Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"வறுமையிலும் நேர்மை...!"
நன்றி எல்லோருக்கும்
-
"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை]
நன்றி எல்லோருக்கும்
-
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம்
விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01 ஒரு முறை வெளி நாடு ஒன்றில் வாழும் எனது நண்பர் ஒருவர் என்னுடன் தொலை பேசியில் உரையாடும் பொழுது மனம் ஒடிந்தவராக, என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். தான் உறவினர் ஒருவரின் திருமணம் ஒன்றிற்கு போனதாகவும், அங்கு உரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாகவும், அப்பொழுது சிலர் எனோ தானோ என்று அங்கு விதண்டா வாதம் செய்து பயனற்ற உரையாடலாக அதை முடித்து விட்டனர் என்று கவலைப் பட்டார். ஏன் இவர்கள் எப்படி வாழ்க்கையில் முன்னேற்றமாக சிந்திக்காமல் குதர்க்கம் செய்கிறார்கள், இதற்கு ஏதாவது அடிப்படை காரணம் உண்டா?, ஏன் என்றால் தான் தனது சக ஊழியர் ஒருவரின் கொண்டாட்டம் ஒன்றுக்கு போனதாகவும், அங்கு அறிவு பூர்வமான உரையாடல் இருந்ததாகவும், எனவே ஏன் நம்மவர் கொண்டாட்டத்தில் மட்டும் இப்படி ஏட்டிக்கு போட்டியாக வீண் வாதம் செய்கிறார்கள்? இதற்கான விடையை தான் தேடுவதாக சுருக்கமாக முடித்தார். அதன் விளைவு தான் இந்த கட்டுரை! அதே நேரம் எனது கட்டுரை, கதை , கவிதைகளுக்கு, -- அதைச் சரியாக படித்து விளங்காமல், அல்லது அதற்கான தனது கருத்தை அறிவுபூர்வமாக பதியாமல், எதோ தானோ என்று ஏதேதோ அலட்டுவதை நானும் எதிர்கொண்டுள்ளேன். கேட்கப்பட்ட கேள்விக்கு அல்லது கொடுக்கப்பட்ட பதிலுக்கு விடையை அல்லது தங்கள் கருத்துக்களை பதியாமல், தேவையற்ற, பொருத்தமற்ற வாதங்களை பதிவதை அண்மையில் கூட அனுபவித்தேன். அதனால் தான் என் மனதில் தோன்றுவதை இங்கு பதிவிடுகிறேன். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அவர் குறிப்பிட்ட முதலாவது கொண்டாட்டத்தை கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால், அங்கு வந்தவர்கள் பெரும் பாலும் ஒரே இனத்தவர்கள் ஆனால் அவர்களின் அறிவு, அனுபவம் மற்றும் வாழ்க்கை பாணி பலதரப் பட்டவை, ஆனால் இரண்டாவது கொண்டாட்டத்திற்கு வந்தவர்கள் பல பல இனத்தவர்கள், ஆனால் அவரின் உரையாடலில் பங்கு பற்றியவர்கள் அதிகமாக சக ஊழியர்களாகவே இருந்திருப்பார்கள், எனவே அவர்களின் அறிவு, அனுபவம் பல பெரும்பாலும் ஒரு தரப் பட்டவையாக கட்டாயம் இருந்திருக்கும் .ஆகவே இந்த ஒற்றுமை, வித்தியாசம் அடிப்படையில் இரு மாதிரியையும் ஒப்பிட்டு, அந்த கோணத்தில் என் கட்டுரையை இங்கு விரிவாக்கியுள்ளேன். முதலாவதாக விதண்டா வாதம் என்றால் என்ன என்று பார்ப்போம். பிறர் கூறுவதை மறுத்துத் தன் கொள்கையை நாட்டாது வீணே கூறும் வாதம் அல்லது ஒருவர் தனது கருத்தில் அல்லது பேச்சில் நியாயமில்லை என்று தெரிந்தும் வீணாகச் செய்யும் வாதம் எனலாம். அதே போல ஏட்டிக்கு போட்டி என்றால், ஒருவரிடம் ஏதாவது ஒன்று சொல்லி, சரி என்று அதை ஏற்றுக்கொள்ளாமல், அதற்கு பதிலாக ஏதாவது வேறு ஒன்றை அந்த நபர் சொல்லும்போது அல்லது ஒருவன் ஒன்று செய்தான் என்றால் நான் அதற்கு பதிலாக இதை செய்வேன் என்று முரண்டு பிடிக்கும்போது அதை ஏட்டிக்கு போட்டி என்பர். விதண்டா வாதத்துடன் ஒத்து போகும் இன்னும் ஒரு சொல் குதர்க்கம் ஆகும். ஒருவர் மற்றொருவர் சொல்வதை எதிர்த்தோ இல்லாத அர்த்தம் கொடுத்தோ நியாயமற்ற முறையில் செய்யும் வாதம் என்று இதைச் சொல்லலாம். திருக்குறளில், அதிகாரம்: கல்வி குறள் எண்:m391 இல் "கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என அழகாக திருவள்ளுவர் கூறுகிறார். இது கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும் என்றும், அப்படி கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இது ஒருவர் கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டும் என சுருக்கமாக கூறுகிறது. ஆனால் என்ன நூல்கள் என்று கூறாமல், கற்பவைகளை கசடறக் கற்க வேண்டும் என்று தான், வள்ளுவர் கூறியிருக்கிறார். எனவே எவருக்கும் எதைக் கற்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். உண்மை தான் நாம் இப்படி குழம்பிப் போய்விடக் கூடாது. குதர்க்கமாக வாதிட்டு கொள்ளகூடாது என்பதற்காகத்தான், திருவள்ளு வரும், தீர்க்க தரிசனமாக, ஒரு குறிப்பை கோடிட்டுக் காட்டி இருக்கின்றார். - கற்பவை கசடற கல். கற்றபின் அதற்குத்தக நில் என்று ! இது உரையாடல், வாதாடல் எல்லாவற்றிற்கும் பொருந்தும். பாண்டிய மன்னர்கள் புலவர்களைக் கூட்டி வைத்துத் தமிழாய்ந்து, செய்யுட்கள் இயற்றிய அவையைச் ‘புணர்கூட்டு’ [சங்கம்] என்று கூறினர். என்றாலும் இது தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு ஆகும் என பட்டினப் பாலை 169-171, "பல் கேள்வி துறை போகிய தொல் ஆணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடியும்" [Lovely colorful flags are flown, where wise scholars who have gained knowledge in many fields according to established traditions, debate.] என இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் மணிமேகலையில் 'இறைவன் ஈசன்' என நின்ற சைவ வாதி நேர்படுதலும் [27-86/87] என்ற வரிகளில் "சைவவாதி"[சைவ சமயக் கொள்கையை எடுத்து வாதிப்போன்] என்ற சொல்லை காண்கிறோம். சங்கம் என்பது கூட்டம். பொதுமைப்பட்ட எவற்றையும் செய்வதற்கு முன், கூடிப் பேசி, வாதாடி முடிவெடுத்தல் என்பது இனக் குழுத் தமிழரின் தொல்வழக்கம் என்பதை இதனால் அறிகிறோம். என்றாலும் அந்த விவாதம் பயனுள்ளதாக அமைய வேண்டும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பு. அப்படி என்றால் பயனற்ற பேச்சு என்றால் என்ன என்பதையும் நாம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக நாம் ஒவ்வொருவரும் அண்டத்தைப்பற்றி அல்லது உலகத்தைப் பற்றி ஒரு சார்பியல் கண்ணாடி ஊடாகவே உணர்கிறோம், அதாவது எமக்கு தொடர்பாகவே அவையை விவரிக்கிறோம். அப்படியே பேச்சும் ஆகும். பொதுவாக எவரும் முட்டாள்தனத்தை பேச விரும்புவதில்லை, அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் சரியான அர்த்தமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்றே கருதுகிறார்கள். அதாவது அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமற்ற [meaningfulness and meaningless] என்ற சொற்கள் ஒன்றுக்கொன்று சார்பான சொற்கள். அவை மொத்த விவகாரம் குறித்த உங்கள் கருத்தை பொறுத்தது. இதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இனி எமது கேள்விக்கு மீண்டும் வருவோம். பொதுவாக பேச்சு நாம் முன்னேறுவதற்காக அமைந்த ஓர் அரிய செயலாகும். பண்பாடு, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் மக்கள் ஒருவருக் கொருவர் பரிமாறிக் கொள்வதற்கும், அறிவு வளர்ச்சிக்கும் பேச்சு அடிப்படையாக அமைகிறது. பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான் [He that speaketh, he that soweth, he that heareth, he that reapeth]. எனவே இப்பேச்சினை மக்கள் ஒழுங்காகப் பேசுதல் வேண்டும். ஆனால் பொதுவாக ஒவ்வொருவரும் தங்களை அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்கிறார்கள், அதனால் தான் மிகப்பலர் முட்டாளாக இருக்கிறார்கள் [Everyone thinks they are intelligent. That's why most of them are foolish]. ஒருவரின் பேச்சை பலவகையாக இடத்திற்கேற்றாற் போன்றும், பேச்சினைப் பொறுத்தும் வரையறுக்கின்றனர். உதாரணமாக, வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, வெறும் பேச்சு, திண்ணைப் பேச்சு, வரட்டுத்தனமான பேச்சு, அர்த்தமற்ற பேச்சு, ...... எனப் பழவகையாகும். வாதங்களும் அப்படியே . அவ்வற்றில் ஒன்று தான் விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் ஆகும். "வாதம் ஓதிய வஞ்சரைக் காணில்ஓர் காதம் ஓடும் கடியனை ஆள்வது நீத மோஅன்றி நேரும்அ நீதமோ" என்று இராமலிங்க அடிகளார் தனது திருவருட்பாவில் பாடல் 1101 இல், கடலின் அலை முழக்கமிக்க திருவொற்றித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானிடம் கேட்க்கிறார். அதாவது வீண் வாதம் பேசுகின்ற வஞ்சகர்களைக் கண்டால் ஒரு காதத்துக்கு அப்பால் ஓடும் அச்சமுடையனாகிய என்னை ஆட்கொள்வது நீதியோ அல்லது அநீதியோ என்று வினவுகிறார். ஆகவே விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் செய்பவர்களிடம் இருந்து புத்திசாலியாக விலகிப் போவதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 தொடரும்
-
"வறுமையிலும் நேர்மை...!"
