Everything posted by நவீனன்
-
கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
புத்துணர்ச்சி தரும் கொய்யா - அத்திப்பழ சாலட் தினமும் பழங்களை சாலட் முறையில் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று கொய்யா, அத்திப்பழத்தை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கொய்யாக்காய் - 2, அத்திப்பழம் - 4, உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு. செய்முறை : கொய்யாக்காய், அத்திப்பழத்தை கழுவி சிறிய துண்டுகளாக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழத்தை போட்டு இதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து சாப்பிடலாம். சூப்பரான கொய்யா - அத்திப்பழ சாலட் ரெடி.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சூப்பரான ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ஸ்ரீரங்கம் வத்த குழம்பு என்றதுமே அனைவரது வாயிலும் எச்சில் ஊறும். அத்தகைய வத்த குழம்பை இன்று எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சுண்டக்காய் - 1 கப் வெந்தயம் - 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் மல்லி - 2 டேபிள் ஸ்பூன் மிளகு - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 4 புளி - எலுமிச்சை அளவு சின்ன வெங்காயம் - 50 கிராம் வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன் அரிசி - 1 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு தாளிப்பதற்கு… கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை : புளியை கரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தை போட்டு வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்த, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து, அதில் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விடவும். குழம்பு திக்கான பதம் வந்தவுடன் அதன் மேல் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், ஸ்ரீரங்கம் வத்த குழம்பு ரெடி!!!- சமையல் செய்முறைகள் சில
30 வகை மூலிகை சமையல் ``இன்றைய காலகட்டத்தில், மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, நோய்களின் தாக்கமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதைத் தடுக்கும் மருந்துகளின் பக்கவிளைவுகளும் அதிகம். எனவே, ‘உணவே மருந்து... மருந்தே உணவு’ என்ற நம் முன்னோர் வாக்கைப் பின்பற்றி, எளிதாக கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்துப் பல்வேறு உணவுகளைப் பரிமாறியுள்ளேன்’’ என்று கூறுகிறார், ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி. அவர் வழங்கும் 30 வகை மூலிகை சமையல் உணவுகள் இந்த இணைப்பிதழில்... உங்களுக்காக! ஹெர்பல் டீ தேவையானவை: காய்ந்த துளசி இலை, காய்ந்த புதினா இலை - தலா ஒரு கைப்பிடியளவு, பட்டை - சிறிய துண்டு, கறுப்பு ஏலக்காய் - 2, பச்சை ஏலக்காய் - 5, மிளகு - ஒரு டீஸ்பூன், அதிமதுரப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன், திப்பிலி - 5, ஜாதிக்காய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த தேயிலை - ஒரு கைப்பிடி அளவு, கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை - தேவையான அளவு. செய்முறை: மிக்ஸியில் துளசி இலைகளுடன் புதினா இலைகள் சேர்த்து ஒரு சுற்றுச்சுற்றவும். இதனுடன் மிளகு, பட்டை, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய்த்தூள், காய்ந்த தேயிலை சேர்த்து அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர்விட்டு கொதிக்கவைத்து, அரைத்தத்தூள் ஒரு டீஸ்பூன், தேவையான அளவு கருப்பட்டி (அ) நாட்டுச் சர்க்கரை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டி அருந்தலாம். குறிப்பு: விரும்பினால் பால் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம். பயன்: தேவையற்ற கொழுப்பை நீக்கும்; அஜீரணக் கோளாறுகளை அகற்றும். பூண்டு லேகியம் தேவையானவை: நாட்டு பூண்டுப் பல் – 12 முதல் 20 வரை, பால் - 100 மில்லி, கருப்பட்டி அல்லது வெல்லம் - 100 கிராம், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: பூண்டுப் பற்களைப் பாலில் வேகவைக்கவும். ஆறியதும் நன்கு மசிக்கவும் (மிக்ஸியில் அரைத்தும் எடுக்கலாம்). கருப்பட்டி (அ) வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். பிறகு, வெல்லக் கரைசலுடன் பூண்டு விழுது, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறவும். கெட்டியாகி சுருண்டு வரும்போது மீதமுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சுருளக்கிளறி இறக்கவும். ஆறியபின் பாட்டிலில் சேகரித்து வைக்கவும். பயன்: உணவுக்கு முன் அல்லது பின் இந்த லேகியத்தை ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர ஜீரணம், வயிற்றுப் பொருமல், மாந்தம் சரியாகும். உளுந்தோரை தேவையானவை: உடைத்த கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம், பச்சரிசி - 200 கிராம், பூண்டு – 6 பல், மிளகுத்தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, தோலுரித்த சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கவும்), வெந்தயம் - கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் நல்லெண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, சீரகம், பூண்டு, வெந்தயம், சின்ன வெங்காயம், மிளகுத்தூள், உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் பச்சரிசி, உப்பு, 3 கப் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து குக்கரை மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் குக்கரைத் திறந்து, சிறிதளவு நல்லெண்ணெய், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து சூடாகப் பரிமாறவும். பயன்: மாதவிடாய்க் கோளாறு உள்ளவர்களுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும், எலும்பு சம்பந்தமான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கவும் ஏற்ற உணவு இது. கறிவேப்பிலைக் குழம்பு தேவையானவை: தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), பூண்டு – 8 பல், தாளிப்பு வடகம் - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சை அளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: கறிவேப்பிலை - 3 கைப்பிடி அளவு, மிளகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு டீஸ்பூன், மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5. செய்முறை: புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு வறுத்து அரைக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம், வெந்தயம், பெருங்காயத்தூள் தாளிக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மேலே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு, குழம்பு கெட்டியாகி வரும்போது கறிவேப்பிலை தூவி இறக்கவும். பயன்: ரத்தச்சோகை, முடி உதிர்தல், சோர்வு, மயக்கம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாகும் குழம்பு இது. பிரண்டைத் துவையல் தேவையானவை: நார் நீக்கிய பிரண்டைத் துண்டுகள் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் - 8, புளி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 5, (விரும்பினால்) தேங்காய்த் துருவல் – சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், வெங்காயம், பிரண்டை, உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து துவையலுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பயன்: கால்சியம் சத்து, நார்ச்சத்து கொண்டது. எலும்பு, மூலம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு மருந்தாகும். மூலிகை மோர்க்குழம்பு தேவையானவை: மோர் - 3 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு. வறுத்து அரைக்க: பச்சரிசி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, ஓமம் - அரை டீஸ்பூன், தோல் சீவி துருவிய இஞ்சி - கால் டீஸ்பூன், புதினா இலை, துளசி இலை – தலா 15, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து எடுக்கவும். மோருடன் உப்பு, மஞ்சள்தூள், அரைத்த விழுது சேர்த்துக் கலக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து மோர்க்கலவையை ஊற்றி, நுரைத்து வரும்போது கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். பயன்: நாவறட்சி, தொண்டைக் கமறல் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். அத்திக்காய் கூட்டு தேவையானவை: அத்திக்காய் - 15, பாசிப்பருப்பு – 100 கிராம், தேங்காய்த் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 3, தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்), தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: தேங்காய் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: அத்திக்காய்களை உப்பு, மஞ்சள்தூள் கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி, நான்கு துண்டுகளாக நறுக்கவும். குக்கரில் பாசிப்பருப்புடன் அத்திக்காய், தண்ணீர் சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும். தேங்காய்த் துருவலுடன் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர்விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வேகவைத்த பருப்புக் கலவையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கூட்டுடன் கலந்து பரிமாறவும். பயன்: குழந்தை பாக்கியம் ஏற்பட உதவும். வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்னைகளுக்கும் மருந்தாகும். தேன் - தினை