Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜஸ் பெட்டியில் படுத்திருக்கும் உருவம்

Featured Replies

உள்ளங் கவர் கதை .

இறந்துவிட்டோம் என்பதை ஒருவனால் எப்படி தெரிந்துகொள்ளமுடியும்? இந்தக் கேள்வி அடிக்கடி மூர்த்தியை சல்லடையாய் துளைக்கிறது. யோசிக்க யோசிக்க சூன்யமே மிஞ்சுகிறது.

"நாம் உயிரோடுதான் இருக்கிறோம் என்று எப்போது நம்மால் உணரமுடியவில்லையோ, அப்போது நாம் இறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டும்' என்று ஒருவாறு விளக்கம் சொல்லிக்கொண்டான். இறந்துவிட்டபின் எப்படி நினைத்துக் கொள்ளமுடியும்?

என்று திருப்பிக்கேட்டது அவன் மனம். 'சே' என்று அலுத்துக்கொண்டு, விரல்களால் பவுடரைத் தொட்டு கண்ணாடிக்குள் ஊடுருவிப் பார்த்து முகத்தில் பூசினான். கருப்பாக இருந்தாலும் சதைப்பிடிப்பான முகம் அழகாகவே தெரிந்தது.

தலைமுடியைச் சீவி, கிருதாவை வருடியபோதுதான் கவனித்தான். இடது கிருதாவில் ஒரு வெள்ளை முடி காலை வெளிச்சத்தில் பளிச்சென மின்னியது. கண்ணாடியை காதுக்கு அருகில் கொண்டுபோய், கிருதா முடிகளை விரல்களால் நீவி, விலக்கி உற்றுப்பார்த்தான். வெள்ளை முடிதான். அவனின் மார்புக்குள் ஒரே கணத்தில் ஆயிரம் உலக்கைகளால் அடித்ததைப்போல 'தொபீர்' என்று அதிர்ந்தான். அவனது முதல் நரைமுடி அது.

'அய்யோ... நமக்கும் நரை முடி வந்து விட்டதா? எனில் நம்மையும் வயோதிகம் நெருங்கிவிட்டதா?'

கண்ணாடியையும், சீப்பையும் ஓரமாக வைத்துவிட்டு அவசரத்தையும் மறந்து தொப்பென்று கட்டிலின்மீது உட்கார்ந்தான். முதல் நரை. ஒரு முடிகூட நரைக்கவில்லை என்கிற மமதையோடு இத்தனை நாளாய் திரிந்தவன். இவனுடன் படித்த பலபேருக்கு பாதி தலையும், தாடி, மீசை முழுதாகவும் நரைத்துவிட்டது. இவன் சாயம் பூசிக்கொள்வதாக சந்தேகித்தவர்களுக்கு 'இல்லை' என்பதை பெருமை பொங்க விளக்கிக் கொண்டிருந்தான்.

பல பேர் இருபது வயதிலேயே இளநரையோடு திரிகிற காலத்தில், 44 வயதிலும் இவனுக்கு ஒரு முடிகூட நரைக்காதது பலருக்கு ஆச்சரியத்தையும், பொறாமையையும் உண்டாக்கியது. முப்பதுகளும், அறுபதுகளும் சலூன்களில் சாயத்தைப் பூசிக்கொண்டு, சமத்துவத்தை ஏற்படுத்தும் காலத்தில், இவனது "அசல்' கருப்பு இவனுக்கு கர்வத்தைத் தந்தது தவறில்லைதானே?

ஆனால் அந்த கர்வம் இன்று கரையத் தொடங்குகிறது. இனி எல்லாமே நரைக்கும். அவனும் வயோதிகத்தின் வாசற்படியில்!.

அவனால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இனி அவன் இளைஞன் இல்லை என்பதே அதிர்ச்சியை அளித்தது.

இளைஞனான அவனது கருத்துக்கள் பல நேரங்களில் நிராகரிக்கப்படும்போது, தனது கருத்துக்கள் எல்லோராலும் ஏற்கும்படியான 'அனுபவஸ்தன்' வயது உடனடியாக வந்து விடக்கூடாதா என்றெல்லாம் கூட விடலைத்தனமாக சில நேரங்களில் அவன் நினைத்தது உண்டு. ஆனால் இன்று, முதல் நரையைப் பார்த்தபோது, அவனது இளமை இன்னும் தொடரக்கூடாதா என்று ஏங்கினான்.

