Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம்'

Featured Replies

'மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் -1'

இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை.

இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேலான இன ஒடுக்குமுறை வரலாற்றை பட்டறிவின் ஊடாகப் புரிந்து கொள்வதே மேலானதும்கூட போர் முடிவுற்றதன் பின்னர், இதுபோன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட, ரி.ஆர்.பாலு, கனிமொழி, திருமாவளவன் போன்றோரை உள்ளடக்கிய தமிழக நாடாளுமன்றக் குழுவின் பயணமும் எவ்வித பலனுமின்றி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது நாம் அறிந்ததே. இப்பயணம் குறித்து இதுவரை வெளியாகாத மறைந்திருக்கும் உண்மைகளை வெளிப்படுத்துவது இது போன்ற பயணங்கள் குறித்த மாயைகளை விலக்க உதவும் என்றே நம்புகிறோம்.

இலங்கைக்கு விஜயம் செய்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பி மாதங்கள் கடந்துவிட்டன. எதிர்பார்த்தது போலவே அக்குழுவில் அங்கம் வகித்தவர்கள் தமது கட்சிகளின் நலன்களுக்கு ஏற்ப மூன்று விதமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மத்திய அரசாங்கத்தினையும், தமிழ் நாட்டு மக்களையும் திருப்தி செய்யவேண்டிய தேவையிருந்தது. இந்நிலையில் அக்கட்சி 58,000 அகதிகள் உடனடியாகக் குடியேற்றப்படுவர் என்றும், மக்கள் மிகவும் அவல நிலையில் வாழ்வதாகவும் தெரிவித்திருந்தது. காங்கிரஸ் கட்சி அகதி முகாம்களின் உண்மை நிலைகளுக்கு மாறாக, மக்கள் அங்கு சந்தோஷமாக வாழ்வதாகவும், இலங்கை அரசின் நிவாரணப் பணிகள் திருப்திகரமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மட்டும் அகதி முகாம்களின் உண்மை நிலையினையும், இலங்கைத் தமிழர்களின் கவலைகளையும் விபரமாகத் தெரிவித்திருந்தார். தமிழ் மக்களுக்கு சார்பாக கருத்துத் தெரிவிப்பார் என எதிர்பார்த்திருந்த கருணாநிதியின் மகள் கனிமொழி அதிகளவிற்கு வாயே திறக்கவில்லை.

தமிழ்நாடு நாடாளுமன்றக் குழுவினரின் இலங்கைப் பயணம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி இலங்கைக்கு வரமாட்டார் எனத் தெரிந்து கொண்டுதான், மகிந்த ராஜபக்ச தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதிக்கு இலங்கை வருமாறு அழைப்பினை விடுத்திருக்க வேண்டும். எனினும், பின்னர் தமிழ்நாட்டு மக்களின் அதிருப்தியைக் குறைக்க ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நிலையிலிருந்த கருணாநிதி தி.மு.க கூட்டணிக் குழுவினரை டெல்லிக்கு அழைத்துச் சென்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்து தருமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினை வேண்டியிருந்தார்.

இவ் வேண்டுதலின் அடிப்படையிலேயே பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியுடன் பேசி பயணத்திற்கு ஒழுங்கு செய்திருந்தார்.

இப்பயணக்குழுவினைக் கூட இந்திய மத்திய அரசினதோ, அல்லது தமிழ்நாடு அரசினதோ உத்தியோகபூர்வ குழுவாக அனுப்புவதற்கு மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே விரும்பியிருக்கவில்லை. உத்தியோகபூர்வ குழுவை அனுப்புவதாயின் எதிர்க்கட்சிகளையும் இணைத்து அனுப்பியிருக்க வேண்டும். அத்துடன், அக்குழுவின் சிபாரிசுகளுக்கு பொறுப்பேற்கவும் வேண்டும். இவ்விரண்டையும் தவிர்ப்பதற்காகவே உத்தியோகபூர்வ குழுவினை அனுப்பவில்லை. எதிர்க்கட்சிகள் தமது பிரதான நோக்கத்திற்கு ஆதரவாக இருக்கும் என அவர்கள் கருதியிருக்கவில்லை. அத்துடன் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசிலும் அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கவில்லை.

