Jump to content

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1085
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. “ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்" "ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய், தாளடி தொழுதாய் பல்லாண்டு வாழ்க வென ஓரடி ஈரடி மூவடி என வாழ்வில் அடிவைத்து சீரடி பாவில் அம்மாவென சிறப்படி வைத்தாய்" "ஆறடி சேலையில் அழகாய் தொட்டில் கட்டி, காலடியில் வைத்து முத்துகளை வளர்த்து எடுத்தாய் ஈரடி திருக்குறளை இதயத்தில் ஏற்றி வைத்து, வாழையடி மரபை பெருமையாக பேணி காத்தாய்" "வேரடி கேட்டோர் விழியடி விரித்து நிற்க சொல்லடி கொடுத்து தலை நிமிர வழிசமைத்தாய் ஏனடி போனாய் ஏகாந்தமாய் எம்மை விட்டு, யாரடி எம்மை அன்பாய் இனி பார்ப்பார்?" (கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்)
  2. "பாசக்காரப் பாட்டி" எல்லா குழந்தைகளுக்கும், தமக்கு அன்பு செலுத்தவும், தாம் அன்பு செலுத்தவும் ஒரு சிலர் கட்டாயம் தேவை. அம்மா, அப்பாவிற்கு அடுத்ததாக, ஏன் பலவேளைகளில் முதலாவராக இருப்பவர் தான் பாட்டி ஆவார். ஏன் என்றால் அவர்கள் பெற்றோர்களின் பங்கை இலகுவாக எடுக்கக் கூடியது தான், பொறுமையாக இருந்து ஆலோசனை வழங்குவதுடன், சேர்ந்து விளையாடி, கதைகள் சொல்லி ஒரு ஆசிரியர் போலவும், கூட்டாளி போலவும் செயற்படக் கூடியவர்கள் அவர்கள் ஒருவரே! அப்படியான ஒருவர் தான் என் பாட்டி!! எங்க குடும்பம் ஓரளவு கூட்டு குடும்பம் என்பதால், தாத்தாவும் பாட்டியும் எம்முடன் இருந்தனர். அப்பா முழுநேர வேலையும், அம்மா பகுதி நேர வேலையும் என்பதால், என்னை கவனிப்பதில் பாட்டியே முதலாவதாக இருந்தார். பல மகிழ்வான நிகழ்வுகள் இன்னும் என் மனதில் இருக்கிறது. நான் இன்று பெரியவனாகி, படிப்பு முடித்து, வேலையும் செய்கிறேன். அடுத்த ஆண்டு எனக்கு திருமணம் கூட நடக்க உள்ளது. என் முதல் கனா, எனக்கு மூத்தப்பிள்ளை, மகளாக பிறக்கவேண்டும், அவளுக்கு பாட்டியின் பெயரை சூட்டிட வேண்டும். ஆமாம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன், என் பாசக்காரப் பாட்டி, சென்ற ஆண்டு திடீரென கொரோனாவால் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அதற்க்கு முதல், என் வருங்கால மனைவியை [காதலியை] சந்தித்து அவருக்கு ஆசி வழங்கியது, அவரை பேத்தி என்று செல்லமாக கூப்பிட்டு அளவளாவியது இன்னும் மறக்க முடியாது! என் சின்ன வயதில், பாட்டி பொதுவாக வீட்டிலேயே இருப்பதால், என்னுடன் அதிகமாக இருந்து உள்ளார். அதனால் அவரே, நான் எடுக்கும் சின்ன சின்ன தீர்மானங்களுக்கு நங்கூரமாகவும், அதே நேரம் எனது பாதுகாப்பாகவும் இருந்தார். அந்த நேரம் அதை என்னால் சரியாக உணரமுடியவில்லை. இடைஞ்சலாக இருக்கிறார் என அடம்பிடித்ததும் உண்டு. ஆனால் இன்று அதன் உண்மையான தன்மையை உணருகிறேன் குறிப்பாக என் பாலர் பருவத்தில் பாட்டியின் பங்கு மறக்கமுடியாத ஒன்று. அவரின் பாசம், எந்த நிலையிலும் மனம் குழம்பாது ஒரு சிறு புன்னகையுடன் எடுக்கும் தீர்மானங்கள், மடியில் இருத்தி கதை சொல்லும் அழகு, தாலாட்டு பாடி நித்திரை ஆக்கும் பக்குவம், கணிதம், தமிழ், விஞ்ஞானம், பொது அறிவு போன்றவற்றை இலகுவாக உதாரணத்துடனும் செய்முறைகளுடனும் புகட்டும் அனுபவம் நான் இன்னும் வேறு யாரிடமும் கண்டதில்லை. "பாசம் கொண்டு மகிழ்ந்து விளையாட பாவம் பாட்டி இந்த வயதிலும் பார்த்து படியில் கால் வைத்து பாலும் சோறும் கொண்டு வாரார்" "பாடி ஆடி விளையாட்டு காட்ட பால் கொடுத்து கதை சொல்ல பாயில் அணைத்து சேர்ந்து படுக்க பாக்கியம் பெற்றேனென மகிழ்ந்து வாரார்" பாயை விரித்து நீட்டி படுத்து பாதி பல்லால் வெற்றிலை மென்று பாதை காட்ட நல்ல கதைசொல்ல பாசம் கொண்டு மகிழ்ந்து வாரார்" ஆமாம் இப்படித் தான் என் பாட்டி இருந்தது எனக்கு இன்னும் ஞாபகம் . அவரை பற்றி கொஞ்சம் விரிவாக சொலவ்து என்றால், அவர் என்றும் பாரம்பரிய உடையில் தான் இருப்பார். எம் பெற்றோர் , நாம் எல்லோரும் இன்றைய நவீன உடை அலங்காரத்துக்குள் தாராளமாக இருந்தாலும், அவர் தன் அலங்காரத்தை மாற்றவே இல்லை, ஆனால் எம்மை தடுக்கவும் இல்லை, அவர் எம்மை அதில் பார்ப்பதில் மிக்க மகிழ்வே காட்டினார் ! அது தான் அவரின் சிறப்பு !, இது யாருக்கு வரும் ?? அவர் பெரிதாக வண்ண நிற ஆடைகள் அணியமாட்டார். அது மட்டும் அல்ல தொழ தொழ என்றே மேல் சடடை இருக்கும். அது முழங்கை மட்டும் நீண்டும் இருக்கும். அதிகமாக பகலில் சேலை அணிந்து இருப்பார். மாலை வரும் பொழுது நைட்டி / இரவில் அணியும் ஆடை அல்லது மேல் சட்டையுடன் ஒரு வித பாவாடை அணிவார். ஆனால் மிகவும் கச்சிதமாக அழகாக உடுத்து இருப்பார். இன்று உடை கலாச்சாரம் சிறுவரில் இருந்து கிழவி வரை மாறி விட்டாலும், என் பாட்டி கிராமத்து கலாச்சார உடையை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் எந்த ஒப்பனையும் செய்வதில்லை, என்றாலும் அவரின் இயற்கையான சாயல் உண்மையில் அழகே! ஏன், அவர் பெயர் கூட கனகம்மா தான்! அவர் சிறு வயதில், பாரமான தங்க தோடு அணிந்தவர் என்பதால், பிற்காலத்தில் அவரின் காது மடல்கள் நீளமாக வந்துவிட்டது என்று எண்ணுகிறேன். பாட்டி சொன்ன இரு விடயங்கள் எனக்கு இன்னும் ஞாபகமாக இருக்கு. அது அவரின் பண்பாட்டையும் அறிவையும் கட்டாயம் பறைசாற்றும். அது மட்டும் அல்ல அவரின் இனப்பற்றையும், ஒரு குடும்ப ஒழுஙகையும் எடுத்துக்காட்டுகிறது. இன்று தமிழ் இனம் இலங்கையில் பட்ட துன்பங்களும், அதனால் ஆயிரம் ஆயிரமாக இடம் பெயர்ந்து பரவலாக பல நாடுகளில் வாழும் சூழலில், தமது பண்பாட்டையும், மொழியையும் தொடர வேண்டிய அவசியம் இருக்கு என்பதை அவரின் சொற்கள் என் காதில் ஒலித்த படியே உள்ளது. கலிகாலம் என்றால் என்ன? ஒரு சின்ன பிரசங்கமே எனக்கு வைத்தார். அந்த நாள் காலம் வேறு, இப்பத்தான் காலம் வேறு என்று ஆரம்பித்த அவர், கரிகாலம் என்று சற்று நிறுத்தி சொல்லி, அண்ணனும் தம்பியும் ஒரு முறை சந்தித்தார்கள், தம்பி, அண்ணா கரிகாலம் பிறந்து விட்டது என்று சொன்னான். உடனே அண்ணன், அது உன்னிலேயே தெரிகிறது என்று பதில் கொடுத்தார். காரணம் அன்றைய காலத்தில், மூத்தோருக்கு முன்னால், தோளில் இருக்கும் சால்வையை, ஒரு மரியாதை பொருட்டு, எடுத்துவிட்டு தான் கதைப்பார்கள். ஆனால் தம்பி அதை மறந்து வீறாப்புடன் அண்ணன் முன் கதைத்தது கரியன் பிறந்து விட்டான் என்பதை காட்டுகிறது என்றானாம், என்றார் என் பாட்டி. இது இன்று நகைப்புக்கு உரியதாக பலரால் கருதினாலும், கரிகாலம் என்ற சொல்லுக்கு ஒரு நல்ல விளக்கம் என்றே நம்புகிறேன் ! மற்றும் படி எனக்கும் அதில் பெரிதாக நம்பிக்கை இல்லை. மேலும் குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்திய பாட்டி, பிதா மாதாவுக்கு கடமை செய்ய வேண்டும் என்றும் தாய் மொழியை எங்கிருந்தாலும் மறக்க வேண்டாம் என்றும், மொழி அழிந்தால் இனம் அழிந்ததுக்கு சமன் என்று சில வரலாற்று கதைகள் மூலம் விளங்கப் படுத்தினார். அதனின் உண்மையை இன்று நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் / காண்கிறோம்! அதனால் தான் என் பாட்டியை மீண்டும் என் மகளாக வரவேண்டும் என்று கனவு காண்கிறேன். நான் மறு பிறப்பில், இவை போன்ற மூட நம்பிக்கைகளில், எந்த உண்மையும் இல்லை என்று அறிவியல் ரீதியாக எண்ணுகிறவன் என்றாலும், என் பாசக்காரப் பாட்டியின் சாயலில் வரவேண்டும் என்பதே என் கனா! "கட்டிலில் படுத்து பாட்டியை நினைத்தேன் ஊட்டி வளர்த்த கதைகளை சுவைத்தேன் போட்டி போட்டு கனவு வந்தது பாட்டி உருவில் தேவதை வந்தது!" "கேட்காத இனிமை காதில் ஒலித்தது வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது மொட்டு விரிந்து வாசனை தந்தது குட்டி பாட்டி தவழ்ந்து வந்தது" "மெட்டி ஒலி காற்றோடு கலக்க முட்டி மோதி நிமிர்ந்து நடந்து பொட்டக் குட்டி பாட்டி பெயரில் லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது" "ஒட்டி உடையில் அழகு காட்டி சட்டம் போட்டு திமிரு காட்டி பாட்டு படித்து இனிமை காட்டி புட்டி பாலூட்ட மடியில் உறங்குது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பி கு ; என் அம்மாவை என் மகன் எழுதுவதாக கதை வடிவமைத்துள்ளேன்
  3. "காதல் தந்த தண்ணீர் குடம்" நான் வேலை முடிந்து, வீடு திரும்புகையில், நான் வேலை செய்யும் ஊர் சந்தியில் இருந்த பெட்டி கடை ஒன்றில் சூடாக வடை அருந்திக் கொண்டு இருந்தேன். இது தான் என் இரவு சாப்பாடும் கூட. நான் இந்த ஊருக்கு அண்மையில் வேலை மாற்றம் பெற்று வந்தவன். எனக்கான அரச விடுதி பெற ஒன்று இரண்டு மாதம் பொறுத்து இருக்கவேண்டும். ஆகவே தற்காலிகமாக ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி உள்ளேன். ஆகவே சமையலுக்கு அங்கு பெரிதாக வசதி இல்லை. எனவே காலை, மதிய உணவை வேலை தளத்திலும், இரவு உணவை இலேசாக இந்த பெட்டி கடையிலும் இப்போதைக்கு சமாளிக்கிறேன் ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லத்தான் வேண்டும், இந்த பெட்டிக் கடையுடன் சேர்ந்த வீட்டில் தான் கடைக்காரரும் குடும்பத்துடன் இருக்கிறார். அவரின் மூத்த மகள் தான் இன்னும் ஒரு காரணம். அவர் இந்த ஊரில் உள்ள ஆரம்ப பாடசாலையில் தமிழ் கற்பித்துக் கொடுப்பதுடன் குடும்பத்துக்கும் துணையாக மாலை நேரங்களில் குடத்தில் தண்ணீர் எடுத்து வருவதுடன் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் துப்பரவு செய்வதையும் பல தடவை கண்டுள்ளேன். அவளின் அழகும், நடையும் என்னை கவர்ந்தது உண்மையே! அதுவும் தண்ணீர் குடத்தை, ஒல்லிய இடையில் வைத்து, பருத்த மார்புடன் சாய்த்து, மெல்லிய கையால் அணைத்து, நடந்து போகும் அழகை எப்படி சொல்வேன்! ''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண், மயில் ஓரன்ன சாயல், செந் தார்க் கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், பாவை அன்ன வனப்பினள் இவள்'' என, காமர் நெஞ்சமொடு பல பாராட்டி, யாய் மறப்பு அறியா மடந்தை- தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே." [நற்றிணை - 301. குறிஞ்சி] நீண்ட மலையிலே தழைந்த பெரிய தண்டினையுடைய குறிஞ்சியின் விடியலிலே விரிந்த மலர் போன்ற மேனியையும்; பெரிய சுனையிலுள்ள குவளைமலர் எதிர் எதிர் வைத்துப் பிணைத்தாற் போன்ற இமையையுடைய கரிய குளிர்ச்சி பொருந்திய கண்ணையும்; மயிலின் ஒரு தன்மை யொத்த சாயலையும்; கழுத்திலிட்ட சிவந்த வரையுடைய கிளியின் ஒரு தன்மை யொத்த சொல்லையும்; பருத்த தோளையும்; கொல்லிப் பாவை போன்ற அழகையுமுடைய ... அகிலின் நெய் பூசி நீங்ககில்லாத மணம் வீசுகின்ற கூந்தலையுடைய தலைமகள் அவள்! அவளை பார்ப்பதற்காகவே நான் அங்கு இரவு சாப்பாடு சாப்பிடுவதும் ஒரு காரணம். "உள்ளின் உள்ளம் வேமே; உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று ; வருத்தி வான் தோய்வு அற்றே காமம்; சான்றோர் அல்லர் யாம் மரீஇ யோரே" [குறுந்தொகை - 102. நெய்தல்] மாறனோ அம்புமேல் அம்பு பொழிகிறான். காமமோ வானளாவப் பெருகிவிட்டது. அவளை நினையாதிருக்கவும் என்னால் முடியவில்லை. அப்படி நினைத்தாலும் என் மனம் வேதனை அடைகிறது, அதை தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் அங்கு உள்ள இருக்கையில் இருந்து, அவள் ஒவ்வொரு நாளும் , மாலை நேரம், தண்ணீர் குடத்துடன் போவதை பார்ப்பதும், அப்பொழுது சிறு புன்னகையுடன் ஹலோ என்று மெல்ல, யாருக்கும் கேட்காமல் பேச முற்படுவதும், அதற்க்கு அவள் சைகை மட்டும் காட்டி நகர்வதும் ஒரு ஆறுதலே! நாள்பட நாள்பட எம் நட்பு கொஞ்சம் நெருங்கி வருவது போல எனக்கு இருந்தாலும், உண்மையில் அவள் மனது எனக்கு தெரியவில்லை, அவள் விலகி விலகியே நின்றாள். அவளுக்கு ஆசை இல்லாமல் இருக்காது. என்றாலும் பயமும் இருந்தது எனக்கு புரிந்தது. கட்டாயம் நான் அவளுக்கு ஒரு திடமான நம்பிக்கை கொடுக்கவேண்டும். அப்பத்தான் அவளும் என்னை காதலிப்பாள் என்று நம்புகிறேன் "பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை" [படம் : அன்னை, பாடல் : கண்ணதாசன்] நான் கொஞ்சம் உயர்ந்த பதவியில் வேலை பார்ப்பதால், ஒருவேளை அவள் அப்படி சிந்திக்கலாம். எனவே, இப்படியான அவளின் ஐயப்பாடை நான் நீக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் என் தற்காலிக வீடு சேர்ந்தேன். "முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல்லெனக் கூவுவேன் கொல், அலமரல் அசை வளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே?" [குறுந்தொகை - 28. பாலை] சுழலை உடைய அசையும் காற்று என்னை வருத்த, என்னுனடைய துன்ப நோயை அறியாமல் தூங்கும் இந்த ஊரில் உள்ளாரை முட்டுவேனா? தாக்குவேனா? ‘ஆ’ , ‘ஒல்’ என கத்துவேனா, இந்த ஊரை என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை!. இப்படி என் மனநிலை அன்று இரவு முழுவதும் இருந்தது. அன்று அரைகுறை தூக்கம் என்பதால், கொஞ்சம் சோர்வாக ஆனால் நேரத்துடன் எழும்பிவிட்டேன். பசியும் கொஞ்சம் இருந்ததால், வழமையாக போகும் நேரத்திற்கும் கொஞ்சம் முந்தி, வேலைக்கு போனேன். நான் நம்பவே முடியவில்லை . அவளும் பாடசாலைக்கு அந்த நேரம் போய்க்கொண்டு இருந்தாள். மெல்ல அவளுக்கு அருகில் சென்று கதைக்க தொடங்கினேன். என்ன ஆச்சரியம் அவளும் அளவளாவ தொடங்கினாள். அப்ப தான் புரிந்தது, தந்தைக்கு முன்னாலும் , வீட்டிற்கு முன்னாலும் அவள் கொஞ்சம் விலகி கதைக்காமல் போனதின் உண்மை. ஆமாம், அவளின் அச்சம், நாணம் இரண்டினதும் காரணம் புரிந்தது. "இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு என, யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, தான் செய் குறி நிலை இனிய கூறி, ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல்புறம் நோக்கி, விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே?" [நற்றிணை 204] சீக்கிரம் சொல். உன்னுடைய இனிய சொல்லுக்காக என் நெஞ்சு காத்திருக்கிறது. சந்தோஷமான ஒரு பதிலைச் சொன்னால், உன்னுடைய பற்களில் இதழோடு இதழ் சேர்த்து, என் இதழை ஒற்றி முத்தமிடுவேன்!’ இப்படி அவளிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. எனினும் காலம் கனியட்டும் என்று தள்ளி போட்டுவிட்டேன். அவளுக்கு முதலில் ஒரு நம்பிக்கை வரட்டுமே என்று, அன்றில் இருந்து, வேலைக்கு முந்தியே போகத் தொடங்கினேன். அவளும் எனக்காக கொஞ்சம் மெல்ல மெல்ல நடந்து வருவதும் புரிந்தது. அது கட்டாயம் நம்பிக்கையின் முதல் படி தானே ! "சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை கான யானை அணங்கியா அங்கு- இளையள், முளை வாள் எயிற்றள், வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே." [குறுந்தொகை குறிஞ்சித்திணை 119] சிறிய வெண்மையான அழகிய கோடுகளை உடைய பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், அழகிய தோற்றம் உடையவளும் மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என தடுமாறக் கூடாது என் நானும் கொஞ்சம் ஆறுதலாக அவளைப்பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்தேன். அது மேலும் அவள் மேல் காதலை கூட்டியது. இனியும் பொறுக்கக் கூடாது என்ற ஒரு நிலை கூட நெஞ்சில் தோன்றியது. "குவளை நாறும் குவை இருங் கூந்தல், ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய், குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண் பல் தித்தி, மாஅயோயே! நீயே, அஞ்சல்'' என்ற என் சொல் அஞ்சலையே; யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் பெறினும், விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே." [குறுந்தொகை 300] குவளையின் மணம் வீசுகின்ற வளமான, கருத்த கூந்தல், ஆம்பலின் மணமும் தேனின் சுவையும் பொதிந்து சிவந்த வாய், ஆழமான நீரில் மலர்ந்த தாமரைப் பூவின் மகரந்தத்தைப் போல் சிறிய பல தேமல் புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டவளே, நான் உன்னைப் பிரிவேனோ என்று நினைத்து நீ அஞ்சவேண்டியதில்லை. குறுகலான கால்களை உடைய அன்னப் பறவைகள் நிறைந்த மணலைக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த நில மண்டிலம் மொத்தமும் எனக்குக் கிடைத்தால் கூட, நான் உன்னைப் பிரியமாட்டேன். கவலைப்படாதே! என்று அவளுக்கு கூறும் காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். அதை விரைவில் சொல்ல வேண்டும் என்று எண்ணி இருக்கும் தருவாயில், அவளும் தண்ணீர் குடத்துடன் வெளியே போவதை கண்டேன். நான் வழமைபோல் இருக்கையில் இருந்து, ஆனால் மெல்ல மெல்ல சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். நானும் சாப்பிட்டு முடிய அவளும் திரும்பி வர நேரம் சரியாக இருந்தது. அந்த நேரம் அவளின் தந்தையும் கொஞ்சம் மற்ற வாடிக்கையாளர்களுடன் சுறுசுறுப்பாக இருந்தார். அது எனக்கும் நல்ல சந்தர்ப்பமாகவும் இருந்தது "என்னடி தாகமாக இருக்குது கொஞ்சம் தண்ணி தா " என்று கூறியவாறு, பதிலுக்கு காத்திராமல், அவள் கையை பிடித்தே விட்டான். அவள் சட்டென திரும்பி , சற்றும் எதிர் பாராத விதமாக "அம்மா" என அலறி விட்டாள். வீட்டுக்குள் இருந்த அவள் தாய், பதறி ஓடி வந்து "என்ன? என்ன?"