கிருபன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  20,210
 • Joined

 • Days Won

  73

Everything posted by கிருபன்

 1. தடம் அழியா நினைவுடன் … மே 14 – அ. அபிராமி அதிகாலை 6 மணியிருக்கும்.. எனது பொறுப்பாளரிடம் இருந்து அவசர அழைப்பு. ”களமுனைகளில் நிற்கும் போராளிகளின் விபரங்களோடு உடனடியாக என்னைச் சந்தியுங்கோ” எந்த நேரத்திலும் எனக்கான அழைப்பு வரும் என்பது தெரிந்திருந்ததால் அதற்கான தயார்ப்படுத்தலோடு காத்திருந்தது நல்லதாப் போச்சு.அழைப்பு வந்த மறுநொடியே எப்போதும் என்னோடு இருக்கும் தோல் பையையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். ”அக்கா தேத்தண்ணி வைக்கப்போறன் குடிச்சிட்டுப் போகலாமே..” கவி மறித்தாள்;.அந்த இறுக்கத்திலும் சிரிப்பு வந்தது. ”இன்னும் சீனி இருக்கா..” நான் வியப்போடுதான் கேட்டேன். ”இண்டைக்கு மட்டும் தொட்டுக் குடிக்கக் காணுமக்கா..” அவள் நமட்டுச் சிரிப்போடு சொன்னாள். ”எனக்கு நேரம் போயிற்று..நான் வெளிக்கிடப்போறன்..,நீங்க தேத்தண்ணி வைச்சுக் குடியுங்கோ. கவனமா இருங்கோ, தாறுமாறாப் பொழியிறான் கண்டபாட்டில வெளியில வராதீங்க..” அவர்களிடமிருந்து விடைபெற்றேன். எப்போதும் எனது பயணங்களின் போதெல்லாம் வழித்துணையாய் என்னைச்சுமந்து பறக்கும் உந்துருளி இப்போது என்னிடம் இல்லை. எத்தனையோ தடவை என் உயிரை அது தன்னுடைய வேகத்தினால் பாதுகாத்துத் தந்திருக்கின்றது. தேவிபுரம்-கைவேலி வெட்டவெளி, இரணைப்பாலை -பொக்கணை வெளி, வலைஞர்மடம் -இரட்டைவாய்க்கால் வெளியென இராணுவத்தின் பல்குழல் எறிகணைகள் வீழந்து வெடிக்கும் இடங்களிலெல்லாம் என்னைப் பத்திரமாய்க் காவிவந்து சேர்க்கும். உண்டியல் சந்திக்கு நாங்கள் வந்த அன்றே எறிகணைத் துண்டொன்று பட்டு முன்பக்கத்தால் சிதறி,தலையிழந்த முண்டமாய்க் கிடந்த என்னுடைய உந்துருளியை இப்போது நினைத்தாலும் கவலையாக இருந்தது. அது இருந்தால் கூட இப்போது ஓடக்கூடிய நிலமையில் இல்லை. ”ஸ்ஸ்ஸ்..” என்ற சத்தத்தோடு எனக்கு இரண்டடி முன்னே வந்து குத்தியது உந்துகணை ஒன்று. எனது வாழ்வின் முற்றுப்புள்ளி இந்த இடத்தில்தான் என எண்ணியபடியே கண்களை இறுக மூடிக் கொண்டேன். சாவைப்பற்றிய அச்சம் ஒருதுளியும் எனக்கு இருக்கவில்லை. ஆனால் விழுப்புண் பட்டுவிடக்கூடாது என்று மட்டும் உள்மனம் வேண்டிக்கொண்டது.சில நொடிகள் கழிந்தன கண்களை மெல்லத் திறந்தேன்.வீழ்ந்த உந்துகணை வெடிக்காது மணலில் புதைந்து கிடந்தது. ‘அட அதுகூட என்னக் கண்டு பயந்திட்டுப் போல..| எனக்குள் சிரித்துக் கொண்டு விறுவிறுவென மணலில் கால்புதைய நடக்கத் தொடங்கினேன். எனது காலணியும் இன்றோ நாளையோ என்று தனக்கான ஓய்வை எச்சரித்துக் கொண்டு இருந்தது.மணற்பாங்கான இந்த இடத்தால் நடப்பதைவிட பிரதான வீதியைப் பிடித்து நடந்தால் விரைவாகச் சென்று விடலாம்.வீதியைப் பிடித்து நடக்கத் தொடங்கினேன். கடற்கரையில் நங்கூரமிட்டிருக்கும் கப்பல்கள் போல வீதியின் மருங்கில் நீள்வரிசை கட்டிநின்றன போக்குவரத்து ஊர்திகள்.அந்த இடங்களை அண்டியும் மக்கள் செறிவாக இருந்தனர்.சில ஊர்திகள் எறிகணைகளால் சிதைந்து கிடந்தன. கொஞ்சம் முன்னே நடக்க நடக்க மக்களின் நடமாட்டம் குறைந்து கொண்டே சென்றது. ஆங்காங்கே ஒருசில போராளிகள் தவிர கிட்டத்தட்ட சூனியப்பிரதேசமாக அந்தப் பகுதி இருந்தது. நான் நடந்து சென்ற தெருவில் ஒரு வயதான பாட்டியின் உடல் சிதைந்து ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கிடந்தது.நெஞ்சை அடைக்கும் துயரோடு அதையும் கடந்து சென்றேன்.அடுத்து நான் திரும்ப வேண்டிய சந்திக்குக் காலடி எடுத்து வைக்க முதலே அந்த இடத்தின் கோரத்தை சொல்வதுபோல் பிணநெடி மூக்கில் பக்கென்று அடித்தது. என் முதல் பார்வையிலே கண்ணில் பட்டது அந்தக் காட்சிதான்.சிதைந்து கிடந்த தரப்பால் கொட்டில், உயிர்காக்க அமைத்த காப்பகழி, பாதுகாப்புக்கு அடுக்கியிருந்த மண்மூட்டைகள் நடுவே பாதிஉடல் காப்பரணுக்குள்ளும் வெளியே தலைப்பகுதி தெரிய ஒரு பெண்ணின் உடல். அதனருகே சுருண்டபடி படுத்திருந்தது ஒரு நாய்க்குட்டி. அந்தநாய்க்குட்டி நான் நடக்கும் அரவத்தைக் கேட்டு துள்ளிக் குதித்தபடி குரைத்துக் கொண்டு ஓடி வந்தது. இறந்து கிடக்கும் அந்தப் பெண அதன் எஜமானியாக இருக்கலாம். நான் அதன் அருகே செல்லாததைக் கண்டு மீண்டும் தன் இடத்தில் போய்ச் சுருண்டு படுத்தது. அந்த உடலை வேறு எந்தப் பிராணிகளும் அண்டவிடாது அது பத்திரமாய் நன்றியோடு தன் காவல் கடமையை செய்து கொண்டிருந்தது. துயரில் கண்கள் பனித்தன. இந்த அவலங்களைத் தாங்கும் சக்தியின்றி, விழிகளை வீதியில் செலுத்தியபடி நடக்கத் தொடங்கினேன்.மிக அருகில் யாரோ நடக்கும் சத்தம் என்னையறியாமலே என் வலக்கை தோல்பைக்குள் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்தது. இடக்கை நான் அணிந்திருந்த குப்பியை எடுத்து வாய்குள் கொண்டுசென்றது. முன்னெச்சரிக்கையோடே சத்தம் வந்த திசையை மெல்லக் கூர்ந்து பார்த்தேன்.ஒரு ஐயா மண்வெட்டியோடு வந்துகொண்டிருந்தார். பதற்றத்திலிருந்து மெல்ல விடுபட்டேன். ”இஞ்ச என்னையா செய்யிறீங்க..” அந்த ஐயாவின் உடல் வியர்த்துப் போயிருந்தது. ”அது பிள்ள.. நேற்று பின்னேரம் செல்விழுந்து என்ர பேரப்போடியன் அந்த இடத்திலேயே போயிற்றான்.என்ர மனிசிக்கு இடுப்புக்கு கீழ அப்படியே சிதறிப் போச்சு.. தலையிலும் பெரிய காயம்.. கண்ணுக்கு முன்னால அவளின்ர உயிர் பிரிந்து கொண்டு இருந்தது…என்ர பேத்திக்கு காலில பெரிய காயம்..அவள் காப்பாற்றக்கூடிய நிலையில இருந்தாள். ஒன்றுமே செய்ய முடியாத நிலை..குற்றுயிராக் கிடந்த மனைவியை அப்படியே விட்டிட்டு பேத்தியைத் தூக்கீன்ரு ஓடிப்போயிற்றன்…,ஆனா இரவு முழுக்க ஒரே குற்ற உணர்வா இருந்திச்சு.. அதுதான் விடிஞ்சதும் டியாததுமாக ஓடிவந்து இரண்டுபேரையும் ஒரே இடத்தில புதைச்சிற்று வாறன்..” பேசிக்கொண்டு இருக்கும்போதே அந்த ஐயாவுக்கு மூச்சு வாங்கியது. வலிகளுக்கு மேல் வலிகளைச் சுமந்து வைரம்பாய்ந்திருக்கும் அவருக்கு, வெளியே கண்ணீர் வராவிட்டாலும் அவரது உள்ளம் ரணமாய் கொதிப்பதை என்னால் உணரமுடிந்தது. ”பிள்ளைகளின்ர அம்மா அப்பா எங்க..”கேட்கவேண்டும் போல் வாய்வரை வந்த கேள்வியை எனக்குள் அடக்கிக் கொண்டேன். ”சரி பிள்ள, பார்த்துப் பத்திரமா போங்க..” அந்தஐயா விடைபெற்றுக் கொண்டார்.ஆனால் அவரது துன்பச் சுமையையும் சேர்த்து இப்போது நான் சுமக்கத் தொடங்கினேன். குற்றுயிராய்க் கிடந்த உறவுகளை எடுத்துச் செல்லவும் முடியாமல் விட்டுப் போகவும் முடியாமல் தவிக்கும் அந்த வலியை இன்னும் எத்தனைபேர் சுமந்திருக்கிறார்களோ தெரியாது.., எண்ணச்சிறகுகளின் வேகத்தோடே கால்களும் நான் செல்லவேண்டிய இடத்தை அடைந்தது. சுற்றி எங்கும் கரும்புகையும்,கந்தக நெடிலும், இரத்தவாடையும், பிணமணமுமாய் வயிற்றைக் குமட்டியது. அந்த சூழலுக்குள்தான் தான் பெரும் கிளைபரப்பி விழுதெறிந்து நின்ற ஆலமரத்தின் கீழ் அந்தக் கட்டளை மையம் இயங்கிக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தவுடன் பாதுகாப்புக் கடமையில் நின்ற போராளி ஓடி வந்தான். ”என்ன தம்பி இப்படி மணக்குது ..” மூக்கைப் பொத்திக் கொண்டே அவனிடம் கேட்டேன். ”அதக்கா ..பக்கத்திலதான் மருத்துவமனை இயங்கினதாம்..அத அடிச்சு துடைச்செடுத்திட்டான்…நகரமுடியாத ஓடமுடியாத காயங்களோட இருந்தாக்களெல்லாம் அந்தந்த இடத்திலேயே செத்துச் செத்துக் கிடக்கினமாம்..” உள்ளம் பதறியது. மருத்தவ மனைகள், பாதுகாப்பு வலயங்களைக்கூட விட்டு வைக்காது கொலைவெறித் தாண்டவம் புரியும் அரச பயங்கரவாதத்தின் மீது கடும் கோபம் வந்தது. எப்பொழுதுமே தமிழினம் இவர்களை மன்னிக்கக்கூடாது. எனக்குள் சபித்துக் கொண்டேன். ”அக்கா ஏதாவது சாப்பிட்டீங்களா..?இண்டைக்கு உங்களுக்குத்தர எங்களுட்டும் ஒண்டும் இல்ல..,இந்தா இதத்தான் நாங்களும் சாப்பிட்டனாங்கள்..,நீங்களும் எடுங்கோ அக்கா..” நாள் முடிந்துபோன உடைத்த சிறிய பிஸ்கட் பையை நீட்டினான். ”பரவாயில்ல தம்பி..நான் வெளியால போறனான்தானே ஏதாவது சாப்பிடக் கிடைக்கும்..நீங்க இத வைச்சிருங்கோ..ஆபத்துக்கு உதவும்…” அதற்குள் உள்ளிருந்து ஒருவன் ஓடிவந்தான். ”அக்கா உங்கள வரட்டாம்..” அவன் பின்னே நானும் உள்ளே சென்றேன். உள்ளே சூசையண்ணா தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டிருந்தார். அவர்பேசுவது எனக்குத் தெளிவாக விளங்கியது. ‘ஒருவர் தொலைபேசியில் உரையாடும்போதுஅதைக் கேட்பது அழகில்லை’ என்பதைப் புரிந்து நான் வெளியில் வரத் திரும்பினேன். சூசையண்ணா அமரும்படி கையசைத்தார். அமர்ந்து கொண்டேன். இப்போது சூசையண்ணாவுடன் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருப்பவர் யார் என்பது எனக்குத் தெளிவாகத் புரிந்தது. ‘சிறிலங்காப் படைகளின் தாக்குதல்களால் குழந்தைகள் சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடு இன்றி நொடிக்கு நொடி மக்கள் சாவடைந்து கொண்டு இருப்பதைப்பற்றியும், மருந்தில்லாமல், சாப்பாடு இல்லாமல் உயிரோடு மக்கள் சாவடைந்து கொண்டு இருக்கும் அவலம் பற்றியும் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருந்தார்… எப்படியாவது எங்கட மக்களப் பாதுகாப்பா வெளியேற்றுவதற்கு ஏதாவது முயற்சி எடுக்கும்படி அவர் கேட்டுக் கொண்டிருந்தார்…’ மக்களுக்கு ஓர் ஆபத்து என்றால் அவர் எப்படித் துடிப்பார் என்பதை பலமுறை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்.எந்த மக்களின்ர விடுதலைக்காகப் போராடினார்களோ அந்த மக்களை அரச பயங்கரவாதம் கொன்றொழித்துக் கொண்டு இருப்பதை பார்த்து அவர் தவிக்கும் தவிப்பு அவர் பேச்சிலே வெளிப்படையாகத் தெரிந்தது.எப்போதும் கம்பீரமாக பேசும் அவரது பேச்சில் ஒருவித நெகிழ்வு இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன். தொலைபேசியை துண்டித்தபின் என்னோடு பேசினார். அவரது பேச்சில் எப்படியாவது மக்களைப் பத்திரமாக பாதுகாத்துவிட வேண்டும் என்ற தவிப்புத்தான் அதிகம் தெரிந்தது. அடுத்து நான் செய்யவேண்டிய பணிகளைத் தெளிவு படுத்தினார்;.நானும் கொண்டு சென்ற சென்ற விபரங்களைப் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.ஏதோ இனம்புரியாத உணர்வு என்னை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது. தொடரும்… https://www.thaarakam.com/news/129072
 2. தடம் அழியா நினைவுடன் … மே-13 பகுதி -3 Last updated May 13, 2020 இரவு நேரந்தான், ஆனாலும் எல்லாம் பகல்போலதான் இருந்தது. சிறிலங்காப் படைகள் தமது அச்சத்தைப் போக்க இயற்கையின் இருளை மறைத்து வானத்தில் பரா வெளிச்சக் குண்டுகளால் ஒளிப்போர்வையை போர்த்தபடி இருந்தார்கள். வேவுவிமானம் தலைக்கு மேலால் சுற்றிக்கொண்டுதான் இருந்தது. எதிரியின் படைக்கலங்களிலிருந்து பாய்ந்துவரும் ரவைகளும் எறிகணைகளும் வீழ்ந்த வண்ணம்தான் இருந்தன. மக்களும் பாதுகாப்பைத்தேடிநகர்ந்து கொண்டுதான் இருந்தார்கள். நாங்களும் மெல்ல மெல்ல கால்போன போக்கில் நடந்து வட்டுவாகல் பகுதியை அண்டிய இடத்தை அடைந்திருந்தோம். அந்தப்பகுதி எமக்கு பழக்கமான இடம்தான். எங்கள் கடற்சண்டையணிகளின் பெரும் தளமாக அது இருந்தது. அடர்நத் பனைமரத் தோப்பு, பற்றைக் காடுகள், மணல்நிறைந்த வெட்டவெளியென பலதரப்படட் நிலப்பரப்பைத் தாங்கியிருந்த அந்த நெய்தல்மண் இப்போது அனைவரையும் சுமக்கத் தொடங்கியிருந்தது. நாங்களும் அந்த இடத்தில் பற்றைகளாய் கிடந்த ஒருபகுதியை எமக்கான இடமாக்கி பாதுகாப்பகழியை அகழத் தொடங்கினோம். மண்ணை வெட்டுவதற்கான எந்த உபகரணமும் இப்போது எங்களிடம் இல்லை. கையில் எம்பிட்ட தடியொன்றை எடுத்து கிண்டிக்கிண்டி கையாலே மண்ணை வெளியில் எடுத்தோம். அது மணற்பாங்கான இடமாக இருந்ததால் மூன்றுபேரும் முழுமூச்சாக நின்று குறுகிய நேரத்திலே காப்பகழியை அமைத்து விட்டோம். பக்கத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல் நாங்கள் காப்பகழி வெட்டத் தொடங்கிய நேரத்தில் இருந்தே மாறி மாறிக் கேட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அந்தக் குழந்தையின் குரல் அடைத்துப்போயிருந்தது. களைத்துப்போய் அமைதியாகும் குழந்தை மீண்டும் சிலநொடிகளிலே அழத்தொடங்கிவிடும். ஏன் குழந்தை அழுகிறது? நித்திரைக்கு அழுகிறதா? இல்லைப் பசியால் அழுகிறதா? எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. அதற்கு மிஞ்சியும் அந்த அழுகுரலைக் கேட்டுக்கொண்டு இருக்க மனம் பொறுக்கவில்லை. குயிலைக் காப்பகழியடியில் இருத்தி விட்டு நானும் கவியுமாய் குழந்தை அழும் இடத்தை அடைந்தோம். பாதுகாப்பகழி எதுவுமில்லாமல் பற்றையருகே ஒரு உருவம் குழந்தையை மடியில் வைத்திருப்பது தெரிந்தது. பக்கத்தில் சிறிய உருவம் ஒன்று நிலத்தில் படுத்திருந்தது. ”அக்கா.. அக்கா …” மெல்லக் குரல் கொடுத்துப் பார்த்தோம் எந்தப் பதிலுமில்லை. கொஞ்சம் உரக்க கூப்பிட்டுப்பார்த்தோம்.. ”அக்கா அக்கா…” ”யார் ..என்னையா கூப்பிடுறீங்கள்..” ஓர் ஆண்குரல். அக்கா என்று நினைத்து அழைத்தால் அது அண்ணாவாக இருக்கே..மனதிற்குள் ஒருமாதிரியாக உணர்ந்தாலும் சமாளித்துக் கொண்டோம். ”குழந்தையின்ர அம்மா எங்க…, நிறைய நேரமா பிள்ளை அழுது கொண்டே இருக்கே…அதுதான்..” கேட்க நினைத்ததைக் கேட்டுவிட்டோம். ”அவா போயிற்றா..எங்க எல்லாரையும் விட்டிட்டுப் ஒரேயடியா போயிற்றா.. விழுந்த செல் எங்க எல்லாரையும் ஒன்றாப் பறிச்சின்ரு போயிருக்கலாம்… இப்ப எங்களத் தவிக்கவிட்டிட்டு போயிற்றா..” அந்த அண்ணா வாய்விட்டு அழத்தொடங்கி விட்டார். நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அந்தத் துயர் எங்கள் நெஞ்சையும் அடைத்தது. அடுத்துப் பேசமுடியாது அமைதியானோம். அந்த அண்ணாவே தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசினார். ”பிள்ள பசியிலதான் அழுகிறாள்.. நாங்க இருந்த இடத்திலேயே எல்லாத்தையும் விட்டிட்டு வந்திட்டம். பிள்ளைக்கு தண்ணி கொடுக்க ‘பால்புட்டி’ கூட எடுத்திற்று வரேல்ல.. பக்கத்தில பிள்ளை அழுகிறதப் பார்த்தவர்கள் தேத்தண்ணி ஆத்திக் கொண்டு வந்து தந்தவை.. பிறந்து பத்து மாதம்தான்.. கப்பால பிள்ளைக்கு வடிவா குடிக்கத் தெரியல்ல.., மூதத்வன் தாய் சிதறிக் கிடந்தத கண்ணுக்கு நேர பார்த்தவன்.. பிள்ளை பயந்து போய் இருக்கு.., என்னோட கூட எதுவும் பேசிறானில்ல.., பயந்து படுத்திருக்கிற பிள்ளையப் பார்க்கிறதா இல்லை பசியில அழுகிற பிள்ளையப் பார்க்கிறதா எதுவுமே புரியாம நான் குழம்பிப் போயிருக்கிறன்….” விம்மி விம்மி அழும் அந்த அண்ணாவுக்கு ஆறுதல் சொல்ல முடியாதவர்களாக அப்படியே உறைந்துபோய் நின்றோம். ”..நாங்கள் உண்டியல் சந்திக்கு அங்கால நந்திக்கடல் பக்கமாத்தான் இருந்தனாங்கள்.. பொழுதுசாயிற நேரமா எங்கட பக்கத்தால துடைச்செடுத்திட்டான்…ஒரு மூடின பங்கருக்கதான் நாங்க இருந்தனாங்கள்…, செல் ஒன்று கூவிக்கொண்டு வந்தது.., மடியில வைத்திருந்த பிள்ளையக் காப்பாற்ற பிள்ளைக்கு மேல அவள் விழுந்து படுத்து ஒரு நொடிக்க கண்ணுக்கு முன்னாலேயே அவள் சிதறிப்போனாள்.. என்னால நம்பவே முடியல ..எல்லாம் ஒரு கனவு மாதிரி இருக்கு..ஆனா எல்லாம் நடந்து முடிந்து போயிற்று… அவளுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட இன்னும் விடேல்ல.. அந்த பங்கருக்குள்ளேயே அவளப் அப்படியே விட்டிட்டு வந்திட்டன்..” அவருக்கு சொல்லி அழுவதற்கோ, துன்பத்தில் பங்கெடுத்து ஆறுதல் சொல்வதற்கோ யாரும் இல்லை. முதல்முதலாக தனது துயரை எங்களிடம் தான் பகிர்ந்து கொள்கிறார்.அவரின் ஆற்றாமையை அதன் வலியை எங்களால் உணர முடிந்தது.பொதுவாகவே மற்றவர் துயரைத் தாங்கமுடியாத எங்களால் எம்மையறியாமல் வழிந்தோடும் கண்ணீரைக் கட்டுபப்டுதத் முடியவில்லை.. கவி எனது கைகளை இழுத்துக் கொண்டு சற்றுத் தள்ளி கூட்டி வந்தாள். ”அக்கா அந்தப்பிள்ளையப் பார்க்க பாவமா இருக்கு.. பச்ச மண் பசியால துடிக்கிது.. கொஞ்ச அங்கர்மாவும் சீனியும் கிடக்கு கொடுப்பமா..” ”இருந்தா ஓடிப்போய் எடுத்தின்ரு வா..” அடுத்தநொடி அவள் பால்மாவும் சீனியோடும் வந்து நின்றாள். கவி சிறந்த நிர்வாகி. இல்லையில்லை என்று சொல்லிச்சொல்லியே ஒவ்வொருநாளும் தேனீர் தருபவள். அதையும் விட இவ்வளவு மிச்சமாகவும் வைத்திருக்கிறாள். ஆச்சரியமாக இருந்தது. ”அதுசரி அக்கா அழுதுகொண்டு இருக்கின்ற பிள்ளைய வைத்துக் கொண்டு என்னென்று பிள்ளைக்கு பால்மா கரைக்க முடியும்..” அவள் கேட்பதிலும் நியாயம் இருந்தது. நேரத்தைப் பார்த்தேன் அதிகாலை 3.50 தான் ஆகிறது. அந்த நேரத்திலும் ஆங்காங்கே அடுப்புகள் எரிந்துகொண்டுதான் இருந்தன.பலர் இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருந்தார்கள். ”சரி வா பாப்பம்..” இருவரும் அடுப்பு எரிந்து கொண்டிருந்த ஓர் இடத்தடிக்குச் சென்றோம். மறைப்பு எதுவுமில்லை. வெட்டவெளியான இடத்தில் வடட் வடிவில் மணலை ஒதுக்கி பாதுகாப்பரண் அமைத்திருந்தார்கள். அதற்குள் மூன்று நாலு பேர் படுத்திருப்பது தெரிந்தது. அடுப்படியோடு நிற்பது ஒரு அக்கா என்பது தெளிவாகத் தெரிந்தது. பக்கத்தில் மண்ணரணில் சாய்ந்தபடி ஒருவர் இருந்தார். அந்தக்காவிடம் கேடப்தென்று முடிவெடுத்தோம். ”அக்கா..” கவிதான் மெல்ல அழைத்தாள். ”யாரது..” பதற்றத்தோடு மண்ணரணில் சாய்ந்திருந்தவர் எழும்பினார். ” அது நாங்கள்.. ” எங்கள் உடை நாங்கள் யாரென்பதை அடையாளம் காட்டியிருக்க வேண்டும். ” என்ன தங்கச்சியவை…” அந்த அண்ணா கேட்டபோது குழந்;தை பசியால் அழுவதைப்பற்றியும் அந்தக்குழந்தையின் தாய் இறந்ததைப்பற்றியும் சொன்னோம்.எங்களிடட் கொஞ்சம் மாவும் சீனியும் கிடக்கு சுடுதண்ணி இருந்தா கொண்டுபோய்க் கொடுகலாம் என்றுதான் வந்தனாங்கள் நிலமையை அவர்களுக்கு சொன்னபோது அவர்கள் கவலைப்படட் தோடு நின்றுவிடாது அவர்கள் துயரை தம்துயராக நினைத்து உதவவும் முன்வந்தார்கள். ”குழந்தையின்ர அழுகுரல் ஒன்று மாறிமாறிக் கேட்டுக் கொண்டுதான் இருந்தது.இப்படியென்று தெரியாமப் போச்சே.. நாங்களும் மூன்று குழந்தைகள வைச்சுக்கொண்டுதான் இருக்கிறம்.யாருக்கு எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாது.., இந்த நேரத்தில சகமனிதனுக்கு சகமனிதன்தான் உதவி செய்யவேணும்..,குழந்தை குடிக்கிற பால்மா எங்களிட்ட இருக்கு.. மீனா நீ பிள்ளைக்கு பால்மாவைக் கரை நான் அவையக் கூட்டீன்ரு வாறன்…” கருணை உள்ளங்களில்தான் கடவுள் இருப்பார். கடவுளை நேரில் பார்த்த மாதிரி இருந்தது. ”வாங்க தங்கச்சியவை போவம்..” உற்சாகமாக எழுந்து வந்தார் அந்த அண்ணா.இப்போதும் எங்கள் விழிகள் கனத்தன துயரில் அல்ல அவருக்குள் இருந்த மானிட நேயத்தைப் பார்த்து. ”எனக்கும் ஒரு தங்கச்சி மாலதி படையணியில இருந்தவள். புளியங்குளச் சண்டையில அவள் வீரச்சாவடைந்திட்டாள்.. அந்த அண்ணர் சொல்ல வந்த கதையைச் சொல்ல விடாது தடுதத்து அந்தக் குழந்தையின் அழுகுரல். ” அட கடவுளே .. அழுதழுது பிள்ளையின்ர குரலே அடைச்சுப் போயிற்ரே..” கூறிக் கொண்டே வேகமாய் குழந்தை இருந்த இடத்தை அடைந்தார். இருவரும் முன்பின்; அறிமுகமில்லாதவர்கள்தான். ஆனாலும் உரிமையோடு குழந்தையின் தந்தையை அழைத்தார். ”வாங்க தம்பி எங்கட இடத்துக்குப்போவம்.. பிள்ளை பசியால அழுதழுது களைத்துப் போயிற்று…தனிய உங்களால சமாளிக்க முடியாது.. வாங்க..தம்பி..” அவரது கையில் இருந்த குழந்தையை வாங்கினார். ”நீங்க மற்றப் பிள்ளையத் தூக்குங்கோ.. பயப்படாம என்னோட வாங்க.., தங்கச்சியவை சொல்லாட்டா எனக்குத் தெரியாது…,தங்கச்சியவை நீங்க இதிலதானே இருக்கிறீங்கள்?” எங்கள் பதிலைக் கூட எதிர்பார்க்காது குழந்தையை அணைத்துக் கொண்டு மளமளவென நடக்கத் தொடங்கினார். அந்த அண்ணாவின் பின்னே பிள்ளையைத் தூக்கிக் கொண்டு மற்ற அண்ணாவும் புறபடத் தயாரானார். ”நன்றி தங்கச்சியவை..பத்திரமா இருங்கோ..” இருவரும் ஒருவர்பின் ஒருவராகச் சென்று கொண்டிருந்தார்கள் மனதில் பெரும் சுமை இறங்கியது போன்ற உணர்வு.. ”அட இதக் கொடுகக் மறந்திட்டமே..” கவி கையில் வைத்திருந்த சீனியையும் மாவையும் காட்டினாள். ”ஓடிப்போய் கொடுத்திற்று வா.. சிறியவர்களை வைத்திருப்பவர்களுக்கு உதவியா இருக்கும்” அவள் பின்னால் சென்ற அண்ணனிடம் கொடுத்து விட்டு ஓடி வந்தாள். இருவரது மனசிலும் பெரிதாக சாதித்து விடட் திருப்தியும் மனநிறைவும் இருந்தது. கிழக்கு வானில் விடிவெள்ளி பூகக்த் தொடங்கி இருந்தது. மகிழ்வோடு எங்கள் இருப்பிடத்தை அடைந்தோம். தொடரும்… https://www.thaarakam.com/news/128848
 3. படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்! பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார் ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரும், எதிரிகளின் படைப் பலம், படைக் கட்டமைப்புக்கள் போன்றவற்றினைத் தெரிந்து தகவல் கொடுக்கவும், எதிரியின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்துப் பின் போராளிகளின் நடவடிக்கை சமர்களுக்கான தகவல்களை வழங்குவதற்கும், வேவுப்பிரிவு தேசியத்தலைவரால் உருவாக்கபட்டது. அதற்காக அல்லும் பகலும் தன் உழைப்பாலும் போராளிகளின் ஈகத்திற்க்கு உயிர்கொடுத்து வரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது என்றால் மிகையாகாது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் இத் தளபதியில் வளர்ப்பில் வார்த்தெடுத்த பல போராளிகள், தங்கள் ஈகத்தால் எம் தாய்மண்ணில் பல சரித்திரம் எழுதி சென்றார்கள். பின் தளத்தில் சென்று குறைந்த இழப்பில், பல வழிகளை தன வரைபடம் நேர்த்தியான ஆற்றல் மூலம் வடிவமைத்து திட்டமிட்டு தலைமையிடம் சமர்பிக்கும் நேர்த்தியான தேசத்தின் மீது கொண்ட உயிரோட்டத்தால் தேசியத்தலைவரிடம் மதிப்பும் – நம்பிக்கையும் கொண்டு விளங்கினார் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள். போராளிகள் மத்தியில் பிரிகேடியர் ” சசிக்குமார் மாஸ்ரர் ” என அன்புடன் மரியாதையுடன் அழைக்கப்பட்டு வேவுத்திட்டமிடல்கள் மூலம் பல தாக்குதல் வேவுத் திட்டமிடல்களாலும் பெருமதிப்புடன் நாளும் போராளிகள் மனதில் இடம் பிடித்தார். ஆயினும் மக்கள் மத்தியில் அறிந்திருந்தும் இப்படியான ஓர் தளபதி உள்ளார் என்றும் ஆயினும் வெளியில் தெரியா வெளிச்சமாக நாளும் தொடர்ந்தார் தேசபணிகள். தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்பணித்த பிரிகேடியர் சசிக்குமார் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாகவும் – அவர் வழிகாட்டலில் சிறப்புத் தளபதியாக இருந்த வரைபடைத்துறை – வேவுப்புலிகள் பிரிவின் ஈகத்தை தியாக உணர்வை அவர்கள் தாய்நாட்டிற்காக அர்பணித்த பெரும் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை. விடுதலை சுவடுகள் உங்கள் மனதை தாய்மண்ணின் நினைவுடன் ஆளட்டும் என்றுமே, பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் விடுதலை பயணத்தில் அவரின் கடமை எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதையும் வேவுப்புலிகளின் ஈகத்தையும் ஓர் கனம் உணர்ந்து பாருங்கள் !தமிழீழ மண்ணில் பல சிங்களப் படைமுகாம் தாக்குதலின் தார்ப்பரியத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் , எங்களது வேவு வீரர்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து தாக்குதல்களையும் பின்னூட்டத்தில் வேவுப்புலிவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி யாவும் என்பதை யாவரும் மடந்த்தில்லை ஆயினும் வெளிச்சத்திற்கு இந்த விடுதலை உரங்கள் தெரிவதில்லை என்பதே உண்மை … எங்களது வேவு வீரர்கள் அபூர்வமான மனிதர்கள். சாவுக்கும் அஞ்சாத அவர்களது வீரத்தை எண்ணிப்பாருங்கள். அது போற்றுதற்குரியது. பகைவனின் நெஞ்சுக்கூட்டுக்கு மேலேறி வேவு பார்த்துவிட்டு மீளும் அந்த மனத்துணிவு அபாரமானது. அது ஒரு இணைதேட முடியாத நெஞ்சுறுதி! தாங்கள் கொண்ட இலட்சியத்தில் அவர்கள் எத்துணை பற்றுக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அந்த இலட்சியத்திற்காகத் தங்களது இன்னுயிரையே துச்சமெனத் தூக்கி எறிய மனமுவந்து நிற்கும் அவர்களது தியாக உணர்வு, மேன்மை மிக்கது உன்னதமானது! தாயகத்தின் மீதும் தாயகத்து மக்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த நேசம் இருக்கிறதே …. அது சாதாரணமானதல்ல. அது ஒரு அளவு கடந்த காதல். தளர்ச்சியற்ற பிணைப்பு !அந்த வீரர்களின் ஒவ்வொரு அசைவுக்குப் பின்னால் இருந்தும், எதிரியின் வலைப்புகளிற்கு மத்தியில் நின்று அவர்கள் எடுத்த ஒவ்வொரு முடிவிற்குப் பின்னால் இருந்தும், அவர்களை இயக்கிக் கொண்டிருந்த உந்துவிசை – அவர்களுடைய அந்த ” மனநிலை ” தான். எங்கள் அன்னைபூமியை ஆக்கிரமித்தி நிற்கும் சிங்களப் படைகளின் மிகப் பெரியதும், மிகவும் பாதுகாப்பானதுமான பல தலைமையகப் படையரனுக்குள் வேவுப்புலி வீரர்களின் தடம் பதிந்துள்ளது. பன்னாட்டு சக்திகளும் – சிறீலங்கா அரசும் இணைந்து எம் மக்களைக் கொன்று குவித்து இனவழிப்பை அரங்கேற்றிய இனவெறியர்களுக்கு எதிராக விடுதலை தாகத்துடன் பல போராளிகளுடன் இணைந்து களமாடி முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் வருடம் வைகாசி 15ம் நாள் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்தார். https://www.thaarakam.com/news/130459
