Jump to content

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1085
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. 1915 ஆம் ஆண்டில், டி.பி. ஜயதிலக, டி.எஸ். சேனநாயக்க மற்றும் பல செல்வந்தர்கள் சிங்களவர்கள் தமிழ் பேசும் முஸ்லீமிற்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பது இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என்பது மட்டும் அல்ல, தமிழர்க்கு எதிராக துவேசம் கூட பரப்பப் படாமல் கூட இருந்து இருக்கும். தமிழரின் இன்றைய பிரச்னைக்கு முக்கிய காரணம் அல்லது தொடக்கம் இவர்களே! இது தான் நாம் படித்த பாடம் . ஏன் அன்றே ராமநாதன் படித்த பாடம் 'டோனமோர் என்றால் இனி தமிழர்கள் இல்லை’. அவருடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக இருந்தன; அதன் பின் உயர்சாதி பௌத்த சிங்களவர்களும் கரவ சாதி சிங்களவர்களும் சேர்ந்து சேர் பொன்னம்பலம் இராமநாதனை 1920களின் பிற்பகுதியில் இருந்து தீபவம்சத்திலும், மகாவம்சத்திலும், இறுதியில் ராஜாவலியிலும் எப்படி எல்லாளனை படிப்படியாக ஒரு இனவாதியாக மாற்றி சாடினார்களோ அப்படியே ராமநாதனையும் ஒரு இனவாதி என்று சாடினார்கள் என்பது வரலாறு ஆகவே எந்த சிங்கள தலைவர்களையும் ஆதரித்தோ அல்லது ஆதாரிக்காமலோ ஒன்றும் நடை பெற போவதில்லை. அது இதுவரை கண்ட காட்சி. காரணம் ராமநாதனின் 1915 இல் இருந்தே வரலாறு கூறும் ஆகவே தமிழ் பேசும் முழு சமூகமும் ஒரு குடையின் கீழ், வெற்றி தோல்வியை ஒரு புறம் தள்ளிவிட்டு, தமக்கு என ஒருவரை நிறுத்தி, தம் கொள்கை விளக்கத்தை தெரியப்படுத்துதல், வேறு ஒரு வழியிலாவது வெற்றி தரும் ஒற்றுமை உலகத்துக்கு உண்மை உரைத்தலும் எடுத்து காட்டுதலும் அதற்கு இது ஒரு முதல் படியாக கூட இருக்கலாம் ? என்றாலும் இவை எல்லாம் தமிழர்களின், தமிழ் பேசும் மக்களின் ஒற்றுமையிலேயே தங்கி உள்ளது. அது தான் எம்மை என்றும் ஏமாற்றும் ஒன்று ?? உதாரணமாக, "ஒன்றுபட்டால்உண்டுவாழ்வு என்றவாழ்வைஇன்னும்காணோம்!" தமிழர் சரித்திரத்தில் ஒரு முறை கண்டோம். அது 300BC அளவில். அதன் பின்பு இன்று வரை நாம் ஒன்றுபடவில்லை. வட இந்தியாவை ஆண்ட நந்த வம்சம் [Nandhas] தென் இந்தியாவை ஆண்ட மூன்று பேரரசுகளுடனும் சகோதரரைப் போன்ற ஒரு தொடர்பை ஏற்படுத்தி இருந்தனர். என்றாலும் அவர்களை தொடர்ந்து வந்த மௌரியப் பேரரசு [Mauryas] (322–185 கிமு) தென் இந்தியா மேல் படையெடுத்தது.சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயம் வரை படை நடத்திச் சென்றவன். வடக்கில் உள்ள இமயத்தையும், தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள, செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன். அது மௌரியர்களை சேர நாட்டின் மேல் பலி வாங்கும் தாக்குதலுக்கு தூண்டியது .என்றாலும் மௌரியப் பேரரசால் சோழ எல்லைக்குள் நுழைய முடியவில்லை. இந்த படை எடுப்பு மூவேந்தர்களுக்கும் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியது. இதனால் 313 B.C, யில் இவ் மூவேந்தர்களும் ஒரு ஒற்றுமைக்கான உடன்படிக்கை ஒன்றில் ஒப்பம் இட்டார்கள் என Dr.மதிவாணன் [author Dr.Mathivanan] கூறுகிறார். "பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள், முரசு முழங்கு தானை மூவருங்கூடி, அரசவை இருந்த தோற்றம் போலப்" (பொரு. ஆற். படை: 53-54) போரொழுக்கத்தில் வெற்றிகளைச் சாதித்த மூவேந்தர்களை அப்பாடல்களில் சந்திக்கின்றோம். இன்னும் ஒரு சமயம், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே இருந்தனர். அதைக் கண்ட புலவர் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பெருமகிழ்ச்சி அடைந்தார். சோழனும் பாண்டியனும் ஒருங்கே இருந்ததைப் பலராமனும் திருமாலும் ஒருங்கே இருப்பதற்கு ஒப்பிட்டு, “அவர்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருந்தால் இவ்வுலகம் அவர்கள் கையகப்படுவது உறுதி" என்று பாடினார். "நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை; இவளே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் ...................................................... ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப் பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே; .......................................................... நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே." ஆனால் இவை எல்லாம் இலக்கியத்துடன் நின்றுவிட்டன . அது தான் எம் இனத்தின் பெரும் குறை நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "காதல் வேண்டாம் போ" மாலை நேரம் மகாவலி ஆறு, பேராதனை வளாகத்தினூடாக, இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது காதலனுடன் ஆற்றங்கரையில் உலா வரும் மூன்றாம் ஆண்டு கலைப் பீட மாணவி தமிழ்செல்வியை இன்று அங்கு காணவில்லை? அவள் கற்பாறைகளுக்கிடையில், தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு மகாவலியை வெறுத்து பார்த்துக் கொண்டு இருந்தாள். வாடைக்காற்றும் இன்று கொஞ்சம் குளிராக வீசுகின்றது. அவள் நற்றிணை 174 சிலவரிகளை முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். "வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?" அவள் மனதில் அமைதி இல்லை. யாரோ ஒரு முதலாம் ஆண்டு மருத்துவ பீட மாணவி ஜெயந்தியை, பகிடிவதை செய்யும் பொழுது தன் காதலன் நண்பியாக்கி விட்டான் என்ற செய்தி அவளை துளைத்துக்கொண்டு இருந்தது. இங்ஙனம் வேறு ஒருவளிடம் அன்பு வைத்தவனுக்கு என்மேல் எப்படி அன்பு, கனிவு தோன்றும்?; அன்பு இல்லாமல் காமத்தை தணிக்க என்னை அவன் தழுவிக் கொள்வதனாலும் நான் வேறு வழி இன்றி அவனைத் தழுவிக் கொள்வதனாலும் என்ன பயன்? மீண்டும் மகாவலியை வெறுத்து பார்த்தாள். அவள் கண்களில் இருந்தே மகாவலி ஊற்று எடுப்பது போல் இருந்தது! சட்டென்று யாரோ அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை மெல்ல வருடுவதை உணர்ந்தாள். திடுக்கிட்டு திருப்பி பார்த்தாள். அவளின் வஞ்சக காதலன் தான் அங்கு நின்றான். அவள் துள்ளி எழும்பி , அவன் கையை தட்டிவிட்டாள். தனக்கேற்றவனாக கருதிய தலைவனை இன்று கோபத்துடன் பார்த்தாள். அவளின் சங்கு கைவளையல் மெல்ல நழுவி ஆற்றில் விழுந்தன. அதை அவள் பொருட்படுத்தவில்லை. அது அவளுக்கு இனி முக்கியமும் இல்லை. ஆனால் அவளின் காதலனோ, தனக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுவென, ஆற்றில் குதித்து, அதை எடுத்து, அவளை பின் தொடர்ந்து சமாதானப் படுத்த பல பொய்கள் சொல்ல தொடங்கினான். அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. தன் காதலனை காண, தினம் சீவி சிங்காரித்து பொன்மகளென வரும் இவள் இன்று மகா காளியே வந்தது போல, தீ பாயும் கண்களுடன் அவனை பார்த்தாள். உன் புது காதலிக்கு இது என் பரிசு என்று சொல்லி அந்த வளையலை தட்டிவிட்டாள். அவள் கலைப்பீட மாணவி அல்லவா, அவள் மனதில் சிலப்பதிகாரத்தின் சில கானல் வரிகள் அம்பு போல் அவள் நெஞ்சை குத்திக்கொண்டு இருந்தன. ஐயனே. கடலில் தோன்றும் சங்கையும் முத்துக்களையும் பார்த்து வானத்து நிலாவும் மீன் கூட்டமும் என்று எண்ணிக்கொண்டு ஆம்பல் ஏமாந்து பூக்கும் போல் நான் ஆகிவிட்டேனே ? [விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே, விளங்கும் வெள்ளைப்புரி வளையும் முத்தும் கண்டு-ஆம்பல் பொதி அவிழ்க்கும்] அவள் தன்னையே நொந்தாள், அவன் ஏதோ சொல்லி சொல்லி சத்தியங்களும் செய்ய தொடங்கினான். அவள் அது எதையும் ஏறிட்டுக்கூட பார்க்கவில்லை. ஐயனே, மாதரார் கண்களையும், மலர்ந்த நீல மலர்களையும் பார்த்து எது உண்மையான பூ என்று தெரியாமல் வண்டு ஊசலாடும், அப்படி என் நிலையும் வந்து விட்டதே! [மாதரார் கண்ணும், மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீலப் போதும், அறியாது-வண்டு ஊசலாடும்] 'அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு' இவையெல்லாம் களவியலுக்கு மட்டும் தான்!. அது அவளுக்கு நன்றாக தெரியும். கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு போடு போடும் அவள், காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறி காதலன் மேல் சாய்ந்த காலம் இன்று மலையேறி விட்டது. நேராகவே கண்ணகி போல் வாதாட தொடங்கினாள்! இனி தன் சமாளிப்புக்கள், வேடங்கள் சரிவராது என உணர்ந்த அவன், அவள் செருப்பு எடுத்து, துரத்தும் முன், தானாக அவள் மேல் பொய்க்குற்ற சாட்டுக்கள் சுமத்தி நழுவி சென்றான். ஆனால் அவள் துணிந்து விட்டாள். ஏய் 'காதல் வேண்டாம் போ' டா என ஒருமையில் முதல் முதல் விறல் சுட்டிக் காட்டி அவனை திட்டியே விட்டாள்! அவனும் அங்கு நின்றால் பிரச்சனை வளரும் என்று அஞ்சி, உடனடியாகவே தன் விடுதிக்கு திரும்ப தொடங்கினான். ஆனால் அவள் மனது ஓயவில்லை. அது தன் பாட்டில் சில வரிகளை இயற்றிக்கொண்டு தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தது! "காதல் இல்லை கனிவும் இல்லை காத்தரமான ஒரு வாழ்வும் இல்லை காலம் முழுதும் அவன் ஏமாற்றி காமம் தணிக்கும் உடல் நானல்ல !" என்றாலும்: "அன்பு வேண்டி உள்ளம் போராடுகிறது அணைப்பு தேடி உடல் போராடுகிறது அயர்ந்து தூங்க கண் போராடுகிறது அலுப்பு தட்டி உயிர் போராடுகிறது !" அவள் தன் கட்டிலில், உடை கூட மாற்றாமல் அப்படியே உறங்கி விட்டாள்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. 'தனிமை' [ஒரே தலைப்பில் இரண்டாம் கதை] தனிமை என்பது, 'நான் தனித்து இருக்கிறேன் என்ற உணர்வு' என்று சொல்லலாம், உங்கள் பல சமூக தொடர்புகளின் அளவை இது சார்ந்தது அல்ல. நீங்க அந்த தொடர்புகளில் இருந்தாலும் மனது அதில் முழுதாக எடுபடாமல் தனித்து இருக்கலாம் என்பதே இதன் அர்த்தம்! நான் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, இலங்கை கடற்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை கடற்தொழில் பயிற்சி நிலையத்தில் எந்திரவியல் விரிவுரையாளராக பதவி பெற்று கொழும்பில் கடமையாற்ற தொடங்கிய நேரம் இது. நான் கொழும்பில் வேலை செய்யும் அண்ணாவின் குடும்பத்துடன் தங்கி இருந்து, வேலைக்கு போகத் தொடங்கினேன். கொழும்பு எனக்கு புதிது என்றாலும், அண்ணாவின் குடும்பம் மற்றும் அயல், அந்த குறைபாடை நீக்கி, எந்தநேரமும் கலகலப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. தனிமை என்றால் என்னவென்றே தெரியாத காலம் அது. இரவில் கூட அண்ணாவின் கடைசி மகள், கலைமதி, வயது மூன்று என்னுடனே வந்து படுப்பார். அந்த தருணத்தில் தான் ... எனக்கு அரசாங்கம் கல்வி உதவித்தொகை தந்து கப்பல் எந்திரவியலில் பயிற்சி பெற ஒரு ஆண்டுக்கு ஜப்பானுக்கு அனுப்பினார்கள். கட்டுநாயக்க கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பயணம். அண்ணா குடும்பம் மற்றும் ஒரு சில அயலவர்கள் வழியனுப்ப, ஒரே குதூகலமாக அங்கிருந்து புறப்பட்டேன். விமானத்தில் பறப்பது முதல் தரம் என்பதால், சாளரத்தின் ஊடக வெளியே பார்ப்பது , பக்கத்தில் இருந்தவருடன் கதைப்பது இப்படி பொழுது போய் விட்டது. டோக்கியோ விமான தளத்தில் வந்து இறங்கியதும் ஆளுக்கு ஒருபக்கமாக போகத் தொடங்கி விட்டார்கள். என்னை அங்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர்கள் வரவேற்று கூட்டிச்சென்றார்கள். அதன் பின்புதான் தனிமை என்றால் என்ன என்று முதல் முதலாக உணரத் தொடங்கினேன்! அவர்களின் மொழி புரியவில்லை. அதனால் கதைக்க முடியாத சூழ்நிலை. பொதுவாக பல்கலைக்கழகம் வரை தம் மொழியிலேயே படிப்பதாலும் மற்றும் பணி இடங்களிலும் அப்படியே என்பதாலும் ஆங்கிலம் அங்கு ஒருவரும் பாவிப்பதில்லை. மிக மிக சிலருக்கே ஆங்கிலம் தெரியும். என் பயிற்சி ஷிமோனோசேக்கி பல்கலைக்கழகத்தில் தரப்பட்டது. இது டோக்கியோவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடற்கரை கிராமம். ஆகவே இங்கு பொதுவாக ஒருவருக்கும் ஆங்கிலம் தெரியாது. எனவே எனக்கு ஒரு மொழிபெயர்ப்பாளர், பயிற்சியின் போது மட்டும் இருப்பார். மற்றும் படி அவர் தானும் தன்பாடும். அன்று கைத்தொலை பேசிகளோ, சமூக வலைகளோ இல்லாத காலம். ஒரு இருண்ட உலகத்தில் இருப்பது போல ஒரு உணர்வு. நான் இருந்த மாணவர் விடுதியில் எல்லோரும் ஜப்பான் மாணவர்கள். அவர்களுக்கு ஆங்கிலம் துப்பரவாக தெரியாது. அங்கு தொலைக்காட்சி இருந்தாலும் அவை முற்றிலும் ஜப்பான் மொழியிலேயே! நல்ல காலம் நான் ஒரு சிறிய வானொலி வாங்கி, அதன் மூலம் ஆங்கிலத்தில் உலக நடப்புக்கள் கேட்பேன். அது ஒன்று தான் எனக்கு கொஞ்சம் துணை ! தனிமையும் ஓர் உயிர்க்கொல்லிதான் என்பதை அங்குதான் நான் முதல் முதல் உணர்ந்தேன். குடும்பம் மற்றும் நண்பர்களைவிட்டுப் பிரிந்து வெளியில் சென்றது ஒரு முட்டாள்தனம் போல் எனக்கு இருந்தது. ஆமாம், தான் செய்த கொலைக் குற்றத்துக்காக ஒருவன் பத்துக்குப் பத்தடி அறையில், அங்கு வெளிச்சமோ, வெளியிலிருந்து சத்தமோ வருவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும் சிறைக்கு போனது போலவே நான் உணர்ந்தேன். என்ன குற்றம் செய்தேன், எனக்கு ஏன் இந்த வேதனை ?. இப்படியான எண்ணங்கள் நித்திரைக்கு போகும் பொழுது அடிக்கடி மனதில் நிழலாக ஆடும். என் குடும்பத்தாருடன் கடித போக்குவரத்து மட்டுமே, ஒரு மாதத்திற்கு அதிகமாக ஒரு கடிதமே! ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு சூழலில் தனிமையை உணரலாம். அருகில் யாரும் பேச்சு துணையாக இல்லாமல் இருக்கும்போது தனிமையை உணர்வது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. அப்படியான ஒன்றில் தான் நான் சிக்கி இருந்தேன், எப்ப ஒரு ஆண்டு முடியும் என்பதே, பயிற்சியை விட முக்கியமாக எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் தான், தற்செயலாக, அந்த பல்கலைக்கழகத்துக்கு உதவி விரிவுரையாளராக அமெரிக்காவில் உயர் கல்வி கற்று வந்த கணேயாசு என்ற பெண்ணை சந்தித்தேன். தனிமை என்ற சிறைவாசத்தில், இருட்டில் இருந்தவனுக்கு, வெளிச்சம் வந்தது போல் எனக்கு இருந்தது. பல்கலைக்கழக நேரம் போக மற்ற நேரங்களில் அவர் என் கூட்டாளியாக, வெளியில் சுற்றி திரிவது, பல விடயங்களை பற்றி கதைப்பது என தனிமை மறந்து மிகுதி காலம் சந்தோசமாக சென்றது. ஆனால் ஒரே ஒரு குறை மட்டுமே, இது வரை நகராது இருந்த நாட்கள், இப்ப கடுகதி வேகத்தில் போக தொடங்கி விட்டது! என்றாலும் நெடுதூர வாழ்க்கைப் பயணத்தில் சின்ன தெளிவைத் தந்தது என் அந்த தனிமை உலகம் என்று சொல்லலாம். நல்ல பாடங்கள் கற்றுத் தருவது வாழ்க்கையாம்! அந்த வாழ்க்கைக்கு நல்ல பாடங்கள் கற்று தருவது கட்டாயம் ஒரு தனிமை தான் என்பது என் அனுபவம்! "தனித்திருந்து விழித்திருந்து தனிநிலை அனுபவித்தவனுக்கு தனித்திருப்பதும் விழித்திருப்பதும் தடையாய் என்றும் தெரியவில்லை...!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Like
