.com/செய்திகள்/கச்சதீவு-அந்தோனியார்-ஆல-2/