 4. இறுதிமூச்சுவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்! Last updated May 14, 2020 பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும், முதுநிலைத் நிலை கட்டளைத் தளபதிகளுமான பிரிகேடியர் சொர்ணம், ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான். பாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான். இக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், பாலியல் வல்லுறவுக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான். திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம். ஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான். சொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன். இவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன். இவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம். ஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும். படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன். இக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான். “நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன். வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி. இவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை. எமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான். நினைவுப்பகிர்வு:- விதுரன். https://www.thaarakam.com/news/130434
 5. வாயைக் கொடுத்து வாங்கிய வம்பு -கே. சஞ்சயன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன், சிங்கள ஊடகம் ஒன்றிடம் வாயைக் கொடுக்கப் போய், வம்பை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். “விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை” என்று, சுமந்திரன் வெளிப்படுத்திய கருத்து, அவரது அரசியல் எதிர்காலம் குறித்த பலமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் மூலம், அரசியலுக்குக் கொண்டுவரப்பட்ட சுமந்திரன், இற்றை வரைக்கும், இலங்கைத் தமிழ் அரசியலில், நீக்க முடியாத ஒருவராக மாறி விட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகச் சம்பந்தன் இருந்தாலும், அதன் பங்காளிக் கட்சிகளுக்கு மூன்று தலைவர்கள் இருந்தாலும், சுமந்திரன் தான் அதை இயக்குபவர் போலவே இருந்து வருகிறார். இது, அவரது ஆளுமையால் கிடைத்த வாய்ப்பா அல்லது அவருடன் உள்ள தலைவர்களின் ஆளுமையின்மையா என்பது, முக்கியமான கேள்வியாகவே இருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் சுமந்திரனை, ஒரே ஒரு கேள்வியின் மூலம், எல்லோரும் நிந்திக்கும் ஒருவராக மாற்றி விட்டார், சிங்கள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம. ஆயுதப் போராட்டத்தை, சுமந்திரன் விமர்சித்திருப்பது சரியா, தவறா என்ற விவாதங்கள் ஒரு புறத்தில் இருக்க, இந்தச் சூழ்நிலை, சுமந்திரனை அவரது அரசியல் வரலாற்றில் மிக நெருக்கடியான காலகட்டத்துக்குள் தள்ளி விட்டிருக்கிறது என்பது தான் உண்மை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் சுமந்திரன் நுழைந்ததும், சம்பந்தனுடனான நெருக்கமும் கூட்டமைப்புக்குள் இருந்த வெறுமை நிலையும், அவரைத் திடீரென முக்கியமானவராக மாற்றியது. தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்தபோதே, அவருக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமடைந்தன. கூட்டமைப்புக்கு வெளியே இருந்தவர்களும் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவர்களும், சுமந்திரனையே இலக்கு வைத்தனர். 2015 நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்ட சுமந்திரனுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகள் கிடைத்த போது, பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவரைக் கடுமையான எதிரியாகக் கருதும் அரசியல் தரப்புகளுக்கு, அது அதிர்ச்சியைக் கொடுத்தது. அவரது வெற்றி, எப்படிச் சாத்தியப்பட்டது என்ற கேள்வி, இப்போதும் பலருக்கு இருக்கிறது. அதற்குப் பின்னர், ஐ.தே.க அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்ட காலங்களில், ஐ.தே.க பிரமுகர் போலவே நடந்து கொள்கிறார், என்றொரு கருத்தும் நிலவியது. அதற்குக் காரணம், ஐ.தே.க அரசைக் காப்பாற்றுபவராகவும் அதற்கு முண்டு கொடுப்பவராகவுமே, சுமந்திரன் எப்போதும் காணப்பட்டார். அது, தமிழ் மக்களுக்கு அந்த விம்பத்தைக் கொடுத்து விட்டது. இப்போது, கூட்டமைப்புக்குள் தோற்கடிக்கப்பட வேண்டிய ஒருவரைக் கூறுங்கள் என்றால், எதிராக உள்ள கட்சிகளின் எல்லாப் பிரமுகர்களும் சுமந்திரனைத் தான் கூறுவார்கள். அந்தளவுக்கு அவர், சர்ச்சைகளை உருவாக்கி இருக்கிறார்; எதிர்ப்புகளைச் சம்பாதித்தும் வைத்திருக்கிறார். இவ்வாறான நிலையில், இந்தமுறை நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த முறையை விட, இரண்டு மடங்கு அதிக வாக்குகள், அதாவது, ஒரு இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று, சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. அவரது இந்தக் கருத்து, அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகப் பார்க்கப்பட்ட நேரத்தில் தான், சமுதித்த சமரவிக்ரமவுக்கு அளித்த செவ்வி, சுமந்திரனை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கிறது. இப்போது, சுமந்திரன் தனித்து விடப்பட்ட ஒருவராக மாறியிருக்கிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூட, அவரது செவ்வியை ஆதரிக்கத் தயாராக இல்லை. கூட்டமைப்பின் எல்லாப் பங்காளிக் கட்சிகளுமே, அவரை விழுந்து விழுந்து தாக்கியிருக்கின்றன. பங்காளிக் கட்சிகளும் தலைவர்களும் பிரமுகர்களும் சுமந்திரனை இந்தளவுக்குப் போட்டுத் தாக்குகின்ற நிலையில், அவரை எப்போதும் எதிர்த்து வந்த தரப்புகளுக்கு, இதைவிடப் பொன்னான வாய்ப்புக் கிடைக்காதல்லவா? இவர்களும் சேர்ந்து, இப்போது சுமந்திரனைத் தாழித்துக் கொட்டுகிறார்கள். ஆக, கூட்டமைப்புக்கு வெளியிலும் உள்ளேயும் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் சுமந்திரன். இவ்வாறான ஒரு நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் சுமந்திரன் எவ்வாறு தாக்குப் பிடிக்கப் போகிறார் என்பதே, முக்கியமான கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்தமுறை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குக் கடுமையான போட்டி இருக்கிறது. விக்னேஸ்வரன் அணி, கஜேந்திரகுமார் அணி ஆகியவற்றின் கடும் போட்டியை மாத்திரமன்றி, ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஈ.பி.டி.பி போன்ற ஏனைய வழக்கமான எதிரிக்கட்சிகளையும் கூட்டமைப்பு, அங்கு சவாலாக எதிர்கொள்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஏழு ஆசனங்களை, இத்தனை கட்சிகளுடன் பங்கு போட வேண்டியுள்ள சூழலில், கூட்டமைப்புக்குக் கிடைக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையைப் பற்றிய பலத்த சந்தேகங்கள் உள்ளன. இவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்கள் மற்றும், புதிய வேட்பாளர்களின் போட்டிக்கு மத்தியில், சுமந்திரனால் தனது ஆசனத்தைத் தக்க வைக்க முடியுமா என்ற சந்தேகம் இப்போது அதிகரித்துள்ளது. ஏனென்றால், ஆயுதப் போராட்டம் தொடர்பாக, சுமந்திரன் வெளியிட்ட கருத்து, அனைத்துத் தமிழ் மக்களாலும் எதிர்க்கப்படுகிறது என்றில்லை; இந்தக் கருத்தை, வலுவாக ஆதரிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் காலத்திலேயே, புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருந்த போதே, இதைக் கூறியவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் மத்தியில் கூட, சுமந்திரன் “ஹீரோ” ஆக முடியவில்லை என்பது தான், அவரது துரதிர்ஷ்டம். எல்லாத் தமிழ்க் கட்சிகளுக்கும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற அவா இருக்கிறது. அதைவிடக் கூடுதல் அவா, சுமந்திரன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் இருக்கிறது. இப்போதைய நிலையில், அவர்கள் சுமந்திரனைப் போட்டுத் தாக்குவதற்குப் பின்னால் உள்ள காரணம் அது தான். சுமந்திரன் பற்றிய கண்டனங்கள், கருத்துகள் தீவிரமாகப் பரவியுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் பெயர்களும் ஊடகங்களில வந்து விட வேண்டும் என்பதற்காக, அறிக்கைகளை வெளியிட்டவர்கள் தான் அதிகம். அதைவிட, சுமந்திரனோடு சேர்ந்து நின்றால், தாங்களும் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், அவருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டவர்களும் உள்ளனர். சுமந்திரன், தனது ஆற்றல், வாதத் திறமையால் நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்புகளைப் பெற்றிருக்கிறார். அதே வாயால்த் தான், இப்போது மோசமான நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கிறார். இந்தமுறை, தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெறுவதென்பது, ‘குதிரைக் கொம்பு’ போன்ற விடயமாகத் தான் இருக்கப் போகிறது. ஏனென்றால், அவரைச் சுற்றித் தான் எல்லோரும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கர வியூகத்துக்குள் இருந்து வெளியேறும் வழி, சுமந்திரனுக்குத் தெரியுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அவர், இந்த வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாலும் கூட, தேர்தலில், அவருக்குச் சாதகமான நிலை ஒன்று இருக்குமா என்பது, சந்தேகம் தான். அந்தளவுக்கு, சுமந்திரனுக்கு எதிரான கருத்தியல் வலுப்பெற்றிருக்கிறது. இது, எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய வியூகம் அல்ல; அவரே போய், பொறிக்குள் மாட்டிக் கொண்டார் என்று தான் கூற வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுபூர்வமான விவகாரங்களைக் கவனத்தில் கொள்ளாமல் இருக்கும் போது, அது எவ்வாறான விளைவுகளைத் தரும் என்பதை, சுமந்திரன் போன்றவர்கள் சாதாரணமாக எடைபோட்டு விட்டார்கள். இந்த நிலையில், சுமந்திரன் அரசியலில் தப்பிப் பிழைப்பாரா என்பதை, நாடாளுமன்றத் தேர்தல் தான் தீர்மானிக்கப் போகிறது. அவர், 2015 தேர்தலுக்கு முன்னதாக, அளித்த ஒரு பேட்டியில், ‘தேர்தலில் தோல்வியடைந்தால், அரசியலை விட்டு விலகி விடுவேன்’ என்று கூறியதாக ஞாபகம். அப்போது, அவர் வெளியேறும் தேவை வரவில்லை. ஆனால், இப்போதும் அதே சபதத்தை அவர், நிறைவேற்றுவாரா என்று தெரியவில்லை. ஏனென்றால், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகள் தோல்வியில் முடிந்தால், அரசியலை விட்டு விலகி விடுவேன் என்று முன்னர் கூறியிருந்தார். ஆனால், அந்த அரசமைப்பு உருவாக்க முயற்சிகள், இப்போது முடங்கிப் போய் விட்ட நிலையிலும், சுமந்திரன் அரசியலில் நீடித்து வருகிறார். எனவே, இந்த நாடாளுமன்றத் தேரதலில் தோல்வியைத் தழுவினாலும், சுமந்திரன் அரசியலை விட்டு ஒதுங்குவாரா என்பது சந்தேகம் தான். அரசியலில் அவர் நிலைத்து நிற்க வேண்டுமானால், தமிழ் மக்களின் இதயத்தையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் முதலில் புரிந்து கொள்வது நல்லது. இல்லையேல், இப்போதையதைப் போலவே, எதிர்காலத்திலும் அவர், வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டிய பல சந்தர்ப்பங்கள் உருவாகும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வாயைக்-கொடுத்து-வாங்கிய-வம்பு/91-250282
 6. பெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த நாட்டில் உள்ள எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களும் கூட்டாகப் பலவித அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக, சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள், தமிழர்கள் தமது முக்கியப் பண்டிகைக் கொண்டாட்டங்களைத் தியாகம் செய்ததைக் குறிப்பிட்டாக வேண்டும். கொவிட்-19 வேகமாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில், இயேசுநாதர் உயிர்த்தெழுந்ததை நினைவுபடுத்தும் உயிர்த்த ஞாயிறு தினம் வந்தது. கடந்த வருடத் தாக்குதல்களை நினைவுகூர வேண்டிய ஒரு நிலையும் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால், பேராயர் ஒரேயொரு முறைதான் கோரிக்கை விடுத்தார். மறுபேச்சின்றி, எல்லாக் கத்தோலிக்க, கிறிஸ்தவ மக்களும் வீடுகளில் அனுஷ்டானங்களை மேற்கொண்டனர். கௌதம புத்தரின் பிறப்பு, இறப்பு, ஞானம் பெற்றமை ஆகியவற்றை அனுஷ்டிக்கும் பௌத்தர்களின் புனித தினமான வெசாக் திருநாள் வந்தது. ஆனால், அரசாங்கமும் பௌத்த மகா சங்கங்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க மிகவும் எளிமையான முறையில், சிங்கள மக்கள் வெசாக்கை அனுஷ்டித்தனர். இதேவேளை, தமிழ், சிங்களப் புத்தாண்டு வந்தது. அரசாங்கம் எல்லோரையும் வீடுகளில் இருந்து அமைதியாகக் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, சிங்கள மக்களும் தமிழர்களும் வீடுகளில் இருந்து கொண்டாடினார்கள். கொழும்பிலோ, நாட்டின் எப்பகுதியிலோ, சிங்களவர்களோ, தமிழர்களோ ஆடைக் கொள்வனவுக்காக முண்டியடித்ததாகவோ பெரும் ஆர்ப்பரிப்புகளோடு அத்திருநாள்களைக் கொண்டாடியதாகவோ நாம் கேள்விப்படவில்லை. ஆனால், கடந்த சில நாள்களாக, நோன்பு நோற்று வருகின்ற முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் எதிர்வரும் நோன்புப் பெருநாளுக்காக ஆடைகளைக் கொள்வனவு செய்ய வர்த்தக நிலையங்களுக்குச் செல்வதாக, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் மனவேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றன. இதில் சில செய்திகள், முஸ்லிம்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்காகப் பொய்யாகச் சித்திரிக்கப்படுகின்றன. உண்மையில், கடந்த காலங்களைப் போல், இம்முறை ஆடைக் கொள்வனவில் முஸ்லிம் சமூகம் அதீத அக்கறை காட்டவில்லை. என்றாலும், ஆங்காங்கே ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்காக, முஸ்லிம் பெண்கள் குவிவதாக வருகின்ற செய்திகள், பொய்யானவை என்று சொல்வதற்கில்லை. உலகத்தில் பல நாடுகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. தினமும் நூற்றுக்கணக்கான உயிர்கள் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளன. இலங்கையிலும் இன்னும் கொவிட்-19 முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவேதான், அத்தியாவசிய தேவைக்காக மட்டும், வெளியில் செல்லுமாறு அரசாங்கம் கூறியுள்ளது. இதனைப் பயன்படுத்தி, ஆடைக் கொள்வனவில் ஈடுபட்டு, சந்தோசமாக பெருநாளைக் கொண்டாடுவதற்காக வெளியுலகுக்குக் காண்பிக்க முனைவதும், சமூக இடைவெளியை மீறி நடப்பதும், படுமுட்டாள்தனமும் சமூக சிந்தனையற்ற செயற்பாடுமாகும். இலங்கையில் ஏனைய சமூகங்கள், தமது விசேட தினங்களைத் தியாகம் செய்துள்ளன. முஸ்லிம்கள், இவ்வளவு காலமும் கொண்டாடிய பெருநாள்தானே. இந்த முறை மாத்திரம் கொண்டாடாமல் விட்டால் என்ன நடந்து விடப்போகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவதால், கொத்துக் கொத்தாக கொவிட்-19 தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதுடன், முஸ்லிம்கள்தான் இரண்டாம் கட்டமாக, இந்த நாட்டில் இவ்வைரஸைப் பரப்பினார்கள் என்ற பழிச்சொல்லுக்கும் ஆளாக நேரிடும் என்பதை மறக்க வேண்டாம். இந்த விடயத்தில், சில அமைப்புகள், பிராந்திய உலமா சபைகள் அறிக்கை வெளியிட்டிருந்தாலும், ஜம்மியத்துல் உலமா சபை, முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்த்தக நிலையங்களை மூடுவதுடன், சட்டத்தைக் கொஞ்சம் கடுமையாக நடைமுறைப்படுத்தினாலும் பரவாயில்லை. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பெருநாள்-கொள்வனவு-பழிச்-சொல்லுக்கு-ஆளாக-வேண்டாம்/91-250281
 7. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை, கஜேந்திர குமார் பார்வையிட்டார்… May 15, 2020 யாழ்.பருத்தித்துறை மந்திகை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை வைத்தியசாலைக்கு சென்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பார்வையிட்டார் இன்று அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலோலியைச் சேர்ந்த 22 வயதுடைய பசுபதி அனுசன் என்ற இளைஞனே கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் காயமடைந்துள்ளார். “மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு காயமடைந்துள்ளார். அதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்தவேளை, இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இராணுவத்தினர் மறித்தனர். எனினும் அதனை மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என இராணுவத்தினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://globaltamilnews.net/2020/142880/
 8. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நாகர்கோவில் பகுதியில் May 15, 2020 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நடைபெற்றது. கடந்த 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படையின். குண்டு வீச்சுக்கு இலக்காகி நாகர் கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் 21 பேர் படுகொலையாகியிருந்தனர். அன்றைய தினம் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாகவும் , முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாகவும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை அஞ்சலி நிகழ்வுகள் முடிவுற்று ஏற்பாட்டாளர்கள் நிகழ்விடத்தில் இருந்து வெளியேறி சற்று தூரம் சென்ற பின்னர் பருத்தித்துறை காவல்துறையினர் வாகனங்கள் , மோட்டார் சைக்கிளில் சுமார் 20 க்கும் மேற்பட்டவர்கள் அவ்விடத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #முள்ளிவாய்க்கால் #நினைவேந்தல் #நாகர்கோவில் #தமிழ்தேசியமக்கள்முன்னணி http://globaltamilnews.net/2020/142862/
 9. தன்னையும் தனது குடும்பத்தினரையும் தான் கொண்ட இலட்சியத்துக்காக ஆகுதியாக்கிய தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்... 2009 இறுதி யுத்தகாலப் பகுதியில் நான் யாழில் எழுதுவதை நிறுத்தியிருந்தேன். எல்லாம் நம்பிக்கைகளும் தகர்ந்துபோனதுதான் காரணம். ஆனாலும் பதிவுகளை வாசித்து வந்தேன்.. சாத்திரியார் எழுதியதும் நினைவுக்கு வந்தது. தேடிப்பார்த்தால் இப்போதும் இருக்கு. https://yarl.com/forum3/topic/59378-வியாபாரிகளால்-வீழ்ந்த-என்தலைவாவீரவணக்கங்கள்்/
 10. இதை நானே ஒரு நொடியில் உருவாக்கினேன் மகுத்துவர் என்றால் ஊசிமருந்து குத்துபவர்
 11. முன்னவர் மதுத்துவர் பின்னவர் மகுத்துவர்
 12. லெப். கேணல் நவம் வீழ்ந்தாலும் வித்துக்களாக மடிந்தாலும் மக்களுக்காக………..! Last updated May 14, 2020 முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்த இந்திய இராணுவ முகாம் மீதான தாக்குதலில் விழுப்புண்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவந்த வேளை 15.05.1989 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் லெப். கேணல் நவம் (டடி) ஆகிய மாவீரரின் 31ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியோரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையெனத் முடிவெடுக்கிறான். “எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி. டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் நாட்டில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை காதலித்த…. வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில். பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான். விருந்தாளிகளாக வந்தோரால் எதிலியாக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள். அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது. நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன். ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பகுதியில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான். வெளியீடு :களத்தில் https://www.thaarakam.com/news/130418