என கேட்டாள். ஆனால் அவள் ஆசிரியர் ஆச்சே, என்னை காட்டி அவர் விக்குகிறார் என்று பொய் சொன்னாள். அதற்கு ஏன் இந்த சத்தம் ? ஏன் இந்த ஆர்ப்பாட்டம் ? , குடத்தில் இருந்து கொடுப்பது தானே என்றாள். தாயோ நான் உண்மையிலேயே விக்கல் ஆட்கொண்டது என என் நெஞ்சை தடவினாள். நானும் தாயின் கழுத்தில் சாய்ந்தபடி பின்புறமாக அவளை நான் பார்த்த பார்வை - அதை அவள் என்ன என்று சொல்வாள்? "அன்னாய்! இவனொருவன் செய்தது காண்’ என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னை யான், உண்ணு நீர் விக்கினான்’ என்றேனா, அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி, நகைக் கூட்டம் செய்தான், அக் கள்வன் மகன்" [கலித்தொகை 51] எனக்கு கம்பராமாயணத்தின் ஒரு வரி மின்னலாக மனதில் தோன்றியது என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் [சிறு பாத்திரம், குடம்] போன்றன என் ராமன் அனுமானுக்கு சொன்ன அந்த வார்த்தை தான் அது! "வாராழி கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குவாள்தான்" ஆமாம், குடத்தில் இருந்து அவள் தண்ணீர் தரவில்லை. அவள் தன் அழகிய மார்பில் இருந்தே காதல் ஊட்டினாள்! அவள் முகத்தில் நம்பிக்கை ஒளியை கண்டேன், என் நெஞ்சில் எதிர்கால கனவை கண்டேன்! இனி அவள் என் மனைவி என்ற உணர்வே மேல் ஓங்கி உள்ளத்தில் வந்தது. அவளை மீண்டும் பார்த்தேன். காலினால் கோலம் போட்டுக்கொண்டு கொஞ்சம் தலை நிமிர்ந்து அவள் சொல்லாமல் சொன்ன 'ஆமா', இனி நாம் ஒருவரே, இருவர் அல்ல என உறுத்தியது!! "பெட்டிக்கடை வீட்டு பைங்கிளி கோடியில் நிற்குது வெக்கத்தை விட்டு அது ஆடிப் பாடுது தூக்கத்தை கலைத்து எனக்கு துடிப்பை தருகுது ஏக்கத்தை கூட்டி மனதை நொடியில் வாட்டுது" "ஒற்றையடி பாதையில் டீச்சர் அன்னநடை போடுது நூற்றுக்கு மேல் சிறுவர்கள் பின்னால் தொடருது காற்று வேகத்தில் தாவணி மின்னலாய் மறையுது முற்றும் துறந்த முனியும் தன்னை மறக்குது" "கிராம வெளியில் மயில் துள்ளி திரியுது கயல் விழியில் கவர்ச்சியை அள்ளி எறியுது மயக்கம் கொடுத்து நெஞ்சை கிள்ளி இழுக்குது தயக்கம் கொண்டு கொஞ்சம் தள்ளி போகுது" "வீட்டு முற்றத்தில் ஆயமகள் ஊஞ்சல் ஆடுது முரசொலி போல என்னை குஞ்சம் அழைக்குது விரசமில்லா சரச புன்னகை நெஞ்சை தாக்குது பரவசம் அடைந்து மனம் கொஞ்சம் தளருது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  4. "வேதனை தீரவில்லை" "வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான்" என்று பாடிச் சென்றாள் மூதாட்டி அவ்வையார். ஆனால் பிடித்த முயலுக்கு மூன்று கால் என இலங்கை அரசாங்கம் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பாவிக்க வேண்டும் என்று திடீரென மறுமலர்ச்சி என்று கூறி இரசாயனப் பசளை இறக்குமதிக்கு முற்றாக ஜூன் 2021 இல் தடை விதித்தது. இதை அடுத்து அங்கு இரசாயன உரம், கிருமி நாசினிகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டது. அதே நேரத்தில் சேதனப்பசளையும் போதிய அளவு இருக்கவில்லை. விவசாயிகளுக்கு அதன் உபயோகமும் பயிற்றுவிக்கப் படவில்லை. அந்த இக்கட்டமான காலத்தில் தான் நானும் விடுதலையில் ஊர் திரும்பினேன். ஒளி வண்ண மலர்கள் கொண்ட எங்க ஊர் செடிகளில் என்றும் அழகு ஜொலிக்கும். மா மரத்தில் மாம்பழம் தொங்கும் கட்சி மனதை குளிர்விக்கும். இப்படியான எம் கிராமத்துக்கு தான், நான் புகையிரதத்தால் இறங்கி நடந்து போய்க்கொண்டு இருக்கிறேன். என் அப்பா விவசாயத்தில் மிகவும் வல்லுநர். எப்பேர்ப்பட்ட நிலையிலும் மனம் சோராது அதை எல்லாம் அழகிய பசுமையான வயல்வெளியாக மாற்றிவிடுவார். அவர் எல்லா கிராம மக்களுடனும் நன்றாக பழகி, அன்பாக அனுசரிப்பதுடன், எங்கள் கிராம தலைவர் கூட அவரே! எங்கள் கிராமத்துக்குள் போகுமுன், நான் கிராமத்தின் எல்லையில் இருக்கும் காவல் தெய்வத்தை தாண்டித் தான் போகவேண்டும். இது எங்கள் கிராமத்துக்கு நீர்வழங்கும் குளக்கரையில் அமைந்து உள்ளது. நான் அந்த இடத்தை தாண்டும் பொழுது, கொஞ்சம் நின்று தலை உயர்த்தி ஒரு தரம் பார்த்தேன். என்னையே நம்பமுடியவில்லை, என் அப்பா, அந்த காவல் தெய்வத்திடம் எதோ முறையிட்டுக்கொண்டு இருந்தார். நான் மெதுவாக, சத்தம் வராதவாறு நடந்து கிட்ட போய், அவர் பின்னால் நின்றேன். " ஏன் இந்த அரசுக்கு அவ்வையார் பாடல் விளங்கவில்லை? நெல் உயர குடி உயரும் என்ற சிறு தத்துவமும் இவனுக்கு தெரியாதா ? குடி உயரவிட்டால், அங்கு கோனுக்கு [நாட்டை ஆள்பவனுக்கு] என்ன வேலை ?" என்று புலம்பிக்கொண்டு இருந்தார். நான் திடுக்கிட்டே விட்டேன். நான் மெல்ல பின்னோக்கி நடந்து, வயல் வெளி ஊடாக வீடு போகத் தொடங்கினேன். அங்கு நெற்கதிர்கள் பசுமை இழந்து பழுத்துப்போய் மஞ்சளாக பரவி இருப்பதை கண்டேன். அது மட்டும் அல்ல நேற்று பெய்த கடும் மழையாலும் காற்றாலும், நெற் கதிர்கள் சாய்ந்து இருப்பதுடன், வரம்புக்கு மேலால் நீர் வழிவதையும் கண்டேன். ஒரு சீரான மாற்றத்தை முறையாக அறிமுகப் படுத்த தவறிய அரசின் கொள்கையின் பிரதிபலிப்பை, அந்த வயல்களில் அல்லலுறும் மக்களின் முகத்தில் தெரிந்தது. நான் என்னை சரி படுத்திகொண்டு, அந்த வயல் வெளியில் நிற்கும் , எம் பக்கத்து வீட்டு செல்லப்பா மாமாவிடமும் செல்லாச்சி மாமியிடமும் அருகில் போனேன். " இந்த சீர்கெட்டுப் போன அரசு ஒழியட்டும் என" வசைபாடி என்னை வரவேற்றனர். இந்த அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை விவசாயத்திற்கு மாறி இருக்க வேண்டும், அதே நேரத்தில், இன்று சனத்தொகை கூடிய காலத்தில், இயற்கை , செயற்கை இரண்டு முறையிலும் விவசாயத்தை நடை முறை படுத்தி இருந்தால், இன்று நாம் பட்டினியை நோக்கி போய் இருக்க மாட்டோம் என்று ஒரு விவசாய பாடமே எமக்கு நடத்தினர். இன்று அவர்கள் கை நீட்டி கடனாக வாங்கும் உணவு எல்லாம் அதிகமாக செயற்கை விளைச்சலே! இப்படியே போனால், இங்கு வருங்காலத்தில் விவசாயியே இருக்கமாட்டான் என்று பற்றாக் குறைக்கு தம் எரிச்சலை கொட்டி தள்ளினர். அந்த நேரம் பார்த்து, அவசரம் அவசரமாக பதைபதைத்துக் கொண்டு என் அப்பாவும் ஓட்டமும் நடையுமாக அங்கு திரும்பி வந்தார். எங்கள் கணபதி மளிகை சாமான்கள் வாங்க என்று போனவர், தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டு விட்டார் என கண்ணீரும் கம்பலையுமாக கூறினார். ஆனால் அதற்கு முதல் தன் செத்த வீட்டுக்கு தேவையான வற்றையும் வாங்கி வைத்துள்ளார். அவ்வற்றை வயலில் இருந்த தனது அப்பாவின் கல்லறை மேல் வைத்துவிட்டு தான் தனது உயிரை மாய்த்தார் என்று கூறினார். அங்கு அவர் ஒரு கடிதமும் எழுதி வைத்துள்ளார். அதை நாம் அங்கு போய் பார்க்கும் பொழுது கண்டோம். அதில், அரசை மட்டும் சொல்லி குற்றமில்லை, அரசிடம் சுளை சுளையாக பணம் கறந்து ஆலோசனை கூறும் பேராசிரியார்களையும் முதல் குற்றவாளியாக நிறுத்தவேண்டும் என்று இருந்தது. இரசாயனப் பசளை இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதன் மூலம் உள்நாட்டு விவசாயத் துறையை சூழலுக்கு உகந்த விவசாயத் துறையாக மாற்றியமைக்க முடியும் என பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் கூறியதும், மற்றும் ஒரு பேராசிரியர் இரசாயனப் பசளைக்குப் பதிலாக சேதனப்பசளையை பயன்படுத்தி மேற்கொள்ளும் விவசாயத்தை 21 ஆம் நூற்றாண்டின் விவசாய கைத்தொழிலாக வளர்ச்சியடைந்த நாடுகள் பார்ப்பதாக கூறியதும் ஞாபகம் வந்தது. ஆனால் நாம் வளர்ச்சி அடைந்த நாடா ? அவர்கள் வளர்ச்சி அடைய, உற்பத்தியை பெருக்க, மலிவாக உணவு பொருட்களை தாராளமாக வழங்க, ஏறுமதி செய்து செல்வம் ஈட்ட, உண்மையில் என்ன செய்தார்கள் - என் மனதில் கேள்வியாக எழும்பின. அதே நேரத்தில் அங்கு எல்லா விவசாயிகளும் சேர்ந்து இறந்தவரின் படத்தை கையில் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கையிலும் போராட்டங்களிலும் குதித்தனர். நானும் அவர்களுடன் ஒன்று சேர , என் விடுதலையை (Holiday) பொருட்படுத்தாமல் அங்கு அப்பாவுடன் சென்றேன்! வேதனை தீரும் என்ற ஒரு நம்பிக்கையில் !! என்றாலும் இன்னும் தீரவில்லை. அது ஜூலை ஒன்பது, 2022 தாண்டியும் நீள்வதை காண்கிறேன்! மாறும் மக்களின் மனநிலை, குறிப்பாக மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நிரந்தரமாக , விடிவாக வருமா ?? 1948 இல் கிடைக்காத உண்மையான சுதந்திரம் வருமா ?? தமிழர் , தமிழ் பேசும் மக்களின் கொடுமையான , பரிதாப நிலை மாறுமா ?? தொலைத்த சம உரிமை வருமா ?? அல்லது இது இன்னும் ஒரு நாடகமா ?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. இல்லை ஒரு கற்பனை இலங்கையில் நடக்கும் அனுபவங்களையும் சூழலையும் அடிப்படையாக வைத்து
  6. "எனது பார்வையில் சிவன் உறையும் கைலாய மலை" [படம் 1 & 2: சிந்து வெளியில் கண்டு எடுக்கப் பட்ட பசுபதி [சிவனின் முன்னைய வடிவம்] யும் சிவலிங்கமும். படம் 3 : சீனாவில் குவன்சௌ (Quanzhou) என்னும் துறைமுக நகரில் உள்ள இந்து ஆலய செதுக்கப்பட்ட சிவன் சிற்பம்] சிவனின் மூலத்தை அறிய வேண்டின் நாம் சிந்து வெளிக்கு போக வேண்டியுள்ளது. மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய சிந்து வெளி நாகரிகத்தில் மேற்கொள்ளப் பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகள் சிவ வழிபாட்டின் மூலத்தை அல்லது ஆரம்பத்தை அங்கு கண்ட சிவலிங்கம் மற்றும் பசுபதி முத்திரை [Shiva Lingam.& The Pashupati Seal] போன்ற சாட்சிகளுடன் நிறுவியுள்ளனர். இந்த நாகரிகம் சிந்து நதியின் கரையோரம் காணப்படுகிறது. இந்த நதி, இமய மலைத் தொடரில், கைலை மலை என்ற ஒரு மலை முடியில் இருந்து உற்பத்தியாகி அங்கு ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிவாவை வழிபடும் சிந்து வெளி நாகரிகம் இன்றைய வட கிழக்கு ஆப்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானி லும் மற்றும் வட மேற்கு இந்தியாவிலும் உள்ளது [northeast Afghanistan,Pakistan and northwest India ]. இதில் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் இரண்டிலும் இன்று இந்து அல்லது சைவ சமயம் இல்லை என்றே சொல்லலாம் ?. காரணம் புத்தமதம், இஸ்லாம், கிறித்துவம் [Buddhism, Islam, Christianity] போன்றவை அதன் பின் தோன்றி பரவியதாலாகும். அவை சில சில இடங்களில் முன்னைய மதத்தை அழித்து காலூன்றி இன்று அங்கு நிலைத்து விட்டன. அதே போல இன்றைய எல்லைகளும் பிற்காலத்தில் வகுக்கப் பட்டவையே ஆகும் ? வெள்ளையின மக்கள், ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் இருந்து புறப்பட்டிருக்கலாம் என்றும் அவர்களில் ஒரு பிரிவினர் ஐரோப்பாவிலும், மறு பிரிவினர் [ஆரிய மக்கள்] ஈரான் வழியாக இந்தியாவை கி மு 2200-1500 அளவில் வந்தடைந் தனர் என்றும் இன்று அறிகிறோம். இவர்கள் கி மு 2700-2400 ஆண்டு அளவில் உச்சத்தில் இருந்த திராவிட [தமிழ்] மக்களின் சிந்து வெளி நாகரிகத்தை வென்றதால் அல்லது கால நிலை மாற்றத்தால் திராவிட [தமிழ்] மக்கள் தென் இந்தியா நோக்கி புலம்பெயர்ந்தவர்கள். பின் ஆரிய மக்கள் கங்கை நதி கரையோரம் தமது இந்து மத [வைதீக மதம்] நாகரிகத்தை கட்டி எழுப்பினர்கள். அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும். இவர்கள் வேதங்களில் காணப்பட்ட உருத்திரன் என்பவரை சிவனுடன் இணைத்து மற்றும் சில மாற்றங்கள் செய்து தமிழரின் ஆதி சைவ மதத்தை தமது இந்து மதத்திற்குள் உள்வாங்கினார்கள் என்கிறது வரலாறு. அது மட்டும் அல்ல தமது வேத நாகரிகத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருந்த கங்கையை சிவனின் முடியில் வைத்து அந்த கங்கை நதியை பெருமை படுத்தினார்கள். ஆறும், அதன் நீரும் மக்களிடம் கொண்டுள்ள உறவை, தொடர்பை, பண்பாட்டை, பொதுவாக எல்லா நாகரிகங்களிலும் காண்கிறோம். உதாரணமாக "உழவர் ஓதை, மதகோதை,உடைநீர் ஓதை தண்பதங் கொள் விழவர் ஓதை, சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவிரி!" என்று சிலப்பதிகாரம் போற்றுகிறது. அது மட்டும் அல்ல காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது. ஆகவே ஆரம்ப சிவா வழிபாடடை தந்த சிந்து வெளி நாகரிகத்தை வளர்க்க, அமைக்க முக்கிய காரணமாக இருந்த, சிந்து நதி உற்பத்தியாகும் கைலாய மலையை தமது கடவுளான சிவனின் உறைவிடமாக கருதி அதற்கு ஒரு பெருமை சேர்த்திருக்கலாம் என ஏன் நாம் கருதக்கூடாது ? மேலும் இன்றைய நவீன பிரதான சீனாவில் [modern mainland China] சிவ வழிபாடோ அல்லது இந்து மதமோ அல்லது சைவ மதமோ இல்லா விட்டாலும், தொல்பொருள் ஆதாரங்கள் அதற்கு மாறாக இடைக்கால சீனாவின் வெவ்வேறு மாகாணங்களில் [different provinces of medieval China] அவை வழமையில் இருந்ததை உறுதிப் படுத்துகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Like
  7. 'தோப்புக்கரணம் இப்ப 'சூப்பர் பிரெய்ன் யோகா' பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் ஒரு தோப்புக்கரணம் மூலம் அனுபவித்தவர்கள் எம் மூதாதையர்கள். இவர்கள் வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சி ஒன்றை எதோ ஒரு கால கட்டத்தில் எமக்கு தந்துள்ளார்கள். இந்த தோப்புக்கரணம் பிள்ளையார் வழிபாட்டுடன் தொடர்பு படுத்தப்பட்டு அதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. இங்கு வலது காதை இடது கையாளும், இடது காதை வலது கையாளும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் [உக்கி போடுதல்] ஆகும். தோர்பி என்றால் ‘இரண்டு கைகளினால்’ என்றும், ‘கர்ணம்’ என்றால் ‘காதைப் பிடித்துக் கொள்வது’ என்றும் பொருள் என சிலரும், தவறுக்காக வருந்தித் திருந்திச் செய்யும் செயல் தப்புக்கரணம் என்றும், அந்த தமிழ்ச் சொல் வழக்காற்றில் திரிந்து ‘தோப்புக் கரணம்’ என்றாயிற்று என்று சிலரும் விளக்கம் கொடுக்கின்றனர். இது தொடையை வலுவாக்கும் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறலாம். எது எப்படியாயினும் இந்த தோப்புக்கரண பழக்கம் ஒரு ஆயிரம் ஆண்டு அல்லது சற்று முன்னும் பின்னும் பழமை வாய்ந்தது என ஊகிக்கலாம், என் என்றால், இன்று பரவலாக உள்ள பிள்ளையார் வழிபாடு சங்ககாலத்தில் எந்த இலக்கியத்திலும் இல்லை. அதே போல, சங்கமருவிய கால ஐம்பெரும்காப்பியமான சிலம்பிலும் மணிமேகலையிலும் சீவகச் சிந்தாமணியிலும் கூட இல்லை. கிருஸ்துக்குப் பின் 4 ஆம்- 5ஆம் நூற்றாண்டிலேயே தான், குப்தா காலத்தில், பிள்ளையார் ஓர் அளவு அடையாளம் காணக்கூடிய அளவிற்கு வளர தொடங்கினார். பல்லவ மன்னரின் படைத் தளபதியான பரஞ்சோதி [இவரே பிற்காலத்தில் சிறுத்தொண்டராவார்], கி.பி. 7 ஆம் நூற்றாண்டில், வாதாபியில், போரில் வெற்றி பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதியை [பிள்ளையாரை] சோழநாட்டுக்கு எடுத்து வந்து, தமிழ் நாட்டிற்கு முறையாக அறிமுகப் படுத்தப்பட்டார். மேலும் பிள்ளையாரை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் இலக்கியங்கள் அப்பர், சம்பந்தர் திருமுறைகளே ஆகும், எனினும் பிள்ளையாரைப் பற்றி மிகக் குறைவான இடங்களிலேயே குறிப்பு காணக் கூடியதாக உள்ளது. அந்த குறிப்புகளிலும் கூட எங்கும் தோப்புக்கரணம் பற்றி எதுவும் காண முடியவில்லை. இந்து தத்துவத்தில் வினைகளை வேரறுக்கும் கடவுளான பிள்ளையாரை வழிபடும் வழிபாட்டு முறையாக தோப்புக்கரணம் இருந்தாலும், இது ஒரு தண்டனை முறையாகும். பாடசாலைகளில் ஞாபக மறதியினால் நிகழும் சிறு குற்றங்களுக்கு தோப்புக்கரணம் தண்டனையாக வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைவிடவும் கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு தண்டனையாக தோப்புக் கரணம் இருந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது. இவைகள் எல்லாம் சில பல ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகள், எனினும் இன்று இவை அருகிவிட்டன. தோப்புக்கரணம், மூளைக்கும் நரம்பு மண்டலத்திற்கும் செல்லும் உயிர் சக்தியின் அளவை அதிகரிக்கிறது என்றும், மூளைக்கான அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுவதால், மூளையின் வேகம் அதிகரிக்கிறது என்றும் தொடர்ந்து செய்வதன் மூலம் கவனக் குறைவு நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. எனவே மனம் ஒருமுகப்பட்டு, ஞாபகசக்தி அதிகரித்து, படிப்பிலும் கவனம் கூடும் என்ற கருத்து பொதுவாக உள்ளது. ஆனால் இன்று இந்த தோப்புக்கரணம், 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற பெயரில், அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? [is now being researched and enthusiastically promoted in the West as "Super Brain Yoga."] லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார் [Dr. Eric Robins, a medical doctor in Los Angeles, calls it "a fast, simple, drug-free method of increasing mental energy"]. மேலும் பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின், மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் அவர் உறுதிப்படுத்தி கூறுகிறார் [He speaks of one student who raised his grades from C's to A's in the space of one semester]. காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றது என்றும், அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாகவும், இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்றும் அவர் சொல்கிறார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன், புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் செய்யும் பொழுது தமிழரின் தற்காப்புக் கலையையும் எடுத்து சென்று அங்கு அறிமுகப் படுத்தினார், ஆனால் இன்றோ நாம் தற்காப்பு கலையினை நினைக்கும் பொழுது அது சீனா அல்லது ஜப்பான் என்று கருதுகிறோம், அது போலத் தான் இந்த தோப்பு கரணமும் ஒரு காலத்தில் அமெரிக்காவினதாக மாறலாமோ என்று ஒரு ஐயப்பாடு என்னிடம் தோன்றுகிறது ? எனவே இந்த எமது பழம் பழக்கமான தோப்புக்கரணத்தின் பெருமையை உணருங்கள், மற்றவர்கள் அதை சொந்தம் கொண்டாட முன்பு இது தமிழரின் பாரம்பரியம் என்பதை எடுத்து கூறுங்கள். இது வெறும் மதம் சார்ந்த வழிபாடோ, நம்பிக்கையோ மட்டும் அல்ல: மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் அற்புத ஆற்றல் கொண்டது என்று இன்று நாம் அறிவியல் அடிப்படையிலும் அறிகிறோம். எனவே தமிழர்கள் அறியாத தமிழனிடத்தில் உள்ள நல்ல பழக்கவழக்கம் இதுவாகிறது. 