  4. "சாதகப் பறவைகள்" அத்தியடி, யாழில் எங்கள் வீட்டுக்கு அருகில் இரு வயது போன தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இருவரும் மாலை நேரத்தில் படலைக்கு அருகில் வீற்றிருந்து வருவோரையும் போவோரையும் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் இருவரும், வாயில் பற்கள் இல்லாத, பொக்கு வாய் என்பதால், பொதுவாக கஞ்சி குடிப்பதே தமது உணவாக கொண்டும் இருந்தார்கள். எனக்கு அவர்களை காணும் போதெல்லாம் 'சாதகப் பறவைகள்' ஞாபகம் தான் வரும். ஏன் என்றால் புராண, இதிகாசங்களில் இந்தப் பறவையை மழை நீரை மட்டுமே அருந்தும் என்றும் [இங்கு கஞ்சி நீர்] மேகத்தை நோக்கிக் வாயைப் பிளந்து காத்திருக்கும் [இங்கு மக்களை பார்த்து] என்றும் வர்ணிப்பதை பார்த்து இருக்கிறேன். அவர்கள் நலம் விசாரிப்பவர்களிடம் ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களை போதிப்பதும் மற்றும் அதேநேரம் கர்வம் கொண்டவர்களாகவும் இருந்தது, அவர்களை நான் 'சாதகப் பறவைகள்' என்று அழைப்பது சரியே என்று எனக்கு பட்டது. ரிக் வேதத்தின் இரண்டாம் மண்டலம், துதி 2-42 இல், இந்த 'சாதகப் பறவையை' நோக்கி: "ஓ, அதிர்ஷ்டம் தரும் மகிழ்ச்சியான பறவையே! பருந்து, கழுகு, வேடனின் அம்பு ஆகியவற்றில் இருந்து, உனக்கு ஒரு ஆபத்தும் நேரிடக் கூடாது." என்று போற்றுவது போல, நான் அவர்களை காணும் நேரம் எல்லாம் இந்த கொடிய கொரானாவிலும் மற்றும் நோய்களிலும் இருந்தும் இவர்களை என்றென்றும் காப்பாற்று என்று வேண்டுவது வழமை. அன்று நான், விடுதலையில் வெளியே போய், வீடு திரும்புகையில், அவர்களின் வீடு வெறிச்சோடி இருப்பதை கண்டேன். உடனடியாக அம்மாவிடம் விசாரித்ததில், இருவருக்கும் கடும் கொரோன வந்து ஒருவர் பின் ஒருவராக இவ்வுலகை விட்டு நீங்கினார்கள் என்பதை அறிந்து, என்னை அறியாமலே 'சாதகப் பறவைகள் இனி எம் மனதில் என்றும் சகாப் பறவைகள்' என்று கண்ணீர் மல்க கத்தியே விட்டேன்! "ஓ, மங்களச் செய்தி அறிவிக்கும் பறவையே! தந்தையர் பகுதியில் [இறந்துபோன முன்னோர்கள் வாழும்] இருந்துகொண்டு, ஒலி எழுப்பு. திருடர்களும், பாவம் செய்வோரும் எங்களைத் தாக்காமல் இருக்கட்டும். பொதுச் சபையில் நாங்கள் உரத்த குரலில் (உன்னைப் போல / சாதகப் பறவை போல) பேசுவோமாக." என மேலும் துதி 2-42 கூறுவது போல, அந்த உன்னத தம்பதிகள் எம்மை என்றென்றும் காப்பாறும் தெய்வங்கள் என்ற நம்பிக்கை என்னிடம் எனோ தானாகத் தோன்றி விட்டது !! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Like
  5. 'கொண்டாடினான் ஒடியற் கூழ்' பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்திருநாட்டில் வசாவிளான் என்ற ஊரிற் பிறந்த மகா புலவர் கல்லடி வேலுப்பிள்ளையின் (1860 – 1944) வீட்டுக்குப் பக்கத்தில் பெரிய கல் ஒன்று இருந்தது அதனால் எல்லோரும் அவரைக் கல்லடி வேலன் என்று செல்லமாக அழைத்தனர். சுப்பையா என்பவர் புலவரின் அருமை நண்பர். அவர் நிவிற்றிக்கொல்லை என்னும் ஊரிலுள்ள மருத்துவசாலையில் வைத்தியராகப் பணிபுரிந்தார். நிவிற்றிக்கொல்லை இரத்தினபுரிக்கு அண்மையில் உள்ளது. ஒரு நாள் புலவர் தம் நண்பரைப் பார்க்கப்புறப்பட்டார்; பல அல்லைதொல்லைப்பட்டு இரத்தினபுரியை அடைந்தார். அப்பால், நிவிற்றிக்கொல்லைக்குக் கால் நடையாகவே போனார். நேரமோ பட்டப்பகல். வெயில் நெருப்பாக எறித்தது. புலவர் மிழவும் களைத்துவிட்டார். பசி வயிற்றைக் கிள்ளியது. அவர் இடைவழியிலே தங்காது நடந்தார்; அவ்வாறு நடந்து நண்பரின் வீட்டை அடைந்தார். புலவரை எதிர்பாராது கண்ட நண்பரையும் மனவியாரும் அவரை வரவேற்று உபசரித்தனர்.; புலவரின் சுகநலங்களை விசாரித்தனர். வைத்தியரின் மனைவியார் புலவர் களைப்பாக இருந்ததை உணர்ந்தார். எனவே, அவர் புலவருடைய களைப்பைப் போக்க எண்ணினார். உடம்பு அலுப்புக்கு உவப்பான உணவு ஒடியற் கூழ் என்பது அவருக்குத் தெரியும். மேலும் புலவருக்கு ஒடியற் கூழில் மிக்க பிரியம் உண்டு என்பதும் அவருக்குத் தெரியும். வைத்தியரின் மனைவியார் கூழ் காய்ச்சத் தொடங்கினார். அவர் பானையில் நீரைக்கொதிக்க வைத்தார்; அதனுள் ஒரு சிறங்கை அளவு அரிசியைப் போட்டு வேக வைத்தார். பின்பு மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய் பயறு, பலாச்சுளை, பலாக்கொட்டை, முதலியவற்றையும் போட்டார்.; உப்பையும், புளியையும், அரைத்த மிளகாய்க்கூட்டையும், அளவாய்ப் போட்டார்; ஒடியல் மாவைக் கரைத்து அதனுள் சேர்த்தார்.; இவ்வாறாகக் கூழ் காய்ச்சினார்; பதமாய் இறக்கிய கூழுக்குள் வாழைக்காய்ப் பொரியலையும் இட்டுக் கலக்கினார். புலவரும் நண்பரும் கூழ் குடிக்க அமர்ந்தனர்; பலா இலையை மடித்துக் கோலினர்; கூழை அள்ளி ஊதி ஊதிக்குடித்தனர். அந்தக்கூழ் மிகவும் சுவையாக இருந்தது. ” என்ன அருமையான் கூழ்” என்று வியந்தார் புலவர். புலவரின் பசியும் பறந்தது; களைப்பும் நீங்கியது. அப்போது புலவரால் பாடாமல் இருக்க முடியவில்லை. ஆசுகவி பாடினார் இப்படி, “அல்லையுற்று இரத்தினபுரி அண்டி அப்பாலே நிவிற்றிக்கொல்லை அடைந்த அலுப்புக் கொண்டதற்கு கல்லடியான், வண்டாரும் மாலை அணி மற்புயற் சுப்பையனுடன் கொண்டாடினான் ஒடியற் கூழ்” ஒடியல் கூழ் என்பது பனங்கிழங்கை நன்றாகக் காயவைத்துக் கிடைக்கும் ஒடியலை மாவாக திரித்து எடுக்கப்பட்ட மாவைக் (ஒடியல் மா) கொண்டு தயாரிக்கப்படும் உணவு. கூழ் பதம் வருவதற்கும், பிரத்தியேகமான கூழ் வாசனைக்கும் ஒடியல் மா கட்டாயம் தேவை. ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் பிளா தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.
  6. "முக நூலில் மட்டும் சந்தித்த ஒருவருடன் காதல் கொள்ளலாமா?" நேரடியாக சந்திக்காத ஒருவருடன் உண்மையில் காதல் கொள்ள முடியாது. கணினி மூலம் [ஆன்லைன்] சில மணித்தியாலம் அல்லது சில நாட்கள் அல்லது சில மாதம் அல்லது வருடக் கணக்கில் அரட்டை அடிக்கலாம் அல்லது அளவளாவலாம். அதனால் ஒருவரை ஓரளவு அறிந்து கொள்ளலாம். இதனால் உண்மையான காதல் சாத்தியம் அங்கு தென்பட வாய்ப்பு உண்டு. என்றாலும் கோடு இட்டு குறிக்கக் கூடிய உண்மை என்ன வென்றால் கணினி மூலமான உறவு ஒரு உண்மையான ஒன்று அல்ல . இருவரும் தனி அறையில், தனி இடத்தில், தனிமையில், ஒரு சில நேரமாவது சந்தித்து, நேரடியாக கதைத்து உணர்வுகளை கருத்துக்களை பரிமாறும் வரை , இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம் என்பது சரியாக தெரியாது. எந்த நேரமும் நீ தடை செய்யப்பட்டு, இன்னொருவர் அந்த இடத்துக்கு மாற்றப் படலாம் ? யார் அறிவார் பராபரமே !!. நீங்க என்ன நடந்தது என்று வருந்தி கேட்டால், ம்ம் இது முகநூல் தானே, மாற்றி விட்டேன் என்பார். இனி எனக்கு செய்தி, அழைப்பு எடுக்க வேண்டாம் என்பார். அந்த காதல் அரோகரா தான் !! சிலர் எனது வாதத்தை மறுக்கலாம். அவர்களிடம் நான் கேட்பது: ஒருவரை ஒருவர் என்றுமே தொடாமல் எப்படி இருவரிடமும் காதல் நிலை கொள்ளும் அல்லது தொடரும்?? நான் இங்கு பாலியலைப் பற்றி கூற வில்லை, ஆனால், மற்றவரின் உடலை தொட்டு உணரும் உணர்வை கூறுகிறேன். "கண்கள் தொடாமல் கைகள் படாமல் காதல் வருவதில்லை , நேரில் வராமல் நெஞ்சை தராமல் ஆசை விடுவதில்லை, பக்கம் இல்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவ தில்லை," சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்கு கிறது: "எண் அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக் கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்"[514] நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள். இது முக நூலில் வருமா?????? முக நூலில் காதலன் காதலியை இயல்பாகப் பார்க்கவும் முடியாது ? காதலியை காதலனை மெய் தொட்டுப் பேசவும் முடியாது? அவளின் கூந்தல் மணமும் தெரியாது? "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீயறியும் பூவே" [குறுந்தொகை-2] பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே! எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக, பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..? இந்த கேள்விக்கு அங்கு இடமில்லை???? முகநூல் ஊடாக நறு மணம் வராது????? சேயாறு சென்று, துனைபரி அசாவாது, உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும் நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால், பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு, ''இனி வரின் எளியள்'' என்னும் தூதே. [குறுந்தொகை-269] சுறாமீன் தாக்கிய புண் ஆறி என் தந்தை மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுவிட்டார். என் தாயும் உப்பை நெல்லுக்கு பண்டைமாற்று செய்து வர உப்பங்கழ னிக்குச் சென்றுவிட்டாள். எனவே சேர்ப்பன் இந்த நேரத்தில் வந்தால் இனிதாக என்னைப் பெறலாம் என்று, தாமதம் இல்லாமல், அதிக தூரமான வழியைக் கடந்து விரைந்துச் சென்று கூறும் படி தூது விடுகிறாள் . அவள் போய் சொல்லி அவன் வருவதற்குள், கடலுக்கு சென்ற தந்தையும் மீனுடன் வந்து விடுவான் , தாயும் நெல்லுடன் வந்து விடுவாள். இது தான் அந்த காலம். ஆனால் இன்று கணினி [ஆன்லைன்] மூலம் உடனடியாக செய்தி அனுப்பி , அவர்கள் வருவதற்குள் இலகுவாக களவு நெறி பின்பற்றலாம் . இதற்கு வேண்டும் என்றால் கணினி உதவலாம்? காதலில் விழுவதென்றால், ஒருவருடன் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரம் ஒன்றாக கழிப்பதாகும். கட்டாயம் முன் திட்ட மிட்ட , நன்கு ஆயுத்தப் படுத்திய, முக நூல் சந்திப்பு அல்ல. அங்கு நீங்கள் உங்கள் சிறந்த தோற்றத்தைக் காண்பிப்பதுடன், பேசுவதற்க்கான சரியான மனநிலையிலும் இருக்கலாம்? காதலிப்பது என்பது எல்லா நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும். அப்பதான் உண்மை காதல்! ஆன்லைனில் கதைத்தல் அல்லது வீடியோ அழைப்பு கள் மூலம் நேரடியாக கதைத்தல் [online chats or Face timing] என்பவை அர்த்தமுள்ள உரையாடல்களுக்கு வழி வகுக்கும் என்றாலும், இவை இரண்டும் நன்றாக திட்ட மிட்ட உரையாட லுக்கும் வழி வகுக்கும். உண்மையான காதல் மகிழ்விலும் சோகத்திலும் குழப்பத்திலும் அரும்ப வேண்டும். உதாரணமாக, ஒருவர் குறுந்தகவல் [text] ஒன்றை அனுப்புகிறார் என்று வைப்போம். நீங்கள் அதற்கான பதிலை உடன் அனுப்ப வேண்டும் என்று இல்லை . ஆர அமர சிந்தித்து மற்றவரை கவரும் விதமாக செயல்படலாம். அதே போல, வெளிச்சம் மற்றும் பின்னணியை நன்றாக அமைத்து ,உன்னை நீ விரும்பிய வாறு கவர்ச்சிகரமாக காட்சிப்படுத்தி, உரையாடலாம். மேலும் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால், ஒரு பேஸ்பால் தொப்பி [baseball cap] அணிந்து மறைத்து விடலாம். அப்படியே, தழும்பு, வடு இருந்தால் அதற்கு தக்கதாக உடை அணிந்து மறைத்து விடலாம். இவை நேரடியாக செய்ய முடியுமா? முக நூல் சந்திப்பு ஒரு காதல் தேர்விற்கு உதவலாம். அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால், மற்றவர் கையில் ஒரு சில நேரம் உண்மையில் கழிக்கும் போது தான் அதன் வலிமை, உண்மை தெரியம் . அந்த சுகம் முக நூலில்,கணனியில் கிடைக்கப் போவதும் இல்லை. மேலும் "மின்னுவதெல்லாம் பொன்னல்ல. மெசேஜ் பண்றதெல்லாம் பெண்ணல்ல", ஆகவே: "சந்திப்போமா இன்று சந்திப்போமா தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா எதிர் காலம் இன்ப மயமாக என்றும் இளமையும் இனிமையும் துணையாக நெஞ்சம் கனிவாக கொஞ்சம் துணிவாக தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  7. "ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்" இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள். அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள், “அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்” கணவனும் பார்த்தான். ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள். திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள், “அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..? இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..” கணவன் அமைதியாகச் சொன்னான், “இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்” இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை. ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன. அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை... நம் குறைகளுக்கோ காரணங்கள் மட்டும் தான் வலுவாக வைத்திருக்கிறோம். அந்தக் காரணங்கள் இல்லா விட்டால் நாம் பத்தரை மாற்றுத் தங்கம் தான். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த "யாருக்கும் வெட்கமில்லை" என்ற தமிழ்த் திரைப் படத்தில், கண்ணதாசனின் ஒரு தத்துவ பாடல் உண்டு. “ஊருக்கும் வெட்கமில்லை இந்த உலகுக்கும் வெட்கமில்லை யாருக்கும் வெட்கமில்லை இதிலே அவளுக்கு வெட்கமென்ன..! ஏ சமுதாயமே.... சுட்டும் விரலால் எதிரியை காட்டி குற்றம் கூறுகையில்..! மற்றும் மூன்று விரல்கள் உங்கள் மார்பினை காட்டுதடா..! எங்கேயாவது மனிதன் ஒருவன் இருந்தால் சொல்லுங்கள்..! இருக்கும் அவனும் புனிதன் என்றால் என்னிடம் காட்டுங்கள்..!" திருவள்ளுவரும் அழகாகச் சொல்வார். “ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு” [குறள்:190] அடுத்தவரிடம் குறை காண்பதில் இருக்கும் ஆர்வத்தை நம்மிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் காட்டினால், இவ்வுலகில் இவ்வளவு தீமைகள் இருக்குமா? அடுத்தவர் குறைகளைக் காண்பதில் தான் நமக்கு எத்தனை அக்கறை? எத்தனை வேகம்? அப்போது மட்டும் நம் அறிவு எத்தனை கூர்மையாய் செயல்படுகிறது. அடுத்தவர் திருந்துவதினால் நமக்கு இருக்கும் பயனை விட நம்மை நாமே திருத்திக் கொள்வதில் தான் நமக்கு நிறையப் பயன் இருக்கிறது என்கிறார் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே!! . இப்படிப்பட்ட இயல்பு நம்மிடம் இருக்கும் வரை நாம் குறைகளை நீக்கிக் கொள்ளவோ, திருந்தவோ சந்தர்ப்பம் அறவே இல்லை.மேலும் குறைகளை நீக்கிக் கொண்டு நாம் திருந்தினால் நம் வாழ்க்கையில் அடையும் பயன்கள் ஏராளமானவை. உதாரணமாக, நாம் நம் குறைகளை நீக்கிக் கொண்டு சிறப்பாக வாழும் போது அடுத்தவர்கள் நம்மைப் பார்த்து மாற அது ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும். குறையுள்ள மற்றவர்களும் நல்வழிக்கு மாற வாய்ப்புண்டு. எனவே விமர்சனம் தவிர்த்து நல்ல உதாரணமாக இருந்து வழிகாட்டு வோம்.! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. எல்லோருக்கும் என் நன்றிகளும் வாழ்த்துக்களும் வாதம் பிரதிவாதம் என்றும் உண்மையைக் கண்டறிய நல்ல வழியே ! எனக்கு ஒரு ஆமை சம்பந்தமான தேவாரம் இப்ப ஞாபகம் வருகிறது. இது கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவருமான திருநாவுக்கரசு நாயனாரால் பாடப்பட்டது "வளைத்துநின் றைவர் கள்வர் வந்தெனை நடுக்கஞ் செய்யத் தளைத்துவைத் துலையை யேற்றித் தழலெரி மடுத்த நீரில் திளைத்துநின் றாடு கின்ற வாமைபோற் றெளிவி லாதேன் இளைத்துநின் றாடு கின்றே னென்செய்வான் றோன்றி னேனே." ஐந்து கள்வர் போன்ற ஐம்பொறிகள் இவ்வுடம்பில் என் உள்ளத்தைச் சுற்றி நின்று கொண்டு என்னை நடுங்கச் செய்தலால், எங்கும் செல்லாதபடி பிணித்து வைத்துப் பாத்திரத்தில் நீரை நிரப்பி அப்பாத்திரத்தைத் தீயினால் சூடாக்க, அந்நீரிலே பிணியை அவிழ்த்து நீந்தவிட்ட அளவிலே மகிழ்வோடி நீந்தி விளையாடிக்கொண்டு சூட்டில் வெந்து உயிர் நீங்க இருக்கும் அவலத்தைப் பற்றிச் சிந்திக்க மாட்டாத ஆமையைப் போல உள்ளத்தெளிவு இல்லாதேனாய் வாழ்க்கையில் இளைத்து நின்று தடுமாறுகின்றேன். வேறு யாது செய்வதற்காகப் பிறப்பெடுத்தேன் நான் ? என கேட்கிறார் . அது பொதுவாக இன்று எல்லோருக்கும் பொருந்தும். தலைக்கு மேல் போனபின்புதான் எங்கே பிழை / தவறு என்று தேடுகிறோம் . அதற்கு பல விளக்கங்களும் கொடுக்கிறோம். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றால் , என்னையும் சேர்த்து, அது நன்றே !!