 13. தடம் அழியா நினைவுடன் … மே-13 – பகுதி 2 ”எத்தனை பெரிய ஆக்களாக இருந்தாலும் பிள்ளைகளுக்கு அவை அம்மா அப்பாதானே.., அதுகும் சின்னவனுக்கு வடிவா ஒருவயது கூட ஆகேல்ல.., வாயால சொல்லத் தெரியா விட்டாலும் பிள்ளை அம்மான்ர அணைப்பைத் தேடி ஏங்கிறத ஒரு தாயா நான் உணர்ந்திருக்கிறன். பெரியவன் சொல்லவே தேவையில்ல.. அடிக்கடி அம்மா அப்பாவக் கேட்டு அடம்பிடித்து அழுவான்….பச்ச மண்ணுகள் தானே அதுகளுக்கு என்ன தெரியும்…” பேசமுடியாது தடுமாறினார். ”கொஞ்சம் தண்ணி குடிக்கிறீங்களாக்கா..” போத்தலில் நிரப்பி வைத்திருந்த தண்ணீர் எடுத்துக் கொடுத்தேன். குடித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார். ”இரவு ஒரு ஒன்பது மணி இருக்கும். இரண்டு பேரும்; வந்திச்சினம். எனக்கு மனசெல்லாம் இனம்புரியாத மகிழ்ச்சி. இப்பதான் பிள்ளையல் படுத்தவ. இரண்டுபேரையும் பார்த்தா சந்தோசப்படுவாங்கள். நான் பிள்ளையல எழுப்பீற்று வாறன்…” ஓடிப் போக முயன்ற என்னை தங்கச்சிதான் தடுத்தாள். ”வேண்டாமக்கா.., நாங்க பிள்ளைகள் படுக்க முதலே வந்திட்டம். இந்த தரப்பால் ஓட்டைக்குளால எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தனாங்கள். பிள்ளைகள் நித்திரையாப் போகட்டும் என்று வெளியிலேயே நிண்டிடட்ம்..” எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ”ஏன்? பிள்ளைகள் பார்த்தா எவ்வளவு சந்தோசப்படுவாங்கள்.” நான் பிள்ளைகள் நிலையிலிருந்து பேசினேன். அவள் தனது நிலையிலிருந்து பேசினாள். ”நாங்கள் போகவேணுமக்கா.., பிள்ளையல் எங்களப் பார்த்து நிறைய நாளாயிற்று.., இப்ப பார்த்தா விடமாட்டாங்களக்கா…,நிலமையச் சொல்லிப் புரிய வைக்கும் பக்குவப்படட் வயசு அவன்களுக்கு இல்லை..,ஏற்கனவே அம்மா அப்பான்ர ஏக்கத்தில இருக்கிற பிள்ளைகளுக்கு கொஞ்ச நேர மகிழ்ச்சியக் குடுத்திட்டு அதத் திரும்பவும் பறிச்சிற்றுப் போகக்கூடாது..” இருவரும் கதைத்துப்பேசி தங்களுக்குள்ள தீர்க்கமான முடிவெடுத்து விட்டுத்தன் வந்திருக்கினம். பிள்ளைகள் அழுது கவலைப்பட்டு மனம் வருந்துவதைப் பார்க்கின்ற தைரியம் அவர்களுக்கும் இல்லை. வானத்தில் எரிந்து கொண்டிருந்த பரா வெளிச்சத்தில் அவள் முக உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் போர்க்கோலத்தில் கையில் ஆயுதங்கள் தரித்து எப்போதும் போல் கம்பீரமாகவே வந்திருந்தார்கள். கையில் இருந்த ஆயுதத்தை காப்பாகப் போடப்பட்டிருந்த மண்மூட்டை மீது பத்திமாக வைத்துவிட்டு காப்பகழிக்குள் அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளை ”ரோச்லைற்” வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டு நின்றார்கள். துயர் நெஞ்சை அடைக்க நான் வெளியால வந்திட்டன். ”பெற்ற பிள்ளைகள அவர்களுக்கே தெரியாம மறைந்து நின்று பார்க்கிற கொடுமை எந்தப் பெற்றவர்களுக்குமே வரக்கூடாது.” விம்மி வெடித்த அழுகையை அடக்கிக்கொண்டு தேனீர் தயாரிக்க வந்தேன். சத்தமின்றி பின்னாலே அவர்களும் வந்து விட்டார்கள். ”தேத்தண்ணி ஒன்றும் வேண்டாமக்கா..நாங்க வெளிக்கிடப் போறம்..” அதற்கு மிஞ்சி அங்கு நிற்பதற்கு இருவராலும் முடியாது என்பது எனக்குத் தெரியும். அம்மா அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தார்கள். கடைசியா வெளியில வந்து என்னுடைய கையப் பிடித்து, ”அக்கா பிள்ளைகள் பத்திரம்.. திரும்பவும் எல்லாரையும் பார்க்கிற சந்தர்ப்பம் எப்ப கிடைக்குமோ தெரியாது..நாங்க போயிற்றுவாறம் ..” அவளது கை எனது கைகளை இறுகப்பற்றிக் கொண்டது. ”அக்கா போயிற்று வாறன்..பிள்ளைகள் கவனம்..” இப்போதும் அந்தக் குரல் என் காதுகளில் எதிரொலித்தபடி இருக்கு. எப்போதும் கம்பீரமாக இருக்கும் அவளின் குரல் புறப்படும் நேரத்தில் உடைந்திருந்தது. என்னால தாங்க முடியேல்ல. நான் கலங்கினால் அவளும் கலங்குவாள். என்னைத் திடப்படுத்திக் கொண்டேன். ” நீ… பிள்ளைகளைப் பற்றி கவலைப்படாத, நானிருக்கிறன், கவலைப்படாம போயிற்றுவா..” அவளை வழியனுப்பி வைத்திட்டன்.ஆனால் அதில இருந்து என்ர மனசு நிம்மதிய இழந்து தவிக்கிறமாதிரி இருக்கு. அவள் என்ர கையப்பிடித்த பிடியும் அதவிடேக்க இருந்த ஏதோ ஒருவித உணர்வும் இப்பவும் எனக்கு ஒரு மாதிரியாவே இருக்கு. பிள்ளைகளுக்கு முன்னால எதையும் வெளிக் காட்ட முடியேல்ல.. அவரது தவிப்பு எனக்குப் புரிந்தது.எதைச்சொல்லித் தேற்றுவது என்று புரியவில்லை. அவர் புறப்படத் தயாரானார். ”அக்கா இப்ப நீங்க தைரியமா இருக்கவேண்டிய நேரம்…நீங்க உடைந்து போனா பிள்ளைகளப் பார்க்கிறது யாரு.. எல்லாம் நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.கவலைப்படாம போயிற்று வாங்க அக்கா…, தாறு மாறா ரவுண்சுகள் கீசிக்கீசி வருது.. பாத்துப் பத்திரமா போங்கோ…. எதைப்பற்றியும் யோசிக்காதையுங்கோ.. இப்ப உங்கட மூன்று பிள்ளைகளோட தங்கச்சின்ர இரண்டு பிள்ளைகளுமா ஐந்து பிள்ளைகளப் பாதுகாக்கிற பெரும் பொறுப்பு உங்களிட்ட இருக்கு.. ”ஏதேதோ ஆறுதல் சொல்லி அவரை அனுப்பி வைத்துவிட்டேன். ஆனாலும் அவர் சொன்ன கதையின் காட்சி என் மனக்கண்ணில் படமாய் வந்து கொண்டே இருந்தது. நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தங்கள் குழந்தைகளை விட, தாய்நாட்டைக் காப்பாற்றும் கடமையை நேசிக்கும் அந்த அர்ப்பணிப்பு எந்த அளவுகோலாலும் அளவிட முடியாதது. இவர்களைப் போல இன்னும் எத்தினபேர்…. தங்கட பிள்ளைகளை பெற்றவர்களிடமும் உறவுகளிடமும் ஒப்படைத்து விட்டு தாங்கள் வரித்துக் கொண்ட தேசவிடுதலைக் கனவை நெஞ்சினில் சுமந்து களத்தில நிற்கிறார்கள். அவர்கள் மீதான மரியாதை இன்னும் உயாந்தது. பசி என்ற உணர்வு மரத்துப்போயிருந்தாலும் அடிக்கடி வெளியில் எட்டிப்பார்த்தபடி இருந்தாள் கவி. சாப்பாடு கொண்டு வரும் தம்பியை இன்னமும் காணவில்லை. இந்த குண்டு மழையைக் கடந்து அவனால் மட்டும் எப்படி வரமுடியும். ”ஐயோ என்ர பிள்ளையக் காப்பாற்றுங்கோ.. என்ர பிள்ளையக் காப்பாற்றுங்கோ..” கதறிக் கொண்டு ஒரு ஏழு வயது மதிக்கத்தக்க குழந்தையைக் கையில் ஏந்தியபடி ஓடிக்கொண்டு இருந்தார் நடுதத்ர வயது மதிக்கத்தக்க ஒரு தந்தை.அவரது முதுகிலும் இரத்தம் சொட்டிக் கொண்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி அவரது மனைவியாக இருக்கலாம்.நடக்க முடியாது அந்த இடத்திலேயே இருந்தபடி கதறிக் கொண்டு இருந்தார். ” பத்து வருசமாத் தவமிருந்து பெத்த பிள்ள..எனக்கு முன்னால என்ர பிள்ளையப் பறிச்சிராத கடவுளே..” கத்துவதற்குக் கூட திராணி அற்று இருந்தது அந்தத் தாயின் கதறல். ஓடிப்போய் இடுப்பில் கட்டியிருந்த சாரத்தைப் கிழித்து துடைப் பகுதியைச் சிதைத்து கொட்டிக் கொண்டு இருந்த இரத்தத்தைத் தடுத்து முடிந்தவரை கட்டுப்போட்டு விட்டேன். அந்த இடத்தில் அவரை அப்படியே விட்டுவிட்டுப் போக என்னால் முடியவில்லை. அவரது நல்ல காலமாக இருக்கவேணும்.முன்னரங்கில் விழுப்புண்தாங்கிய போராளிகளை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தில் அவரை ஏற்றி விட்டேன். உடலெங்கும் இரத்தம் பிசுபிசுத்தது. அநத் குண்டு மழை நடுவிலும் மறைப்போடு இருந்த கிணற்றில் மளமளவென்று அள்ளிக் குளித்துவிட்டு ஓடிவந்தேன். வெளியில் உடுப்புகளக் காயவிடமுடியாது. உள்ளேயே உலரவிடடேன்.அதையும் விட்டால் மாற்று உடுப்பே இல்லாமல் போய்விடும். ”அக்கா சாப்பாடு வருதாம்..வெளியில நிக்கட்டாம்..” தொலைத் தொடர்புக் கருவியோடு இருந்த இசை சொன்னாள். அதற்குள் சாப்பாட்டோடு அவன் வந்து விட்டான். ”அக்கா..எங்கட சமையல் கூடத்துக்கல்லோ அடி விழுநத்திட்டு. பாவம் சமைச்சுக் கொண்டு இருந்த ஐயாவும் ஒராள் காயப்பட்டிட்டார். அதுதான் நல்லா நேரம் போயிற்று. இரவு சாப்பாடு வராது..இதை வைச்சே சமாளியுங்கோ…” அவன் அடுதத் இடத்துக்கு சாப்பாடு கொண்டு போகும் அவசரத்தில் ஓடிவிட்டான். சோற்றையும் பருப்புக் கறியையும்; ஒன்றாக கலந்து ஒரு சொப்பின் பையில் கட்டியிருந்தார்கள்.அதுகும் வழமையை விட குறைவாகத்தானிருந்தது. கவி ஓடிவந்து அதை வாங்கினாள். ” அக்கா முதல் இருக்கிறத இப்ப சாப்பிடுவம்.. இரவப்பற்றி பிறகு யோசிப்பம்..” அவள்தான் இருந்த மூன்று பேருக்கும் சாப்பாட்டைப் பங்கிட்டாள். உணவின் சுவையைப்பற்றியோ.. இல்லைப் போதும் போதாது பற்றியோ யாரும் எதுவும் மூச்சு விடவில்லை. பொழுது சாயத் தொடங்கியிருந்தது. அந்த இடத்தை விட்டு கிட்டத்தட்ட அனைவருமே வெறியேறி விட்டார்கள். வானத்தில் பரா வெளிச்சக் குண்டுகள் ஒளியேற்றத் தொடங்கியிருந்தன. ” அக்கா உங்களக் கதைக்கட்டாம்…” தொலைத் தொடர்புச் கருவியோடு வந்தாள் இசை. அந்த இடத்தை விட்டு வெளியேறும்படியான கட்டளை. எப்போதும் தயாராக இருக்கும் எமது துப்பாக்கிகளோடு எமது உடைமைப் பைகளையும் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். தொடரும்… https://www.thaarakam.com/news/129065
 14. தடம் அழியா நினைவுடன் … மே-13 அ . அபிராமி ‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள் ஆங்காங்கே தகரத்தில் பட்டுத் தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்ததாக இல்லை. மணிக்கட்டைப் பார்த்தேன்.நேரம் அதிகாலை ஐந்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ”அட நாலு மணிக்குத்தானே காவல் கடமைய மாத்தி விட்டனான். அதுக்குள்ள ஐந்து மணியாச்சா..” இனி எப்படிப் படுத்தாலும் தூக்கம் வரப்போவதில்லை. தலைக்கு வைத்துப் படுத்திருந்த உடமைப் பையிலிருந்து சீப்பை எடுத்துத் தலையை வாரிக் கட்டிக் கொண்டேன். கீழே விரித்துப் படுத்திருந்த உரப்பையை மடித்து வைத்துவிட்டு முகம் கழுவ வெளியில் வந்தேன். தலையை உரசிக்கொண்டு போவதுபோல் சீறிக் கொண்டு போனது எறிகணை ஒன்று. ”அக்கா… உள்ளவாங்கோ.. கனோனால பொழியப்போறான்…ஓடி வாங்கோ..” பக்கத்தில் காவல் கடமையில் நின்றவள் இரண்டு மூன்று அடி தள்ளி நின்ற என்னை அழைக்க பத்து வீடு கேட்க கத்தினாள்.அவள் சொல்லி வாய் மூடவில்லை. மூச்சு விடாமல் பொழியத் தொடங்கியது பல்குழல் எறிகணை. ”ம்.. விடியக் காத்தாலேயே தொடங்கீற்றான்… இண்டைக்கு எத்தின பேற்ற உயிரப்பறிக்கப் போறானோ தெரியேல்ல…” அவள் வாய் முணுமுணுத்தது. அதற்குள் மற்றவள் தேனீரோடு வந்தாள். ”கிடந்த சீனியப் போட்டுத்தான் தேத்தண்ணி ஊத்திருக்கு. இண்டையோட அதுகும் சரி .” கிட்டத்தட்ட மூன்று நாலு நாளா இதையேதான் அவளும் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். ஆனால் விடிந்ததும் எப்படியோ தேத்தண்ணி ஊத்தித் தந்திடுவாள். நாங்கள் இப்போது இருக்கும் இடம் உண்டியல் சந்தியடிக்கு சற்று முன்னதாக இருந்தது. அந்த இடத்துக்கு வந்து இரண்டு நாடக்ள் தான் ஆகியிருந்தது. என்னோடு இன்னும் இரு போராளிகள். இசை செஞ்சோலையில் வளாந்தவள். கவி இரு மாவீரர்களின் சகோதரி.இருவருமே எந்தச் சூழ்நிலையிலும் களமுனைக்கு அனுப்பக்கூடாது என்ற தலைமைச் செயலகத்தின் உறுதி மொழியோடு நிற்பவர்கள். எமக்கு முன்னதாக அந்த இடத்தில் இருந்துவிட்டு சென்றவர்கள் அமைத்திருந்த பாதுகாப்பகழி இப்போது எங்களின் பாதுகாப்பிடமாக இருந்தது. கிழக்கு வானம் மெல்ல வெளிக்கத் தொடங்கியது. ஆங்காங்கே மூட்டை முடிச்சுகளோடு மக்கள் நகரத் தொடங்கியிருந்தார்கள். பணியின் நிமிர்த்தம் முன்னரங்கிற்கு சென்று வர வேண்டிய தேவை எனக்கிருந்தது. புறப்படத் தயாரானேன். முன்னரங்கு என்பது பல கிலோ மீற்றர்கள் தள்ளி இருக்கும் இடமல்ல. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒரு 800 மீற்றருக்கு உடப் ட்ட தூரம்தான். பொடிநடையாப்போனா 4-5 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் வண்டுக்கு மறைப்பெடுத்து, எதிரியின் தாக்குதல்களுக்கு காப்பெடுத்துச் செல்ல ஒரு மணி நேரத்துக்கு மேலாக எடுத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த தரப்பால் கொட்டகைகள் சுனாமி அழிவுக்குப்பின் கட்டப்பட்ட வீடுகள் என மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருந்த அந்தப் பகுதி இப்போது கொடும் சூறைக்காற்றில் சிக்குண்டு அழிந்த இடமாய்க் காட்சி தந்தது. சாம்பல் மேட்டின் மேல் நிற்பது போன்ற உணர்வு. காப்பகழிகளுக்குள்ளே புதைந்தும் புதைபடாமலும் கிடந்த உடலங்களின் நெடி நெஞ்சை நெருடியது. காகங்கள் அங்கும் இங்குமாய் பறந்து பறந்து மனித உடலங்களை தமக்கு இரையாக்கிக் கொண்டு இருந்தன. அதற்குள் நின்றுதான் போராளிகள் எதிரியை எதிர்த்துக் களமாடிக் கொண்டிருந்தார்கள். களத்தில் நின்று போராடிக் கொண்டிருந்த போராளிகளின் மனவுறுதியை ஒப்பிட்டுச் சொல்ல எதுவுமே இல்லை. ஆர்.பீ.ஜீ எறிகணை ஒன்று ஸ்ஸ்ஸ்.. என்ற இரைச்சலுடன் காதை உரசிச் சென்றது.விழுந்து படுத்தேன்.உடலில் ஏதாவது எறிகணைத் துண்டு பட்டிருக்கும் என்று நினைத்தேன்.ஆனால் அப்படி எதுவும் பட்டதாக தெரியவில்லை. ”அக்கா பார்த்து வாங்கோ…, நிமிர்ந்து நடந்தால் தலைதான் பறக்கும்…வென்ரெடுத்து வாங்கோ…” முன்னரங்கில் நின்ற போராளி உரத்த குரலில் சொன்னான். ஒரு மாதிரி வென்ரெடுத்தபடியே முன்னரங்கை அடைந்தேன். குயிலினி என்னைக் கண்டு விட்டு ஓடிவந்தாள். சுடரொளியின் கையில் பெரிய கட்டுபோடப்பட்டிருந்தது. அவள்தான் எங்களது அணியை வழிப்படுத்திக் கொண்டு இருப்பவள். ”என்ன சுடர் காயப்பட்டத அறிவிக்கவே இல்லையே.. பின்னுக்கு வந்து மருந்தாவது கட்டியிருக்கலாம் தானே….” அக்கறையோடு நான் சொன்னேன்.அவள் சிரித்தாள். ”என்னக்கா..இதெல்லாம் பெரிய காயமே..இதவிடப் பெரிய காயக்காரர் எல்லாம் லைனில நிக்கிறாங்கள். இஞ்ச பாருங்க குறிபார்த்துச் சுட கண்ணிருக்கு..துப்பாக்கி விசை வில்லை அழுத்த வலக்கை விரலிருக்கு ..அதவிட என்னால முடியும் எனகிற மனத்துணிவு இருக்கு.. இதவிட வேற என்னக்கா வேணும்….” அவளுக்குள் இருந்த ஓர்மம் என்னை நெகிழ வைத்தது. எவ்வளவு தற்துணிவு. எந்தப் படைவலுவாலும் தகர்க்க முடியாத ஆன்ம பலம் என்ற ஆயுதத்தைத் தாங்கி களங்களை நிறைத்து நிற்கும் இந்தக் காவல் தெய்வங்களை இந்த மண் ஒருபோதும் மறந்து போகக்கூடாது. எனக்குள் வேண்டிக் கொண்டேன். எனது பணியை முடித்துக் கொண்டு இருப்பிடத்துக்கு திரும்பியபோது நேரம் நண்பகலைக் கடந்து விட்டது. எங்கும் களீர் பளீர் என்ற சத்தத்துடன் வெடித்துச் சிதறும் இரும்புத் துண்டுகள். எங்கே வீழ்கிறது எங்கே வெடிக்கிறது என்பதைக் புரிந்து கொள்ள முடியாவிடட் லலும் ஒவ்வொரு இடமாய்க் கேடகு; ம் எங்கள் உறவுகளின் அவலக்குரல்கள் அவை எங்கே வீழ்ந்திருக்கிறது என்பதை அடிக்கடி உணர்த்திக் கொண்டிருந்தது. எங்களது இருப்பிடத்தில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் அக்கா தலையை ஒரு துணியால் போர்த்தி மூடிக் கொண்டு குனிந்தபடியே ஓடி வந்தார்.அவருக்கும் எனக்கும் நீண்டநாள் பழக்கம். ”வெளியில நிக்காதையுங்கோ..உள்ள வாங்க அக்கா..” அவரையும் எங்கள் காப்பகழிக்குள் அழைத்தேன். இருந்து ஆறுதலாகப் பேசுமளவுக்கு சூழலில்லை. ”சின்னாக்களையும் வைச்சுக் கொண்டு இனி இதில இருக்கிறது கொஞ்சம் கூட பாதுகாப்பில்ல. நாங்க வெளிக்கிடப்போறம். அதுதான் சொல்லீற்றுப் போகலாம் எண்டு வந்தனான்.” அந்த அக்காவின் முகத்தில் பதற்றம் கவலை என பலவித உணர்வுகள் ஓடிக் கொண்டிருந்தது. எப்போதும் துருதுருவென்று இருக்கும் அவர் விழிகளில் சொல்ல முடியாத சோகங்கள் நிறையவே தேங்கிக் கிடக்கும். ஆனால் இன்று அது வழமைக்கு மாறாக நிறையவே தெரிந்தது. இந்த நெருக்கடியான சூழலுக்குள் ஐந்து சின்னச் சின்ன குழந்தைகள், கூடவே வயதான அம்மா அப்பா என ஒரு பெரும் குடும்பத்தை தனி ஒருவராகத் தாங்கிக் கொண்டு இருப்பவர் அவர். சுற்றுமுற்றும் விழிகளை ஓடவிட்டுவிட்டு இரகசியக் குரலில் என்னோடு பேசினார். ”இஞ்சே..ராத்திரி பிள்ளைகள் எல்லாம் நித்திரைக்குப் போன பிறகு தங்கச்சியும் அவரும் வந்தவ” அக்காவின் குரல் உடைந்து விழியோரம் கசிந்தது. ”ஏனக்கா.. ஏன் அழுகிறீங்கள். அழாதையுங்கோ அக்கா ” அவரை ஆறுதல் படுதத் முயன்றேன்…… தொடரும் https://www.thaarakam.com/news/129061
 15. மக்கள் மயப்படாத அரசியலின் சில்லறை சண்டைகள் -ஏகலைவா அண்மையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன், சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வி தொடர்பில், ஏராளமான வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. ஒருபுறம், அவை, அவரைச் சாடுவதற்கான சாட்டாகவும் இன்னொருபுறம், அவருக்கான வக்காளத்தாகவும் தொடர்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின், பயனற்ற வெற்று உணர்ச்சிக் கூச்சல்களின் ஓர் அத்தியாயமாகவே இதை நோக்க வேண்டியுள்ளது. தமிழ்ச் சமூகம், தனக்குத் தானே கேட்க வேண்டிய, எத்தனையோ கேள்விகள் உள்ளன. விமர்சனமும் சுயவிமர்சனமும் இல்லாத சூழல், இன்றும் தொடர்கிறது. அத்தனை கேடுகளின் ஊற்றுக்கண் இது. வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான விவாதத்தை, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தடை செய்து, அது “விவாதத்துக்கு உரியதல்ல; அது, முடிந்த முடிவு” என்று, எப்போது அறிவித்தாரோ அன்றே, ஈழத்தமிழ் அரசியலின் ஜனநாயகப் பண்புகளுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது. அண்ணனின் வழியில், தம்பிகள் தொடர்ந்தார்கள். இப்போது, அதையே சமூக ஊடகப் போராளிகள் செய்கிறார்கள். இப்போதும், துரோகிப் பட்டங்கள் இலகுவாகச் சூட்டப்படுகின்றன. போருக்குப் பின்னரான, கடந்த 11 ஆண்டுகளில், ஈழத் தமிழ் அரசியல், எதைச் சாதித்திருக்கிறது என்ற கேள்வியை, யாரும் கேட்பாரில்லை. இது, மிகவும் சங்கடமான கேள்வி. ஏனெனில், எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் ஆகிய இரண்டையும் நாம் செய்திருக்கிறோம். போதாக்குறைக்கு, வடக்கு - கிழக்கிலுள்ள மாகாண சபை, மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என எல்லாம், தமிழ் அரசியல் கட்சிகளின் கைகளிலேயே இருந்திருக்கின்றன; இருக்கின்றன; இனியும் இருக்கும். அதன் வினைதிறன் குறித்தோ, செய்யத்தவறிய விடயங்கள் குறித்தோ, இதுவரை மனந்திறந்து பேசியிருக்கிறோமா? தமிழ்த் தேசிய அரசியல் களத்தில், வேலைத்திட்டங்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. தேர்தல் காலங்களில் கூட, வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுவதில்லை. தேர்தல் விஞ்ஞாபனங்கள், வெறும் வார்த்தைகளால் நிரப்பப்பட்ட குப்பைகளாகவே இருந்திருக்கின்றன. இதனால்தான் ஒரு பகுதியினரால், தீபாவளி, பொங்கல், அடுத்த தீபாவளிக்குத் தீர்வு வரும் என்று, நெஞ்சாரப் பொய்யுரைத்துக் காலம் கடத்த முடிகிறது. இன்னும் கொஞ்சப் பேரால், கோட்பாட்டு அரசியல் என்ற பெயரால், நடைமுறையில் இருந்து விலகிய அரசியலைச் செய்ய முடிகிறது. மீதிப் பேர், அரசாங்கத்துடன் நின்று, தங்கள் தேவைகளை நிரப்பிக் கொள்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் பெயரால், அரசியல் நடத்தும் அனைவரும், இவற்றையே செய்கிறார்கள். ஏனெனில், “பேச்சுப் பல்லக்கு, தம்பி எப்போதும் கால்நடை” தான். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அரசியலைப் பேசுபவர்களாகட்டும், “புலி”யரசியலைப் பேசுபவர்களாகட்டும், தீவிர தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுபவர்களாட்டும், அபிவிருத்தி அரசியலைச் செய்பவர்களாகட்டும் அனைவரும், கடந்த காலங்களில் எந்தப் பக்கம் நின்றார்கள் என்று, ஒருமுறை திரும்பிப் பார்த்தால், இந்தப் பயனற்ற சண்டைகள், ஏன் நடக்கின்றன என்று விளக்கும். சுண்ணாகத்தில் நீர் மாசாகி, அங்குள்ள மக்கள் இந்நீரைப் பருகலாமா வேண்டாமா என்ற கேள்விக்கு மேற்சொன்ன யாரும் பதிலளிக்கவில்லை. புத்தூரில், சுடலைப் பிரச்சினையில் இவர்கள் அனைவரும், யார் பக்கம் நின்றார்கள்? அனைவரும், மக்கள் பக்கம் நிற்கவில்லை; அநியாயத்தின் பக்கம் நின்றார்கள்; சாதிய ஒடுக்குமுறையாளர்களின் பக்கம் நின்றார்கள். இவ்விரண்டு உதாரணங்களும், தெளிவாகச் சொல்கிற செய்தி ஒன்றுண்டு. இன்று, சமூக வலைத்தளங்களில் நடக்கும் சண்டைகள், மக்கள் நோக்கிலான சண்டையில்லை; மக்களுக்காகச் சண்டையிடவில்லை. ஏனெனில், இவை மக்களுக்கான சண்டையாயின், தமிழ் மக்களின் வாழ்வில், பயனுள்ள மாற்றம் சிறிதேனும் நிகழ்ந்திருக்க வேண்டும்; ஆனால், அது நிகழவில்லை. இந்த வார நிகழ்வு சுட்டுகிற, இன்னொரு செய்தியொன்று உண்டு. தமிழ்த் தேசிய அரசியல், தனிநபர்களைத் தாண்டியதாக இன்னமும் வளரவில்லை. சேர். பொன்னம்பலம் இராமநாதன், கணபதி காங்கேசர் பொன்னம்பலம், சாமுவல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், வேலுப்பிள்ளை பிரபாகரன் என்றே தொடர்ந்திருக்கிறது. இதன் ஒருவகையான தொடர்ச்சியே, இப்போது நிகழும் சில்லறைச் சண்டைகளும் ஆகும். இதில், வருந்தத்தக்க உண்மை யாதெனில், தனிமனித அரசியலே ஈழத் தமிழ்த் தேசிய அரசியலாக இருந்து வந்திருக்கிறது; இப்போதும் இருக்கிறது. இது, எப்போதும் மக்கள் மயப்பட்டதாக இல்லை; மக்கள் மயப்படும்போது, மக்கள் வினாத்தொடுப்பர்; விமர்சிப்பர்; கண்டிப்பர். இந்த நிலைமையை, எந்தத் தமிழ்த் தேசிய அரசியல்வாதியோ, அவர்தம் அடிப்பொடிகளோ விரும்பியதில்லை. தமிழ்த் தேசிய அரசியல், மக்கள் மயப்படாத வகையில், தமிழ்த் தேசிய அரசியலில், ஜனநாயகத்துக்கு இடமிருக்காது. எவ்வாறு, சிங்கள - பௌத்த தேசியவாதம், சிறுபான்மை இனங்களின் அச்சுறுத்தலைக் காட்டிக் காலம் கடத்துகிறதோ, அதேபோல, சிங்கள - பௌத்த தேசியவாதத்தைக் காரணம்காட்டி, தமிழ்த் தேசிய அரசியலும் காலம் தள்ளும்; தமிழ் மக்கள், தொடர்ந்தும் இன்னல்களுடன் துன்புற்றிருப்பர். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மக்கள்-மயப்படாத-அரசியலின்-சில்லறை-சண்டைகள்/91-250255
