Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாச்சார அரசியல் குறிப்பேடு(2) குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்

Featured Replies

கலாச்சார அரசியல் குறிப்பேடு(2) குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - யமுனா ராஜேந்திரன்

29 மார்ச் 2012

virumaandi_CI.jpg

விருமாண்டி படத்தை எவரும் மறக்க முடியாது. அதனது மரண தண்டனை எதிர்ப்பு அரசியல் நிறைய விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. வேறு காரணங்களுக்காகவும் திரை ரசிகனாக அப்படத்தை மறக்க என்னால் முடியாது. கமல்ஹாஸன் தவிர நாஸர், நெப்போலியன், சண்முக ராஜா, பசுபதி போன்ற தேர்ந்த கலைஞர்களோடு, அபிராமியின் பெண்மை ததும்பும் நடிப்பு போன்றவற்றுக்காகவும் அந்தப் படத்தினை எவராலும் மறக்க முடியாது.

தமிழ் சினிமா வரலாறு முழுக்க காதலில் உடல்களின் நெருக்கம், ஸ்பரிசம், தொடுதல் போன்றவற்றின் இதத்தை பார்வையாளர்களான ஆண்கள், பெண்களுக்குக் கடத்திய இருவரில் இரண்டாமவர் கமல்ஹாஸன். முதலாமவர் எம்.ஜி.ராமச்சந்திரன். காமமும் பிரியமும் பொங்கிப் பிரவகித்தவை அவர்கள் பங்கேற்ற காதல் காட்சிகள். ஜெமினி கணேசனின் காதல் காட்சிகள் பெண்ணிடமான ஆணின் சரணாகதிச் சங்கமம்.

நிஜத்தில் நான் பேசவந்த விஷயம் இது இல்லை. தமிழ் சினிமாவின் தேர்ந்த இரு நடிகர்களை நண்பர் மு.புஷ்பராஜனோடு சென்று சந்தித்தேன். இருவரும் தமிழ் நாடக மரபின் ஜீவனைத் தமது நடிப்பாற்றலில் தேக்கி நிற்பவர்கள். முதலாமவர் நாஸர். இரண்டாமவர் சண்முக ராஜா. சண்முக ராஜா என்பதனை விடவும் விருமாண்டி பேய்க்காமன் என்றால் சட்டென ஞாபகம் வரும். இருவரும் விருமாண்டியில் நடித்திருக்கிறார்கள். நாஸர்தான் தன்னைச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியதாகச் சொன்னார், அடிப்படையில் நாடகக் கலைஞரான சண்முக ராஜா. ரஜினிகாந்த நடிக்க, அவரது புதல்வி சௌந்தர்யா இயக்க வெளியாகவிருக்கும் அனிமேஷன் படமான கோச்சடையான் படப்பிடிப்புக்காக இங்கிலாந்தின் பைன்வுட் ஸ்டூயோவுக்கு நாஸரும் சண்முக ராஜாவும் வந்திருந்தார்கள்.

அவர்கள் இருவரும் தங்கியிருந்த இபிஸ் விடுதி அறையில் சென்று நாங்கள் சந்தித்தோம். நாஸர் கனிவான மனிதர். 'நுகர்வாளர்களாக திரைசிகர்கள் திரைப்படத்திற்காக வசூலிக்கப்படும் ஏற்றத்தாழ்வான உயர்ந்த கட்டணங்கள் குறித்து அவர்கள் ஏன் கேள்விகள் எழுப்புவதில்லை?' எனத் திரும்பத் திரும்பக் கேட்டார். தான் பொங்கல் வாழ்த்துத் தெரிவிக்க விரும்பாததற்கான காரணங்களை சூழலியல் பிரக்ஞையுடன் இணைத்த அவரது முன்னுணர முடியாத தன்மையிலான நேர்காணல் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அவர் குடும்பத்துடன் வந்திருந்த காரணத்தினால் எம்முடன் அதிகநேரம் செலவிட முடியாதிருந்தார்.

