சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மணி நேரத்துக்கு படப்பிடிப்பு நடத்த எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த, ஒரு மணி நேரத்திற்கு 4 லட்ச ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழ் திரை துறையினர் ஆர்வத்துடன் இருந்தனர். முதலில் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டது. ஆனால், டெல்லி மற்றும் மும்பையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, அதனை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் மும்பை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
பொதுவாக, ரயில்களில் நாள் வாடகைக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மெட்ரோ ரயில்களில் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதற்கான கட்டணம் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு ரூ.4 லட்சம் என்று வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. காலை நேரத்திலும், நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டுமே மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதிக நேரத்திற்கு மெட்ரோ ரயிலை சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு கேட்கும்போது, தனி ரயிலையே ஒதுக்கிக்கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.vikatan.com/news/article.php?aid=51285