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற வடிவில் பிறருக்கு நம்மிடத்தில் உள்ளவற்றின் அருமை- பெருமை இன்று புரிகிறது. ஆனால் நாம் எதற்கெடுத்தாலும் மேற்குலகத்தை வாய்பிளந்து பார்க்கிறோம். எம்மிடம் உள்ள நல்ல பாரம்பரியங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் எமக்கு எனோ புரிவதில்லை? எனவே இனியாவது சிந்தியுங்கள், அறிய முயலுங்கள் !! இதனாலோ என்னவோ முன்பு பாடசாலைகளில் குழப்படி செய்யும் அல்லது பிந்தி வரும் அல்லது குறைந்த புள்ளி பெரும் மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்தார்களோ என இன்று அறிவியல் பூர்வமாக மீளாய்வு செய்ய என் மனம் ஏங்குகிறது ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. “ஆண்டாள் மாலை” கோதை என்ற இயற் பெயரை கொண்ட, தமிழகத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் [Andal], சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப் பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து வந்தார். விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு, விஷ்ணுசித்தர் [Vishnucitta / பெரியாழ்வார்] கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடுவாள். கண்ணாடி முன் நின்று தன் மாலை சூடிய தோற்றம் கண்டு “நான் கண்ணனுக்கு இணையோ? இல்லையோ?” என்று எண்ணி நிற்பாள். இணை என்று ஒரு நாள் மகிழ்வாள். இல்லை என்று தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்வாள். விஷ்ணு சித்தர் வரும் முன் மாலையை கழற்றி மீண்டும் அதே இடத்தில், அதேமாதிரி திரும்பவும் கொண்டு போய் வைத்து விடுவார். ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் இப்படி செய்து வந்தாள். அது மட்டும் அல்ல, மாலையை கழுத்தில் போட்டு, மத்தளம் கொட்ட வரிகள் நிறைந்த சங்கு நெடுநேரம் ஊத, முத்துக்களை உடைய மாலைகள் வரிசையாய் தொங்கும் பந்தலின் கீழ், தன் மச்சான் நம்பி மதுசூதனன் தன்னிடம் வந்து, தன் கைகளைப் பற்றுவதாக கனவுகளும் கண்டாள். "மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்" சிலவேளை கண்ணனுக்காக காத்திருந்து, அவன் கனவில் வரவில்லையே என்று கொதித்து எழுந்தாள். தன் மார்பகத்தைப் பறித்து அவன் மீதே வீசியெறிகிறேன் என்று ஆவேசப் பட்டாள் “கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடும் அள்ளிப்பறித்திட்டு அவன் மார்வில் எறிந்தென் அழலைத்தீர்ப்பேனே” இப்படி அவள் தினம் தினம் சூடிய அந்த மாலைகளே கண்ணனுக்கும் [விஸ்ணுவுக்கும்] சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கி விட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு விஸ்ணு [Sri Vishnu] அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் மகிழ்வானவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டு மென்றும் கேட்டுக் கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் 'இறைவனையே ஆண்டவள்' என்ற பொருளில், ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார். இதையே - ஆண்டாள் சூடிய அந்த மாலையையே - 'ஆண்டாள் மாலை' [Andal garland] என்கின்றனர். இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு, இன்றும் நாள்தோறும் ஒரே ஒரு மாலை மட்டும் ஆண்டாளுக்கு அணிவிக்கப்படுகிறது. அந்த மாலை பின் மேளதாளங்களுடன் எடுத்துச் செல்லப்பட்டு, விஸ்ணுவுக்கு சாற்றப்படும். பிறகு, கோதையை துளசிச் செடியின் கீழ் கண்டு எடுத்து வளர்த்த பெரியாழ்வாருக்குச் சாற்றப்படும். இந்த ஆண்டாள் மாலை பொதுவாக, குருக்கத்திப்பூ [Cinnamon flower], சாமந்தி [Chrysanthemum / செவ்வந்திப்பூ], சேத்தி என்று வழங்கப்படும் விருச்சிப் பூ, தாழம்பூ [Fragrant Screw Pine], செங்கழுநீர்ப்பூ [செங்குவளை / Red Waterlily], 'இருள் வாசி' எனப்படும் இருவாட்சி மலர் [Bisexual flower], பாதிரி [Stereospermum suaveolens அல்லது Bignonia suaveolens] ஆகிய ஏழு மலர்களால் தொகுக்கப் படுகிறது. என்றாலும் இடத்துக்கு இடம் மலர்களின் தொகுப்பில் வேறுபாடு இருக்கலாம் ஏன் என்றால், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மலர் மாலைகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி பெருமாளுக்கு சாத்துவதற்காக வருடந் தோறும் அனுப்பப்படுகிறது. இந்த மலர் மாலை, துளசி, செவ்வந்தி மற்றும் சம்பங்கி பூக்களால் [tulasi, sevanthi and sampangi flowers] தொடுக்கப்பட்டதாக உள்ளது. மேலும் மனிதர்களின் மூச்சுக்காற்றோ, எச்சிலோ மாலையின் மீது படாதவாறு மூக்கையும் வாயையும் துணியினால் கட்டிக்கொண்டு, பொதுவாக, மிக ஆசாரத்துடன் மாலை தொடுப்பார்கள். ஸ்ரீஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கோயிலில் பிரசாதமாகப் பெற்று, ஏதேனும் தோஷத்தாலோ தடையாலோ திருமணம் தள்ளிப்போகிறவர்கள் அணிந்து கொண்டால், விரைவில் அவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! இதனால் தான் பெண்களின் பூப்புனித நீராட்டுவிழாவில் ஆண்டாள் மாலை சூட்டப்படுகிறது. அதாவது, அந்த பெண் கருவுறும் நிலையை அடைந்து விட்டாள், ஆகவே அவளுக்கு இனி திருமணம் இனிதாக நிறைவேற, ஆண்டாள் மாலையை அணிவிக்கிறார்கள். ஆனால் இவை எல்லாம் ஒரு புராண கதைகளின் அடிப்படையில் எழுந்த நம்பிக்கை மட்டுமே ! சீதை என்றுமே ஒழுங்காக ராமனுடன் வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை, அது மட்டும் அல்ல தனிப்பெண்ணாக பிள்ளைகளை வளர்த்து எடுத்து, இரண்டாம் தடவையும் அவளின் புனிதத்தை பரிசோதிக்க தீயில் குளிக்கும் படியும், அதில் வெற்றி அடைந்து உலகத்துக்கு காட்டி, அதன் பின் தன்னுடன் வாழ வரும்படியும் கணவன் ராமன் கேட்டதற்கு, வாழ்ந்து பட்ட துன்ப வாழ்வு இனி போதும், உன்னிடம் வந்து வாழ்வதை விட சாவு மேலானது என கருதி, பூமியிற்குள் குதித்து தற்கொலை செய்கிறாள். ஆனால் இன்றும் 'இராமன் - சீதை போல வாழ்க !' என வாழ்த்துவதை காண்கிறோம், அப்படித்தான் இந்த ஆண்டாள் மாலையின் கதையும். விஸ்ணுவுக்கு பூதேவி மற்றும் ஸ்ரீதேவி என இரு மனைவிமார்கள் இருப்பதாக புராணம் கூறுகிறது. ஆகவே இரண்டு மனைவிகள் உள்ள ஒரு குடும்பத்தரான விஷ்னுவை தான் தன கணவராக - அதாவது அவரின் மூன்றாவது மனைவியாக தன்னை நினைத்து - விஸ்ணுவுக்கு சாத்த தொடுக்கப்பட்ட மாலையை தன் கழுத்தில் போட்டு கனவு காண்கிறாள் ஆண்டாள் என இதனால் அறிகிறோம். மற்றது, எமக்கு கிடைக்கப்பெற்ற வரலாற்றின் படி, ஆண்டாள் கனவில் கற்பனையில் மட்டுமே தன் திருமணத்தையும் திருமண குடும்ப வாழ்வையும் விஸ்ணுவுடன் கழிக்கிறாள். என்றாலும் புராணக் கதையின் படி, ஒரு நாள், ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாக பெரியாழ்வார் கேள்விப்பட்டு, ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி, பல்வகை இசைக்கருவிகள் இசைத்து, ஸ்ரீரங்கம் கோயில் மண்டபத்தை அடைந்தனர். அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க, பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் தட்டுச் சேலையணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலின் கருவறைக்குள் சென்று, அவனைக் கண்களாரக் கண்டு இறைவனுடன் கலந்துவிட்டாள் அல்லது அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள் என்று கூறுகிறது? அதே நூற்றாண்டை சேர்ந்த [ஏழாம் நூற்றாண்டு] திருஞான சம்பந்தர், மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரை கழுவேற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் போன்றவை கூறுகின்றன. இதனால் ஆத்திரம் கொண்ட சமணர்கள், அவர்கள் திட்டமிட்டபடி சம்பந்தரின் திருமணம் ஆலயத்தில் நடந்தவேளையில் ஆலயத்திற்கு தீ வைத்து சம்பந்தரையும் ,கல்யாணத்தில் கலந்து கொண்டவர்களையும் தீயுடன் ஐக்கியமாக்கி சமணர் பழி வாங்கிக் கொண்டதனை 'இறைபதம் அடைந்தனர்' என புராணம் அதே காலத்தில் கூறியதை ஒப்பிட்டு பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அப்படி என்றால் இந்த ஆண்டாள் மாலையை தம் மகளுக்கு சூடுவதால் அல்லது ஸ்ரீஆண்டாளுக்கு அணிவித்த மாலையை கோயிலில் பிரசாதமாகப் பெறுவது மூலம் உண்மையில் எதை பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் ? புரிந்தவர்கள் இதற்கும் மற்றும் 'இராமன் - சீதை போல வாழ்க !' என்பதற்கும் சரியான பதில் தருவார்கள் என்று எண்ணுகிறேன் நன்றி கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  9. "என்னருகில் நீயிருந்தால்" "என்னருகில் நீயிருந்தால் எரிமலையும் குளிராகும் கன்னங்கள் இரண்டும் சிவத்து ஒளிரும்! அன்ன நடையும் வஞ்சிக்கொடி இடையும் அன்பு உள்ளத்தின் கொஞ்சல் மொழியும் ஆன்மிகம் தராத சொர்க்கமே எனக்கு!" "உன்னருகில் நான் இருக்க வேண்டும் உயிருடன் நீயும் கலக்க வேண்டும்! உரிமை கொண்ட நண்பியாக நீயும் உச்சி முகர்ந்து காதல் பொழிந்து உமிழ்நீரால் என்னை நீராட்ட வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "இலங்கையின் பூர்வீக குடிகள்" இலங்கை அரசன் மூத்தசிவாவின் [Mutasiva] இரண்டாவது மகன், சிவனை வழிபாடும் [Siva worshipping] தீசன் [Tissa /தேவநம்பிய தீசன்], கி.மு. 307 இலிருந்து கி.மு. 267 வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த பொழுது, மகிந்த [Mahinda] துறவியின் தலைமையில், பேரரசன் அசோகனின் தூதர்கள் அவரையும் அவரின் குடி மக்களையும் புத்த மதத்திற்கு மாற்ற முன், இலங்கையில் எந்த பகுதியிலும் புத்த சமயம் என்று ஒன்றும் இருக்கவில்லை. அதே போல, மகா விகாரை துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக் குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், [creating the Sinhala race by integrating all the Buddhists from different tribes / ethnic groups into one race] இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை. இந்த கால பகுதியில் இந்தியாவில் புத்த மதத்தின் செல்வாக்கு சரிந்து வருவதையும் வட இந்தியாவில் வைதீக மதமும், தென் இந்தியாவில் சிவனை முழு முதற் கடவுளாக வழிபாடும் சைவ மதமும் மீண்டும் வலுப்பெற்று வருவதையும் கேள்விப் பட்ட புத்த மத துறவிகள், புத்த மதத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தை உணர்ந்து, அதற்க்கு காவலனாக சிங்கள இனத்தை உருவாக்கினார்கள் என்பதே உண்மை. எனவே விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளாக தோணியில் நாடு கடத்தப் பட்டு, இலங்கையில் கரை ஒதுங்கிய மொத்தம் 701 பேரின் ஆரிய ரத்தமும் மற்றும் அவர்கள் அனைவரினதும் தமிழ் மனைவிமாரினதும் , அவர்களுடன் அவர்களுக்கு பணி புரிய வந்த தமிழ் கூட்டாளிகள், வேலையாட்களினதும், மற்றும் அவர்கள் வரும் பொழுது ஏற்கனவே அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த ஆதி தமிழ் குடிகளின் [நாகர், இயக்கர்] தமிழ் அல்லது திராவிட இரத்தமும் சேர்ந்து, சிங்கள வம்சம் ஒரு கலப்பு வம்சமாக பின் உருவாக்கப்பட்டது என்பது மிக மிக தெளிவு. நாகர்கள் தமிழ் பேசிய சாதியார் அல்லது தொல் திராவிடர் என வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது ஆரியர்கள், திராவிடர்கள், என்போரின் கலப்பு மக்களாகச் சிங்கள மக்கள் உருவாகினார்கள். என்றாலும் சிங்கள இனமாக உருவாக்கப்பட்ட, புத்த மதத்தை பின்பற்றுபவர்களை தவிர, அங்கு இன்னும் சிவனை வழிபாடுபவர்களும், வைதீகத்தை பின்பற்று பவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் புது மொழியான சிங்களத்தை ஏற்காது, தமது பண்டைய மொழியையே, அநேகமாக தமிழையே பேசினார்கள். இலங்கையில் தமிழர் என்ற வார்த்தையை குறிக்கும் கல்வெட்டுகள் பிராகிருதம் அல்லது பாளி மொழியில், கி மு 6ம் அல்லது கி மு 5ம் நூற்றாண்டில் இருந்து 'Damela, Dameda, Dhamila and Damila' என பல அடையாளம் இன்று காணப் பட்டுள்ளது [Epigraphic evidence of an ethnicity termed as such is found in ancient Sri Lanka where a number of inscriptions have come to light datable from the 6th to the 5th century BCE mentioning Damela or Dameda persons] அதாவது சிங்களம் என்ற ஒரு இனம் தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகளிற்கு முன் தமிழர் என்ற வார்த்தை இலங்கை கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது. எனவே மூத்த சிவாவும் அவன் குடி மக்களும் பேசிய மொழி கட்டாயம் சிங்களம் அல்ல. அது தமிழாகவோ அல்லது ஒரு தமிழ் கலந்த மொழியாகவோ இருக்கலாம் என்பது தெளிவு, அது மட்டும் அல்ல அவன் பெயரிலேயே தமிழ் சொல் 'மூத்த' ['elder'] இருப்பது கவனிக்கத் தக்கது. மேலும் விஜயனும் அவனது தோழர்களும் மணந்த பெண்கள், பாண்டிய தமிழ் மகளிர்கள். மகாவம்சத்தின் கெய்கரின் மொழி பெயர்ப்பிலும், முதலியார் விஜயசிங்கவின் மீளாய்விலும் ‘தெற்கேயுள்ள மதுரை’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாளி மொழியில் பாண்டியர் என்ற பெயர் பண்டு என வழங்கப்பட்டது. அதனால் தானோ என்னவோ பண்டுவாசுதேவ, பண்டுகாபய முதலிய அரசபெயர்கள் காணப்படுகின்றன. இன்றைக்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையும், தமிழகமும் ஒரே பகுதியாக இருந்தது. இரு பகுதியிலும் 7000 ஆண்டுகளுக்கு முன் ஒரேவித இனக்குழு மக்களே வாழ்ந்தனர். தமிழ் நாட்டின் ஆதிச்சநல்லூர் போன்ற தென்பகுதியிலிருந்து ஆதி இரும்புக்காலப் பண்பாடு இலங்கையின் வடமேற்குக் கரையில் இருந்த பொம்பரிப்புப் பகுதிக்குப் பரவி அதன்பின்னர் அப்பண்பாடு அநுராதபுரம் போன்ற உள்நாட்டுப் பகுதிக்குப் பரவியது எனலாம். உதாரணமாக பொம்பரிப்புப் பகுதி இரும்புப் பண்பாடு அநுராதபுரத்திற்கு காலத்தால் முந்தியது என இலங்கை தொல்லியலாளர் செனவிரத்ன போன்றவர்கள் கருதுவது இதனை உறுதி செய்கிறது. தீபவம்சம் இரண்டாம் பாடத்தில், [Dīpavaṁsa II. The Conquering of the Nāgas] இருபதாவது பாடலில், இரண்டாவது முறையாக மீண்டும் புத்தர் இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வந்தார் என்கிறது [The highest of men went to the place where the Nāgas fought their battle; the merciful Teacher (there) stood in the middle of both noble Nāgas] , இதுவும், விஜயன் வந்தேறு குடியாக இலங்கைக்கு வருமுன், கி மு 5ஆம் / 6ஆம் நூறாண்டில் இலங்கையில் நாகர் வாழ்ந்ததையும், அவர்களுக்கு என ஒன்றுக்கு மேற்பட்ட அரசு இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் நாக நாடு என்பதை நாகப்பட்டினமும் அதை சுற்றியுள்ள பகுதியாகவும், இலங்கை தீவின் வடக்கு முனையாகவும் வகைப் படுத்தப்படுகிறது.[nagapattinam and the surrounding areas and also the northern tip of island]. நாகர்கள் கி மு 3ஆம் நூறாண்டில் தமிழ் பண்பாட்டுடனும் மொழியுடனும் ஓரினமானார்கள் என க இந்திரபாலா கூறுகிறார் [Scholars like K. Indrapala] பல அறிஞர்களின் கருத்தின் படி இவர்கள் திராவிட இனத்தவர்கள் ஆவார்கள். உதாரணமாக பல சங்க கால புலவர்களை நாக இனத்தவர்களில் காணலாம், உதாரணமாக முரஞ்சியூர் முடிநாகராயரை கூறலாம். பண்டைய தமிழ் காவியமான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் கூட யாழ் குடா நாட்டை நாக நாடு என குறிப்பிடுகிறது. நாக வழிபாடும், ‘நாக’ என்ற சொல் வரும் பெயர்களும், எடுத்துக்காட்டாக நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகபூசணி மற்றும் இலங்கையின் வடபெரும் பகுதி நாகதீபம் என அழைக்கப்பட்டதும், பல வரலாற்று உண்மைகளை மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக விளங்கியமைக்கு ஆதாரமாய் இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட பிராமிச் சாசனங்கள் [Tamil inscription] அமைகின்றன என பேராசிரியர் சி. பத்மநாதன் தமது இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, இலங்கை திசமகாராமையில் கண்டு பிடிக்கப்பட்ட, 'திசமகாராமை தமிழ் பிராமிச் சாசனம்' என கூறப்படும், கறுப்பு, சிவப்பு மட்பாண்ட தட்டையான தட்டங்களை சொல்லலாம். இதில் தமிழ் பிராமியில் பொறிக்கப்பட்டு உள்ளது. இது சுமார் கி.