"வறுமையிலும் நேர்மை...!" இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியில், வறுமை வீதம் 2021 ஆண்டில் இருந்த 13.1% இல் இருந்து 2022 ஆண்டு, 25.6% அடையும் என்று உலக வங்கி கூறியது. இப்படியான ஒரு சூழலில் தான் நானும் மனைவியும், விடுதலையின் பின் யாழ்ப்பாணம் இருந்து கொழும்புக்கு சொகுசு பேரூந்தில் போய்க் கொண்டு இருந்தோம். எமது பேரூந்து வவுனியாவில் சிறு ஓய்விற்காக தரித்து நிற்கும் பொழுது, ஒரு சின்ன பெண், ஒரு கூடையில் மாம்பழத்துடன் ஏறி, அதை விற்கத் தொடங்கினார். அவள் எம் அருகில் வரும் பொழுது இன்னும் அறைக்கூடைக்கு மேல் மாம்பழம் இருந்தது, அதை எடுத்து மணந்து பார்த்த என் மனைவி, அது நல்ல பழம் என்றும், விலையும் மலிவாக இருக்குது என்று என் காதில் மெல்ல சொன்னார். என்னிடம் சில்லரைத் தாள்கள் அப்பொழுது இருக்கவில்லை. என்றாலும் மனைவியின் ஆசையை நிராகரிக்கவும் விருப்பம் இல்லை. அங்கு பேரூந்தில் இருப்பவர்கள் சிலரிடம் நான் சில்லறை பெறலாமா என்று விசாரிக்கும் தருவாயில், மனைவி அந்த சின்ன பெண்ணுடன் அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டார். அவள் தான் தினம் தன் தங்கையுடன் சேர்ந்து இருவரும் இரு கூடையில் பழங்கள் பேரூந்து நிற்கும் தருவாயில் விற்பதாகவும், தம் பெறோர்கள், கடந்த கால போர் சூழலில் காயப்பட்டு இறந்து விட்டார்கள் என்றும், இப்பொழுது, தாயின் தங்கையுடன் வாழ்வதாகவும், இந்த பழங்கள் விற்பனையால் வரும் கூலியில் தான் தாங்கள் மூவர் வாழ்வதாகவும், தன் சித்தியும் ஒரு கால் இழந்ததால், தம் குடிசை வீட்டில் இருந்து பராமரிப்பதாகவும் கூறினாள். அவளின் கதை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் இன்று பொதுவாக இருந்தாலும், அவள் வளைந்து நெளிந்து சொல்லும் அந்த விதம் உண்மையில் எவரையும் உருகவைக்கும். இது மாரி காலம். மழைத்தூறல் வெளியே கேட்டுக் கொண்டு இருந்தது. என்னால் பேருந்துக்குள் தேவையான சில்லறை பெறமுடியவில்லை. அந்த சின்ன பெண்ணின் முகத்தை பார்க்க பரிதாபமாகவும் இருந்தது. எனவே கூடையில் உள்ள முழு பழமும் எவ்வளவு என்று கேட்டேன். அது ஆயிரம் ரூபாய் என்றாள். என்னிடம் ஐயாயிரம் ரூபாய் தாள்கள் தான் இருந்தன. நீங்க இந்த கூடையுடன் பழங்களை வைத்திருங்கள் , நான் கீழே இருக்கும் கடைகளில் ஒன்றில் மாற்றிக் கொண்டு சீக்கிரம் வருவேன் என்று சொன்னார். நான் கொஞ்சம் தயங்கினாலும், மனைவி காசை கொடுங்க ' அவள் ஏழைதான், ஆனால் அவளிடமே நேர்மை இருக்கும்' என்று தான் ஆரம்ப பாடசாலையில் படித்த 'தேவதை ஏழைச் சிறுவனுக்கு அவனின் நேர்மையை மெச்சி வெகுமதி அளித்ததை ஆதாரமாக என்னிடம் சொல்லி, கொடுக்க தூண்டினாள். எனக்கு அவளின் ஆதாரம் சிரிப்புத்தான் வந்தது, என்றாலும் அவளின் அப்பாவித்தனத்தை சீண்ட விருப்பம் இல்லை. எனவே ஐயாயிரம் ரூபாய் தாள் ஒன்றை மனவியினூடாகவே அந்த சின்ன பெண்ணிடம் கொடுத்தேன். என்றாலும் என் மனம் அலைமோதிக் கொண்டு இருந்தது, நாம் அடிக்கடி ஒருநாளும் 'அவர் பணக்காரர், ஆனால் அவர் நேர்மையானவர்' என்று சொல்லுவதில்லை. ஆதரவற்ற மக்கள், பணத்தின் தேவையால் ஒழுக்கமற்ற முறையில் நடக்கலாம் என்று உளவியல் நம்பிக்கை எமக்கு சொன்னாலும், உண்மையில் ஏழை மக்கள் ஒட்டுமொத்தமாக தங்கள் சமூகத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதால், அவர்கள் ஏமாற்றும் வாய்ப்பு மிக குறைவு, ஆனால் பணக்கார மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள சுதந்திரத்தாலும் சமூகத்தில் இருந்து அதிக தனிமையிலும் இருப்பதாலும் ஒழுக்கக்கேடான நடத்தைகளில் ஈடுபட வாய்ப்புக்கள் அதிகம் என்ற என் எண்ணம் என்னை ஆறுதல் படுத்தியது. ஒரு ஐந்து ஆறு நிமிடத்தில் பேரூந்து வெளிக்கிட ஆயுத்தமானது. இன்னும் அந்த சின்ன பெண் மிச்ச காசுடன் திரும்பி வரவில்லை, அவளின் கூடை இன்னும் என் மடியிலேயே, பேரூந்தில் இருந்த சிலர் , ஓட்டினரிடம் பகிடியாக , அங்கே ஒரு அன்பான மனிதர், மடியில் கூடையுடன் காத்திருக்கிறார் என நினைவூட்டினர். ஓட்டினரும் சிரித்த படி மேலும் இரண்டு மூன்று நிமிடம் இருந்துவிட்டு புறப்பட ஆயத்தமானார், மழை பெய்வதால் கீழே போய் பார்க்கவும் முடியவில்லை. நான் மனைவியின் முகத்தை பார்த்தேன். அவர் ஒன்றும் பேசவில்லை . என் தோளில் சாய்ந்துவிட்டார். எல்லோரும் இனி இந்த காசு கிடையாது என்று தாக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும், தாம் எதோ ஏமாறாதவர்கள் என்றும் பேசிக் கொண்டும் இருந்தார்கள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது காசு போனது அல்ல, அவர்களின் பேச்சுத்தான்!. நானும் கொஞ்ச நேரத்தால் அயர்ந்து தூங்கிவிட்டேன். மனைவி, அன்பே, கொழும்பு வந்துவிட்டது என்று தட்டி எழுப்பத் தான், கண் முழித்துப் பார்த்தேன். அடுத்தநாள் மாலை , நான் பயணம் செய்த பேரூந்து நிறுவனத்தில் இருந்து ஒரு தொலைப்பேசி எனக்கு வந்தது. நாம் பற்றுச்சீட்டு பதியும் பொழுது, பெயர் , தொடர்பு இலக்கம் கொடுப்பது வழமை. நான் என்ன எதோ என்று கொஞ்சம் பதறி, பதில் அளிக்க சென்ற பொழுது, அவர்கள் உங்கள் மிச்ச காசு, அந்த பெண் காவல் நிலையத்தில், பேரூந்து தரித்த நேரம், போகும் இடம் கூறி, தன் கதையையும் கூறி கொடுத்து உள்ளார். உங்கள் வங்கி இலக்கத்தை, காவல் நிலையத்துக்கு அறிவித்து அதை பெறலாம் என்றனர். அதற்கிடையில், இதைக்கேட்டுக்கொண்டு இருந்த என் மனைவி ஓடி வந்து, என் அபிப்பிராயம் என்றும் பிழைத்ததில்லை என்று நெஞ்சு நிமிர்ந்து பெருமையுடன் சொல்லி என்னைக் கட்டிப் பிடித்தார். அவளின் சந்தோசம் எனக்கு மகிழ்வு கொடுத்தாலும், அந்த சின்ன பெண்ணுக்கு என்ன நடந்தது என்று அறியவே ஆவல் கூட இருந்தது. எனவே அந்த குறிப்பிட்ட காவல் நிலையத்துக்கு அழைப்பு ஏற்படுத்தினேன். அப்ப தான் அவளின் மிகுதி கதை தெரியவந்தது. அவள் முதலில் அங்கே இருந்த ஒரு பெரிய கடைக்கு போனார், ஆனால் அங்கு மக்கள் கூட்டம் கூடுதலாக இருந்ததால், பின் பக்கத்தில் இருந்து விடுதி ஒன்றுக்கு போக முயன்றார், ஆனால் அங்கு காவலுக்கு நின்ற உத்தியோகத்தர் அவளின் உடையையும் கோலத்தையும் பார்த்து உள்ளே விடவில்லை, மழையும் ஒரு பக்கம். அதன் பின் , ஒரு வயோதிப மனிதன் கொஞ்சம் தள்ளி பாண் மற்றும் தின்பண்டங்கள் விற்பது அவளுக்கு ஞாபகம் வர, அங்கு, மழையில் நனைந்துகொண்டு போய், காசை மாற்றி , திரும்பி ஓடி வந்துள்ளார், ஆனால் அதற்குள் பேரூந்து போய்விட்டது. அங்கு மற்ற பேருந்துகளில் பழங்கள் விற்றுக்கொண்டு இருந்த தங்கையிடம் இதை சொல்லி உள்ளார். தங்கை சின்ன பிள்ளைதானே, ஏன் அக்கா, அவர் தான் போய்விட்டாரே, நாம் இதை எடுத்து, ஒரு சில நாளாவது, கொஞ்சம் நிம்மதியாக சாப்பிடலாமே என்று தன் விருப்பத்தை கூறி உள்ளார். ஆனால், இந்த சின்ன பெண் அவளை வீட்டுக்கு போகும் படி கூறிவிட்டு, பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில், தன் கதையையும் மற்றும் விபரங்களைக் கூறி மிச்ச காசை கொடுத்து, இதை அந்த ஐயாவிடம் கொடுக்கும் படி அழுது கொண்டு கொடுத்துள்ளார் என்று அறிந்தேன் . "பணம் தான் ஏழையின் பிரச்சனையென்றால், அவனது நேர்மையின் மீதும் கலங்கம் கற்பித்து ஏழையின் நிம்மதியைக் கெடுக்கும் கூட்டம் என்று தான் அழியுமோ பராபரமே!." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை]
"தாய்மொழி" [அந்தாதிக் கவிதை] "தாய்மொழி என்றும் எங்கள் அடையாளம் அடையாளம் தொலைந்தால் நமக்கு மாய்வே! மாய்வைத் தடுக்க தமிழால் பேசுவோம் பேசும் மொழியைக் கலக்காமல் கதைப்போம்! கதைப்பதில் பண்பாடு சொற்களில் நிலைக்கட்டும்!!" "நிலைத்த புகழை அது பரப்பட்டும் பரப்பிய கருத்துக்கள் பெருமை சேர்க்கட்டுமே! சேர்க்கும் புதிய சொற்கள் முழுவதும் முழுமையான முறைப் படி வளரட்டும்! வளரும் நாமும் பேசுவோம் தாய்மொழி!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
"தீவிர தமிழ் தேசியம் பேசி இனவாதத்தை மேலும் வளர்தது விடுவதும் உசுப்பேற்றி உசுப்பேற்றி வெறுப்பு கருத்துக்களை விதைத்து உண்மையான தமிழ் தேசியத்துக்கு உலை வைப்பது தான் தான் எமது வேலை.??? நன்றி உங்க வேலையை , நோக்கத்தை, அழகாக சுருக்கமாக வெளிப்படையாக தெரியப்படுத்தியத்துக்கு. நான், எனக்கு உண்மையில் யார் யார் என்ன வேலை, நோக்கம் கொண்டு உள்ளார்கள் என்பதில் அக்கறை என்றும் இல்லை நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். சரி பிழை , அதை வாசிப்பவர்கள் சரியாக சுட்டிக்காட்டும் இடத்து ஏற்றுக்கொள்கிறேன் , அல்லாவிட்டால் அவர்களின் பதிலுக்கு மட்டும் விளக்கமாக வரலாற்றில் இருந்தும் மற்றும் தொல்பொருள் / இலக்கியங்களில் இருந்து எடுத்துக் கூறுகிறேன் அவ்வளவுதான் , நான் என்றும் ஒரு அறிவில் சிறியவனே, ஆனால் அறிந்து கொள்ளும் / கற்றுக் கொள்ளும் ஆவல் உள்ளவன் இரண்டாவது நான் எழுதிய கேள்விகள் / பதில்கள் "பெருமாள்" என்ற ஒருவர் என் கட்டுரைக்கு எழுதிய ------ ..... அய்யோ சாமி இதென்ன கூத்து யாழின் விதி முறைகள் பற்றி அறியவில்லையா ? .................................................................................... முறைகள் தெரிந்து கொண்டு நசுக்கிட்டு முறை மீறல் . .............................................. கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம் ............................................................. என்பதற்கானதே , மற்றும் படி வேறு எவருக்கும் அல்ல. என்றாலும் யாராகினும் அதற்கு நான் எழுதிய 'கேள்விகளுக்கு / பதிலுக்கு' மட்டும், தேவையற்ற, பொருத்தமற்ற அலட்டலை தவிர்த்து, பதில் தந்தால் கட்டாயம் வாசிப்பேன் மீண்டும் நன்றி, அன்பு island க்கு
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா]
நன்றி எல்லோருக்கும்
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்)
நன்றி எல்லோருக்கும்
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 16 முன்னைய, பண்டைய நாட்களில், வீட்டின், சமையல் அறையின் தரைகள் களி மண்ணால் அல்லது சாணத்தால் அல்லது இரண்டாலும் மெழுகப்பட்டதாக இருந்தன. ஆகவே எறும்புகள் இலகுவாக சாப்பாட்டு இலைக்கு ஊர்ந்து வரக்கூடியதாக இருந்தன. எனவே அவையை தடுக்கும் பொருட்டு அன்றைய நாட்களில் இலையை சுற்றி, சாப்பிட தொடங்கும் முன்பு நீர் தூவப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாம் அல்லது மூன்றாம் நுற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், 6] கொலைக்களக் காதை, 41-43, கண்ணகி கணவனுக்கு, வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டதை, "தாலப் புல்லின் வால் வெண் தோட்டுக் கை வல் மகடூஉக் கவின் பெறப் புனைந்த செய் வினைத் தவிசில் செல்வன் இருந்தபின், கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி, மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள்போல், தண்ணீர் தெளித்து, தன் கையால் தடவி, குமரி வாழையின் குருத்து அகம் விரித்து-ஈங்கு, ‘அமுதம் உண்க, அடிகள்! ஈங்கு என;" என்று குறிக்கிறது. அதாவது, தாழை மரத்தின் வெண்ணிற மடல்களைக் கிழித்துக் கைத்திறன் மிக்க பெண் செய்து தந்த தடுக்கு இருக்கையில் கோவலன் அமர்ந்தான். கண்ணகி சுட்ட மண்ணால் செய்த மண்கலம் ஒன்றில் தண்ணீர் கொண்டு வந்து மணக்கும் மலர் போன்ற தன் கைகளால் காதலன் அடிகளைக் கழுவினாள். பின் நிலமடந்தையினது மயக்கத்தை ஒழிப்பவள் போல, தண்ணீர் தெளித்துத் தன் கையால், நிலத்தை தடவினாள் . வாழைக் கன்றில் அறுத்து வந்த வாழை இலைக் குருத்தை விரித்து உணவு பரிமாறி "அடிகள்! அமுதம் உண்க" என்றாள் என்கிறது. இன்றைய வலைத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பாடல், வாழை இலை விருந்து ஒன்றை வர்ணிக்கிறது. இதை "இந்திரா ரெங்கநாதன்" என்ற ஒரு பெண்மணி "PoemHunter.com" என்ற வலைதளத்தில் ஆங்கிலத்தில் பதித்துள்ளார். "Gleaming, green and live Like a tailless fish alive Neatly cut and placed Gemming sheen of water sprinkled ...", அதாவது உயிர் உள்ள வாலில்லா மீன் போன்று நேர்த்தியாக வெட்டப்பட்டு பளிச்சிடும் வாழை இலையில் படைத்து, மாணிக்கம் போல் பிரகாசிக்கும் நீரை