Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"
"அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !"
-
"அமைதியின் கதவு திறக்கட்டும்!"
"அமைதியின் கதவு திறக்கட்டும்!" இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய மீனவ கிராமத்தில், வங்காள விரிகுடாவின் அலைமோதும் நீருக்கும் தீவின் பசுமையான காடுகளுக்கும் இடையில், ரவி என்ற இளம் மீனவன் வசித்து வந்தான். ரவி தனது 25 வருட வாழ்க்கையில் மோதல்களையும் கொந்தளிப்பையும் தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. வடக்கும் கிழக்கும் என்றும் சண்டை, வலி மற்றும் பயம் ஆகியவற்றிற்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கும் இந்த மண்ணில் தான் அவன் பிறந்தான். பல தசாப்தங்களாக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் ஒரு மிருகத்தனமான உள்நாட்டுப் போரால் சிதைக்கப்பட்டன. இந்த மோதல் ரவி போன்ற எண்ணற்ற குடும்பங்களுக்கு சொல்லொணாத் துன்பத்தையும், இழப்பையும், விரக்தியையும் ஏற்படுத்தியது. என்றாலும் ரவி நாளடைவில் ஒரு நம்பிக்கையின் ஒளியைப் பற்றிக் கொண்டான். வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எப்ப ஒரு குடையின் கீழ் இணைகிறார்களோ அன்று தான் முழு பலத்துடன் தமது அவலங்களை நெருக்கடிகளை போக்கி, சம உரிமைகளை பெற்று அமைதி கதவு திறக்க முடியும் என்று நம்பினான். இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 4 பெப்ரவரி 1948 இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து, அது பெரும்பான்மை சமூகத்திடம் கைமாறியதில் இருந்து, தமிழ் பேசும் மக்களான இலங்கைத் தமிழர், தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள், மலையக தமிழர்கள் எதோ ஒரு வகையில் கெடுபிடிகளுக்கு ஆளாகத் தொடங்கினார்கள். உதாரணமாக சுதந்திரத்துக்கு சற்று முன்பு 1946 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 69.41% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 28.89% [இலங்கைத் தமிழர் 11.02% , இலங்கைச் சோனகர் 5.61%, மலையக தமிழர்கள் 11.73%, & மலையக சோனகர் 0.53%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்பட்டனர். இன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 74.90% சிங்கள மொழிபேசுபவர்களாகவும் 24.57% [இலங்கைத் தமிழர் 11.15% , இலங்கைச் சோனகர் 9.30%, மலையக தமிழர்கள் 4.12%, & மலையக சோனகர் 0.00%] தமிழ் மொழி பேசுபவர்களாகவும் காணப்படுகின்றனர் என இலங்கை அரச தரவு சுட்டிக்காட்டுகிறது. அதாவது தமிழ் பேசும் மக்கள் குறைந்தது கால்வாசிக்கு இலங்கையில் வாழ்ந்தாலும், அவர்கள் பலவழிகளில் ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு அரச இயந்திரத்தால் கெடுபிடிகளுக்கு தொடர்ந்து ஆக்கப்பட்டதே உள்நாட்டு கலவரத்துக்கு தூண்டி அது பெரும் போராக வெடித்தது. ஆனால் வடக்கு, கிழக்கு என்றும் தமிழர்,முசுலிம்கள் என்றும் பிரிந்து செயல்படத் தொடங்கியது தான் அவர்களை பலவீனமாக்கி, தமிழ் பேசும் மக்களின் அமைதியின் கதவு திறப்பதை தடுத்துக்கொண்டே இருக்கிறது என்பதை அறிவுபூர்வமாக ரவி உணர்ந்தான். இந்த பலவீனம் அரச இயந்திரத்தாலும் ஊக்கிவிக்கப் படுகிறது என்பதை பலர் அறிவதில்லை, அந்த வலையில் சிக்கி, தாமே தம் ஒற்றுமையை குலைகிறார்கள் என்பது தான் ரவிக்கு ஒரு கோபத்தையும் ஏற்படுத்தியது. 2009 இல் பெரும் தமிழர்களின் அழிவுக்கு அதுவும் ஒரு காரணம் என்பதை அவன் நேரடியாகக் கண்டவன். ஒரு நாள், ரவி கடலில் வலையை வீசியபோது, அவனது கிராமத்தில் உள்ள பெரியவர்களிடமிருந்து கிசுகிசுப்பு கேட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு உண்மையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாகச் சொல்லி 9 ஜனவரி 2015 இல் மைத்திரிபால சிறிசேன, 'அமைதியின் கதவு திறக்கட்டும், சர்வாதிகார ஆட்சி ஒழியட்டும்' என்ற பெரும் முழக்கத்துடன் புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதைப் பற்றி அவர்கள் பேசினர். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் நல்லிணக்கம் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கெடுபிடி இல்லா பாதுகாப்பான உரிமையுடன் கூடிய வாழ்வு அமைக்க முயலுவேன் என்ற அவரின் பேச்சில் ரவிக்கு அவ்வளவாக நம்பிக்கை வரவில்லை. ஒவ்வொரு ஆட்சியாளரும் தொடக்கத்தில் பேசிய வார்த்தைகள் தான் இவை என்பது அவனின் அனுபவம். அவை பின்னாளில் தூக்கி எறியப்படுவதை வரலாற்றில் வாசித்தவன் அவன். என்றாலும் அவனுக்கு அது ஒரு ஒரு பலவீனமான நம்பிக்கையை கொண்டு வந்தது. ஆனால் அதுவும் செயலிழந்து போய், மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது நாம் கண்டதே! இந்தக் மனக் கொந்தளிப்பின் நடுவே, ரவி ஒரு நல்ல சூரியன் பிரகாசிக்கும் காலை, தனது எளிய குடிசையின் தாழ்வாரத்தில் அமர்ந்து, ஒரு கோப்பை வாசனையான சிலோன் தேநீரைப் பருகும்போது, கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் குழு அவனைச் சுற்றி திரண்டது. "ரவி மாமா , எங்கள் அழகிய நிலத்தில் அமைதி நிலவுமா? இலங்கைக்கு அமைதிக்கான கதவு திறக்குமா?" என்று கேட்டனர். ஒரு இனத்தின் அடிப்படை அடையாளமும் உரிமையும் மொழி. அதனை மறுக்கும் விதமாகவும் இலங்கையில் இன முரண்பாடுகளுக்கு வித்திட்ட சம்பவங்களில் ஆரம்பகால நிகழாகவும் இன மேலாதிக்கத்தை மேற் கொண்ட சம்பவங்களில் ஒன்றாகவும் நடந்த தனிச் சிங்கள சட்டம் ஜூன் ஐந்து 1956இல் நிறைவேற்றப்பட்டது ரவி தன் அம்மாவிடம் இருந்து கேள்விப்பட்டுள்ளான். “திணிப்பை விரும்பாத சிறுபான்மையினர் மீது சிங்கள மொழியினைத் திணிப்பதானது ஆபத்தான விளைவுகளைக் கொண்டுவரக்கூடும்.“ என்று லங்கா சமசமாஜக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லெஸ்லி குணவர்த்தன, 1956, ஜூன் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததையும், ‘உங்களுக்கு இருமொழிகள் – ஒரு நாடு வேண்டுமா? இல்லை ஒரு மொழி – இரு நாடு வேண்டுமா’ என்று வெள்ளவத்தை- கல்கிஸ்ஸை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபல சட்டத்தரணி கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா அன்று நாடாளுமன்றத்தில் கூறியதையும், பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் என்று சிவத்த கொடி பிடித்தவர்களின் கையும் சிவத்த இரத்தக் கரை பிடித்ததை முணுமுணுத்துக்கொண்டு ரவி குழந்தைகளைப் பார்த்தான். அவன் கண்கள் நம்பிக்கையால் நிறைந்து இருக்கவில்லை என்றாலும் அமைதிக்கான பாதை எளிதானது அல்ல என்பதை அவன் அறிந்திருந்தான். இன்று மே 18, 2024, முள்ளிவாய்க்கால் படுகொலையின் 15 ஆவது நினைவு கூறல். இதில் சர்வதேச மன்னிப்புச் சபையின் உலகளாவிய தலைவர் மற்றும் மிக மூத்த வெளிநாட்டு பிரமுகர் Agnes Callamard, கலந்துகொள்கிறார் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் அவை ஒரு சம்பிரதாயம் மட்டுமே, என்றாலும் இது ஒரு தொடக்கம், எனவே அது என்றோ ஒரு நாள் சாத்தியம் என்று நம்பினான். கனிவான புன்னகையுடன் அவர்களுக்கு ஒரு கதை சொல்ல ஆரம்பித்தான். நீண்ட காலத்திற்கு முன்பு, என்று ரவி தொடங்கி "ஒரு காலத்தில் காட்டில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்ந்தன, பறவைகள் ஒன்றாகப் பாடுகின்றன, விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று தங்கள் உணவைப் பகிர்ந்து கொண்டன. ஆனால் ஒரு நாள், ஒரு பெரிய புயல் காட்டில் வந்து, விலங்குகள் மற்றும் பறவைகளை சிதறடித்தன. அவர்கள் ஒருவரையொருவர் பயந்தார்கள், அமைதி அங்கு இழந்தது போல் தோன்றியது." குழந்தைகள் ரவிவின் கதையால் கவரப்பட்டு கவனமாகக் கேட்டனர். அவன் தொடர்ந்தான். காடுகளில் அமைதியை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி புரிதலின் கதவைத் திறப்பதுதான் என்று அவன் குழந்தைகளிடம் கூறினான். குழந்தைகளுக்கு அது சரியாக புரியவில்லை. குழப்பத்துடன் காணப்பட்டனர். எனவே ரவி "புரிந்துகொள்ளும் கதவு மரத்தாலோ கல்லாலோ ஆனது அல்ல. நாம் ஒருவரையொருவர் உண்மையாகக் கேட்கும் போது, ஒருவருக் கொருவர் வலியையும் நம்பிக்கையையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது நம் இதயத்தின் கதவு திறக்கிறது." என்று விளக்கினான். "காடுகளைப் போலவே, நமது அழகிய இலங்கையும் புரிதலின் கதவைத் திறந்தால் அமைதியைக் காணலாம், நாம் ஒருவருக்கொருவர் கேட்க வேண்டும், நம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், ஒன்றாக வேலை செய்ய வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப, அதற்கு நேரம் ஆகலாம், ஆனால் நல்லிணக்கப் பாதையைப் பின்பற்றும் பொறுமையும் ஞானமும் இருந்தால், நமது மண்ணுக்கு அமைதியின் கதவு திறக்கும்." என்று குழந்தைகளை அணைத்தபடி சொல்லி முடித்தான். ரவி பல தசாப்தங்களாக வடக்கு, கிழக்கு பிராந்தியத்தை பாதித்த உள்நாட்டுப் போரின் வலியையும் துயரத்தையும் அனுபவித்த குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய பெற்றோர் தங்கள் வீட்டை இழந்து அகதிகள் முகாமில் புதிதாக தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. ரவி அவர்களின் கஷ்டங்கள் மற்றும் அமைதிக்கான ஏக்கம் பற்றிய கதைகளைக் கேட்டு வளர்ந்தவன். எனவே தான் தமிழ் பேசும் எல்லோரும் ஒற்றுமையாகி, எல்லோர் இதயத்திலும் ஒரு மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான். அது தான் தமிழரின் ஈழ நாட்டில் அமைதியைக் கொண்டுவர உதவும் என்று அவன் நம்பினான். இடைப்பட்ட ஒரு காலத்தில் எதிரியாகக் கருதப்பட்ட வடக்கு வாழ் மீனவர்கள் தனது கிராமத்தின் சந்தைகளில் வியாபாரம் செய்யத் தொடங்குவதை அவன் கவனித்தான். அவர்கள் தங்கள் போராட்டங்கள், இழப்புகள் மற்றும் நம்பிக்கையின் கதைகளைப் அவனுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் சிறந்த எதிர்காலம், வன்முறை மற்றும் வெறுப்பு இல்லாத எதிர்காலம் பற்றிய தங்கள் கனவுகளைப் பற்றி பேசினர். கிழக்கில் உள்ளவர்களைப் போலவே வடக்கிலிருந்து வந்தவர்களும் அமைதி மற்றும் செழிப்புக்காக ஏங்குகிறார்கள் என்பதை உணர்ந்து ரவி, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையின் அவசியத்தை நன்கு புரிந்து கொண்டான். வருடங்கள் செல்லச் செல்ல, அமைதிக்கான வாக்குறுதி வேரூன்றத் தொடங்குவது போல தெரிந்தது. கடந்த கால காயங்களை குணப்படுத்த அரசாங்கம் குறிப்பிடத்தக்க சில முயற்சிகளை மேற்கொண்டது, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் முதலீடு செய்வதாக அறிவித்தது. ரவியின் கிராமமும் மற்றவர்களைப் போலவே ஒரு மாற்றத்தைக் காணும் என்று அவன் கனவு கண்டான். சாலைகள் சீரமைக்கப்பட்டன, பள்ளிகள் புனரமைக்கப்பட்டன, இயல்பு நிலை திரும்புவது போல இருந்தது. ஆனால் அதற்கிடையில் அரசாங்கமும் அன்று மாறியது. அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் தீவிரமான தமிழர் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் தொடங்கியது. உதாரணமாக நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்பும் சிங்கள குடியேற்றமும் உள்ளிட்ட புதிய முறைகளும் பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயக நிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்க தொடங்கின. வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்து மீண்டும் , “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்று ரவிக்கு புரிந்தது. தமிழ் பேசும் மக்கள் பிரிந்து இருந்து, அரசை நம்புவதில் பயன் இல்லை. அரசு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் பேசும் மக்களுக்கும், தமிழர் தாயகத்துக்கு எதிரான வேலை திட்டங்களை இலகுவாக செய்ய அந்த பிளவுகளை பயன் படுத்தும் என்பதை ரவி உணர்ந்தான் , எனவே மக்களாகிய நாம், மீண்டும், ஆனால் அகிம்சை வழியில் ஒரு போராட்டத்தை ஒற்றுமையாக தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தான். கடந்த கால பிளவுகளைத் தாண்டி ஒற்றுமை மற்றும் அன்பின் அடையாளமாக ரவி வடக்கிலிருந்து, தமிழ் பேசும் ஒரு சோனக பெண்ணை மணந்தான். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தொடர்ந்து அமைதி, ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தை தழுவி, சமாதான மரபு வரும் தலைமுறைக்கும் நிலைத்திருக்க வழிவகுக்க வேண்டும், அங்கு 'அமைதியின் கதவு திறக்கட்டும். என்ற அவனின் பிரார்த்தனை வெற்றி பெறுமா இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். அவனின் தமிழ் இஸ்லாம் மனைவியும் அவனின் பிரார்த்தனையில், அமைதிக்காக தன் இதயக் கதவை திறந்து, பங்குபற்றத் தவறவில்லை! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"உறங்காத விழிகள்"