மு 200 ஆண்டு காலத்திற்கு உரியது என அகழ்வினை மேற்கொண்ட ஜேர்மன் அறிவியலாளர் [German scholars] குறிப்பிடுகின்றார். அதே போல பூநகரி, யாழ்ப்பாணத்திலும் [Poonagari, Jaffna,] கி மு 2ஆம் நூறாண்டு தமிழ் கல்வெட்டு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த. இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க புலவர், ஈழத்துப் பூதன்தேவனார் என்னும் புலவரின் ஏழு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இலங்கையில் கிருஸ்துக்கு முன், தமிழ் மொழி பேசப் பட்டது மட்டும் அல்ல, இலக்கிய மொழியாக அன்றே வளர்ச்சி அடைந்து இருந்ததையும் இது எடுத்து காட்டுகிறது. அவரின் ஒரு பாடலை கீழே தருகிறேன், இது தமிழின் சொல்வளம் எவ்வளவுக்கு அன்று வளர்ச்சி அடைந்து இருந்தது என்பதை உறுதிப் படுத்துகிறது. "அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல், பெருந் தோட் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி 5 மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் 10 வட புல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி, இவ் உலகத்தானே!" [நற்றிணை 366] அவள் தன் அல்குல் பகுதியில் திருந்திய மணி கோத்த ஆடை அணிந்திருப்பாள். அது பாம்பு உரித்த தோல் போல் மென்மையான ஆடை. அதன் ஊடே அவள் அல்குல் கண் இமைப்பது போல் அவ்வப்போது தெரியும். அவள் அகன்ற மார்பகத் தோள் கொண்ட சின்னப் பெண் (குறுமகள்). தூசு இல்லாமல் நூய்மையாகக் கழுவி, கருநீல மணி போல் அழகொழுகத் தோன்றும் கூந்தலை உடையவள். குளிர் காலத்தில் பூக்கும் குறுகிய காம்பை உடைய முல்லை மலரை அந்தக் கூந்தலில் சூடிக்கொண்டிருப்பாள். அதில் வண்டுகள் மொய்க்கும். அந்தக் கூந்தல் மெத்தையில் உறங்குவதை விட்டுவிட்டு, வாடைக் காலத்திலும் பொருள் தேடிக்கொண்டிருப்போர் உண்மையில் மடவர் (மடையர்) என்கிறது அந்த பாடல். பேசுவதற்கு முதலில் சைகை தோன்றி, பின் குரல் மூலம் ஒலி எழுப்பி, பின் அது மற்றவர்களால் கேட்டு உணரக் கூடிய, அடையாளப் படுத்த கூடிய, குரல் அல்லது ஒலி மொழியாக மாறி, அதற்கு ஒரு முதல் கட்டமைப்பாக எழுத்து தோன்றி, பின் அதற்கு ஒரு கட்டுப்பாடாக இலக்கணம் வரையறுத்து, அதன் பின் தான் இலக்கியம் மலர்கிறது. சிங்களம் என்ற இனம், மொழி தோன்ற முன், இந்த ஈழத்து புலவர் எப்படி அழகாக, ஆழமாக, கவர்ச்சியாக ஆனால் மறை முகமாக தன் மனக்கிளர்ச்சியை உங்களுடன் பகிர்கிறார் என்று பாருங்கள் !! தீபவம்சம், பாடம் 19 இல் [Dīpavaṁsa [The Chronicle of the Island] XIX.], 17 ஆவது பாடல், இந்த அரசனை கொன்று, தட்டிகன் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். கடைசி ஐந்து ஆட்சிகள் தமிழரினதாக [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன்] மொத்தம் 14 ஆண்டுகள் 7 மாதம், கிமு 103 ஆண்டில் இருந்து ஆட்சிசெய்தனர்.என்கிறது [ Having killed this king, a person Dāṭhiya by name reigned two years. These five sovereigns belonging to the Damila tribe governed fourteen years and seven months in the interval between the two parts of Vaṭṭagāmani’s reign] இலங்கை வரலாற்றில் பதிவான முதலாவது தமிழ் ஆட்சி. 22 வருடங்கள் நிலவியது எனவும், சேனன் குத்திகன்(கி.மு 237-கி.மு 215) என்ற இரு தமிழர் ஆட்சி செய்தனர் எனவும் அது மேலும் கூறுகிறது. இதில் ஒன்றை நீங்கள் கவனிக்க வேண்டும், தமிழர் என்ற சொற்பதம் பல இடங்களில் மொழியையும் இனத்தையும் குறிக்க இங்கு பிரயோகிக்கப் பட்டுள்ளது, ஆனால் முதலில் கி பி 4ஆம் நூறாண்டில் எழுதப் பட்ட பாளி நூல் தீபவம்சதில் ஒரே ஒரு முறை தான் சிஹல [‘Sihala' / lion in Pali] என்ற சொல் பாவிக்கப் பட்டுள்ளது. அதுவும் சிங்கத்திற்குப் பிறகு, தீவு சிஹல என் அறியப்படும் என்று மாத்திரமே குறிக்கப் பட்டுள்ளது [“ The island of Laṅkā was called Sīhala after the Lion (sīha); listen ye to the narration of the origin of the island which I am going to tell.” Dipavamsa IX, Vijaya’s Story]. "குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே "என்றும்;" கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;" குடி தனை நெருக்கி பெருக்கமாய் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே " என்றும்;... திருஞான சம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாடியுள்ளார். எனவே பாடும் அளவிற்கு பெருமை அடைவதாயின், இந்த சிவ ஆலயம் கட்டாயம் இதற்கு முன்னதாகவே, மிகவும் பழமைவாந்ததாக இருந்திருக்கும். மகாவம்சம் /முப்பத்து ஏழாவது அத்தியாயம் /மகாசேன மன்னன் என்ற பகுதியில்,[40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை , நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாக இருக்க வாய்ப்பு அதிகம் தென்படுகிறது. மற்ற இரண்டிற்கும் விளக்கம் தேவைப் படுகிறது [The king built also the Manihira-vihara and founded three viharas, destroying temples of the brahmanical gods:- the Gokanna vihara, and another vihara in Erakavilla, anda third in the village of the Brahman Kalanda; moreover ...According to the Tika, the Gokanna-vihara is situated on the coast of the 'Eastern Sea', The Tika then adds : evam sabbattha Lankadipamhi kuditthikanamalayam viddhamsetva, Sivalingadayo nasetva buddha- sasanam eva patitthapesi 'everywhere in the island of Lanka he established the doctrine of the Buddha, having destroyed the temples of the unbelievers, i.e. having abolished the phallic symbols of Siva and so forth ']. ஆகவே இலங்கையில் சிவ வழிபாடும், அந்த வழிபாட்டிற்க்கான ஆலயங்களும் மிகவும் பழமை வாய்ந்தது என்று சுட்டிக் காட்டுவதை இங்கு காணலாம். அது மட்டும் அல்ல, ஆலைய உடைப்புகளும் உடைத்த பின் அந்த இடத்தில், விகாரைகள் அமைப்பதும் ஒன்றும் புதிது அல்ல என்பதும் புலப்படுகிறது ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன மன்னனுடைய ஆட்சிக் காலத்தில்(கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது அங்கு முன்பு இந்து [சைவ] சமயம் இருந்ததையும் அதனின் தாக்கம் புத்த சமயம் பரப்ப பட்ட பின்பும் தொடர்ந்ததையும் தெளிவாக காட்டுகிறது. எனவே சுருக்கமாக ஆதார பூர்வமாக சொல்வதென்றால், விஜயன் என்று ஒரு புராண கதாநாயகன் நாடு கடத்தப்பட்டு வந்தேறு குடியாக 700 தோழர்களுடன் இலங்கை தீவிற்கு வரும் முன்பே சிவ வழிபாடும் தமிழும் அங்கு இருந்துள்ளது. விஜயன் வந்து 250 ~ 300 ஆண்டுகளின் பின்பு தான் புத்த மதம் இலங்கைக்கு வந்தது, மேலும் விஜயன் வந்து 1000 ஆண்டுகளிற்கு பின்புதான் சிங்களம் என்ற இனமோ அல்லது மொழியோ ஒரு கட்டுக் கோப்பிற்குள் உருவாக தொடங்கின. அது மட்டும் அல்ல, மகாவம்சம் / விஜயனின் பட்டாபிஷேகம்[CHAPTER VII /THE CONSECRATING OF VIJAYA] 46 - 50 இல். அங்கு பல குடியிருப்புகளை ஏற்படுத்திய பிறகு விஜயனுடைய மந்திரிகள் அவனிடம் ஒன்றாக வந்து ‘ஐயனே ! தாங்கள் முடி சூட்டிக் கொள்ள இசைய வேண்டும்" என்கிறார்கள். ஆனால், அவர்கள் வேண்டியும் அவன் மறுத்தான். 'உயர் குல மங்கை ஒருத்தியை', அதே சமயத்தில் அவளை ராணியாகக் கொண்ட பிறகே, பட்டாபிஷேகம் செய்து கொள்ள முடியும்’ என்று கூறி வேண்டுகோளை ஏற்க மறுத்தான். தங்கள் எஜமானனுக்குப் பட்டாபிஷேகம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்களாக, மந்திரிகள் அதற்கு வழிசெய்வது கஷ்டமாக இருந்த போதிலும், அவ்வகையில் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவர்களாக, விலையுயர்ந்த பரிசுப் பொருள்கள், ஆபரணங்கள், முத்துக்களுடன் சிலரை தென்னிந்தியாவிலுள்ள மதுரை மாநகருக்கு அனுப்பி வைத்தனர்' என்கிறது. [When they had founded settlements in the land the ministers all came together and spoke thus to the prince : Sire, consent to be consecrated as king But, in spite of their demand, the prince refused the consecration, unless a maiden of a noble house were consecrated as queen (at the same time). But the ministers, whose minds were eagerly bent upon the consecrating of their lord, and who, although the means were difficult, had overcome all anxious fears about the matter, sent people, entrusted with many precious gifts, jewels, pearls, and so forth, to the city of Madhurai in southern (India), to woo the daughter of the Pandu king for their lord,]. இது அன்று, அதாவது கி மு 6ஆம், 5ஆம் நூறாண்டில், தமிழருக்கு உள்ள மதிப்பை பறைசாற்றுகிறது, சிங்கள இனத்தின் முதல் மூதாதையான விஜயன் வாயினூடாகவே 'உயர் குல மங்கை' என மதுரை தமிழ் இளவரிசையை கூற வைத்ததிற்கு, நாம் மகாவம்ச கதையின் நூலாசிரியருக்கு கட்டாயம் நன்றி செலுத்த வேண்டும். இலங்கையில் கண்டுபிடிக்கப் பட்ட கிருஸ்துக்கு முற்பட்ட கல்வெட்டுகளில், 50 மேற்படட இடத்தில் முக்கிய இடத்தை வகுத்த சொல் 'பருமக' [parumaka] ஆகும். இது தென் இந்தியாவில் காணப்பட்ட, தமிழ் சொல் பருமகன் அல்லது பெருமகன் [perumakan] உடன் ஒன்றிப் போவதாக, ராசநாயகம்,சி பத்மநாதன், ப புஸ்பரத்தினம் போன்ற அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளார்கள். இதற்கு ராசநாயகம் , தலைவன், கோமான், மன்னன் [chief, lord, and king] மற்றும் பரணவிதான [Paranavitana] இதற்கு அதே பொருள் பட, ஆனால் பொதுப் படையாக இல்லாமல், இந்தோ ஆரியன் தலைவர்கள் [Indo-Aryan chieftains] என விளக்கி உள்ளார். ஆனால் கிருஸ்துக்கு பின் இந்த பெயர் மாற்றப் பட்டு அது மாபருமக [maparumaka / பெரும் பெருமகன்] என பிரதியீடு செய்யப் பட்டுள்ளது. அப்படியான கல்வெட்டு ஒன்று மட்டக்களப்பு, வெல்லாவெளி - தளவாய் என்ற இடத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிராமிச் சாசனம் 'பருமக நாவிக ஷமதய லெணே' என்பதாகும். இதை 'பருமக' [பெருமகன்] என்ற பட்டத்திற்குரிய கப்பல் தலைவன் ஷமதய என்பவன் கொடுத்த குகை என பொருள் படுத்தப் படுகிறது. எனவே இந்த இடத்தில் கிருஸ்த்துக்கு முன், தமிழ் மொழியையும் அல்லது வேறு மொழியையும் [பரணவிதான கூறியது போல் இந்தோ ஆரியன்] பேசியோர் வாழ்ந்து உள்ளனர் என்பது உறுதிப் படுத்தப் படுகிறது. எனவே விஜயன் வரும் பொழுது அவனுக்கும் அவன் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பூர்வீக குடிமக்களில் இவர்களும் ஒருவராகும், எனவே இவர்களை நீங்கள் ஒதுக்க முடியாது ,இவர்களும் இம் மண்ணின் மைந்தர்களே !! சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை பரப்பி தம் கட்டுப் பாட்டில் வைத்திருந்த, வைத்துக் கொண்டிருக்கிற துறவிகள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் மிக தெளிவாக சொல்கிறார்: 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும் பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என்று அவர் போதித்ததுடன், மற்றவர்களுக்கு உதாரணமாக அவர் நான்கு அடிப்படை பேருண்மைகளையும் கடைபிடித்து வாழ்ந்து காட்டினார். இன்று பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புத்த சமயவாதிகள் என்ன செய்கிறார்கள் ?, எது செய்யப் போகிறார்கள் ? என்ற தவிப்பில், பயத்தில் மற்ற இனம் வாழும் நாடாக மாறுகிறது? காரணம் அந்த புத்தரின் புனிதமான நான்கு பேருண்மைகளை சரியாக உணராமையும் கடைப் பிடிக்காததும் ஆகும். அப்படியான நடவடிக்கைகளுக்கு சார்பான, சாதகமான வழி அமைத்து கொடுத்தது தான் இந்த மகாவம்சம் என்று சொல்லலாமோ என்று எனக்கும் தோன்றுகிறது ? உண்மை முதலில் ஒரு முள் போல வலிக்கும், ஆனால் முடிவில் அது ரோஜா போல பூக்கும் [The truth hurts like a thorn at first; but in the end it blossoms like a rose] என்ற பொன்மொழியை நாம் மறக்கக் கூடாது. இதையே திருவள்ளுவரும் குறள் 299 இல், "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு" என்கிறார். அதாவது, புறத்தில் உள்ள இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல, சான்றோர்க்கு அகத்து இருள் நீக்கும் பொய்யாமையாகிய விளக்கே விளக்கு ஆகும் என்கிறார். அந்த அவரின் வழியில் "சத்தியத்தை அறிய, சத்தியத்தை நேசிக்க, சத்தியத்தில் வாழ்வது மனிதனின் முழு கடமை" ["To know the Truth, to love the Truth, and to live the Truth is the whole duty of man."] என்பதை உணர்ந்து இந்த சுருக்கத்தை தருகிறேன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  11. 'இது பித்தனின் அறிகுறி அல்ல, ஒரு ஆரோக்கியமான திட்டமிடலின் அறிகுறி' பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த வல்லிபுரம் என்னும் வேளாளர் நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மா என்பாரை மணந்து வேளாண்மை செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஆண்கள் இருவரும் பெண்கள் இருவருமாக நான்கு பிள்ளைகள். ஆண்களில் ஒருவரின் பெயர் செல்லப்பா ஆகும். செல்லப்பா இளமையில் கந்தர்மடத்து சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி கற்றபின், நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆங்கிலம் கற்று வந்தார். ஓரளவு கல்வி கற்றபின், சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்தி உத்தியோகம் பார்க்க வேண்டியவரானார். யாழ்ப்பாணக் கச்சேரியில் ஆராய்ச்சி [ஆராய்ச்சி / public relations officer] உத்தியோகம் பெற்று வெகுதிறமையாகக் கடமையாற்றினார். என்றாலும் ஞான நாட்டங் கொண்ட செல்லப்பரின் நடையுடை பாவனைகளில் நாளிலும் பொழுதிலும் மாற்றங்கள் உண்டாயின. அவரின் போக்கு பெரிய புதிராகவே இருந்தது. வெளியில் அதை காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளுற நாலூர் கந்தசுவாமியாருடன், அதிகமாக அர்த்த சாமத்தின்பின் ஒரு அந்தரங்க தொடர்பை தம்மில் ஏற்படுத்தி, ‘பிதாவே பிதாவே’ என்று பிதற்றியும் வந்தார். இந்த பித்தம் ஒரு எல்லையை தாண்டிய வேளையில், தமக்குள்ளேயே பேசிக்கொள்ளுதல், ஓமோம் என்று தலையசைத்தல், வலக்கையை மேலே உயர்த்தி விசுக்கி உரத்துப்பேசி, வருவோர் போவோரைத் தம்மை அண்டவிடாது துரத்தியும் வந்தார். அப்பொழுது நல்லூரை வட்டமிட்ட கடையிற் சுவாமிகளின் கடைக்கண் பார்வையும் தீட்சையும் உபதேசமும் அவருக்கு கிடைத்தது. அதன் பின்னர், நல்லூர் தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்க தொடங்கினார். இதை கண்ட நல்லூர் அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சக்தியுண்டென்று அனுமானித்து அவரைச் சூழ்ந்தனர். அதே வேளையில் அவர் தமக்குள்ளே முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள், விசரன் என்று கல்லெறியவும் தொடங்கினர். அந்த கால கட்டத்தில், 1905, சிவயோகசுவாமி [1872–1964], இவரை ஒருநாள் அங்கு கண்டார். அப்பொழுது, சிவயோகசுவாமியை பார்த்து "யாரடா நீ ?" என உலுக்கி "ஒரு பொல்லாப்பும் இல்லை" "எப்பவோ முடிந்த காரியம்" "நாம் அறியோம்" "முழுதும் உண்மை" என செல்லப்பா உறுமினார். இது தான் சிவயோகசுவாமியை சிந்திக்க வைத்தது. அதன் பின் சிவயோகசுவாமி தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லப்பாசுவாமியை அடுத்த ஐந்து ஆண்டுகள் பின் தொடர்ந்தார், தன குருவான, "தானே பேசிக்கொள்ளும் பழக்கம்" கொண்ட, முழுக்க முழுக்க "பித்தனின் அறிகுறி கொண்ட " செல்லப்பாசுவாமியின் இந்த வரிகளை, "ஆரோக்கியமான திட்டமிடலின் அறிகுறியாக" சிவயோகசுவாமி தனது நற்சிந்தனை பாடல்களில் தெளிவுபடுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் யோகசுவாமியின் அடியார்களால் “மகாவாக்கியங்கள்” என்று அந்த நான்கு வாக்கியங்களும் இன்று வரை மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது "கருத்தில் நினைந்துருகி கைகூப்புந் தொண்டர் வருத்தமெலாந்த தீர்க்கும் வடிவேல் – திருத்தலத்தில் தேரடியில் தேசிகனை கண்டு தெரிசித்தேன் ஆரடாநீ என்றான் அவன்." [நற்சிந்தனை பாடலில் இருந்து] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. "பூச்சிய உடல் அளவு பண்பாடு" இன்று உலக அழகி போட்டி [beauty queen competition], உடை அலங்கார காட்சி [fashion show] மற்றும் நடிகைகளின் தேர்வில், உலகளாவிய ரீதியில் 'உடல் அளவு' முதலிடம் வகுப்பதை காணுகிறோம். அது மட்டும் அல்ல, வரலாற்றில் ரோமில் [Ancient Rome] இருந்து பண்டைய தமிழ் நாடுவரை அது ஆதிக்கம் செலுத்தியும் உள்ளது. உடல் அளவைப் பற்றி நாம் சிந்திக்கும் பொழுது, ஆண் மற்றும் பெண்களின் உடல் அமைப்பில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் மற்றும் பொதுவாக, பெண்ணின் உடலமைப்பைக் காட்டிலும், ஆணின் உடல் அமைப்பு பெரிதாக இருப்பதையும் காண முடியும். அது மட்டும் அல்ல, உதாரணமாக, பெண்ணுக்கு 36", 24", 36" [bust vs waist vs hip / மார்பளவு vs இடை vs இடுப்பு] போன்ற ஒரு நாழிகை அளக்கும் கருவி வடிவில் [hourglass shape] இருப்பதையே சிறந்ததாகவும், அதேபோல, ஆணுக்கு ஆங்கில எழுத்தான 'வி' (V) வடிவம் சிறந்ததாகவும் கருதப் படுகிறது. இதில் பூச்சிய உடல் அளவு என்பது 30 22 32 அங்குலத்துக்கும் 36 28 36 அங்குலத்துக்கும் இடையில் எங்கேயாவது இருக்கலாம். உதாரணமாக "புடைகொண்டு எழு கொங்கையும் அல்குலும் புல்கி நிற்கும் இடை கண்டிலம்; அல்லதுஎல்லா உருவும் தெரிந்தாம்" [பக்கங்களில் பொங்கி எழுகின்ற