தெளித்து, என்று பாடுகிறது. ஆனால் இந்த பழக்கம் பொதுவாக சாப்பாட்டை மேசையில் வைத்து நாம் கதிரையில் இருந்து சாப்பிட தொடங்கியதும் பொருத்தம் அற்ற ஒன்றாக இருந்தாலும், சிலர், இன்னும் அதன் உண்மைப் பொருளை சரியாக புரிந்து கொள்ளாமல், அந்த பாரம்பரியத்தை கண் மூடித்த தனமாக இன்றும் பின்பற்றுகிறார்கள் என்பது ஆச்சிரியமாக உள்ளது. தமிழரின் மிகவும் பெருமைக்கு உரிய மதம் சாரா பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலுடன் மிகவும் நெருக்கிய தொடர்புடைய ஒரு பாரம்பரிய வீரம் செறிந்த, இன்றும் தொடரும் விளையாட்டு ஏறு தழுவலாகும். அவர்கள் வாள் சண்டை, மல்யுத்தம், குதிரையேற்றம், மல்லர் விளையாட்டு போன்ற வேறு பல வீர விளையாட்டுகளையும் பாரம்பரியமாக அன்று கொண்டிருந்தனர். இந்த தமிழரின் பாரம்பரிய விளையாட்டு மிகவும் தொன்மையானது. நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிக கல்முத்திரையில் ஜல்லிக்கட்டிற்க்கான ஆதாரம் கிடைத்துள்ளது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்கள், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோவில் கடந்த 1930-களில் கண்டெடுக்கப்பட்டன. அப்பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன. அந்த பொருட்களில் கல்லால் ஆன ஒரு முத்திரையும் அடங்கும். அந்த முத்திரையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சித்தரிக்கும் ஒரு சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு காளை மாடு தன்னை அடக்க முயலும் வாலிபர்களை முட்டி தூக்கி வீசுவது போலவும், வாலிபர்கள் அந்தரத்தில் பறப்பது போலவும் அந்த முத்திரை செதுக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜல்லிக்கட்டு புழக்கத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த முத்திரையில் எழுத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த முத்திரை அஸ்கோ பர்போலா என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் வண்ண புகைப்படமாக இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழ் எழுத்தாளரும், சிந்து சமவெளி காலத்திய எழுத்துகளில் வல்லுனருமான ஐராவதம் மகாதேவனும் இதுபற்றி ஒரு புத்தகம் எழுதி உள்ளார். சிந்துவெளி நாகரிகம், பண்டைய தமிழர் நாகரிகம் என்பது குறிப்பிடத் தக்கது. அதே போல,கொம்புகள் கூர் சீவி விடப்பட்ட முரட்டுக் காளைகளை அடக்கும் திருவிழா சங்க தமிழகத்திலும் தனித்தன்மையுடன் விளங்கியது. இதை தமிழர் இலக்கியத்தில் ‘கொல்லேறு தழுவல்’ என்று பெயர் கூறி காளை அடக்குவது வெகுவாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, கலித்தொகை-103:63-64 என்ற அடிகள், "கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்" என, காளையின் கொம்பு கண்டு பயப்படுகின்ற எவனோ அவனை ஆயர் மகளிர் அடுத்த பிறவியிலும் கூட தழுவ மாட்டாள் என்று கூறுகிறது. எதிர்வரும் ஆளை கொன்று தூக்கி எறியும் வகையில் வளர்க்கப்பட்ட காளையை, வீரம் சொரிந்த காளையர்கள் அடக்குவதை தழுவல் என்று வீரத்தையே மென்மையான வார்த்தையைக் கொண்டு தமிழ் இலக்கியம் சித்தரிக்கிறது. உதாரணமாக, காளையின் கொண்டை(இமில்) முறியும்படி தழுவி, அதன் மேல் ஏறி, முடிவில் தனது இருகைகளாலும் இரு கொம்புகளையும் இறுக பிடித்தவாறு, அவன் தன் முகம் இரண்டு கொம்புகளுக்கும் இடையில் முன்னோக்கி பார்த்தவாறு அதன் மேனி தம் மார்பில் பொருந்தும்படி தழுவினான் என்றும், இது அவன் அவளின் இரு மார்பகங்களையும் மென்மையாக தழுவது போல் இருந்தது என்றும் பல சங்க கால பாடல்களில் மீண்டும் மீண்டும் வர்ணிக்கப் படுவது இதை உறுதி படுத்துகிறது. இந்த ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு இதுவாகும். இந்த மற்போர் அல்லது எதிரெதிராக மனிதர் விலங்கு போராட்டம் உண்மையில், ஒரு காளை மாட்டை வேட்டையாடுவது அல்ல, இது ஒரு ஏறு தழுவுதல் ஆகும். இங்கு காளை மாட்டுக்கு எந்த தீங்கும் வரவிடுவதும் இல்லை, அந்த மாடுகளைத் துன்புறுத்துவது இல்லை. இன்றைய பெயரான ஜல்லிக்கட்டு, உண்மையில் பழமையானதும் அல்ல, மூலப் பெயரும் அல்ல, பண்டைய தமிழ் ஆயர் சமுதாயத்தில் திறமையுள்ள, தகுதியுள்ள ஒரு மணமகனை தேர்ந்து எடுக்கும் பலப் பரிட்சையாகவும் இது அன்று இருந்தது. ஆயர் குலப்பெண்கள் தம்மை பின் தொடரும் ஆடவருக்கு தம்மை மணக்க வேண்டின் தமது காளையை பிடித்து அடக்கும்மாறு சவால் விடுவர். அப்படி அதை பிடித்து ஏறு தழுவிய ஆடவனை அவள் இன்முகத்துடன் விரும்பி மணப்பாள். இந்த ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம். இந்த வீர விளையாட்டின் எச்சமிச்சம் இன்னும் தமிழ் நாட்டில் தொடர்ந்து கடைப்பிடிப்பதை காணலாம். ஆனால் இந்த பாரம்பரியம் ஸ்பெயின், போர்த்துகல் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றன. ஒரு வேளை இவைகளுக்கு இடையில் வரலாற்றுக்கு முந்தைய ஏதாவது தொடர்பு இருந்து இருக்கலாம். எனினும் அதன் வடிவமும் நோக்கமும் இன்று மாறியுள்ளன. இது இப்ப மணம் சம்பந்தப்பட்டது அல்ல, பணம் சம்பந்தப்பட்டது ஆகும். அது பிந்திய பெயரான சல்லிக்கட்டு என்ற பெயரிலேயே தெரிகிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 17 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 29 தமிழ் காப்பியம் குண்டலகேசி, மணிமேகலை [Kundalakesi and Manimekalai] புத்த சமயம் சார்ந்த இலக்கியமாகும். தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் தமிழர் மத்தியில் 1ஆம் நூற்றாண்டிற்கும் 6ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் செல்வாக்கு பெற்றிருந்த புத்த மதம், அதன் பின் சைவ நாயனார்களின் வருகையால், முழுமையாக செல்வாக்கு இழந்து விட்டது. எனவே பௌத்தம் என்பது வெறுமனே சிங்களவர்களுக்கு உரித்தான ஒன்று அல்ல. இன்று சிங்களவர்களை தாண்டி பல நாடுகளில் பல மொழி பேசுபவர்களாலும் அனுசரிக்கப்படும் ஒரு மார்க்கம் ஆகும். மேலும் அன்றைய தமிழர்களால் பௌத்தம் பின்பற்றப்பட்ட ஒன்று என்பதையும் தமிழ் காப்பியங்கள் ஊடாகவும் பார்த்தோம். அதன் எச்சங்களே இன்றும் தமிழர் பகுதிகளில் எஞ்சி நிற்கும் சான்றுகள். இவற்றை சிங்கள பௌத்தத்தின் தொடர்ச்சியாக கட்டாயம் எடுத்து கொள்ள முடியாது. லயனல் சரத்தின் "புராதான இலங்கையின் தமிழ் சிங்கள உறவுகள்" [Ancient Ceylon Sinhala Tamil Coordination - Sri Lanka Paperback – 1 Jan. 2006 by [Translated by S.P.D. Buddhadasa] Lionel Sarath (Author)] என்ற புத்தகம், தமிழ் மக்கள் சக நாட்டினர் என்ற உணர்வுடன் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை தக்க ஆதாரங்களுடனும் மற்றும் பாரம்பரியமாக தமிழ் விரோதத்திற்கு மேற்கோள் காட்டப்பெறும் வரலாற்று மூலங்களையே இந்த உண்மையினை வெளிப்படுத்துவதற்கு தடயங்களாக அவர் பாவித்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. இது 1996 எழுதப் பட்டது. இவர் மேற்கொண்ட முயற்சியைப் போல வேறு சில சிங்கள அறிஞர்களும், உதாரணமாக பேராசிரியர்கள் சிறிவீர, லியன கமகே, லெஸ்லி குணவர்த்தன, சுதர்சன் செனவிரத்ன, குமாரி ஜயவர்த்தன போன்றோர்களும் ஆற்றியுள்ளனர். கிருஸ்துக்கு முன்னரே இரு தமிழ் மன்னர்கள் சேனன் - குத்திகன் இருபத்து இரண்டு ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்துள்ளார்கள். எவ்வாறு அதற்கு முன்பு நெடுங்காலமாக, ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக, இருந்த அரச குடும்பத்தை இவர்கள் இலகுவாக துரத்தி விட்டது உண்மையில் வியப்பிற்குரியதே. அதற்கு அவர் [லயனல் சரத்] கொடுக்கும் காரணம், அக்காலத்தில் அநுராதபுரத்தில் தமிழ் மக்கள் வசித்து இருக்கலாம், ஏன் என்றால் வடஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக ஆரியர் வருவதை விடவும் தென் இந்தியாவில் இருந்து தமிழர்கள் வருவது எளிதாய் இருந்து இருக்கும் என்பதால் என்கிறர். மற்றும் அக்காலத்தில் வசித்த தமிழ் மக்களும் பௌத்த மதத்தை தழுவி இருந்தமைக்கான சான்றுகள் இருக்கின்றன என்கிறார். கி பி 9 - 21 இல் ஆட்சி புரிந்த மகாநாகனின், பட்டத்து ராணி தமிழ் இளவரசி என்றும், அவ்வாறே, சிலகாலங்களின் பின், மன்னராய் இருந்த இலநாகனின் மைந்தனாகிய சந்திரமுக சிவனின் ராணியும் தமிழ் இளவரசியே என்கிறார் [மகாநாகன் - பெரிய நாகன், இலநாகன் - இளநாகன் - இளமை பொருந்திய நாகன், / இதே பெயர் ஒத்த மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர், சந்தமுகசிவ - சந்திரமுக சிவ - எல்லாமே தமிழுடன் தொடர்புடைய பெயர்களே]. மேலும் தமிழ் வியாபார தலைவர்களால் பௌத்த பிக்குகளுக்கு வழங்கப்பட்ட குகைகளில் மூன்று குறிப்புகள் கண்டு எடுக்கப் பட்டுள்ளன என்றும், அதில் இரண்டாம் நூற்றாண்டிற்குரிய சிலாசனமொன்று அநுராதபுரத்தில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது என்றும், மற்றும் இரண்டு சிலாசனங்களும் பெரிய புளியன்குளத்தில் கண்டு எடுக்கப்பட்டன என்றும் கூறுகிறார். பிரசித்தி பெற்ற வல்லிபுரம் சாசனத்திற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இதுவாகும். அதுமட்டும் அல்ல, மேல் கூறப்பட்ட தமிழ் தலைவர்கள் பௌத்தர்கள் என்கிறார். இக்காலத்தில் தென் இந்தியா தமிழ் இராச்சியங்களிலும் பௌத்த சமயம் செல்வாக்கு பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது என்கிறார். இவ்வாறு பல உதாரணங்களை தமிழ் சிங்கள உறவுகளுக்கு எடுத்து காட்டுகிறார். ஒரு மரியாதையின் பொருட்டு பல தலைமுறைகளாகவும், வெவ்வேறு இடங்களிலும் நடைமுறையில் இருந்தாலும், மரபுகளின் நம்பிக்கையில் எதையும் நம்ப வேண்டாம். பலர் அதைப் பற்றி பேசுகிறார்கள், என்பதால் அந்த விடயத்தை நம்ப வேண்டாம். கடந்த கால முனிவர்களின் அல்லது ஆசாரியர்களின் மேல் உள்ள விசுவாசத்தால் எதையும் நம்ப வேண்டாம். கடவுள் உத்வேகம் தந்தார் என்று உன்னை இணங்கவைத்து, நீ உன் கற்பனையின் பிரகாரம், எதையும் நம்ப வேண்டாம். உங்கள் எஜமானர்கள் மற்றும் ஆசாரியர்களின் அதிகாரத்தில் மட்டும் எதையும் நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் பாட்டில் ஆராய்ந்து அல்லது சோதித்து, நியாயமானதாகக் நீங்கள் கண்டறிந்தவற்றை மட்டும் நம்புங்கள், அதற்குத் தக்க உங்கள் நடத்தையை இணங்க வையுங்கள் என்கிறார் கௌதம புத்தர். [“Believe nothing, in the faith of traditions, even though, they have been held in honour, for many generations, and in diverse places. Do not believe, a thing, because many people speak of it. Do not believe, in the faith, of the sages of the past. Do not believe, what you yourself have imagined, persuading yourself, that a God inspires you. Believe nothing, on the sole authority, of your masters and priests. After examination, believe what you yourself, have tested and found, to be reasonable, and conform your conduct thereto.” - The Buddha ] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 30 தொடரும்
-
"மனதைத் திருடியவளே"
"மனதைத் திருடியவளே" "மனதைத் திருடியவளே என்னை மயக்கியவளே மன்றாடிக் கேட்கிறேன் திருப்பித் தந்துவிடு! மகிழ்வைத் தந்து விலகிப் போனவளே மஞ்சள் நிலாவில் தனிமையில் வாடுகிறேனே!!" "மஞ்சத்தில் உறங்கையில் கனவு விரியுது மகர தோரணம் பந்தலில் ஆடுது! மங்கல அரிசி காத்து கிடக்குது மணமகள் நீயோ அங்கு இல்லையே!!" "மழையும் புயலும் பழகி விட்டது மது வாசனையில் என்னை மறக்கிறேன்! மரணம் என்னை நெருங்க முன் மவுனம் களைத்து மடியைத் தாராயோ!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
இந்த குற்ற சாட்டு யாருக்கு ? எந்த விதிமுறைகள் மீறப்பட்டது ? விளக்கமாக சொன்னால் எல்லோருக்கும் நல்லதே மற்றது "கொஞ்சநாள் வராவிட்டால் தொடங்கிடுவான்கள் மதமாற்றம்" ............................................................................... அது என்ன புதுக்கதை ?? யார் தொடங்குவார்கள் ? யார் மாறுவார்கள் ??? பெருமாள் இன்னும் விடை தரவில்லை, தேடிக்கொண்டு இருக்கிறேன் திருப்பவும் எங்கோ போய்விட்டார் போலும்???