நீண்ட காலத்தின் பின்னரேயே மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்திற்கு, உண்மையில் இலங்கை அரசு சம்மதித்ததன் காரணங்கள் புதியவையாகும்.

அண்மைக்காலமாக இலங்கை அரசிற்கு அமெரிக்கா உட்பட மேற்குலகம் அறிக்கை அழுத்தத்திலிருந்து, நடைமுறை அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கி இருந்தது. இந்நிலையில் இவ்வழுத்தங்களை சிறியளவாவது தணிப்பதற்காகவே இலங்கை ஜனாதிபதி இதற்கு சம்மதித்திருந்தார். இந்தியாவிலிருந்து ஒரு சர்வகட்சி நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு வருகின்றபோது, அவர்களின் பயண நிகழ்ச்சி நிரல்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து சாதகமான விடயங்களை மாத்திரம் அவர்களுக்கு காட்டி, அதன் மூலம் சாதகமான அறிக்கை ஒன்றினை அவர்கள் மூலம் விடச் செய்யலாம் எனக் கருதியே இதற்கான சம்மதத்தினை அவர் தெரிவித்திருந்தார்.

இந்த முடிவினை இவர் தனித்து எடுக்காமல் இந்திய உளவுப்பிரிவுடன் இணைந்து எடுத்திருப்பதற்கே வாய்ப்புகள் உண்டு. சாதகமான அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்யலாம். அல்லது குறைந்த பட்சம் ஒரு மென்மையான அறிக்கையினை வரச் செய்யலாம் என அவர்கள் உத்தரவாதம் கொடுத்திருப்பதற்கும் சாத்தியங்கள் உண்டு. தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடு திரும்பிய பின் வெளியிட்ட அறிக்கையினை பார்க்கின்றபோது இவ்வாறு தான் கருத முடிகின்றது. ஒரு வகையில் இப்பயணத்தினை இந்திய, இலங்கை அரசுகளின் கூட்டுத் திட்டம் என்றே கூற முடியும்.

இரண்டாவது கேள்வியினைப் பொறுத்தவரை, இந்தியா சம்மதித்ததற்கு பிரதான காரணம் இலங்கை அரசினை மேற்குலகின் அழுத்தங்களிலிருந்து பாதுகாப்பதே ஆகும். அண்மைக்காலமாக இந்தியா இலங்கை அரசினை தொடர்ச்சியாகப் பாதுகாத்தே வந்திருக்கின்றது. ஜெனீவா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது உட்பட, இலங்கை விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை மென் போக்குடன் செயற்பட வைத்தமைவரை இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

எனினும், இலங்கை விவகாரம் எல்லை மீறிச் செல்லவே மேற்குலகம் இறுக்கமான அழுத்தத்தினை ஏற்படுத்தத் தொடங்கியது. இந்நிலையில், இதனையும் எவ்வாறாவது தணிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா களத்தில் இறங்கியுள்ளது. இவற்றினூடாகவே இலங்கையை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் காலம் கடந்தாவது வைத்திருக்கலாம் என இந்தியா கருதுகின்றது. ஆனாலும் இலங்கை இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்திற்குள் செல்வதற்கான சிறிய சமிக்ஞையைக் கூட இதுவரை காட்டவில்லை.

மூன்றாவது காரணமான கருணாநிதி ஏன் முனைப்புக் காட்டினார்? என்ற விடயத்தினைப் பொறுத்தவரை அதற்கு இரண்டு காரணங்கள் இருந்திருக்கின்றன. இதில் முதலாவது முன்னரே கூறியது போல் தமிழ் நாட்டிலிருந்து வரும் அதிருப்தி அலைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஏதாவது நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்ற கட்டாய நிலைமை ஏற்பட்டமையாகும். இரண்டாவது காரணம், இலங்கை அரசிற்கு உதவும் காங்கிரஸ் தலைமையிலான மத்தியரசின் பணியில் தானும் பங்களிப்பதன் ஊடாக காங்கிரஸ் தலைமையை குளிர்விப்பதாகும்.