லட்டு தேவையானவை: தினை மாவு - ஒரு கப், வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் - முக்கால் கப், தேன் - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை: வெறும் வாணலியில் தினை மாவை வாசனை வரும்வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் வெல்லம் (அ) கருப்பட்டித் தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். இதனுடன் தேன், நெய் சேர்த்துக் கலந்து, சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும். பயன்: அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான சிற்றுண்டி. வல்லாரைத் துவையல் தேவையானவை: வல்லாரைக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்), கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, புளி – சிறிதளவு, சீரகம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, கறுப்பு உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், கீரை, தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் புளி, உப்பு சேர்த்து துவையலாக அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து துவையலுடன் கலந்து பரிமாறலாம். பயன்: ஞாபகசக்தியைத் தூண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு மருந்தாகும். அங்காயப் பொடி தேவையானவை: தனியா (மல்லி), மிளகு, சீரகம், ஓமம், காய்ந்த வேப்பம்பூ – தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், சுக்குத்தூள் – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள வற்றை வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து எடுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் பவுடராக அரைத்து சேகரிக்கவும். சூடான சாதத்துடன் சிறிதளவு நெய், அரைத்த பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். பயன்: குழந்தை பெற்ற பெண்களுக்கு மிகவும் நலம் தரும். திப்பிலி ரசம் தேவையானவை: திப்பிலி - 5, மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, புளி - எலுமிச்சை அளவு, வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - அரை கப், தக்காளி - 2 (நறுக்கவும்), கொத்தமல்லித்தழை - சிறிதளவு, வெல்லம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு. தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் திப்பிலி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வறுத்துப் பொடிக்கவும். பாத்திரத்தில் புளிக்கரைசல், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்துக் கரைத்து ஒரு கொதிவிடவும். இதனுடன் அரைத்த பொடி, பருப்பு தண்ணீர், கொத்தமல்லித்தழை சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். வாணலியில் நெய்விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து ரசத்துடன் கலந்து பரிமாறவும். பயன்: கபத்தைக் கரைக்கும்; உடல் சூட்டைத் தணிக்கும்; காய்ச்சலுக்கு ஏற்ற மருந்தாகும். செலவு குழம்பு தேவையானவை: செலவு சாமான் – தலா 10 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), தோலுரித்த சின்ன வெங்காயம் – 10, காய்ந்த மிளகாய் - 5, நல்லெண்ணெய் – தேவையான அளவு, தாளிப்பு வடகம் - ஒரு டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு. செய்முறை: வெறும் வாணலியில் செலவு சாமான்களை சேர்த்து வறுத்து பவுடராக பொடிக்கவும். புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு வடகம் தாளித்து வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். பிறகு, அரைத்த பவுடரைச் சேர்த்து கொதிவிட்டு ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய்விட்டு இறக்கவும். சூடான சாதத்தில் சிறிதளவு நெய்விட்டு, இந்தக் குழம்பைச் சேர்த்து சாப்பிடலாம். குறிப்பு: செலவு சாமான்கள் சுக்கு, மிளகு, கண்டந்திப்பிலி, வெந்தயம், சதகுப்பை, ஓமம், சீரகம், பெருங்காயம், கருஞ்சீரகம், சித்தரத்தை, அரிசி திப்பிலி ஆகியனவாகும். பயன்: குழந்தை பெற்ற பெண்களுக்கு நலம் பயக்கும்; காய்ச்சல் நேரங்களிலும் சாப்பிடலாம். கண்டந்திப்பிலி - கற்பூரவல்லி குழம்பு தேவையானவை: மல்லி (தனியா) - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கண்டந்திப்பிலி - 15, கற்பூரவல்லி இலை - 5, தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – சிறிய துண்டு, தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கண்டந்திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து எடுக்கவும். இதனுடன் கற்பூரவல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதே வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், உப்பு, அரைத்த விழுது, வெல்லம் சேர்த்து கொதிக்கவைத்து, குழம்பு கெட்டியான பின்பு இறக்கவும். பயன்: நெஞ்சு சளியைக் கரைக்க உதவும். மூலிகை ஊறல் நீர் தேவையானவை: ஆவாரம்பூ - ஒரு கைப்பிடியளவு, ஏலக்காய் - ஒன்று, ஜாதிக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், வெட்டி வேர் - சிறிதளவு, துளசி, புதினா - சிறிதளவு, பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன். செய்முறை: மண் குடுவையில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும். மறுநாள் காலையில் வடிகட்டி பருகலாம். பயன்: உடல் உஷ்ணம் நீங்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். தேவையற்ற கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும். புதினா சூப் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - ஒன்று, மிளகு - சீரகத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய புதினா இலைகள் - ஒரு கப், எலுமிச்சைப் பழம் - ஒரு மூடி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: எலுமிச்சைப் பழத்தை சாறு பிழியவும். குக்கரில் பாசிப்பருப்புடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், புதினா இலைகள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை நீக்கிவிட்டு மத்தால் கடையவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்த்துப் பருகலாம். பயன்: பசியைத் தூண்டும். புத்துணர்ச்சி தரும். கொழுப்பைக் குறைக்கும். புழுங்கல் அரிசி கஞ்சி தேவையானவை: புழுங்கல் அரிசி - ஒரு கப், பூண்டு - 15 பல், தோல் சீவி துருவிய இஞ்சி - சிறிதளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், முருங்கை இலை - ஒரு கைப்பிடி அளவு, தேங்காய்ப்பால் அல்லது மோர் - ஒரு கப், மிளகு, சீரகம், உப்பு – தேவையான அளவு. செய்முறை: குக்கரில் புழுங்கல் அரிசி, பூண்டு, இஞ்சித் துருவல், வெந்தயம், சீரகம், மிளகு, முருங்கை இலை, உப்பு, நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு மூடி மூன்று விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் தேங்காய்ப்பால் அல்லது மோர்விட்டு கடைந்து பருகலாம். பயன்: வாயு பிரச்னைகளுக்கும் வயிற்று உபாதைகளுக்கும் மருந்தாகும். சீரகம் - கொத்தமல்லி பால் சோறு தேவையானவை: சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் - 2 கப், சீரக சம்பா அரிசி - ஒரு கப், பூண்டு - 6 பல், தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2 (கீறவும்), தயிர் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லித்தழை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: குக்கரில் தேங்காய் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, பூண்டு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் தயிர், அரிசி, உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம். பயன்: வயிற்றுப்புண், வாய்புண் நீங்கும்; நல்ல உறக்கம் வரும். தூதுவளை ரசம் தேவையானவை: தூதுவளை இலைகள் - 15, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், வேகவைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - ஒரு கப், புளிக்கரைசல் - ஒரு கப், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், தட்டிய பூண்டு – 5 பல், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல் ஊற்றி, ஒரு கொதிவிடவும். பிறகு, மிளகு - சீரகத்தூள், பருப்புத் தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். பயன்: கபம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி நீங்கும். ரோஜாப்பூ துவையல் தேவையானவை: பன்னீர் ரோஜா இதழ்கள் - ஒரு கப், பொட்டுக்கடலை - கைப்பிடி அளவு, தேங்காய்த் துருவல் - தேவையான அளவு, காய்ந்த மிளகாய் - 3, உப்பு - தேவைக்கேற்ப. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, எண்ணெய் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு. செய்முறை: ரோஜா இதழ்களுடன் பொட்டுக்கடலை, தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, அரைத்துவைத்த துவையலுடன் கலந்து பரிமாறவும். பயன்: உடல்சூட்டைக் குறைக்கும். வயிற்று எரிச்சல், குமட்டல் பிரச்னைகளுக்கு மருந்தாகும். ரத்த விருத்திக்கு உதவும். ஞாபகசக்தியைத் தூண்டும். முடக்கத்தான் கீரை ரசம் தேவையானவை: சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை இலைகள் - 3 கப், புளி - கொட்டைப்பாக்கு அளவு, தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்), பூண்டு விழுது, மிளகு - சீரகத்தூள் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், நெய், கறிவேப்பிலை – சிறிதளவு. செய்முறை: புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டவும். இரண்டு கப் முடக்கத்தான் கீரை இலைகளை தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். வாணலியில் நெய்விட்டு தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் தக்காளி, உப்பு, பூண்டு விழுது, மீதமுள்ள ஒரு கப் இலைகளை சேர்த்து வதக்கவும். பிறகு புளிக்கரைசல்விட்டு, ஒரு கொதி வந்ததும் மிளகு - சீரகத்தூள், வடிகட்டிய கீரைச்சாறு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். குறிப்பு: முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது முடக்கத்தான். பயன்: கை, கால், மூட்டுவலி, வாதநோய்களுக்கு நல்ல மருந்தாகும். குப்பைமேனி சூப் தேவையானவை: குப்பைமேனிக் கீரை - ஒரு கைப்பிடியளவு, பாசிப்பருப்பு - 50 கிராம், பட்டை - ஒரு சிறிய துண்டு, கிராம்பு - 2, பிரிஞ்சி இலை - ஒன்று, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: சோள மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு பேஸ்ட் போல கரைக்கவும். குக்கரில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பாசிப்பருப்பு, குப்பைமேனிக் கீரை, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மசித்து வடிகட்டவும். இதனுடன் மிளகு - சீரகத்தூள், சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி சூடாகப் பருகவும். குறிப்பு: விரும்பினால் எலுமிச்சைச் சாறு கலந்தும் பருகலாம். பயன்: கசப்புத்தன்மை இருந்தாலும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும். வெந்தயம் - வெள்ளைப் பூண்டு குழம்பு தேவையானவை: வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், நாட்டுப் பூண்டு - 20 பல், தோலுரித்த சின்ன வெங்காயம் – 15 (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, தக்காளி - 3 (பொடியாக நறுக்கவும்), புளி - சிறிய எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்), நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு, தாளிக்க: வடகம், பெருங்காயத்தூள், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. செய்முறை: வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் புளிக்கரைசல், வெந்தயப்பொடி, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும். பயன்: வயிற்று உப்பசம், வயிற்றுவலி, வாயு கோளாறுகள், உடல்சூட்டு வலி போன்றவற்றுக்கு மருந்தாகும். அறுகம்புல் தேன் சாறு தேவையானவை: அறுகம்புல் - அரை கட்டு, தேன் - 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் - 3 கப். செய்முறை: அறுகம்புல்லைக் கழுவி தண்ணீர்விட்டு அரைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்துக் கலந்து பருகலாம். பயன்: ரத்தத்தில் உள்ள நச்சு களை வெளியேற்றும். மூலிகை ஊத்தப்பம் தேவையானவை: தோசை மாவு - 3 கப், பசலைக்கீரை, புதினா, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தலா கைப்பிடி அளவு, மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கி வதக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், தேங்காய்த் துருவல், கேரட் துருவல், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சுத்தம் செய்த பசலைக்கீரை, புதினா, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து எடுக்கவும். தோசை மாவுடன் மிளகு - சீரகத்தூள், சின்ன வெங்காயம், அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லை காயவைத்து, மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றவும். அதன் மேலே தேங்காய்த் துருவல், கேரட் துருவல் தூவி, சுற்றிலும் எண்ணெய்விட்டு வேகவைத்து எடுக்கவும். பயன்: பல், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு. மூலிகை பிரியாணி தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை - தலா கைப்பிடி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, வெங்காயம், தக்காளி - தலா 2 (நீளவாக்கில் நறுக்கவும்), சின்ன வெங்காயம் - 8, கற்பூரவள்ளி இலை, துளசி – தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு, சோம்பு, தயிர் – தலா ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை: சின்ன வெங்காயத்துடன் தக்காளி, மிளகு, சோம்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். புதினா, துளசி, கற்பூரவள்ளி, கொத்தமல்லித்தழை, தயிர் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரிசியை 5 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த விழுது வகைகளைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி அரிசி, 2 கப் தண்ணீர்விட்டு மூடி 2 விசில்விட்டு இறக்கவும். ஆவி அடங்கியதும் திறந்து மேலே சிறிதளவு நெய்விட்டு சூடாகப் பரிமாறவும். குறிப்பு: தண்ணீருக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்க்கலாம். பயன்: சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. கற்றாழை நீர் சாரம் தேவையானவை: கற்றாழை – ஒரு மடல், மோர் – ஒரு கப், புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: கற்றாழை மடலை சீவி, நன்கு பலமுறை கழுவி புதினா, கொத்தமல்லித்தழை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வடிகட்டவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்துப் பருகலாம். பயன்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும்; சருமப் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். மூலிகை சாலட் தேவையானவை: கேரட் துருவல், வெள்ளரித் துருவல் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள்) – தேவையான அளவு, வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), வேர்க்கடலை - சிறிதளவு, இந்துப்பு – தேவையான அளவு, புதினா, கொத்தமல்லித்தழை, துளசி - தலா கைப்பிடியளவு, காய்ந்த திருநீற்றுப் பச்சிலை, வெந்தயக்கீரை – சிறிதளவு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, தேன் – தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை அகலமான பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்துக் கலந்து பரிமாறலாம். பயன்: காலை சிற்றுண்டியாக சாப்பிடலாம். தோல் பளபளப்பாகும். ஓமப் பூரி தேவையானவை: ஓமம் – 20 கிராம், கோதுமை மாவு - 3 கப், சீரகத்தூள் - கால் டீஸ்பூன், ஓம வாட்டர் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு, ஓமம், சீரகத்தூள், ஓம வாட்டர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, மாவை சிறிய உருண்டைகளாக்கி, பூரிகளாக திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, திரட்டிய பூரிகளைப் போட்டு பொரித்தெடுக்கவும். பயன்: வயிற்றுப் பொருமல், நெஞ்செரிச்சல், செரிமானப் பிரச்னைகளைத் தடுக்கும். துளசி - நெல்லி துவையல் தேவையானவை: முழு நெல்லிக்காய் - 5, துளசி - ஒரு கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, தேங்காய்த் துருவல் - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு. செய்முறை: நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி துண்டுகளாக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், நெல்லிக்காய், தேங்காய்த் துருவல், இந்துப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்துத் துவையலாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, துவையலுடன் சேர்க்கவும். பயன்: வைட்டமின்-சி நிறைந்தது; நோய் எதிர்ப்புச்சக்தியைத் தூண்டும். சிறுதானிய மூலிகை கஞ்சி தேவையானவை: குதிரைவாலி, சாமை, வரகு, பாசிப்பருப்பு கலவை – 100 கிராம், மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா, துளசி - சிறிதளவு, கிராம்பு - ஒன்று, பூண்டு - 6 பல், வெந்தயம் - கால் டீஸ்பூன், இந்துப்பு - தேவையான அளவு. செய்முறை: குக்கரில் குதிரைவாலி, சாமை, வரகு, பாசிப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் துளசி, புதினா, கிராம்பு, பூண்டு, வெந்தயம், இந்துப்பு, மிளகு - சீரகத்தூள், 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 4 விசில்விட்டு இறக்கவும். ஆவிவிட்டதும் மத்தால் கடைந்து அருந்தலாம். குறிப்பு: விரும்பினால் மோர் சேர்த்தும் அருந்தலாம். பயன்: காய்ச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். கபம், வாயு சீராகும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மட்டன் தொக்கு... சும்மா `கிழி கிழி கிழி’! - கலா மாஸ்டர் கிச்சன் கு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத் “வெஜ், நான்-வெஜ் ரெண்டையுமே நான் நல்லா சமைப்பேன். ஆனா, நேரம்தான் இருக்காது. என் குடும்பத்துக்குச் சமைச்சுப் போட்டுச் சந்தோஷப்படுத்த, அப்பப்போ அந்த நேரத்தை உருவாக்கிக்குவேன்’’ - கலகலப்புடன் பேசுகிறார் கலா மாஸ்டர். “நாங்க அக்கா தங்கச்சிங்க ஏழு பேரு. எல்லாருக்குமே சின்ன வயசுலேயே எங்கம்மா சரோஜினி நல்லா சமைக்கக் கத்துக்கொடுத்துட்டாங்க. அவங்க செய்ற சாம்பார், உருளைக்கிழங்கு ஸ்ட்யூ, புளிச்சக்கீரை சாதத்துக்கு நாங்க எல்லோரும் அடிமைகள். அம்மா, இந்த உணவுகளை ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்புற நாள்கள்ல எல்லாம் லஞ்ச் பாக்ஸ் சுத்தமா காலியாகிடும். வீட்ல இருக்கிறப்ப அவங்க உருட்டிக்கொடுக்குற சாதத்துல, அன்பு அற்புதமான சுவையா சேர்ந்திருக்கும். எங்கப்பா கோபால் ஐயர், அவரோட சொந்த ஊரான ஈரோட்டுல பிரபல சமையல் கான்ட்ராக்டர். நடனம், சினிமான்னு எங்க ஆசைகளுக்கு உயிர்கொடுக்க, அம்மா எங்களையெல்லாம் சின்ன வயசுலேயே சென்னைக்கு அழைச்சுட்டு வந்துட்டாங்க. அதனால அப்பா, ரெண்டு வாரத்துக்கு ஒருமுறை சென்னைக்கு வந்து எங்களோடு சில நாள்கள் தங்கிட்டுப் போவார். அப்படி வரும்போது நாங்க கேட்கிற சமையல், ஸ்வீட்ஸை