-
"வெளிச்சத்துக்கு வராதவள்"
"வெளிச்சத்துக்கு வராதவள்" பௌத்தர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய அனைத்து மக்களும் வசிக்கும் இடங்களில் மிகவும் முக்கியமானதும் இலங்கையின் வணிக தலைநகரமும், இலங்கையின் ஆகப்பெரிய நகரமுமான கொழும்பு ஒரு பரபரப்பான நகரமாகும். அங்கே இந்தியப் பெருங்கடலின் சத்தமும், போக்குவரத்து நெரிசலும், தெருவோர வியாபாரிகளின் சலசலப்பும் கலந்த வெள்ளவத்தை என்ற இடத்தில், முல்லை என்ற இளம் தமிழ்ப் பெண் வாழ்ந்து வாழ்ந்தாள். பரபரப்பான அந்த நகரத்தைப் போலல்லாமல், முல்லை அமைதியாகவும், கிட்டத்தட்ட கூச்ச சுபாவமுள்ளவராகவும், வெளிச்சத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் கொழும்பின் மையத்தில் வசித்தாலும், அவளுடைய வாழ்க்கை அமைதி, நெகிழ்ச்சி மற்றும் உறுதியுடன் இருந்தது. முல்லையின் எண்ணம் எல்லாம் அந்த 'மே' மாதம் 18 ம் திகதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்கில் அமைந்த கடற்கரை கிராமமும் தான்! குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு கிடைத்த அரிசியை கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியை அங்கு இன்னும் இருந்த தமிழர்கள் போக்கிக் கொண்டனர். அவர்களில் அவளும் அவளின் குடும்பமும் இருந்தனர். அதை அவள் இன்னும் மறக்கவில்லை. போர் கூடாது என்பதே மானுடத்தின் பொது நீதி, என்றாலும் அது எல்லா நாட்டிலும் எல்லா வேளையிலும் அப்படி அமைவதில்லை. உள்நாட்டிலேயே பாரபட்சமான அரசின் அடக்குமுறைகள், சிறுபான்மையினரின் அல்லது எளியவர்களின் உயிரையும், உணர்வுகளையும் உரிமைகளையும் மதிக்காமல் காவு கொள்ளும் நிகழ்வுகள் பல அரங்கேறியுள்ளன. அதுமட்டும் அல்ல, அப்படியான அடக்குமுறைக்கு அல்லது உள்நாட்டு போருக்கு பின்பான வாழ்வும், இடம்பெயர்வும், அப்படியான ஒரு சூழலில் அத்தனை சுலபானதோ சுகமானதும் அல்ல, அதை அனுபவித்தவள் அவள்! அது தான் அவள் பெரிதாக எல்லோருடனும் பழகாமல், தன் வேலையும் தன் குடும்பமாக ஒதுங்கி இருந்துவிட்டாள். நல்ல வேளை, அவள் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்ட வவுனியா "மெனிக் பாம்" தடுப்பு முகாம்களில் ஒன்றில் அடைக்கப்பட்டு இருந்த நேரம், அதைக் கேள்விப்பட்டு, அங்கு வந்த தந்தை அங்கு முன்பு வேலை செய்த தொழிற்சாலையின் முதலாளி, தனது கொழும்பு வீட்டில் ஒரு பகுதியில், அவர்கள் நால்வருக்கும் தங்க இடமும், அவரது கொழும்பு வியாபார நிலையத்தில் தாய், தந்தை இருவருக்கும் துப்பரவாக்கள் மற்றும் எடுபிடி வேலைகளும் கொடுத்ததால், அவளும் தங்கையும் கொழும்பில் தங்கள் படிப்பை தொடர்ந்தனர். அதனால், இருவரும் இப்ப அங்கு ஓரளவு நல்ல உத்தியோகமும் பெற்றனர். முல்லையின் குடும்பம், மற்ற பல தமிழ் குடும்பங்களைப் போலவே, சவால்களின் பங்கை எதிர்கொண்டது. பல தசாப்தங்களாக தனது நாட்டை அழித்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அங்கிருந்து குடிபெயர்ந்த பின் பல கஷ்டங்களைக் அனுபவித்தாள். ஆனால் அவளுடைய குடும்பம் அவளுக்கு கடின உழைப்பு, நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் மதிப்புகளைக் கற்றுக் கொடுத்தது. அவள் தன் தந்தையின் விடாமுயற்சியையும் தாயின் அரவணைப்பையும் அறிந்தவள், எனவே அவள் எங்கு சென்றாலும் இந்த பண்புகளையும் தன்னுடன் எடுத்துச் சென்றாள். முல்லை இலங்கை தேசிய நூலகத்தில் நூலகராக, தன் கடமையில் கண்ணும் கருத்துமாக தன் வேலையை உணர்ந்து செயல்பட்டார். ஒரு நூலகராக, பல்வேறு வகையான புதுப்பித்த, பொருத்தமான மற்றும் அவரவர்களை ஈர்க்கக்கூடிய புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் அநேகவிதமான தகவல் / செய்தி சாதனங்களை தேவைக்கு ஏற்ப வழங்குவதில் திறமைசாலியாகவும் இருந்தார். அத்துடன் இன்றைய அல்லது அண்மைய தகவல் / செய்திகளை தானும் அறிந்து வாசகர்களுடன் அர்த்தமுள்ள உரையாடல்களில் விரும்பி பங்குபற்றுவார். அதுமட்டும் அல்ல அங்கு வந்து படிப்பவர்களின் தேவைகள் மற்றும் ஆர்வங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் வாசகர்களை உற்சாகப்படுத்தவும், ஆர்வப்படுத்தவும் அதில் ஆறுதலடையவும் என்றும் முன்னுக்கு நிற்பவராகவே இருந்தார். சுருக்கமாக நூலகம் அவளுடைய சரணாலயமாகவே இருந்தது. முல்லையிடம் என்றும் அமைதியான நடத்தை இருந்த போதிலும், அவளுக்கு கதை சொல்லும் எழுதும் ஆர்வமும் இருந்தது. அதனால் நூலகத்திற்கு வந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கதைகளைக் சொல்லும் பொழுது உன்னிப்பாக கேட்பாள். அதே நேரம் மற்றவர்களின் தேடுதல்களை, இலக்கியம், அறிவியல் அல்லது வரலாறு எதுவாக இருந்தாலும் கண்டறிய உதவுவதிலும், அவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். இதனால், பல வழக்கமான வாடிக்கையாளர்கள் பலருடன் அவர் வலுவான உறவை வளர்த்துக் கொண்டார். குறிப்பாக இளம் எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களுக்கு வழிகாட்டி, அவர்களின் சொந்த பாதையில் செல்ல அவர்களுக்கு உதவுவதில் அவர் பெருமிதம் கொண்டார். ஒரு நாள், எழிலன் என்ற பதின்ம வயது இளைஞன் கண்களில் கனவோடு நூலகத்திற்கு வந்தான். அவன் ஒரு எழுத்தாளராக விரும்பினான், ஆனால் எங்கு தொடங்குவது என்று அவனுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அதை அவனுடன் கதைக்கும் பொழுது அறிந்த முல்லை, அவனது கற்பனையைத் தூண்டும் மற்றும் அவனது ஆர்வத்தை வலுப்படுத்தும் புத்தகங்களைச் தெரிந்தெடுத்து சுட்டிக்காட்டினாள். எழிலனுக்கு மட்டும் முல்லை இப்படி உதவி செய்யவில்லை. வழிகாட்டுதலைத் தேடும் பல இளைஞர்களுக்கு அவள் ஒரு வழிகாட்டியாக பலதடவை இருந்துள்ளாள். ஆனால், அவள் ஒருபோதும் தன் உதவிகளுக்கு, வழிகாட்டலுக்கு அங்கீகாரத்தை நாடவில்லை, மாறாக அவள் வெளிச்சத்துக்கு தன்னைக் காட்டாமல், அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறாள் என்பதை உணர்ந்து மகிழும் அமைதியான திருப்தியை மட்டுமே விரும்பினாள். அவர் வழிகாட்டிய பல இளைஞர்கள் வெற்றிகரமான மற்றும் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களாக இன்று மாறியதால், முல்லையின் வழிகாட்டுதல் பலனைத் தந்தது அவளை பெருமைப்படுத்தியது. ஆனால் இந்த எழுத்தாளர்கள் பெற்ற அங்கீகாரம் மற்றும் பாராட்டகளுக்கு ஒரு உந்தலாக முல்லை இருந்த போதிலும், அவள் வெளிச்சத்திலிருந்து விலகி இருப்பதில் தனது விருப்பத்தில் உறுதியாக இருந்தாள். அதற்கு சில காரணங்களும் இல்லாமல் இல்லை. அவள் அனுபவித்த அந்த அவலமான, கொடூரமான பயம் நிறைந்த, கெடுபிடிகள் மலிந்த, பட்டினிகள் நிறைந்த 2007 தொடங்கி 2009 வாழ்வும் ஒரு காரணமாக இருக்கலாம்? ஏனென்றால் அதைப்பற்றி சாட்சிகளுடன் அவள் விரைவில் விரிவாக எழுத முயற்சித்துக் கொண்டு இருக்கும் "முள்ளிவாய்க்காலில் இருந்து முட்கம்பி வேலி தடுப்பு முகாம் வரை" என்ற வரலாற்று கதையுமாக இருக்கலாம்? அதேநேரம் இந்த முடிவு நூலகத்தில் தனது பங்கும் மற்றும் பிறருக்கு வெற்றிபெற உதவுவதில் அவள் கொண்டிருந்த மனநிறைவின் காரணமாகக் கூட இருக்கலாம்? ஏனென்றால் அவளின் பின்னணி ஒருவேளை அவளின் வாழ்க்கையை குழப்பி, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வலுக்கட்டாயமாக போகவேண்டிய நிர்பந்தமும் வரலாம்? அப்படி என்றால் அவளின் வரலாற்று கதை முழுமையடையாமல் போய்விடும் என்பதும் இன்னும் ஒரு காரணம். அதனால்த்தான், அவளுடைய பெருமையை விட மற்றவர்களின் பெருமைகளில் தன் மகிழ்வைக் கண்டாள். முல்லையின் பணிவும் தன்னலமற்ற தன்மையும் அவளது குணாதிசயத்திற்கு இன்றியமையாததாக இருந்தது, அவள் வழிகாட்டியவர்கள் செழித்தோங்குவதைக் கண்டு மிகுந்த திருப்தியைப் பெற்றாள். அவள் தனது வாழ்க்கையின் அமைதியை என்றும் மதிப்பவள். எனவேதான் பொது அங்கீகாரத்துடன் அடிக்கடி வரும் கவனத்தையும் இடையூறுகளையும் தவிர்க்க விரும்பினாள். முல்லையைப் பொறுத்தவரை, குறைந்த சுயவிவரத்தை பராமரிப்பது, புத்தகங்கள் மற்றும் அவள் விரும்பும் நபர்களால் சூழப்பட்ட ஒரு விரும்பிய வாழ்க்கையைத் தொடர அனுமதித்தது. மேலும், பாராட்டுகளையும் மற்றும் பாராட்டுகளை தேடாமல் கடினமாக உழைக்க வேண்டியதன் மதிப்பை அவளுடைய குடும்பம் அவளுக்குக் கற்றுக் கொடுத்தது. இந்த தத்துவம் அவளை வாழ்நாள் முழுவதும் வழிநடத்தியது, அவள் அதை அடித்தளமாக வைத்து, உண்மையிலேயே முக்கியமானவற்றில் மட்டுமே கவனம் செலுத்தினாள். முல்லையின் சொந்தக் கனவு, அவள் இதயத்தில் இன்னும் இருந்தது. தமிழ் பாரம்பரியத்தின் அழகையும் நெகிழ்ச்சியையும், அது பட்ட அவலத்தையும் கொடூரத்தையும் ஆரம்பத்தில் இருந்தே படம்பிடித்து, ஆனால் குறிப்பாக முள்ளிவாய்க்கால், தடை முகாம் மற்றும் விசாரணைக்காக ஒப்படைத்தவர்கள் அடங்கலாக ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்பதே அது!. ஒரு நாள், ஒரு உள்ளூர் பதிப்பகத்தில் பணிபுரியும் அவரது தோழி சங்கீதா, முல்லையின் கதை சொல்லும் திறனையும் மற்றவர்களுக்கு உதவுவதில் அவளது அர்ப்பணிப்பையும் கவனித்தார். அது மட்டும் அல்ல, சங்கீதா, அவளது சொந்த வரலாற்றுக் கதையை விரைவில் முடித்து வெளியிடுவதற்கு முலையை ஊக்குவித்தார். “இவ்வளவு நேரம் மற்றவர்களின் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாய் முல்லை, இனி உன் சொந்தத்தைச் கதை சொல்லும் நேரம் வந்துவிட்டது." என்றாள். அவள் ஆரம்பத்தில் சுய சந்தேகத்துடன் போராடினாலும், அவளுடைய தோழி சங்கீதா மற்றும் சில நூலக வாசகர்கள் கொடுத்த ஊக்கமும் ஆலோசனைகளும் அவளை கெதியாக தனது வரலாற்றுக் கதையை, தன் எண்ணங்களையும் அனுபவங்களையும் சேர்த்து முதலில் ஒரு மேலோட்டமாக எழுத வைத்தது. சில மாதங்களுக்குப் பிறகு, எழுத்துப் பிழைகள் திருத்தி சரிபார்த்தபின், முல்லையின் கையெழுத்துப் பிரதியை சங்கீதாவின் பதிப்பகம் ஏற்றுக்கொண்டது. அந்தவேளையில் தான் இலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு, சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் பங்களிப்பு வழங்கிய எழுத்தாளர்களுக்கு, அரச சாகித்திய விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி தலைமையில், தாமரைத்தடாக மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் ஒருவனாக எழிலனும் தனது முதல் நாவலுக்காக விருது வழங்கி கெளரவப் படுத்தப்பட்டார். அவர் மேடையில் ஏறி விருதுபெறும் தருவாயில், ' என் மதிப்புமிக்க மேடையில் வீற்றிருக்கும் தலைவர்களே, அறிஞர்களே மற்றும் நண்பர்களே, பார்வையாளர்களே, உண்மையில் இந்த விருது, 'வெளிச்சத்துக்கு வராமல்', என்னை இந்த நிலைக்கு ஆளாக்க பின்னணியில் இருந்து ஊக்கமும், ஆலோசனையும் வேண்டிய இலக்கிய மற்றும் நாவலுக்கு தேவையான தரவுகளையும் அவ்வப்போது, தன் வேலை பளுவுக்கு இடையிலும் மனம் சற்றும் சோராமல் இன்முகத்துடன் துணைநின்ற கொழும்பு நூலகர் முல்லைக்கே சேரும். அவருக்கே அர்ப்பணிக்கிறேன்" என்று கைதட்டலுக்கு மத்தியில் ஆனந்தக் கண்ணீருடன், முல்லையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து சொல்லிமுடித்தான். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" [17 ஆவது நினைவு நாள்: 08/06/2024]