 16. கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: உலகமயமாக்கலின் எதிர்காலம் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ “வழமைக்குத் திரும்புதல்” என்ற சொற்றொடர், இன்று பொருளற்றது. இனி, புதிய சொற்களை நாம், தேடியாக வேண்டும். கடந்துபோன காலத்தில் எவ்வாறு, இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோமோ அவ்வாறு, இதைப் பயன்படுத்தவியலாது. வழமை என்பது, இனிப் புதிதாக வரையறுக்கப்படும். அந்த வழமை, நாம் விரும்பியதாக இராது, நாம் எதிர்பார்த்ததாக இராது. ஆனால், உலகம் புதிய நடைமுறைகளுடன் இயங்கத் தொடங்கும். அது தவிர்க்கவியலாதது. புதிய வழமை எது, அது ஏற்படுத்தியுள்ள சட்டகங்கள், ஒழுங்குகள் எவை? அவை எம்மை எவ்வாறு பாதிக்கும், எம்மில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும்? இவை, கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகில், எழுப்பப்படும் பிரதான கேள்விகளாக இருக்கும். இவற்றுக்கான பதில்களை ஆராய, இக்கட்டுரை விளைகிறது. “பெர்லின் சுவர்”இன் வீழ்ச்சி, “லீமன் பிரதர்ஸ்”இன் சரிவு என்பன, எவ்வாறு எதிர்பாராத மாற்றங்களை, உலக அரங்கில் ஏற்படுத்தியதோ, அதேபோலவே, இந்தப் பெருந்தொற்றும், உலகைப் புரட்டிப் போடுகிற எதிர்பாராத மாற்றங்களைச் செய்ய வல்லது. இவை, எவ்வாறான மாற்றங்கள் என்று, யாராலும் உறுதிபடக்கூற இயலாது. ஆனால், சில திசை வழிகளை, ஆய்வு நோக்கில் எதிர்வு கூறலாம்; எதிர்பார்க்கலாம்; கற்பனை செய்யலாம்; ஏன், கனவு கூடக் காணலாம். எல்லாம் நடக்குமென்றும் இல்லை; நடக்காதென்றும் இல்லை. ஒன்றை மட்டும், உறுதியாகச் சொல்லலாம். இந்தப் பெருந்தொற்று, எவ்வாறு மக்களின் வாழ்க்கையைச் சிதைத்து, சந்தைகளைச் சரித்து, அரசாங்கங்களின் வினைதிறனை அல்லது, வினைதிறனற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியதோ, அதேபோல, உலகளாவிய அரசியல், பொருளாதார அதிகாரச் சமநிலையில், முடிவான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள், உடனடியாகவும் நிகழலாம்; காலம் கழித்தும் நிகழலாம். கடந்த பத்தாண்டு காலமாக, உலகமயமாக்கல் தொடர்ச்சியாகக் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக, பொருளாதார ரீதியிலான உலகமயமாக்கல் குறித்த வினாக்கள், உலகின் பிரதான அரங்காடிகளால், தொடர்ந்தும் எழுப்பப்பட்டு வந்துள்ளன. இந்தக் கேள்விகளுக்கான பதிலையும் உலகமயமாக்கலின் எதிர்காலத்தையும், இந்தப் பெருந்தொற்று தீர்மானிக்கவல்லது. நாடுகள் எல்லைகளை மூடி, சந்தைகளை மூடி, தனித்திருக்க முயன்றபோது, உலகமயமாக்கல் எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்தன. எல்லைகளை மூடினால், சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் தவிக்க வேண்டிவரும் என்ற உண்மை உறைத்தபோது, உணவுப் பொருள்களுக்காக, எல்லைகள் திறக்கப்பட்டன. மறுபுறம், தோட்டங்களிலும் வயல்களிலும் உற்பத்தி செய்த மரக்கறிகளையும் பழங்களையும் சேகரித்து, பொதி செய்து, சந்தைக்கு அனுப்புவதற்கு உரிய தொழிலாளர்கள், வேறு நாடுகளிலிருந்து வரவேண்டி இருந்ததால், விதிமுறைகள் அவர்களுக்காகத் தளர்த்தப்பட்டு, எல்லைகள் திறக்கப்பட்டன. எல்லைகள் திறக்கப்படாத நாடுகளில், அந்தத் தோட்டங்களிலேயே மரக்கறிகளும் பழங்களும் அழுகி அழிந்தன. இப்போது அரசுகள், நீண்ட காலத்துக்குப் “பொருளாதாரத் தனித்திருத்தல்” எவ்வாறு சாத்தியமாகும் என்று, யோசிக்கத் தொடங்கி உள்ளன. இது, இனி வழமையாகலாம். 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை வடிவமைத்த, “பரஸ்பரம் நன்மை பயக்கும் உலகமயமாக்கல்” (mutually beneficial Globalisation) என்ற எண்ணக்கரு, முடிவுக்கு வந்துள்ளது. கொவிட்-19 தொற்று, மேற்குலகில் பரவத் தொடங்கியது முதல், பாதுகாப்பு உபகரணங்கள், “வென்டலேட்டர்”கள், சுவாசக் கருவிகள் போன்றவற்றுக்கு நாடுகள் முண்டியடித்தன. அவற்றை உற்பத்தி செய்து, விநியோகித்து வந்த நாடுகள், அவற்றை ஏற்றுமதி செய்யவில்லை; ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஐரோப்பாவில், முதலில் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாகிய இத்தாலி, ஏனைய ஐரோப்பிய நாடுகளிடம் உதவி கேட்டது; யாரும் உதவவில்லை. எல்லோரும், தங்களது மருத்துவ, பாதுகாப்பு உபகரணங்களைப் போதுமானளவு சேர்த்து, சேமிப்பதிலேயே கவனம் செலுத்தினர். கைகழுவப் பயன்படுத்தப்படும் தொற்றுநீக்கித் திரவங்களை உற்பத்தி செய்த நாடுகள், அவற்றின் ஏற்றுமதியைத் தடை செய்தன. இந்தச் செயல்கள், எந்த அடித்தளத்தில் உலகமயமாக்கல் கட்டியெழுப்பப்பட்டுள்ளதோ, அதைக் கேள்விக்கு உள்ளாக்கின. சுதந்திர சந்தை, பொருள்களின் தடையற்ற பரிமாற்றம், அரசுகள் வர்த்தகத்தில் தலையிடாமை போன்ற அனைத்து அடிப்படைகளும் மீறப்பட்டன. உலகமயமாக்கல் உருவாக்க முயன்ற, பொருளாதார ஒருங்கிணைப்பும் (Economic integration), அதன்வழி, தோற்றம் பெற்ற உலகப் பொருளாதார ஆட்சியும் (Global Economic governance) முடிவுக்கு வந்துள்ளன. கடந்த அரைநூற்றாண்டு காலமாக, உலகமயமாக்கலை உலகெங்கும் எடுத்துச் சென்ற செயல் வீரனான அமெரிக்காவே, கடந்த ஐந்து ஆண்டுகளில், உலகமயமாக்கலுக்கு முடிவு கட்டியுள்ளது. கொவிட்-19 நெருக்கடியின் போது, அமெரிக்கா உலகமயமாக்கலைக் குழிதோண்டிப் புதைத்தது. இதை விளக்குவதற்கு, நன்கறிந்த இரண்டு அண்மைய உதாரணங்கள் போதுமனவையாகும்: 1. சீனாவிடம் இருந்து முகக் கவசங்களை, பிரான்ஸ் கொள்வனவு செய்திருந்தது. அவை, சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டுப் புறப்படத் தயாராக இருந்த நிலையில், ஓடுதளத்துக்கு வருகை தந்த அமெரிக்க அதிகாரிகள், பிரான்ஸ் வழங்கிய பெறுமதியை விட, மூன்று மடங்கு அதிக பெறுமதியைத் தருவதாகச் சொல்லி, விமானத்தை அமெரிக்காவை நோக்கிப் பயணிக்கக் கோரினர். மேலும், உடனடியாகவே உரிய தொகையை, அமெரிக்க டொலர்களில் தருவதாகச் சொல்லி, முழுத்தொகையையும் அவர்கள் வழங்கினர். இதனால், பிரான்ஸுக்குச் செல்லவிருந்த முகக்கவசங்கள், அமெரிக்காவுக்குச் சென்றன. “அமெரிக்கா, சர்வதேச உறவுகளைக் குழிதோண்டிப் புதைக்கிறது” என்று பிரான்ஸ் அதிகாரிகள் விசனப்பட்டார்கள். 2. ஜேர்மனியால் கொள்வனவு செய்யப்பட்ட முகக்கவசங்கள், சுவாசக்கருவிகள், கையுறைகள் ஆகியன, பெர்லின் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, தாய்லாந்து தலைநகர் பாங்ஹொக்கில் வைத்து, அமெரிக்க அதிகாரிகளால் களவாடப்பட்டன. இதனை, ஜேர்மனி பகிரங்கமாகவே, வன்மையாகக் கண்டித்தது. அமெரிக்கா, உலகமயமாக்கலில் இருந்து பின்வாங்கத் தொடங்கிய கடந்த சில ஆண்டுகளில், ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேக்கல், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஆகியோர், உலகமயமாக்கலின் புதிய செயல் வீரர்கள் ஆகினர். ஆனால், கொவிட்-19 நெருக்கடியின் போது, இவ்விரு நாடுகளில் உற்பத்தியாகும் பொருள்கள், ஏற்றுமதி செய்யப்படுவதை அந்நாடுகள் தடை செய்தன. இதன்மூலம், உலகமயமாக்கலுக்கான இன்னொரு புதைகுழியை அவை வெட்டின. இந்த உதாரணங்கள், உலகமயமாக்கலை முன்தள்ளிய நாடுகள், இப்போது எத்திசையில் பயணிக்கின்றன என்பதையும் உலகமயமாக்கலைத் தக்கவைக்கத் தேவையான பரஸ்பர நம்பிக்கையும் ஒத்துழைப்பும் நாடுகளிடையே இல்லை என்பதையும், எடுத்துக் காட்டுகின்றன. சர்வதேச கூட்டு ஒத்துழைப்பை, இதுவரை காலமும் கொஞ்சம் சாத்தியமாக்கிய அரசாங்கங்களினதும் அதன் தலைவர்களினதும் சுயஒழுக்கம், இப்போது இல்லை என்பது வெளிப்படை. தேசிய நலன்களும் பூகோள ஆதிக்கத்துக்கான அவாவும் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேசங்கள் இணைந்த செயற்பாடுகள் சாத்தியமற்றவை ஆகியுள்ளன. இங்கே, மூன்று விடயங்களை நாம், குறிப்பாக நோக்க வேண்டும். முதலாவது, தேசியவாதத்தினதும் நிறவெறியினதும் வளர்ச்சி, எவ்வாறு உலகமயமாக்கலுக்கு நெருக்கடியைக் கொடுத்தன. இரண்டாவது, கொவிட்-19, அரசுகளைச் சுயநலமாகச் சிந்திக்க வைத்ததன் ஊடு, உலகமயமாக்கலை எவ்வாறு புறந்தள்ளின. மூன்றாவது, கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தாக்கம், பூகோள அரசியல் போட்டியை அதிகரித்து, நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை, எவ்வாறு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த மூன்றையும் பார்ப்பதற்கு முன்னர், இந்தப் பெருந்தொற்று எவ்வாறு உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது என்று கொள்கை வகுப்பாளர்கள், நோக்குகிறார்கள் என்று பார்க்கலாம். உலகநாடுகளின் வெளிவிவகாரக் கொள்கைவகுப்பில் செல்வாக்குச் செலுத்தும் இதழான Foreign Policy இதழ், தனது வசந்த கால இதழுக்கு இட்ட தலைப்பு, Is this the end of Globalisation? (இது, உலகமயமாக்கலின் முடிவா?) உலகமயமாக்கல், தனது மரணப் படுக்கையில் இருக்கையில், அதைச் சவப்பெட்டிக்குள் இட்டு, அதன் மீதான இறுதி ஆணியைக் கொவிட்-19 இறுக்க இருக்கிறது என்று, அவ்விதழ் தலையங்கம் எழுதியுள்ளது. பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சவுணர்வும் நிச்சயமின்மையும், உலகமயமாக்கலுக்கு எதிராக இருக்கிறது. மக்கள் விமானங்களில் பயணிக்க அஞ்சுகிறார்கள்; புதிய நாடுகளுக்கு, சுற்றுலா செல்வது குறித்து யோசிக்கிறார்கள். சீனர்கள் மீதான வெறுப்பாகத் தொடங்கி, இத்தாலியர்கள், கொரியர்கள், ஸ்பானியர்கள் மீதானதாகப் பரவி, இன்று, அமெரிக்கர்களைக் கண்டு, அப்பால் நகர்கிற நிலையை உலகம் அடைந்துள்ளது. எதையெல்லாம், உலகமயமாக்கல் சாத்தியமாக்கியதோ, அவையனைத்தும் இப்போது இல்லாது ஒழிக்கப்பட்டுள்ளன. எல்லாம் உலகமயமாக வேண்டும் என்பதுதான், முதலாளித்துவத்தினதும் அதன்வழி தோற்றம் பெற்ற உலகமயமாக்கலினதும் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால், இவ்வாறு ஒரு தொற்று, உலகமயமாகும் என்பது, நிச்சயமாக அதன் எதிர்பார்ப்பல்ல. இன்றைய நிலையில், கொவிட்-19 தொற்று, 187 நாடுகளில் பரவியுள்ளது. இது உலகமயமாகி, உலகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. நோய்த்தொற்றுகள், பலவற்றை முடிவுக்குக் கொண்டுவரும் வல்லமை வாய்ந்தவை. இதற்கு வரலாற்றில் நிறைய உதாரணங்கள் உண்டு. கி.மு 430இல் ஏதென்ஸ் நகரை “பிளேக்” நோய் தாக்கியது. இது, மூன்றாண்டுகள் நீடித்தது. ஏதென்ஸ் நகர சனத்தொகையில், மூன்றில் ஒரு பங்கை, இத்தொற்றுக் காவுகொண்டது. ஏதென்ஸின் முக்கியமான தலைவர்களை, இது கொன்றொழித்தது. இதில், முக்கியமானவர் இராணுவத் தளபதியாகவும் சிந்தனையாளராகவும் இருந்த பெரிகிளிஸ். பிளேக் நோயின் தாக்கத்தால், ஸ்பாட்டக்களுடனான யுத்தத்தில், ஏதென்ஸ் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது, ஏதென்ஸின் அதிகாரச் சரிவுக்கு, வழி சமைத்தது. கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கா, தனது உலகத் தலைமையைத் தக்கவைத்தாலும், உலகமயமாக்கலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வந்துள்ளது. மறுமுனையில், பொருளாதார ரீதியிலான தலையாய நிலைக்கு, சீனா முன்னேறியதோடு, அமெரிக்காவின் தலைமைக்குச் சவால் விடுத்த வண்ணமுள்ளது. சீனா, உலகமயமாக்கலை முன்னிறுத்தி, ஊக்குவித்து வந்துள்ளது. இதுவே, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போராக மாற்றம் பெற்றது. இந்நிலையிலேயே, கொவிட்-19 பெருந்தொற்றுத் தாக்கியது. இப்போது, கேள்வி யாதெனில், கொவிட்-19இன் நிறைவில், ஏதென்ஸ் யார்? ஸ்பாட்டா யார் என்பதுதான்? அதுபற்றி, அடுத்தவாரம் பார்க்கலாம். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19க்குப்-பின்னரான-உலகம்-உலகமயமாக்கலின்-எதிர்காலம்/91-250254
 17. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயப் பொங்கல் விழா கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் – மக்களுக்கு அனுமதியில்லை முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.இந்நிலையில் குறித்த பொங்கல் விழா தொடர்பாக நேற்று புதன்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் மாவட்டசெயலர் க.விமலநாதன், மேலதிக மாவட்டசெயலர் க.கனகேஸ்வரன், சுகாதாரப்பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலர் மணிவண்ணன் உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேசசபைின் செயலாளர், பொரலிஸார், இராணுவத்தினர், கோயில் நிர்வாகத்தினர் எனப்பலரும் கலந்திருந்துகொண்டனர். இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று அச்சம் காரணமாக, இவ்வருடம் குறித்த பொங்கல் நிகழ்வு பாரிய அளவில் இடம்பெறமாட்டதெனவும், பாரம்பரிய வழிபாட்டுக் கிரிகை நிகழ்வுகள் மாத்திரமே இடம்பெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மக்கள் கூட்டங்கூடுவதைத் தவிர்ப்பதற்காக, குறித்த பொங்கல் கிரிகைகள் இடம்பெறும் நாட்களில், இந்தப் பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தற்போதுள்ள கொரோனாத்தொற்று நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, போலீசார், இராணுவத்தினர், மற்றும் மாவட்டசெயலகம் வழங்கும் அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் ஏற்று பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் சமகாலத்தில் நிலவுகின்ற கொரோனா நோய் நிலைமையின் காரணமாக உலகத்தோடு நாம் ஒத்துப்போகவேண்டிய தேவைபற்றி தெளிவுபடுத்தப்பட்டது.அதனடிப்படையில், சுகாதாரப் பகுதியின் ஆலோசனைகளை ஏற்று இந்த ஆண்டு பொங்கல் விழாவினை பாரிய பொங்கல்விழாவாக இல்லாமல், பாரம்பரிய ரீதியில் எடுக்கின்ற கிரிகைகளை மாத்திரம் ஆலயத்தில் செய்ய இருக்கின்றோம். அந்தவகையில் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது என தெரிவித்தார். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், “வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் இவ்வருடத்திற்கான வருடாந்த பொங்கல் நிகழ்வு ஜூன் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. அந்தப் பொங்கல் நிகழ்வினை நடத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம் என தெரிவித்ததனர்.(15) http://www.samakalam.com/சிறப்பு-செய்திகள்/வற்றாப்பளை-கண்ணகி-அம்மன்/
 18. மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில், ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்படும்… க.வி.விக்னேஸ்வரன் May 14, 2020 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி மாலை 6 மணி 18ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு போரின் போது உயிர்நீத்த பிராத்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; இந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கோரோனாவின் பாதிப்புக்கு இருக்கின்ற நேரத்திலே வருகின்றபடியால் பலவிதமான தடங்கல்களை நாங்கள் எதிர்நோக்க இருக்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்கு சென்று எங்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றி மௌனமாக இறந்தவர்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரு சூழல் தற்போது இருக்கின்றதோ என்று எங்களுக்கு கூற முடியாது இருக்கின்றது. அவ்வாறு செய்யக் கூடியவர்கள் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மௌனமாக அஞ்சலி செலுத்தி வரக்கூடும் என்றால் மிகவும் நன்று. தற்போதைய நிலையைப் பார்க்கும்போது பொலிஸார் உடைய, படையினர் உடைய எதிர்ப்புகள் இவற்றில் இருப்பதை நான் காண்கின்றேன். அதில் இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் அவ்வாறானவர்களை தனிமைப்படுத்தல் நிலையத்துக்குக் கொண்டு போக எத்தனிக்கின்றார்கள். அப்படியானால் 14 நாள்கள் அவர்களைக் கொண்டுபோய் வைத்து இருக்கக்கூடும். ஆகவே முடியுமா என மக்கள் அங்கு சென்று தங்களுடைய மனநிலையை வெளிப்படுத்தும் வண்ணம் நாங்கள் நடவடிக்கையில் இறங்கலாம். ஆனால் எங்களுடைய கட்சியை பொறுத்தவரையில் நாங்கள் இரண்டு விடயங்களை அன்றைய தினம் செய்ய இருக்கின்றோம். இறந்த மக்களினுடைய நினைவாக பயன்தரும் மரங்களை நடுவதற்கு இருக்கின்றோம். அது சம்பந்தமாக அந்தந்த மாவட்டங்களில் ஒருத்தரை அடையாளப்படுத்தி அவர்களுக்கு ஊடாக நாங்கள் மரங்களை வாங்கியும், பெற்றும் மக்களுக்கு தேவையானவர்களிடம் மரங்களை கொடுத்து தங்களுடைய வீட்டிலும் பயன்தரும் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதை 16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அது ஒரு முக்கியமான பெட்டகம் என்று நான் நினைக்கின்றேன். ஏன் என்றால் வெறுமனே எங்களுடைய மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணம் விளக்குகளை ஏற்றுவதோடு நின்றுவிடாமல் வரும் காலத்திலே எங்களுடைய இறந்த உறவுகள் எதை நோக்கி எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டார்களோ அதாவது எங்களுடைய வடகிழக்கு தாயகப் பிரதேசம் நன்றாக முன்னேறவேண்டும், செழிக்க வேண்டும் அத்தோடு எல்லா விதத்திலும் நல்லதொரு நிலையை அடைய வேண்டுமென்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அது நடைபெற வேண்டுமானால் இப்போது இருந்தே இந்த பயன்தரு மரநடுகை நிகழ்வில் நாங்கள் ஈடுபடுவது நல்லது என்று நினைக்கின்றேன். ஆகவே அன்று நாங்கள் அதை ஒரு விடயமாக காலையிலே செய்கின்றோம். அதைவிட உலகம் முழுவதும் எங்களுடைய தமிழ் உறவுகள் அன்றைய தினம் 18.18.18 க்கு அதாவது 18ஆம் திகதி மாலை 6 மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டிலே இறந்தவர்களை நினைத்து விளக்குகள் ஏற்ற வேண்டும். இது இலங்கையில் மாத்திரமன்றி எத்தனையோ நாடுகளிலே அன்றைய தினம் நடைபெறுகின்றது. உதாரணமாக எங்களுடைய நாட்டிலே அந்த நேரத்தில் செய்யும்போது ஆஸ்திரேலியாவில் 5 அல்லது 6 மணித்தியாலம் வித்தியாசமாக இருக்கும், இங்கிலாந்தில் வித்தியாசமாக இருக்கும். ஆகவே அந்தந்த நாடுகளிலேயே18.18.18 க்கு நாங்கள் விளக்குகளை ஏற்ற இருக்கின்றோம். விளக்குகளை ஏற்றி இறந்தவர்களை நினைத்து அவர்களுடைய எதிர்பார்ப்பின் படி வரும் காலம் நல்லதொரு காலமாக வடகிழக்கு மாகாண மக்களுக்கு அமைய வேண்டும் என்று சிந்திப்போமாக. இப்போது இருக்கும் நிலையிலேயே சில பல தடங்கல்கள் இருக்கின்றபடியால் நான் கூறிய அந்த விடயங்களை நாங்கள் முக்கியமாக செய்யலாம். காலையிலேயே மரம் நடுதல், அதாவது எங்களுடைய கட்சியின் ஊடாகதான் மரம் நடவேண்டும் என்று இல்லை. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு முடியுமான ஒரு பயன்தரும் மரத்தை தங்களுடைய தோட்டங்களிலோ, அண்மையில் இருக்கும் இடங்களிலோ அல்லது பொது இடங்களிலோ அவற்றை நட்டு குறைந்தது ஆறு மாதத்திற்காவது அதனைப் பேணிப் பராமரித்து வரவேண்டும். அதனை ஒருபுறமாக செய்யும்போது அன்றைய தினம் மாலை ஆறு மணி 18 நிமிடத்திற்கு ஒவ்வொரு வீட்டியிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கோரி கொள்கின்றேன்- என்றார் http://globaltamilnews.net/2020/142765/
 19. யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விவகாரம் : மீள் விசாரணையா ? விடுதலையா ? (எம்.எப்.எம்.பஸீர்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது குறித்து எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக, அவர் தாக்கல் செய்துள்ள மேன் முறையீட்டு மனு இன்று மேன் முறையீட்டு மன்றின் நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்ணான்டோ முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணம், மேன் முறையீட்டு மனுதாரரின் சட்டத்தரணி ஜானதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் மன்றில் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்தே, மேன் முறையீட்டு நீதிமன்றம் மேற்படி தீர்மானத்துக்கு வந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருந்த காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்பு செய்த குற்றத்திற்காக விடுதலைப்புலிகளின் நுண்கலைக் கல்லூரியின பொறுப்பாளராக இருந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி,யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியிருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பெண் ஒருவரை கடத்திச் சென்ற குற்றத்திற்காக புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியும், யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுபவருமான க.கண்ணதாசன் என்பவருக்கே ஆயுள் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார். 2007 ஆம் ஆண்டு ஜனவரி காலப்பகுதியில் கிளிநொச்சியில் வைத்து விஜயபாலன் மஞ்சுளா என்ற பெண்ணை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் 50 வயதுடைய கனகசுந்தரம் கண்ணதாசன் என்ற முன்னாள் போராளிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணின் தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த எதிரிக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் வியபாலன் மஞ்சுளா என்பவரை விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டுக்காக கடத்திய குற்றச்சாட்டினை உள்ளடக்கி குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 2016 மே மாதத்தில் இருந்து குறித்த எதிரிக்கு எதிரான வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் இடம்பெற்றதுடன், இது குறித்த வழக்கை சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் நெறிப்படுத்தியிருந்தார். இந் நிலையில் சாட்சி விசாரணைகளின் பின்னர் கடந்த 2017 ஜூலை 25 ஆம் திகதி இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய வவுனியா மேல் நீதிமன்றம், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் க.கண்ணதாசனை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையிலேயே அந்த தண்டனைக்கு எதிராக க.கண்ணதாசன் மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன் முறையீடு செய்தார். அது குறித்த வழக்கே இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் குமார் ரட்ணம், ' குறித்த தீர்ப்பு தொடர்பில் முழுமையாக உடன்பட முடியாவில்லை எனவும், அதனால் அந்த விவகாரத்தை மீள விசாரணை செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்.' எனவும் தெரிவித்தார். இந் நிலையில் மேன்முறையீட்டு மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் ரட்ணத்தின் கருத்தை மேற்கோள் காட்டி, தனது சேவை பெறுநரான க.கண்ணதாசனை விடுவிக்க வேண்டும் என கோரினார். எவ்வாறாயினும் நாட்டில் தற்போது நிலவும் சூழலில், இன்று வழக்கு விசாரணைகளின் போது குற்றவாளி க.கண்ணதாசன் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் , மேன் முறையீட்டு மனுதாரர் எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்ட மேன் முறையீட்டு நீதிமன்றம், அன்றைய தினம் மீள் விசாரணைக்கு உத்தரவிடுவதா அல்லது விடுவிப்பதா என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/81956
