Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. உக்ரைனில் எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 90 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பு 13 Dec, 2025 | 10:10 AM தெற்கு உக்ரைனின் முக்கிய துறைமுகப் பகுதியாக உள்ள ஓடேசா பிராந்தியத்தில், எரிபொருள் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலின் காரணமாக, உக்ரைனின் பல துறைமுக நகரங்களில் மின்சார விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சுமார் 90,000 பேர் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, எரிபொருள் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக அமைப்புகள் சேதமடைந்ததால், அத்தியாவசிய சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்கான அவசர மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்ய தாக்குதல்களால் உக்ரைனின் துறைமுக செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஓடேசா உள்ளிட்ட பகுதிகளில் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. https://www.virakesari.lk/article/233239
  2. யாசகம் பெற்ற பெண்ணை திருமணம் செய்த இளைஞர்..! 13 Dec, 2025 | 12:15 PM ரயிலில் யாசகம் பெற்றுக் கொண்டிருந்த அனாதை பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பீகார் மாநிலம் பக்‌ஷர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கோலு யாதவ். இவர், அண்மையில் ரயில் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பெட்டியில் இளம்பெண் ஒருவர் யாசகம் பெற்றுக் கொண்டிருந்தார். பயணிகளில் சிலர் அவரை தவறான நோக்கத்துடன் பார்த்துள்ளனர். சிலர், ஆபாசமான முறையில் பேசியுள்ளனர். இதனால், யாசகம் பெற்ற அந்தப் பெண் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு உள்ளாகி, கூனி குறுகியுள்ளார். இதைக் கண்ட கோலு யாதவ், அப்பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்குடன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அந்தப் பெண்ணின் பரிதாபமான நிலை, அவரது பின்னணி மற்றும் அவர் சந்தித்த இன்னல்கள் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மகனின் மனிதநேயச் செயலைக் கண்டு நெகிழ்ந்த பெற்றோர், அந்த அனாதை பெண்ணுக்கு தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுக்க சம்மதித்தனர். நாட்கள் செல்லச் செல்ல, பெண்ணின் நிலையை முழுமையாக புரிந்து கொண்ட கோலு யாதவ், தனது பெற்றோரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதையடுத்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ‘மனிதநேயம், பச்சாதாபம் மற்றும் விதி ஒன்றாக வருவதற்கான அரிய எடுத்துக்காட்டு’ என்று, கோலு யாதவையும் அவரின் பெற்றோரையும் பலரும் பாராட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/233261
  3. இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமையில் "இலங்கையில் 6 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை நாம் மீட்டெடுக்க வேண்டும். வறுமையான மக்களைக் கொண்ட நாடாகத் தொடர்ந்து இந்த நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது" என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்ற 'பிரஜா சக்தி' தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலங்களில் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், அவை தோல்வியடைந்த திட்டங்களாகவே அமைந்தன. அரசியல் நோக்கங்களுக்காக அந்தத் திட்டங்களைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, கிராமிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி, கிராம மட்ட அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கில் 'பிரஜா சக்தி' வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராமிய ரீதியில் வறுமையை ஒழித்து, சுபீட்சமான நாட்டை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது" என்றார். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் மாவட்டத்தில் பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளுக்குமான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், "கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதன் மூலமே நாட்டின் அபிவிருத்தியைத் தன்னிறைவாகக் காண முடியும் என்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சிந்தனைக்கு அமைவாகவே இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமமும் அடிப்படை அபிவிருத்தியைக் காணவுள்ளது. தலைவர்களாக நியமனம் பெறுபவர்கள் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாகப் பொறுப்புடன் தமது கடமைகளை நிறைவேற்ற வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார். https://adaderanatamil.lk/news/cmj3oqo0s02oto29nwkyuh3y9
  4. மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக் காணி வழங்கத் திட்டம் 'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட காணிகள் குறித்துக் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்குக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, மண்சரிவுக்கு உள்ளான காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றிய பின்னர், அக்காணிகளை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும் எனக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி தெரிவித்தார். இதன்போது அபாய வலயங்களில் உள்ள காணிகளைப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக மாற்றத் தீர்மானித்தால், அனுமதிப்பத்திரம் கொண்ட அக்காணிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்து நட்டஈடு அல்லது மாற்றுக் காணி ஒன்றை வழங்கக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தயாராக உள்ளது. இதற்கமைய, சம்பந்தப்பட்ட காணிகள் தொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடமிருந்து கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில குடியிருப்பாளர்கள் அரச காணிகளில் அத்துமீறித் தங்கியிருப்பதுடன், அவர்கள் தொடர்பாகவும் இந்த நடவடிக்கையை முன்னெடுக்க அத்திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இது குறித்து ஏற்கனவே அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலுள்ள காணி அலுவலகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகக் காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆராச்சி மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmj3zfzrh02p4o29nkju8th5b
  5. அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது 2023 ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் நேற்று கைது செய்தனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. நர்கெஸ் முகமதி, ஈரான் நாட்டில் பல ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிராக நடக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து போராடி வருபவர். குறிப்பாக, ஈரானில் பெண்களின் உரிமைகளை பறிக்கும் கட்டாய ஹிஜாப் சட்டங்களுக்கு எதிராகவும், பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுவதை ஆதரித்தும் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். ஈரானில் நடந்த ‘பெண், வாழ்வு, சுதந்திரம்’என்ற இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர்களில் நர்கெஸ் முகமதியும் ஒருவர். அவருடைய மனித உரிமைகளுக்கான சேவையை போற்றும் விதமாக, அவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் கூட, அவர் சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்தபடி, ஈரான் அரசுக்கு எதிராக அவர் எழுதிய கட்டுரைகளும் செய்திகளும் உலக அளவில் கவனத்தை ஈர்த்தன. நர்கெஸ் முகமதி இதுவரை 10 இற்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மொத்தமாக 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 154 சவுக்கடி தண்டனைக்கு ஆளாகியுள்ளார். தற்போது அவர் சிறைக்குச் செல்லாமல், பிணையில் இருந்தார். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை உட்படப் பல்வேறு சர்வதேச அமைப்புகள் ஈரான் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. (a) https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அமைதி-நோபல்-பரிசு-வென்ற-நர்கெஸ்-முகமதி-கைது/50-369469
  6. விவிலியத்தைப் படித்தது கிடையாது. தோழர் ஷோபாசக்தி போன்றோ அல்லது எனது நெருங்கிய நண்பன் போன்றோ சிறையில் விவிலியத்தை பலதடவை படித்த அனுபவம் இல்லை! AI ஐக் கேட்டபோது விவிலியத்தில் சிவிங்கி பற்றிய குறிப்பு இல்லை என்றது. ஆனால் மேலே உள்ளதைக் காட்டியது😀 மலையக மக்களும் கிழக்கு, வன்னி மக்களும் கடும் உழைப்பாளிகள். அவர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து சோம்பேறிக் கூட்டமாக மாற்றவேண்டாம்!
  7. பெப் 07 தானே ஆரம்பம். கிறிஸ்மஸுக்கு முன்னர் கேள்விக்கொத்து தயாரிக்கலாம். மழையால்☔️ எத்தனை போட்டிகள் தடைப்படும் என்றும் ஒரு கேள்வி போடலாம்.🤣 20 பேர் வரை கலந்துகொண்டால்தான் சுவாரஸ்யம்😁
  8. கெய்ஷா - ஜெயமோகன் அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒருபெயர்போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் செல்லும்போதும் அனைத்து முனைகளிலும் ஆணின் அகங்காரத்தையும் நிறைவு செய்யப்பயின்றவர்கள். நமது குலப்பெண்கள் ஆணின் அகங்காரத்தை அலட்சியம் செய்வதற்கு ஓரிரு வருடங்களிலேயே பழகிவிடுகிறார்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கையில் பணத்துடன் ஜப்பானுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கனவு விதைக்கப்பட்டிருக்கும். அங்கு உயர்மட்டச் சுற்றுலா பயணிகளிடம் உள்ளூர் வழிகாட்டிகள் ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகிதப் பொம்மைக் கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான சுற்றுலாக்கவர்ச்சிகளைப் பற்றி சொல்லிச்செல்கையில் மிக இயல்பாக வழுக்கி கெய்ஷாக்களுக்குள் செல்வார்கள். கேட்பவன் தன் தனி ஆர்வத்தை கண்களில் காட்டாமல் இருக்க முயன்றாலும் அவர்கள் அதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வார்கள். பல வழக்கமான சொற்றொடர்களுக்குப் பிறகு “இப்போது இருக்கிறார்களா கெய்ஷாக்கள்?” என்று அவன் கேட்கால் இருக்க மாட்டான். “இருக்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாகவே…” என்று வழிகாட்டி பதில் சொல்வான். மீண்டும் பல சொற்றொடர்களில் சுற்றியபின் வேறெங்கோ நோக்கியபடி “ஒரு கெய்ஷாவை சந்திக்க முடியுமா?” என்று பயணி வரலாற்றுப்பண்பாட்டு ஆர்வத்துடன் கேட்பான். “கடினம்” என்பான் வழிகாட்டி. மீண்டும் சொற்றொடர்கள். மீண்டும் விழிச்சந்திப்புகள். அதன் பிறகு “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என்று பயணி சொல்லியாக வேண்டும் கவலையுடன் “சற்று செலவேறியதுதான். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். விசாரித்துப்பார்க்கிறேன். ஒரு நாள் ஆகும். ஆனால் முழுமையாக உறுதி தரமுடியாது, மன்னிக்கவும்” என்று வழிகாட்டி சொல்வான். அவன் திரும்பிவரும்வரை நான் காத்திருந்தேன் அந்த ஒரு முழுநாளும் அற்புதமானது. இணையத்திலும் வழிகாட்டி நூல்களிலும் சென்று கெய்ஷாக்களைப்பற்றி தேடி தெரிந்து கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரே விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் குறைவான தகவல்களிலிருந்து கற்பனைகளை விரித்தெடுக்கலாம். காமக்கலைகள்! காமத்தை எப்படி ஒரு கலையாக்க முடியும்? என்னதான் செய்தாலும் அடிப்படையில் அது அனைத்து விலங்குகளும் செய்யும் ஒரு செயல். சரியாகச் சொல்லப்போனால் மிருகத்தனமானது. அதிலிருக்கும் இன்பமே மிருகத்தனத்தின் களிப்புதான். மனிதர்கள் மனிதத்தன்மை என்று அவர்களுக்கு குழந்தையிலிருந்து கற்பிக்கப்பட்ட அத்தனையும் உதறிவிட்டு வெறும் மிருகங்களாக இருக்கும் அந்த சில நிமிடங்களுக்காகத்தான் அதன்மேல் அத்தனை பற்றுக் கொண்டிருக்கிறார்களா? உண்பதிலும் காமத்திலும்தான் வாய் அத்தனைமுக்கியத்துவம் பெற முடியும். ஏனென்றால் மனிதன் அப்போது விலங்கு ஆனால் அந்த எளிய மிருகச் செயல்பாட்டின் மீதுதான் உலகத்தின் அத்தனை கவிதைகளையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அத்தனை கலைகளையும் அதைச் சார்ந்தேதான் நிகழ்த்துகிறார்கள். நினைத்துத் தீராத அத்தனை மெல்லுணர்வுகளையும் அதன் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து சென்று அந்த சில அப்பட்டமான நிமிடங்களை அடைய வேண்டும். எழுந்தவுடன் கழற்றி வைத்த ஆடைகளை அணியும் பரபரப்புடன் அத்தனை சொற்களையும் எடுத்து மேலே போட்டுக்கொள்ள வேண்டும். கெய்ஷாக்கள் கலை என்பது எதை? அணிவிப்பதையா? கழற்றுவதையா? ஜப்பானிய தேநீர் கலையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் அப்படித்தான் வழக்கமாகத் தேநீர் அருந்துகிறார்கள் என்றால் அது தேநீரே அல்ல. அல்லது அவர்கள் மனநோயாளிகள். மிக சொகுசான, மிக அரியதான ஒன்றை அருந்துவதான பாவனை மட்டும்தான் அது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பழகி வைத்திருக்கும் ஒரு நாடகம், நாட்டியம் என்று சொல்ல வேண்டும். பீங்கான் குடுவையை எடுத்து நீர் நிரப்பி அனலில் வைப்பது தொடங்கி கிண்ணங்களை எடுத்து பரப்புவது, நிமிர்த்து வைப்பது, கால் மடித்து அமர்வது, உடல் வளைத்து வணங்குவது என்று அதன் அத்தனை அசைவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை. ஜப்பானிய தேநீர் விருந்தில் தேநீரே தேவையில்லை. கெய்ஷாக்களின் காமவிருந்தில் கடைசியில் காமமே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தபோது என் விடுதி அறையில் படுத்திருந்தபடி சிரித்துக் கொண்டேன். காமம் என்று இருக்கும் வரைக்கும் ஒரு கலையென அது ஆகமுடியாது கலை என்பது ஒரு பொருளின் மேல் ஒரு வார்த்தையின்மேல் அல்லது செயலின்மேல் மேலும் மேலும் அர்த்தங்களை ஏற்றி வைப்பது. படிமங்கள் தான் கலை. ஒரு நாற்காலியை, மேசை விரிப்பை, மலர்க்கிண்ணத்தை எதை வேண்டுமானாலும் முடிவின்றி விரியும் அர்த்தம் கொண்டதாக ஆக்கும் போதுதான் அது கலை. காமத்தை அப்படி ஆக்கிவிட முடியுமா? எத்தனை அர்த்தங்களை ஏற்றினாலும் அது கடைசியில் இயற்கை அளித்த ஒற்றை அர்த்தத்தில்தானே வந்து நிற்கும்? அதைக் கலையாக்குவதற்காகத்தானே அத்தனை வருடங்களாக கவிதையையும் கதைகளையும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். காதல் என்னும் வார்த்தையாக அதை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் காலம் தேவை. ஒன்றுடன் ஒன்று இணைந்த நூற்றுக்கணக்கான உணர்வுகளைத் தொடுத்து காமத்தைச் சுற்றி அமைத்து அதை அமரகாதலாக ஆக்குவதற்கு அதுவரைக்கும் மனித இனம் உருவாக்கிய அனைத்து நுண்கலைகளும் தேவை. கூடவே காமம் என்றால் என்னவென்றறியாத இளமை. காமம் சற்றே சலித்துப்போன நாற்பது வயதான பயணிக்கு சிலமணி நேரங்கள் உடன் தங்கிப்போகும் ஒரு பெண் காமத்தை எப்படி கலையாக ஆக்க முடியும்? அவள் கெய்ஷா உடையில் வருவாளென்று நான் நினைத்திருந்தேன். நூல்களில் கெய்ஷாக்களின் பல்வேறு உடைகள் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் மெத்தைபோல எதையோ கட்டிக்கொண்டவர்கள். கால்வரைவழியும் பெரிய கிமோனாக்கள். பழைய பாணி ஜப்பானிய ஓவியங்களில் வெளிறிய வண்ணங்களில் வரைந்து மேலும் வெளிற வைப்பதற்காக லேசாக நீர் தெளித்து ஒற்றி எடுக்கப்பட்ட ஓவியங்கள். கண்ணாடியில் ஒளிஊடுருவும் தன்மையுடன் ஆடைகள். வந்தவள் சிறுமியோ என்று தோற்றமளிக்கும் சிறிய உடல் கொண்ட இளம்பெண். நவீன மேலை நாட்டுக் குட்டைப்பாவாடை அணிந்திருந்தாள். ஒரு பதின்பருவத்து சிறுவனைப்போல் இருந்தாள். சிறிய கண்கள் இரண்டு நீர்த்துளிகள் போல. சிமிழ் போன்ற மிகச்சிறிய உதடுகள். மாசுமருவற்ற மஞ்சள் நிறம். தோல்நிறத்தில் மஞ்சளுக்கு நிகரானது பிறிதொன்றில்லை. வெள்ளையர் தோல்கள் சுருக்கங்களும் புள்ளிகளும் நிறைந்தவை கரியதோல்கள் ஒளியற்றவை .மாநிறத்தோல் மட்டுமே இந்தியாவில் அழகு கொண்டது. ஆனால் மஞ்சள்நிறத்தோல் தோலா உலோகமா என்றஅறியாத அளவுக்கு மெருகுகொண்டது அவள் என்னை உடல் வளைத்து முறைப்படி வணங்கி முகமன் சொன்னாள். நான் அவளை வரவேற்றதும் பணிவுடன் நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பையை மேஜைமேல் வைத்தாள். வழிகாட்டி என்னிடம் தனியாக வந்து குனிந்து “புகழ்பெற்ற கெய்ஷா குடும்பத்தைச் சேர்ந்தவள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்கிறாள். இந்தியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார் என்றேன். அதை நம்பி வந்திருக்கிறாள். அந்த வார்த்தையை நீங்கள் வாய்தவறாமல் கொண்டு செல்லுங்கள்” என்றான். “நான் உண்மையிலேயே அரசகுடும்பத்தைச் சார்ந்தவன் தான்” என்றேன். அவன் கண்கள் ஐயத்துடன் சற்று மாற ”அப்படியானால் நன்று” என்றான். “இவள் கெய்ஷாவா? உண்மையிலேயே?” என்றேன். “ஆம், கெய்ஷாக்கள் என்பவர்கள் சில குடும்பங்களில் தொன்மையான மரபாக வருபவர்கள். காதற்கலையை அவர்கள் தங்கள் பாட்டிகளிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கலைதான் அவளைக் கெய்ஷாவாக்குகிறது. மற்றபடி அவளும் பிறரைப்போல இந்தக் காலத்தில் வாழ்பவள் தான். இந்தப்பெண் இங்கே டோக்கியோவில் ஒரு கல்லூரியில் படிக்கிறாள். படித்து முடித்தபின் எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் செல்வாள். குழந்தைகளை பெற்றுக் கொள்வாள். பிறரைப் போல் தான் அவள் வாழ்வு இருக்கும். ” நான் “அதுவும் நன்று தான்” என்றேன். அவன் புன்னகையுடன் “அவர்கள் இரவில் மட்டும் தான் கெய்ஷாக்கள்” என்றான். நான் “நன்று” என்று சொல்லி அவன் தோளில் தட்டினேன். “இதற்கான பணத்தை நீங்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாம். அதை நான் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் அதை செலுத்த முடியும்” என்றான். “சரி” என்றேன். “அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே செலுத்திவிடலாம். நீங்கள் செலுத்தின தகவலை அவளுக்கு நான் அனுப்பின பிறகுதான் அவள் கெய்ஷாவாக மாறுவாள்” என்றான். அவன் சொல்வதை நான் புரிந்து கொண்டு மீண்டும் “சரி” என்றேன். “சற்றுப்பெரிய தொகை” என்று அவன் சொன்னான். “சரி நண்பா…” என்று அவன் தோளில் மீண்டும் தட்டினேன் அவன் மும்முறை வணங்கி வெளியே சென்று கதவை மூடினான். நான் திரும்பி வரும்போது அவள் கண்ணாடித் திரையிடப்பட்ட பெரிய சாளரத்தின் அருகே நாற்காலியில் பள்ளிக்கூடப்பெண் போல கால்களை மடித்துக் கொண்டு கைகளைக் கட்டி அமர்ந்திருந்தாள் நான் வந்த போது இயல்பான பணிவுடன் எழுந்து நின்று புன்னகை செய்தாள். நான் அவள் அருகே அமர்ந்தேன். முதலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னர் சொற்களை தெரிவுசெய்தேன் “நான் கெய்ஷா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே தான் உன்னை வரச்சொன்னேன்” என்றேன். “கெய்ஷா என்றால் இரவில் வாழ்பவள் என்று பொருள்” என்றாள். “அப்படியா? விக்கிப்பீடியாவில் அப்படி இல்லையே” என்றேன். “ஜப்பானிய சொற்களை எழுதும் முறையால் அர்த்தம் கொள்ளச்செய்யமுடியும். நாங்கள் கெய்கோ என்போம்” என்றாள். ”ஆம், அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன். “இரவுகளில் மட்டும் ஒரு ஆளுமையை அணிந்து கொண்டு காலையில் கழற்றிவிடுபவர்கள் கெய்ஷாக்கள். உண்மையில் பகலில் சூரியன் எழுவதற்கு முன்பே அவர்கள் இறந்து விடுகிறார்கள்” என்றாள். நான் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தேன். கெய்ஷாப் பண்பாடு பற்றி ஒரு பேருரை ஆற்றப்போகிறாளா என்று சலிப்பு ஏற்பட்டது. “ஆகவே இரவில்பார்த்த கெய்கோவை பகலில்தேடக்கூடாது” என்றாள். அதைச் சொல்லத்தானா என நினைத்துக்கொண்டு “நான் நாளை மாலை இங்கிருந்து இந்தியா கிளம்புகிறேன்” என்றேன். “கெய்ஷாக்கள் இரவில் அணியும் அனைத்தையும் பகலில் துறந்துவிடுவதனால் இரவில் செய்யும் எந்த பாவமும் அவர்களைத் தொடர்ந்து வருவதில்லை. தொல்பழங்காலத்தில் அரசர்களுக்காக கெய்ஷாக்கள் கொலைகளையும் செய்திருக்கிறார்கள்” என்றாள். நான் சிரித்தபடி, “எனது தொழில் போட்டியாளர்களால் நீ இங்கு அனுப்பப்படவில்லை அல்லவா?” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டு, “பெரும்பாலும் இல்லை” என்றாள். “ அய்யோ! பயமாக இருக்கிறதே. . ” என்று நான் நடித்தேன். இருவரும் சிரித்த போது சற்று அணுகினோம். இருவர் அணுகிவருவதற்கு நடிப்பு சிறந்த வழிமுறை பின்னர் எளிய அறிமுகச்சொற்களை பேசிக்கொண்டோம். என்னைப்பற்றிச் சொன்னேன். நான் ஒரு நாளிதழின் ஆசிரியன், எட்டுநூல்களை எழுதியிருக்கிறேன் என்றதும் மெல்லிய புருவங்கள் வளைய வியப்புடன் “அப்படியா?” என்றாள். “என் சொந்தப் பத்திரிகை. என் தாத்தா தொடங்கியது” என்றேன். பத்திரிகையின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. “இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத்து நாளிதழ்” என்றேன். அவள் என் நூல்களைப்பற்றிக் கேட்டாள். ஆறுநூல்கள் அரசியல். இரண்டுநூல்கள் பயணம். “நாவல் எழுதும் எண்ணம் உண்டு” என்றேன். அவள் சிரித்தபடி “இதழாளர்கள் நாவல் எழுதுவதுதான் இப்போது பொதுப்போக்கு. பதிப்பாளர் விரும்புவார்கள்” என்றாள். நான் புருவத்தைச் சுருக்கி “ஏன்?” என்றேன். “மற்ற இதழாளர்கள் பாராட்டி மதிப்புரை எழுதுவார்கள்” என்றாள். சுரீலென்று கோபம்வந்தாலும் உடனே அதைக்கடந்து சிரித்துவிட்டேன். “உண்மை, ஆனால் என் நாவல் மற்ற பத்திரிகையாளர்களை விமர்சிப்பதாகவே இருக்கும். எல்லாரும் வசைபாடுவார்கள்” என்றபின் “நீ படிப்பாயா?” என்றேன். “எனக்கு இளமையிலேயே இலக்கியம் கற்பித்திருக்கிறார்கள்” என்றாள். அவள் மது அருந்துவாளா என்று கேட்டேன். ஒயின் மட்டும் என்றாள். நானும் அதையே விரும்புவதாகச் சொன்னேன். அவளே ஒயினைப் பரிமாறினாள். “ஒயின் பரிமாறுவதில் கெய்ஷா முறை என ஒன்றும் இல்லையா?” என்றேன். “கெய்ஷா சடங்குகள் விரிவானவை. ஆனால் கெய்ஷாமுறை என்பது அச்சடங்குகள் அல்ல” என்றாள். நான் “கெய்ஷாக்களுக்கு காமத்தில் நுட்பமான பல கலைகள் தெரியும் என்கிறார்களே” என்றேன். “ஜப்பானிய தேநீர் விருந்து போல அது ஒரு பெரிய நடிப்பாக இருக்கும். அலங்கார உடைகளும் முறைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் சடங்குகளும் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்” அவள் சிரித்தபடி, “அத்தனைக்கும் பிறகு நீங்கள் காமத்தில் ஈடுபட்டதாக வெறுமே கற்பனை செய்து கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பணத்தை அளிப்பீர்களா?” என்றாள். “பணத்தை அளித்த குறுஞ்செய்தி வந்துவிட்டதா?” என்று நான் கேட்டேன். அவள் முகம் சற்று மாறி “ஆமாம்” என்றாள். அதை மாற்றும்பொருட்டு நான் “காமத்தில் நீ புதிதாக எனக்கு எதைக் கற்றுத்தரப்போகிறாய்?” என்றேன். “உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் இணையத்தில் இல்லாததே இல்லை. எனது பாட்டி ஒருமுறை இணையத்தில் இந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இப்படியெல்லாமா இப்படியெல்லாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நாற்பது ஆண்டுகாலம் கெய்ஷாவாக வாழ்ந்த அனுபவம் உடையவள்” என்றாள். நான் சிரித்து “ஆம். மனித உடலில் இனி என்ன செய்வதற்கு உண்டென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “உனக்குத் தெரியுமா? தூக்கு போட்டுக் கொண்டு உறவு கொள்ளும் முறை ஒன்று உண்டு” அவள் கண்கள் இடுங்கச் சிரித்தபடி ”தூக்குப்போட்டபடியா?” என்றாள். “ஆம். கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு பெண்ணுடன் குலாவுவார்கள். உச்சகட்டம் நெருங்கும்போது காலின் கீழ் இருக்கும் முக்காலியை உதைத்துவிடுவார்கள். கழுத்து இறுகி, மூச்சு நின்று மூளைக்கு ரத்தம் போவது குறையும் தருணத்தில் பலவகையான மாயக்காட்சிகள் தோன்றும். அப்போது காமத்தின் உச்சகணம் நிகழவேண்டும். மிகச் சரியான தருணத்தில் கயிறை அழுத்திக் கீழே விழவைத்து சுருக்கை விடுவித்து ஆக்சிஜனை கொடுத்து உயிரை மீட்டுவிடுவார்கள். காலம், இடம் எல்லாம் அழிந்து காமத்தின் உச்சம் மட்டுமே நிறைந்த ஒன்று அந்தக்கணம் என்கிறார்கள்” “பாவம், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்படி தேடிச்செல்லத் தொடங்கினால் சாவுவரை செல்லமுடியும், அவ்வளவுதான்” என்று அவள் சொன்னாள். நான் “இப்படி செய்யப்பட்ட முயற்சியில் ஒருவர் இறந்து அதை போலீசார் புலன் விசாரணை செய்த போது தான் இப்படி ஒரு இணையக் குழுமம் இருப்பதே தெரியவந்தது” என்றேன். ““பலவகையான பைத்தியங்கள் இருக்கிறார்கள். உறவின்போது கேவலமாக வசை பாடிக் கொள்வது, கொடூரமாக வதைத்துக் கொள்வது, பலவகையான மாத்திரைகளை உண்பது, மூளைக்குள் அதிர்வுகளை அளிக்கும் ரசாயனங்களை உடலில் செலுத்திக் கொள்வது. உச்சகட்டம் நிகழும் போது சரியான தருணத்தில் தலையில் உடலிலும் மின்சார அதிர்ச்சி அளிக்கும் ஒரு முறை கூட உள்ளது. என்ன செய்தாலும் அதற்கு அடுத்த கட்டம் ஒன்று தேவைப்படுகிறது” என்றேன். அவள் சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்கிறேன் என்று பட்டது. “நாம் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நான் கேட்டேன். “நீங்கள் தான் இதை பேச விரும்புகிறீர்கள். இதைச் சுற்றி ஒரு மர்மத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “இருக்கலாம்… இதுசாதாரணமாக முடியக்கூடாது என ஆசைப்படுகிறேன்” என்றேன். அவள் “இங்கும் அதெல்லாம் இருந்தது. பழைய காலத்தில் ஜப்பனிய அரசர்கள் தங்கள் உறவுகொள்ளும் பெண்ணின் கழுத்தை பட்டு நூலால் இறுக்கியபடியே அதைச் செய்வார்கள். மூச்சு திணறி அவள் இறக்கும் அந்த கடைசித்துடிப்பு அவருடைய உச்ச கணமாக இணையும்போது அது மிகப்பெரிய இன்பத்தை அளிக்கிறது என்பார்கள்” என்றாள். நான் சிரித்தபடி “ஆம் , அடுத்தபடி சாவு அல்லது கொலை என்பதுவரை சென்றுவிட்டார்கள்” என்றேன். “உண்மையில் உடல் சார்ந்த எல்லாமே எனக்கும் சலித்துவிட்டன. விசித்திரம் என்பது எதுவரை என்று தெரிந்துவிட்டது. கற்பனையில் எதாவது புதிதாக நடக்குமா என்று பார்க்கிறேன். இந்த நிகழ்காலத்திலிருந்து முன்னோ, பின்னோ சென்று கொண்டிருக்கிறேன். விண்வெளியில் காமம் கொண்டாடலாம். அல்லது செவ்வாய் கிரகத்தில், அல்லது சோழர் காலத்தில் ஒரு பரத்தையுடன், அல்லது ஒரு கெய்ஷாவுடன்” என்றேன். அவள் சிரித்து, “இதை முன்னரே சொல்லியிருந்தால் என் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அங்கு இருநூறாண்டு பழைமையான அறைகள் இரண்டு உள்ளன. என் பாட்டி அணிந்த பழைய கெய்ஷா உடைகளும் நகைகளும் கூட இருக்கின்றன” என்றாள். “பரவாயில்லை இது ஒரு பாவனை தானே, நீ இப்போது இருநூறாண்டு முன்பிருக்கும் ஒரு கெய்ஷா. நான் இருநூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கு வியாபாரம் செய்யவந்த ஒரு கடல்வணிகன்” அவள் ”நீங்கள் அரச குலத்தார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சிரித்தபடி “சரி அதுவும் ஒரு பாவனை தானே…” என்றாள். நான் உரக்க சிரித்துவிட்டேன். சிரிக்கச் சிரிக்க இருவரும் இயல்பான மனநிலைகொண்டோம். ஒயினும் இணைய ஒரு மெல்லிய மிதப்பு எங்களை ஆட்கொண்டது “இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கெய்ஷாவாக நடிக்க வேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். கெய்ஷாவால் உபரிசிக்கப்படும் வணிகனாக நானும் நடிக்கிறேன்” என்றேன். அவள் எழுந்து பழைய ஜப்பானியய நடனஅசைவுகளுடன் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னாள். நான் சிரித்தபடி மெத்தையில் விழுந்துவிட்டேன். அவள் நிறுத்தி இடையில் கைவைத்து “ஏன்?” என்றாள். “கடந்து போனவை இந்த நிகழ்காலத்தில் அவை எல்லாம் கேலிப்பொருளாகத்தான் இருக்கும். இன்று டோக்கியோவின் தெருவில் ஒரு சாமுராயைப்பார்த்தால் மக்கள் அவருக்கு காசுகளை வீச ஆரம்பிப்பார்கள். அவர் தன் கடானாவால் முதுகைச் சொறிந்துகாட்டினால் அது அதற்கான கருவி என்று நம்புவார்கள்” அவள் சிரித்தபடி பாய்ந்து மெத்தையில் விழுந்து என் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உதடுகளில் உதடு பதித்து ஆழ்ந்து முத்தமிட்டாள். பின்பு என் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்து தோள்களைப்பற்றி என் கண்களுக்குள் நோக்கியபடி “எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள். ” என்றாள். “ஆம் அதுதான் என்னுடைய பிரச்னை” என்றேன். அவள் “கிழித்து கிழித்து எங்கே செல்கிறோம். கடைசியில் கசப்பும் துயரமும் தான் இருக்கும். ” என்றாள். “யாருக்குமா?” என்று நான் கேட்டேன். “யாராக இருந்தாலும். கிழித்து சென்றால் விஷம்தான் மிஞ்சும்” என்று அவள் சொன்னாள் ஒருவரை ஒருவர் கண்களுக்குள் நோக்கிக் கொண்டோம். நான் அவளை சுழற்றி கீழே படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து. அவள் உதடுகளை முத்தமிட்டேன். மிகச்சிறிய உதடுகள். “மிகச்சிறியவை. எனக்கு இவை போதாது” என்றேன். “கற்பனையில் வளர்த்துக்கொள்ளுங்கள் அப்படித்தானே காமத்தில் செய்யவேண்டும்” என்றாள் அவள். சிரித்தபடி இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம். “நான் கெய்ஷா அல்ல, ஒர் எளிய பெண் என்று பாவனைசெய்வோம். நீங்களும் ஒரு எளிய பெண்ணை விரும்பி வந்த ஒருவர். இங்கு இப்படி உடலால் இணைந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கிறது. இதற்கப்பால் ஒன்றும் தேவையில்லை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் சொன்னாள். நான் அவள் காதில் “கெய்ஷாவின் காமக்கலை என்கிறார்களே? அது உண்மையில் என்ன?” என்றேன். “இதுதான்” என்று அவள் சொன்னாள். “அன்றைய அரசர்கள் அடுக்கடுக்காக ஏராளமான பட்டு ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பார்கள். உடைவாளையும் மணிமுடியையும் விலக்கவே மாட்டார்கள். பேசுவது எல்லாமே முறைமை சார்ந்த சொற்களைத்தான். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருமே அடிமைகளும், ஊழியர்களும், அவர்களுக்குச் சமானமான நிலை கொண்ட பிற அரசர்களும் தான். ஒவ்வொருவரிடமும் எப்படி பேசவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வகுக்கப்பட்ட நெறிகள் இருந்தன. ” அவள் தொடர்ந்தாள். “அவர்கள் வாழ்வதில்லை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய காவியத்திற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பேசுவதும் செய்வதும் உடனடியாக கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டு நூல்களாக வெளிவருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். காதலுக்கும் காமத்துக்கும் அவர்கள் செல்வது கூட பலவகையான வசனங்களை மனப்பாடம் செய்து பயின்று, பலவகையான நடிப்புகளைப்பழகிக்கொண்டுதான். மனைவிகளும் காதலிகளும்கூட அவர்களுக்கு அடிமைகள். அடிமைப்பெண்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட விலங்குகள். செயற்கையான நாடக நடிப்பில் இருந்து தொடங்குவார்கள். அதன் மறு எல்லைக்குச் சென்று விலங்கு போல அந்தப்பெண்ணை கிழித்து கொன்று காமம் அடைவார்கள். ” “கெய்ஷாக்களிடம் வரும்போதும் அவர்கள் அந்த பாவனைகள் அனைத்தையும் கொண்டுதான் வருவார்கள். கெய்ஷா அவர்களின் அவர்களை அஞ்சாமலும் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும் அதேசமயம் அவர்களை கோபம்கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைகொண்டவள். அவர்கள் அணிந்துவரும் பாவனைகள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதனாக ஆக்கிவிடுவாள். அதன் பின் அவளுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் எளிய விலங்குகளாக இருப்பார்கள். அந்தச் சுதந்திரத்தை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் உண்மை உருவத்தை மீட்டு எடுக்கும் கலையைத்தான் கெய்ஷாக்கலை என்கிறார்கள். ” ”எனக்குள்ளிருந்து என் உண்மை உருவத்தை மீட்டெடு பார்ப்போம் என்று” நான் குறும்பாக சிரித்தபடி சொன்னேன். “கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். காலைக்குள் முழுமையாக வெளியே எடுத்து வைத்துவிடுவேன் போதுமா?” என்று அவள் சொல்லி “என்ன கேள்வி” என்று செல்லமாக என்னை அடித்தாள். என் மூக்கைப்பிடித்து இழுத்து “என்னவேண்டும் உங்களுக்கு?” என்றாள் “நான் எங்கும் ஆடையின்றி நிற்கவே விரும்புவேன். ஆனால் ஆடையின்றி நிற்பதே கூட ஒரு பாவனைதான் என்று ஆகிவிடுகிறது” என்று நான் சொன்னேன். “ஆமாம். இங்கே வடக்கு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. ஆன்சென் என்பார்கள் அங்கு ரெய்க்கோன் எனப்படும் நிர்வாணமாக அனைவரும் சேர்ந்து குளிக்கும் குளியல்மையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் தெரியும் நிர்வாணமென்பதே ஒரு ஆடை மாதிரி. நிர்வாணத்தாலேயே நம் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளமுடியும்” “ஆடையில்லாமை என்பதுமட்டும்தான் அது. அதற்கு அப்பால் ஏதாவது நிர்வாணம் உண்டா என்ன?” என்று நான் கேட்டேன். ”ஆமாம் அது புத்தர் சொன்ன நிர்வாணம்” என்றாள். “அடப்பாவி அதையா இப்போது எனக்கு அளிக்கப்போகிறாய்? அதற்கா அவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாய்?” என்று நான் செல்லமாக அலறினேன். “சரியான முட்டாள்” என்றபடி என் தோளை ஓங்கி அறைந்தாள். “அடிக்கிறாய்…” என்று சிணுங்கினேன். ”கெய்ஷாக்கள் அடிப்பதும் உண்டு. வசைபாடுவதும் உண்டு. மன்னர்களுக்கு அது பிடிக்கும். அவர்களை வேறுயார் அடிக்கமுடியும்?” என்றாள். ”இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்றேன். “உங்களை கொஞ்சப்போகிறேன். நீங்கள் ஒரு ஆண். கொஞ்சி கொஞ்சி உங்களை ஒரு கைக்குழந்தையாக்குவேன். என் மடியில் போட்டுக் கொள்வேன். ” என்றாள். நான் அவள் காதில் “பால் கொடுப்பாயா…?” என்றேன். “சீ” என்று அவள் என் தலையில் கொட்டினாள். நுணுக்கமான கொஞ்சல்கள், பாவனைகள், பரிமாறுதல்கள் வழியாக எங்கள் உடல்களை ஒன்றை ஒன்று அறியச் செய்தோம். பின்னர் பேச்சு நின்றது. பின்னர் பார்வைகளும் இல்லாமல் ஆயின. உடல்கள் மட்டும் ஒன்றை ஒன்று அறிந்தன. பிற எந்தக் காமத்தையும் போலத்தான் அது என்று ஒரு தருணமும், அது மிக விசேஷமானது என்று இன்னொரு தருணமும் தோன்றிக்கொண்டிருந்தது. எல்லாக் காம உறவைப்பற்றியும் அப்படித்தானே தோன்றும் என்றும் நினைத்துக் கொண்டேன். அவள் என் உடலுடன் ஒட்டிக் கொண்டு தன் முகத்தை என் தோளில் புதைத்து படுத்துக் கொண்டாள். மஞ்சள் இனத்தவருக்கே உரிய கரிய பளபளப்பு கொண்ட தலைமுடி. சிறிய காது. சற்றே உந்திய கன்ன எலும்புகள். மெலிந்த அவள் தோள்களை கைகளால் வருடிக் கொண்டு படுத்திருந்தேன். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லவா?” என்று கண்களை மூடியபடி சொன்னாள். “சொல்” என்றேன். “இதுவும் பிற எந்தக் காமத்தையும் போலத்தானே இதற்கா இவ்வளவு பெரிய தொகை…?” என்றாள். “பொய்” என்று நான் அவளை தட்டினேன். “இந்த தருணத்தில் பணத்தை பற்றி நினைக்கும் அளவுக்கு நான் கீழ்மையானவன் அல்ல” என்றேன். “நான் அப்படி சொல்லவில்லை. கெய்ஷா என்ற வார்த்தை அதைப்பற்றிய கதைகள் இதெல்லாம் உங்களுக்கு ஏமாற்றுவேலை என்று தோன்றிவிட்டது. அல்லவா?” என்றாள். “இல்லை இந்த ஒரு தருணத்தை அழகாக்க அவை எப்படியோ உதவியிருக்கின்றன. ” என்றேன். “என்ன சொன்னாலும் இது சாதாரணமானதுதான், அதை மறைக்கமுடியாது” என்றாள் அவள். “இல்லை” என்றபடி நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன். அவள் என் காதில் ”நான் ஒன்று சொல்லவா. . ?” என்றாள். “சொல்” என்றேன். “நான் கெய்ஷா இல்லை” என்றாள். “தெரியும்” என்று நான் சொன்னேன். “எப்படி?” என்றாள். “நீ உள்ளே வந்த போதே தெரியும். அல்லது அவன் உன்னை அழைக்க செல்லும்போதே தெரியும்” என்றேன். அவள் பெருமூச்சு விட்டாள். ”நன்றி” என்றாள். “ஏன்?” என்றேன். “நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வில் இருந்தேன். இப்போது அது இல்லை” என்றாள். நான் “என்னை அவ்வளவு எளிதாக யாரும் ஏமாற்ற முடியாது பல ஏமாற்றங்களையும் பார்த்து வருந்தி அழுது பழகியபடித்தான் தொழிலில் வேரூன்றினேன். ஊடகத்தொழில் இன்று அரசுடன் செய்யும்போர் போல” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவள் சொன்னாள். “நீ என்ன படிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “இலக்கியம்” என்றாள். “எந்த மொழி?” என்றேன். “ஜப்பானிய மொழி. ஆங்கில இலக்கியமும் இணைந்து தான் இங்கே பாடத்திட்டம்” என்றாள். நான் “இலக்கியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஒரு இலக்கியப் பேராசிரியனாகத்தான் என்னை சின்ன வயதில் கற்பனை செய்து கொண்டேன். ” என்றேன் ”நீங்கள் இலக்கியம் படித்தீர்களா?” என்றாள். “இல்லை நான் வணிகவியல் தான் படித்தேன். பெரிய இலக்கியவாதி ஆகிவிடவேண்டும் என்ற கனவு இருந்தது. கூடவே புகழ் பெற்ற பேராசிரியராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் இதழியல். அது என் குலத்தொழில்” என்றேன். “பேராசிரியராக இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா?” என்று அவள் கேட்டாள். ”இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது. இதழாளர்கள் இதழாளர்த்தொல்லை இல்லாத பிரமுகர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியும். ” என்றேன். அவள் சிரித்தபடி ”அது சரிதான்” என்றபடி என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவள் மார்புகள் மிகச்சிறிதாக, இல்லையென்றே சொல்லத்தக்கவையாக இருந்தன. இடைக்குக்கீழே கூட சிறுவர்களுக்குரியவை போல வளராமல் இருந்தது. என் எண்ணத்தை புரிந்துகொண்டு அவள் ”உங்கள் ஊர்பெண்கள் கைகளும் இடைகளும் மிகப்பெரியவை அல்லவா?” என்றாள். “ஆம் இடுப்பும் மார்புகளும் கூடப்பெரியவை தான்” என்றேன். “ஆகவே தான் மாறுதலுக்காக கிழக்கு நோக்கி வருகிறார்கள் போல…” என்றாள். “இங்கிருந்து யாரும் அங்கே வருவதில்லையே” என்றேன். “ஆம் பயந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் சிரித்தாள். இருவரும் மீண்டும் கொஞ்சம் உடல்குலவினோம். நான் அவளிடம் “யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நினைவுக்கு வந்தது” என்றேன். “நினைத்தேன். கெய்ஷாக்களைப்பற்றி அவருடைய பனிபூமி என்ற நாவலில் படித்திருப்பீர்கள். ” என்றாள். “ஆம் நீ இங்கு வருவதற்கு முன் அந்த நாவலைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ” என்றேன். என் கழுத்தை வளைத்து “இதற்குப் பிறகு ஏன் தூங்கும் அழகியை நினைத்தீர்கள்?” என்றாள். “அதில் வயதான ஒருவர் தன் உடலில் வற்றிக் கொண்டிருக்கும் உயிர்ச் சக்தியை மீட்டெடுத்து ஆயுளைக் கூட்டுவதற்காக இளம்பெண்களுடன் படுத்துக் கொள்ளும் வசதி செய்யும் ஒரு ரகசிய விடுதிக்கு வருகிறார் அல்லவா…?” என்றேன் “ஆம், வயதான எகுச்சி” என்று விழிகளில் சிரிப்பு எஞ்சியிருக்க அவள் சொன்னாள். ”மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பெண்களை அவருடன் படுக்கவைக்கிறார்கள். இரு நிர்வாணப் பெண்களின் நடுவே எகுச்சி படுத்திருக்கிறார். அவர் உடலில் அவர்களின் உயிர் வந்து சேர்ந்து ஆண்மை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால் அதில் ஒரு பெண் மயக்கமருந்து மிகையாகி இறந்துவிட்டிருப்பாள். அன்று இரவு முழுக்க பிணத்துடன் தான் படுத்திருந்தார். ” என்றேன் அவள் முகம் சிறுத்தது. தலை குனிந்து கைவிரல்களால் என் விலாவில் வருடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி குனிந்து “என்ன?” என்றேன். “ஒன்றுமில்லை” என்றாள். தலையாட்டியபோது முடிக்கற்றை சரிந்து விழிகளை மறைக்க அள்ளிப்பின்னுக்குப் போட்டுக்கொண்டாள். “இல்லை, உன் மனம் மாறிவிட்டது” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றே என் கண்களைப்பார்த்து, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது” என்றாள். “நான் சாதாரணமாக நினைவுக்கு வந்த கதையைத்தானே சொன்னேன்” என்றேன். ஏன் அந்தக் கதை நினைவுக்கு வருகிறது?” என்றாள். “ஏன்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவள் அழுத்தமான குரலில் “பிணத்துடன் தூங்குதல்…” என்றாள். அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நான் அவளை இறுக அணைத்து “இல்லை, நான் அப்படி எதையும் உத்தேசிக்கவில்லை” என்றேன். “பரவாயில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை நான் உண்மையிலேயே அப்படி எதையும் எண்ணவில்லை” என்றேன். “இங்கு ஒரு சொல் உண்டு. விபச்சாரியுடன் உறவு கொள்வது பிணத்துடன் உறவு கொள்வது போல…” என்றாள். “நம்பு நான் அப்படி உத்தேசிக்கவில்லை” என்று அவளை இறுக அணைத்தேன். “சத்தியம்” என முத்தமிட்டேன். “நீங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்கள் உள்ளம் உணர்ந்தது” என்றாள். “இல்லை உண்மையிலேயே இல்லை” என்று அவள் கைகளைப்பற்றிச் சொன்னேன். “நான் எங்குவேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் உண்மையிலேயே இல்லை. இந்த இரவில் உன்னுடன் மிக நெருக்கமாகத்தான் உணர்ந்தேன். இவ்வளவு நெருக்கமாக எந்தப்பெண்ணிடமும் நான் உணர்ந்ததே இல்லை. ” என்றபோது என்குரல் சற்று உடைந்தது. “இதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாடிக்கையாளன் விபச்சாரியை எந்த வகையிலும் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நான் உண்மையில் அப்படி எண்ணவில்லை நான் இதற்குமேல் எப்படி சொல்லவேண்டும்…?” என்று என்னை மீறி எழுந்த உணர்ச்சியுடன் சொன்னேன். அவள் “நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மறந்து விடுங்கள்” என்றாள். “இல்லை நீ அப்படி நினைக்கிறாய் என்பது எனக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. நான் அப்படி நினைக்கவே இல்லை. ” என்றேன் அவள் அதைக்கேளாதவளாக குனிந்தே இருந்தாள். கரிய பளபளக்கும் முடியால் முகம் மூடியிருந்தது. சட்டென்று ஒரு விசும்பல் ஒலி. வேறெங்கோ எவரோ அழுவதுபோல அதைக்கேட்டேன். அவள் என் மார்பில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினாள். மேலும் சற்று நேரம் கழிந்து தான் அவள் அழுகிறாள் என்பதே புரிந்தது. அவளை விலக்கி “அழுகிறாயா? ஏன்?” என்றேன். புரண்டு தலையணையில் முகம் புதைத்து உடல்குலுங்க அழத்தொடங்கினாள். நான் அவளை திருப்பி “சொல் ஏன் அழுகிறாய் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் தவறாக சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றேன். “மன்னிப்பா? நீங்களா? நான்தான் மன்னிப்புகோரவேண்டும். நான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். கண்ணீர்த்துளிகள் நின்ற இமைகளுடன் “அவ்வளவு பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதிதான் எனக்கு வரும். ஆனாலும் என் கடமை. அவர்கள் என்னிடம் சொன்ன எதையும் நான் செய்யவில்லை” “இல்லை” என்று ஏதோ சொல்லப்போனேன். “நான் கெய்ஷாவாக நடிக்கவில்லை. உங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை” என்றாள். “இல்லை அப்படி அல்ல” என்று நான் அவள் தோளைப்பற்றி உலுக்கி சொன்னேன். அவள் அழுகை சட்டென்று மேலும் வலுத்தது. உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு சிறுகுழந்தை போல அழுதாள். நான் அவள் தோளைத் திருப்பி முகத்தை பார்த்து ”இதற்கு மேல் நான் என்ன சொல்லவேண்டும். நான் உண்மையில் எதையும் நினைக்கவில்லை” என்றேன். “ஆம் பிணம்தான். அப்படித்தான் நான் எல்லாரிடமும் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற அனைவரும் பிணமென்று என்னை நினைக்க வேண்டும் என்றே உண்மை நினைப்பேன்.ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது என்னைப் புண்படுத்துகிறது” முகத்தை துடைத்து கூந்தலை அள்ளி பின்னால் குவித்து கழற்றிவைத்த கிளிப்பை டீபாயிலிருந்து எடுத்து அணிந்துகொண்டாள். மெல்ல அமைதியானாள் “நீங்கள் என்னை பெண் என்று நினைக்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் என்னை பிணம் என்று நினைக்கிறீர்கள்…” என்றாள். “இல்லை இல்லை…. ” என்று அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டுச் சொன்னேன். “நான் மிகமிக ஏழை. நாங்கள் ஒன்பது பேர் ஒரே அறையில் வசிக்கிறோம். என் மூன்று இளையவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படிப்பை முடித்து ஒர் ஆசிரியர் வேலைக்கு சென்றால் இதிலிருந்தெல்லாம் மீள முடியும் என்று நினைத்தேன்” என்று அவள் சொன்னாள் “நாங்கள் கெய்ஷா குடும்பம் அல்ல. எனது மூதாதையர்கள் கிராமத்தில் விவசாயம் செய்தார்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தோம். இங்கே எல்லாமே விலை உயர்ந்தவை. உடலை நன்றகா விரித்து படுத்துக் கொள்வதற்கான ஒர் இடத்திற்காக மாதம் முழுக்க வேர்வை சிந்த வேண்டும்” நான் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுதபோதிருந்ததை விட இப்போது மேலும் துயர்கொண்டிருந்தது அவள்முகம். சிறிய தந்தச்சிமிழ் போன்ற முகம். “அப்பா இருந்த வரைக்கும் நாங்கள் உழைத்து தான் வாழ்ந்தோம். அப்பா இறந்து அம்மாவுக்கும் குதிகால் வலி வந்து நிற்க முடியாமல் ஆனபோது அக்காவுக்கும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் எனக்கு கொடுப்பது மிகச்சிறிய தொகைதான். அதற்கு அவ்வளவு அவமானம்…” கண்களைத் துடைத்துக் கொண்டு “இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. சொன்னேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னைத் தண்டிப்பார்கள்” என்றாள். “இல்லை நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. ” என்றேன். அவள் பெருமூச்சுடன் “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் இதைச் சொன்னதில்லை இந்தக் கெய்ஷாவின் வீட்டுக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஐந்து நிமிடம் அங்கே இருக்க உங்களால் முடியாது. ஒரே அறையில் எட்டு பேர் வாழும்போது அது பன்றித் தொழுவம் போல் ஆகிவிடுகிறது.” என்றாள். ”என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி அவள் இடையை வளைத்து “நான் இதெல்லாம் ஓரளவுக்கு இப்படித்தான் என்று ஊகித்திருந்தேன். ஆனால் எங்கோ எனக்கு ஒர் அகங்காரம் இருந்திருக்கிறது. உன் தோரணையைப் பார்த்தபோது உன்னை உடைத்து உன்னை அழவைக்க வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கிறது. நீ மனமுடைந்து அழுவதைப் பார்த்தபோது எனக்கு எவ்வளவு நிறைவு வருகிறது என்று கவனித்தேன். அப்போதுதான் என்னைப்பற்றி நானே தெரிந்து கொண்டேன். என்னையே நான் வெறுத்தேன்” என்றேன். அவள் என்னை அணைத்துக் கொண்டு ”பரவாயில்லை ஆண்களின் இயல்பு தானே அது? வலிக்க வைக்காத ஆண் என்று உலகத்தில் யாரும் இல்லை என்று என் அம்மா சொல்வார்கள்” என்றாள். பின்பு என் கண்களைப்பார்த்து ”ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். “சொல்” என்றேன். “நான் பிணமில்லை” என்றாள். ”நான் அப்படி சொல்லவில்லை” என்றபடி நான் அவளை முத்தமிடத்தொடங்கினேன். என் கைகளில் அவள் உருகித் திரவமாக ஆகப்போகிறவள் போல குழைந்தாள். “நான் பெண். . நான் பெண். . ” என்று முனகிக் கொண்டிருந்தாள். அம்முறை முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருந்தேன். முதல் பெண்ணிடம் போல. பூமியில் மனிதர்களே இல்லாத போது தனித்து விடப்பட்ட இருவரைப்போல. அடுத்த கணம் இறந்து விடப்போகிறவர்களைப்போல. பின்பு தழுவியபடி படுத்திருக்கும்போது அவள் இமைகளில் கண்ணீர் படிந்திருந்தது. மூடிய இமைகளின் விளிம்பில் மயிர் வெண்ணிறப்பீங்கான்மேல் மயிற்பீலி விளிம்பு போல படிந்திருந்தது. அதை என் கைகளால் தொட்டு வருடியபோது அதிலிருந்த ஈரம் தெரியவந்தது. “மீண்டும் அழுதாயா?” என்றேன். “இல்லை” என்றாள். “கண்ணீர் இருக்கிறது” என்றேன். “அழுதால்தான் கண்ணீர் வருமா…?” என்றாள். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. “இல்லை” என்றபின் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் காதில் “நானும் அழுதேன்” என்றேன். ”உண்மையாகவா…?” என்றாள். “ஆம், நான் அழுதே நிறைய வருடங்கள் ஆகிறது” என்றேன். என் காதில் என் உடலுக்குள் இருந்தே பேசுவதுபோல “எத்தனை வருடங்கள். . ?” ஒரு கணம் தாளமுடியாத அழுத்தத்தில் திளைத்து மெல்ல விடுபட்டு “இருபது வருடங்கள்” என்றேன். “உங்கள் மனைவி இருக்கிறார்களா. . ?” என்று கேட்டாள். “பிரிந்து போய்விட்டாள்” என்றேன். “மன்னிக்கவேண்டும் நான் அதைக் கேட்டிருக்ககூடாது” என்றாள். “இல்லை, பரவாயில்லை, நீ அறியவிரும்புவதைக்கேள்” என்று நான் சொன்னேன். “வேண்டாம், உங்களுக்கு அது துயரளிக்கிறது” என்றாள். “இல்லை நான் எவரிடமும் சொன்னதில்லை. உன்னிடம் சொல்லியாக வேண்டும்” என்றேன். “வேண்டாமே. நாம் ஓர் உயரத்தில் இருக்கிறோம். அதிலிருந்து ஏன் கீழிறங்க வேண்டும்?” என்றாள். “இது கீழிறங்கல் அல்ல. இந்தச் சுமைகளை இறக்காவிட்டால் நான் எப்போதும் மண்ணில் தான் நின்று கொண்டிருப்பேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்று என்னை அணைத்து என் தலைமயிரை வருடத்தொடங்கினாள். நான் என் அப்பாவின் பங்குதாரரின் மகளை இளமையிலேயே மணக்கவேண்டியிருந்தது. ஒரு ஆடம்பரமான அசட்டு நாடகம் போல நடந்த எங்கள் திருமணம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்த மனக்கசப்புகள். சிறுமைசெய்யப்பட்டபோது நான் அடைந்த வன்முறை வெறி. நான் வணிகத்தில் வெற்றி பெறும் தோறும் என் மனைவி அடைந்த ஏமாற்றம். அவள் தன் அடிமையாகவே என்னை வைத்திருக்க வேண்டுமென்று அவள் எடுத்த முயற்சிகள். இறுதியில் ஒரு குழந்தையுடன் அவள் பிரிந்து சென்றது. அதற்குப்பிந்தைய ஆழ்ந்த மனக்கசப்பு “பெண்கள்மீதான கடும் கசப்பாலேயே நான் காமத்தில் திளைத்தேன்” என்றேன். “ஆம், பலர் அப்படித்தான்” என்றாள். “நான் செய்தவை எல்லாம் அவளுக்கு எதிரானவை. எதற்கு எதிராக செயல்பட்டாலும் சரி எதிர்மறைச்செயல்பாடு கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சவைக்கிறது” அவள் என்னை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒருவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று அறிந்திருந்தாள். நான் பெருமூச்சுவிட்டு மெல்ல கண்களை மூடி தளர்ந்தேன். என் இமைகள் நனைந்திருந்ததை அவள் தன் விரல்களால் தொட்டு “ஈரம்” என்றாள். “ஆம்” என்றேன். “தூங்குங்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபடி அவள் தோளில் முகம் புதைத்துக்கொண்டேன் உறக்கம் வந்து என் எண்ணங்களை நனைந்து படியச் செய்வதற்கு முன்பு “நீ என்னுடன் இரு” என்றேன். என் உதடுகள் அவள் தோளில் கசங்கியமையால் குரல் போதையிலென ஒலித்தது. “சரி” என்று அவள் சொன்னாள். “என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். நீ என்னுடன் இருந்தால் போதும்” அவள் என் கனவுக்குள் என “சரி” என்றாள். என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. கண்ணீர் அவள் தோள்களில் கழுத்தில் விழுந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டேன். அடைத்த தொண்டையைச் செருமி “நீ என்னுடன் இருக்கவேண்டும்…” என்றேன். “ம்” என்றபோது அவள்குரலும் அடைத்திருந்ததை உணர்ந்தேன். முத்தமிட்டபோது அவள் கண்ணீர் என் முகத்தில் படிந்தது “நான் இன்னொரு மனித உயிருடன் இத்தனை நெருக்கமாக ஆவேன் என்று நம்பவே இல்லை. எனக்கு யாருமில்லை. நீ என்னுடன் இருந்தே ஆகவேண்டும்” என்றேன். அவள் மூச்சொலிபோல் “இருப்பேன்” என்றாள். ”இறுதி வரை…?” என்ரேன். ”இறுதி வரை” என்றாள். அவளது அணைப்பில் முத்தங்களுடன் நான் துயின்றேன். காலையில் எழுந்தபோது எனது ஆடைகள் அருகே குறுமேடைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. கைக்குட்டைகள் குறுந்துவாலைகள் எல்லாமே சீராக அடுக்கப்பட்டிருந்தன. காலைச்செய்தித்தாள் காத்திருந்தது. ஒரு பெண் வந்து போனதற்கு தடயமே இல்லாமல் சீராக இருந்தது அறை. https://www.jeyamohan.in/90446/?fbclid=IwdGRleAOivjtleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEefOHACDTwVR1IGZdDI3iMUUkyBDa8hiTuE9UMQXfxasmb_3FtnaEbMELEwjM_aem_N0Q_r5uLV3bqeex1S7GMiw
  9. அகதிகளாக வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. உயிர் தப்பிப் பிழைக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. மத்திய தரைக் கடலிலும், ஆங்கிலக் கால்வாயிலும் பலர் கடலில் மூழ்கி இறக்கும்போது அம்மரணங்கள் வெறும் இலக்கங்களாகவே செய்திகளில் வருகின்றன. அவர்களின் கதைகள் அறியப்படாமலேயே போகும். தமிழர்கள் அதிகளவு புலம்பெயர்ந்த காலத்தில் ஆபத்தான வழிகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மேற்கு ஐரோப்பாவுக்குள் நுழைவதுதான். சிலர் உறைபனிக்குள் சிக்கி உயிர்துறந்தனர். அண்மைக் காலங்களில் ரஷ்யா ஊடாக வரமுயன்றவர்களை உக்கிரேன் யுத்தமுனைக்கு அனுப்பியதும் செய்திகளாக வந்தது. ஆனாலும் தமது இலக்கை அடையவேண்டும் என்று வரும் அகதிகள் எவ்வகை ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். மனிதக் கடத்தல்காரர்கள், முகவர்களுக்கு அவர்கள் பணம் சம்பாதிக்கும் முதலீடு. நானும் பதின்ம வயதில் அகதியாக வந்தேன். ஆனால் ஒப்பீட்டளவில் ஆபத்துக்கள் இல்லாத வழி. பல அனுபவங்களைத் தந்து என்னை நானே கண்டுகொள்ள உதவியது!
  10. பூசைக்கிழவி என்னும் தெய்வம் தி. செல்வமனோகரன் அறிமுகம் மனித குல வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இயற்கை – இயற்கை வழிபாட்டின் வழி உருவான தெய்வங்களுள் பெண் தெய்வங்களுக்குத் தனியிடம் உண்டு. தமிழர் சமயவியலின் தொடக்கத்தில் கொற்றவை எனும் பாலை நிலத் தெய்வம் அடையாளப்படுத்தப்படுகின்றாள். தமிழர் வாழ்வியல் புலத்தில், ஏன் மனிதரின் வரலாற்றில், வேட்டையாடலுக்குத் தலைமை தாங்கி இனக்குழுவை வழிநடத்தியது தொடக்கம் நிலையான குடியிருப்பு, உற்பத்திச் செயற்பாடுகள் என்பவற்றில் பெண்ணின் பங்கு பிரதானமானது என்பதை அறிய முடிகிறது. அவளது பிள்ளைப்பேறு கால ஓய்வு – மருத்துவத் தேவையை முன்னிட்டு, குடும்பப் பொறுப்பு ஆணின் கையிற்கு முதலில் தற்காலிகமாகவும், பின்பு நிரந்தரமாகவும் அதிகார மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்பு ஆணால் சமூகப் பொறுப்பும் அதிகாரமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழர் வரலாற்றில் விளைச்சலற்ற, கொடிய வெயில், மழை, காற்று நிறைந்த பாலை நிலத் தெய்வமாக, கொடூரமானவளாக, சீற்றம் நிறைந்தவளாக கொற்றவை என்னும் ஒரேயொரு பெண் தெய்வம் சித்திரிக்கப்படுகிறது. பெண்ணின் சீற்றம்தான் அவளின் தெய்வ அடையாளமோ எனத் தமிழர் சமய வரலாற்றைக் கற்குந் தோறும் தோன்றுகின்றது. கொற்றவை, கண்ணகி, காரைக்கால் அம்மை, மாரி, காளி என இப்பட்டியல் நீளும். பிற்காலத் தாய்மை பற்றிய உரையாடலில்தான் சாந்த சொரூபியாக, காருண்யமாக, தத்துவத் தளத்தில் பரம்பொருளின் ஆற்றலாக (இயக்க சக்தி) அவள் சித்திரிக்கப்படுகின்றாள். காலம் தோறும் ஆணின் பார்வையிலான பெண்ணாகவே மனிதர், விலங்கு மட்டுமல்ல தெய்வப் பெண்ணும் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்தப் பின்னணியில் இருந்து கொண்டுதான் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் நின்று நிலவும் பெண் தெய்வங்களை, அவை பற்றிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தக் கூடியதாக உள்ளது. அதிலும் நாட்டாரியல் சார்ந்த பெண் தெய்வங்கள் நோய் நொடிகள், பஞ்சம், பட்டினி தருகின்றனவாகவே அதிகம் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றின் நின்றும் மாறுபட்ட பெண் தெய்வமாக, குலதெய்வமாக பூசைக்கிழவி என்னும் தெய்வம் காணப்படுகின்றாள். கொரோனாக் காலத்தில் மலேசியப் பல்கலைக்கழகம் நடாத்திய சர்வதேச விவாதப் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை பயிற்றுவித்து போட்டிக்கு அனுப்பும் பொறுப்பில் நான் இருந்த காலத்தில் மாணவர்களுடனான உரையாடல் நாட்டார் தெய்வங்கள் பற்றித் திரும்பியது. அப்போது ஆழியவளையைச் சேர்ந்த செல்வி. டிலோஜினி மோசேஸ் இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை எனக்குத் தந்தார். அவருடன் தொலைபேசி வழி உரையாடி தெய்வம் இருக்கும் இடங்களை ஓரளவு அறிந்து கொண்டு சமூகவியல் ஆய்வாளரும் படைப்பாளியுமான திரு. நா. மயூரரூபன் மற்றும் நாட்டாரியல் ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரன் ஆகியோருடன் வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் சென்று இந்த ஆய்வை நடத்தினோம். பூசைக்கிழவி ஐரோப்பிய காலனிய கால வழிபாடாகவே பூசைக்கிழவி வழிபாடு சொல்லப்படுகின்றது. இது பொதுக்கோயில் அற்ற தெய்வம். வீடுகளில் மட்டுமே வைத்து வணங்கப்பட்டு வருகின்ற இத்தெய்வம் பூசைக்கிழவி, பூசையம்மன் எனவும் இதன் இருப்பிடம் பூசைக்கிழவி கோயில், ஆச்சி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் பூசைக்கிழவி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் தற்போது பூசையம்மன் என்பதே பெருவழக்காக இருப்பதாக உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சதீஸ் (வயது 41) தெரிவித்தார். அதேவேளை ஆழியவளைப் பிரதேசத்தில் இன்றும் பூசைக்கிழவி என்னும் பெயரே பெருவழக்காக உள்ளது. தமிழர் மரபில் தெய்வீகம் பெற்ற பெண்களை, சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் பெண்களை கிழவி – ஆச்சி ஆக்கிவிடுகிற பண்பாட்டுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. ஒளவையாரை கிழவி, ஆச்சி ஆக்கிக் குறிப்பிடுவதும், புனிதவதியை என்புருவாக்கி காரைக்கால் அம்மை – காரைக்கால் பேய் ஆக்கியதுமான கதைகள் மனங்கொள்ளத்தக்கன. அத்தோடு மாரி, காளி முதலான பெண் தெய்வங்களை மாரியம்மா, காளியாச்சி, அம்மாச்சி என வழங்கும் வரலாறுகள் காணப்படுவதும் சுட்டிக்காட்டத்தக்கது. வீடுகளில் வைத்தே இத்தெய்வங்கள் ஆதரிக்கப்படுகின்றமையினால் இது முன்னோர் வழிபாடாகவோ, குலதெய்வ வழிபாடாகவோ தான் அமைந்திருக்க வேண்டும். அது பற்றிய சரியான தகவல்களை அறிதல் மிகச் சிரமமானதாகவே இருந்தது. இவ்வழிபாடு காலனியகால சமய ஒடுக்குமுறைக் காலத்தில் வெளியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீட்டு வளவினுள் மரத்தின் கீழ் வைத்து வழிபட்ட வழிபாட்டு முறையாகவுமே இருந்து வந்துள்ளது. குறைந்தது, நூறு வருட – அம்மாவின் அம்மம்மா காலத்திற்குரிய வழிபாடு என்பதே பொதுக்கூற்றாக உள்ளது. இவ்வழிபாடு நின்று நிலவும் பிரதேசங்கள் கடலும் கடல் சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த நிலமும் ஒருங்கிணைந்து இருக்கின்ற, இரு மரபும் துய்ய அமைந்திருக்கின்ற வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, தாழையடி, வத்திராயன், மருதங்கேணி, ஆழியவளை போன்ற பிரதேசங்களில் இத்தெய்வ வழிபாடு உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. இப்பிரதேசங்களில் உள்ள, பெரும்பாலும் சைவசமயம் சார்ந்தவர்களின் வீடுகளில் இவ்வழிபாடு காணப்படுகின்றது. தத்தம் வளவுகளில் கிழக்குத்திசை நோக்கி சிறு கோயில், மண் – ஓலைக் கொட்டில்களாக இருந்த கோயில்கள், இன்று பெரும்பாலும் சீமெந்துக்கற்களால் கட்டப்பட்ட சிறு கோயில்களாக மாற்றமுற்றுள்ளன. சில கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் தெய்வ வழிபாடு நிலவுவதாக அறிய முடிகிறது. காலங்காலமாக தம் மூதாதையர் வணங்கி வந்த தெய்வத்தை, நம்பிக்கையைக் கைவிட முடியாமல் அல்லது இத்தெய்வத்தின் மீது உள்ள நம்பிக்கையிலோ பிடிப்பினாலோ இவ்வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கலாம். தெய்வவுரு ஆரம்பகாலத்தில் கல் வைத்து இத்தெய்வத்தை உருவநிலைப்படுத்தி உள்ளனர். பிற்காலத்தில் சூலம் இணைக்கப்பட்டுள்ளது. இன்று இரும்புச் சூலத்தைக் கைவிட்டு, பித்தளைச் சூலம் பெரும்பான்மை வழிபடு பொருளாக மாறியுள்ளது. இவ்வழிபாட்டின் தனித்துவ அம்சம் பானையை வைத்து தெய்வ உருநிலைப்படுத்தி வழிபடுதலாகும். இரண்டு கொத்துக்கு மேல் (2 ½ kg) நெல்லைக் கொள்ளக்கூடிய (உள்ளடக்கக் கூடிய) அளவுடைய பானை வைக்கப்பட்டு அதனுள் நெல் முழுமையாக இடப்படுகின்றது. அதனுள் சில்லறைக் காசினை இட்டு வைக்கும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. முன்பு பொன், வெள்ளி முதலியனவும் இட்டிருக்கலாம். அந்தப் பானையின் மேல் சட்டியைக் ‘கவிட்டு’ மூடிக் கட்டிவைக்கின்றனர். பானைக்கு திருநீறும் பொட்டும் இடப்படுகிறது. சில இடங்களில் தத்தம் வசதிக்கேற்ப பட்டுக் கட்டும் வழக்கமும் காணப்படுகிறது. இப்பானைக்கருகில் சூலமும் வைக்கப்படுகிறது. இரண்டுக்கும் இணைந்தே வழிபாடு இயற்றப்படுகிறது. அதேநேரம், நேரிலும் கனவிலும் இத்தெய்வத்தைக் கண்டவர்களாகத் தம்மை அடையாளப்படுத்தியவர்கள் அதனை வெள்ளைச் சேலை கட்டிய ‘குடுகுடு’ கிழவி என்றனர். சிலர் நிழலைக் கண்டதாகவும், அது பெரிய தோற்றம் உடைய முதிர் பெண்ணின் வடிவம் என்கின்றனர். பூசைக்கிழவி பற்றிய கதைகள் பூசைக்கிழவியின் தொன்மம் பற்றிய தேடலின் வழி ஒரு கதையை மட்டும் அறிய முடிந்தது. இந்தியாவின் தமிழகப் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வயது போனவர்கள் பலர் இணைந்து கோவில் ஒன்றில் வாழ்ந்து வந்தனர். அந்தக் கோயிலில் சிறப்பாக பூசைகள் நடைபெற்று வந்ததனால் கோயிற் பிரசாதம் இவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஒரு குறையும் இன்றி வாழ்ந்து வரும் காலத்தில் திடீரென்று ஒரு நாள் புயலோடு கூடிய பெருமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அந்தக் கோயிலில் இருந்தவர்களெல்லாம் திசை கெட்டு ஓடினர். இவர்களுள் கிழவிகள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கோயிலில் தஞ்சம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் அக்கோயிலிலிருந்து வேறிடம் செல்லத் தலைப்பட்டனர். இவர்களுள் ஒருவரான ‘நயினாதீவு அம்மன்’ முதலில் புறப்படத் தயாரான போது அந்தக் கடற்கரையை அண்டி ஒரு கப்பல் தோன்றியது. அந்தக் கப்பலில் ஏறிய அம்மன் “நான் மட்டும்தான் இதில் ஏறுவன். வேற ஒருத்தரும் ஏற வேண்டாம்” என்று கூறினார். கப்பல் புறப்பட்டுச் சென்றது. தலைக்கு