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" [17 ஆவது நினைவு நாள்: 08/06/2024] "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து கண்டு களித்து அக்கினிக்கு இரையாக போனது ஏனோ?" "கண்மணியே எம் குடும்ப தலைவியே கருத்துக்கள் கலந்து ஞானமாய் பேசுபவளே கடுகளவும் பாசம் குன்றாத குலமகளே கண்களில் இரத்தக்கண்ணீர் தந்தது எனோ?" "கள்ளம்கபடம் இல்லாமல் சிரித்துப் பேசி கண்டவரையும் மயக்கும் வசீகர விழியாளே கடைசிவரை குடும்பம் தழைக்க வாழ்ந்தவளே கண்காணாத உலகம் சென்றது நீதியோ?" "அவனியிலே குழந்தைகள் வாழ்வதை ரசிக்காமல் அவர்களின் திருமணங்களை முன்னின்று நடத்தாமல் அன்புடன் பேரப் பிள்ளைகளை அணைக்காமல் அவர்கள் முத்தம் சுவைக்காமல் மறைந்ததுஎனோ?" "ஆட்டம் முடிந்ததுவென்று யாருக்கும் சொல்லாமல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக பறந்தாயோ ஆடிஅசைந்து அழகுபொழிந்து வரும் உன்னுருவம் ஆரத்தியெடுத்து தினம் வணங்கும் தெய்வமானதோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"நேரிய பாதையில்"
"நேரிய பாதையில்" "நேரிய பாதையில் மனிதா நட நேர்மை கொண்ட தீர்மானம் எடு! நேசம் உள்ள நண்பர்களை அணைத்து நேரார் தரும் தொல்லைகளை அகற்று! ஆர்வம் வேண்டும் ஆராவாரம் வேண்டாம் ஆசை வைத்து செயலில் ஈடுபாடு! இன்பம் துன்பம் யாரும் தருவதில்லை இருப்பதை அறிந்து நடையைக் கட்டு! கொள்கை ஒன்றைத் தரமாக வகுத்து கொடுத்து எடுத்து சமாதானம் காணு! தெரிந்ததும் தெரியாததும் அறிந்து உணர்ந்தால் தெளிவான முடிவு தருமே வெற்றி!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள்"
"அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள்" ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு மாம்பழங்கள் வைத்திருந்தாள் ..... அங்கு வந்த அவளின் தாய், நீ இரண்டு மாம்பழங்கள் வைத்திருக்கிறாய், அதில் ஒன்றை உன் அம்மாவிற்கு, எனக்கு கொடுக்கலாமே என்றாள் ....... தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி, ...... பின் உடனே ஒரு மாம்பழத்தை நறுக்கென்று கடித்து விட்டாள் ..... அதைத் தொடர்ந்து உடனடியாகவே இரண்டாவது மாம்பழத்தையும் கடிக்கத் தொடங்கினாள் ..... தாயின் முகத்தில் முதலில் இருந்த சிரிப்பு உறைந்து போனது ..... கோபமும் ஏமாற்றமும் தலை தூக்கியது ..... என்றாலும், தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள் ...... உடனே அந்த சிறுமி, தாயிடம் சொன்னாள் ..... அம்மா இந்த மாம்பழம் தான் இனிப்பாக, சுவையாக இருக்கு ...... ஆகவே நீங்கள் அதையே எடுத்துக்க என்றாள் ....... நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும் இருக்கலாம் ..... எவ்வளவு அனுபவமும் உங்களுக்கு இருக்கலாம் ....... அறிவு சிறப்பாகவும் இருக்கலாம் ..... ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்றுத் தள்ளிப் போட்டு கணிக்கவும் ...... அடுத்தவருக்கு போதுமான அளவு இடைவெளி கொடுத்து அவரை அறியவும் ...... நீங்கள் அவரைப் பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம் ....... எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள் ...... மனக்கணக்கு தவறலாம் .. மனிதரை பற்றிய கணக்கு தவறக்கூடாது ..... கொஞ்சம் அவசரப் படாமல் சிந்தியுங்கள்! சுருக்கமாக, "அவசரப்படாமல் ஆழ யோசித்து ஒருவரைப்பற்றி கணியுங்கள் ...... உங்கள் அவசர மனக்கணக்கு தவறலாம் .. அதனால் நல்ல நண்பரை இழக்கலாம்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்)
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" (புறநானுறு & நாலடியார்) பண்டைத் தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலம் பொதுவாக கி மு 500 ஆண்டுகளுக்கும் கி பி 200 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம். இயற்கையாக நடைபெற்ற மரணத்தைக் கண்டு பயந்த சங்க கால மனிதர்களின் மனித மனம், மரணத்தில் இருந்து, எவருமே விடுபட இயலாது என்பதை உணர்ந்தவுடன், அதனைக் கூற்றுவன், கூற்று, காலன் எனப் பழித்தது அவர்களின் பாடலில் இருந்து தெரிய வருகிறது. அவ்வகையில், யானைகள் மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள், மனித உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட புலவன் ஒருவன். "களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;" [புறநானூறு 4 / மரணத்தின் தமிழ் கடவுளை - கூற்றுவன், காலன், மறலி என சங்க இலக்கியத்தில் கூறுவர்] இந்த பாட்டில் ஒரு பயத்தை, கலக்கத்தை காண்கிறோம். அந்த குழப்பமே இன்றைய நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை] "காற்றொன்றை இந்தக் கட்டையிலே விட்டு வைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை" என்று சொல்லவைத்ததோ? "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று தொடங்கும் புறநானூற்றப் பாடலைப் பாடிய சங்ககாலப் புலவர் பூங்குன்றனார் சாதல் புதியதன்று என்று. புறநானூறு 192, இல் "யாது மூரே யாவருங் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னாதென்றாலு மிலமே" என்று கூறுகிறான். அதாவது சாதலும் புதிதன்று, கருவிற்றோன்றிய நாளே தொடங்கியுள்ளது என்கிறான். அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டா லும் [மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்], இமய மலையின் ஓங்கிய சிகரம் போல், நம் புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று ஆலோசனை வழங்குகிறார். "மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத், தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே" அதேபோல, புறம்:238 இல் சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன் இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன் என "வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப எந்தை ஆகுதல் அதற்படல் அறியேன்; ", என்று பெருஞ்சித்திரனார் பாடுகிறான். கார் காலத்து இடியைப் போல் சட்டெனத் தோன்றி, ஆரவாரமாக, அரிய பல உயிர்களைக் கவர்ந்தும், உன் ஆர்வம் குறையாது மீண்டும் உயிர்களைக் கொள்வதற்குச் சுழலும் கூற்றமே, உன் வருகைக்கு எங்கள் தலைவன் அஞ்சமட்டான் என புறநானூறு 361, இல் "கார்எதிர் உருமின் உரறிக் கல்லென ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம், நின்வரவு அஞ்சலன் மாதோ; " என்று கயமனார் பாடுகிறார். அதே போல "மருந்து இல கூற்றத்து அருந்தொழில்" என புறநானூறு 03 சொல்லுகிறது. மேலும் புறநானூறு 363 இல், கரிய கடல் சூழ்ந்த பெரிய இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் [Acacia Latronum] இலை அளவு கூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின் அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையை விட அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத் தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக. அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது பொய்யன்று கள்ளி (Cactus) பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற வெளியிடத்தில், உப்பில்லாமல் வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில் வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும் கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத் துறந்து நீ கருதியதைச் செய்க என அறிவுரை கூறுகிறான். உலகம் தொடங்கிய காலம் தொட்டே, மரணம் மனிதனுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும் தீர்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் மறுபிறப்பு உண்டா? உண்டு என்று சமய நம்பிக்கையின் அடிப்படையில் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கு எதிராக இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, பதிணென் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று. "கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர் புகா, உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா, விரிந்தபூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா, இறந்தவர் பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!" என அடித்துச் சொல்கிறார். இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பான, பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி பி 100 - 500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும் கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என "நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி" என்று நாலடியார் 12 சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம் என்றாலும், அதை விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ் நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து போய்க்கொண்டே யிருக்கின்றன. கூற்றுவன் வந்து கொண்டேயிருக்கிறான். மரணம் எதன் பொருட்டும், யார் பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை, "நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று." என்று பாடுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கம்பராமாயணத்தில், "நீர்கோல வாழ்வை நச்சேன், தார்கோல மேனி மைந்தா" என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின் மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிரை காக்க முனையேன். ராமனுடன் போர் புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன். சங்க இலக்கியம் நம் முன்னோர்களின் வாழ்வை பிரதிபலிக்கின்றன என்பதற்கு இன்று நம்மிடையில் காணப்படும் பண்புகள் சான்றுபகிர்கின்றன. உதாரணமாக, இறந்தவர்களை பாடையில் கிடத்தி சுடுகாடு எடுத்து செல்லும் முறையும் மாரடித்து புலம்பும் பண்பும் இறந்தவர்களின் மீது கோடித்துணி போர்த்தும் பண்பும் இன்றும் நம்மிடம் உள்ளன. அன்று பாடையை, கால்வழி கட்டில் அல்லது வெள்ளில் என்று அழைத்தனர். உதாரணமாக, புறநானூறு, 286 , மகனைப் பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத் தரவில்லையே என "கால்கழி கட்டிலிற் கிடப்பித் தூவெள் அறுவை போர்ப்பித் திலதே" என்று புலம்பும் தாயை எடுத்து காட்டுகிறது. மேலும், கணவன் அல்லது தலைவன் இறந்த பொழுது அவனைச் சார்ந்த மகளிர் மார்பினில் தட்டி புலம்பியதையும் புறநானூறு எடுத்துக்காட்டுகின்றது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
நன்றிகள்!!