மார்பகங்களையும்; அல்குலையும், இணைக்கின்ற இடை என் கண்களுக்குப் புலனாகவில்லை; அது தவிரப் பிற உறுப்பெல்லாம் தெரிகின்றது] - என்ற கம்பராமாயணம் பாடலும் மற்றும் "மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்" [உன் வலிமையான மார்புகளின் பாரத்தில் உன் சின்ன இடை துன்பப் படுவதை பார்] - என்ற சிலப்பதிகாரம் பாடலும் இதை சாட்சி பகிர்கின்றன. அது மட்டும் அல்ல, திருக்குறளும் தனது குறள் 1115 இல், "அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை" என்று கூறுகிறது. அதாவது, அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலரின் காம்பினைக் கிள்ளியெறியாமல் சூடினாள்; அதனால் வருந்தும் அவளுடைய நுண்ணிய இடை முறிந்து அவள் விழுந்து இறந்து விடுவாள். எனவே மங்கலமாக பறைகள் இனி ஒலியா என்கிறது. பெண்ணின் இடையை அத்தனை மெலிதாக வள்ளுவர் காட்டுவதை காண்கிறோம். அதே போல , இன்றைய காலத்திலும், கவிஞர் வாலி 1963 இல் எழுதிய ஒரு பாடல் ஒன்று " ஒடிவது போல் இடை இருக்கும் இருக்கட்டுமே ஹோய் - அது ஒய்யார நடை நடக்கும் நடக்கட்டுமே ஹோய்" என்று பாடுகிறது. தமிழ் இலக்கிய நுால்களில், இடையை கவர்ச்சியான உறுப்பாக வர்ணித்துள்ளதுடன், அதை மெல்லிடை [மெல்லிடை வருந்துமென மேகலை இரங்க (கந்த புராணம்)], கொடியிடையெனவும் [கொடியிடையாள்’ என்று சங்க காலத்தில் இருந்து `குறுக்கு சிறுத்தவளே’ என சமகால திரைப்பட பாடல்கள் வரை] கவிகளில் பாடுகிறது. மேலும் பண்டைய தமிழரும் பெண்ணின் அழகை சிறிய இடை, பெரிய மார்பளவு மற்றும் பெரிய புட்டப் பாகம் / இடுப்பு (small waist and large bust and hips) கொண்டு அளந்தனர், இதை அன்றைய அல்லது பண்டைய பெண் அல்லது இறைவி உருவ சிலைகளில் இருந்து அறியலாம். அன்று "உண்பது நாழி; உடுப்பவை இரண்டே"; என உடை இரண்டு துண்டுகளையே [கீழாடை, மேலாடை] கொண்டிருந்தது. அது படிப்படியாக ஆண்களுக்கு வேட்டி, சால்வையாகவும், பெண்களுக்கு சேலையாகவும் பரிணமித்தன. இது ஒரு பெண்ணின் இடையை கச்சிதமாக, நேர்த்தியாக, பார்ப்பவர் கண்களுக்கு அம்பலப் படுத்துவதுடன் (it exposes the waist of a woman), இடை மற்றும் மார்பை, புடவை மடிப்பால் மேலும் வலியுறுத்தி (emphasizes the waist and bust with the pleated fabric), ஒரு பெண்ணின் அழகை துல்லியமாக காட்டக் கூடியதாக இருந்தது, 'இடை'யின் செல்வாக்கை எடுத்து காட்டுகிறது. அதேபோல ரோமானிய குடியரசில் வட ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த பிரபல நாடக ஆசிரியர் பப்லியஸ் டெரென்ஷியஸ் அஃபர் அல்லது டெரன்ஸ் [Publius Terentius Afer or Terence (c. 190–159 BC)], தனது புகழ்மிக்க ஒரு நாடகத்தில், She is a girl who doesn’t look like the girls of our day whose mothers strive to make them have sloping shoulders, a squeezed chest so that they look slim. If one is a little plumper, they say she is a boxer and they reduce her diet. Though she is well endowed by nature, this treatment makes her as thin as a bulrush. And men love them for that! என்கிறார். அதாவது தாய், தன் மகளுக்கு சாய்வான தோள்களையும் அழுத்தமான மார்பையும் கொண்டு மெலிதாக காட்சி அளிக்க முயற்சிசெய்வதுடன், மகள் கொஞ்சம் குண்டாக இருந்தால், அவர்கள் அவளுடைய உணவைக் குறைக்கிறார்கள் என்று கூறுகிறார். மேலும் தாய்மார்களின் சிகிச்சையானது அவளை ஒரு நீரில் வாழும் நாணல் போல மெல்லியதாக ஆக்குகிறது. அந்த மெல்லிய தோற்றத்தில் ஆண்கள் அவர்களை நேசிக்கிறார்கள் என்று சாட்சி பகிர்கிறார். மேலும் மெலிந்த உடல் நிறை அல்லது சதைப்பற்றற்ற உடல்திரள் [lean body mass] பல நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக, இது நீரிழிவு நோய் [Diabetes] மற்றும் இன்சுலின் எதிர்ப்பு [Insulin Resistance] போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பு கொடுப்பதுடன், நோயிலிருந்து மீளவும் [Illness or Disease], மற்றும் எலும்புகள் வலிமையானவையாகவும் ஆரோக்கியமானவையாகவும் [Bones Strong and Healthy] வைத்திருக்க உதவுகிறது. இனி நாம் கோவலன் தன் காதலி மாதவியை பார்த்து பாடும் சிலப்பதிகார பாடலை கொஞ்சம் விரிவாக பார்ப்போமாயின், "கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர் உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும் மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும் வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர் கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும் பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்." இதன் பொருள்: "உன் தமையன்மார் கடலில் அங்குள்ள உயிரினங்களைக் கொன்று தமது வாழ்க்கையை நடத்துகின்றனர். நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்! நீ என் கண் வழியே புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று வாழ்கின்றாய் . உன்னுடைய வெவ்விய முலைகலின் சுமை பொறாது உன்னிடையானது இப்பொழுதே மெலிகின்றது. நீ இயங்கின் அது முறியும். இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே உன் தந்தையோ வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்; நீ அவனினும் காட்டில் உன்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றாய் நீ இனி இயங்காதே இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற கொடிய முலையால் உன் இடை வளைந்து முறியும் அவ்விடையை நீ இழந்துவிடாதே உன்தமையன்மார் கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்வார் நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையாய் பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும் உன் புருவத்தால் கொல்வாய் இப்பொழுதே உனது பெரிய முலைகளைச் சுமத்தலாலே உன்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது . அதனையும் இழந்துவிடாதே" என்று எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடியிருக்கிறார் பாருங்கள். அது மட்டும் அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் , மாதவியின் இடையின் மெல்லிய தன்மையை வலியுறுத்துவதையும் காண்கிறோம். மேலும் இடை முறிந்து [ஒடிந்து] விடும் என்பதில் இருந்து எவ்வளவு சிறிய மெல்லிய இடை என்பதை அறியலாம். பருமன் பூச்சியத்தை அடைந்தத பின் தானே முறியலாம் ? இவைகளில் இருந்து பண்டைய தமிழர், மற்றும் ரோமர் போன்றோர்கள் மெல்லிய இடையை பெண்ணுக்கு விரும்பியதை காண்கிறோம். மேலும் இவ்வாறான அழகு பற்றிய கருத்து [perception of beauty], அப்படியே தொடர்வதை, கி பி 900 ஆண்டு சோழ நாட்டு வெண்கல சிலைகளிலும் [Bronze idols of the Cholas], மற்றும் இன்றைய பூச்சிய உடல் அளவு பண்பாட்டிலும் காணக்கூடியதாக உள்ளது. எனவே இது ஒரு புதிய கருத்து அல்ல. பண்டைய அழகு பற்றிய கருத்துக்கு கொடுக்கப்பட்ட புது விளக்கம் ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "எனது பார்வையில் 'ஓம்' [ௐ]" வேத மதத்தின் [vedic religion] - ஆரிய அல்லது பிராமண இந்து சமயத்தினரின் -ஆதார நூல்களான வேதங்களில் இறுதியாக வந்த உபநிடதங்கள் அல்லது உபநிஷத்துக்களில் (Upanaishads) முதன் முதலில் 'ஓம்' என்ற மந்திரம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. உபநிடதங்கள் கி.மு. 700 ஆம் ஆண்டில் இருந்து கி.மு. 100 ஆம் ஆண்டுவரை படிப் படியாக உருவாக்கப் பட்டவை. உதாரணமாக, முன்பு என்ன நடந்தது, இப்ப என்ன நடக்கிறது, இனி என்ன நடக்கும் - எல்லாம் 'ஓம்' தான் [What had happened before, What is now and What will be later - Everything is just 'OM'] என்கிறது மாண்டூக்கிய உபநிடதம் [”மாண்டூகம்” என்பதற்கு சமற்கிருத மொழியில் தவளை என்று பொருள்]. இந்த 'ஓம்' என்ற சத்தம் [ஒலி], இந்தியாவிற்கு வெளியே எந்த நாகரிகத்திலும் காணப்படவில்லை, எனவே இது இந்தியாவின் தனித்துவமான ஒலி ஆகும். 'ஓம்' என்ற ஒலியை வேத நாகரிகம் அல்லது வேத கால பண்பாடு அறிமுகம் செய்தாலும், இந்தியாவில் தோன்றிய மற்ற சமணம், புத்தம், போன்ற மதங்களும் அதை உள்வாங்கி உள்ளன. இந்து சமயம் என்று ஒன்று அண்மைக் காலம் வரை இருக்கவில்லை. இந்தியாவின் தெற்கில் சைவம் ,வைணவம் போன்ற மதங்களும், வடக்கில் ‘வைதீக மதம்’ எனப்படும் பிராமணீய மதம் போன்றவை இருந்தன.18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூஸ் (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி அகராதியில் 'இந்து சமயம்' என்ற சொல் சேர்த்துக் கொள்ளப் பட்டது. அது இந்துக்கள் என்கிற பதத்திற்கு இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாச்சார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறது என்பதை கவனிக்க. எனவே தமிழராகிய நாம், எந்த மதத்தில் அல்லது கொள்கையில் இன்று இருந்தாலும், எம் ஆதி அல்லது மூல சமயமாக, சிந்து வெளியில் ஆரம்பித்து, சங்க நாகரிகத்தில் தவழ்ந்து, நாயனார் - ஆழ்வார் காலத்தில் ஏறுநடை போட்ட சைவ, சமண தத்துவங்களையும் மற்றும் சங்க, பக்தி இலக்கியங்களையும் 'ஓம்' இன் தாக்கத்தை அறிய சிறிது அலசவேண்டி உள்ளது. வேதாந்தத்திற்குள் [vedanta] 'ஓம்' என்ற ஒலி அல்லது மந்திரம் முறையாக வேத பண்பாட்டால் சேர்க்கப்பட்டு இருந்தாலும், மற்ற தரவுகளையும் சூழ்நிலையையும் கவனத்தில் கொள்ளும் பொழுது, 'ஓம்' என்ற பதத்தின் மூலம் வேத பண்பாட்டின் வெளியே இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக காணப் படுகிறது. ஏனென்றால், துவக்ககால வேத சமயத்தில் திராவிட மொழியியல் செல்வாக்கானது தெளிவாகத் தெரிகிறது என்கிறார்கள் அறிஞர்கள், மற்றது, இந்தியாவின் கி மு 2700 அல்லது அதற்கு முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் கண்டு எடுக்கப் பட்ட பசுபதி முத்திரை மற்றும் சில முத்திரைகள், அங்கு மிக்க எளிமையான சந்யாசிக்கு உரிய துறவு வாழ்வு, அதாவது அங்கு ச்ரமண [shramana / ச்ரமண என்றால் தன்னை வருத்துகை என்று பொருள்] அல்லது யோகி [yogi] வாழ்வு இருப்பதையம், அதன் முக்கியத்தையும் காட்டுகிறது என்பதால் ஆகும். இந்த யோகி முத்திரை உண்மையில் எதை வெளிப்படுத்துகிறது அல்லது காட்ட முயல்கிறது என்பது இன்னும் சரியாக ஆய்வாளர்களுக்கு தெரியாது, காரணம் சிந்து வெளி எழுத்துக்கள், திராவிட எழுத்துக்கள் என அடையாளம் காட்டப் பட்டாலும், முறையாக இன்னும் வாசிக்கப்படவில்லை. என்றாலும் மிக நுணுக்கமாக, நேர்த்தியாக நகர அமைப்பு மேற்கொண்ட இந்த உன்னத நாகரிகம், யோகி, ச்ரமண [shramana] பண்பாட்டிற்கு மிக முக்கியம் கொடுத்து இந்த முத்திரை மூலம் அதை காட்ட முயன்றது தெரிகிறது. அதனால் நாம் இப்படியும், அதாவது 'ஓம்' இன் மூலம் வேத பண்பாட்டிற்கு வெளியேயும் இருக்க சந்தர்ப்பம் உள்ளது என, ஊகிக்கலாம் என்பது என் கருத்து. அது மட்டும் அல்ல, மத்திய ஆசியாவில் [central Asia] இருந்து வந்த ஆரியர், சிந்து வெளி மக்களை வென்று அல்லது அவர்களுடன் கலந்து, அங்கு தங்கி, அதனால் அந்த பண்பாட்டை அறிந்து, பின் அதை கைவிட்டு, கங்கை சமவெளியில் [Ganges Plain] வேதகால நாகரிகம் அமைத்தார்கள் என்கிறது வரலாறு. அந்த வேத காலத்தில் தான், 'ஓம்' முறையாக அறிமுகப் படுத்தப் பட்டது. சங்க காலத்திற்கும் முற்பட்ட, மதுரையை அண்மித்த, குறைந்தது 2600 ஆண்டுகள் பழமைவாய்ந்த, வைகை கரை கீழடி நாகரிகத்தில் செப்டம்பர் 2019 வரை கண்டு பிடிக்கப்பட்ட 1500 க்கு மேற்பட்ட தொல்பொருள் சான்றுகள் எதுவும் எந்த ஒரு சமயத்தையும் சாராத வையாக இருப்பதாக அறியவருவதுடன், தமிழரின் பண்டைய தொல்காப்பியத்திலோ அல்லது சங்க இலக்கியத்திலோ 'ஓம்' என்ற மந்திரம் காணப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. என்றாலும் இது சங்க காலத்திற்கு பிந்திய திருமூலரின் திருமந்திரத்திலும், உதாரணமாக, அ+உ+ம் சேர்ந்த 'ஓம்' மை "ஓரெழுத் தாலே [அகரம் / ௐ என்ற பிராணவத்தால்] உலகெங்கும் தானாகி, ஈரெழுத் தாலே [அகரம் + உகரம்] இசைந்து அங்கு இருவராய் [சிவசத்தியாய்], மூவெழுத் தாலே [அகரம் + உகரம் + மகரம்] முளைக்கின்ற சோதியை, மாவெழுத் தாலே [மாயையால்] மயக்கமே உற்றதே" / By One Letter, A / One letter mantra Aum, He all worlds became; By Two Letters (A and U), He the Two became--Siva and Sakti; By Three Letters (A, U and M), He the Light*[*jnana/ஞானம்] became; By Letter M was Maya ushered in [பாடல்885] என்றும், கம்பராமாயனித்திலும், உதாரணமாக, "ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர், ஆம் அவன் [ஓம் என்னும் எழுத்தின் உயிராகவும் அதன் பொருளாகவும் / He is the life-source in the letter OM], அறிவினுக்கு அறிவும் ஆயினான், தாம மூவுலகமும் தழுவிச் சார்தலால்,தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்" என கம்ப ராமாயணம், யுத்த காண்டம், இரணியன் வதைப் படலம், 76 ஆம் பாடல் வர்ணிக் கிறது. மற்றும் இன்றைய தமிழ் சைவ, வைஷ்ணவ பக்தி பாடல்களிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும் ஆழ்வார்கள் பாடிய திவ்வி யப் பிரபந்தத்தை ஆயிரம் ஆயிரமாக நான்காக பிரித்து, முதல் ஆயிரம் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கிறது என்பதும் ஒரு ஐதீகம் ஆகும், மற்றும் படி அங்கு 'ஓம்' என்ற மந்திரம் காணப்படவில்லை. தேவாரத்தை பலர் தமிழ் வேதம் என்றே கூறுவார். வேதம் 'ஓம்' என்ற பிராணவத்துடன் தொடங்குகிறது. ஆனால் தேவாரம் 'ஓம்' என்று தொடங்கவில்லை, அது மட்டும் அல்ல, அங்கு எங்கும் 'ஓம்' என்ற மந்திரமும் காணப்படவில்லை. எது எப்படியாயினும் இன்று, 'ஓம்' என்ற சொல்லின் மூலம் தமிழில் காணக்கூடியதாக உள்ளது என்று மொழியியல் அறிஞர்கள் நிறுவியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பின்லாந்து நாட்டு எல்சிங்க்கி பல்கலைக் கழகத்தின் ஆசிய, ஆப்பிரிக்கப் படிப்புகளுக்கான நிலையத்தில் இந்தியவியல் துறை பேராசிரியராக இருந்து ஒய்வு பெற்ற, மொழியிய லாளர் அஸ்கோ பார்ப்போலா [Asko Parpola], வேத இலக்கியம் ஓம் என்பதற்கு அநுமதி, அங்கீகாரம் அல்லது ஒப்புதல், உடன்பாடு [approval or agreement] என்று விபரிப்பதால், அதை சுருக்கமாக ஆம் [“yes”] என்று கூறலாம் என்றும், 'ஆம்' என்ற வெளிப்பாடு அல்லது சொல்திறம் [அல்லது யாழ்ப்பாண தமிழர் வழக்கில் 'ஓம்'], 'ஆகும்' என்ற தமிழ் சொல்லில் இருந்து பிறந்ததாகவும், எனவே தமிழ் [திராவிடம்] தெளிவான சொற்பிறப்பியல்பை கொடுக்கிறது [Dravidian provides a clear etymology for ōm ] என வாதாடுகிறார். உதாரணமாக, வேத குருக்கள் [vedic priests] ஒரு செயலை முன்னெடுக்க பிராமண பூசாரியிடம் [Brahman priest], அனுமதி கேட்க்கும் பொழுது, (e.g., brahman apaḥ praṇeṣyāmi, “O Brahman, I am about to carry forwards the water”), உதாரண மாக, "ஓ பிரம்மனே, நான் தண்ணீரை முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளேன்" என்று கேட்க்கும் பொழுது, ஓம் என்ற சொல் அங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது. உதாரணமாக, (e.g., oṁ, praṇaya, “yes, do carry it forward”) ஆம், அதை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள் என்று பதில் வழங்கப் படுகிறது. இந்த 'ஓம்' என்ற சொல் இன்னும் யாழ்ப்பாண தமிழர்களின் பேச்சு வழக்கில் காணப்படுகிறது. இந்த 'ஓம்' மை பிரணவ மந்திரம் என்றும் ஆதிகால ஒலி [Pranava Manthra & primordial sound] என்றும் கூறப்படுகிறது. உபநிடதத்தில் [Vedic Upanishads], ॐ इति एक अक्षरं ब्रह्म | Om ithi aeka aksharam Brahma ( The one letter Om is Brahman itself) ஒரு சொல் 'ஓம்' என்பது பிரம்மமே என்றும், ॐ इति इदं सर्वं | om iti idam sarvam ( Om is all these, every thing ) 'ஓம்' என்பது இவை அனைத்தும், எல்லாமும் என்கிறது. மேலும் பிரபஞ்சம் பெரும்பாலும் ஓம் என்ற புனித எழுத்துக்களிலிருந்து அல்லது ஆதிகால ஒலியில் இருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஓம் என்பது, மூன்று சத்தங்களால் ஏற்பட்டது எனலாம். அவை ["aaah," "oooh," and "mmm."] அ,['A'] உ['U'], ம்['M'] ஆகும் . இதற்கு பலவிதமான விளக்கங்கள், தமது வசதிக்கு அல்லது அறிவிற்கு அல்லது தமது விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்கிறார்கள். உதாரணமாக, மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளான - அ,['A'] என்ற எழுத்து விழிப்பு நிலையையும், உ['U'] என்ற எழுத்து, கனவு நிலையையும், ம்['M'] என்ற எழுத்து தூக்கநிலையையும் குறிப்பதாக கருதுகிறார்கள். மேலும் இந்த மூன்று எழுத்துக்களும் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவாவை குறிப்பதாகவும், அல்லது மூவுலகமான விண்ணுலகம், மண்ணுலகம், பாதாளஉலகத்தை குறிப்பதாகவும் கூறுகிறார்கள். "எவனொருவன் பரம்பொருளாகிய ஓம் என்ற ஓரெழுத்துச்சொல்லை உச்சரித்துக்கொண்டும் என்னை மனதில் கொண்டும் இப்பூத உடலை விட்டுப்புறப்படுகின்றனோ அவன் எல்லாவற்றிற்கும் மேலான கதியை அடைகிறான்." என கீதையில் கண்ணன் இதற்கு பெருமை சேர்க்கிறான். திருமூலரும் தனது திருமந்திரம் 2676 இல், 'ஓம்' இன் பெருமையை "ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி, ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு, ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம், ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே" என்று பாடுகிறார். அதாவது, 'ஓம்' எனும் பிராணவத்தின் உள்ளே ஒளிந்துள்ளது ஓர் உபதேச மொழி என்றும், மற்றும் உருவையும் அருவையும் தன்னுள் கொண்ட இந்த 'ஓம்' எனும் பிரணவத்தை உணர்பவர் புத்தியும் சித்தியும் பெறுவர் / Greatness of Aum is the one Word Supreme; Aum is the Form-Formless; Aum is the Infinite Diversity; Aum is Siddhi and Mukti radiant என்றும் விளக்குகிறார். ஓம் என்ற சப்தம் இன்றைய இந்து மதத்தில் அல்லது முன்னைய வேத பண்பாட்டில் ஆன்மீகம் சார்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையாக மக்கள் மனதில் பதிந்துள்ளது. இந்து மதம், சீக்கிய மதம், புத்த மதம் , சமணம் என பல மதங்களில் அமைதிக்கான ஒலியாகவும், கடவுளை வணங்கும் சொல்லாகவும் இது காணப்படுகிறது. ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. ஓம் மந்திரத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு பதஞ்சலி முனிவர் ஒரு வரையறை கூட செய்துள்ளார். வேதம்,உபநிடதம், பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க “ஓம்” என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இப்படி ஓம் என்னும் மந்திரத்திற்கு பல பல விளக்கங்களை அல்லது அறிவுரைகளை காணலாம். உலகளாவிய ஒலியாக இந்து மதத்தில் கருதப்படும் 'ஓம்' [ௐ] என்ற பிர ணவம் அல்லது ஓங்கார மந்திரம், இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்பு, இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவி இருந்த ஒரு சக்தியாக இருந்தது என்றும் “அனைத்து சக்திகளும் அதில் அடக்கம்” என்றும் பொதுவாக கூறப்படுகிறது. இதை மெய்ப்பது போல பெரு வெடிப்புக் கோட்பாடு [Big-Bang Theory] இன்று காணப்படுகிறது. இந்த கோட்பாட்டின் படி, 13.82 பில்லியன் [13,820,000,000] ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சம் தோன்றியது. மேலும் இந்த கோட்பாட்டின்படி ஒரு சிறு புள்ளியிலிருந்தே உலகம் ஆரம்பமானது. இச்சிறு புள்ளியில் பிரமாண்டமான சத்தி அடங்கி இருந்ததாகவும் அதுவே வெடித்து உலகம் விரிவடைய ஆரம்பமானது என்றும் கூறப்படுகிறது. வெடிப்பை அடுத்து, ஆதியில் உண்டாகி, பிரபஞ்சம் முழுவதும் வியாபித்த அந்த ஒலியை அல்லது சூன்யமாக காண ப்படும் பிரபஞ்சத்தின் இந்த ஒலியை, விஞ்ஞானிகள் இன்று கண்டு பிடித்துள்ளார்கள். அவர்களின் சோதனையின் போது இனம் தெரியாத ரேடியோ அதிர்வுகள் தங்கள் சோதனையில் கிடைப்பதை உணர்ந்தார்கள். இந்த அதிர்வுகள் அவர்களுக்கு புரியவில்லை. தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக வெடித்து சிதறி பிரபஞ்சம் தோன்றிய போது உருவான அதிர்வுகலே அவை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டர்கள். அதாவது பிரபஞ்ச உருவாக்கம் தோன்றிய போது ஏற்பட்ட ஓசைதான் அது என்றும் இந்த கீச்சு ஒலி, வைகறையில் பறவைகள் எழுப்பும் சப்தத்தை போல அல்லது ஒரு நீர் வீழ்ச்சியைப் போல அதிகமாக உள்ளது என்றும் கண்டனர். அதை சிலர் எழுத்து வடிவில் ‘mmmmm’ அதிர்வு அல்லது சத்தம் போல் என்று கூறலாம் என்றும், எனவே அதை Ommmmmmmmmmmm... என்று விபரிக்கலாம் என்றும், ஆகவே அது ஓம் என்ற ஒலியே என்று, 'ஓம்' ஒலியையும், பிரபஞ்ச ஒலியையும் இவர்கள் முடிச்சு போடுகிறார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. பிரபஞ்சத்தின் உண்மையான ஒலியை கேட்க இந்த இணைப்பை அழுத்தி, நீங்களே அதை சரிபாருங்கள். நாசா வெளியிட்ட ஆடியோ பதிவில் அவ்வாறான 'ஓம்' சப்தம் ஏதுமில்லை என்று தெளிவாக அறிய முடிகிறது. அத்துடன் இணையத்தில் பரவுவது போன்று 'ஓம்' என்ற சப்தம் சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசா தனது எந்த அறிக்கையிலும் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியாயினும், நாம் ஒன்றை கட்டாயம் கூறத்தான் வேண்டும். உலகம் தோன்றுவதற்கு முன்பு, பிரபஞ்சம் முழுவதும் ஒரு ஆதி அல்லது மூல ஒலி ஒன்று வியாபித்து இருந்ததென்று, இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி அடையாளம் கண்டார்கள் அல்லது ஊகித்தார்கள் என்பது உண்மையில் வியப்பிற்கு உரியதேயாகும். வெட்டவெளி > பேரண்டங்கள் > அண்டங்கள் > விண்மீன் குடும்பங்கள் > கதிரவக்குடும்பம் > பூமிக்கோள் > உயிர்கள் > மனிதன் என்பதாக ஒரு சங்கிலி இணைப்பை அல்லது தொடர்பை ஊகிக்க முடியுமாயின், நம்மால் பரிணாமத்தை கூட ஓரளவு புரிந்து கொள்ளவும் முடியும். 'ஓம்' என்று நேரடியாக எந்த ஒரு தரவும் சங்க இலக்கியத்தில் இல்லாவிட்டாலும், பிரபஞ்சம் தோன்றியும் ஒடுங்கியும் செல்ல வல்லவை என்றும், அப்படியான ஒரு ஒடுங்களின் பின், கரு வளர்வதற்காக, வானத்தின் ஒலியிலிருந்து தோன்றி, எந்த உருவமும் காணப்படாத முதல் ஊழிக் காலமும், பொருள்களை இயக்கும் காற்று தோன்றி மேலெழுந்த முறை முறையான இரண்டாம் ஊழியும், சிவந்த தீ தோன்றி ஒளி விட்ட மூன்றாம் ஊழியும், குளிர்ச்சி உண்டாகி குளிர்ந்த மழை பெய்யத் தொடங்கிய நான்காம் ஊழியும், அவைகளுக்குள் பின்பு தொன்மையில் வெள்ளத்தில் மூழ்கிக் கரைந்து கிடந்து மீண்டும் தம் சிறப்பாற்றலால் செறிந்து திரண்டு, இந்த நான்கிற்கும் உள்ளீடாகிய பெரிய நிலம் தோன்றிய ஐந்தாம் ஊழியும், என்ற வரியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடல்: 2:3- 12 இல் கீழ்கண்டவாறு காண்கிறோம். "பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட விசும்பில் ஊழி ஊழ்_ஊழ் செல்ல கரு வளர் வானத்து இசையின் தோன்றி உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் உந்து வளி கிளர்ந்த ஊழ்_ஊழ் ஊழியும் செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்" இங்கு நாம் உற்று நோக்க வேண்டிய சிறப்பு வரி "கரு வளர் வானத்து இசையின் தோன்ற உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்" [the sky with primal seed, appeared with sound, what appeared at the time before any form was seen] ஆகும். இதிலும் மிக முக்கியமானது "ஒலியுடன் தோன்றி" என்ற கூற்றுஆகும். இங்கு அது எப்படியான ஒலி என்று கூறாவிட்டாலும், அந்த சம்பவத்தை ஒப்புவிக்கிறது. ஹென்றி பார்க்கர் [Henry Parker], தனது 1909 இல் எழுதிய பண்டைய இலங்கை [Ancient Ceylon], என்ற புத்தகத்தில், பக்கம் 490 இல், இலங்கையில், அனுராதபுர காலத்தை சேர்ந்த, பிராந்திய எழுத்து வடிவத்தில் ஓம் முத்திரை பொறிக்கப்பட்ட, முதல் நூற்றாண்டிற்கும் நான்காம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட கால நாணயம் கண்டு எடுக்கப் பட்டதாக குறிப்பிடுகிறார் [That the oblong type of coin continued to be issued up to the third or fourth century A.D. is clearly proved by the form of the ' Aum' monogram on the coin nuipbered 47, the m of which is of a type which is found in some inscriptions of that period. I met with a similar letter cut on the faces of two stones inside the valve-pit or ' bisdkotuwa' of a sluice at Hurulla, a tank constructed by King Maha-Sena (277-304 A.D.). Large coins of a circular shape made their appearance at about this time, having a similar ' Aum * monogram on them, and it may be assumed that the issue of the oblong money then either ceased or was of less importance than before] அது மட்டும் அல்ல, மகா சேன [Mahasena, also known in some records as Mahasen] மன்னனுடைய ஆட்சிக் காலத்தில்(கி பி 277-304 ), அவனால் கட்டப்பட்ட குளத்தின் அடைப்பான் குழிக்குள் [valve-pit] இரண்டு கற்களில் ஓம் எழுத்து பொறிக்கப் பட்டு இருந்ததாகவும் கூறுகிறார். இது பண்டைய இலங்கையிலும் 'ஓம்' அல்லது பிரணவ மந்திரம் பாவிக்கப்படத்தை எடுத்து காட்டுகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்று, ஆனால் இன்னும் விடியல் கிடைக்காமல், முன்னையதைவிட கேவலமாக இன்று இருக்கும் இந்த சூழ்நிலையில் தான், நானும் ஒரு தமிழனாக, இலங்கையின் பழம் குடிகளின் ஒருவனாக, தலை நிமிர்ந்து, என் சொந்த மண்ணில் வாழ, விடியலுக்காக காத்திருக்கிறேன்! பத்தாம் வகுப்பில் நான் படித்த, எமிலி டிக்கின்ஸன் [Emily Dickinson] என்ற கவிஞரின் பாடல் எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. "I many times thought Peace had come When Peace was far away — As Wrecked Men — deem they sight the Land — At Centre of the Sea — And struggle slacker — but to prove As hopelessly as I — How many the fictitious Shores — Before the Harbour be" "தூரத்தில் விடியல் [சமாதானம்] இருக்கும் பொழுது பலதடவை விடியல் வருமென்று எண்ணினேன்! கடலின் மையத்தில், குழம்பிய மனிதனாக நிலத்தை, கரையை பார்ப்பதாக நினைத்தேன்! ஆனால், அவை எல்லாம் பொய் நம்பிக்கை அற்றது, ஏமாற்று வித்தை! உண்மையான விடியலுக்கு, [துறைமுகத்திற்கு] முன், எத்தனை கற்பனைக்கரைகள் இன்னும் காண்பேன்!" ஆமாம், தூரத்தில் விடியல் தெரிவது போல, வானில் 4 ஜூன் 1987 இல் பூமாலை என்ற ஒரு செயல் திட்டத்தின் கீழ், இந்தியா விமானப் படை, யாழ்ப்பாணத்தின் மேல் பறந்து, அங்கு உணவுக்காக வாடிக்கொண்டு இருந்த மக்களுக்கு, என்னையும் உட்பட, 25 தொன் [tons] எடையளவு உணவு பொதிகளை போட்டது. அதை தொடர்ந்து, இலங்கை - இந்தியா ஒப்பந்தம் 29 ஜூலை 1987 கைச்சாத்திடப்பட்டது, ஒரு உண்மையான கரையை காட்டுவது போல அன்று எனக்கு இருந்தது. என்றாலும் எமிலி டிக்கின்ஸனின் பாடலை நான் மறக்கவில்லை. உச்சத்தில் கிட்ட தட்ட 80,000 ஆட்பலம் கொண்ட இந்திய அமைதி காக்கும் படை 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அப்பொழுது நான் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் பணி புரிந்துகொண்டு இருந்த காலம். எனவே நானும் என் குடும்பமும், அமைதி பிறந்து விட்டது என்ற நம்பிக்கையில், 270 கிலோ மீட்டர் பயணமாக யாழ் புறப்பட்டோம். இருண்ட குகைக்குள் வெளிச்சம் வந்ததுபோல, ஒரு விடியல் அண்மையில் தெரிவது போன்ற மகிழ்வுடன், நாம் பேருந்தில் சென்றுகொண்டு இருந்தோம். நாம் 221 கிலோ மீட்டர் கடந்து, ஆனையிறவு பாலம் வரும் வரை அமைதியாக இருந்த எம் பயணம், திடீரென ஒரு குழப்பத்தில் முடிந்தது. அங்கு முகாமிட்டு காவலுக்கு நின்ற அமைதி படை, எம் பேருந்தை சூழ்ந்து சோதனை செய்ததுடன், ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வருகுது என்றும், உடனடியாக கெதியாக யாழ் சென்று, வீடு செல்லும் படியும் எச்சரித்து அனுப்பினர். எமக்கு ஒரே திகைப்பும் பெரும் ஆச்சரியமும். என்ன நடந்தது? எமக்கு ஒன்றுமே புரியவில்லை?. நாம் எதிர்பார்த்தது அமைதியும், சம உரிமையுடன் ஒரு மனிதனாக தலை நிமிர்ந்து தமிழனாக, தமிழ் பண்பாட்டுடன் வாழ்வது மட்டுமே? ஆனால், மீண்டும் ஓட்டமும், பதுங்கு குழியும், தமிழன் என்று தலை குனிந்து ஒழிந்து திரியவல்ல? என்றாலும், இப்ப யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் வந்துவிட்டதால், இனி திரும்பவும் முடியாது. ஆகவே, நடப்பது நடக்கட்டும் என்று சில நம்பிக்கைகளுடன் மிகுதி பயணத்தை தொடர்ந்தோம். நாம் யாழ் நகரை அண்மிக்கும் முன்பே சண்டை ஆரம்பித்துவிட்டது. எம்முடன் எம் குழந்தைகளும் பயணிப்பதால், நாம் கலங்கி, எமிலி டிக்கின்ஸன் [As Wrecked Men] கூறியது போல சிதைத்த மனிதனாக இருந்தாலும், எம்முடைய முன்னைய அனுபவங்கள் எமக்கு தைரியம் தந்தன. ஒருவாறு அவசரம் அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் வீட்டிற்கு ஓட்டமும் நடையுமாக, குழந்தை ஒன்றை தூக்கிக் கொண்டும் சென்றோம். அப்பொழுது யாழ் கோட்டையில் இருந்து ஷெல் அடிக்க தொடங்கிவிட்டார்கள். அதில் சில எமது தலைக்கு மேலாக போவதையும், வெடித்து சிதறும் சத்தமும் ஒரு பீதியை உண்டாக்கினாலும், ஒருவாறு சமாளித்துக்கொண்டு வீடு சேர்ந்தோம். என்றாலும் குழந்தைகளின் அழுகையும் பயமும் எமக்கு மேலும் கவலை அளித்தது. அன்று இரவு ஏறக்குறைய முழுநேரமும் நாம் பதுங்கு குழிக்குள் தான் இருக்கவேண்டி இருந்தது. பயண களைப்போ , நித்திரையோ எம்மிடம் இருந்து தூர விலகிவிட்டது. அது மட்டும் அல்ல, எந்த விடியலை எதிர்பார்த்தமோ, அது இப்ப பின்னோக்கி நகருவதைத் தான் நாம் உணர்ந்தோம். ஆமாம் இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்து கொண்டு இருந்தது! பிரித்தானியாவிடம் இருந்து கிடைக்காதது, இலங்கை அரசிடம் இருந்ததும் கிடைக்காதது, இப்ப இந்தியா அமைதி படையிடம் இருந்தும் கிடைக்காமல் விலகுவது நன்கு தெரிந்தது. இருண்ட கற்பனை கரையாக எம் விடியல் மறைந்ததுதான் எனோ ? "மனிதனே உனக்கேன் அலட்சியம்; விதையுங்கள் மனதில் நல்லெண்ணம் என்னும் விதையை; தூவுங்கள் இரக்கம் என்னும் கருணையை; பிறக்கட்டும் மனிதம் மீது கண்ணியம்; பொழியட்டும் அன்பென்னும் பெருமழை; வளரட்டும் மனித நேயம், அங்கே விடியட்டும் விடியல்; பிறக்கட்டும் உதயம்; வடியட்டும் சோகங்கள்; முடியட்டும் குரோதங்கள்; தொடரட்டும் உறவுகள்; தொழுவட்டும் விடியலை எம் கரங்களும்; மரம் செடி கொடிகள் போன்று மணக்கட்டும் மண்ணில் சமதருமம்!" என் மனம், பதுங்கு குழிக்குள் இருந்து கொண்டும் தன் பாட்டில் இப்படி முழங்கிக் கொண்டு இருந்தது. அந்த நேரம் அது ஒரு ஆறுதலாகவும் இருந்தது உண்மையே! இந்தியா இலங்கை பேச்சு வார்த்தையின் பொழுது, கைக்கு எட்டுவது போல இருந்த விடியல், விடியாமலே, மேலும் கடும் இருட்டாக மாறி, இன்றுவரை எம்மை, எம் இருப்பை குழப்பத்தில் மூழ்கடித்துக்கொண்டு தான் இருக்கிறது. என்றாலும் என் நம்பிக்கை குறையவில்லை! ஏறத்தாழ முப்பத்தி ஐந்து அல்லது முப்பத்தி நாலு ஆண்டுகள் கழித்து, மார்ச்சு மாதம் 31 திகதி, 2022 ஆண்டு சிங்கள இளைஞர்கள் சனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு தமது வரலாறு காணாத போராட்டத்தை தொடங்கினர். அவர்கள், இன, மத வேறுபாட்டை தாண்டி, தமிழர்களின் புரையோடி இருக்கும் சில பிரச்சனைகளையும் உள்வாங்கி, கடந்த 74 ஆண்டுகளாக, இனத்துவேசத்தை வளர்த்து, தமது இருப்பையும், அதே நேரத்தில் சரியான பொருளாதார திட்டம் இல்லாமல், நாட்டை குட்டிச் சுவராக்கி, தம் வளத்தை பெருக்கியவர்களை இனம் காட்டி துரத்தும் தமது போராட்டத்தை அரசுக்கு எதிராக மூன்றாவது மாதமாகவும் தொடர்கிறார்கள். இது உண்மையில் நல்ல ஒரு அடையாளமே!. என்றாலும் இன்று கூட குருந்தூர் மலை பிரச்சனை தமிழர்களை வேதனை படுத்திக்கொண்டு இருக்கிறது. மக்கள் சாப்பாட்டுக்கும், எரிபொருளுக்கும் வரிசையில் நின்று, இதுவரை 11 பேர் இறந்த நிலையிலும், இனவாதம் பேசும் சில புத்த பிக்குகள் மற்றும் கும்பல்கள் ராணுவ உதவியுடன் வடக்கு கிழக்கில் புத்தர் சிலை நிறுவவும், அதை சாட்டாக வைத்து, காணிகள் பறிக்கவும், குடியேறவும் வரிசையில் நிற்பது வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது? இதை காலிமுக இளைஞர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் என்ற நோக்கில், விடியலை நோக்கி அவர்கள் செல்லும் பயணத்தில், இன்று நானும் சேர்ந்து எமது விடியலுக்கு காத்திருக்கிறேன்! பரிபாடல் 19 கூறியது போல, பசும்பிடி மலர் இளந் தளிர்களுடனும், ஆம்பல் மலர் விரிந்த வாயுடனும், காந்தள் மலர் கைவிரல் போலவும், எருவை மலர் மணக்கும் மடலுடனும், வேங்கை மலர் எரியும் தீ போலவும், தோன்றி மலர் உருவ அழகுடனும், நறவம் மலர் நீண்ட காம்புகளுடனும், கோங்கம் மலர் பருவம் தோன்றா நிலையிலும், இலவம் மலர் பகைவர் போல் சிவந்த நிலையிலும், தனித்தனியேயும், கோத்துக்கொண்டும், பின்னிக்கொண்டும் மலை எங்கிலும் [வின்]மீன் பூத்த வானம் போல், இலங்கை வாழ் மக்கள் அனைவரும் பூத்துக் கிடந்தன என விரைவில் வரலாறு கூறட்டும்! "பசும்பிடி இள முகிழ், நெகிழ்ந்த வாய் ஆம்பல், கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள், எருவை நறுந் தோடு, எரி இணர் வேங்கை, உருவம் மிகு தோன்றி, ஊழ் இணர் நறவம், பருவம் இல் கோங்கம், பகை மலர் இலவம்; நிணந்தவை, கோத்தவை, நெய்தவை, தூக்க மணந்தவை, போல, வரை மலை எல்லாம் நிறைந்தும், உறழ்ந்தும், நிமிர்ந்தும், தொடர்ந்தும்; விடியல் வியல் வானம் போலப் பொலியும் நெடியாய்! நின் குன்றின்மிசை." [பரிபாடல்19] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "மர்ம இரவுகள்" பொதுவாக என் வேலை மாலை மூன்றரை மணிக்கு முடியும். ஆனால் அடுத்த நாள் விடுதலையில் யாழ்ப்பாணம் போக வேண்டி இருந்ததால், தொடங்கிய திட்டச்செயல் வேலையை [project work] ஓரளவு முடித்துவிட்டு போகவேண்டி இருந்தது. அப்பத்தான், எனக்கு மாற்றாக தற்காலிகமாக வருபவரால் அதை தொடர இலகுவாக இருக்கும். அத்துடன் அவருக்கு அதைப்பற்றி கொஞ்சம் தொலைபேசியிலும் மற்றும் குறிப்பேட்டிலும் ஒரு விளக்கம் கொடுக்கவேண்டியும் இருந்தது. ஆகவே அன்று என் வேலை முடிய ஆறு மணி தாண்டிவிட்டது. கொஞ்சம் களைப்பாக இருந்ததாலும், மற்றும் என்னுடன் பணிமனையில் இருந்து வரும் நண்பர்கள் எல்லோரும் வீடு போய் விட்டதாலும், நான் தனியவே போக வேண்டி இருப்பதால், பக்கத்தில் இருந்த