சண்முக ராஜாவுடன் ஒரு மணி நேரம் வரை பேசிக் கொண்டிருந்தோம். நாஸரும் சரி, சண்முக ராஜாவும் சரி தமிழ் அறிவுலகத்துடன் தொடர்பு கொண்ட, நூல்களையும் இலக்கியத்தையும் நேசிக்கிற தீவிர வாசகர்கள். உயிர்மை,காலச்சுவடு இதழ்களில் மு.புஷ்பராஜனதும் எனதுமான எழுத்துக்கள் குறித்துத் தமது வாசிப்பை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். விருமாண்டியில் அடர்ந்த கிருதாவும் பெருத்த மீசையுமாக வரும் கொடூரமான பேய்க்காமன், அன்பு கனிந்த முகத்துடன், மெல்லிய புன்னகையுடன் எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். அவரது முதல் காதல் நாடக இயக்கம்தான். நிகழ் நாடகப் பட்டறையை மதுரையில் நடத்திக் கொண்டிருக்கிறார். விளிம்பு நிலை மக்கள், தலித் பெண் குழந்தைகளுக்காக பிரதானமாக நாடகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்திக் கொண்டிருக்கிறார் சண்முக ராஜா. ராமாநுஜன் பற்றி, குரோட்டாவ்ஸ்க்கி பற்றி சரளமாகப் பேசுகிறார்.

பிற மாநிலங்களைப் போல தீவிர நாடக இயக்கம் என்பது தமிழில் தொடர்ச்சி கொண்டதாக வெகுஜன தளத்தை எட்டவில்லை என அவர் அவதானித்தார். மாற்று நாடகம் என்பது தமிழில் சோதனை முயற்சிகளாகவே அமைந்தன என்றார். தீவிர நாடகத்தை வெகுஜன தளத்துக்குக் கொண்டுபோவதே தனது நோக்கம் என்றார். காலச்சுவடு ஆசிரியர் குழவில் பங்கு பற்றும் சண்முக ராஜா, எனது திருச்சி நண்பர், உயிர்எழுத்து ஆசிரியர் சுதீர் செந்திலின் வழியாகவே எனக்கு அறிமுகமாகினார். செந்தில் சில புத்தகங்களையும் சண்முக ராஜா வசம் எனக்காகக் கொடுத்தனுப்பியிருந்தார்.

ஓரு மணிநேரமும் நாங்கள் நாடகம் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். இரவு உணவுக்கான நேரம் வந்துவிட்டிருந்தபடியால் அவருடன் இரவுண்ண அழைத்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, 'திரைப் பிம்பம் என்பது பொய்யானது' என்றேன் நான். நான் எந்த அர்த்தத்தில் அதனைச் சொல்கிறேன் என்பதனை அவர் உடனே புரிந்து கொண்டார். இந்தச் சந்தேகத்தை தனக்குத் தெரிந்த எல்லா நடிகர்களிடமும் இயக்குனர் மகேந்திரன் கேட்டுக் கொண்டிருந்தார் எனவும், அதற்கான சரியான பதிலை நடிகர் திலகம் சிவாஜி கணேசனே சொன்னதாக மகேந்திரன் குறிப்பிட்டதாகவும் சண்முக ராஜா சொன்னார்.

பாத்திரங்களின் குணச்சித்திர்ம், ஒளியமைப்பு, காமெரா கோணம், இசை, பாத்திரமாக உருமாறும் நடிக-நடிகையர் உடல் மொழி மாற்றம் அனைத்தும் இவ்வாறான நிலைமையைக் கொண்டுவரும் என்றாராம் சிவாஜி கணேசன். மனிதனான நடிகன், பாத்திரமாக மாறுகையில் ஏற்படும் இம்மாற்றம் நாடகத்திலும் மேக்கப், உடைகள் போன்றவற்றினால் உருவாவதாக சண்முக ராஜா குறிப்பிட்டார். இதனை யோசித்தடி நித்திரை கொள்ள முயற்சித்தபோது, நடிகனுக்குள் நேரும் இந்த உருமாற்றத்தினை கலை அனுபவம் என்பதற்கு அப்பால் தத்துவம், அரசியல் என்றெல்லாம் அணுகும்போது சிவாஜி கணேசன் சொல்வதனை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. திரை அனுபவத்தைக் கலை அனுபவமாகக் கொள்ளும் போது ஆக்கத்தன்மை கொண்ட இரசவாதமாகத் தோன்றும் இந்த மாய நிலையை, யதார்த்தமாகவும் நிஜ இருப்பாகவும் கொண்டாடும் போதுதான் திரை திருஉருக்கள் எனும் அதிகாரம் தோன்றுகிறது என்றெல்லாம் இதனை நீட்டித்துக் கொள்ளத்தோன்றியது.