"உறங்காத விழிகள்" 1881 ஆண்டு இலங்கை குடிசன மதிப்பின் படி, தமிழ் மக்கள் யாழ் மாவடடத்தில் [கிளிநொச்சி உட்பட] ஏறத்தாழ 100% மும் [98.3 & தமிழ் பேசும் முஸ்லீம் 1.0 ], மற்றும் வவுனியா [முல்லைத்தீவு உட்பட], திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம் முறையே 81% [80.9 & தமிழ் பேசும் முஸ்லீம் 7.3 ], 64% [63.6 & தமிழ் பேசும் முஸ்லீம் 25.9 ], 62% [61.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 31.1 ], 58% [57.5 & தமிழ் பேசும் முஸ்லீம் 30.7 ], 30% [30.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 50.4], 10.0% [10.0 & தமிழ் பேசும் முஸ்லீம் 16.0] இருந்தனர் என புள்ளிவிபரம் காட்டுகிறது. ஆனால் இன்று அப்படி இல்லை. எல்லாம் தலைகீழாக மாறுகிறது. உதாரணமாக நுறு ஆண்டுகளுக்கு பின், 1981 ஆண்டில், திருகோணமலையில் தமிழர் 33.8 & தமிழ் பேசும் முஸ்லீம் 29.0 வீதமாகவும் அம்பாறையில் தமிழர் 20.1 & தமிழ் பேசும் முஸ்லீம் 41.5 வீதமாகவும் ஆகிவிட்டது. “Ever heard of 'archaeology' being the first priority in a conquered territory? If you have not heard of such a practice, then you don't know the Sri Lanka state.” என்று ஒருமுறை யாரோ சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது. இன்று முல்லைத்தீவில் உள்ள குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் 632 ஏக்கர் நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் சுவீகரிக்கபட்டுள்ளது. உதாரணமாக ஏழு குடும்பங்களுக்கு சொந்தமான 36 ஏக்கர் வயல் காணியை, அவர்கள் பாவிக்க முடியாத நிலை வந்துள்ளது. இது அவர்களின் அடையாளத்தையும், வாழ்வாதாரத்தையும் வெகுவாக பாதித்துள்ளது. அந்த குடும்பத்தில் ஒருவளாக அவள் தூர இருந்து தன் வயலை பார்த்துக்கொண்டு இருந்தாள். 'ஒரு முறையான பக்கச்சார்பு அற்ற தொல்லியல் ஆய்வு செய்து அங்கு உண்மையான தொல்லியல் சான்று பொருட்கள் இருக்கும் பட்சத்தில், தொல்லியல் இடமாக ஆக்கிக்கொள்வதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால் அதற்காக சுற்றி இருக்கும் பெரும் அளவு விவசாய காணிகளை எடுப்பது தான் எனக்கு புரியவில்லை' அவள் முணுமுணுத்துக்கொண்டு இருந்தாள். இன்று நாட்டில் எதற்கும் தட்டுப்பாடு, விலை அதிகம், ஆனால் தொல்பொருள் என்று முழுக்க முழுக்க சிங்களவர்களை கொண்ட ஆய்வுக்குழு தமிழ் பிரதேசத்தில், அடையாளம் போட்டு போட்டு நிலத்தை அபகரித்து, பௌத்த சிங்கள மயமாக்குவதுக்கு மட்டும் எந்த தட்டுப்படும் இல்லை, என்று அவளின் 'உறங்காத விழிகள்' வெறிச்சு தன் வயலை பார்த்துக்கொண்டு இருந்தது. ஒருவன் நெருப்பினுள் இருந்து உறங்குவதும் இயலக்கூடும். ஆனால், வறுமையில் உறக்கம் கொள்வது அரிது என 'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது.' வள்ளுவர் கூறியது போல அவள் ஒழுங்காக உறங்கி சில நாட்கள் ஆகிவிட்டது. அவள் முன்பு வாழ்ந்த வாழ்வு எங்கே ?, இப்ப வாழும் வாழ்வு எங்கே?, எப்படி அவள் உறங்குவாள்? தன் கணவரை இன்னும் காணாமல் போனோர் பட்டியலில், தேடி அலைந்துகொண்டு, ஒருவாறு வயல் தரும் பலனில், பிள்ளைகளை சீரும் சிறப்புமாக வளர்த்தவளுக்கு, இப்ப என்ன செய்வது என்றே புரியவில்லை? "பூவுறங்குது பொழுதும் உறங்குது நீ உறங்கவில்லை நிலவே கானுறங்குது காற்றும் உறங்குது நான் உறங்கவில்லை... மான் உறங்குது மயிலும் உறங்குது மனம் உறங்கவில்லை என் வழி உறங்குது மொழியும் உறங்குது விழி உறங்கவில்லை." ஆமாம், அவளால் எப்படி உறங்கமுடியும்? அவள் எண்ணம், செயல் எல்லாம் எப்படி இதில் இருந்து மீண்டு எழும்புவது. அவள் தன் உடல் துன்பத்தைப் பொருட்படுத்தவில்லை, அது இப்ப அவளுக்கு அவசியமும் இல்லை. பசியை மறந்தேவிட்டாள், அவளின் உறங்காத விழிகள், எதாவது செய்து, பிள்ளைகளை மீண்டும் வாழவைக்க வேண்டும் என்று துடிதுடித்துக்கொண்டு இருந்தது. அவளுக்கு குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்க பாடல் ஒன்று துணையாக நின்று ஊக்கம் கொடுத்தது, ஆறுதலாக அவளுக்கு இருந்தது "மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்" அவளின் இடைவிடாத தேடுதலும், அயலவர்களின் உதவியும் தற்காலிகமாக சிறு ஆறுதலை கொடுத்தாலும், அவளால் இன்னும் ஒழுங்காக உறங்கமுடியவில்லை "என்னிரு கண்களும் மூடமறுத்து சுழன்று புரண்டு நித்திரையின்றி நினைவுகளின் நிழல்களில் கடத்திய நாட்களின் தவிப்பை என் தலையணை சொல்லும்" என்பது போல, முதலில் காணாமல் போன கணவனின் தவிப்பு, இப்ப இருந்த வயல் நிலத்தையும், வலோற்காரமாக தொல்லியல் திணைக்களம் பறித்த தவிப்பு, அவளின் கண்கள் சொல்லிக்கொண்டு இருந்தன. அவள் உயர் வகுப்பு மட்டும் படித்து, அதில் சித்தியும் அடைந்து, ஆனால், அந்த நேரம் நிலவிய போர்சூழலால், மேல் படிப்பு படிக்காவிட்டாலும், அந்த சான்றிதழ்கள் இன்னும் அவளின் பெட்டி ஒன்றில் பத்திரமாக வைத்திருந்தது இப்ப அவளுக்கு ஞாபகம் வந்தது. அவளின் தூங்காத விழிகள் ரெண்டும், அந்த சாமத்திலும், உடனடியாக அதை தேடி எடுத்து, தன் வீட்டுக்கு அருகில் இருந்த ஆரம்ப பள்ளிக்கு, அன்று விடியவே விண்ணப்பம் செய்தது. 'ஊக்கமது கைவிடேல்' என்று ஆத்திசூடி கூறியது போல, அவளின் உற்சாகம்/ தன்னம்பிக்கை/ விடாமுயற்சி அவளை ஆசிரியர் ஆக்கியது. என்றாலும் அவள் இன்னும் தன் வயலை உற்றுப்பார்ப்பதையும், அதை திருப்பி பெரும் முயற்சிகளையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கணவனை தேடுதலையும் கைவிடவில்லை. அதுவரை அவள் உறங்காத விழிகளே! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!"
"சிலுவையை மீண்டும் சுமப்போம்!" "உன்னை காட்டி கொடுத்தான் ஒருவன் சிலுவையில் நீ நின்றாய்! அன்னை பூமியில் ஒன்றாய் உண்டவன் சிலகாசுக்கு விலை போனான்! அன்று முளைத்த இந்த வஞ்சகன் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று எம் மத்தியிலும் வாழ்கிறான் சிரித்து கழுத்தையும் அறுக்கிறான்!" "உன்னை நேசித்த உன் தொண்டர்கள் சிலுவையை தோலில் சுமந்தனர்! அன்னை பூமி முழுவதும் உன் சிந்தனையில் வழி காட்டினர்! அன்று கண்ட மனித நேயம் சிறிதாய் பெரிதாய் வளர்ந்து இன்று நாம் உரிமையாய் வாழ சிலுவையில் எம்மை அறைகிறோம்!" "உன்னை கண்டதால் தியாகம் அறிந்தோம் சிலுவையின் பெருமை உணர்ந்தோம்! அன்னை தெய்வத்தின் அருமை அறிந்தோம் சிறந்த பண்பு கண்டோம்! அன்று நம்பி மோசம் போனதால் சிதைந்து மதிப்பு இழந்தோம்! இன்று படும் துயரம் போக்க சிலுவையை மீண்டும் சுமப்போம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
“இது இனப் படு கொலை!”
“இது இனப் படு கொலை!” "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!” “விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!” “கலை வளர்க்க தடை போட்டு அலை அலையாய் ஆமி போட்டு விலை பேசி சிலரை வாங்கி உலை வைக்கும் மந்தரை கெடுத்து சிலை சிலையாய் மக்களை மாற்றி இலை துளிராது வேரையே வெட்டி தலை நிமிரா நெருக்களை கொடுத்து கொலை செய்வது இனப் படுகொலை!” [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம் பரியமும்" / பகுதி: 11 பல பல நூறு ஆண்டு காலமாக சில மத வழக்கங்கள், தமிழர்கள் வாழ்வில் புராணங்களுடன் கலந்து, இன்றளவும் பொதுவாக பின்பற்றப் பட்டு வருகிறது, அதனை மூட நம்பிக்கை என்று சிலரும், பழம் வழக்கங்கள் என்று சிலரும், மரபுகள் என்று சிலரும் கூறுவர். இவை அன்றைய சூழலில் மற்றவர்கள் மனதில் ஒரு பயத்தை உண்டாக்குவதற்க்கான ஒரு மாற்று வழியாக இருந்து இருக்கலாம்? இப்படியான பழம் வழக்கங்கள் இன்னும் தேவையா என பலர் கேள்வி கேட்கலாம்? இன்றைய நவீன, அறிவியல் நடை முறையில் இவைகளின் பங்கு எப்படி இருக்கும் என்பதை நாம் கட்டாயம் அறிய வேண்டும். அப்பொழுது தான் அதற்கு ஏற்றவாறு எம் பழக்க வழக்கங்களையும் அல்லது அதை ஒட்டிய மரபுகளையும் சரிப்படுத்தி, அடுத்த தலை முறைக்கு எமக்கு பெருமை சேர்க்குமாறு கொண்டு செல்ல முடியும். எது எவ்வாறாயினும் பொதுவாக தமிழர்களின் பல சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த அல்லது ஏதாவது பொதுக் காரணங்கள் இருப்பதை காண்கிறோம். அதனை நீங்கள் அறியும் போது கட்டாயம் உங்களுக்கு அது வியப்பை கொடுக்கும். இப்போது சில விந்தையான மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான காரணங்களைப் பார்ப்போம், இவை ஒருவேளை இன்று தேவை அற்றதாகவும் இருக்கலாம்? பொதுவாக இலக்கியம், கவிதை என்றாலே நமக்கு ஒரு வெறுப்புத்தான். அதுக்கும் எமக்கும் வெகு தூரம் என்று ஒதுங்கி விடுவோம். ஆனால் அவற்றிற்குள் எவ்வளவு விடயங்கள் - வானியல், அறிவி யல், மருத்துவம், கட்டிடவியல், இலக்கணம், கணிதம் இன்னும் பல - புதைத்து இருக்கின்றன என்று பார்க்கும் பொழுது எம்மை வியப்படைய வைக்கிறது. அவை அத்தனையையும் அறிவியலின் படி சரி என சொல்ல வரவில்லை, ஆனால் பல இன்றைய அறிவியலை சார்ந்து இருப்பது எம்மை ஆச்சிரியப்பட வைக்கிறது. அவைகளில் சில சங்க பாடல்களில் கிரகணத்தை பற்றி என்ன கூறி இருக்கிறது என்று பார்ப்போம். நற்றிணை 377,இல் "அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல” என்ற வரி : அகன்ற கரிய ஆகாயத்தின் கண்ணே (அரவினாற்) பாம்பினால் சிறிது விழுங்கிக் குறை படுத்தப் பட்ட பசிய கதிர்களையுடைய திங்களின் விரிந்த நிலாவைப் போல என்கிறது இந்த பாடல். எனினும் திங்களைப் பாம்பு விழுங்கியது என்று, புராணக் கதையை எடுத்து கூறினாரோ அல்லது அந்த பாட்டின் பொருளை, பின்னாளில் அப்படி மொழி பெயர்த்தனரோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு, ஏன்னென்றால், அங்கு, அந்த சங்க பாடலில், "அரவுக் குறைபடுத்த" என்றுதான் உள்ளது "அரவு கவ்வ அல்லது விழுங்க " என இல்லை [huge moon with cool rays, in the wide, dark sky, that is reduced by a snake], சிலர் அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு என்றும், ஆகவே ஒளியை இருள் கவ்வுதல் என, அதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை (நிலவை) இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது என்கின்றனர், இங்கு ஒரு அறிவியல் விளக்கத்தை காண்கிறோம், அதே போல, பரிபாடல் 11 இல், வரி 9 - 10 இல், "பாம்பு ஒல்லை மதியம் மறையவரு நாளில் வாய்ந்த" [The snake hides the full moon rapidly] என்கிறது. அகநானுறு 313 யிலும் "அரவு நுங்கு மதியின்",என்று ஒரு வரி உண்டு, இங்கு "நுங்கு" என்பதற்கு பல பொருள் உண்டு, விழுங்கு, கைக்கொள்ளு, கெடு, ஆரப் பருகு ஆகும். எனவே இதன் பொருள் விழுங்கப்பட்ட அல்லது கைப்பற்றப் பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட [swallowed by or captured by or destroyed by] நிலவு என்கிறது. இங்கு அரவு என்பதற்கு வறுத்து என்று பொருள் எடுத்தால், அது வருத்தி கைப்பற்றப்பட்ட அல்லது சேதப்படுத் தப்பட்ட நிலவு என்று ஆகிறது என்பதை காண்க. இது கிரகணம் என்றால் என்ன என்பதன் முன்னைய விளக்கம் ஆகும். ஆனால், இன்றைய விஞ்ஞான உலகம் கிரகணத்தை வேறுமாதிரிப் பார்க்கிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால், சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. அதே போல, சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது, சந்திர கிரகணம் உண்டாகிறது என்று இன்று அறிவியல் எமக்கு எடுத்து காட்டுகிறது. கிரகணம் என்று வடமொழிச் சொல்லின் மூல வார்த்தை ஒரு தமிழ் வார்த்தை. அது கரவணம். கரத்தல் = மறைத்தல்! ஆகும். என்றாலும் கிரகணங்கள் பற்றி பல்வேறு நம்பிக்கைகள், கதைகள் தமிழர்கள் மத்தியில் பிராமண இந்து மதத்தின் தாக்கத்தால், அது கொடுத்த புராணங்களால் இன்றும் உண்டு. அது அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. ஆனால் புராணக் கதைகள் பெரும்பாலனவைகளைப் படிக்கும் போது கடவுள்மார்கள் மக்களுக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளதை உணர்கிறேன். அவர்கள் செய்யும் விபரீதமான செயல்கள் எல்லாம் மனிதரே செய்ய அஞ்சும் விலக்கப்பட்ட செயல்களாக இருப்பதையும் காண்கிறேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சீரிய தமிழ் மரபுக்கு ‘இந்திரனே! நான் அளிக்கும் சாராயத்தைக் குடித்து விட்டு என் எதிரியின் கண்களைத் தோண்டு’ என்று உபதேசிக்கும் வேதங்கள் நான்கும் முற்றிலும் மாறுபட்டது. அதன் வழியே புராணங்களும். அதனாலேயே புராணகதைகள் பெரும்பாலனவைகள் எல்லாம் சரியான கீழ்த்தரக் குணம் இருப்பவர்களாகவும், நமக்கு ஏற்ற வழிகாட்டிகள் அல்லாதவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் தமிழ்ப் பாரம்பரியமோ ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்கிறது. நமக்குத் தீமை புரிந்த ஒருவனைத் தண்டிக்கும் வழி. என்னவென்றால், அவன் வெட்கப்படும் விதத்தில் அவனுக்கு நன்மை புரிவதே என்கிறது. ஒரு சுப தின த்தின் போது ‘என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய்ப் போக; அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்க! புல் பூண்டு இல்லாமல் அவர்கள் வம்சம் அழிந்து போக!’ என்ற ரீதியில் மணிக் கணக்கில் ஒருவர் சாபம் விட்டால், அவ்வார்த்தைகள் அந்தச் சூழலை எவ்வளவு அருவருப்பாக மாற்றும்? மற்றும் ஒரு உதாரணமாக, திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம், ''சோமஹ ப்ரதமோ, விவேத கந்தர்வ, விவிதே உத்ரஹ, த்ருதியோ அக்னிஸடே, பதிஸ துரியஸதே, மனுஷ்ய ஜாஹ'', என்று மணமகளை நோக்கி சொல்லப்படும் இந்த மந்திரத்தின் அர்த்தம்- நீ முதலில் சொமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான் காவதாக ஒரு மானிடனை அடைகிறாய் ஆகும். முழுக்கவும் இம்மாதிரி அருவருப்பான வசைகளே நிறைந்திருக்கின்றன. இடையிடையே கவித்துவம் நிரம்பிய சில அற்புதமான பகுதிகளும் உண்டு. பொதுவாக புராணங்கள் இந்து சமயத்துக்கு அடிப்படையான வேதங்களைப் பின்பற்றியே எழுதப்பட்டது. அதனால் தான் அதுவும் அது போலவே உள்ளது என நான் நம்புகிறேன். உதாரணமாக பலர் இன்னும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், கிரகணத்தின் போது வீட்டிற்குள் இருக்கிறார்கள். அவர்கள், தம் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எந்தவித குறைபாடும் ஏற்படக்கூடாது என்ற ஒரு பாரம்பரியமாக வந்த ஒரு பயத்தால், அல்லது அதற்கு கற்பித்த புராணக் கதையால், அப்படி தமது பழக்கத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அதே போல், அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் மாட்டார்கள். கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்புகிறார்கள். மேலும் சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இது ஒரு ஒரு மூலிகை செடி என்பதால், அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும். கிரகண நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது; சாப்பிடக்கூடாது; வானத்தைப் பார்க்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், விஞ்ஞான உலகம், நாசா [nasa] உட்பட கிரகணத்தை வேறு மாதிரிப் பார்க்கிறது. கிரகணங்களால் நம் உடல் நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; அந்த இயற்கை நிகழ்வை பார்த்து ரசிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். எனவே கிரகணங்களைப் பற்றிய நம்முடைய நம்பிக்கையும் அறிவியலும் வேறு வேறாக இருக்கின்றன. ‘கிரகணம் என்பது வெறும் நிழல் விளையாட்டு’ என்று கண்டறிந்து சொல்லியுள்ளார் கி.பி. 476 இல் பிறந்த ஆரியப்பட்டர் என்கிற இந்திய பண்டைய விஞ்ஞானி / வானியலார். [Aryabhata states that the Moon and planets shine by reflected sunlight and he explains eclipses in terms of shadows cast by and falling on Earth] அதனால், கிரகணம் குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. கிரகண நேரம் மட்டும் அல்ல. எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. சூரியன் மட்டும் அல்ல, எந்த பிரகாசமான ஒளியையும் எப்போதும் வெறும் கண்ணால் அதிக நேரம் பார்க்கக் கூடாது. பிரகாசமான ஒளியை உற்றுப் பார்க்கும்போது, நம் கண்களில் உள்ள நிறமி [pigment] பாதிக்கப்படும். காலம் காலமாக விதைக்கப்பட்ட தவறான நம்பிக்கைகளின் விளைவு இது ஆகும். உதாரணமாக, பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின் போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே, கிரகணத்தின் போதும் கடல் அலையில் மாற்றம் சற்று அதிகமாக இருக்கலாம். என்றாலும் இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 12 தொடரும்
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா?
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 24 அரசகுமாரி சிங்கத்துடன் புணர்ந்து ஒரு ஆண் ஒரு பெண் என இரு மானிட பிள்ளைகளை பெற்று, பின் அந்த ஆண், தன் தந்தை சிங்கத்தை கொன்று, அதன் பின் தன் சகோதரி சிம்மசீவலியை மணந்து, அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக, அதுவும் எல்லாம் ஆண்பிள்ளைகளாக பிறந்தது என்பது கற்பனை கூட செய்யமுடியாத ஒரு நிகழ்வு ஆகும். அந்த முப்பத்திரண்டில் மூத்தவன் தான் விஜயன் ஆகும். இவனைத்தான் சிங்கள இனத்தின் முதல் குடிமகனாக மகாவம்சம் பெருமையுடன் கூறுகிறது. அதுவும் புத்த பெருமான் தேர்ந்து எடுத்த ஒருவன் என்று மகுடம் சூட்டுகிறது! இப்ப என் மனதில் தோன்றுவது, புத்தருக்கு விஜயனிலும் அவனின் கூட்டாளிகளிடமும் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருக்குது என்றால், ஏன் அவர்கள் இலங்கையில் அரசாட்சியை ஏற்படுத்திய பொழுது, புத்த மதத்தினராக இருக்கவில்லை? மற்றது, அவர்கள் இலங்கையை அடைந்த கையோடு, இயக்கர்களிடையே தான் அவர்களின் முதல் இலங்கை வாழ்வு தொடங்குகிறது. ஆனால் இந்த இயக்கர்களைத் தான் ஏற்கனவே புத்தர் தன் முதல் வருகையில் பயமுறுத்தி, இங்கு வாழ தகுதி அற்றவர்கள் என துரத்தி விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்படி தகுதி அற்றவர்களை மீண்டும் வரவழைத்து, தான் தேர்ந்து எடுத்த, பெருமைமிக்க விஜயன் மற்றும் அவனின் கூட்டாளிகளை சந்திக்க விடுவாரா? அதுமட்டும் அல்ல, புத்தருடன் மிகவும் நட்பாக ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த நாகர்களை ஏன் விஜயனும் கூட்டாளிகளும் சந்திக்கவில்லை. நாகர்களின் வேண்டுகோளை ஏற்று இரண்டாம் தடவையாக நாகர்களை மூன்றாம் வருகையில் பிரத்தியேகமாக சந்தித்தது என்னவாச்சு? அவர்களை மறந்து விட்டாரா ? மற்றது மகாவம்சத்தின் பிந்திய அத்தியாயத்தில் தான், புத்த மதம், விஜயனின் அரசாட்சிக்கு [கி மு 543 - கி மு 505] பிறகு ஏழாவது மன்னனான தேவநம்பிய தீசன் அரசாட்சியில் [கி மு 307 - கி மு 267] இலங்கைக்கு, கிட்ட தட்ட இருநூற்று நாற்பது ஆண்டுகளின் பின், அசோகனின் மகனினுடாக அல்லது தூதுவருக்கூடாக இலங்கைக்கு அறிமுகம் செய்யப் பட்டது என்று கூறுகிறது? அது மட்டும் அல்ல, புத்தமதத்தை உலகெங்கும் பரப்பியதும் அசோகனே! சிங்களம் என்ற இனம் ஒன்று தொடங்குவதற்கு ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்தான் என்பதைத் தவிர, இதில் விஜயனின் பங்கு என்னவென்று புரியவில்லை? அசோகனின் உற்ற நண்பனான தேவநம்பிய தீசன் அல்லது தீசன் இலங்கையை ஆளும் காலத்தில், புத்த சமயப்பரப்பாளர் குழுவொன்றை [Buddhist monk missionary] தன் மகனின் தலைமையில் அங்கு அனுப்பினான் என்கிறது மகாவம்சம். இந்த தீசன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்றும், இவையனைத்தும் தீசனின் பெருமையால் நிகழ்ந்தவை என்றும், இவ்வற்றை கண்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து. ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ் விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதியுள்ளவர்கள் அல்ல. எனவே இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்றான் என்றும் பதினோராம் அத்தியாயம், 'தேவநம்பிய தீசன் பட்டாபிஷேகம்' [ Chapter XI / The Consecrating Of Devanampiyatissa] கூறுகிறது. மேலும் பதின்மூன்றாவது அத்தியாயம் 'மஹிந்தர் வருகையில்' [Chapter XIII / The Coming Of Mahinda], இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அதைத் தொடர்ந்து, பதிநான்காவது அத்தியாயம் 'தலைநகர் புகுதலில்' [Chapter XIV / The Entry Into The Capital], அரசனை [தீசனை] சோதிப்பதற்காக மஹிந்த தேரர் அவனை சூட்சுமமான கேள்வி கேட்டார். கேட்கக் கேட்க பல கேள்விகளுக்கும் அவன் பதிலளித்தான் என்கிறது. இப்ப நான் உங்களைக் கேட்க விரும்புவது, புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட, விஜயன் வரும் பொழுது, அங்கு ஒரு அதிசயமும் நடைபெறவில்லை, மாறாக உயர்குலம் அற்ற இயக்கர் பெண்ணை மணக்கும் சூழ்நிலைக்கு தள்ளப் படுகிறான். பின் அவன் தன் மனைவியையும் பிள்ளைகளையும், துரத்திவிட்டு, உயர் குல பாண்டிய தமிழ் இளவரசியை இரண்டாம் தாரமாக அல்லது மூன்றாம் தாரமாக மணக்கிறான், என்றாலும் கடைசி தாரத்துக்கு பிள்ளைகள் இல்லாமல் அவன் சந்ததி இலங்கையை ஆளாமல், முற்றுப் பெறுகிறது. முதல் அல்லது குவேனி பிள்ளைகளை கூட அவன் கூப்பிட முயலவில்லை? சிங்க மிருகத்தின் பேரன் ஆளலாம் என்றால், அந்த பேரன் - விஜயன் மற்றும் யட்சினி அல்லது யட்சி (Yakshini) அரசி குவேனிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு என்ன குறை ? அப்படி என்றால் ஏன் அவனை புத்தர் தேர்ந்தெடுத்தார் ? இரண்டாவதாக, இந்திரன், மிகச் சிறந்தவரான மஹிந்த தேரரிடம் வந்து இலங்கையை மாற்றப் புறப்படுங்கள். சம்புத்தராலும் இது ஏற்கனவே உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும் என்கிறான். அப்படி என்றால் புத்தர் தன் முதல் தெரிவான விஜயனில் தடுமாறி, இரண்டாவது தெரிவை இருநூறுக்கு சற்று மேற்பட்ட ஆண்டுகளின் பின் காலம் தாழ்த்தி செய்தாரா ? மூன்றாவதாக, அசோகன் தீசனின் நட்பிலும், அவன் ஆளும் இலங்கையிலும் மிகவும் அக்கறை கொண்டு மஹிந்த தேரரை அனுப்பினார் என்கிறது, அப்படி என்றால், எதற்காக, மஹிந்தர் வந்து இலங்கையில் இறங்கும் பொழுது, தீசன் சோதிக்கப் பட்டான்? எவராவது இதை வாசிக்கும் பொழுது, அவர்களின் மனதில் கட்டாயம் அசோகன், தீசனின் நட்பிலும், மற்றும் ஒருவரை ஒருவர் எவ்வளவுதூரம் புரிந்து வைத்து இருந்தார்கள் என்பதிலும் ஒரு ஐயப்பாடு ஏற்படும் என்றும் தோன்றுகிறது? [When one reads this portion of the Mahavamsa, the question arises how far Asoka and Tissa could be friends and how much Asoka knew of Tissa] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 25 தொடரும்
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]
நன்றி
-
"வன்முறைகளில் வனிதையர்"
நன்றி
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]
நன்றி
-
"வன்முறைகளில் வனிதையர்"
'விதியினை நகுவன, அயில் விழி; பிடியின் கதியினை நகுவன, அவர் நடை; கமலப் பொதியினை நகுவன, புணர் முலை, கலை வாழ் மதியினை நகுவன, வனிதையர் வதனம்.' [கம்ப இராமாயணம்] அவர்களின் விழிகள் விதியை பார்த்து சிரிக்கும். அந்த பெண்களின் நடை பெண் யானையின் நடையை பார்த்து சிரிக்கும்.அந்த பெண்களின் மார்புகள் தாமரை மொக்குகளை பார்த்து சிரிக்கும்.வானில் உள்ள நிலவை பழிக்கும் அவர்கள் முகம். நாட்டின் சிறப்பை, வளத்தை சொல்ல வந்த கம்பன் அந்த ஊரில் பெண்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா ? என்றும் சொல்லிவைத்தார் [வனிதை - பெண்] நன்றி
-
"வன்முறைகளில் வனிதையர்"
"வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக் குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்வுகள் எமக்கு எடுத்து காட்டுவது, வன்முறைக்கு உள்ளாகும் வனிதையர்கள், அங்கு பெண் உத்தியோகத்தர் இருந்தால் தங்கள் முறைப்பாடுகளை எந்த தயக்கமும் இன்றி முழுமையாக வெளிப்படுத்தி, அதை கண்டுபிடித்து, அதில் ஈடுபட்டவருக்கு தண்டனை கொடுக்க, காவல் துறையுடன் ஒத்துழைப்பார்கள் என்பது ஆகும். அது மட்டும் அல்ல, காவல் துறை அமைப்பில் சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதைவிட, உயரடுக்கு மக்களுக்கே இன்னும் கூடுதலான கவனம் செலுத்துகிறார்கள் என்பதும் ஆகும். உதாரணமாக அண்மையில் வெளிவந்த 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரு எடுத்து காட்டு. இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஆண், பெண் இருபாலரும் சமமாக குடும்பத்தில் நடத்தப் படாமையும் இப்படியான வன்முறைக்கு காரணமாக அமைகிறது என்றும் கூறலாம். உதாரணமாக, எல்லா சமயங்களும் மக்களுக்கு உண்மையையும், நேர்மையையுமே போதிப்பதாகவும் அவை சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டாலும், அங்கு கூர்ந்து கவனித்தால், இவைகளுக்கு மாறான பல உண்மைகள் தெரியவரும். சமுதாய அமைப்பிலும் அதன் தாக்கம் வெளிப்படையாகும். "யாயே, கண்ணினும் கடுங் காதலளே எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’ யாமே, ...... " என்று அகநானூறு 12 கூறினாலும், இன்று அந்த நிலை காண்பது அரிது. தமிழன் வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகி விட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பின் சமயங்கள் தலை தூக்க, வஞ்சகமாக புராணங்களை மற்றும் சில கட்டுப்பாடுகளை, கோட்ப்பாடுகளை புகுத்தியது பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக முதலில் அமைந்தது எனலாம்? உதாரணமாக, விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள்? அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம் [ஜலந்தர்-பிருந்தா [துளசி] கதை]. இந்த கற்பழிப்பை எவரும் கண்டிக்கவும் இல்லை? இப்படி பல பல. இவையை, இந்த புராணங்களை இன்னும் போற்றி வாழும் இந்த சமுதாயத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் ? இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து இன்னும் அங்கீகரிக்கின்றோம்? இப்படி அங்கு நடக்கிற கேவலங்களை கேட்டு கேட்டு காது பழகிவிட்டது. இப்படி பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் ஏராளம். உதாரணமாக இன்றைய நவீன காலத்தில் கூட, 'உயிரே போனாலும் பெண்களை விட மாட்டோம்' என்னும் சபரிமலை பக்தர்களை இன்னும் காண்கிறோம்? இந்த முள்ளுச்செடி விதைகளை காலம் காலமாக விதைத்துக் கொண்டு அவை வளர்ந்து குத்துகிறது என இடும் முழக்கம் நியாயமானதா? இவற்றை எல்லாம் ஊக்குவித்து வளர்த்துக் கொண்டு அதன் பலன்களை கண்டு பொங்கி எழுவதில் என்ன பயன்? வன்முறைகளில் வனிதையர்கள் அவதிப்படுவதற்கு காரணம் அவர்களே என்று கூறும் பல ஆண்களை இன்று காண்கிறோம். அவர்களுடன் சேர்ந்து தலையாட்டும் பெண்களும் உள்ளனர். உதாரணமாக பெண்கள் ஆர்வத்தைத்துாண்டுகிற உடை உடுகிறார்கள் என்பது அவர்களின் குற்றச் சாட்டு? நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில், தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள். வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால் குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள் விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன் ஆக மொத்தத்தில்.. வெறுமனவே ஆண்களை திட்டுவதாலோ.. பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைப்பதாலோ. இவற்றிற்கு தீர்வு வராது. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு சகஜமாகப் பழகி, தவறுகள் செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், நிச்சயம் அதுவே, மனித வாழ்க்கை சிறக்க உதவும் ! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
-
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை]
" பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? " [சிறுகதை] ஒர் அரசாங்கம் அல்லது பிறர் ஒருவரைச் சிறைப் படுத்துதல், தடுத்து வைத்தல், ஆட்கடத்தல அல்லது வேறு விதத்தில் ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்தல் ஆகிய செயற்பாடுகள் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் எனப்படுகிறது. காணாமல்போகச் செய்த பின், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தல் அல்லது காணாமல போனோர் பற்றிய விபரத்தை மறைத்தல். இது (வலுக்கட்டாயமாக) காணாமல் போகச் செய்தலாகும். பல நாடுகளின் குற்றவியல தொகுப்பில் இதனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அந்த நாடுகளில் இதனை சட்டத்திற்கு மாறாக தடுத்துவைத்தல் அல்லது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட கைதும் தடுத்துவைப்பும என்று வழக்குத்தொடர முடியும் . அந்த ரீதியில் தான் இலங்கையில் 19/05/2009 பின் மக்களின் போராட்டம் தீவீரம் அடைந்தது. ஆனால், இலங்கையில் நீடித்த மற்றும் அழிவுகரமான உள்நாட்டுப் போருக்குப் பிறகு, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளத்தை ஏற்படுத்தி, பல தசாப்தங்களாக நீடித்த யுத்தம், தேசத்தின் மீது ஏற்படுத்திய வடுக்களை கலைவதற்குப் பதிலாக அது நீடிப்பதைத் தான் காண முடிந்தது. உதாரணமாக போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் கூட வலுக்கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டே இருந்தன இந்த சூழலில் தான் சர்வதேச அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தான் விசாரணைகளை ஆரம்பிப்பதாக ஆரம்பித்தது. எனவே, திருமண வாழ்க்கைக்குள் பிரவேசிக்காது, தனிமையில் வாழ்ந்து 11 வருடங்களாக தனது தாயை தேடும் போராட்டத்தை முன்னெடுத்து வரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த, தமிழ்செல்வி, இறுதி யுத்தத்தில் தனது தாய் தெய்வானையை இராணுவம் விசாரணைக்கு என கூட்டிச் சென்றதாகவும், அதன் பின் இன்றுவரை திரும்பி வரவில்லை என்றும், அதற்கான பதிலை இராணுவம் அல்லது அரசு தராமல் காலம் கடத்தி வருவதாகவும், இன்று தன் தாய் காணாமல்போனோர் பட்டியலில் உள்ளடங்கி விட்டதாகவும், எனவே தனக்கு வெளிப்படையான மறுமொழியுடன், நீதி வழங்கப்பட வேண்டும் என்று, 2020 ஆண்டு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30-ஆம் தேதி நீதி மன்றத்தில் முறையிட்டார். முதல் நாள் வழக்கில் தமிழ்செல்வி, நீதிமன்றத்தில் எழும்பி "கனம் தங்கிய நீதிபதி அவர்களே என் அம்மா காணாமல் போகவில்லை! காணாமல் ஆக்கப்பட்டார்" என்று தனது முறையீட்டை கூறத்தொடங்கினார். விவிலியம், தொடக்க நூல் 4: 9 ஒரு எடுத்துக்காட்டாக எடுத்து "ஆண்டவர், காயினிடம், 'உன் சகோதரன் ஆபேல் எங்கே?' என்று கேட்டார். அதற்கு அவன் 'எனக்குத் தெரியாது. நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியோ?' என்றான். காயினின் மறுமொழியை ஆண்டவர் ஏற்கவில்லை. ஆபேலின் ரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து கதறிக்கொண்டிருப்பதாக அவர் சொன்னார். காயின் ஆபேலைக் கொன்று புதைத்துவிட்டான் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ஆதாமும் ஏவாளும்தான் உலகின் ஆதி மாந்தர்கள் என்பதை நம்புகிறவர்களுக்கு, காணாமற்போன முதல் மாந்தன் ஆபேல் என்பதும் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் அவன் காணாமல் போகவில்லை, காணாமலாக்கப்பட்டான். தொலைந்து போகவில்லை, தொலைத்துக் கட்டப்பட்டான். ஆபேலின் மறைவுக்குப் பொறுப்புக் கூறும்படி ஆண்டவர், காயினைக் கேட்டார். நாமறிந்த முதல் ‘பொறுப்புக் கூறல்’ (ACCOUNTABILITY) கோரிக்கை இதுவே கனம் நீதிபதி அவர்களே" என்று தன் வாதத்தை தொடங்கினார். "இப்போது ... நம் காலத்தில் … இலங்கைத் தீவுநாட்டில் “என் கணவர் எங்கே?” என்று ஒரு மனைவி கேட்கிறார். “என் மகன் எங்கே?” என்று ஒரு தாய் கேட்கிறார். எங்கள் தலைவர்களும் தளபதிகளும் அரசியல் அறிஞர்களும் கலைஞர்களும் வீரர்களும் எங்கே .. எங்கே.. என்று ஈழத் தமிழ் மக்கள் கேட்கிறார்கள். இந்தக் கேள்விகளுக்கு முடிவே இல்லை போலும். இவற்றில் ஒரே ஒரு கேள்விக்குக்கூட “ஓ, அவரா, இதோ இங்கே இருக்கிறார்” என்று விடை கிடைக்கவில்லை. ஆக அவர்களின் சாத்வீக போராட்டம் தொடர்ந்து தினமும் நடைபெறுகிறது கனம் நீதிபதி அவர்களே. அந்த வரிசையில் தான், எங்கள் வீடு வந்து, என் அம்மாவை கூடிச் சென்ற இராணுவம் இன்னும் என் கேள்விக்கு முடிவு தராமல் இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது. சிலோனாக இருந்த இலங்கைத் தீவு 1972இல் சிறிலங்கா குடியரசான பிறகுதான் காணாமல் ஆக்கும் நடைமுறைகள் இங்கு பரவலாயின. அதில் என் அம்மாவும் இப்ப ஒருவர், கனம் தங்கிய நீதிபதி அவர்களே" தமிழ் செல்வியால் தொடர்ந்து வாதாட முடியாமல் கண்ணீர் இரு கன்னங்களாலும் கீழே ஒழுகி அவள் மார்பையும் நனைத்தது. கொஞ்ச நேரம் அவள் அமைதியாக இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு கண்ணகியின் ஞாபகம் வந்தது. "வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே" என்ற கண்ணகியின் வழக்குரை பாணியை நினைத்தால், உடனே எழும்பி "காணாமல் ஆக்கப்பட்டவர்களது குருதியின் குரல் – ஆபேல் சிந்திய குருதியின் குரலைப் போலவே, கனம் தங்கிய நீதிபதி அவர்களே - மண்ணிலிருந்து கதறிக் கொண்டே இருக்கும். உலகத்தின் உளச்சான்றுக்குச் செவி இருந்தால் அந்தக் குரல் கேட்கும். நீதி கிடைக்கும்!, உங்களை நம்புகிறேன்!!" அவள் சுருக்கமாக தன் முதல் வாதத்தை நீதிமன்றத்துக்கு முன் வைத்தாள். ஆனால் அரசு மற்றும் இராணுவத்தின் சார்பில் இந்த காணாமல் போகும் போது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்தவர் தனது சாட்சியை முன் வைத்தார். "போரின் போது சரணடைந்தர்கள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் உரிய முறையில் செயலாக்கப்பட்டதாக" அவர் கூறி, மேலும் "யுத்தத்தின் இறுதியிலும் அதன் பின்னும் கூட , நாங்கள் ஒரு நல்ல அமைப்பைக் கொண்டிருந்தோம், அங்கு நாங்கள் அழகான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தோம். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடக்கவில்லை என்று நான் 100 சதவீதம் உறுதியாக நம்புகிறேன். பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அல்லது விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட மக்கள் திரும்பி வருவதில்லை - அது நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்ட கதை,” என்று அவர் ஒரு கேலி புன்னகையுடன் கூறினார். அதன் பின், காணாமல் போனோர் அலுவலகம் சார்பில் சாட்சி அளித்த ஒரு உயர் அதிகாரி, அங்கு தடயவியல் நிபுணர்கள், சாட்சிகளைப் பாதுகாக்கும் பிரிவுகள் மற்றும் விசாரணை அதிகாரங்களைக் கொண்டு இருந்தாலும் அதற்கு குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அதிகாரம் இல்லை என்றும் அலுவலகம் சந்தேக நபர்களை வழக்கறிஞரிடம் மட்டுமே அனுப்ப முடியும் என்றும் கூறினார். அதை தொடர்ந்து தமிழ்செல்வி மீண்டும் சாட்சி கூண்டில் ஏறினாள். அவள் கையில் கண்ணகி வைத்திருந்த அந்த உடையாத மற்ற சலங்கை இருக்கவில்லை, ஆனால், அவள் நடுங்கும் கைகளில் நான்கு மங்கலான புகைப்படங்கள் இருந்தன. அவள் கண்ணீர் இன்னும் ஒழுகிக்கொண்டே இருந்தது. "2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர், வீட்டிற்கு வந்த இராணுவ புலன் விசாரணை குழு ஒன்று தான் என் அம்மாவை, வலுக்கட்டாயமாக பேருந்து ஒன்றில் மற்றும் பலருடன் ஏற்றினர். நான் எனது அம்மாவுடன் பேருந்தில் செல்ல அனுமதிக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டார்கள் ” என்று கூறி அதற்கு சான்றாக அந்த நாலு படங்களையும் நீதிபதியிடம் கொடுத்தார். இதை எதிர்பாராத அரச சாட்சிகள் கொஞ்சம் தடுமாறினார்கள். "நான் உங்களிடம் பணிவாக கேட்பது என் அம்மா கொல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? யார் இதற்கு பொறுப்பு? அதை விட்டு நட்டஈடு அல்ல" அவள் உறுதியாக கூறினாள். இதைத்தொடர்ந்து, மேலும் சர்வதேச அழுத்தத்தின் கீழும், இதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தவும், காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விசாரணைகளை நீதிமன்றம் ஆரம்பித்தது. இருப்பினும், உண்மையைத் தேடுவதற்கான உண்மையான முயற்சிகளுக்கு மத்தியில், ஒரு மோசமான சதி வெளிப்பட்டது. அங்கே ஒரு பிரிவு, மறைமுக நோக்கங்களால் உந்தப்பட்டு, பழியை மாற்றுவதற்கும், ஏதேனும் சாத்தியமான தவறுகளில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்கும் ஆதாரங்களை உருவாக்க முடிவு செய்தது. போலியான சாட்சியங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்ற வடிவங்களை சோடித்தது. அதற்கு வடக்கு, கிழக்கு சில தமிழ் தலைவர்களையும் புத்திஜீவிகளையும் கூட விலை கொடுத்து வாங்கியது. இந்த மோசடி மற்றும் பொய் சாட்சிகள், அதிகாரத்தின் துணையுடன் தாண்டவம் ஆடியது. "விரி காஞ்சித் தாதாடி இருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சாது அவர் தீமை மறைப்பென்மன்; மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி, எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?" காஞ்சிப் பூ மலர்ந்தது. குயில்கள் கூவுகின்றன. இந்தக் காலத்தில் பிரிந்திருக்கலாமா? நானும் மறைக்கத்தான் பார்க்கிறேன் முடிய வில்லையே! 'பொய் சாட்சி' சொன்னவன் வந்து கீழே நின்ற மரம் பட்டுப் போனது போல இருக்கிறதே என் நிலை ! என்கிறாள் ஒரு சங்க தமிழிச்சி! அப்படித்தான் இந்த 'பொய் சாட்சி'கள் அவள் மனதில் ஓரளவாவது துளிர்த்து இருந்த நம்பிக்கையை பட்டுப் போக செய்துவிட்டது. ‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது" என்ற பிளேட்டோ வின் வசனம் அவள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்ப நீதி மன்றத்தை நாடுவதை அவள் நிறுத்திவிட்டாள். அதிகாரத்தில் இருக்கும் பொய் சாட்சி க்கு முன் அவள் எங்கே ? நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்"
[போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும் 18 வயது ரவியும், சாதாரண வகுப்பு பயிலும் 16 வயது மாயாவும் தங்கள் குடும்பத்தின் தலைவிதியைச் சுற்றியுள்ள மர்மத்தை அறிய, அவிழ்க்க உறுதியாக இருந்தனர். அவர்களின் கொஞ்ச கொஞ்ச நினைவுகளுடனும் மற்றும் அவர்களுக்கு இன்று தெரிந்த மூத்தவர்களால் சொல்லப்பட்ட அல்லது சமூக ஊடங்களுக் கூடாக அறிந்த செய்திகள் மற்றும் கதைகளுடனும், அவ்வற்றை தங்களின் தேடுதலுக்கான ஆயுதமாக ஏந்திய அவர்கள், நம்பிக்கை மற்றும் பொறுமையுடன் 'வேரைத் தேடும் தளிர்களாக', தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அவர்களின் பயணம் பல இடையூறுகளை மற்றும் வசதியின்மைகளை சந்திக்க நேரிட்டாலும், ரவியும் மாயாவும் தங்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கக்கூடிய பல அன்பான உள்ளங்களின் ஆதரவுகளையும் பெற்றனர். அவர்கள் முல்லைத்தீவில் கிராமம் கிராமமாகச் சென்ற போது, உள்ளூர் கிராமவாசிகளைச் சந்தித்து கதைத்தனர். அவர்கள் மீள்தன்மை மற்றும் உயிர்வாழ்வதற்கான கதைகளைப் பகிர்ந்து அவர்களை சோர்வில் இருந்தும் கவலையிலும் இருந்தும் மீட்டு எடுக்க பலவகையில் முயற்சித்தனர். சிலர் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கினர், மற்றவர்கள் தங்கள் குடும்ப வரலாற்றில் தாம் அனுபவித்த சொல்லமுடியாத துயரங்களை, கொடுமைகளை பகிர்ந்தனர். அதேவேளை அந்த இறுதி மே மாத நாளில் உயிர் பிழைத்தவர்கள், தற்காலிக அகதிகள் முகாம்களில், அவர்களைப் போன்ற துயரங்களைச் சந்தித்தவர்களுடன் அவர்கள் நட்புறவைக் கண்டனர். அவர்களுடன் தங்களின் இழப்பு மற்றும் வேர்களைத் தேடும் நம்பிக்கையின் கதைகளை பரிமாறிக் கொண்டனர், ஒருவருக் கொருவர் அங்கு ஆறுதல் கண்டனர். முல்லைத்தீவில் உள்ள முதியவர்களுடனும் அல்லது அந்த நேரம் எதோ ஒரு வகையில் அங்கு பணியாற்றியவர்களுடனும், தங்கள் வேர்களுக்கான பதில்களைத் தேடுவதில் முனைப்பாக இருந்தார்கள். பலவேளைகளில் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கா விட்டாலும், ஓர் இருவரிடம் இருந்து தங்கள் குடும்பத்தின் சில ஆரம்ப தடயங்களை பெற்றனர். அது அவர்களின் முதல் வெற்றியும் மகிழ்ச்சியும் ஆகும், இந்த சந்திப்புகள் மூலம், ரவியும் மாயாவும் தங்கள் பயணம் தங்களுடையது என்றாலும், அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை அறிந்து கொண்டனர். ஏனென்றால், வழியில் சந்தித்தவர்களின் இதயங்களில், அவர்கள் தொடர்வதற்கான வலிமையையும் ஆதரவையும் கண்டார்கள். ஒவ்வொரு தங்கள் அடியிலும், அவர்கள் தங்கள் வேர்களாகிய, பெற்றோர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணரும் முயற்சியில் நெருங்கி நெருங்கி வந்தனர். சமூக ஊடங்களும் அவர்களுக்கு துணை இருந்தனர். இதனால் சிலவேளை அரச அமைப்புகளில் இருந்தும் சில தடைகளும் பயமுறுத்தலும் அவர்களுக்கு நேர்ந்தது. ரவியும் மாயாவும் ஆகிய தளிர்கள், தாங்கள் இது வரை பெற்ற தரவுகளின் அடிப்படையில், வேரைத் தேடும் முதல் முயற்சியாக அவர்களின் குடும்ப வீட்டின் இடிபாடுகள் நிறைந்த, தாம் பிறந்த மண்ணை கண்டுபிடித்தனர், அது ஒரு காலத்தில் அழகாக வசதியாக இருந்த வீட்டின் மிஞ்சிய பகுதிகளாகும், இன்று பற்றைகளும் புதருமாக அதைச் சூழ்ந்து இருந்தது. இடிபாடுகளுக்கு மத்தியில், அவர்கள் தங்கள் கடந்த காலத்தின் சில தடயங்களைக், அவர்களின் அம்மா நேசித்த உடைந்த தேநீர் கோப்பை மற்றும் ஒரு காலத்தில் தங்கள் தந்தையின் விருப்பமான நாற்காலியை அலங்கரித்த ஒரு கிழிந்த துணி, ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். இராணுவம் இந்தப்பகுதியை பிடித்து, தடை செய்யத பகுதியாக, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அண்மையில் தான் விட்டு விட்டு சென்றது என அறிந்தார்கள். அவர்கள் வீட்டில் ஒரு றங்குப் பெட்டி இருந்தது ரவிக்கு இன்னும் ஞாபகத்தில் இருந்தது. அது இப்போதும் எங்கேயாவது இந்த உடைந்த இடிபாடுகளுக்கிடையில் இருக்கும் என்று அவன் நினைத்தான். அவனின் தந்தை அதை அடிக்கடி தூசி தட்டிவிட்டுத் திறப்பார். உள்ளுக்குள் அம்மாவின் கூறைச் சீலை, அம்மா, அப்பாவினது சாதக ஓலை, தங்களது சாதகக் கொப்பிகள் என்பவற்றுக்கு அடியில் ஒரு பிறவுண் பேப்பரினால் செய்த பையிற்குள் இருந்து சில காணி உறுதிகளை அவனின் அப்பா எடுத்துத் தூசிதட்டுவார். ஆனால் தூசி வராது. அடிக்கடி தூசிதட்டினால் எப்படி தூசி இருக்கும்? இருந்தும் திரும்பவும் தூசி தட்டுவார். பிறகு சில பக்கங்களை வாசிப்பார். பனை வடலி பதினான்கு பரப்பு, தோட்டக் காணி பத்துப் பரப்பு, தென்னங் காணி இருபது பரப்பு என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பழையபடி அடுக்கி வைப்பார். பூச்சிகள் வராமலிருக்க நப்தலின் போட்டு றங்குப் பெட்டியை மூடி கவனமாக வைப்பார் என்பது அவன் மனத்தில் நிழற் படமாக ஓடியது. அந்த நேரம் ஒரு முதியவர் ஒரு பழைய துவிச் சக்கர வண்டியில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து அங்கு இவர்களைக் கண்டு வந்தார். அவரைக் கண்டதும் ரவிக்கு, முன்பு அவன் சிறுவர் பாடசாலை [nursery] போகும் காலத்தில், அவனின் ஊரைச் சேர்ந்த கந்தையா என்ற ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அவர் அப்பொழுது தினம் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். பின் கொஞ்சம் பொறுத்து மதியத்துக்கு முன், பின்னுக்கு வாழைக்குலையோ, வெங்காயப்பிடியோ, அல்லது செத்தல் மிளகாய் பையோ அந்த அந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி பொருட்களுடன் போவார். எனவே, அவன் அவரை, நீங்கள் கந்தையா தாத்தாவை என்று கேட்க, ஆமாம், நீ ரவியோ ? என்று அவரும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். கந்தையா, தான் உறுதி, புகைப்பட ஆல்பம் மற்றும் முக்கிய தப்பிய ஆவணங்களும் பெறுமதியான சில பொருட்களும் எடுத்து பத்திரமாக வைத்திருப்பதாக கூறி, உடனடியாகவே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். என்றாலும் அம்மா, அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்கிறார் ரவியும் மாயாவும் மகிழ்ச்சியின் தருணங்களைக் காட்டும் அந்த புகைப்பட ஆல்பத்தை ஆவலாக வாங்கி பார்த்தார்கள். அதில் அம்மா, அப்பா மற்றும் தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு, அவர்கள் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஒழுகியது. ஒவ்வொரு கண்டு பிடிப்பும் தங்கள் அன்புக்குரிய அப்பா, அம்மாவைக் கண்டுபிடிப்பதற்கான உறுதியைத் மேலும் மேலும் அவர்களுக்குத் தூண்டியது. அவர்களின் தேடலானது அவர்களை தற்காலிக அகதி முகாம்களுக்கும் அழைத்துச் சென்றது. அங்கே, அவர்கள் இழப்பு மற்றும் துயரங்களுடன் உயிர்வாழும் ஏனையவர்களின் கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். சிலர் தங்கள் பெற்றோரை படையினரால் அழைத்துச் சென்றதை நினைவு கூர்ந்தனர், மற்றவர்கள் கொடிய குண்டுவெடிப்புகளிலிருந்து அதிசயமாக தப்பித்ததை விவரித்தார்கள். ஒவ்வொரு கதையும் பல உண்மைகளை வெளிப்படுத்தியது, ஆனால் அவர்களின் சொந்த குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு அது அவர்களை நெருங்கவில்லை. மனம் தளராமல், ரவியும் மாயாவும் முல்லைத்தீவின் சிக்கலான குழப்பமான பாதைகள் நிறைந்த தெருக்களில் பயணித்து, ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அவர்களின் இதயங்கள் துக்கத்தால் பாரமாக இருந்தாலும், நம்பிக்கையை கைவிட வில்லை. நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியபோது, அவர்களின் தேடல் ஒரு பயனற்றதாகத் அவர்களுக்குத் தோன்றியது, மேலும் அவநம்பிக்கை அவர்களைத் தின்றுவிடும் போல இருந்தது, அத்தனை இடையூறுகள் அவர்களுக்கு வந்தது. அதனால் அவர்கள் சோர்வு அடைந்து விட்டுக் கொடுக்கும் விளிம்பில் இருந்தபோது, ஒரு திடீர் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியது. ஒரு நாள் ரவியும் மாயாவும் ஒரு கோவிலில் அடைக்கலம் தேடும்போது வயதான துறவியை அங்கு கண்டனர். அவர் அமைதியான தியானத்தில் அப்பொழுது அமர்ந்தார், ஒளிரும் கற்பூர வெளிச்சத்தில் அவரது அமைதியான நடத்தையால் கவரப்பட்ட அவர்கள் அவரை எச்சரிக்கையுடன், மெதுவாக அணுகினர். ரவி: "மன்னிக்கவும் குரு. நாங்கள் எங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களை தேடி சில வாரங்களாகத் திரிகிறோம். எங்களுக்கு ஏதாவது அறிவுரை இருக்கிறதா?" என்றான். வயதான துறவி: (கண்களைத் திறந்து, மென்மையான புன்னகையுடன் அவர்களைப் பார்த்து) "ஆ, உண்மையான பற்றுடன் தேடும் குழந்தைகளே, . என்னுடன் உட்கார்ந்து, வேர்கள் மற்றும் தளிர்கள் பற்றி பேசுவோம்" என்கிறார். மாயா: (ஆர்வத்துடன்) "ஐயா, வேர்கள் மற்றும் தளிர்கள்?" ஆச்சரியத்துடன் துறவியை பார்த்தாள். முதிய துறவி: (ஆமா என்று தலையசைத்து) "ஆம், என் குழந்தைகளே. தளிர்கள் வளர பூமியில் இருந்து ஊட்டத்தை தேடுவது போல, உங்கள் குடும்ப மரத்தின் வேர்களை நீங்கள் தேட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பயணம் நீண்ட மற்றும் கடினமானதாக இருக்கலாம்? சோதனைகள் மற்றும் இன்னல்கள் நிறைந்ததாக இருக்கலாம்? இருப்பினும், உங்கள் இந்த இருண்ட காலங்களில், உங்கள் அன்பு மற்றும் உறுதி உங்களை வழிநடத்தும்." என்றார் ரவி: (உத்வேகத்துடன்) "நன்றி ஐயா. கட்டாயம் இனி என்ன தடைகள் வந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்." என்றான் முதிய துறவி: (ஒரு மென்மையான தொடுதலால் அவர்களை ஆசீர்வதித்து) "தைரியத்துடனும் அன்புடனும் செல்லுங்கள், என் குழந்தைகளே. நீங்கள் தேடும் பதில்கள் நீங்கள் நினைப்பதை விட நெருக்கமாக இருக்கலாம்? விரைவில் அது வரட்டும்" என்றார். துறவியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, ரவியும் மாயாவும் தங்கள் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர், விரக்தியுடன் அல்ல, ஆனால் உறுதியையும் அன்பையும் ஆயுதம் ஏந்தி, ஒன்றாக, அவர்கள் உள்ளூர் கோவிலின் காப்பகங்களைத் தேடி, பண்டைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பதிவுககளில் தங்கள் பெற்றோரின் உறவினர்கள் பற்றிய தடயங்களைத் தேடினர். பின்னர், அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவர்கள் தங்கள் மூதாதையர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு மங்கலான காகிதத் குறிப்பில் தடுமாறினர், அது காலப்போக்கில் மையில் பொறிக்கப்பட்டது. நடுங்கும் கைகளுடன், அவர்கள் தங்கள் குடும்ப மரத்தின் கோடுகளைக் கண்டுபிடித்தனர், ஒவ்வொரு பெயரும் அவர்களின் இரத்த வழி உறவிற்கு சான்றாக இருந்தது அவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது. அந்த இரத்த உறவுகளின் பெயர்களுக்கு மத்தியில், அவர்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் ஒளியைக் கண்டனர். ஒரு தொலைதூர உறவினர், போரில் தப்பிப்பிழைத்து இப்போது பக்கத்து கிராமத்தில் வசிக்கிறார் என அறிந்தனர். எனவே புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், நீண்ட காலமாக இழந்த இந்த உறவினரைக் கண்டுபிடிக்க அவர்கள் புறப்பட்டனர், அவர்களின் இதயங்கள் எதிர்பார்ப்புகளால் நிறைந்தன. பல மாதங்கள் தேடுதலுக்குப் பிறகு, ரவியும் மாயாவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தங்கள் வயதான அத்தையைக் கண்டுபிடித்தனர். உணர்ச்சியில் மூழ்கிய அவர்கள் அவளை இறுகத் தழுவிக் கொண்டனர், கண்ணீர் வழிந்தோடியது. அத்தை: (அழுகையுடன்) "என் அன்பான குழந்தைகளே, உங்களை கண்டத்தில் பெரும் மகிழ்ச்சி" என்று கூறி அவர்களை அன்புடன் அணைத்தார். ரவி: "அத்தை, நாங்கள் உங்களை மிகவும் மிஸ் பண்ணி விட்டோம். எங்கள் பெற்றோரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று மிக ஆவலுடன் கேட்டான் அத்தை: (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) "உங்கள் பெற்றோர் ... அவர்கள் தைரியமான ஆத்மாக்கள், என் அன்புக்கு என்றும் உரியவர்கள். அந்த இருண்ட நாட்களில், எங்கள் குடும்பத்தைக் காக்க பல வழிகளில் முன்னின்று செயல்பட்டார்கள். ஆனால் ஐயோ, அவை மிக விரைவில் எங்களிடமிருந்து பிரிக்கப் பட்டன." என்றாள். மாயா: (குரல் நடுங்கி) "என்ன நடந்தது? ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்களா?" என்றாள். அத்தை: (சோகத்துடன் தலையசைத்து) "ஆமாம், என் குழந்தை. ஆனால் அவர்களின் தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் உங்களில் வாழ்கிறார்கள் - உங்கள் வலிமை, உங்கள் நெகிழ்ச்சி, உங்கள் அன்பில்." என்றார். ரவி: (மாயாவின் கையை பிடித்துக்கொண்டு) "நாம் அவர்களை மறக்க மாட்டோம் அத்தை. அவர்களின் பாரம்பரியத்தை எப்போதும் எங்களுடன் எடுத்துச் செல்வோம். ஆனால் இப்ப எங்கே எங்கள் அம்மா, அப்பாவை வைத்திருக்கிறார்கள்?" ஆவலுடன் கேட்டான். அத்தை: (அவள் கண்ணீரில் சிரித்துக்கொண்டே) என் குழந்தைகளே, இப்ப அரச நிர்வாகம் தங்களுக்கு தெரியாது என்று கைவிரித்து விட்டார்கள். அவர்களும் வலிந்து காணாமல் போனவர்களின் பட்டியலில் போய்விட்டார்கள்? நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தனியாக இல்லை. எங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நீண்டு, அன்பு மற்றும் இரத்தத்தால் இன்று நாம் ஒன்றாகிவிட்டோம் . இனி ஒன்றாக, எந்த புயலையும் எதிர்கொள்வோம். நியாயமான பதில் வரும் மட்டும்" என்றார். அவர்கள் அதன் பின் அத்தையின் சமையல் அறையில், அடுப்பின் நெருப்புப் பகுதிக்கு கிட்ட அமர்ந்து, தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களைப் பற்றிய அத்தையின் கதைகளைக் கேட்டபோது, ரவியும் மாயாவும் போர்க் காற்றால் தங்கள் வேர்கள் அசைந்திருந்தாலும், அவர்கள் பிடுங்கப்படவில்லை என்பதை உணர்ந்தனர். ஏனென்றால், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில், அவர்கள் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தை இன்னும் சுமந்து கொண்டு இருப்பதைக் உணர்ந்தனர். எனவே, முல்லைத்தீவின் இடிபாடுகளுக்கு மத்தியில், வேரைத் தேடும் இரண்டு தளிர்களாக தங்கள் கடந்த காலத்தை மட்டுமல்ல, நம்பிக்கை, தைரியம் மற்றும் குடும்பத்தின் நீடித்த பந்தம் நிறைந்த எதிர்காலத்தையும் கண்டுபிடித்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!"
"வீழ்ந்தாலும் வித்தாகிடு!" "வீழ்ந்தாலும் வித்தாகிடு மீண்டும் முளைத்திடு வீரம் நிறைந்த தமிழன் நீயடா! வீசும் காற்றின் பக்கம் சாயாதே வீறு கொண்டு எழுந்து நில்லடா!" "தோல்வி கண்டு மனதில் குழம்பாதே தோழன் இருக்கிறான் துணை தர! தோரணம் கட்டி பின்னால் போகாதே தோண்டிப் பார் அவனின் நடத்தையை!" "மாண்டாலும் உன் நோக்கம் வாழனும் மாரி வெள்ளமாய் பரவி ஓடனும்! மானம் கொண்ட தலைமுறை பிறக்கனும் மாட்சிமை கொண்ட மரபு ஓங்கனும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"சமாதானம்" [அந்தாதிக் கவிதை]
"சமாதானம்" [அந்தாதிக் கவிதை] "சமாதானம் வேண்டாமென இலங்கையில் போர் போர் தொடுத்து அப்பாவிகளை கொன்றார்கள்! கொன்று குவித்ததை புத்தபிக்கும் மகிழ்ந்தனர் மகிழவு இதுவாவென புத்தர் தலைகுனிந்தான்!" "தலைகுனிந்து உலகமும் கண் மூடியது மூடிய வீட்டுக்குள்ளும் கற்பை சூறையாடினான்! சூறையாடி உண்மையை புதைத்து தலைவனானான் தலைவன் இன்று போதிக்கிறான் சமாதானம்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்"
நன்றி
-
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"
நன்றி
-
"மன்னிப்பு" [சமாதானம் நிலவ, மன்னிப்பு கேட்பது அவசியம்]
"மன்னிப்பு" [சமாதானம் நிலவ, மன்னிப்பு கேட்பது அவசியம்] "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " [எனது ஒரு பாடலில் இருந்து எட்டு வரிகள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது. மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகு முறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம். எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும். நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும். மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம். மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ? எனவே தான் உண்மையை கண்டறிந்து, கொடூரத்தின் வெளிப்பாட்டை அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் இன்றைய நிலையை ''குஞ்சுகளைக் கண்டால் சொல்லுங்கோ....'' என்ற சிறு கதை மூலம் தீபம் ஆசிரியர், திரு செ. மனுவேந்தன் வெளிப்படுத்துகிறார் [http://www.ttamil.com/2021/07/blog-post_05.html]. பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம் அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும். எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும். இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?. எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. “இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King] ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல. முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள். "மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது. அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது. உதாரணமாக, 'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43) இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில் "உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. [For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க. "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று." [குறள் 152] தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக் கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று. மன்னிப்பு கேட்காதவரிடம் நாம் அமைதியாக சகித்துக்கொண்டு செல்வது சிறப்பாகும். மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். ஆனால் இவற்றைவிடவும் அத்தவறுகளையும் குற்றங்களையும் அறவே மறந்துவிடுவது என்பது சகித்துக்கொள்வதை காட்டிலும் மன்னித்தலை காட்டிலும் மிக மிக சிறந்தது என்று திருவள்ளுவர் வாதாடுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்"
நன்றி
-
"காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்"
"காணாமல் போன கணவனை இன்னும் தேடுகிறாள்" இலங்கையின் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைந்த நேரத்தில், பலர் பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அது மட்டும் அல்ல, இலங்கையில் ஆட்கடத்தல்களும் காணாமல் போதலும் 1980 ஆம் ஆண்டிலிருந்தே ஏராளமான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருந்தாலும், 1983 முதல் 2009-ம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போதே மிகக் கூடுதலான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். ஆனால் அது யுத்தம் மௌனித்த பின்பும் இன்னும் தொடருவது தான் ஆச்சரியமான விடயம். மேலும் உலக அளவில் இலங்கையில்தான் அதிகமானோர் காணாமல் போவதாக `மனித உரிமைகள் கண்காணிப்பகம்’ கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு அல்லது பாதுகாப்பு பிரிவினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நீதியைக் கோருவதோடு, இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இம்முறை, 30 ஆகஸ்ட் 2020, அனிதா என்ற பெண்மணி வவுனியாவில் இதற்கு தலைமை தாங்கினார். இலங்கையின், வவுனியாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் அனிதா வாழ்ந்து வந்தார். அவளும் அவளது கணவன் அர்ஜுனும் அமைதியான வாழ்க்கையை அங்கு நடத்தி வந்தனர், அவர்கள் தங்களை சூழ்ந்து உள்ள சமூகத்தின் பிரச்சனைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்ததுடன் நேரடியாக பங்கும் பற்றினார்கள். அர்ஜுன் ஒரு ஆசிரியராக இருந்தார், மேலும் அனிதா உள்ளூர் பெண்கள் குழுவின் முன்னேற்றத்திற்கும், அரச இயந்திரங்களாலும் இராணுவத்தாலும் அடிக்கடி எதிர்நோக்கும் இனவாத அடக்குமுறை செயல்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் மற்ற பெண்களுடன் முன் நின்று அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். மேலும் பெண்களின் கல்வி மற்றும் அவர்களுக்கான தேவையான அதிகாரம் ஆகியவற்றிற்காக தன்னுடைய வாதத் திறமையை அங்கு வெளிக்காட்டினார். வெளியில் சென்ற நம் குடும்பத்தினர், சரியான நேரத்தில் வீடு திரும்பாவிட்டால் நம் மனம் எவ்வளவு பதறிப்போகும். நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட காலத்தில், அவற்றின் மூலம் தொடர்புகொள்ள முயல்வோம். அப்படியும் தொடர்புகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும்வரை அதைப் பற்றியே நம் மனம் யோசித்துக்கொண்டிருக்கும். சரி ... அந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக, மணிகளாக, பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகளென்றால் அப்படிக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவருக்குப் பிரியமானவர்கள் எவ்வளவு துயரத்தில் உழல்வார்கள் ... அப்படிக் காணமல் போனவர்களும், மற்றவர்களால் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு ஆளாவார்கள். அதை அனிதா பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பார்த்தவள். ஆனால் அது தனக்கும் வரும் என்று என்றுமே சிந்திக்கவில்லை. பழந்தமிழரின் வாழ்வில் திருமணத்திற்கு முந்தைய காதல், வாழ்வியல் நெறிமுறையாகவே இருந்துள்ளது. திருமணத்திற்கு முந்தைய ‘காதல் வாழ்வை’, களவொழுக்கம் என்றும், திருமணத்திற்கு பிறகு ‘அவர்களின் இல்லற வாழ்வு’, கற்பொழுக்கமாகவும் போற்றப்பட்டுள்ளது. இவை இரண்டையும் கண்டவள் தான் அனிதா. அவளின் முதல் சந்திப்பே ஒரு ஆச்சரியமான நிகழ்வு தான். அர்ஜுன் படிப்பித்தல் முடிந்து தன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தான். திடீரென கடும் மழை வந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாதவன், அங்கே பக்கத்தில் இருந்த, குண்டுகளால் சேதமாக்கப்பட்ட கட்டிடத்துக்குள் நுழைந்தான். என்ன ஆச்சரியம் அழகே உருவான ஒரு இளம் பெண் அங்கே பதுங்கி இருப்பதைக் கண்டான். அவளின் கண்கள் பயத்தைக் காட்டின, அவன் என்ன எது என்று விசாரிக்க அருகில் சென்றான். "எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!" அர்ஜுனும் அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. அவள் தான் அனிதா. திடீரென இராணுவம் அங்கு சுற்றிவளைப்பதை அறிந்த அவள், அதில் இருந்து தப்ப அங்கு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அர்ஜுன் அவளுக்கு ஆறுதல் கூறி, இருவரும் ஒருவரை ஒருவர் பற்றி அறிமுகம் செய்தனர். ஒருவரை ஒருவர் அறிய அறிய, ஒன்றாகிவிட்ட அவர்களின் உணர்வுகளுக்கு வெட்கமும் இல்லாமல் போய்விட்டது. தங்களை அறியாமலே இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து சிறிது நேரம் கண்களையும் மூடிவிட்டார்கள். "தாழ் இருள் துமிய, மின்னித் தண் என வீழ் உறை இனிய சிதறி ஊழின் கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப் பெய்து இனி வாழியோ பெரு வான், யாமே, செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு, 5 இவளின் மேவினம் ஆகிக் குவளைக் குறுந்தாள் நாள் மலர் நாறும் நறு மென் கூந்தல் மெல் அணையேமே." தங்கிய இருள் அழியும்படி மின்னி, மின்னல் வெட்டி, குளிர்ந்த நீர்த்துளிகளைச் சிதறி, மரபிற்கு ஏற்ப, சிறு குச்சிகளைக் கொண்டு அடிக்கும் முரசினைப் போல முழங்கி, இடித்து இடித்து, அதாவது தொடர் இடிமின்னலுடன், இப்பொழுது பொழிந்து ,நீ வாழ்வாயாக, பெரிய மேகங்களே! நான், செய்ய வேண்டியப் [ஆசிரியப்] பணியை முடித்து நிறைவுடன், இவளுடன் இருப்பதற்கு [இப்ப] விரும்பி வந்துவிட்ட நான், சிறிய காம்பினை உடைய புதிதாக மலர்ந்த குவளை மலரின் நறுமணம் வீசும் மென்மையான கூந்தலை மெலிதாக அணைத்துக் கொண்டுஇருக்கிறேன் என்று மேகத்திடம் சொல்வதுபோல தனக்குள் முணுமுணுத்தான். இது தான் அனிதாவின் முதல் சந்திப்பு. அவர்கள் இருவரும் இணைபிரியா காதலர்களாக, கணவன் மனைவியாக அன்றில் இருந்து இன்றுவரைக் காணப்பட்டனர். ஒரு நாள், தேசிய பாதுகாப்பு தொடர்பான விசாரணைகளை நடத்துவதாகக் கூறி, அவர்களது கிராமத்தில் அரசுப் படைகள் இறங்கியபோது, அவர்களது வாழ்க்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது. அர்ஜுன், கிராமத்தைச் சேர்ந்த பல ஆண்களுடன், விசாரணைக்காக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டார். தங்கள் அன்புக்குரியவர்களின் கதி என்ன என்று கிராமத்துப் பெண்கள் பதற்றமும் பயமும் கொண்டு பின் தொடர முற்பட்டார்கள். என்றாலும் அரசு