எல்லாம் செய்துகொடுப்பார். அதை நாங்க எல்லோரும் சேர்ந்து சாப்பிட்ட அந்தச் சந்தோஷத் தருணங்கள், நாங்க எவ்வளவு உயரத்துக்குப் போனாலும் திரும்பக் கிடைக்காது. என்னோட 12 வயசுலேயே சினிமாவுல பரபரப்பா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டேன். அப்போவெல்லாம் சரியா சாப்பிடவே மாட்டேன். வேலைல இருந்தா, பசி, தூக்கம்னு எதுவும் என்னை அண்டாது. என்னால ஷூட்டிங் தாமதமாகக் கூடாதுனு ஓடிட்டே இருப்பேன். இதனால காலையில சாப்பாட்டை மதியமும், மதிய சாப்பாட்டை சாயங்காலமும், கடைசியா நைட்டு 12 மணிக்கும் சாப்பிடுறதுனு போகும் வாழ்க்கை. நேரத்துக்குச் சாப்பிட மாட்டேங்கிறேன்னு வீட்டுல எல்லோரும் வருத்தப்படுவாங்க. இருபது வயசுல நான் பார்க்க ரொம்ப ஒல்லியா இருப்பேன். எல்லா ஸ்டார்ஸும் என்னை ‘ஒல்லிக்குச்சி கலா’ன்னுதான் சொல்லுவாங்க. ஒருகட்டத்துல, வேலை பரபரப்புல நேரத்துக்குச் சாப்பிடாததே ஒபிஸிட்டி பிரச்னை ஏற்படக் காரணம் ஆகிடுச்சு. ஒழுங்கா சாப்பிடலைன்னாலும், சூப்பரா சமைப்பேன். அதுலயும் நான் செய்ற பிரியாணி, முட்டைக்கறிக்கு எங்க குடும்பம் என்னைக் கொண்டாடித் தீர்த்துடும். ஷூட்டிங் இல்லாத நாள்களில் அக்கா தங்கச்சிங்க கூடினா, ‘இன்னிக்கு கலா சமைப்பா’னு எல்லோரும் குஷி ஆகிடுவாங்க. அசைவம் பிடிக்காத பிருந்தாவைத் தவிர, மற்ற எல்லோரும், ‘வெரைட்டி வெரைட்டியா பிரியாணி செய்வியே... இன்னிக்கும் அப்படி மணக்க மணக்க சமைச்சுப் போடு, வயிறார சாப்பிடுறோம்’னு கேட்பாங்க. எனக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், அப்படி நாங்க சந்திக்கிற தருணங்கள் ரொம்பக் குறைஞ்சுடுச்சு. இப்போ கணவர் மகேஷ், பையன் வித்யூத் ரெண்டு பேரும் என் சமையல் ஃபேன்ஸ். எங்க வீட்டுல குக் இருக்காங்க. சினிமா, டெலிவிஷன், டான்ஸ் நிகழ்ச்சிகள்னு நான் பிஸியா ஓடிக்கிட்டு இருக்கிறதால, காலை மற்றும் மதியம் அவங்க சமைப்பாங்க. என் கணவருக்கும் பையனுக்கும் தினமும் ஏதாச்சும் ஒருவேளைக்காவது நான்-வெஜ் வேண்டும். அதனால என்ன சமைக்கணும்னு முதல் நாளே யோசிச்சு, குக்கிட்ட சொல்லிடுவேன். என்ன வேலை இருந்தாலும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல ஃபேமிலி டைம் எனக்கு. கணவருக்கும் பையனுக்கும் நான்தான் டின்னர் செஞ்சு கொடுப் பேன். மேக்ஸிமம் அரைமணி நேரம்தான்... அந்தளவுக்கு சூப்பர் ஃபாஸ்டா சமைப்பேன். மலையாள ஸ்டைல் உருளைக்கிழங்கு ஸ்ட்யூதான் அடிக்கடி செய்வேன். அன்னிக்கு மட்டும் எங்க மூணு பேருக்குமே எக்ஸ்ட்ரா இட்லிகள் வயிற்றுக்குள்ள போகும். எண்ணெய் அதிகம் சேர்க்காத தமிழ்நாடு, கொங்கு ஸ்பெஷல், மலையாள வெஜ், நான்-வெஜ் உணவுகள்... இதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நிறைய பழங்கள், தண்ணீர் எடுத்துக்குவேன். கல்யாணமான புதுசுல அடிக்கடி ஹோட்டல்ல சாப்பிடுவோம். ஆனா, இப்போ பையனோட ஆரோக்கியத்துக்காக ஹோட்டலுக்குப் போறதையே நிறுத்திட்டோம். அவனுக்கு என்ன பிடிச்சாலும் அதை வீட்டிலேயே செய்து கொடுத்துடுவேன். சாப்பிட்டு முடிச்சதும் உடல் உழைப்பைக் கொடுக்கும் ஏதாச்சும் ஒரு வேலையை செய்துடுவேன்’’ என மாஸ்டர், தன் ஸ்பெஷல் சமையலான மட்டன் தொக்கு செய்ய மசாலா தயார் செய்தபடி பேசிக்கொண்டிருக்க, அவர் கணவர் மகேஷ் கிச்சனுக்குள் என்ட்ரி ஆனார். ``வெல்கம் சார்! ரொம்ப நாளைக்கப்புறமா கிச்சனுக்குள்ள வந்திருக்கீங்க...” என்று கணவரிடம் பேசியவாறே, சில நிமிடங்களில் மட்டன் தொக்கு செய்து முடித்துவிட்டார் கலா மாஸ்டர். கணவருக்கும் மகனுக்கும் டைனிங் டேபிளில் பரிமாறியபடி தொடர்ந்தவர், “வேலையில எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், நாங்க மூணு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடும்போது மனசு ரிலாக்ஸ் ஆகிடும். முன்பெல்லாம் என் வீட்டுல பிரியாணி, ஸ்பெஷல் ஸ்வீட்ஸ்னு எது செஞ்சாலும், என் சிஸ்டர்ஸ் எல்லாருக்கும் கொடுத்தனுப்புவேன். இப்போ அக்கா தங்கைகள் எல்லோரும் ஆளுக்கொரு பகுதியில பிஸியா இருக்கிறதால, எப்பயாச்சும்தான் சந்திக்கிறோம். அவங்களை ரொம்ப மிஸ் பண்றேன். சீக்கிரமே எல்லோரையும் கூப்பிட்டு பிரியாணி சமைச்சுப் போடணும்’’ என்று கலா மாஸ்டர் சொல்லும்போது, ``மம்மி... மட்டன் தொக்கு சூப்பர். சும்மா கிழி கிழி கிழி” என்று அவர் மகன் பாராட்ட, ``எனக்கே என் டயலாக்காடா செல்லம்!’’ என்ற மாஸ்டர், அந்தத் தட்டில் இன்னும் ஒரு கரண்டித் தொக்கு வைக்கிறார்! அம்மாவின் கை, பிள்ளைக்கு அன் லிமிட்டடாகத்தான் பரிமாறும்! மட்டன் தொக்கு ரெசிப்பி! தேவையானவை: மட்டன் - 250 கிராம் பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 பச்சை மிளகாய் - 3 எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை மல்லித்தூள் - ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - 2 டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் பட்டை - 2 கிராம்பு - ஒன்று சோம்பு - அரை டீஸ்பூன் பிரிஞ்சி இலை - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை, பெரிய வெங்காயம் - அலங்கரிக்கத் தேவையான அளவு எண்ணெய் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், இஞ்சி - பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, மட்டன் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கிவிட்டு மூடிபோட்டு வேகவிடவும். மூன்று விசில் வந்ததும் அடுப்பை `சிம்’மில் வைத்து இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். ஆவி அடங்கியதும், குக்கரைத் திறந்து மட்டன் கலவையை தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்துச் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தயார் செய்து வைத்திருக்கும் மட்டன் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். கலவை கொதிவரத் தொடங்கும் முன்பு மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிவிடவும். கலவை சுண்டுவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்பாக எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக் கிளறிவிட்டு வேகவிடவும். கலவையில் தண்ணீர் வற்றி கிரேவியானதும், அடுப்பை அணைத்துக் கொத்தமல்லித்தழை மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தூவி சூடாகப் பரிமாறவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
முளைகட்டிய பயறு உணவுகள் சத்துகள் நிறைந்த முளைகட்டிய பயறுகளில் செய்யக்கூடிய சுவையான பல்வேறு உணவு வகைகளை வழங்கும் சமையல்கலை நிபுணர் தீபா பாலசந்தர், முளைகட்டும் முறையைக் கூறுகிறார்... ``பயறு வகைகளைக் கழுவி முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து தண்ணீரை வடிகட்டி, சுத்தமான துணியில் போட்டு மூட்டைகட்டித் தொங்கவிடவும். அடுத்த நாள் மூட்டையைத் திறந்து பார்த்தால் பயறு நன்கு முளைவிட்டிருக்கும்.’’ சுண்டல், சூப், கஞ்சி, தால், சாலட் என இங்கே வரிசைகாட்டி நிற்கும் ரெசிப்பிகளை செய்துபாருங்கள்... ருசியோடு ஆரோக்கியத்தையும் அள்ளுங்கள். பச்சைப் பயறு - மாதுளை சாலட் தேவையானவை: முளைகட்டிய பச்சைப் பயறு - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கேரட் துருவல் - கால் கப் மாதுளை முத்துகள் - கால் கப் எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு செய்முறை: முளைக்கட்டிய பச்சைப் பயறுடன் வெங்காயம், தக்காளி, கேரட், மாதுளை முத்துகள், உப்பு, எலுமிச்சைச் சாறு, மிளகுத்தூள் சேர்த்துக் கலந்து காலை நேரச் சிற்றுண்டியாகப் பரிமாறலாம். நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. குறிப்பு: முளைகட்டிய பயறை வேகவைத்தும் சேர்க்கலாம். கறுப்பு உளுந்து தால் தேவையானவை: முளைகட்டிய கறுப்பு உளுந்து - ஒரு கப் வெண்ணெய் - 2 டீஸ்பூன் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்) இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன் பட்டை - சிறிய துண்டு சீரகம் - ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, சீரகம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, முளைகட்டிய கறுப்பு உளுந்து, மூன்று கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். ஆறிய பின் திறந்து, உப்பு சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவைத்து இறக்கி மேலே கொத்தமல்லித்தழை, வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறவும். மிக்ஸ்டு ஸ்பிரவுட்ஸ் அடை தேவையானவை: இட்லி அரிசி - ஒரு கப் முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப் முளைகட்டிய கொண்டைக்கடலை - கால் கப் முளைகட்டிய கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன் முளைகட்டிய கொள்ளு - 5 டீஸ்பூன் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3 தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை கேரட் துருவல் - கால் கப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு அரிசி, முளைகட்டிய பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, கறுப்பு உளுந்து, கொள்ளு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கொரகொரவென அரைத்து எடுக்கவும். இதனுடன் உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், கேரட் துருவல் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். முளைகட்டிய சன்னா சாட் தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை (வெள்ளை) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) உருளைக்கிழங்கு - ஒன்று மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து, சிறிய துண்டுகளாக நறுக்கவும். கொண்டைக்கடலையை வேகவைத்து, நீரை