 20. தமிழ்த் தேசியம் சாவுப் பாதையில் இல்லை -புருஜோத்தமன் தங்கமயில் “தமிழ்த் தேசியம் இனி மெல்லச் சாகும்” என்ற தொனியிலான உரையாடல் பரப்பொன்று, கடந்த சில ஆண்டுகளாக ஈழத் தமிழர்களிடம் விரிந்திருக்கின்றது. அதை, முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான விளைவுகளில் ஒன்றாகக் கொள்ளலாம். ஏனெனில், தமிழ்த் தேசியம் என்கிற அரசியல் சித்தாந்தத்தை ஆயுதப் போராட்டங்களில் வழியாக, நான்கு தசாப்தங்களாக முன்னிறுத்திக் கொண்டிருந்த தரப்பொன்று, சடுதியாக அந்தப் போராட்ட வடிவத்திலிருந்து விலக்கப்படும் போது, எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல் இதுவாகும். முள்ளிவாய்க்கால் முடிவுகளைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டு, 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், தமிழ்த் தேசியமும் அதன் அரசியலும், இன்னமும் முள்ளிவாய்க்காலுக்குள் நின்றுகொண்டுதான் விடயங்களை அணுகிக் கொண்டிருக்கின்றன. இது தவிர்க்க முடியாதது ஆகும். ஏனெனில், முள்ளிவாய்க்கால் என்பது, மாபெரும் மனிதப் பேரவலத்தின் சாட்சியான பூமி மாத்திரமல்ல; அது, தமிழ் மக்களிடம் தமிழ்த் தேசிய அரசியலின் அடுத்த கட்டங்களை, எப்படி முன்நகர்த்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் களமும் ஆகும். ஆனால், இந்தக் களத்தையும் இதை அடியொற்றிய சரியான நகர்வையும் தமிழ்ப் தரப்பு, துரிதமாகக் கண்டடைந்திருக்கின்றதா என்பது பெரிய கேள்வியே! சுதந்திர இலங்கையில், ஈழத் தமிழர்களின் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டது. தங்களை முழுமையான இடதுசாரியாகவோ, லிபரல்வாதியாகவோ முன்னிறுத்தும் அல்லது, இன்னொரு சித்தாந்தத்தையோ தமிழ்த் தேசியம் என்கிற விடயத்தைப் புறந்தள்ளிக் கொண்டு பேசவோ, செயற்படுத்தவோ முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது, பௌத்த - சிங்கள மேலாதிக்க சிந்தனைகளுக்கு எதிராக முளைத்ததொன்று. அதற்கு, அடிப்படைவாதம் என்கிற சிந்தனை இல்லை. அதுபோல, ஒரு சித்தாந்தத்தின் அடிப்படைகளோடு மாத்திரம் தங்கியிருக்கும் நிலைப்பாடுகளும் இல்லை. பௌத்த - சிங்கள தேசியவாதம் நிலைபெறும் வரையில், அல்லது கடைசித் தமிழன் இருக்கும் வரையிலும், தமிழ்த் தேசியம் என்கிற விடயம் நிலைபெறும். தமிழ்த் தேசியம், தனக்கென்று தனித்த ஒரு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருக்கவில்லை. ஏனெனில், அது பொருளாதாரச் சிந்தனைகளை முன்னிறுத்திக் கொண்டு, எழுச்சிபெற்ற ஒன்றல்ல. தமிழ்த் தேசியம், இடதுசாரிகளின் சிந்தனைகளையும் லிபரல்வாதத்தையும் அதன் தேவைப்பாடுகள் சார்ந்து உள்வாங்கிப் பயணித்து வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியம், நிலைபெற்றுவிட்ட கடந்த 80 ஆண்டுகளில் அதுதான் நிலைமை. முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், அன்றைய ராஜபக்‌ஷ அரசாங்கம், தமிழ் மக்களைப் பொருளாதார அடிப்படையில் அணுகுவதன் மூலம், வெற்றி கொள்ள முடியும் என்று கருதியது. அதை அடிப்படையாகக் கொண்டு, “கிழக்கின் உதயம்”, “வடக்கின் வசந்தம்” என்கிற பெயர்களின் பஷில் ராஜபக்‌ஷ இறங்கி வேலையும் பார்த்தார். “காப்பட்” வீதிகள் தொடங்கி, நிவாரணங்கள் வழியாகத் தமிழ் மக்கள் இதுவரை தாங்கி நிற்கின்ற தமிழ்த் தேசிய அரசியலை, நீர்த்துப் போகச் செய்ய முடியும் என்றும் நம்பினார்கள். அதன்மூலம், அரசியல் தீர்வு, உரிமை என்கிற விடயங்களைப் பேசாத ஒரு நிலையைப் பேணி, பெளத்த - சிங்கள வாதத்தை, இலங்கையின் ஒற்றைச் சித்தாந்தமாக முன்னிறுத்திக் கொள்ளவும் ராஜபக்‌ஷக்கள் விளைந்தார்கள். அதற்காக, அபிவிருத்தி அரசியலை மாத்திரம் பேசும் நபர்களையும் களமிறக்கிச் செயற்பட்டார்கள். ஆனால், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் சித்தாந்தமான தமிழ்த் தேசியத்தை ராஜபக்‌ஷக்களால் தோற்கடிக்க முடியவில்லை. ஏனெனில், அது வெற்றி, தோல்விகள் சார்ந்து நிலைபெற்ற ஒன்றல்ல. அது, இறுதிக் கணம் வரையில், நிலைத்திருப்பது சார்ந்து எழுந்த அரசியல் சித்தாந்தம் ஆகும். தமிழ்த் தேசியம், பாராம்பரிய அடையாளங்கள், சுயநிர்ணய உரிமைகளை அடியொற்றியது. அது, இனவாத அடையாளங்களின் வழியாகத் தோற்றம் பெறவில்லை. தென் இந்தியாவில் பேசப்படும் தமிழ்த் தேசியத்துக்கும் ஈழத்தமிழ் மக்களின் தமிழ்த் தேசியத்துக்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஈழத்துத் தமிழ்த் தேசியம் என்பது, எந்தவோர் இனக்குழுவையோ, சமூகத்தையோ தங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை; அடக்கியாளவும் நினைக்கவில்லை. மாறாக, மேலாதிக்கவாதத்தை அச்சுறுத்தலாக உணர்கின்றது. சமத்துவம் தொடர்பான உறுதியான கடப்பாட்டை அது கொண்டிருக்கின்றது. தமிழ்த் தேசியம் என்பது, அடிப்படைவாதச் சிந்தனை சார்ந்தது என்ற எண்ணப்பாடு சில தரப்புகளிடம் உண்டு. ஆனால், தமிழ்த் தேசியம் அடிப்படைவாத எண்ணங்களால் நிலை பெறவில்லை. இது, சமத்துவத்துக்கான, உரிமைக்கான எண்ணப்பாட்டு அரசியலாக நிலை பெற்ற ஒன்று. இதுதான், சாதி, மதம் போன்ற வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கவும் உதவியது. தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய அரசியலில் கட்சிகளிடையே, இயக்கங்களிடையே, போராட்ட வடிவங்கள், போக்கு குறித்தெல்லாம் அக முரண்பாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. இன்றைக்கும் அது தொடர்ந்து வருகின்றன. ஆனால், சாதி, மத, வர்க்க வேறுபாடுகளை முன்னிறுத்திக் கொண்டு, எந்தவொரு தரப்பாலும் தமிழ்த் தேசிய அரசியலைப் பேச முடியாது; நிலைபெறவும் முடியாது. அப்படியான தரப்புகளை, யார் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்பில், ஆரம்பக் கட்டத்திலேயே ஆய்ந்து ஆறியும் அறிவும் பக்குவமும், தமிழ் மக்களிடம் உண்டு. அப்படியானால், ஏன் தமிழ்த் தேசியம், மெல்லச் செத்துக் கொண்டிருப்பதான உரையாடல் வெளி விரிந்திருக்கின்றது, என்ற கேள்வி வருகின்றது. அதற்கான காரணம், ஒரு போராட்ட வடிவத்தின் கீழ், நான்கு தசாப்த காலமாக இருந்த தமிழ் மக்கள், மீண்டும் மீண்டும் அந்தப் போராட்ட வடிவத்தின் மீதும், அது செலுத்திய தாக்கத்தின் மீதும், தங்களை ஒப்பிட்டு நோக்குவதாகும். அஹிம்சை வழியிலான போராட்ட வடிவத்திலிருந்து, ஆயுதப் போராட்ட வடிவத்துக்குள் தமிழ்த் தேசிய அரசியல் பயணித்த போது, எழுந்த மாற்றங்கள் ஒரு கட்டம் வரையில் பெரும் நம்பிக்கையாக நிலைபெற்றன. அது, ஆயுதப் போராட்டங்கள் வழியாக நிலப்பரப்புகள் சார்ந்த ஆளுகையாக மாறிய போது, வெற்றி என்கிற விடயம் அடையாளமாகியது. அதுதான், யாழ்ப்பாணத்தை விட்டு விடுதலைப் புலிகள் 90களின் நடுப்பகுதியில் வெளியேறியதும், தாங்கள் வெற்றிகரமானவர்கள் என்கிற விடயத்தை, தமிழ் மக்களிடம் அழுத்தமாகப் பதிய வைப்பதற்கான அவசரமொன்று ஏற்பட்டது. அதுதான், முல்லைத்தீவு மீட்பின் மூலம் நிகழ்த்தவும் பட்டது. யாழ்ப்பாணத்தை விட்டு வந்தாலும் வன்னிக்குள்ளும் கிழக்கிலும் இருந்து கொண்டு, தங்களை வெற்றிகரமானவர்கள்தான் என்று நிரூபிக்கவும் முடிந்தது. தாயகம் - புலம்பெயர் தேசம் என்று எங்கும் புலிகளின் போராட்ட வடிவத்தின் பின்னாலான திரட்சியைத் தமிழ் மக்கள் காட்டவும் காரணமானது. இதன் உச்சகட்டமாகவே, 2000களின் தொடக்கத்தில், புலிகளின் “ஓயாத அலை” வெற்றிகள் பதிவு செய்தன. அதுதான், சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சூழலை, இலங்கையில் மீளத் திறக்கவும் காரணமானது. ஆனால், அவ்வாறான வெற்றிகளைப் பதிவு செய்த ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலுக்குள் 2009இல் முடிவுக்கு வந்தது. வெற்றிகளின் அடைவுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் அதுவரை கொண்டு சுமந்த அனைத்தும் காணாமற்போயின் வேண்டுமானால், புலிகளின் வெற்றிகள் வழங்கிய அனுகூலங்களின் மீட்சியாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தோற்றத்தையும் நிலைபெறுகையையும் கொள்ள முடியும். ஆயுதப் போராட்ட வடிவம் காட்டிய வெற்றிகளின் அடைவுகளை வைத்துக் கொண்டு, தற்போதைய தமிழ்த் தேசிய அரசியல் நகர்வை ஒருபோதும் ஒப்பு நோக்க முடியாது. ஏனெனில், ஆயுதப் போராட்டம் அமைதியாக முடிவுக்கு வரவில்லை. முள்ளிவாய்க்கால் என்கிற பேரவலத்தை வழங்கிவிட்டே, முடிவுக்கு வந்தது. அப்படியான நிலையில், அந்தக் கட்டங்களையெல்லாம் கடந்துதான், புதிய போராட்ட வடிவத்தைதத் தமிழ்த் தேசியம் வரிந்து கொள்ள வேண்டியிருக்கின்றது. இத்தகைய சூழலில் அதற்கான காலமும் படிப்பினைகளின் பிரயோகமும், உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியமாகின்றது. அவ்வாறானதொரு கட்டத்திலேயே, தமிழ்த் தேசியம் இன்று நிற்பதாகவே கொள்ள முடியும். வேண்டுமானால், தன்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கான காலத்தை, அதிகமாக எடுத்துக் கொண்டிருப்பதாகக் கொள்ள முடியும். மாறாக, சாவுப் பாதையில் தமிழ்த் தேசியம் செல்வதாகக் கொள்ள முடியாது. http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்த்-தேசியம்-சாவுப்-பாதையில்-இல்லை/91-250176
 21. கொவிட்-19 கூட்டத்தில் இனப் பிரச்சினையை பற்றிப் பேசலாமா? -எம்.எஸ்.எம். ஐயூப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மே 4ஆம் திகதியன்று, அலரி மாளிகையில் கூட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது? தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு புறமிருக்க, அதை கூட்டிய பிரதமரோ, அரசாங்கமோ என்ன தான் சாதித்திருந்தன? கூடினார்கள், சுகாதார அதிகாரிகளும் முப்படை அதிகாரிகளும் கொவிட்- 19 தடுப்புக்காகத் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார்கள். பலர், கொவிட்-19 தடுப்பு விடயத்தில், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, அரசாங்கத்தைப் பாராட்டினார்கள்; அவ்வளவுதான்; கலைந்து சென்றார்கள். அதிலிருந்து 10 நாள்கள் உருண்டோடிவிட்டன. அந்தக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவெனக் கூறி, ஏதாவது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதா? குறைந்த பட்சம், அரசாங்கத்திலோ எதிர்க்கட்சிகளிலோ, எவராவது அந்தக் கூட்டத்தைப் பற்றி, இப்போது பேசுகிறார்களா? பிரதமர் ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்டனார் என்பதை, அதன் பின்னணியை அலசிப் பார்க்கும் போது தெளிவாகிறது. மார்ச் 2ஆம் திகதியன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை, மீண்டும் கூட்ட வேண்டும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துக்கு அழுத்தும் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தத்தைத் திசை திருப்புவதற்காகவே, பிரதமர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். இக்கூட்டத்தை அடுத்து, இங்கு எடுக்கப்படும் முடிவுகளை அமலாக்க, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றதொரு நிலைமை, கூட்டத்துக்கு முன்னர் தெரியவிருக்கவில்லை. கூடிக்கலைந்து போகும் கூட்டமாகவே, அது திட்டமிடப்பட்டு இருந்தது. அரசமைப்பின்படி, பொதுத் தேர்தலை நடத்தி, ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர், புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையகம், அதற்குப் பிந்திய ஒரு நாளில், அதாவது ஜூன் 20ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதெனத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், அரசமைப்பு நெருக்கடியொன்று உருவாகப் போகிறது. அதைத் தவிர்ப்பதற்காக, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்பதே, எதிர்க்கட்சிகளின் வாதமாகியது. அவசரநிலை அல்லது தேசிய ரீதியிலான நெருக்கடி நிலை உருவாயிருந்தால் மட்டுமே, ஜனாதிபதி அரசமைப்பின் 70 (7) உறுப்புரையின் கீழ், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டலாம். தற்போதைய, கொவிட்-19 பரவல், அதற்குப் பொருத்தமான நெருக்கடி நிலைமையாகக் கருத முடியும். ஏனெனில், இந்தத் தொற்றைத் தடுப்பதற்கு, சுமார் 130 ஆண்டுகள் பழைய தொற்று நோய் தொடர்பான சட்டமொன்றின் கீழேயே, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. புதிய நிலைமைக்கு ஏற்ப, புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். அதேவேளை, வரவு-செலவுத் திட்டமொன்று நிறைவேற்றப்படாத நிலையில், அரசமைப்பின் படி ஜனாதிபதிக்குத் திரட்டிய நிதியிலிருந்து பணத்தைப் பெற அதிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், பொதுச் சேவைகளுக்கு அவசியமானவை எனக் கருதக்கூடிய பணத்தை மட்டுமே, ஜனாதிபதி அவ்வாறு பெற முடியும் என, அரசமைப்பின் 150 (3) உறுப்புரையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்குத் திரட்டிய நிதியத்திலிருந்து பணத்தைப் பெறலாமேயொழிய, நோய்த் தடுப்பு போன்றவற்றுக்கு, திரட்டிய நிதியத்திலிருந்து மேலதிகமாக, ஜனாதிபதி பணத்தைப் பெற முடியாது எனவும் வாதிடப்படுகிறது. அவ்வாறு, ஜனாதிபதி பணத்தைப் பெற முடியுமாக இருந்தாலும், நீண்ட காலமாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல், ஜனாதிபதி திரட்டிய நிதியத்திலிருந்து பணத்தைப் பெற்றுச் செலவழிப்பது, நிதி சம்பந்தமான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கொச்சைப்படுத்துவதற்குச் சமமாகும். இதுவும், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பதற்கு, மற்றொரு காரணமாக, எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. தற்போதைய, அரசமைப்பு நெருக்கடி உருவாகும் வகையில், தேர்தல் ஆணையகம் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென முடிவு செய்ததன் காரணமாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதி மார்ச் 2ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல், செல்லுபடி அற்றதாகிவிட்டுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். அதுவும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பதற்கான, மற்றொரு வாதமாகும். ஆனால், “பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டவே மாட்டேன்” என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருக்கும் நிலையில்தான், பிரதமர், 4ஆம் திகதிய கூட்டத்தை அறிவித்தார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு, மாற்று ஏற்பாடாகவே அது கூட்டப்படுகிறது என்பது தெளிவாகியது. தாம், இதில் கலந்துகொள்வதா, இல்லையா என்பதைப் பற்றி, ஆரம்பத்தில் எவ்வித முடிவையும் அறிவிக்காத தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இறுதியில் தாம் அதில் கலந்துகொள்வதென்று அறிவித்தது. அதற்கான காரணத்தையும், நீண்டதோர் அறிக்கை மூலம் அறிவித்தது. ஆனால், தற்போதைய சூழலுக்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கத்துக்கும், அந்த அறிக்கை எவ்வளவு பொருந்துகிறது என்பது கேள்விக்குறியாகும். கொவிட்-19 தொற்று மட்டுமல்லாது, முக்கியப் பிரதான அரசியல் காரணங்களையும் அரசாங்கத்தினதும் கூட்டத்தில் கலந்துகொண்டோரினதும் கவனத்துக்குக் கொண்டு வருவதே, கூட்டத்தில் தாம் அதில் கலந்துகொள்வதன் நோக்கமாகும் என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அந்த அறிக்கை மூலம் கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் பிரச்சினைக்குப் புறம்பாக, நிறைவேற்று ஜனாதிபதி முறை, தேர்தல் முறை சீர்திருத்தம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தினதும் ஏனையோரினதும் கவனத்துக்கு கொண்டுவர முயற்சித்தது. அந்த விடயங்கள் தொடர்பாக, முறையான தீர்வுகளைக் காண்பதற்காக, கடந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக மாற்றிச் செயற்பட்டமையும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அவசர பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காகவெனக் கூட்டப்படும் ஒரு கூட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றியோ, தேர்தல் முறை சீர்திருத்தம் பற்றியோ அல்லது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பற்றியோ, ஒருவர் பேசினால், நிலைமை எவ்வாறு இருக்கும்? இந்த விடயங்கள், தீர்வு தேட வேண்டிய விடயங்கள் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால், கூட்டப்படும் சகல கூட்டங்களிலும் அவற்றைப் பற்றிப் பேச முடியுமா என்பதே, இங்கு எழும் கேள்வியாகும். ஆனால், கூட்டமைப்பு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதில், எவ்வித நன்மையும் இல்லை என்று கூற முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றால், தீண்டத் தகாத ஓர் அரசியல் குழுவாகவே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் அதனுடன் தொடர்புள்ள அரசியல் குழுக்களும் கருதுகின்றன. கொவிட்-19 தொற்றாளர் தொட்ட இடமெல்லாம், கொரோனா வைரஸ் பரவுவதைப் போல், கூட்டமைப்பு தொட்ட இடமெல்லாம், பிரிவினைவாதம் பரவுவதாகவே அவர்கள், பிரசாரம் செய்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை, சுமந்திரன் ஆதரித்துப் பேசியதைப் பாவித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சில பிக்குகள், அந்தக் கோரிக்கையைப் பிரிவினைவாதக் கோரிக்கையாகச் சித்திரித்தார்கள். எனினும், பிரதமர் கூட்டிய கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொண்டதைப் பற்றி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்கள் பாராட்டிக் கருத்து வெளியிட்டு இருந்தன. இதன் மூலம், அவர்களது இரட்டை வேடம் அம்பலமாகிறது. அதுவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, செய்த நன்மையாகும். இதுபோன்ற காரணங்களால், இதுவரை கொரோனா வைரஸ், உள்நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் சகல விடயங்களையும் மூடி மறைத்துக் கொண்டு இருந்த நிலை, உள்நாட்டிலாவது மாறி வருகிறது. கொரோனா வைரஸை, அரசியல் காரணங்கள் படிப்படியாக மூடி மறைத்துக் கொண்டு வருகின்றன. கொவிட்-19, இதுவரை நாட்டில், பாரியளவில் பரவாதிருப்பதும் அந்தத் தொற்றைப் பற்றிய செய்திகள், நாளுக்கு நாள் ஒன்றிரண்டாக அதிகரிக்கும் வெறும் புள்ளிவிவரமாக இருப்பதும், அரசாங்கம் வைரஸ் பிரச்சினையைப் பாவித்துத் தடையின்றி அரசியல் இலாபம் அடைந்து வருவதும், இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். உண்மையிலேயே, இலங்கையில், கொவிட்-19 தடுப்புப் பணிகள், வேறு பல நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், வெற்றிகரமாகவே நடைபெற்று வருகின்றன. இலங்கை ஒரு தீவாக இருப்பதும், இந்த வெற்றிக்குக் காரணமாகும். இலங்கைக்கும் வேறு நாடுகளுக்கும் இடையே தரைவழி எல்லைகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோர், கட்டாயம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே வர வேண்டும். யாழ்ப்பாணம், மத்தள விமான நிலையங்கள் முடங்கியே கிடக்கின்றன. எனவே, வெளிநாடுகளிலிருந்து வருவோரைக் கண்காணிப்பது, இலங்கையில் மிகவும் இலேசான காரியமாக இருக்கிறது. அதேவேளை, சீனாவில் ஆரம்பித்தாலும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பின்னரே, இலங்கையில் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக, பல நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் சுகாதார அமைச்சு திரட்டிக் கொண்டிருந்த நிலையிலேயே, இந்த வைரஸ் தொற்று, மார்ச் முற்பகுதியில், நாட்டுக்குள் வந்தது. தனிமைப்படுத்தல், சுய தனிமைப்படுத்தல், முகக்கவசப் பாவனை, சமூக விலகல் (social distancing), அடிக்கடி கை கழுவுதல் போன்ற உத்திகளை உலகம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியிருந்தது. அமெரிக்க அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, இலங்கை அரசாங்கம் இந்த அனுபவங்களை நன்றாக உபயோகித்தது. அதற்காக ஊடகங்களையும் சிறந்த முறையில் பாவித்தது. பெரும்பாலான ஊடகங்கள், அரச சார்பானவையாக இருப்பதும் அதற்குப் பெரிதும் உதவியது. அத்தோடு, ஜனாதிபதிக்கு எதற்கும் முப்படைகளே ஞாபகம் வருவதால், நோய்த் தொற்றிவர்களுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டுபிடிக்க, அரசாங்கம் முப்படைகளையும் பொலிஸாரையும் பாவித்தது. உலகில் மிகச் சில நாடுகளே, ஆயுதப் படைகளைத் தனிமைப்படுத்தல் பணிகளுக்காகப் பாவித்துள்ளன. இதுவும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இது வேறு அபாயங்களை உருவாக்கும் என்பது வேறு விடயம். எவ்வாறாயினும், அரசாங்கம் சிறந்த முறையில் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறது என்பது உண்மை. அரசாங்கம், அதைச் சந்தைப்படுத்த முயற்சிக்காவிட்டாலும், மக்கள் மத்தியில் அந்த அபிப்பிராயம் உருவாவது நியாயமே. எனவே, அரசாங்கம் முயலாவிட்டாலும், இந்த வெற்றியின் மூலம், அரசாங்கத்துக்கு இயல்பாகவே அரசியல் இலாபம் கிடைக்கத்தான் போகிறது. ஆனால், மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் இந்த அபிப்பிராயத்தை, அரசாங்கம், அரச சார்பு ஊடகங்கள் மூலம், மிகச் சிறந்த முறையில் தமது அரசியலுக்காகப் பாவிக்கிறது. இதுவே, ‘லொக் டவுன்’ நிலையில் இருந்த, எதிர்க்கட்சிகளை உசுப்பிவிட்டது. முதலில், வெறும் கோரிக்கைகளை விடுத்துக் கொண்டு இருந்த அக்கட்சிகள், இப்போது நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றன. தற்போதைய அரசமைப்பு நெருக்கடியை எதிர்கொள்வது எவ்வாறு? என்பதைப் பற்றி, உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு அறியுமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, மார்ச் 31ஆம் திகதியன்று, ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார். ஏப்ரல் 4ஆம் திகதி, அதற்குப் பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, “மே 28ஆம் திகதிக்கு முன்னர், தேர்தலை நடத்த முடியாது என, இப்போதே கூற முடியாது” எனப் பதில் அளித்து இருந்தார். இது, மே 28ஆம் திகதி, தேர்தலை நடத்த வேண்டும் எனச் சூசகமாகக் கூறுவதற்குச் சமமாகும். இந்த நிலையில், தாமே உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிவதென, எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. ஆனால், ஜனாதிபதி அல்லாதவர்கள், அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்கள் மூலமே, இந்த விடயத்தை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொவிட்-19-கூட்டத்தில்-இனப்-பிரச்சினையை-பற்றிப்-பேசலாமா/91-250174
 22. சுமந்திரன் ஐயாவின் செவ்வியை ஜீவன் (யாழ் களத்தில் முன்னர் இருந்த அஜீவன் என்று நினைக்கின்றேன்) முழுமையாக மொழிபெயர்த்துள்ளார். அதை வாசித்தளவில், சுமந்திரன் ஐயா சமாளிக்கத்தான் இந்த வீடியோவை விட்டுள்ளார் என்று தெரிகின்றது. சிங்கள ஊடகரின் கடுமையான கேள்விகளுக்கு ஆரம்பத்திலேயே சொதப்பலான விடைகளைக் கொடுத்து கொஞ்சம் எரிச்சல்பட்டிருப்பார். அதனால் நிதானமாக யோசித்து பதில் அளிக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசுக்குக் கட்சியும் ஒன்றென்ற மாதிரி சுமந்திரன் ஐயா பதிலளிக்க ஆரம்பித்ததை ஊடகர் கேள்விக்குள்ளாக்கியபோதே சுதாகரித்து இருக்கவேண்டும். வீடியோவில் புலிகளின் அர்ப்பணிப்பு பற்றி எல்லாம் பேசுகின்றார். ஆனால் அதை செவ்வியில் சொல்லாமல் விட்டுவிட்டார்! போராட்டம் என்று மொழிபெயர்த்தது பிழை என்கின்றார். ஆயுத நடவடிக்கை/செயற்பாடு என்பதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்கின்றார். சரி. அஹிம்சையை நம்பும் சுமந்திரன் ஐயா ஆயுத நடவடிக்கைகளை/செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று ஏற்றுக்கொள்வோம். ஆனால் இந்தக் கேள்விக்கு சுருக்கமான பதிலைக் கொடுத்து மாட்டுப்பட்டதற்குப் பதிலாக ஏன் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள், அவர்கள் எப்படி அர்ப்பணிப்புடன் போரிட்டார்கள், ஏன் தோல்வியைத் தழுவினார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கலாம். ஆனால் அடிப்படையில் புலிகளின் அரசியல்/ஆயுதச் செயற்பாடுகளை விரும்பாததால் சுருக்கமாக முடித்துவிட்டார்! சமஸ்டியைப் பற்றி விளக்கம் கொடுத்தது ஒன்றுதான் உருப்படியான பதில். ஆனால் அது ஒருபோதும் தீர்வாக வராது. சமஸ்டி என்றாலே பிரிவினை என்று 90 வீதம் சிங்களவர்கள் நம்புகின்றாகள் என்று சுமந்திரன் ஐயாவே ஒத்துக்கொள்ளும்போது, சமஸ்டியைப் பற்றி சிங்கள அரசு இன்னும் 300 ஆண்டுகள் சென்றாலும் பேசாது!
 23. எனது நண்பர் மணி இரண்டு, மூன்று கிழமைகளாக தரவுகளை எடுத்து ஆராய்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டார். ஆய்வு நீண்டதாக இருந்ததால் முகநூல் பக்கத்தில் பிரசுரிக்க சில சவால்கள் இருந்ததால் அவசரமாக வலைப்பதிவு ஒன்றை உருவாக்கி ஒட்டியது மட்டும்தான் நான் செய்தது. PDF document ஐ இயன்றளவு பலருக்கும் கிடைக்கும்படி பகிர்ந்து வருகின்றோம். ஆர்வமுள்ளவர்கள் இன்னும் அதிகம் பேர், குறிப்பாக இலங்கையில் உள்ளவர்கள், பார்க்க உதவலாம்.