கடை ஒன்றில் இரண்டு பீர் போத்தல் [bottle of beer] வாங்கிக் கொண்டு, அருகில் இருந்த பேருந்து நிலையத்திற்கு போனேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் பேருந்தை தவறவிட்டுவிட்டேன். இரவு என்பதால், அடுத்ததுக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் நிற்கவேண்டும். அது மட்டும் அல்ல, இங்கு நடைபெறும் சில அரசுக்கு எதிரான கலவரங்களால், ஒன்பது மணியில் இருந்து ஊரடங்கு சட்டமும் ஒருபக்கம். எனவே குறுக்கு வழியில், ஆற்றின் வழியே நடக்க தொடங்கினேன். அன்று முழுமதி நாள் என்பதால், ஆற்றங் கரையோரமாக நிமிர்ந்து நிற்கும் மூங்கில் மரங்களுக்கும் மற்றும் சோலையில் பூக்கும் மலர்களுக்கும் இடையில், சந்திரன் அழகாக வானில் தவழ்ந்து கொண்டு இருந்தான். அந்த அழகு என் காதலியின் நினைவை தந்து என்னை துன்புறுத்த செய்தன! "பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே பழுதறு திருமொழியே பணைஇள வனமுலையே முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே எழுதரும் மின்னிடையே எனையிடர் செய்தவையே!" [கானல் வரி - சிலப்பதிகாரம்] சோலையில் பூக்கும் வாசமுள்ள மலரே, உன்னால் இந்த மணலும் மணக்குதே, என் காதலியின் உடம்பும் அது போல வாசனை வீசுதே! குற்றமில்லா இன்பப் பேச்சும், கணந்தொறும் பருக்கின்ற இளமையுடைய அவளது முலையும் எங்கே! முழு நிலவு போன்ற முகமும், வில்லுக்கு இணையாய் வளையும் புருவமும் எங்கே!, எழுகின்ற மின்னலைக் கொண்ட இடையும், என்னைத் துன்புறுத்துகிறதே இங்கே! இன்றைய கூடுதலான வேலையும், அவளின் நினைவும், தனிமையும் வாட்டிட, அங்கு உயர்ந்து காற்றுக்கு ஆடிக்கொண்டு இருந்த மூங்கில் மரங்களுக்கிடையில் இருந்து, நான் கொண்டுவந்த மதுவினை, கொஞ்சம் கொஞ்சமாக அருந்தினேன். நான் மிகவும் சோர்வாக இருந்ததால், கொஞ்சம் கண்களை மூடினேன். என்னை அறியாமலே அங்கே, மணலில் தூங்கிவிட்டேன்! "மாலைக் காற்று மெதுவாய் வீச பாடும் குயில்கள் பறந்து செல்ல வெண்நிலா ஒன்று கண் சிமிட்ட வெற்றி மகளாய் இதயத்தில் வந்தாளே!" "வானம் தொடும் வண்ணத்துப் பூச்சியாய் வான வில்லாய் ஜாலங்கள் புரிந்து மனதை மயக்கும் வாசனை உடன் மனதை நெருடி மகிழ்ச்சி தந்தாளே!" என் கனவில் வந்த என்வளுடன்கொஞ்சம் ஆனந்தமாக இருந்த எனக்கு, திடீரென என் கால் மாட்டில் அவளே வந்து கொஞ்சுவது போல உணர்வு வந்தது, இன்னும் களைப்பாக இருந்ததால், கண்ணை திறக்காமலே, காலை உதறினேன். உதறமுடியவில்லை, உண்மையில் யாரோ கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்து இருப்பது போல இருந்தது. சட்டேன துள்ளி எழும்ப முயற்சித்தேன். முடியவில்லை, கண்ணை முழித்து, நல்லகாலம், முழுமதி நாள் என்பதால், பார்க்கக் கூடியதாக இருந்தது. ஒரு இளம்பெண், அலங்கோலமான அரைகுறை உடையுடன் நினைவுற்று என் கால் மேல் கிடந்தாள். திடுக்கிட்டு பயந்து போனேன். கொஞ்சம் கண்ணை மேலே உயர்த்தினேன். ஒரு வாலிபன் தனது தொலை பேசி மூலம் என்னையும் அவளையும் சேர்த்து படம் எடுத்துக்கொண்டு இருந்தார். நான் எழும்புவதை கண்டதும், அங்கிருந்து ஓடி, மோட்டார் சைக்கிளில் ஆயத்தமாக நின்ற மற்றோரு வாலிபனுடன் எதோ சிங்களத்தில் பேசிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். நான் விரைவாக அவர்களின் பின் ஓடி, என் தொலைபேசியில் எடுக்கக்கூடிய அளவு வீடியோ எடுத்தேன். பின் பக்கம் என்றாலும், அவர்கள் துணியால் மறைத்த இலக்கத்தகடு, ஓடும் வேகத்தில், துணி நழுவி விழ, அது அதை பதித்துவிட்டது. எனது வெற்று பீர் போத்தலில் ஆற்று நீர் எடுத்து அவள் முகத்தில் தெளித்து, எனக்கு தெரிந்த முதல் உதவியும் செய்தேன். அவள் எதோ சிங்களத்தில் முணுமுணுத்துக்கொண்டு மெல்ல மெல்ல கண்ணை திறக்க தொடங்கினாள். அது எனக்கு நிம்மதியை தந்தது. ஏனென்றால், கட்டாயம் அவள் என்ன நடந்தது என்று உண்மை சொல்லுவாள். அப்படி என்றால் ஒரு பிரச்சனையும் எனக்கு வராது என்று. ஆனால் ' நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று' என்பது போல, நான் அவளிடம், நீ யார், என்ன நடந்தது என்று கேட்கும் முன்பே காவற்படையினர் பல வண்டிகளில் வந்து என்னை கைவிலங்கு போட்டு, என்னை ஒன்றும் கதைக்கவிடாமல் அடித்து இழுத்து சென்றனர். அவள் எதோ சிங்களத்தில் அவர்களிடம் அழுதுகொண்டு சொல்வது மட்டும் எனக்கு தெரிந்தது. அவர்கள் இவன் ட்ரஸ்ட்வாதி [பயங்கரவாதி] என எனக்கு முத்திரையே குத்திவிட்டார்கள். அதற்குள் மருத்துவ அவசர ஊர்தியும் வர, அவளை அதில் ஏற்றுவது மட்டுமே எனக்கு தெரிந்தது. யார் அவள், அந்த இரு வாலிபரும் யார், அவளுக்கு என்ன நடந்தது எல்லாமே எனக்கு ஒரு மர்மமாகவே இருந்தது. என் கால்சட்டை பாக்கெட்டை மெல்ல ஒரு கையால் தொட்டு பார்த்தேன். என் தொலைபேசி அங்கு இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். என்னை ஒரு நீதிபதியிடம் கொண்டுபோய், இவன் ஒரு பயங்கரவாதி, ஒரு பெண்ணை கெடுத்து கொலை செய்ய முயற்சித்தான் என குற்றம் சாட்டி, என்னை தங்கள் காவலில் வைத்து முழுதாக விசாரிப்பதற்கு அனுமதி தரும்படி அவரிடம் கேட்டனர். நீதிபதி என் பெயர், விபரங்களை பதிவுக்காக கேட்டார். நான் அந்த சந்தர்ப்பத்தில், என் தொலை பேசியை எடுத்து, இதில் ஒரு வீடியோ இருக்கு அதையும் பார்க்கவும் என கொடுத்து, என் முழுவிபரத்தையும் , அன்று நான் பணிமனையில் ஆறு மணிவரை, வேலை செய்ததையும், பீர் வாங்கிய கடையையும், நான் ஒரு பொறியியலாளர் என்பதையும் என் வாக்குமூலமாக ஆங்கிலத்தில் அவரிடம் சமர்ப்பித்தேன் . இப்ப விடிய தொடங்கிவிட்டது. என்றாலும் என் மனதில் அந்த இரவின் மர்மம் புரியவில்லை. அந்த இரு வாலிபரையும் தேடுவதை விட்டுவிட்டு, என்னை விசாரிப்பதிலேயே அக்கறையாக இருந்தனர். இன்னும் ஒன்றும் எனக்கு மர்மமாக இருந்தது. எப்படி இத்தனை வண்டிகளுடன் அங்கு காவற் படையினர் வந்தனர். அந்த இருவரை தவிர, வேறு யாரும் அங்கு இருக்கவில்லை? எப்படி என்னையோ அந்த பெண்ணையோ விசாரிக்க முன் என்னை பயங்கரவாதி என்றனர்? அவளை நான் கெடுத்தனர் என்றனர் ? எல்லாமே மர்மமாக இருந்தது. என்னை தங்கள் காவல் நிலையத்துக்கு கொண்டுபோய், ஏற்கனவே அவர்களால் சிங்கள மொழியில் தயாரித்த ஒரு வாக்குமூலத்தை, நான் கொடுத்ததாக அதில் ஒப்பமிடும்படி வற்புறுத்தினர். 'உண்மை, தோற்பது போல் இருந்தாலும், அது கட்டாயம் வெல்லும்'. நான் அதற்கு இசையவில்லை. அந்த நேரம் அந்த நீதிபதியிடம் இருந்து அவசர அழைப்பு வந்தது, உடனடியாக விடுதலை செய்யும் படியும், என் தொலை பேசியை நீதிபதி பணிமனையில் பெற்றுக்கொள்ளலாம் என்றும். அவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தபடி, வேறுவழி இன்றி என்னை கைவிலங்கு அகற்றி வெளியே விட்டனர். ஆனால் இன்றுவரை அந்த இரு வாலிபர் யார், அவள் யார், அவள் இப்ப எங்கே ? என்ற மர்மம் வெளிவரவே இல்லை. என்றாலும் சமூக வலைத்தளங்களில், அவளின் பெயர் குறிப்பிடாமல், யாரோ பெரும் புள்ளியின் மகனும் நண்பனும் அவளை அனுபவித்துவிட்டு, இறந்துவிட்டாரென மூங்கில் பத்தையில் போட்டுவிட்டு சென்றதாக மட்டுமே இருந்தது, அதில் என்னைப் பற்றி ஒன்றுமே இல்லை ? "வாருங்கள், வந்து கை கொடுங்கள் இமைகள் மூடி பல நாளாச்சு ... சொல்லுங்கள், என் கண்களை மூடினால் அந்த மூவரும் வரிசையாய் வருகுது ... தாருங்கள், தீர்வைதந்து மர்மம் கலையுங்கள் கேள்விகள் கேட்டு உள்ளம் வதைக்குது ... கண்களுக்குள் புதையாத மர்மம் தருகிறேன் கவனமாக ஒன்று ஒன்றாய் அவிழ்க்க ..." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  16. "வறுமையின் நிறம் சிவப்பு" கொழும்பு, காலி முக திடலில், வறுமையை ஒழிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்து ஐம்பது நாள் தாண்டியும் மக்களின் போராட்டம் முடிவற்று இன்னும் தொடர்கிறது. சிவப்பு கொடிகள், கருப்பு கொடிகள் பல அங்கு மக்கள் ஏந்தி அமைதியான ஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) செய்கிறார்கள். கருப்பு கொடி துக்கத்தை குறிக்கும் என்றாலும், சிவப்பு கொடி எதற்க்காக ?. கூட்டத்தில் நானும் ஒருவனாக இன்றுதான் இணைந்தேன். என் மனதில் முதல் தோன்றியது அது தான். ஏன் சிவப்பு ? எல்லோரையும் பார்க்கிறேன், அவர்களின் வறுமை எல்லையை தாண்டி இருப்பதை அவர்களின் கண் காட்டுகிறது. கோப ஆவேசத்தில் அது சிவந்து இருப்பதை காண்கிறேன்! மா சே துங் [Mao Zedong] எழுதிய [கம்யூனிசம்] பொதுவுடைமை புத்தகத்தினை சிவத்த புத்தகம் ["Red Book"] என்றும் அழைப்பது வழமை. இப்ப எனக்கு ஏன் வறுமையின் நிறம் சிவப்பு என்பது தெளிவாக உணர முடிந்தது. நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு,படுக்கையில் சரிந்து இருந்து நேரத்தை பார்த்தேன். அது எட்டு மணியை காட்டியது. நான் இப்ப படுத்தால், நேரத்துடன் எழும்பிவிடுவேன். இன்னும் இரண்டு மணித்தியாலம் ஆவது பொறுத்து இருப்பது நல்லது. ஆனால், அதுவரை எதாவது வாசிக்கலாம் என்றால், என்னிடம் இருப்பதோ பழைய பழைய புத்தகங்களே, அதை திருப்பி திருப்பி எத்தனை தரம் வாசிப்பது. வறுமையில் இருப்பது உண்மையில் சலிப்பு தான். இதை மனித வாழ்வில் ஒரு மலட்டுத்தன்மை என்று கூட சொல்லலாம். சாப்பிடவே போராடிக்கொண்டு இருக்கும் நான், எப்படி புது புத்தகம் வாங்குவேன் ? கொஞ்ச நேரம் வெளியே, காசு இல்லது வாங்கக் கூடிய காற்றை வாங்கப் புறப்பட்டேன். என் மனம் என்னைவிட பல மடங்கு வேகமாக, ஆனால் பின்னோக்கி சென்றது. அது கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு காலத்திற்குள் புகுந்துவிட்டது. அங்கே பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவரின் புறநானூறு 160 , 164 இல் இருந்து சில அடிகளை அது முணுமுணுத்துக் கொண்டு இருந்தது. "உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று இல்லுணாத் துறத்தலின் இல்மறந்து உறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன் கூழும் சோறும் கடைஇ ஊழின் உள்ளில் வறுங்கலம் திறந்துஅழக் கண்டு மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும் நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப் பொடிந்தநின் செவ்வி காட்டுஎனப் பலவும் 25 வினவல் ஆனா ளாகி நனவின்" 'என் மகன் இல்லத்தை மறந்து விளையாடச் செல்வதும், பசி தாங்க முடியாமல் இல்லம் திரும்பி, கூழ் இருக்கும் பானையைத் திறந்து பார்ப்பதும், அதில் கூழ் இல்லாமையால் அழுவதும், அதனைப் பார்த்த என் மனைவி ‘அழுதால் புலி வந்துவிடும், அழாதே’ என்று அச்சுறுத்துவதும், பின் நிலாவை வேடிக்கை காட்டித் தேற்றுவதும் என் வீட்டில் வாடிக்கையாகப் போய்விட்டது' என்று அவன் புறநானூறு 160 இல், மன்னன் குமணன் இடம் கூறுவதும், அதை தொடர்ந்து "ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண!" 'சமைத்தலை முற்றிலும் மறந்த உயர்ந்த பக்கங்களையுடைய அடுப்பில் காளான் பூத்திருக்கிறது. உடல் மெலிந்து வருந்தி, பால் இல்லாததால் தோலோடு சுருங்கித் துளை மூடிய பயனில்லாத வற்றிய முலையச் சுவைத்து அழும் என் குழந்தையின் முகத்தை நோக்கி, நீர் மல்கிய ஈரம் படிந்த இமைகளைக்கொண்ட கண்களுடைய என் மனைவியின் துன்பத்தை நினைத்து உன்னை [குமணன்] நாடி வந்தேன்' என்று புறநானூறு 164 இல் கூறுவதும் வறுமையின் நிறம் எவ்வளவு சிவப்பு என்பதை காட்டியது. ஆமாம், இப்ப நான் வறுமையில் இருந்தாலும், ஒரு பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன், இதைவிட கொடூர நிலையில், ஒரு நாளைக்கு ஒரு கஞ்சிக்கு - உயிரை பிடித்து வாழ - முள்ளிவாய்க்காலில் வரிசையில் நின்றதை நான் மறக்கவில்லை. அந்த அனுபவம் தான் என்னை இன்னும் வாழவைக்க உறுதி தந்துகொண்டு இருக்கிறது. உயிர்கள் எல்லாம் தாம் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை உணவு. பாதுகாப்புக்கு உறைவிடம். அவ் உணவிற்காக நொடி பொழுதும் பல போராட்டங்களை அன்று முதல் சந்தித்துக் கொண்டே வந்துள்ளது. பொதுநிலையில் கிடைத்ததை உண்டு வாழ்ந்தது வரை மனிதனுக்குள் முரண்பாடுகள் இருக்கவில்லை. வறுமை சிவப்பாகவும் இருந்ததில்லை. சேமிக்க தொடங்கிய பின்னரே தோன்ற ஆரம்பித்தன இந்த முரண்பாடுகள். இம்முரண்பாடுகளே வர்க்கமாய் நிலைபெற்று இன்று வரை இயற்கைச் சமூகத்தை செயற்கையாக்கியிருக்கிறது. ஆமாம் இந்த நவீன உலகிலும், உண்ண உணவின்றி, தவிக்கும் என்னைப் போல் பலரை காணலாம். அன்று அரசனிடம் முறையிட்டனர். இன்று அரசிடம் முறையிடுகின்றனர், அது தான் வித்தியாசம். அடுத்தநாள் காலை, பத்து மணிக்கு பிறகு நான் எழும்பினேன், பசி குறைந்த பாடு இல்லை. நான் எடுக்கும் ஓய்வூதியம், இன்றைய விலைவாசி உயர்வில் கட்டுப்படி ஆகாது. அதுமட்டும் அல்ல, எல்லா பொருட்களுக்கும் நீண்ட வரிசையிலும் நிற்க வேண்டும். எதோ என்னிடம் இருந்த தேயிலை தூளில், மிக கொஞ்சமாக எடுத்து ஒரு தேநீர் ஆக்கி , என்னிடம் இருந்த நாளான [stale] பானில் இரு துண்டுகளை அதில் தோய்த்து என் வயிற்றை சிறிது நிரப்பினேன். ஆனால் அது நிறைந்த பாடாக இல்லை. எனவே என்னிடம் இருந்த ஒரே ஒரு முட்டையையும், எண்ணெய் இல்லாததால், எண்ணெய் இல்லாமலே பொரித்தேன். என்றாலும் முட்டையை என்னிடம் மிகுதியாக இருந்த அதிக மிளகாய் தூளில் வறட்டி எடுத்தேன். ஏன் என்றால் இந்த உறைப்பு என் பசியை அடக்கும் என நான் நம்பியதால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. யாரோ என் கதவின் ஊடாக எதோ போடுவது தெரிந்தது. தட்டுத்தடுமாறி எழும்பி, அது என்ன என்று பார்த்தேன், அவை துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரச்சாரத் துண்டுகள். என் அடுத்த ஓய்வூதியத்திற்கு இன்னும் நாலு நாள் இருக்கு. அதன் பின்புதான் ஏதாவது கொஞ்சம் வயிற்று பசிக்கும் அறிவு பசிக்கும் வாங்கலாம், ஆகவே இப்ப கொஞ்சம் வயிற்றுப பசி ஆறி இருப்பதால், அறிவு பசிக்கு அந்த இலவச துண்டுகளை ஒவ்வொன்றாக வாசிக்க தொடங்கினேன். சிவத்த கருத்த கொடிகளுடன் தமது ஐம்பது நாள் போராட்டம் பற்றியும், மற்றும் இதுவரை இணையாதவர்களை இணையும் படியும் அழைப்பு இருந்தது. 1917 இல் ஏற்பட்ட, சமூக மற்றும் பொருளாதார மாற்றஙகள் வேண்டி, உருசியப் மக்கள் செய்த புரட்சி ஞாபகம் வந்தது. அந்த புரடசிக்கு அடையாளமாக சிவப்பு கொடி இருந்தது. ஆகவே சிவப்பு கட்டாயம் வறிய [ஏழை] மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் சின்னம் என்பதில் உறுதியானேன். நானும் அதில் ஒருவனே என்ற உணர்வு என்னை அங்கு போய் சேர தூண்டியது. என்றாலும் கொஞ்சம் மனதில் சஞ்சலமும் தவிப்பும் தோன்றியது. நாம் ஒரு நேர கஞ்சிக்காக, குண்டுகளுக்கிடையில், உயிரையும் கையில் பிடித்து காத்திருந்த தருவாயில் கூட, வெடி கொளுத்தி கொண்டாடியவர்களே இவர்கள். என்றாலும் மன்னித்து மறந்துவிடு என்ற எம் பண்பாடும் நினைவுக்கு வந்தது. எப்படியாகினும் நாம் முன்னைய செயலை மறக்கவில்லை என்பதையும் சொல்லவேண்டும் போல் தோன்றியது. கணவன், மனைவி இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஓர் உரையாடலில், "நான் செய்த தவறை மன்னித்து, மறந்துவிட்டதாகச் சொல்கிறாய். பின், ஏன் மீண்டும், மீண்டும் அதைப் பற்றிப் பேசுகிறாய்?" என்று கணவன் தன் மனைவியிடம் கேட்கிறார். அதற்கு, மனைவி, "நான் மறந்து, மன்னித்துவிட்டேன். ஆனால், நான் மறந்துவிட்டேன் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், உங்களுக்கு அதை நினைவுபடுத்துகிறேன்" என்று பதில் சொல்கிறார். அப்படித்தான் என் நிலையும் இருந்தது. இப்ப நான் அவர்களில் ஒருவனாக, காலிமுகத்திடலில் சிவத்த கொடியுடன் "வறுமையின் நிறம் சிவப்பு" என்று, அந்த வறுமைக்கு சாதி பேதம், இனத்துவேசம், மத வேறுபாடு ஒன்றுமே இல்லை என்று, அரசியலுக்கு அப்பாற் பட்டு, இன்று உணர்ந்து நிற்கும் இளம் தலைமுறையுடன், தாத்தாவாக நானும் இணைந்துவிட்டேன்! "வாருங்கள், வந்து கை கொடுங்கள் உரிமை இழந்து பல ஆண்டாச்சு ... சொல்லுங்கள், நீதியான நல்ல தீர்வுகளை வரிசை குறைத்து அப்பாவிகள் வாழ ... தாருங்கள், கவலை தீர்க்கும் முடிவுகளை எல்லோரையும் சரி சமமாக மதிக்க ... கூடுங்கள், ஒன்றாய் குரல் எழுப்புங்கள் கொதித்து எழுந்த மக்கள் கேட்கிறார்கள் ... " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை" [ஏழு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ஜலாலுத்தீன் முகம்மது ரூமி அல்லது மௌலானா ரூமி என அழைக்கப்படும் பாரசீக கவிஞரும், நீதிமானும், இறையியலாளருமான இவரின் புகழ் பெற்ற கவிதை "I choose to love you in silence" யின் தமிழாக்கம் இதுவாகும்.] "நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை மௌனத்தில் நிராகரிக்க முடியாது என்பதால் நான் தனிமையில் காதலிக்கிறேன் உன்னை தனிமையில் நான்மட்டுமே சொந்தம் என்பதால் நான் தூரஇருந்து மெச்சுகிறேன் உன்னை தூரம் அன்புவலிக்கு கவசம் என்பதால் நான் காற்றில் முத்தமிடுகிறேன் உன்னை காற்று உதடைவிட மென்மை என்பதால் நான் கனவில் அணைக்கிறேன் உன்னை கனவில் உனக்கு முடிவேயில்லை என்பதால்" "I choose to love you in silence… For in silence I find no rejection I choose to love you in loneliness… For in loneliness no one owns you but me, I choose to adore you from a distance… For distance will shield me from pain, I choose to kiss you in the wind… For the wind is gentler than my lips, I choose