வடிக்கவும். கொண்டைக்கடலையுடன் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு சேர்த்துக் கலக்கவும். மேலே ஓமப்பொடி தூவிப் பரிமாறவும். கறுப்புக்கடலை சூப் தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை (கறுப்பு) - ஒரு கப் வெண்ணெய் - ஒரு டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு செய்முறை: கொண்டைக்கடலையை வேகவைக்கவும். சிறிதளவு கொண்டைக்கடலையைத் தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலையை வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெய்விட்டு உருக்கி சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். மேலே மிளகுத்தூள், தனியாக எடுத்துவைத்த கொண்டைக்கடலை சேர்த்துக் கலந்து பருகவும். குறிப்பு: இந்த சூப், வளரும் குழந்தைகளுக்கு நல்லது. முளைகட்டிய கோதுமை சுண்டல் தேவையானவை: முளைகட்டிய கோதுமை - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: கோதுமையை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு கோதுமை, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். மேலே தேங்காய்த் துருவலைத் தூவிப் பரிமாறவும். குறிப்பு: இந்தச் சுண்டல், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் மாலை நேர உணவாகச் சாப்பிட ஏற்றது. முளைகட்டிய கொள்ளு கஞ்சி தேவையானவை: முளைகட்டிய கொள்ளு - ஒரு கப் புழுங்கல் அரிசி - கால் கப் மோர் - 2 கப் சின்ன வெங்காயம் - 5 (தோல் உரிக்கவும்) சீரகம் - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: குக்கரில் கொள்ளு, அரிசி, நான்கு கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்து, வெந்த கொள்ளு - அரிசி கலவையுடன் சேர்க்கவும். ஆறிய பின் இதனுடன் மோர், உப்பு சேர்த்துக் கலந்து பருகலாம். குறிப்பு: இது, உடல் எடையைக் குறைக்க உதவும். முளைகட்டிய பயறு சத்து மாவு தேவையானவை: முளைகட்டிய கேழ்வரகு, கம்பு, சோளம் (வெள்ளை) - தலா ஒரு கப் முளைகட்டிய கறுப்பு உளுந்து, கோதுமை, பச்சைப் பயறு - தலா கால் கப் சிவப்பரிசி - ஒரு கப் பொட்டுக்கடலை - 5 டீஸ்பூன் பாதாம், முந்திரி - தலா 10 ஏலக்காய் - 3 செய்முறை: முளைகட்டிய பயறு வகைகளை நன்கு வெயிலில் காயவைக்கவும். வெறும் வாணலியில் முளைகட்டிய பயறு வகைகள், சிவப்பரிசி, பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுக்கவும். ஆறிய பின் மெஷினில் கொடுத்து பவுடராக அரைக்கவும். இதுவே சத்து மாவு. குறிப்பு: சிறிதளவு மாவுடன் தண்ணீர்விட்டுக் கரைத்து, கொதிக்கவைத்து இறக்கி பால், சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மிக்ஸ்டு ஸ்பிரவுட்ஸ் போஹா தேவையானவை: கெட்டி அவல் - ஒரு கப் முளைகட்டிய பச்சைப் பயறு - கால் கப் முளைகட்டிய கொண்டைக்கடலை - கால் கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) கேரட் துருவல் - 5 டீஸ்பூன் பச்சைப் பட்டாணி - சிறிதளவு கடுகு - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: அவலைக் கழுவி, தண்ணீர் தெளித்து சிறிது நேரம் வைக்கவும். பச்சைப் பயறு, கொண்டைக்கடலையை வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, கேரட் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, கொண்டைக்கடலை, பச்சைப் பயறு, உப்பு, அவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஸ்பிரவுட்ஸ் மசால்வடை தேவையானவை: முளைகட்டிய பயறு கலவை (பச்சைப் பயறு, கொண்டைக்கடலை, காராமணி) - ஒரு கப் வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லித்தழை - கால் கப் சோம்பு - கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: முளைகட்டிய பயறு வகைகள், இஞ்சி, சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்து எடுக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி தட்டிப் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
பிஸ்தா பர்ஃபி தேவையானவை: பிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர் சர்க்கரை- 2 1/2 டம்ளர் நெய்- 1/4 டம்ளர் நீர்- 3/4 டம்ளர் ஏலக்காய்த்தூள்- 1/2 தேக்கரண்டி செய்முறை: 1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். 2. ஆற வைத்துப் பிஸ்தாவை மின்னரைப்பானில் தண்ணீர் விட்டு அரைக்கவும். 3. சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும். 4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும். 5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தாம்பாளத்திற்கு மாற்றி ஆற விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும். 6. சுவையான பிஸ்தா பர்பி தயார்.- சமையல் செய்முறைகள் சில
பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு சூடான சாதத்தில் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து செய்த புளிக்குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் - 100 கிராம் பூண்டு - 20 கறிவேப்பிலை - சிறிது புளி - எலுமிச்சை அளவு உப்பு - தேவையானது சாம்பார் பொடி - 1 ஸ்பூன் மஞ்சள் தூள் - சிறிது வெல்லம் - சிறிது தாளிக்க : நல்லெண்ணெய் - தேவையான அளவு கடுகு - சிறிதளவு வெந்தயம் - சிறிதளவு க.பருப்பு - சிறிதளவு சீரகம் - சிறிதளவு பெருங்காயம் - சிறிதளவு. செய்முறை : வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை கரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் பூண்டு, வெங்காயம் போட்டு வதங்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள் போடவும். பொடி வாசம் போக வேண்டும். அடுத்து அதில் கறிவேப்பிலை போடவும். அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு போடவும். குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும் போது வெல்லம் சேர்க்கவும். குழம்பு திக்கான பதம் வந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும். இதோ... சூப்பரான பூண்டு - சின்ன வெங்காய புளிக்குழம்பு தயாராகிவிட்டது.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
டெசர்ட் ரெசிப்பி `வாழ்க்கை நிலையற்றது. அதனால் என்ன? இப்போது டெசர்ட் சாப்பிடுங்கள்’ என்றொரு பொன்மொழி உண்டு. எந்த ஒரு விருந்தையும் முழுமையடையச் செய்யும் தன்மை டெசர்ட் வகைகளுக்கே உரியது. குல்ஃபி, ஜிகர்தண்டா, புடிங், கிரனிடா, ஃபலூடா, சோர்பே என விதவிதமான டெசர்ட் வகைகளை நினைவில் நிற்கும் சுவையோடு அளித்திருக்கிறார், ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லட்சுமி வெங்கடேஷ். பார்த்தவுடனே செய்ய தூண்டுகிற படங்களை எடுத்தவரும் அவரே. காலா கட்டா கிரனிடா தேவையானவை: காலா கட்டா சிரப் - அரை கப் கறுப்பு உப்பு (Black Salt) - கால் டீஸ்பூன் தண்ணீர் - முக்கால் கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர், கறுப்பு உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். அதில் காலா கட்டா சிரப் சேர்த்துக் கலந்துகொள்ளவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டிகள் போல ஆகிவிடும். கடைசியாக முக்கால் மணிநேரம் ஃப்ரீசரரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து மேலே சிறிது கறுப்பு உப்புத் தூவி குளிர்ச்சியாக காலா கட்டா கிரனிடாவைப் பரிமாறவும். குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும். ரோஸ் கோலா தேவையானவை: ரோஸ் சிரப் - அரை கப் தண்ணீர் - ஒரு கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். அதை வெளியே எடுத்து ஒரு ஃபோர்க்கால் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். கடைசியாக 6-8 மணிநேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதை ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் போட்டு, மேலே ரோஸ் சிரப்பை ஊற்றி சில்லென ரோஸ் கோலாவைப் பரிமாறவும். குறிப்பு: இது வெகுவிரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும். நன்னாரி கிரனிடா தேவையானவை: நன்னாரி சிரப் - கால் கப் எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன் உப்பு - கால் டீஸ்பூன் தண்ணீர் - முக்கால் கப் செய்முறை: ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு, நன்னாரி சிரப் சேர்த்துக் கலக்கவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ் கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டி போல ஆகிவிடும். கடைசியாக 6-8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாகப் பந்து போல உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் இதை போட்டு, குளிர்ச்சியாகப் பரிமாறவும். குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும். லெமன் மின்ட் கிரனிடா தேவையானவை: புதினா - 8-10 இலைகள் எலுமிச்சை - 2 சர்க்கரை - 50 கிராம் உப்பு - கால் டீஸ்பூன் தண்ணீர் - இரண்டு கப் செய்முறை: எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். புதினா இலைகளைச் சுத்தம் செய்து, அதனுடன் சர்க்கரை, உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு மிக்ஸியில் நன்கு அரைக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இதை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பின்னர் ஒரு ஃபோர்க்கால் ஐஸ்கட்டிகளைக் கிளறிவிடவும். மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். மீண்டும் எடுத்து ஒரு ஃபோர்க்கால் ஐஸ்கட்டிகளைக் கிளறிவிட்டு, மீண்டும் ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். இதே போல நான்கைந்து முறை செய்யவும். சர்பத் இப்போது பனிக்கட்டிகள் போல ஆகிவிடும். கடைசியாக 3-4 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஐஸ்கிரீம் ஸ்கூப் வைத்து, குவியலாக