சண்முக ராஜாவிடமிருந்து விடைபெற்று, ஹட்டன் கிராசிலிருந்து டர்ன்பைக் லேன் வந்து, மு.புஷ்பராஜனின் அறையை அடைந்தபோது நள்ளிரவு பண்ணிரண்டரை மணி ஆகிவிட்டிருந்தது. காலையில் காலச்சுவடு கண்ணனையும், கோகுல கிருஷ்ணனையும். பத்மநாப ஐயரையும், காணவிரும்பி நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன சச்சிதானந்தன் சுகிர்தராஜாவையும் சந்தித்த நினைவுகளை நானும் புஷ்பராஜனும் மீட்டுக் கொண்டோம். சுகிர்தராஜாவின் எழுத்துக்களை கஸ்தூரிரங்கன் கால கணையாழி இதழிலேயே நான் படித்திருக்கிறேன். மிக நீண்ட, ஆர்ப்பாட்டமற்ற எழுத்து வாழ்வு அவருடையது. இப்போது தொடர்ந்து அவர் காலச்சுவட்டில் எழுதி வருகிறார். வெகுஜன தளத்தில் பரவலாக அறியவரப்பெறாத, ஆழமான, பகடிதொனிக்கும் எழுத்துக்கள் அவருடையவை. இங்கிலாந்தினதும், ஐரோப்பாவினதும் அரசியல் காலச்சார வாழ்வை நுட்பமாகப் புரிந்துகொள்ள விழைபவர்கள் வாசிக்க வேண்டியவை அவருடைய எழுத்துக்கள். காலச்சுவடு பதிப்பகம் அவரது நூல்களைப் பதிப்பித்திருக்கிறது. சிலரை முதல் பார்வையில் பிடிக்கும், சிலரைப் பிடிக்காது. காதலுக்கும் நட்புக்குமான சூத்திரம் இது. சுகிர்தராஜாவை எனக்குப் பிடித்துத்தான் இருக்கிறது.

***

இன்னொரு புகலிட மாற்றுக் கருத்துப் பெண்ணிலைவாதியின் கலாதரிசனம் பற்றியது இக்குறிப்பு. ராஸலீலா புகழ் - நிஜமாகவே பால் வடியும் முகம் கொண்ட நடிகை ஜெயசுதா, சின்ன வயசு கமல்ஹாஸன் நடித்த இதே பெயரிலான காதலும் காமமும் குறித்த அழகான படத்தை இதனுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் - நீலக்கதை மன்னன் சாருநிவேதாதாவை 'எதிர்ப்பு இலக்கியவாதி' என புகலிட மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்தான் பெயர் சூட்டினார்கள். அவர் உன்னத சஙகீதம் என ஒரு சிறுகதை எழுதினார். அதில் இரு மிகப் பெரும் உண்மைகளை புகலிட மாற்றுக் கருத்தினருக்கு அளித்தார். அதனை அவர்கள் புத்தகமாகவும் போட்டார்கள்.

இலங்கைக்குப் போன இந்திய ராணுவம் சிங்களப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதால், அதற்குப் பழிவாங்க தமிழர்களைக் கொல்வதற்காக இலங்கைப் படையில் சேரும் சிங்களவரை பாத்திரப் படைப்பாக்கிக் காட்டினார் சாரு நிவேதிதா. தலைசுத்தினால் ஆஸ்ப்ரின் போடுங்கள். இந்த ‘மாபெரும் வரலாற்று உண்மை’யை அடுத்து அவர் அந்தக் கதையில் முன்வைத்த இன்னொரு ‘ஆன்ம தரிசனம்’, ஒரு 13 வயதுச் சிறுமி 50 வயதுக்கு மேற்பட்ட ஆணுக்குப் போதித்த பாலுறவுத் திரவங்களும் ருசிகளும் தொடர்பான பாடங்கள். அறுவறுப்பாய் உணர்பவர்கள் பாத்ரூம் சென்று வாந்தியெடுத்துவிட்டு பிற்பாடு நான் சொல்கிற மாற்றுக் கருத்துப் பெண்நிலைவாத தரிசனத்தைப் படியுங்கள்.