மொத்தத்தில் இப்பயணத்திற்கான பிரதான காரணம் இலங்கை அரசை பாதுகாப்பதே. இதற்கேற்பவே அனைத்து பயண நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பயணக்குழுவின் தலைவராக டி.ஆர்.பாலுவை நியமித்ததையும், கனிமொழி மற்றும் திருமாவளவன் ஆகியோரது வாய்கள் கட்டப்பட்டமையும் இதற்கேற்பவே அமைந்தவையாகும். இந்தப் பிரதான நோக்கத்திற்கு பங்கம் ஏற்படக் கூடாது என்பதில் மன்மோகன் சிங் மட்டுமல்ல, கருணாநிதியும் மிகக் கவனமாகவே இருந்திருக்கின்றனர்.

இந்தப் பிரதான நோக்கத்தினைத் தெளிவாக விளங்கிக் கொண்டால்தான், பயணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள அரசியலையும் எம்மால் புரிந்துகொள்ள முடியும். இப்பயண விடயத்தில் தமிழ் மக்களின் நலன் ஒருபோதுமே முன்னிலை வகித்ததில்லை.

தமிழக நாடாளுமன்றக் குழு இலங்கை அரசினை பாதுகாப்பதற்காக இத்தகைய பயணத்தினை மேற்கொண்டிருந்தாலும், ஜனாதிபதி மகிந்தவுக்கு பயணக்குழு அமைக்கப்பட்ட விதம் திருப்திகரமானதாக இருக்கவில்லை. அவர் இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி நாடாளுமன்றக் குழு ஒன்றினையே எதிர்பார்த்திருந்தார். ஆளும் கட்சிக்குழுவினை அதுவும் தமிழ் நாடு மட்டத்திலுள்ள ஆளும் கட்சிக் குழுவினை அவர் அறவே எதிர்பார்க்கவும் இல்லை. குறைந்த பட்சம் தமிழ்நாடு மட்டத்திலாவது சர்வகட்சிக் குழு வராதது அவருக்கு ஏமாற்றத்தினையே கொடுத்தது. சர்வக்கட்சிக் குழுவொன்றினை வரவழைத்து தனக்குச் சாதகமான வகையில் அவர்களை சுட்டிக் காட்டவே அவர் விரும்பியிருந்தார். இதற்கேற்பவே பயண நிகழ்ச்சி நிரலையும் திட்டமிட்டிருந்தார். இலங்கையில் தமிழ் மக்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர் என்பதை சர்வகட்சி நாடாளுமன்றக் குழு வெளிப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது. அதற்கேற்பவே ஒழுங்குகளையும் செய்திருந்தார். வடக்கின் வசந்தத்தினை டக்ளஸ் தேவானந்தா மூலமும், கிழக்கின் உதயத்தினை கருணா மூலமும், வன்னி அகதிகளின் சிறப்பான நிலையை வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் மூலமும், மலையக மக்களின் செழிப்பான வாழ்க்கையை ஆறுமுகம் தொண்டமான் மூலமும் காட்டவே அவர் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

இந்தப் பயணக்குழு ஜனாதிபதிக்கு ஏமாற்றத்தினை அளித்ததால் அவர்களைச் சந்திப்பதற்குக் கூட ஜனாதிபதி விரும்பியிருக்கவில்லை. இந்தியாவின் வற்புறுத்தலினாலேயே பின்னர் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். விமான நிலையத்தில் அவர்களை வரவேற்கச் செல்வதற்கும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களோ, சிங்கள அமைச்சர்களோ எவரும் செல்லவில்லை. ஆறுமுகம் தொண்டமான் மட்டுமே சென்றிருந்தார்.

இப்பயண நிகழ்ச்சி நிரல் முழுமையாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இக்குழுவின் பார்வைக்கு அரசிற்கு எதிரான விடயங்கள் போகக் கூடாது என்பதற்காகத் தான், அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் பயண நிகழ்ச்சி நிரலைக் கொண்டு வந்தது. அதற்கேற்ற வகையிலேயே நிகழ்ச்சி நிரல்களும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தன.

பிரதான நிகழ்ச்சி நிரல்களாக கிழக்கு, வடக்கு, மலையகப் பயணங்களே இருந்தன. இதற்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டதும் அல்லாமல், பயண ஏற்பாடுகளிலும் ஆளும் கட்சி மட்டுமே ஈடுபட்டிருந்தது. எதிர்க்கட்சிகளுக்கு ஒரு சிறிய பங்கும் கொடுக்கப்படவில்லை.