 24. இலங்கை க.பொ.த. சாதாரணதரம் (G.C.E. O/L): தமிழர் செறிந்து வாழும் பிரதேசப் பெறுபேறுகள் – ஓர் மீளாய்வு (2005 – 2019) மணிவண்ணன் மகாதேவா May 10, 2020 முன்னுரை G.C.E. O/L பொதுத் தேர்வு வரையான கற்பித்தல் என்பது மாணவர்களின் கல்விப் பாதையில், அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு படிக்கல்லாகவே பலகாலமாக இருக்கிறது. இதன் நோக்கம் மாணவர்களின் அறிவுத்திறனை ஆரம்ப வகுப்புகளில் இருந்து படிப்படியாகப் பலப்படுத்தி, அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழிற் பாதையை அவர்களே தெரிவு செய்வதற்கு உதவுவதேயாகும். அதே நேரத்தில் இந்தப் பொதுத்தேர்வு மட்டுமே மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணியில்லை என்ற புரிதல் எமக்கு இருக்கவேண்டும். ஆனால் எமது சமூகம் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களை அறிவாளிகளாகவும், அவ்வாறு இல்லாதவர்களை உதவாக்கரைகளாகவும் வகைப்படுத்திப் பார்த்துப் பழகிவிட்டது. இவ்வாறான பொதுப் தேர்வுகளில் ஒரே தடவையில் தேர்ச்சி பெற்றால்தான் ஒரு மாணவர் திறமைசாலி, இல்லையெனில் அவர் முட்டாள், அவர் தொடர்ந்தும் கல்வி கற்கத் தகுதியற்றவர், சமூகத்திற்கும் பயனற்றவர் போன்ற கருத்தியல்கள் தமிழர் மனதில் இருந்து முற்றாக அகற்றப்பட வேண்டும். இவ்வாறான சிந்தனையை ஆசிரியர் சமூகமும் கல்விமான்களும் ஊக்கப்படுத்தவும் கூடாது. மக்கள் மத்தியில் மாணவர்களின் தனித்துவம், கல்வி கற்கும் திறன் என்பன பற்றிய சரியான புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவரும் தனித்திறமைகளைக் கொண்டவர்கள். ஆனால் இன்றுவரை உலகின் அனைத்து நாடுகளும் இதனைச் சொல்லிக் கொண்டே மறுபக்கத்தில் அனைத்து மாணவர்களையும் ஒரே வகையான கல்வி முறையையே கற்கவும் ஒரே வகையான மதிப்பீட்டு முறையையே பின்பற்றவும் நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நாம் மாணவர்களிடமிருந்து நூறு வீத தேர்ச்சியை எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? இவ்வாறு G.C.E. O/L தேர்வில் நல்ல பெறுபேறுகளை பெறாத எத்தனையோ பேர் வேறு துறைகளில் கால் பதித்து அதில் பெரும் வெற்றி பெற்று வருவதையும் நாங்கள் பார்க்கிறோம். இந்தத் தேர்வில் தேறாவிட்டாலும் மாணவர்கள் வேறு வகையில் கல்வியைத் தொடர்ந்து பட்டப்படிப்பினையும் மேற்கொள்ள முடியும் என்பதுதான் கள யதார்த்தம். இலங்கையில் ஏற்கனவே கடந்த 2017 இல் இருந்து G.C.E. O/L தேர்வில் சித்தி பெறாத மாணவர்களுக்கான மாற்றுவழிகளை அறிமுகப்படுத்தி அந்த கல்விச் செயற்பாடு ஏற்கனவே நடைமுறைக்கு வந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மாணவர்களும் தங்கள் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டியதும் அவசியம். பதினைந்து வயதுவரை கட்டாயக் கல்வி உலக நாடுகளில் நடைமுறையில் இருப்பதே ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். பெற்றோரும் தமது பிள்ளைகளுக்கு கல்வி தொடர்பான தகுந்த வழிகாட்டல்களை வழங்கவேண்டும். அதேநேரத்தில் தங்கள் ஆசைகளைப் பிள்ளைகளின்மேல் திணிக்கக் கூடாது. தமது பிள்ளைகள் பருவ வயதில் என்ன செய்கிறார்கள் அவர்களின் ஆர்வம் என்ன என்பதை கண்டறிந்து அவர்கள் சரியான பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். பின்னணித் தகவல் 2020 ஏப்ரல் மாதம் 28ம் திகதி 2019 G.C.E. O/L மாணவர்களின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்களுள் சில கல்விமான்களும் அடங்குகிறார்கள். இருந்தபோதிலும் அவர்களுள் பலரின் ஆதங்கம் வடமாகாணம் தொடர்பானதே. குறிப்பாக யாழ் மாவட்டப் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்ததாக இவர்கள் ஆதங்கப்படுவது தெரிகிறது. எமது மக்கள் பொதுவாகவே சிறந்த பெறுபேறுகளை நியமங்களாக வைத்தே பொதுத்தேர்வு முடிவுகளை ஆராயும் பழக்கம் கொண்டவர்கள். இதனையே எமது நாட்டு ஊடகங்களும் மக்களுக்குப் பழக்கி வந்திருக்கின்றன. பல பாடசாலைகளும் 70 புள்ளிகள் எடுக்கும் மாணவர்களை 90 புள்ளிகள் எடுக்க வைக்க சக்தியைச் செலவிடும் அளவிற்கு, 30 புள்ளிகள் எடுக்கும் மாணவர்களை 50 புள்ளிகள் எடுக்க வைக்கச் செலவிடுவதில்லை. இவ்வாறு போதுமான கவனிப்பும் வழிகாட்டல்களும் கிடைக்காத இந்த மாணவர்கள்தான் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறத் தவறிவிடுகிறார்கள். “மாவட்டத்தின் கல்வித்தரம் விழுந்துவிட்டது” என்ற வார்த்தையாடலில் இவர்களே மறைமுகமாகக் குற்றவாளியாக்கப்படுகிறார்கள். இவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா? இவர்கள் அனைத்து தரவுகளையும் கருதவேண்டிய காரணிகளையும் கருத்தில் எடுத்து அதன் அடிப்படையில்தான் பேசுகிறார்களா? அல்லது கடந்த சிலவருடத் தரவுகள் அடிப்படையில் எழுதுகிறார்களா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. நாட்டில் நடைமுறையில் உள்ள கல்விமுறைகள், அண்மையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்பனவும் கருத்தில் கொள்ளப்படவேண்டும் அல்லவா? அவ்வாறான மாற்றங்களையும் கருத்தில் கொண்டுதான் இவர்களின் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவா? இந்தக் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டறிவதற்காக, கடந்த கால பதினைந்து வருட தரவுகளை வைத்து மாணவர்களின் பெறுபேறுகளைக் கொண்டு இந்தக் ஆக்கம் எழுதப்படுள்ளது. இது ஒரு முழுமையான புள்ளிவிபர ஆய்வு அறிக்கை இல்லை என்பதை முதலிலேயே அறிவிக்க விரும்புகிறேன். பல தரவுகள் மற்றும் தகவல்கள், இலங்கையில் கல்வித் துறையோடு சம்பந்தப்பட்ட சிலரோடு சரி பார்க்கப்பட்டும் இந்த ஆக்கத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இறுதியில் ஒரு சில பரிந்துரைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு மற்றும் மற்றும் நுவரேலியா மாவட்ட தரவுகளே விளக்கமாக ஆராயப்பட்டுள்ளன. தேவைப்பட்ட இடங்களில் ஏனைய மாவட்ட, மாகாணத் தரவுகள் ஒப்பீடு செய்வற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், மாணவர்களின் பெறுபேறுகள் மொழிவாரியாக ஆராயப்படவில்லை. அதேபோல பாடங்கள் அடிப்படையிலான ஆய்வும் பாலினத்தின் அடிப்படையிலான ஆய்வும் செய்யப்படவில்லை. போதிய தரவுகளைத் திரட்டுவதில் இருந்த சிரமங்கள் காரணமாக வலய மட்ட ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. கோட்ட மட்டத் தகவல்களையும் பகுப்பாய்விற்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. முழுமையான தகவல் ஆய்வு செய்வதில் இருந்த தடைகள் 2005 – 2007 இலங்கைப் பரீட்சைத் திணைக்கள புள்ளிவிபரக் கையேட்டில் உள்ள 2005, 2006, 2007 ஆண்டுகளுக்கான புள்ளிவிபரங்களுக்கும் (பக்கம்: 47) 2011 ஆண்டு பெறுபேறுகள் தொடர்பாக நடைபெற்ற National Symposium கையேட்டில் உள்ள 2005, 2006, 2007 ஆண்டுகளுக்கான புள்ளி விபரங்களுக்கும் (பக்கம்: 10) இடையில் பலவேறுபாடுகள் உள்ளன. இவை இரண்டுமே இலங்கைப் பரீட்சைத் திணைக்கள வலைத்தளப் பக்கத்திலேயே இருப்பதைக் காணலாம். ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக 2005 க்கு முன்னரான பெறுபேற்றுத் தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தீவிரமான போருக்கு முன்னைய காலப் பெறுபேறுகளோடு ஒப்பீடு செய்ய முடியவில்லை. 2005 – 2007 வரையான மூன்று வருடங்களுக்கான மாகாண மட்டத்தில் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் விபரத்தைப் பெறமுடியவில்லை. ஒவ்வொரு வருடத்திலும் தேர்வுக்குத் தோற்றிய அனைத்துப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளையும் பெறமுடியாமையால் பாடசாலைகளில் இருந்து முதல் தடவை தோற்றியவர்களின் பெறுபேறுகள் மட்டுமே கருத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர் பெறுபேறுகளின் பகுப்பாய்வு மாகாணரீதியில் உயர்தரம் கற்கத் தகுதி பெற்றவர்கள் இலங்கையில் வாழும் தமிழ் பேசுவோரை எடுத்துக் கொண்டால் வடமாகாணத்தில் வாழ்பவர்களில் 90 வீதத்திற்கு அதிகமானவர்கள் தமிழ் பேசுவோர். அதேபோல கிழக்கில் தமிழ் மொழி பேசுபவர்கள் 76 வீதமாகும். மத்திய மாகாணத்தைப் பொறுத்தவரையில் நுவரேலியா மாவட்டத்தில் தமிழ் பேசுவோர் 57 வீதமாக இருந்தபோதிலும், மத்திய மாகாணம் முழுமையாகப் பார்க்கும்போது 30 வீதம் மட்டுமே முஸ்லிம் மற்றும் ஏனைய தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்களுள் சிலர் சிங்கள மொழிமூலமும் கற்று இருப்பதற்கான சாத்தியமும் உள்ளது. முதல் பகுதியில் அனைத்து மாகாணங்களும் ஒப்பு நோக்கப்பட்டாலும், தமிழ் மாணவர்கள் தொடர்பாக இந்தப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பெறுபேறுகள் மட்டுமே விபரமாக ஆராயப்பட்டுள்ளன. Table 01: G.C.E. O/L Students qualified for A/L: 2005 to 2019 in all nine Provinces அட்டவணை 01 இல் 2005 இலிருந்து 2019 வரையான மாகாண மட்ட பெறுபேறுகள் தரப்படுள்ளது. இதன்படி, 2005 இல் தொடங்கி இன்றுவரை அனைத்து மாகாணங்களும் தொடர்ந்து முன்னேறுவதை அவதானிக்கக் கூடியதாகவே இருக்கிறது. 2005இல் நாட்டின் சராசரி தேர்ச்சி வீதம் 49.7 இலிருந்து 2019 வரை, சிறு சிறு ஏற்ற இறக்கங்களோடு அனைத்து மாகாணங்களிலும் வளர்ச்சிப் போக்கையே காட்டுகிறது. இந்தத் பட்டியல் கடந்த பதினைந்து வருடத்தில் நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் ஏற்பட்ட பெறுபேறுகளின் மாற்றங்களை காட்டுகிறது. இதில் முக்கியமாக தென் மாகாணம் 2005 இல் மூன்றாவது இடத்தில் இருந்து 2011 இல் இரண்டாவது இடத்துக்கு வந்ததோடு, 2014 இலிருந்து தொடர்ச்சியாக முதலிடத்தைத் தக்க வைத்துள்ளது. மேல் மாகாணம் 2014 இல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு, கடந்த வருடத்தை தவிர்த்து, தொடர்ந்தும் இரண்டாம் இடத்திலேயே இருக்கிறது. வடமேல் மாகாணம் 2015, 2016 ஆகிய வருடங்களைத் தவிர்த்து கடந்த பதினைந்து வருடங்களில் தொடர்ந்தும் இரண்டாம் அல்லது மூன்றாம் இடங்களில் இருக்கிறது. கடந்த பதினைந்து வருடங்களில் வடமாகாணம் 2009 இல் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனால் 2011, 2012 ஆகிய வருடங்களிலும் பின்னர் 2014 இலிருந்து தொடர்ச்சியாக 2019 வரையும் ஒன்பதாவது இடத்திலேயே இருக்கிறது. இதேபோல கிழக்கு மாகாணமும் சில வருடங்களில் ஆறாம் இடத்திற்கு வந்தபோதும் பெரும்பாலும் அட்டவணையில் தொடர்ந்தும் ஏழாவது அல்லது எட்டாவது இடத்திலேயே இருக்கிறது. கடந்த பதினைந்து வருடங்களில் இலங்கையில் அனைத்து மாவட்டங்களினதும் பெறுபேறுகளில் தொடர்ச்சியான முன்னேற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது ஒரு சீரான வளர்ச்சிப்போக்கைக் காட்டவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. 2005 இல் முழு இலங்கையினதும் சராசரி தேர்ச்சி வீதம் (உயர்தரம் கற்கத் தகுதி பெற்றோர்) 46.6 % ஆக இருந்துள்ளது. இந்த சராசரி அடுத்த ஐந்து வருடங்களில் 52.5%ஆக அதிகரித்து, அடுத்த ஐந்து வருடங்களில் 69% ஆகவும் அடுத்த ஐந்து வருடங்களில் 73.8%ஆகவும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்னைய காலப்பகுதியில் 1997 இலிருந்து 2001 வரையான பெறுபேறுகள் (சராசரி தேர்ச்சி வீதம்) இதைவிடவும் குறைவாகவே இருந்துள்ளன. அந்த தரவுகள் கீழே Table 02 இல் தரப்பட்டுள்ளன. குறிப்பு: 2001 – 2004 வரையான புள்ளிவிபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தத் தரவுகளைப் பார்க்கும்போது தொடர்ச்சியாக இலங்கை முழுவதும் மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெறும் வீதம் அதிகரித்து வருவதையே அவதானிக்க முடிகிறது. Table 02: G.C.E. O/L Students sat for exam and percentage qualified for A/L 1997 இல் 32.78 வீதமாக இருந்த உயர்தரக் கல்விக்கு தகுதி பெறும் வீதம் கடந்த ஆண்டுவரை அதிகரித்து 73.84 வீதமாகி உள்ளது. 1997 இலிருந்து 2001 வரையான காலப்பகுதியில் நாட்டில் நிலவிய போர்ச் சூழல், தெற்குப் பகுதியிலும் காணப்பட்ட பதட்டமான சூழல் போன்றவை குறைந்த பெருபேற்றிற்கு காரணமாக இருந்திருக்கலாம். Graph 01: G.C.E. O/L Students qualified for A/L from North & Eastern Province: 2005 to 2019 (in %) Graph 01 இல் கடந்த பதினைந்து வருடங்களில் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணத்தின் பெறுபேறுகள் நாட்டின் சராசரி பெறுபேற்றுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்துடன் ஒப்பிடும்போது கிழக்கு மாகாணம் பொதுவாக வடமாகாணத்தின் பெறுபேறுகளுக்கு சமனாக அல்லது அதிகமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. வடமாகாணம் 2006, 2007 மற்றும் 2009 ஆகிய வருடங்களில் தேசிய சராசரியைவிடக் கூடுதலான சராசரியைப் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தது. ஏனைய காலப்பகுதியில் தேசிய சராசரியைவிட குறைவான பெறுபேறுகளையே வடமாகாணம் பெற்று வந்துள்ளது. கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் தேசிய சராசரியைவிட குறைவாகவே பெற்று வந்துள்ளது. வடக்கு, கிழக்கு தவிர்த்து தமிழர்கள் செறிந்து வாழும் இன்னொரு மாகாணமான மத்திய மாகாணம் 2007ம் ஆண்டு தவிர்த்து ஏனைய அனைத்து வருடங்களிலும் தேசிய சராசரியைவிட குறைவான பெறுபேறுகளையே பெற்று வந்துள்ளது. அனைத்து மாகாணங்களின் பெறுபேறுகள் புள்ளிவிபரம் Appendix 1 இல் சட்ட வரைபடமாக இணைக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர் கடந்த பதினைந்து வருடங்களில் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர்கள் சதவீதம் Graph 02 இல் தரப்பட்டுள்ளது. Graph 02: Students failed in all subjects in G.C.E. O/L: 2005 to 2019 – Provincial average இலங்கையில் 2008, 2009 ஆகிய வருடங்களில் அதிகமான வீதமானோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறவில்லை. அதிலும் வடமத்திய மாகாணம் (9.9%) மற்றும் ஊவா மாகாணங்களில் ( 10.6%) அதிக சதவீதமானோர் எந்த ஒரு பாடத்திலும் சித்தி பெறவில்லை. அந்த இரண்டு ஆண்டுகளிலும் வடமாகாணம் ஒப்பீட்டளவில் குறைந்த வீதமான சித்தியடையாதோர் எண்ணிக்கையையே (3.5%) பெற்றிருந்தது. இந்த வருடப் பகுதியில்தான் வடக்கு மாகாணம் கடுமையான இறுதி யுத்தத்திற்கு முகம் கொடுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. திரும்பவும் 2011, 2012 ஆகிய வருடங்களிலும் வடமாகாணம் குறைவான சித்தியடையாதோர் வீதத்தைப் பெற்றிருந்தது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 2013, 2014 ஆகிய வருடங்களில் மிகக் குறைந்த வீதமான சித்தியடையாதோர் வீதத்தை பெற்றிருந்தது. ஆனால் 2015, 2016, 2017, 2018 ஆகிய வருடங்களில் வட மாகாணமே அனைத்து மாகாணங்களையும் விட அதிகமாக அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையாதோர் வீதத்தைப் பெற்று இருந்தது. இந்தவருடம் (2019) வடமாகாணத்தில் சிறிது முன்னேற்றம் இருந்தாலும் ஏனைய மாகாணங்களை விட சிறப்பான மாற்றமாக இல்லை. மாகாண மட்டத்தில் 2005ம் ஆண்டு மாகாணப் பெறுபேற்று வீதங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, கடந்த பதினைந்து வருடத்தில் ஊவா, வடமத்திய, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் முறையே 29%, 29%, 28%, 28% வளர்ச்சியைக் காட்டுகின்றன. கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் முறையே 24%, 24%, 25% முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன. வடமாகாணத்தில் 18% முன்னேற்றத்தையும் மேல் மாகாணத்தில் 18% முன்னேற்றத்தையும் அவதானிக்க முடிகிறது. அதாவது, வடமாகாணம் மற்றும் மேல்மாகாணத்தின் வளர்ச்சி வேகம் ஒப்பீட்டளவில் மெதுவானதாக இருக்கிறது. மாவட்டரீதியாக உயர்தரம் கற்கத் தகுதி பெற்றவர்கள் இந்தப் பகுதியில் வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களையும் அதனுடன் தமிழர்கள் செறிந்து வாழும் நுவரேலியா மாவட்டத்தையும் சேர்த்து ஆராயப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களை இந்த பகுதியில் விரிவாக விவாதிக்கவில்லை. தமிழ் மாணவர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் பெறுபேறுகளும் 2005 இலிருந்து ஏனைய மாவட்டங்களைப் போலவே அதிகரித்த வளர்ச்சிப் போக்கினைக் கொண்டிருக்கின்றன. ஆனால் யுத்தம் காரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் மட்டும் மிகவும் விதிவிலக்கான வீதத்தில் 2009இல் வீழ்ச்சிக்கு உள்ளாகி பின்னர் முன்னேறி வருவதையும் அவதானிக்கலாம். (Graph 03 இனைப் பார்க்கவும்). வழமைக்கு மாறாக 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் இருந்து வெறும் 96 மாணவர்களும் (வழமையான மாணவர்களின் 7% மட்டுமே), கிளிநொச்சியிலிருந்து 49 மாணவர்களும் (வழமையான மாணவர்களின் 3% மட்டுமே) பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வரலாற்றிலேயே ஒரு மாவட்டத்தில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியது இந்த வருடத்திலேதான் என்று நினைக்கிறேன். Graph 03: Students qualified for A/L from North, East & N’Eliya Districts - 2005 to 2019 (in %) கடந்த பதினைந்து வருடத்தில் நாட்டில் போர் தீவிரமாக இருந்த நிலையில்கூட வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள் மற்றைய மாவட்டங்களோடு ஒப்பிடும்போது நல்ல பெறுபேறுகளையே பெற்று வந்துள்ளது. அதிலும் வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்கள் முதல் ஆறு இடங்களுக்குள் இருந்து வந்துள்ளன. அதிலும் வவுனியா மாவட்டம் 2006 – 2009 வரையான காலப்பகுதியில் முழு இலங்கையிலும் இரண்டாவதாக வந்தது. இருப்பினும் 2014 க்குப் பின்னர் வவுனியாவின் பெறுபேறுகளில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்ச்சி வீதமும் தேசிய சராசரியைவிடக் குறைவடைந்துள்ளது. (See Appendix 4) இருப்பினும் 2014 ஆண்டின் பின்னர் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டங்கள் மட்டுமே முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன. 2019 இலும் மன்னாரும் அம்பாறையும் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன. தமிழர்கள் வாழும் ஏனைய ஏழு மாவட்டங்களும் இம்முறை கடைசி எட்டு இடங்களுக்குள்ளேயே வந்துள்ளன. மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக நல்ல பெறுபேறுகளைப் பெற்று வந்துள்ளது. தேசிய சராசரி வீதத்தை ஒட்டியதாகவே மன்னார் மாவட்டப் பெறுபேற்று வீதம் உள்ளது. இம்முறை தேசிய அளவில் மன்னார் ஏழாவது இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டப் பெறுபேறுகள் 2010 வரை தேசிய சராசரியைவிடக் கூடுதலாக இருந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் யாழ்மாவட்டம் முதல் பத்து இடங்களுக்குள் இருந்திருக்கிறது. அதன்பின்னர் 2013 நீங்கலாக தேசிய சராசரியை விடவும் குறைவான சராசரியையே தொடர்ந்து பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் தொடர்ச்சியாகவே குறைவான பெறுபேறுகளைப் பெற்று வந்திருக்கின்றன. தேசிய சராசரி தேர்ச்சி வீதத்திற்கும் இந்த இரு மாவட்டங்களின் சராசரி தேர்ச்சி வீதங்களுக்கும் இடையில் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது பெரிய இடைவெளி காணப்படுகிறது. இறுதிக்கட்டப் போரின் தாக்கம் 2008, 2009 ஆகிய வருடங்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் தெளிவாகவே தெரிகிறது. 2009 இல் தேர்ச்சி வீதம் 16%, 18%மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் போரின் பின்னரான வளர்ச்சி வீதம் இந்த இரு மாவட்டங்களிலும் 2005 இல் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது சிறப்பானதாகவே இருக்கிறது. திருகோணமலை மாவட்டமும் 2005 இலிருந்து 2019 வரை தேர்ச்சி வீதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டி வருகிறது. ஆனால் அதன் பெறுபேறுகள் தேசிய மட்ட சராசரி வீதத்திலும் குறைவாகவே இருந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. தேசிய மட்டத்தில் பார்த்தால் இந்த மாவட்டம் கடைசி ஆறு இடங்களுக்குள்ளேயே வந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக கடைசி மூன்று இடங்களுக்குள்ளேயே வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டம் தொடர்ந்தும் தேசிய மட்ட சராசரி பெறுபேறுகளோடு ஒத்த பெறுபேறுகளையே பெற்று வந்துள்ளது. இவற்றுள் திருகோணமலையும் அம்பாறையும் மூவின மக்கள் வாழும் மாவட்டங்கள் ஆகும். மட்டக்களப்பு மாவட்டம் 2005 – 2007 காலப் பகுதியில் ஒப்பீட்டளவில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுள்ளது. அதன்பிறகு மாவட்ட அடிப்படையில் கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டு திரும்பவும் 2012 – 2013 காலப்பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் திரும்பவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதைத் தரவுகள் காட்டுகின்றன. நுவரெலியா மாவட்டமும் 2005 இலிருந்து சராசரி வளர்ச்சிப் போக்கினைக் காட்டுகிறது. இருப்பினும் தேசிய மட்ட தேர்ச்சி சராசரியைவிடவும் பத்து சதவீதம் குறைவான வீதமே உயர்தரம் கற்கத் தகுதி பெறுகிறார்கள். கடந்த ஐந்து வருடங்களில் தமிழர்கள் வாழும் மாவட்டங்களின் பெறுபேற்று வீதங்கள் Appendix 05 இல் தரப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களின் பெறுபேறுகளைப் பார்க்கும்போது 2015 வரை முதலிடத்தில் இருந்த கொழும்பு இரண்டாம் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளப்பட்டு கடந்த வருடமும் மூன்றாம் இடத்திலேயே இருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களைப் போலவே அம்பாந்தோட்டையும் மாத்தறையும் முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஏனைய மாவட்டங்கள் சிறு சிறு ஏற்ற இறக்கங்களைக் காட்டுகின்றன (Appendix 06). தமிழர்கள் செறிந்து வாழும் ஒன்பது மாவட்டங்களின் பெறுபேறுகளை 2005 ஆண்டின் பெறுபேறுகளை அடிப்படை அளவீடாகக் கொண்டு ஒப்பிடும்போது கிளிநொச்சி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் சிறந்த வளர்ச்சிப் போக்கினை (முறையே 31%, 30%) காட்டுகின்றன. இவற்றுக்கு அடுத்த நிலையில் முல்லைத்தீவு, அம்பாறை, மன்னார் மாவட்டங்கள் முறையே 28%, 27%, 26% முன்னேற்றத்தைக் கொண்டிருகின்றன. திருகோணமலை 23 வீத வளர்ச்சியையும் மட்டக்களப்பு 21 வீத வளர்ச்சியையும் காட்டுகின்றன. யாழ் மாவட்டம் குறைந்த பெறுபேறாக 18வீத முன்னேற்றத்தையும் வவுனியா மாவட்டம் மிகக் குறைந்த பெறுபேறாக 15 வீத வளர்ச்சியையும் மட்டுமே காட்டுகின்றன. மாவட்ட மட்டத்தில் அனைத்து பாடங்களிலும் சித்தி பெறாதவர் எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையாதோர் வீதத்தைப் பார்ப்போமானால் தமிழர்கள் செறிந்து வாழும் மாவட்டங்களில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கூடிய வீதமான மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளமையை அவதானிக்க முடிகிறது (Chart 04). முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த சதவீதம் போர் நடைபெற்ற காலத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது (2008 – 15.4%, 2009 – 10.1% & 2010 – 16.5%). அதன்பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டபோதும் தேசிய சராசரி வீதத்தை விடவும் கூடவாகவே இருக்கிறது. 2006, 2007 ஆகிய வருடங்களில் சித்தியடையாதோர் வீதம் தேசிய சராசரியைவிட முல்லைத்தீவில் குறைவாகக் காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. Graph 04: Students failed in all subjects: North, East & N’Eliya Districts - 2005 to 2019 (in %) கிளிநொச்சி மாவட்டமும் 2007 வரை குறைந்த சித்தியடையாதோர் வீதத்தைக் கொண்டிருந்தாலும் போரின் பின்னரான காலப்பகுதியில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்டிருக்கவில்லை. 2009 இல் 14.3% வீதமாக அதிகரித்துக் காணப்பட்ட தேர்ச்சியடையாதோர் வீதம் அதன் பின்னர் கொஞ்சம் முன்னேற்றத்தைக் காட்டியபோதும் 2015 இல் மீண்டும் 8.6% ஆக அதிகரித்து 2016 இலும் 8.1% வீதமாகவே இருந்துள்ளது. அதன்பின்னர் கொஞ்சம் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்கள் தொடர்ச்சியாகவே நாட்டின் சராசரியை விடக் குறைவான சித்தியடையாதோர் வீதங்களையே பெற்று வந்துள்ளன. தமிழ் பேசுவோர் அதிகம் வாழும் மாவட்டங்களுக்குள் இந்த இரண்டு மாவட்டங்களே சராசரியாக மிகக் குறைந்த சித்தியடையாதோர் வீதத்தைக் கொண்டிருக்கின்றன. (Mannar – 1.04% and Vavuniya 1.6%). நுவரேலியா மாவட்டம் 2005 - 2007 காலப் பகுதியில் தேசிய சராசரியைவிட அதிகமான சித்தியடையாதோர் வீதத்தைக் கொண்டிருந்தாலும் அதன் பின்னர் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை இடைவிலகல் கடந்த வருட பெறுபேறுகளைப் பற்றி விமர்சிப்பவர்கள் பலரும் பேசாது விட்ட ஒரு விடயம்தான் இடைவிலகல். பாடசாலை இடைவிலகல் என்பது இலங்கை முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனையாகும். இலங்கையின் கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் பாடசாலையில் இலவசக் கல்வி பெறுகிறார்கள். அத்துடன் பதினைந்து வயதுவரை ஒரு பிள்ளை கட்டாயம் பாடசாலைக் கல்வி பெறவேண்டும். ஆனால் இலங்கையில் இன்றுவரை பாடசாலை இடைவிலகல் அதிகமாகவே உள்ளது. Table 03 இல் காட்டியுள்ளபடி கடந்த ஆறு வருடங்களில் ஐந்தாம் வகுப்பு பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் அனைவருமே உரிய காலத்தில் G.C.E. O/L பரீட்சை எழுதவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த எண்ணிக்கை வித்தியாசம் ஆகக் குறைந்த எண்ணிக்கை 14,137ஆக, 2018 இலும் ஆகக் கூடிய வித்தியாசம் 18,965 ஆக, 2015 இலும் பதிவாகி உள்ளது. நோய்கள் அல்லது வேறு காரணங்களால் இவர்களுள் சிலர் இறந்திருந்தாலும், சிலர் வேறு காரணங்களால் உரிய வருடத்தில் பரீட்சை எடுக்காது விட்டிருந்தாலும், அந்த எண்ணிக்கைகள் புறக்கணிக்கத்தக்கது என்றே நம்புகிறேன். எனவே இவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் பாடசாலையிலிருந்து இடை விலகியவர்களாகவே இருக்கவேண்டும். இந்தத் தரவுகளின் அடிப்படையில் இலங்கை முழுவதுமாக கடந்த ஆறு வருடங்களில் ஒரு இலட்சம் மாணவர்கள் G.C.E. O/L பரீட்சைக்குத் தோற்றவில்லை. அவர்களை இடைவிலகியவர்களாகவே கருதமுடியும். 