தற்காலிக ஊரடங்கு சட்டம் போட்டு அதை நிறுத்திவிட்டனர். நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியது, ஆனால் பிடித்துக்கொண்டு போனவர்கள் திரும்பி வருவதற்கான அறிகுறி இன்னும் காணப்பட வில்லை. அனிதா, அர்ஜுன் மீதான அன்பாலும், நீதியின் ஆழமான உணர்வாலும் தூண்டப்பட்டு, கண்ணகி போல நீதிக்கு குரல்கொடுக்க, குரலற்றவர்களின் குரலாக மாறினாள். அவள் மற்றும் சிலரின் துணைகளுடனும் ஆதரவுடனும் அயராது பிடித்துக்கொண்டு போனவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் தேடி, அவர்களின் விடுதலைக்காக வாதிட்டார். வெளியே சென்று வீடு திரும்பாதவர்கள், ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பாதவர்கள், கடத்திச் செல்லப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் என காணாமல்போன இவர்களது உறவினர்கள் நம்பிக்கை இழக்காமல் தங்கள் உறவுகளைத் இன்னும் தேடிவருகின்றனர். அவர்களுடன் அனிதா போராட்டங்களில் கலந்து கொள்ளவும், மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளவும், அதே நேரம் நாளாந்த வாழ்வில் தனது சமூகம் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராக பேசவும் தொடங்கினார். அது மட்டும் அல்ல, அப்படியான மற்ற குடும்பங்களுக்கு வலிமை மற்றும் துன்பங்களைத் தாங்கும் திறன் மற்றும் கடினமான வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து மீள்வது போன்றவற்றுக்கு அவள் ஒரு அடையாளமாக மாறினாள். மேலும் மற்றவர்களுடன் ஒன்றாக, அவர்கள் ஒரு ஆதரவு வலைப்பின்னலை [நெட்வொர்க்கை] உருவாக்கி, தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டதுடன் அவர்களின் கூட்டுக் குரலாக அதை பெருக்கினர் அல்லது மாற்றினார். காணமல் போனோர் குறித்து விசாரிப்பதற்காக கடந்த 2017ல் சாலிய பீரிஸ் தலைமையில் காணமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த அலுவலகம் 2019லிருந்து யாழ்ப்பாணத்திலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்களைப் பொறுத்தவரை இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் ஏற்கவில்லை. அதனை மரணச் சான்றிதழ் வழங்கும் அலுவலகம் என குற்றம் சாட்டுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை, முழுமையான விசாரணை நடந்து, உண்மை கண்டுபிடிக்கப் பட்டு, நீதி வழங்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் அனிதா முதன்மை படுத்தி தன்னை அதில் இணைத்துக் கொண்டாள். எவ்வாறாயினும், அரசாங்கம் இவர்களின் போராட்டங்களுக்கு செவிசாய்க்காமல், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூற்றுக்களை நிராகரித்தது. என்றாலும் அனிதா, மனம் தளராமல், நீதிக்கான தனது போராட்டத்தைத் தொடர்ந்தாள், வழக்கறிஞர்கள், ஆர்வலர்களைச் சந்தித்தாள், மேலும் சர்வதேச அமைப்புகளை அணுகினாள். ஆரம்பத்தில் ஆதரவளித்த சமூகம், அதிகாரிகளின் அழுத்தத்தை உணரத் தொடங்கியது. சில கிராம மக்கள், பின்விளைவுகளுக்கு பயந்து, அனிதாவிடமிருந்தும் போராட்டத்தில் பங்கு பற்றுவதில் இருந்தும் தங்களைத் தூர விலக்கினர். இதனால் அனிதா தனிப்பட்ட சவால்களையும் எதிர்கொண்டாள். ஆனாலும், அவள் விடா முயற்சியுடன், தன் கணவன் மீதான அன்பாலும், உண்மை வெல்ல வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையாலும் தனது போராட்டத்தை விடாமல் தொடர்ந்தாள். வருடங்கள் செல்ல செல்ல அனிதாவின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. உலகெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் நீதிக்கான அழைப்பில் இணைந்தனர். அரசாங்கத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது, எனவே இதை எப்படியும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என இறுதியாக அரசும் தீர்மானத்தித்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால், அரசு தலைவர்கள் மாறினார்கள். மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது. என்றாலும் அனிதாவின் பயணம் அநீதியை எதிர்கொள்வதில் ஒரு தனி நபரின் தைரியத்தின் சக்திக்கு சான்றாக அமைந்தது, மற்றவர்கள் தங்கள் உரிமைகளுக்காக நிற்கவும், உண்மை மற்றும் பொறுப்புக்கூறலைத் தேடவும் அது தூண்டியது. ஆனால் அனிதா ? அவளுக்கு என்ன நடந்தது? ஒரு மர்மமாக தொடர்கிறது. அனிதா இப்ப தன் சுய நினைவை இழந்துவிட்டாள் அல்லது இழக்கச் செய்யப்பட்டு விட்டாள்? அவள் அர்ஜுனை முதல் முதல் சந்தித்த அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் பைத்தியக்கார பெண்ணாக வாழத் தொடங்கிவிட்டாள். "கனவு எல்லாம் எரிந்து சாம்பலாகிப்போன நாள் ஒன்றில் தெருவில் தனித்து நின்றாள் சிரித்துக் கொண்டு அர்ஜுன் அர்ஜுன் என்றாள் கடந்து போனவர்கள் பைத்தியம் என்றார்கள் தூரத்தில் போய்நின்று வேடிக்கை பார்த்தார்கள் கூட்டமாய் நின்று அவள் வரலாறு கூறினார் ஏளனமாய் பார்த்து மௌனமாகவும் போனார்கள் விதி சதி செய்து வீதிக்கு வந்தாள் கதி இதுவே என முன்னையது அழைக்க பாழடைந்த கட்டிடத்துக்கு உள்ளே புகுந்தாள் அன்பே அன்பே என்று எங்கும் தேடினாள்" அனிதா அர்ஜுனை தேடி பேதுற்றுப் புலம்பிக் அந்த பாழடைந்த கட்டிடத்துக்குள் அங்கும் இங்கும் ஓடினாள். தன் காதல் கணவனை கண்டீரோ என்று சத்தம் போட்டு கேட்டுக் கொண்டு அலைந்தாள். இராணுவத்தின் பிடியில் வலாற்காரமாக இழுத்து செல்லப்பட்ட , “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். "கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என" ஒரு சங்கப் பாடலை முழங்கினாள். உலகில் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பைத்தியம் பிடித்தவர்களாகவே இருக்கிறோம். இவளோ கணவனை அடைய, மீட்டு எடுக்கும் முயற்சியில் , சிலரின் வஞ்சகத்தால், பாவம் உண்மையாகவே பாதிக்கப்பட்டு, என்ன செய்கிறோம் என்று அறியாமல், கணவனை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்" "இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம் இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்! இளிச்ச வாய்கள் இனி வேண்டாம் இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!" "காட்டிக் கொடுத்து கோட்டை கட்டியது காலம் கடத்தி நீதி ஏமாற்றியது காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது காணும் இனி விலகி நில்!" "முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால் சிறைகள் எங்கே வெற்றி எமதே! " [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] [முரசு முழங்கு தானை மூவருங்கூடி - வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி]
-
"கும்மியடி கும்மியடி"
"கும்மியடி கும்மியடி" "மகாவம்சம் குழப்பிய தமிழன் வரலாற்றை சொல்லி சொல்லி கும்மியடி கும்மியடி விஜயன் வருகையில் இலங்கையில் இருந்தவன் விடயம் தெரியாதோ கும்மியடி கும்மியடி" "கல்வெட்டு ஆதாரம் தமிழைச் சொல்லுது ராவணன் பூமியென கும்மியடி கும்மியடி பஞ்ச ஈசுவரங்கள் பழமையைக் காட்டுது புரிந்தால் நல்லது கும்மியடி கும்மியடி" "விஜயன் மனைவியும் மதுரைத் தமிழ்ச்சியே விபரம் இருக்குது கும்மியடி கும்மியடி சிங்களம் தோன்றியது ஆறாம் நூற்றாண்டு சிறிது சிந்தியுங்கள் கும்மியடி கும்மியடி" "வந்தேறு குடிகள் தமிழர் அல்ல வளமுடன் வாழ்ந்தவர்கள் கும்மியடி கும்மியடி தொல்பொருள் இணைக்குது இலங்கை தென்னிந்தியாவை தொலையாத சாட்சிகள் கும்மியடி கும்மியடி" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 10 "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள்" / "Food Habits Of Ancient Sumer" "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] என்ற இதற்கு முந்திய 82 பாகங்கள் கொண்ட, தீபத்திலும் [Theebam.com] எனது வலைத்தளத்திலும் ["A DROP IN THE OCEAN / கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam] வெளியிடப்பட்ட தொடரில், நாம் ஆழமாக விவாதித்து சுட்டிக் காட்டியவாறு, பண்டைய சுமேரியர்களே அல்லது முதனிலைத் [புரோட்டோ] திராவிடர்கள் அல்லது முதனிலைத் தமிழர்களே வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும் விட்டு, விவசாயம் செய்ய முற்பட்ட முதல் நாகரிகம் ஆகும். மற்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு முதல் முதல் கொடுத்தவாறு, விவசாயத்திலும் உணவிலும் கூட இவர்கள் தமது பங்களிப்பை உலகிற்கு முதல் முதல் வழங்கினார்கள். பண்டைய சுமேரியர்களின் உணவு அதிகமாக பார்லியை முதன்மையாக கொண்டதுடன், மற்றும் கோதுமை, தினை போன்றவையும் ஆகும். அங்கு விவசாயம் அவர்களுக்கு, காய்கறியும் பழங்களும் வழங்கின. அத்துடன் பட்டாணிக் கடலை [கொண்டைக் கடலை], வெங்காயம், கீரை, லீக்ஸ், பீன்ஸ் [பயிற்றினம்], உள்ளி, கடுகு, வெள்ளரிக்காய், பருப்பு போன்ற சிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டன. இவைகள் எல்லாம் பண்டைய சுமேரியர்களின் உணவாக அன்று இருந்தன. இவர்களே நாடோடி வாழ்க்கையை விட்டு முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறிய நாகரிக மக்களும் ஆகும். அப்படி ஓரிடத்தில் குடியேரியதுடன், வீட்டு பாவனைக்கு விலங்குகளையும் பழக்கினார்கள். அவை உணவுக்கும் வேலைக்கும் அவர்களால் பாவிக்கப்பட்டன. வெள்ளாடு பாலும் இறைச்சியும் கொடுத்தன. அத்துடன் மாமிசத்தில் - மாட்டுக்கறி, வெள்ளாடு, செம்மறியாட்டுக்கறி, பன்றிக்கறி, மான்கறி மற்றும் புறா, காட்டுக் கோழி போன்றவையும், மேலும் கோழி முட்டையும் அவர்களின் முக்கிய உணவாக இருந்தன. பாபிலோனியர்களால் சுமேரியர் தோற்கடிக்கப்பட்ட தருவாயில், சிறந்த சுவையான உணவு ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டு, அது அரண்மனைக்கு கூடை நிரம்ப அனுப்பப்பட்டுள்ளன என்றும் அது அதிகமாக உணவுப் பண்டங்களுக்கு மணமூட்டும் ஒரு வகை பாலைவனத்து காளான் [truffles] என்றும் அறிய வருகிறது. அவர்களின் நாளாந்த உணவு அதிகமாக பார்லி "கேக்கை"யும் பார்லி "களி"யையும் கொண்டிருந்ததுடன் இவை அதிகமாக வெங்காயம் அல்லது கொஞ்சம் அவரை சேர்த்து உட்கொள்ளப் பட்டதுடன், வாற்கோதுமை மா ஊறலிலிருந்து வடித் தெடுக்கப்படும் மதுவுடன் [பியர் / barley ale] உணவைப் பூர்த்தி செய்தார்கள். மெசொப்பொத்தேமியா ஆற்றில் கும்பலாக நீந்தும் மீனும் அவர்களின் முதன்மை உணவாக இருந்தது. அத்துடன் கடல் ஆமை, சிப்பிகள் போன்றவையும் மீனுடன் சேர்த்து சமைத்து உண்ணப் பட்டது. கி மு 2300 முற்பட்ட சுமேரிய நூல் ஒன்று, ஐம்பதுக்கு மேற்பட்ட மீன் வகைகளை குறிப்பிட்டுள்ளது. பாபிலோனியர் காலத்தில் மீன் வகைகளின் எண்ணிக்கை குறைந்து இருந்த பொழுதிலும், ஊரின் [Ur] குறுகிய, சுற்று தெருக்களில், பொரித்த மீன் விற்கும் வணிகர்கள் அங்கு வளமான வர்த்தகம் செய்தார்கள் என அறியமுடிகிறது. அது மட்டும் அல்ல, அங்கு உணவு கூடங்களில் வெங்காயம், வெள்ளரிக்காய், சுடச் சுட வாட்டிய ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை வாங்கக் கூடியதாகவும் இருந்தன. இந்த பண்டைய சுமேரியர் காலத்தில், இன்று காணப்படுவது போல,அண்மை கிழக்கு நாடுகளில் [Near East Countries] பன்றி இறைச்சி விலக்கப்பட்ட ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது! என்றாலும், கி மு 1000 ஆண்டு அளவில் இருந்து பன்றி இறைச்சியின் நிலை மாறத் தொடங்கியது. பண்டைய எகிப்த்தில் பன்றி ஒரு "அசுத்த பிராணி" என பொதுமதிப்பு பெற்றது. அத்தருவாயில், எகிப்திய கீழ் சமுதாய வகுப்பினர் பன்றியை சாப்பிட தடை செய்யப்படாவிட்டாலும், மேல் வகுப்பினருக்கு, குறிப்பாக மதகுருமாருக்கு இது முற்றாகத் தடை செய்யப் பட்டது. இந்த நிலை இன்னும் ஒரு சில சமய குழுக்களிடம் இன்றும் தொடர்கிறது. அதன் பிறகு, ஏறக்குறைய கிமு 500 முதல், இஸ்லாம் நிறுவப்பட்ட காலம் வரை, மத்திய கிழக்கில் பன்றி இறைச்சி ஒரு அசாதாரண இறைச்சியாக இருந்தது. அதே போல சில யூத தரப்பும் சில கிரிஸ்துவ தரப்பும் பன்றி இறைச்சியைத் தவிர்த்தன. சுமேரியாவில் நிலவிய வெக்கையில் இறைச்சி விரைவாக கெட்டுப் போவதால், அதிக மக்கட் தொகை இல்லாத கிராமப் புறங்களை விட, சுமேரிய நகரங்களில் இறைச்சி பொது உணவாக அங்கு வாழும் மக்களிடம் இருந்தன. மேலும், கால்நடைகள் அவற்றின் இறுதி கால வாழ்க்கையின் முடிவில் இருக்கும் போது மட்டுமே நுகர்வுக்காக படுகொலை செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடப்பட்டது. அதுமட்டும் அல்ல, நிச்சயமாக ஆட்டிறைச்சியே மிகவும் பொதுவானதாக காணப்பட்டது. தொல்பொருள் ஆராய்ச்சி, ஆப்பெழுத்து / கியூனிபார்மில் எழுதப்பட்ட பதிவுகள், மற்றும் சுமேரிய - அக்காத் இருமொழி ஆவணங்கள் மூலம் நாம் பண்டைய சுமேரியர்களின் உணவு பற்றி விரிவாக இன்று அறிய முடிகிறது. பார்லி ரொட்டியின் [barley bread] முக்கியத்தையும் பலவித பார்லி ரொட்டிகளையும் இந்த ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இவற்றுடன் பார்லி, கோதுமை கேக்கும் [barley and wheat cakes] சுமேரியர்களின் பிரதான உணவாக இருந்ததுடன், அவையுடன் தானியம், பயறு [பருப்பு] சேர்ந்த வடிசாறுடன் [சூப்பு / கஞ்சி] [grain and legume soups], வெங்காயம், லீக்ஸ், உள்ளி, டர்னிப் [turnip] போன்றவை உண்ணப்பட்டன. மேலும் காய்கறிகளைத் தவிர, சுமேரியர்களின் உணவில் பழங்களும் இருந்தன. அவை ஆப்பிள், வெள்ளரிப்பழம், திராட்சை, அத்திப்பழம், பேரீச்சை, மாதுளை போன்றவையாகும். பிந்திய சுமேரியன் பதிவுகளில் பல சமையல் மூலிகைகள், தேன், சீஸ் [பாலாடைக்கட்டி / cheese], வெண்ணெய் [butter], தாவர எண்ணெய் போன்றவையும் குறிப்பிடப் பட்டுள்ளன. தேன், பேரிச்சை, திராட்சை சாறு போன்றவை இனிப்பு பொருள்களாகவும் பயன்பட்டன. அத்துடன் சுமேரியர்கள் அடிக்கடி பியர் [beer] குடித்தார்கள். ஆனால் சிலவேளை கொடி முந்திரிப் பழச்சாறும் [wine] குடித்தார்கள். பல வித பதப்படுத்தப் பட்ட உணவுகளும் அங்கு காணப்பட்டன. உதாரணமாக காய்ந்த ஆப்பிளும் அத்தியும் சரமாக கோர்த்து சுவரில் தொங்க விடப் பட்டிருந்தன. அத்துடன் தேனில் பழங்கள் பாதுகாக்கப் பட்டன. அதே போல பருப்பு வகைகளான பீன்ஸ், பட்டாணி, பயறு போன்றவையும் அத்துடன் திராட்சையும் உலர வைக்கப்பட்டன. மேலும் பாதம் கொட்டை [almonds], பசுங்கொட்டை [pistachio], உள்ளி போன்றவை நெடுங்காலம் காய்ந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டன. அங்கு நிலவிய சூடான காலநிலையில் பால் விரைவில் கெட்டு விடும். ஆகவே சுமேரியர்கள் பாலை நெய், சீஸ் ஆக மாற்றினர். மீனை உப்பு போட்டு அல்லது புகை பிடித்து வெயிலில் உலர்த்தினர் [கருவாடு]. இறைச்சியை ஊறுகாயாக மாற்றினர். சுமேரியர்கள் பொது பானையில் இருந்து பியரை, நாணல் குழாய் ஊடாக, அதை சுற்றி ஒன்றாக கூடியிருந்து, உறுஞ்சி குடித்தார்கள். என்றாலும் செல்வந்தர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட உறிஞ்சு குழாய் [straw] பாவித்தார்கள். மேலும் மதுபானங்களை அத்தியில் இருந்தும் பேரீச்சம்பழத்தில் இருந்தும் தயாரித்தார்கள். அத்துடன் திராட்சை பழத்தில் இருந்து வைனும் [Wine] உற்பத்தி செய்தார்கள். வெங்காயம், லீக்ஸ், உள்ளி போன்றவையே அங்கு பிரபல்யமானவை. இவை பாபிலோன் மன்னர் மேரோடச் பாலடன் II [Merodach Baladan II ] தோட்டத்திலும் கி மு 2100 ஆண்டு ஊர் நகர மன்னன் ஊர்-நம்மு [Ur-Nammu] தோட்டத்திலும் வளர்ந்தன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 11 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 10 "Food Habits Of Ancient Sumer" As we have pointed out & discussed deeply in our previous Article Series titled "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?] / Origins of Tamils? [Where are Tamil people from?]" published in Theebam.com and my personal blog "A DROP IN THE OCEAN/கடலில் ஒரு துளி" By Kandiah Thillaivinayagalingam, Sumerians were the first culture to quit hunting and gathering food and begin cultivation. Like many other inventions that Sumerian culture gave to the world, they also contributed in farming and food. Sumerian diet mainly consisted of barley. The raw materials of the Sumerian diet were barley, wheat and millet. Farming yielded vegetables and fruits, chickpeas, lentils, beans, onion, garlic, leeks, cucumbers, cress, mustard and fresh green lettuce was all part of the early Sumerian food. Sumerians were the first culture to settle down and leave the earlier nomad lifestyle. With settlement they began domesticating animals for food and labour. Goat's milk and meat, eggs, pig; wild fowl, deer and venison were an integral part of the Sumerian's food as well. By the time Sumer was succeeded by Babylon a special delicacy had been discovered that was dispatched to the royal palace by the basketful, Truffles, may be desert truffles. Everyday meals probably consisted of barley paste or barley cake, accompanied by onions or a handful of beans and washed down with barley ale. Fish that swarmed in the rivers of Mesopotamia were a major food source too. Over fifty different types of fish are mentioned in texts dating before 2300 BC, and although the number of types had diminished in Babylonian times, the fried-fish vendors still did a thriving trade in the narrow, winding streets of Ur. Onions, cucumbers, freshly grilled goat, mutton and pork were available from food stalls. Pork not yet taboo in the Near East!, However, all of this began to change very rapidly in a variety of communities around the region starting roughly 1000 BC. Around this time, in ancient Egypt, pigs acquired a reputation for being unclean, a view that seems to have stuck through modern day. While lower castes of Egyptian society were not prohibited from eating pork, it was discouraged, and the priestly caste was forbidden from it entirely. Slightly later, from roughly 500 BC to the time of the founding of Islam, pork was an uncommon meat in the Middle East. Also Various Jewish and Christian sects too still adhere to this rule. Meat was commoner in the cities than in the more thinly populated countryside, since it spoiled so quickly in the heat. Further, Cattle were only slaughtered for consumption when they were nearly at the end of their working lives-certainly more common was mutton. Information about Sumerian food can be gathered from archaeology and written records on cuneiform tablets including bilingual Sumerian - Akkadian word lists. These sources also indicated the importance of barley bread, of which many kinds are named, and barley and wheat cakes, as the staple diet together with grain and legume soups, onion, leeks, garlic and melon. Besides farmed vegetables, Sumerian food also included fruits. These were apples, fig and grapes. Several culinary herbs and honey and cheese, butter and vegetable oil have also been mentioned in later Sumerian food records. Sumerians drank beer often and sometimes wine too. Many types of preserved food were produced in ancient Sumer. These included dried figs and apples, which were thread on string, hanging on the wall and also fruits conserved in honey. Pulses such as beans, peas,and lentils were also dried, as were grapes to produce raisins. Nuts too, such as almonds and pistachio that were eaten in Sumer can be kept a long time in dry conditions as can garlic. Milk, because it did not keep well in the hot climate, was mainly used to make yogurt, or a form of butter known as ghee and cheese. Fish were often dried, salted, or smoked and meat was pickled. Beer was often drunk through a reed from a communal pot, or using a silver straw if you were wealthy. Wine was also produced from grapes, in addition to the alcoholic beverages produced from figs and dates. Onions and leeks and garlic were amongst the most frequently cultivated plants. They were grown in the gardens of King Merodach Baladan II of Babylon, and Ur-Nammu of Ur (2100 BC). Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 11 WILL FOLLOW
-
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09 1] பாலியல் நோக்குநிலை [sexual orientation] பாலியல் நோக்குநிலை என்பது நீங்கள் யார் மீது ஈர்க்கப்படுகிறீர்கள் மற்றும் உறவு வைத்திருக்க விரும்புகிறீர்கள் பற்றிய உங்கள் பாலியல் நடத்தை ஆகும் எனலாம் [Sexual orientation is about who you’re attracted to and want to have relationships with]. அந்த பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் ஆகிறது. எனவே தனிப் பட்டவர்களுக்கு குடும்பங்கள் ஒரு முக்கிய ஆதரவு அமைப்பை - குழந்தை பருவத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரிகள், மாமா, மாமி .... என தொடங்கி வாழ்க்கை முழுவதும் பல்வேறு நிலையில் வழங்குகிறது. இப்படியான வெவேறு பல தனிப்பட்டவர்கள் பரஸ்பர நன்மைக்காக ஒன்றாக வேலை செய்யும் பொழுது அங்கு ஒரு சமூகம் உதயமாகிறது. அது சிறிதோ பெரிதோ, அவர்களிற்கு இடையான தொடர்பு அல்லது இணைப்பு அந்த சமூகத்தை ஒன்றாக பிணைக்கிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. இப்படியான குடும்பத்தின் பாத்திரங்கள் [roles] கலாச்சாரத்தை தொடர்ந்து நூற்றாண்டுகளாக வாழ, நிலைநாட்ட முக்கிய பங்கு வகுக்கிறது. மேலும் இதை உறுதிப்படுத்துவதற்கு உயிரியல் மூலம் இனப்பெருக்கத்தையும், மற்றும் சமூகம் மூலம் சமூகமயமாக்களையும் குடும்பங்கள் செய்கின்றன [biologically through procreation, and socially through socialization]. குடும்பம் சமூகத்தின் அடிப்படை சமூக அலகு என்பதால், ஒரு சமூகம், சமுதாயம் நிலைத்து, வலுவாக நிற்க, சில குறிப்பிட்ட இயல்புகளை கொண்ட தனிநபர்களினால் அமைக்கப்பட்ட வலுவான குடும்பங்கள் எமக்கு தேவைப்படுகிறது. இந்த நோக்கில் நாம் பார்க்கும் பொழுது கட்டாயம் ஒரு தனிப்பட்ட ஆணாலும் ஒரு தனிப்பட்ட பெண்ணாலும் அமைக்கப்பட்ட குடும்பம் ஒரு சிறந்த அமைப்பாக தென்படுகிறது, ஏனென்றால், 1] குழந்தை தனது இயல்பான, உயிரியல் [natural, Biological] தந்தை மற்றும் தாயின் செல்வாக்கின் கீழ் வளர்க்கப் படுகிறது, 2] குடும்பங்கள் குழந்தைகளை உருவாக்கவில்லை என்றால் அல்லது ஒரு இனம், இனப்பெருக்கம் செய்யவில்லை என்றால், அந்த குடும்பங்கள் அல்லது அந்த உயிர் இனங்கள் அழிந்து போகும் அல்லது இறந்து போகும், அதனுடன் அவர்களின் அல்லது அவைகளின் சமூகமும் அழிந்து போகும். கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம்நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து பூரணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். "தண்டு ழாய்முடி யான்தனி நாயகற் கண்டு வெ·கக் கறைமிடற் றெம்பிரான் உண்டெ மக்கு முனைப்புணர் காதல்நீ கொண்ட வேடம் இனிதென்று கூறினான்." [1458] அதற்கு பாடல் 33 இல், திருமால்,சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று, "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463] என வினவினார். மேலும் கடவுள் சிலைகளை தாண்டி, பல வகையான கவர்ச்சிமிகு எதிர்பால், இருபால், ஓரினச்சேர்க்கை நிர்வாண சிலைகள், இந்தியாவின் பெரும்பாலான பழைய இந்து கோவில்களின் கோபுரங்களில் மற்றும் சுவர்களில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, கஜுராஹோ - மத்தியப் பிரதேசம், மார்க்கண்டேஸ்வரர் கோவில் - மகாராஸ்டிரா, படவலி கோவில் - மத்தியப் பிரதேசம், ரணக்பூர் ஜெயின் கோவில் - ராஜஸ்தான், சூரிய கோவில் - ஓடிஸா, சூரிய கோவில் - குஜராத், ஓசியான் - ராஜஸ்தான், விருபாக்ஷா கோயில் - கர்நாடகா போன்றவை ஆகும். இது ஓரினச்சேர்க்கை அன்று புராண கதைகளில், கடவுள் துதிகளில் காணப்பட்டதற்கு சாட்சி பகிர்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது. சுமார் 400 மிருக இனங்கள் ஓரினச்சேர்க்கை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன, இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [ bonobos] ஆண் மற்றும் பெண் அடங்கும். சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish] போட்டியாளர்களை ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி ,உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் பகுதி: 05 தொடரும்