இதன்படி, வடக்கின் வசந்தத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும், கிழக்கின் உதயத்திற்கு கருணாவும், வன்னியின் சிறப்பிற்கு வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சாள்சும், மலையகத்திற்கு ஆறுமுகம் தொண்டமானும் பொறுப்பாக்கப்பட்டனர்.

பிரதான நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால், துணை நிகழ்ச்சி நிரல்கள் என்ற வகையில்தான் அரசியல் கட்சிகளைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் நாகரீகத்திற்காக இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டதே தவிர, அதற்கு போதிய முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் குறைந்த நேரமே இதற்கு ஒதுக்கப்பட்டது. குறைந்த பட்சம் பிரதான அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றுடனான சந்திப்பிற்காவது அதிக நேரம் ஒதுக்கியிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாததினால் அவசர, அவசர சந்திப்புகளாகவே இவை முடிவுற்றன. இதனை அக்கட்சிகளின் தலைவர்களே வெளிப்படையாகக் கூறியிருந்தனர்.

ஜே.வி.பி, ஜாதீக ஹெல உறுமய ஆகிய கட்சிகளையோ, பௌத்த மத பீட தலைவர்களையோ சந்திப்பதற்கு எந்தவித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இது பற்றி இருதரப்பினருமே பெரிய அக்கறை காட்டவில்லை. அவற்றை சந்தித்திருந்தால் பேரினவாதத்தின் பண்புகளை தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் இருந்திருக்கும்.

இதற்கு அப்பால் சுயாதீனமான சிவில் நிறுவனங்களைச் சந்திப்பதற்கு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் மத நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களை இணைத்து சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்பட்டிருந்தது. போர்க்காலத்தில் அது பயனுள்ள பணிகளைச் செய்திருந்தது. அமெரிக்கா உட்பட மேற்குலகப் பிரதிநிதிகள், ஐ.நா பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் என்போர் யாழ் குடா நாட்டிற்கு விஜயம் செய்கின்ற போது அவ்வமைப்பினைச் சந்தித்து உரையாடுவது வழக்கமாகும். ஆனால் தமிழக நாடாளுமன்றக் குழு அதனைத் தனியாக சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அதற்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டபோதும் கூட நேரம் ஒதுக்கப்படவில்லை. யாழ் பொது நூலகத்தில் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதிக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டப்பட்டிருந்தனர். அங்கு கூட போதிய சந்தர்ப்பம் வழங்கப்படாமல் அவமதிக்கப்பட்டனர். யாழ் பல்கலைக்கழக சமூகத்தைச் சந்திப்பதற்குக் நிகழ்ச்சி நிரலில் ஏற்பாடு செய்யப்பட்டபோதும் கவனமாக அது இரத்துச் செய்யப்பட்டது.

பயணக்குழுவின் முதல் நாள் நிகழ்ச்சி நிரலில் கிழக்கு மாகாணப் பயணமே அடங்கியிருந்தது. இதற்கு முன்னர் கூறியது போல கருணாவே அதற்குப் பொறுப்பாக இருந்தார். கருணாவுடன் செல்வதற்கு பயணக்குழுவினர் விரும்பியிருக்கவில்லை. விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியை கொலை செய்த நிகழ்வில் அவர்களின் தளபதிகளில் ஒருவராக இருந்தவருடன் சேர்;ந்து பயணத்தினை மேற்கொள்வது அவர்களுக்கு சங்கடத்தினைக் கொடுத்திருக்கலாம். இதை விட கருணா பற்றிய எதிர்மறை கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவியிருப்பதனால் அது தங்களின் சொந்த அரசியலைப் பாதிக்கும் எனவும் அவர்கள் கருதியிருக்கலாம்.

இலங்கை அரசோ தமக்கு பாதகம் இல்லாத வகையில் கிழக்கின் உதயத்தினைக் காட்டக் கூடியவர் கருணா என்பதனால், அவருடன் பயணம் செய்ய வேண்டும் என்பதிலேயே விடாப்பிடியாக இருந்தது. பயணக்குழுவினர் அதற்கு இணங்காததினால் கிழக்குப் பயணத்தினை இரத்து செய்வதாக அது அறிவித்தது. மாற்று ஏற்பாடுகள் செய்து தரும்படி பயணக்குழுவினரும் கேட்கவில்லை. இலங்கை அரசும் அதில் அக்கறை காட்டவில்லை.