  9. "அயிர, அயிர வைத்தான் விடுங்கள், ஆமை - அருகா, கொட்டை இரிக்கா, நீர்யோக நகரம், எரு-சலேம் இவற்றை வாசித்த பின்னுமா இது நையாண்டி என்பது உங்களுக்கு விளங்கவில்லை? " இது முழு புளுகு என்பது புரிய யாழுக்கு புதிது , பழது தேவையில்லை ஆனால் "இவ்வாறாக ஆமையில் ஏறி மட்டும் அல்ல, அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள். இதைத்தான் பின்னாளில் வைரமுத்து கூட ஒரு பாடலில் எடுத்தாண்டிருப்பார். " என தொடங்கி அந்த பொய்யை எடுத்துக் காட்டி நயாண்டி செய்யத் தவறி அதன் தொடர்ச்சிபோல மேலும் மேலும் புளுகியது தான் அங்கு ஏற்பட்ட தவறு என்று எண்ணுகிறேன் ? என்றாலும் "- உடான்ஸ் சாமி மூலிகை மயக்கத்தில் அருளியது- காலம் 10/04/2024 இடம் முன்னர் இலந்தை நகர் என அழைக்கப்பட்டு, இப்போ இலண்டன் என மாறிய நகர்." இதில் ஒரு நையாண்டி தெரிகிறது வாழ்த்துக்கள் !! "ஆனால் ஒரு விடயம் நையாண்டியாக இருக்க, உங்களுக்கு அது நையாண்டி என விளங்க வேண்டும் என்பது ஒரு முன் தகமை அல்லவே." அதனால்தான் சொல்லுகிறேன் முட்டாள் கூட்டங்கள் அதை மேலும் முன்னதையின் தொடர்ச்சியாக பகிரத்தொடங்கும் என்று
  10. "எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் பொறுக்கி எடுத்து எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" மாலை: "தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு வந்தனம் கூறி வசந்தி போறாள் பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" இரவு: "சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் கந்தப்பு விராந்தையில் பாய் விரிக்கிறான் வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான் செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள் தந்தன தந்தன தாளம் போட்டு எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!
  11. "எந்தை அவள் ..........." [ எந்தை அவள் சிரித்து, சிந்தித்து திருந்த ஒரு நையாண்டி பாடல்] காலை: "கந்தப்பு வண்டியில் பால் விற்கிறான் முந்தைய கடனை பேசி வாங்கிறான் சந்தானம் கிணற்றில் முகம் கழுவுறான் சிந்திய தண்ணீரை வாழைக்கு விடுறான் செந்தணல் சூரியன் மேலே எழுகிறான் பந்தி பந்தியாய் பறவை பறக்குது மந்த வெயில் மெல்ல சுடுகுது எந்தன் கண்ணகி போர்வை விலத்துகிறாள்!" நண்பகல் [மத்தியானம்]: "சந்தியில் சத்தமிட்டு கந்தப்பு வாறான் கந்தை துணியுடன் சுந்தரி சமைக்கிறாள் சந்தனப் பொட்டு பள பளக்குது சந்தானம் நந்திக்கு தீபம் காட்டுறான் செந்தாமரை கண்ணாடியில் அழகு தேடுறாள் வெந்திய குளம்பு அடுப்பில் கொதிக்குது சிந்திய முத்துகள் பொறுக்கி எடுத்து எந்தன் ஊர்வசி அரட்டை அடிக்கிறாள்!!" மாலை: "தொந்தி பிள்ளையாரை விழுந்து கும்பிட்டு வந்தனம் கூறி வசந்தி போறாள் பிந்திய பகலில் சூரியன் மறைகிறான் சுந்தரி பிள்ளைக்கு நிலவு காட்டுறாள் பந்து பிடித்து செந்தாமரை துள்ளுறாள் சந்து பொந்துக்குள் குஞ்சுகள் போகினம் உந்தி ஊஞ்சலை விரைவா ஆட்டி எந்தன் சிந்து, பைரவி பாடுறாள்!!!" இரவு: "சுந்தரி பிள்ளையை தொட்டிலில் ஆட்டுறாள் கந்தப்பு விராந்தையில் பாய் விரிக்கிறான் வந்தோரை வசந்தி அன்பாய் கவனிக்கிறாள் சந்தானம் அவளுக்கு ஒத்தாசை புரிகிறான் செந்தாமரை மாடியில் சரித்திரம் படிக்கிறாள் அந்தபுரத்து ரகசியங்கள் அலசி பார்க்கிறாள் தந்தன தந்தன தாளம் போட்டு எந்தன் மாதவி அபிநயம் பிடிக்கிறாள்!!!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] குறிப்பு: நான் விளங்கிக்கொண்ட நையாண்டி இதுதான்!!
  12. "ராமன் எத்தனை வஞ்சகனடி?" "தீபம் ஏற்றி திலகம் இட்டு மங்கையர் வலம் வந்து தீபம் கொளுத்தி ராவணன் எரித்து வேங்கையர் துள்ளி ஆடி தீய சொற்களால் சீதைக்கு எய்தவனை நங்கையர் மூக்கு அறுத்தவனை தீண்டாதவன் என்பதால் சங்காரம் செய்தவனை மங்கையர் பாடி கொண்டாடுகிறார்கள்!" "தீர மிக்க வாலியை வஞ்சித்து குரங்கின் உதவி பெற்றவனை தீவின் சிறையில் நிமிர்ந்து நின்றவளை இரக்கமின்றி தீயில் இறக்கியவனை தீதோ நன்றோ ஒன்றாய் வாழ்ந்தவளை இரக்கமற்று காடு அனுப்பியவனை தீபம் ஏற்றி 'ராம-சீதை'யாக வாழ உரத்த குரலில் தொழுகின்றனர்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. "கில்கமெஷ் பாடல் / Love Songs In Sumerian Literature" "ஆடை நெகிழ உடல் மிளிர சாடை காட்டி நளினமாய் அமர்ந்தாள் காலை அகட்டி காமம் தெளித்து தலை அசைத்து சிலையாய் இருந்தாள்!" "பெண்மை வனப்பு சுண்டி இழுக்க ஆண்மை ஆசை அவளில் போக்க கருத்த என்கிடு மிரண்டு வந்தான் பருத்த உடலை காட்டி வந்தான்!" "அருகில் வந்து முகர்ந்து ரசித்தான் உருண்டை கண்களால் கூர்ந்து பார்த்தான் எடுத்த எடுப்பில் அவளை தழுவினான் அடுத்து தன் உடையை நழுவினான்!" "ஈடுஇல்லா அவன் ஆண்மை கண்டாள் நடுங்கும் அவன் தொடையை பற்றினாள் மலை சாரலில் மந்தை மேய மாலை மயக்கத்தில் இருவரும் கொஞ்சினர்!" "சோலை நடுவில் தம்மை மறந்து ஓலை மெத்தையில் இரண்டு ஒன்றானது இதய தடாகத்தின் இன்ப அலையில் இதமான இரவின் இலக்கியம் போதித்தாள்!" "மஞ்சள் நிலாவில் கவர்ச்சி காட்டி வஞ்சை இதழால் முத்தங்கள் கொடுத்தாள் ஏழு நாட்களாய் போதையில் மயங்க எழுந்த ஆசைகள் மடியில் கழிந்தன!" "மடியில் கண்ட சுகம் ஒழிய வீட்டு ஞாபகம் நெஞ்சில் மலர நெஞ்சை விஞ்சும் காமங்கள் மறைந்து கொஞ்சம் தனியாய் இருவரும் பிரிந்தனர்!" [கில்கமெஷ் 78] [மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] மெசொப்பொத்தேமியாவில் உள்ள புகழ் பெற்ற நகரமான உருக்கில் தான் "கில்கமெஷ்" காப்பியம் [“Gilgamesh Epic”/கி மு 2100] உருவாகின. இந்த கில்கமெஷ்" காவியத்தில் என்கிடு [Enkidu] என்ற ஒரு காட்டு வாசிகும் சமாட் [Shamhat] என்ற தேவ தாசிக்கும் இடையில் ஏற்படும் உறவு சில சிற்றின்பப் பாடல்கள் மூலம் வர்ணிக்கப்படுகிறது. சமாட் என்கிடுவை தனது காதல் லீலையால் அவனது முரட்டு மிருக குணத்தை சாந்தப் படுத்தினாள். அவள் தனது ஆடையை நெகிழ விட்டு காமத்தை மூட்டக் கூடியவாறு காட்டின் நிலத்தில் ஓய்யாரமாக அமர்ந்து இருப்பதுடன் அந்த காட்சி தொடங்குகிறது. என்கிடு மிக எச்சரிக்கையுடன் அவளை நெருங்கினான். ஒரு வேளை அவன் மிரண்டோ அல்லது அவள் அங்கு தைரியமாக பெருமித அழகு வாய்ந்த சிலை போல தன் பெண்மையின் வனப்பை காட்டிக் கொண்டு இருக்கும் அந்த காட்சி கொடுத்த அச்சுறுத்தலாலும் இருக்கலாம். இப்ப இந்த பாடல் எப்படி சமாட் , அவனின் இந்த வருகைக்கு முகம் கொடுத்தாள் என வர்ணிக்கிறது. Uruk was on of the oldest Sumerian City state, where “Gilgamesh Epic” originated. Here we see the love between Enkidu, the wild man & Shamhat, a temple prostitute. For instance, in one erotic scene, Shamhat tames Enkidu through her love-arts. The scene opens with Shamhat positioning herself on the forest floor and Enkidu warily drawing near, perhaps afraid or even intimidated by her bold stature. The narrative then describes how Shamhat boldly initiates the encounter: "She stripped off her robe and lay there naked, with her legs apart, touching herself. Enkidu saw her and warily approached. He sniffed the air. He gazed at her body. He drew close, Shamhat touched him on the thigh, touched his manhood and put him inside her. She used her love-arts, she took his breath with her kisses, held nothing back, and showed him what a woman is. For seven days he stayed erect and made love with her, until he had had enough" (Gilgamesh 78)
  14. "அவர்களைக் கலாய்க்கும் ஒரு நையாண்டிப் (sarcastic) பதிவு இது. நையாண்டி விளங்க வேண்டுமானால் சுற்றி நடக்கிற சமகால நிகழ்வுகள் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்." முதலில் ஒரு நபரையோ நிகழ்வையோ கேலி செய்யும் நோக்குடன் நகைச் சுவை தொனிக்கப் பதியப்பட்ட பதிவுகள் அல்லது நாட்டார் பாடல்கள் நையாண்டிப் பாடல்கள் / பதிவுகள் அல்லது கேலிப்பாடல்கள் / பதிவுகள் எனப்படும். நையாண்டிப் பாடல்கள் அல்லது பதிவுகள் பொதுவாக சமூக சீரமைப்பு நோக்கிலும் வளர்ச்சி நோக்கிலும், அவை மீறப்படும் போது எழும் சீற்றம் காரணமாகப் பாடப்பட்டவைகளாகக் அல்லது பதியப்படவையாக கருதப்படுகின்றன. உதாரணமாக காக்கொத்தரிசாம் கண்ணுழுத்த செத்த மீனாம் போக்கற்ற மீரானுக்குப் பொண்ணுமாகா வேணுமாம். கச்சான் அடிச்ச பின்பு காட்டில் மரம் நின்றது போல் உச்சியில நால மயிர் ஓரமெல்லாம் தான் வழுக்கை இது பொருத்தமில்லாத திருமண சம்பந்தம் ஒன்று பேசப்படும் போது பதியப்பட்ட கேலி பாடல் ஆமை பதிவில் எங்கே எதாவது ஒன்றை கேலி செய்கிறதா ? அல்லது நீங்கள் கூறியவாறு சுற்றி நடக்கிற சமகால நிகழ்வுகள் ஒன்றை அல்லது பலதை குறித்துக்காட்டி கேலி செய்கிறதா ? தேடுகிறேன் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறேன்!!!! அந்த ஆமை வலைதளத்தில் பரப்பப்பட்டு பலர் முட்டாள்தனமாக அதை நம்பி மீள மீள பதிவு செய்த ஒன்று !! நான் பிழை என்றால் மன்னிக்கவும் நன்றி
  15. திடீரென்று “ஆமையின் ரகசியம்” என்று ஒரே விசயத்தை பலர் பரப்பி வருவது வேடிக்கையாக இருக்கிறது. ஒரு ஆமை சிற்பத்தின் படத்தைப் போட்டு விட்டு, “தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்……………….,” என்று கதை விடப் பட்டுள்ளது. எந்த ஆதாரமும் இங்கு கொடுக்கப் படவில்லை. ஆனால், இணைதளங்களிலும் பரப்ப ஆரம்பித்துள்ளனர். அதில் ஒன்று தான் இந்த கட்டுரை தயவு செய்து ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரங்களை காட்டுங்கள் / சமர்ப்பியுங்கள் "அயிரை மீனின் ஓட்டத்தை வைத்து தமிழர்கள் ஐரோப்பா போனதை பாடி நிற்கும் சங்க கால செய்யுள்தான் “அயிர, அயிர ஐரோப்பா” என்ற செய்யுள்." இது என்ன புது புரளி, அந்த சங்க இலக்கிய கவிதையை பதிவிட முடியுமா ?? பூகோளம் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட தொலைக் காட்சி நிகழ்ச்சியான [தேசிய புவியியல் ஒளியலை வரிசை / நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சி / National Geographic channel] "மனித இனத்தின் பயணம்" என்ற தொடரையும் , மற்றும் சங்க இலக்கியத்தின் ஆதாரங்களையும் மற்றும் உலக வரலாற்றையும் கொஞ்சம் தயவு செய்து புரட்டுங்கள் "உண்மையை அறிதல், உண்மையை நேசித்தல், உண்மையுடன் வாழ்தல், மனிதனின் முழு கடமையாகும்" நன்றி
  16. [போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில்] "வேரைத் தேடும் தளிர்கள்" ஒரு சமயம், இலங்கையின் முல்லைத்தீவில், ரவி என்ற இளைஞனும் அவனது சகோதரி மாயாவும், போரினால் பாதிக்கப்பட்ட நிலத்தின் எச்சங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு, மோதலின் வடுக்கள் இன்னும் மனதில் இருந்து நீங்கவில்லை, தங்களைப் போன்ற பல அனாதைகளின் தடயங்களை அது விட்டுச் சென்றுள்ளதை உணர்ந்தார்கள். அவர்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனரா? அல்லது இடைவிடாத குண்டுவெடிப்பு மற்றும் ஷெல் வீச்சுக்கு பலியாகினரா?, ஒன்றுமே அவர்களுக்குத் தெரியவில்லை. அப்பொழுது அவர்கள் குழந்தைப் பருவம். ஆனால் இப்ப, உயர் வகுப்பு பயிலும்18 வயது ரவியும், சாதாரண வகுப்பு பயிலும் 16 வயது மாயாவும் தங்கள் குடும்பத்தின் தலைவிதியைச் சுற்றியுள்ள மர்மத்தை அறிய, அவிழ்க்க உறுதியாக இருந்தனர். அவர்களின் கொஞ்ச கொஞ்ச நினைவுகளுடனும் மற்றும் அவர்களுக்கு இன்று தெரிந்த மூத்தவர்களால் சொல்லப்பட்ட அல்லது சமூக ஊடங்களுக்கூடாக அறிந்த செய்திகள் மற்றும் கதைகளுடனும், அவ்வற்றை தங்களின் தேடுதலுக்கான ஆயுதமாக ஏந்திய அவர்கள், நம்பிக்கை மற்றும் பொறுமையுடன் 'வேரைத் தேடும் தளிர்களாக', தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அவர்களின் பயணம் பல இடையூறுகளை மற்றும் வசதியின்மைகளை சந்திக்க நேரிட்டாலும், ரவியும் மாயாவும் தங்களுக்கு வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்கக்கூடிய பல அன்பான உள்ளங்களின் ஆதரவுகளையும் பெற்றனர். அவர்கள் முல்லைத்தீவில் கிராமம் கிராமமாகச் சென்ற போது, உள்ளூர் கிராமவாசிகளைச் சந்தித்து கதைத்தனர். அவர்கள் மீள்தன்மை மற்றும் உயிர்வாழ்வதற்கான கதைகளைப் பகிர்ந்து அவர்களை சோர்வில் இருந்தும் கவலையிலும் இருந்தும் மீட்டு எடுக்க பலவகையில் முயற்சித்தனர்.