இந்த மனித மனம் ஏன் இப்படி எப்போதுமே ஏட்டிக்குப் போட்டியாகவே ஏங்குகிறது? வயதானால் என்ன ஆகிவிடப்போகிறது? மரணம் நெருங்கி வரும்! அய்யோ அதற்குள்ளாகவா? இப்போதுதான் குழந்தைகள் படிக்கிறார்கள். சேமிப்பென்று எதுவும் இல்லை. சொத்துக்களும் சேர்க்கவில்லை. அதற்குள்?

ஆனால் மரணம் இப்போது முதியவர்களை மட்டும்தான் நெருங்குகிறதா? என்று திருப்பிக்கேட்டது அவன் மனம். நகரங்களின் வீதிகளிலும், சாலையோரங்களிலும் மரண அறிவிப்புகளைச் சொல்லும் சுவரொட்டிகள் ஓயாமல் ஒட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவைதானே அண்மைகாலமாக அவனுக்குள் கிலியையும், மனித வாழ்க்கை குறித்த அய்யங்களையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

சுவரொட்டிகளில் இருக்கும் முகங்களை உற்றுப்பார்க்கக்கூட பல நேரங்களில் அவன் பயந்திருக்கிறான். சில முகங்கள் புன்சிரிப்போடு அவனை இம்சித்திருக்கின்றன. பல முகங்களில் மரணக்கலை பொலியும். பெரும்பாலான முகங்களை உற்றுப் பார்த்தால், அவற்றின் கண்களுக்குள் சாவின் நிழல் படிந்திருப்பதாகத் தோன்றும் அவனுக்கு.

இது எப்படி சாத்தியமாகிறது? வாழ்வில் பல நிழற்படங்களை எடுத்துக் கொள்கிறார்கள் மனிதர்கள். அவற்றில் எந்தப்படம் தனது மரணத்தை அறிவிக்கப் பயன்படப்போகிறது என்பதை, அதை எடுக்கும்போது எவரேனும் உணர்ந்திருப்பார்களா? சாலை விபத்துகளில் செத்துப் போனவர்கள், மாரடைப்பால் மரணத்தைத் தழுவியவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் முதலானோரை "அகாலமரணமடைந்தவர்' என்றும், வயது முதிர்ந்து, நோய்வாய்ப்பட்டு இறந்தோரை "உடல் நலிவாய் இருந்து சிவபதவி அடைந்தார்' என்றும் சுவரொட்டிகள் ஒட்டும் கலாச்சாரம் பெருகிக் கொண்டிருக்கின்றன. அதிலும் அகால மரணங்களைச் சொல்லும் சுவரொட்டிகள் பெருகப் பெருக, மரணம் குறித்த கேள்விகள் மூர்த்திக்குள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இளவயது மாரடைப்பு அகால மரண சுவரொட்டிகள் அவனைத் தூங்கவிடாமல் செய்கின்றன. அதற்கு இணையான அவஸ்தையைத் தருபவை சாலை விபத்து மரணங்கள். அவற்றில் பல அவனுக்குத் தெரிந்த முகங்களாக இருக்கிறபோது அவனுக்குள் கொந்தளிப்புகள் நிகழ்கின்றன.

'உலக வாழ்வு நிலையில்லாதது, காயமே இது பொய்யடா' என்றெல்லாம் சித்தர்களும், ஞானிகளும் பாடியிருப்பது மூர்த்திக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் வாழ்வின் ஸ்திரத்தன்மை நீர்க்குமிழிபோல இத்தனை எளிதில் உடையக்கூடியது என்பதை ஏற்க அவனுக்கு நெஞ்சுரம் போதவில்லை.