மேல் கழுகு பறந்து வந்து கொண்டிருந்தது. கப்பல் கரைக்கு அண்மையில் வந்தபோது கப்பல் கடலில் தாழத் தொடங்கியது. கழுகு, நாகபூசணி அம்மனைச் சுமந்து வந்து கரையிலிருந்த பற்றைக்கருகில் இறக்கிவிட்டது. பின்னர் அவர் அதற்கருகில் இருந்த கொட்டிலில் வாழ்ந்திருந்தார். கப்பலாக வந்து கடலில் தாழ்ந்த நாகமும், சுமந்து வந்த கழுகும் இப்போதும் நயினாதீவு திருவிழாக் காலத்தில், இதனால்தான் இன்றுவரை தோன்றுகின்றன. மற்றையக் கிழவிகள் மறுபுறமாக ஓடி வந்தனர். அதில் ஒருவர் திரியா அம்மன். அவர் மருதங்கேணி காட்டுக்குள் சென்று தெய்வமானார். ஏனைய கிழவிகள் ஓடியோடி வந்தனர். கோயிலுக்கு வளுந்து வைத்துப் பொங்குவர். வீட்டில் பானை வைத்துப் பொங்குவர். முன்பு வீடு, இணைப்பற்ற பகுதிகளை உடையதாக இருந்தது. வடக்குப் பகுதி படுக்கையறையாகவும், தெற்குப்பகுதி விருந்தினர் தங்குமிடமாகவும், கிழக்குப் பகுதி சமையலறையாகவும், மேற்குப் பகுதியில் உள்ள அறை தூய்மைப்படுத்தப்பட்ட பாத்திர பண்டங்கள் வைக்குமிடமாகவும் காணப்பட்டன. வடக்கு அறை அறுக்கையாக (மூடிக்கட்டி வாயில் உடையதாய்) இருக்கும். குசினி ஓரளவு அறுக்கையாகவும், தெற்குத் திசையில் இருப்பது கொட்டிலாகவும் இருக்கும். மேற்குக் கொட்டில் தூய்மையான, மட்சம் புழங்காத ஒன்று. எல்லாக் கூரையும் பனையோலையால் வேயப்பட்டிருக்கும். அதில் மேற்கு திசையில் உள்ள பண்டக அறையில் (தாயறை?) கடற்கரை ஓரமாக ஓடி வந்த கிழவிகள் அவ்வூர்களில் இருந்த மேற்குப் பக்க அறைகளுள் (ஓலைக் கொட்டில்கள்) புகுந்து பானைக்குள் ஒளிந்துகொண்டு சட்டியால் மூடிக்கொண்டனர். ஒவ்வொரு வீட்டாரும் தத்தம் தேவைக் காலத்தில் அறைக்குச் சென்று மூடியைத் திறந்து பானையைப் பார்க்கும்போது வெள்ளைச்சீலை கட்டி, முக்காடு போட்டபடி கிழவிகள் வெளியே வந்தனர். தம்மை ஆதரிக்குமாறு கோரினர். புனித அறையில் இருந்து வந்ததால் இவர்கள் பூசைக்கிழவி, பூசையம்மன் என்று கூறப்பட்டனர். செல்லையதீவு, கரவெட்டி தெற்கு வழி சென்று, கடைசியாக வற்றாப்பளையில் போயிருந்ததாகக் கூறப்படுகின்றது (தகவல்: செல்லத்துரை சத்தியகீர்த்தி (வயது 76), உடுத்துறை). இத்தகைய கதை, கண்ணகி இலங்கை வந்து பயணித்து வற்றப்பாளை சென்றடைந்த கதையை ஒத்திருப்பினும் சம்பவங்கள், இடங்கள் வேறுபடுகின்றன. வற்றாப்பளை மட்டுமே ஒன்றாக அமைகின்றது. பானைக்குள் சட்டியால் மூடிய நிலையில் கிழவிகள் இருந்ததனால் பூசைக்கிழவிகள் வழிபாட்டில், மூடிய நிலையில் உள்ள பானை இன்றியமையாத குறியீடாயிற்று. அற்புதங்கள் • யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றபோதும், தான் குறுக்குப்பாதைகளால் வந்து பூசை செய்ததாகவும், தனக்கேதும் நிகழவில்லை என்றும், கோயிலும் எந்தச் சேதமுமின்றி இருந்ததாகவும் திரு. செ. சத்தியகீர்த்தி குறிப்பிடுகின்றார். பேய் பீடித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் கலையாடி சத்தியகீர்த்தி பூசாரி இக்கோயிலில் தீர்வு (திருநீறு போடல், குறி சொல்லல்) வழங்குவதாக இக்கோயிலின் அருகில் வசிக்கும் திரு. வே. சதீஷ் குறிப்பிடுகின்றார். • வீட்டில் உரிய வகையில் வழிபாடு செய்ய மறந்தால், குற்றங்கள் ஏதும் நிகழ்ந்தால், கிழவி வடிவிலான நிழலுருத் தோன்றி வீட்டாரை உட்செல்ல விடாமல் வழிமறைத்து நிற்கும் என செல்வி. மோ. டிலோஜினி குறிப்பிடுகின்றார். • இளைஞர் சிலரிணைந்து முயல் பிடிப்பதற்காகக் காட்டிற்குச் சென்றனர். வழியில் வீரபத்திரர் கோயில் உண்டு. சென்ற இளைஞர்களில் ஒருவர் திடீரென வீழ்ந்து குழறத் தொடங்கினார். கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனையவர்கள் தூக்கிக்கொண்டு சத்தியமூர்த்தி பூசாரியின் வீட்டுக் கோயிலுக்குக் கொண்டு வந்தனர். அவர் கலையாடி நீறு போட்டவுடன் இளைஞர் எழுந்து சாதாரணமாக வீட்டுக்குச் சென்றார். கோயிலமைப்பு வீட்டு வளவினுள் துடக்கு (தீட்டு) உள்ளவர்கள் புழங்காத இடத்தில், குறிப்பாக வேப்பமரத்தின் கீழ் இத்தெய்வம் கல்ரூபத்தில் வழிபடப்பட்டது. பின்பு ஓலைக் கொட்டில்களில் மூடிய பானையும் (அதனுள் நெல், அருகம்புல், காசு போன்றன இடப்பட்டன) திரிசூலமும் வைத்து வழிபடப்பட்டது. வசதிக்கேற்ப தற்காலத்தில் தத்தம் வளவுகளில், வழிபாட்டிடங்களை கிழக்குத்திசை நோக்கிய சிமெந்துக் கற்களாலான சிறு கோயில்களாக மாற்றி வருகின்றனர். அத்தோடு சில வீடுகளில் முனி, ஆஞ்சநேயர், சத்தியம்மன் போன்ற துணைத் தெய்வங்களும் வைத்து வணங்கப்படுகின்றன. பெருங்கோயில் பண்பாடு, கட்டட அமைப்பு எதுவும் இந்தத் தெய்வத்துக்கு இல்லை. வழிபாட்டு முறை பெண்கள் வழி பேணப்பட்டு வரும் வழிபாடாக இருந்தாலும் (தாய் – மகள் – மகள்) ஆண்வழிச் சமூகத்தினரே பூசாரிகளாக விளக்கு வைக்கும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வாரந்தோறும் விளக்கு வைக்கும் பாரம்பரியமே காணப்படுகிறது. காலைப்பொழுதில் விளக்கு வைத்து பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, தேங்காய் அடித்து, கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர். சிலர் தத்தம் வசதிக்கேற்ப மாலைப் பொழுதுகளில் வழிபடுகின்றனர். திரியா அம்மன் கோயிலில் வைகாசி மாதம் பொங்கல் தொடங்கும். அதன் பின் ஒவ்வொரு கோயிலாக ஆனி மாதம் வரைக்கும் மடை பரவுதல் நடைபெறும் வழக்கம் காணப்படுகின்றது. ஆடி மாதம் மடை பரவுதல் நடைபெறுவதில்லை. இவற்றை விட நேர்த்திக்கடன், தைப்பொங்கல் வருஷம், தீபாவளி, நவராத்திரி காலங்களில் மடை வைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது. வைகாசி, ஆனி மாத வருடாந்த மடை பரவுதலில் உறவுகளுக்குப் பங்குண்டு. யாவருக்கும் அறிவித்தே மடை பரவுதல் நடைபெறும். இந்தத் தெய்வத்துக்கு மட்சம், மாமிசம் படைப்பதில்லை. மடையில் பொங்கல் செய்யாதது குறிப்பிடத்தக்க விடயமாகும். அவல் கடலை, கௌப்பி, மோதகம், வடை என வசதிக்கேற்ப பலகாரங்களும் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழவகைகளும் வெற்றிலை, பாக்கு, தேசிக்காய் உள்ளிட்டவையும் வைத்து வழிபடும் மரபே காணப்படுகின்றது. இன்னும் சிலர் பொங்கலும் பொங்குவதாக அறியமுடிகின்றது. இதைத்தவிர தமது வீட்டில் விளையும் முதற்பொருள்களையும் (காய், பழம், புதிர் நெல்) இத்தெய்வத்திற்குக் காணிக்கையாக்குவர். வடை மாலைகள் கட்டி சூலத்திற்குப் போடும் வழக்கம் காணப்படுகின்றது. இது வைரவ வழிபாட்டு மரபின் வழி வந்த வழக்கமாக இருக்கலாம். இவ்வூரில், பெறுவதற்கு அரிதான பலாப்பழத்தை வாங்கி தெய்வத்திற்கு படைத்ததன் பின்பே சாப்பிடும் வழக்கம் உள்ளது. படைக்காது விட்டால் துன்ப – துயரம் ஏற்படும் என்பது நம்பிக்கை. சமூக அடுக்கமைவு மருதங்கேணி, உடுத்துறை, ஆழியவளை, வத்திராயன் பகுதிகளில் மீன்பிடித் தொழில் செய்கின்ற கரையோர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாதிக்குள் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே சமூகத்தவரே வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ அறுபது வீடுகளுக்கு மேல் பூசைக்கிழவியை – அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஒரே சமூகத்தினராய் இப்பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை இதில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தெய்வத்தை பூசைப் பேர்த்தி என்பாரும் உண்டு. இப்பகுதியில் அண்ணமார் வழிபாடும் காணப்பட்டுள்ளது. உடுத்துறையைச் சேர்ந்த இந்த நெய்தல் நில மக்கள், கரைவலை இழுத்துவிட்டு கள், மீன், கருவாடு படைத்து அண்ணமாரை வழிபட்டனர். பெரிய நாவல் மரமொன்றின் கீழ் பொல்லு வைத்து அண்ணமார் வழிபடப்பட்டுள்ளார். இன்று இத்தெய்வ வழிபாடுமில்லை, கோவிலும் இல்லை. சில அவதானிப்புகள் • ஐரோப்பியக் காலனிய காலத்தில் உருவான வழிபாடாகவே பொதுவில் சொல்லப்பட்டாலும், பூசாரி சத்தியகீர்த்தி இந்தியாவில் இருந்து வந்த கிழவிகளின் கதையாக பூசைக்கிழவியின் கதையைக் கூறுகின்றார். • இயற்கை வழிபாட்டில் – வாழ்வில், விதை என்பது போற்றுதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய புனிதப் பொருள் என்று கருதும் பண்பாடு காணப்பட்டுள்ளது. நெய்தலுடன் மருதம் இணைந்த இந்த நிலப்பரப்பில் விதை நெல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நெல் ஈரப்பதன் இல்லாமலும் வெப்பத்தாக்கத்திற்கு உள்ளாகாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது. ஆதலால் பெரிய மண்பானைகளில் அதனை இட்டு சட்டி போன்ற மண்மூடிகளால் பாதுகாத்து வரும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது. • குறிப்பாக இலங்கையின் வடக்கு மாகாண பருவப் பெயர்ச்சி மழை, காற்று என்பன வடக்கு, தெற்கு திசைகளைச் சார்ந்தவை. ஆதலால் மேற்குக் கொட்டிலில் வைத்து மண் பானைகளில் நெல்மணி பாதுகாக்கப்பட்டிருக்கலாம். நெல்மணியைச் செல்வமாகக் கருதிவந்த காலமானது கடந்துவந்த வழித்தடத்தில் பணப் பெறுமானம் உருவானபோது, அதனையும் பானையில் இட்டிருக்கலாம். அதேபோல சாணியால் மெழுகப்பட்ட கொட்டிலில், வைக்கப்பட்ட நெல் மணியுடன் அறுகம்புல்லையும் இட்டு பூச்சிகளின் தாக்கத்திற்கு உள்ளாகாதவாறு மூடி இருக்கலாம். • கடற்றாய் வழங்கும் மட்சம் வாழ்வாதாரத்திற்கு உரியதெனினும் மருத நிலம் தரும் நெல்மணியும் சமாந்தரமானதும் முதன்மையானதுமாகும். உலகெங்கும் பூதங்கள் புதையல் காத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை ஒத்து, மண் பானைகளை கிழவிகள் காத்த கதையாக இக்கதையைப் புரிந்துகொள்ளலாம். • கறுக்காய்த் தீவில் உள்ள நெய்தல், மருதம் இணைந்த நிலப்பரப்பில் வாழும் நெய்தல் நில மக்கள், மாரி காலத்தில் மண் பானையில் வளந்துக்கான நெல்மணிகளை இட்டு, நீர் புகாதவாறு வாயை இறுகக்கட்டி, அதனைத் தமது குல தெய்வமாகக் குடி கொண்டிருக்கும் பெரும்படைக் கோயிலுக்கருகிலுள்ள பூவரச மரத்தின் உச்சியில் கட்டிவிடுவர். பின்பு பங்குனி மாதம் அதனை இறக்கி (வெயிற் காலம்) வளந்து வைத்துப் பொங்கி படைப்பர். மாரிகால வெள்ளப்பெருக்கிலிருந்து விதை நெல்லைப் பாதுகாக்கும் திட்டம் இதுவெனலாம். இதுவே பின் ஆகமக் கோவில்களில் கோபுரங்களின் கலசங்களில் தானியம் இடும் செயல்நிலையானது. • இதையொத்தே கடல் நீர் உட்புகும் அபாயமும், மழை வெள்ளப்பெருக்கு அபாயமும் உள்ள இந்த ஊர்களில் நெல்மணியைப் பாதுகாக்கும் எண்ணத்தோடு ஒவ்வொரு வீடுகளிலும் உயர்வான பீடத்தில் மூடிய பானை வைக்கப்பட்டு, அருகில் காவலுக்குத் திரிசூலமும் வைக்கப்பட்ட பூசைக்கிழவி வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது என்றே ஊகிக்க முடிகிறது. விவசாயத்தைக் கண்டுபிடித்தவள் பெண் என்பதை இவ்வழிபாடு நிரூபணம் செய்கின்றது. • இப்பானைகளில் அறுவடைக் காலத்தில் (தை மாதம்) புது நெல் இடப்படுகிறது. ஆண்டுதோறும் நடாத்தப்படும் மடைக்கு முன் நெல் மாற்றப்படுதல், ‘விதை நெல்’ எனும் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. வருடந்தோறும் முதலில் பானையில் நெல்லை இட்டவாறே அடுத்த முறை நெல்லை மாற்றி வைக்க வேண்டும். அவர் பெரும்பாலும் பூசாரியாக அல்லது குடும்பத் தலைவராக இருப்பார். அவர் இல்லாதுபோகும் சந்தர்ப்பத்திலேயே அடுத்தவர் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதாத விதியாக உள்ளது. • பானைக்குள் நெல்லினை இட்டு வழிபடுவதாலோ என்னவோ இந்தத் தெய்வத்துக்கு பொங்கல் இடும் வழக்கம் இல்லை. • வளமை உடையவள் பெண்; கர்ப்பம் தரிப்பவள்; பல பேறுகளைக் கண்ட முதிர் பெண் (கிழவி, பேர்த்தி) கருவளத்தைக் காக்கும் திறனறிந்தவள்; பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவிச்சி; அனுபவமே அவளின் அடையாளம் என்றாகிறது. ஆகவே வளப்பம் நிறைந்த விதை நெல்லைக் காக்கும் தெய்வம் பெண்ணாக, கிழவியாக, அம்மனாக சித்திரிக்கப்படுகின்றாள். • அண்ணமார் வழிபாடு பொதுவில் சிறுகுடி வேளாளரின் வழிபாடாகவே காணப்பட்ட போதும் இங்கு கரைவலை இழுப்பவர்களின் வழிபடுநிலை தெய்வமாக இருந்துள்ளமையை ‘நம்பிக்கை’ எனும் கருத்தாக்கம் சார்ந்த ஒன்றாகவே பார்க்க முடிகின்றது. முடிவுரை வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கரையோரக் கிராமங்களில் மரபு மனம் மாறாத நாட்டார் தெய்வமாகப் பூசைக்கிழவி விளங்குகிறார். கிழவி, பேர்த்தி எனவும்; அம்மன் எனவும் சுட்டப்படும் இத்தெய்வம் வீட்டு வளவினுள் வைத்து வழிபடப்படும் ஒரு குலதெய்வமாகும். ஆயினும் இப்பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கரையோரக் கிராமங்களில் இத்தெய்வ வழிபாடு இல்லை. ஆகவே இப்பிராந்தியத்திற்குரிய தனித்துவமான பெண் தெய்வ வழிபாடாக இது அமைந்துள்ளது. வயலும் கடலும் இணைந்த வாழ்வில் நெல்மணியை – விதையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுந்துதலின் வழி வளப்பமுடைய – அதனைப் பாதுகாக்கும் திறனறிந்த முதிர்பெண்ணைக் காவல் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். கடலுடன் இணைந்த நிலமாதலால் வெள்ளப் பேரிடரில் இருந்து காக்க, நெல்மணியை மண் பானையினுள் இட்டு அதன் வாயை சட்டியால் மூடி, இறுகக்கட்டிப் பூசித்து வந்துள்ளனர். வருடத்துக்கு ஒருமுறை நெல்லை மாற்றி வந்துள்ளனர். பண்டைய காலத்தில் போக்குவரத்து ஏற்பாடுகளற்ற காடு மண்டிக்கிடந்த இப்பிரதேசத்தில் தமக்கான விதையையும், உணவையும், பாதுகாக்கும் ஏற்பாடு இது எனலாம். நோய் தீர்த்தல், பேய் – பிசாசிடமிருந்து பாதுகாத்தல், சுகம் அளித்தல், வேண்டும் பேறுகளை அளித்தல் என இத்தெய்வம் மக்களுக்கு நன்மை செய்யும் தெய்வமாகவே வணங்கப்படுகின்றது. மருதங்கேணி திரியாயம்மன் முதலியவை மேனிலையாக்கம் பெற்ற போதும் இவ்வழிபாடு ஓலைக்கொட்டிலிலிருந்து சிமெந்துக் கட்டடத்துக்கு மாறியதே தவிர, வழிபாட்டுமுறை மாறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருக்காய்த் தீவு போல நெய்தலும் மருதமும் இணைந்த இப்பிராந்தியத்திலும், பானையில் நெல்லைப் பாதுகாக்கும் சுதேச பாதுகாப்பு முறையை முன்னிறுத்துகின்ற கரையோர மக்களின் இயற்கை வழிபாடு நிலவி வருகின்றது. காவல் தெய்வமான பூசைக்கிழவி இப்பிராந்தியத்துக்கே உரிய தனித்துவமான நாட்டார் தெய்வமாக, நிலவியல் பண்பாட்டின் நீட்சியாக, வழிபாடாக அமைந்துள்ளது. https://www.ezhunaonline.com/the-goddess-puzaikzhavi/
  11. கீசக வதம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பன்னிரண்டு வருட வனவாசத்திற்கு பிறகு ஒரு வருடம் மறைந்து வாழ வேண்டிய சூழலில், பாண்டவர்கள் தங்களது திரைமறைவு வாழ்விற்கு தேர்ந்தெடுத்த நாடு விராட நாடு. யுதிஷ்டிரன் அரசவையில் மன்னருக்கு ஆலோசனை கூறுபவனாகவும், பீமன் வல்லபன் என்ற பெயரில் மல்யுத்த வீரனாகவும் சமையல் கலைஞனாகவும், அர்ஜுனன் அவன் பெற்ற சாபத்தை உபயோகப்படுத்தி இளவரசியின் நடன குருவாகவும், நகுலன் குதிரைகளை பார்த்துக் கொள்பவனாகும், சகாதேவன் ஆடு மாடுகளை மேய்ப்பவனாகவும் தங்களை மாற்றிக் கொண்டு விராட நாட்டில் வசித்து வந்தனர். திரவுபதி இராணியின் தோழியாக தன்னை மாற்றிக் கொண்டாள். இராணியின் சகோதரனான கீசகன் அந்நாட்டின் படைத் தளபதியாக இருந்தான். உண்மையில் அவனே விராட நாட்டை ஆண்டான். அரசன் பெயரளவிலேயே இருந்தான். இந்நிலையில் கீசகன், திரவுபதியின் மேல் மையல் கொண்டு அவளை அடைய முயன்று வந்தான். முதலில், அவனை பற்றி மற்றவரிடம் சொல்ல தயங்கி கொண்டு தன் கணவர்கள் கந்தர்வர்கள் என்றும், அவள் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் பயமுறுத்தினாள். ஆனால் கீசகனோ அதற்கு பயப்படவில்லை. தன் சகோதரியை வற்புறுத்தி இரவில் தன் மாளிகைக்கு அனுப்ப வைத்தான். முதலில், பல காரணங்களை சொல்லி தவிர்த்தாலும், மகாராணியின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவளும் சென்றாள். அங்கே , கீசகன் அவளை பலவந்தப்படுத்த முயல, அவனிடம் இருந்து தப்பி அரசவைக்கு சென்று அரசனிடம் முறையிட்டாள். அவனோ தன் இயலாமையை காரணம் காட்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என கை விரித்து விட்டான். அன்று இரவு எப்படியோ கீசகனிடம் இருந்து தப்பிய திரவுபதி சமையல் அறையில் இருந்த பீமனிடம் சென்று முறையிட்டாள். இருவரும் சேர்ந்து கீசகனை பழி வாங்க திட்டம் தீட்டினர். அதன்படி, மறுநாள் காலையில் கீசகனை சந்தித்த திரௌபதி முதல் நாள் இரவு நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டாள். பின் , கீசகனை இப்பொழுது புரிந்து கொண்டதாகவும் அன்று இரவு இளவரசிகளின் நடன அவை யாரும் இல்லாமல் இருக்கும் என்றும் அங்கே வருமாறும் கூறினாள். அவள் மேல் மோகம் கொண்ட கீசகனும் இரவு தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு அங்கே சென்றான். அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு இருட்டில் பீமன் சேலை அணிந்து பெண் போல் இருந்தான். இதை அறியா கீசகன் அருகே சென்று தோளில் கை வைக்க திடமான உடல் வாகைக் கண்டு திடுக்கிட்டான். பீமனும் தன் வேடத்தைக் கலைக்க துவந்த யுத்தம் துவங்கியது. இருவரும் சம பலம் கொண்டவர்கள். மேலும் மிக சிறந்த மல்யுத்த வீரர்கள். அவர்களுக்கு இணையாக பலராமனை மட்டுமே சொல்ல இயலும். ஆதலால், வெகுநேரம் சண்டை நீடித்தது. இறுதியில், கீசகனை கொன்ற பீமன், அவன் உடலை சதைப்பிண்டமாக மாற்றி அங்கேயே விட்டுவிட்டு சென்றான். பின், குளித்து அலங்கரித்து நிம்மதியாக உறங்கினான். மறுநாள் காலை, கீசகனின் மரண செய்திப் பரவியதும், தன்னை தவறாக அவன் அணுகியதால் தன் கந்தர்வ கணவர்கள் அவனை கொன்றுவிட்டதாகக் கூறினாள். அதன்பின் அவள் விராட நாட்டில் இருந்தவரை அவளை யாரும் துன்புறுத்தவில்லை. https://solvanam.com/2025/07/27/கீசக-வதம்/
  12. தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு December 11, 2025 — கருணாகரன் — இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியத் தரப்புகள் எவ்வாறான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வது என்ற அடிப்படையிலேயே இந்தச்சந்திப்பு நடந்ததாக, சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசுக் கட்சியின் செயலாளர்எம். ஏ. சுமந்திரனும், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இந்தத் தரப்புகள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சியை அமைப்பதற்கான புரிந்துணர்வில் இணக்கம் கண்டிருந்தன. இந்த இணக்கம், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி நடத்திவரும் மாகாணசபை முறைமையை வலுப்படுத்துவதற்கான மக்கள் அரங்குகளில் தமிழரசுக் கட்சியும் நட்பின் அடிப்படையில் கலந்து கொள்வதற்கான கதவுகளைத் திறந்தது. ஆக இதை படிப்படியாக உருவாகி வந்த ஒரு வளர்ச்சி நிலை என்றே சொல்லலாம். ஆனால் அடுத்த கட்டத்துக்கு இது வளர்ச்சியடைவதில் அல்லது நகர்வதில் பல இடர்ப்பாடுகளும் சிக்கல்களும் உண்டு. அவை கட்சி நலன் – மக்கள் நலன் – பிரமுகர் அல்லது அரசியல் தலைவர்களின் நலன் என்ற முக்கோண வலைப் பின்னல்களுக்குள் சிக்குண்டுள்ளது. இதைக் குறித்துப் பின்னர் பார்க்கலாம். அதற்கு முன், இந்தச் சந்திப்பு மீண்டும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உயிர்ப்பிக்குமா? என்று சிலரிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தரப்பின் பலத்தையும் அதற்கான ஐக்கியத்தையும் விரும்புவோர் இத்தகைய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு இது உள்ளுர மகிழ்ச்சியை அளிக்கிறது. அப்படியென்றால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கடந்த காலத்தை நியாயமான முறையில் பரிசீலனை செய்ய வேண்டும். ஏறக்குறைய அது ஒரு போஸ்மோட்டம்தான். இதைச் செய்வதற்கு திறந்த மனதுடன் ஒவ்வொரு தரப்பும் தம்மை விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும். அதற்குத் துணிய வேண்டும். ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதும் ஒரு தரப்பின் மீது மறுதரப்பு பழி சுமத்துவதையும் நிறுத்த வேண்டும். மக்கள் நலனை முன்னிறுத்தினால் இது எளிது. இல்லையென்றால் கடிதினம் கடிது. ஆனால், அப்படியான ஒரு அவசியம் இன்று தமிழ் அரசியற் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியும் அது நாடு முழுவதிலும் பெற்ற வெற்றியும் தமிழ்ப் பரப்பில் அதற்கு உருவாகியுள்ள செல்வாக்கு மண்டலமும் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தி நிலை கொண்டுள்ள விதமும் தமிழ் அரசியற் தரப்புகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நெருக்கடி தனியே தமிழ்த்தேசியத்தை அடையாளமாகக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மட்டுமல்ல, இதுவரையிலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போன்றவற்றுக்கும் உள்ளது. ஏன் மலையகக் கட்சிகள், முஸ்லிம் கட்சிகளுக்கும் உண்டு. தேசிய மக்கள் சக்தி இன அடையாளக் கட்சிகளைச் சவாலுக்குட்படுத்தியுள்ளது. அதன் மீதும் இனரீதியான பார்வை இருந்தாலும் நடைமுறையில் இன அடையாள அரசியலை அது சவாலுக்குட்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையின் வெம்மை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளை எச்சரிக்கை அடைய வைத்துள்ளது. இப்பொழுது தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகள் இரண்டு வகையான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 1. தேசிய மக்கள் சக்தியை, அதனுடைய அரசியல் நகர்வுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பது. தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இருப்பதால் அது இரண்டு மடங்கு பலமானதாக உள்ளது. மட்டுமல்ல, அதை எளிதிற் குற்றம் சாட்டுவதற்கு முடியாத ஒரு நிலையும் உண்டு. அதாவது, கடந்த கால ஆட்சியாளர்களைப்போல ஆட்சித் தவறுகள், அதிகாரத் தவறுகள், போர்க்குற்றம் போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அதை எதிர்க்க முடியாது. மட்டுமல்ல, அதை நேரடி இனவாதச் சக்தியாக இப்பொழுது அடையாளப்படுத்தவும் முடியாது. கடந்த கால ஜே.வி.பிக்கு அப்படியான ஒரு அடையாளத்தைச் சொல்ல முயற்சிக்கலாம். ஆனால், அதையும் தேசிய மக்கள் சக்தி முறியடித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். எப்படியென்றால், 2010 க்கு முந்திய ஜே.வி.பி வேறு. இன்றைய ஜே.வி.பி வேறு என்பதை அது நிறுவி வருகிறது. முந்திய ஜே.வி.பியானது இந்திய எதிர்ப்பு, அமெரிக்க எதிர்ப்பு, வடக்குக் கிழக்கு இணைப்புக்கான எதிர்ப்பு, மாகாணசபை மீதான தயக்கம் போன்ற விடயங்களுடன் சம்மந்தப்பட்டது. இன்றைய தேசிய மக்கள் சக்தி, இவற்றைச் சாதகமான முறையில் கையாளும் ஒரு நிலைக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அல்லது அதற்கு அமையத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. என்பதால், அதனை இன அடையாளத்துடன் அல்லது இனவாத அடையாளத்துடன் சம்மந்தப்படுத்த முடியாத அளவுக்கு அது தன்னை வேறுபடுத்திக் காட்டுவதற்கு முயற்சிக்கிறது. இதில் அது கணிசமான அளவுக்கு முன்னேறியும் உள்ளது. என்பதால்தான் அது வடக்குக் கிழக்கிலும் மலையகத்திலும் ஏனைய தேசிய அரசியற் கட்சிகள் பெற முடியாத இடத்தை அதனால் பெற முடிந்தது. குறிப்பாக இளைய தலைமுறை தேசிய மக்கள் சக்தியின் பக்கம் ஈர்ப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியை வழமையான தேசிய அரசியற் சக்திகளோடு (சு.க, ஐ.தே.க, பொதுஜன பெரமுன) ஒப்பிட்டு அரசியல் செய்யவும் முடியாது. அவற்றை எதிர்கொண்டதைப்போல தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ளவும் முடியாது. எனவே அதற்கு ஒரு புதிய சிந்தனை முறையும் (New Thinking method) அணுகுமுறையும் (Approach) வேலைத்திட்டமும் (Work plan) வேண்டும். இவற்றை வகுத்துக் கொள்ளாமல் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்வது கடினம். ஆகவே கடந்த காலத்தில் இவை மேற்கொண்ட அரசியல் முறைமையையும் இவை பின்பற்றிய அரசியற் கருத்துநிலை அல்லது கொள்கையையும் இனியும் அப்படியே தொடர முடியாது. சுருக்கமாகச் சொன்னால், ஜே.வி.பியானது எப்படித் தன்னைப் புதிய சூழலுக்கு ஏற்றமாதிரி வடிவமைப்புச் செய்து கொண்டதோ, அவ்வாறு இவையும் தம்மை வடிவமைக்க வேண்டியுள்ளது. 2. இந்தத் தரப்புகள் இதுவரையில் எட்டிய – சாதித்த – அரசியல் வெற்றிகள் (அடைவுகள்) என்ன என்ற கேள்வி மக்களிடம் உருவாகியுள்ளது. இன அடிப்படையில் தமது அடையாளத்துக்காகவும் கடந்த கால ஆட்சித்தரப்புகளின் இன ரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்காகவும் மக்கள் இந்தத் தரப்புகளை நிபந்தனையின்றி ஆதரித்து வந்தனர். அதை இந்தத் தரப்புகள் தமக்கான வாய்ப்பாகவும் கையாண்டு வந்தன. ஆனால், இப்பொழுது உருவாகியிருக்கும் அரசியற் சூழல் வேறு. என்பதால் இவை புதிய அரசியல் அடையாளங்களை உருவாக்கி, அதை மக்களிடம் காட்ட வேண்டியுள்ளது. அப்படிக் காட்டவில்லை என்றால், மக்கள் இவற்றைப் பொருட்படுத்த மாட்டார்கள். மக்களுடைய உணர்வுத்தளமும் வாழ்க்கைச் சவால்களும் பிரச்சினைகளும் தேவைகளும் வேறாக விட்டது. அதைப் புரிந்து கொண்டு அரசியல் முன்னெடுப்புகளைச் செய் வேண்டிய தேவை – அவசியம் இந்தத் தரப்புகளுக்கு வரலாற்று நிர்ப்பந்தமாகியுள்ளது. இந்தப் பின்னணியில்தான் நாம், தமிழரசுக் கட்சி – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சந்திப்பையும் அதனுடைய அடுத்த கட்ட நகர்வையும் இதைக்குறித்து இவற்றின் ஆதரவாளர்கள் கொள்ளும் கனவையும் (விருப்பத்தையும்) பார்க்க வேண்டும். இப்பொழுதும் தமிழ்த்தேசியச் சக்திகளிடம் தடுமாற்றங்களே அதிகமாக உண்டு. இதற்குக் காரணம், மறுபரிசீலனைக்கான சிந்தனையும் உளநிலையும் இவற்றிடம் இன்னும் ஏற்படாதிருப்தேயாகும். ஏராளமாக விளைந்து போயிருக்கும் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளில் ஒன்றிற் கூட இன்னும் புதிய அடையாளத்தை நோக்கிய பயணச் சுவட்டைக் காண முடியவில்லை. இதனால்தான் பட்டும் படாமலும் முட்டியும் முட்டாமலும் ஒரு மாதிரியாக இவை சந்திப்புகளைச் செய்கின்றன; பேசுகின்றன. இப்பொழுது தமிழ்த்தேசியத் தரப்புகள் மும்முனையில் – மூன்று தரப்புகளாக உள்ளன. 1. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை. இதில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், சிவாஜிலிங்கம் – ஸ்ரீகாந்தா இரட்டையர்களின் தமிழ்த்தேசியக் கட்சி மற்றும் சரவணபவன், தவராஜா, அருந்தவபாலன் உள்ளிட்ட ஒரு தரப்பு. 2. புளொட், ஈ.பி.ஆர்.எல். எவ், ரெலோ, சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் ஆகியவை இணைந்துள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி. 3. இலங்கைத் தமிழரசுக் கட்சி. தனிக்கட்சியாக இருந்தாலும் தற்போது தமிழ்ப்பரப்பில் வலுவான சக்தியாக இருப்பது இலங்கைத் தமிழரசுக் கட்சியே. ஏனைய கட்சிகளுக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தலா ஒன்று என்ற அளவிலேயே உண்டு. ஆனால், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணிக்கு வடக்குக் கிழக்கு முழுவதிலும் உள்ளுராட்சி சபைகளில் செல்வாக்குண்டு. இந்த மூன்று சக்திகளும் இடைவெளிகளுடன் கூடிய தமிழ்த்தேசிய அரசியலைப் பிரகடனம் செய்துள்ளன. அரசியல் தீர்வு, மக்களுடனான அணுமுறை, தமது அரசியலை முன்னெடுக்கும் விதம், அரசியற் கொள்கை போன்றவற்றில் துலக்கமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவை ஒன்றும் புதியவையும் இல்லை. கடந்த காலத்தில் தூக்கிச் சுமந்த அதே பழைய சரக்குத்தான். ஆனால், இவற்றை இன்னும் சுமந்து கொண்டேயுள்ளன. பாரம்பரிய அரசியச் சக்திகளையும் பாரம்பரிய அரசியற் சித்தாந்தங்களையும் மீள்பரிசீலனை செய்யுமாறு வரலாறும் சூழலும் வற்புறுத்துகின்றன; நிபந்தனை செய்கின்றன. இருந்த போதும் அதைப்பற்றிய எந்தவிதமான உணர்வுமின்றி, அதே சுமைகளோடு பிடிவாதம் செய்து கொண்டிருப்பதோடு, ஒன்றோடு ஒன்று முரண்பட்டுக்கொண்டும் உள்ளன. சிலவேளைகளில் தமக்குள்ளேயே முரண்பட்டுக் கொள்வதும் உண்டு. இது மக்களுக்குச் சலிப்பையும் ஏமாற்றத்தையுமே அளிக்கின்றன. தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன், தமிழ்பேசும் சமூகங்களிடம் ஒரு கூட்டுக் கோரிக்கை இருந்தது, தமது அரசியற் சக்தி திரண்டிருக்க வேண்டும். அப்போதுதான் பலமானதாக இருக்கும் என்பதாக. அன்றைய ஆட்சியாளர்களை எதிர்கொள்வதற்கு அப்படியான ஒரு திரண்ட சக்தியின் பலம் தேவையானதாகவும் இருந்தது. இன்றைய நிலையில் அந்தத் திரட்சி – ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு என்பதெல்லாம் போதுமானதல்ல. அதையும் கடந்து புதிய அரசியல், புதிய முன்னெடுப்பு, புதிய அணுகுமுறை, புதிய வேலைத்திட்டம் போன்றவையே தேவை. ஆக, மக்களுடைய நலனுக்கான முறையில் யதார்த்த அரசியலை – உலகுடன் பொருத்தக் கூடிய முறையிலான நடைமுறை அரசியலைச் சிந்திக்க வேண்டும். அதுவே மெய்யான பலத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு – விடுதலையை விரும்பும் சமூகத்துக்கு அளிக்கும். அதுவரையில் இவை வெறும் தேநீர்ச் செலவீனத்தையும் பத்திகை – இணையச் செய்திகளுக்கான இடத்தையுமே எடுக்கும். அதற்கு மேல் எதுவுமே இல்லை. இது சற்றுக் கடுமையான விமர்சனம்தான். ஆனால், தவிர்க்க முடியாதது. தேவையானது. https://arangamnews.com/?p=12515
  13. நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய ‘டித்வா’ புயலுடன் 1,241 மண் சரிவுகள்!; அவை தொடர்பான செய்மதிப் படங்கள் வெளியிடும் தகவல்கள் டித்வா புயலின் போதான சீரற்ற காலநிலை காலத்தில் நாட்டில் மலையக பகுதிகளில் 1241 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக செய்மதிப் படங்களின் ஊடாக தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுவதன்படி டித்வா புயலை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற பேரழிவுகள் தொடர்பான செய்மதி படங்களுக்கமைய சிறிய மற்றும் பாரியளவிலான 1241 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 10, 20 வருடங்களில்கூட மொத்தமாக இந்தளவுக்கு மண்சரிவுகள் கிடையாது. இந்த மண்சரிவுகளில் அதிகமானவை கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இந்தளவுக்கு பேரனர்த்தம் நடந்துள்ளது. சூறாவளியின் பயண பாதை மாறியதாலும், நாட்டுக்குள் பல மணித்தியாலங்கள் இருந்தமையினாலும் பேரனர்த்தங்கள் நடந்துள்ளன. கடந்த காலங்களில் நடந்த அனர்த்தங்களுடன் இதனை ஒப்பிட முடியாது. அந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=352151
  14. உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும் முருகானந்தம் தவம் பொருளாதார நெருக்கடிகள், எதிர்க்கட்சிகளின் குடைச்சல்களினால் அனுரகுமார அரசு ‘ஆயுசு நூறு நித்தம் கண்டம்’ என்ற வகையில் ஆட்சியை நகர்த்துகின்ற நிலையில், இயற்கையும் தன் பங்கிற்கு ‘டிட்வா’ புயலாக இலங்கையர்களை மட்டுமன்றி ஆட்சியாளர்களையும் புரட்டிப்போட்டு மரண அடி கொடுத்துள்ளது. ‘டிட்வா’ புயலும் அதன் விளைவான பெரு மழையும் இலங்கையில் ஆடிய கோரத் தாண்டவத்தினால் ஏற்பட்டுள்ள பேரழிவுகளிலிருந்து நாடும் மக்கள் மட்டுமன்றி ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசும் தற்போதைக்கு மீண்டெழக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. இலங்கையில் பதிவான வானிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு வானிலை சார் அனர்த்தமாக ‘டிட்வா’ புயல் பதிவாகியுள்ளது. 2004இல் சுனாமி ஏற்படுத்திய பொருளாதார ரீதியான அழிவை விடவும் பல மடங்கு அதிகமான பொருளாதார அழிவை ஏற்படுத்தி அனுரகுமார ஆட்சியாளர்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளது. ‘டிட்வா’ புயல், மழையால் முழு நாடும் வெள்ளத்தில் மூழ்கியது, மலைகள் சரிந்தன, ஆறுகள், அணைக்கட்டுகள், குளங்கள் உடைப்பெடுத்தன. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பாலங்கள், வீடுகள், வீதிகள், கட்டிடங்கள், வர்த்தக நிலையங்கள் தகர்ந்தன, பாரிய மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன, பல மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டன, இலட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 250க்கும் அதிகமான வீதிகள் பாரிய அழிவுகளைச் சந்தித்தன. 15 பாலங்கள் வரை அழிந்துள்ளன. பல்லாயிரம் தொழில்கள் அழிக்கப்பட்டன. 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தழிந்து போயின. இந்த ‘டிட்வா’ புயலின் கோரத் தாண்டவத்தினால் 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இதுவரையில் 650 வரையிலான உயிரிழப்புகளும் 200க்கு மேற்பட்டவர்கள் காணாமல்போன சம்பவங்களும் பதிவாகின. நாடு முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்தழிவுகளும் பொருளாதார அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. ‘டிட்வா’ புயல் வெள்ளம் ஆகியவற்றின் இந்தக் கோரத் தாண்டவங்களினால் நாடு எதிர்கொள்ள இருக்கும் நிலைமை மிகவும் கடினமானது என்றால், அனுரகுமார அரசு எதிர்கொள்ளப்போகும் அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கடிகள், சவால்கள் மிகப் பயங்கரமானதாக இருக்கப் போகின்றன. இலங்கைக்கு இயற்கை ஏற்படுத்திய இந்தப் பேரழிவை, அதன் விளைவுகளை, அந்தப் பேரழிவிலிருந்து மீண்டெழும் சவாலை ஒரு புதிய அரசாங்கமாக, அனுபவமற்ற அமைச்சர்களைக் கொண்டவர்களாக, சிவப்பு சட்டை அரசியல்வாதிகளாக, சீன சார்பு கொள்கையுடையவர்களாக, மேற்குலக நாடுகளினால் வேண்டத் தகாதவர்களாக பார்க்கப்படுபவர்களாக, நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகளினால் மிகவும் வெறுக்கப்படுபவர்களாக, ஜே.வி.பி. கட்சித் தலைமை எடுக்கும் முடிவையே அரசாங்கத்தின் முடிவாக அறிவிக்கும் நிலையில் இருக்கும் இந்த அனுரகுமார தலைமையிலான ஆட்சியாளர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதே இன்றுள்ள மிகப்பெரும் கேள்வி. இந்தப் பேரழிவு நடந்துள்ள தருணத்தில், “நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம். எமக்கு அரசியல் செய்ய நிறைய நேரம் இருக்கிறது. பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள அதிக நேரம் கிடையாது. ஒன்றாக இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர், தனித்தனியாக அரசியல் செய்ய முடியும்’’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். கடந்த காலத்திலே சுனாமிக்குப் பின்னர் அப்போதைய சந்திரிகா அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து ‘சுனாமி பொதுக் கட்டமைப்பு’ ஒன்றை அமைத்து அதன் மூலம் சுனாமியால் பேரழிவைச் சந்தித்த வடக்கு, கிழக்கு மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய முற்பட்டபோது, இதே ஜே.வி.பி. தான் அதனை அனுமதிக்கக் கூடாது என்று பாராளுமன்றத்திற்குள் போராட்டம் செய்ததுடன், நீதிமன்றத்திற்குச் சென்று சுனாமி பொதுக் கட்டமைப்பை உடைத்தெறிந்தது. அதே ஜே.வி.பி. தான் இன்று ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவைச் சந்தித்த மக்களுக்கு உதவ எதிர்க்கட்சிகள். பொது அமைப்புக்கள் ஒத்துழைக்க வேண்டுமென அழைப்பு விடுகின்றது. அனுரகுமார அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், அமைச்சுப் பொறுப்புக்களில் இருப்பவர்களில் 90 வீதமானோர் புது முகங்கள். எந்த அரசியல் அனுபவமும் அரசியல் அறிவும் அற்றவர்கள். ஜே.வி.பி.யின் தலைமையகமான ‘பெலவத்தை’ அலுவலகம் சொல்வதை மட்டும் செய்பவர்கள். தமது சம்பளத்தையே கட்சிக்கு தானம் செய்பவர்கள் இவர்கள் மூளையை நம்புவதில்லை. தமது வாய் பலத்தையே (ஆவேசப் பேச்சு-பிரசாரம்) நம்புகின்றவர்கள். சர்வதேச நாடுகளின் நன்மதிப்பைப் பெறாதவர்கள். இவ்வாறானவர்கள் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் எவ்வாறு மீட்டெடுப்பார்கள்? ஏற்பட்டுள்ள பொருளாதார பேரழிவை எவ்வாறு சீர் செய்வார்கள்? என்பதுவே பொதுவாகப் பல தரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ள கேள்வி. ஆனால், எப்போதும் போலவே வாயால் வடை சுடுபவர்களான அனுரகுமார அரசினர் இந்த விடயத்திலும் எதிர்க்கட்சியினரைக் கடுமையாக விமர்சிப்பதுடன், இயற்கை பேரழிவால் பொருளாதாரத்தில் மூழ்கிய நாட்டை மிக சுலபமாக மீட்டெடுத்து விடுவோம் என்ற கணக்கில் வாய் சவடால்களை விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஏற்கெனவே பொருளாதார ரீதியில் படுபாதாளத்திலிருக்கும் இலங்கையை இந்த ‘டிட்வா’ பேரழிவு இன்னும் அதலபாதாளத்திற்குள் தள்ளியுள்ள நிலையில், அதிலிருந்து விரைவில் மேலெழுந்து வருவதென்பது கற்பனைக் கதையாக மட்டுமே இருக்க முடியும். இவ்வாறான நிலையில்தான் ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில், “அவசர அனர்த்த நிலைமை முடிவுக்கு வந்த நிலையில், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளைச் சுத்தம் செய்து மீளக்குடியேறுவதற்கு ஏற்றதாக மாற்ற ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. அந்த தொகையை அனைவருக்கும் வழங்கி வருகிறோம். பாதிக்கப்பட்ட வீடுகளில் மீளக் குடியேறுவதற்கான அத்தியாவசிய சமையலறை உபகரணங்களை வாங்குவதற்கு, உரிமையாளரைப் பொருட்படுத்தாமல், ஒரு முறை வழங்கப்படும் மானியமாக ஒரு வீட்டிற்கு ரூ.50,000வும் நாங்கள் வழங்குகிறோம். அத்துடன், மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் இருக்கும் குடும்பங்களுக்கு வீடு திரும்ப 3 மாத காலத்திற்கு ரூ.25,000 வழங்கவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதை 6 மாதங்களுக்கு நீடிக்கவும் எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர், டிசெம்பர், ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு வீடுகளை இழந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாடகை வீட்டிற்குச் செல்வதற்காக மாதாந்தம் ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும். இது 3 மாதங்களுக்கு வழங்கப்படும். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நெல், தானியங்கள் மற்றும் சோளம் போன்றவற்றுக்கு ஹெக்டெயாருக்கு 1,50,000 உதவித் தொகை வழங்கப்படும். சுமார் 1,60,000 ஹெக்டெயார் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரக்கறி விளைச்சலுக்கு ஹெக்டெயாருக்கு ரூ.2 இலட்சம் உதவித்தொகை வழங்கப்படும். பேரிடரால் பாதிக்கப்பட்ட கால்நடை வைத்திய அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கால்நடை வளர்ப்புப் பண்ணையையும் மீண்டும் தொடங்க தலா ரூ.2 இலட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம். மேலும், பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகமும், தமது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க ரூ.200,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகள் முழுமையாகச் சேதமடைந்தால், அந்த படகுகள் ஒவ்வொன்றிற்கும் 4 இலட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்களைப் பெறுவதற்காக திறைசேரியிலிருந்து ரூ.15,000 உதவித்தொகை வழங்கவும், மேலதிகமாக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து ரூ.10,000 உதவித்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்தின் தாக்கத்தால் சேதமடைந்த வர்த்தகக் கட்டிடங்களுக்கு ஒரு அலகுக்கு அதிகபட்சமாக 50 இலட்சம் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அனர்த்தத்தின் தாக்கத்தால் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளுக்கு புதிய வீடு கட்ட 50 இலட்சம் வழங்கப்படும். காணி இல்லையென்றால், அரச நிலம் வழங்கப்படும். காணி வழங்கக் காணி இல்லையென்றால், வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்குக் கூடுதலாக, காணியைப் பெற 50 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். அனர்த்தத்தின் தாக்கத்தால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளை புனர்நிரமாணம் செய்ய அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வழங்க எதிர்பார்க்கிறோம். ரூ.10, 15, 20, 25 இலட்சம் என 4 பிரிவுகளின் கீழ் அந்தப் பணத்தை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். அனர்த்தத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்காக அவர்களின் உறவினர்களுக்கு ரூ.10 இலட்சம் உதவித்தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்” என உறுதிமொழிகளாக அள்ளி விட்டுள்ளார். ஆனால், இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவது அதுவும் பாதிக்கப்பட்ட மக்களையோ சரியாக இனம் கண்டு, ஊழல் மோசடியற்ற வகையில் நிறைவேற்றுவதென்பது அனுரகுமார அரசுக்கு குதிரைக் கொம்பாகவே இருக்கும். இயற்கைப் பேரழிவைச் சந்தித்துள்ள மக்களை தைரியப்படுத்த, அவர்கள் தமது அரசின் மீது நம்பிக்கை வைக்க அனுரகுமார அரசு அள்ளி விட்டுள்ள இந்த உறுதிமொழிகள் கூட மைத்திரி-ரணில் நல்லாட்சிக்கு முடிவுகட்டிய ‘உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்’ போல கோட்டபாய ராஜபக்‌ஷ அரசுக்கு முடிவு கட்டிய ‘கொரோனா’ போல அனுரகுமார ஆட்சிக்கு இந்த ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவும் அரசு வழங்கியுள்ள நிவாரண வாக்குறுதிகளும் முடிவு கட்டினாலும் ஆச்சரியப்பட முடியாது. https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/உறுதிமொழிகளை-நிறைவேற்றுவது-அனுரகுமார-அரசுக்கு-குதிரைக்-கொம்பாகவே-இருக்கும்/91-369424
  15. இப்படி ஆங்கில மருத்துவம் வேலை செய்யவில்லை என்று உயிரை நீட்டிக்க நாட்டு வைத்தியத்திற்குப் போகின்றவர்கள் உயிரை விரைவில் இழப்பது துரதிஸ்டம்.