to hold you in my dreams… For in my dreams, you have no end".” [தமிழாக்கம் : கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  18. "வேதனையும் மகிமையும், வாழ்வின் கதை" / "Pain and glory are Every one's Story" "ஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே!" "அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறது, அங்கே நிம்மதி கிடைக்கிறது, இங்கே வேதனை வலிக்கிறது, அன்பே!" "யார் யாரோ, ஒவ் ஒருவருக்கும், ஒரு கதை சில வலியை கூறும், சில சிறப்பை கூறும், அன்பே!" "எவரடி பூமியில் இன்று, பயம் கொள்ளா மனிதன்? சிலர் அழுவார், சிலர் அழுதுகொண்டே சிரிப்பார் அன்பே!" "வெவ் வேறு கட்டத்தில், எம்மை திட்டி சாணமும் பூசுவார்கள். வெவ்வேறு கட்டத்தில், போற்றி பதக்கமும் தருவார்கள், அன்பே!" "எங்களுக்கும் ஒரு காலம் வரும், ஒரு வாழ்வு வரும், மேலே உயர்ந்து நாம் வானத்தையும் தொடுவோம், அன்பே!" "காலம் கைவிட்டால், தொட்டது எல்லாம் வசை பாடும், தோல்வியின் கால் அடியில் குப்பற விழுவோம், அன்பே!" "ஒவ் வொருவர் வாழ்விலும் இன்பமும் துன்பமும், அது ஒரு கனப் பொழுது, எம்மை ஆட்டிப் படைக்கும் அன்பே!" "ஒவ் வொரு கதைக்கும், தொடக்கமும் முடிவும் உண்டு, அது நேராக அல்லது வளைந்து செல்லும், அன்பே!" "உனது கதை எந்த வழி, நீ அறிவாய் புளிப்பும் இனிப்பும் கலந்த கலவையடி அன்பே!" "Every ones have a story to tell, When we rose when we fell, Darling! There is Joy there is sadness, There is sanity There is madness, Darling!" "No matter who we consider, Each one has some story, Some tell pain Some tell glory, Darling! There is none alive, who does not experience some fears, some surmount any sadness, some deluged by tears, Darling!" "At different times of our life, our hands hold; Our share of dirt and our share of gold, Darling! When we will have our times of incredible highs, We will be in touching distance of our skies, Darling!" "When we will have our times of incredible lows, We all see in our sight is our toes, Darling! Each one has to feel the full range of Joy and grief We only get a moment to realise these in our life, Darling!" "Every story has a beginning and an end, Every story has a straight course and a bend, Darling! How your own story unfolds and turns out, you know best, Your story is a mixture of sours and sweets, Darling!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  19. "வாழ்வை,கலை தொடும் பொழுது" / "When Life touches by Art" "கலையும் வாழ்வும் பல பல கோணங்கள், மகளே கூர்ந்து பார்த்தால், பல பல வர்ணங்கள் பளபளக்கும்! வாழ்வு எம் இதயத்தை தொடும் பொழுது, மகளே வாழ்வை,கலை பிரதி பலிப்பதை உணர்வாய்!" "வாழ்வை கலை தொடும் பொழுது,நீ ஆறுதலடைவாய், மகளே வேதனைக்கு அது விடியல்,இன்பத்திற்கு அது ஊற்று! இயந்திர வாழ்வு மனிதனை சூழும் பொழுது,மகளே 'இயல் இசை நடனம்',ஒரு புது தெம்பு கொடுக்கிறது!" "சூதும் வஞ்சகமும் வாழ்வை கவ்வும் பொழுது,மகளே கலை எமக்கு துணை நின்று, எம்மை விடுவிக்கும் ! வாழ்வு நேர்கோடும் அல்ல கணிக்கக்கூடியதும் அல்ல, மகளே வாழ்வு எட்டி உதைக்கையில்,எமக்கு கைகொடுப்பது கலை!" "துன்பமும் துயரமும் எம்மை பீடிக்கும் பொழுது, மகளே கலையின் நாலு சுவருக்குள், நாம் தஞ்சம் அடையலாம்! கடுமையான அன்பில்லா வாழ்வு சூழும் பொழுது, மகளே கலை பல கோணங்களில் தழுவி,ஆறுதல் அளிக்கிறது!" "Art and life have many dimension,Dear daughter Deeper we look,We find many perception! When we feel real life touching the heart,Dear daughter We see real life being mirrored by art!" "You feel a change where art touches real life,Dear daughter At stages,helping to bring joy to human strife! When you're being monotonous and tedious,Dear daughter 'Literature,Music and dance',help to bring new perspectives!" "When real life appears callous and cruel,Dear daughter We might escape its cruelty,with some form of art! Real life never follows a predictable or straight line,Dear daughter Where life's agonies upset us,art shows a hopeful sign!" "When some tragedy and despair befalls,Dear daughter We can get security and shelter within art's four walls! Where real life seem so harsh and cold,Dear daughter Art embrace and hold us with its dimensions!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  20. "என் பார்வையில் ஏன் பொது வேட்பாளர் அவசியம் இன்று" [வெளிப்படையாக செய்த தவறுகளை ஏற்று மன்னிப்பு கேட்க்காத ஜனாதிபதி வேட்ப்பாளர் இருக்கும் பட்சத்தில்] 1915 ஆம் ஆண்டில், டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்தர்கள் சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லீமிற்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என்பது மட்டும் அல்ல, தமிழர்க்கு எதிராக துவேசம் கூட பரப்பப் படாமல் கூட இருந்து இருக்கும். தமிழரின் இன்றைய பிரச்னைக்கு முக்கிய காரணம் அல்லது தொடக்கம் இவர்களே! இது தான் நாம் படித்த பாடம் . ஏன் அன்றே ராமநாதன் படித்த பாடம் 'டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’. அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பின் உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், இறுதியில் ராஜாவலியிலும் எப்படி எல்லாளனை படிப்படியாக ஒரு இனவாதியாக மாற்றி சாடினார்களோ அப்படியே ராமநாதனையும் ஒரு இனவாதி என்று சாடினார்கள் என்பது வரலாறு ஆகவே எந்த சிங்கள தலைவர்களையும் ஆதரித்தோ அல்லது ஆதாரிக்காமலோ ஒன்றும் நடை பெற போவதில்லை. அது இதுவரை கண்ட காட்சி. காரணம் ராமநாதனின் 1915 இல் இருந்தே வரலாறு கூறும் ஆகவே தமிழ் பேசும் முழு சமூகமும் ஒரு குடையின் கீழ், வெற்றி தோல்வியை ஒரு புறம் தள்ளிவிட்டு, தமக்கு என ஒருவரை நிறுத்தி, தம் கொள்கை விளக்கத்தை தெரியப்படுத்துதல், வேறு ஒரு வழியிலாவது வெற்றி தரும் ஒற்றுமை உலகத்துக்கு உண்மை உரைத்தலும் எடுத்து காட்டுதலும் அதற்கு இது ஒரு முதல் படியாக கூட இருக்கலாம் ? என்றாலும் இவை எல்லாம் தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. அது தான் எம்மை என்றும் ஏமாற்றும் ஒன்று ?? உதாரணமாக, "ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு என்றவாழ்வைஇன்னும்காணோம்!" தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். "பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள், முரசு முழங்கு தானை மூவருங்கூடி, அரசவை இருந்த தோற்றம் போலப்" (பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம். இன்னும் ஒரு சமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று பாடினார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." ஆனால் இவை எல்லாம் இலக்கியத்துடன் நின்றுவிட்டன . அது தான் எம் இனத்தின் பெரும் குறை. ஒற்றுமையை குழப்பவென்றே ஒரு கூட்டம் காரணம் எதாவது ஒன்றைக் கூறிக்கொண்டே இருக்கும். அது நாம் கண்ட வரலாறு! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Like
  21. ['சமாதானம்' நிலவ வேண்டும் என்றால் அங்கு 'மன்னிப்பு' முக்கிய பங்கை வகுக்கிறது. 'மன்னிப்பு' என்ற கட்டுரையை, 'மன்னிப்பு' என்ற கவிதையுடன் சமாதான விரும்பிகளின் கருத்துக்கு சமர்ப்பிக்கிறேன். நன்றி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!] "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை தனதாக்கி பெரும்பான்மை அதிகாரத்தில் இறுமாப்புடன் வரலாற்றை திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்புகேள் நாடு முன்னேறும்! " இரக்கமின்றி சுடும் காட்டுமிராண்டிகள் அவர்களல்ல இந்தநாட்டின் பூர்வீககுடிகளில் அவர்களும் ஒருவர் இணைந்து வாழ்ந்த குடிமக்கள் அவர்கள் இன்பமாகவாழ இருவரும் மன்னித்து மறவுங்கள்! " "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " "இன்பபுகழை அழியாது கொடுக்கும் அடக்கத்தை இருஅடி திருக்குறள் கூறியவாறு ஏற்று இருளாக்கி விடும் அடங்காமையை துறந்து இருகைகூப்பி மன்னிப்புகேள் உலகம் போற்றும்! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] "மன்னிப்பு" மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது. மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகுமுறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம். எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும். நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும். மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம். மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ? எனவே தான் உண்மையை கண்டறிந்து, கொடூரத்தின் வெளிப்பாட்டை அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம் அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும். எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும். இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?. எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. “இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King] ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல. முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள். "மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது. அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது. உதாரணமாக, 'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43) இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில் "உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. [For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க. "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று." [குறள் 152] தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று. ஆகவே மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். அப்படியான தலைவர்களில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பெரும்பான்மையினரில், யாரும் இருக்கிறார்களா ? அது தான் முதலில் வெளிப்படையாக தெரியவேண்டும் இல்லாவிட்டால் குறைந்தது நாம் ஆவாது எமது ஒற்றுமையையும் கோரிக்கையையும் ஒரு புள்ளியில் காரணங்களுடன் எடுத்துக் காட்டி உலகத்துக்காவது எம் நிலையை சொல்ல, அதனால் உலகத்தின் அழுத்தத்தை அவர்கள் சந்திக்க வழி சமைக்கக் கூடிய தமிழ் பேசும் எல்லோரும் அல்லது தமிழர் எல்லோரும் ஏற்கக்கூடிய பொது வேட்ப்பாளரை நிறுத்துவது காலத்தின் கட்டாயம் என்று எண்ணுகிறேன் [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. "பொது வேட்பாளர் என்பது விசர்வேலை. அப்படி ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் அது சிங்களத் தரப்புக்கு சாதகமாகவே அமையும். தமிழர் தாயகப்பகுதியில் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறவேண்டியிருக்கும். அவ்வாறு நடக்காதுபோயின் சிங்களத் தரப்பு வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என பிரசாரம் செய்ய ஏதுவாக இருக்கும்." இவளத்தையும் சொல்லிவிட்டு "தமிழ் அரசியல் கட்சிகளைவிட மக்களுக்குத் தெளிவான அரசியல் நிலைப்பாடு உண்டு" என்றும் "முதலில் தமிழ் அரசியல் கட்சிகள் எல்லாம் ஓரணியில் வரவேண்டும். அப்படி நடக்கச் சாத்தியமே இல்லை." என்றும் சொல்லப்பட்டுள்ளது இதில் இருந்து புரிந்து கொள்வது என்ன ? 'ஒன்று தங்களில் , தங்களிலின் ஒற்றுமையில் நம்பிக்கை வேண்டும் என்பதில்' நம்பிக்கை இல்லை. ஒற்றுமை இல்லை என்பது கண்கூடு. ஆனால் அதற்காக நம்பிக்கையை இழக்கலாமா ? நாமே அதற்கு ஏதாவது சொல்லி, குழப்பி வழிவகுக்கலாமா ?? இரண்டாவது தமிழ் அரசியல் கட்சிகளைவிட மக்களுக்குத் தெளிவான அரசியல் நிலைப்பாடு உண்டு என்றால், ஏன் அந்த தலைவர்களை - அரசில் ஒட்டி இருப்பவர்களையும், அரசுடன் ஒட்டாமல் ஒட்டி இருப்பவர்களையும் ஒட்டாமலே இருப்பவர்களையும் கடந்த 75 ஆண்டுகளாக தேர்ந்து எடுக்கிறார்கள்? நாடாளுமன்றக் கதிரைகளை, பாவம் இருந்து சூடேற்றட்டும் என்றா? மூன்றாவது அதிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறாவிடில் சிங்களத் தரப்பு வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லை என பிரசாரம் செய்ய ஏதுவாக இருக்கும். உண்மையில் தமிழனின் கோரிக்கை தமிழ் நாடாக இருக்கவில்லை. எல்லா உரிமைகளையும் பெற்ற ஒரு தேசிய இனமாக, தமக்கு என ஒரு மொழி, ஒரு நிலப்பரப்பு, ஒரு பண்பாடு, ஒரு அரசியல் கொண்டு வாழவே விரும்பினார்கள் . தவிர்க்க முடியாத சூழ்நிலையும் எழிச்சியும் அப்படி ஒன்றுக்கு தள்ளியது உண்மையே . அது தந்த பாடம் - அங்கு நடந்த காட்டிக்கொடுப்புகள், தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் முரண்பட்டு மடிந்தது, இருந்ததையும் இழந்தது ,,,, - நாம் அறிந்ததே நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் , நம்பிக்கையை வளர்க்கவேண்டும் அதற்கு ஏற்ற உதாரணங்களை பரப்பவேண்டும் . நாம் எதை அலசினாலும் இறுதியில் அதுவே அடிப்படையாக இருக்கவேண்டும் அது தனி மனிதனுக்கும் சரி அது மனித குழுவுக்கும் சரி இது என் சிறிய மூளையில், அனுபவத்தில் தோன்றியது அது சரியாகவும் இருக்கலாம் , பிழையாகவும் இருக்கலாம் ஆனால் நம்பிக்கை மட்டும் மாறக்கூடாது சிங்கள தலைவர்களின் பேச்சு இனித்தான் 'வடக்கு கிழக்கு வாழ் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை ஆதரிக்கவில்லை' என கூறப்போகிறார்கள் என சொல்லுகிறீர்கள் ?? அப்ப இதுவரை என்ன சொன்னார்கள் ?? எனக்கு ஒன்றுமே புரியவில்லை . கொஞ்சம் தடுமாறுகிறேன் அந்த தடுமாற்றம் தந்த சில வரிகள் கீழே. "என்னை நினைத்தேன் சிரிப்பு வருகுது அவளை நினைத்தேன் அழுகை வருகுது வாழ்வை நினைத்தேன் ஆத்திரம் வருகுது மரணத்தை நினைத்தேன் மகிழ்ச்சி வருகுது!" "குழந்தை பருவம் சுமாராய் போச்சு வாலிப பருவம் முரடாய் போச்சு படிப்பு கொஞ்சம் திமிராய் போச்சு பழக்க வழக்கம் கரடாய் போச்சு!" "உண்மை தேடி உலகம் சுற்றினேன் வேஷம் போட்ட மனிதர் கண்டேன் மாற்றி அமைத்த வரலாறு பார்த்தேன் காசுக்கு மாறும் காதல் கண்டேன்!" "ஒற்றுமை கொண்ட தமிழர் தேடினேன் மரண வீட்டிலும் வேற்றுமை கண்டேன் பதவி ஆசை பிரித்து விளையாடுது பணம் தேடி வியாபாரம் செய்யுது!" "ஒத்த தறிவான் உயிர் வாழ்வான் பிரிந்து கிடப்பவன் மரித்து போவான் மதம் கடந்து பிரதேசம் கடந்து ஒன்றாய் சேரு உய்யும் தமிழினம்!" "ஆலம் விழுதின் அற்புதம் பார் தாங்கி நிற்கும் உறுதியைப் பார் இடர் பல எமக்கு வந்தாலும் இணை பிரியா ஒற்றுமை காண்!" "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே!" "விட்டுக் கொடுத்தும் வாழ வேண்டும் தட்டிக் கேட்டும் பெற வேண்டும் நன்னெறி என்றும் நிலைக்க வேண்டும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வே!"
  23. "ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ?" "கார்த்திகை மழை பொழிந்து ஆர்ப்பரித்து மலை இறங்கி ஊர்வலமாய் வயல் தாண்டி மார்கழியில் குளம் ஆனாள்" "கார்த்திகை தீபம் ஒளிர மார்பினில் அவனை ஏற்றி சேர்ந்து ஒன்றாய் வாழ மார்கழியில் தவம் இருந்தாள்" "தையில் குளநீர் தெளிய தையல் திருமணம் வேண்டி தையில் முன்பனி நீராடி தையல் தன்தவம் முடித்தாள்" "தையோடு மார்கழி சித்திரை தையல் சேர்ந்து கொண்டாட தையில் வழி பிறக்குமென தையல் பொங்கல் பொங்கினாள்" "தை பிறந்தால் வழிபிறக்கும் தைரியமாய் நீ சொல்லுகிறாய் தைத்து புத்தாடை வேறுஅணிகிறாய் தையலே சித்திரைப்பெண்ணே வா" "அருவியில் தவம் முடித்து இருவராய் சேர்த்தது தையே ஊருக்கு பொங்கல் படைத்து பெருவிழா தந்தது தையே" "முருகிற்கு அழகு சேர்த்து ஒருபூசம் தந்தது தையே பெருமை பற்பல படைத்து அருமை மாதமாகியது தையே" "பெருகிய அறிவு கொண்ட புருவம் நெளிக்கும் அழகியே ஆருடம் கூறுபவர் யாரோ ? வருடம் தையா? சித்திரையா ? " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Haha
  24. "நல்ல கதை உங்கள் சொந்த கதையா??" ஐந்து ஆண்டு பழக்கமான சூழலில், ஆனால் கற்பனை கதை
  25. "போனால் போகட்டும் போடா" "போனால் போகட்டும் போடா மனிதா போதை போனதும் தெரியுது உலகமடா ஆசை கொண்டு துள்ளித் திரிந்தேனே ஆரவாரம் செய்யாமல் அடங்கிப் போனேனே!" "ஈன இரக்கமின்றி அகந்தை கொண்டேனே ஈரக்கண் பலருக்கு என்னால் நனைந்ததே ஈன்ற பிள்ளைகளையும் மறந்து வாழ்ந்தேனே இன்று பாடை தூக்கவும் யாருமில்லையே!" "ஊடல் கொண்டு சென்ற மனைவியை கூடல் கொண்டு அள்ளி அணைக்காமல் தேடி ஒருவளுடன் துய்த்து மகிழ்ந்தேனே ஊமையாய் இன்று உறங்கிக் கிடக்கிறேனே!" "உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உணர்ச்சி மட்டும் வாழ்வென நம்பி உள்ளதையும் இழந்து நோயையும் பிடித்து ஒதுங்கி தனித்து சுடுகாட்டில் படுக்கிறேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.