சிலர் அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதியும் வழங்கினர், மற்றவர்கள் தங்கள் குடும்ப வரலாற்றில் தாம் அனுபவித்த சொல்லமுடியாத துயரங்களை, கொடுமைகளை பகிர்ந்தனர். அதேவேளை அந்த இறுதி மே மாத நாளில் உயிர் பிழைத்தவர்கள், தற்காலிக அகதிகள் முகாம்களில், அவர்களைப் போன்ற துயரங்களைச் சந்தித்தவர்களுடன் அவர்கள் நட்புறவைக் கண்டனர். அவர்களுடன் தங்களின் இழப்பு மற்றும் வேர்களைத் தேடும் நம்பிக்கையின் கதைகளை பரிமாறிக் கொண்டனர், ஒருவருக் கொருவர் அங்கு ஆறுதல் கண்டனர். முல்லைத்தீவில் உள்ள முதியவர்களுடனும் அல்லது அந்த நேரம் எதோ ஒரு வகையில் அங்கு பணியாற்றியவர்களுடனும், தங்கள் வேர்களுக்கான பதில்களைத் தேடுவதில் முனைப்பாக இருந்தார்கள். பலவேளைகளில் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கா விட்டாலும், ஓர் இருவரிடம் இருந்து தங்கள் குடும்பத்தின் சில ஆரம்ப தடயங்களை பெற்றனர். அது அவர்களின் முதல் வெற்றியும் மகிழ்ச்சியும் ஆகும், இந்த சந்திப்புகள் மூலம், ரவியும் மாயாவும் தங்கள் பயணம் தங்களுடையது என்றாலும், அவர்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதை அறிந்து கொண்டனர். ஏனென்றால், வழியில் சந்தித்தவர்களின் இதயங்களில், அவர்கள் தொடர்வதற்கான வலிமையையும் ஆதரவையும் கண்டார்கள். ஒவ்வொரு தங்கள் அடியிலும், அவர்கள் தங்கள் வேர்களாகிய, பெற்றோர்கள் மற்றும் அவர்களின் முன்னோர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொணரும் முயற்சியில் நெருங்கி நெருங்கி வந்தனர். சமூக ஊடங்களும் அவர்களுக்கு துணை இருந்தனர். இதனால் சிலவேளை அரச அமைப்புகளில் இருந்தும் சில தடைகளும் பயமுறுத்தலும் அவர்களுக்கு நேர்ந்தது. ரவியும் மாயாவும் ஆகிய தளிர்கள், தாங்கள் இது வரை பெற்ற தரவுகளின் அடிப்படையில், வேரைத் தேடும் முதல் முயற்சியாக அவர்களின் குடும்ப வீட்டின் இடிபாடுகள் நிறைந்த, தாம் பிறந்த மண்ணை கண்டுபிடித்தனர், அது ஒரு காலத்தில் அழகாக வசதியாக இருந்த வீட்டின் மிஞ்சிய பகுதிகளாகும், இன்று பற்றைகளும் புதருமாக அதைச் சூழ்ந்து இருந்தது. இடிபாடுகளுக்கு மத்தியில், அவர்கள் தங்கள் கடந்த காலத்தின் சில தடயங்களைக், அவர்களின் அம்மா நேசித்த உடைந்த தேநீர் கோப்பை மற்றும் ஒரு காலத்தில் தங்கள் தந்தையின் விருப்பமான நாற்காலியை அலங்கரித்த ஒரு கிழிந்த துணி, ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். இராணுவம் இந்தப்பகுதியை பிடித்து, தடை செய்யத பகுதியாக, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அண்மையில் தான் விட்டு விட்டு சென்றது என அறிந்தார்கள். அவர்கள் வீட்டில் ஒரு றங்குப் பெட்டி இருந்தது ரவிக்கு இன்னும் ஞாபகத்தில் இருந்தது. அது இப்போதும் எங்கேயாவது இந்த உடைந்த இடிபாடுகளுக்கிடையில் இருக்கும் என்று அவன் நினைத்தான். அவனின் தந்தை அதை அடிக்கடி தூசி தட்டிவிட்டுத் திறப்பார். உள்ளுக்குள் அம்மாவின் கூறைச் சீலை, அம்மா, அப்பாவினது சாதக ஓலை, தங்களது சாதகக் கொப்பிகள் என்பவற்றுக்கு அடியில் ஒரு பிறவுண் பேப்பரினால் செய்த பையிற்குள் இருந்து சில காணி உறுதிகளை அவனின் அப்பா எடுத்துத் தூசிதட்டுவார். ஆனால் தூசி வராது. அடிக்கடி தூசிதட்டினால் எப்படி தூசி இருக்கும்? இருந்தும் திரும்பவும் தூசி தட்டுவார். பிறகு சில பக்கங்களை வாசிப்பார். பனை வடலி பதினான்கு பரப்பு, தோட்டக் காணி பத்துப் பரப்பு, தென்னங் காணி இருபது பரப்பு என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு பழையபடி அடுக்கி வைப்பார். பூச்சிகள் வராமலிருக்க நப்தலின் போட்டு றங்குப் பெட்டியை மூடி கவனமாக வைப்பார் என்பது அவன் மனத்தில் நிழற் படமாக ஓடியது. அந்த நேரம் ஒரு முதியவர் ஒரு பழைய துவிச் சக்கர வண்டியில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து அங்கு இவர்களைக் கண்டு வந்தார். அவரைக் கண்டதும் ரவிக்கு, முன்பு அவன் சிறுவர் பாடசாலை [nursery] போகும் காலத்தில், அவனின் ஊரைச் சேர்ந்த கந்தையா என்ற ஐம்பது அல்லது ஐம்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரின் ஞாபகம் அவனுக்கு வந்தது. அவர் அப்பொழுது தினம் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். பின் கொஞ்சம் பொறுத்து மதியத்துக்கு முன், பின்னுக்கு வாழைக்குலையோ, வெங்காயப்பிடியோ, அல்லது செத்தல் மிளகாய் பையோ அந்த அந்த சீசனுக்கு ஏற்ற மாதிரி பொருட்களுடன் போவார். எனவே, அவன் அவரை, நீங்கள் கந்தையா தாத்தாவை என்று கேட்க, ஆமாம், நீ ரவியோ ? என்று அவரும் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார். கந்தையா, தான் உறுதி, புகைப்பட ஆல்பம் மற்றும் முக்கிய தப்பிய ஆவணங்களும் பெறுமதியான சில பொருட்களும் எடுத்து பத்திரமாக வைத்திருப்பதாக கூறி, உடனடியாகவே எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். என்றாலும் அம்மா, அப்பாவுக்கு என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என்கிறார் ரவியும் மாயாவும் மகிழ்ச்சியின் தருணங்களைக் காட்டும் அந்த புகைப்பட ஆல்பத்தை ஆவலாக வாங்கி பார்த்தார்கள். அதில் அம்மா, அப்பா மற்றும் தாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு, அவர்கள் இருவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் ஒழுகியது. ஒவ்வொரு கண்டு பிடிப்பும் தங்கள் அன்புக்குரிய அப்பா, அம்மாவைக் கண்டுபிடிப்பதற்கான உறுதியைத் மேலும் மேலும் அவர்களுக்குத் தூண்டியது. அவர்களின் தேடலானது அவர்களை தற்காலிக அகதி முகாம்களுக்கும் அழைத்துச் சென்றது. அங்கே, அவர்கள் இழப்பு மற்றும் துயரங்களுடன் உயிர்வாழும் ஏனையவர்களின் கதைகளையும் பகிர்ந்து கொண்டனர். சிலர் தங்கள் பெற்றோரை படையினரால் அழைத்துச் சென்றதை நினைவு கூர்ந்தனர், மற்றவர்கள் கொடிய குண்டுவெடிப்புகளிலிருந்து அதிசயமாக தப்பித்ததை விவரித்தார்கள். ஒவ்வொரு கதையும் பல உண்மைகளை வெளிப்படுத்தியது, ஆனால் அவர்களின் சொந்த குடும்பத்தைக் கண்டுபிடிப்பதற்கு அது அவர்களை நெருங்கவில்லை. மனம் தளராமல், ரவியும் மாயாவும் முல்லைத்தீவின் சிக்கலான குழப்பமான பாதைகள் நிறைந்த தெருக்களில் பயணித்து, ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்று பார்த்தார்கள். அவர்களின் இதயங்கள் துக்கத்தால் பாரமாக இருந்தாலும், நம்பிக்கையை கைவிட வில்லை. நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறியபோது, அவர்களின் தேடல் ஒரு பயனற்றதாகத் அவர்களுக்குத் தோன்றியது, மேலும் அவநம்பிக்கை அவர்களைத் தின்றுவிடும் போல இருந்தது, அத்தனை இடையூறுகள் அவர்களுக்கு வந்தது. அதனால் அவர்கள் சோர்வு அடைந்து விட்டுக் கொடுக்கும் விளிம்பில் இருந்தபோது, ஒரு திடீர் சந்திப்பு எல்லாவற்றையும் மாற்றியது. ஒரு நாள் ரவியும் மாயாவும் ஒரு கோவிலில் அடைக்கலம் தேடும்போது வயதான துறவியை அங்கு கண்டனர். அவர் அமைதியான தியானத்தில் அப்பொழுது அமர்ந்தார், ஒளிரும் கற்பூர வெளிச்சத்தில் அவரது அமைதியான நடத்தையால் கவரப்பட்ட அவர்கள் அவரை எச்சரிக்கையுடன், மெதுவாக அணுகினர். ரவி: "மன்னிக்கவும் குரு. நாங்கள் எங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களை தேடி சில வாரங்களாகத் திரிகிறோம். எங்களுக்கு ஏதாவது அறிவுரை இருக்கிறதா?" என்றான். வயதான துறவி: (கண்களைத் திறந்து, மென்மையான புன்னகையுடன் அவர்களைப் பார்த்து) "ஆ, உண்மையான பற்றுடன் தேடும் குழந்தைகளே, . என்னுடன் உட்கார்ந்து, வேர்கள் மற்றும் தளிர்கள் பற்றி பேசுவோம்" என்கிறார். மாயா: (ஆர்வத்துடன்) "ஐயா, வேர்கள் மற்றும் தளிர்கள்?" ஆச்சரியத்துடன் துறவியை பார்த்தாள். முதிய துறவி: (ஆமா என்று தலையசைத்து) "ஆம், என் குழந்தைகளே. தளிர்கள் வளர பூமியில் இருந்து ஊட்டத்தை தேடுவது போல, உங்கள் குடும்ப மரத்தின் வேர்களை நீங்கள் தேட வேண்டும். ஆனால் நினைவில் கொள்ளுங்கள், பயணம் நீண்ட மற்றும் கடினமானதாக இருக்கலாம்? சோதனைகள் மற்றும் இன்னல்கள் நிறைந்ததாக இருக்கலாம்? இருப்பினும், உங்கள் இந்த இருண்ட காலங்களில், உங்கள் அன்பு மற்றும் உறுதி உங்களை வழிநடத்தும்." என்றார் ரவி: (உத்வேகத்துடன்) "நன்றி ஐயா. கட்டாயம் இனி என்ன தடைகள் வந்தாலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்." என்றான் முதிய துறவி: (ஒரு மென்மையான தொடுதலால் அவர்களை ஆசீர்வதித்து) "தைரியத்துடனும் அன்புடனும் செல்லுங்கள், என் குழந்தைகளே. நீங்கள் தேடும் பதில்கள் நீங்கள் நினைப்பதை விட நெருக்கமாக இருக்கலாம்? விரைவில் அது வரட்டும்" என்றார். துறவியின் வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, ரவியும் மாயாவும் தங்கள் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினர், விரக்தியுடன் அல்ல, ஆனால் உறுதியையும் அன்பையும் ஆயுதம் ஏந்தி, ஒன்றாக, அவர்கள் உள்ளூர் கோவிலின் காப்பகங்களைத் தேடி, பண்டைய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பதிவுககளில் தங்கள் பெற்றோரின் உறவினர்கள் பற்றிய தடயங்களைத் தேடினர். பின்னர், அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில், அவர்கள் தங்கள் மூதாதையர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு மங்கலான காகிதத் குறிப்பில் தடுமாறினர், அது காலப்போக்கில் மையில் பொறிக்கப்பட்டது. நடுங்கும் கைகளுடன், அவர்கள் தங்கள் குடும்ப மரத்தின் கோடுகளைக் கண்டுபிடித்தனர், ஒவ்வொரு பெயரும் அவர்களின் இரத்த வழி உறவிற்கு சான்றாக இருந்தது அவர்களுக்கு மகிழ்வைக் கொடுத்தது. அந்த இரத்த உறவுகளின் பெயர்களுக்கு மத்தியில், அவர்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் ஒளியைக் கண்டனர். ஒரு தொலைதூர உறவினர், போரில் தப்பிப்பிழைத்து இப்போது பக்கத்து கிராமத்தில் வசிக்கிறார் என அறிந்தனர். எனவே புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், நீண்ட காலமாக இழந்த இந்த உறவினரைக் கண்டுபிடிக்க அவர்கள் புறப்பட்டனர், அவர்களின் இதயங்கள் எதிர்பார்ப்புகளால் நிறைந்தன. பல மாதங்கள் தேடுதலுக்குப் பிறகு, ரவியும் மாயாவும் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் தங்கள் வயதான அத்தையைக் கண்டுபிடித்தனர். உணர்ச்சியில் மூழ்கிய அவர்கள் அவளை இறுகத் தழுவிக் கொண்டனர், கண்ணீர் வழிந்தோடியது. அத்தை: (அழுகையுடன்) "என் அன்பான குழந்தைகளே, உங்களை கண்டத்தில் பெரும் மகிழ்ச்சி" என்று கூறி அவர்களை அன்புடன் அணைத்தார். ரவி: "அத்தை, நாங்கள் உங்களை மிகவும் மிஸ் பண்ணி விட்டோம். எங்கள் பெற்றோரைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று மிக ஆவலுடன் கேட்டான் அத்தை: (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு) "உங்கள் பெற்றோர் ... அவர்கள் தைரியமான ஆத்மாக்கள், என் அன்புக்கு என்றும் உரியவர்கள். அந்த இருண்ட நாட்களில், எங்கள் குடும்பத்தைக் காக்க பல வழிகளில் முன்னின்று செயல்பட்டார்கள். ஆனால் ஐயோ, அவை மிக விரைவில் எங்களிடமிருந்து பிரிக்கப் பட்டன." என்றாள். மாயா: (குரல் நடுங்கி) "என்ன நடந்தது? ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்களா?" என்றாள். அத்தை: (சோகத்துடன் தலையசைத்து) "ஆமாம், என் குழந்தை. ஆனால் அவர்களின் தியாகம் வீண் போகவில்லை. அவர்கள் உங்களில் வாழ்கிறார்கள் - உங்கள் வலிமை, உங்கள் நெகிழ்ச்சி, உங்கள் அன்பில்." என்றார். ரவி: (மாயாவின் கையை பிடித்துக்கொண்டு) "நாம் அவர்களை மறக்க மாட்டோம் அத்தை. அவர்களின் பாரம்பரியத்தை எப்போதும் எங்களுடன் எடுத்துச் செல்வோம். ஆனால் இப்ப எங்கே எங்கள் அம்மா, அப்பாவை வைத்திருக்கிறார்கள்?" ஆவலுடன் கேட்டான். அத்தை: (அவள் கண்ணீரில் சிரித்துக்கொண்டே) என் குழந்தைகளே, இப்ப அரச நிர்வாகம் தங்களுக்கு தெரியாது என்று கைவிரித்து விட்டார்கள். அவர்களும் வலிந்து காணாமல் போனவர்களின் பட்டியலில் போய்விட்டார்கள்? நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் தனியாக இல்லை. எங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக நீண்டு, அன்பு மற்றும் இரத்தத்தால் இன்று நாம் ஒன்றாகிவிட்டோம் . இனி ஒன்றாக, எந்த புயலையும் எதிர்கொள்வோம். நியாயமான பதில் வரும் மட்டும்" என்றார். அவர்கள் அதன் பின் அத்தையின் சமையல் அறையில், அடுப்பின் நெருப்புப் பகுதிக்கு கிட்ட அமர்ந்து, தங்கள் பெற்றோர் மற்றும் முன்னோர்களைப் பற்றிய அத்தையின் கதைகளைக் கேட்டபோது, ரவியும் மாயாவும் போர்க் காற்றால் தங்கள் வேர்கள் அசைந்திருந்தாலும், அவர்கள் பிடுங்கப்படவில்லை என்பதை உணர்ந்தனர். ஏனென்றால், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில், அவர்கள் தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தை இன்னும் சுமந்து கொண்டு இருப்பதைக் உணர்ந்தனர். எனவே, முல்லைத்தீவின் இடிபாடுகளுக்கு மத்தியில், வேரைத் தேடும் இரண்டு தளிர்களாக தங்கள் கடந்த காலத்தை மட்டுமல்ல, நம்பிக்கை, தைரியம் மற்றும் குடும்பத்தின் நீடித்த பந்தம் நிறைந்த எதிர்காலத்தையும் கண்டுபிடித்தனர். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  17. "கனவில் வந்த நங்கை" ஒருமுறை நான் வாலிபனாக இருந்த காலத்தில், இயற்கை மணம் பரப்பும் மலைநாட்டின், எழில் மிகு மாநகரம் கண்டியில், 1752 ஆம் ஆண்டில், கீர்த்தி ஸ்ரீ இராஜ சிங்கன் அரசனாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்ட, கண்டி செல்வ விநாயகர் ஆலயத்துக்கு அருகில் அன்று இருந்த செல்வன் கஃபேயில், சைவ உணவு சாப்பிட்டுவிட்டு, சில்லறை காசு திருப்பி வாங்கும் பொழுது ஒரு ஐந்து ரூபாய் தாள் என்னை எனோ திடீரென கவர்ந்தது. அதில் யாரோ ஒரு பெண், தமிழில் தன் பெயரும், கண்டி விலாசமும் எழுதி இருந்தார். நான் பேராதனை வளாக விடுதிக்கு சென்றதும், நீங்க யார்?, உங்க ஐந்து ரூபாய் இப்ப என்னிடம் என, சிறு குறிப்புடன், என் விடுதி விலாசத்தையும் சேர்த்து அன்றே தபால் அனுப்பினேன். என்றாலும் ஒரு மாதமாகியும் ஒரு பதிலும் இல்லை. நானும் அதை மறந்துவிட்டேன். ஒரு வார இறுதிநாள், நண்பர்களுடன் மகாவலி ஆற்றங்கரையில் பொழுது போக்கிவிட்டு, அன்று இரவு நன்றாக தூங்கிவிட்டேன். திடீரென யாரோ கதவை தட்டுவது போல் இருந்தது. களைப்பாக இருந்தாலும், ஓரளவு என்னை தேற்றிக்கொண்டு, கதவை திறந்தேன். அங்கே, தேவலோக ஊர்வசி, ரம்பை, மேனகை, திலோத்தமை போல அழகிய ஒப்பனைகளுடன், கண்ணை கவரும் அழகு எழிலுடன், ஓரு நங்கை நின்றாள். என்னால் நம்பவே முடியவில்லை. திகைத்தே விட்டேன்! " பெண்ணுக்கு அழகு செய்ய பொட்டிட்டுப் பார்ப்பது" என்பது தமிழரின் ஒரு வழக்கு!, என்றாலும் இவள் நெற்றியில் அப்படி ஒரு பொட்டும் இல்லை. ஆனால் இயற்கையான வனப்பும், வசிகரமும் நிறைந்து இருந்தாள். கருங்குழல் சரிந்து விழ, விரிந்த கயல் விழிகள் மண்ணோக்கி பின் நாணம் விடுபட்டு வாள் வீச்சையும், வேல் பாய்ச்சலையும் மழுக்கிவிடும் பார்வையால் என்னை பார்த்தாள்!. இல்லை இல்லை கொன்றாள்!! வயிரமணிக் கழுத்து, துடித்த மார்பு, துலங்கு கரம். இவைகளுக்கு துணையாகும் தோள். கைம்மணம் காட்டும் காந்தள் விரல்கள், இல்லாதது போல இருக்கின்ற மெல்லிடை ... எப்படி நான் அவளை சொல்வேன்!! அவள் என் வியப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எதோ நாம் பலநாள் பழகிய நண்பர்கள் போல், எந்தவித அச்சமும் இன்றி, புருவம் உயர்த்தி புன்னகை பூத்து அருகில் வந்தாள். வந்ததும் வராததுமாக எங்கே என் ஐந்து ரூபாய் என்று கேட்டு, என் அறையில் அதை தேடவும் முற்பட்டாள். நான் மலைத்தே விட்டேன்! பருவ எழிலில் பெண்மை பூரிக்க நேருக்கு நேர் சந்தித்ததில் எனக்கு ஆனந்தம் தான், என்றாலும் நான் இப்படி நடக்கும் என என்றும் எதிர்பார்க்க வில்லை. தொளதொள சட்டையில் வனப்பைக் காட்டி கலகல பேச்சால் நெஞ்சைப் பறித்தவள், எப்படியோ அந்த ஐந்து ரூபாயை எடுத்து விட்டாள். அவ்வளவு தான், துள்ளி குதித்தாள் சந்தோசம் தாங்காமல். என்றாலும் என் நெஞ்சம் இன்னும் திக்குத்திக்கு என துடித்துக்கொண்டு தான் இருந்தது. கைகால்கள் எனோ ஓடவில்லை. ஆனால் அவளோ தரதர என்று என்னை இழுத்து, படபட என இமைகள் கொட்ட, கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி, சிவசிவக்க கன்னத்தில் முத்தம் இட்டு, சரசரவென்று துள்ளி ஓடி விட்டாள்!! நான் அவளை எட்டிப்பிடிக்க கையை ஓங்கினேன். ஆனால் அது என் தலைமாட்டுக்கு மேல் தொங்கிய ஒரு படத்தை தட்டி விட்டது தான் மிச்சம்!! என்னை கொஞ்ச நேரம் கதிகலங்க வைத்து இன்பம் மூட்டியது 'கனவில் வந்த நங்கை' என்று படம் நிலத்தில் விழுந்து உடையும் பொழுது தான் உணர்ந்தேன்!! "மஞ்சள் நிலாவில் கொஞ்சம் அயர்ந்தேன் மஞ்சத்தில் நெருங்கி நங்கை வந்தாள்! நெஞ்சை பறித்தாள் அன்பை கொட்டினாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள்!!" "துஞ்சிய கண்கள் அகல விரிந்தன பஞ்சாய் மிதந்து மறைந்து விட்டாள்! நெஞ்சம் வருடிய கள்ளிக்கு ஏங்குகிறேன் எஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Like
  18. "மர்மம் விலகியது" இலங்கைக் கம்யூனிஸ்ட் (சீன சார்பு) கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ரோகண வீஜயவீர, மக்கள் விடுதலை முன்னணி [சிங்களத்தில் Janatha Vimukthi Peramuna] என்ற ஒரு கட்சியை நிறுவினார். இவற்றால் கவரப்பட்ட படித்த கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கியமாக சிங்கள மக்கள் பெருமளவாக ஜே.வி.பி.யில் இணைந்தனர். அவர்கள் 1971ம் ஆண்டும் மீண்டும் 1987-1989 ம் ஆண்டும் ஆயுதப் புரட்சி அரசுக்கு [பெரும்பாலும் சிங்களவர்களை கொண்ட] எதிராக செய்தனர். அப்படியான ஒரு காலகட்டத்தில், நான் பேராதனை வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனாக இருந்தேன். என்னுடன் பல்கலைக்கழக நூலகத்தின் உதவி நூலகர், ஆறுமுகம், மிகவும் நண்பராக இருந்தார். அவர் மலை நாட்டில் பிறந்து வளர்ந்ததால், சிங்களம் தாராளமாக தெரியும். நான் யாழ்ப்பாணம் என்பதால் சிங்களம் அறவே தெரியாது. அவர் ஓய்வு நேரத்தில், எங்களுடன் வந்து கேரம் பலகை அல்லது சீட்டு விளையாடுவார். ஜே.வி.பி அரசுக்கு எதிராக ஆயுத புரட்சி செய்து கொண்டு இருந்த ஒரு கட்டத்தில், ஒரு நாள், அவர் எம்முடன் வந்து ஓய்வை பொழுதுபோக்காக கழித்துவிட்டு, இருள தொடங்க தன் விடுதிக்கு சென்றார். நாம் இருட்டுக்குள் போகவேண்டாம். இது பல்கலைக்கழக வளாகம் என்பதால், ஜே.வி.பி க்கு கூடுதலான ஆதரவு இங்கு இருப்பதால், ஒரு வேளை ராணுவம் பதுங்கி இருக்கலாம், விடிய போவது நல்லது என்று கூறினேன். ஆனால் அவர் இது சிங்களவரும் சிங்களவரும் அடிபடும் போராட்டம், ஆகவே பயம் இல்லை என்று கூறிவிட்டு போனார். நான் அப்பொழுது ரஜாவத்த என்ற வளாகத்துடன் அண்டிய பகுதியில், பல்கலைக்கழக ஊழியர் ஒருவரின் விடுதியின் மேல் வீட்டில் வாடகைக்கு இருந்தேன். என்னுடன் அங்கு சக பொறியியல் பீட மாணவன் விக்னேஸ்வரன் & ஜெயசீலனும் மற்றும் மருத்துவ பீட நான்காம் ஆண்டு மாணவன் குழந்தைவேல் இருந்தனர். குழந்தைவேல் என்னை மிஸ்டர் நோ [Mr No] என்று பகிடியாக கூப்பிடுவது வழமை. [தில்லை - இல்லை]. ஆறுமுகமும் என்னை அப்படியே கூப்பிடுவார். அவர் ஒரு படி மேலே போய் தில்லை - தொல்லை என்றும் பகிடியாக கூப்பிடுவார். 'தில்லை - தொல்லை' இன்றுவரை நிலைத்து நிற்கிறது. குறிப்பாக எமது சக மாணவன் தணிகாசலத்தை குறிப்பிடலாம். நான் ஒரு முறை இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், ராணுவத்திடம், நடந்து போகும் பொழுது அகப்பட்டேன். அவர்கள் என்னை திடீரென சுற்றி வளைத்தார்கள். கொஞ்சம் பயமாக இருந்தாலும், தமிழிலும் ஆங்கிலத்திலும், நான் மாணவன், நண்பனிடம் ஒன்றாக படிக்க போய்விட்டு திரும்புகிறேன் என்றேன். என் மொழியில் இருந்து தமிழன் என்று அறிந்ததும், அரைகுறை தமிழில், கெதியாக விடுதிக்கு போ என்று சொல்லி அனுப்பினார்கள். ஆகவே நான் அவர் போவதை பெரிதாக தடுக்கவில்லை. ஆனால் அடுத்த நாள் என் நண்பர் ஆறுமுகத்தின் உடல், மகாவலி ஆற்றங் கரையில் துப்பாக்கி சூடுகளுடன் கண்டு எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ந்தே போய்விட்டேன். அவர் தமிழர். ராணுவத்தாலும் ஜே.வி.பி யாலும் சந்தேகப்பட கூடியவர் அல்ல. அப்படி என்றால் உண்மையில் என்ன நடந்தது. அதன் மர்மம் என்ன ?. என்னையும் என் நண்பர்களையும் வாட்டியது. ஆகவே மதியப்பொழுது, அவர் உடல் இருந்த மகாவலி ஆற்றங்கரைக்கு போய், அங்கு அருகாமையில் குடி இருக்கும் கிராமத்தவர்களிடம், சிங்கள நண்பர்களின் உதவியுடன் விசாரித்தோம். அப்பொழுது அங்கு வாழும் ஒரு குடும்பம், துப்பாக்கி காயங்களுடன், தங்கள் வீட்டை வந்து தட்டி, தன்னை ராணுவம் சுட்டு, மகாவலியில் எறிந்து விட்டு போனதாகவும், ஆம்புலன்ஸ்க்கு அறிவிக்கும் படி, நல்ல சிங்களத்தில் கூறியதால், தாம் இவர் புரட்சி செய்யும் இளைஞர் கூட்டம் என நினைத்து, ஆம்புலன்ஷை கூப்பிடாமல், ராணுவத்துக்கு செய்தி அனுப்பினார்கள் என்று கூறினர். அப்ப தான் அவரின் மரணத்தின் மர்மம் விலகியது!. அவர் தாராளமாக தமிழ் போல் சிங்களம் பேசும் ஆற்றல், அவரை சிங்கள இளைஞர் என்றே நம்ப வைத்துவிட்டது தெரியவந்தது. அந்த கள்ளம் கபடமற்ற உன்னத மனிதன் இன்னும் என் நினைவில் வாழ்கிறார்!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
  19. "துரோகம்" நான் கொழும்பில் பொறியியலாளராக வேலை பார்த்துக்கொண்டு இருந்த காலம் அது. எனக்கு உதவி பொறியியலாளராக, வெற்றிநாயகன் என்ற ஒருவன் பதவி பெற்று, என்னுடன் நல்ல நண்பனாகவும் பழகத் தொடங்கினான். எமது நட்பு பலமாக, நாம் எம் தனிப் பட்ட விடயங்களையும் எமக்கிடையில் பகிரத் தொடங்கினோம். இருவரும் அப்பொழுது திருமணம் ஆகாத வாலிபர்கள். ஆகவே பெண் நண்பியை பற்றியும் தாராளமாக கதைப்போம். எமக்கிடையில் எந்த ஐயப்பாடும் இல்லை. ஒரு முறை, விடுதலையில் ஊர் போய், திரும்பிய வெற்றிநாயகன், முதல் முதல் தன் காதல் அனுபவத்தை, அன்று மாலை இருவரும் பொது விடுதியில் [pub] சந்தித்த பொழுது சொல்ல தொடங்கினான். தான் ஒரு முறை தன் கிராமத்தில், ஒட்டப்பயிற்சி செய்யும் பொழுது, தற்செயலாக அவள் அங்கு ஒரு குளத்தில் தோழிகளுடன் குளித்துக்கொண்டு இருக்கும் பொழுது பார்க்க நேர்ந்ததாகவும், அவளின் அழகும் இளமையும், துடிப்பும் தன்னை கவர்ந்ததாகவும் , பிறகு மெல்ல மெல்ல அவளுடன் கதைத்து, அவளைப்பற்றி முழுதாக அறிந்து, அவள் சாதாரண படிப்பு என்றாலும், அவளின் குணம் பிடித்துக்கொண்டதாகவும், அவளையே தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் கூறினான். அதன் பின் ஒவ்வொரு முறையும் ஊர் போய் திரும்பி வந்தால் , அவளின் கதை தான்! இருவரும் ஒன்றாக படங்களும் எடுத்துள்ளனர், எனக்கும் ஒரு முறை, நான் அவனின் கிராமத்துக்கு சென்றபொழுது, அவளை அறிமுக படுத்தினான். உண்மையில் அவனின் தெரிவு நல்லதாகவே இருந்தது. மிகவும் பண்பாடாக என்னுடன் கதைத்தாள். என்னை அண்ணா என்று கூப்பிடுவாள். நானும் என் தங்கையாக மிக மரியாதையுடன் கதைப்பேன். "ஒட்டி உடையில் பெண்மை காட்டி எட்டி நடையில் வேகம் காட்டி சுட்டி விடையில் புத்தி காட்டி வெட்டி பேச்சில் வெகுளி காட்டி தட்டி கழித்து நாணம் காட்டி முட்டி மோதி போகும் பெண்ணே" அவளை என்னால் அன்று கவிதையில் சொல்லக்கூடியதாக இருந்தது. கிராமத்து மணம் வீசும், ஒரு சாதாரண பெண் அவள், என் நண்பனுடன் உயிருக்கு உயிராக அன்பாக நட்பாக பழகினாள். அவனும் அப்படித்தான் எனக்கு அன்று தெரிந்தது. பொதுவாக நகரத்திற்கு வரும் கிராமத்து பெண்களின் பேச்சு, நடை, உடை பாவனைகளை பார்க்கும் நகரத்து பெண்கள் அவர்களை ஏளனம் செய்வது நான் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் அந்த கிராமத்துக்கு போய் அவர்களின் வாழ்வை நேரடியாக பார்க்கவேண்டும். அப்ப தான் அவர்களின் கிராமத்து மணம் வீசும் உண்மையான அன்பும் பற்றும் கொண்ட அவர்களின் பண்பாட்டு வாழ்வை அறிவார்கள். இவளும் அப்படித்தான். இதழ்களில் வழிந்தோடும் கனி ரசமான இரத்தின புன்னகை - அதில் முத்துக் குளிக்க காத்திருக்கும் வரிசையான பற்கள், பின்னல் போடும் மயில் தோகை - அதில் இருந்து வெளி வரும் இயற்கை. மணம். பொய்கள் வசீகரம் இல்லா உண்மையான வார்த்தைகள்! . என்றாலும் விதி யாரைத்தான் விட்டது? நாட்டில் கலவரங்கள் , அரசியல் கொந்தளிப்புக்கள் தொடர்ந்து ஏற்பட, அவன் நாட்டை விட்டு திடீரென ஒருநாள் வெளிநாடு போய்விட்டான். தான் அங்கு முறையாக குடியேறியதும், அவளை கூப்பிடுவதாக என்னிடம் கூறினான். அவளும் தன்னிடம் அப்படி கூறியதாகவும் , அந்தநேரம் தன் பெற்றோரிடம் கதைப்பார் என்றும் கூறினாள். நானும் அதன் பின் திருமணம் செய்து, மனைவியுடன் வெளிநாடு போய்விட்டேன். நன்பனுடன், அல்லது அவனின் காதலியுடன், அதன் பின்பு எனக்கு தொடர்பு இருக்கவில்லை. பல ஆண்டுகள் கழித்து, முகநூல் மூலம் என் நண்பன் மீண்டும் என்னுடன் இணைந்து கொண்டான். நானும் மிக மகிழ்ச்சியாக எங்கே என் தங்கச்சி [அவரின் காதலி] என்றேன். அதெல்லாம் முடிந்து விட்டது என்றான். எனக்கு ஒரே அதிர்ச்சி. ஏன் என்ன நடந்தது தங்கச்சிக்கு என்று ஆவலாக கேட்டேன். ஒரு பக்கம் அவளுக்கு ஏதாவது நடந்து விட்டதா என்ற