விபத்து சுவரொட்டிகளில் சோகையாக உற்றுநோக்கும் முகங்களைப் பார்க்கிற கணங்களில், தனது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்வான். சுவர்கள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள படங்களுக்கு பதில் சாலையில் போகிற எவரின் படங்களானாலும் இடம்பெற ஒரு நொடி போதும் தானே? இந்த எண்ணம் எல்லோருக்கும் வந்துவிட்டாலே விபத்துக்கள் பாதியாகக் குறைந்துவிடாதா என்று யோசிப்பான். ஆனாலும் நகரங்களெங்கும் துரத்தித் துரத்தி கண்களில் அறைகிற சுவரொட்டிகளைப் பார்த்த பின்பும், வாகனங்களை உறுமவிட்டு, காற்றின் வேகத்தில் பறக்கிற சில இளைஞர்களையும், தோள்பட்டைக்கும் காதுக்கும் இடையில் கைபேசிகளை இடுக்கிக்கொண்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைக்கூட கோணிக்கொண்டு, வேற்றுலகில் சஞ்சரித்தவாறு வாகனங்களை ஓட்டுபவர்களையும் பார்க்கப் பார்க்க மூர்த்திக்கு பதறுகிறது. அவர்கள் வாழ்க்கையை என்னவாக நினைக்கிறார்கள் என்கிற கேள்வி இவனை சதா அரிக்கிறது.

நகரத்துக்குள் நுழைகிறபோதே மரண அறிவிப்பு சுவரொட்டிகள் ஏதேனும் புதிதாகத் தென்படுகிறதா என பார்த்துக் கொண்டோன் போவான். புதிய சுவரொட்டிகள் இல்லாத நாட்கள் அவனுக்கு இனிப்பானவை. அந்த இனிப்பு அவனுக்கு அரிதாகவேதான் அமைகிறது.

'கனி உதிர, கனி உதிர' என பறைசாற்றி வரச் சொன்ன இந்திரனின் உத்திரவை மீறி, காரூர் கம்மாளப் பறைச்சியின் சொக்கும் வார்த்தைகளில் மயங்கி, கள் குடித்த மயக்கத்திலும், கஞ்சா குடித்த மயக்கத்திலும், "பூ உதிர, பிஞ்சி உதிர, காய் உதிர, கனி உதிர, ஆறு மாதப் பிண்டம் அதிர்ந்து விழ" என பறை சாற்றிய ஆதிப்பறையன் முதல், அதிர்ந்து கலைந்த இந்திரனின் மனைவி இந்திராணியின் ஆறுமாதப் பிண்டம் தொடர்ந்து, இன்றுவரை கோடான கோடி மனித உயிர்கள் பிறந்தும், உதிர்ந்தும் மறைந்த இம் மண்ணில், வந்தவர்கள் போய்த்தான் தீரவேண்டும் என்பதை மூர்த்தியும் அறிந்தவன்தான். ஆனாலும் சில மரணங்களை ஏற்க அவனது மனம் எளிதில் ஒப்புவதில்லையே என்ன செய்வது?

அவன் செய்கிற வேலைக்கும், அவனது மனநிலைக்கும் ஏழாம் பொறுத்தம்தான். நாளிதழ் நிருபராக பணியில் சோந்தபோது, சாலை விபத்துகளை, கொலையான உடல்களைப் பார்த்துப் பதறி, செய்திப்பிரிவு வேண்டாம் என நிர்வாகத்திடம் கெஞ்சி, விளம்பரப் பிரிவுக்குப் போனான். இது சற்று பரவாயில்லை என்றாலும், அங்கேயும் துரத்துகின்றன கண்ணீர் அஞ்சலி விளம்பரங்கள். அவற்றையும் மீறி விளம்பரப் பணத்தை வசூலிப்பது வேறு பெரிய சவாலாக அமைந்துவிடுகிறது அவனுக்கு. பலவித வியாபாரங்கள். பல ரக விளம்பரங்கள், பலப்பல வகை மனிதர்கள். அலுவலகம் தேடிவந்து, முன்பணம் கொடுத்து விளம்பரம் செய்த நிலைமை மாறி, விளம்பரங்களைத் தேடிச் செல்ல வேண்டிய தொழில் போட்டி. விளம்பரங்கள் வந்தால் போதும் என்ற நெருக்கடியில் சிலவற்றை வாங்கிவிட்டு, மாதக்கணக்கில் பணத்துக்கு அலையும்போதுதான் வாழ்வின் மீதான கேள்விகள் இவனுக்குள் புகைந்து எழுகிறது.