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
அனைவருக்கும் நன்றிகள்
-
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா]
"பண்டைய இலக்கியத்தில் மரணம்" [திருக்குறள், தேவாரம் & திருவருட்பா] மக்கள் மரணம் பற்றி அறிய ஆவலாகவும் அதேநேரம் கவலையாகவும் உள்ளார்கள். ஏனென்றால், 1] ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்ககள் மற்றும் அன்பானவர்களுக்கு, அது ஒரு வேதனையை கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையை ஓரளவு முன்னையதில் இருந்து சீர்குலைகிறது அல்லது மாற்றி அமைகிறது, 2] வாழ்க்கையின் முழுமையற்ற அபிலாஷைகள் [Incomplete aspirations of life], 3] மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற விளக்கம் இல்லாமை ஆகும். மரணத்தின் கருத்தைப் பற்றிய ஆழ்ந்த புரிதல், பதட்டத்தைக் குறைப்பதற்கும் மரண பயத்தை குறைப்பதற்கும் கட்டாயம் வழிசமைக்கும். இதைத்தான், விஞ்ஞானமும், இலக்கியமும் சமயமும் செய்கின்றன. என்றாலும் அவைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதற்கு காரணம் அவர்களின் அறிவு, பண்பாடு மற்றும் நம்பிக்கைகள் ஆகும். நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக, அறிவிற்கு ஒவ்வாததாக இருந்தாலும், அது மற்றவர்களை பாதிக்காத வரை பிரச்சனை இல்லை. என்றாலும் மரணத்தை பற்றிய அல்லது மரணத்தின் பின் வாழ்வு பற்றிய எல்லா நம்பிக்கைகளும் அப்படி அல்ல. அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். வேண்டாத, அறிவுக்கு ஒவ்வாத நம்பிக்கைகளை, நீங்கள் எந்த சமயத்தை பின்பற்றினாலும் தூக்கி எறியவேண்டும். இதைத்தான் அறிஞர்களும் சித்தர்களும் கூறினார்கள். மேலும் பொதுவாக ஆண்கள் மரணத்தை ஏற்றுக்கொண்டு அதனுடன் ஓரளவு சமரசம் செய்கிறார்கள், ஆனால் பெண்கள் அப்படி இல்லை. மற்றும், மரணம் பற்றிய கவலை, அதிக மத நம்பிக்கை கொண்டவர்களிடத்தில் குறைவாக காணப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணம் சில 'சமயங்கள்', இறப்பை இன்னும் ஒரு தொடக்கத்தை குறிப்பதாக கருதுவதாகும் [some religions associate death with another beginning]. இது ஓரளவு பாதிப்பில்லா மூடநம்பிக்கை. அப்படியான, ஆத்மாவின் விடுதலை அடையும் வரை, பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியின் இறையியலில் திருவள்ளுவர் நம்பினார் [theology of cycle of births and deaths till the liberation of soul is attained]. அதன் விளைவுதான் குறள் 339 எனலாம். அதில் அவர்: "உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்று கூறுகிறார். உலகிலேயே மிகவும் எளிமையான வேலை எது என்று கேட்டால் தூங்குவது என்று சட்டென்று சொல்லி விடுவீர்கள். என்றாலும் தூங்குவது போலவே இன்னொரு காரியமும் இருக்கிறது. அது தான் இறப்பது. அதாவது தூங்குவது போன்றதே இறப்பு, தூங்கிய பின்னர் விழிப்பது போன்றதாம் [மீண்டும்] பிறத்தல் என்கிறது. இந்த சிந்தனையில், பாவ புண்ணியங்களை பொறுத்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் நம்பிக்கையும், அதை ஒட்டிய கருத்துக்களும் கூட தெரிகிறது. ஒருவர் நன்றாக ஆழ்ந்து தூங்கும் போது, இவ்வுடம்பைப் பற்றிய எண்ணத்தையோ, அது இருக்கும் நிலையைப் பற்றியோ மூளை நினைவு படுத்திக் கொண்டிருப்பதில்லை. அது ஓரளவுக்கு உயிரியக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும். தானும் ஓய்வு கொண்டு, உயிர், உடல் இவற்றுக்கும் ஓய்வினைத் தந்து இயங்குகிறது. தூக்கம் என்பது ஏறக்குறைய இறந்த நிலை தான். ஒருவருக்கு. ஒவ்வொரு நாளும் உறங்கி விழிப்பது, பிறப்பது போல என்பது, தூங்குவது இறப்பானால், விழிப்பது பிறப்புதானே என்கிற ஒரு வாதத்தை ஒட்டிய கருத்து ஆகும். நாம் தூங்கி விழிக்கும் போது நமக்கு நேற்று நடந்தது, இன்று நடக்க வேண்டியது, நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களைப் பற்றிய அறிவும் நினைவும் இருக்கின்றன. ஆனால் பிறக்கும் ஓர் உயிருக்கு - ஒரு கருத்துக்கு, மறு பிறப்பு என்று ஒன்று இருந்தால் கூட? - கடந்த பிறவிகளின் நினைவுகள் வருவது இல்லை, ஒரு சிலருக்கு இருப்பதாக நாம் செய்திகள் மூலம் கேள்விப் பட்டாலும் கூட அது இதுவரை அறிவியல் ரீதியாக உறுதிப் படுத்த வில்லை. பொதுவாகப் பார்க்கையில், இறப்பு என்பது நினவுகளை முற்றிலும் மறக்கச் செய்கிற நிகழ்வு. பிறப்பு என்பது எவ்வித நினைவுகளையும் சுமந்து வராத நிகழ்வு. பிறப்பை ஒரு தற்செயலாக தன்னிச்சையான செயலாகச் சொல்லலாம். இறப்பை ஒரு உறுதியான இறுதி செயலாகச் சொல்லலாம். இந்த கருத்தை யொட்டிய பாடல்களை, நாலடியார், மணிமேகலை, சீவகசிந்தாமணி முதலிய வற்றிலும் பார்க்கலாம். “விழித்திமைக்கும் மாத்திரை யன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு” என்கிறது நாலடியார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், “ஓடு புனற்க ரையாம் இளமை உறங்கி விழித்தா லொக்குமிப் பிறவி” என்கிறது. “பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மை யின்” என்கிறது மணிமேகலை. இந்நிலையாமையை நாம் உணர்வதில்லை என்று சுந்தரர், இன்னும் ஒரு தேவாரத்தில், "நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற் சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்" என்று கூறுகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவர் "வறிதே நிலையாத இம்மண் ணுலகில் நரனா கவகுத் தனைநா னிலையேன்" என்று பாடுகிறார். இவை எல்லாம் இறப்பை பற்றிய அன்றைய சிந்தனைகள். அரசனின் ஆணை தன்னைக் கட்டுபடுத்தாது என்று அரசனை எதிர்த்து குரல் கொடுத்த புரட்சிக் கவியாக அப்பர், திருநாவுக்கரசர், நாம் யாருக்கும் குடி அல்ல; நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். நரகத்தில் இடர்ப்படோம். அதாவது ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம். அதாவது, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது. என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே என்று பகிரங்கமாக அறை கூவல் விடுகிறார். இங்கும் இறப்பை பற்றிய அன்றைய கருத்து தெளிவாகிறது. "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்; நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்; இன்பமே எந்நாளும், துன்பமில்லை." திருக்குறளில் நிலையாமை குறித்து 34வது அதிகாரத்தில் மேலும் சில பாடல்களைக் காண்கிறோம். உதாரணமாக “நாள் என்பது, ஒவ்வொரு நாளாக வாழ் நாளின் உயிரை குறைக்கும் கருவி” என பொருள் படுத்தி, குறள் 334 “நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்" என்று சிறப்பாக சொல்கிறது. அதாவது, ஒவ்வொரு நாள் முடிவும் உங்களை வாழ்க்கையின் முடிவான இறப்பிற்கு கிட்ட கிட்ட கொண்டு போகிறது. யமனின் வாள் போன்றது நாள் என்கிறது. இந்த வாளை பாவித்தே உங்களின் வாழ்வு காலம் அளக்கப்படுகிறதாம். அதாவது ஒரு நாள் முடியும் போது, யமன் வாழ்வின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விட்டு, இன்னும் இறப்பில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறீர்கள் என அளக்கிறான் என்கிறது. இறப்பு மனிதனின் ஒவ்வொரு வாழ்வின் அடியையும் பின் தொடர்கிறது. என்றாலும் மனிதன் இந்த நிலையற்ற பொருட்களையும் தொடர்புகளையும் இன்னும் வைத்திருக்கிறான். வாளின் இறுதி பிரயோகத்தில், அவனது வாழ்வு எந்தவித அறிவிப்பும் இன்றி துடைத்து எறியப்படுகிறது. இறப்பின் பின் மனிதனை தொடர்வது அவன் செய்த நல்ல செயல்களின் சிறப்பு மட்டுமே என்று மேலும் கூறுகிறது. இதை உறுதி படுத்துவது போல பட்டனத்தார், "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று கூறுகிறார். இறக்கும் தருவாயில் படுத்து இருக்கும் போது, கண் ஒன்றையும் பார்க்காது, காது ஒன்றையும் கேட்காது, எல்லா உறுப்புகளும் தளர்ந்து விடும், நா வாய்க்குள் மாட்டிக்கொள்ளும், கடைசி மூச்சு விக்கலாக வரும் - அந்த நேரத்தில் புகழ்த் தகுதியுடைய எந்த காரியமும் செய்ய முடியாது. அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை வரும் முன், உடனடியாக நற்பணபுள்ள, நன்மார்க்க செயலை செய்து சிறப்பு பெறுவாயாக. நேரத்தை வீணாக்க வேண்டாம். இறப்பு எந்த நேரமும் கதவை தட்டலாம் என்று திருவள்ளுவர், தனது குறள் 335 இல் "நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும்" என ஆலோசனை கூறுகிறார். இந்த ஆலோசனையை உறுதி படுத்துவது போல மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் காணப்படுகிறது. ஒரு பிரமணன் பாண்டவர்களின் அரண்மனை வாசலில் வந்து உதவி கேட்டான். தர்மன் ஒரு முக்கிய வேலை செய்ய வேண்டி இருந்ததால், அடுத்த நாள் வந்து தருமத்தை பெறும்படி கூறுமாறு செய்தி அனுப்பினான். பக்கத்தில் இருந்த பீமன் தனது மூத்த சகோதரனிடம் கேட்டான்: அண்ணா, எனக்கு அதிசயமாக இருக்கிறது, நீங்கள் நாளை உயிருடன் கட்டாயம் இருப்பீர்கள் என்பது உறுதியா? தருமனுக்கு தனது முட்டாள்தனம் விளங்கி விட்டது. உடனடியாக பிராமணனின் தேவையை தருமன் கவனித்தான் என்கிறது அந்த கதை. ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது. ஆயினும், எவரையும் பயம் கொள்ள வைத்த குறள் – ”நேற்று வரை உயிரோடு இருந்தான், ஆனால் இன்று இல்லையே” என்று சொல்லுவதைப் போன்று நிலையற்றை தன்மை உடையது இந்த உலகம் என்று கூறும், குறள் 336 ஆகும். அது, ."நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு". எனக் கூறுகிறது. “நேற்று வரை உன்னுடன், உண்டு, பேசி, சிரித்து, சண்டையிட்டு, மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ போவதில்லை, இதோ உன் முன் மவுனமாக, மரணமாய், கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு, இத்தகைய சிறப்பு உடையது” எனச்சொன்ன இந்த குறள். எவ்வளவு கொடுமையானது? நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா? என்று கட்டாயம் புலம்பி இருக்கும். நீ விரும்பும் இந்த உலகில் எது மிகவும் பெரியது?. ஒவ்வொரு நாளும் மக்கள் இறக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒருவர் ஒருவரை மரணத்தால் இழக்கிறார். வாழ்வு நிலையற்று இருக்கும் போது, நிலையற்ற பொருட்களை, நல்ல செயல்களை செய்யாமல், வைத்திருப்பதால் என்ன பயன்? இறந்த பின் என்னத்தை கொண்டு போகப்போகிறாய்? மீண்டும் மகாபாரத்தத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம், யக்கர் / யக்ஷகர் ஒருவனின் கேள்வி ஒன்றிற்கு தருமன் இப்படி பதில் அளிக்கிறான். யக்கர்: இந்த உலகில் மிகவும் வியப்படையச் செய்வது எது ? தருமர்: ஒவ்வொரு நாளும் மக்கள் மரிணிக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும், உயிருடன் இருக்கும் இந்த மனிதன் தான் சாகப்போவதில்லை என நினைக்கிறான். இது தான் இந்த உலகின் திகைக்கவைத்த ஒன்று என்கிறான். உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் பிறந்து வாழ்ந்து மாண்டு போய் விடுகின்றன. உயர்ந்த அறிவு படைத்த மனிதனும் அதே போல் பிறந்து வாழ்ந்து மாண்டு போகின்றான். இவை உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும் என்ற கருத்தை உடையவர். இவர் தனது ஒரு பாடலில் " ... பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர் இனிச்சாகும் பிணங்க ளேநீர் கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே என்னபயன் கண்டீர் சுட்டே ... பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச் சம்மதிக்கும் பேய ரேநீர் ... " [திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5609] என்று கேட்கிறார். மேலும் இவர் "இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்?" [திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5600] என்றும் தனது அவாவை வெளிப்படுத்துகிறார். அதாவது உலகத்து நன்மக்களே! செத்தவர்களை அடக்கம் செய்ய எடுக்கும் போது வாய்விட்டுப் புலம்புகின்றீர்களே அன்றிச் சாவாத பெரிய வரத்தை ஏனோ பெறாது ஒழிகின்றீர்கள் என கேட்க்கிறார். அது மட்டும் அல்ல, பறை மேளத்தின் சத்தம் கேட்டு தான் கலங்குவதையும் கூறுகிறார். "மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம் காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்" [திருவருட்பா 3428.] மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே! உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்; உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கை என்கிறார். இறுதியாக திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றை பார்ப்போம்: "நடலை வாழ்வுகொண்டு என் செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிரமாணமே கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே." உடலைப் பேணுதலிலேயே காலத்தை வீணாக்காதீர். இவ்வுடலானது ஒரு நாள் உயிர் பிரிந்த பொழுது ஊரார் பிணம் என்று சொல்லி வெறுக்கத்தக்க பொருளாகக் கிடக்கும் என்கிறது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
எல்லோருக்கும் நன்றி
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
எல்லோருக்கும் நன்றி
-
"காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை
எல்லோருக்கும் நன்றி
-
"காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை
"காலம் கடந்தும் காதல் வாழும்" [மனைவியின் 17 ஆவது நினைவு தினம்: 08/06/2024] / உண்மையும் கற்பனையும் சேர்ந்த கதை "காலம் மாறினால் அன்பு மாறுமா? கோலம் கலைந்தால் அன்பு போகுமா? ஓலம் எழுப்பினால் பிணம் எழும்புமா? நிலம் வறண்டால் பயிர் துளிர்க்குமா?" நீங்கள் ஒருவருடன் உண்மையான அன்பு அல்லது காதல் வசப்படும் போது, அந்த அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன், வாழ்க்கையின் அனைத்து ஏற்ற தாழ்வுகளிலும் ஒன்றாக பயணிப்பதுடன், அதில் பெரும் மகிழ்வையும் கண்டு, ஒருவருக்கு ஒருவர் கொண்ட அன்பு முழுமையாக வாழ்வதை உணர்வீர்கள்! சொந்த நாட்டை விட்டு வெளிநாடு போனாலும், மாற்று கலாச்சாரத்தின் சில தாக்கங்கள் உங்களை வசப்படுத்தினாலும் அந்த அன்பு, ஒவ்வொரு நாளும் உங்களுக்கு தைரியம், வலிமை மற்றும் மகிழ்ச்சியைத் தருவதுடன், 'காலம் கடந்தும் நாடு கடந்தும் அன்பு வாழும்' என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கும்! அது ஒருவர் இறந்தாலும் கட்டாயம் மற்றவரிடத்தில் அவர்பால் கொண்ட அன்பு தொடரும்! ஆனால் இன்னும் ஒன்றையும் நான் சொல்லவேண்டும், இரு காதலர்கள், தம்பதியர்கள் எண்பது, தொண்ணூறு வயது மட்டும் பிரியாமல் ஒன்றாய் வாழ்கிறார்கள் என்பது 'காலம் கடந்தும் அன்பு வாழும்' என்று பொருளல்ல! அவர்கள் மற்றவர்கள் பார்ப்பதற்காக வெளியில் அன்பாகக் காட்டிக் கொண்டே, உள்ளே வெதும்பும் உறவுகளாகவோ அல்லது சமூகம் மற்றும் மதத்தின் கட்டுப்பாட்டின் காரணமாக பிரிந்து செல்லத் தயாராக இல்லாதவர்களாகவோ இருக்கலாம்! நீங்க உண்மையான காதல் அல்லது அன்பு ஒன்று இருக்கு என்று நம்புகிறீர்களா? கண்டதும் காதல் என்பது உண்மையா? காதல் அல்லது அன்பு என்றென்றும் நீடிக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இந்த மூன்று கேள்வியிலும் தான் உங்க வாழ்க்கைகூட தங்கியுள்ளது. சங்கத் தலைவி ஒருவள் "மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய, காமம் கலந்த காதல் உண்டு எனின், நன்றுமன்; அது நீ நாடாய், கூறுதி;" என 'அப்படிப் பட்ட மலை நாட்டின் தலைவன் அவன். அவனுக்கும் எனக்கும் உள்ள உறவு ‘காமம் கலந்த காதல்’ என்றால் மிகவும் நல்லது. அதனை நீ தேடித் தருவ தென்றால் அவனிடம் செல்லும் படிக் கூறு' என்று கூறுகிறாள். அதாவது "வெறும் காமம் என்றால், தயவு செய்து வேண்டாம் என்கிறாள். அதாவது, காதல் மிகுந்த காமக் கூட்டம் (புணர்ச்சி) உளதாயின் அது மிக நன்றாகும், நீடிக்கும் என்கிறாள்! இன்னும் ஒருவனோ, தங்கள் கண்ணெதிரே தோன்றிய செம்மண் நிலத்தோடுச் சேர்ந்த நீரை எப்படி பிரிக்க முடியாதோ அதுபோலவே நம்மிருவரையும் பிரிக்கமுடியாது என்று காதல் மிகுதியில் தலைவியிடம் "யாயும் ஞாயும் யாராகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர். யானும் நீயும் எவ்வழி அறிதும், செம்புலப் பெயல்நீர் போல, அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!’’ என்கிறான். இந்த இரண்டிலும் உண்மை உண்டு. அதை அனுபவித்தவன், அனுபவித்துக் கொண்டு இருப்பவன் நான்! எம் சமூகப் பண்பாடு, பழக்கவழக்கங்கள், நாம் இன்று வாழும் இடத்தில் சூழ உள்ள மற்ற பெரும்பான்மையான மனிதர்கள், மற்றும் இன்றைய நாளாந்த வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் என எத்தனையோ எம்மை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கும். ஆகவே இது காதலையும் சிலவேளை சோதனைக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை. இவை எல்லாம் தாண்டியது தான் உண்மையான, மனங்களிளும் ஆன்மாக்களிளும் இணைவாகிய காதல் / அன்பு! முதிர்ந்து காலம் கடந்தாலும் மூச்சில் நின்று வாழும் காதல் / அன்பு அதுதான்! இன்று 14/02/2024, அன்பு கொண்டோர் தினம். நான் இன்று நேரத்துடன் எழும்பிவிட்டேன். மற்ற நாள்களை விட இது ஒரு சிறப்பு நாள். எதோ காதலர் தினம் [valentine's day] என்பதால் நான் சொல்லவில்லை. எனக்கு அதில் அக்கறையும் இல்லை. ராசாத்தி, என் மூன்று பிள்ளைகளின் தாய், எனக்காக காத்திருக்கிறாள். வெளிய கொஞ்சம் பனி பொழிகிறது. எங்கும் பால் போல வெள்ளை. முட்டுக்கு கொஞ்சம் கீழே வரை இருக்கும் என் புதை மிதியடிமூடு காலணியை [boots] காலில் மாட்டிக்கொண்டு, குளிரை தாங்கும் உடைகளையும் அணிந்து கொண்டு, வழுக்கி விழக் கூடாது என்று நான் மெல்ல மெல்ல அடிவைச்சு பேருந்து தரிப்புக்கு போனேன். இந்த வயதில் சறுக்கி தவறி விழுந்தால் அவ்வளவும் தான். ஒவ்வொரு அடி வைக்கும் பொழுதும் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னைய நினைவுதான் மனதில் ஊஞ்சல் ஆடியது. திங்கள் கிழமை 14/02/1983, ஆம் நாள் அன்று நான் முதல் முதல், படிப்பு முடித்தபின், அரசநிறுவனம் ஒன்றில் கொழும்பில் வேலை ஆரம்பிக்கிறேன். நான் நேற்றுத்தான் கொழும்பு வந்து தற்காலிகமாக ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளேன். இன்று லேசான தூறல். தார் வீதி வழுக்கும் என்பதால், மெல்ல மெல்லமாக பார்த்து நடந்து அருகில் இருந்த பேருந்து தரிப்பு நிலையம் போனேன். அங்கு வேறு சிலரும் காத்து இருந்தார்கள். அப்ப தான் அவசரம் அவசரமாக அங்கு கொஞ்சம் தலை நனைந்தபடி ஓடிவந்த அவள், கைக்குட்டையால், முகம் முழுவதையும் துடைத்தாள். முகம் துடைத்த ஈரத்தில் பளபளத்தன. ஒரு சிறு கைக் கண்ணாடி ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து முகத்தை பார்த்தாள், அவளுக்கு அது சந்தோசமாக இருந்தது போலும். அவள் முகத்தில் ஒரு புன்னகை தொற்றியது. நான் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன். அதை எப்படியோ கவனித்த அவள், தன்னை சமாளித்தவாறு, மறுபக்கம் பார்க்கத் தொடங்கினாள். இதற்கு இடையில் என் பேருந்து வர, நான் அதில் ஏறி, இருக்கையில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம் அவளும் அதே இருக்கையில் அமர்ந்தாள். நான் ஹாய் என்று அவளிடம் கூறி, நான் கொழும்பு புதிது, மட்டக்குளி, காக்கை தீவில் உள்ள கடற்தொழில் அமைச்சுக்கு போகவேண்டும், அது வரும் பொழுது சொல்லுகிறீர்களா என்று கேட்டேன். அவள் என்னை மேலும் கீழும் பார்த்தாள், நீங்கள் தானா புதிதாக வரும் பொறியியலாளர் என்று எடுத்தவுடன் கேட்டாள். என்னைத் தூக்கிவாரி போட்டது. 