பந்து போல உருட்டி எடுக்கவும். ஐஸ்க்ரீம் பவுலில் போட்டு மேலே புதினா இலைகளால் அலங்கரித்து லெமன் மின்ட் கிரனிடாவைக் குளிர்ச்சியாகப் பரிமாறவும். குறிப்பு: இது வெகு விரைவில் கரைந்துவிடும் என்பதால் ஃப்ரீசரில் இருந்து எடுத்தவுடன் பரிமாறவும். ரோஸ் ஃபலூடா தேவையானவை: ரோஸ் கஸ்டர்ட் மில்க் - அரை டம்ளர் ஜெல்லி - தேவைக்கு ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி - இரண்டு டேபிள்ஸ்பூன் வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப் ரோஸ் கஸ்டர்ட் மில்க் செய்யத் தேவையாவை: வெனிலா கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன் காய்ச்சிய பால் - ஒரு கப் மற்றும் கால் கப் ரோஸ் சிரப் - 4 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - கால் கப் ரோஸ் கஸ்டர்ட் மில்க் செய்முறை ரோஸ் கஸ்டர்ட் மில்க்: முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் மற்றும் ரோஸ் சிரப் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் காய்ச்சிய பால் எடுத்து அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரைக் கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும். ஜெல்லி செய்யத் தேவையாவை: கடல் பாசி (சைனா க்ராஸ்) - இரண்டு கிராம் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் ரோஸ் சிரப் - கால் கப் ஜெல்லி செய்முறை ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, கடற்பாசியைச் சிறுதுண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடற்பாசி முழுவதும் கரைந்ததும் அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி, சிறுதீயில் வைத்து ரோஸ் சிரப் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய வுடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக்கொள்ளவும். ஃபலூடா செய்முறை சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்து கொள்ளவும். சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும். பரிமாறும் முறை ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன் பின் சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். மீண்டும் ஜெல்லியைச் சேர்க்கவும். இதில் ரோஸ் மில்க்கை ஊற்றி, பின் வெனிலா ஐஸ்கிரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி தூவிப் பரிமாறவும். பிஸ்தா ஃபலூடா தேவையானவை: பிஸ்தா கஸ்டர்ட் மில்க் - அரை டம்ளர் ஜெல்லி - தேவைக்கு ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி - இரண்டு டேபிள்ஸ்பூன் பிஸ்தா ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப் பிஸ்தா பருப்பு - இரண்டு டேபிள்ஸ்பூன் (பொடித்தது) பிஸ்தா கஸ்டர்ட் மில்க் செய்யத் தேவையானவை: காய்ச்சிய பால் - ஒரு கப் மற்றும் கால் கப் சர்க்கரை - கால் கப் பிஸ்தா கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன் செய்முறை: பிஸ்தா கஸ்டர்ட் மில்க் முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும். ஜெல்லி செய்யத் தேவையாவை: கடல் பாசி (சைனா க்ராஸ்) - இரண்டு கிராம் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் ஃபுட் கலர் - 5 - 8 துளிகள் ஜெல்லி செய்முறை... ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்று அதில் கடல் பாசியை சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடல் பாசி கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். அகர் அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து ஃபுட் கலர் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய உடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஃபலூடா செய்முறை... சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். ஃபலூடா சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும். பரிமாறும் முறை ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன்பின் ஃபலூடா சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். பொடித்த பிஸ்தா அரை ஸ்பூன் சேர்க்கவும். இதில் பிஸ்தா கஸ்டர்ட் மில்க்கை ஊற்றி, பின் பிஸ்தா ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, பிஸ்தா பருப்பு தூவிப் பரிமாறவும். ராயல் ஃபலூடா தேவையானவை: குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க் - அரை டம்ளர் ஜெல்லி - தேவைக்கு ஃபலூடா சேமியா - 4 டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை - ஒரு டேபிள்ஸ்பூன் டூட்டி ஃப்ரூட்டி - இரண்டு டேபிள்ஸ்பூன் குல்ஃபி ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப் வறுத்துப் பொடித்த பிஸ்தா மற்றும் முந்திரி - இரண்டு டேபிள்ஸ்பூன் குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க் செய்ய: குங்குமப்பூ - 5 சிட்டிகை வெனிலா கஸ்டர்ட் பவுடர் - ஒரு டீஸ்பூன் காய்ச்சிய பால் - ஒரு கப் மற்றும் கால் கப் சர்க்கரை - கால் கப் செய்முறை: குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க்: முதலில் கால் கப் பாலில் கஸ்டர்ட் பவுடர் சேர்த்துக் கலக்கவும். ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலுடன் குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். இப்போது கஸ்டர்ட் பவுடர் பாலை இதனுடன் சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். அடுப்பை அணைத்து பாலை ஆறவிடவும். ஜெல்லி செய்யத் தேவையானவை: கடல் பாசி (சைனா க்ராஸ்) - இரண்டு கிராம் சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன் ஃபுட் கலர் - 5 - 8 துளிகள் ஜெல்லி செய்முறை: ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்று அதில் கடல்பாசியைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கடல் பாசியைக் கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். அகர் அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து ஃபுட் கலர் சேர்க்கவும். சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டிய உடன் அகலமான தட்டுகளில் ஊற்றி ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். பிறகு கத்தியால் விரும்பிய வடிவில் துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஃபலூடா செய்முறை: சப்ஜா விதையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடித்துக் கொள்ளவும். ஃபலூடா சேமியாவை வேகவைத்துக் கொள்ளவும். பரிமாறும் முறை: ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஒரு டீஸ்பூன் ஜெல்லி போட்டு, பிறகு இரண்டு டேபிள்ஸ்பூன் சப்ஜா விதை போடவும். அதன்பின் ஃபலூடா சேமியா இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். வறுத்துப் பொடித்த பிஸ்தா மற்றும் முந்திரி அரை டேபிள்ஸ்பூன் சேர்க்கவும். இதில் குங்குமப்பூ கஸ்டர்ட் மில்க்கை ஊற்றி, பின் குல்ஃபி ஐஸ்க்ரீம் வைத்து அதன் மேல் டூட்டி ஃப்ரூட்டி, பிஸ்தா மற்றும் முந்திரிப் பருப்பு தூவிப் பரிமாறவும். மேங்கோ கோக்கனட் பான்னகோட்டா தேவையானவை: கடல் பாசி (சைனா க்ராஸ்) - 10 கிராம் தேங்காய்ப்பால் பவுடர் - 5 டேபிள்ஸ்பூன் மாம்பழக் கூழ் - அரை கப் (இனிப்பு ரக மாம்பழம்) சர்க்கரை - அரை கப் செய்முறை: தேங்காய்ப்பால் பவுடரை அரை கப் வெந்நீரில் கரைக்கவும். கடல் பாசியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் எடுத்து, அதில் ஊறவைத்த கடல் பாசியில் பாதியை எடுத்துச் சேர்த்து அடுப்பில் வைத்து கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடல் பாசி முழுவதும் கரைந்ததும் கால் கப் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்துக்கொண்டு மாம்பழக் கூழைச் சேர்த்துக் கிளறவும். உடனடியாக சிறுசிறு கண்ணாடி கோப்பைகளில் பாதி அளவு ஊற்றி, ஒரு மணி நேரம் செட் ஆக விடவும். மீதம் இருக்கும் பாதி ஊறவைத்த கடல்பாசியை ஒரு கப் தண்ணீரில் சேர்த்து அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும். கடல் பாசி முழுவதும் கரைந்ததும் கால் கப் சர்க்கரை சேர்த்துக் கலக்கி, தீயைக் குறைத்து அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறவும். உடனடியாக, கண்ணாடி கோப்பைகளில் ஏற்கெனவே செட்டாகி இருக்கும் மாம்பழக் கூழின் மேல் ஊற்றவும். ஒரு மணி நேரம் செட் ஆகவிடவும். பின்னர் 4-5 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும். ராஜ்போக் குல்ஃபி தேவையானவை: ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர் பாதாம் மில்க் பவுடர் / மசாலா மில்க் பவுடர் - இரண்டு டீஸ்பூன் க்ரீம் - 1-2 கப் கண்டன்ஸ்டு மில்க் - அரை கப் குங்குமப்பூ - இரண்டு சிட்டிகை பொடித்த பிஸ்தா - கால் கப் குல்ஃபி மோல்டு - தேவைக்கேற்ப சர்க்கரை - இரண்டு கப் செய்முறை: முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு, பால் பாதியாக சுண்டும் வரை மிதமான சூட்டில் நன்கு கொதிக்கவிடவும். அதில் சர்க்கரை, பாதாம் மில்க் பவுடர், குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்த பாலில் க்ரீம் மற்றும் கண்டன்ஸ்டு மில்க்கை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு கலக்கவும். 