மழை வெள்ளத்தில் அரித்து இழுத்துச் செல்லப்படும் செம்மண் குவியலாய் நிலையற்ற வாழ்க்கை. கண்ணிமைக்கும் நேரத்தில் கூடுவிட்டுப் பிரிந்து போய் விடுகிற உயிர் என்ற தத்துவங்களுக்கெல்லாம் சவால் விடும் மனிதர்கள் நிறைந்த உலகம், பொய் சொல்வது எதிராளிக்கும் தெரியும் என்பது தெரிந்தும் அசராது பேசும் வல்லமையாளர்கள் நிறைந்த பூமி. மனிதர்களில்தான் எத்தனை வகை. நிருபர்களிடம் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது என பலர் நினைத்தாலும், கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் என்பதைப் போன்றவர்கள்தான் எத்தனைபேர்!

உதட்டில் புன்னகையையும், தன்னை இருக்கையிலும் உட்கார வைத்து, தேநீர் வரவழைத்துக் கொடுத்து, வழிந்து, தவணை சொல்லும் முகங்கள்!

உட்கார வைத்து, ஊர்க்கதைபேசி, சுற்றி வளைத்து தவணை சொல்லும் வெண்டைக்காய்கள், வேலையாட்களிடம் பொறிந்து தள்ளி, தன்னை நெளிய வைத்து, வீம்பாய் தவனை சொல்லும் தந்திரக்காரன்கள், புலம்பி, புழுங்கி, உருகவைக்கும் பனிக்கட்டிகள், அரை மணிநேரம் ஆனாலும் எதிரிலிருப்பவனை ஏறெடுத்தும் பார்க்காமல் கண்ணும் கருத்துமாக வேலை செய்யும் விளக்கெண்ணைய்கள், உலகம், நாடு, ஊர் என விசாலமாய்ப்பேசி, பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்பதையே விளங்கிக் கொள்ள முடியாமல் விளையாட்டு காட்டும் ஆட்டக்காரர்கள். சர்க்கஸ் காட்டும் ஜெகஜ்ஜால பார்ட்டிகள், நாகரிகமாய் மிரட்டல் விடுக்கும் நிர்வாகம்.

இத்தனை மனிதர்களுக்கிடையிலும் நாணயமாக பணத்தை எண்ணி வைத்து, வணக்கத்தையும் வைக்கும் கொஞ்சமே கொஞ்சமான மனிதர்கள்தான் அவனை இந்தத் தொழிலில் நிலைக்க வைத்திருக்கிறார்கள். இந்த இடைவிடாத இவனது போராட்டங்களுக்கிடையில்தான் அந்த ‘கைலாசம் சர்வீசஸ்' அமரர் ஊர்தி, ஐஸ் பாக்ஸ் விளம்பரத்தை அவன் வாங்கித் தொலைத்தான்.

இவனது நண்பன் ஒருவன் மூலம் வந்த அந்த விளம்பரத்தை, ஏற்கெனவே ஜனன, மரண கணக்குகளுக்கு விடை தேடிக்கொண்டிருந்த அவன் அரைகுறை மனதோடுதான் வாங்கி அனுப்பினான். ஆயிற்று. விளம்பரம் வெளியாகி மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும், அதோ, இதோ என இழுத்து, ஒரு வழியாக இன்று தந்துவிடுவதாக உறுதி அளித்திருக்கிறான்.

பெருமூச்சோடு, தலை வாரி, கை கழுவி, அரைகுறையாய் சிற்றுண்டி முடித்து, மனைவி கொடுத்த மதிய உணவு டிபன் பாக்ûஸயும், விளம்பர கட்டண விவரங்களையும் பையில் திணித்து, அதை தோளில் மாட்டிக்கொண்டு, தலைமுடியை மீண்டும் ஏக்கத்தோடு கோதிவிட்டு, ஹெல்மெட்டை தலையில் கவிழ்த்து, வண்டியை வெளியே தள்ளினான்.