  16. வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு Mano ShangarDecember 11, 2025 10:54 am 0 “வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். “ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம். ஆனால் நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம். இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள். அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/we-cordially-invite-the-hill-country-people-to-settle-in-the-north-and-east-sumanthirans-announcement/
  17. தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் - இளங்குமரன் உறுதியளிப்பு 11 Dec, 2025 | 12:34 PM குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அப்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார். குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு கடற்தொழிலாளர்களை நேற்று புதன்கிழமை (10) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடிய போதே , அவ்வாறு தெரிவித்தார். இந்த சந்திப்பில்அப்பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பான துறைமுக நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு, தகுந்த தீர்வுகளை விரைவாக பெற்று தருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார் https://www.virakesari.lk/article/233057
  18. யாழ் பல்கலையின் 19 மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேரின் விளக்கமறியல் காலம் நாளை (12) வரை நீடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு கனிஷ்ட மாணவர்களை அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டதாக யாழ் பல்கலைக்கழத்தின் 19 சிரேஸ்ட மாணவர்களை கடந்த மாதம் 29ம் திகதி கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று (10) மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைகளை முன்னெடுத்த மேலதிக நீதிவான் சந்தேக நபர்கள் 19 பேரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://adaderanatamil.lk/news/cmj0zpu2c02mgo29nedug969p
  19. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில், தம்பிலுவில் பொதுச்சந்தை முன்பாக சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மாறி மாறி வருகின்ற ஒவ்வொரு அரசாங்கங்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியை மறுப்பதாகவும், மனித உரிமைகளை மதிக்காமல் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டினர். தமது கவலைகள் தொடர்பில் வௌிப்படுத்தி வரும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் தொல்லியல் எனும் போர்வையில் காணி அபகரிப்புகள் இடம்பெறுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். மனிதப் புதை குழிகள் விவகாரம் போன்றவற்றிலும் சர்வதேச தலையீட்டுடனான விசாரணை பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திலும் மனித உரிமை விடயங்களிலும் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையும் தலையீடும் வேண்டும் எனவும் இந்த மனித உரிமைகள் தினத்திலும் சர்வதேசத்திடம் தமது கோரிக்கைகளையும் முன் வைப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர். https://www.samakalam.com/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-11/
  20. இலங்கை – இந்திய மீனவ பிரச்சினைக்கு தீர்வு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கை மீனவர்கள் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்துமாறு வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் இன்று (10) வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. தொடர்ச்சியாக வடக்கு, மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையினால் 2 இலட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுமார் 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 200000 மக்கள் வடக்கில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரினால் அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்த வடக்கு மக்கள் மீன்பிடியை மட்டுமே நம்பியுள்ளனர். இவ்வாறிருக்கையில் அந்த ஒரே வாய்ப்பும் இந்திய மீனவர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த மீனவப் பிரச்சினையை தீர்க்க இருநாடுகளின் மீனவர்களுக்கும் இடையில் பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களுக்கு இந்தியா வழங்கிய உதவியினை நன்றி கூறும் அதேவேளை தமிழக மீனவர்களின் தடை செய்யப்பட்ட மீன்பிடி செயற்பாடுகள் காரணமாக கடல் வளம் அழிக்கப்படுகின்றமை கவலை அளிப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே இந்த விடயம் தொடர்பில் உரிய தீர்வு ஒன்றை பெற்றுத் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழில் இணையம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. https://www.samakalam.com/இலங்கை-இந்திய-மீனவ-பிரச்-2/
  21. 38வது பெண்கள் சந்திப்பு (பேர்லின்) பற்றிய ஒரு குறிப்பு December 8, 2025 38வது பெண்கள் சந்திப்பு: — விஜி – பிரான்ஸ் — இம்முறை பெண்கள் சந்திப்பு ஜேர்மனி பேர்லின் நகரில் ஒக்டோபர் மாதம் இரண்டு நாட்கள் (24-26) தொடர்ச்சியாக நடைபெற்றது. இம்முறை பெண்கள் சந்திப்பு முழுவதும் “பெண் ஒடுக்குமுறையை ஊடறுத்துச் செல்லும் ஒடுக்குமுறைகள்“ (Intersectionality) என்கின்ற கருப்பொருளின் கீழ் விடயங்கள் பேசப்பட்டன. அதாவது பலவிதமான இன, மத, சாதி, வர்க்க, நிற, பாலின ஒடுக்குமுறைகளுக்குள் பெண்கள் மீதான பன்மைத்துவ அதேநேரம் ஒருமித்த ஒடுக்குமுறைகள் பற்றிய அவதானங்களும், ஆய்வுகளும் தலைப்புகளாகக் கொண்டு உரைகளும், உரையாடல்களும் அமைந்திருந்தன. முதல்நாள்: வழமைபோல் “பெண்கள் சந்திப்பு” இன் முதலாவது நிகழ்வாக ஜேர்மன் பெண்கள் சந்திப்புக்குழுவைச் சேர்ந்த “கமலா” அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து “உமா” அவர்கள் பெண்கள்சந்திப்பு பற்றிய ஒரு சிறிய அறிமுகம் செய்தார். பெண்கள் மனம்திறந்து, சுதந்திரமாக பேசுவதற்கு பெண்கள் சந்திப்பின் அவசியம் பற்றியும், அதற்காக 1990 ஜேர்மனியின் கேர்னே நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பானது இதுவரை ஐரோப்பாவின் பல நகரங்களிலும், கனடாவிலும் 38 சந்திப்புக்கள் வரை தொடர்வதாக குறிப்பிட்டார். தொடர்ந்து சுயஅறிமுகம் செய்யப்பட்டது. முதலாவது நிகழ்வாக இந்த வருடம் எம்மைவிட்டுப்பிரிந்த எங்கள் தோழியான புஸ்பராணி பற்றிய நினைவுகூரல்/commemorating comrade Pushparani: தோழி புஸ்பராணி அவர்களின் போராட்ட குணம், போராட்ட வரலாற்றில் அவரின் பங்கு, தனிப்பட்ட வாழ்வின் போராட்டம் பற்றியும் தமிழீழப் போராட்ட வரலாற்றில் சிறைக்குச்சென்ற முதலாவது பெண்கள் வரிசைசையைச் சேர்ந்தவர் என்பதையும் மற்றும் அவரது “அகாலம்” நினைவுக் குறிப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் கூறி, இவ்வாறான பெண் ஆளுமையை பெண்கள் சந்திப்பு இழந்து நிற்கிறது என்றும் அவரது நினைவுகூரலை விஜி அவர்கள் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து பலரும் புஸ்பராணி பற்றிய தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்கள். அடுத்த நிகழ்வாக இப்பெண்கள் சந்திப்பின் கருப்பொருளான “பெண் ஒடுக்குமுறையை ஊடறுத்துச் செல்லும் ஒடுக்குமுறைகள் பற்றிய அறிமுகம் /Introduction on Intersectionality: இவ் அறிமுகம் ஜேர்மனியயைச் சேர்ந்த உமா அவர்களால் செய்யப்பட்டது . Intersectionality என்பதை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பதை, முதன் முதலில் அமெரிக்க பெண்ணியவாதியான Kimberlé Crenshaw அவர்களால் முன்னெடுக்கப்பட்ட கருதுகோளில் இருந்து உருவானதொன்றாகும். அவர் அமெரிக்க வெள்ளைப் பெண்ணியவாதிகளினால் கறுப்புபெண்ணியவாதிகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை முன்வைத்ததைத் தொடர்ந்து இக்கருதுகோள் விரிவாக்கம்பெற்றது. உதாரணமாக ஒரு தலித் பெண் சாதியத்துக்கெதிராகவும், அதேநேரம் ஆணாதிகத்துக்கெதிராகவும், வர்க்கரீதியான ஒடுக்குமுறைக்கெதிராகவும் போராட வேண்டியிருப்பதை குறிப்பிட்டார். மேலும் உலகளாவிய ரீதியில் இவ் ஆய்வுமுறையானது பேசப்படுபடுவது போல் ஜேர்மனியிலும் பேசப்படுவதையும் விளக்கினார். தொடர்ந்த இடைவேளைக்குப் பின்னர் பிரித்தானியாவில் இருந்து கலந்துகொண்ட நிர்மலா அவர்களால் “புதிய பூமி எழுந்து வரட்டும் ” என்கின்ற பாடல் படப்பட்டது. தொடர்ந்து , “இனவழிப்புக்குள்ளாகும் சமூகங்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும், மதரீதியான பாகுபாடுகளும்/ Religious discrimination and the discrimination faced by the genocidal communities” என்கின்ற தலைப்பில் அயர்லாந்தில் இருந்து வந்து கலந்துகொண்ட தோழர் ஷிபானா நியாஸ் அவர்கள் ஒரு நீண்ட ஆழமான உரையை நிகழ்த்தினார். Intersectionaty என்கின்ற பகுப்பாய்வு முறையின் ஊடாக ஒருவரது அடையாளத்தின் பல்வேறு கூறுகளான இனம், பாலினம், வர்க்கம், மதம், பாலியல் நோக்கு, மற்றும் திறன் ஆகியவை ஒரேநேரத்தில் எவ்வாறு ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டும், வேறுபட்டும் மாறுபட்ட அனுபவங்களை உருவாக்குகின்றன என்பதை விளக்கினார். இதற்கு இலங்கையிலும், உலகளாவிய ரீதியிலும் முஸ்லீம் சமூகத்தின் மீதான வெறுப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதையும், இலங்கையை பொறுத்தவரை சிங்கள பௌத்த தேசியத்துக்காக சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் மீது எவ்வாறு ஒடுக்குமுறை நடாத்தப்பட்டதென்றும், மேலும் சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் மீது எவ்வாறு இனப்படுகொலை நடத்தப்பட்டது என்றும், அதே நேரம் தமிழ் தேசியத்துக்காக LTTE யினர் இன்னுமொரு சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மீது நடத்திய இனச்சுத்திகரிப்பு, பள்ளிவாசல் படுகொலைகள் என்பவற்றையும் விபரித்தார். மதிய உணவின் பின்னர் தொடர்ந்த பெண்கள் சந்திப்பில்: ==++=+=+++======= “ஒடுக்குமுறைக்குள்ளாகும் பெண்கள் நீதியைப் பெறுவதற்காக எதிர்கொள்ளும் சவால்கள்/Challenges to Accessing Justice for Women with Intersectional Identities” இந்தத் தலைப்பில் இந்தியாவில் இருந்து வந்திருந்த கிருபா முனுசாமி அவர்கள் பேசினார். “நீதி என்பது எல்லோருக்கும் சமமானதல்ல” என்பதை சாதிய ஒடுக்குமுறைக்குள்ளான சமூகங்களுக்கும் மேட்டுக்குடி சமூகங்களுக்குமிடையிலான நீதியின் பாரபட்சத்தையும், அதை அடைவதற்கான வழிமுறைகளின் வேறுபாட்டையும் அனுபவ ரீதியாக விளக்கினார். மேலும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு நீதியைப் பெறுவதற்கான முயற்சிகளே தடைசெய்யப்பட்டுள்ளன. அதையும் தாண்டி மிகவும் கடுமையான போராட்டத்தினூடாக உச்சநீதிமன்றத்தை சென்றடைந்தாலும் அங்கும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதை பல வழக்குகளுக்கு என்ன நடந்தது என்கின்ற உதாரணத்துடனும் தனது களச்செயற்பாட்டு புள்ளிவிபரங்களோடும் விரிவாக விளக்கினார். தொடர்ந்து,,, “சாதி இப்ப மறைஞ்சு போச்சு” என்கின்ற பாடலை சாந்தியும் உமாவும் இணைந்து பாடினார்கள். அதனைத்தொடர்ந்து,,, “இடம்பெயர்வில் இன, வர்க்க ஒடுக்குமுறைகள் (Racial and class discrimination in migration)” என்கின்ற தலைப்பில் அவுஸ்ரேலியாவில் இருந்து வந்து கலந்துகொண்ட ஹரிகீர்த்தனா அவர்கள் உரையாற்றும் போது, இடப்பெயர்வில் இருக்கக்கூடிய பாதிப்புகள் இனம், நிறம், தேசியம், மதம், வர்க்கம், பாலினம், பாலியல் போன்ற பல பரிமாணங்களில் அதனது பாதிப்பை பகுப்பாய்வு செய்யப்படவேண்டியுள்ளது. உலகில் இடப்பெயர்வுகள் எப்போதிருந்தோ ஆரம்பித்திருந்தாலும், காலணித்துவ காலங்களில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு லட்சக்கணக்கான கறுப்பு மக்களை அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டதே பெரும் இடப்பெயர்வாகும். ஏன் கறுப்பு மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டார்கள், எவ்வாறு மிகமோசமாக நடாத்தப்பட்டார்கள் என்பதையும், அதற்கு நிற, இன, மத, வர்க்க வேறுபாடுகள் எவ்வாறு ஊக்கிகளாக அமைந்தன என்பதையும் கூறினார். தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற தமிழர்களின் இடப்பெயர்பு, முஸ்லிம்களின் இடப்பெயர்வு போன்றவைக்கு பின்னிருந்து காரணங்களையும் அதேநேரம் இடப்பெயர்ந்த மக்களுக்குள் நடந்த சாதிய, வர்க்க முரண்பாடுகளையும் சுட்டிக்காட்டினார். தேநீர் இடைவேளையின் பின்னர், சுமதி சிவமோகனின் “மௌனத்தின் நிழல்கள்” நாடகத்தில் இருந்து ஒருபகுதியை பிரித்தானியாவில் இருந்து கலந்துகொண்ட நிர்மலா மற்றும் ராணி இருவரும் நிகழ்த்திக்காட்டினர் . முதலாவது நாள் பெண்கள் சந்திப்பின் இறுதி நிகழ்வாக “37வது பெண்கள்சந்திப்பு பற்றிய ஒரு ஆய்வுரை” அந்நிகழ்வினை நடாத்திய ஓவியா, மிதுனா போன்றவர்களால் செய்யப்பட்டது. 26.10.2025: முதலாவது நிகழ்வாக,,, “பெண்ணிலைவாத செயல்வாதத்திற்குள் திருநர்களின் பங்களிப்பு/ The Role of Transgenders in Feminist Activism” இலங்கையில் இருந்து ஏஞ்சல் குயின்ரஸ் அவர்கள் பேசினார்கள். ஒரு குயர் சமூகத்தை சேர்ந்தவள் என்கின்ற வகையில் என்னுடைய அனுபவ ஆய்வினூடாக இதைப் பார்க்கும்போது பெண்ணிய அமைப்புகளும் பெண்ணியமும் குயர் சமூகத்து செயற்பாடுகளுக்கு மிக நெருக்கமாகவும் ஆதரவாகவும் இருக்கின்றது என்றார். மேலும் குயர் சமூகங்களுக்கிடையேயும் Intersectionality ஆய்வுமுறை முக்கியமானது. ஏனெனில் இங்கும் இன, வர்க்க, ஆணதிக்க, சாதி வேறுபாடுகளுக்கமைய ஏற்றத்தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்துகொண்டிருப்பதை சுட்டிக்காட்டி பேசினார். தேநீர் இடைவேளையின் பின்னர் மீண்டும் “புது பட்டு வரி போட்டு ” என்கின்ற பாடலை சாந்தியும் உமாவும் இணைத்து பாடினார்கள் . பால்நிலை வன்முறை மற்றும் கூட்டுப் பராமரிப்பு Gendered Violence and Collective Care நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த கார்த்திகா நடராஜாவும் இந்கிலாந்தில் இருந்து வந்திருந்த மினோயா பற்குணம் அவர்களும் இணைந்து இத்தலைப்பின் கீழ் “Speech, workshop & discussion” என்ற ஒழுங்கில் நிகழ்வினை நிகழ்த்தினர். முதலில் பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையை புரிந்துகொள்வதற்கு தன்னுடைய கள ஆய்வில் கோலம் போடுவதினூடாக புரிந்துகொள்ள முயற்சிசெய்ததாகவும், அதில் பெண்களின் மனநிலையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததாகவும் மேலும் பல கள ஆய்வுபற்றிய விடயங்களை மினோயா அவர்கள் பகிர்ந்துகொண்டார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்களை எவ்வாறு அணுகுதல் என்கின்ற விடயத்தை, hard roadblocks, soft roadblocks என்கின்ற இரண்டு வழிகளினூடாக அணுகமுடியும் என்று விளக்கியதோடு அதனது வேறுபாட்டினை அறிய சந்திப்பில் இருந்த அனைத்து பெண்களையும் இணைத்து ஒரு செயற்பாட்டு நிகழ்வையும் நடாத்தினார்கள். அதிலிருந்து தொடர்பாடலில் எவ்வாறு தடை ஏற்படுகிறது என்பதையும், எவ்வாறான கேள்விகளை கேட்டு அவர்களை தொடர்ச்சியாக உரையாட வைக்கமுடியும் என்பதையும் கலந்துரையாடல் மூலம் வெளிக்கொண்டுவந்தார் கார்த்திகா அவர்கள். இதன்பின்னர், “உரத்துப்பேசுவோம்” என்கின்ற கவிதா நிகழ்வு நடைபெற்றது. இக்கவிதா நிகழ்வில் உமா, லிவிங் ஸ்மைல் வித்தியா, சுகிர்தராணி போன்றவர்களின் கவிதைகளை கமலா, சாந்தா, உமா, விஜி நால்வரும் ஆற்றுகைப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து , “தமிழ் சினிமாவில் விளிம்பு நிலை சமூகங்களின் சித்தரிப்பு / Portrayal of marginalized communities in Tamil cinema” என்ற தலைப்பில் இங்கிலாந்தில் இருந்து கலந்துகொண்ட அஞ்சனா அவர்கள் பேசுகையில் தமிழ் சினிமாவில் பெண்களுக்கான இரண்டாம்பட்ச நிலை பற்றி அன்றிலிருந்து இன்றுவரையான சினிமாக்களை எடுத்து பன்மைத்துவ பாகுபாடுகள் குறித்து ஆய்வுசெய்தார். அதாவது தமிழ் சினிமாக்களில் நிற பாகுபாடு, சாதியம், பாலின பேதம் காரணமாக பெண்களையும் ஒடுக்கப்பட்டவர்களையும் LGBTQ சமூகத்தினரையும் எவ்வாறு சித்தரிக்கின்றார்கள் என்பதை விரிவாக உதாரணங்களோடு ஆராய்தார். மேலும் இன்றைய கால இயக்குனர்களான பா.ரஞ்சித், மாரி செல்வராஜா, வெற்றிமாறன் போன்றவர்களின் சமூகத்திற்கு தேவையான சிறந்தபடங்கள் பற்றியும், அவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்பதோடு அவர்களிடம் இருக்கின்ற தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான கரிசனை பற்றியும், தேடுதல் பற்றியும் கேள்வியெழுப்பவேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார். முக்கியமாக இவர்களிடம்தான் இக்கேள்விகளை கேட்கமுடியும். ஏனெனில் எங்களுக்கு இவர்கள் நெருக்கமாக இருப்பவர்கள் என்று தனது உரையில் குறிப்பிட்டார் . இறுதியாக அடுத்த சந்திப்பு பிரான்சில் நடாத்துவதற்கு விஜி, வனஜா போன்றோர் பொறுப்பெடுத்துக் கொண்டனர். முடிவாக இப்பெண்கள் சந்திப்பு நல்லதொரு விடயத்தை (Intersectionality) எடுத்து அதை பல்வேறு பெண்கள் தரப்பினரின் பகுப்பாய்வின் மூலம் ஆழமான கருத்துரைகளை கொண்டமைந்தது மிக சிறப்பாகும். மற்றும் இச்சந்திப்பில் அதிகமாக இளையவர்கள் கலந்துகொண்டதும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. பலவிதமான இடையூறுகளுக்கு மத்தியிலும் இப்பெண்கள் சந்திப்பை ஒழுங்கமைத்த பேர்ளின் பெண்கள் சந்திப்புக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். https://arangamnews.com/?p=12488