இங்கு தான் பயணக்குழுவினரின் முதற் சறுக்கல் ஏற்பட்டது. தமிழர் தாயகத்தில் தேசிய இனப்பிரச்சினையின் மையமாக விளங்குவது கிழக்கு மாகாணம் தான். தேசிய இனப்பிரச்சினை என்பது அடிப்படையில் கூட்டிருப்பு, அதன் வழியான கூட்டுரிமை என்பதற்கான அச்சுறுத்தல் நிலையாகும். எனவே கிழக்கு மாகாணம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை ஆராயாமல் தேசிய இனப்பிரச்சினையின் உள் ஆன்மாவினை எவருமே அடையாளம் காண முடியாது.

இதனடிப்படையில் பார்க்கும்போது, பயணக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு பயணம் செய்வது அவசியமாக இருந்தது என்பதற்கு முக்கியமாக நான்கு விடயங்களைக் குறிப்பிடலாம். அதில் முதலாவது, அண்மைக்காலமாக கிழக்கு மாகாணங்களில் அதிகரித்து வரும் சிங்களக் குடியேற்றங்களாகும். பல நுட்பமான பொறிமுறைகளினூடாக திட்டமிட்டு இராணுவப் பலத்தோடும், அரச அனுசரணையோடும் இவை மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவும் துணை போகின்றன. இக்குடியேற்றங்கள் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன.

மொரவௌ என்று தற்பொழுது சிங்களப் பெயரில் அழைக்கப்படும் முன்னைய முதலிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் வேப்பங்குளத்திற்கும், முதலிக்குளத்திற்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் பன்குளம் வரை இத்தகைய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, திருகோணமலை ஹொரவப்பொத்தான வீதியின் இருபக்கங்களிலும், சேருவில பிரதேசப் பகுதியில் சேருவல- பொலனறுவை வீதியின் இரு பக்கங்களிலும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றினை விட தம்பலகாமம், கந்தளாய் பிரதேசச் செயலாளர் பிரிவுகள், திருகோணமலை ஹபரண வீதி, குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் இறக்கக்கண்டி, கும்புறுபிட்டி போன்ற இடங்களிலும் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்விடங்களில் பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் வெளியேறுமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். இவ்வச்சுறுத்தல்களுக்குப் பயந்து அவர்கள் வெளியேறியும் உள்ளனர். தமிழ் மக்களை திருகோணமலை நகரத்திற்குள் மட்டும் அடைத்து விட்டு, ஏனைய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கம் இதற்கு பின்னால் இருக்கின்றது. அது பற்றி தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் விரிவாக விபரங்களைக் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, பாசிக்குடா பகுதிகளில் தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொப்பிகலயில் மிகப்பெரிய புத்த விகாரை கட்டப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் இத்தகைய குடியேற்றங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன. அங்கு முஸ்லிம்களுக்கு சொந்தமான 16,764 ஏக்கர் காணி இழக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். அத்துடன், திருகோணமலை மாவட்டத்திலும் 17,092 ஏக்கர் காணிகளை முஸ்லிம்கள் இழந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, இவ்விவகாரம் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெறும் முக்கியமான எரியும் பிரச்சினையாகும். இப்பிரச்சினையை பயணக்குழுவினர் அனுபவ ரீதியாக தரிசித்திருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதில் கவனமெடுக்கவில்லை.