வீட்டு வாசலில் செழித்திருந்த பப்பாளி மரத்தில் தாவிக் கொண்டிருந்த காகம் இவனைப் பார்த்ததும் நட்பாகக் கரைந்தது. இது தினசரி நடப்பதுதான். காகத்தையும், பப்பாளி மரத்தையும் பாசத்தோடு பார்த்தான். இவனுக்குப் பிடித்த மரம் பப்பாளி. பார்க்கப்பார்க்க அலுக்காது அவனுக்கு. நாலாப்புறமும் தன் கைகளை நீட்டி, ராட்சத விரல்கள் போன்ற பசும் இலைகளைப் பரப்பி அசைந்து கொண்டிருந்தது அது. அந்த இலைகளே பெரிய பெரிய பூக்களைப் போல தெரிந்தது. பச்சைநிற மலர்கள். அந்த கணத்தில் மனசு லேசானதைப்போல தெரிந்தது. வண்டியை உதைத்துக் கிளப்பினான். காலை வெய்யில் காட்டுத் தேளைப்போல சுரீரென்று கொட்டியது. ஹெல்மெட்டுக்குள் நுழைந்த வெப்பக்காற்று ஊமையாய்ப் புழுங்கியது. நாற்பதை தாண்டாமல் வண்டியை ஓட்டிக்கொண்டுபோய், கைலாசம் சர்வீசஸ் வாசலில் நிறுத்திவிட்டு, எதிர்பார்ப்போடு கடைக்குள் நுழைந்தான்.

ஊதுவத்தி புகையும், சாம்பிராணி வாசனையும் அறையெங்கும் கமழ்ந்து கொண்டிருக்க, பிணத்துக்குப் பக்கத்தில் போவதைப் போன்ற மனநிலை அவனுக்குத் தோன்ற சட்டென்று இறுக்கமானான்.

கடையில் வேலைக்காரப் பையன்தான் இருந்தான். முதலாளி பக்கத்து ஊருக்கு பாக்ஸ் ரிட்டர்ன் எடுத்துவரப் போயிருப்பதாகச் சொன்னான். பத்து நிமிடங்கள் வெறுமனே உட்கார்ந்திருந்த மூர்த்தி, அலைபாய்ந்த மனதை அடக்க பையனிடம் பேச்சு கொடுத்தான்.

“முதலாளி எப்ப வர்றதா சொன்னாருடா தம்பி?'' என்றான்

“பாடி எட்த்ததும், பாக்ச எட்த்துகினு வந்திடுவார் சார்'' என்றான்.

“சாவு எந்த ஊர்ல''

“பிச்சனூர்ல சார்''

அது இங்கிருந்து பதினைந்து கி.மீ. தூரம். கிராமம். இப்போதெல்லாம் கிராமங்களில்கூட பிணத்தை பிரீசரில் வைக்கப் பழகிவிட்டனர். முன்பெல்லாம் பிணத்தின் வயிற்றில் ஐஸ் கட்டிகளை வைத்துக் கட்டி, உறவினர்கள் வரும் வரை வைத்திருப்பார்கள். மறுநாளுக்குள் அழுகி, நாறத் தொடங்கிவிடும். பிரீசர் பாக்ஸ் வந்த பிறகு, இரண்டு, மூன்று நாட்களானாலும்கூட அப்போதுதான் செத்ததைப்போல பிணம் ‘பிரஷ்ஷாக' இருக்கிறது. பாக்சின்மீது மாலையை வைத்து, நாசுக்காக ஒரு நிமிடம் நின்று, கண்களைத் துடைத்துக்கொண்டு போக, உறவினர்களுக்கும் இதுதான் வசதியாக இருக்கிறது.

பிணத்தின்மீது விழுந்து புரண்டு, வயிற்றிலடித்துக்கொண்டு, பிணத்தின் தாடையைத் திருப்பி, தலையை வருடி, முத்தமிட்டு, கதறி அழும் கிராமத்துப் பெண்களுக்குத்தான் பாவம் பாக்ஸ் பெரும் இடைஞ்சலாகி விட்டது. பிணத்தின் மீதான அவர்களின் உரிமையைப் பறிக்கும் அடையாளமாக மாறிவிட்டது இந்த பாக்ஸ்.

“செத்தது யாருப்பா தம்பி'' என்று தயக்கத்துடனே கேட்டான் மூர்த்தி.

“அந்த ஊர்ல ஒரு கிழவி சார்'' என்றான் பையன்.