இக்கதை பெண்களுக்கு, குறிப்பாக சிறுமியரின் பாலுறவு விழிப்புணர்வுக்குச் சாட்சியமான புரட்சிகரக் கதை என்றார் புகலிடப் பெண்ணிலைவாதி. உடனே எனக்கு இங்கிலாந்தில் இயங்கும் பெமினிஸ்ட் எகெயின்ஸ்ட் சென்சார் எனும் அமைப்பினரது நடவடிக்கைகள் ஞாபகம் வந்தன. அவர்களது பிரதான நோக்கமாக நீலப்படங்களின் மீதான, நீலச் சஞ்சிகைகளுக்கு எயினை தணிக்கையை எதிர்ப்பதாக இருந்தது. சிறுமியர் மீதான வன்முறை செலுத்தும் நீலப்படம் உள்பட்ட படங்களின் சுதந்திரத்திற்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள். நீலப்படங்கள் குறித்த வேறுபட்ட பார்வைகள் உள்ள சமூகத்தில் இந்த விவாதம் மேல்போக்காக பிழை இல்லை என்பது போலவும் தோன்றும். இவர்களது பூர்வாசிரமத்தை ஆளத்தோண்டிய பல விமர்சகர்கள் ஒரு விஷயத்தை விண்டுவைத்தார்கள். போர்னோ கிராபி திரைப்படம், சஞ்சிகைத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல நிறுவனங்களுடன் இவர்களில் பலருக்குத் தொடர்பு இருந்தது என்பதுதான் அந்த நிஜம். இதனை இவர்கள் பெண்நிலைவாதத்தின் பெயரிலும், கருத்துச் சுதந்திரத்தின் பெயரிலும் செய்துவந்தார்கள்.

இந்தப் புகலிடத்தமிழ்ப் பெண்ணியவாதியின் கருத்துக்கள், பிற தமிழ்ப் பெண்ணிலைவாதிகளிடம் கடும் கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. மாற்றுக் கருத்து எனும் பெயரில் நடந்த இன்னொரு பெண்ணிலைவாத அசட்டுக் கூத்து இது. இவர்கள் போற்றிய அந்த உன்னத சங்கீத எழுத்தாளர் பிற்பாடு பிரேமானந்தாவின் சிஷ்யராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் ஆனார். மாற்றுக் கருத்தும் எதிர்ப்பு இலக்கியமும் பிரேமானந்தாவிடம் சரணடைந்து, சோ ராமசாமியின் துக்ளக்கின் இந்துத்துவ விந்துவழி இலக்கிய முக்தி பெற்ற கதை இது.

பட்டுக் குஞ்ஜலம் : நான் புகலிடம் என்பதனை கனடா, அமெரி;க்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய வழித்தோன்றல்கள் வாழும் அனைத்;து நாடுகளையும் அடையாளப்படுத்தவே குறிப்பிடுகிறேன்.

***

பதிவுகள் இணைய இதழில் வந்த, நாவலாசிரியர் தேவகாந்தன் எழுதிய, சயந்தனின் ஆறா வடு நாவல் குறித்த விமர்சனத்தின் ஒரு பகுதி இது :

இலக்கியத் தகைமைக்கு மொழியும், பிரதியின் கட்டுமானமும், அது கட்டியெழுப்பி மெதுவாக யதார்த்தம் மீறாமல் வளர்த்துச் செல்லும் உணர்வுக் கோலங்களும் காரணங்களாகின்றன. ஆறாவடுவின் கட்டுமானம் வெகுஜனத் தளத்தில் நிகழ்ச்சிகளின் தொகுப்பாக மட்டுமே அமைந்து, அது அடைந்திருக்கவேண்டிய இலக்கைத் தவறவிட்டமை துர்ப்பாக்கியம்.

களத் தன்மைகளை விபரிக்கும் சில காட்சிகள் நெஞ்சை நிறைப்பவை. நூலின் முற்பகுதியில் வரும் சிவராசன், பின்னால் வரும் நிலாமதி, தொடர்ந்து தேவி போன்றோரது கதைகள் சயந்தனை ஒரு சிறந்த கதை சொல்லியாக முன்னிறுத்துகின்றன. நிலாமதியின் கதையை வாசிக்கையில், நோக்கங்களாலும் செயற்பாடுகளாலும் வித்தியாசமானவையாக இருந்தாலும் அதுபோன்ற ஒரு கதையை ஏற்கனவே வாசித்ததுபோன்ற உணர்வு ஒரு தீவிர வாசகனிடத்தில் தவிர்க்க முடியாதபடி எழவே செய்கிறது.