கவலையும் ஏக்கமும் ஆனால் அவனோ, சிரித்தபடி, அதெல்லாம் அந்தநேரம். நான் வெளியே வந்ததும் மறந்துவிட்டேன். நான் இங்கேயே ஒருவளை காதலித்து மணந்து விட்டேன். அவளுக்கு தெரியுமா என்றேன் ?. இப்ப அவள் எப்படி என்றேன் ?? தான் அவளுக்கு சொல்லவில்லை என்றும், அது தேவையும் இல்லை என்றும் கூறி, எப்படி நீ என கதையை மாற்றினான். மனைவி படமும் காட்டினான். அவளை விட அழகு என்று சொல்ல முடியாது, ஆனால் வசதியான படித்த பெண்ணாக தெரிந்தது. என்றாலும், அண்ணா என்று அன்பாக, பண்பாக என்னுடன் கதைத்த அவளை பற்றி அறியவேண்டும் என்ற கவலை என்னில் இருந்தது. முகநூல், மற்றும் நண்பர்கள் மூலம் தேடி, ஒருவாறு அவளை கண்டு பிடித்தேன். அவள், அவன் வெளிநாடு சென்றபின், வருவான் வருவான் என்று காத்திருந்து, பின் வேறு ஒருவரை கல்யாணம் செய்ய மறுத்து, தனிக் கட்டையாக இன்னும் வாழ்வதாக அறிந்தேன்! அவன், தனது வசதிக்கு ஏற்ப, முன்னையதை தூக்கி எறிந்து விட்டு, புதியதை ஏற்று, வாழ பழகிவிட்டான். காலம், வசதிக்கு ஏற்ப தன்னை சரிப்படுத்தி விட்டான். அதை அவன் துரோகம் என்று கூட கருதவில்லை. அவன் சொன்ன காரணம். நாம் காதலித்தோம் தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. எல்லோரும் எதோ ஒரு நேரத்தில் காதல் கொள்ளுவது புதுமை இல்லை. நம்பிக்கை கொடுத்ததும் கூப்பிடுவேன் என்று சொன்னதும் உண்மைதான். இவை எல்லாம் அந்த நேர பேச்சுக்கள். அதை தூக்கி பிடித்துக்கொண்டு வாழ்வை வீணாக்க முடியாது. மகாவம்சத்தில், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வந்த விஜயன், அங்கு அடைக்கலம் புகுந்து, யக்கினி குவேனியை திருமணம் செய்கிறான். என்றாலும் பிறகு அது தனக்கு பெருமை மற்றும் வசதி இல்லை என்று, அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கும் மக்களுக்கும் தான் திருமணம் செய்த குவேனிக்கும் துரோகம் செய்து, பாண்டிய மன்னனின் மகளை திருமணம் செய்து, இலங்கையின் துரோக வரலாற்றை ஆரம்பிக்கிறான் என்று கூறுகிறது. ஆகவே என் நண்பனின் கதை எனக்கு ஆச்சிரியம் தரவில்லை. ஆனால் அவள் மேல் பரிதாபம் இருந்தது. அவள் கிராமத்து நம்பிக்கைகள் கூடிய அப்பாவி பெண்! அவளுக்கு இதெல்லாம் புரியாது. காதல் செய்யும் பொழுதே, தன்னை இச்சையில் தொடும் பொழுதே, இவன் தான் என் புருஷன் என, தான் வணங்கும் காவல் தெய்வத்துக்கும் சொல்லிவிடுவாள். அவளுக்கு பொய்க்கும் உண்மைக்கும் உள்ள வேறுபாடு தெரியாது. காதல் வாழ்வை சூழலுக்கு ஏற்ப சரிப்படுத்தி நகரவும் தெரியாது ! பரிணாமம் என்பது புதுமை படைப்பதோ, புரட்சி செய்வதோ அல்ல. அது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம்கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வது போன்றது. அப்படித்தான் அவனும் இலங்கையில் இருந்த சூழலும் வெளிநாட்டு சூழலும் ஒன்றுக்கொன்று மாற அவனும் தன்னை அதற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டானென்று சொல்வதா ? இல்லை இது துரோகம் தானா ?உங்களுக்கு எப்படியோ ?? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Sad
  20. "கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு" "கிள்ளை மொழி பேசும் மரகதமே கிளியே எங்கள் குலக் கொடியே கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாட கிருத்திகை நன்னாளில் கண் உறங்காயோ?" "மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே மடியில் தவழ்ந்து தள்ளாடி சத்தமிட்டு மல்லிகை பந்தலில் ஓடி விளையாடி மகரிகை தொங்கும் மஞ்சத்தில் உறங்காயோ?" "சின்ன பூவே சிங்கார பூவே சிஞ்சிதம் காதில் தேனாய் விழ சித்திரம் பேசும் கண்ணும் ஓய சிந்தைநிறுத்தி இமைகள் மூடாயோ ?" "வடந்தை உன்னை தழுவாது இருக்க வண்ண மலர்களால் தூளி கட்டி வஞ்சகர் கண் படாது இருக்க வட்ட பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?" "பச்சை இலுப்பை அளவாய் வெட்டி பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி படுக்க இதமாய் கம்பளி விரித்து பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?" "யாழ் எடுத்து ராவணன் இசைமீட்க யாவரும் ஒன்றுகூடி கானம் கேட்க யானை துதிக்கையால் ஏணை ஆட்ட யாழ் மொழியாளே கண் உறங்காயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [கிருத்திகை - கார்த்திகை, குதலை - மழலைச் சொல், சிஞ்சிதம் - அணிகலவொலி, தூளி - ஏணை, வடந்தை - வாடை]
      • 1
      • Like
  21. 'இன்றைய ஆசிரியர் நிலை' "கல்வி புகட்டுபவன் ஆசிரியர் என்றாலும் கடமையை புனிதமாக மதித்து அவன் கருவறையில் ஒருவன் உயிர்பெறுவது போல கரும் பலகையில் கற்பிப்பவனே ஆசான்!" "மக்களின் அறியாமை நீக்கி அறிவுவேற்றும் மகத்தான இப்பணியே ஆசிரியர் அறப்பணி மகிழ்வுடன் வரவேற்று அறிவினை பகிர்ந்து மனசோர்பு அற்று அர்ப்பணிப்பவன் ஆசிரியர்!" "கவிதையை கவிஞனைப் போல் வாசித்து கணித சிக்கலை இலகுவாக போதித்து கருத்துக்களை சிறிதாக சிறப்பாக பதித்து கலக்கம் போக்கி மனிதனாக்குபவன் ஆசிரியர்!" "ஆசான் இன்று ஒருவருமான தொழிலாகி ஆயிரமாண்டுகளாக சேவை செய்ததை மறந்து ஆசையற்று கவனமற்று ஆர்வம் அற்று ஆசிரியர் நிலை இன்று தட்டுத்டுமாறுது!" "பெற்றோர் இருவரும் வேலைக்கு போக பெரிதாக கவனம் இல்லாமல் போக பெருமையான மதிப்புகள் மாணவரிடம் குறைய பெரும்பழி சுமக்கிறான் இன்றைய ஆசான்!" "குருகுலதில் தொண்டுசெய்து பெற்ற கல்வி குடும்பத்தை விட்டுவிலகி கற்ற அறிவு குணம் பக்குவப்பட்டு அறிந்த அனுபவம் குன்றாய் அவனை உயர்த்திக் காட்டியது!" "காலம்மாற நாகரிகத்தின் கோலமும் மாற காத்திரமான அமைப்பாக பாடசாலை தோன்ற காலையில் மாணவர் வகுப்பில் ஒன்றியிருக்க காலட்சேபம் செய்கின்றனர் இன்றைய ஆசிரியர்!" "மரியாதை இல்லை இன்று கவனமுமில்லை மருந்துக்கு கூட இன்று ஒழுக்கமுமில்லை மல்லுக்கட்ட முடியாமல் ஆசிரியரும் ஒதுங்க மந்தமாய் போயிற்று இன்று கற்றல்நெறியும்!" "ஆசான் காட்டும் பாரபட்சமும் அவசரமும் ஆத்திரம் கொண்டு தண்டிப்பதும் திட்டுவதும் ஆழமறிந்து ஆளையறிந்து படிப்பிக்க தவறியதும் ஆசிரியர்நிலை இன்று தெய்வமற்று போயிற்று!" "சிலநேரம் மாணவனை கண்டித்தும் உணர்த்தியும் சிலநேரம் தோள் கொடுத்தும் தாங்கியும் சிலநேரம் வழிகாட்டியும் விளக்கம் கொடுத்தும் சிந்தித்து படிப்பிப்பதே இன்றைய அழகு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  22. "வாழ்வின் விளிம்பில் ஞானம் பிறக்குது!" "நாற்பது வயது தொப்பை விழுகுது கருத்த முடி நரை விழுகுது ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது விரலை குத்தி சீனி பார்க்குது நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென அறுபத்தி ஐந்து ஓய்வை சொல்லுது பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது தாண்டி எண்பது வரவோ ஞானம் பிறந்து சவக்குழி தேடுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
      • 1
      • Like
  23. "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 04 ‘இந்த நோயை எப்படித் தீர்க்கலாம்? அல்லது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கலாம்’ என்ற சிந்தனை ஓட்டம், நெடுநாளாக உலகின் எல்லா மூலைகளிலும் இருந்திருக்கிறது. உதாரணமாக பண்டைய கிரேக்க மருத்துவர்கள் [The early Greek physicians recommended treating diabetes with exercise, if possible, on horseback. They believed that this activity would reduce the need for excessive urination] அதிகமாய்ப் போகும் சிறுநீரை அடக்குவது, நோயைக் கட்டுப்படுத்துமோ எனக் கருதி, நோயுற்றோரைக் குதிரையில் ஏற்றி ஓட வைத்துள்ளனர். அதாவது வேகமாக ஓடும் குதிரைச் சவாரியில் கலோரிகள் எரிக்கப்பட்டு, குளுக்கோஸ் வற்றிப்போனதில் தற்காலிக விடுதலை வரும் என்பது அவர்களின் ஒரு ஊகமாக இருந்திருக்கலாம். ரொம்ப நாளைக்கு இந்த ‘சவாரி சிகிச்சை’ அங்கு மருத்துவமாக இருந்திருக்கிறது. அப்போலனைர் (Apollinaire Bouchardat / July 23, 1809 – April 7, 1886) எனும் பிரெஞ்சு மருத்துவர், பிரெஞ்சு போர்க் காலத்தில் குறைவான பஞ்ச உணவைச் சாப்பிட்டபோது பல நீரிழிவு நோயாளிகளுக்கு அதில் கட்டுப்பாடு ஏற்பட்டதைத் தற்செயலாகக் கண்டறிந்திருந்தார். உடனே தன் நோயாளிகளுக்கு, உணவைக் கட்டுப்படுத்தி மிகக் குறைந்த அளவு உணவை விநியோகித்து, நீரிழிவுக்கு வைத்தியம் செய்ய தொடங்கினார். [Bouchardat is often credited as the founder of diabetology, and was a major figure involving dietetic therapy for treatment of diabetes prior to the advent of insulin therapy] அவர் பட்டினி கிடப்பது. சிறுநீரில் குளுக்கோஸ் (சர்க்கரை) இருப்பதை குறிக்கும் கிளைகோசூரியாவை [glycosuria] குறைக்கலாம் என்றும். நீரிழிவுக்கு முக்கிய காரணம் கணையத்தில் [pancreas] அமைந்திருக்கிறது என்றும் கூறினார். அவர் தனது சிகிச்சையின் பொழுது உடற்பயிற்சி [exercise] முக்கியம் என்றும் தனது சிறுநீரை தானே அதில் உள்ள சர்க்கரையின் [glucose] அளவை பரிசோதிக்கும் முறையையும் உருவாக்கினார் [self-testing urine]. அது மட்டும் அல்ல குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையை [a low-carbohydrate diet] தனது நோயாளிகளுக்கு உருவாக்கினார். 1916-ல் அமெரிக்க பாஸ்டன் [Boston] நகரத்திலிருந்த, உலகின் தலைசிறந்த நீரிழிவு மருத்துவர் எலியட் ஜோஸ்லின், [Elliott Proctor Joslin (June 6, 1869 – January 28, 1962) was the first doctor in the United States to specialize in diabetes] ‘தி ட்ரீட்மெண்ட் ஆஃப் டயாபட்டீஸ் மெல்லிட்டஸ்’ எனும் மருத்துவ நூலை [The Treatment of Diabetes Mellitus, the first textbook on diabetes in the English language] வெளியிட்டார். நல்ல கட்டுப்பாடான உணவும் உடற்பயிற்சியும்தான் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் என்ற முதல் கருத்து தெளிவாக அப்போதுதான் வெளியிடப்பட்டது. இன்றைக்குவரை, அந்தக் கருத்தை ஒட்டியே அத்தனை மருத்துவ முறைகளும் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மனிதனை சிரமப்படுத்திய நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த 20-ம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பாக வந்ததுதான் ‘இன்சுலின்’ ஆகும். இது நீரிழிவைக் குணப்படுத்தும் மருந்தல்ல. ஆனால், மிக நுட்பமாகக் கட்டுப்படுத்தும் மருந்து மட்டுமே ஆகும். இன்று ' நீரிழிவு நோய் ' பலரை வருத்திக் கொண்டு வருகிறது. இலங்கை, இந்திய போன்ற தமிழர்கள் அதிகமாக வாழும் நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே முன்பு வந்த இந்த 'பணக்கார நோய்' ஏழை மக்களையும் பாதித்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் வீட்டுக்கு ஒருவருக்கு இந்த நோய் தாக்கினாலும் தாக்கலாம். உழைப்பின்மை, உணவு முறையில் மாற்றம் (அதிகமாய் மாவுச்சத்து உண்பது), அதிக மனக்கவலை, பதற்றம் [டென்ஷன்], உடற்பயிற்சி இல்லாதது, பாரம்பரியம் என்று பலவிதங்களில் இது மக்களை தாக்குகிறது. இந்த நோயை கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், உடல் பருமன் நோய், கண் பார்வையிழப்பு, பக்கவாதம், கால்களை இழுத்தல் போன்ற கொடூரங்களும் ஏற்படலாம். 