சற்று ஆசுவாசமானான். மரணச் செய்திகளின்மீது கேள்விகள் கேட்கவே பயம் அவனுக்கு. செத்தவருக்கு என்ன வயது என்றோ, எப்படி செத்தார் என்றோ கேட்டுவிட்டால், பதிலைக்கேட்டு துணுக்குற வேண்டியே இருக்கிறது. வியாதிகளின் பெயரைக் கேட்டாலே ஒருநாள் முழுவதும் உணவு இறங்குவதில்லை. எந்த வயதில், யாருக்கு, என்ன வியாதி வரும் என்றே யூகிக்க முடியாத வாழ்க்கையாகிவிட்டது.

இரண்டு மணி நேரம் நரகமாய் கழிந்தபின், லெஸ்ஸி வேன் வந்தது. கடை முதலாளியும், ஓட்டுநரும் பாக்சை மெதுவாக இறக்கி கடைக்குள் வைத்தனர். நன்றாக கழுவப்பட்டிருந்தாலும், மிச்சமிருந்த பிண நாற்றம் குடல்வரை நுழைவதைப்போல உணர்ந்தான் மூர்த்தி. இவனைப் பார்த்த கடைக்காரர் முகம் மாறினார்.

“சார் கோவிச்சுக்காதீங்க... பேமானிங்க, பேசுன வாடக ஒன்னு, குட்த்தது ஒன்னு. பொணத்த தூக்கணப்புறம் பேரம் பேசுறானுங்க சார்... கேக்மாறிங்க... பெத்து வளத்து சொத்து சேத்து வெச்ச பெத்தவங்கள... செத்தப்புறம் தூக்கும்போது, பட்டாசு, குடி, தேர்ப்பாடைன்னு வீராப்பக் காட்டுவானுங்க, அவனுங்க பெருமய ஊரு மெச்சணும். பொணம் நகர்ந்தா போதும்... மல்லாந்துக்குவானுங்க. வண்டிக்கு டீசலு, கூலி, அது இதுன்னு போனா ஒன்னும் நிக்கல. ரெண்டு நாளு பொறுத்துக்குங்க சார்... நல்ல பார்ட்டியா வந்தா குடுத்திடுறேங்'' என்றான்.

ஏற்கெனவே உள்ளுக்குள் துவண்டு போயிருந்ததால் அவனுக்குக் கோபமே வரவில்லை. பேசாமல் எழுந்து வெளியே வந்து, வண்டியைக் கிளப்பினான்.

‘நல்ல பார்டியா வந்தா....' என்று அவன் சொன்னது வழியெங்கும் இவன் மண்டைக்குள் திரும்பத் திரும்ப முட்டிக்கொண்டே வந்தது.

‘நல்ல பார்ட்டி' என்று யாரை சொல்கிறான். பேசின பணத்தைச் சரியாகக் கொடுத்துவிடும் நாணயமான பிண வீட்டாரையா? அல்லது பணக்காரன் வீட்டில் பிணம் விழுவதையா?

தனக்கு விளம்பரப்பணம் வரவேண்டுமானால் அடுத்த பிணம் விழவேண்டும். அந்தப் பிணம் யாருடையதாக இருக்கும்? எந்த ஊராக இருக்கும்? எப்படி நிகழ்வதாக இருக்கும்?

கேள்விகள் குடையக் குடைய, தலை சுற்றுவதைப் போல இருந்தது. யோசனையோடு அந்தச் சாலையின் திருப்பத்தில் வண்டியைத் திருப்பியவன், எதிரே வேகமாக வந்த ஹீரோ ஹோண்டாவைக் கண்டு திணறி, ஒடித்துத் திருப்பி, சுதாரித்து வண்டியை நிறுத்தினான். ஒரு நொடியில் உடலெல்லாம் பதறியது. அப்போது எதிர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அந்த சுவரொட்டியை கவனித்தான். அதிலிருந்த, மூன்று நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தவரின் படத்தை உற்றுப்பார்த்தான். ஒரு கணம் அந்தப் படம் தன் படம் போல் மின்னி மறைய, துணுக்குற்று வண்டியை ஓரங்கட்டினான்.

"அய்யோ... அவன் சொன்ன அந்த நல்ல பார்ட்டி ஒரு வேளை நாமாக இருந்துவிட்டால்?'

கவிப்பித்தன்

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=18862:2012-03-06-08-45-14&catid=3:short-stories&Itemid=266

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி கோமகன்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.