ஷோபாசக்தியின் ‘கொரில்லா’, நாவல் அல்லது குறுநாவல் என எந்த வகைமைப்பாட்டினுள் அதை அடக்க முடியுமாயினும், அதன் கட்டுமானமும், உணர்வோட்டத்தை விரித்துச் செல்லும் பாங்கும், அது கையாளும் நடையும் மொழியும் அற்புதமாயிருக்கும். அதிலே வருகிறாள் ஒரு நிலாமதி. இல்லை, பிரின்ஸி. அது ஒரு தனிச் சிறுகதையாகவே கட்டுருப் பெற்றிருப்பினும், நூலின் மொத்த உணர்வோட்டத்தினின்றும் சற்றும் விலகுவதில்லை. அந்தக் கதையை ‘கொரில்லா’ இவ்வாறு தொடங்கும்:

‘மூன்றாவது குறுக்குத் தெருவினால் வந்து பிரதான வீதியில் மிதந்து சைக்கிளை மிதித்தாள் பிரின்ஸி. பிரதான வீதியில் முழத்துக்கு முழம் இந்திய இராணுவத்தினர் நின்றிருந்தார்கள்’.

அந்தக் கதை, ‘மேஜர் ஒரு இளிப்புடன் கொஞ்சம் கீழே சாய்ந்து கண்களால் பிரின்ஸியின் மார்புகளைச் சுட்டி பிரின்ஸியின் முகத்தைப் பார்த்து மெதுவாய் கேட்டான், “இங்கே என்னா, பாம் வைச்சிருக்கேயா?”.

‘பிரின்ஸி பேனாவைக் கீழே போட்டுவிட்டு நிமிர்ந்தாள். மேஜர் இமைப்பொழுதில் எழுந்து இடுப்புத் துப்பாக்கியை உருவப்போக இவள் மேசையில் ஏறிவிழுந்து மேஜர் கல்யாணசுந்தரத்தைக் கட்டிப்பிடித்தாள்.

‘அவள் உதடுகள் ‘யேசுவே இரட்சியும்’ என்று சொன்னதும் அவளின் மார்பிலே பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன.

‘முகாமின் பின்னால் தயாராகக் காத்திருந்த புலிகள் தடைமுகாமுக்குள் சுட்டுக்கொண்டும் ரொக்கட்டுக்களை ஏவியவாறும் புகுந்தார்கள்’ என முடியும்.

நான்கு கிரௌன் அளவான பக்கங்களில் ‘கொரில்லா’ கொண்டிருக்கும் காட்சி இது.

இதேபோல ஆறாவடுவிலும் ஒரு பிரின்ஸி வருவாள். இல்லை, நிலாமதி. ‘நிலாமதி அவனில் பாய்ந்தாள். குண்டினை வைத்திருந்த அவனது கை உடல்களுக்கிடையில் சிக்கியது. அவன் அவலக் குரல் எழுப்பித் திமிறினான். நிலாமதி இரண்டு கைகளாலும் அவனை இறுக்கிக்கொண்டாள். அவனது கழுத்திடையே தன் முகத்தை வைத்து அழுத்தினாள். காலினால் ஒரு பாம்பைப்போல அவனைச் சுற்றிப் பிணைத்துக்கொண்டாள். அவளது வெற்று மார்புகள் அவனது சாக்கினை ஒத்த தடித்த பச்சை உடையில் அழுந்தி நின்றபோது அவளிடமிருந்து வார்த்தைகள் வெளியேறின, ‘இப்ப பிடிச்சுக் கசக்கடா…’.

‘குண்டுவெடித்தபோது வெளியே நின்ற ஆமிக்காரர்கள் கண்டமேனிக்குச் சுடத் தொடங்கினார்கள்.’

பதின்மூன்று டெம்மி அளவான பக்கங்களில் விரிகிற சயந்தனின் இந்தக் கதை, ஏற்கனவே வெளிவந்திருக்கும் ஒரு கதையினை ஞாபகமூட்டுவதாயினும் சிறப்பாகவே இருக்கிறது. சிவராசனதும், தேவியினதும் கதைகளைவிட நிலாமதியின் கதை உச்சம். வெற்றி, நிலாமதியின் தாயார் போன்ற பாத்திரங்களையும், இராணுவத்தின் தேடுதலையும் அளவான தேர்ந்த மொழியில் விபரித்து ஒரு கள நியாயத்தினை உருவாக்கிக் காட்டுதல் சாமான்யமானதில்லை.