'இன்சுலின்' தூண்டினால் நீரிழிவு கட்டுக்குள் வந்துவிடும் என்ற அற்புதமான அந்த மருந்தை கண்டுபிடித்த மருத்துவ விஞ்ஞான மேதை ஃபிரடரிக் கிராண்ட் பாண்டிங் என்பவர் ஆவார். [Sir Frederick Grant Banting / November 14, 1891 - February 1941]. கணையத்திலிருந்து 'இன்சுலின்' சுரக்காததால் 'நீரிழிவு நோய்' வருகிறது. இன்சுலினை கொடுத்தால் கணையம் வேலை செய்து இரத்தம் மற்றும் சிறுநீரில் அதிகப்படும் சர்க்கரையை குறைக்கிறது என்பதே அவரின் கண்டுபிடிப்பாகும். இனி நாம் சித்த மருத்துவம் பக்கம் எம் பார்வையை திரும்புவோம். ஒரு பிரச்சனை அல்லது வருத்தம் ஒன்றுக்கு தீர்வு அல்லது மருந்து வேண்டுமாயின், அந்த பிரச்சனை அல்லது வருத்தத்திற்கான காரணம் புரியவேண்டும். உதாரணமாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானுறு 18 சுருக்கமாக “உண்டிமுதற்றே உணவின்பிண்டம் உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது. அதாவது நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன என் சொல்லாமல் சொல்கிறது! " மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." என திருக்குறள் தெளிவாக கூறுகிறது. அதாவது முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம் என்கிறது. அதைத்தான் எம் பெரியோர் 'பசித்துப் புசி' என்பர். இந்த அடிப்படையை தான் பிரெஞ்சு மருத்துவர் அப்போலனைர் வைத்தியத்தில் நாம் காண்கிறோம். ஆமாம் 'நீரை உண், உணவைக் குடி' என்பர் எம் பெரியோரும்! மனிதனுக்கு நோய் வருவதற்கான பெரும்பான்மைக் காரணங்களாக உணவு, செயல்களில் ஏற்படும் மாறுபாடு அமைகின்றன. இவையன்றி திடீரனத் தோன்றும் கொள்ளை நோய்களும் மனிதனைப் பாதிக்கும். நோய் வருவதற்கான காரணங்கள் எவையாக இருந்தாலும் அந்த நோய்களை எதிர்த்துக் குணப்படுத்துவதற்கான ஆற்றலைப் பெறும் வண்ணம் உடலைத் தயார் செய்வதுதான் பொதுவாக சித்த மருந்துகளின் தலையாய பணியாக இருக்கிறது. இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் நீரிழிவு நோயும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் [Aids, cancer] போன்றவற்றை விட மக்களை தினமும் பாடுபடுத்தும் நோயாகவே இந்த நோய் உள்ளது. பொதுவாக நீரிழிவு வியாதி எல்லோருக்கும் ஒரே வகையில் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. உதாரணமாக முதலாம் வகை என கூறப்படும் நீரிழிவு - சிறு வயதிலிருந்தே கணையம் கணையநீரை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உண்டாகிறது என்றும் இரண்டாம் வகை என்பது - அதிக வேலைப்பளு, மன அழுத்தம், தீரா சிந்தனை. உணவு மாறுபாடு, மதுப்பழக்கம், உடல் எடை போன்றவற்றாலும், பரம்பரையாகவும் உண்டாகிறது எனலாம். மற்றும் நவீன உணவு மாறுபாடு, இரவு உணவில் அதிக காரம் கொண்ட உணவினை சாப்பிடுவது. நேரம் தவறிய உணவு, நீண்ட பட்டினி, வயிறு புடைக்க சாப்பிடுதல் இவற்றாலும் நீரிழிவு நோய் உண்டாகலாம். இன்றைய நவீன காலத்தில், தவிடு நீக்கிய வெண்மை நிற அரிசி உணவால் ஏற்படும் சர்க்கரை நோய் தான் தென்னிந்திய, இலங்கை மக்களை அதிகம் பாதிக்க வைத்துள்ளது. அரிசியின் மேல் இருக்கும் தவிடு இரத்தத்தை சுத்தப்படுத்தி, இரும்புச் சத்தை அதிகப்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கக் கூடியது என்பதை எனோ மறந்து விட்டார்கள்? அது மட்டும் அல்ல, இயற்கையான கீரைகள், காய்கறிகள் தற்போது இல்லை. இவை அனைத்தும் வேதிப் பொருட்கள் தெளித்து வளர்க்கப்பட்டவை. இதனால் அவற்றின் சக்தியிழந்து உடலுக்கு மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். எனவே இவைகளையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 05 தமிழ் மருத்துவத்தின் வரலாறு பொதுவாக இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை தொகுத்து, மருந்து, மருந்துக்கான மூலப் பொருட்கள், மருத்துவன், மருத்துவம், நோய் , நோயாளி, நோயில்லா நெறி, உணவே மருந்து, உணவு பொருள்கள், அறுசுவை, மருத்துவக் கோட்பாடு .... போன்ற பல தலைப்புகளில் இன்று ஆராயப் படுகிறது. ஒருவருக்கு நோய் தீரவேண்டுமாயின் அவரின் சித்தம் அல்லது மனம் இங்கு முக்கியமாகிறது. உதாரணமாக " நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே நீயாகிறாய்" என்பதை கவனிக்க! அதாவது உன்னை பலவீனன் அல்லது நோயாளி என்று நினைத்தால், நீ அப்படியே ஆகிவிடுவாய் என்கிறது. எனவே இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது. எது எவ்வாறாகினும் நாம் மனிதனின் உடற்கூறுகளை என்றும் மாற்ற முடியாது. ஆனால் நீரிழிவு நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது என இன்று எம் அனுபவம் எடுத்துரைக்கிறது. தேரையரின் மனதுக்கினிய சீடரான யூகிமுனி வைத்திய முறைகளை எளிமையாய் சொல்லக்கூடியவர். இவரின் வைத்திய காவியம் ஒன்று நீரிழிவு நோய்க்கு காரணம் கூறுகிறது. "கட்டளைமிகுந்திட்டாலுங் காலங்கள்தப்பினாலும் இட்டமாம் பாலும் நெய்யும் ரத்தமும்புளிப்பும் மிஞ்சில் வட்டமாம் முலையார் தங்கள் மயக்கத்தின் கலவியாலும் நெட்டிலைகோரை போலே நீரிழிவாகுந்தானே." [யூகிமுனி வைத்திய காவியம்] அதாவது ஓய்வு அற்ற, கூடிய வேலை [அதிக வேலை பழு, மன அழுத்தம்] , ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், கொழுப்பு கூடிய நெய், பால், மிருக இறைச்சி / கொழுப்பு போன்ற உணவு முறை. வட்ட வடிவான நகில்களை [முலைகளை] உடைய மகளிருடன் பாலியல் செயல்களில் அதிக ஈடுபாடு வைப்பது, நீண்டு (140 செ.மீ / 55 அங்குலம்) வளரக்கூடிய கோரை புல்லு [Nut grass] அல்லது தரமற்ற பொருட்கள் / உணவுகள் போல இது தானாக நீரிழிவு கோளாறுக்கு வழிவகுக்கிறது என்கிறது. கோரை புல் ஒரு களை (Weed) ஆகும். களை என்பது பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுப்பாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் என பொருள் படும். உடல் உறவு அல்லது பாலியல் நடவடிக்கை என்பது உண்மையில் மெதுவோட்டம் [நடையோட்டம்] அல்லது உயிர்வளிக்கோரும் பயிற்சி போன்ற ஒரு பயிற்சியே. எனவே இது இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கும் [Sex is an exercise, like jogging or aerobics, and it can bring on low blood sugar, says the American Diabetes Association (ADA)], எனவே கூடிய பாலியல் நடவடிக்கைகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தாது. இது ஒரு தவறான புரிந்துணர்வு என்று நம்புகிறேன். "பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் நீ வருவாயே" என்ற பாடல் ஞாபகம் வருகிறது. ஆமாம் அமெரிக்கா நீரிழிவு கூட்டமைப்பு சர்க்கரை குறைவதை தடுப்பதற்கு சற்று முன்போ அல்லது சற்று பின்போ உண்ண சொல்லுகிறது [To avoid low blood sugar, plan to eat food either immediately before or shortly after sex to cover the glucose you use.] அதனால் தான் 'பாலும் பழமும்' பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்? இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்ன என்று யூகிமுனி மேலும் இன்னும் ஒரு பாடலில் கூறுகிறார். "முகமுங்காந்துநெஞ்சலர்ந்து முறிந்தவுடலுநடுநடுங்கி நகமேலறிந்து நாவறண்டு நஞ்சுண்டவர்போல் மிகசோர்ந்து பகலுமிரவி முறங்கிஉடல் பரிந்தே தட்டி மெலிந்து உழன்று மிக வேதனை உண்டாகி வேண்டாதன்னம் வேண்டாதே". அதாவது, முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு, தாகம் கூடி நெஞ்செரிவு உண்டாகி, உடல் நடுநடுங்கி, நாவறண்டு, நஞ்சு உணடவர் போல் மிக சோர்ந்து, உடல் மெலிந்து, வேதனை உண்டாக்கும் என்கிறது. நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பாண், பாஸ்தா (Pasta), கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்த்து விட வேண்டும். மேலும் சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவை கட்டுப்பாடுடன் கொஞ்சமாக எடுக்கலாம். முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை. அதேநேரம் அதிக அளவில் உண்ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி [Ragi Barley] போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய் [Olive oil], பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (walnut / வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும். நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. சுருக்கமாக, “நீரிழிவு நோயாளிகள் அனைத்துச் சத்துகளும் நிறைந்த உணவு, அதற்கேற்ற உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோயின் தன்மையையும் வீரியத்தையும் கட்டாயம் குறைக்க முடியும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] தற்காலிகமாக முடிவுற்றது
  24. "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 02 தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு பெரிதாகப் குறிப்பிடப்படவில்லை. என்றாலும் சமஸ்கிருத மொழி பேசும், கி.மு 800 ஆம் ஆண்டில் வாரணாசி நகரில் வாழ்ந்த மருத்துவ முனிவர் எனக் கருதப்படும் சுசுருதர் (Sushruta), வரலாற்று சாட்சியங்கள் கூடிய, இந்தியாவின் ஆயுர்வேத மருத்துவர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார். இவர் ஆயுர்வேதத்தையும் ஜோதிடத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடிய நோய்களுக்கும் சிகிச்சை அளித்தவர் என அறியப்படுகிறது. இவர் நீரிழிவு (நீீர்+அழிவு) நோயைப் பற்றியும் அறிந்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. எனவே நீரிழிவு ஒன்றும் புதிததல்ல. நேற்றுப் பிறந்த நோயும் அல்ல. மூவாயிரம் ஆண்டுகளாகவே இது இருந்துதான் வந்து இருக்கிறது என்பது கிரேக்கத்திலும் இந்தியாவிலும் கிடைத்த வரலாற்று குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, எகிப்திலேயுள்ள பழைய சுவடுகளில் இந்நோயைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. அச்சுவடியில் நீரிழிவு நோய் பற்றியும் அதற்கான மருந்துகளும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது. அந்த சுவடு ஒன்றில், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய எகிப்தியர்கள் [ancient Egyptians] ஒரு நோயை பற்றி குறிப்பிடும் பொழுது அது அடிக்கடி அல்லது மேலதிகமாக சிறுநீர் கழித்தல், தாகம் [நீர்வேட்கை] மற்றும் எடை இழப்பு / உடல் இளைத்தல் [excessive urination, thirst, and weight loss] கொண்ட, ஈற்றில் கொல்லும் விநோதமான நோய் என பதியப் பட்டுள்ளது [உதாரணமாக, கி.மு. 1552-லேயே ஹெஸி-ரா [Hesy-Ra, an Egyptian physician] எனும் எகிப்திய மருத்துவர், நீரிழிவைப் பற்றிப் பேசியிருக்கிறார்]. எனவே இது அதிகமாக முதலாம் வகை நீரிழிவு [type 1 diabetes] ஆக இருக்கலாம் என நாம் இன்று ஊகிக்கலாம். இதற்கு முழு தானியங்களின் உணவு [diet of whole grains] நல்ல தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. இது இலங்கையில் சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. பண்டைய இந்தியாவில் கிடைத்த குறிப்புகளின் படி, ஒருவருக்கு நீரிழிவு இருக்கா இல்லையா என்பதை அறிய, ஒரு விசித்திரமான முறை ஒன்றை கையாண்டார்கள். சிறுநீர் கழித்த இடத்தில், சிறுநீரை ருசி பார்க்க எறும்பு மொய்த்தால், கட்டாயம் அந்த சிறுநீரில் இனிப்பு கலந்து இருக்கவேண்டும் என முடிவு எடுத்தனர். இந்த இனிப்பு அதிகமாக காணப்படும் நிலையை [high sugar levels] அவர்கள் மதுமேக [madhumeha / honey urine] அல்லது தேன் சிறுநீர் என அழைத்தனர். என்றாலும் கிரேக்கத்தில் கி.பி. 150 ஆண்டளவில், இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் [Hippocrates] என்பவரின் மாணவரான "அரிடாயஸ்” அல்லது அரேஷியஸ் [Aretaeus] என்பவரே இந்நோய்க்கு “டயாபடீஸ்” எனப்பெயரிட்டார். இவர் இதை ‘தசையும் ஊனும் சிறுநீர் வழிக் கரைந்து வெளியேறும் நோய்’ ["the melting down of flesh and limbs into urine."] என்று அன்று விளக்கமும் கொடுத்தார். பின்னாளில் அந்த அர்த்தத்தில்தான் Diabetes (Flowing through) என்ற பெயர் இந்த நோய்க்கு ஏற்பட்டது. என்றாலும் கிமு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அபோலோனிஸ் மெம்பிஸ் [Apollonius of Memphis] தான் முதன் முதலில் “டயாபடீஸ்” [diabetes] என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளார் என அறியமுடிகிறது. எறும்பு மொய்க்கும் சிறுநீரை அடையாளமாக இந்த நோய்க்குக் கண்டறிந்த அந்தக் கால மருத்துவர்கள், நோயின் நிலைமையை அறிய சிறுநீரை சுவைத்துப் பார்த்துச் சொல்வதற் கென்றே, சிலரைப் பணியில் அமர்த்தி இருந்தனராம். அவர்களுக்கு நீர் சுவைப்பவர்கள் [‘வாட்டர் டேஸ்டர்ஸ்’ / "water tasters"] என்று பெயருண்டு. அதாவது சர்க்கரை நோயாளியின் சிறுநீரைக் கையால் தொட்டு, பிசுபிசுக்கிறதா எனப் பார்த்து, அப்புறம் நாவில் சுவைத்துப் பார்த்து, நோயைக் கணித்துச் அன்று சொல்லியிருக்கின்றனர். காலப்போக்கில், கிரேக்க மருத்துவர்கள் [Greek physicians] டயாபடீஸ் மெல்லிடஸ் [நீரிழிவு நோய்] மற்றும் டயாபடீஸ் இன்சிபிடஸ் [diabetes mellitus and diabetes insipidus] ஆகியவற்றின் வித்தியாசத்தை கண்டறிந்தனர். இங்கு மெல்லிடஸ் என்றால் மது (தேன்) என்று பெயர். இங்கு டயாபடீஸ் இன்சிபிடஸ் என்பது கூடுதல் சிறுநீர்க் கழிப்பு நோய் அல்லது வெல்லமில்லாத நீரிழிவு அல்லது நீர்நீரிழிவு; கழிநீரிழிவு என்று கூறலாம். டயாபடீஸ் இன்சிபிடஸ் நோய் வாசோபிரசின் அல்லது வாசோபிரெசின் என்ற ஒரு ஹார்மோன் குறைபாட்டால் வருகிறது. இதை பிட்யூட்டரி சுரப்பி சுரக்கிறது [Diabetes insipidus results from a problem with a hormone called vasopressin that the pituitary gland produces]. இந்த