10-15 நிமிடங்கள் சிறு தீயில் கொதிக்கவிட்டு, அதில் பொடித்த பிஸ்தாவைச் சேர்த்து இறக்கவும். ஆறியதும் இதை குல்ஃபி மோல்டுகளில் ஊற்றி, மூடி போட்டு, குச்சிகளை அதனுள் வைத்து, 8 மணிநேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஃப்ரீசரில் இருந்து எடுத்ததும் அதன்மீது சிறிது தண்ணீர் விட்டு மோல்டில் இருந்து எடுத்து, பொடித்த பிஸ்தாவைத் தூவி ராஜ்போக் குல்ஃபியைப் பரிமாறவும். ஈஸி மாம்பழ சோர்பே தேவையானவை: இனிப்பு ரக மாம்பழத் துண்டுகள் - ஒரு கப் ஃப்ரெஷ் க்ரீம் - இரண்டு டேபிள்ஸ்பூன் சர்க்கரை - கால் கப் செய்முறை: மிக்ஸியில் மாம்பழத் துண்டுகள், ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும். இக்கலவையை ஒரு டப்பாவுக்கு மாற்றி, இறுக மூடி 4 - 5 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப் வைத்து குவியலாக பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மாம்பழ சோர்பேயைக் குளிர்ச்சியாகப் பரிமாறவும். மேங்கோ க்ரீம் தேவையானவை: குளிரவைக்கப்பட்ட க்ரீம் (விப்பிங் க்ரீம்) - 500 மில்லி ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப் மாம்பழக் கூழ் - ஒரு கப் (இனிப்பு ரக மாம்பழம்) மாம்பழத் துண்டுகள் - ஒரு கப் (இனிப்பு ரக மாம்பழம்) ஐஸிங் சுகர் - 4 டேபிள்ஸ்பூன் மேங்கோ எசன்ஸ் - அரை டீஸ்பூன் (விரும்பினால்) செய்முறை: விப்பிங் க்ரீமை ஒரு பாத்திரத்தில் சேர்த்து எலெக்ட்ரிக் பீட்டரால் விப் செய்யவும். இடையில் ஐஸிங் சுகர் சேர்த்து மேலும் விப் செய்து கொள்ளவும். க்ரீம் பஞ்சு போல வர வேண்டும். அதாவது, எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது கீழே விழாது. அந்தப் பதத்துக்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம், மாம்பழக் கூழ் மற்றும் மேங்கோ எசன்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இதை ஃப்ரிட்ஜில் ஒரு மணிநேரம் வைத்து எடுக்கவும். மேங்கோ க்ரீமில் நறுக்கிய மாம்பழத்தை கட் & ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும். விருப்பத்துக்கு ஏற்ப நறுக்கிய மாம்பழத்தை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும். மோக்கா கேரமல் கஸ்டர்ட் புடிங் தேவையானவை: கேரமல் செய்ய: சர்க்கரை - கால் கப் தண்ணீர் - 4 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பொடி - ஒரு டீஸ்பூன் கேரமல் செய்முறை: இன்ஸ்டன்ட் காபி பொடியை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். கால் கப் சர்க்கரையில் 4 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். சர்க்கரை பாகு பிரவுன் நிறத்துக்கு வரும்வரை கிளறி கேரமல் தயாரித்துக் கொள்ளவும். தீய்ந்து விடாமல் கவனமாகச் செய்யவும். இதில் இன்ஸ்டேன்ட் காபி பொடி கலவையைச் சேர்க்கவும். இறக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி கரண்டியால் பரப்பிவிடவும். கஸ்டர்ட் செய்ய: காய்ச்சிய பால் - ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் - ஒரு கப் புளிக்காத கெட்டித் தயிர் - ஒரு கப் வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் செய்முறை: ஒரு பாத்திரத்தில் பால், தயிர், கன்டண்ஸ்டு மில்க், வெனிலா எசென்ஸ் மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை கேரமல் ஊற்றி வைத்துள்ள கிண்ணத்தில் ஊற்றவும். கிண்ணத்தை அலுமினியம் ஃபாயிலால் மூடவும். இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் கேரமல் கஸ்டர்ட் கலந்த கிண்ணத்தை வைத்து மூடி மிதமான தீயில் 30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். நன்றாக வெந்தவுடன் புடிங்கை ஃப்ரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது ஒரு தட்டில் மோக்கா கேரமல் கஸ்டர்ட் புடிங் கிண்ணத்தை தலைகீழாகக் கவிழ்த்து, அனைத்துப் பக்கங்களையும் மெதுவாகத் தட்டிவிட்டு கேரமல் கஸ்டர்டை வெளியே எடுத்துவிட்டுப் பரிமாறவும். புடிங்கின் மேல் பாகத்தில் கேரமல் அழகாகப் பரவியிருக்கும். ஜிகர்தண்டா தேவையானவை: காய்ச்சிய பால் - அரை லிட்டர் கண்டன்ஸ்டு மில்க் - கால் கப் நன்னாரி சிரப் - 4 டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின் - இரண்டு டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் - கால் கப் சர்க்கரை இல்லாத பால்கோவா - இரண்டு டேபிள்ஸ்பூன் குல்ஃபி ஐஸ்க்ரீம் - 4 ஸ்கூப் சர்க்கரை - இரண்டு டேபிள்ஸ்பூன் செய்முறை: பாதாம் பிசினை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, தண்ணீர் ஊற்றி மூடிவைத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் பாதாம் பிசின் நன்கு ஊறி ஊதியிருக்கும். மற்றொரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை எடுத்து அடுப்பில் வைத்துக் குறைவான தீயில் சுண்டும் வரை காய்ச்சவும். அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் சுண்டக் காய்ச்சவும். நிறம் மாறி பாதியானதும் பால் கோவா மற்றும் கண்டன்ஸ்டு மில்க்கைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்கு கலக்கிக் கொதிக்கவிட்டு, இறக்கி ஆற வைக்கவும். அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். ஓர் உயரமான கண்ணாடி டம்ளரில் இரண்டு டீஸ்பூன் நன்னாரி சிரப், இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின், பால் கலவை ஊற்றி, பின் அதன் மேல் ஒரு ஸ்கூப் குல்ஃபி ஐஸ்க்ரீம் வைத்து ஜிகர்தண்டாவைப் பரிமாறவும்.- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
பேரீச்சம்பழ ரெசிப்பி `சத்துக்குச் சத்து... சுவைக்குச் சுவை’ என்று குறிப்பிடப்படும் உணவுப் பொருள்களில் பேரீச்சம் பழத்துக்குத் தனியிடம் உண்டு. வெறுமனே சாப்பிட்டாலும் அசத்தும் பேரீச்சம்பழத்தில் அல்வா, கீர், க்ரன்சீஸ் என்று விதவிதமாகச் செய்ய முடியுமென்றால் இரட்டைக் கொண்டாட்டம்தானே! அப்படியொரு கொண்டாட்டத்தை உங்கள் இல்லத்தில் நிகழ்த்த உதவும் வகையில் அசத்தலான ரெசிப்பிகளை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் மீனா சுதிர். ஸ்டிக்கி டேட்ஸ் புட்டிங் வித் பட்டர்ஸ்காட்ச் சாஸ் தேவையானவை: பேரீச்சம்பழம் – அரை கப் மைதா மாவு – முக்கால் கப் பால் – முக்கால் கப் (காய்ச்சி ஆறவைத்தது) பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன் பட்டைத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு – கால் டீஸ்பூன் பொடித்த வால்நட்ஸ் – சிறிதளவு (அலங்கரிக்க) பட்டர் ஸ்காட்ச் சாஸ் செய்ய: பிரவுன் சர்க்கரை – ஒரு கப் உப்பு சேர்த்த வெண்ணெய் – கால் கப் க்ரீம் – ஒரு கப் வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன் செய்முறை: மைக்ரோவேவ் அவனை 180 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு, பாலுடன் சேர்த்து வேகவைத்து இறக்கவும். ஆறிய பிறகு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், பட்டைத்தூள், உப்பு சேர்த்துச் சலித்து வைக்கவும். இதனுடன் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து மிருதுவாகக் கலக்கவும். கப் கேக் மோல்டில் சிறிதளவு வெண்ணெயை தடவவும். இதனுள் மைதா - பேரீச்சக் கலவையை ஒரு சிறிய ஸ்பூனால் ஊற்றி நிரப்பவும். பிறகு, ப்ரீ ஹீட் செய்த அவனில் முப்பது நிமிடங்கள் வைத்து `பேக்’ செய்து எடுக்கவும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சாஸ் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு கிளறவும். பிறகு அடுப்பைத் சிறு தீயில் வைத்து மீண்டும் ஐந்து நிமிடங்கள் கிளறி சாஸ் பதத்துக்கு வந்த பிறகு இறக்கவும். ஆறிய கப் கேக்குகளை சாஸ் கலவையில் முக்கி எடுத்து மேலே வால்நட்ஸ் தூவிப் பரிமாறவும். நோ பேக் டேட்ஸ் குக்கீஸ் தேவையானவை: பேரீச்சம்பழம் – ஒரு கப் மேரி பிஸ்கட் – 4 கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் சாக்லேட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன் வெண்ணெய் – 2 டீஸ்பூன் செய்முறை: பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்கவும். இதனுடன் கோகோ பவுடர், சாக்லேட் துருவல், வெனிலா எசன்ஸ், வெண்ணெய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். சிறிதளவு கலவையைத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கலவையை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். பிறகு, இதை சிறிய உருண்டைகளாக்கி, பிஸ்கட் அளவுக்கு வட்டமாகத் தட்டி ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஒரு பேரீச்சம்பழத் தட்டை மீது ஒரு மேரி பிஸ்கட்டை வைக்கவும். பிறகு, அதன்மீது மற்றொரு பேரீச்சம் தட்டை, பிஸ்கட் என மாற்றி, மாற்றி நான்கு பிஸ்கட்டுகளையும் அடுக்கவும். பிறகு, பிஸ்கட்டின் ஓரங்கள் வெளியே தெரியாத அளவுக்குச் சுற்றிலும் பேரீச்சம் கலவையை தடவவும். இதனை ஃப்ரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து எடுத்து நான்கு பாகங்களாக வெட்டி, `ஜில்’லென்று பரிமாறவும். பேரீச்சம்பழ ஊறுகாய் தேவையானவை: பேரீச்சம்பழம் – ஒரு கப் மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர் – 2 டேபிள்ஸ்பூன் பூண்டு – 5 பல் உப்பு – தேவையான அளவு தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் – கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதனுடன் பூண்டு சேர்த்து வறுக்கவும். பிறகு, ஊறவைத்த பேரீச்சக் கலவையைச் சேர்த்து மென்மையான கூழ் போல ஆகும்வரை வதக்கவும். இறுதியாக வினிகர் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பிறகு சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைக்கவும். டேட்ஸ் கீர் தேவையானவை: பேரீச்சம்பழம் – ஒரு கப் கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன் உலர்திராட்சை – அரை கப் பனை வெல்லம் – அரை கப் பொடியாக நறுக்கிய பாதாம் - முந்திரி கலவை – அரை கப் தேங்காய்ப்பால் – 2 கப் கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டேபிள்ஸ்பூன் நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை: கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைக்கவும். வெறும் வாணலியில் கசகசாவை வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் பவுடராக அரைக்கவும். பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு உலர் திராட்சை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர்விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டு உருக்கி பாதாம், முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் அரைத்த பேரீச்சம் விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். இதனுடன் பனை வெல்லம் சேர்த்துக் கிளறவும். பிறகு கார்ன்ஃப்ளார் கரைசல், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். கசகசா பவுடர் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும். மேலே வறுத்த பாதாம், முந்திரி சேர்த்து அலங்கரித்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறலாம்.- சமையல் செய்முறைகள் சில