பிரின்ஸியில் ஒரு நிஜத் தன்மை இருக்கும். அவளைக் குறிப்பிடும் இடத்திலேயே படைப்பாளி, ‘கரும்புலி மேஜர் பொற்கொடி (ஏசுராசன் பிரின்ஸி நிர்மலா 1974-1990) என அவளை அறிமுகப்படுத்திவிடுவார். சயந்தனின் பாத்திரங்கள் புனைவுத் தன்மை கொண்டவையென தோற்றம் காட்டுவதற்கு இதுபோன்ற குறைபாடுகளும் காரணமாகலாம். இவ்வளவு கதைசொல்லும் ஆற்றலும், விபரங்களும் இருந்தும் ஏன் இந்த நூல் காத்திரமாகவில்லை? ஏன் இது ஒரு சிறந்த இலக்கியப் பிரதியாக உள்வாங்கப்படவில்லை? அதற்கு முக்கியமான காரணமாக ஒன்றைச் சொல்ல முடியுமென நினைக்கிறேன்.

கணேசனின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ என்ற நூல் இயக்கங்களின் ஆரம்பகாலத்திலிருந்து 1983 இனக் கலவர காலத்துக்கு சற்று முன்னர் வரையான நிகழ்வுகளைக் கூறுவது. வாசிப்புக்கு எரிச்சலூட்டாத கலாநேர்த்தி அக் கட்டுரைகளில் இருக்கும். ஒரு புனைவின் சுவை அந்நூலில் இருக்கிறது. ஆயினும் விவரண விபரிப்பு காலவாரியாகப் பதிவாகாமையினால் குறைவுபட்டே இருக்கிறது. இக் குறைபாட்டைக் களைந்ததாய் சி.புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சிய’த்தைச் சொல்ல முடியும். ஆறாவடு விவரண விபரிப்பின் தன்மையை பெரும்பாலும் கைவிட்ட ஒரு புனைவுப் பிரதியாகவே ஆக்கம் பெற்றிருக்கிறது. எந்த நிகழ்வும் ஆண்டு மாத நாள் வாரியான குறிப்புகளற்றவையாய் விபரிக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை இந்த விபரணத் தன்மையை நூல்; பெற்றிருந்திருப்பின் அதன் தன்மையே வேறாகியிருக்கலாம்.

இங்கு எடுத்தாண்டிருக்கும் தேவகாந்தனின் மிக நீண்ட எடுத்துக் காட்டில், பிரின்ஸி, நிலாமதி ஒப்பீட்டை முன்வைத்து அவர், ‘அரசியல் குறும்பு’ செய்திருக்கிறார் என்பதனை நான் நிறுவ விரும்புகிறேன்.

'குறும்பின்' முதல் பகுதி, நிலாமதியை பிரின்ஸி என்பதாக தேவகாந்தன் குழம்புவதாக அவர் காட்டிக் கொள்வது. கொரில்லா நாவல் 2001 ஆம் ஆண்டு வெளியாகிறது. 2002 ஆம் ஆண்டு இன் த நேம் ஆப் புத்தா என தமிழ்-சிங்கள-ஆங்கிலப்படம் வெளியானது. ஆறா வடு 2012 ஆம் ஆண்டு வெளியாகிறது. இந்த மூன்று சிருஷ்டிகளிலும் கிரானைட்-முலைகள்-குண்டுவெடிப்பு தொடர்பான சம்பவங்கள் இடம்பெறுகிறது. கொரில்லா, இன் த நேம் ஆப் புத்தா போன்ற சிருஷ்டிகள் வந்த சமகாலத்தை ஒப்பிடும்போது தேவகாந்தன் கோரிக் கொள்கிற மாதிரி இந்தக் கதைக்கு எவரும் முன்-பின் உரிமைகளெல்லாம் கொண்டாட முடியாது.

இன் த நேம் ஆப் புத்தா படத்தின் ஒரு பெண் குறித்த இரு காட்சிகள் இவை : ஒரு தாய் குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் போது அங்கு புலிகளைத் தேடிவரும் சிங்கள இராணுவம் அவளது கணவனைக் கேட்கின்றது. அவளது குங்குமப் பொட்டை அழிக்கிறது. ‘மார்புக்குள் என்ன வைத்திருக்கிறாய்?’ என குழந்தை பாலருந்திக் கொண்டிருக்கும் மார்பில் துப்பாக்கி முனையை வைத்து அழுத்திப் பார்க்கிறார்கள் கொடுங்கோலர்கள். பாலருந்திக் கொண்டிருக்கிற பச்சிளம் குழந்தையின் இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து இவன் வருங்காலப் புலியென்று அக்குழந்தையைச் சுட்டுக் கொல்கிறார்கள். குழந்தையின் பச்சை ரத்தம் தாயின் வீறிடும் முகத்தின் மீது தெறிக்கிறது. அந்தப் பெண் பிற்பாடு இயக்கத்தில் சேர்கிறாள்.