'ஆமாம்', ஆனால் நீங்க யார் என்று கேட்டேன். அவள் சொல்லவில்லை, ஆனால் பேருந்து நின்றதும், இங்குதான் இறங்கவேண்டும் வாங்க சார் என்றாள். இன்று காதலர் தினம் என ஞாபகத்துக்கு வர, 'ஹாப்பி வேலன்டைன் நாள்' என்று சொல்லிவிட்டு முகத்தை பார்த்தேன். புதிதாக தாமரை பூ பூத்ததுபோல அவள் முகம் மலர்ந்து இருந்தது. 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்'. என என் உள்ளத்தில் என்னை அறியாமலே அவள் நிறைந்துவிட்டாள். என்றாலும் அவள் என்னை விரும்புகிறாளா என்று எனக்குத் தெரியா ? அவள் திருப்பி சந்தோசமான வேலன்டைன் நாள் சொல்லவே இல்லை, அது தான் என் மனதை அரித்துக்கொண்டு இருந்தது. அவள் அங்கே தட்டச்சாளர் ஆக இருந்தாள். நான் அன்று முழுவதும் வேலையை பாரம் எடுப்பதிலும், மற்றும் தேவையான அறிமுகங்களிலும் போய்விட்டது. அதனால் அவளை மீண்டும் அங்கே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மற்றும் என் உயர் அதிகாரிகளுடன் கதைத்து, அன்றைய வேலையை முடித்து வெளியேவர அரைமணித்தியாலம் சுணங்கியும் விட்டது. நான் அவசரம் அவசரமாக பேருந்து நிலையம் வந்தேன். அவள் இன்னும் அங்கு நின்றாள். 'பஸ் வரவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்லாமல் 'ஹாப்பி காதலர் தினம்' என்றாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து வீடு திரும்பினோம். ஒரே அமைதி, கண்கள் மட்டுமே பேசின! அன்று இணைந்த இரு இதயங்களும் அதன் பின் பிரியவே இல்லை. அந்த நாள் தான் இன்று. அதுதான் இது ஒரு சிறப்பு நாளாக இருக்கிறது. அவ்வளவுதான்! ரோசா மலர்கொத்து ஒன்று என் கையில் இருந்தது. அதை கவனாக பிடித்துக்கொண்டே பஸ்சில் ஏறினேன். இது முதல் தடவை இல்லை முன்பும் பல முக்கிய நாட்களில் போய் உள்ளேன். வெள்ளை மேல் சட்டை மற்றும் கருப்பு கால்சட்டை அணிந்தும் இருந்தேன். அது அவளுக்கு பிடித்த நிறம். என்றாலும் ஜம்பர், ஜாக்கெட் மற்றும் ஸ்னோ பேண்ட் [jumper, jacket and snow pant] போட்டு இருப்பதால், அது அவளுக்கு தெரியப் போவதில்லை. இது ஒரு மரியாதை மட்டுமே! என்னை அந்த பஸ்சில் பார்ப்பவர்கள் தங்களுக்கும் எதோ கதைப்பது தெரிகிறது. எனக்கு பக்கத்தில் இருந்த இளம் பெண் ஒருவள் ஆங்கிலத்தில் ' மாமி எப்படி? ஏதாவது சுகயீனமாய் வைத்திய சாலையில் இருக்கிறாரா' என்று கருணையுடன் விசாரித்து, 'ஹாப்பி வேலன்டைன்' என்று வாழ்த்தும் கூறினார். எனக்கு பேத்தியின் ஞாபகம் தான் வந்தது, ஆனால், அவள் இன்னும் பாடசாலை போகாத சிறு பிள்ளை. என் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் விழுந்தன. வாய் பேச மறுத்துவிட்டது. அந்த இளம் பெண் என்னையே பார்த்துக் கொண்டு 'நான் உங்களை காயப்படுத்தி இருந்தால், வருந்துகிறேன்' என்றாள். 'இல்லை, நீ என் பேத்தி மாதிரி' என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டேன்! 1983 ஜூலை 24 இரவு, கொழும்பில் தமிழர்களுக்கு எதிராக காடையர்களாலும் அரசின் சில தலைவர்களாலும் ஏற்படுத்தப்பட்ட கலவரம் அடங்க ஏழு நாட்கள் சென்றது. முக்கியமாக சிங்களக் காடையர் கும்பல் தமிழரைத் தாக்கினர், உயிருடன் எரித்தனர், படுகொலைகளைப் புரிந்தனர், உடமைகளைக் கொள்ளையடித்தனர். இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது, 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும், 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு $300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. இவை எல்லாவற்றையும் விட , அவளின் தொடர்புகூட அறுந்துவிட்டது. அன்று கைத்தொலைபேசி இலங்கையில் இல்லாத காலம். போய் பார்க்கக்கூடிய சூழ்நிலையும் இல்லை. என்றாலும் அவள் கொழும்பில் பிறந்து வளர்ந்தவள். பல சிங்கள நண்பர்களும் அவள் குடும்பத்துக்கு உண்டு. எனவே பெரிதாக கவலைப்படத் தேவை இல்லை என்றாலும், மனதில் ஒரு வேதனை வதைத்துக்கொண்டே இருந்தது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரச-சார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஒரு இனப்படுகொலை என்று விவரித்தது குறிப்பிடத்தக்கது. கலவரங்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக, 1983 ஜூலை 11 இல் இலண்டன் 'டெய்லி டெலிகிராப்' பத்திரிகைக்கு அரசுத்தலைவர் ஜெயவர்தன அளித்த ஒரு நேர்காணலில், ஜெயவர்தன இவ்வாறு கூறினார்: "யாழ்ப்பாண (தமிழ்) மக்களின் கருத்தைப் பற்றி நான் இப்போது கவலைப்படவில்லை. இப்போது நாம் அவர்களை நினைக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அல்லது எங்களைப் பற்றிய அவர்களின் கருத்தைப் பற்றியோ அல்ல. வடக்கில் எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு சிங்கள மக்கள் இங்கு மகிழ்ச்சியடைவார்கள்... உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்" இது ஒன்றே இந்த கலவரத்தின் நோக்கத்தையும் கொடுமையையும் எடுத்துக்காட்டும்! நான் இந்தியா அரசாங்கத்தின் சரக்கு கப்பல் மூலம் , மற்ற நூற்றுக்கணக்கான உள்நாட்டு தமிழ் அகதிகளுடன் யாழ்ப்பாணம் சென்றேன். ஏறத்தாழ ஆறுமாதம் வேலைக்கு திரும்பவில்லை. அவளுடன் தொடர்புகளும் நின்றுவிட்டது, என்றாலும் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கை மட்டும் வாழ்ந்து கொண்டே இருந்தது. இதற்கிடையில் என் அண்ணாவின் உதவியுடன் கனடா போகும் வாய்ப்பு கிடைத்தது. எனவே ஆறு மாதத்தின் பின் கொழும்பு , திரும்பி, என் ராஜினாமா கடிதம் கொடுக்க வேலைத்தளம் போனேன், கடிதத்தை விட அவள் அங்கு இருக்கிறாளா இல்லையா என்பதை சரிபார்ப்பதே எனக்கு முக்கியமாக இருந்தது. என்னைக் கண்டதும், அவள் ஓடிவந்து, வேலைத்தளம் என்பதையும் மறந்து, என்னை அணைத்து ஆனந்த கண்ணீர் சிந்தினாள். மற்றவர்களும் ஒருவர் ஒருவராக, அணைத்து நலம் விசாரித்தனர். ஏன் அவசரப் படுகிறீர்கள், ராஜினாமா வேண்டாம் என்றும் கூறினர். எனினும் நான் அண்ணா கூப்பிடுவதை கூறி, ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். அன்று மாலையே அவளின் வீட்டிற்கும் சென்று, நான் கனடா போய் வேலை எடுத்து, ஓரளவு நிரந்தரமானதும் உங்க மகளை, என் துணைவியாக அங்கு கூப்பிட உள்ளேன் என்பதை தெரியப்படுத்தினேன். அப்படியே அவளும் 1985, அக்டோபர் 22 அங்கு வந்தாள். ஆனால் நாம் நினைப்பது ஒன்று நடப்பது வேறு? நான் அவளுடன் கதைத்த அந்த கடைசி நாளை நினைத்தேன். வைத்தியர்கள் கைவிரித்துவிட்டார்கள். அது வெள்ளிக்கிழமை ஜூன் 8, 2007 அதிகாலை நாலு மணி இருக்கும். நான் அவளின் கட்டிலில் இருந்து கொண்டு அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன், மகன் அதுவரை அங்கு நின்றவர், கொஞ்சம் வெளியே போய்விட்டார். இரண்டு மகளும். பல்கலைக்கழக விடுதியில், அவர்கள் விடிந்த பின்புதான் தொடர்வண்டி எடுத்து வருவார்கள். அந்த நேரம் திடீரென என் மடியில் சாய்ந்தவள், 'அன்பே நான் இனி சாகிறேன்' - அது தான் அவள் கதைத்த கடைசி வார்த்தை. இன்னும் என் நெஞ்சை உருக்கும் சோக வார்த்தை! நான் மலர்க்கொத்தை இறுக்கமாக பிடித்தபடி, அந்த பனி தூறலிலும், படலையை திறந்து உள்ளே போனேன். அவளுக்கு இந்த காதலர் தினத்தில் மகிழ்வாக மலர் கொத்துடன் அன்பு முத்தமும் பரிமாறியது நெஞ்சை விட்டு அகலவில்லை. என்னில் ஒரு தடுமாற்றம் தானாக வந்தது, பனியுடன் குளிர் காற்றும் கொஞ்சம் கடுமையாக வீச தொடங்கி விட்டது. என் கை சரியாக விறைத்துக் கொண்டு வந்தது, பூக்கொத்து கையில் இருந்து நழுவியது, ஆனால் கடும் காற்று அதை அவளின் உடல் மேலே போட்டது. அவள் எழுந்து, அந்த பூக்கொத்தை கையில் எடுத்து நுகர்ந்து பார்த்தாள், அவள் முகம் கண்டு அந்த ரோசாக்கள் தலை குனிந்து காற்றுடன் பறந்து சென்றன. நான் சிலநிமிடம் அங்கு இருந்துவிட்டு 'மீண்டும் வருகிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்! "காலம் கடந்தும் காதல் வாழும்" "ஆந்தை அலறவில்லை?- சுடர் ஒளி அணையவில்லை? எந்தை அவள்- தன் ஒளி அணைத்துவிட்டாள் முந்தை நாளில்- கொஞ்சி கூடி குலாவினாள் பந்தை அடித்து-சேயுடன் ஆனந்தக் கூத்தாடினாள்" "சிந்தை ஓடவில்லை?- என் மனம் ஆறவில்லை? எந்தை அவள்-கண் மூடி உறங்கிவிட்டாள் நிந்தை பேசாள்- நினைவிலும் கெடுதல் செய்யாள் விந்தை புரிந்தாள்-எந்நாளும் உள்ளம் கவர்ந்தாள்" "மந்தை கூட்டம் போல் நாம் இருந்தோம்! தந்தை தாயாக சேர்ந்து நாம் இருந்தோம்! இந்தை பிள்ளை இன்னும் கண்ணீர் துளியில் கந்தை கொண்டு கண் துடைக்க வாரயோ?" "குந்தை அண்டி அவள் ஒய்யாரமாய் இருப்பாள் விந்தை காட்டி சேயுடன் ஒன்றி இருப்பாள் சிந்தை குளிரும் அவள் சிங்கார சிரிப்பில் எந்தை அவள் வாய் மூடி உறங்கிவிட்டாள்" "தீந்தை விழியால் தினம் காதல் பேசியவள் சாந்தை பூசி சந்தன பெட்டிக்குள் போயிற்றாள் வேந்தைக்கும் ஏழைக்கும் அவள் ஒரே பார்வை குழந்தைக்கும் குஞ்சுக்கும் அவள் ஒரே அன்பு" "உந்தை வழியில் -தினம் கடவுள் வேண்டினாய் விந்தை உலகமடா- இன்று நீயே கடவுள்? எந்தையே என்றன்- குலப் பெருஞ் சுடரே! மடந்தையே என்று -நான் உன்னை காண்பேன்??" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]