2013 இல் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் போட்டியில் தோற்றியவர்களில் கடந்த வருடம் G.C.E. O/L எழுதியிருக்க வேண்டியவர்களுள் வடக்கு, கிழக்கில் 4500 பிள்ளைகளும் நாடளாவிய ரீதியில் 17,000 பேரும் கடந்த ஆண்டு G.C.E. O/L பரீட்சை எழுதவில்லை (Table 04). இவர்களை இடைவிலகியவர்களாகக் கருதினால் இது அதற்கு முன்னைய வருட எண்ணிக்கையைவிட 3000அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கடந்த வருட தரவுகளைப் பார்க்கும்போது 2013 இலே ஆண்டு ஐந்துப் புலமைப் பரிசில் பரீட்சை எடுத்தவர்களில் 87% மாணவர்களே கடந்த வருடம் G.C.E. O/L தேர்வுக்குத் தோற்றியிருக்கிறார்கள். மாகாண அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலேதான் எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் அதிகமான இடைவிலகல் இருப்பதாகக் தெரிகிறது. வடமாகாணத்தின் இடைவிலகல் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் சதவீத அடிப்படையில் அதிகமானதாகவே இருக்கிறது. மேல் மாகாணம் குறைந்த சதவீதமான 2.1% வீதத்தைக் கொண்டிருக்கிறது. வடமாகாணப் பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தும் சமூகக் காரணிகள் (இந்தப் பகுதியில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி பெற்ற தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது). மாணவர்களின் பெறுபேறுகளை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கான காரணங்களை துல்லியமாக சொல்லுவது சாத்தியமில்லை. மாணவர்களின் கல்வித்திறன் மற்றும் பெறுபேறுகள் பல்வேறு சூழல் காரணிகளால் பாதிக்கப்படலாம். அதைத்தவிர ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு மாணவர்களின் பெறுபேறுகளையே நாம் கருத்தில் எடுத்துக் கொள்கிறோம். அதனால் ஆளிடை வேறுபாடுகள் பெறுபேற்று வீதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆசிரியர்கள், அதிபர்கள், நிர்வாகிகளின் பங்கு ஒரு பாடசாலையில் காணப்படும் வளங்களும் பணியாற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பும் மாணவர் கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. வளங்கள் சரியானமுறையில் பகிரப்படுவதில்லை என்பது ஒரு முக்கியமான குற்றச்சாட்டு. பாடசாலை அதிபர் நியமனங்களிலும் தனிநபர் செல்வாக்கும் அரசியல் தலையீடுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பல ஆசிரியர்கள் பின்தங்கிய பிரதேசத்தில் நியமனம் கிடைத்தாலும் எப்படியாவது இடமாற்றம் பெற்றுச் சென்று விடுகிறார்கள். இதனால் ஆசிரியர் வெற்றிடம் நிரப்பப்படாது பல பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகள் நாடெங்கும் உள்ளன. இந்த நிலையில் அந்தப் பாடசாலை மாணவர்கள் எவ்வாறு நல்ல பெறுபேறுகளைப் பெறமுடியும். தீவகப் பாடசாலைகளின் பெறுபெறுகள் மிக மோசமாக உள்ளதென்று சிலர் சுட்டிக்காட்டி இருந்தனர். இதன் காரணம் நிச்சயம் கண்டறியப்படவேண்டும். திரட்டப்பட தகவலின்படி, யாழ் மாவட்டத்தில் தண்டனை இடமாற்றம் செய்யப்படுவோர் தீவகத்துக்கு அனுப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு இடமாற்றம் பெறும் ஒருவர் எப்படி அந்தப் பிரதேச மாணவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவார்? கல்வித் திணைக்களத்தில் அதிகாரத்தில் உள்ள ஒரு சிலரே இவ்வாறு செயற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆசிரியர்களால் மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்படல், சிறு தவறுக்கும் தண்டிக்கப்படுதல், ஏனைய மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்படல், மாணவர்களிடையே பாரபட்சம் பார்த்தல் போன்றனவும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். பெற்றோர், சமூகத்தின் பங்கு இதே நேரத்தில் வடக்குக் கிழக்கில் உள்ள பெற்றோரும் மாணவரும் கல்விச் செயற்பாடுகளில் அக்கறையற்றவர்களாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சிலருடன் கலந்துரையாடியதில் இதிலும் ஓரளவுக்கு உண்மையிருப்பதாகவே தெரிகிறது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து தொடர்ந்து பணம் பெற்றுக்கொள்ளும் குடும்பங்களில் பல இவ்வாறே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது உண்மையெனில் அவ்வாறான குடும்பங்களுக்கு தேவைக்கதிகமாக பணம் அனுப்பும் புலம்பெயர் சொந்தங்களே பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஆகிறார்கள். பல பெற்றோர் தமது பிள்ளைகளை ஐந்தாம் வகுப்பு புலமை பரிசில் பரீட்சைக்குத் தயார் செய்வதற்காக கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் அதன் பின்னர் பல பெற்றோர் பிள்ளைகளின் படிப்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதீத அழுத்தம் காரணமாக பிள்ளைகளும் ஆறாம் வகுப்பிலிருந்து படிப்பில் அக்கறை குறைந்தவர்களாக மாறிவிடுவதாகவும் கூறப்படுகிறது. பாடசாலை சார்ந்த சமூக ஆர்வலர்கள் பின்தங்கிய நிலையில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு பாடசாலை கட்டடத்திலேயே இலவசமாக மாலை வகுப்புகள் நடத்தி உதவ முற்பட்டாலும் அதனை உள்ளூரில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படியாவது குழப்பிவிடுவதாகவும் சொல்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளை பின்தங்கிய பிரதேசங்களிலும் அவதானித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், புலம்பெயர் தமிழர்களால் பல இடங்களில் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வேண்டிய உதவிகள் வழங்கப்பட்டு வருவதும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவர்களின் பங்களிப்பினால் பல இடங்களில் மாணவர்கள் G.C.E. O/L தேர்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறுகிறார்கள். உள்ளூரில் உள்ள சமூக அமைப்புகளும் தம்மால் முடிந்த வகையில் உதவ முன்வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது. உளவியல் தாக்கங்கள் இன்னொரு பக்கம் அளவுக்கதிகமாக பொழுதுபோக்கு விடயங்களில் ஈடுபடுதல்,மதுபாவனை, குழு வன்முறைகளில் ஈடுபடுதல், திரைப்பட மோகம் என்பற்றைக் காரணமாகச் சொல்கிறார்கள். இதிலும் உண்மை இல்லாமல் இல்லை என்று தெரிகிறது. ஆனால் இந்த விடயத்தை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை நீண்டகாலம் போர்சூழலில் வாழ்ந்து வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பல மாணவர்கள் தொடர்ச்சியாக இடப்பெயர்வுக்குள்ளானார்கள். குடும்பங்களில் உயிரிழப்புகளைச் சந்தித்தார்கள். அவயவங்களை இழந்து, குடும்பத்தில் முக்கியமான உறுப்பினர் காணாமல் ஆக்கப்பட்டு எனப் பல துன்பம், துயரங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இப்போது இலங்கையின் வடக்கு கிழக்கில் வசிப்போரில் பெரும்பாலானோர் கடந்த 30 வருடங்களில் இடம்பெற்ற போருடன் இணைந்த வன்முறைக்கு முகம் கொடுத்தவர்களே. வன்முறைக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்தவர்கள் அதனால் ஏற்படக்கூடிய உளவியல் தாக்கத்திலிருந்து வெளிவருவது அவ்வளவு சுலபமல்ல. இவ்வாறான தாகத்துக்கு உள்ளானவர்கள் தகுந்த உளவள ஆலோசனை கிடைக்காவிட்டால் அதன் தாக்கம் நீண்ட காலம் இருக்கக் கூடும். பாதிக்கப்பட்டவர்கள் அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து உளவியல்ரீதியாக தப்புவதற்காக இவ்வாறான வழிமுறைகளை நாடி அதன்பின்னர் அவ்வாறான பழக்கங்களுக்கு அடிமைகளாகவே மாறிவிடுவதும் உண்டு. இந்த சூழ்நிலை வடக்கு, கிழக்கில் உள்ள பல பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கக்கூடும். இவர்களில் எத்தனைபேருக்கு உளவள ஆலோசனை கிடைத்தது என்பது முக்கியமான கேள்வியாகும். தொடர்ச்சியான வன்முறைக்கு உள்ளான சமூகம் ஒரு கட்டத்தில் வன்முறையை வாழ்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ளவதோடு வன்முறையை கையில் எடுக்கவும் பழகிவிடும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். குடும்ப வன்முறைகள், சமூகத்தில் இடம்பெறும் பாலியல் வன்முறைகள், பாலியல் சுரண்டல்கள் போன்றனவும் பல இளையவர்களின் கல்விச் செயற்பாட்டில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாணவர்களுக்கான மாற்று வழிகள் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெறாத மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்காக “உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டம்” 2017ம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டு, 2018 ஆண்டிலிருந்து நடைமுறையில் இருக்கிறது. இதற்கு முன்னரே இலங்கையில் இவ்வாறான மாணவர்களுக்கு தொழிற் தகமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் செயற்பட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அந்தப் பிரதேசத்தில் G.C.E. O/L தேர்வில் சித்திபெறாத மாணவர்களுக்கு விசேடமாகக் கற்பிக்கப்படுகிறது. இத் திட்டத்தின்கீழ் முதல் வருடத்தில் பொதுவான பாடங்களே கற்பிக்கப்படுகின்றன. இரண்டாவது வருடம் மாணவர் தாம் விரும்பும் தொழில்சார் படிப்பை மேற்கொள்ள முடியும். இதில் சில சவால்கள் உள்ளன. ஒன்று நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் தேவை. தற்போதைய தரவுகளின்படி அனைத்து நிலையங்களுக்கும் போதுமான பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லையென்று தெரிகிறது. இந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். இரண்டாவது உண்மையிலேயே மாணவர்களுக்கான சவால். மாணவர்கள் இரண்டாவது வருடத்தில் தாம் தெரிவு செய்யும் துறையைப் பொறுத்து சொந்த மாவட்டத்தை விட்டு வெளியே சென்று தங்கியிருந்து அதற்குரிய தொழிற் பயிற்சி நிலையங்களில் படிக்க வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக மாணிக்கக்கல் வெட்டும் படிப்பைத் தெரிவு செய்யும் யாழ் மாவட்ட மாணவர் ஒருவர் இதற்காக அனுராதபுரம் சென்று தங்கியிருந்து ஒருவருடம் படிக்க வேண்டும். இதற்கு போக்குவரத்து, தங்குமிடம், உணவுக்காக மாணவர்கள் பெரும் பணத்தைச் செலவு செய்ய நேரிடும். இந்தப் பிரச்னைக்கு சில சமூக சேவை நிறுவனங்கள் கைகொடுக்க முன்வந்துள்ளன. ஆனால் அவர்களால் உதவி தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் உதவ முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. இந்த இடைவெளியை புலம்பெயர் சமூகம் தம் உதவிகள் மூலம் நிரப்பமுடியும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அல்லது கல்வி வலயத்திலும் சமூக ஆர்வலர்கள் சேர்ந்து கல்வி நிதியங்களை உருவாக்கி நேர்மையாக செயற்பட்டால் உதவி செய்ய பல புலம்பெயர் தமிழர்கள் தாமாகவே முன்வருவார்கள். நடைமுறையில் உள்ள கல்விக்கான வழிகாட்டல்கள் தற்போது இலங்கையில் மாணவர்களுக்கு எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உதவும் வகையில் மாகாணக் கல்வி அமைச்சுகளின் கீழ் பொருத்தமான கல்விப்பாதையை தெரிவு செய்வதற்கான வழிகாட்டல் அமர்வுகள் நடாத்தப்படுகின்றன. இந்தச் செயலமர்வுகள் மாணவர்களுக்கு G.C.E. O/L பரீட்சையில் சித்தியடையாவிட்டால் மாணவர்களுக்கு உள்ள மாற்றுக் கல்வி முறைகள் தொடர்பான அறிவூட்டல் வழங்கப்படுகிறது. இது தவிர மாணவர்கள் மத்தியில்போதைபொருள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த செயலமர்வுகள் பயன்படுகின்றன. வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் மாணவர்கள் பரீட்சை எடுக்க முன்னர் பெற்றோருக்கே மாற்றுக் கல்விப்பாதை தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மாணவர்களுக்கு இந்தத் தகவல்கள் முன்னதாகவே வழங்கப்பட்டால் மாணவர்கள் சிலர் பரீட்சைக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள் என்ற அச்சம் அதிகாரிகள் மத்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபற்றிய முழுவிபரம் கிடைக்கவில்லை. யாழ் மாவட்டத்தில் நல்ல பெறுபேறு பெற்ற மாணவர்கள் சிலரே உயர்கல்வியைத் தொடராது தமது சுயவிருப்பினால் உல்லாசத் துறை கல்வியை விரும்பித் தெரிவு செய்வதாகவும் அறிய முடிந்தது. இது பாரம்பரிய கல்வி முறையையே சரியான முறையென நம்பும் கல்விமான்களுக்கும் அதிகாரிகளுக்கும் உவப்பான செய்தியாக இல்லாதபோதிலும், மாணவர்கள் தமது எதிர்காலம் தொடர்பாக சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. மத்திய மாகாணத்தில் இந்த செயலமர்வுகள் மாணவர்களுக்கே நேரடியாக செய்யப்படுவதாகத் தெரிகிறது. மத்திய மாகாணத்தில் மாணவர்களுக்கு போதை, மதுபாவனைப் பழக்கம் ஏற்படாது தடுப்பதற்காகவும் இந்த வழிகாட்டல்ச் செயலமர்வுகள் உதவுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில் இது ஆரோக்கியமான விடயம் என்றே நினைக்கிறேன். அதேநேரம் மாணவர்களுக்கு இவ்வாறான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதற்கு மேலதிகமாக பரீட்சையின் பின்னர், சித்தியடையாத மாணவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். கடந்த காலங்களில் பரீட்சை முடிவுகளைத் தொடர்ந்து சில மாணவர்கள் தவறான முடிவுகளை எடுத்தது யாவரும் அறிந்ததே. இதிலும் சவால்கள் இல்லாமல் இல்லை. மாணவர்களுக்கு அவர்களின் எதிர்கால தொழில் வழிகாட்டல் சேவை வழங்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுகிறது. மறுபக்கத்தில் இந்த ஆசிரியர்கள் பலருக்கு தொழிற்சந்தை தொடர்பான முழுமையான அறிவு போதாது என்று தேசிய மனிதவள மற்றும் தொழில் கொள்கைக்கான வலைதளத்தில் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சேவை சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் வளர்ச்சி – கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் தென் மாகாணத்தின் பெறுபேறுகள் கடந்த சில வருடங்களில் சிறப்பாக அமைந்து வருவதை பலரும் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்கள் கடந்த ஐந்து வருடங்களாக மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றன. கடந்த மூன்று வருடங்களாக இவை இரண்டுமே முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. இது தற்செயலாக கிடைத்த வெற்றியில்லை. மிகச் சிறந்த திட்டமிடல், அதை முறையாக நடைமுறைப்படுத்தல் இரண்டுமே இந்த வெற்றியின் பின்னால் இருக்கின்றன. தென்மாகாண கல்வியமைச்சு பின்வரும் விடயங்களைக் கடுமையாக பின்பற்றியது. கோட்டக் கல்வியதிகாரிகளாக இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் திறமை அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு உதவியாக திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பாடசாலை, மாணவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டியும் தரவுகளை ஆய்வு செய்தும் அதிகாரிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கிரார்கள். மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரம் கோட்டக் கல்வி அலுவலக மட்டத்திற்கு பரவலாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சில முடிவுகளை எடுப்பதற்கு கோட்டக் கல்வி அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. பின்தங்கிய பிரதேசப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அத்துடன் ஆசிரியர்கள் இடமாற்றம் சட்டப்படி நடைபெற்றது. ஒரு ஆசிரியர் அடுத்த பதினைந்து வருடத்திற்கு எந்த பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்பது முதலிலேயே தீர்மானிக்கப்பட்டது. அது ஆசிரியருக்கும் அறிவிக்கப்பட்டது. இது ஒரு ஆசிரியர் தன்னை மனதளவில் இடமாற்றத்திற்கு தயார்படுத்திக் கொள்ள உதவும். இந்த மூன்று விடயங்களும்தான் தென்மாகாணத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. வடமாகாண அதிகாரிகள் தென்மாகாணத்தின் சிறந்த நடைமுறைகள் பற்றிக் கற்றுக்கொள்ளச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் சென்று வந்தவர்கள் அங்கு கற்ற நல்ல விடயங்களை எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தினார்கள் என்பது நிச்சயம் அவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. முடிவுரை கடந்த பதினைந்து வருட தரவுகளையும் நாம் இதுவரை கலந்துரையாடிய விடயங்களையும் வைத்துப் பார்க்கும்போது 2005 இலிருந்து அனைத்து மாவட்டங்களும் மாகாணங்களும் ஏற்ற இறக்கங்களோடு வளர்ச்சிப் போக்கினையே காட்டி வருகின்றன. ஆனால் சில மாவட்டங்களின் வளர்ச்சிப்போக்கு மெதுவானதாகவும் சிலவற்றின் வளர்ச்சி வேகமானதாகவும் உள்ளது. இந்த வேறுபாடு மாகாணப் பெறுபேறுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாகாண மட்டத்தில் கடந்த பதினைந்து வருடத்தில் ஊவா, வடமத்திய, தெற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்கள் நல்ல வளர்ச்சியைக் காட்டுகின்றன. கிழக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் ஒப்பீட்டளவில் சராசரி வளர்ச்சியையும் வடமாகாணம் மற்றும் மேல் மாகாணம் குறைவான வளர்ச்சி வேகத்தையுமே காட்டுகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் ஒன்பது மாவட்டங்களின் பெறுபேறுகளை 2005 ஆண்டின் பெறுபேறுகளை அடிப்படை அளவீடாகக் கொண்டு ஒப்பிடும்போது கிளிநொச்சி மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் சிறந்த வளர்ச்சிப் போக்கினையும், முல்லைத்தீவு, அம்பாறை, மன்னார் மாவட்டங்கள் அவற்றைவிடக் குறைவான வளர்ச்சி வேகத்தையும் கொண்டிருக்கின்றன. யாழ் மாவட்டமும் வவுனியா மாவட்டமும் மிகக் குறைந்த வளர்ச்சி வேகத்தைக் கொண்டிருக்கின்றன. இந்தக் காரணங்களாலேயே தொண்ணூறுகளுக்கு முன்னர் பெற்ற பெறுபேறுகளை நியமங்களாகக் கொண்டு வடமாகாணம் கல்வியில் பின்தங்கி விட்டது என்ற அபிப்பிராயத்துக்கு பலரும் வந்திருப்பார்கள் என்று ஊகிக்க முடிகிறது. இவ்வாறு அபிப்பிராயம் ஏற்படுவதற்கு வடமாகாணத்தில் உள்ள சில கல்வி வலயங்களின் மிகக் குறைவான பெறுபேறுகளும் காரணமாக இருக்கலாம். எனது அபிப்பிராயத்தின்படி இலங்கை அரசின் கல்விக் கொள்கைகள் நடைமுறைப்படும் முறை தொடர்பாக சமூகங்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கடந்த 35 வருடங்களில் இலங்கையின் பல பகுதிகளிலும் உயர் கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டதும் பின்தங்கிய மாவட்ட மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதும் திறந்த பல்கலைக் கழகங்கள், கல்வியியல் கல்லூரிகள் பல நிறுவப்பட்டதும் பொதுவான முன்னேற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும். அவ்வாறான பின்தங்கிய பிரதேசத்தில் பல பட்டதாரிகளும் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்களும் உருவாக்கப்பட்டதன் பெறுபேறுதான் இவ்வாறான வளர்ச்சி என்றும் கொள்ளலாம். அதைவிட ஒவ்வொரு மாகாண கல்வி அமைச்சும் திட்டமிடும் முறையும் அவற்றை நடைமுறைப்படுத்தப்படும் முறையும் கல்விப் பெறுபேறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கையில் கடந்த பதினைந்து வருட சராசரி தேர்ச்சி வீதம் (உயர்கல்விக்குத் தகுதி பெறல்) 63% ஆகும். கடந்த பதினைந்து வருடத்தில் 4.26 மில்லியன் மாணவர்கள் G.C.E. O/L பரீட்சை எழுதியிருக்கிறார்கள். அவர்களுள் 37% வீதமானோர் அதாவது 1.58 மில்லியன் மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி பெறவில்லை. இத்தனைபேர் தோற்றுப் போனார்கள் என்றால் தவறு எங்கே இருக்கிறது? இதனைச் சரிசெய்ய வேண்டியவர்கள் அரசாங்கமா? ஆசிரியர் சமூகமா அல்லது பெற்றோரா? இதனையே நாம் சிந்திக்க வேண்டும். தென்மாகாணம் ஏனைய மாகாணங்களுக்கு நல்ல ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் கல்வி அமைச்சும் கடந்த இரண்டாண்டுகளாக G.C.E. O/Lபரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு மாற்றுக் கல்விப் பாதையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கல்வி முன்னேற்றம் வடமாகாண கல்வியமைச்சு, அதிபர்கள், ஆசியர்கள் மற்றும் பெற்றோரின் கைகளிலேயே தங்கியுள்ளது. புலம்பெயர் சமூகமும் கைகொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. நாம் ஒரு மாகாணத்திற்காக அல்லது மாவட்டத்திற்காக மட்டும் வருந்துவதை விடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்குமாக சிந்திப்பது உண்மையிலேயே முழுநாட்டிற்கும் நன்மை தருவதாக அமையும். பரிந்துரைகள் சிறப்பாகச் செயற்படும் மாகாணங்களின் நல்ல அம்சங்கள் ஏனைய மாகாணங்களால் பின்பற்றப்பட வேண்டும். மாகாண சபை கல்வியமைச்சு அதிகாரங்களை கோட்ட மட்டத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும். திறமை அடிப்படையிலேயே நியமனங்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படவேண்டும். ஆசிரியர் நியமனங்கள், இடமாற்றங்கள் ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டே செய்யப்பட வேண்டும். பின்தங்கிய பிரதேசங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். முடிந்தவரைக்கும் ஆசிரியர் வசிக்கும் மாவட்டத்திற்குள்ளேயே இடமாற்றம் செய்வது ஆசிரியருக்கும் இணக்கமானதாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். வலய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் அதிகாரிகளும் பொது அமைப்புக்களும் சிறு வகுப்பிலிருந்தே பின்னடைவான மாணவர்களை இனங்கண்டு ஊக்குவிக்கும் வகையிலான கற்பித்தல் முறைகளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு அந்தந்த கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களின் பங்களிப்பையும் தொண்டு அடிப்படையில் பெற்றுக்கொள்ள முடியும். சில கிராமங்களில் ஏற்கனவே இளைஞர்கள் சேர்ந்து உதவுவதாகவும் தெரிகிறது. பெறுபேறுகளில் பின்தங்கிய வலயங்களில் தொடர்ச்சியாக முறையான ஆய்வுகள் வலய, கோட்டக் கல்வி அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த ஆய்வறிக்கைகளில் கண்டறியப்படும் விடயங்கள் கல்வித்திட்டமிடலில் உள்வாங்கப்பட வேண்டும். இந்த ஆய்வினை அலுவலகர்கள் மூலமோ பல்கலைக் கழகங்களின் பங்களிப்புடனோ செய்யலாம். ஒவ்வொரு வருடமும் இடைவிலகியவர்கள் உட்பட மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள் இந்தக் கல்வி முறையினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் நிச்சயம் கல்விக் கொள்கையில் மேலும் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். பரீட்சையில் நன்கு பிரகாசிக்க முடியாத மாணவர்களுக்காக மாற்று மதிப்பீட்டு முறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தொடர்ச்சியான மதிப்பீடு, ஒப்படை போன்ற முறைகளைப்பற்றி கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்கலாம். இது ஒன்றும் இலங்கைக்கு புதியதல்ல. 1986 இல் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டே வருடத்தில் பல அழுத்தங்களால் கைவிடப்பட்ட முறைதான் இது. பொதுத் தேர்வில் சித்திபெறாத மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி வழிமுறையான “உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித் திட்டம்” முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். போதுமான அளவு ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டு சிறந்த சேவை வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும். இதற்காக நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுக்கள் சிறப்பாக செயற்படுவதற்குரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி தொடர்பாக வழிகாட்டல்கள் வழங்கும் ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் தேவையான பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இதில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களும் நிரப்பப்பட வேண்டும்.தொழிற்சந்தை தொடர்பான அறிவூட்டல்கள் காலத்திற்குக் காலம் வழங்கப்படவேண்டும். இதற்கு தனியார் துறையுடனான கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் கல்விக்கான வழிகாட்டல்களுடன் பாடசாலைகளில் உளவள ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இது பரீட்சைத் தோல்வியின் பின்னர் தவறான முடிவுகளை எடுக்கும், தவறான பாதையில் செல்லும் மாணவர்களைத் தடுக்க உதவும். -------------------------------------- Appendix 1: Students qualified for A/L from 2005 to 2019 Island-wide – Provincial and National average. Appendix 2: Students failed in all subjects from 2005 to 2019 Islandwide – Provincial and National average. Appendix 3: Students qualified for A/L – Districts of North, East and Nuwara Eliya District: 2005 to 2019 (in percentage). Appendix 4: Students qualified for A/L and failed in all subjects: Districts of North, East and Nuwara Eliya District: 2005 to 2019 (in percentage). Appendix 5: Students qualified for G.C.E. A/L in last five years (2015 - 2019) in Districts of North, East and Nuwara Eliya. Appendix 6: Districts G.C.E. O/L ranking based on percentage of students qualified for G.C.E. A/L from 2005 - 2019). https://akkampakkam2.blogspot.com/2020/05/gce-ol.html?m=1