பிறிதொரு காட்சியில் சுள்ளி பொறுக்கக் காட்டுக்குப் போன அத்தாயின் மார்பில் மறைத்திருப்பது என்ன அவளது இரு மார்புகளையும் இராணுவத்தினன் கசக்கிப் பார்க்கிறபோது, அதிலிருந்து தீக்கங்கு வெளி நடுங்க வெடித்துச் சிதறி நீல வானத்தில் வீசியடித்து மண்ணில் வீழ்கிறது.

(1).யதார்த்தம் மீறாமல் வளர்த்துச் செல்லும் உணர்வுக் கோலங்களும் (2).அளவான தேர்ந்த மொழியில் விபரித்து ஒரு கள நியாயத்தினை உருவாக்கிக் காட்டுதலும் அற்று (3).ஆறாவடு விவரண விபரிப்பின் தன்மையை பெரும்பாலும் கைவிட்ட ஒரு புனைவுப் பிரதியாகவே ஆக்கம் பெற்றிருக்கிறது என்கிறார் தேவகாந்தன்.

ஆறா வடுவின் இலக்கியமும் அரசியலும் பற்றிப் பேசவந்த தேவகாந்தன் சுடடும், ஆறா வடுவில் தவறும் 'யதார்த்தம், கள நியாயம், விவரண விவரிப்பின் தன்மை' என்பதுதான் என்ன? ஆறா வடுவில் தவறும் இது, கொரில்லாவில் எப்படியெல்லாம் தவறாது இருக்கிறது? புலிகள் திட்டமிட்டு பெண்களை இவ்வாறு அனுப்புகிறார்கள். சம்பவத்தினுள் உடனடியாக புலிகள் தாக்குதல் பிரதேசத்தில் நுழைந்து தாக்குதல் தொடுக்கிறார்கள். இறந்தவர் கறும்புலி. இதுவே யதார்த்தம், இதுவே கள நியாயம். இதுவே விபரண விபரிப்பு. இன் த நேம் ஆப் புத்தாவிலும், ஆறா வடுவிலும் தவறும் கள நியாயம், யதார்த்தம், விபரண விபரிப்பு இதுதான் : புலிகளே இதற்குக் காரணமானவர்கள், நிகழ்த்தியவர்கள் புலிப் பெண் போராளிகள் என்பதுதான்.

ஆனால், இந்த மூன்று சம்பவங்களினதும் 'ஆதாரமான' ஈழத்தின் 'நிஜ நிகழ்வின்' கள யதார்த்தத்தினையும், இந்த நிகழ்வுகளின் 'ஆதாரமான' இலங்கை-இந்திய ராணுவத்தினரின் வன்பாலுறவு எனும் யதார்த்தத்தையும் தேவகாந்தன் இரண்டாம் பட்சமாகவே மதிப்பிடுகிறார். குறியில் கிரனேடு வைத்துக் கொல்வதும், கிருஷாந்தி போன்றவர்களை வன்பாலுறவுக்கு உட்படுத்திக் கொல்வதும், போகிற வருகிற பெண்களின் மார்புகளைத் தடவுவதும், அழகிய மன்னம்பெரியை வன்பாலுறவுக்கு உட்படுத்தி நடுத்தெருவில் சுட்டுக்கொல்வதுமான ‘ஆதார’ யதார்த்தத்தில் இருந்தும், 'ஆதார' கள நியாயத்தில் இருந்தும், 'ஆதார' விபரண விவரத்தில் இருந்தும் அல்லவா கொரில்லா கதையும், ஆறா வடு கதையும், இன் த நேம் ஆப் புத்தா கதையும் பிறக்கிறது?