  22. சொல்லின்செல்வர் இராஜதுரை நினைவுகள்: ஆரம்ப கால அவரது வாழ்வு அனுபவங்களும் அவரது உருவாக்கமும் December 9, 2025 — சி. மௌனகுரு — செல்லுவதற்கு ஆயத்தமாகிறார் என்ற செய்தி வந்தது: —————————— இம்மாதம் இரண்டாம் திகதி எனக்கு ஒரு செய்தி கிடைத்தது செய்தி அனுப்பியவர் ஒரு பெரியவரின் பேத்தி பெயர் சரண்யா வந்த செய்தி இதுதான் “எனது பாட்டனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், மூச்சுத் திணறலுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது அந்திம காலம் நெருங்கிவிட்டது, செல்ல ஆயத்தமாகிறார். இன்னும்இரண்டு மூன்று நாட்களுக்குள் அது நடக்கலாம் என்று டாக்டர் கூறிவிட்டார். துன்பங்கள் துயரங்கள் இன்றி உடல் உபாதைகள் இன்றி அவர் உயிர் பிரிய வேண்டும் என்பதே எங்களது கவலையாக இருக்கிறது” சரண்யா ஒரு புதுமைப்பெண் ஒரு ஊடகவியலாளி, நாவல் எழுத்தாளர், கவிதைகளும் எழுதுவார், பெண்ணியவாதி தனித்துவமான போக்குடையவர். சரண்யா கூறிய அந்தப் பெரியவர் வேறுயாருமல்ல எங்கள் இளமைப் பருவத்தில் நாங்கள் வாய் நிறைய அண்ணா என அழைத்தவர். அவர்தான் காலம் சென்ற செ. இராசதுரை அவர்கள். அவரது சிரிப்புதான் அவரது டிரேட் மார்க் பிளஸ்பொயிண்ட். ஒரு முறை நான் அண்ணன் ராஜதுரை அவர்களைச் சந்தித்தபோது ‘எனது வாரிசு இவள்தான்தான்’ என்று அவர் சரண்யாவைச் சுட்டிக் காட்டினார். 96 வயதுப் பாட்டனும் 25 வயதுப் பேத்தியும் ஒருவரை ஒருவர் அர்த்த புஸ்டியோடு பார்த்துக்கொண்ட அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை. பாராளுமன்ற அரசியலுக்கு வரமுன்னர் அவரது அரசியல் சிந்தனை —————————— தமிழரசுக் கட்சி அரசியலுக்கு வர முன்னர் ராஜதுரை அண்ணன் அவர்கள் சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய அரசியல் கட்சிகளாலும் அக்கட்சிக் கொள்கைகளாலும் பெரியாரின் திராவிடக்கழக சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும் கவரப்பட்ட ஒரு வாலிபராக இருந்தார். மூட நம்பிகைகளை முற்றாகச்சாடிய மனிதர் அவர், அவரதுபேச்சில் பகுத்தறிவுக் கோட்பாடுகள் பரவியிருக்கும் என்பர். மட்டக்களப்புக் கோவில்களில் அன்று காணப்பட்ட சாதிவேறுபாடு, தீப்பாய்தல், பலிகொடுத்தல் என்பனவற்றிற்கு எதிராகப் பகுத்தறிவுக் கொள்கை கொண்ட முற்போக்கான ஒரு கூட்டம் மட்டக்களப்பில் உருவாகிக் கொண்டிருந்தது, செயற்பட்டுக்கொண்டிருந்தது. மரபுவாதிகள் அக்கூட்டத்தை வியப்புடன் பார்த்த காலம் அது. அக்குழுவின் தலைவர் போல இவர் செயற்பட்டார் இவரைப்போல இடதுசாரிக் கருத்துக்களாலும் திராவிடஇயக்க பகுத்தறிவுக் கருத்துக்களாலும் கவரப்பட்டு சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டு ஒன்றாக இயங்கிய சமூக விடுதலை உணர்வுள்ள வாலிபர்கள் பலர் மட்டக்களப்பில் அன்று இருந்தனர். அவர்களில் மிகப் பலரை நான் அறிவேன். அவர்களோடு தொடர்பிலுமிருந்தேன். அருமையான இளைஞர்கள், ஒரு வகையில் நமது அண்ணன்மார் அவர்கள். மக்கள் மீதும் மண்மீதும் பாசம் கொண்டவர்கள். என் வாலிப வயதில் அவர்கள் எல்லோரும் வயோதிபர்களாகிவிட்டார்கள் சிலர் ஞாபகம் வருகிறார்கள். எம் எஸ் பாலு. கமலநாதன், ம.த.லோறன்ஸ், ஸ்ரூடியோமூர்த்தி, இரா, பத்மநாதன், மூனாரூனா, சற்றடே கந்தசாமி, ஓவியர் குமார், ஆரோக்கியநாதன், பித்தன் சா, ஆறுமுகம்(நவம்), ”ஆரையூர்” அமரன், அறப்போர் அரியநாயகம், பின்னாளில் கலாசூரி பட்டம் பெற்ற வினாயகமூர்த்தி, மூனாகானா, அன்புமணி, ஓடலி கந்தையா, சடாட்சரம், மகேஸ்வரம், மஹாலிங்கசிவம்.. இன்னும் பலர். நான் சொல்வது 1950 நடுக்காலப்பகுதி. இவர்கள் இராஜதுரை அவர்களின் நெருக்கமான நண்பர்கள். இவர்கள் ராஜதுரை அவர்களின் சமகாலத் தலைமுறை என்றால் ராஜதுரையால் உருவாக்கப்பட்ட இன்னொருதலைமுறையும் இருந்தது. அவர்களில் சிலர் ஞாபகத்தில் உள்ளனர். கவிஞர் சுபத்திரன், காசிஆனந்தன், பாலு மகேந்திரா, செழியன் பேரின்பநாயகம், அற்புதராஜா குரூஸ், எருவில் மூர்த்தி போன்றோர். நாங்கள் மூன்றாம் தலைமுறை. அவர்களுள் ரமணி, மாலா ராமசந்திரன், முழக்கம் முருகப்பா, தம்பையா, வடிவேல், கணேசானந்தன், பாவா இன்பம், வெலிங்டன், முத்தழகு, வீ சூ கதிர்காமத்தம்பி, எனப்பலர் அடங்குவோம். இவர்கள் யாவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். இப்படி ராஜதுரையால் உருவான இளைஞர் கூட்டம் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் இருந்தன. இராதுரையும் அவர்கால பின்னணியும் ————————- பெரியார் தமிழ் நாட்டில் திராவிடக் கழகம் ஆரம்பித்தது 1925இல். அப்போது ராஜதுரை பிறக்கவில்லை. இராஜதுரை அண்ணன் பிறந்தது 1927 இல். இலங்கையில் மாக்ஸிஸ ரொட்ஸ்கிய சிந்தனையில் உருவான சமசமாஜக் கட்சி ஆரம்பித்தது 1935 இல் அப்போது இராஜதுரைக்கு வயது 8. அதிலிருந்து பிரிந்த மாக்ஸிய லெனினிய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்து 1943 இல் அப்போது இராஜதுரைக்கு வயது 16. தமிழ் நாட்டில் திராவிடக் கழகத்திலிருந்த திராவிட முன்னேற்றக்கழகம் ஆரம்பித்தது 1949 இல். அப்போது ராஜதுரைக்கு வயது 22. இலங்கையில் தமிழ்க் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி எனும் சமஸ்டிக் கட்சி ஆரம்பித்தது 1949 இல். அப்போது ராஜதுரைக்கு வயது 22. 1950 களின் ஆரம்ப காலங்களில் இராஜதுரை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து கொள்கிறார். அப்போது அவர் 22 வயதைத் தாண்டியிருந்தார். அவர் பாராளுமன்ற எலெக்சன் கேட்டுப் பாராளுமன்றப் பிரதிநிதியானது ஆண்டு 1956 இல் 29 ஆவது வயதில். 1927 க்கும் 1956 க்கும் இடைப்பட்ட காலங்கள் ———————————————————— இந்த 1927 க்கும் 1956 களுக்கும் இடைப்பட்ட 29 வருட கால மட்டக்களப்பு வாழ்வுப் பின்னணி என்பன முக்கியமானவை. இது ராஜதுரை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக முன்னுள்ள காலம் அதாவது இராஜதுரை உருவாகிய காலம். துடிப்பு மிகுந்த விசைவேகம் மிக்க ஒரு சிறுவனின் இளமைக்காலம் அது. துடிப்பு மிகுந்த ஒரு சிறுவன் சமூக அக்கறையும் உலக அறிவும் பெற்று உருவான காலப்பின்னணி இது. அவற்றை அறிதல், ராஜதுரையையும் அவர் சிந்தனையையும் செயலையும் புரிந்துகொள்ள மேலும் உதவும். தமிழரசுக் கட்சியில் இணைய முன்னரான ராஜதுரை அவர்களின் வாழ்வு, பலர் அறியா வாழ்வு. அவரது ஆளுமைக்கு அடித்தளமிடப்பட்ட வாழ்வு, மிக முக்கியமாகப் பலர் அறியவேண்டிய வாழ்வு. சமசமாஜக் கட்சி(ரொட்ஸ்கியம்), கம்யூனிஸம்( லெனினியம்) திராவிட இயக்கம்(பகுத்தறிவு பிராமண எதிர்ப்பு), திராவிட முன்னேற்றக் கழகம் ( தமிழ் மொழியுணர்வு) தமிழ்க் காங்கிரஸ்( இலங்கை அரசில் தமிழர் பங்கு), தமிழரசுக் கட்சி( தமிழருக்கான சுய ஆட்சி), என்பனவற்றின் தாக்கம் பெற்று வளர்ந்தவர் இராஜதுரை. இந்த அரசியல் பின்னணியில் தோன்றியவர் இராஜதுரை. பிறந்து வளர்ந்த சூழல்: ———————– அவர் பிறந்த இடம், வளர்ந்த சூழல் படித்த பாடசாலை, தொடர்புகொண்ட ஆசிரியர்கள் நண்பர் வட்டம் என்பன அவரை உருவாக்கின. பிறந்து வளர்ந்த இடமும் வளர்ந்த சூழலும் ———————- அவர் பிறந்த இடம் மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான். அது ஒரு விவசாயக் கிராமம். ஆனால் அவரின் சிறுவயதுக்காலம் மட்டக்களப்பு நகரான கோட்டைமுனை மோர்சாப்பிட்டியில்தான் கழிந்தது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தவர் பலர் வந்து மட்டக்களப்பில் வியாபாரம் செய்தனர். அவர்களைப்போல புகையிலை வியாபாரம் செய்யவந்த செல்லையா என்பவர் மட்ட்க்களப்பில் பெண் எடுத்து அந்த நகரப்பகுதியில் தங்கியிருந்தார். அப்பகுதி பல் சாதித் தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்களும் ஒரு குடும்பம் போல கலந்து மகிழ்ந்து, கொண்டு, கொடுத்து வாழ்ந்த காலப்பகுதி. அங்குதான் புத்த கோவிலான மங்களராமய விகாரையும் இருந்தது, அதனை மக்கள் பாஞ்சாலை என அழைப்பர். மட்டக்களப்பு நகரில் சிங்கள முதலாளிகளின் கடைகள் இருந்தன. அக்கடைகளில் வேலை செய்த சிங்களக்கிராமங்கலில் இருந்து வந்த சிங்கள ஊழியர்கள் மோர்சாப்பிட்டிச் சூழலிலும் பாஞ்சாலையை அண்டியும் வாழ்ந்தனர். அனைவரோடும் ராஜதுரை பழகும் சந்தர்ப்பமும் கூடி விளையாடும் சந்தர்ப்மும் கிடைத்தன. அனைத்து மக்களுடனும் ஒன்றாகத் திரிந்தான் இந்தச் சிறுவன். அவர்கள் வீடுகளில் அவனும் ஒரு பிள்ளை. இந்தச் சூழல் அவரை ஒரு இன பேதம், சாதி பேதம், மத பேதம் எனும் கட்டுகளுக்குள் மாட்டிக் கொள்ளாத சிறுவனாக வளர்தெடுத்தது. 1940, 50 களிலே கோட்டைமுனையிலே ஒரு வாசிகசாலை இருந்தது. அதன் பெயர் சிவானந்தா வாசிகசாலை. அதில் சென்று படிக்கும் வாய்ப்பு இச்சிறுவனுக்கு ஏற்பட்டது. அக்காலத்தில் லூயிஸ்பிள்ளை என்பவரால் ஒரு புத்தக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பெயர் வெலிங்டன் புத்தகசாலை. அதில் இந்திய பத்திரிகைகள், முக்கியமாக திராவிட இயக்க நூல்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, விற்கப்பட்டன. லூயிஸ் பிள்ளை முடிதிருத்தும் வகுப்பைச் சேர்ந்தவர். முடி திருத்தும் நிலையத்தை மின்சார உபகரணம் கொண்டு நவீனப்படுத்திய முன்னோடி, சீர்திருத்தவாதி. பகுத்தறிவு நூல்கள் மட்டக்களப்பிற்கு வர வழிவகுத்தவர் அவர். அவரது மூத்த மகன்தான் வெலிங்டன். அவனது பெயரில் அது ஆரம்பிக்கப்பட்டது, சிறிய அளவிலும் கையடக்க அளவிலும் அங்கு திராவிட இயக்க நூல்கள் விற்கப்பட்டன. அண்ணாதுரையின் தீபரவட்டும், கம்பரசம் நூல்களும் கருணாநிதி, சிபி சிற்றரசு, அன்பழகன் ஆகியோரின் நூல்களும் அங்கு கிடைத்தன. தமிழ் இளஞர் மாத்திரமல்ல இஸ்லாமிய இளஞர்களும் அங்கு வந்து வாசித்தனர். புத்தகம் பெற்றுச்சென்றனர், பகுத்தறிவுக் கொள்கைகளும் தமிழும் அவர்களை இணைத்தன. ஓட்டமாவடி ஜலால்தீன் எனக்கு ஞாபகம் வருகிறான். பயங்கர “அண்ணா பக்தன்” அவன். அந்தப் புத்தகசாலை அன்று அரும்பி வந்த இளைஞர் பலர் தமிழர் இஸ்லாமியர் பேதம் இன்றி ஒன்று கூடும் இடமும் ஆயிற்று. வெலிங்டன் புத்தகசாலை போல இன்னொரு இடமும் எனக்கு ஞாபகம் வருகிறது. அதுதான் அஜந்தா ஸ்ரூடியோ. மட்டக்களப்பின் இன்றைய காந்தி பார்க்கின் முன்னால் அது அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் மூர்த்தி. அங்குதான் ஓவியர் குமார் பணி புரிந்தார். ஓவியர் குமார் இந்தியாவில் தமிழ் நாட்டில் ஓவியம் பயின்றுவிட்டு வந்தவர். அவர் ஸ்ரூடியோவில் அந்த மேசைக்கு முன்னால் அமர்ந்து புகைப்படங்களை தனது பிரஸ் மூலம் செம்மைப் படுத்திகொண்டிருப்பது ஞாபகம் வருகிறது. அங்குதான் இந்த இளைஞர் குழாம் பின்னாளில் கூடும். என்னிலும் மூத்தவர்களான காசி ஆனந்தன், மாஸ்டர் சிவலிங்கம், இரா. பத்மநாதன், பாலு மகேந்திரா, தங்கவடிவேல் (சுபத்திரன்), அற்புதராஜா குரூஸ் ம. த லோரன்ஸ் ஆகியோர் அங்கு பெரும்பாலும் தினமும் மாலை வேளைகளில் ஒன்று கூடுவர். அங்கும் ஒரு அரசியல் அலசல் நடக்கும். பகுதறிவுச் சிந்தனைகள் பகிரப்படும். கிண்டல் பேச்சுகள் இடம்பெறும். சிறு வயதுப் பையனான நான் அதனை அவதானித்துக் கொண்டிருப்பேன்; அதில் அங்கு வரும் இராசதுரையும் கலந்து கொள்வதுண்டு. பின்னாளில் மட்டக்களப்புக் கச்சேரியின் முன்நடந்த சத்தியாக் கிரகத்தின் போது இந்த இடம் ஒரு முக்கிய இடமாகச் செயற்பட்டமை இன்னொரு கதை அது தனிக்கதை. கண்ணகியின் வழிபாடு வாழ்வியலான பிரதேசத்தில் சிலப்பதிகாரம் அறிமுகம் ———————————————————— சிலப்திகாரம் தமிழகத்தில் தமிழ் அறிஞர்களால் முன்னிலைப் படுத்தப்பட்ட காலம் அது. சிறப்பாக ம பொ சிவஞானம் ஆகியோராலும் கருணாநிதி போன்றோராலும் பரவலாக்கப்பட்டு தமிழ் நாட்டில் பட்டிதொட்டி எங்கும் சிலப்திகாரம் பரப்பப்பட்ட காலம் அது. இவர்கள் எழுதிய சிலப்பதிகாரக் கட்டுரைகளையும் நூல்களையும் படித்து படித்து அதில் தோய்ந்தார் இராஜதுரை. தமிழ்ப் பண்பாட்டின் அறநெறி தவறிய அரசை கேள்வி கேட்கும் காவியமாக அதனைக் கண்டார். மட்டக்களப்பிலே வைகாசி மாதம் ஆண்டு தோறும் கதவு திறந்து சடங்கு நடைபெறும். கண்ணகி வழக்குரை படிக்கப்படும். அத்தகைய கண்ணகி அம்மன் கோவில்களில் வாலிப இராஜதுரை சிலப்பதிகாரம் பற்றிப் பேச ஆரம்பித்தார், கண்ணகி அம்மன் கோவில்கள் அவரது பேச்சினை வளர்க்கும் இடங்களாகின. இராசதுரையின் சிலப்பதிகாரப் பேச்சு ஜனரஞ்சகம் பெறலாயிற்று. இப்படித்தான் அவர் பேச்சாளரானார். திராவிடக் கழகக்காரர் போல தோளிலே ஒரு கறுப்புத்துண்டு போட்டபடி வலம் வந்த இராஜதுரை என்ற அந்த இளைஞர் என் மனதிலே பதிந்துள்ளார். அவரைப் பின்பற்றிக் கறுப்புத்துண்டு தோளில் போட்டோர் பலர். அவர்களுள் நானும் ஒருவனானேன். இப்படிக் கறுப்புத் துண்டு போட்டோரை அன்று “சூனா மானா” என அழைத்தனர். சூனா மானாக்காரன் என்றால் சுயமரியாதைக் காரன் என்று அர்த்தம். இப்படி அன்று ஒரு சூனா மானாவாக இருந்தவர்தான் ராஜதுரை. (பின்னாளில் அவர் பாராளுமன்ற அங்கத்தவரான போது, அவர் என்ன பாராளுமன்றம் சென்று சிலப்பதிகாரச் சொற்பொழிவு ஆற்றப் போகிறாரா என்று கிண்டல் பேசியோரும் உண்டு ) எனது 14ஆம்15 ஆம் வயதுகளில் அப்படி அவரைக் கறுப்புத்துண்டோடு கண்டதாக ஞாபகம். அவரோடு தொடர்பு கொள்ளப் பல இளைஞர்கள் விரும்பினர். ஒரு வெகுஜனமக்கள் தலைவராக அவர் உருவாக ஆரம்பித்த காலம் அது. அழகான வாலிபன், வசிகரமான சிரிப்பு, முற்போக்கு எண்ணம் கொண்டவன், சாதி, மதம், இனம், பிரதேசம் கடந்து அனைவருடனும் நெருங்கிப் பழகும் குணம்- இவை யாவும் ராஜதுரையை அச்சூழலில் ஒரு தனித்துவமான ஆளுமையாக வளர்த்தெடுத்தது. அவரது பேச்சுவன்மை அவரை இளைஞர் மத்தியில் ஹீரோ ஆக்கியது சிறு வயதில் அவர் பேச்சாளரோடு ஊடகவியலாளர் ஆகவும் ஆனார். வேல். . முழக்கம், தமிழகம், சாந்தி, தேனாடு, உதய சூரியன் எனப்பெயரிய பத்திரிகைகள் அவர் நடத்தியதாக அறிகிறோம். இவை மட்டக்களப்பு பிரதேச அளவில் நடத்தப்பட்டன போலத் தெரிகின்றன. இக்காலத்திலே தமிழரசுக் கட்சி சுதந்திரன் பத்திரிகையைக் கொழும்பில் ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து பல இளைஞர் ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள். அப்போது மட்டக்களப்பிலிருந்து அப்பத்திரிகைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆள்தான் ராஜதுரை. அப்படி அனுப்பியவர்களுள் முக்கியமானவர் பி வி கணபதிப்பிள்ளை, என் மனைவியின் தந்தை. அவரே எனக்கு இத்தகவல் கூறியவர். அவரும் யாழ்ப்பாணத்தவர், வடராட்சியினர், ஜி ஜி பொன்னம்பலத்தின் உறவினர். ஜி ஜி பொன்னம்பலம் தனது அன்றைய காங்கிரஸ் கட்சியோடு சேரவும் மட்டக்களப்பில் அதனை ஸ்தாபிக்கவும் நினைத்து அவரை அழைத்தபோதும் அவரோடு சேராது தமிழரசுக் கட்சியையும் செல்வநாயகத்தையும் ஆதரித்தவர் அவர். மட்டக்களப்பில் அவர் திருமணம் புரிந்தவர். மோர்சாப்பிட்டியின் மிக அருகில் இருந்த கொலட் லேனில் வாழ்ந்தவர். இராஜதுரையின் வெற்றிக்கு 1958களிலும் அதன் பின்னரும் உழைத்தவர். கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடுடையவர். சமூக, சமய சேவகர். ஆங்கிலம் லண்டன் மெற்றிகுளேசன் முடித்து, மொழிபெயர்ப்புத் திணைக்களைத்தில் வேலை செய்தவர். மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்பித்தவர். இராசதுரையும் அவரிடம் ஆங்கிலம் கற்றுள்ளார், அவர் இராசதுரையின் பிரியதிற்குரிய ஆசிரியர். ஒருவகையில் அவரின் பயபக்திக்குரிய மாணவன். எனது மாமா எனக்கு பிற்காலத்தில் எனக்கு அக்காலக் கதைகள் பல கூறியுள்ளார். அதில் ராஜதுரையின் இளமைக்காலக் கதையும் ஒன்று. படித்த பாடசாலை —————— மட்டக்களப்பு அரசடி மெதடிஸ்த பாடசாலையிலும் பின்னர் மட்டக்களபு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் இராஜதுரை படித்திருக்கிறார். அங்கு அவருக்கு நல்ல முற்போக்கு எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வாய்த்திருக்கின்றனர். அங்கு படிப்பித்த ஆசிரியர் சிலர் லங்கா சமசமாஜக்கட்சியினை மட்ட்க்களப்புக்கு அறிமுகம் செய்தவர்கள். பிரின்ஸ் காசிநாதர், யோகம் வேலுப்பிள்ளை வணசின்ஹா ஆசிரியர். சிவனேசராஜா ஆசிரியர் போன்றோரும் இன்னும் பலரும் சமசமாஜக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள் என அறிகிறோம். என் எம் பெரெரா அக்காலத்தில் இவர்களின் தலைவர். இவர்கள் யு என் பி எதிர்ப்பாளர்கள் காலனித்துவ எதிர்ப்பாளர்கள், இந்த எதிர்ப்பு அலையில் அன்று ராஜதுரை கவரப்பட்டிருக்கிறார் இராஜதுரை அக்காலத்தில் என் எம் பெரேராவை அழைத்து மட்டக்களப்பில் பேச வைத்திருக்கிறார். அப்படியாயின் இளம்பருவத்தில் அவருக்கு என் எம் பெரேராவுடன் தொடர்பு இருந்தது என நாம் ஊகிக்கலாம். மட்டக்களப்பு கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் கிருஸ்ணக்குட்டியுடன் மிகுந்த நட்புப் பாராட்டியதுடன் அவரை ஒரு மேதின மேடையில் கௌரவித்தும் இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான பா, ஜீவானந்தம் இலங்கை வந்தபோது, அவரை அழைத்து மட்டக்களப்பில் பேச வைத்திருக்கிறார். மத்திய கல்லூரியில் படித்துகொண்டிருந்த காலத்தில் இங்கிலாந்து மன்னர் பிறந்த தினம் கொண்டாடக்கூடாது என நோட்டீஸ் ஒட்டினார் ராஜதுரை என அறிகிறோம். அன்று யு என் பிக் கட்சியிதான் மட்டக்களப்பில் செல்வாக்குற்றிருந்தது. ஆர் பி கதிராமர் எனும் எம் பி, யூ என் பி வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றிருக்கிறார். யூஎன் பியின் கொள்கைகளுக்கு ஒத்துவராத மட்டக்களப்பில் படித்த ஒரு கூட்டம் லங்கா சமாமாஜ கட்சியை ஆதரித்தது அவர்களில் பலர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் படிப்பித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் தாக்கம் ராஜதுரையில் இறங்கியிருகலாம். ஆனால் இடதுசாரிக் கட்சிகள் அன்று தமிழர் தேசியபிரச்சினை பற்றி எடுத்த முடிவுகள் முற்போக்கான பலருக்கு உடன்பாடாயிருக்கவில்லை. மொழி வழித் தேசியத்தை அன்றைய இடதுசாரிகளும் புரிந்திருக்கவில்லை. இந்த நிலைப்பாடு இராஜதுரைக்கும் உடன்பாடில்லாமல் இருந்திருக்கலாம், அவருக்கு இன்னொரு முகாம் தேவைப்பட்டது போலும். அது தமிழரசுக் கட்சி முகாம். அங்கு அவர் சென்றதும் முற்போக்கு கருத்துகளை அங்கு கொண்டு சென்றதும் இன்னொரு கதை. பத்திரிகை வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ———————— பின்னாளில் இராஜதுரை அவர்கள் தேசிய அளவில் சுதந்திரன் பத்திரிகையிலே ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார். எழுத்தாளர் கவர்ச்சிகரமான பேச்சாளர் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராடிய இளைஞர் அணியிலே முன் நின்றவர் அவர். அதனால் அவர் அடி உதைகளும் பட்டிருக்கிறார். அவரது ஆரம்ப கால வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை. இவற்றில் மிக அநேகமானவை அவர் தமிழரசுக்கட்சியில் இணைய முதல் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களாகும் பணக்காரர்களே பாராளுமன்ற எலக்சன் கேட்கலாம் என்ற காலத்தில் மிக மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்த ஒரு இளைஞர் அந்தப் பெரும் பெரும் புள்ளிகளுடன் போட்டியிட்டு பாராளுமன்றம் தெரிவானார். தன் பேச்சால் ஈழத் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்தவர். தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பேச்சு மிகுந்த துணையாயிற்று. தந்தை செல்வாவின் மிக விருப்பத்துக்குரிய ஒரு இளைஞராக அவர் அன்று இருந்தார். எனது முதல் சந்திப்பு: ——————– எனது 9 ஆவது வயதில் அவர் எனக்கு அறிமுகமாகின்றார் அவர். காலம் 1952, இடம் மட்டக்க்ளப்பு நகரசபை மண்டபம். அப்போது அது மாநகரசபை ஆகவில்லை. எனக்கு அந்தக் காட்சி நல்ல ஞாபகம் இருக்கிறது. மட்டக்களப்பு நகரமண்டபம் கட்டிய புதிதில் அங்கு சிலநாடகங்கள் நடந்தன. என் மகன் என்ற நாடகத்தில் நான் வீரவசனம் பேசி அந்த சிறு வயதில் நடித்தபோது, நாடகம் முடிய ஒரு இளைஞர் மேடைக்கு வந்து என்னைத் தூக்கி அணைத்தமை என் வாழ்வில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சி. அவர்தான் ராஜதுரை என்றார்கள். நான் கேள்விப்பட்டிருந்தவரின் கைகள் என்னில் படிகின்றன தன் பேச்சு வன்மையாலும் செயற்படுகளாலும் இளைஞர் மத்தியில் நட்சத்திரமாக அவர் தோன்றியிருந்த காலம் அது. அப்போது அவருக்கு வயது 25 ஆம் என்னை விட 16 வயது மூத்தவர் அவர். அவர் முதன் முதலாக பாரளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது எங்கள் ஊரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் என் தந்தையார் எழுதித்தந்த பேச்சைப் பாடமாக்கி இராசதுரைக்காக தேர்தல் பிரசாரம் செய்தமை ஞாபகம் வருகிறது, மைக்கிலே பேசிய புதிய அனுபவம் அது. அப்போது எனக்கு வயது 13. எனது பேச்சை வெகுவாக ரசித்த அவர் அருகில் அழைத்து அணைத்துப் பாராட்டியமை இன்னும் ஞாபகத்தில் உண்டு. என் தந்தை மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தவர் அவர். சின்னையா அண்ணர் என்றே அவர் என் தந்தையை அழைப்பார். வீட்டுக்கும் வருவார். இவனை நன்றாகப்படிப்பித்து விடுங்கள் என்று என் தந்தையை வேண்டுவார். அவரது இளமைக்காலம் அர்த்தம் பொருந்திய காலம். அதுவே அவரது வாழ்வின் பொற்காலமும் கூட. அவரும் இஸ்லாமிய உறவுகளும் ———————– இது அவரது பிற்கால வரலாறு எழுதப்படும் போது சேர்க்கபடவேண்டிய செய்திகளுள் ஒன்று இது. அவர் இஸ்லாமிய மக்களுடன் கொண்டிருந்த உறவுகள் மிக முக்கியமானவை அக்காலத்தில் தமிழரசு கட்சியினுடைய பிரசுரங்களில் தமிழ் பேசும் மக்கள் என்றே இருந்தது. அதில் அவர் மிகக்கவனமாக இருந்தார். அவரது சிறு பருவக்காலத்திலும் வாலிப் பருவத்திலும் பின்னரும் கூட அவர் இஸ்லாமிய மக்களுடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தமிழரசுக் கட்சியில் எலக்சன் கேட்ட முஸ்லிம்களும் உணடு அவரது அணுக்கத் தொண்டர்களான மருதமுனையை சேர்ந்த மசூர் மௌலானா போன்றவர்கள் ஞாபகம் வருகிறார்கள். மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ராசதுரையின் ஒரு பெரும் அபிமானி. தனது பேச்சின் குருநாதர் இராஜதுரை அண்ணர்தான் என அஸ்ரப்பே கூறியிருகிறார். ராஜதுரை அவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் மத்தியிலே மிகுந்த மதிப்பு இருந்தது. இராஜதுரையின் இரண்டாவது எலக்சன் 1965 இல் நடந்து முடிந்து அவர் வெற்றி ஈட்டிய போது அவருக்கு ஏறாவூரிலே மூன்றாம் குறிச்சியில் இருந்த இஸ்லாமிய மக்களால் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஒருவர் இவர் மீது பற்று கொண்டவர், அவரது பெயர் செயினா. ராஜதுரையைத் தமது தோழில் சுமந்து கொண்டு “எங்கள் துரை” என்று கூற, மக்கள் “இராஜதுரை” எனக் கூற ஊர்வலம் சென்றதாம் என்று அதனைப் பார்த்த அந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட என் தம்பி சிவராஜா என்னிடம் கூறியுள்ளான், இப்போது அவனுக்கு வயது 80 அப்போது வயது 15. மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர்கள் தொகுதி. நியாயப்படி ஒரு தெரிவு தமிழர் முஸ்லிம்கள் என இருவர் வரவேண்டும் எனப் பிரித்த பிரிவு. ஆனாபடியால் ஒரு முஸ்லிமும் பாராளுமன்றம் போக வேண்டும் என்று அன்றே கூறியவர் ராஜதுரை என்றும் அறிகிறேன். இன்றைய காலச்சூழலில் இவையெல்லாம் பேசப்பட வேண்டிய விஷயங்கள். இப்படியும் ஒருகாலம் இருந்ததா என இன்றைய தலைமுறை அதிசயிக்கும் காலங்கள். விபுலாந்த இசை நடனக் கல்லூரி =================== அவரால் உருவானதுதான் விபுலாந்த இசை நடனக் கல்லூரி. யாப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி போல ஒரு கல்லூரியை அவர் மட்டக்களப்பிலும் நிறுவ நினைத்தார். அங்கு பயிற்றுவிக்க இந்தியாவிலிருந்தும் ஆட்களை வருவித்தார். அதில் பலர் பயின்று டிப்ளொமா பட்டம் பெற்று வெளியேறினர். பின்னால் அது கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் அது சுவாமி விபுலாந்த அழகியல் கற்கைகள் நிறுவகமாகி இன்று இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் வருடம் தோறும் பல பீ.ஏ பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இராஜதுரை அரங்கின் முன்னால் அவரது உருவப்படம் ================== அண்மையில் தான் அவரது பெரிய திருவுருவப்படத்தை கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவகத்தினர் ராஜதுரை அரங்கின் முன்னால் திறந்து வைத்திருந்தார்கள். நீண்ட நாட்களாக இழுபட்டு வந்தது அது. அதற்கான படங்கள் தேவைப்பட் போது அவற்றை எனக்கு சரண்யா அனுப்பியிருந்தாள். அது அவர் உருவாக்கிய கல்லூரி அது தனது தமிழகச் செல்வாக்கைப் பயன்படுத்தி பல உதவிகளை அங்கிருந்து அவர் அப்போது பெற்றுக் கொடுத்தார். முக்கியமாக அவரது நல்ல நண்பரான அன்று தமிழக முதல்வராக இருந்த எம் ஜீ ஆர் அவர்கள் இந்தக் கல்லூரிக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். நுழைவாயிலில் ஒரு பக்கம் விபுலானந்தர் திரு உருவும் மறுபக்கம் ராஜதுரை அவர்களின் திரு உருவும் காட்சி தந்தன. அவர் உருவாக்கிய நிறுவகத்தில் ஓவியம் பயின்ற கொண்டிருந்த ஓவியர்களால் உருவாக்கப்பட்ட படங்கள் அவை. அதை அப்படியே படம் பிடித்து நான் சரண்யாவுக்கு அனுப்பினேன். அதனை அவர் பாட்டனுக்கு காட்டி இருக்கிறார். அவர் மிகவும் மகிழ்ந்து போய் இருக்கிறார். நெகிழ்ந்து போய் இருக்கிறார். நான் சரண்யாவுக்கு ஒரு பதில் அனுப்பினேன். “எங்கள் சிறு வயதிலேயே எங்களின் ரோல் மாடலாகவும் கதாநாயகனாகவும் இருந்தவர் அவர். பையனாக இருந்த காலத்திலே அவரது பேச்சினால் மிகவும் கவரப்பட்டோம், அவரைப் போலவே பேசவும் பழகினோம்.” என்று. ஆரம்ப காலமும் பிற்காலமும் ————————– ஆரம்ப காலங்களில் அவரோடு எனக்கு இருந்த நெருக்கம் இடைக் காலத்தில் இல்லாமல் போனது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. பிற்காலச் சந்திப்பு —————— பிற்காலத்தில் அவரது அந்திம காலத்தில் அவர் மட்டக்களப்புக்கு வந்தபோது தனது பழைய நண்பர்களைத் தேடிச்சென்று சந்தித்தார். என்னையும் சந்திக்க அழைப்பு அனுப்பினார்; சென்று சந்தித்தேன். பழைய காலங்களை நினைவு கூர்ந்தார். அவர் வார்த்தைகளில் நெகிழ்ச்சி கண்களில் கண்ணீர்க் கசிவு, மட்டக்களப்பு மண் பற்றி மிகுந்த கவலை கொண்டிருந்தார். அவரது அருமை ஆசிரியர் பி.வி கணபதிப்பிள்ளையின் மனைவி எனது மாமியார் மகேஸ்வரி எங்களுடந்தான் இருந்தார். மகேஸ்வரி அக்காவைப் பார்க்க வேண்டும் என்றார் இராஜதுரை. வீட்டுக்குக் கூட்டிச்சென்றேன். மாமி அவரைவிட வயதில் பல மடங்கு மூத்தவர், ராஜ்துரையைக் கண்ட தும் அவர் வணக்கம் என இருகரம் கூப்பி வரவேற்ற அந்தக்காட்சி காணக் கிடைக்காத காட்சி. இரு பழம் கிழங்களும் தத்தம் மனதுள் எவ்வளவு நினைத்திருப்பர். எனக்கு ஒரு சாயிபாபா படமும் சிறு அழகிய டப்பாவில் குங்குமும் தந்து “நீர் இதனை எல்லாம் நம்பமாட்டீர் விரும்பினால் பெற்றுக் கொள்ளு ராஜா இது சாயி எனக்கு அளித்த பிரசாதம்”என்று கூறினார். “ராஜா” என்றே அவர் என்னை அழைப்பார். அந்த உச்சரிப்பு தனித்துவமானது, மனைதில் என்னவோ சுரப்பது. நான் அவர் தந்தவற்றை மிக மரியாதையோடு பெற்றுகொண்டேன். அவர் மகிழ்சியோடு அதனை அவதானித்தார். “அண்ணன் உங்களுக்கு முற்கால இராஜதுரை வரலாறு, பிற்கால ராஜதுரை வரலாறு என இரண்டு வரலாறுகள் உள்ளன” என்றேன். அர்த்த புஸ்டியோடு சிரித்தார். ‘பிற்காலம் பற்றி நிறையத் தரவுகள் எம்மிடம் உள்ளன. என்னைப் பொறுத்தவரை உங்களின் முற்காலமே பொற்காலம். நினைவில் உள்ளவற்றைப் பதியுங்கள்’ என்றேன். மீண்டும் சிரித்தார்; ஒரு அனுபவச் சிரிப்பு. சிலவற்றை நினைவு கூர்ந்தார், சில மணி நேரம் அந்தப் பழையகாலத்துள் வாழ்ந்தார். வாழ்ந்தோம். என் தந்தையை எங்கள் வீட்டருகில் இருந்த ராஜதுரையை அவரோடு இணைந்து சத்தியாக்கிரகப் போரில் இணைந்த எமது கிராம மக்களை பெயர் கூறிக் கூறி நினைவு கூர்ந்தார். என்ன ஞாபகசக்தி? அவர்களில் பெரும்பலானோர் இன்றில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அவருக்கு இப்படிப் பல்லயிரக்கணக்கான உறவுகள் இருந்திருக்கும். பேச்சின் இடையில் அக்காலத்திலும் இடைக்காலத்திலும் தான் பெற்ற மிக் மிக கசப்பான அனுபவங்களை மனம்விட்டு நாகரிகமாக் கூறினார். தான் கட்சியில் ஓரங்கட்டப்பட்டமையையும் அதன் பின் தான் எடுத்த முடிவுகளையும் கூறினார். அவர் தனது வாழ்வின் சரி பிழைகளை மீட்டிப் பார்க்கிறார் என உணர்ந்து கொண்டேன். அக்கணம் நான் அவரில் அந்த பழைய இராஜதுரை அண்ணரைக் கண்டேன். வாழ்வின் இறுதி நாட்களில் சில பெரியவர்கள் யாரோடும் பேசமாட்டார்களாம். ஆனால் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்களாம். அவரகள் ஓயாது பேசுவது தம்மோடுதானாம். அதுவே மனிதர் வாழ்வின் இறுதி இதய நாதம். அவரை விபுலாந்த அழகியற்கற்கைகள் நிறுவகம் அழைத்துச் சென்றோம். அவர்கள் அழகாக அவரைக் கௌரவித்தனர். மாணவர்கள் தமக்காக அதனை உருவாக்கிய அப்பெரியவரைக் காணத் திரண்டிருந்தனர். அகம் முகம் மலர வாளாகத்தை இராஜதுரை அரங்கைக் கவனித்தார். அன்றைய அவரது உரை அனைவரையும் கவர்ந்தது. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கிறேன்; சொற் சுத்தம், குரல்சுத்தம், அதே உறுதி, அதே கம்பீரம், அதேகுரல், அதே எடுத்துரைப்பு. அவருடனான இறுதிச் சந்திப்பு 2019 ————————– 2019 ஆம் ஆண்டில் நான் இந்து பத்திரிகை நடத்திய கலை, இலக்கிய, மகாநாடு ஒன்றுக்கு உரை நிகழ்த்தச்சென்ற போது என்னைத் தேடி வந்து, இராஜதுரை அண்ணர் தங்கியிருந்த வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றாள் சரண்யா. அந்த வீடு அவரது இளைய மகள் பூங்கோதையின் வீடு. இராஜதுரைக்கு ரவீந்திரா, ரவீந்திரன், இளங்கோ, பூங்கோதை, திருமகன் சிறி என ஐந்து மக்கள் உளர். மனைவி காலமாகிவிட்டார், மகள் பூங்கோதையுடனும் பேரப்பிள்ளைகளுடனும் அங்கு அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது, அவர் அறையில் இருந்தார், நான் செல்வது அவருக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. சிரமப்பட்டு நடந்து வந்து அமர்ந்து கொண்டார், அதே சிரிப்பு, அதேதொனி, “வாராஜா” என்று விழித்துக் கதைத்தார். உணவு உண்டு, உரையாடி முடிந்து வரும்போது எழுந்து சென்று தனது புத்தக அலுமாரியிலிருந்து பாஸ்கரத்தொண்டமான் எழுதிய ஒரு நூலை எடுத்து அதில்கையெழுத்திட்டு எனக்களித்தார். அவரைப்போல அழகான உறுப்பான கையெழுத்து. வழியனுப்பி வைத்தார் இப்போது நாம் அவரை வழியனுப்பி வைப்போம். அவர் என்றும் எங்கள் மனதில் இருப்பார் ———————————————————— இரண்டு நாட்களுக்கு முன் சீவகன் லண்டனிலிருந்து போன் பண்ணினார்… இராஜதுரை அண்ணன் போய்விட்டார்… அதன் பின்னர்தான் சரண்யாவின் செய்தி கிடைத்தது…”அப்பப்பா காலமானார்”. மனதைத் துயரம் கௌவியது. அவர் வாழ்வு ஒரு இரு முனை வாழ்வா? ————————— ஒரு புறம் பகுத்தறிவுச் சிந்தனை, மூட நம்பிக்கைக்கு எதிரானசிந்தனைகள், மாக்சிஸ சிந்தனை, தமிழர் விடுதலைச்சிந்தனைகள், ஏழைமக்கள் பால் அக்கறை. மறுபுறம் அரசாங்க அமைச்சர், அசுவமேதயாகம், அந்தணரை அழைத்து ஆசி வேண்டியமை, சாயிபாபாவின் சீடன். ஒரு இரு முனை வாழ்க்கையா அல்லது வாழ்வின் வளர்ச்சி நிலையா, அல்லது மாற்று நிலையா அல்லது எல்லாவற்றையும் வாழ்வனுபவங்களாகப் பெற்றபக்குவமா? அவரது தேடலில் அவர் வந்து சேர்ந்த இடம் இதுவா? எது எவ்வாறாயினும் ஒரு சகாப்தம் முடிந்தது. அவ்வளவுதான் நான் சரண்யாவுக்கு ஒரு செய்தி அனுப்பினேன். அச்செய்தி இதுதான். “அவர் வாழ்வு பல பரிமாணங்களைக் கொண்டது. பலபடிப்பினைகளைத் தருவது. அவர் பலகாரியங்கள் செய்துள்ளார். மட்டக்களப்புக்கு தன்னை மறக்காதபடி பல காரியங்கள் செய்துள்ளார். அவர் இறப்பு இரங்கற்குரியதன்று, அவர் வாழ்வு கொண்டாடப்படவேண்டியது. இரங்க வேண்டாம் கொண்டாடுங்கள். எழுதப்பட வேண்டியது அவரது வாழ்வு ————————- 1927 தொடக்கம் 2025 வரையும் 98 வருட காலம் அவர் வாழ்ந்த பெரும் வாழ்வனுபவம் பெற்றவர் அவர் , இப்படி அனுபவம்பெற்ற பலர் நம் மத்தியில் வாழ்ந்து மறைந்துள்ளனர், அவர்கள் வாழ்வனுபவங்கள் அதிகம் எழுதப்படவில்லை. இவரது வாழ்வு அனுபவக் காலத்தை ஆறு காலகட்டங் களாகப் பிரித்துப் பார்க்கலாம் என்பது எனது புரிதல். முதல் காலகட்டம்: அவர் தமிழரசுக் கட்சியில்சேர முன்னர் அவரது சிந்தனைகள் செயல்பாடுகள் உருவான காலகட்டம். இரண்டாவது காலகட்டம்: அவர் தமிழரசுக் கட்சியிலே முக்கிய ஒரு ஆளாக இருந்து செயல்பட்டகால கட்டம். குறிப்பாக, கிழக்கு மாகாணத்திலும் சிறப்பாக இலங்கையிலும் அவர் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க அவர் செய்த செயற்பாடுகளும் அவர் எதிர்கொண்ட சவால்களும். மூன்றாவது காலகட்டம்: தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த பின்னர் அவர் கட்சிக்குள் எதிர் கொண்ட சவால்களும் அதை அவர் கையாண்ட விதங்களும். நாலாவது காலகட்டம்: அவர் யு.என்.பி அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட காலகட்டங்கள், அதாவது அவரது அமைச்சர் காலப் பணிகள் அல்லது செயற்பாடுகள். ஐந்தாவது காலகட்டம்: அவர் வெளிநாட்டுத் தூதுவராக இருந்து செயல்பட்ட அவரது ராஜ தந்திர காலகட்டங்கள். ஆறாவது காலகட்டம்: அவர் ஓய்வு பெற்று ஒதுங்கி இருந்த போது செயல்பட்ட காலகட்டங்கள். அதாவது அவர் இறுதி காலகட்டங்கள். தனது கடந்த கால வாழ்வு பற்றிய அவரது சுய மதிப்பீடு. இந்த வகையிலே அவரது 98 வருட கால வாழ்க்கை அணுகப் பட்டு எழுதப்பட்டால் அதிலிருந்து நாம் பல படிப்பினைகளை பெற்றுக் கொள்ளலாம். ஒரு பெரிய அரசியல் நாவலுக் கான கருவைக் கொண்டது அவரது வாழ்க்கை. அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் பிற்கால வாழ்க்கை பற்றியும் நிறைய எழுத்து ஆதாரங்கள் நாம் பெற்றுக் கொள்ள முடியும். அந்த ஆதாரங்களுடன் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் நினைவுக் குறிப்புகளும் வாய்மொழித் தகவல்களும் மிக மிக முக்கியமான ஆதாரங்களாகும். அவரோடு அன்று பேசிப் பழகித் திரிந்த இன்று உயிரோடு வாழும் முதிர்ந்த தலைமுறையுடன் பேசிப் பெறப்படும் வாய்மொழித் தகவல்கள் இந்த வரலாற்றினை முழுமையாக்க மிகவும் பயன்படும். வாய்மொழித்தகவல்கள் மிக முக்கியமாயினும் அவை அகஉணர்வு மீதூரப்பெற்றமையினால் அவை கவனமாகப்பரிசீலனை செய்யப்டவும் வேண்டும். அவர் வரலாற்றை எழுத விரும்பும் ஒரு வரலாற்று அல்லது பண்பாட்டு அல்லது அரசியல் மாணவர் ஒருவருக்கு இக்குறிப்புகள் உதவக் கூடும். அதன் ஒரு அங்கமாகவே இந்த முதலாவது காலகட்டம் இங்கு எழுதப்படுகிறது ஆர்வம் உடையோர் இதனைத் தொடர வேண்டும். https://arangamnews.com/?p=12504
  23. வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி! பூர்வீக மக்களை வெளியேற்றி விட்டு வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்கவா போகின்றீர்கள். எம்மை சுட்டாலும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வடக்கில் பெரும்பாண்மை இனத்தை சேர்ந்த சிலரால் இயந்திரங்களின் மூலம் பெரிய மரங்கள் அறுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படுகின்றது. திரிவைச்ச குளம் பகுதியில் நான் நேரடியாக இதனை அவதானித்தேன். இதனை ஏன் இந்த திணைக்களங்களால் தடுக்க முடியவில்லை. ஒரு மண்வெட்டி பிடியை கூட நாங்கள் வெட்ட முடியாது. அதற்கு வழக்குப்போடும் இவர்களால் இதனை தடுக்க முடியாதா? வெட்டப்பட்ட மரங்களுக்கு என்ன நடந்தது. ஊழலை ஒழிக்க வந்த அரசாங்கத்திடம் கேட்கிறேன் இது ஊழல் இல்லையா? இது தொடர்பாக நீங்கள் கூடிய கவனம் எடுக்கவேண்டும். இந்த விடயம் தொடர்பாக கேட்டபோது மகாவலி அதிகாரசபை சொல்கிறது நீங்களும் பெயர்ப்பட்டியலை தாருங்கள் உங்களுக்கும் அங்கு காணி வழங்குவோம் என்று கூறினார்கள். யாருடைய காணியை இவர்கள் யாருக்கு வழங்கப் போகின்றார்கள். வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிபிள் ஓயாத்திட்டத்தில் பயனடையும் தமிழ் மக்கள் ஒருவரின் பெயர் உள்ளதா. நிமல் சிறிபாலடி சில்வாவின் சகோதரிக்கு மகாவலித்திட்டத்தின் கீழ்25 ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் நான் கூறவில்லை.அதன்படி 30 பேருக்கு 25ஏக்கர் படி அங்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளது. அப்படியானால் தமிழ் மக்களை கடலுக்குள் தள்ளவா போகின்றீர்கள். இது தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்ட பூர்விக காணிகள். வவுனியா வடக்கை அத்திப்பட்டி போல காணாமல் ஆக்கப் போகிறீர்களா. அதற்கு நான் விடமாட்டேன். இப்பிடியான அநீதியான வேலைகளை முதலில் நிறுத்துங்கள். இல்லாவிடில் ஆயிரக்கணக்கான மக்களை அணிதிரட்டி கடும் எதிர்ப்பை வெளியிடுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். எங்களை சுட்டாலும் எமது எதிர்ப்பை காட்டியே தீருவோம் என அவரட மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=351875
  24. யாழ்., பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு; பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தர் தெரிவில் உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி முன்னிலை வகித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்கு உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் தி. வேல்நம்பி, மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், விஞ்ஞான பீடப் பீடாதிபதி பேராசிரியர் பு.ரவிராஜன், விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், விஞ்ஞானபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஜெ.பிறின்ஸ் ஜெயதேவன் ஆகிய ஆறுபேர் போட்டியிடுகின்றனர். மேற்குறிப்பிடப்பட்ட ஆறு பேரில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்த நிலையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். விவசாய பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன் இரண்டாவது நிலையையும், மருத்துவபீடப் பீடாதிபதி பேராசிரியர் ஆர்.சுரேந்ததிரகுமாரன் மூன்றாவது நிலையையும் பெற்றுக்கொண்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் சுற்றறிக்கையின் படி, பேரவையால் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்று விண்ணப்பதாரர்களின் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றினுடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். இதனடிப்படையில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் பேரவையால் முன்மொழியப்பட்ட மூவரிலிருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து, துணைவேந்தராக நியமனம் செய்வார். https://akkinikkunchu.com/?p=351871
  25. இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழில் வெள்ளியன்று மாபெரும் போராட்டமும் கண்டனப் பேரணியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள நீரியல்வளத் திணைக்களத்துக்கு முன்பாகக் கண்டனப் போராட்டம் ஆரம்பமாகி யாழ் மாவட்டச் செயலகம் வரை பேரணியாகச் சென்று யாழ். மாவட்டச் செயலக வாயிலை மூடிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்கு முதல் நெடுந்தீவு வரையான மீனவர் சங்கப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ் மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஸ்ணன் அகிலனை நேரில் சந்தித்து இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். https://akkinikkunchu.com/?p=351890

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.