 25. உதிரம் - அனோஜன் பாலகிருஷ்ணன் *** “ஹாய் ஹரி, எல்லாம் நன்றாகச் செல்கிறதா?” “இப்போதைக்கு ஒன்றும் சிக்கலில்லை” என்றேன். கை குலுக்கிவிட்டு அவர் புன்னகைக்குப் புன்னகைத்தேன். முப்பது வயதுக்குள் இருக்கக்கூடிய ஒடிசலான உடல் தோற்றம் கொண்ட பெண்மணி. கோதுமை நிறம் கொண்ட தேகத்தில் மணிக்கட்டு வரை நீள்அங்கி அணிந்திருக்க கைகள் மட்டும் வெளித்தெரிந்தன. அவர் சாய்ந்து பார்த்த விதத்தில் ஒரு மனநல மருத்துவருக்கு உரிய தொழில் நேர்த்தியிருந்தது. பொன்னிறமான முடியை வாரிக் கொண்டையாக முடிந்திருந்தார். வெண்ணிற சட்டகங்கள் இடப்பட்ட மூக்குக்கண்ணாடி விளிம்பில் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து துடித்தது. அந்த அறை நாலடிக்கு குறைவான அகலத்தில் இருந்தது. பழுப்பு நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்ட சுவரில், கடற்கரையில் சிறுவன் ஒருவன் தனியே திகைத்து நடப்பது போல ஓவியம் மாட்டப்பட்டிருந்தது. முதல் தடவையாக பல்கலைக்கழக மனநல ஆலோசனைப் பிரிவுக்கு வருகிறேன். பெரும்பாலும் மாணவர்கள் மன அழுத்தம், தனிப்பட்டப் பிரச்சினைகளுக்கு உள சிகிச்சைக்காக இங்கே வருவார்கள். கூம்பு வடிவ கட்டடத்தின் தோற்றமே உளச்சிகிச்சை மையத்தை வித்தியாசமாக வளாகத்தில் காட்டியது. எத்தனையோ முறை இக்கட்டடத்தைக் கடந்து சென்று இருக்கிறேன். இன்றுதான் முதன்முதலாக இணையத்தில் சிகிச்சைக்கான அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். வரவேற்பு மையத்தில் கொடுக்கப்பட்ட படிவத்திலுள்ள மூன்று பக்கங்களில் மனநலம் பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளித்திருந்தேன். சீரான நித்திரை வருகிறதா, கவலையாக உள்ளதா, உடலை தன்விருப்பாக துன்புறுத்தத் தோன்றுகிறதா போன்ற கேள்விகள், அதற்கான வீரியத்தின் அளவை இலக்கங்களில் வளையமிட வேண்டும்; சில சொற்களில் விபரிக்கவும் வேண்டும். என் கோணலான கையெழுத்தில் நிரப்பிய அந்தப் படிவத்தை புரட்டிப் பார்த்துவிட்டு மேசையில் மடிக்கணினி அருகே வைத்தார். “என்னுடையை பெயர் கிளாரா ஸ்பொளடிங். என்.எஹ்.எஸ் மனநல மருத்துவராக இங்கே வாரத்துக்கு இரண்டு நாட்கள் பணிபுரிகிறேன். சரி ஹரி, நீங்கள் பல்கலைக்கழகத்தில் என்ன துறை, படிப்பெல்லாம் எப்படிச் செல்கிறது?” “மருத்துவப் பீடம்; படிப்பு நன்றாகச் செல்கிறது” “நல்லது. சரி உங்களுக்கு எந்த வகையில் நான் உதவ முடியும்.? உங்களது பிரச்சினையை மனம் விட்டுச் சொல்லலாம்,” “எனக்கு சமீப காலமாக அதிகமாகக் கோபம் வருகிறது,” “எதனால், குறிப்பாக எவர் மீது?” “எதனால் என்று சொல்லத் தெரியவில்லை. ஆனால் அம்மா மீது வருகிறது,” “அப்படி அம்மா மீது என்ன கோபம்?” “ஹ்ம்ம்…” “ஹேய் நீங்கள் என்னிடம் மனம்விட்டுப் பேசலாம். மிக இளையவர் நீங்கள். இந்த வயதில் எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இது இயல்பானது!” மருத்துவர் என்னை இலகுவாக்கச் சொற்களை அலங்கரித்து விரித்துத் தடவிச் சொன்னாலும் அங்கிருக்கும் நம்பகத்தன்மை என்னை ஈர்த்தது. மெல்ல உடலைச் சாய்த்து இலகுவானேன். மருத்துவ பீட மாணவன் ஆகையால் எனக்கு இங்கிருக்கும் நடைமுறையும், நுட்பமான நடிப்பும் நன்கு தெரியும். இருந்தும் அதை விரும்பினேன். என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க விரும்பினேன். “எங்கள் குடும்பம் மிக விசித்திரமானது,” “குடும்பங்களுக்கு தனித்தனி இயல்புகள் இருக்கும். இது பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்கள் வாழும் நாடு அல்லவா?” “உண்மைதான், சில விடயங்களில் அடிப்படையே தவறி இருந்தால் கஷ்டம் இல்லையா?” “புரியவில்லை ஹரி, சரி நீங்கள் சொல்ல விரும்புவதை நண்பியிடம் சொல்வது போல சுதந்திரமாக என்னிடம் சொல்லலாம்” கண்ணாடி சட்டகத்திற்குள் கிளாராவின் கண்கள் விரிந்தன. “பெரும்பாலான நாட்களில் பாடசாலை முடிந்து வீட்டுக்கு என் இளைய சகோதரியுடன் வரும்போது அப்பா தூக்கி எறிந்த பழக்கூடையிலிருந்து சிதறிய பழங்கள் தரையில் அனேகமாக வீழ்ந்திருக்கும். ஒவ்வொரு சண்டையின் போதும் அப்பா தனது கட்டுப்படுத்த முடியாத மூர்க்கத்தை வெளிக்காட்ட அதைச் செய்வார். ஜன்னலை நோக்கிக் கைக்கு அகப்படும் பொருட்களை மேசையிலிருந்து தூக்கி வீசுவார். அவை பட்டுச் சிதறி தரையெங்கும் பரவும். அப்பா சென்றவுடன் அம்மா அவற்றைப் பொறுமையாகப் பொறுக்கி, மேசைத்துணி விரிப்பைக் கசங்கல் இல்லாமல் சீராக விரித்து எடுத்து வைப்பார். சிதைந்த பழங்களையும், நொறுங்கிய கோப்பைகளையும் அப்புறப்படுத்தி மீண்டும் சளைக்காமல் அலங்கரிப்பார். அம்மாவை அப்பா அடித்ததை சிறுவயதில் பலமுறை பார்த்து இருக்கிறேன். அப்போதெல்லாம் அம்மாவின் விழிகளில் குமிழ் கொள்ளும் விழிநீரைப் பார்க்க முடியாத வண்ணம் கேசம் கலைந்து விழிகளை மறைந்திருக்கும். என் பதின்ம வயதில் அப்பா ஒருமுறை அம்மாவை அடித்துத் தரையில் வீழ்த்தி விட்டார். நான் கோபம் கொண்டு அப்பாவின் இடுப்பைப் பிடித்து இழுத்துத் தள்ளிவிட்டேன். நிலை தடுமாறி பிடித்துக்கொள்ள ஏதும் இன்றி சுவரில் சாய்ந்து ஒற்றைக் கையை ஊன்றி நின்று என்னைப் பார்த்தார். விழிகளில் அதிர்ச்சி இருந்தாலும் அவசரமாக அவற்றை கோபமாக மாற்றினார். நான் அம்மாவை அணைத்துக் கொண்டு “இப்போது நீங்கள் வீட்டை விட்டு உடனே கிளம்புங்கள். அம்மாவை மீண்டும் அடித்தால் பொலிசாரை அழைத்து வரச்சொல்வேன்” என்றேன். அப்பா அதிர்வுகள் உடலில் படர்ந்து செல்ல என்னைப் பார்த்தார். அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. திரண்ட கோபத்தை அள்ளியெடுத்து அம்மா மீது காட்டக் கையை ஓங்கினார். எனக்குள் மூர்க்கம் எங்கிருந்தோ சட்டென்று வந்தது. எனது இடது காலால் அவர் காலை தள்ளி, நெஞ்சைப் பிடித்து அழுத்தி சுவருடன் சாய்த்தேன். நிலை தடுமாறி விழுந்தார். விழப்போன அவரை என் கைகள் தாங்கச் சென்றன, இருந்தும் என்னால் பிடிக்க முடியவில்லை. என் கண்களைப் பார்க்க அவர் கண்கள் தடுமாறின. அவர் விழுந்தவுடன் அவர் மீது அச்சம் தான் கிளர்ந்தது. அப்பாவின் எதிர்வினைக்காகப் பயந்தேன். ஆனால், அவர் கண்களிலிருந்த திகைப்பு என்னை சமாதானப்படுத்தியது. கொஞ்சம் திருப்தி. கொடூரமான திருப்தியது. உள்ளூர மகிழ்ந்தேன். அதுவே எனக்குப் பெரிய தெம்பைக் கொடுத்தது. தரையில் வீழ்ந்திருந்த அம்மா எழுந்திருக்கவில்லை. வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஒரு பக்கம் சாய்ந்தார். முகம் தரையின் பக்கம் திரும்பியிருந்தது. வலி பொறுக்க முடியாமல் அழுதிருக்க வேண்டும். அம்மாவின் தேகம் அதிர்ந்தவாறிருந்தது. இடுப்பின் பின்பகுதியிலிருந்து இரத்தம் கசிந்து பரவியது. அந்த இரத்த(த்)தின் அர்த்தத்தை விளங்கிக் கொள்ளும் வயதில்லை அப்போது. ஆனால் மிகுந்த ஒவ்வாமையை அந்த இரத்தம் கொடுத்தது. அப்பா ஒரு கணம் திகைத்து பின்னர் சுதாகரிந்து அம்மாவை இருகரம் கொண்டு தூக்கினார். அம்மா எதுவும் பேசாமல் வயிற்றை மட்டும் பிடித்துக் கொண்டிருந்தார். “இன்று அந்த நாட்கள் என்று ஏன் முன்னமே சொல்லவில்லை?”, என்பது மட்டுமே அப்பாவிடம் இருந்து வந்த வார்த்தைகளாக இருந்தன. அன்றிலிருந்து அப்பா அம்மாவை அடிப்பது வெகுவாகக் குறைந்து இல்லையே என்று சொல்லும் அளவுக்குச் சென்றுவிட்டது. எனக்கும் அப்பாவுக்கும் இடையே விரிதல் சன்னமாக வளர்ந்து இட்டு நிரப்ப முடியாதவாறு பிளந்து சென்றது. அதை இருவரும் உணர்ந்தோம். மின்கலத்தின் இருமுனை போல ஒவ்வொரு திக்கில் இருந்தோம். அம்மாவும், அப்பாவும் இலங்கையிலிருந்து அகதிகளாக இங்கிலாந்துக்கு வந்து குடியுரிமை பெற்றவர்கள். நானும் எனது இளவயது சகோதரியும் இங்கேதான் பிறந்து வளர்ந்தோம். அப்பா முரட்டு மனிதர். என்ன கோபம் என்றாலும் அம்மா மீதுதான் காட்டுவார். அம்மா எல்லாவற்றுக்கும் அப்பாவுக்கு பயப்படுவார். எதிர்த்து இரண்டு வார்த்தைகள் பேசக்கூட திராணியும் சத்தும் இருக்காது. ஆரம்பத்தில் அம்மாவின் பயந்த சுபாபம் மீது இருந்த இரக்கம் எனக்கு காலப்போக்கில் எரிச்சலைத் தரத் தொடங்கியது. எதிர்த்துப் பேசவும் குரலை உயர்த்திக் கதைக்கவும் அம்மாவுக்கு சொல்லிச் சொல்லியே எனக்கு அலுத்து விட்டது. என்னுடைய பாடசாலை நண்பர்களின் பெற்றோர்களைப் பார்க்கும்போது எனக்குள் பொறாமையும் கவலையும் பரவும். எனக்கு இப்படிப் பெற்றோர்கள் இல்லையே என்று தோன்றும். அப்பா தேவைப்பட்டால் கோட் ஷூட் அணிவார். ஆங்கிலத்தில் உரையாடுவார். தபால் நிலையத்துடன் சேர்ந்து இயங்கும் தனது சிறிய பல்பொருள் அங்காடிக் கடையை இரண்டு இலங்கையைச் சேர்ந்த ஊழியர்களை வைத்து திறம்பட நடந்துவார். ஆனால் அவரது மூளையின் பல பகுதி இந்த நாட்டுடன் ஒன்ற முடியாதவை. என்னையும் சகோதரியையும் தனது இருண்ட மூளையின் பாதிப்பகுதியிலும் இங்கிலாந்தில் ஊன்றிய மிச்சப்பகுதியிலும் வைக்க முயன்று தடுமாறிப் போவார். என்னுடையை பதினான்காவது வயதிலிருந்து என் போக்கை எனது இஷ்டப்படி அமைக்கத் தொடங்கியபோது அப்பா அடைந்த பதற்றம் என்னை இரசிக்கச் செய்தது.” “உங்கள் மீது கோபம் வந்தால், அப்பா உங்களை அடிப்பது இல்லையா?” “மிகச்சிறு வயதில் அடித்திருக்கிறார். பிற்பாடு குரலை உயர்த்திப் பேசுவார். என் மீது எழும் கோபத்தை அம்மா மீதுதான் வன்முறையாகக் காட்டுவார்” “மிகச் சிறுவயதில் கூட அப்பா உங்கள் மீது அன்பாக இருந்தது இல்லையா?” “ம்ம்… இருந்தார். அப்பா என்னையும் என் சகோதரியையும் அன்பில்லாமல் வளர்த்தார் என்று சொல்ல இயலாது. அவர் அன்பை வெளிக்காட்டும் விதம் நிறைய பரிசுப் பொருட்களை வாங்கித் தருவதூடாக வெளிப்படும். சிறுவயதில் கோபமாகப் பேசினாலோ அல்லது மூர்க்கம் கொண்டு அடித்தாலோ பின்னர் அதற்காக வருத்தப்படுவார். வருத்தப்பட்டு இருக்கிறார். ஆனால், அதை அம்மாவின் ஊடாகவே அறிய நேரும். அப்பா தன்னிடம் வருத்தப்பட்டார் என்று அம்மாதான் சொல்வார். அப்போது அப்பாவின் மீது வாஞ்சை பிறக்கும். பின்னர் பொடிப்பொடியாக உடைந்து விடும்” நான் சொல்லச் சொல்ல கிளாரா சில குறிப்புகளை நோட்டில் வேகமாக குறித்துக் கொண்டிருந்தார். “கடைசியாக எப்போது அப்பா உங்கள் மீதும் கோபம் கொண்டார்?” “மூன்று வாரங்கள் முன்னர்” “எதற்காக என்று தெரிந்து கொள்ளலாமா?” “அன்று அப்பா என் மீது கோபம் கொண்டது எனது நண்பியை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டேன் என்பதல்லாமல் அவளை எனது அறைக்குக் கூட்டிச்சென்று பேசி(க்)கொண்டிருந்தேன் என்பதற்காக. என்னுடன் வெளிப்படையாக எரிந்து விழாமல் அம்மா மீது என் மீதான சினத்தை காட்டித் தன் இயலாமையை தீர்த்துக் கொள்கிறார். இத்தனைக்கும் என் சிநேகிதி மிக இனிமையும், பண்பும் நிறைந்தவள். என்னுடன் பல்கலைக்கழகத்தில் படிப்பவள்” “அப்பா மீதுதானே உங்களுக்கு கோபம் வரவேண்டும். எதற்கு அம்மா மீது வருகிறது?” “அதைத்தான் என்னால் யாருடனும் பகிர முடியவில்லை. மிகுந்த தொந்தரவைத் தருகிறது” “நீங்கள் உங்கள் பிரச்சினையைச் சொல்வதில் எதற்கும் தயங்கத் தேவையில்லை ஹரி. நான் உங்களுக்கு உதவவே இருக்கிறேன். என்னால் முழுமையாக உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் ஒரு மருத்துவ மாணவர், உங்களுக்குத் தெரியும் இங்கே நம்பிக்கையும், மனம்விட்டுப் பேசுவதும் அவசியமானது. நான் இத்துறையில் முறையாகப் படித்தவள். இவ்வாறான பல்வேறு சிக்கல் கொண்ட பல மாணவர்ளை இங்கே சந்தித்துச் சிகிச்சை அளித்திருக்கிறேன். உளவியல் அழுத்தங்களுக்குள்ளிருந்து மீட்டிருக்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பலாம். சொல்லுங்கள்” “ஒரு குறுந்தகட்டால் நான் நிலையிழந்து விட்டேன்” “குறுந்தகடு?” “ஆம், அப்பாவின் அறையினுள் இருந்து அந்த குறுந்தகட்டைக் கண்டுபிடித்தது மிகத் தற்செயல். பொதுவாக நான் அப்பாவின் அறைக்குள் நுழைவதில்லை. சிறுவயதில் அடிக்கடி சென்று இருக்கிறேன். வளர்ந்த பின்னர் செல்வதில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை. ஏனோ செல்லப் பிடிக்கவில்லை. அப்பாவுடன் பேச்சுக் குறைந்த பின்னர் ஒருநாள் அந்த அறைக்குள் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. கதவு பூட்டி இருக்கவில்லை. உள்ளே சென்றேன். விதவிதமாக பல பழைய காலணிகள், முன்சில்லு கழட்டப்பட்ட நிலையில் நீலநிறத்தில் சைக்கிள் ஒன்று, அதன் மேல் சில ஆடைகள். தரையெங்கும் காகிதங்களும் கடிதாசிப் பெட்டிக்களுமாக இருந்தன. அப்பாவின் மனம் போல், பிடிவாதம் போல் அந்த அறையிருந்தது. மெல்ல மெல்ல அறைக்குள் சென்றேன். ஒழுங்கின்மையாகவிருந்த அந்த அறையில் அப்பா தங்குவதோ உறங்குவதோ இல்லை. அதன் அருகே தள்ளியிருக்கும் அறை இன்னும் விலாசமானது. அம்மாவும், அப்பாவும் அங்கு தான் உறங்கச் செல்வார்கள். அம்மா இருப்பதாலோ என்னவோ அந்த அறை ஒழுங்காகத் தூய்மையாக இருக்கும். ஆனால், அவர்கள் தங்கியிருக்கும் தூய்மையான அறைக்குள் நான் செல்வதில்லை. மீண்டும் மீண்டும் அப்பாவின் தனியறைக்குள் நுழைந்தேன். பழைய ஒளிப்படக் கருவிகள், ஒளிப்பட நாடாக்கள் என்று பல பாவனையில் இல்லாத உபகரணங்களை பெட்டிகளுக்குள் தடித்த வயர்கள் தெரிய புதையுண்டு இருந்தன. அவை எல்லாம் முன்னர் அப்பா நடாத்திய ஒளிப்படப் பதிவெடுக்கும் நிறுவனத்தின் பழைய உபகரணப் பொருட்கள். அங்கிருந்த புத்தகத்திற்குள் அதைக் கண்டுபிடித்தேன். தூய்மையான மெல்லிய பேழைக்குள் வைக்கப்பட்ட குறுந்தகடு. அதனைப் புரட்டிப் பார்த்தேன். எந்தவிதக் கீறலும் அல்லாமல் பாவிக்கும் நிலையில் இருந்தது. கணினியில் அதனைச் செலுத்தி இயக்கிப்பார்க்கும் எண்ணம் எழுந்தது. பின்னர் அதைப்பற்றி முற்றாக மறந்து விட்டிருந்தேன். சில நாட்களின் பின்னர் கணினியை இயக்கி குறுந்தகட்டைச் செலுத்தி இயக்கிப் பார்க்கும் உவகை எழுந்தது. என்னுடைய கணினியில் செலுத்தி இயக்கிப் பார்த்தேன். அப்பாவினதும், அம்மாவினதும் பழைய புகைப்படங்கள் இருந்தன. ஒவ்வொன்றையும் தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். புன்னகை விரிய சட்டை தொளதொளக்க அப்பா நிற்க அருகில் அம்மா காதில் தோடு மின்ன சேலையில் இருக்கும் புகைப்படங்கள், என்னுடையதும் இளைய சகோதரியினதும் சிறுவயதுப் புகைப்படங்கள், விளையாட்டுப் பொம்மைகள் சூழ அப்பாவின் மடியிலும் தரையிலும் நாங்கள் இருக்கும் படங்கள். என்னை மறந்து ஆனந்தமாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவையெல்லாம் ஆல்பங்களில் இல்லாத படங்கள். சில படங்கள் இலங்கையில் எடுக்கப்பட்டவை. நந்தியாவட்டை வெள்ளைப் பூக்கள் பூத்த மரங்களின் கீழேயும் கிணற்றுக்கட்டுகள் அருகேயும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அவற்றை எல்லாம் அப்பா நினைவிலிருந்து அழியாமல் செல்ல ஆவணப்படுத்தியிருந்தார் போல.” அங்கே எனது பேச்சை நிறுத்தினேன். தொடருங்கள் என்ற ரீதியில் கிளாரா என்னை ஊற்றுப் பார்த்தார். நான் அவர் விழிகளைத் தவிர்த்து விட்டு தொடர்ந்தேன். “அப்போதுதான் அந்தக் கோப்பில் படங்களுடன் ஒரு ஒளிநாடாவும் பதியப்பட்டு இருந்ததைக் கவனித்தேன். சாதாரணமாக அதனை இயக்கினேன். அப்போது எனக்குள் ஒரு அதிர்வு எழுந்தது. அதுவொரு பாலியல் படம். நிர்வாணமாக ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் காணொளி. இது எப்படி இதற்குள் என்ற ஆச்சரியமும் திகைப்புமாக உறைந்து போனேன். நிலையாக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஒளிப்படக் கருவியால் படம்பிடிக்கப்பட்டு இருந்தது. ஆணுக்கு மேல் பெண்ணொருவர் இயங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அதைக் கண்டுபிடித்தேன். அந்த ஆண் எனது தந்தை. எனது உடல் சிலிர்த்தது. அந்தப் பெண் யார் என்று பார்த்தபோது எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. அது எனது அம்மாதான். அம்மாவின் சாயலிலுள்ள வேறு பெண்ணா என்று திரும்பவும் நோக்கினேன். இல்லை என் அம்மாவே தான். எனது அம்மா வெறிகொண்டு தந்தை மீது இயங்கிக் கொண்டிருந்தார். இதுவரை நான் புரிந்து வைத்திருந்த அம்மா அல்ல திரையில் நான் பார்ப்பது. முற்றிலும் ஆக்ரோஷமாக தனது ஆக்கிரமிப்பில் ஓர் ஆணைப் பந்தாடிக் கொண்டிருக்கும் பெண்ணாகத் தெரிந்தார். நிஜமாகவே அம்மாவைப் பார்த்து பயப்பட்டேன். ஒன்றரை நிமிடங்கள் இயங்கக்கூடிய அந்தக் காணொளியை முழுவதுமாகப் பார்வையிட்டேன். மரக்கட்டை போல என் அப்பா படுக்கையில் படுத்தபடியே இருந்தார். அவரிலிருந்து எந்தவிதமான அசைவும் இருக்கவில்லை. இறந்த பிணம் போலவே இருந்தார். இருவரையும் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அன்று முழுக்க யோசிக்கவே திராணியற்று எனது படுக்கையில் படுத்திருந்து அந்தக் காணொளி பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஆக்ரோஷமான அம்மாவின் உடல் மொழி என்னை அரித்துக் கொண்டிருந்தது. துணுக்குற்றுத் தூக்கம் கொள்ளாமல் விழித்து எழுந்தேன். தேகம் முழுவதும் கொதித்து உருகி வழிந்தேன். நிலை கொள்ளாமல் தவித்தேன். மீள மீள என் அப்பாவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அவர் அமைதியாக நிலம் போல் இருக்க, புயலில் அறைபட்டு ஆடும் மரம்போல் இயங்கிக் கொண்டிருந்த அம்மாவின் சித்திரம் என்னைப் புரிந்துகொள்ள முடியாத வெளிக்குள் தள்ளியது. நான் ஏன் தொந்தரவுக்குள் உள்ளாக வேண்டும். காணக்கூடாத காட்சியைக் கண்ணுற்றேன் என்றா அல்லது அம்மா மீதிருந்த விம்பம் மாறிவிட்டது என்றா எனக்குத் தெரியவில்லை. உணர்வுகளால் சிதைந்து அலைகழிந்தேன். அந்த கலவிக் காட்சியை வைத்து ஒட்டுமொத்தமாக அவர்களைப் புரிந்துகொள்ள முயன்றேன். என்னை நுண்மையாக்கி, கூர்படுத்தி மனதை பிளந்து பகுத்துச் சென்றேன். அகம் எங்கோ முட்டி நகராமல் நின்றது. அங்கே கொப்பளித்தது சினம். என் அம்மா மீது வெறுப்பும் கோபமும் கிளர்ந்தது. அன்றிலிருந்து தான் வீட்டில் பிரச்சினை.” “ம்ம், உங்களுடைய தொந்தரவு புரிகிறது. நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்றுதான். இது உங்களுக்கு வீட்டில் என்ன வகையான பிரச்சினையைத் தோற்றுவித்தது?” “அம்மா பேசுவதும் வீட்டில் நடமாடுவதும் போலி நடிப்புப் போல் தோன்றத் தொடங்கியது. எல்லாமே நாடக பாவனையென. பயந்த சுபாவம் கொண்டவர் போல் இருப்பதும் அப்பாவை எதிர்க்காமல் இருப்பதும் அவர் விரும்பி அணிந்த வேடம் என்று தோன்றியது. உள்ளூர அதற்காக நடித்து அதுவாகவே ஆகிவிட்டாரா அல்லது புன்னகையுடன் அதை உள்ளூ(ர) இரசித்து மகிழ்கிறாரா தெரியவில்லை. ஆனால் ஒன்று முன்னம் போல என்னால் அம்மாவை பார்க்கவோ, அவருடன் பேசவோ முடியவில்லை.” கிளாரா குறிப்பு நோட்டை மூடி வைத்துவிட்டு, “அதிகம் யோசிக்க வேண்டியதில்லை ஹரி. இத்தனை வெறுப்பு தேவை இல்லை. இதை இப்படிப் பார்க்கலாம், இது அவர்கள் அந்தரங்கம் சார்ந்தது. அதற்குள் சங்கதிகள் தலையிட முடியாது. இதை யோசித்து துயர் அடைய ஏதும் இல்லை. அந்தக் ஒளிப்படக் காட்சி அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது. சரி, அந்தக் காணொளியை அவர்கள் தான் எடுத்தார்களா?” “ஆம், என் அப்பா அதை எடுத்திருந்தார்” “அப்படியா, அதனை அவரிடமே கேட்டீர்களா?” “ஆம். அம்மா மீதான வெறுப்பு கட்டுக்கடங்காமல் வளர்ந்து சென்றது. குரலை உயர்த்திப் பேசாத நான் அம்மாவுடன் எரிந்து விழுந்தேன். என் கண்களில் அவர் தென்படும் போதெல்லாம் அதிகம் வெறுத்தேன். அவர் சமைத்ததை அவர் முன் உண்ண(ப்) பிடிக்கவேயில்லை. ஒருமுறை இரவு உணவு உண்ணும் போது ‘என்னடா பிரச்சினை?” என்று கேட்டு என் தலையைத் தடவினார். எனக்குள் முகிழ்ந்த ஒவ்வாமை சினமாக மாறியது. அவர் கையை தட்டிவிட்டது மட்டுமல்லாது சாப்பாட்டுத் தட்டை விசிறி எறிந்தேன். தட்டு உடைந்து உணவுடன் தரையில் தெறித்திருந்தது. அம்மா அரண்டு போனார். எதுவும் பேசாமல் என் அறைக்குள் எழுந்து சென்று விட்டேன்.” “உன் அப்பாவுக்கு வரும் அதே கோபம் போல”, என்று கிளாரா சொல்லும்போது ஒரு திடுக்கிடல் எழ நிமிர்ந்து பார்த்தேன். “ஆம், அந்தக் கோபம் தான் எனக்கு பிரச்சினையே. அன்று அப்பா என்னை நேருக்கு நேராகப் பார்த்து அழைத்தார். நான் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவரிடம் சென்றேன். உண்மையில் அப்படியொரு அழைப்பை உள்ளூர எதிர்பாத்து இருந்தேன் போல. சிறிய ஆசுவாசம் கிடைத்தது. ‘நீ சிறிய வயதிலிருந்து அம்மா பிள்ளைதானே, எதற்கு அம்மா மீது இத்தனை கோபம் சமீப காலமாக?’ என்று கேட்டார். இதற்காகவே காத்திருந்தது போல அந்த குறுந்தகட்டை எடுத்து அவர் முன்னம் வைத்தேன். பின்னர் அதில் நான் பார்த்ததை சுருக்கமாகச் சொன்னேன். அப்பா அதிர்ச்சி அடைவார் என்று நினைத்தேன். அல்லது சங்கடம் கொள்வார் என்று எதிர்பார்த்தேன். மாறாக அவர் நிதானமாகவும் தெளிவாகவும் பேச ஆரம்பித்தார். “இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்த பின்னர் நான் ஆரம்பித்தது சிறிய ஒளிப்பட நிறுவனம். அப்போதுதான் ஒளிப்பட கருவிகள் மக்கள் பயன்பாட்டில் வந்து கொண்டிருந்தது. அனைத்து நிகழ்வுகள் சடங்குகளை மக்கள் படம் பிடிக்க விரும்பினார்கள். அதனைக் கணித்து என் வியாபாரத்தை நடாத்தினேன். சிறப்பான வரவேற்பு இருந்தது. இயல்பிலே ஒளிப்படங்கள் மேல் ஆர்வம் இருந்ததால் இன்னும் திறமையாக நடாத்த முடிந்தது. அப்போது நீங்கள் பிறக்கவில்லை. ஒவ்வொரு முறையும் குழந்தை பிறக்காமல் தள்ளித்தள்ளியே சென்றது. இது உன் அம்மாவுக்கு அதிக கவலையைக் கொடுத்தது. அவள் பிள்ளை வேண்டும் என்று ஏங்கத் தொடங்கியிருந்த காலம். எங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சினையும் மருத்துவ ரீதியாக இல்லை. விரைவில் சரியாகும் என்று நம்பினேன். அப்போதுதான் கரு உண்டாகும் அந்தக் கணத்தை அழியாமல் வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. படு சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றினாலும் எனக்குள் அதைச் செய்து பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உன் அம்மாவிடம் சொன்னபோது அதை மறுக்கவில்லை. வேடிக்கையாக அதை ஏற்றுக் கொண்டாள். பிற்பாடு ஒளிப்படம் பிடித்த பல காணொளிகளை அழித்தேன். இதை மட்டும் விட்டு வைத்தேன். காரணம் இது நீ தோன்றிய கணம்.” என்றார். எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் மட்டுமே அப்போது இருந்தது. நான் வேறு எதுவும் பேசவில்லை. அப்பா இதனை எங்கோ பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும். சுழன்று என் கைக்கே தற்செயலாக வந்துவிட்டது. அதன் பின்னர் எனக்கும் அப்பாவுக்கும் இடையிலிருந்த இடைவெளி மெலிதாகச் சுருங்கி வருவதுபோலத் தோன்றியது. அப்பாவும் நானும் அதிகம் பேசிக்கொள்ளா விட்டாலும் ஒரே மேசையில் இரவு உணவை உண்கிறோம். எங்களுக்கு இடையே அம்மா ஒரு தடையாக இருப்பதில்லை.” “இப்போது அப்பாவிடம் நெருக்கமாக இயல்பாக பேச முடிகிறதா?” கிளாரா எழுதித் தந்த மருந்துகள் மூளையின் மின்ரசாயனச் செயல்பாடுகளைக் குறைக்கும் மாத்திரைகள். சிந்திக்கும் வேகத்தை குறைக்கும். இதனைத் தொடர்ந்து உள்ளெடுத்தால் மந்தமாகி விடுவேன். எந்த வேலையிலும் ஆர்வம் காட்ட முடியாமல் போகும். வன்முறை எதையாவது நான் கையிலெடுப்பேன் என கிளாரா எண்ணுகிறாரா தெரியவில்லை. இன்னும் வாரத்துக்கு ஒருமுறையாக ஏழு தடவை தொடர்ச்சியாக கிளாராவைச் சந்திக்க வேண்டும். நான் சொன்னவற்றை வைத்து என்னை ஆராய்வார்கள். எனக்கு என்ன சிக்கல் என்று கண்டுபிடித்து, அந்த மையத்தைக் கலைக்கும் விதமாக பல்வேறு உரையாடல்களைத் தொடுப்பார்கள். அந்த உரையாடல்கள்தான் எனக்குத் தேவையா எனத் தெரியவில்லை. 000 சைக்கிள் நிறுத்தத்திற்குச் சென்று இரும்புக் கேடயத்தில் பிணைக்கப்பட்ட என் சைக்கிளை விடுவித்து ஏறி மிதித்துப் புறப்பட்டேன். வெளிக்காட்சிகள் எல்லாம் ஒரு பெரிய மௌனப்படம்போல ஓடிக்கொண்டிருந்தன. அம்மாவின் நினைவுகள் வந்தன. சிறுவயதில் அம்மாவுடனே எப்போதும் இருப்பேன். எனக்கு மூன்றரை வயது இருக்கும். ஈரம் பொதிந்த கடற்கரை நிலம், என் கால்கள் புதையப் புதைய அப்பாவின் கையைப் பிடித்து நடந்தவாறு இருந்தேன். சட்டென்று பெரிய அலை எழுந்து உடைந்து வழிந்து வந்த வேகத்தில் என்னை சாய்த்தது. அரைக்கணத்திற்கும் குறைவான பொழுது உப்புத்தண்ணீர் மூக்கில் நுழைய தத்தளித்தேன். அடுத்த அரைக்கணத்தில் அம்மாவின் இடுப்பில் இருந்தேன். நான் சோர்வுடன் வீட்டுக்குள் நுழைந்த போது அப்பா அம்மாவுடன் வாய்தர்க்கத்தில் இருந்தார். என்ன பிரச்சினை என்று நான் புரிந்துகொள்ள முற்படவில்லை. ஏதாவது ஒரு நொண்டிக் காரணமாக இருக்கும். அம்மா மௌனமாகவே இருந்தார். எனக்கு அந்த மௌனம் ஒரு நடிப்புப் போலத் தோன்றியது. எங்கேயோ சுரந்த இரக்கம் தடைபட்டு நின்றது. இருவரையும் அவர்களின் உலகத்திலே விட்டுவிட்டு விலகிச் செல்லவே விரும்பினேன். மாடிப்படியிலுள்ள எனது அறைக்குள் நுழைய முற்படும்போது கீழே பெரிய சத்தம் கேட்டது. அம்மாவின் அலறல். என்னை மீறி கீழே படிகளின் மீது தாவி ஓடிச்சென்றேன். அப்பா, அம்மாவை மூர்க்கமாக அடித்திருக்க வேண்டும். அம்மா தரையில் வீழ்ந்திருந்தார். அவர் கன்னங்கள் தடித்து சிவந்திருந்தன. முடிக்கற்றைகள் குழம்பிப்போய் ஒரு பக்கம் சாய்ந்திருந்தன. அப்பாவின் கண்களும் என் கண்களும் சந்தித்துப் பிணைந்து விலகிக் கொண்டன. அனிச்சையாக உடல் திரும்ப, வாசல் கதவைத் திறந்து கொண்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறினார். அம்மா அருகே சென்றபோது அதைக் கவனித்தேன். தரையில் இரத்தம். அவரது இடுப்பின் பின்பகுதியிலிருந்து வந்து கொண்டிருந்தது. அம்மாவின் தோள்மூட்டைப் பிடித்துக் தூக்கினேன். எனது தோளை அவரது கைகள் ஆதரவாகப் பற்றிக்கொண்டன. “ஐயோ அம்மா, என்ன ஆகிவிட்டது?” “ஒன்றும் இல்லை, இதுதான் என் கடைசி மாதவிடாயாக இருக்க வேண்டும். அவ்வப்போது வந்து நீண்ட நாட்களாக வராமல் இருந்தது. இப்போது கடைசியாக… இனிமேல் ஒரு போதும் வராது. இதற்கான வயதை நான் கடந்து விட்டேன்” என்று அம்மா மெலிதாக ஆங்கிலத்தில் சொன்னபோது அவர் என் கண்களைப் பார்த்தார். என் கண்கள் ஒரு கணத்தில் அஞ்சி விலகிக் கொண்டது. ஏன் இத்தனை வெளிப்படை, அதற்கு தயார் இல்லாததால் அரண்டு சுருண்டு கொண்டேன். அம்மாவை குளியறையில் விட்டுவிட்டுத் தரையில் படர்ந்திருந்த இரத்தத்தை சுடுதண்ணீர் நிறைத்து, சுத்திகரிப்பான் கலந்து மொப்பரால் துடைத்துச் சுத்தம் செய்தேன். பளபளப்பாகிய ஈரத்தரையில் என் முகம் தெரிந்தது. அரைக்கணம் பார்த்து புன்னகைத்துக் கொண்டேன். மிகக் குரூரமான விடுதலையை அடைந்தது போலத் தோன்றியது. உடனே உடலில் அலையலையாக கசப்பு எழுந்து பற்றிக் கொண்டது. *** http://www.yaavarum.com/archives/5642