இலங்கை-இந்தியப் படையினரின் யுத்தப் பொறிமுறையின் தந்திரோபாயமாக மட்டுமல்ல, நாசி, அமெரிக்க, ரஸ்யப் படை உள்ளிட்ட உலகின் அனைத்து ராணுவத்தினரதும் யுத்தப் பொறிமுறையின் அங்கமாகவே வெகுமக்களின் பகுதியான சாதாரண பெண்களின் மீதான, பெண் போராளிகளின் மீதான வன்பாலுறுவு என்பது அரங்கேற்றப்படுகிறது. கோர்டன் வைசின் கூண்டு புத்தகமும், சேனல் நான்கு விவரணப்படங்களும், ஐநா அறிக்கையும், நோர்வே அறிக்கையும், நல்லிணக்க ஆணைக்குழு

அறிக்கையும் வெளிவந்த பின்னாலும், நிலாமதியையும் பிரின்சியையும் ஒப்பிட்டு, யதார்த்தம், கள நியாயம், விபரண விபரிப்பு என்று பேசிக் கொண்டிருப்பது, தேவகாந்தனின் அரசியலையும் இலக்கியத்தையும், அவரது சார்பு நிலையையும் பற்றித்தான் நமக்குச் சொல்கிறது.

இன் த நேம் ஆப் புத்தாவில் வருகிற தாய்க்கும், ஆறா வடுவில் வருகிற நிலாமதிக்கும் புலிகளின் பிரசன்னம் இல்லாமலே, பெண் புலிகள் ஆகாமலே, சாதாரண ஈழப் பெண்களாக அவர்கள் பின்னாளில் வெடிகுண்டுகளாக ஆகி வந்ததற்கான கள நியாயங்களும், யதார்த்தங்களும், விபரண விபரிப்பும்; இருக்கிறது. கொரில்லா எண்பதுகளின் இறுதியில் தேங்கிவிடுகிற இடத்தில், ஆறா வடு பின்-முள்ளிவாய்க்கால் அரசியல் விழிப்புணர்வையும் கொண்டிருக்கிறது. (சேனல் நான்கு விவரணப்படத்தில் பெண் போராளிகளின் குறிகளும் மார்புகளும் எத்துனை கோராமான, விகாரமான சிதைப்புக்கு ஆட்பட்டிருக்கிறது பாருங்கள் தேவகாந்தன், இதனது அரசியலையும், கள நியாயத்தினையும் தயவு செய்து பிரின்சி, நிலாமதியுடன் ஒப்பிட்டு எழுதிப் பாருங்கள்!)

பிரின்ஸி நிலாமதியை ஒப்பிட்டு நான்கு கிரவுன் சைஸ் பக்கங்கள், பதின்மூன்று டெம்மி பக்கங்கள் என தேவகாந்தன் செய்திருப்பது இன்னொரு 'குறும்பு'. நல்லவேளை பான்ட் சைஸ், மார்ஜின் மில்லிமீட்டர் அளவு எல்லாவற்றையும் இலக்கிய அளவுகோலாக்காமல் விட்டதற்காக தேவகாந்தனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

***

சேனனின் கொலை மறைக்கும் காலத்தில் டிராட்ஸ்கிசம், மாவோயிசம், மாற்றுக் கருத்து என விளாசித் தள்ளியிருக்கிறார். படித்தும் ஒரு மாதம் ஆகிவிட்டது. மறுவாசிப்பின் பின் அடுத்த குறிப்பேட்டில் கட்டாயம் இது குறித்து எழுதுவேன். அதனோடு இப்போது தமிழில் இப்போது வந்து கொண்டிருக்கும் நிழல்,படப்பெட்டி, காட்சிப் பிழை போன்ற தீவிர திரை இதழ்கள் குறித்தும் ஒரு அறிமுகம் எழுத எண்ணம் இருக்கிறது.

விருமாண்டியில் தொடங்கிய குறிப்பேட்டை விருமாண்டியில்தான் முடிக்க வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம், வீட்டை விட்டு மோட்டார் சைக்கிளில் ஓடிப்போகும் கமல்ஹாஸனும் அபிராமியும் குலவும் நீல இரவிலான அந்த ஓடைக் குளியல் காட்சியும், அப்போது தனது இசையால் நம்மைக் கொன்று, மறுபடி புதிதாய் இப்பூவுலகில் பிறப்பிக்கும் இளையராஜாவின் பாட்டும். உன்னவிட இந்த உலகத்தில்.(https://www.youtube....h?v=meNIaya4JY4). கடவுள் இருக்கிறார் என நான் நம்பத்துவங்கிய தருணங்களில் இதுவும் ஒன்று.

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.