வாசோபிரெசின் (Vasopressin) இயக்குநீர், ஆண்டிடையூரிடிக் இயக்குநீர் என்றும் அழைக்கப்படுகிறது [also called antidiuretic hormone (ADH), arginine vasopressin (AVP) or argipressin]. இந்நோய் கண்டவர்கள், அதிக அளவில் சிறுநீர் வெளியேற்றுவார்கள் (பாலியூரியா / polyuria). இதனைத் தொடர்ந்து அதிக அளவில் தாகம் கொண்டு பெருமளவு தண்ணீர் அருந்துவார்கள் (பாலிடிப்ஸியா / polydipsia). இது நீரிழிவு நோயுடன் தொடர்பு இல்லாவிட்டாலும், நீரிழிவு நோயின் சில அறிகுறிகளை [signs and symptoms] அப்படியே கொண்டுள்ளன. கலென் (Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு என்பவர் ரோமன் குடியுரிமை கொண்ட ஒரு பண்டைய கிரேக்க மருத்துவர் ஆவார். இவரும் டயாபடீஸ் பற்றி குறிப்பிட்டு இருந்தாலும், தான் ஆக இரண்டு பேரையே அந்த நோயுடன் பார்த்ததாக ஆச்சிரியப் படுகிறார்! இவர் கி மு 129 இல் இருந்து கி மு 216 வரை வாழ்ந்தவராவார். இது எமக்கு எடுத்துக்காட்டுவது இந்த நோய் அந்த நாட்களில் ஒப்பீட்டளவில் அரிதானது என்பதே ஆகும். கி பி ஐந்தாம் நூற்றாண்டளவில், இந்திய மற்றும் சீனா மருத்துவர்கள் முதலாம் வகை நீரிழிவு (Diabetes mellitus type 1) மற்றும் இன்சுலின் சாராத நீரிழிவு (அல்லது) முதுமை தொடக்க நீரிழிவு என்று முன்பு அழைக்கப்பட்ட இரண்டாவது வகை நீரிழிவுக்கு (Diabetes mellitus type 2) இடையில் உள்ள வேறுபாட்டை கண்டறிந்தார்கள். அது மட்டும் அல்ல, இரண்டாவது வகை நீரிழிவு பருமனான, பணக்கார மக்களிடம் பொதுவாக காணப்படுவதாகவும் [more common in heavy, wealthy people], இதற்கு முக்கிய காரணம் அவர்கள் சாதாரண மக்களை விட கூடுதலாக சாப்பிடுவதுடன் குறைந்த அளவு வேலை செய்வதுமே என்றும் பதிந்து உள்ளார்கள். இன்றும் உடல் பருமன் [மிகவும் குண்டாக இருத்தல்], உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாமை [obesity, diet, and a lack of exercise] ஒரு குறைபாடாகவே இரண்டாவது வகை நீரிழிவு நோய்க்கு கருதப் படுகிறது. இன்று உணவுமுறையைச் சீரமைப்பதன் மூலமும், உடற்பயிற்சியினை அதிகரிப்பதன் மூலமும் இரண்டாம் வகை நீரிழிவினை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவ்வித முயற்சிகளால் இரத்த குளுக்கோசு அளவுகளைப் போதுமான அளவுக் குறைக்க முடியாத பட்சத்தில் மெட்ஃபார்மின் [Metformin] , இன்சுலின் [Insulin] போன்ற மருந்துகள் தேவைப்படலாம். இங்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவே மெட்ஃபார்மின் மாத்திரை கொடுக்கப்படுகிறது. அனைத்து சர்க்கரை நோயாளிகளும் இந்த மாத்திரை எடுத்துக்கொண்டால் சர்க்கரைநோய் கட்டுக்குள் வரும். ஒரு நோயாளிக்கு, ஒருநாளைக்கு 250 மில்லிகிராம் முதல் 2 கிராம்வரை பரிந்துரைக்கப்படும். நோயாளியின் எடையை வைத்து மருந்தின் அளவு தீர்மானிக்கப்படும். நோயாளி உடல் தாங்கிக்கொள்ளும் வகையில் மாத்திரையின் அளவை மருத்துவர்கள் பிரித்துக் கொடுப்பார்கள். இன்சுலின் என்பது ஒரு புரதமாகும். இதில் 51 அமினோ அமிலங்கள் உள்ளன. இரத்தத்தில் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்க இன்சுலின் உதவுகிறது. சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க இயலாமை தான். சர்க்கரை நோயின் பொதுவான ஒரு அறிகுறி என்னவென்றால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது. இதற்கு முக்கிய காரணம் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனான இன்சுலின் சரியான அளவு உடலில் சுரக்காதது தான். நம் உடலில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களின் ஆற்றலுக்கு சர்க்கரை தேவை. ஆனால், இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையால் உடலின் செல்களுக்கு தானாக செல்ல முடியாது. பொதுவாக நாம் உணவைச் சாப்பிட்ட பிறகு, நம் இரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும். உடனே கணையத்தில் உள்ள செல்கள் (பீட்டா செல்கள்) இன்சுலினை உருவாக்கி சுரக்கும். இந்த இன்சுலின் இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரையை உறிஞ்ச சொல்லி செல்களுக்கு அறிவுறுத்தும். இப்படி தான் செல்கள் நாம் உண்ணும் கார்போஹைட்ரேட்டில் இருந்து சர்க்கரையை உறிஞ்சி ஆற்றலை பெறுகிறது. எனவே டயாபடீஸ் மேலும் ஒரு எல்லையை தாண்டும் பொழுது, இன்சுலினை நேரடியாக செலுத்தி வைத்தியம் செய்யலாம் என்பதை முதன் முதல் ஜனவரி 11,1922- இல் மனிதர்களுக்கு ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டு பிடித்த இன்சுலினை செலுத்தி மருத்துவம் செய்ய தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. [Insulin is a hormone created by your pancreas that controls the amount of glucose in your bloodstream at any given moment.] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் "அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 03 இலங்கையில் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது. அதுமட்டும் அல்ல, இது ஒரு மாற்ற முடியாத நோயாகவே கருதும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நோயினால் ஏற்படும் வேதனைகளும் அல்லது துன்பங்களும் ஏராளம். யாழ்ப்பாணத்து மருத்துவ நூல்களான பரராசசேகரம் ஐந்தாம் பாகம், செகராசசேகர வைத்தியம், செகராசசேகர வைத்தியத் திறவுகோல், அமிர்த சாகர பதார்த்த சூடாமணி என்பனவற்றில் ஆவாரை சேர்ந்த மருந்துகளை நீரிழிவு நோயிற்கு பரிந்துரைக்கிறது. ஆவாரை [Senna auriculata] அல்லது ஆவிரை என்பது ஒரு சங்க கால மலராகும். "பொன்நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த பன்னூல் மாலைப் .. " என குறுந்தொகை 173 ஆவாரை பற்றி பாடுகிறது. அதாவது 'பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருக்கமாகக் கட்டிய, பல நூல்களாலான மாலைகளை அணிந்த .. ' என்கிறது. மேலும் ”ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் காண்பதுண்டோ ?” என்பது ஒரு சித்த மருத்துவப் பழமொழியும் ஆகும். இவை ஆவாரையின் சிறப்பை சொல்லாமல் சொல்லுகிறது. இது இக்காலத்தில் ஆவாரம்பூ என வழங்கப்படுகிறது. மேலும் இன்சுலின் குறைபாட்டால் ஏற்படும் நீரிழிவு நோயில் இன்சுலினைக் கூட்டும் தன்மை ஆவாரை இலைக்கு இருப்பதாகவும் [insulinogenic : of, relating to, or stimulating the production of insulin] இன்சுலினைச் சுரக்கும் சதையில் உள்ள அழிந்த அந்த குறிப்பிட்ட உயிரணுவை அல்லது செல்லை [beta cells in the pancreas] புதுப்பிக்க வைக்கும் ஆற்றல் அல்லது தன்மை [regenerative action] ஆவரசம் பூவிற்கு இருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுவதாக சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். முருகேச முதலியார் - குணபாடம் என்ற நூலில் அல்லது அகத்திய முனியின் பதார்த்த குண சிந்தாமணி என்கிற நூலில் ஆவரைப் பிசின் குணம் பற்றி கூறுகையில் "பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும் வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் – தருநீர்வை புனுமேணிக் கமலப் பொன்னே பீடகரெலாம் பேணு மேகாரிப்பி சின்" என்கிறது. அதாவது அழகு பொருந்திய கமலமின்ன னைய காரிகையே! ஆவரைச்செடியின் பிசினானது வெகு மூத்திரத்தையும் [அதி மூத்திரம் அல்லது நீரிழிவு அல்லது சிறுநீர்த் தொல்லை] பிரமேகரோகத்தையும் வாதகரிச்சுரத்தையும் போக்கும் என்கிறது. இங்கு மேககாரி என்பது ஆவாரையின் இன்னும் ஒரு பெயராகும். பரராஜசேகரம் என்பது யாழ்ப்பாண பரராசசேகரன் மன்னனால் 12 மருத்துவர்களின் உதவியுடன் இயற்றப்பட்ட மருத்துவ நூலாகும். ஆனால் உண்மையில் பரராசசேகரன் என்பது, யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் குடியைச் சேர்ந்த மன்னர்கள், தங்களுக்கு மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களுள் இரண்டில் ஒன்றாகும். இன்னொரு பெயர் செகராசசேகரன் என்பதாகும். இவர்கள் 1246 முதல் 1615 வரை குலசேகரன் மன்னன் தொடக்கம் எதிர்மன்னசிங்கம் மன்னன் வரை பத்து மன்னர்கள் ஆவார்கள். எனவே எப் பரராசசேகரன் காலத்தில் என்பதை நிச்சயமாக கூற இன்றுவரை ஆதாரமெதுவுமில்லை. எனவே, இது ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்து நூல் என்று மட்டுமே நாம் கருதலாம். இடையில் ஒரு தடவை சப்புமால் குமாரயா அல்லது செண்பகப் பெருமாள், "ஆறாம் புவனேகபாகு" என்ற பெயரில் கோட்டை அரசை ஆண்ட ஒருவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்கிறது வரலாறு. இந்நூல் பெரும்பான்மை விருத்தப்பாவாலும், சிறுபான்மை ஆசிரியப்பா, கலிவெண்பா ஆகியவற்றாலும் செய்யப்ட்டுள்ளது. என்றாலும் சில பகுதிகள் இன்றுவரை கிடைக்கவில்லை. என்றாலும் 8000 செய்யுள் கொண்ட ஒரு வைத்திய நூலாக இன்று ஏழு பாகமாக அச்சிடப்பட்டுள்ளது. உண்மையில் அங்கு 12000 செய்யுள் இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. தன்வந்திரி என்பார் வடமொழியிற் செய்த ஆயுள்வேத நூலைத் தழுவியே இது எழுதப் பட்டது என்பதனை இதன் கடவுள் வணக்கச் செய்யுள் ஒன்றின் மூலம் அறியமுடிகிறது. "தரணியோர் மிகப்புகழ்ந்ததன் வந்த்ரி செய்த தகவுடைய சீர்த்திபெறு மாயுள் வேதப் பேரணியும் வாகடத்தைப் பெரிது பேணிப் பெட்புடைய தமிழ்ப்பாவாற் பேசும் வண்ணம்" என்ற செய்யுள் அதை உறுதிப் படுத்துகிறது. மேலும் இங்கு ஒரு செய்யுளில் தான் சலக்கழிச்சல் என நீரிழிவு நோயை கூறுகிறது. சித்த மருத்துவத்தில் [SIDDHA MEDICINE] இன்னும் ஒரு பாடலில் எருமை மோரும் சகலக்கழிச்சலுக்கு பரிந்துரைக்கிறது. “தாகம் கிரகணி சலக்கழிச்சல் காமாலை கம் குடையு மற்றுப்போ மோகமில்லா தேவாமிரதமு மாஞ்சீர் மானிடர் தமக்கு மோவா மருந்து எருமை மோர்.” அதாவது எருமை மோரை மருந்தாக உண்டால் - தாகம், கிராணி [கிராணி என்பது ஓயாத மலக்கழிச்சல் அல்லது ஒருவகைக் கழிச்சல்நோய் ], சகலக்கழிச்சல் [எல்லாவிதமான அல்லது சகல வயிற்றுப்போக்கு], காமாலை [Jaundice], வ்யிற்றுக்குடைச்சல் [Abdominal diarrhea] தீரும் என்கிறது. என்றாலும் இவை எல்லாம் ஆய்விற்குரிய விடயங்கள் ஆகும். எது என்னவென்றாலும் இந்நோய் பற்றி ஆங்கில வைத்தியம் ஒருவகையான அடிப்படைக் கருத்தினையும், எமது முன்னோர்களின் வைத்தியமான சித்தம் [சித்த மருத்துவம் என்பது தென்னிந்திய தமிழ் மருத்துவ முறையாகும். பண்டைச் சித்தர்கள், இதனை உருவாக்கித் தந்துள்ளார்கள்], ஆயுள்வேதம் [Ayurveda, சமக்கிருதம்: आयुर्वेद என்பது, இந்தியத் துணைக்கண்டத்துக்கு உரிய மரபுவழி மருத்துவ முறை ஆகும். இது இப்பகுதிக்கு வெளியில் உள்ள பல நாடுகளிலும் கூட ஒரு மாற்று மருத்துவ முறையாகப் பயன்பாட்டில் உள்ளது. ஆயுள்வேதம் என்னும் சொல் ஆயுர்வேத என்னும் சமசுக்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும்], யூனானி [கிரேக்க-அராபிய வைத்திய முறை] போன்ற வைத்திய முறைகள் வேறு ஒரு வகையான அடிப்படைக் கருத்தினையும், கொண்டுள்ளதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. உதாரணமாக, இந்நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் அதனை அறவே இல்லாமல் செய்துவிட முடியாது. கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது அலபோதி வைத்தியம் [ஆங்கில வைத்தியம்]. ஆனால், சித்த ஆயுள் வேதமோ கவனமாக இருந்தால் அறவே இல்லாமல் செய்துவிடலாம் என்று கூறுகின்றது? மேலும் அறுசுவையுண்டியென்பது தற்செயலாக ஏற்பட்ட ஒன்றல்ல. இது திட்டமிடப்பட்ட ஒரு உணவு முறையே எனவும், ஒவ்வொரு சுவையும் எமது உடலிலேயுள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும் தேவையான காரணியாகும் எனவும் இதனை வேறு ஒரு வகையாகக் கூறுவதாயின் ஒரு மோட்டார் வண்டி (கார்) சரியாக இயங்குவதற்கு பெட்றோல், இன்ஜின் ஒயில், பிரேக் ஒயில், கியர் ஒயில் போன்ற பல ஒயில்கள் தேவைப்படுவது போல எமது உடலின் உறுப்புக்கள் சரியாக இயங்குவதற்கு அறுசுவைகளும் தேவைப்படுகின்றன எனவும், “கணயம் என்ற எமது உள்ளுறுப்பு” “இன்சுலின்” என்ற நீரினைச் சுரந்து எமது உணவினைச் சக்தியாக மாற்றமடையச் செய்ய உதவுகின்றது. இந்தக் கணையம் (Pancreas) இயங்க அறுசுவைகளுள் ஒன்றான கசப்புத் தேவை எனவும், இந்தக் கசப்பு பாகற்காய், திராய் [கசப்பான கீரை வகை] போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சித்த மருத்துவ குறிப்பு ஒன்று கூறுகிறது. 'கோபக்கார மாப்பிள்ளைக்கு பாகற்காய் பத்தியமாம்’ என்ற பழமொழியை கவனிக்க! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.