தொலைதூரப் பயணம் செய்யும்போது, நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல், சாப்பாட்டுக் கடைகளில் குடும்பமாகவோ, கும்பலாகவோ இறங்கி, பசிக்கும் ருசிக்குமாக பரபரபவென்று சுவைத்து மகிழும் அனுபவமே அலாதிதான். அப்படி நெடுஞ்சாலை உணவகங்களில் கிடைக்கும் சூப்பர் டேஸ்ட்டில் அசத்தும் டிஷ்கள் சிலவற்றை நமக்காகத் தயாரித்து அளிக்கிறார் ‘க்ரவுன் பிளாசா’ ரெஸ்டாரென்ட்டின் செஃப் தேவ்குமார். வெஜிடபிள் நூடுல்ஸ் தேவையானவை: ரெடிமேட் எக் நூடுல்ஸ் - 250 கிராம் நறுக்கிய முட்டைகோஸ் - 50 கிராம் நறுக்கிய கேரட் - 30 கிராம் நறுக்கிய வெங்காயம் - 30 கிராம் நறுக்கிய வெங்காயத்தாள் - 15 கிராம் நறுக்கிய குடமிளகாய் - 25 கிராம் வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன் சர்க்கரை - ஒரு சிட்டிகை எண்ணெய் - 25 மில்லி உப்பு - தேவையான அளவு செய்முறை: நூடுல்ஸைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, நூடுல்ஸைத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடமிளகாய் ஆகியவற்றை வதக்கவும். பிறகு, நூடுல்ஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், சர்க்கரை சேர்த்துக் கிளறவும். வெங்காயத்தாள் கொண்டு அலங்கரித்துப் பரிமாறவும். தாபா தால் தட்கா (Dhaba Dal Tadka) தேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம் வெங்காயம் - 200 கிராம் (நறுக்கவும்) தக்காளி - 100 கிராம் (நறுக்கவும்) நெய் - 100 கிராம் (அல்லது தேவைக்கேற்ப) சீரகம் - 10 கிராம் காய்ந்த மிளகாய் - 10 கிராம் நறுக்கிய பூண்டு - 50 கிராம் கறுப்பு உளுந்து - 200 கிராம் மிளகாய்த்தூள் - 20 கிராம் மஞ்சள்தூள் - சிறிதளவு மல்லித்தூள் (தனியாத்தூள்) - 10 கிராம் நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு செய்முறை: துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, சூடானதும், சீரகத்தையும் காய்ந்த மிளகாயையும் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு சேர்க்கவும். வேகவைத்த பருப்பை, இதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர், நறுக்கிய கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும். ஹெர்ப் க்ரஸ்டட் ஃபிஷ் (Herb Crusted Fish) தேவையானவை: மீனின் சதைத் துண்டுகள் (fish fillet) - 200 கிராம் பிரெட்தூள் - 10 கிராம் நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - 15 கிராம் நறுக்கிய தைம் இலைகள் - சிறிதளவு மிளகுத்தூள் - 10 கிராம் எண்ணெய் - 50 மில்லி அலங்கரிக்க... கேரட் (சிறியது) - 3 லெட்யூஸ் இலைகள் - 15 கிராம் ஆலிவ் ஆயில் - 15 மில்லி மிகச் சிறிய முட்டை கோஸ் (சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - 4 உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: வாணலியில் பிரெட்தூள், நறுக்கிய பார்ஸ்லே, தைம், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்துக் கலவையாக வைத்துக்கொள்ளவும். இக்கலவையை மீனின் மீது பூசி, லேசாக வறுத்துக்கொள்ளவும். பிறகு, நறுக்கிய கேரட், லெட்யூஸ் மற்றும் குட்டி முட்டைகோஸைத் தண்ணீரில் வேகவைக்கவும். தவாவில் ஆலிவ் ஆயில் ஊற்றி, வேகவைத்த கேரட், லெட்யூஸ் மற்றும் குட்டி முட்டைகோஸைச் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மேலும் வதக்கவும். மீனைத் தனியாக ‘மைக்ரோவேவ் அவனி’ல் வைத்து ‘கிரில்’ செய்துகொள்ளவும். கிரில் செய்த மீனுடன் வதக்கியக் காய்கறிக் கலவையைச் சேர்த்துப் பரிமாறவும். கொத்து பரோட்டா தேவையானவை: பரோட்டாவுக்கு... மைதா மாவு - 500 கிராம் பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை தண்ணீர் - 180 மில்லி கிரேவிக்கு... வெங்காயம் - 250 கிராம் (நறுக்கவும்) தக்காளி - 100 கிராம் (நறுக்கவும்) மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் - தேவையான அளவு எண்ணெய் - 20 மில்லி உப்பு - சிறிதளவு தாளிக்க... நறுக்கிய வெங்காயம் - 50 கிராம் நறுக்கிய தக்காளி - 30 கிராம் பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதனுடன் மைதா மாவையும், பேக்கிங் பவுடரையும் சேர்ந்து நன்கு கலந்து பிசையவும். ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, இந்த மாவை, உருண்டைகளாக்கி பரோட்டாக்களாகத் திரட்டி, சுட்டு எடுக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிரேவியாக செய்துகொள்ளவும். தவாவில் எண்ணெய்விட்டு பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு, பிய்த்த பரோட்டா சேர்த்துக் கொத்திக்கொத்திக் கிளறவும். பின்னர், அதன்மேல் கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும். வெஜிடபிள் ஃப்ரைடு ரைஸ் தேவையானவை: நறுக்கிய வெங்காயம் - 20 கிராம் நறுக்கிய செலரி இலைகள் - 10 கிராம் நறுக்கிய கேரட் - 15 கிராம் வேகவைத்த சாதம் - 300 கிராம் நறுக்கிய பீன்ஸ் - 15 கிராம் நறுக்கிய பூண்டு - 10 கிராம் நறுக்கிய முட்டைகோஸ் - 30 கிராம் நறுக்கிய வெங்காயத்தாள் - 15 கிராம் சோயா சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 30 மில்லி வெள்ளை மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய கேரட், வெங்காயம், செலரி, முட்டைகோஸ் மற்றும் பீன்ஸை நன்றாக வேகும்வரை வதக்கவும். அதனுடன் பூண்டு, உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். வேகவைத்த சாதத்தை ஆறவிடவும். பிறகு அதனுடன் வதக்கியக் கலவையைச் சேர்த்துக் கிளறி பரிமாறவும். ஜிலேபி வித் லச்சா ரபடி தேவையானவை: எண்ணெய் – தேவையான அளவு ஜிலேபி செய்ய... மைதா மாவு – அரை கிலோ பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை தண்ணீர் – 250 மில்லி சமையல் சோடா – ஒரு சிட்டிகை பாகு செய்ய... குங்குமப்பூ – ஒரு கிராம் சர்க்கரை – அரை கிலோ ரபடி செய்ய... பால் – 2 லிட்டர் சர்க்கரை – 200 கிராம் செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், தண்ணீர், சமையல் சோடா சேர்த்துக் கரைத்து 12 மணி நேரம் ஊறவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் சர்க்கரை சேர்த்து, கெட்டியாகும் வரை சிறு தீயில் வைத்துக் கொதிக்கவிடவும். இதுவே ரபடி. பாகு செய்ய கொடுத்துள்ள சர்க்கரையுடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு குங்குமப்பூ சேர்த்துப் பிசுக்குப் பதத்துக்குப் பாகு வைத்து இறக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மைதா மாவை சிறிய ஜிலேபிகளாகப் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும். பிறகு, பொரித்த ஜிலேபிகளைச் சர்க்கரை பாகில் சிறிது நேரம் ஊறவைத்து எடுக்கவும். சூடாக ரபடியுடன் பரிமாறவும். மசாலா கொழுக்கட்டை தேவையானவை: பச்சரிசி மாவு - அரை கிலோ ரவை - 100 கிராம் தண்ணீர் - 200 மில்லி சமையல் சோடா - ஒரு சிட்டிகை உப்பு - சிறிதளவு தாளிக்க: பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 50 கிராம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 40 மில்லி செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து, பச்சரிசி மாவு மற்றும் ரவையை தனித்தனியாக வறுத்தெடுத்து பிறகு ஆறவிடவும். மற்றொரு கடாயில் தண்ணீர் ஊற்றிச் சுடவைக்கவும். இதில் வறுத்து வைத்த பச்சரிசி மாவு, ரவை, ஒரு சிட்டிகை சமையல் சோடா, சிறிதளவு உப்பு சேர்த்து வேகவிடவும். கலவை வெந்து வந்ததும் இறக்கி ஆறவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளிக்கவும். இதை வெந்த பச்சரிசி - ரவை கலவையில் ஊற்றிக் கிளறிவிடவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடித்து விரல்களால் அழுத்திவிடவும். பிறகு உருண்டைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சப்பாத்திக்கு சூப்பரான வறுத்த மீன் குருமா சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்) பச்சை மிளகாய் - 3 வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - தேவையான அளவு சோம்பு - அரை டீஸ்பூன் பட்டை - மிகச் சிறிய துண்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 +1/2 டீஸ்பூன் மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு. அரைக்க.... தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன் முந்திரிபருப்பு 10 செய்முறை : மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும். மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு நன்கு வேகும் படி மீனை பொரித்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும். அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும். வறுத்த மீன் குருமா ரெடி. இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சமையல் செய்முறைகள் சில