இரண்டாவது விடயம், கிழக்கு மாகாண சபை பற்றியதாகும். இவ்விடயத்தில் பயணக்குழுவினருக்கு நிறையவே பொறுப்பிருக்கின்றது. ஏனெனில், மாகாண சபைகள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி இலங்கையும், இந்தியாவும் இணைந்து உருவாக்கியதொன்றாகும். இந்திய அரசாங்க முறையில் எவ்வாறு மாநிலங்கள் மத்தியரசின் தயவின்றி சுயாதீனமாக செயற்பட முடியாதோ, அதேபோலவே இலங்கையிலும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. இவ் மாகாண சபை எவ்வாறு இயங்குகின்றது? அது வினைத்திறனோடு செயற்பட தடைகள் எவை? இவை தொடர்பாக மாகாண சபை அமைச்சரவை உறுப்பினர்களதும், மாகாண சபை உறுப்பினர்களதும் மனக்குறைகள் யாவை? என்பவை தொடர்பாக அறிந்து கொள்வதற்கு ஒப்பந்தத்தின் ஒரு தரப்பினர் என்ற வகையில் இந்தியாவிற்கு நிறையவே பொறுப்புண்டு. அதுவும், தமிழர்கள் ஒப்பந்தத்தின் ஒருதரப்பாக இருக்க வேண்டியதற்குப் பதிலாக, அதனைத் தமிழ் மக்களிடமிருந்து பலவந்தமாகப் பறித்தே தமிழ் மக்களின் பிரதிநிதியாக இந்தியா இவ்வொப்பந்தத்தின் ஒரு தரப்பாக கைச்சாத்திட்டது. எனவே ஒப்பந்தத்தின் ஒரு தரப்பு என்பதற்கு அப்பால், தமிழ் மக்களின் தரப்பினை பலவந்தமாகப் பறித்தது என்ற வகையில் இந்தியாவிற்கு இரட்டிப்பு பொறுப்பு உண்டு. இதுவரை காலமும் அப்பொறுப்பினை இந்திய மத்தியரசு தட்டிக் கழித்தே வந்தது. அதுபோலவே பயணக்குழுவினரும் இவ்விடயத்தில் கரிசனையற்று இருந்தனர்.

இவர்கள் கிழக்கு மாகாண சபைக்குச் சென்றிருந்தால் ஆளுநரின் அடாவடித்தனங்களையும், மத்திய அரசின் ஒரு பொம்மையாக கிழக்கு மாகாண சபை இருப்பதனையும் நேரடியாகத் தரிசித்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருந்தன.

மூன்றாவது விடயம், அகதிகளின் மீள் குடியேற்றமாகும். கிழக்கு மாகாணத்தில் மூன்று வகையான தமிழ் அகதிகள் இருக்கின்றனர். சுனாமியினால் பாதிக்கப்பட்ட அகதிகள், கிழக்குப் போரின் போது பாதிக்கப்பட்ட அகதிகள், வன்னிப் போரின் பின்னர் கிழக்கிற்கு அனுப்பப்பட்ட அகதிகள் என்பவர்களே இவர்களாவர்.

இவர்களின் ஒரு பிரிவினராவது இதுவரை தகுந்த முறையில் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. சுனாமி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இன்னமும் ஒழுங்காக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. கிழக்குப் போரின் பின்னர் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. அவர்களில் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் இன்னமும் அகதி முகாம்களிலேயே உள்ளனர். இந்த விவகாரங்கள் இக்குழுவினரின் பயணத்தோடு தொடர்புப்பட்ட விவகாரங்களாக இருப்பதனால் அவர்கள் அங்கு சென்றிருக்க வேண்டிய தார்மீக கடமைப்பாடு அவர்களுக்கு இருந்தது.

நான்காவது சம்பூர் விவகாரம். இதுவும் இந்தியாவுடன் தொடர்புப்பட்ட விடயமாக இருப்பதனால் பயணக்குழுவினருக்கு இவ்விடயத்தில் மிகுந்த பொறுப்பிருந்தது. இந்த விவகாரம் சாதாரண விடயமல்ல. பாரம்பரியமாக அப்பிரதேசத்தில் வாழ்ந்த 1,486 குடும்பங்கள் இந்தியாவின் அனல் மின் நிலையத்திற்காக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களின் நிலங்கள் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. எந்தவித நட்டஈடும் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் அகதி முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களின் மனக்குறைகளை இந்தியக் குழுவினர் கட்டாயம் சந்தித்துக் கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுகுறித்து கரிசனை கொள்ளவுமில்லை. இவ்விடத்தில் எரியும் பிரச்சினைகளாக இருக்கின்ற இவ்விவகாரங்கள் சம்பந்தப்பட்ட விடயங்களை பார்வையிடுவதனைத் தவிர்ப்பதற்காக தான் அவர்கள் அங்கு செல்லாமல் விட்டார்களா? என்ற கேள்விகள் எழாமலும் இல்லை.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=8&contentid=ad16510d-475e-4410-97b7-dbc2e12a213c

தொடரும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.